Saturday, December 02, 2006

பந்தா பலவிதம்...

அமெரிக்கத் தூதரகம். அலுவலக முகவாண்மைத் துறையினரின் வழக்கமான குளறுபடிக்கு இன்றைக்கு நான் பலியாக, எல்லா பத்திரங்களையும் எடுத்துக் கொண்டு பத்தரை மணி நேர்முகத்துக்கு பதினொன்றே முக்காலுக்குத் தான் உள்ளே போனேன். 'அமெரிக்கர்கள் நேரம் தவறாதவர்கள்' என்பதெல்லாம் அவர்கள் ஊரோடு தான் போலும். நம்மூர் தூதரகங்களுக்கு பத்துமணி என்றால் தாராளமாக பதினோரு மணிக்கு வரலாம். மூன்று மணி என்றாலோ, ஐந்து மணிக்குப் போனால் சரியாக இருக்கும்.

நான் போகும் போதுதான் பத்தரை மணிக் கூட்டம் அப்போது தான் உள்ளே போயிருந்தது. வழக்கமாக தூதரகங்களில் காணப்படுவது போல், இன்றும் ஒரு வயதான தம்பதியர், என் பின்னால். வெயிலில் கொஞ்சம் காய்ந்து போன அந்த அம்மாளுக்கு, கணவர் போர்வையாக உதவ, அதன்பின் மழையில் கணவர் நனைந்துவிடப் போகிறாரே என்று மனைவி முந்தானையால் தலைக்கு மேல் குடைபிடிக்க, அற்புதமான காட்சி அது. ஒவ்வொரு வரிசையிலும் என் முறைகள் வந்து உள்ளே போய், வெளியேறி, எப்படியும் நேரமாகும் என்று தெரிந்த காரணத்தால் இரண்டு மூன்று புத்தகங்களுடன் போனது வீணாகவில்லை. புத்தகங்கள் முடிவதற்குள் கூப்பிட்டு, காலையில் அலைந்த அலைச்சலுக்கு நேர்முகம் மிக இனிதே முடிய மகிழ்ச்சியோடு நான் நுழைந்தது தூதரகத்துக்கு எதிரில் இருக்கும் உட்லண்ட்ஸ் தான்.

உட்லண்ட்ஸ் ஓட்டலுக்கு நான் கடந்த பத்து வருடமாகவே போய் வருவது வழக்கம். வண்டியோ செல்பேசியோ, ஏன், பணம் தவிர்த்த வேறு பையோ கூட அனுமதிக்காத தூதரக நூலகத்துக்கு வந்து கொண்டிருந்த காலம் முதலே என் நிரந்தர வண்டி நிறுத்துமிடம் உட்லண்ட்ஸ் தான். அதிகப்படியான பொருட்களை வண்டியில் போட்டுப் பூட்டிவிட்டுப் போனால், திரும்பி வரும் வரை பத்திரம் நிச்சயம். வண்டி நிறுத்தினோமே என்ற குற்ற உணர்வில் நிறுத்தக் கட்டணமாக ஒரு தோசையும் காப்பியும்.

இன்றும் அப்படி உணவகத்தின் உள்ளே நுழைந்த போது உட்கார தனி மேசை ஏதும் இருக்கவில்லை. ஏற்கனவே மக்கள் அமர்ந்திருந்த மேசைகளுக்குள் தலையில் பொன்னிற தலைப்பாகையோடு, தோளிலும் அதே நிறத்தில் துண்டோடு ஒரு வயதானவர் அமர்ந்திருந்த மேசை என் கவனத்தைக் கவர்ந்தது. ரொம்பவும் அறிமுகமான முகமாகத் தோன்றிய தலைப்பாகைத் தாத்தா ரொம்ப ஆர்வமாக ஒரு பேப்பரில் ஏதோ எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் அமைதியாக நானும் போய் எதிர்ப்புறம் அமர்ந்தேன். தாத்தா மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு ஏதோ எழுத முயற்சித்துக் கொண்டிருந்தார்.

