Wednesday, June 28, 2006

நிலவுக்குப் போகும் நட்சத்திரம்

தமிழ்மண நட்சத்திரம்னா தினசரி ஒரு பதிவு போட்டு தமிழ்மண முகப்பில் இருக்கணும்னு பார்த்தே பழகிடிச்சு.. இப்போ கடந்த ரெண்டு நாளா கல்யாண மாப்பிள்ளை நிலவு நண்பன் தான் நட்சத்திரம்னு தெரிஞ்சதிலிருந்து ஒரே பதிவு தமிழ்மண முகப்பில் இருப்பது கொஞ்சம் கஷ்டமா இருக்கு..

அதனால், ரசிகவ் ஞானியார் பற்றி எனக்குத் தெரிஞ்சதை ஒரு பதிவாகப் போடலாம் என்று பார்க்கிறேன்.. அப்படியே எனக்கு ரொம்ப தெரியும்னு நினைச்சி படிக்காதீங்க.. நான் வந்த நாளிலிருந்து(அதிகமில்லை ஜென்டில்மேன், March 2006 தான்) ஞானியார் என்ன புதுப் பதிவு போட்டாலும் படிச்சிடுவேன். அந்த மாதிரி ஒரு தொடர் வாசகி என்னும் முறையில் எனக்குத் தெரிஞ்சதை இங்கே பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

நிலவு நண்பன் பக்கங்களில் எல்லாக் காலத்துக்கும், எல்லாப் பொருளிலும் கவிதைகள் இருப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். அப்பாவுக்கான அவரது கடிதம் மிகச் சமீபத்தில் மீள்பதிவாகி வந்தது.

காதல் கவிதைகள் பற்றிக் கேட்கவே வேண்டாம்..

இலங்கைத் தமிழர்களுக்கான அவரது கவிதையும் இப்போதும் பொருந்தும் ஒன்று (இனிவரும் காலங்களில் பொருந்தாமல் போகட்டும்! )

எந்தக் காரணங்களுக்காகவோ தனி வலைப்பூ தொடங்கிப் பார்த்திருக்கிறோம். சமூகத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தனி வலைப்பூ தொடங்கியது ஞானியார் ஒருவர் தான் என்று நினைக்கிறேன். அவரது விதைகள் என்னும் வலைப்பூ மூலம் பல உயிர்களைப் பிழைக்க வைத்தது, வைத்துக் கொண்டிருப்பது எத்தனை பாராட்டினாலும் தீராது..

அட, மாப்பிள்ளையா லட்சணமா சமையலும் பழகி இருக்காருங்க..

கவிதைல நகைச்சுவை குறைவுன்னு யாருங்க சொன்னாங்க? இதைப் பார்க்கச் சொல்லுங்க..


நான் கொடுத்த அறிமுகத்தைப் பார்த்துட்டீங்க.. நிலவு நண்பன் தானே தன் ஒரு வருட வலைப் பயணத்தைத் திரும்பிப் பார்த்த நினைவுகள் இங்க இருக்கு. அதையும் பார்த்துடுங்க..

ஞானியார் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு பதிவுகளை மட்டும் சொல்லிட்டு இந்தப் பதிவை முடிச்சிக்கிறேன்:

* இணையத்தில் கவிஞர் பெயரில்லாமல் வலம் வந்த காலத்திலேயே இந்தக் கவிதை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நம்ம நிலவு நண்பன் எழுதியது என்றவுடன், இன்னும் அதிகம் விரும்பிய கவிதையாகி விட்டது. இதுவரைக்கும் பார்க்கலைன்னா, படிச்சி பாருங்க. நல்ல கவிதை.

* அடுத்து எனக்குப் பிடிச்சது அவரோட காதலர் தினப் பதிவு. இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள். உரைநடைப் பதிவுல இத்தனைக் கவிதையா எழுத முடியுமா என்ன? அது சரி, காதலைப் பத்தி நிலவு நண்பன் எழுதினால் கவிதை வராமல் எப்படி? இந்தப் பதிவுல எங்கயோ ஞானியாரோட நிலவைப் பத்தியும் க்ளூ இருக்கு.. எனக்குத் தான் புரியலை.. உங்களுக்கு? :)

கடைசியா ஊருக்குப் போவதற்கு முன்னால், ஆறு பதிவு போல ஒரு ஐந்து பதிவு போட்டார்.. என்னைத் தான் அடுத்ததா அஞ்சு கேள்விக்கும் பதில் எழுதித் தொடரச் சொன்னார்..

ஞானியார், நமக்கு கேள்வி கேட்கத் தான் தெரியும்.. பதில் சொல்றதுன்னா. "ஹி ஹி" தான்.. அதான் இத்தனை பெரிய பதிவு போட்டிருக்கேனே.. அந்தக் கேள்வியெல்லாம் சாய்ஸ்ல விட்டிரலாமா? :))

நண்பர்களே, தமிழ்மண நட்சத்திரமான நிலவு நண்பனுக்காக நான் இப்போ ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன்.. இந்த ஒரு வாரம், மாப்பிள்ளை சார் ஊரில் இல்லாததால், ஞானியாரைத் தெரிந்த மற்ற நண்பர்கள் இது போல அவரவருக்குத் தெரிந்ததை, ஞானியார் பதிவுகளில் ரசித்ததை, விதைகள் மூலம் சாத்தியமான உதவிகளை, எது பற்றி வேண்டுமானாலும் எழுதுங்க..

தினசரி ஒரு பதிவுன்னு எழுதினா நல்லா இருக்கும்.. தமிழ்மண நண்பர்கள் சார்பா ஞானியார்-ஜஹானுக்கு நமது திருமணப் பரிசு.. இந்தப் பதிவெல்லாம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சம் வெட்டி ஒட்டி ஒரு கார்டுல போட்டு கல்யாணத்துக்கு நேர்ல போகிறவங்க அவர் கையில் கொடுக்கலாம்.. - சஜஷன் தான் - என்ன சொல்றீங்க?

Sunday, June 18, 2006

ஏன் என்ற கேள்வி.. -2

மட்டுறுத்தல் நண்பன் - நண்பனா? எதிரியா? என்று கேட்டிருந்தோம். இந்த விவாதத்திற்குப் பதில் வருமா என்று சந்தேகமாகவே இருந்தது. உங்கள் கருத்துகளைக் கண்ட பின் தான் செயலியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. வெறும் புரிதல் பிரச்சனைகளே என்று தெளிவானது. கருத்தளித்த எல்லாருக்கும் நன்றி.

இந்தப் பதிவில், முன் கேட்ட இரண்டு கேள்விகளுக்கும் அதற்கு மேல் மற்ற கேள்விகளுக்கும் பதில் சொல்லி உள்ளோம். மேலும் சந்தேகங்கள் இருப்பின் விவாதிக்கலாம்:

முதலில் போன பதிவில் முன்வைத்த இரண்டு கேள்விகள்:
1. கொடுக்கப்படும், நினைவில் வைக்கப்படும் இந்த கடவுச் சொல்லை எப்படிப் பயன்படுத்துகிறார்கள்? எங்காவது தேக்கி(store) வைக்கப்படுகிறதா?(அப்புறமேட்டு ரமணி எடுத்துக்கிடத் தான் :) )

2. நினைவில் வைக்கப்படும் கடவுச் சொல்லை வேறு யாராவது நிங்கிலிருந்து எடுத்தால் என்ன செய்வது?

டெக்னிகல் சமாச்சாரங்களான இவற்றிற்குப் பதில் சொல்லி விட்டு அடுத்த சாதாரண சமாச்சாரங்களுக்குப் போகலாம்.
கொடுக்கப்படும் கடவுச்சொல், நிங்குக்கு அனுப்பப்படுவதில்லை. இந்த ப்ளாக்கர் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உங்கள் வலை உலாவியே(Browser) தான் மறுமொழி மட்டுறுத்தல் பக்கத்தைத் திறக்கிறது. அதனால் தான் முதன் முறையாக இந்தப் பக்கத்தைத் திறக்கும் போது உங்களிடமே உங்கள் பயனர்/கடவுச்சொல்லைக் கேட்கிறது.

