Saturday, February 24, 2007

நீலக் குழந்தை..

இதயத்தில் ஏதோ பிரச்சனையுடன் பிறக்கும் குழந்தைகளை நீலக் குழந்தைகள் என்று அழைக்கிறார்கள் என்று மட்டுமே கேட்டிருக்கிறேன். ஏதோ, கெட்ட ரத்தம், நல்ல ரத்தத்தைச் சரியாக பிரிக்காமல் இதயம் பிரச்சனை செய்யும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், என் வாழ்க்கையில் அது போன்றதொரு குழந்தையை நேரில் காண நேரிடும் என்று நினைத்திருக்கக் கூட இல்லை..




குழந்தை ப்ரியதர்ஷினியின் அறுவை சிகிச்சைக்கு உதவி தேவை என்ற மடல் வந்த போது, உடனுக்குடன் நினைவுக்கு வந்தது என்றென்றும் அன்புடன் பாலா தான். பாலா ஏற்கனவே ஸ்வேதாவுக்கும், லோகப்ரியாவுக்கும் இதே போன்ற பிரச்சனைக்கு உதவி செய்திருந்த காரணத்தால் அவருக்கே எழுதிவிடலாம் என்று முடிவெடுத்திருந்தேன். ஏனோ, அவரிடம் சேர்ந்திருக்கும் நிதியில் இந்தக் குழந்தைக்கு உதவ, மீண்டும் திரட்டாமலேயே, முழுமையாக பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை எப்படியோ வந்து ஒட்டிக் கொண்டிருந்தது.

பாலாவிடம் பேசியபோது, நம்மில் யாராவது நேரடியாக நிலைமையைக் கண்டு வந்து உண்மையாகவே உதவி தேவையான ஆள் தானா என்பதைப் பார்த்து அறிந்து உதவுவதே சாலச் சிறந்தது என்று புரிந்தது. "பாத்திரம் அறிந்து" உதவி செய்ய நானும் பாலபாரதியும் முகப்பேர் செரியன் இதயநோய் மருத்தவமனையில் இருந்த குழந்தை ப்ரியதர்ஷினியைப் பார்க்கப் போனோம்.

விசிட்டர் பாஸ், ஒரே ஒருவர் தான் போகலாம், என்பது போன்ற கடல்களைக் கடந்து, குழந்தைகள் வார்டில் இருந்த பிரியதர்ஷினியையும் அவளது பெற்றோரையும் சந்தித்தபோது கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது. மூன்று வயது பிஞ்சுக் குழந்தை; இதயத்தில் ஓட்டை, மற்றும் நல்ல இரத்தம் கடத்தவேண்டிய ஒரு வால்வு, கெட்ட இரத்தத்தில் கலப்பது, என்று மருத்துவர்களுக்குச் சவாலான பிரச்சனை தான் என்றார்கள். எட்டு மணி நேரம் போல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால், மற்ற எமர்ஜென்ஸி கேஸ்களுக்கு இடையில், நாளை நாளை என்று தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது இந்தக் குழந்தையின் சிகிச்சை.

குழந்தை துவண்டு போய் இருந்தது. அம்மாவின் இடுப்பில் இருந்தவளின் வலது கையில் ஊசி குத்திய அடையாளம்; இரத்தப் பரிசோதனைக்காக எடுத்திருப்பார்கள். விரல் நகங்கள் எல்லாம் திட்டு திட்டாக கருப்பு; முகம், உடல் கூட ஓரளவுக்கு கருத்தே இருந்தது. நிறைய antibiotic மருந்துகளால் இந்த நிலை என்று எனக்குத் தோன்றியது. மறுநாள் எ.அ.பாலா தான், ப்ளூ பேபி என்ற பதம் வந்ததற்கே இந்தக் கருப்பு நிறங்கள் தான் காரணம் என்றார். ஓ.. ப்ளூ பேபி என்பது இது தானா! பாவம் குழந்தை!