ஏதும் சம்ஸ்கிருத அல்லது இந்தி பண்டிட்டாக இருப்பாரோ? அப்படி மொழி கற்றுக் கொண்டிருந்த காலங்களில் இவரைச் சந்தித்திருப்பேனோ என்று முதலில் யோசித்தேன். அப்புறம், அவர் பக்கத்தில் இருந்த பை முழுவதும் தெலுங்கு புத்தகங்களால் நிறைந்திருக்கவே, 'ஒருவேளை தெலுங்கு பண்டிட் தானோ, நான் இவரை எங்கோ பார்த்தது போல் இருப்பதெல்லாம் சும்மா தேவையில்லாத நினைவோ' என்று தோன்றியது.

தோசைக்குச் சொல்லிவிட்டு, என் நேர்முகத் தேர்வு சாகசங்களை நண்பர்கள் மற்றும் வீட்டினருக்குத் தொலைபேசிக் கொஞ்சம் பந்தா விட்டுக் கொண்டிருந்தேன். எதிர் இருக்கை தாத்தா என்னைக் கவனிக்கவே இல்லாமல் ரொம்பத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். ஏதோ கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது அவர் சொற்களை அடுக்கிய விதத்தில் தெரிந்தது.

அவரது தலைப்பாகை, கொஞ்சம் முன்னால் தூதரகத்தில் பார்த்த சிங் ஒருவரின் தலைப்பாகையை நினைவுப்படுத்தியது. அந்தக் கட்டுக்கும் இந்தக் கட்டுக்குமுள்ள வித்தியாசத்தை ஆராயலாம் என்று நிமிர்ந்து பார்த்தேன். ரொம்பப் பழைய பட்டு போலும், கூர்ந்து பார்க்கையில், பார்க்கவே பரிதாபமாகத் தோன்றியது. சீக்கியர்கள் கூட இப்போது வெளியூர்களுக்கு வரும் போது இது போல் தம் மத அடையாளத்தை வெளிக்காட்டி, தன்னை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தும் தலைப்பாகைகளை அணிந்து கொள்வதில்லை என்று சமீபத்தில் படித்த நினைவு. இந்தத் தாத்தா இப்படித் தான் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்ள இந்த இடத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாத உடையில் வந்திருப்பது நியாயமா? என்று தோன்றியது. தாத்தா மட்டும் கொஞ்சம் என் கண்ணைப் பார்த்துச் சிரித்திருந்தாரானால், கேட்டே இருப்பேன். ஆனால், தாத்தா வேறு உலகத்தில் ஆழ்ந்திருந்தார்.

நான் காப்பிக்குச் சொன்ன நேரத்தில் தாத்தா தான் எழுதிய சந்தத்திற்கு மெட்டு போட்டு சன்னமாகப் பாடவே தொடங்கி இருந்தார். ஹைதராபாத்தில் இருந்த காலத்தில் நான் கற்றுக் கொண்ட தெலுங்குப் பாடல்களில் ஒன்றாய் இருக்குமோ என்று காதைத் தீட்டிக் கேட்டுப் பார்த்தேன். சுத்தமாகப் புரியவில்லை! தாத்தா கர்ம சிரத்தையாக மற்றுமொரு நோட்டை எடுத்து, இதுவரை காகிதத்தில் எழுதியதை நோட்டில் படியெடுக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு அடியாய்ப் பாடிப் பார்த்துத் தளை தட்டுகிறதா என்று யோசித்து யோசித்து அவர் படியெடுப்பதை வேறு வழியில்லாமல் சிறிது நேரம் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

ஐந்து நிமிடத்தில் இன்னுமொரு பெண் வந்து எங்கள் மேசைக்கருகில் நின்றாள். என்னைவிட ஓரிரு வயது சிறியவளாக இருப்பாள். பேண்ட் சர்ட்டில் கழுத்தில் ஏதோ பட்டியுடன் வந்தாள். பக்கத்தில் இருக்கும் ஏதேனும் மென்பொருள் நிறுவனமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். "சார்" என்று தாத்தாவைக் கூப்பிட்டார். தலைவர் இந்த உலகத்தில் இல்லை. அவரது கடைசி சில அடிகள் எதிர்பார்த்த வகையில் இல்லாத காரணத்தால் மீண்டும் மோட்டு வளையில் ஏதோ ஜிலேபிக்களைத் தேடிக் கொண்டிருந்தார். "சார்!" மீண்டும் அழைத்தாள் அவள்.

