Sunday, December 03, 2006

சரவணபவனுக்குப் போட்டியாக?

நினைவு தெரிந்த நாள் முதல் சென்னையில் ஹோட்டல் சாப்பாடு என்றாலே சரவணபவன் தான். அவர்களின் உயர்தர சைவ உணவின் சுவைக்கு மாற்றாக ஒரு உணவகம் இருக்கிறதா என்றே தெரிந்து கொள்ள முயன்றதில்லை. குடும்பத்திற்கே மிகவும் பிடித்த இந்த உணவகத்தைப் பொறுத்தவரை நாங்கள் சாப்பிட்டு பார்க்காத கிளைகளே இல்லை எனலாம். "அசோக் நகர் பத்தாவது அவன்யூ எப்படிப் போகணும்?" என்பன போன்ற கேள்விகளுக்குக் கூட அந்தப் பகுதி சரவணபவனை அடையாளமாக வைத்து வழி சொல்வது தான் வழக்கம். அத்தனை தூரம் அந்த உணவகத்துடன் ஒன்றிப் போயிருந்த எங்கள் குடும்பத்தில் முதன்முதலாக ஆட்சேபக் குரல் எழுப்பியது நானே.

விண்ணைத் தொடும் அவர்களின் கட்டணங்களும், மிக மிக மெத்தனமாக வாடிக்கையாளரைக் கவனிக்கும் விதமும், இடவசதியே போதாத அவர்களது கிளைகளும், மற்ற குடும்பத்தவருடன் சில சமயம் மேஜையைப் பகிர வேண்டிய துர்பாக்கியத்தின் காரணமாக வெளியில் சாப்பிடும் மகிழ்ச்சியே காணாமல் போய்விடுவதும் என்று எத்தனை காரணங்களை நான் அடுக்கினாலும் எங்கள் வீட்டாரின் ஒரே ஆயுதம் சரவணபவன் உணவுகளின் மிக அருமையான சுவையும், அவர்கள் பேணிப் பாதுகாத்துவரும் சுத்தமும் தான்.

'சுமார் 25 வருடங்களாக சென்னையின் சைவ உணவு சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னனாக விளங்கும் சரவணபவனுக்குப் போட்டியாக ஏன் இன்றுவரை எந்த உணவகமும் வரவில்லை?' என்ற விவாதம் திடீரென்று எங்களுக்குள் எழுந்தது.




சரவணபவனுக்குப் போட்டியாக ஒரு உணவகம் தொடங்க வேண்டுமானால், என்னென்ன செய்ய வேண்டியதிருக்கும்?

அவர்களின் ஒவ்வொரு உணவகம் போலவும் அந்தந்தப் பகுதியில் நடுநாயகமான இடங்களைத் தேர்ந்தெடுத்து கடை திறக்க வேண்டும். இன்றைய சென்னையின் ரியல் எஸ்டேட்(தமிழில் என்னங்க?:)) விலைகளைப் பொறுத்தவரை இதற்கான வாய்ப்பு மிக மிக விலையதிகமாக இருக்கும். ஆனால், அது ஒன்று தான் காரணம் என்று புதுப்புது உணவகங்கள் புறப்படாமல் இல்லையே.

சுவையான, சுகாதாரமான உணவுக்காக அவர்கள் வலியுறுத்தும் உச்சபட்ச சுத்தத்தைப் பேணுவது இன்னுமொரு கடினமான போட்டியாக இருக்கும். ஆரம்பகாலத்திலேயே, அதாவது தொடங்கி ஒருவருடத்திற்குள்ளேயே லாபம் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் உணவகங்களால் இது முடியாது என்பது அப்பாவின் வாதம். "அதிகாலையில், முதல் லோடு காய்கறி வரும்போதே அவங்க ஆட்கள் யாராவது வந்துடுவாங்க. கொஞ்சம் கூட இடிபாடோ, குறையோ இல்லாத காய்கறியா தேர்ந்தெடுத்து எடுத்திட்டுப் போய்டுவாங்க" - கோயம்பேட்டில் காய்கறி வியாபாரம் செய்யும் அப்பாவின் நண்பரொருவர் சரவணபவன் ஊழியர்கள் காய்கறி தேர்ந்தெடுக்கும் விதத்தை வர்ணித்தார். நல்ல காய்கறி வாங்கிச் சமைக்க வேண்டும் என்பது மட்டும் தான் பிரச்சனை என்றால் அதைச் செய்வதற்கு ஏன் இன்னுமொருவர் வரவில்லை?

ஆரம்பத்தில், ஹாட் சிப்ஸ்காரர்கள் சரவணபவன் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்க முயன்றார்களாம். சரவணபவனின் லாப நஷ்டக் கணக்கு பார்க்காமல் சுத்தம் மட்டுமே பார்த்து இயங்கும் விதத்திற்கு போட்டியாக இயங்க முடியாமல் இப்போது அவர்களின் தரம் குறைந்து போய் விட்டதாம். என்ன தான் மிக நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட உணவாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அதை வைத்துக் கொண்டிருக்காமல், அனாதை இல்லங்களுக்கோ, பிச்சைக்காரர்களுக்கோ கொடுத்துவிடும் சரவணபவன் ஹோட்டல்களுக்குக் நிகராக நஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படும் சராசரி ஆசாமிகள் பலமான போட்டியைக் கொடுக்க முடியாது தான்.