அடுத்து, இந்த கடவுச்சொல்லை அன்னியனின் மென்பொருள் எங்கும் பயன் படுத்தவோ சேர்த்து வைக்கவோ இல்லை. இது வலை உலாவிக்கும் ப்ளாக்கருக்கும் மட்டுமே உள்ள கொடுக்கல் வாங்கல்.

இப்போது நீங்கள் தமிழ்மணம்/தேன்கூடு படிக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட வலையுலாவி ஜன்னல்களைத் திறப்பீர்களேயானால், அவற்றில் ஒன்றில் லாக் இன் செய்தால் போதும் அல்லவா? நீங்கள் தான் பயனர் என்பது ஒரு முறை லாக் இன் செய்தாலே எப்படி எல்லா புது உலாவிகளுக்கும் போய்ச் சேருகிறதோ அதே மாதிரி, ஏன் அதே காரணத்தால் தான் இந்த அன்னியன் மென்பொருளிலும் மறுமொழிகள் மட்டுறுத்தப்படுகின்றன. ஆக, உங்கள் கடவுச்சொல் அன்னியனின் கையில் கிடைக்கவே முடியாத போது ரமணிக்கும் கிடைப்பது அரிது தான். ப்ளாக்கரிலிருந்து வேறு யாரும் நமது கடவுச்சொல்லை எடுத்து விட மாட்டார்கள் என்று எப்படி நம்புகிறோமோ, அதே மாதிரி, இங்கே கொடுக்கப்படும் கடவுச்சொல்லையும் வேறு யாரும் எடுக்க முடியாது

இனி மற்ற பின்னூட்டக் கேள்விகள்:

3. என்னிடம் 24 மணி நேர இணையமோ, கணிணியோ இல்லையே.. நான் இதைப் பயன் படுத்த முடியுமா?

ப: கண்டிப்பாக முடியும். 24 மணி நேரமும் பயன்பாட்டில் கணினி இல்லாவிட்டாலும் எப்போது கணினி பயன்பாட்டிற்கு வருகிறதோ அப்போது ப்ளாக்கரிலிருந்து மறுமொழி மட்டுறுத்துதலை விட, அன்னியலோகம் பக்கத்தைத் திறந்தாலே போதும்.

4. எந்தக் கணினியில் இருந்து மின்னஞ்சல் முகவரி கொடுத்தோமோ அந்த கணினி எப்போதும் பயன்பாட்டில் இருக்கவேண்டுமா?
ப: நிச்சயமாக இல்லை. எந்தக் கணினியில் வேண்டுமானாலும் இதைப் பயன் படுத்தலாம். எப்போது வேண்டுமானாலும்.

5. அடிப்படைக் கணிணி அறிவு அதிகம் இல்லாத நான், இந்த ப்ளாக்கர் மட்டுறுத்துதலைத் தாண்டி ஏன் வர வேண்டும்? ஏதோ ஒன்றிரண்டு பின்னூட்டங்களில் சந்தேகம் வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளுகிறேன்..
ப: ஒரு வேளை உங்களுக்குச் சந்தேகம் வராத வார்த்தைகளில் பின்னூட்டங்கள் வரும்போது பின்னூட்டியவரின் பக்கத்துச் சென்று அதன் நம்பகத் தன்மையைப் பார்த்து சோதிப்பதும் அதிகப்படி வேலையாகிறதே.

6. அன்னியலோகமே ஒரு வேளை போலியான சைட்டாக இருந்தால்? எனது விவரங்களை விலை பேசும் ஏமாற்றுப் பக்கமாக இருந்தால்?
ப: அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். அன்னியலோகம் நிச்சயம் நம்பக் கூடியதே. மேலும், நாம் நமது ப்ளாக்கர் ஐடியைத் தரப் போவதில்லையே..வெறும் ஜிமெயில் கடவுச் சொல் தானே. அதிலும் பின்னூட்ட மட்டுறுத்தலுக்காகவே தொடங்கப் பட்ட புதிய ஜிமெயில் அக்கவுன்டைத் தருவதால், இதை வைத்து எதுவுமே செய்ய முடியாது.

7. மறு மொழி மட்டுறுத்தலுக்கு ஒரு வெண்பட்டியல், இன்று ரமணி தயாரித்திருக்கிறார். நாளை வேறொருவர் வந்து வேறு ஒரு பட்டியல் தருவார். எல்லாருடைய பட்டியலுக்கும் சென்று என் பெயரைச் சேர்க்கச் சொல்ல வேண்டுமா?
ப: தமிழ்மணத்தில் சேரும் பதிவர்களின் பெயர்களைத் தானாகச் சேர்க்க முயற்சி செய்வோம். அது பற்றி சீக்கிரம் அறிவிக்கலாம்

8. இந்த மறுமொழி மட்டுறுத்தலை ஏற்றால், அதர் மற்றும் அனானி ஆப்ஷனை விட்டு விட வேண்டுமா?
ப: அதர் மற்றும் அனானி ஆப்ஷனை நீக்க வேண்டிய தேவை இல்லை. இவற்றின் மூலம் இடப் படும் பின்னூட்டம் தானே பிரசுரமோ/மறுக்கப் படவோ மாட்டாது. அதை நீங்கள் தான் செய்ய வேண்டும். ப்ளாக்காருக்குப் போய்ச் செய்ய வேண்டும்.

9. புதுப் பதிவர்கள் வந்தால் அவர்கள் பின்னூட்டம் ரிஜக்ட் செய்யப் படுமா?
ப: புதுப் பதிவர்களின் பின்னூட்டங்கள் உங்கள் பின்னூட்டப் பெட்டியில் தான் இருக்கும். வேண்டுமென்றால் எடுத்து பப்ளிஷ் செய்யலாம்.

10. புதுப் பதிவர்களின் பின்னூட்டங்களும் இருக்கும், அதர் அனானி ஆப்ஷன் பின்னூட்டங்களும் இருக்கும் என்றால், இந்தச் செயலி எதைத் தான் ரிஜக்ட் செய்யும்?
ப: அ. ஆட்சேபிக்கக் கூடிய வார்த்தை உள்ள பின்னூட்டங்கள் (பல வார்த்தைகள் எங்கள் பட்டியலில் உள்ளது. ஏதேனும் புது வார்த்தை சேர்க்கவேண்டுமாயின் ரமணியிடம் சொல்லவும்)
ஆ. வெண்பட்டியிலில் உள்ள பதிவரது பெயருடன் வேறு ஒரு ப்ரோபைல் எண்ணிலிருந்து வரும் பின்னூட்டம் (போலி)
இ. கறுப்புப் பட்டியலில் உள்ள ப்ரோபைல் எண்கள்

இத்துடன், இந்தச் செயலியால் எனக்குத் தெரியும் நன்மைகளையும் சொல்லி விடுகிறேன் :
1. நிச்சயமாக வெண்பட்டியலில் இருப்பவரின் பின்னூட்டங்கள் மட்டும் தான் அங்கீகரிக்கப்படுவதால், பின்னூட்டங்கள் வரும்போது அவற்றை இட்டவரின் நம்பகத் தன்மையைச் சோதித்து அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லாது போகிறது.
2. தமிழ்மணத்தில் மட்டுறுத்தல் வந்த புதிதில் அது என்னவோ பெரிய தொந்தரவு என்ற எண்ணத்தை வெளிப்படுத்தும் பல பதிவுகளைக் காண முடிந்தது.(அந்தச் சமயம் நான் வலைபதிய வரவில்லை). இந்த மட்டுறுத்தல் நண்பன் பக்கத்தைத் திறந்து வைத்துக் கொண்டால், நம்பகமான பின்னூட்டங்கள் தானாக பிரசுரித்துக் கொள்கின்றன. நாம் இன்னொரு பக்கம் நமது வேலையைச் செய்து முடித்து விட்டு வந்து பார்க்கலாம்.
3. தனி மடல் என்று போட்டு வரும் பின்னூட்டங்கள் தானாக பிரசுரிக்கப்படுவதில்லை என்பதால், அந்தக் கவலையும் இல்லை.