உதவுவோமே என்று நானும் அவரை "ஐயா!" என்று அழைத்துப் பார்த்தேன். இப்போது ஏதோ ஒரு அசைவு தெரிந்தது. சரி, நம்மைக் கவனித்துவிட்டார் என்று நினைக்கும் போது கடைசிக்கு முன் வரியில் மீண்டும் ஜிலேபி போடத் தொடங்கினார். நான் அந்தப் பெண்ணைப் பார்த்து 'பிரயோசனமே இல்லை' என்பது போல் தலையாட்டினேன். அந்தப் பெண்ணோ.. 'இருக்கட்டும், காத்திருக்கேன்' என்றாள்.

கடைசியாக அந்தப் பாட்டு முடிந்த பின்னால் தாத்தா திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவள் "சார், நான் தான் XXXX. நான் தான் உங்களுக்குப் போன் பண்ணி இருந்தேன். XXX டீவியிலிருந்து" என்றாள்.

டீவி பெயரைக் கேட்டவுடன் நான் ஆர்வமானேன். "சரி, இவர் சம்ஸ்கிருத பண்டிட் தான். ஏதோ காலைமலர் நிகழ்ச்சிக்காக, யக்கா பேட்டி எடுக்க வந்திருக்கிறார்" என்று நினைத்துக் கொண்டே காதைத் தீட்டினேன். (அப்பவும் திரும்பி அவர்களைப் பார்க்கவில்லை.. வாசல் பக்கமாக போவோர் வருவோரை நோட்டம் விட்டுக் கொண்டே காதை மட்டும் கொடுத்தேன்)

"எங்க டீவியில் 2006 அவார்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்துறோம். அதில் பின்னணிப் பாடகர்கள் வரிசையில், நீங்க முதல் நாலு இடங்களில் வந்திருக்கீங்க" என்றாள் அந்தப் பெண். இத்துடன் நான் கொஞ்சம் அதிர்ந்தேன். 'இது ஏதடா, இந்தத் தாத்தா பாடகரா!'

"நானா?! நானெல்லாம் பாடினது ரொம்பக்காலம் ஆச்சே! " என்றார் தாத்தா. அப்போ இவர் பழங்காலப் பாடகரா?!

"ஆமாம் சார். அதான் ஆச்சரியம். இன்றைய பாடகர்களோட, உங்க பேரையும் சேர்த்துத் தேர்ந்தெடுத்திருக்காங்க மக்கள்!" என்றாள் அந்தப் பெண். தாத்தாவை விட எனக்குத் தான் ஆச்சரியம்.

"எல்லாம் கடவுள் அருள் தான். எனக்குக் கிடைச்ச புகழா நான் இதை நினைக்கலை, எனக்குப் பாட வாய்ப்பு கொடுத்த, நல்ல பாட்டுக்களைக் கொடுத்த எம்.எஸ்வீ மாதிரியான இசையமைப்பாளர்களுக்குத் தான் நான் நன்றி சொல்லணும்" என்றார் தாத்தா.

அதன் பின் யக்கா தாத்தாவிடம் கொஞ்ச நேரம் சாதாரணமாகப் பேசிவிட்டு(தாத்தாவின் கொஞ்சம் பழங்காலத் தமிழுக்குத் தடுமாறிவிட்டு) காமிரா முன்னால் என்ன சொன்னால் நன்றாக இருக்கும், என்றெல்லாம் சொல்லிவிட்டு, அந்த இடத்தில் படம் பிடிக்க அனுமதி வாங்கிவரப் போனார்.

கடைசி வரை இருவரும் பெயரைச் சொல்லிக் கொள்ளவில்லையாதலால், தாத்தா யாராக இருக்கும் என்று எனக்கு யோசனையாகவே இருந்தது. பழங்காலப் பின்னணிப்பாடகரான பி.பி. ஸ்ரினிவாசனாக இருப்பாரோ என்று சந்தேகம். சரி, அப்படியே இருந்தாலும், "உங்க பாட்டெல்லாம் ரொம்ப நல்லா இருக்கும் சார்" என்று இப்போது வைத்துச் சொல்லவா முடியும்? வந்து உட்கார்ந்த நேரத்திலேயே அல்லவா சொல்லி இருக்கணும்.