சரி, வெளியிலிருந்து ஒருவர், அனுபவமில்லாதவர் வந்து போட்டி போடுவது சிரமம் தான். ஓட்டலில் வேலை செய்பவர்களில் ஒருவரே தனியாக இயங்க முடிவெடுத்து வெளியேறினாலே நல்லதொரு புது உணவகம் கிடைத்துவிடாதா? அது கூட ஏன் நடக்கவில்லை? அப்படி என்ன செய்து சரவணபவன் தன் ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்கிறது? என்பதோடு எங்கள் விவாதம் ஒரு தீர்மானமில்லா முடிவுக்கு வந்தது.

வேறு ஏதேதோ படித்துக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது தான் சரவணபவன் அதிபர் இராஜகோபால் அவர்கள் எழுதிய "வெற்றிமீது ஆசை வைத்தேன்" புத்தகம். புத்தகம் எனக்கான விடைகளைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் வாங்கினேன்.

அருமையானது தான், தனிவாழ்க்கையின் எந்தப் பகுதியையும் இதில் கொண்டு வராமல் சரவணபவன் கொஞ்சங் கொஞ்சமாக வளர்ந்த கதையை எழுதி இருக்கிறார். எழுத்து நடை அத்தனை சுவாரஸ்யமாக இல்லை. அத்துடன் அவ்வப்போது சந்தித்த நம்பமுடியாத சிக்கல்கள், சின்னச் சின்னத் திருப்பங்களுடன் இதை எழுதி இருந்தால், ஒரு "Made in America" போன்றோ, ஒரு "Pepsi to Apple" போன்றோ, புத்தகம் பெயர் பெற்றிருக்கும்.

புத்தகம் தெளிவித்த விடைகள்: தானே ஓட்டல் தொழிலாளியாக இருந்து முதலாளியானவர் என்பதாலோ என்னவோ, தொழிலாளிகள் பொதுவாக சந்திக்க நேரும் ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக அணுகி இருக்கிறார் அண்ணாச்சி. அவர்களுக்கு வாடகைக்கு வீடுகள் பிடித்துக் கொடுப்பதாகட்டும், அவர்களின் பிள்ளைகள் படிப்புச் செலவுக்குத் உதவுதாகட்டும், ஊழியர்களுக்குத் தொலைபேசி வசதி செய்து கொடுப்பதாகட்டும், ஏதோ அரசு நிறுவன ஊழியர்கள் போலவே கவலையற்று வைத்திருக்க முயல்கிறார்கள். இது தவிர, பொங்கலுக்குப் புதுத் துணி எடுத்துக் கொடுப்பது, உடல்நிலை சரியில்லாத ஊழியர்களின் குடும்பத்திற்கு உதவுவது, ஆயுள்காப்பீடு போன்ற பாலிஸிகளை நிர்வாக செலவிலேயே எடுத்து வைப்பது, ஊழியர்களின் குழந்தைகள் திருமணத்திற்கு உதவுவது என்பன போன்ற திட்டங்கள் ஏதோ தனியார் நிறுவனத் திட்டங்களோ என்ற அளவுக்கு வியக்கவைக்கிறது.

எல்லாவற்றிலும் என்னைக் கவர்ந்த மூன்று விஷயங்கள்:

* ஊழியர்களின் குடும்பத்தில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவென்றே ஒருவரை வேலைக்கமர்த்தி இருக்கிறார்கள். அப்படி உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருப்பவர்களுக்கு மூன்று வேளை உணவு எடுத்துப் போகவும் இன்னுமொரு ஊழியர் அமர்த்தப்பட்டிருக்கிறார். இவர்களின் வேலையே ஆஸ்பத்திரிகளில் இருக்கும் சரவணபவன் ஊழியர்களுக்கு/குடும்பங்களுக்கு உதவுவது மட்டுமே!

* திருமணமான ஊழியர்களின் பெற்றோருக்கும் தனியாக பணம் அனுப்பும் புதுத் திட்டம் ஒன்றைச் சொல்கிறார்கள். நகரத்து வாழ்வில் செலவுகள் சமாளிக்க வசதியில்லாத ஊழியர்கள், ஊருக்குப் பணம் அனுப்ப விட்டுப் போய்விட்டால் அந்தப் பெற்றோர் படும் சிரமத்தை எண்ணி இந்தப் புதுத் திட்டமாம்!

* இவை தவிர, பன்னாட்டு நிறுவனங்கள் போல வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் வருடாவருடம் நடைபெறும் ஓட்டல் சாதனங்கள் மற்றும் உணவு விடுதிகளுக்கான பொருட்காட்சிக்கு சுழற்சி முறையில் ஒவ்வொரு ஊழியராக அனுப்பவது மிகவும் கவர்ச்சிகரமான திட்டமாகத் தான் தெரிகிறது.

