Thursday, February 19, 2015

கதை கதையாம்

கதை சொல்லுவது, கேட்பது எல்லாம் ஒரு வருடமாக வாசனுக்கு ரொம்ப பிடிக்கிறது. அவனுடைய இரண்டாவது பிறந்த நாளின் போது ஒரு கதை சொல்லுவான் ;

அப்பா ; பகி மாமா என்ன கார் வச்சிருக்காங்க?
வாசன்; பி.எம் டபிள்யூ கார்
அப்பா; என்ன கலர்?
வாசன் ; க்ரே
அப்பா; ப்ரீவேல எப்படி ஓட்டுவாரு?
வாசன்; டுர்ரர்ரர்ர
அப்பா; வீட்டுக்கு வந்து என்ன பண்ணுவார்?
வாசன்; கராஜ் ஓபன் பண்ணி கதவுகிட்ட வந்து knock knock பண்ணுவாரு. கதை இப்படிப் போகும். ஆனால் கேள்விகளைக் கேட்காமல் இருந்தால், பதிலும் வராது. பிறந்தநாளுக்காக வந்திருந்த அவன் பெரியப்பா வாசனைச் சமாதானப்படுத்துவதற்காக, அவனிடம் அதே மாதிரி கதைச் சொல்லத் தொடங்கினார். கேள்விகளைக் கொஞ்சம் மாற்றிக் கேட்டுவிட்டார் (வரிசை மாற்றி, அப்புறம் மேலும் சில ஆங்கிலச் சொல் கலந்து என்று மிக மெல்லிய மாற்றம்). அத்தோடு வாசன் ம்கூம், கதை அப்பா தான் சொல்லணும் என்று ஓடிவிட்டான்...

இப்படி நாம் என்ன கதை சொன்னாலும் கொஞ்ச கொஞ்சமாக பதில் சொல்லத் தொடங்கினான். தானே சொல்லவும் தொடங்கினான். எங்காவது போனால் வந்தால், அதைக் கூட சொல்லுவான். ஒருதரம், அவனைச் சாப்பிடக் கூப்பிட்டேன், வந்து சாப்பிட்டான். அதைப் பற்றி, 'அம்மா என்ன சொன்னா, வாசன், சாப்பிட வான்னு சொன்னா, வாசன் என்ன பண்ணான், உடனே ட்ரக்க வச்சிட்டு வந்துட்டான். குட் ஜாப்னு சொன்னா அம்மா. அதான் கதை' - இது போன்ற பல்லாயிரக்கணக்கான கதைகளைக் கேட்டிருக்கிறேன்.

போன வாரம் குளித்து விடும்போது (3 வயது), முதன் முறையாக, சொந்த கதை வசனத்துடன் ஒரு கதை சொன்னான் - குளிக்கும் அறையில் இருக்கும் பொம்மைகளைப் பற்றி. வாத்து என்ன பண்ணித்து, வந்து தண்ணிக்குள்ள எட்டிப் பார்த்துது. பபிள், பபிளா (நுரை நுரையா) இருந்தது, வாத்துக்கு ரொம்ப பயம் வந்துடுத்து. அது உடனே கப்புல ஏறிண்டுடுச்சு. வாசன் மெல்ல தண்ணிய ஆட்டினான். பபிள் உடைஞ்சு போய்டுத்து, வாத்து வெளில வந்து தண்ணில ஸ்விம் பண்ணித்து. அதான் கதை'

'எப்படா இதெல்லாம் நடந்துது?'

'இதோ இப்ப தான்!'