Monday, February 19, 2007

வெட்டி, நோ டென்சன் ப்ளீஸ்

"இதுக்கு என்ன முடிவுனு தெரியல"

வெட்டிப்பயலின் பதிவு முன்வைக்கும் கேள்விகளுக்கு என்னாலான பதில்கள் இந்தப் பதிவு:

வெட்டி,

உங்க பிரச்சனையின் முலக் காரணம் என்ன என்கிறதை நீங்க சரியாகப் புரிந்து கொண்டது போல் தான் தோணுது. வேலையில் சேர்ந்த புதிதில், அதாவது, முதல் ஆறு மாதங்களுக்கு அதிக நேரம் அங்கேயே இருந்து பழகி இருக்கீங்க; பழக்கி இருக்கீங்க - உங்க மேலதிகாரிகளுக்கு உங்களின் அதிக நேர இருப்பைப் பழக்கி இருக்கீங்க.

இது எப்போதும் நடப்பது தான்.

மென்பொருள் நிறுவன கலாச்சாரத்தில் தாமதமாக வேலைக்குச் செல்வதும், அங்கேயே இருப்பதும், எல்லாமே வழக்கமான, தினப்படி விஷயம் தான் என்ற கற்பிதம் ரொம்பவும் உலவுகிறது. இதை அழிப்பதும் மாற்றுவதும் முடியக் கூடிய விஷயம் தான்.

வேலைக்குச் சேர்ந்த புதிதில் வெகுநேரம் இருப்பதில் தவறேதும் இல்லை. என் அனுபவத்தில் பிராஜக்ட் கம்பனிகளில் ஒவ்வொரு புது பிராஜக்ட் தொடங்கிய முதல் இரண்டு மாதங்கள், ப்ராடக்ட் கம்பனிகளில், மொத்தமாக முதல் ஆறு மாதங்கள் - இவை தான் முக்கியமான நேரம். இந்த நேரத்தில் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டியது முக்கியம். ஆனால், இதைத் தாண்டிய அதாவது மூன்றாவது மாதம் முதல்(project), அல்லது ஏழாவது மாதம் முதல்(product), அலுவலகத்தின் எட்டரை மணி நேரத்துக்கு மேல் பழியாகக் கிடக்க வேண்டிய அவசியம் இருக்காது.

காலை, மாலை சிற்றுண்டி/டீ இடைவேளை, மதிய உணவு இடைவேளை தவிர மீதி ஏழு மணிநேரத்தில் உங்கள் வேலை கண்டிப்பாக முடிந்துவிடும். - இந்த இணையம், பதிவுகள், செய்திகள், ஸ்டாக் மார்க்கெட், க்ரிக்கெட், சினிமா என்று கவனம் சிதறாமல் இருந்தால்.

என் பணிக்காலத்தின் முதல் மூன்று வருடங்கள் ப்ராடக்ட் வழி நிறுவனத்தில் தான் இருந்தேன். அடுத்த இரண்டரை வருடங்கள் பிராஜக்ட் வழி நிறுவனம்.

தாமதமாக தங்குவதற்கும், ஒரு நாளைப் போல் பத்து பன்னிரண்டு மணிக்கு வீட்டுக்குப் போவதற்கும் பிராடக்ட், ப்ராஜக்ட் வித்தியாசம் எல்லாம் கிடையாது. பொதுவாக தாமதமாகப் போகிறவர்கள் சொல்லும் காரணங்கள் பின்வருவனவற்றுள் ஒன்றாக இருக்கும்:

1. நான் தனியாத் தானே/நண்பர்களுடன் தானே தங்கி இருக்கேன். வீட்டுக்குப் போனால் எப்படியும், பொழுது போகாது. இங்கயே இருந்துக்கலாம் - கோக், பெப்ஸி, இணையம், ஏசி. இரவுச் சாப்பாடு எல்லாம் முடிந்து தூங்கறதுக்குப் போனால் போதும்.

2. எப்படியும் வீட்டுக்குப் போய் சீரியல் தான் பார்க்கப் போறேன். இதுக்கு ஆபீஸில் இருந்தால் சாட்டாவது செய்யலாமே!

3. அந்த நடராஜன் மட்டும் ராத்திரி எட்டு மணி வரை இருந்து மேனேஜர் கிட்ட நல்ல பேர் எடுக்கிறான். நானும் இல்லைன்னா என்னை மானேஜருக்குத் தெரியவே தெரியாம போயிடும்.

4. எங்க பிராஜக்ட் லீடர் பத்து மணி வரை இருந்து தொலைக்கிறான். தலையெழுத்து, நானும் இருக்க வேண்டியதா இருக்கு.

5. இப்போ கிளம்பினால், பஸ்ஸுக்கு/அலுவலக வண்டிக்கு, பணம் கொடுத்துப் போகணும். மெல்ல ஒரு ஒன்பது மணிக்கா கிளம்பினா, இலவசப் பயணம், அதிலும் வீட்டு வாசல்லயே கொண்டு விட்ருவாங்களே. அதைப் போய் விடுவாங்களா..

மேலே சொல்லப்பட்டவை தவிர பல மேலாளர்கள் உண்மையிலேயே தாமதமாக இருந்து வேலை செய்பவர்கள் மேல் அதிக மதிப்பு வைத்திருப்பார்கள் என்ற கற்பிதம்.

என்னுடைய பழைய நிறுவன மேலாளர் இப்படித்தான்; காலை பதினோரு மணிக்கு வந்து இரவு பன்னிரண்டு மணிக்கு வீடு திரும்பும் என் உடன் பணிபுரிந்த தோழியை, அந்தக் காரணத்தினாலேயே, மிகவும் சிறப்பான பணியாளர் என்று நினைத்திருந்தார். தோழி விடுப்பில் இருந்த போது, அவர் செய்திருந்த மாட்யூல்களில் வந்த பூச்சிகளைப் பார்த்து அதிர்ந்து தம் யோசனையை மாற்றிக் கொள்ள வேண்டியதாகியது.