இப்படி எல்லாமே நிறுவனத்திலேயே கிடைக்கும்போது வெளியேறி, தனிக்கடை தொடங்க யாருக்கு மனம் வரும்? எப்படிச் சாத்தியப்படப் போகிறது? அத்துடன் இருபத்தியைந்து வருடங்களுக்குப் பின்னர் இனிமேற்பட்டு ஒருவர் இது போல் வெளியேறி புது உணவகம் திறந்து அதை நிலைநிறுத்தி, என்பதெல்லாம் எழுதுவதற்கும் பேசுவதற்கும் சுலபமாக இருப்பது போல் நடைமுறையில் இருக்காதல்லவா. எத்தனை பன்னாட்டு உணவகங்கள் வந்தாலும், இன்னும் இன்னும் பல்வேறு சைவ/அசைவ உணவகங்கள் இருந்து கொண்டே இருந்தாலும், சென்னை சரவணபவனில் கூட்டம் என்னவோ குறையாமல் அப்படியே இருக்கிறது.

சமீபத்தில் தனது உணவகங்களைப் புதுப்பித்திருக்கும் சரவணபவன், ஸ்வாதி என்ற பெயரில் குளிர்சாதன உணவறைகளையும் நிறுவியிருக்கிறது. சாதா உணவறைகளைவிட இரண்டு மடங்கு அதிக விலை வைத்து விற்கும் இந்தக் குளிர்சாதன அறைகளிலும் கூட்டம் அலைமோதிக் கொண்டே இருக்கிறது. வசந்தபவன், ஹாட்சிப்ஸ், அபூர்வா சங்கீதா என்று பல்வேறு உணவகங்கள் இருந்தாலும், சரவணபவனின் விலைப்பட்டியலும் வாடிக்கையாளர் கூட்டமும் அதிகரித்துக் கொண்டே வருவது கண்கூடு.

எப்படியும் சரவணபவனுக்குப் போட்டியாக ஒரு உணவகம் சென்னையில் வரவேண்டும், ஊருக்கெல்லாம் ஒரே வியாபாரியாக இருக்கும் இன்றைய சர்வாதீனம் (monopoly : நன்றி மா.சி.) மாறவேண்டும் என்பதே என் ஆசை. நிறைவேறும் வாய்ப்பு தான் இப்போது கண்ணுக்குத் தெரியவில்லை.

34 comments:

துளசி கோபால் said...

சாப்பாட்டு விஷயம் பாருங்க, அதான் மொத ஆளா வந்துருக்கேன்:-)

SP.VR. SUBBIAH said...

அதேபோல் எங்கள் ஊரில் (கோவையில்) அன்னபூர்ணா குழுமத்தின் உணவகங்கள்
யாராலும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கின்றார்கள்

எங்களுர் சிறுவாணித் தண்ணீரைப் போலவே அவர்களுடைய உண்வும் சுத்தமாகவும், சுகாதரமாகவும் இருக்கும்
கோவைக்கு வந்தால் சாப்பிட்டுப் பாருங்கள்!
SP.VR.SUBBIAH

VSK said...

சர்வாதீனம் தமிழ்ச்சொல்லா?

"ஒட்டுமொத்த ஆளுகை" என்பது எப்படி?

ஒரு அண்னாச்சிக்குத் தோன்றிய எண்ணம் இன்னொருவருக்கும் தோன்றாமலா போய்விடும்.

புதிதாக வருவதை விட, உட்லேண்ட்ஸ், வஸந்த பவன் போன்றவர்கள் சற்று முயற்சித்தால் இது நடக்கக் கூடியதே.

//மற்ற குடும்பத்தவருடன் சில சமயம் மேஜையைப் பகிர வேண்டிய துர்பாக்கியத்தின் காரணமாக வெளியில் சாப்பிடும் மகிழ்ச்சியே காணாமல் போய்விடுவதும்//

:)) இது கொஞ்சம் இடிக்கிறதே!!

சாத்வீகன் said...

பொன்ஸ்

இதுதான் பிராண்டு ரெகக்னிசன்.. மக்கள் மனதில் ஒரு பொருளின் தரத்தை பதிய வைத்துப்பின் அதன் விலையை ஏற்றி விற்பது..
அதனால் அந்த பொருளை அடைதல் தரும் சமூக அந்தஸ்து..
எங்கு சாப்பிட்டாய் என்றால் சரவண பவன் என்று சொல்வது ஒரு பெருமையை தரும் என்பதற்கான இரண்டு இட்லிக்கு 12 ரூபாயும் ஒரு வடைக்கு 12 ரூபாயும் தரும் மக்கள்....

செயின் ஆஃப் ஹோட்டல்களாக இருக்கும் சரவண பவன் போல ஒரு உணவு விடுதி தொடர் இல்லை என்பதே மக்கள் அதிகரிப்பதும், அதனால் விலையேற்றமுமாக இருக்கிறது..

ஒரு காலத்தில் பெயர் பெற்றிருந்த உடுப்பி ஓட்டல்களோ இப்போது காண்பதும் அரிதாய் உள்ளது..

நல்ல பதிவு.

கால்கரி சிவா said...

ஹோட்டல் தொழில் எனபது லேபர் இன்டென்சிவ். இந்த லேபர்களில் பெரும்பாலோர் வீட்டை விட்டி ஓடி வருபவர். அவருக்கு உண்ண உணவு இருக்க இடம் தரும் ஒரே தொழில் ஒட்டல் சர்வர்.

அவர்களை பங்குதாரராக வைத்து இயன்கினால் போதும்.