பிரபல பின்னணிப்பாடகர்களைப் பார்த்தவுடன் எல்லாருமே சொல்வது இதுவாகத் தான் இருக்கும். எனவே, நானும் சொன்னால், சம்பிரதாயமாகப் போய்விடும். ஹோட்டலுக்கு வந்திருப்பவர்களைப் பார்த்து, "சாப்பிடப் போறீங்களா?" என்று கேட்பது மாதிரி..

நான் அவர்கள் பேச்சிலும் கவனம் செலுத்தியதால், தாத்தா என்னிடம் திரும்பி "நீ வந்ததும், இவ தான்னு நினைச்சிட்டேன். நீ எங்கே வேலை செய்யறே?" என்று விசாரித்தார்.

பதில் சொல்லிவிட்டு, "பாட்டு எழுதிகிட்டு இருக்கீங்களா?" என்றேன்.

"ஆமாம். வித்யாவாணி ஸரஸ்வதி பேரில் பாட்டு எழுதிட்டிருக்கேன்" என்றார். அத்துடன் அந்தப் பாட்டின் சில பத்திகளைப் படித்து ஆங்கிலத்தில்சொல்லத் தொடங்கினார்.

சில நிமிடங்கள் முன்புவரை, இருந்து பேட்டியைக் கவனித்து அதையும் சேர்த்து பதிவில் போடுவோமா என்று தோன்றியதை இந்தப் பதில் மொத்தமாக சாப்பிட்டுவிட்டது. விட்டால் பாட்டு முழுவதையும் எனக்குப் படித்துக் காண்பித்துவிடுவாரோ என்ற பயம் கொஞ்சமாக எழுந்தது. அலுவலக வேலை வேறு அழைக்க, அந்தப் பாட்டை (அலைவரிசை மாற்றியைக் கையில் வைத்துக் கொண்டு) தொலைகாட்சியிலேயே கேட்டுவிடலாம் என்று முடிவெடுத்து அத்துடன் நான் நன்றி சொல்லி விடைபெற்றுக் கொண்டு வந்தேன். தாத்தாவுக்குத் துணைக்கு வந்திருப்பேன் என்று என்னைப் பற்றி நினைத்திருந்த அந்தப் பெண் நான் 'பை' சொல்வதை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டே போனாள்.
வெளியில் வந்து ஒவ்வொன்றாக யோசிக்கத் தொடங்கியபோது தான், தொலைக்காட்சி, பத்திரிக்கையில் பார்த்த முகம் என்று எனக்கும் பழக்கமாக இருந்திருக்கிறது என்பது புரிந்தது. அதனால் தான் வெறும் பிஸ்கெட் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த மனிதரை இப்படி ஓட்டலில் உட்கார்ந்து பாட்டெழுத அனுமதித்திருக்கிறார்கள். நான் அவருக்கு முன்புற இருக்கையில் உட்கார முயன்றபோது என்னை ஒரு மாதிரி சந்தேகமாக தாத்தா பார்த்ததும் நினைவுக்கு வந்து ஒரே தமாசாக இருந்தது.

பிரபலங்களுக்கு முன்னால் எப்படி நடந்து கொள்வது என்பது தெரியாமல் போவது என்னுடைய மிகப் பெரிய பலவீனம். தாத்தாவிடம் ஒரு கையெழுத்தாவது வாங்கி இருக்கலாம். வாங்கி என்ன செய்ய? அதான் இத்தனை பெரிய பாடகரைப் பார்த்து, அவரோடு சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டாயிற்றே! அப்புறம் அவரைப் பார்த்தேன் என்பதை யாருக்கு நிருபிப்பதற்காக கையெழுத்து, புகைப்படம் எல்லாம்!