இத்தனையும் சொன்ன பின், இந்தப் பதிவைப் படிப்பவருக்கு ஒரு வேண்டு கோள்.

பின்வரும் கேள்விக்கு ஆம் இல்லை என்று காரணத்துடன் பதில் சொன்னால், மேல் விளக்கங்கள் கொடுக்க வசதியாக இருக்கும்:

1. மட்டுறுத்தல் நண்பனை நீங்கள் பயன் படுத்துகிறீர்களா?
2. ஆம் எனில் ஏதேனும் மாற்றங்கள் தேவையா?
3. இல்லை எனில் ஏன்? (அட போங்கப்பா.. இதெல்லாம் வேஸ்ட்.. ட்ரெடிஷனல் மாடரேஷன்(traditional moderation) தான் த்ரில்லிங்கா இருக்கு என்றும் சொல்லலாம் )

மட்டுறுத்தல் நண்பன் - நண்பனா? எதிரியா?

பொதுவாக நான் பதிவுகளில் டெக்னிகல் சமாச்சாரங்கள் பேசுவதில்லை. தொழில் முறையில் தினசரி பயன்படுத்தி வரும் விஷயங்களை வலைப்பதிவுகளிலும் பேசுவது எனக்கு ரொம்பவும் அலுப்பான ஒன்று. ஆனால், நேற்று வழக்கம் போல எல்லா வலைப்பதிவுகளுக்கும் போய் வந்து கொண்டிருந்தபோது, திரு மகேந்திரனின் பதிவில் மட்டுறுத்தல் செயலியைப் பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு டுபாக்கூர் என்பவரும் பின்னூட்டமிட்டு அன்னியலோகத்தைப் பற்றிய தன் 'உறுதியான சந்தேகங்களை'ச் சொல்லி இருந்தார்.

ரமணி தன்னளவில் அதற்கு பதில் சொல்லி விட்டார் என்ற போதும் எனக்கு இன்னும் கொஞ்சம் சுலபமாக இதை விளக்கிச் சொல்லலாமே என்று தோன்றியது. அதன் விளைவே இந்தப் பதிவு.

ரமணியின் மட்டுறுத்தல் நண்பன் செயலியை அன்னியலோகம் என்னும் பக்கத்தில் இருந்து பயன்படுத்தலாம். மட்டுறுத்தல் நண்பன், மூன்று வெவ்வேறு உதவிகளைச் செய்கிறான்

* பரிசீலித்து மட்டுறுத்தல் ஆலோசனைகளை மட்டும் வழங்கு (show suggestions only)
* தன்னியக்க நிராகரித்தல் மட்டும் (autoreject only)
* தன்னியக்க பிரசுரித்தல் மற்றும் நிராகரித்தல் (autopublish and autoreject)

இது எல்லாவற்றிற்கும் தேவை உங்கள் ஜிமெயில் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல். இரண்டாவது மற்றும் மூன்றாவது வசதிகளைப் பயன்படுத்த மட்டுமே உங்கள் ப்ளாக்கர் பயனர் பெயரும் கடவுச் சொல்லும் தேவை.

பரிசீலித்து மட்டுறுத்தல் ஆலோசனைகளை மட்டும் வழங்கு (show suggestions only)
நிங்க் இணையதளம் மட்டுறுத்தல் செயலிக்கு ஒரு செய்தியோடையைக் கொடுக்கிறது.. அதாவது லைப்ரரி என்கிறோம். நிங்கில் உங்கள் ஜிமெயில் பயனர் பெயரையும் கடவுச் சொல்லையும் கொடுத்தால், அந்த மெயில் பாக்ஸினுள் நுழைந்து ஒவ்வொரு பின்னூட்ட மெயிலாக எடுத்து நோட்டம் விட்டு அந்த பின்னூட்டம் உங்களுக்கு அனுப்பியவர் தமிழ்மணத்திலோ தேன்கூட்டிலோ இருப்பவர் தானா, இல்லையா என்பதைக் காட்டுகிறது..(தமிழ்மணத்தில் இருப்பவர் பற்றிய விவரங்களை வெண்பட்டியலாக ரமணி தனியாகச் சேகரித்து வைத்துள்ளார்) அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த பின்னூட்டத்தை அனுமதிக்கவும், இல்லாத போது அதை அனுமதிக்காமல் மறுக்கவும் இது பரிந்துரைக்கிறது.

மற்ற இரண்டு ஆப்ஷன்கள் அப்படி அனுமதிக்கக் கூடிய பின்னூட்டங்களை அனுமதிப்பதற்கும், சரியில்லை என்று கருதப்படும் பின்னூட்டங்களைத் தானே ரிஜக்ட் செய்வதற்குமானவை.

இந்த இரண்டு ஆப்ஷன்களுக்குத் தான் ப்ளாக்கர் பயனர் பெயரும் கடவுச் சொல்லும் தேவை. முதல் ஆப்ஷனுக்குத் தேவை இல்லை.

அடுத்தது, டூபாக்கூர் வைத்த முக்கிய குற்றச் சாட்டு,
//அங்கு சேரும் எல்லாரும் மெயில் முகவரியையும் அதன் பாஸ்வேர்டையும் கொடுத்தால் எல்லா பாஸ்வேர்டும் வெங்கட்ரமணிக்கு போய்ச் சேருகிறது. அதன்பிறகு வேண்டாதவர்களை (வலைப்பூக்களை) இந்த பேஸ்வேர்டு கொண்டு அழித்து விட முடியும்.//

இதுவரை விளக்கிய வகையில், முதல் ஆப்ஷனைப் பயன்படுத்த உங்கள் ப்ளாக்கர் ஐடி தேவையே இல்லை. வெறும் ஜிமெயில் ஐடியே போதும். அதுவும் புத்தம்புதிதாக, மட்டுறுத்தலுக்கு மட்டும் நீங்கள் துவங்கப் போகும் ஐடியே போதும். எனவே அதை வைத்து எதையும் அழிக்க முடியாது.. (அந்த ஜிமெயில் ஐடியைக் கூட அழிக்க முடியாது.. பாவம் ரமணி!! )

மற்ற இரண்டு ஆப்ஷன்களை எடுத்துக் கொண்டோமானால், அவற்றில் ப்ளாக்கர் பயனர் பெயர் கொடுக்கப் படுகிறது. இந்தப் பெயரை அந்தப் பக்கத்தை மூடும் வரை வலைஉலாவிகள்(Browser) நினைவில் வைத்துக் கொள்கின்றன.

இதில் தோன்றக் கூடிய சந்தேகங்கள் இரண்டு:
1. கொடுக்கப்படும், நினைவில் வைக்கப்படும் இந்த கடவுச் சொல்லை எப்படிப் பயன்படுத்துகிறார்கள்? எங்காவது தேக்கி(store) வைக்கப்படுகிறதா?(அப்புறமேட்டு ரமணி எடுத்துக்கிடத் தான் :) )
2. நினைவில் வைக்கப்படும் கடவுச் சொல்லை வேறு யாராவது நிங்கிலிருந்து எடுத்தால் என்ன செய்வது?

பதில்கள் சுலபம் தான். நீளமாகப் போய்விட்டதால், அடுத்த பதிவில் பதில்கள் தொடருகிறேன்.