சரவணபவன் சாம்பாரைவிட சங்கீதா, ராஜ்பவன், ரத்னாகபே மிக சுவையானது. இந்த ஓட்டல்கள் சிறிதே சுத்தமாய் இருந்தால் போதும் சரவணபவனை ஓரங்கட்டி விடலாம்

ரவி said...

Other then this, They (Saravanabavan Hotel Servents) Wont Take Tips !!!

வெற்றி said...

பூர்ணா[பொன்ஸ்],
சென்னையில் உள்ள உணவகங்கள் பல இங்கே Toronto விலும் கிளைகள் நிறுவியுள்ளார்கள். கனடாவிலேயே அதிகளவில் விற்பனையாகும் நாளேடான Toronto Star நாளேடு இவ் உணவகங்கள் பற்றி சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தது. நானும் அச் செய்தியை பதிவாக இட்டேன். அச் செய்தியைப் படிக்க
இங்கே கிளிக் செய்யுங்கள். இன்னும் இவ் உணவகங்களில் சாப்பிட்டுப் பார்க்கவில்லை. நத்தார் பண்டிகை விடுமுறையின் போது பார்ப்போம்.

நாகை சிவா said...

இதைக் குறித்து நானே ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன். நீங்கள் போட்டு வீட்டீர்கள் :-)

சரவணபவனுக்கு போட்டியாக வசந்தபவன், சங்கீதா, காமத் போன்ற உணவகங்கள் இருந்தாலும், இவர்களின் வெற்றிக்கு சுத்தம், சுவை, ஊழியர்களை பராமரிக்கும் திறன் இவை மூன்றும் தான்.

நாமக்கல் சிபி said...

நல்ல பதிவு!

மோனோபோலி நிறுவனங்கள் போட்டியில்லாத நிலையில் தரத்தைப் பற்றி கவலை கொள்ளாமல் விலையை மட்டுமே இஷ்டத்திற்கு வைத்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் இங்கு அப்படி இல்லையே! தரம் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது அல்லவா!

நாமக்கல் சிபி said...

வருங்கால உணவகத் தொழிலதிபர் ஹோட்டல் பூர்ணா இண்டர்நேஷனல்ஸ்சின் நிறுவனர் பொன்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

மலைநாடான் said...

பொன்ஸ்!

நீங்கள் குறிப்பிட்ட கட்டுரைத் தொடரை நானும் வாசித்திருந்தேன். நீங்கள் குறிப்பிடுபவைகள் மிகவும் சரியென்றே கருதுகின்றேன்.

எந்தப்பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அக்கறை வெகூக இருக ்கும். அதைச் சரிவரப்புரிந்து கொண்டு தொழிலாளர்களின் பிள்ளைகள் குறித்த கல்விமேம்பாட்டிற்கென உதவும் திட்டம் ஒன்று கூட அவர்களிடம் இருப்பதாக அறிந்தேன். நீங்கள் குறிப்பிட்டது போன்று அவர்கள் சேவைநலத்திட்டங்கள் இன்னும் சற்று சீரமைக்கப்பட்டால், ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்குரிய தகுதியைப் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

நல்லதோர் பார்வை. பாராட்டுக்கள்:)

பொன்ஸ்~~Poorna said...

துளசி அக்கா :)))

கேள்விப் பட்டிருக்கிறேன் சுப்பையா சார்.. செல்வன் அன்னபூர்ணா பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார். சாப்பிட்டதில்லை..

எஸ்கே, ஒட்டு மொத்த ஆளுகை நன்றாக இருக்கிறது. ரியல் எஸ்டேட்டைக் கண்டு கொண்டீர்களா?

//ஒரு அண்னாச்சிக்குத் தோன்றிய எண்ணம் இன்னொருவருக்கும் தோன்றாமலா போய்விடும்.//
இதுவரை ஏன் தோன்றவில்லை அல்லது வெற்றிபெறவில்லை என்று தான் யோசிக்கிறேன்..

// //மற்ற குடும்பத்தவருடன் சில சமயம் மேஜையைப் பகிர வேண்டிய துர்பாக்கியத்தின் காரணமாக வெளியில் சாப்பிடும் மகிழ்ச்சியே காணாமல் போய்விடுவதும்//
:)) இது கொஞ்சம் இடிக்கிறதே!! //
வெளியே சிரித்துப் பேசி சாப்பிட்டு விட்டு வர வேண்டும் என்று போய்விட்டு, வேறு ஒரு குடும்பத்தினர் எதிர் இருக்கையில் இருந்தால், எப்படிப் பேசி ரசிக்க முடியும்? அதைத் தான் சொல்ல வந்தேன்..

//இதுதான் பிராண்டு ரெகக்னிசன்..//
சாத்விகன்.. உண்மை. இந்த வார்த்தையைப் பதிவில் சேர்த்திருக்க வேண்டும்.. மிஸ் ஆகி விட்டது...

//சரவணபவன் சாம்பாரைவிட சங்கீதா, ராஜ்பவன், ரத்னாகபே மிக சுவையானது. இந்த ஓட்டல்கள் சிறிதே சுத்தமாய் இருந்தால் போதும் சரவணபவனை ஓரங்கட்டி விடலாம்//
கால்கரி சிவா, உண்மைதான். நீங்கள் சொல்வது போல் ஆங்காங்கே ஒவ்வொரு ஹோட்டல்கள் முளைக்கின்றன. பாண்டிபஜாரில், சரவணபவனுக்குச் செல்வதை விட முருகன் இட்லிக் கடையில் சாப்பிடுவதே என் விருப்பம்.. அது போன்ற கடைகள் ஒவ்வொரு இடங்களில் மட்டுமே இருக்கின்றன..