கோயமுத்தூரைச் சேர்ந்த இந்தக் குடும்பம், பல வருடங்கள் கழித்துப் பிறந்த ஒரே பெண்! தெரிந்தவர்கள் யாருமே இல்லாத சென்னைக்கு வெறும் சிகிச்சைக்காக போய் வந்து கொண்டிருக்கிறார்கள். கோவையில் ஏதோ தொழிற்சாலையில் காவல் வேலை பார்த்து வரும் தந்தை மூர்த்தி, வீட்டை அடமானம் வைத்து, பணியிடத்தில் கடன்/உதவி பெற்று அறுவை சிகிச்சைக்கான இரண்டு லட்சத்தை ஏற்கனவே செலுத்தி இருக்கிறார். அது தவிர, சென்னையில் அவர்கள் பணம் கேட்டு மனு போட்ட சில ட்ரஸ்ட்கள் முப்பதாயிரம் வரை சேர்த்துக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் மருத்துவமனையில் தங்கும் செலவு, மருந்துகள், சோதனைகளுக்கான செலவு என்று தேவைகள் அதிகம் என்று தான் தோன்றுகிறது.

எங்களால் ஆன உதவியைச் செய்கிறோம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்த போது, தோன்றியது, "ஏழைக் குழந்தைக்குப் பணக்கார வியாதி!" என்பது தான்.

மறுநாள் எ.அ.பாலாவும் ஒருமுறை நேரில் சென்று குழந்தையையும் அதன் தந்தையையும் பார்த்துவிட்டு வந்து பேசினார். "Genuine case" தான் என்று எங்கள் எல்லாருக்குமே தோன்றியதால், இந்தப் பதிவையும் இட்டிருக்கிறார்.

முடிந்த உதவியைச் செய்ய வேண்டுமாய்க் கேட்பதற்கே இந்தப் பதிவு...

Monday, February 19, 2007

வெட்டி, நோ டென்சன் ப்ளீஸ்

"இதுக்கு என்ன முடிவுனு தெரியல"

வெட்டிப்பயலின் பதிவு முன்வைக்கும் கேள்விகளுக்கு என்னாலான பதில்கள் இந்தப் பதிவு:

வெட்டி,

உங்க பிரச்சனையின் முலக் காரணம் என்ன என்கிறதை நீங்க சரியாகப் புரிந்து கொண்டது போல் தான் தோணுது. வேலையில் சேர்ந்த புதிதில், அதாவது, முதல் ஆறு மாதங்களுக்கு அதிக நேரம் அங்கேயே இருந்து பழகி இருக்கீங்க; பழக்கி இருக்கீங்க - உங்க மேலதிகாரிகளுக்கு உங்களின் அதிக நேர இருப்பைப் பழக்கி இருக்கீங்க.

இது எப்போதும் நடப்பது தான்.

மென்பொருள் நிறுவன கலாச்சாரத்தில் தாமதமாக வேலைக்குச் செல்வதும், அங்கேயே இருப்பதும், எல்லாமே வழக்கமான, தினப்படி விஷயம் தான் என்ற கற்பிதம் ரொம்பவும் உலவுகிறது. இதை அழிப்பதும் மாற்றுவதும் முடியக் கூடிய விஷயம் தான்.

வேலைக்குச் சேர்ந்த புதிதில் வெகுநேரம் இருப்பதில் தவறேதும் இல்லை. என் அனுபவத்தில் பிராஜக்ட் கம்பனிகளில் ஒவ்வொரு புது பிராஜக்ட் தொடங்கிய முதல் இரண்டு மாதங்கள், ப்ராடக்ட் கம்பனிகளில், மொத்தமாக முதல் ஆறு மாதங்கள் - இவை தான் முக்கியமான நேரம். இந்த நேரத்தில் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டியது முக்கியம். ஆனால், இதைத் தாண்டிய அதாவது மூன்றாவது மாதம் முதல்(project), அல்லது ஏழாவது மாதம் முதல்(product), அலுவலகத்தின் எட்டரை மணி நேரத்துக்கு மேல் பழியாகக் கிடக்க வேண்டிய அவசியம் இருக்காது.

காலை, மாலை சிற்றுண்டி/டீ இடைவேளை, மதிய உணவு இடைவேளை தவிர மீதி ஏழு மணிநேரத்தில் உங்கள் வேலை கண்டிப்பாக முடிந்துவிடும். - இந்த இணையம், பதிவுகள், செய்திகள், ஸ்டாக் மார்க்கெட், க்ரிக்கெட், சினிமா என்று கவனம் சிதறாமல் இருந்தால்.

என் பணிக்காலத்தின் முதல் மூன்று வருடங்கள் ப்ராடக்ட் வழி நிறுவனத்தில் தான் இருந்தேன். அடுத்த இரண்டரை வருடங்கள் பிராஜக்ட் வழி நிறுவனம்.