ஒன்று மட்டும் சொல்லி இந்தப் பதிவை முடிக்கிறேன்.
இந்த மென்பொருளை உருவாக்க ரமணிக்கு ஆன பணச்செலவு அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை என்ற போதும், மென்பொருளாளரின் வாழ்வில் கணினிக்கு அருகில் செலவிடாத ஒவ்வொரு மணித் துளியும் எத்தனை உபயோகமானது என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அதிலும் ரமணியின் வீட்டில் ஒரு புது வரவு வேறு வந்திருக்கும் சமயத்தில் இந்த அன்னியன் மென்பொருளுக்கு அவர் செலவு செய்த ஒவ்வொரு நிமிடமும் பெரிய முதலீடு தான். இது இலவசம் என்பதுடன், தேன்கூடு, தமிழ்மணம் போன்றவர்களால் விளம்பரம் செய்யப்பட்டும் இதை அதிகம் பேர் பயன்படுத்த முன்வராததுமன்றி, (டூபாக்கூர் போன்றவர்களால்) உருவாக்கியவரின் நோக்கத்தை கேள்விக்குரியதாக்கும் போது தான் அலுப்பாக இருக்கிறது.

வேறு கேள்விகள் இருந்தாலும் பின்னூட்டத்தில் சொல்லலாம்.

Friday, June 16, 2006

பெரிய மனுஷி

"என்ன சொன்னா?" கிட்டத் தட்ட வீடு நெருங்கி வந்து விட்ட காரணத்தால், ஆர்வமும் பட படப்புமாக சுனிதாவின் காதுக்குள் கேட்டான் செந்தில்.

"நாளைக்கு தான் சொல்வாளாம்!" சுனிதாவின் குரலில் ஒரு சோர்வு இருந்தது.

"அவ்ளோ நேரம் பேசினியேடி!!"

"பேசினேண்டா.. அவ ஒண்ணும் சொல்லலை.. என்ன என்ன பண்ண சொல்ற?"
வீடு வந்துவிட்டது.

"சரி சரி.. சும்மா கத்தாதே. வீடு வந்தாச்சு.. அத்தைகிட்ட வாங்கிக் கட்டிக்கிற மாதிரி ஆகப் போகுது"

வீட்டு வாசலில் அத்தை நின்று கொண்டிருந்தாள். தூரத்திலிருந்தே இருவரும் வருவதைப் பார்த்துவிட்டாள் என்று தோன்றியது.

"ஏண்டி, மெல்ல நட, இது மாதிரி டமால் டுமீல்னு பூமி அதிர நடக்கக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்றது? நீ என்ன சின்னப் பொண்ணா? நல்லா நாலு கழுதை வயசாகுது. இன்னும் இதெல்லாம் பழகலை. " ஆரம்பித்தாள் அத்தை..

"இன்னிக்கு கோட்டா ஆரம்பிச்சாச்சு" என்று முணுமுணுத்துக் கொண்டாள் சுனிதா. செந்தில் காதில் விழுந்தது. லேசாக சிரித்தான்.

"உள்ள வாங்க ரெண்டு பேரும். பேசிக்கிறேன். ஆழாக்கு உயரம் கூட இல்லை.. என்னையே கிண்டல் பண்ணி சிரிக்கிறீங்களா? இன்னிக்கு வரட்டும் உங்கப்பா. பெரியவங்க சின்னவங்க தராதரம் தெரியலை. எல்லாம் உங்கப்பா கொடுக்கிற செல்லம் தான் "


* * * * *

தோசை, காப்பி சாப்பிட்டு பாடம் எழுத உட்கார்ந்தார்கள். அத்தை மீண்டும் சுனிதாவைக் கூப்பிட்டாள்..

"சுனிதா, கொஞ்சம் இங்க வந்திட்டு போ"

"சொல்லுங்கத்தை.. என்ன வேணும்?" சலித்துக் கொண்டே வந்தது சுனிதா.

"வரும்போது பார்த்தேன். உன் கிட்ட எத்தனை முறை சொல்றது. ரோட்ல வரும் போது அப்படி என்ன உரசல், ஈஷல் எல்லாம்? அண்ணன் தங்கை தான் இல்லைங்கலை.. ஆனா எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கில்ல? நல்லா வயசாச்சு, எட்டாவது படிச்சாறது, ஆனா கொஞ்சமாவது அறிவு வளர்ந்திருக்கான்னா ம்ஹும்.."

அதற்கப்புறம் அத்தை சொன்னது எதுவும் சுனிதா காதில் விழவில்லை. விட்டத்தைப் பார்த்து ஒரு லுக் கொடுத்துவிட்டு உள்ளே போய் செந்திலை அனுப்பி வைத்தாள் அடுத்த டோஸுக்கு. இரட்டைக் குழந்தைகள் என்றாலும் ஏனோ அண்ணன் என்றே அத்தை சொல்வது சுனிதாவுக்குப் பிடிக்காத ஒன்று
"அத்தைக்கு பொறாமை நம்ம மேல.. அப்பா இப்படி எல்லாம் அவங்க கிட்ட பேசறது இல்லைல? .. அதான்.. நீ ஒண்ணும் கவலைப் படாதே!!" செந்திலுக்கும் ஒரு சான்ஸ் அறிவுரைக்க..


* * * * *

மறுநாள் பள்ளி கிளம்பும் போது மீண்டும் சுனிதாவுக்கு நினைவுப்படுத்தினான்..

"கேட்டுட்டு வா.. இல்லைன்னா சொல்லு, நான் வேணா கேட்கிறேன்"

"டேய்.. அதெல்லாம் வேண்டாம்.. அவ சொல்ல மாட்டா.. நானே கேட்கறேன்.. நீ இரு."


* * * * *

மாலை

"சுனி என்னாச்சு? கேட்டியா?"

"ம்"

"என்ன சொல்றா?"

"ம்ச்.. போடா.. "

"என்னடீ? ரொம்ப டல் ஆய்ட்ட? என்ன சொல்றா அவ?"

சொன்னாள் " பயமா இருக்குடா கேட்கக் கேட்க.."

"என்னது? ஐய்யய்யோ.. என்னடீ சொல்ற?"

"ஆமாம்.. இன்னும் ஒரு வருசம் தான்.. சித்ரா சொல்லிட்டா!! "

செந்தில் ஒன்றும் பேசவில்லை..

"டேய், எனக்காக சாமிகிட்ட வேண்டிக்கிறியாடா? "

"ம்ம்.. அப்போ எனக்கு?"

"உனக்கு ஒண்ணும் ஆகாதாம்.. சித்ரா சொல்றா எல்லாம் கேர்ல்ஸுக்குத் தான்னு.. உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லையாம்"

"அப்டியா?" அதைக் கேட்டதில் அவனுக்கு ஒன்றும் பெரிய மகிழ்ச்சி இல்லை என்று அவன் குரலே சொன்னது.. செந்திலுக்கு சுனிதா மீது பாசம் அதிகம்.

"சுனி, ஒண்ணு சொல்லவா?"

"சொல்லுடா.."

"அத்தை கிட்ட கேட்போமா? "

"ஐயோ, அத்தைகிட்டயா? நான் மாட்டேன்.. "

"என்னடீ.. இது பெரிய விசயமா? சும்மா கேட்டுப் பார்ப்போம்.. என்ன சொல்றான்னு.. "

"ஆமாம், கேட்டாலும் சொல்லிடப் போறாங்க.. அப்பாகிட்ட சொல்றேன்னுவாங்க.. திட்டுவாங்க.. ஏண்டா நான் திட்டு வாங்கறதைப் பார்க்கணுமா உனக்கு?"

"இல்லடி.. சித்ரா ஒரு வேளை தப்பா சொல்லி இருந்தா?"

"சித்ராவுக்கு எல்லாம் தெரியும்.. அவ தப்பா சொல்லி இருக்கவே மாட்டா.."

