Showing posts with label வெட்டி. Show all posts
Showing posts with label வெட்டி. Show all posts

Thursday, May 24, 2007

இங்க வாங்க

தனிக் காடு...

Monday, April 09, 2007

பதிவர்கள் கவனிக்க: பின்னூட்டம் இனி இட மாட்டேன்

இப்போது முதல், இன்னும் சிலகாலத்துக்கேனும் பின்னூட்டங்கள் இடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். பொன்ஸ் என்ற பெயரில் புதிதாக ஒரு பதிவர் உருவாகி இருப்பதே இந்தத் திடீர் முடிவுக்குக் காரணம்.

தோழி ஒருவர் அழைத்து, "பொன்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய ப்ரோபைல் ரெடியாகிறதே, பார்த்தாயா?" என்று கேட்டபொழுது, "அப்படியா!" என்று வியக்கத்தான் முடிந்தது.

பெண்களுக்கெதிரான வன்முறை மிகச் சுலபமாகக் கைவரக் கூடியது. அதிலும், நட்புரீதியாக கை நீட்டுபவர்களுடன் மிக இயல்பாகக் குலுக்கிவிடும் மனமுடைய என்னைப் பற்றி என்மூலமே திரட்டப்பட்ட தனிப்பட்ட தகவல்களுடனான பொய்யான ப்ரோபைல் உருவாக்க, இணையம் ஒரு வசதியான ஊடகம் என்பதில் சந்தேகம் என்ன இருக்க முடியும்..

சமீபத்தில், பெண்கள் தொடர்பான என்னுடைய இடுகைக்கு, எதிர்வினையான சில கும்மிப் பதிவுகளில், ஒரு அனானி இது போன்ற ஒரு ப்ரோபைலை உருவாக்கும் எண்ணத்தை வெளியிட்டிருந்தார். ஒருவழியாக இன்று அதை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்ட அவருக்கு என் வாழ்த்துக்கள். [விடுபட்டவை: போலி மட்டுமா போலி பதிவு ஏனோ திடீரென நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை ]

இந்த முகமிலிகளுடன் மோதி, தர்மயுத்தம் செய்ய எனக்கு அவகாசம் இல்லாத காரணத்தாலும், இதைப் பற்றிக் கவலைப்படாமல் நான் பின்னூட்டமிட்டால் கூட, ஒவ்வொருமுறையும் சோதித்து வெளியிடும் சிரமத்தை நண்பர்களுக்குக் கொடுப்பதில் விருப்பமில்லாததாலும், பின்னூட்டங்கள் இடுவதை நிறுத்திக் கொள்வது ஆகச் சிறந்த வழியாகத் தெரிகிறது.

எனவே, இன்று முதல், பொன்ஸின் எழுத்துக்கள், இங்கு பட்டியலில் உள்ள வலைப்பதிவுகளில் மட்டுமே வரும்.. மற்ற முகமிலிகளிடம், இரவல் முகத்துடன் வருபவர்களிடமும் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பு:
1. இரவல் முகத்துக்காரருக்கு லிங்க் கொடுத்துப் புகழ் சேர்க்க விருப்பமில்லை. அவகாசமும் அவசியமும் இருப்பவர்கள் தேடிக் கண்டு கொள்ளலாம் :)
2. தனிமடல்கள், தொலைபேசியில் பேசுபவர்கள், இந்த விசயம் குறித்து தயவு செய்து பேச வேண்டாம். வரப் போகும் பதிவர் சந்திப்பு தொடங்கி நாம் பேச எத்தனையோ ஆக்கப் பூர்வமான விசயங்கள் இருக்கின்றன தானே..

Saturday, March 31, 2007

ஆமாமாம், நானும் ஒரு கிறுக்கு தான்...

கிறுக்குத்தனங்கள், விபரீத குணங்கள், விசித்திர பழக்கங்கள் இல்லாத மனிதர்களே இல்லை என்று தோன்றுகிறது, சமீபகால வியர்டு பதிவுகள் பார்த்து. என்னுடைய கிறுக்குத்தனங்களை எழுதச் சொல்லிக் கேட்ட அஞ்சா நெஞ்சர்களின் லிஸ்ட் இங்கே:

முதலில் அத்தனை ஆர்வம் இல்லாமல் தான் இருந்தது, ஆனால், எப்படியாவது யாழ்ப் பட்டியலில் சேர்ந்து விடுவது என்ற முடிவோடு, ஒரு உந்துதலோடு எழுத ஆரம்பித்திருக்கிறேன் இன்று ;)


1. புத்தகம் வாசிப்பது: வலைப்பதிவர் அனைவருக்கும் ஒரு பொதுவான குணமாக தெரிகிறது. அதிலும் சாப்பிட்டுக் கொண்டே வாசிப்பது இயல்பாகவே ஆகிவிட்டது. சிறுவயதில் என்னுடைய வாசிப்பிடங்கள் இருட்டானவையாக இருக்கும். பீரோக்களின் சந்துகளில், கட்டில் அடியில், அரிசி பீப்பாய் பின்புறம் என்று எளிதில் தேடிக் கண்டுபிடித்து யாரும் தொல்லை செய்யாத இடத்தில் ஒண்டிக் கொண்டு படிக்கப் பிடிக்கும். வளர்ந்த பின்னர், அதாவது இந்த இடங்களில் நுழைய வசதியில்லாமல் போன பின்னர், எல்லா நேரங்களிலும் என் கையில் புத்தகம் இருந்த நாட்கள் உண்டு. ஓடும் ரயிலில், பேருந்தில், எனக்கே இடமில்லாத ஷேர் ஆட்டோக்களில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து போகையில், முன்பு வசித்த புறநகர் பகுதியில் சைக்கிள் மிதிக்கையில், என்று அசைந்து கொண்டே படிக்கப் பிடிக்கும். பாலை அடுப்பில் வைத்துக் கொண்டே புத்தகம் படித்து பலநாள் புதுமனை புகுவிழா நடத்தி இருக்கேனாக்கும்.

2. பேசுவது: கணினி, பூனை, நாய், செடி, கொடிகளுடன் பேசுபவர்கள் பற்றிப் படிக்கையில், "அட நான் கூட இப்படித் தானே!" என்று நினைத்துக் கொண்டேன். இவற்றுடன் கூட, எனக்கு நானே பேசிக் கொள்வது அடிக்கடி செய்யும் செயல். பொதுவாக வண்டி ஓட்டும் பொழுது, துணி துவைக்கையில், பாத்திரம் துலக்குகையில், யாருக்காவது காத்திருக்கையில் என்று தனியாக இருக்கும்பொழுது ஏதேனும் யோசித்துக் கொண்டே என்னை அறியாது பேசி விடுவேன். ஒருமுறை இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டே நான் வீராவேசமாக என்னுடன் சண்டை போட்டுப் பேசிக் கொண்டே போவதை நண்பனின் தாயார் பார்த்துவிட, அன்று முழுவதும் ஓட்டித் தள்ளிவிட்டார்கள். வேலையில் சேர்ந்த புதிதில் நான் கணினியுடன் பேசுவதைக் கேட்டு பக்கத்து காபின் நண்பர் வேறிடம் மாற்றிக் கேட்குமளவுக்குத் தொல்லை செய்திருக்கேன் :)).