ஆனாலும் மனிதர் இப்படித் துளி கூட பந்தா இல்லாமல் அமைதியே உருவாக பாட்டெழுதிக் கொண்டிருக்கும் போது, அவரைத் தொல்லை செய்வது போல் எல்லாருக்கும் போன் போட்டு என் விசா வந்த அளப்பறையைப் பேசியதை நினைக்கும் போது இப்போது ரொம்ப ரொம்ப வெட்கமாக இருக்கிறது. இதில் அம்மாவிடம் "ரொம்ப பந்தா பண்ணாம இருந்தா எல்லாமே ஈஸி தான்" என்று அடித்து விட்டது.. ஐயோ ஐயோ. இதுக்கு மேல என்னைக் கேட்காதீங்கோ!!

26 comments:

dondu(#4800161) said...

பி.பி. ஸ்ரீனிவாஸ் மிகச் சிறந்த பாடகர். முக்கியமாக எனது அபிமான நடிகர் ஜெமினி கணேசனுக்கு மிகப் பொருத்தமான பின்னணி பாடகர்.

சமீபத்தில் 1966-ல் வந்த வாழ்க்கைப் படகு என்னும் படத்தில் முதலில் "அட சிரிக்கிறயே"ன்னு ஆரம்பிச்சு ஜெமினியின் குரலில் டயலாக், பிறகு பி.பி. ஸ்ரீனிவாஸ் குரலில் "சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ" என்ற இனிய பாடல். அப்படியே ஏதோ ஜெமினி கணேசனே பாடுவது போன்ற பிரமை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//சமீபத்தில் 1966-ல் வந்த//
1999ஆ, 1669ஆ எது சமீபத்தில்..

செந்தழல் ரவி said...

:)))))

சிறில் அலெக்ஸ் said...

அருமௌயான பாடகர். எனக்கு மிகவும் பிடிக்கும் இவர் பாடிய பாடல்கள்.

நானும் உட்லாண்ட்ஸில் இவரை பார்த்திருக்கிறேன்.

அதெல்லாம் கிடக்கட்டும்.. எப்ப எங்க ஊருக்கு வர்றீங்க?

நாமக்கல் சிபி said...

ஜெமினி கணேசனுக்காக அவர் பாடிய பாடல் "பாட்டுப் பாடவா? பார்த்துக் கேட்கவா? பாடம் சொல்லவா? பறந்து செல்லவா"? என்ற பாடல் மிகவும் அருமையானது.

முதலில் அவரை கலாட்டா செய்து பாட்டு பாட வைத்து அவரது திறமையை உணரவைத்த சிலரைக் குறிப்பிட்டு "அந்த ஏழு பேருக்கு நன்றி" என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருப்பார்.

Anonymous said...

ஆஹா. பாட்டு பாடவா பறந்து செல்லவா..ன்னு ஒரு பாட்டு பாட சொல்லி இருக்காலாமே....

மதி கந்தசாமி (Mathy) said...

பி.பி.சிரீனிவாஸ் ரொம்பப் பிடிக்கும். அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி பொன்ஸ்,

மதி கந்தசாமி (Mathy) said...

//அப்புறம் அவரைப் பார்த்தேன் என்பதை யாருக்கு நிருபிப்பதற்காக கையெழுத்து, புகைப்படம் எல்லாம்!//

அட! அட!! தத்துவமெல்லாம் பின்றீங்க போங்க.

மணியன் said...

ஒரு பிரபலத்துடன் காபி சாப்பிட்டும் பந்தா காட்டாமல் எழுதியிருக்கிறீர்களே! :)
நானும் சிலமுறை அவரை அங்கு பார்த்திருக்கிறேன். இதேபோல நாரதகான சபா கீழிருக்கும் உட்லாண்ட்ஸில் குன்னக்குடியை சந்திக்கலாம்.

பாலராஜன்கீதா said...