என்னைப் பொறுத்தவரை, இவற்றிற்கு உண்மையான மாற்றம் மேலாளர்களிடமிருந்தும், பிராஜக்ட் லீடர்களிடமிருந்தும் தான் வர வேண்டும். தன் உடன் பணியாற்றும் பணியாளர்களிடம், அலுவலக நேரத்திற்குப் பின்னரும் அலுவலகத்தில் இருப்பதும், பணியாற்றுவதும் தனக்கு ஒப்புமை இல்லாத விஷயம் என்றோ, குறைந்த பட்சம், "ஒன்பது மணி வரை வேண்டுமானாலும் வேலை செய், ஐந்து மணி வரை வேண்டுமானாலும் வேலை செய், எப்படிச் செய்தாலும் எனக்குக் கவலையில்லை. குறித்த காலத்தில் வேலை முடித்துக் கொடுத்தால் போதுமானது." என்ற எண்ணத்தையாவது தன் கீழ் வேலை செய்பவர் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

"ஒருவர் பன்னிரண்டு மணிவரை அலுவலகத்தில் இருக்கிறான் என்ற காரணத்துக்காக மட்டும் அவரை நான் பெரிய புத்திசாலியாக நினைக்கவில்லை" என்ற தோற்றத்தை ஒவ்வொரு பிராஜக்ட் லீடும் ஏற்படுத்தினாலே பிரச்சனையில் பாதி குறைந்து விடும்.

ஆனால், இன்றைய சூழ்நிலையில் இது நடப்பது மிகவும் கடினமான விஷயம். நிறுவன முதலாளியான நாராயண மூர்த்தியே, "நேரத்துக்கு வீட்டுக்குப் போங்கள்" என்று உரையாற்றினால் கூட அது ஏதோ பக்கத்து நிறுவனத்திற்கான விளக்கம் என்று நினைத்து உதறித் தள்ளிவிட்டு அலுவலகத்தில் அடைந்து கிடப்பவர்கள் ஏராளம்.

ஒரு பிராஜக்டின் தலைவர் அலுவலக நேரத்தில் அலுவலகம் வந்து, அந்த நேரத்திற்குள் வீட்டுக்குப் போனால், கீழுள்ளவர்களும் அதையே செய்வார்கள். ஆனால், இதுவும் பொதுவாக நடப்பதில்லை. இணையத்தில் மேய்வது, விளையாடுவது, மெயில் அனுப்புவது என்பதற்காவது, அலுவலகத்தில் இருக்கத் தான் இந்த நடுமேலாளர்களும் விரும்புகிறார்கள். அவர்கள் பெயர் மேலே நல்ல விதமாகப் போக வேண்டுமே!

ஆக போன வருடம் வேலைக்குச் சேர்ந்த புதிய இஞ்ஜினியருமாகட்டும், பல காலமாக தாமதமாக இரவு தாமதமாக வீட்டுக்குப் போகும் வழக்கத்தில் ஊறித் திளைத்தவர்களாகட்டும், இவர்களால் எந்த வகையிலும் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. ஓரளவுக்கு நம்பிக்கைக்குரியவர்களும், அதே சமயத்தில் வேலை பழகியவர்களுமான நடுமேலாளர்களின் கையில் தான் இந்தப் பிரச்சனைக்கான தீர்வு இருக்கிறது.

மூன்றிலிருந்து எட்டு வருட அனுபவம் உள்ள இந்த பிராஜக்ட் லீடர்கள், வேலை அதிகமில்லாத நாட்களில், நேரத்துக்கு வீட்டுக்குக் கிளம்புவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். 'வீட்டுக்குப் போய் என்னத்தச் செய்ய' என்று பேசாமல், ஏதாவது ஒரு ஆரோக்கியமான பொழுது போக்கை உருவாக்கிக் கொள்ளுதல் நலம். விளையாடுவது, புத்தகம் படிப்பது, சமைப்பது, இசைக்கருவிகள் கற்றுக் கொள்வது, புது மொழி கற்பது, உடற்பயிற்சி செய்வது என்று அவரவருக்கு விருப்பமான ஏதாவது ஒரு பொழுதுபோக்கு வகுப்புகளில் சேர்ந்து கொள்வது நலம். இதன்மூலம் ஒரு கமிட்மெண்ட் இருக்கும். எதிலாவது பிணைந்து கொண்ட எண்ணம் வரும். கமிட்மெண்ட்கள் இல்லாமல் இது போன்ற செயல்களை நாம் கண்டிப்பாகச் செய்ய மாட்டோம் என்பது உறுதி.

இது போன்ற வகுப்புகளில் தான் சேர்வது மட்டுமல்லாமல், தன் கீழ் வேலை செய்யும் அப்பிரண்டைஸ் இஞ்ஜினியர்களையும் இது போல் வேறு நல்ல ஆரோக்கியமான பொழுதுபோக்குகளில் பங்கெடுக்கத் தூண்டுவது நலம்.

ஓரளவுக்கு வேலை பழகிய, இனிமேல் அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்து தான் வேலை கற்க வேண்டும் என்ற அவசியம் இல்லாத புதியவர்களை வீட்டுக்கு அனுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும். கூடியவரை அவர்கள் இங்கே இருப்பதை நாம் ஒன்றும் பெரிய விஷயமாக மதிக்கவில்லை என்ற எண்ணத்தை அவர்களுக்கும் உருவாக்க வேண்டும்.