3. வாகனம் ஓட்டுவது: ஆளில்லாத சாலையில், அது என்ன வண்டியாக இருந்தாலும், வண்டி எடுத்து தனியே ஓட்டிக் கொண்டே போக பிடிக்கும். சைக்கிள் ஓட்டிய காலங்களில் சென்னையின் புறநகரான மடிப்பாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி பகுதிகள் முழுக்கவும் இப்படிச் சுற்றி இருக்கிறேன். கூடியவரை புதுப்புது வழிகள் கண்டுபிடிப்பது வழக்கம். இப்போது கூட தினமும் ஒரே வழியில் பயணிப்பது அலுத்துப் போய் வெவ்வேறு வழிகள் கண்டுபிடித்துக் கொண்டே போவேன்.

4. கோபம்: ரொம்பவும் கலகலப்பானவள் தான், அதிகம் யார் மேலும் கோபம் வராதுதான். ஒருமுறை என் வண்டியில் மோதி விபத்துக்குள்ளாக்கிய ஆட்டோக்காரரைக் கூட அந்தக் கணம் திட்டத் தோன்றாத காந்தீயவாதிதான் ;), ஆனால், சில சமயங்களில் எதற்கென்றே தெரியாமல் ஒரு அனாவசியக் கோபம் வந்துவிடும். வெறுப்பு, டிப்ரெஷன் என்றும் சொல்லலாம். அதுபோன்ற சமயத்தில் யாரிடமாவது பேச நேர்ந்தால் கத்தி கலாட்டா பண்ணிவிடுவேன். பல சமயங்களில் நெருங்கிய நண்பர்கள் தான் இத்தகைய கோபத்துக்கு ஆளாவர்கள். அப்புறம் கூப்பிட்டு வெகுநேரம் மன்னிப்பு கேட்பேன். ஆனால், கொட்டிய வார்த்தைகளை அள்ளவா முடியும்? இப்போதெல்லாம் இந்தக் காரணமற்ற கோபம் குறைந்திருப்பதாக நம்புகிறேன். நண்பர்களைத் தான் கேட்க வேண்டும், பாவம்.

5. அதீத ஆர்வம், அல்லது ஆர்வமின்மை. ஏதாவது ஒரு விசயத்தில் ஆர்வம் உண்டானால், ஒரே ஆர்வக் கோளாறாக இருப்பேன். ஆனால், திடீரென்று அந்த விருப்பம் விட்டுப் போய்விடும். அப்படியே ஒதுங்கிவிடுவேன். ஐந்து வயதில் அடம்பிடித்து கேரம் போர்டு வாங்கி விளையாடி, ஆறுவயதில் அந்த போர்டை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு பல்லாங்குழி விளையாடப் போய்விட்ட கிறுக்குத்தனத்தை இன்றும் என் அப்பா சொல்லிக் காட்டிக் கொண்டே இருப்பார். தையல், பின்னல் போடுவது, மொழி கற்பது, பாட்டு கற்பது, கலர்கலர் வளையல், காதணி சேர்ப்பது, சின்னச் சின்ன பென்சில் சேர்ப்பது, தபால்தலை சேகரிப்பு, சுட்டிவிகடன் பொம்மைகள் செய்வது என்று எல்லா பொழுதுபோக்குகளும் ஒருசில நாள் ஆசை தான். வாசிக்கும் பழக்கம் மட்டும் தான் இத்தனை நாள் தொடர்ந்திருக்கிறது. விந்தையான விசயம் அதுதான் என்று தோன்றுகிறது.

இன்னும் ஐந்து பேரைக் கூப்பிடும் எண்ணமெல்லாம் இல்லை. எல்லாரும் எழுதிவிட்டார்கள் போலத் தெரிகிறது. அதனால் இத்தோட ஜூட் :).

Wednesday, March 07, 2007

பா.கே.ப.பி

அதாங்க, கார்த்திக் பிரபு தொடங்கி, மோகன்தாஸ் என்னிடம் ஒப்படைத்த, பார்த்ததில், கேட்டதில் படித்ததில் பிடித்தது சங்கிலித் தொடரின் சுருக்கம்..

இவர்கள் இருவரது பதிவையும் பார்த்துவிட்டு, இப்படி வரிசையாக பட்டியலிட்டு ஒரு பதிவு எழுதத் தான் வேண்டுமா என்று கொஞ்ச நாட்களாக யோசித்துக் கொண்டே இருந்தேன். நம்ம பட்டியலுக்கு ஒரு ப்ளாக் போதுமா? ;) இருந்தாலும், எழுதித் தான் பார்ப்போமே என்று இப்போ தொடங்கியாச்சு..

பிடித்தது என்பது மாறிக் கொண்டே இருந்திருக்கிறது. வாழ்க்கை, மாற்றங்களால் ஆனது. விருப்பங்களும், பிடிப்புகளும் கூட. இன்று பிடித்தது நாளை பிடிக்காமல் போகலாம், அவள் விகடன் விளம்பரம் போல...

எனக்குப் பிடித்த எல்லாமும் என்று நீள் பட்டியலிட அவ்வளவாக விருப்பமில்லை. நினைவு தெரிந்து முதன்முதலில் பிடித்தது, சமீபத்தில் பிடித்தது என்று இரண்டிரண்டு விசயங்களாகப் பட்டியல் போடப் போகிறேன்:

பார்த்ததில் பிடித்தது:
1. நினைவு தெரிந்து நான் விரும்பிப் பார்த்த சின்னத்திரைத் தொடர், ப்ளைட் 172.




மௌலியின் நகைச்சுவையும், அவர் ஜாலியான ஆங்கிலமும் என்று இந்தத் தொடரை நாங்கள் மொத்தமாக ரெகார்ட் செய்து வைத்திருந்தோம். அவ்வப்போது போட்டுப் பார்த்துச் சிரிப்பது ஒரு நல்ல பொழுது போக்கு..

2. சமீபத்தில் பார்த்ததில் பிடித்தது, நம்ம ஹாப்பி பீட் தான்..




கேட்டதில் பிடித்தது
1. சின்ன வயதில் பாட்டி சொன்ன ஈக்கதை.

ஈ ஒன்று தன் வீட்டு வாசலில் இருந்த அதிக தண்ணீரில் வழுக்கி விழுந்து தன் பெயரை மறந்துவிடும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற விலங்குகள், மனிதர்கள், பொருட்கள் என்று கிட்டத் தட்ட இருபது பேரிடம் தன்னுடைய பெயர் என்ன என்று கேட்டுப் பார்த்துவிட்டு, கடைசியாக, ஒரு குதிரையைக் கேட்டு, குதிரை "ஹீஹீ" என்று கனைத்ததில் தன் பெயர் ஈ என்று நினைவுக்கு வந்து வீடு திரும்பிவிடுவதாக முடியும் அந்தக் கதை என்னுடைய சிறுவயது விருப்பம்.

அப்போது அந்தக் கதையைப் பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பேன். உச்சரிப்புக்காகவும், புதிய பொருட்கள், விலங்குகளின் பெயர்களை அறிமுகப்படுத்தும் விதமாகவும் வரும் அந்தக் கதை எனக்கு மிக மிகப் பிடித்த ஒன்று.

2. சமீபத்தில்: போக்கிரி படத்தில் "நீ முத்தமொன்று கொடுத்தால், முத்தமிழ்" பாட்டு.





படித்ததில் பிடித்தது.
1. முதன்முதலில் நானாகப் படித்து, அப்படிப் படித்ததில் பிடித்த புத்தகம், சிறுவர்மலர். அதில் வந்த பல காமிக்ஸ் சிறுகதைகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும்



2. சமீபத்தில் படித்ததில் பிடித்தது : இரா.நடராசனின் ஆயிஷா.