சட்டைப்பையில் பலநிறவண்ணங்களில் பேனாக்கள் வைத்திருந்தார் என்றால் அவர் (Play Back Singer) P.B. ஸ்ரீனிவாஸ் அவர்கள்தான். எவருக்கும் எளிதாகக் கிடைக்காத வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

பொன்ஸ்,நாங்கள்
திருச்சிப் பயணம் ஒன்றிலிருந்து திரும்பிய போதும் அவர் ஒரு துணைப் பயணியொடு பக்கத்து இருக்கையில் வந்தார்.
யாரையும் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.
எனக்கோ, ' காலங்களில் அவள் ' வசந்தத்துக்காக..முதல் அத்தனை பாடல்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்ற ஆசை.
உடன் பயணம் செய்த மகன்,மகள் எல்லோரும் தடை போட்டதால் நின்றுவிட்டேன்.
ரொம்ப
பெரிய மனிதர்கள் இப்படித்தான்!

பெத்த ராயுடு said...

>> //சமீபத்தில் 1966-ல் வந்த//
1999ஆ, 1669ஆ எது சமீபத்தில்.. <<

ஜிரா-வுக்கு தெரியாமயா சொல்லியிருப்பாரு? :))

நடந்தவற்றை நேர்மையுடன் பதித்தற்கு ஒரு 'ஓ'.

dondu(#4800161) said...

"ஜெமினி கணேசனுக்காக அவர் பாடிய பாடல் "பாட்டுப் பாடவா? பார்த்துக் கேட்கவா? பாடம் சொல்லவா? பறந்து செல்லவா"? என்ற பாடல் மிகவும் அருமையானது."

மன்னிக்கவும். இப்பாடலை பாடியது ஏ.எம்.ராஜா. படம்: சமீபத்தில் 1961-ல் வந்த "தேன் நிலவு".

அன்புடன்,
டோண்டு ராகவன்

வெற்றி said...

பொன்ஸ்,
மிகவும் சுவையாக உங்கள் அனுபவத்தைச் சொல்லியுள்ளீர்கள். பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள் ஒரு சரித்திர நாயகன்[Legend]. அப்படிப்பட்டவரின் அருகில் அமர்ந்து அளவளாவ வாய்ப்புக் கிடைத்தது உங்களின் யோகம். அருமையான பாடகர். கவியரசரின் பாடல்களை மெல்லிசை மன்னரின் இசையில் பாடி என்னைத் தன் குரலிற்கு அடிமையாக்கியவர். கடந்த வருடம் மெல்லிசை மன்னர், T.M. செளந்தரராஜன் ஆகியோருடன் இவரும் வந்து Toronto வில் பல இசை நிகழ்ச்சிகள் நடாத்தினார்கள். ஆனால் இந் நிகழ்சிகளைப் பார்ப்பதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

/* ஆனாலும் மனிதர் இப்படித் துளி கூட பந்தா இல்லாமல் அமைதியே உருவாக பாட்டெழுதிக் கொண்டிருக்கும் போது, அவரைத் தொல்லை செய்வது போல் எல்லாருக்கும் போன் போட்டு என் விசா வந்த அளப்பறையைப் பேசியதை நினைக்கும் போது இப்போது ரொம்ப ரொம்ப வெட்கமாக இருக்கிறது */

எனது ஊரில் ஒரு முதுமொழி புழக்கத்தில் உண்டு. "நிறைகுடம் தழும்பாது" என்பார்கள். பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்களும் நிறைகுடத்திற்கு ஒப்பானவரல்லவா!

SK said...

நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அவருக்கு "ட்ரைவ்-இன்" உட்லேண்ட்ஸில் எப்போது வேண்டுமானலும் வந்து போக ஒரு சிறப்பு அனுமதி இருக்கிறது என்று.

மாலை நேரங்களில் வழக்கமாக அவரை அங்கு பார்க்கலாமாம்.
யாரையும் தொந்தரவு செய்ய மாட்டார்.
யாரும் தொந்தரவும் செய்யக் கூடாது என்பதும் விதியாம்!

நீங்கள் ஒரு அற்புத வாய்ப்பைத் தவ்ற விட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்.
எனினும், அவரது தனிமையைக் கெடுக்காத உங்களது சங்கோஜத்திற்கு எனது வாழ்த்துகள்!
:))

//நேர்முகம் மிக இனிதே முடிய//

இது ஒன்றுதான் அமெரிக்கக் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்று.

மற்றதெல்லாம், நம்மவரின் செய்கை.