"என்னவோ போ.. அத்தையைக் கேட்கலாம்னு எனக்குத் தோண்றது.. சித்ராவை மட்டும் நம்பறது சரியில்லை.. "

"சரி, அப்போ அப்பாவையே கேட்போம்.. இன்னும் கொஞ்சம் பொறுமையா பதில் சொல்வாரே.. "

"நல்ல ஐடியா.. அப்பாவையே கேட்போம்.. நீயே கேளு.. "

"ஆமாம், எல்லார்கிட்டயும் நானே கேட்டு சொல்றேன். ம்கும்!!"


* * * * *

இரவு உணவு நேரம்.

"அப்பா, ஒண்ணு கேட்கலாமா?" சுனிதா தீனமான குரலில் தொடங்கினாள்.

"என்னம்மா? "

"இல்லை, போன வாரம் பூரா எங்க க்ளாஸ் சித்ரா ஸ்கூலுக்கு வரலை"

"என்னாச்சு? ஏதாச்சும் உடம்பு சரியில்லையா அவளுக்கு?"

"இல்லை.. அவ பெரிய மனுஷியாய்ட்டாளாம்."

"ம்ம்" அப்பாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. இந்த விவாதம் எந்தப் பக்கம் போகப் போகிறது என்று பயந்துகொண்டே பார்த்தார்.

"பெரிய மனுஷி ஆகறதுன்னா என்னப்பா? நான் எப்போ பெரியவளாவேன்?"

அப்பா திகைத்துப் போய் பார்த்தார்.. என்ன சொல்வது இதற்கு?

"ஏண்டி, என்ன கேள்வி இது? அச்சு பிச்சுன்னு கேட்டுகிட்டு.. அப்பாகிட்ட பேசற பேச்சா இது? ஒரு வெட்கம் மானம் இல்லாம வளர்த்திருக்கான்னு என்னைத் தான் குறை சொல்லப் போறா.. " அத்தை உதவிக்கு வந்தாள்.

"அத்தை அவ கேட்கறதுல என்ன தப்பிருக்கு?" - இது செந்தில்

"வந்துட்டான். பாச மலர் சகோதரன்.. எதுக்கு இப்போ உங்களுக்கு? இன்னோரு தரம் இதெல்லாம் பேசினீங்க, நாக்கை நல்லா இழுத்து வச்சி நறுக்கிடுவேன். தட்டைப் பார்த்து சாப்பிடுங்க."

அந்தப் பேச்சு அத்துடன் நின்று போனது


* * * * *

கிட்டத் தட்ட ஆறு மாதம் கழித்து, சூப்பர் மார்க்கெட்டில் சுனிதாவும் செந்திலும் நின்று கொண்டிருந்தனர்:

"டீ சுனிதா, என்ன வேணும் உனக்கு? கடைக்குப் போகணும்னு சொன்ன, சரின்னு கூட்டி வந்தேன்.. இங்க வந்து நின்னுகிட்டு எதுவும் வாங்காம முழிச்சி முழிச்சி பார்த்தா என்ன அர்த்தம்?"

"இல்லை.. நீ கொஞ்சம் அந்தப் பக்கம் போய் எண்ணை வாங்கு.. நான் வர்றேன்"

"எண்ணை எல்லாம் எனக்கு வேண்டாம்.. உனக்கு என்ன வேணும்? அதை சொல்லு.. நான் தேடித் தர்றேன். "

"டேய், போடா, உங்கிட்ட சொல்ல முடியாது.. கொஞ்சம் வெளில போ.. நான் வாங்கிட்டு வர்றேன்"

"என்னடி சுனி, நமக்குள்ள என்ன? என்னவோ போ.. " என்றபடி வெளியில் போய் நின்றான் செந்தில்.

சுனிதா மெல்லக் குனிந்து அந்த பாக்கெட்டை எடுத்து அருகில் இருந்த கறுப்புப் பையில் போட்டுக் கொண்டு பில் கவுன்ட்டருக்கு வந்தாள்.

பணம் கொடுத்து விட்டு பில்லில் உள்ள பொருளின் பெயரைப் படித்தபோது செந்திலுக்கு வருத்தமாக இருந்தது..

"என்கிட்ட கூட சொல்ல மாட்ட இல்ல?"

"போடா, என்னதான் அண்ணனா இருந்தாலும் நீ ஆம்பிளை தானே.. எப்படி சொல்றது.. வெட்கமா இருக்காது?" பெரிய மனுஷி போல் பேசிக் கொண்டே சுனிதா நடக்க ஆரம்பிக்க...

எல்லாவற்றையும் முதல் ஆளாகத் தன்னுடன் பகிர்ந்து கொள்ளும் தன் சின்னத் தங்கச்சி திடீரென்று பெரியவள் ஆனதைப் புரிந்து கொள்ள முடியாமல் செந்தில் அதிர்ந்து நின்று கொண்டிருந்தான்.

Wednesday, June 14, 2006

என்றென்றும் இனியவை ஆறு

நான் வலைப்பதிவுக்கு வந்த புதிதில் இந்த நாலு விளையாட்டு கன ஜோராக நடந்து கொண்டிருந்தது. நாலு விளையாட்டில் எனக்கு அப்போது பிடித்த விஷயமே அதில் இடம்பெறும் அடுத்த நால்வரைக் கூப்பிடுவது தான். அதன் மூலம், அடுத்த நால்வரின் பக்கங்களின் லிங்க் கிடைக்கும். அங்கிருந்து மேலும் நான்கு பக்கங்கள். இப்படித் தான் ஒவ்வொரு பக்கமாகத் தேடிப் படித்தேன். அப்புறம் தான் தமிழ்மணம் என்று ஒன்று இருப்பதே தெரிந்தது. வெகு நாட்களுக்கு அப்புறம் தான் தேன்கூடு பற்றித் தெரிந்தது.

நம்மையும் ஒருவர் நாலு விளையாட்டுக்குக் கூப்பிட மாட்டாரா என்று நினைத்ததுண்டு. ஆனா நாஆஆலு விஷயம் எழுதணுமே, நானெல்லாம் நாலும் தெரிஞ்ச ஆள்தானா என்று சந்தேகம் எப்போவுமே உண்டு.

இதோ, யாழிசைச்செல்வன் மீண்டும் ஆறு பதிவு என்று அதை மீள்விளையாட்டாக்கி இருக்கிறார். என்னையும் கூப்பிட்டு விட்டார். ஆறு பதிவு போட ஆறு நாள் உட்கார்ந்து யோசித்தேன். ஒன்றும் வேலைக்காகும் போல் தெரியவில்லை. ஆறு விஷயங்களில், ஆறு பொருளெடுத்து வகைப் படுத்த எனக்கு எந்த ஆறும்(வழி) பிடிபடவில்லை. அதான், விளையாட்டை எனக்கேற்ற மாதிரி கொஞ்சம் மாற்றி விட்டேன்..

1. என்றென்றும் இனியவை - பாடல் ஒன்று:
"ஜாக் அன்ட் ஜில்" தொடங்கி இன்றைய "மஞ்சள் வெயில் மாலையிலே" வரை சொற்கள் தெளிவாய் இருக்கும் எல்லாப் பாடல்களும் எனக்குப் பிடிக்கும். அதிலும் என்றைக்குக் கேட்டாலும் பிடிக்கும் ஒரு மாதிரி அமைதி தரும் பாட்டு "குறையொன்றும் இல்லை". இதை எம்.எஸ் குரலில் பிடிக்கும் என்று நிறைய பேர் சொல்வார்கள்.. எனக்கு நான் பாடினால் தான் பிடிக்கும்.. மத்தவங்க பாடு தான் திண்டாட்டம் :)

2. என்றென்றும் இனியவை - பிடித்த பொழுதுபோக்கு இரண்டு :
அ. மதியம் பதினோரு மணி வெயிலில், படுத்துக் கொண்டே, படித்துக் கொண்டே தூங்குவது. (வெயில் is a must)
ஆ. பஸ்ஸோ காரோ, ப்ளேனோ, ரயிலோ.. தொலை தூரப் பயணங்களில் ஜன்னலோரம் அமர்ந்து புத்தகத்தில் ஒரு கண், எதிர் இருக்கைக்காரர்கள் செய்யும்/பேசும் விஷயங்களில் ஒரு கண், ஜன்னல் வழியே தெரியும் உலகில் ஒரு கண், அட அப்பப்போ வரும் தின்பண்டங்களை மறந்துவிட்டேனே :)..