பா.கே.ப என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது வாரமலர் அந்துமணி. அந்துமணி என்றவுடன் நம் எல்லாருக்குமே நினைவுக்கு வருவது, மருதக்கார தம்பி, ராயல் ராம். [அது ஏன் என்பதை ராமிடமே கேட்கவும் :)]. எனவே, இந்த விளையாட்டை ஆட ராமை அழைத்து விட்டு நான் இப்போ அப்பீட்டு....

Monday, February 19, 2007

வெட்டி, நோ டென்சன் ப்ளீஸ்

"இதுக்கு என்ன முடிவுனு தெரியல"

வெட்டிப்பயலின் பதிவு முன்வைக்கும் கேள்விகளுக்கு என்னாலான பதில்கள் இந்தப் பதிவு:

வெட்டி,

உங்க பிரச்சனையின் முலக் காரணம் என்ன என்கிறதை நீங்க சரியாகப் புரிந்து கொண்டது போல் தான் தோணுது. வேலையில் சேர்ந்த புதிதில், அதாவது, முதல் ஆறு மாதங்களுக்கு அதிக நேரம் அங்கேயே இருந்து பழகி இருக்கீங்க; பழக்கி இருக்கீங்க - உங்க மேலதிகாரிகளுக்கு உங்களின் அதிக நேர இருப்பைப் பழக்கி இருக்கீங்க.

இது எப்போதும் நடப்பது தான்.

மென்பொருள் நிறுவன கலாச்சாரத்தில் தாமதமாக வேலைக்குச் செல்வதும், அங்கேயே இருப்பதும், எல்லாமே வழக்கமான, தினப்படி விஷயம் தான் என்ற கற்பிதம் ரொம்பவும் உலவுகிறது. இதை அழிப்பதும் மாற்றுவதும் முடியக் கூடிய விஷயம் தான்.

வேலைக்குச் சேர்ந்த புதிதில் வெகுநேரம் இருப்பதில் தவறேதும் இல்லை. என் அனுபவத்தில் பிராஜக்ட் கம்பனிகளில் ஒவ்வொரு புது பிராஜக்ட் தொடங்கிய முதல் இரண்டு மாதங்கள், ப்ராடக்ட் கம்பனிகளில், மொத்தமாக முதல் ஆறு மாதங்கள் - இவை தான் முக்கியமான நேரம். இந்த நேரத்தில் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டியது முக்கியம். ஆனால், இதைத் தாண்டிய அதாவது மூன்றாவது மாதம் முதல்(project), அல்லது ஏழாவது மாதம் முதல்(product), அலுவலகத்தின் எட்டரை மணி நேரத்துக்கு மேல் பழியாகக் கிடக்க வேண்டிய அவசியம் இருக்காது.

காலை, மாலை சிற்றுண்டி/டீ இடைவேளை, மதிய உணவு இடைவேளை தவிர மீதி ஏழு மணிநேரத்தில் உங்கள் வேலை கண்டிப்பாக முடிந்துவிடும். - இந்த இணையம், பதிவுகள், செய்திகள், ஸ்டாக் மார்க்கெட், க்ரிக்கெட், சினிமா என்று கவனம் சிதறாமல் இருந்தால்.

என் பணிக்காலத்தின் முதல் மூன்று வருடங்கள் ப்ராடக்ட் வழி நிறுவனத்தில் தான் இருந்தேன். அடுத்த இரண்டரை வருடங்கள் பிராஜக்ட் வழி நிறுவனம்.

தாமதமாக தங்குவதற்கும், ஒரு நாளைப் போல் பத்து பன்னிரண்டு மணிக்கு வீட்டுக்குப் போவதற்கும் பிராடக்ட், ப்ராஜக்ட் வித்தியாசம் எல்லாம் கிடையாது. பொதுவாக தாமதமாகப் போகிறவர்கள் சொல்லும் காரணங்கள் பின்வருவனவற்றுள் ஒன்றாக இருக்கும்:

1. நான் தனியாத் தானே/நண்பர்களுடன் தானே தங்கி இருக்கேன். வீட்டுக்குப் போனால் எப்படியும், பொழுது போகாது. இங்கயே இருந்துக்கலாம் - கோக், பெப்ஸி, இணையம், ஏசி. இரவுச் சாப்பாடு எல்லாம் முடிந்து தூங்கறதுக்குப் போனால் போதும்.

2. எப்படியும் வீட்டுக்குப் போய் சீரியல் தான் பார்க்கப் போறேன். இதுக்கு ஆபீஸில் இருந்தால் சாட்டாவது செய்யலாமே!

3. அந்த நடராஜன் மட்டும் ராத்திரி எட்டு மணி வரை இருந்து மேனேஜர் கிட்ட நல்ல பேர் எடுக்கிறான். நானும் இல்லைன்னா என்னை மானேஜருக்குத் தெரியவே தெரியாம போயிடும்.

4. எங்க பிராஜக்ட் லீடர் பத்து மணி வரை இருந்து தொலைக்கிறான். தலையெழுத்து, நானும் இருக்க வேண்டியதா இருக்கு.

5. இப்போ கிளம்பினால், பஸ்ஸுக்கு/அலுவலக வண்டிக்கு, பணம் கொடுத்துப் போகணும். மெல்ல ஒரு ஒன்பது மணிக்கா கிளம்பினா, இலவசப் பயணம், அதிலும் வீட்டு வாசல்லயே கொண்டு விட்ருவாங்களே. அதைப் போய் விடுவாங்களா..

மேலே சொல்லப்பட்டவை தவிர பல மேலாளர்கள் உண்மையிலேயே தாமதமாக இருந்து வேலை செய்பவர்கள் மேல் அதிக மதிப்பு வைத்திருப்பார்கள் என்ற கற்பிதம்.

என்னுடைய பழைய நிறுவன மேலாளர் இப்படித்தான்; காலை பதினோரு மணிக்கு வந்து இரவு பன்னிரண்டு மணிக்கு வீடு திரும்பும் என் உடன் பணிபுரிந்த தோழியை, அந்தக் காரணத்தினாலேயே, மிகவும் சிறப்பான பணியாளர் என்று நினைத்திருந்தார். தோழி விடுப்பில் இருந்த போது, அவர் செய்திருந்த மாட்யூல்களில் வந்த பூச்சிகளைப் பார்த்து அதிர்ந்து தம் யோசனையை மாற்றிக் கொள்ள வேண்டியதாகியது.

என்னைப் பொறுத்தவரை, இவற்றிற்கு உண்மையான மாற்றம் மேலாளர்களிடமிருந்தும், பிராஜக்ட் லீடர்களிடமிருந்தும் தான் வர வேண்டும். தன் உடன் பணியாற்றும் பணியாளர்களிடம், அலுவலக நேரத்திற்குப் பின்னரும் அலுவலகத்தில் இருப்பதும், பணியாற்றுவதும் தனக்கு ஒப்புமை இல்லாத விஷயம் என்றோ, குறைந்த பட்சம், "ஒன்பது மணி வரை வேண்டுமானாலும் வேலை செய், ஐந்து மணி வரை வேண்டுமானாலும் வேலை செய், எப்படிச் செய்தாலும் எனக்குக் கவலையில்லை. குறித்த காலத்தில் வேலை முடித்துக் கொடுத்தால் போதுமானது." என்ற எண்ணத்தையாவது தன் கீழ் வேலை செய்பவர் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

"ஒருவர் பன்னிரண்டு மணிவரை அலுவலகத்தில் இருக்கிறான் என்ற காரணத்துக்காக மட்டும் அவரை நான் பெரிய புத்திசாலியாக நினைக்கவில்லை" என்ற தோற்றத்தை ஒவ்வொரு பிராஜக்ட் லீடும் ஏற்படுத்தினாலே பிரச்சனையில் பாதி குறைந்து விடும்.