எனவே, நேரக் கட்டுப்பாடு இன்னும் அமெரிக்கரின் பெருமையே!

பத்தரை மணி நேர்முகத்துக்கு பதினொன்றே முக்கால் மணிக்கு போன நீங்கள் அமெரிக்கரின் நேரம் தவறாமை குறித்து அளப்பது அதிசயமே!!

நெல்லை சிவா said...

பொன்ஸ்,

இந்தப் பதிவின் துவக்கத்திலேயே, ஊகிக்க முடிந்தது, நீங்கள் பிபிஎஸ் பற்றிதான் சொல்ல வருகிறீர்கள் என்று.

அவருக்கு மிகவும் பிடித்த் இடம் அது. ஒரு முறை,இரு முறை அல்ல, பலமுறை அவரை அங்கு பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன்.

மீண்டும் கண்முன் நிறுத்திவிட்டீர்கள், சரி அது இருக்கட்டும், எப்போ வரப் போறீங்க, உங்க வருகையை ஒட்டி ஒரு அகில உலக வலைப்பதிவர் மாநாடு ஏற்பாடு பண்ணிடலாமா? :)))

கைப்புள்ள said...

நல்லா எழுதிருக்கீங்க பொன்ஸ். படிப்பதற்கு சுவாரசியமா இருந்துச்சு.

வெற்றி said...

SK ஐயா, பூர்ணா[பொன்ஸ்]
மன்னிக்கவும். பதிவுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டம். மேலே உள்ள சொல்லின் பொருளை அறிந்து தொலைக்க வேண்டும் எனும் ஆர்வக் கோளாறு.

SK ஐயா தனது பின்னூட்டத்தில்,
"எனினும், அவரது தனிமையைக் கெடுக்காத உங்களது சங்கோஜத்திற்கு எனது வாழ்த்துகள்!" என்று சொல்லியிருந்தார்கள். சங்கோஜம் என்றால் என்ன பொருள்? இச் சொல்லை நான் இதுவரை கேள்விப்படவில்லையே!சங்கோஜம் = நற்பண்பு ???

நாமக்கல் சிபி said...

//"ஜெமினி கணேசனுக்காக அவர் பாடிய பாடல் "பாட்டுப் பாடவா? பார்த்துக் கேட்கவா? பாடம் சொல்லவா? பறந்து செல்லவா"? என்ற பாடல் மிகவும் அருமையானது."
//

மன்னிக்கவும்.

படலை தவறாகக் குறிப்பிட்டு விட்டேன்.

காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடலைத்தான் சொல்ல வந்தேன்.

(ஆஹா! சமளிச்சாச்சு)

நாமக்கல் சிபி said...

//சங்கோஜம் என்றால் என்ன பொருள்?//

வெற்றி அவர்களே,

சங்கோஜம் என்பது தயக்கம் என்ற பொருள்படும் சொல்.

அதாவது பேசுவதா, வேண்டாமா? பேசினால் என்ன நினைப்பார்களோ? ஏதேனும் திட்டிவிட்டால் என்ன செய்வது? போன்ற சந்தேகங்கள் ஏற்படும்பொழுது தோன்றும் தயக்கமே சங்கோஜம் எனப்படும்.

சரிதானே பொன்ஸ் அவர்களே?

மா சிவகுமார் said...

பொன்ஸ்,

படித்துக் கொண்டே இருக்கும் போது, வேறு யாரோ எழுதியதை எடுத்துப் போட்டு விட்டீர்களோ என்று நினைத்தேன் :-)

பல இரவுகளை, பல நிமிடங்களை இனிமையாக்கிய அந்தத் தாத்தாவுடன் சிறிது நேரம் உட்கார்ந்திருந்து விட்டு வந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட விதம் அருமை.

எழுத்தில் புது உயரங்களைத் தொட்ட பதிவு என்று எனக்குப் பட்டது.

ஆமாம் முகவாண்மைத் துறை என்றால் என்ன?

அன்புடன்,

மா சிவகுமார்

பொன்ஸ்~~Poorna said...

பின்னூட்டத்துக்கு நன்றி டோண்டு சார். உண்மையிலேயே நல்ல பாடகர்...