3. என்றென்றும் இனியவை - ரசித்து தங்கிய ஊர்கள் மூன்று
அ. அப்பாவின் சிற்றூர் - மன்னார்குடி அருகில் வாட்டார் நல்லூர். நல்ல ஊரு. விடுமுறைகளுக்கு மட்டுமே சென்றதால், என்னுடைய ஊர் என்று சொந்தம் கொண்டாட மனம் வரவில்லை :)
ஆ. ஹைதராபாத் - கிட்டத் தட்ட நாலு வருஷம் இருந்தேன். பல விஷயங்களில் என் கண்ணைத் திறந்த நண்பர்களைச் சந்தித்த ஊர். நான் பார்த்த முதல் வெளி உலகம்.
இ. பூனா - ஆறு மாதமே இருந்தாலும் இந்த ஊரில் இருந்த நாட்களை நான் ரொம்பவே ரசித்தேன். நல்ல நண்பர்கள் இங்கும்.

4. என்றென்றும் இனியவை - பிடித்த பானம் நாலு
உணவுன்னா எல்லாமும் வரும். அதான் பானம்.
அ. நானே போட்ட டீ
ஆ. அம்மா போட்டுக் கொடுக்கும் காபி
இ. கொய்யா ஜுஸ்
ஈ. காய்கறி வேக வைச்ச தண்ணியெல்லாம் சூப்னு சொல்லி அப்பா கொடுக்கிறது.

5. என்றென்றும் இனியவை - கலெக்ஷன்ஸ் ஐந்து
எல்லாவற்றையும் பாதியில் விட்டுவிடும் ஆர்வக் கோளாறான நான், இது நாள் வரை (குறைந்த பட்சம் 5 - அதிகபட்சம் 15 வருடங்களாக) தொடர்ந்து சேகரித்துக் கொண்டிருக்கும் என் கலெக்ஷன்ஸ் :
அ. பென்சில் - அதாவது, "க்ராபைட் மட்டுமே இருக்கா?" என்று கேட்கக் கூடிய அளவு ரொம்பச் சின்ன, கையால் பிடிக்கவும் முடியாத பென்சில்கள் என்னிடம் நிறைய உண்டு.
ஆ. ரப்பர் - எல்லாவிதமான பொம்மை வடிவத்திலும் அழிப்பான்கள். மார்க்கெட்டில் புதிதாக வரும் வடிவங்களையும் உடனுக்குடன் வாங்கிவிடுவேன்.
இ. யானை பொம்மை - இது பற்றி முன்னேயே சொல்லியாயிற்று
ஈ. சிவலிங்கம் - எந்தப் புது சிவன் கோயிலுக்குப் போனாலும் போய் வந்த நினைவாக லிங்கம் வாங்குவது. உலோக லிங்கங்கள்/ பேப்பர் மாஷ் வாங்க மாட்டேன். கல்/மார்பிள் மட்டும் தான். சின்ன லிங்கம், கையடக்கமாக. அதைத் தொட்டுத் தடவிப் பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி.
உ. காதணிகள் - ஒரு ஜோடி பதின்மூன்று ரூபாய்க்குக் கீழ் கிடைக்கும் காதணிகள், பல நிறங்களில், பல வடிவங்களில் வாங்கப் பிடிக்கும். எல்லாம் காலேஜ் நாட்களில் பிடிக்காத விஷயங்கள். வேலைக்கு வந்தபின் ஒரே பைத்தியமாக ஆகி விட்டேன் :)

6. அழைக்கும் நபர்கள் ஆறு:
அ. யோசிங்க - பதிவுலகில் கைப்புள்ள பதிவுக்குப் பின் நான் படித்தது இவரைத் தான். நல்லாத் தான் புதிர் போடறாரு.. நம்ம 'லெவலுக்கு' இல்லை.. அதான் ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்க்கிறது :)
ஆ. குப்புசாமி - பங்கு வணிகம், கரையோரம்னு கலக்குறாரு. குப்பு, உங்க கரையோரத்துல புதுச் செடிக்கு விதை கொடுத்தாச்சு.. அப்டியே பிடிச்சு எழுதுங்க!!
இ. ரமணி - அந்நியனாக எனக்கு அறிமுகமாகி அப்படியே (மட்டுறுத்தல்) நண்பரானவர். பதிவுகள் அதிகம் படிக்கவில்லை என்றாலும், டெக்னிகல் சமாச்சாரம் எல்லாம் அலசுறது உண்டு.. (அதாவது, அவர் பேசுவாரு, நான் சும்மா கேட்பேன் :) )
ஈ. நாகை சிவா- சங்கத்துப் புலியைக் கூப்பிடாவிட்டால், யானை மேல பாய்ஞ்சிட்டா?!! அதான் ஹி ஹி!!
உ. பெருசு - பெருவில் உட்கார்ந்து தனியாக வெண்பா எழுதிக் கொண்டிருப்பவர். மறுபடி சங்கத்தவர் - மூத்த மெம்பர்.
ஊ. வவ்வால் - வலைப் பதிவுகளுக்கு வந்ததிலிருந்து எனக்குக் கோபமே வந்ததில்லை என்ற என் எண்ணத்தை முறியடித்த பெருமை முழுவதும் இவருக்கே.. கௌசிகன் பதிவில் கிட்டத் தட்ட ஆட்டோ அனுப்பி விடுவாரோ என்று நான் பயப்படும் அளவுக்கு சீரியஸாக சண்டை போட்ட முதல் பதிவர். அதிலிருந்து யானையும் வவ்வாலும் ரொம்ப ப்ரெண்ட்ஸ் தான். வவ்வால், தலை கீழா நின்னுகிட்டே ஆறு பதிவு போடுங்கய்யா.

இன்னும் நிறைய பேரை அழைக்க ஆசை. ஆனா, இந்த லிஸ்ட்ல இருப்பவர்கள் நான் விரும்பிய ஆட்களை நிச்சயம் அழைத்து விடுவார்கள். அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

இந்தப் பதிவு இத்தனை நீளமாகப் போனதற்கு மன்னிக்கவும். பொறுமையா படிக்க முடியாதவர்கள்(அதாவது, நான் ரொம்ப பொறுமையைச் சோதிச்சிருந்தா) தங்கள் கண்டனங்களை யாழிசைத் தாத்தாவிற்கு அனுப்பலாம். பார்சல், வி.பி.பி அலவுடு.

Tuesday, June 13, 2006

ஆசை.. ஆசை..

எனக்கு ரொம்ப நாளாவே ஒரு செய்தி விமர்சனப் பதிவு போடணும்னு ஆசை. செய்தின்னு ஏதாச்சும் படிச்சாத் தானே போட முடியும்? :)
அதான், என்னாலானது, விமர்சனத்துக்கு விமர்சனம்னு ஒரு பதிவு போடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

இந்த வார அவள் விகடன்ல ஒரு வாசகர் விமர்சனம்:

"ஜெயா டீவியில், சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் 'ஏன்?, எப்படி?, யாரு?' தொடர் புதுமையாக உள்ளது! ஒரு கொலை அல்லது கொள்ளை நடப்பதைக் காட்டி குற்றவாளி யார் என்பதை நேயர்களையே துப்பறிந்து கூறச் சொல்வது சுவாரஸ்யமான ஐடியா.."