ஆனால், இன்றைய சூழ்நிலையில் இது நடப்பது மிகவும் கடினமான விஷயம். நிறுவன முதலாளியான நாராயண மூர்த்தியே, "நேரத்துக்கு வீட்டுக்குப் போங்கள்" என்று உரையாற்றினால் கூட அது ஏதோ பக்கத்து நிறுவனத்திற்கான விளக்கம் என்று நினைத்து உதறித் தள்ளிவிட்டு அலுவலகத்தில் அடைந்து கிடப்பவர்கள் ஏராளம்.

ஒரு பிராஜக்டின் தலைவர் அலுவலக நேரத்தில் அலுவலகம் வந்து, அந்த நேரத்திற்குள் வீட்டுக்குப் போனால், கீழுள்ளவர்களும் அதையே செய்வார்கள். ஆனால், இதுவும் பொதுவாக நடப்பதில்லை. இணையத்தில் மேய்வது, விளையாடுவது, மெயில் அனுப்புவது என்பதற்காவது, அலுவலகத்தில் இருக்கத் தான் இந்த நடுமேலாளர்களும் விரும்புகிறார்கள். அவர்கள் பெயர் மேலே நல்ல விதமாகப் போக வேண்டுமே!

ஆக போன வருடம் வேலைக்குச் சேர்ந்த புதிய இஞ்ஜினியருமாகட்டும், பல காலமாக தாமதமாக இரவு தாமதமாக வீட்டுக்குப் போகும் வழக்கத்தில் ஊறித் திளைத்தவர்களாகட்டும், இவர்களால் எந்த வகையிலும் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. ஓரளவுக்கு நம்பிக்கைக்குரியவர்களும், அதே சமயத்தில் வேலை பழகியவர்களுமான நடுமேலாளர்களின் கையில் தான் இந்தப் பிரச்சனைக்கான தீர்வு இருக்கிறது.

மூன்றிலிருந்து எட்டு வருட அனுபவம் உள்ள இந்த பிராஜக்ட் லீடர்கள், வேலை அதிகமில்லாத நாட்களில், நேரத்துக்கு வீட்டுக்குக் கிளம்புவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். 'வீட்டுக்குப் போய் என்னத்தச் செய்ய' என்று பேசாமல், ஏதாவது ஒரு ஆரோக்கியமான பொழுது போக்கை உருவாக்கிக் கொள்ளுதல் நலம். விளையாடுவது, புத்தகம் படிப்பது, சமைப்பது, இசைக்கருவிகள் கற்றுக் கொள்வது, புது மொழி கற்பது, உடற்பயிற்சி செய்வது என்று அவரவருக்கு விருப்பமான ஏதாவது ஒரு பொழுதுபோக்கு வகுப்புகளில் சேர்ந்து கொள்வது நலம். இதன்மூலம் ஒரு கமிட்மெண்ட் இருக்கும். எதிலாவது பிணைந்து கொண்ட எண்ணம் வரும். கமிட்மெண்ட்கள் இல்லாமல் இது போன்ற செயல்களை நாம் கண்டிப்பாகச் செய்ய மாட்டோம் என்பது உறுதி.

இது போன்ற வகுப்புகளில் தான் சேர்வது மட்டுமல்லாமல், தன் கீழ் வேலை செய்யும் அப்பிரண்டைஸ் இஞ்ஜினியர்களையும் இது போல் வேறு நல்ல ஆரோக்கியமான பொழுதுபோக்குகளில் பங்கெடுக்கத் தூண்டுவது நலம்.

ஓரளவுக்கு வேலை பழகிய, இனிமேல் அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்து தான் வேலை கற்க வேண்டும் என்ற அவசியம் இல்லாத புதியவர்களை வீட்டுக்கு அனுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும். கூடியவரை அவர்கள் இங்கே இருப்பதை நாம் ஒன்றும் பெரிய விஷயமாக மதிக்கவில்லை என்ற எண்ணத்தை அவர்களுக்கும் உருவாக்க வேண்டும்.

சில சமயம் அத்தனை முக்கியமில்லாத வேலையைக் கூட இந்த இளைஞர்கள் ஆர்வத்தால், அலுவலக நேரத்திற்குப் பின்னர் எடுத்து வந்து சந்தேகம் கேட்கலாம். பிராஜட் லீடர்களான அல்லது சீனியர் பிரோக்ராமர்களான நீங்கள், இது போன்ற நேரத்தில் உங்கள் இடத்தில் இல்லாமல் இருந்தால், தாமாகவே மறுநாள் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் அவர்களுக்கும் ஏற்படும். அப்படி இல்லாமல், நீங்கள் உங்களின் முக்கியமான வேலைக்காக அலுவலகத்தில் இருக்க நேரும் பட்சத்தில், கீழ் வேலை செய்பவர்களை ஊக்கப்படுத்தாமல், மறு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி மறுநாள் இந்த வேலைகளை மறக்காமல் சொல்லிக் கொடுக்கலாம். இதன் மூலம் அவர்கள் மாலைகளில் கண்டிப்பாக இருக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் வலுப்படும்.

நான் ப்ராடக்ட் நிறுவனத்தில் இருந்த நாட்களில் ஆறேழு மாதங்களுக்குப் பின்னர், கூடியவரை அனாவசியமாக அலுவலகத்தில் இருப்பதைத் தவிர்த்துவிட்டேன். வேலை நேரத்திற்குப் பிறகு ஒரு அரை மணி அல்லது ஒரு மணி நேரம் அதிகமாகச் செலவிடுவது வழக்கம் - ரிலாக்ஸாக பேசிக் கொண்டிருந்த அல்லது டேபிள் டென்னிஸ் விளையாடிய நேரங்களுக்காக மட்டுமே அந்தக் கூடுதல் அரை அல்லது ஒரு மணி. கூடியவரை எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து சமைக்கத் தொடங்கிவிடுவோம். அப்புறம் கொஞ்சம் படிப்பு, தூக்கம்.

இதனால் என்னுடைய முன்னேற்றத்தில் எந்த விதத்திலும் பாதிப்பு இருக்க வில்லை. Fast Track employeeஆகத் தான் என்னைக் கருதினார்கள், சீக்கிரமே பதவி உயர்வுகளும் வந்தன. அதே போல், என்னுடன் பணிபுரிய இரண்டு பேரை நியமித்த போதும், அவர்களின் முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே அதிக நேரம் அலுவலகத்தில் செலவிட நேர்ந்தது. தனக்கான வேலையைச் சரிவர கற்ற பின்னர், அவர்களையும் கூடியவரை உடற்பயிற்சிகளிலும், விளையாட்டிலும் நேரம் செலவழிக்கச் சொல்லியதுண்டு. ஒருவர் அப்படி என்னைப் போலவே வேலையைக் கொடுக்கப்பட்ட நேரத்தில் முடித்து வீட்டுக்குப் போவார். ஆனால், மற்றொருவர், சமைக்கச் சோம்பல் பட்டுக் கொண்டு, இரவும் சாப்பிட்டுவிட்டு, ஒன்பது மணிக்குத் தான் போவார். அப்படியும் மாலையில் வேலை என்று டென்சன் ஏற்றுவதில்லை; அவர் தான் இருக்கிறாரே என்று வேலைச் சுமையைக் கூட்டுவதுமில்லை. எஸ்டிமேட்டில் கறாராக இருப்பது வழக்கம்.