சில சமயம் அத்தனை முக்கியமில்லாத வேலையைக் கூட இந்த இளைஞர்கள் ஆர்வத்தால், அலுவலக நேரத்திற்குப் பின்னர் எடுத்து வந்து சந்தேகம் கேட்கலாம். பிராஜட் லீடர்களான அல்லது சீனியர் பிரோக்ராமர்களான நீங்கள், இது போன்ற நேரத்தில் உங்கள் இடத்தில் இல்லாமல் இருந்தால், தாமாகவே மறுநாள் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் அவர்களுக்கும் ஏற்படும். அப்படி இல்லாமல், நீங்கள் உங்களின் முக்கியமான வேலைக்காக அலுவலகத்தில் இருக்க நேரும் பட்சத்தில், கீழ் வேலை செய்பவர்களை ஊக்கப்படுத்தாமல், மறு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி மறுநாள் இந்த வேலைகளை மறக்காமல் சொல்லிக் கொடுக்கலாம். இதன் மூலம் அவர்கள் மாலைகளில் கண்டிப்பாக இருக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் வலுப்படும்.

நான் ப்ராடக்ட் நிறுவனத்தில் இருந்த நாட்களில் ஆறேழு மாதங்களுக்குப் பின்னர், கூடியவரை அனாவசியமாக அலுவலகத்தில் இருப்பதைத் தவிர்த்துவிட்டேன். வேலை நேரத்திற்குப் பிறகு ஒரு அரை மணி அல்லது ஒரு மணி நேரம் அதிகமாகச் செலவிடுவது வழக்கம் - ரிலாக்ஸாக பேசிக் கொண்டிருந்த அல்லது டேபிள் டென்னிஸ் விளையாடிய நேரங்களுக்காக மட்டுமே அந்தக் கூடுதல் அரை அல்லது ஒரு மணி. கூடியவரை எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து சமைக்கத் தொடங்கிவிடுவோம். அப்புறம் கொஞ்சம் படிப்பு, தூக்கம்.

இதனால் என்னுடைய முன்னேற்றத்தில் எந்த விதத்திலும் பாதிப்பு இருக்க வில்லை. Fast Track employeeஆகத் தான் என்னைக் கருதினார்கள், சீக்கிரமே பதவி உயர்வுகளும் வந்தன. அதே போல், என்னுடன் பணிபுரிய இரண்டு பேரை நியமித்த போதும், அவர்களின் முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே அதிக நேரம் அலுவலகத்தில் செலவிட நேர்ந்தது. தனக்கான வேலையைச் சரிவர கற்ற பின்னர், அவர்களையும் கூடியவரை உடற்பயிற்சிகளிலும், விளையாட்டிலும் நேரம் செலவழிக்கச் சொல்லியதுண்டு. ஒருவர் அப்படி என்னைப் போலவே வேலையைக் கொடுக்கப்பட்ட நேரத்தில் முடித்து வீட்டுக்குப் போவார். ஆனால், மற்றொருவர், சமைக்கச் சோம்பல் பட்டுக் கொண்டு, இரவும் சாப்பிட்டுவிட்டு, ஒன்பது மணிக்குத் தான் போவார். அப்படியும் மாலையில் வேலை என்று டென்சன் ஏற்றுவதில்லை; அவர் தான் இருக்கிறாரே என்று வேலைச் சுமையைக் கூட்டுவதுமில்லை. எஸ்டிமேட்டில் கறாராக இருப்பது வழக்கம்.

அடுத்து, பிராஜக்ட் நிறுவனங்களுக்கு வந்த போது தான் இந்த என்னுடைய ஒழுக்கத்தில் கொஞ்சம் பிரச்சனை வந்தது. "நாம் ஒன்று நினைக்க கோட் ஒன்று நினைக்கும்" என்பது புரியத் தொடங்கியது. சில பிராஜக்ட் மேனேஜர்கள் வேண்டுமென்றே எட்டு மணி நேரத்தில் முடியாது என்று தெரிந்தும் சில வேலைகளை எட்டு மணிநேரத்தில் முடிக்கச் சொல்லிப் பாடுபடுத்துவார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்களின் டார்கெட் அப்படிக் கறாராக நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

இந்த மாதிரி ப்ராஜக்ட் நிறுவனங்களை எதிர்கொள்வது, வேறு வகையில் இருக்க வேண்டும். ஒன்றிரண்டு நாள் அவர்கள் கேட்டபடியே எட்டு மணிக்கு மேல் இருந்து முடித்துக் கொடுத்துவிட வேண்டும். ஆனால், கேட்டவுடன், 'அதான் எனக்குத் தெரியுமே' என்று ஒப்புக் கொள்ளாமல், கூடியவரை உங்களுக்கான அன்றைய வேலைகளில் எவை எவை கெட்டுப் போச்சு என்று வெளியே, பேச்சுவாக்கிலாவது சொல்ல வேண்டும்.

அப்புறம், எட்டு மணிக்கு மேல் இருந்து வேலை முடிக்கும் நாட்களில், இரவு உணவுக்கான பில், இரவு அத்தனை நேரத்திற்கு மேல் வீடு போக ஆன செலவு போன்றவற்றைக் கேட்டுப் பெற்றுவிட வேண்டும். இரவு ஷிப்டில் வேலை செய்யக் கூட கம்பனி பாலிசிகளில் ஏதாவது நஷ்ட ஈடு (compensation) தருவார்கள். அதையும் கண்டிப்பாகத் தேடித் துருவி வாங்கிவிடுவது நல்லது. - இந்தப் பணம் கண்டிப்பாக இருநூறு முன்னூறு ரூபாய்க்கு மேல் வராது. ஆனால், பணம் என்ற விஷயத்திற்காக அல்லாது, இது போல் தவறாக எஸ்டிமேட் செய்வது, அதிக நேரம் தங்க வைப்பது போன்ற நிகழ்வுகளுக்கான நமது எதிர்ப்பாக இது பதிவாகும். அப்படிச் செய்வதன் மூலம், ப்ராஜக்ட்டுக்கான செலவைக் குறைக்கவென்றே குறைந்த எஸ்டிமேட் போட்டதும் வெற்றியடையாது. 'இது சரியான குறுக்கு வழி அல்ல' என்பதை நிர்வாகம் உணரவும் ஒரு வாய்ப்பாகும்.