எப்போதிருந்து இவங்க துப்பறியும் தொடர் எல்லாம் போடறாங்கன்னு தெரியலை.. ஆனா, இதைப் படிச்ச உடனே எனக்கு சட்டுனு நினைவுக்கு வந்தது இந்த கலைஞரின் கைம்மாறுன்னு ஒரு 'டிடெக்டிவ் ஸ்டோரி' போட்டாங்களே, அது தான்!

அதுக்கப்புறம் இந்த மாதிரி இறங்கிட்டாங்களோ?. அந்த டீமுக்கும் ஏதாவது வேலை கொடுக்கணுமே... இதுவும் அதே மாதிரி ப்ரோபஷனலா இருக்கான்னு யாராவது பார்க்கிறவங்க சொல்லுங்க.

டிஸ்கி: இது அரசியல் பதிவல்ல.. சும்மா ஆசைக்காக :))

Friday, June 09, 2006

நான் ஏன் மாற்றினேன்?

தமிழ் மணத்தில் இப்போது பொதுவாக "படம் மாற்றும் காலம்". எல்லாரும் தங்கள் ப்ரொபைலில் புகைப்படங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். 'சரி, ஊரோடு ஒத்துவாழ்' என்று நானும் படம் மாற்றுவது என்று முடிவெடுத்தேன்.

ஏற்கனவே எங்கள் சங்கப் பலகையில் என் படத்தை போட்டுவிட்டதால் யாரேனும் ஆட்டோ, ப்ளேன், சைக்கிள் அனுப்பும் முன் என்னுடைய படை பலத்தை ஒரு படமாகப் போட்டு 'பட'பலமாக்கிக் கொள்ளலாம் என்று எண்ணம்.

என்ன போடலாம் என்று யோசித்த போது எனக்கு நினைவுக்கு வந்தது யானை தான்..

"யானை யானை அழகர் யானை அம்பாரி யானை .." என்று பாடிய காலத்திலிருந்து எனக்கு யானை என்றால் ஒரு பாசம்.(முழுப் பாட்டும் நினைவில்லைங்க.. இது மட்டும் தான் இருக்கு.. ). இவ்வளவு பெரிய மிருகத்தை எப்படிப் படைத்திருக்கிறான் என்று கொஞ்சம் ஆச்சரியமும் உண்டு. அதிலும் ஆப்பிரிக்க நாட்டு யானைகளின் சில படங்களைப் பார்த்து விட்டு வியப்பு பலமடங்காகி விட்டது.

என்னிடம் தொட்டுத் தொட்டுச் சேர்த்த, யானை படம் போட்ட புத்தகம், டைரி, துணிமணி, கர்சீப் என்று நிறைய உண்டு. ஏன், சமீபத்தில் மதுரை போனபோது யானை படம் போட்டிருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக பயனே இல்லாமல் ஒரு 'மஞ்சள் பை'யையும் வாங்கி, அதை அமெரிக்கா வேறு எடுத்து வந்தேன். யானை பொம்மைகள், மண், பஞ்சு, மார்பிள், செம்பு எல்லா மூலப் பொருளிலும் சேர்த்து ஒரு 100க்கு மேல் இருக்கும்(துளசி அக்கா பக்கத்துல வர முடியுமா? ம்ஹும்..!! ). இதுவரை சென்று வந்த எல்லா ஊர்களிலும் ஒரு யானை வாங்கியே இருப்பேன்(அட! பொம்மை தாங்க :)). என் அம்மாவுக்கும் யானை பிடிக்கும் என்பதால், ஊர் விட்டு ஊர் வரும்போது எந்த யானை யாருக்குச் சொந்தம் என்று வேறு ஒரு இழுபறி நடக்கும்.





சின்ன வயதில் எனக்கிருந்த "வாழ்க்கை லட்சிய"ங்களில் ஒன்று யானை வளர்ப்பது. ஒரு யானையை வாங்கி வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும்.. எம்ஜியார் படத்தில் நாலு யானைகளை வைத்து வளர்த்ததைப் பார்த்த பின் (படம் பேரு என்னங்க?) எனக்கு இது நிச்சயம் நடக்கக் கூடியது தான் என்னும் நம்பிக்கை வந்து விட்டது.

வயதாக ஆக, என் அப்பாவைப் போட்டு பிடுங்கிக் கொண்டே இருந்ததில் "யானை எல்லாம் வாங்கித் தர முடியாது.. வேண்டுமானால் இதை வைத்துக் கொள்" என்று பூனை வளர்க்க அனுமதி கிடைத்தது.

இப்போது சொந்தமாக சம்பாதிக்க ஆரம்பித்த பின் யானை வளர்க்கும் ஆசை அறவே போய்விட்டது.

முதல் காரணம், யானையைக் கட்டும் அளவுக்கு பெரிய வீடு வாங்குவது என்பதே கேள்விக் குறி.

அடுத்து, யானையும் பாவம். காட்டில் நிம்மதியாக இருக்கும் அதை என் ஒருத்தியின் ஆசைக்காக பிடித்து வந்து, வளர்த்து, அது இயல்பாக சாப்பிடாமல் நம்மை எதற்கெடுத்தாலும் எதிர்பார்த்து.. ம்ஹும்.. இதெல்லாம் ஒத்துவராது..

உஷாவின் குதிரையைப் பற்றி பேசும்போது, யானை ரொம்ப சோம்பேறி என்று ஒரு கருத்து வந்தது. யானை படம் போடுவது என்று முடிவு செய்த போது, நம்ம சுறுசுறுப்புக்கு(??!) அடக்கமான யானை போதாது என்று முடிவு செய்து ஓடும் யானையைத் தேடிப் போட்டேன். யானை எப்படி?

கொட்டும் பொன்னி(ஸ்)ன் ரசிகர்களுக்காக, இறுதியாக ஒருமுறை :


இப்போவே அள்ளிக்குங்க..

போனா வராது, பொழுது போனா கிடைக்காது :)

புது யானை.. மாற்றிக் கொண்டே இருப்பதால், இங்கே பதிக்கிறேன்..



Thursday, June 08, 2006

நெற்றிக்கண் திறப்பினும்...

எப்போ பார்த்தாலும் விளையாட்டுத்தனமாவே யோசிக்குதே இந்தப் பொண்ணுன்னு நினைக்கிறவங்களுக்கு:

தருமியோட "நான் ஏன் மதம் மாறினேன்" ஏழு பாகமும் படிச்சதும், நல்லா ரெஸ்ட் எடுத்து தூங்கி கிட்டு இருந்த மூளை(?! அட நம்புங்க.. இங்கயும் கொஞ்சமே கொஞ்சம் இருக்கு :)) நான் என்ன சொல்லியும் கேட்காம எழும்பி டக்குனு உட்கார்ந்திடுச்சு.. எவ்வளவு சொல்லியும் சமாதானமாகாம நம்ம சிறுமூளையும் பெருமூளையும் ஓவர் டைம் போட்டதுல, தருமி இன்னோரு பார்ட் மதம் மாறியதை விளக்கும் அளவுக்கு தொல்லையாய்டுச்சு..

ஏன் பதிவு போடலைன்னு கேட்கும் நூற்றுக் கணக்கான மகா ஜனங்களுக்கு (எல்லாம் ஒரு பில்டப் தான் :)) ஒரே ஒருத்தர் தான் தப்பித் தவறி கேட்டுட்டாரு):
இந்த பதிவைப் போய் பாருங்க.. தருமி வீட்ல கொஞ்ச நாளைக்கு நம்மளும் கோ ஹோஸ்ட்..