அடுத்து, பிராஜக்ட் நிறுவனங்களுக்கு வந்த போது தான் இந்த என்னுடைய ஒழுக்கத்தில் கொஞ்சம் பிரச்சனை வந்தது. "நாம் ஒன்று நினைக்க கோட் ஒன்று நினைக்கும்" என்பது புரியத் தொடங்கியது. சில பிராஜக்ட் மேனேஜர்கள் வேண்டுமென்றே எட்டு மணி நேரத்தில் முடியாது என்று தெரிந்தும் சில வேலைகளை எட்டு மணிநேரத்தில் முடிக்கச் சொல்லிப் பாடுபடுத்துவார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்களின் டார்கெட் அப்படிக் கறாராக நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

இந்த மாதிரி ப்ராஜக்ட் நிறுவனங்களை எதிர்கொள்வது, வேறு வகையில் இருக்க வேண்டும். ஒன்றிரண்டு நாள் அவர்கள் கேட்டபடியே எட்டு மணிக்கு மேல் இருந்து முடித்துக் கொடுத்துவிட வேண்டும். ஆனால், கேட்டவுடன், 'அதான் எனக்குத் தெரியுமே' என்று ஒப்புக் கொள்ளாமல், கூடியவரை உங்களுக்கான அன்றைய வேலைகளில் எவை எவை கெட்டுப் போச்சு என்று வெளியே, பேச்சுவாக்கிலாவது சொல்ல வேண்டும்.

அப்புறம், எட்டு மணிக்கு மேல் இருந்து வேலை முடிக்கும் நாட்களில், இரவு உணவுக்கான பில், இரவு அத்தனை நேரத்திற்கு மேல் வீடு போக ஆன செலவு போன்றவற்றைக் கேட்டுப் பெற்றுவிட வேண்டும். இரவு ஷிப்டில் வேலை செய்யக் கூட கம்பனி பாலிசிகளில் ஏதாவது நஷ்ட ஈடு (compensation) தருவார்கள். அதையும் கண்டிப்பாகத் தேடித் துருவி வாங்கிவிடுவது நல்லது. - இந்தப் பணம் கண்டிப்பாக இருநூறு முன்னூறு ரூபாய்க்கு மேல் வராது. ஆனால், பணம் என்ற விஷயத்திற்காக அல்லாது, இது போல் தவறாக எஸ்டிமேட் செய்வது, அதிக நேரம் தங்க வைப்பது போன்ற நிகழ்வுகளுக்கான நமது எதிர்ப்பாக இது பதிவாகும். அப்படிச் செய்வதன் மூலம், ப்ராஜக்ட்டுக்கான செலவைக் குறைக்கவென்றே குறைந்த எஸ்டிமேட் போட்டதும் வெற்றியடையாது. 'இது சரியான குறுக்கு வழி அல்ல' என்பதை நிர்வாகம் உணரவும் ஒரு வாய்ப்பாகும்.

ஆனால், இதையெல்லாம் செய்வதாக இருந்தால், கூடியவரை அலுவலகத்தில் சொந்த வேலையாக அதிக நேரம் கழிப்பதைக் குறைத்துக் கொள்ளுதல் நலம். பெஞ்சைத் தேய்க்கும் நாட்களிலும், வேலை நாட்களில் வெகு சில நாட்களிலும் தாமதமாகத் தங்கி மட்டுமே சொந்த வேலை பார்த்தால், பின்னாளில் அதிக நேரம் தங்குவது நமக்கே ஒரு அனாவசியமான விசயமாகத் தெரிந்துவிடும்.

இவற்றை எல்லாம் செய்வதற்கு ஆதாரமான ஒரு விசயம் உண்டு - அது ஒற்றுமை. ஒரு டீமில் இருக்கும் ஐந்து பேரில் இரண்டு பேருக்கு மட்டும் வீட்டுக்குச் சீக்கிரம் போக வேண்டும் என்று எண்ணம் இருந்தால், மற்ற மூன்று பேர் தான் அதிக நேரம் தங்குவதைப் பெரிய விஷயமாகக் காட்டிக் கொள்ள வாய்ப்பாகிவிடும். மற்ற மூன்று பேரும் கூட ஒத்துழைத்தால், கண்டிப்பாக நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்துவிடலாம்.

இப்படிச் சொன்னாலும், அலுவலகத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒருவர் என்ன வேலை செய்கிறார், எப்படி நேரத்தைச் செலவிடுகிறார் என்ற விஷயம் நல்ல மேலாளருக்குத் தெரிந்து தான் இருக்கிறது. டெக்னிகலாக எதுவும் தெரியாதவர், என்று பொதுவாக மேலாளர்களைக் கிண்டலுக்குச் சொன்னாலும், [ஜி.ரா மன்னிக்க :-D ] இது போன்ற விசயங்களை அவர்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே அதிகம் கவலைப் பட வேண்டியதில்லை.


பாலாஜி, உங்கள் பிரச்சனை பொறுத்தவரை, ஒன்பது மணிவரை அலுவலகத்தில் சுற்றுபவர் என்று ஏற்கனவே ஏற்படுத்திவிட்ட பிம்பத்தை நீங்களே தான் பேசி முறிக்க வேண்டும். அடுத்தமுறை நேரங்கணிக்கும் போதாவது, அலுவலக நேரத்தை மட்டும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதை உங்கள் தற்போதைய மேலாளரிடம் சொல்லுங்கள். அவர் கண்டிப்பாகப் புரிந்து கொள்வார். அதே சமயம், இந்தக் காரணத்திற்காக பிராஜக்ட் மாற்றிக் கொண்டே இருந்தால், எங்குமே நிம்மதி கிடைக்காது. பேசுவது ஒன்றே சிறந்த வழி..

Sunday, February 11, 2007

வந்தாச்சு.. வந்தாச்சு..

நெருங்கிய உறவினருக்கு விபத்து. ஆஸ்பத்திரி, எலும்புமுறிவு, சர்ஜரி, பிஸியோதெரபி, ஹிந்தி, மராத்தி, சப்பாத்தி, சப்ஜி என்று கழிந்ததில் தமிழ்மணம் பார்க்காமல் கழித்த முதல் முழு வாரம்!

பலர் சொல்வது போல் கைகால் நடுக்கமெல்லாம் இல்லை என்றாலும், இல்லாத ஒரு வாரம் மடல் அனுப்பியும் பின்னூட்டமிட்டும் குறுஞ்செய்திகளிலும், தேடிய நண்பர்களுக்கு நன்றி. ஒவ்வொரு மடலாகப் படித்துக் கொண்டிருக்கிறேன், பதில்கள் மெல்ல வரும். கொஞ்சம் டைம் ப்ளீஸ்..!

திரு கலந்து கொண்ட பழைய வலைபதிவர் சந்திப்பின் தீர்மானங்கள் எல்லாம் முடித்தபின் அடுத்த சந்திப்புக்குப் போனால் போதும் என்று முடிவெடுத்திருந்தமையால், ஊரில் இருந்திருந்தாலும் செந்தழல் ரவி சந்திப்புக்கு வரும் எண்ணம் இருக்கவில்லை. சந்திப்பு எப்படிப் போச்சு? நடேசன் பார்க் மட்டுமா? அல்லது ரத்னா கபேயுமா?

மற்றபடி என்ன நடந்தது, நடக்கிறது என்று பார்த்துவிட்டு அப்புறம் வருகிறேன்.. சர்வேசன் போட்டிக்குப் பேர் கொடுத்ததோடு முடிந்துவிட்டது.. இனிமேல் போய், தக்காளி வெங்காயம் வாங்கி.. ம்ஹும்.. நான் இல்லப்பா...