தாமதமாக தங்குவதற்கும், ஒரு நாளைப் போல் பத்து பன்னிரண்டு மணிக்கு வீட்டுக்குப் போவதற்கும் பிராடக்ட், ப்ராஜக்ட் வித்தியாசம் எல்லாம் கிடையாது. பொதுவாக தாமதமாகப் போகிறவர்கள் சொல்லும் காரணங்கள் பின்வருவனவற்றுள் ஒன்றாக இருக்கும்:

1. நான் தனியாத் தானே/நண்பர்களுடன் தானே தங்கி இருக்கேன். வீட்டுக்குப் போனால் எப்படியும், பொழுது போகாது. இங்கயே இருந்துக்கலாம் - கோக், பெப்ஸி, இணையம், ஏசி. இரவுச் சாப்பாடு எல்லாம் முடிந்து தூங்கறதுக்குப் போனால் போதும்.

2. எப்படியும் வீட்டுக்குப் போய் சீரியல் தான் பார்க்கப் போறேன். இதுக்கு ஆபீஸில் இருந்தால் சாட்டாவது செய்யலாமே!

3. அந்த நடராஜன் மட்டும் ராத்திரி எட்டு மணி வரை இருந்து மேனேஜர் கிட்ட நல்ல பேர் எடுக்கிறான். நானும் இல்லைன்னா என்னை மானேஜருக்குத் தெரியவே தெரியாம போயிடும்.

4. எங்க பிராஜக்ட் லீடர் பத்து மணி வரை இருந்து தொலைக்கிறான். தலையெழுத்து, நானும் இருக்க வேண்டியதா இருக்கு.

5. இப்போ கிளம்பினால், பஸ்ஸுக்கு/அலுவலக வண்டிக்கு, பணம் கொடுத்துப் போகணும். மெல்ல ஒரு ஒன்பது மணிக்கா கிளம்பினா, இலவசப் பயணம், அதிலும் வீட்டு வாசல்லயே கொண்டு விட்ருவாங்களே. அதைப் போய் விடுவாங்களா..

மேலே சொல்லப்பட்டவை தவிர பல மேலாளர்கள் உண்மையிலேயே தாமதமாக இருந்து வேலை செய்பவர்கள் மேல் அதிக மதிப்பு வைத்திருப்பார்கள் என்ற கற்பிதம்.

என்னுடைய பழைய நிறுவன மேலாளர் இப்படித்தான்; காலை பதினோரு மணிக்கு வந்து இரவு பன்னிரண்டு மணிக்கு வீடு திரும்பும் என் உடன் பணிபுரிந்த தோழியை, அந்தக் காரணத்தினாலேயே, மிகவும் சிறப்பான பணியாளர் என்று நினைத்திருந்தார். தோழி விடுப்பில் இருந்த போது, அவர் செய்திருந்த மாட்யூல்களில் வந்த பூச்சிகளைப் பார்த்து அதிர்ந்து தம் யோசனையை மாற்றிக் கொள்ள வேண்டியதாகியது.

என்னைப் பொறுத்தவரை, இவற்றிற்கு உண்மையான மாற்றம் மேலாளர்களிடமிருந்தும், பிராஜக்ட் லீடர்களிடமிருந்தும் தான் வர வேண்டும். தன் உடன் பணியாற்றும் பணியாளர்களிடம், அலுவலக நேரத்திற்குப் பின்னரும் அலுவலகத்தில் இருப்பதும், பணியாற்றுவதும் தனக்கு ஒப்புமை இல்லாத விஷயம் என்றோ, குறைந்த பட்சம், "ஒன்பது மணி வரை வேண்டுமானாலும் வேலை செய், ஐந்து மணி வரை வேண்டுமானாலும் வேலை செய், எப்படிச் செய்தாலும் எனக்குக் கவலையில்லை. குறித்த காலத்தில் வேலை முடித்துக் கொடுத்தால் போதுமானது." என்ற எண்ணத்தையாவது தன் கீழ் வேலை செய்பவர் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

"ஒருவர் பன்னிரண்டு மணிவரை அலுவலகத்தில் இருக்கிறான் என்ற காரணத்துக்காக மட்டும் அவரை நான் பெரிய புத்திசாலியாக நினைக்கவில்லை" என்ற தோற்றத்தை ஒவ்வொரு பிராஜக்ட் லீடும் ஏற்படுத்தினாலே பிரச்சனையில் பாதி குறைந்து விடும்.