ஆனால், இதையெல்லாம் செய்வதாக இருந்தால், கூடியவரை அலுவலகத்தில் சொந்த வேலையாக அதிக நேரம் கழிப்பதைக் குறைத்துக் கொள்ளுதல் நலம். பெஞ்சைத் தேய்க்கும் நாட்களிலும், வேலை நாட்களில் வெகு சில நாட்களிலும் தாமதமாகத் தங்கி மட்டுமே சொந்த வேலை பார்த்தால், பின்னாளில் அதிக நேரம் தங்குவது நமக்கே ஒரு அனாவசியமான விசயமாகத் தெரிந்துவிடும்.

இவற்றை எல்லாம் செய்வதற்கு ஆதாரமான ஒரு விசயம் உண்டு - அது ஒற்றுமை. ஒரு டீமில் இருக்கும் ஐந்து பேரில் இரண்டு பேருக்கு மட்டும் வீட்டுக்குச் சீக்கிரம் போக வேண்டும் என்று எண்ணம் இருந்தால், மற்ற மூன்று பேர் தான் அதிக நேரம் தங்குவதைப் பெரிய விஷயமாகக் காட்டிக் கொள்ள வாய்ப்பாகிவிடும். மற்ற மூன்று பேரும் கூட ஒத்துழைத்தால், கண்டிப்பாக நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்துவிடலாம்.

இப்படிச் சொன்னாலும், அலுவலகத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒருவர் என்ன வேலை செய்கிறார், எப்படி நேரத்தைச் செலவிடுகிறார் என்ற விஷயம் நல்ல மேலாளருக்குத் தெரிந்து தான் இருக்கிறது. டெக்னிகலாக எதுவும் தெரியாதவர், என்று பொதுவாக மேலாளர்களைக் கிண்டலுக்குச் சொன்னாலும், [ஜி.ரா மன்னிக்க :-D ] இது போன்ற விசயங்களை அவர்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே அதிகம் கவலைப் பட வேண்டியதில்லை.


பாலாஜி, உங்கள் பிரச்சனை பொறுத்தவரை, ஒன்பது மணிவரை அலுவலகத்தில் சுற்றுபவர் என்று ஏற்கனவே ஏற்படுத்திவிட்ட பிம்பத்தை நீங்களே தான் பேசி முறிக்க வேண்டும். அடுத்தமுறை நேரங்கணிக்கும் போதாவது, அலுவலக நேரத்தை மட்டும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதை உங்கள் தற்போதைய மேலாளரிடம் சொல்லுங்கள். அவர் கண்டிப்பாகப் புரிந்து கொள்வார். அதே சமயம், இந்தக் காரணத்திற்காக பிராஜக்ட் மாற்றிக் கொண்டே இருந்தால், எங்குமே நிம்மதி கிடைக்காது. பேசுவது ஒன்றே சிறந்த வழி..

30 comments:

Venki said...

neenga sonna ellam sari. ana Table Tennis appadinnu naduvula edho sonneengale, Adha than thaanga mudiyalai.. :-)

வெட்டிப்பயல் said...

//
பாலாஜி, உங்கள் பிரச்சனை பொறுத்தவரை, ஒன்பது மணிவரை அலுவலகத்தில் சுற்றுபவர் என்று ஏற்கனவே ஏற்படுத்திவிட்ட பிம்பத்தை நீங்களே தான் பேசி முறிக்க வேண்டும். அடுத்தமுறை நேரங்கணிக்கும் போதாவது, அலுவலக நேரத்தை மட்டும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதை உங்கள் தற்போதைய மேலாளரிடம் சொல்லுங்கள். அவர் கண்டிப்பாகப் புரிந்து கொள்வார். அதே சமயம், இந்தக் காரணத்திற்காக பிராஜக்ட் மாற்றிக் கொண்டே இருந்தால், எங்குமே நிம்மதி கிடைக்காது. பேசுவது ஒன்றே சிறந்த வழி..//

அக்கா,
நான் தான் ஏற்கனவே பேசி ஒரு வழியா வேற இடத்துக்கு வந்து சேர்ந்துட்டனே. நான் கேக்கறது அந்த மாதிரி கஷ்டப்படற ஒரு கூட்டத்துக்கு தான்.

ரொம்ப நேரம் ஆபிஸ்ல இருக்கறது இப்ப என்னால நிச்சயம் முடியாத ஒரு விஷயம். இந்தியா வந்தாலும் தேவையில்லாம இருக்க சொன்னா நிச்சயம் முடியாதுனு சொல்ல முடியும்.

க்ளைண்ட் இண்ட்ராக்ஷன் எல்லாம் பண்ணியாச்சி... இனிமே இங்க வொர்க் கல்ட்ச்சர் எப்படினு நல்லா தெரிஞ்சி போச்சி. அதனால சுலபமா பேசி சமாளிச்சிடலாம்.

வெட்டிப்பயல் said...

ரொம்ப நல்லா யோசிச்சி போட்டிருக்கீங்க...

இதை நிறைய பேருக்கு ஃபார்வேர்ட் பண்ணலாம்...

பொன்ஸ்~~Poorna said...

