Showing posts with label வாசன். Show all posts
Showing posts with label வாசன். Show all posts

Thursday, February 19, 2015

கதை கதையாம்

கதை சொல்லுவது, கேட்பது எல்லாம் ஒரு வருடமாக வாசனுக்கு ரொம்ப பிடிக்கிறது. அவனுடைய இரண்டாவது பிறந்த நாளின் போது ஒரு கதை சொல்லுவான் ;

அப்பா ; பகி மாமா என்ன கார் வச்சிருக்காங்க?
வாசன்; பி.எம் டபிள்யூ கார்
அப்பா; என்ன கலர்?
வாசன் ; க்ரே
அப்பா; ப்ரீவேல எப்படி ஓட்டுவாரு?
வாசன்; டுர்ரர்ரர்ர
அப்பா; வீட்டுக்கு வந்து என்ன பண்ணுவார்?
வாசன்; கராஜ் ஓபன் பண்ணி கதவுகிட்ட வந்து knock knock பண்ணுவாரு. கதை இப்படிப் போகும். ஆனால் கேள்விகளைக் கேட்காமல் இருந்தால், பதிலும் வராது. பிறந்தநாளுக்காக வந்திருந்த அவன் பெரியப்பா வாசனைச் சமாதானப்படுத்துவதற்காக, அவனிடம் அதே மாதிரி கதைச் சொல்லத் தொடங்கினார். கேள்விகளைக் கொஞ்சம் மாற்றிக் கேட்டுவிட்டார் (வரிசை மாற்றி, அப்புறம் மேலும் சில ஆங்கிலச் சொல் கலந்து என்று மிக மெல்லிய மாற்றம்). அத்தோடு வாசன் ம்கூம், கதை அப்பா தான் சொல்லணும் என்று ஓடிவிட்டான்...

இப்படி நாம் என்ன கதை சொன்னாலும் கொஞ்ச கொஞ்சமாக பதில் சொல்லத் தொடங்கினான். தானே சொல்லவும் தொடங்கினான். எங்காவது போனால் வந்தால், அதைக் கூட சொல்லுவான். ஒருதரம், அவனைச் சாப்பிடக் கூப்பிட்டேன், வந்து சாப்பிட்டான். அதைப் பற்றி, 'அம்மா என்ன சொன்னா, வாசன், சாப்பிட வான்னு சொன்னா, வாசன் என்ன பண்ணான், உடனே ட்ரக்க வச்சிட்டு வந்துட்டான். குட் ஜாப்னு சொன்னா அம்மா. அதான் கதை' - இது போன்ற பல்லாயிரக்கணக்கான கதைகளைக் கேட்டிருக்கிறேன்.

போன வாரம் குளித்து விடும்போது (3 வயது), முதன் முறையாக, சொந்த கதை வசனத்துடன் ஒரு கதை சொன்னான் - குளிக்கும் அறையில் இருக்கும் பொம்மைகளைப் பற்றி. வாத்து என்ன பண்ணித்து, வந்து தண்ணிக்குள்ள எட்டிப் பார்த்துது. பபிள், பபிளா (நுரை நுரையா) இருந்தது, வாத்துக்கு ரொம்ப பயம் வந்துடுத்து. அது உடனே கப்புல ஏறிண்டுடுச்சு. வாசன் மெல்ல தண்ணிய ஆட்டினான். பபிள் உடைஞ்சு போய்டுத்து, வாத்து வெளில வந்து தண்ணில ஸ்விம் பண்ணித்து. அதான் கதை'

'எப்படா இதெல்லாம் நடந்துது?'

'இதோ இப்ப தான்!'