ஐந்து பத்து நிமிடத்திற்கொருமுறை ஜிமெயிலையும், தமிழ்மண முகப்பையும் புதிதுப்படுத்திப் பார்த்துக் கொண்டே இருந்த உந்துதல் குறைந்து, ஓரளவுக்குப் பழகியும் விட்டதால், அப்படியே அப்பீட் ஆகவும் வாய்ப்பிருக்கிறது ;) (யாருப்பா அங்க, சந்தோசத்துல குதிக்கிறது?! )

Tuesday, January 16, 2007

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்....




தமிழ் வலைப் பதிவர் அனைவருக்கும்



என்




அன்பார்ந்த




மாட்டுப் பொங்கல்




நல்வாழ்த்துக்கள் :)))))))


Monday, December 04, 2006

சோதனைப் பதிவு :(

தமிழ்மண நட்சத்திரத் திரட்டியில் கடைசி பதிவால் ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்க்க.. ஹி ஹி..

பின்னூட்டப் பெட்டியை மூடிய பதிவு இது :))


Wednesday, August 30, 2006

இதோ... வந்திட்டேன்......


....
.....
........
............
...................
............................


















தமிழோவியத்தில் பொன்ஸ்..



ஹி ஹி...

Friday, August 18, 2006

வாழும் புன்னகை

"அம்மா!, அம்மாஆஆ!!!!"

"என்னடி, வர்றதே லேட்டு, வரும்போதே சத்தம் போட்டுகிட்டு வரே?"

"காய்கறி வாங்கினியா?"

"நேத்து தானே போய் வாங்கி வந்தோம்.. உனக்குக் கூடத் தெரியுமே!!"

"ஆமாம்.. எங்கே இருக்கும்?"

"இதுக்குத் தான் சமையல் ரூம் பக்கம் கொஞ்சமாவது வரணும்ங்கிறது.. காய்கறி ப்ரிட்ஜில தான் இருக்கும்னு கூட தெரியாத ஒரு பொண்ணு.. உன்னைக் கட்டிகிட்டு.. "

"போதும் போதும்.. ப்ரிட்ஜ்ல இருக்கு அவ்வளவு தானே?"

"என்னாச்சு உனக்கு? இப்போ மணி பத்து.. இப்போ போய் சமைக்கப் போறியா? நாளைக்கு ஆபீஸ்லேர்ந்து சீக்கிரம் வந்து சமைக்கலாம் சரியா?"

"அட..இப்போவே வேணும்மா..."

"என்னம்மா சொல்றே? அமெரிக்கா போய் என் பொண்ணுக்கு சமையல்ல இத்தனை ஆர்வம் வந்துடுச்சா? அடுத்த பொண்ணையும் அனுப்ப வேண்டியது தான்.. கொஞ்சமாவது நான் நிம்மதியா இருக்கலாம்..."

"இல்லைம்மா.. சமைக்க கேட்கலை.. "

"பின்ன?"

"இரு.. சொல்றேன்.. சரி, தக்காளி இருக்கு.. பீன்ஸ் வாங்கலையா?"

"பீன்ஸா? அது எதுக்கு? உனக்குத் தான் பீன்ஸ் பிடிக்காதே!!"

"ம்ச்.. கேள்வி கேட்காதே.. சும்மா.. பீன்ஸ் இல்லையா?.. சரி.. கொத்தவரங்காயாவது இருக்கே.."

"என்ன பண்ணப் போறே?"

"கொஞ்ச நேரம் வேடிக்கை பாரு.. முதல்ல அந்த சேர்லேர்ந்து எழுந்திரு.."

"படுத்தல்டீ நீ.. நிம்மதியா சீரியல் பார்க்க விடுறியா!!!"




"அட.. அழகா இருக்கே.. "

"இரு.. இரு.. காமிரா எடுத்துவரேன்.. கலைச்சிடாதே!!"

"ம்ம்.. இப்போ சொல்லு.. இது என்னது?"

"புன்னகை முகம்.."

"கரெக்ட்... "

"இதுக்குத் தான் பீன்ஸ் தேடினியா?"

"ஆமாம்.. "

"அப்போ பீன்ஸ் தான் புன்னகையா?"

"இல்லைம்மா.. இப்போ கொத்தவரங்காய் தான்.. அதான் பீன்ஸ் கிடைக்கலியே!!"

(தங்கை: உன்னை எல்லாம் பீன்ஸ்னு சொல்றாங்களா? பூசணிக்காய்ன்னு இல்லை சொல்லணும்?)

Friday, July 28, 2006

சம்மர் ஸ்பெஷல்...

மூணாவது பரிசுக்கே இத்தனை ஆட்டமா?

ரொம்ப குதிக்காம, ஓட்டு போட்ட பெரிய மனுசங்களுக்கு நன்றி சொல்லுங்கம்மா!!!



என்ன முகத்தைக் காணோம்? எங்க ஒளியறீங்க?

ஓ.. பரிசைப் பத்தி இப்போவே பயமா?! அது சரி.. உங்களைப் பார்த்துத் தான் எல்லாரும் பயந்து நடுங்கி கிட்டிருக்காங்களாம்!





என்னவோ, அம்மணி ரொம்ப வெட்கப்படுறாங்க.. நானே சொல்லிடறேன்..



ஓட்டுப் போட்ட எல்லாருக்கும் நன்றி..

முதல் பரிசு வாங்கிய நிலாவுக்கும் ,இரண்டாம் இடத்தில் இருக்கும் லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கும் பெரிய பெரிய நன்றி.. - வாழ்த்துக்குப் பதில் ஏன் நன்றின்னு கேட்கறீங்களா? எனக்கு இன்னும் நேரம் ஏற்படுத்திக் கொடுத்திருக்காங்களே அதுக்குத் தான் நன்றி.. அப்படியே வாழ்த்துக்களும்..

ஆங், மறந்திட்டேனே, சந்திரா அத்தைக்கும் சேகர் சாருக்கும் ஸ்பெசல் நன்றி..

போட்டியில் பங்கெடுத்து கிட்டவங்களுக்கும் நன்றி.. இல்லைன்னா எண்பதுல மூணாவதா வந்தேன்னு சொல்லிக்க முடியாம போயிருக்குமே!

நாலாவதா வந்த இளா, பிடியுங்க, உங்களுக்கும் ஒரு நன்றி :) - அட, எனக்கு விட்டுக் கொடுத்திருக்காரே!

போட்டி நடத்திய தேன்கூடு, தமிழோவியத்துக்கும் நன்றிங்கோவ்

சரி சரி.. ரொம்பத் தான் ஆடாதேன்னு சொல்றது கேட்குது!! அப்படியே அடக்கி வாசிக்கிறேன்..


அடடா.. சைலன்ட் ஆவுறதுக்கு முன்னாடி..

தலைப்பு கொடுத்தவருக்கு..

.

.

.

நன்றி வாத்தியார்!!


Sunday, July 16, 2006

உள்ளடக்கம் - அட்டவணை

பொன்ஸ் பக்கங்களின் சின்ன உள்ளடக்கம்

என்னைப் பற்றி

சிறுகதை முயற்சிகள்

கவிதைகள் என்று எழுதியவை...


அறிவியல்/கணினி
விளையாட்டுப் பொன்ஸ்

பயணக் கட்டுரைகள்

விழியம்

விமர்சனங்கள்

எனக்குப் பிடித்த என் பதிவுகள் சில

நட்சத்திரப் பதிவுகள்

சிறுவர் பக்கங்கள்

- டிசம்பர் 9, 2006 அன்று புதுப்பிக்கப்பட்டது

Tuesday, July 04, 2006

வெட்டியாய்ச் சுட்டவை ஐந்து


ஒற்றைப் பனையாம் உவமை அழிந்தது
இற்றைக்கு ஓர்-ஆன்ட் டெனா





தனியொருவனுக் கிடமிலையெனில்

தார்ச்சாலையில் படுப்போம்..