தர்ம அடி கொடுக்கணும்னு நினைக்கிறவங்களும் அங்கயே வந்து நல்லா போடலாம் :)[பிகு: வ.வா.சங்கத்துக்கும் இந்த தர்ம அடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. சங்கத்து மக்கள் அக்காவுக்கு என்னாச்சுன்னு பயந்து போய் வேப்பிலை அடிக்க பூசாரிகளை அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் :)]

Friday, June 02, 2006

ஒற்றைச் சிறகில் நின்ற மயிலார்

சோழிங்க நல்லூர்

மே 15, 2006



சென்னையை அடுத்த சோழிங்க நல்லூரில் பிரத்யங்கரா தேவி கோயில் மிகப் பிரசித்தம். பிரத்யங்கரா மற்றுமன்றி சித்திவினாயகர், முச்சந்தி வினாயகர், ஆக்சென்சர் அம்மன் (அதாங்க அந்தக் கம்பனி வாசல்ல பந்தல் போட்டு வச்சிருக்காங்களே) முதலான சிலபல சக்திவாய்ந்த தெய்வங்களும் உள்ளன.



இப்படிப் பட்ட ஆன்மிகச் சிறப்பு வாய்ந்த தலத்தில் தான், ('தமிழ்மண'க்கும் நேரத்தில் மட்டும்) செய்யும் தொழிலே தெய்வம் என்னும் 'கொள்கை'ப் பிடிப்புடைய பொன்ஸின் அலுவலகமும் உள்ளது. இவ்வாறான வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தலத்திற்கு, தமிழ்ப் பதிவுலகின் பிஞ்சில் பழுத்த ஆன்மீகச் செம்மலும், தமது மர்மமான மயிலாருடன் பல்வேறு புண்ணியஸ்தல யாத்திரைகளை அடிக்கடி மேற்கொள்ளும் ஜி.ரா எனப்படும் கோ.ராகவன் சமீபத்தில் விஜயம் செய்தது, பதிவுலகில் பலரும் அறிந்ததே..



'கல்கி' வார இதழில் கைப்புள்ள கட்சி பற்றி வெளிவந்த பொன்னான நாளில், வ.வா.சவின் மின்னல் வேக வளர்ச்சியையும் தலைவர் கைப்புள்ளையையும் பாராட்டவேண்டும் என்று ஜி.ராவின் மயிலார் ஒற்றைச் சிறகை மட்டும் விரித்து அடம்பிடித்த காரணத்தால் வேறு வழியின்றி ப.ம.கவின் பெங்களூர் கிளை கொபசெ ஜி.ராவும், வ.வா.ச.வின் அனைத்திந்திய கொபசெ பொன்ஸை அவரது அலுவலகத்திலேயே (அட, அலுவலக கேன்டீனிலேயே) சென்று சந்தித்தார்.



பழைய ஆறிப்போன செய்தியாக இருந்தாலும், வலையுலக அன்பர்களின் வேண்டுகோளுக்காகவும்(?!), (கனவு) கண்டதை எல்லாம் சந்திப்பு என்று எழுதும் சிலரின்(சிபியின் அல்ல) கொட்டத்தை அடக்கவும், மீண்டும் பழைய நினைவுகளைத் தூசி தட்டி, உங்கள் பார்வைக்கு:* ராகவன் அலுவலகத்தில் வ.வா.சவைச் சேர்ந்த 'புகழ் பெற்ற' மக்களை உள்ளே விடுவதில்லை என்னும் காரணத்தால், சங்கத்தின் கொள்கைகளைப் போன்ற பரந்த மனதும், நிறைந்த இடமும் கொண்ட பொன்ஸின் அலுவலகத்திலேயே இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

  • ராகவன் வழக்கம் போல, இதுவரை வலைபதிவுகளில் இடம்பெற்ற எந்தப் புகைப்படத்துடனும் ஒத்துப் போகாத முற்றிலும் புதிய தோற்றத்தில் வந்திருந்தார்.. அடையாளம் தெரியாமல் "திரு திருவென" முழித்து நின்ற பொன்ஸை எப்படியோ (திரு திரு ?!) அவரே தெரிந்துகொண்டார்

  • மதிய உணவு வேளையாதலால் கிட்டத் தட்ட 500 பேர் பங்கு கொண்ட இந்தக் கூட்டத்தில், ஜி.ரா, பொன்ஸைத் தவிர மற்றவர்களை வலை பதிவர்களுக்கு மட்டுமல்லாது, பொன்ஸுக்கே (அதென்ன 'கே'? அட, எங்க கம்பனியாச்சே!) வேறு யாரையும் தெரியாது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது

  • ராகவன் புதிய தொழிற்நுட்பத்தைச் சேர்ந்த புதுமாதிரியான டிபன் பாக்ஸ் வைத்திருக்கிறார். ப்ளாஸ்டிக்கால் ஆன (ப்ளாஸ்டிக் தானே ஜி.ரா?) அந்த மூன்றடுக்கு சிற்றுண்டி டப்பாவைத் திறக்கும் விதமே புதுமை.. ஒவ்வொரு அடுக்கும் திருகுக் குழல்களோடு அடுத்த அடுக்கின் மேல் பொருந்துவதால், உள்ளே எடுத்து வரப்படும் திரவ உணவு எதுவும் வெளியே சிந்துவதில்லை. புதுமையான அந்த சிற்றுண்டி (பேருண்டி) டப்பாவைச் சற்று உற்று பார்த்துவிட்டு அதன் பின் தான் சொந்த டப்பாவைத் திறக்கவே முடிந்தது.

  • அத்தனை முன்னேற்பாடு இல்லாத காரணத்தால் மெனு பெரிய விதத்தில் சிறப்பாக இல்லை. கூட்டணி பற்றியும் பேச விழைந்ததால் ஜி.ரா மட்டும் ஏதோ ஒரு கூட்டை எடுத்து வந்ததாக நினைவு.. இங்கிருந்து அந்த உணவைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், பொன்ஸ் விடும் பெருமூச்சுகள் கணினித் திரையைப் பாழாக்கிவிட வாய்ப்பிருப்பதால், ஓவர் டூ ஜி.ரா. நியாபகம் இருந்தா எடுத்து விடுங்க..

  • அதிக பட்சம் ஒரு மணி நேரமே நீடித்த இந்தச் சந்திப்பின்போது,
    • மால்கேட்டிலிருந்து மெயிலே வராத போது, கைப்புள்ள கல்கியில் வந்தது எப்படி?

    • இளவஞ்சி வாத்தியாரின் எந்தெந்த வகுப்புகளுக்கு யார் யார் போவது, எந்தெந்த வகுப்புகளை யார் யார் கட்டடிப்பது?

    • ராகவன் அலசிப் பிழிஞ்ச தேர்தல் முடிவுகள் காய்ந்து விட்டனவா?

    • அதே நேரத்தில் சென்னையில் இருந்த தருமியைச் சந்திக்க முடியுமா? (கடைசி வரை முடியவில்லை, ஜூனியர் ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வருவது போல் 'தருமி ரொம்ப பிஸி..')
    • வ.வா.ச., ப.ம.க நல்லிணக்கக் கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?


    என்பது போன்ற நாட்டுக்குத் 'தேவையான' முக்கியமான சங்கதிகள் விவாதிக்கப்பட்டன. மேலும் பல பேசப் பட்டிருந்தாலும், மேலான விஷயமான மெனுவே மறந்து போனதால், மற்ற சங்கதிகள் சுத்தமாக ப்ளாங்க்!! ராகவனுக்கோ மயிலாருக்கோ நினைவிருந்தால் சொல்லட்டும்.



சாப்பாடு முடிந்ததும், அலுவலக வளாகத்தை அதிகம் சுற்றாமலேயே பார்த்துவிட்டு ஜி.ராவும் மயிலும் விடைபெற்றுச் சென்றனர். (அப்பாடா.. ஒருவழியா எழுதிட்டேன் ஜி.ரா. இனியும் நீங்க என்னை மிரட்ட முடியாது!!)