ரவி :)

சிறில், உங்க ஊருக்கா? இதென்ன புதுக் கதை? :))

சிபி,
1. தப்பான பாட்டு சொல்லிய பின்னூட்டத்துக்கு நன்றி,
2. சரி செய்த பின்னூட்டத்துக்கும் நன்றி
3. சங்கோஜமில்லாமல், சங்கோஜத்துக்குப் பொருள் சொல்லியமைக்கு, பிடியுங்கள் இன்னுமொரு நன்றி :))

அகில், பாவங்க.. நம்ம ஒரு ஆளுக்காக பாடச் சொல்லிக் கேட்கிறது அத்தனை சரியாப் படலை... அதான்.. ஹி ஹி...

மதி, :))) இன்னும் தத்துவங்கள் தொடரும்:)))

மணியன்,
//ஒரு பிரபலத்துடன் காபி சாப்பிட்டும் பந்தா காட்டாமல் எழுதியிருக்கிறீர்களே!//
அட, இப்படிக் கூடச் சொல்லலாமா!!:)

பாலராஜன்,
அட விடுங்க.. எனக்கென்னவோ பெரிய இழப்பாகவே தெரியவில்லை.. :)

ஆம் வல்லி, ரொம்ப அடக்கம் அவர்..

பெத்தராயுடு, நன்றி,

நிறைகுடம் தான் அவர் வெற்றி.. சங்கோஜத்துக்கு சிபி பதில் சொல்லி இருக்கார் பாருங்க..


//பத்தரை மணி நேர்முகத்துக்கு பதினொன்றே முக்கால் மணிக்கு போன நீங்கள் அமெரிக்கரின் நேரம் தவறாமை குறித்து அளப்பது அதிசயமே!!//
பத்தரை மணிக்குப் போனபோது உள்ளே அனுமதிக்கவில்லை எஸ்கே.. ஒரு மணி நேரம் கழித்து வரச் சொன்னதால், சோழிங்க நல்லூர் சென்று திரும்பி வந்த போது இன்னும் கொஞ்சம் தாமதமாகி விட்டது. ஆனால் உள்ளே பத்தரை மணிக்கானவர்கள் காத்திருந்தனர். ;)

நெல்லை சிவா, உங்க ஊர் எதுங்க?!! அங்க வேற வரணுமா :))

நன்றி கைப்புள்ள

சிவகுமார்
//படித்துக் கொண்டே இருக்கும் போது, வேறு யாரோ எழுதியதை எடுத்துப் போட்டு விட்டீர்களோ என்று நினைத்தேன் :-)//
:))) எனக்குக் கூட அப்படித் தான் தோன்றியது. எழுத்து படித்தபின் ஒரு நாள் எழுதினேனா.. அதன் தாக்கமாக இருக்கலாம் ;)

முகவாண்மைத் துறை - admin உக்கு என்னுடைய தமிழாக்கம் :)) சரிதானே?

சேதுக்கரசி said...

வாவ்! இப்படி ஒரு அனுபவம், வாய்ப்பு...

இனி அடுத்து, பொன்ஸ் பாட ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சிடுவாங்க :-(

மஞ்சூர் ராசா said...

ஆரம்பத்திலெயே அது அவராகத்தான் இருக்கும்னு நினைச்சேன். அப்படியே ஆகிவிட்டது.

அரிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது.

எது எப்படியோ உங்களுக்கு ஒரு முக்கியமான பயன் கிடைத்திருக்கிறது. அதற்காக நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். (எதுன்னா கேக்கறீங்க.... பந்தா தான்!.) இனிமே கொஞ்சம் அடக்கி வாசிப்பீங்க.

பொன்ஸ் said...

//இனி அடுத்து, பொன்ஸ் பாட ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சிடுவாங்க :-(//
சேது, இனிமே தானா? :))))

//இனிமே கொஞ்சம் அடக்கி வாசிப்பீங்க.//
மஞ்சூர், ஹி ஹி..

குமரன் (Kumaran) said...

இந்தப் பதிவை இப்பத் தான் படிச்சேன் பொன்ஸ். நல்லா எழுதியிருக்கீங்க.