ஆம் ரவி.. அதுவும் உண்மை தான்..

வெற்றி, உங்கள் பதிவைப் பார்க்கிறேன்.. சாப்பிட்டுப் பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் :)

நன்றி நாகை சிவா:)

தரத்தினால் உருவான ஆளுகை என்பது உண்மை தான் சிபி, ஆனால், அதை ஏன் யாராலும் மேட்ச் செய்ய முடியவில்லை? மாறிவரும் சென்னைக்கும் பெருகி வரும் மக்கள் தொகைக்கும் இன்னும் சில நல்ல உணவகங்கள் இருந்தால் நன்றாக இருக்கும். அத்துடன் இதுவே புது முயற்சிகளுக்கான சரியான நேரம் என்று தோன்றுகிறது.

//ஹோட்டல் பூர்ணா இண்டர்நேஷனல்ஸ்// பேர் நல்லாருக்கு... ஆனா.. ஹோட்டல் பொன்ஸ்னே வைக்கலாம்னு தோணுது :)))

மலைநாடன், இது உண்மை தான். அவர்கள் இன்னும் இன்றைய தலைமுறைக்கான, சுவையான வட இந்திய, பன்னாட்டு உணவு வகைகளையும் அறிமுகப் படுத்தினால், சீக்கிரத்திலேயே பன்னாட்டு உணவகம் ஆகிவிடலாம்...

தருமி said...

hi
i was searching for the word 'ADVT:' below the write up !! :)

சேதுக்கரசி said...

இன்னிக்கென... ஒரே சாப்பிட்ட அனுபவங்களா இருக்கு, வுட்லேண்ட்ஸ், சரவண பவன்னு :-)

நல்லா எழுதியிருக்கீங்க பொன்ஸ். இந்த முறை சரவண பவன் போனபோதும் அதே அவதிகள் - இடம் கிடைக்க 20 நிமிசமாச்சு.. உடனே ஏசி ஹால் போங்க ஏசி ஹால் போங்கன்னு வேற அங்கே தள்ளிவிடப் பார்க்கிறாங்க!

Anonymous said...

இங்கே தில்லியில் மூன்று கிளைகளை திறந்திருக்கிறார்கள் . இந்திக் காரர்களும் வெளிநாட்டினரும் வரிசையில் நின்று உணவருந்துகிறார்கள்.முன்பெல்லாம் ஊரிலிருந்து வரவங்க கிட்ட சொல்லி
இனிப்பெல்லாம் வாங்குவோம்..இப்ப எல்லாம் சரவணபவன் தான்.
அடையார் ஆனந்தபவன் இப்போதான் வந்திருக்கு போய் பார்க்கணும்..

Hariharan # 03985177737685368452 said...

சுத்தம் என்கிற வரை ஓரளவுக்கு சரவணபவன் இன்னிக்கும் பெட்டர்.

பணியாளர்கள் கண்டிப்பாக நல்ல நிறுவனத்தின் அளவுக்குப் பேணப்படுகிறார்கள். இதில் இதர உணவகங்களுக்கு இவர்கள் முன்னோடியாகவே இருந்து வருகிறார்கள்.

உணவின் சுவைகுறித்து முழுமனதுடன் சமீபத்திய விஸிட்களில் நல்ல அபிப்பிராயம் இல்லை! சாம்பிள் என்று கருதி சுவைத்ததற்கும் பில் போட்டு அதிரவைக்கிறார்கள்! There is certainly a serious Quality and Quantity issue! :-)))

மாற்றாக இன்னொரு தொடர் உணவு விடுதிகள் வேறு சக்தியிருக்கும் எவரேனும் சாப்பாட்டுப் பிரியர்களின் நலனுக்காகத் தொடங்கினால் நல்லது சென்னைப் பட்டணத்து பொது ஜனங்களுக்கு! சப்புக் கொட்டியவாறே கொட்டிக்கொள்வதற்கு!

மஞ்சூர் ராசா said...

கோவை அன்னப்பூர்ணாவின் சுவை சரவணபவனின் சுவையை விட நன்றாக இருந்தாலும் அவர்களால் சென்னையில் வெற்றிப்பெற முடியவில்லையா, அல்லது சரியான முயற்சி எடுக்கவில்லையா என்பது தெரியவில்லை. அந்த காலத்து கீதா கபே, உட்லண்ட்ஸ் முதல் சமீபத்து சங்கீதா போன்ற உணவகங்களிலும் சுவை நன்றாக தான் இருக்கிறது.. ஆனால் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது சரவணபவன் என்பது புகழ் பெற்று விட்டதால் நாம் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதே உண்மை. ட்ரைவ்-இன் - உட்லண்ட்ஸ் எப்பொழுதும் போலவே இப்பவும் இருக்கிறது. அது போல வேறு சில ஹோட்டல்களும் சுவை, தரத்தில் நன்றாகவே இருக்கின்றன. அடையாறு ஆனந்த பவன் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்துக் கொண்டிருக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை. இவர்கள் கோவையிலும் கிருஷ்ணா ஸ்வீட்ஸுடன் சரியான போட்டி போடுகிறார்கள்.