நன்றி பாலாஜி :)

உங்க பதிவே எனக்கு பார்வேர்ட்ல தான் வந்தது.. அப்படித் தான் பார்த்தேன் :) அந்தச் சமயத்தில் ஊரில் இல்லாததால் மிஸ் பண்ணிட்டேன் :-)

வெட்டிப்பயல் said...

//பொன்ஸ் said...

நன்றி பாலாஜி :)

உங்க பதிவே எனக்கு பார்வேர்ட்ல தான் வந்தது.. அப்படித் தான் பார்த்தேன் :) அந்தச் சமயத்தில் ஊரில் இல்லாததால் மிஸ் பண்ணிட்டேன் :-) //

அக்கா,
நான் அதை எல்லாம் ஃபார்வேர்ட் பண்ணல...

எனக்கு கவலை என்னனா, அந்த ஓசி இண்டர் நெட்டையும், போனையும் தூக்கி போட்டு ஒரு மியூசிக் இன்ஸ்ட்ருமெண்ட் கத்துக்கறதையோ, ஒரு புக் படிக்கறதையோ, புது மொழி கத்துக்கறதையோ இல்லை ஜிம் போறதையோ நாம் ஏன் பழகிக்க மாட்றோம்னு ஒரு வருத்தம்.

நீங்க சொன்ன காரணத்திற்காகத்தான் நானும் முதல்ல உக்கார்ந்திருந்தேன். ஆனா போகனும்னு நினைக்கும் போது முடியாம போயிடுச்சி...

ஆனா ஜிம் மட்டும் கடைசியா ஒரு ஆறு மாசம் போக முடிஞ்சிது. புது ப்ராஜக்ட் வந்ததுக்கப்பறம்...

பொன்ஸ்~~Poorna said...

பாலாஜி,
நீங்க பண்ணலைப்பா, நம்ம பதிவையெல்லாம் அதே ஓசி இண்டெர்னெட்டில் படிச்சி அனுப்ப நிறைய பேர் இருக்காங்க போலிருக்கு :))))))))

உங்க ஆதங்கம் நியாயமானது. அதுக்குத் தான் சொன்னேன். சும்மா தீர்மானம் மட்டும் செய்தால், நம்ம அதை எல்லாம் செயல் படுத்த மாட்டோம். பணம் கொடுத்து ஏதும் கோர்ஸில் சேர்ந்துவிட்டால், "அச்சிச்சோ, பணம் கட்டிட்டோமேன்னு" அதுவே ஒரு உந்துதல் ஆகிடும். அத்தோட, கூட யாரும் நண்பர்களைச் சேர்த்துக்கிடறது நல்லது :)

G.Ragavan said...

நல்ல பதிவு பொன்ஸ்.

// இப்படிச் சொன்னாலும், அலுவலகத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒருவர் என்ன வேலை செய்கிறார், எப்படி நேரத்தைச் செலவிடுகிறார் என்ற விஷயம் நல்ல மேலாளருக்குத் தெரிந்து தான் இருக்கிறது. டெக்னிகலாக எதுவும் தெரியாதவர், என்று பொதுவாக மேலாளர்களைக் கிண்டலுக்குச் சொன்னாலும், [ஜி.ரா மன்னிக்க :-D ] இது போன்ற விசயங்களை அவர்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே அதிகம் கவலைப் பட வேண்டியதில்லை. //

நிச்சயமாக. மறுக்க முடியாத உண்மை. என்னதான் ஒருவர் நீண்ட நேரம் அலுவலகத்தில் இருந்தாலும் அவர் வேலை செய்கின்றாரா இல்லையா என்பதை மிகவும் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். ஸ்கேலை வைத்து அளந்து மதிப்பெண் கொடுக்கும் ஆசிரியர்களைப் போல சில மேனேஜர்கள் நேரத்தைப் பார்த்து கணக்கிடுவதும் உண்டு. சமயங்களில் இஞ்சினியர்களும் ஏமாற்றுவது உண்டு. நானே செய்திருக்கிறேன். நான் இஞ்சினியராக இருந்த சமயம். ஒரு புராஜெக்ட். டெலிகாம் நெட்வொர்க்கிங்கில். மூன்று பேர் டீம். டீம் லீட் கிடையாது. design, coding and testing தான் வேலை. நேரடியாக மேனேஜரிடம் சொல்வோம். அப்பொழுது இதைச் செய்ய எவ்வளவு நேரமாகும் என்று கேட்பார்.
முதலாள் : என்னோட மாட்யூல் ரொம்பப் பெரிய மாட்யூல். ஆனா logic complexity ரொம்பக் குறைவு. அதுனால இதுக்கு இவ்வளவு நாளாகும்.

மேனேஜர் : அப்படியா. சரி. அடுத்து உனக்கு.

ரெண்டாவதாள் : என்னோடது சின்ன மாட்யூல். ஆனா very complex. அதுனால இதுக்கு இவ்வளவு நாளாகும்.

மேனேஜர் : அப்படியா. சரி. அடுத்து உனக்கு.

மூனாவது ஆள் : என்னோட medium size and medium complexity. அதுனால இவ்வளவு நாளாகும்.

மேனேஜர் : அப்படியா. சரி.

கடைசியில் மூன்று பேரும் ரொம்ப நாள் வாங்கியிருப்போம். இது இஞ்சினியர்கள் பக்கமும் நடக்கிறது. மறுக்க முடியாதது.

செந்தழல் ரவி said...

பொன்ஸ், வெட்டிப்பயல் பிளிறினதுக்கு நல்லா பதில் பிளிறல் செஞ்சுருக்கீங்க...

ஜீரா கூட நல்லா பிளிறினார்...

நானும் பிளிறவா ?