"களைப்பான நாள்,

கடுப்படிக்கும் வேலை"

'கடலை' நல்லா வறுபடுது.,

கசங்கிப் போனது நான் மட்டும் தான்..


எவனுக்கோ கல்யாணம்,

எனக்கு அலங்காரம்!

யாரையோ சுமக்காமல்

நீரைச் சேமிப்பது எப்போது?

ஆரோக்கியமான புரவிதான்

அதிவேகமாகத் தான் விரட்டுகிறேன்

இந்த (புத்தக) அட்டையிலிருந்து

இறங்கினால் தானே!!


[ஹி ஹி... செல் வாங்கின புதுசுல கண்டதையும் சுட்டது.. ச்ச்சும்மா எடுத்துப் போட்டுப் பார்த்தேன்.. ஒரு டைம் பாஸ் :)) ]

Wednesday, June 14, 2006

என்றென்றும் இனியவை ஆறு

நான் வலைப்பதிவுக்கு வந்த புதிதில் இந்த நாலு விளையாட்டு கன ஜோராக நடந்து கொண்டிருந்தது. நாலு விளையாட்டில் எனக்கு அப்போது பிடித்த விஷயமே அதில் இடம்பெறும் அடுத்த நால்வரைக் கூப்பிடுவது தான். அதன் மூலம், அடுத்த நால்வரின் பக்கங்களின் லிங்க் கிடைக்கும். அங்கிருந்து மேலும் நான்கு பக்கங்கள். இப்படித் தான் ஒவ்வொரு பக்கமாகத் தேடிப் படித்தேன். அப்புறம் தான் தமிழ்மணம் என்று ஒன்று இருப்பதே தெரிந்தது. வெகு நாட்களுக்கு அப்புறம் தான் தேன்கூடு பற்றித் தெரிந்தது.

நம்மையும் ஒருவர் நாலு விளையாட்டுக்குக் கூப்பிட மாட்டாரா என்று நினைத்ததுண்டு. ஆனா நாஆஆலு விஷயம் எழுதணுமே, நானெல்லாம் நாலும் தெரிஞ்ச ஆள்தானா என்று சந்தேகம் எப்போவுமே உண்டு.

இதோ, யாழிசைச்செல்வன் மீண்டும் ஆறு பதிவு என்று அதை மீள்விளையாட்டாக்கி இருக்கிறார். என்னையும் கூப்பிட்டு விட்டார். ஆறு பதிவு போட ஆறு நாள் உட்கார்ந்து யோசித்தேன். ஒன்றும் வேலைக்காகும் போல் தெரியவில்லை. ஆறு விஷயங்களில், ஆறு பொருளெடுத்து வகைப் படுத்த எனக்கு எந்த ஆறும்(வழி) பிடிபடவில்லை. அதான், விளையாட்டை எனக்கேற்ற மாதிரி கொஞ்சம் மாற்றி விட்டேன்..

1. என்றென்றும் இனியவை - பாடல் ஒன்று:
"ஜாக் அன்ட் ஜில்" தொடங்கி இன்றைய "மஞ்சள் வெயில் மாலையிலே" வரை சொற்கள் தெளிவாய் இருக்கும் எல்லாப் பாடல்களும் எனக்குப் பிடிக்கும். அதிலும் என்றைக்குக் கேட்டாலும் பிடிக்கும் ஒரு மாதிரி அமைதி தரும் பாட்டு "குறையொன்றும் இல்லை". இதை எம்.எஸ் குரலில் பிடிக்கும் என்று நிறைய பேர் சொல்வார்கள்.. எனக்கு நான் பாடினால் தான் பிடிக்கும்.. மத்தவங்க பாடு தான் திண்டாட்டம் :)

2. என்றென்றும் இனியவை - பிடித்த பொழுதுபோக்கு இரண்டு :
அ. மதியம் பதினோரு மணி வெயிலில், படுத்துக் கொண்டே, படித்துக் கொண்டே தூங்குவது. (வெயில் is a must)
ஆ. பஸ்ஸோ காரோ, ப்ளேனோ, ரயிலோ.. தொலை தூரப் பயணங்களில் ஜன்னலோரம் அமர்ந்து புத்தகத்தில் ஒரு கண், எதிர் இருக்கைக்காரர்கள் செய்யும்/பேசும் விஷயங்களில் ஒரு கண், ஜன்னல் வழியே தெரியும் உலகில் ஒரு கண், அட அப்பப்போ வரும் தின்பண்டங்களை மறந்துவிட்டேனே :)..

3. என்றென்றும் இனியவை - ரசித்து தங்கிய ஊர்கள் மூன்று
அ. அப்பாவின் சிற்றூர் - மன்னார்குடி அருகில் வாட்டார் நல்லூர். நல்ல ஊரு. விடுமுறைகளுக்கு மட்டுமே சென்றதால், என்னுடைய ஊர் என்று சொந்தம் கொண்டாட மனம் வரவில்லை :)
ஆ. ஹைதராபாத் - கிட்டத் தட்ட நாலு வருஷம் இருந்தேன். பல விஷயங்களில் என் கண்ணைத் திறந்த நண்பர்களைச் சந்தித்த ஊர். நான் பார்த்த முதல் வெளி உலகம்.
இ. பூனா - ஆறு மாதமே இருந்தாலும் இந்த ஊரில் இருந்த நாட்களை நான் ரொம்பவே ரசித்தேன். நல்ல நண்பர்கள் இங்கும்.

4. என்றென்றும் இனியவை - பிடித்த பானம் நாலு
உணவுன்னா எல்லாமும் வரும். அதான் பானம்.
அ. நானே போட்ட டீ
ஆ. அம்மா போட்டுக் கொடுக்கும் காபி
இ. கொய்யா ஜுஸ்
ஈ. காய்கறி வேக வைச்ச தண்ணியெல்லாம் சூப்னு சொல்லி அப்பா கொடுக்கிறது.

5. என்றென்றும் இனியவை - கலெக்ஷன்ஸ் ஐந்து
எல்லாவற்றையும் பாதியில் விட்டுவிடும் ஆர்வக் கோளாறான நான், இது நாள் வரை (குறைந்த பட்சம் 5 - அதிகபட்சம் 15 வருடங்களாக) தொடர்ந்து சேகரித்துக் கொண்டிருக்கும் என் கலெக்ஷன்ஸ் :
அ. பென்சில் - அதாவது, "க்ராபைட் மட்டுமே இருக்கா?" என்று கேட்கக் கூடிய அளவு ரொம்பச் சின்ன, கையால் பிடிக்கவும் முடியாத பென்சில்கள் என்னிடம் நிறைய உண்டு.
ஆ. ரப்பர் - எல்லாவிதமான பொம்மை வடிவத்திலும் அழிப்பான்கள். மார்க்கெட்டில் புதிதாக வரும் வடிவங்களையும் உடனுக்குடன் வாங்கிவிடுவேன்.
இ. யானை பொம்மை - இது பற்றி முன்னேயே சொல்லியாயிற்று
ஈ. சிவலிங்கம் - எந்தப் புது சிவன் கோயிலுக்குப் போனாலும் போய் வந்த நினைவாக லிங்கம் வாங்குவது. உலோக லிங்கங்கள்/ பேப்பர் மாஷ் வாங்க மாட்டேன். கல்/மார்பிள் மட்டும் தான். சின்ன லிங்கம், கையடக்கமாக. அதைத் தொட்டுத் தடவிப் பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி.
உ. காதணிகள் - ஒரு ஜோடி பதின்மூன்று ரூபாய்க்குக் கீழ் கிடைக்கும் காதணிகள், பல நிறங்களில், பல வடிவங்களில் வாங்கப் பிடிக்கும். எல்லாம் காலேஜ் நாட்களில் பிடிக்காத விஷயங்கள். வேலைக்கு வந்தபின் ஒரே பைத்தியமாக ஆகி விட்டேன் :)