முக்கியமான ஒரு விசயம் சரவணபவன் தனது ஊழியர்களுக்கு எவ்வளவோ செய்தாலும் வரும் வாடிக்கையாளர்களின் அதிருப்தியை சமீபகாலமாக அதிக அளவில் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

வல்லிசிம்ஹன் said...

பயங்கர பசி வேளையில் சரவணபவன் பதிவா/
பொன்ஸ் அமீரகத்திலும் அவர்கள்தான் டாப்.
என்ன, சத்தம் நிறைய இருக்கும்.
நம்ம கிண்டி ராஜ்பவன் கீரை வடை,கோவை அன்னபூரணா தோசை,ஆஹா என்ன அருமை.
உபசரிப்பு கூட சில இடங்களில் முக்கியமாக எங்க மதுரை ஹோட்டல்களிலும்,கும்பகோணம் உணவு விடுதிகளிலும் கூடுதலாக இருக்கும்.

மணியன் said...

நல்ல கட்டுரை. நீங்கள் நிறைய படிப்பது எங்களுக்கு பயனளிக்கிறது.
நானும் சரவணபவன் உணவகங்களுக்குப் போவதை தவிர்க்கிறேன். அந்த சுவை வேண்டுமென்றால் பார்சல் தான். குடும்பத்துடன் செல்வது உட்லண்ட்ஸ் ஓட்டல்கள் நியூ உட்லண்ட்ஸ், மயூரா,மத்ஸ்யா முதலியன.

Anonymous said...

பொன்ஸ்!
எல்லோருமே!!! சரவணபவனை உச்சரித்த காலம்; அவர் களி சாப்பிடும் நேரம் நான் சென்னையில் இருந்தேன். ஒரு நாள் என் உற்றார் உறவு சூழ 20 பேர் சென்றோம்; சாப்பாடு கிடைக்கவே!!மணிக் கணக்கானது; சாப்பிட்ட பின் சகலரும் சொன்னது!!! இதுக்கா இந்தப் பாடு....;அதாவது....அந்த ஆகா!!! ஓகோ...அளவுக்கு எதுவுமே!!இல்லை....இது அந்தப் பெயருக்குள்ள கீர்த்தி; அங்கு சாப்பிடுவதென்பது; பென்ஸ்;சனல்5;லாகோஸ்ட்;றீபோக் ...மாதிரி..ஆகிவிட்டதே!!என்பதே என் அபிப்பிராயம். நாம் பின்பு திருச்செந்தூர் வரை சென்றோம்; மதுரை ஓர் விடுதி; திருச்செந்தூர்(கோவிலுக்கு முன்); இன்னும் ஒரு சில இடங்கள் ஞாபகமில்லை!!!எங்கள் மொத்தக் குடும்ப அங்கத்தவருமே!!! ரசித்துச் சாப்பிட்டு மகிழ்ந்து; சரவணபவன் பெயரை எடுத்து விட்டது; ஆனால் சுவையைக் கைவிட்டதுபோல் உள்ளது எனவே!! கூறினார்கள்.
சுத்தம் பற்றிக் குசினிக்குள் நான் செல்லவில்லை.அதை அங்கு தானே பார்க்க வேண்டும்
ஏனைய அவர் பற்றிய கருத்துக்கள்;குறிப்பாக ஊழியர் மேல் காட்டும் அக்கறை போற்றத் தக்கது.
யோகன் பாரிஸ்

siva gnanamji(#18100882083107547329) said...

welldone PONS.
நின்று நிதானித்து பவுண்டரியும் சிக்ஸருமாகத் தூள் கிளப்பிவிட்டீர்கள்!

தொழில்நுட்பம் 2(ப்ளாக்கர் பீட்டா&பாபாவின் செல்போன்)
சிறுகதை 2(ஏன்&லிப்ட்)
பயணவிவரிப்பு 2(படங்காட்டுகிறேன்&
அமெரிக்காவில்[நிஜ]அப்பாவி)
பச்சையும் சிவப்புமற்ற இள்ந்தளிர்க்
கவிதை, குழந்தைகளின் ஆசை இதய நிறுத்தம்
எயிட்ஸ் விழிப்புண்ர்வு, விமர்சனம்(வெயிலோடு போய்)பதிவுலகில் பெண்கள் நிலையை ஆவணப்படுத்துதல், உணவக மேம்பாடு,
இளைஞிகளின் பீட்டர்,

சிகரமாக "பெண் ஏன் அடிமையானாள்?" நூலின் சுருக்கம்!
பெரியாரின் கருத்துக்களில் தமக்கு அனுகூலமான இரண்டொரு வரிகளை மட்டும் எடுத்துக்காட்டுபவர்களை,நூல் முழுதும் படிக்கத்தூண்டும், உங்கள் பதிவு!
எல்லா தலைப்புகளிலும் உங்கள் திறமை வெளிப்படுகின்றது!
என்ன? நகைச்சுவைப் பக்கம் மட்டும் திரும்பவில்லை......
அதையும் ஈடுகட்டிவிட்டீர்கள், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு படங்களைப்போட்டு....(யார் படம்?)
ஜமாய்த்து விட்டீர்கள்!
வாழ்த்துகள்!