தேவ் | Dev said...

//Venki said...
neenga sonna ellam sari. ana Table Tennis appadinnu naduvula edho sonneengale, Adha than thaanga mudiyalai.. :-) //

Ithukkum pons akka ethaavathu piliri irrukaalaam :)

சுந்தர் / Sundar said...

தமிழ் படிக்க தெரிந்த சாப்ட்வர் பொறியாளற்களுக்கு சமர்பணம்

பொன்ஸ்~~Poorna said...

வெங்கி, ஹி ஹி :)

ஜிரா, ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள் என்றாலும் அந்த மேனேஜர் இன்னும் கொஞ்ச நாளில் இதையும் கற்றுக் கொண்டு உஷாராகி விடுவார். அவ்வளவு தான் :)

ரவி, அதான் பிளிறியாச்சே! :)

தேவ் அண்ணே, சொல்லிட்டமுங்கோ.. :)

சுந்தர், நீங்களே சமர்ப்பிச்சிட்டீங்களா! :)

மனதின் ஓசை said...

நல்ல பதிவு..
எனக்கு தெரிந்தவரை அதிக நேரம் இருப்பவரை வேலை அதிகம் செய்பவர் என பொதுவாக எந்த மேனேஜரும் நினைப்பதில்லை. இது இளம்பொரியாளர்கள் தாமாகவே உறுவாக்கிக்கொள்ளும் ஒரு தவறான நம்பிக்கை.. அதே சமயத்தில்
//"ஒருவர் பன்னிரண்டு மணிவரை அலுவலகத்தில் இருக்கிறான் என்ற காரணத்துக்காக மட்டும் அவரை நான் பெரிய புத்திசாலியாக நினைக்கவில்லை" என்ற தோற்றத்தை // யாரும் ஏற்படுத்துவது இல்லை. பொதுவாகவே தன் கீழ் பணிபுரிபவர்களை சுதந்திரமாக இருக்கவே விடுகின்றனர். அதனாலேயே அவர்கள் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவதில்லை.. அவர்கள் எவ்வளவு நேரம் இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனித்தாலும் அதில் தலையிடுவதில்லை.

ஆனால், தேவை படும்போது அதனை பயன்படுத்த (வேல இருக்கு.. கொஞ்சம் இருந்து முடிச்சிட்டு போ.) அவர்கள் தவறுவது இல்லை. அந்த நேரத்தில் அதிக நேரம் அலுவலகத்தில் இருப்பவர்கள் சீக்கிரம் செல்ல வேண்டும் என சொல்ல இயலாமல் போகிறது.

இன்னும் கொஞ்சம் விரிவாக பேச வேண்டும்.. சீக்கிரம் மறுபடியும் வருகிறேன்.. :-)

யோசிப்பவர் said...

//என்னைப் பொறுத்தவரை, இவற்றிற்கு உண்மையான மாற்றம் மேலாளர்களிடமிருந்தும், பிராஜக்ட் லீடர்களிடமிருந்தும் தான் வர வேண்டும். தன் உடன் பணியாற்றும் பணியாளர்களிடம், அலுவலக நேரத்திற்குப் பின்னரும் அலுவலகத்தில் இருப்பதும், பணியாற்றுவதும் தனக்கு ஒப்புமை இல்லாத விஷயம் என்றோ, குறைந்த பட்சம், "ஒன்பது மணி வரை வேண்டுமானாலும் வேலை செய், ஐந்து மணி வரை வேண்டுமானாலும் வேலை செய், எப்படிச் செய்தாலும் எனக்குக் கவலையில்லை. குறித்த காலத்தில் வேலை முடித்துக் கொடுத்தால் போதுமானது." என்ற எண்ணத்தையாவது தன் கீழ் வேலை செய்பவர் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.//

இது நடக்கும் என்று எதிர்பார்ப்பதற்க்கில்லை.

//அது ஏதோ பக்கத்து நிறுவனத்திற்கான விளக்கம் என்று நினைத்து உதறித் தள்ளிவிட்டு அலுவலகத்தில் அடைந்து கிடப்பவர்கள் ஏராளம்.
//
இது ஒரு அடிமைத்தனமான செயல் என்பதை, ஏனோ நம்மில் பலர் உணரக்கூட இல்லை.

அடுத்த புரட்சி IT உலகில் வெடித்தாலொழிய, இதற்கு தீர்வு காண்பது கடினம் என்பது எனது எண்ணம். ஆனால், அத்தகைய புரட்சி இதுவரை IT உலகில் வெடிக்காமலிருப்பதற்கு, இதில் கிடைக்கும் பெரும் சம்பளமும், வேலை பாதுகாப்பின்மையும் முக்கிய காரணங்கள்

ப்ரியன் said...

இதை அப்படியே வெட்டி எல்லா மேலாளர்களுக்கும் அனுப்பலாம்.

ப்ரியன் said...

உண்மையில் Developer ஆக இருக்கும்போது தன் TL PL பற்றி புலம்பும் ஆதே மக்கள் Team Lead ஆகவோ Project Leader ஆகவோ வரும்போது அவர்களும் அவர்கள் வெறுத்த அவர்களின் முந்தைய அதிகாரிகள் போலவே நடந்துக் கொள்கிறார்கள் என்பது கண்கூடாக காணும் உண்மை...அது ஏன் என்று தெரியவில்லை...

Appaavi said...

//இதை நிறைய பேருக்கு ஃபார்வேர்ட் பண்ணலாம்... //

ரிப்பீட்டு!

oagai said...

கவுத்திட்டிங்களே பொன்னம்மா.