6. அழைக்கும் நபர்கள் ஆறு:
அ. யோசிங்க - பதிவுலகில் கைப்புள்ள பதிவுக்குப் பின் நான் படித்தது இவரைத் தான். நல்லாத் தான் புதிர் போடறாரு.. நம்ம 'லெவலுக்கு' இல்லை.. அதான் ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்க்கிறது :)
ஆ. குப்புசாமி - பங்கு வணிகம், கரையோரம்னு கலக்குறாரு. குப்பு, உங்க கரையோரத்துல புதுச் செடிக்கு விதை கொடுத்தாச்சு.. அப்டியே பிடிச்சு எழுதுங்க!!
இ. ரமணி - அந்நியனாக எனக்கு அறிமுகமாகி அப்படியே (மட்டுறுத்தல்) நண்பரானவர். பதிவுகள் அதிகம் படிக்கவில்லை என்றாலும், டெக்னிகல் சமாச்சாரம் எல்லாம் அலசுறது உண்டு.. (அதாவது, அவர் பேசுவாரு, நான் சும்மா கேட்பேன் :) )
ஈ. நாகை சிவா- சங்கத்துப் புலியைக் கூப்பிடாவிட்டால், யானை மேல பாய்ஞ்சிட்டா?!! அதான் ஹி ஹி!!
உ. பெருசு - பெருவில் உட்கார்ந்து தனியாக வெண்பா எழுதிக் கொண்டிருப்பவர். மறுபடி சங்கத்தவர் - மூத்த மெம்பர்.
ஊ. வவ்வால் - வலைப் பதிவுகளுக்கு வந்ததிலிருந்து எனக்குக் கோபமே வந்ததில்லை என்ற என் எண்ணத்தை முறியடித்த பெருமை முழுவதும் இவருக்கே.. கௌசிகன் பதிவில் கிட்டத் தட்ட ஆட்டோ அனுப்பி விடுவாரோ என்று நான் பயப்படும் அளவுக்கு சீரியஸாக சண்டை போட்ட முதல் பதிவர். அதிலிருந்து யானையும் வவ்வாலும் ரொம்ப ப்ரெண்ட்ஸ் தான். வவ்வால், தலை கீழா நின்னுகிட்டே ஆறு பதிவு போடுங்கய்யா.

இன்னும் நிறைய பேரை அழைக்க ஆசை. ஆனா, இந்த லிஸ்ட்ல இருப்பவர்கள் நான் விரும்பிய ஆட்களை நிச்சயம் அழைத்து விடுவார்கள். அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

இந்தப் பதிவு இத்தனை நீளமாகப் போனதற்கு மன்னிக்கவும். பொறுமையா படிக்க முடியாதவர்கள்(அதாவது, நான் ரொம்ப பொறுமையைச் சோதிச்சிருந்தா) தங்கள் கண்டனங்களை யாழிசைத் தாத்தாவிற்கு அனுப்பலாம். பார்சல், வி.பி.பி அலவுடு.

Sunday, April 23, 2006

வ.வா.ச. அறிக்கை??!!




யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

வேண்டின் உண்டாகத் துறக்கத் துறந்தபின்
ஈண்டு இயற்பால பல

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு..

Wednesday, April 19, 2006

பொங்கியது போதும்; வாளை எடு


சங்கப் போர்வாள், வெற்றி வீரர், சென்னை தந்த செம்மல் தேவ், உன் மடல் கண்டு நான் மனம் நொந்திட்டேன்.. பெயர் விளக்கம் தெரியாத ஒரு புதுக் கட்சியினர் விடும் அறிக்கைக்காக, மனம் நொந்து நீயும் இப்படி பால் மாறுவதா!!!

திரைகடல் ஓடியும் திரவியம் தேடவேண்டிய வயதில் குதிரை ஏறி மால்காண்டு சென்று அங்கும் அயராமல் கட்சிப் பணி பற்றியே சிந்திக்கும் நமது தங்கத் தலைவர் எங்கே?..

எங்கே எங்கே என்று கேட்டுத் துடிக்கும் தனது கட்சித் தொண்டர்களுக்குக் கூட இன்னும் முகமூடி போட்டு இருக்கும் அந்த பெயர் தெரியா கட்சி எங்கே..?

எதுகை மோனையில் அறிக்கை விட்டார்கள் என்று பணிவதா?

சிங்கம் சிறு நரியைக் கண்டு மனம் வாடுவதா??!!

வ.வா.ச ப.ம.கவுக்கு பணிந்து வழிவிட்டார்கள் என்று வரலாறு பேசுவதா??!!

எத்தனை அடி வாங்கிய போதும் அழாமல் சிரித்தே எதிரிகளைச் சிதறடிக்கும் தலைவர் கைப்புவின் வழித்தோன்றல்கள் நாம்!!

இந்த சலசலப்புகளுக்கும் பினாத்தல்களுக்கும் அஞ்சி பணிவதா!!!!

இழுக்கு தம்பி இழுக்கு!!!

இன்னும் தேர்தல் அறிக்கையே வெளியிடாத அந்தக் கட்சிக்கு நாம் சீட்டு ஒதுக்கியது நமது பெருந்தன்மை. அதைப் புரிந்து கொள்ளாமல், அறிக்கை விடும் வீணர்களுக்கு பதில் சொல்ல நமக்கு அவசியமில்லை.


எடு வாளை.. இவர்களை தேர்தல் களத்தில் சந்திப்போம்..

கழகப் போர்வாள் தேவ், சங்கச் செயல் வீரன் பாண்டி, காற்றென கடுகி பிரசாரம் செய்யும் கண்மணி கீதா, பொன்மனச் செம்மல் சிபி, புயலாம் பேராசிரியர் கார்த்திக் இவர்கள் நம் பக்கம் இருக்கையில், வெற்றி நமதே..

வெற்றிவேல்!! வீரவேல்!!!! சக்திவேல்!!!!

(இதுக்கும் விஜய் படத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கறீங்களா? சும்மா ஒரு இதுக்குத் தான்.. நயன்தாரா படம் போட்டு அறிக்கை விடும்போது, நாங்களும் விஜய் படம் போட வேண்டியது தானே..

"வாழ்ந்து பார்ப்போம் வாழ்ந்து பார்ப்போம் வாடா!!!")

Thursday, March 16, 2006

முதல் பதிவு

முதல் பதிவு

முதல் முயற்சி

முதல் முதல்

கல்லூரிச் சாலையில்

நேர்முகம் காணப் போகும்

புது வருட மாணவி போல்

மனமெங்கும் பூப்பூத்திருக்கிறது

பயம் !!!


பொதுவாக என் பேச்சைக் கேட்பதற்கும் ஒருவரும் இல்லைன்னு ஒரு feeling உண்டு

இந்த சைட் பார்த்த போது, நான் மிகவும் மகிழ்ந்தேன். எப்படியும், யாராவது, சும்மா பொழுது போகாத போதாவது, தப்பி தவறியாவது, படித்துவிட மாட்டாங்களா??!!!

Soooo... நானும் வந்துட்டேன்!!!!!!