Machi said...

எனக்கு சரவணபவன் ருசி பிரமாதமாக இருப்பதாக தெரியவில்லை. மொத்தமாக 5 முறை போனதுண்டு அவ்வளவு தான்.

முடிந்தவரை சரவணபவனை தவிர்த்துவிடுவேன்.

//திருமணமான ஊழியர்களின் பெற்றோருக்கும் தனியாக பணம் அனுப்பும் புதுத் திட்டம் ஒன்றைச் சொல்கிறார்கள். //

ஹி ஹி என்னோட பதிவை பாருங்க. http://kurumban.blogspot.com/2006/11/blog-post.html

சரவணபவன் கோவையில் காலூன்ற முயன்று தோற்றுவிட்டது என்றும் கோவை அண்ணபூர்ணா சென்னையில் முயன்று தோற்றுவிட்டது என்றும் கூறுவார்கள்.

இலவசக்கொத்தனார் said...

//ஏதோ தனியார் நிறுவனத் திட்டங்களோ என்ற அளவுக்கு வியக்கவைக்கிறது.//

ஏனுங்கோ, இது தனியார் நிறுவனம் இல்லீங்களா? என்ன சொல்ல வறீங்க?

////மற்ற குடும்பத்தவருடன் சில சமயம் மேஜையைப் பகிர வேண்டிய துர்பாக்கியத்தின் காரணமாக வெளியில் சாப்பிடும் மகிழ்ச்சியே காணாமல் போய்விடுவதும்

:)) இது கொஞ்சம் இடிக்கிறதே!!//

எஸ்.கே, அவங்களும் அடுத்தவங்க மேல இடிக்கிறதைத்தானே சொல்லறாங்க. நாம பேசுறதை அவங்க கேட்கறதும், அவங்க பேச்சை நாம கேட்கறதும், நாம சாப்பிடும் முறை அவங்களுக்கு பிடிக்காம போறதும், அதே மாதிரி அவங்க சாப்பிடறதும் நமக்கு பிடிக்காம, வெளிய போயி எதுக்கு அவ்வளவு டென்ஷன்?

அவங்க சுவை மறுப்பதற்கு இல்லை, அதுனால முடிஞ்ச அளவு ஒரு பார்சல் வாங்கி வீட்டுக்கு வந்து நிம்மதியா சாப்பிடறதுதான் வழக்கமா போச்சு. விலையும் அதிகமாகிட்டே இருக்கு, அளவும் குறைஞ்சுக்கிட்டே இருக்கு. அதுனால மக்கள்ஸ் கொஞ்சம் கடுப்பாயிருக்காங்க. சீக்கிரமே சரி பண்ணலைன்னா இறங்குமுகம்தான்.

ஜோ/Joe said...

இங்கே சிங்கையில் திறக்கப்பட்ட கிளை எதிர்பார்த்த அளவு இல்லை .நான் ஒரு முறை சென்று ஏமாற்றமடைந்தேன்.

siva gnanamji(#18100882083107547329) said...

யாரேனும் இந்த பதிவை ஒரு நகல் எடுத்து
சரவணபவன் நிர்வாகத்திற்கு அனுப்புவார்களா?

siva gnanamji(#18100882083107547329) said...

***SK க்கு
monopoly=விற்பனை முற்றுரிமை;
சர்வாதீனம்.
இச்சொல் சுமார் 35 ஆண்டுகளாகப் பாடப்புத்தகங்களிலும்
ஆசிரியர்களாலும் பயன்படுத்தப்படுகின்றது
ஏகபோகம் என்பதும் வழக்கில் உள்ளது.

பொன்ஸ்~~Poorna said...

தருமி, இது விளம்பரம் மாதிரியா இருக்கு? நான் ஏதோ ஆராய்ச்சிக் கட்டுரைன்னு இல்ல ஆசைப்பட்டு எழுதினேன்.. :((

சேது, இப்போ இந்த நிலை கொஞ்சம் பரவாயில்லை. இன்னும் சீர் செய்யும் முயற்சிகள் எடுத்துகிட்டு தான் இருக்காங்க.. ஆனா, போட்டியா யாரும் வரணும்னா, இது தான் நேரம் ;)

லக்ஷ்மி, அடையார் ஆனந்த பவன் வேற வந்திருச்சா அங்க? கலக்குங்க :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹரிஹரன்

சரவணபவன் வாடிக்கையாளர்களைக் கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது உண்மை தான் மஞ்சூர் ராசா

RM சச்சிதா, தமிழில் எழுத இங்கே பாருங்கள்..

வல்லி, ராஜ்பவன் கீரை வடையா?!! கேள்வியே பட்டதில்லையே.. முயற்சி செஞ்சிப் பார்த்துட வேண்டியது தான் (அதாவது சாப்பிட):)

நன்றி மணியன், உட்லண்ட்ஸ் சாம்பார் எனக்கு ஏனோ ருசியாகவே இல்லை :))

சமையலறைக்குள்ளும் அனுமதிக்கிறார்கள் யோகன். பார்க்கவேண்டும் என்று கேட்டால், அவர்களே அழைத்துப் போய்க் காட்டுகிறார்கள். அடுத்த முறை முயன்று பாருங்கள் :)

எல்லாவற்றையும் summarise-செய்த பின்னூட்டத்துக்கு நன்றி சிஜி :))) படங்கள் எல்லாம் நெட்டில் சுட்டவை தாம்:)) எதுவும் நான் எடுத்ததில்லை :)))

உங்க பதிவுக்கு வரேன் குறும்பன்..