ஆனால், இன்றைய சூழ்நிலையில் இது நடப்பது மிகவும் கடினமான விஷயம். நிறுவன முதலாளியான நாராயண மூர்த்தியே, "நேரத்துக்கு வீட்டுக்குப் போங்கள்" என்று உரையாற்றினால் கூட அது ஏதோ பக்கத்து நிறுவனத்திற்கான விளக்கம் என்று நினைத்து உதறித் தள்ளிவிட்டு அலுவலகத்தில் அடைந்து கிடப்பவர்கள் ஏராளம்.

ஒரு பிராஜக்டின் தலைவர் அலுவலக நேரத்தில் அலுவலகம் வந்து, அந்த நேரத்திற்குள் வீட்டுக்குப் போனால், கீழுள்ளவர்களும் அதையே செய்வார்கள். ஆனால், இதுவும் பொதுவாக நடப்பதில்லை. இணையத்தில் மேய்வது, விளையாடுவது, மெயில் அனுப்புவது என்பதற்காவது, அலுவலகத்தில் இருக்கத் தான் இந்த நடுமேலாளர்களும் விரும்புகிறார்கள். அவர்கள் பெயர் மேலே நல்ல விதமாகப் போக வேண்டுமே!

ஆக போன வருடம் வேலைக்குச் சேர்ந்த புதிய இஞ்ஜினியருமாகட்டும், பல காலமாக தாமதமாக இரவு தாமதமாக வீட்டுக்குப் போகும் வழக்கத்தில் ஊறித் திளைத்தவர்களாகட்டும், இவர்களால் எந்த வகையிலும் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. ஓரளவுக்கு நம்பிக்கைக்குரியவர்களும், அதே சமயத்தில் வேலை பழகியவர்களுமான நடுமேலாளர்களின் கையில் தான் இந்தப் பிரச்சனைக்கான தீர்வு இருக்கிறது.

மூன்றிலிருந்து எட்டு வருட அனுபவம் உள்ள இந்த பிராஜக்ட் லீடர்கள், வேலை அதிகமில்லாத நாட்களில், நேரத்துக்கு வீட்டுக்குக் கிளம்புவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். 'வீட்டுக்குப் போய் என்னத்தச் செய்ய' என்று பேசாமல், ஏதாவது ஒரு ஆரோக்கியமான பொழுது போக்கை உருவாக்கிக் கொள்ளுதல் நலம். விளையாடுவது, புத்தகம் படிப்பது, சமைப்பது, இசைக்கருவிகள் கற்றுக் கொள்வது, புது மொழி கற்பது, உடற்பயிற்சி செய்வது என்று அவரவருக்கு விருப்பமான ஏதாவது ஒரு பொழுதுபோக்கு வகுப்புகளில் சேர்ந்து கொள்வது நலம். இதன்மூலம் ஒரு கமிட்மெண்ட் இருக்கும். எதிலாவது பிணைந்து கொண்ட எண்ணம் வரும். கமிட்மெண்ட்கள் இல்லாமல் இது போன்ற செயல்களை நாம் கண்டிப்பாகச் செய்ய மாட்டோம் என்பது உறுதி.

இது போன்ற வகுப்புகளில் தான் சேர்வது மட்டுமல்லாமல், தன் கீழ் வேலை செய்யும் அப்பிரண்டைஸ் இஞ்ஜினியர்களையும் இது போல் வேறு நல்ல ஆரோக்கியமான பொழுதுபோக்குகளில் பங்கெடுக்கத் தூண்டுவது நலம்.

ஓரளவுக்கு வேலை பழகிய, இனிமேல் அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்து தான் வேலை கற்க வேண்டும் என்ற அவசியம் இல்லாத புதியவர்களை வீட்டுக்கு அனுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும். கூடியவரை அவர்கள் இங்கே இருப்பதை நாம் ஒன்றும் பெரிய விஷயமாக மதிக்கவில்லை என்ற எண்ணத்தை அவர்களுக்கும் உருவாக்க வேண்டும்.