Sunday, November 30, 2014

பாகவதர் வாசன்

வாசனுக்கு ஒரு சில பாடல்கள் நன்றாக பாடத் தெரியும். ஆனால் 'குறை ஒன்றும் இல்லை' அதில் கிடையாது. அடிக்கடி அந்தப் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்பான். நானும் பாடுவேன். அவ்வளவு தான். இந்தியா போய் முதல் நாள், நான் குகனைத் தூங்க வைக்க முயன்று கொண்டிருக்கும்போது, இவன் இந்தப் பாடலை முழுமையாக பாடிக் காட்டி இருக்கிறான். அடுத்த நாள் காலை காபி குடிக்க அனைவரும் டேபிள் அருகில் குழுமி இருக்கும்போது, அவன் பாட்டியும், கொள்ளுப் பாட்டியும், இது மாதிரி பாடினான் என்று சொன்னார்கள். எனக்கு ரொம்ப ஆச்சரியம்.

'எங்க வாசன், நான் கேட்கவே இல்லையே! பாடு பார்க்கலாம்' என்றேன். கொஞ்சம் தாஜா, கொஞ்சம் தூண்டுதல் என்று பாடத் தொடங்கினான். பல்லவி மட்டும் பாடுவான் என்று நான் பார்த்துக் கொண்டிருக்கையில் எல்லா சரணமும் பாடி முடித்து விட்டான்! எனக்கு ரொம்ப ஆச்சரியம். எல்லாரும் கடைசி வரை முடியும் போதில் கைதட்டவும், வாசன் தானும் கைதட்டிக் கொண்டான். தட்டிவிட்டு, 'குட் ஜாப் வாசன்' என்றான். நாங்கள் எல்லாரும் ஆமா வாசன் குட் ஜாப் என்றோம்.

பின்னர் 'ஷவர்! ' என்றான் .. முதலில் எங்களுக்குப் புரியவில்லை. பின்னர் தான் புரிந்தது, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மாதிரி ஷவர் பண்ணச் சொல்கிறார் என்று! உடனே ப்ரிஜிலிருந்து சாக்லெட் எடுத்து அவன் பாட்டி நிஜமாகவே ஷவர் செய்ய, அண்ணனும் தம்பியும் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினர்.

அப்புறத்திலிருந்து தம்பி தூங்க வேண்டும் என்றால், அண்ணனே பாடிக் கொள்கிறான். நமக்குத் தொல்லை விட்டது பாருங்க ;-)


Saturday, May 31, 2014

சி தண்ணி

வாசனுக்குத் தோட்ட‍த்தில் போய் செடிக்குத் தண்ணீர் விடுவது என்றால் ரொம்ப பிடிக்கும். இப்போதெல்லாம், பெரியவர்கள் இல்லாமலே தானே போய் ஒவ்வொரு செடியாக பார்த்து பார்த்து தண்ணீர் விடவும் பழகி விட்டான். நல்ல‍வேளையாக பின் கதவு மட்டும் திறக்க‍வரவில்லை. அதனால் எங்களிடம் கேட்டுக் கொண்டு போவான்.

YouTube-இல், 'Do you like broccoli? Yes I do". என்று ஒரு பாட்டு வரும். அது இவனுக்கு மிகவும் பிடித்துப் போனதால், எங்களுக்குத் தேவையான விஷயங்களுக்கு அதைப் பயன் படுத்துவோம்.

அன்று ரொம்ப வெயில். மாலை நாலரை மணிக்கு மொட்டை வெயில். இந்த வெயிலில் வெளியில் போய் தண்ணீர் விட வேண்டாம் என்று அவனை வேறு ஏதாவது மாற்றி விடலாம் என்று அவனுக்கு மிகவும் பிடித்த‍ பொரி வறுத்து வைத்திருந்தது.

வாசன் எதிர் பார்த்தது போலவே தூங்கி எழுந்து வந்தவுடன் வெளியில் போக அடம்பிடித்தான். நாங்கள் 'Do you like பொரி" என்று வழக்க‍ம் போல பாடினோம். வழக்க‍மாக 'Yes" என்றோ "no" என்றோ சொல்லி, அதற்கேற்றாற் போல பாட்டையும் பாடும் பிள்ளை, பதிலுக்கு 'Do you like சி தண்ணி" என்றது... அப்புறம் அப்பீல் ஏது ? கதவைத் திறந்து வெளியேறி தண்ணீர் விடப் போய்விட்டேன்....