கொத்ஸ், சரவணபவன் என்பது தனியார் நிறுவனமாக அதாவது ப்ரைவேட் லிமிட்டட் கம்பனியாக பதிவு செய்திருக்கிறதா என்ன? எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் வெறும் உணவகத் துறையில் இருப்பவர்கள் யாரும் அப்படிச் செய்ததாகத் தெரியவில்லை.. விடுதித் துறையினர் செய்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

வருகைக்கு நன்றி ஜோ.. சிங்கையில் சரவணபவனை விட வேறு நல்ல உணவகங்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டேனே..

//யாரேனும் இந்த பதிவை ஒரு நகல் எடுத்து சரவணபவன் நிர்வாகத்திற்கு அனுப்புவார்களா??//
சிஜி, நீங்களே அனுப்பிடுங்களேன் :)))

ஜோ/Joe said...

//சிங்கையில் சரவணபவனை விட வேறு நல்ல உணவகங்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டேனே.. //
பொன்ஸ்,
அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ள முடியாது .'கோமள விலாஸ்'-ஐ அனைவரும் பிரதானமாக சொல்லுவார்கள் .ஆனால் இரண்டு முறைக்கு மேல் அங்கே என்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை .டிபன் சாப்பிடுவதென்றால் 'மெட்ராஸ் உட்லண்ஸ்' செல்வது வழக்கம் ,அல்லது ஆனந்த பவன் .மற்றபடி அசைவ உணவகங்களுக்கு தான் அதிகம் செல்வது..ஹி..ஹி

manasu said...

பொன்ஸ் உங்கள் கருத்துக்களோடு எனக்கு முழு உடன்பாடுண்டு.

நாம எப்படா சாப்பிட்டு முடிப்போம் என்று பக்கத்தில் டேபிள் பிடிக்க காத்தருப்பது, விலை அதிகம்ம்ம்ம்ம்ம்ம்
என நிறைய அசெளகரியங்கள்....

அப்படி ஒண்ணும் அஹா ஓஹொ சுவை ஒன்றுமில்லை.( மதுரை ரோடோர கடை இட்லி சாப்பிட்டுப் பாருங்கள்)

இதில் சரவணபவனில் சாப்பிட்டேன் என்கிற பெருமை தவிர வேறொன்றுமில்லை என்றே தோன்றுகிறது. Just a brand name.

Anonymous said...

சரவணபவனில் இதுவரை இரண்டு முறை சாப்பிட்டதுண்டு. சென்னையில் 10 ஆண்டுகளுக்கு முன்னால். அப்போது அந்த சுவை ஏனோ என்னைக் கவரவில்லை. அடுத்தது சமீபத்தில் சேன் ஹோஸேவில். LA பீமாஸ் ஹோட்டலை ஒப்பிடும்போது சாப்பாடு பரவாயில்லை என்று தோன்றியது. மத்தபடி நம்ம பேஃவரைட் பெங்களூரில் ஆந்திரமும், சென்னையில் செட்டிநாடுகளும்தான்.

siva gnanamji(#18100882083107547329) said...

//எல்லாமும் நெட்டில் சுட்டவை தாம்;எதுவும் நான் எடுத்ததில்லை//

நாட்டாமை!வரியை மாத்துங்க..
....எல்லாமும் நெட்டில் சுட்டவை தாம்;எதுவும் நான் இல்லை......

VSK said...

சிவஞானம்ஜி,
சர்வாதீனம் என்னும் சொல்லைத்தான் தமிழ்ப்படுத்த முயற்சித்தேன்.

விற்பனை முற்றுரிமை என்பது ஒரு வகையை மட்டுமே குறிக்கிறது என எண்ணுகிறேன்.

ஒட்டுமொத்த ஆளுகை எப்படி என்று சொல்லவில்லையே!!:))

கொத்ஸ்,

அவர்கள் இடிக்கக்கூடும் எனத் தெரிந்தும் ஏன் அங்கு செல்ல வேண்டும்?

தனி அறைக்குச் செல்லலாமே?

அல்லது வீட்டிலேயே சாப்பிடலாமே?

அதனை துர்ப்பாக்கியம் என் விளித்ததாலேயே அதைக் குறிப்பிட்டேன்.

மாயவரத்தான் said...

சரவணபவனில் சுமார் பத்து வருஷங்களுக்கு முன்பு பத்து ரூபாய் செலவில் Fourteen Idlies சாப்பிட்ட பொழுது இருந்த ருசி இப்போது முப்பது ரூபாய் சொச்சமாக இருக்கும் போது இல்லை!

Anonymous said...

You have not mentioned any negative things about saravana bhavan except prices. Annachi has developed this chain of hotels on his own from nothing.Unlike Sun TV groups with political background, suppressing the other's growth (that is monopoly).Then why do you expect competitor? We should appreciate and learn from annachi the growth. Let us enjoy the taste as long as saravan bhavan is not into backdoor competition.