சில சமயம் அத்தனை முக்கியமில்லாத வேலையைக் கூட இந்த இளைஞர்கள் ஆர்வத்தால், அலுவலக நேரத்திற்குப் பின்னர் எடுத்து வந்து சந்தேகம் கேட்கலாம். பிராஜட் லீடர்களான அல்லது சீனியர் பிரோக்ராமர்களான நீங்கள், இது போன்ற நேரத்தில் உங்கள் இடத்தில் இல்லாமல் இருந்தால், தாமாகவே மறுநாள் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் அவர்களுக்கும் ஏற்படும். அப்படி இல்லாமல், நீங்கள் உங்களின் முக்கியமான வேலைக்காக அலுவலகத்தில் இருக்க நேரும் பட்சத்தில், கீழ் வேலை செய்பவர்களை ஊக்கப்படுத்தாமல், மறு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி மறுநாள் இந்த வேலைகளை மறக்காமல் சொல்லிக் கொடுக்கலாம். இதன் மூலம் அவர்கள் மாலைகளில் கண்டிப்பாக இருக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் வலுப்படும்.

நான் ப்ராடக்ட் நிறுவனத்தில் இருந்த நாட்களில் ஆறேழு மாதங்களுக்குப் பின்னர், கூடியவரை அனாவசியமாக அலுவலகத்தில் இருப்பதைத் தவிர்த்துவிட்டேன். வேலை நேரத்திற்குப் பிறகு ஒரு அரை மணி அல்லது ஒரு மணி நேரம் அதிகமாகச் செலவிடுவது வழக்கம் - ரிலாக்ஸாக பேசிக் கொண்டிருந்த அல்லது டேபிள் டென்னிஸ் விளையாடிய நேரங்களுக்காக மட்டுமே அந்தக் கூடுதல் அரை அல்லது ஒரு மணி. கூடியவரை எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து சமைக்கத் தொடங்கிவிடுவோம். அப்புறம் கொஞ்சம் படிப்பு, தூக்கம்.

இதனால் என்னுடைய முன்னேற்றத்தில் எந்த விதத்திலும் பாதிப்பு இருக்க வில்லை. Fast Track employeeஆகத் தான் என்னைக் கருதினார்கள், சீக்கிரமே பதவி உயர்வுகளும் வந்தன. அதே போல், என்னுடன் பணிபுரிய இரண்டு பேரை நியமித்த போதும், அவர்களின் முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே அதிக நேரம் அலுவலகத்தில் செலவிட நேர்ந்தது. தனக்கான வேலையைச் சரிவர கற்ற பின்னர், அவர்களையும் கூடியவரை உடற்பயிற்சிகளிலும், விளையாட்டிலும் நேரம் செலவழிக்கச் சொல்லியதுண்டு. ஒருவர் அப்படி என்னைப் போலவே வேலையைக் கொடுக்கப்பட்ட நேரத்தில் முடித்து வீட்டுக்குப் போவார். ஆனால், மற்றொருவர், சமைக்கச் சோம்பல் பட்டுக் கொண்டு, இரவும் சாப்பிட்டுவிட்டு, ஒன்பது மணிக்குத் தான் போவார். அப்படியும் மாலையில் வேலை என்று டென்சன் ஏற்றுவதில்லை; அவர் தான் இருக்கிறாரே என்று வேலைச் சுமையைக் கூட்டுவதுமில்லை. எஸ்டிமேட்டில் கறாராக இருப்பது வழக்கம்.

அடுத்து, பிராஜக்ட் நிறுவனங்களுக்கு வந்த போது தான் இந்த என்னுடைய ஒழுக்கத்தில் கொஞ்சம் பிரச்சனை வந்தது. "நாம் ஒன்று நினைக்க கோட் ஒன்று நினைக்கும்" என்பது புரியத் தொடங்கியது. சில பிராஜக்ட் மேனேஜர்கள் வேண்டுமென்றே எட்டு மணி நேரத்தில் முடியாது என்று தெரிந்தும் சில வேலைகளை எட்டு மணிநேரத்தில் முடிக்கச் சொல்லிப் பாடுபடுத்துவார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்களின் டார்கெட் அப்படிக் கறாராக நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

இந்த மாதிரி ப்ராஜக்ட் நிறுவனங்களை எதிர்கொள்வது, வேறு வகையில் இருக்க வேண்டும். ஒன்றிரண்டு நாள் அவர்கள் கேட்டபடியே எட்டு மணிக்கு மேல் இருந்து முடித்துக் கொடுத்துவிட வேண்டும். ஆனால், கேட்டவுடன், 'அதான் எனக்குத் தெரியுமே' என்று ஒப்புக் கொள்ளாமல், கூடியவரை உங்களுக்கான அன்றைய வேலைகளில் எவை எவை கெட்டுப் போச்சு என்று வெளியே, பேச்சுவாக்கிலாவது சொல்ல வேண்டும்.