// 3. அந்த நடராஜன் மட்டும் ராத்திரி எட்டு மணி வரை இருந்து மேனேஜர் கிட்ட நல்ல பேர் எடுக்கிறான். நானும் இல்லைன்னா என்னை மானேஜருக்குத் தெரியவே தெரியாம போயிடும்.//

எந்த நடராஜன்?

வன்மையாக கண்டிக்கிறேன்.

எனக்கு ஆறு மணிக்குமேல் அலுவலகத்தில் இருந்தால் ஆவறதில்லை.

நடராஜன் என்ற பெயரில் இருக்கும் வெறுப்பை தயவு செய்து நீக்கி விடவும். பொன்னப்பன் என்ற பெயரை உபயோகிக்கலாம்.

பொன்ஸ்~~Poorna said...

// வன்மையாக கண்டிக்கிறேன். //
:))

//நடராஜன் என்ற பெயரில் இருக்கும் வெறுப்பை //
இது ஓவர்.. தமிழைத் திட்டாதீங்கன்னு சொன்னா ஒத்துக்கலாம்.. தமிழ்னா ஒரே தமிழ் தான். நடராஜன்கள் எத்தனை நடராஜன்களோ.. இப்படி உங்களைச் சொல்வதா நினைச்சா நான் என்ன செய்ய? :)

சொல்லப் போனால், நீங்க இங்க வந்து கண்டனக் குரல் கொடுக்கிற வரை, உங்களை ஓகைன்னு தான் நினைக்க முடியுது. நடராஜன் ஸ்ரீநிவாசன்ங்கிறது தான் உங்க பெயர் என்கிறதே மறந்தாச்சு :)

இரா.நடராசனின் தூயமொழியில் துயரக் குழந்தைகள் கதைத் தொகுப்பு படிச்சிகிட்டிருக்கேன்.. அதுல நடராசன்கள் கிளப்னு ஒரு கதையில் வருது. அதாவது தமிழ்நாட்டில் உள்ள நடராசன்கள் எல்லாரும் ஒரு சங்கம் தொடங்கறாங்க என்பது போல் வரும்.. அதைப் படித்த கொஞ்ச நாளில் எழுதுவதால் இங்கும் வந்திருக்கும்.. :) கிடைத்தால் படித்து பாருங்க :)

கானா பிரபா said...

ஏதோ தனிநபர் தாக்குதல் என்று தலைப்பைப் பார்த்து முடிவுசெய்து யானைக்கட்டுப் பக்க வராமல் இருந்துவிட்டேன். இப்ப தான் பார்த்தேன், நல்ல அட்வைஸ்.

வெட்டி

இதை வாசித்தும் திருந்தலைன்னா நோ சான்ஸ் ;-)

oagai said...

// சொல்லப் போனால், நீங்க இங்க வந்து கண்டனக் குரல் கொடுக்கிற வரை, உங்களை ஓகைன்னு தான் நினைக்க முடியுது. நடராஜன் ஸ்ரீநிவாசன்ங்கிறது தான் உங்க பெயர் என்கிறதே மறந்தாச்சு //

அப்ப்டீன்னா சரி.

(என்ன எழுதறதுன்னு தெரியலைங்க! மென்பொருளாரைப் பார்த்தா பாவமா இருக்கு. என் பெயரைப் பாத்ததும் கலாய்க்கலாம்னு பாஞ்சிட்டேன்.)

Sridhar Venkat said...

பொன்ஸ்... நல்ல பதிவு. நான் சார்ந்து இருக்கும் துறை என்பதாலும், இப்படி அதிக நேரம் வேலை செய்த அனுபவத்திலும் ஒரு சின்ன மறுபக்கம் மட்டும் சொல்ல ஆசை.

- பொதுவாக professional services துறைகளில் இருப்பவர்கள் வாரத்திற்கு 60 முதல் 80 மணி நேரங்கள் வேலை செய்கிறார்கள். இது கணிணி துறை மட்டுமல்ல, வைத்தியர்கள் / வக்கீல்கள் போன்ற எல்லா துறையினரும் அடக்கம்.

- CEO / VP போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் 60-80 மணி நேரங்கள் உழைக்கிறார்கள். Wipro President அசீம் பிரேம்ஜி வாரம் 80 மணி நேரங்கள் பதிவு செய்கிறார். ஆம். He records his time meticulosly even at this age.

- இப்பொழுது மென்பொருள் எழுதுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அது கொஞ்ச காலத்திற்குதான். அவர்கள் அதற்குள் தங்கள் மதிப்பை கூட்டி கொள்ள வேண்டும். Team co-ordination, Risk mitigation, value-based communication போன்று திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

- நாம் சுகமாக வாழ்வதும் / கஷ்டபடுவதும் நம் கையில். Learn to Say 'No'.

- சுமார் 60-80 சதவிகிதம் வரை கணிணி ப்ராஜக்டுகள் தோல்வியில் முடிகின்றன (projet failures, over-budget, project cancellation). கட்டுமான துறயில் இதே சதவிகிதம் 20-க்கும் குறைவு. பொதுவான காரணம் ill-processed execution.

- வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஆனால் திறமையாளர்கள் மிக குறைவு. வேலை செய்ய தெரிந்தவர்களுக்கே மென்மேலும் வேலை கொடுப்பது போன்ற முறைகள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்.

வெட்டிப்பயல் said...

//வெட்டி

இதை வாசித்தும் திருந்தலைன்னா நோ சான்ஸ் ;-)//

கானா,
என்னையவா திருந்த சொல்றீங்க???
நான் மாறி பல நாளாச்சி ;)

இது இந்தியால இருக்கற மக்களுக்கு தான் அதிகமா பொருந்தும் :-)

பொன்ஸ்~~Poorna said...

மனதினோசை, இன்னும் கொஞ்சம் எழுதுங்க..