அப்புறம், எட்டு மணிக்கு மேல் இருந்து வேலை முடிக்கும் நாட்களில், இரவு உணவுக்கான பில், இரவு அத்தனை நேரத்திற்கு மேல் வீடு போக ஆன செலவு போன்றவற்றைக் கேட்டுப் பெற்றுவிட வேண்டும். இரவு ஷிப்டில் வேலை செய்யக் கூட கம்பனி பாலிசிகளில் ஏதாவது நஷ்ட ஈடு (compensation) தருவார்கள். அதையும் கண்டிப்பாகத் தேடித் துருவி வாங்கிவிடுவது நல்லது. - இந்தப் பணம் கண்டிப்பாக இருநூறு முன்னூறு ரூபாய்க்கு மேல் வராது. ஆனால், பணம் என்ற விஷயத்திற்காக அல்லாது, இது போல் தவறாக எஸ்டிமேட் செய்வது, அதிக நேரம் தங்க வைப்பது போன்ற நிகழ்வுகளுக்கான நமது எதிர்ப்பாக இது பதிவாகும். அப்படிச் செய்வதன் மூலம், ப்ராஜக்ட்டுக்கான செலவைக் குறைக்கவென்றே குறைந்த எஸ்டிமேட் போட்டதும் வெற்றியடையாது. 'இது சரியான குறுக்கு வழி அல்ல' என்பதை நிர்வாகம் உணரவும் ஒரு வாய்ப்பாகும்.

ஆனால், இதையெல்லாம் செய்வதாக இருந்தால், கூடியவரை அலுவலகத்தில் சொந்த வேலையாக அதிக நேரம் கழிப்பதைக் குறைத்துக் கொள்ளுதல் நலம். பெஞ்சைத் தேய்க்கும் நாட்களிலும், வேலை நாட்களில் வெகு சில நாட்களிலும் தாமதமாகத் தங்கி மட்டுமே சொந்த வேலை பார்த்தால், பின்னாளில் அதிக நேரம் தங்குவது நமக்கே ஒரு அனாவசியமான விசயமாகத் தெரிந்துவிடும்.

இவற்றை எல்லாம் செய்வதற்கு ஆதாரமான ஒரு விசயம் உண்டு - அது ஒற்றுமை. ஒரு டீமில் இருக்கும் ஐந்து பேரில் இரண்டு பேருக்கு மட்டும் வீட்டுக்குச் சீக்கிரம் போக வேண்டும் என்று எண்ணம் இருந்தால், மற்ற மூன்று பேர் தான் அதிக நேரம் தங்குவதைப் பெரிய விஷயமாகக் காட்டிக் கொள்ள வாய்ப்பாகிவிடும். மற்ற மூன்று பேரும் கூட ஒத்துழைத்தால், கண்டிப்பாக நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்துவிடலாம்.

இப்படிச் சொன்னாலும், அலுவலகத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒருவர் என்ன வேலை செய்கிறார், எப்படி நேரத்தைச் செலவிடுகிறார் என்ற விஷயம் நல்ல மேலாளருக்குத் தெரிந்து தான் இருக்கிறது. டெக்னிகலாக எதுவும் தெரியாதவர், என்று பொதுவாக மேலாளர்களைக் கிண்டலுக்குச் சொன்னாலும், [ஜி.ரா மன்னிக்க :-D ] இது போன்ற விசயங்களை அவர்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே அதிகம் கவலைப் பட வேண்டியதில்லை.


பாலாஜி, உங்கள் பிரச்சனை பொறுத்தவரை, ஒன்பது மணிவரை அலுவலகத்தில் சுற்றுபவர் என்று ஏற்கனவே ஏற்படுத்திவிட்ட பிம்பத்தை நீங்களே தான் பேசி முறிக்க வேண்டும். அடுத்தமுறை நேரங்கணிக்கும் போதாவது, அலுவலக நேரத்தை மட்டும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதை உங்கள் தற்போதைய மேலாளரிடம் சொல்லுங்கள். அவர் கண்டிப்பாகப் புரிந்து கொள்வார். அதே சமயம், இந்தக் காரணத்திற்காக பிராஜக்ட் மாற்றிக் கொண்டே இருந்தால், எங்குமே நிம்மதி கிடைக்காது. பேசுவது ஒன்றே சிறந்த வழி..