யோசி, ஐடி புரட்சியா? ஏ யப்பா.. நானெல்லாம் பயந்த பொண்ணு.. இதெல்லாம் இங்க வேணாம் :-D

ப்ரியன், நீங்க சொல்வதும் உண்மை. இது எல்லா இடத்திலும் நடப்பது தான் - உறவுகளில் கூட

அப்பாவி, நன்றி :)

பிரபா,
இதெல்லாம் வெட்டிக்கு இல்லீங்க! அவருக்குத் தெரிஞ்ச பிரச்சனை, எனக்குத் தெரிஞ்ச சொல்யூஷன் :)

ஸ்ரீதர்,
//Learn to Say 'No'.// இதுதாங்க மேட்டர்.. அப்புறம், உங்களைக் காண்டாக்ட் செய்யணும்னா எப்படிங்க? போன வெட்டியாய்ச் சுட்டவை பதிவில் நீங்க போட்டு நான் பிரசுரிக்காத பின்னூட்டத்துக்கு ஒரு நன்றி சொல்லணும்னு பார்த்தேன் முடியலை :(. உங்க பதிவுலயும் பின்னூட்டத்துக்கு வழியில்லாம வச்சிருக்கீங்க..

வெட்டி,
உங்க புண்ணியத்துல 20 பின்னூட்டமாகிடுச்சு.. உங்க பேருக்கு ஒரு மவுசு தான் :))))))

பொன்ஸ்~~Poorna said...

//என் பெயரைப் பாத்ததும் கலாய்க்கலாம்னு பாஞ்சிட்டேன்//
ஹி ஹி.. நல்லாத் தான் இருந்தது :) ஜாலியாத் தான் பதில் போட்டேன்..

முடிஞ்சா "ஒரு தூயமொழியின் துயரக் குழந்தைகள்" வாசிங்க :)

Sridhar Venkat said...

//நீங்க போட்டு நான் பிரசுரிக்காத பின்னூட்டத்துக்கு//

ஐயோ.... பிரசுரிக்க முடியாதபடிக்கா இருந்தது அந்த பின்னூட்டம்? யாராவது கேட்டா தப்பா நினைக்கப் போறாங்க :-))

Anonymous said...

I apologiz for posting this in English since I dont have Tamil editor.

All,

i agree your point that some managers/leads are asking their their team members to stay late. But how do we mitigate that.

Here are some of the suggestion.
1) If anyone is asking to complete this work then immediately dont commit yourself and tell I will finish it before EOD
2) Tell your lead/manager that I will find out what is the effort required to complete this work.
3) If anyother work you are working will get impactd because of new assignment tell him very frankly.

4) use mail communication to inform your boss like this. ( Currently working on this assignment and it needs to be completed by next wednesday and if the new assignment comes then my current assignment will get impacted and I would able to close it by Friday instead of Wednesday). Ask him which one needs to be prioritized.

Our people never complain this and they will take up both the work and stay long hours to complete that work.

5) If you need anyhelp technically / functionally tell him i am not well versed in this and I need help /support on this. There is no wrong in saying that.Here most people doesnt know what is the role of the manager.
1) he is the coordinate between team member
2) He need to provide all the technical / functional support to their team member. If he doesnt know anything , then he need to arrange the training session.here is What I follow in my team.

Whenever I assign any work to any of my team member I will tell him " this work may require 30 hrs to complete and find out how comfortable you are taking up this job and if yes provide your estimation to complete this job".
a) If the person agrees to work, ask him to provide 20% buffer time of the new assignment.
b) If the person says "no" due to another assignment he is currently engaged, then I will report to my manager/ client stating which one we need to give priority and based on this we will take up this job.

Here the problem comes here is our leads/manager are hesistant to tell this fact to management / client and they commit all the work and developers will be facing this problem. Never decide yourself and leave it to manager / client to decide on this one.


Finally if the Project Manager / Lead is good and if the team is overloaded with work then he will push it back all the work or it needs to come in the queue. This way he will sustain the teams growth in the organisation otherwise after 6 months/ 1 year developer will be moving from one company to another company.

Belive me in the last 2 year not even a single team member moved out of my team. I am managing a team of 10 people.
- Ananda

குழலி / Kuzhali said...

//ரொம்ப நேரம் ஆபிஸ்ல இருக்கறது இப்ப என்னால நிச்சயம் முடியாத ஒரு விஷயம்.//
என்னப்பா வெட்டிப்பயல் சமீபத்தில் கல்யாணம் ஆயிடுச்சா?

பொன்ஸ்~~Poorna said...

ஆனந்த்,
நீளமான பின்னூட்டத்துக்கு நன்றி :) எந்த கம்பனிங்க உங்களது? எனக்கு ஒரு இடம் காலி இருக்குமா உங்க டீமில்? :-D

வெட்டிப்பயல் said...

//குழலி / Kuzhali said...

//ரொம்ப நேரம் ஆபிஸ்ல இருக்கறது இப்ப என்னால நிச்சயம் முடியாத ஒரு விஷயம்.//
என்னப்பா வெட்டிப்பயல் சமீபத்தில் கல்யாணம் ஆயிடுச்சா? //

நம்ம ப்ளாக் பக்கமே வரதில்லைனு நல்லா தெரியுது... அத இப்படி பப்ளிக்கா சொல்லி மானத்த வாங்கனுமா???

நாங்க இன்னும் யூத்தான் :-)))

(24 வயசு ரொம்ப கம்மியா தெரியலையா???)

பதிவை பாராட்டுபவன் said...

நல்ல பதிவு, உறக்கத்திலிருந்து எழுந்தாலும் மீண்டும் அதே நல்ல கருத்துக்களை முன்வைக்கிறது.

இண்டியன் ஆண்சைட் அனானி