Monday, February 12, 2007

சாகரனுக்கு அஞ்சலி....


காலை அலுவலகத்தில் வந்து உட்கார்ந்தவுடன் தலை பாலபாரதியிடமிருந்து அந்தத் துக்ககரமான தொலைபேசிச் செய்தி... தேன்கூடு நிறுவனரும், தமிழார்வலருமான சாகரன் என்னும் கல்யாண் அவர்களின் மரணச் செய்தி !

29 வயதெல்லாம் மாரடைப்பு வரும் வயதா என்ன?! கொடுமை!

அதிகம் பழகியதில்லை என்றாலும், சமீபத்தில் நடந்த பதிவர் சந்திப்புக்கு இனிப்புகளுடன் வந்து இனிமையாக கலந்து கொண்ட கல்யாண் இன்று நம்மிடையே இல்லை என்பதை நம்பவே முடியவில்லை!

தமிழோவியத்துடன் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டிகளில் பரிசுக்கான தேர்வு முறைகள் அத்தனை நேர்த்தியாக இல்லை என்ற எங்களின் குறைகளைக் கேட்டுவிட்டு, சீக்கிரத்தில் வேறு விதமான போட்டி ஒன்றைத் துவங்கப் போவதாகச் சொல்லிச் சென்றார். பிப்ரவரி நான்காம் தேதி, (கடந்து போன ஞாயிற்றுக்கிழமை!) அன்று தொடர்ச்சியாக, சுடர் விளையாட்டின் துவக்கத்தை பற்றி மடலனுப்பி இருந்தார். வெளியூரில் இருந்தமையால், கலந்து கொள்ள முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து, வேறொருவர் பெயரைப் பரிந்துரைத்து எழுதியது, நேற்று நடந்தது போல் இருக்கிறது!

அதிர்ச்சியிலிருந்து மீண்டுவரவே இன்னும் நாளாகும் போல் இருக்கிறது.

கல்யாண் அவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்! :(

Sunday, February 11, 2007

வந்தாச்சு.. வந்தாச்சு..

நெருங்கிய உறவினருக்கு விபத்து. ஆஸ்பத்திரி, எலும்புமுறிவு, சர்ஜரி, பிஸியோதெரபி, ஹிந்தி, மராத்தி, சப்பாத்தி, சப்ஜி என்று கழிந்ததில் தமிழ்மணம் பார்க்காமல் கழித்த முதல் முழு வாரம்!

பலர் சொல்வது போல் கைகால் நடுக்கமெல்லாம் இல்லை என்றாலும், இல்லாத ஒரு வாரம் மடல் அனுப்பியும் பின்னூட்டமிட்டும் குறுஞ்செய்திகளிலும், தேடிய நண்பர்களுக்கு நன்றி. ஒவ்வொரு மடலாகப் படித்துக் கொண்டிருக்கிறேன், பதில்கள் மெல்ல வரும். கொஞ்சம் டைம் ப்ளீஸ்..!

திரு கலந்து கொண்ட பழைய வலைபதிவர் சந்திப்பின் தீர்மானங்கள் எல்லாம் முடித்தபின் அடுத்த சந்திப்புக்குப் போனால் போதும் என்று முடிவெடுத்திருந்தமையால், ஊரில் இருந்திருந்தாலும் செந்தழல் ரவி சந்திப்புக்கு வரும் எண்ணம் இருக்கவில்லை. சந்திப்பு எப்படிப் போச்சு? நடேசன் பார்க் மட்டுமா? அல்லது ரத்னா கபேயுமா?

மற்றபடி என்ன நடந்தது, நடக்கிறது என்று பார்த்துவிட்டு அப்புறம் வருகிறேன்.. சர்வேசன் போட்டிக்குப் பேர் கொடுத்ததோடு முடிந்துவிட்டது.. இனிமேல் போய், தக்காளி வெங்காயம் வாங்கி.. ம்ஹும்.. நான் இல்லப்பா...

ஐந்து பத்து நிமிடத்திற்கொருமுறை ஜிமெயிலையும், தமிழ்மண முகப்பையும் புதிதுப்படுத்திப் பார்த்துக் கொண்டே இருந்த உந்துதல் குறைந்து, ஓரளவுக்குப் பழகியும் விட்டதால், அப்படியே அப்பீட் ஆகவும் வாய்ப்பிருக்கிறது ;) (யாருப்பா அங்க, சந்தோசத்துல குதிக்கிறது?! )