Sunday, September 16, 2007

உங்க வரலாறு என்ன?

அப்பாவுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை என்றால் அது கடன் தான். கடன் வாங்குவது மட்டுமல்ல.. யாருக்காவது கடன் கொடுப்பது என்றாலும் சுத்தமாக பிடிக்காது. சின்ன பென்சில் பேனா கடன் வாங்கினாலே, ஒழுங்காக அதே நாள் திருப்பிக் கொடுத்துவிட்டுத் தான் வீட்டுக்கு வர வேண்டும் என்பார். யாராவது கைமாற்றாக பணம் கேட்டால் கூட ‘கடனெல்லாம் எனக்குப் பிடிக்காது’ என்று சொல்லி அவர் கேட்ட பணத்தை ‘இதோ வச்சிக்குங்க’ என்று சும்மாவே கொடுத்துவிட்டு வந்து ஏமாளி பட்டம் வாங்கும் ரகம் அவர்.
அவர் பெண் என்ற முறையில் நானும் கூட யாருக்கும் ஒரு ரூபாய் கடன் கொடுக்கவோ வாங்கவோ ஆயிரம் முறை யோசிப்பேன். வேலைக்குச் சேர்ந்த புதிதில் வங்கிக் கணக்கோடு இலவசமாக கடன் அட்டையும் தருவதாக சொன்னார்கள். கடன் என்ற சொல் வருவதாலேயே அதை வாங்க மாட்டேன் என்று முடிவாக சொல்லிவிட்டேன். வங்கி அலுவலர்கள் அதன் சிறப்பியல்புகளை எல்லாம் பயங்கரமாக விளக்கியபோதும் ‘நோ சான்ஸ்’ என்று முரண்டு பிடித்ததில் ‘ஆளை விடு!’ என்று ஓடி விட்டார்கள்.
அதன்பின்னர் முதல் மூன்று மாதங்களுக்குள் எங்களுடன் வேலை பார்த்த நண்பன் ஒருவனின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருந்தது.. நண்பன் பொதுவாக சங்கோசப் பேர்வழி. நான் உட்பட வெகு சிலரே அவனுக்கு அந்த ஊரில் தெரிந்தவர்கள். நானும் மற்றொரு தோழருமாக மாலை அந்த அம்மாவைப் பார்க்கப் போகவும், அவர்கள் அட்மிட் செய்யப்பட்டிருந்த மருத்துவமனையிலிருந்து வேறு இடத்துக்கு அழைத்துப் போக வேண்டியதாகிவிட்டது. அலுவலகத்தில் எங்கள் எல்லாருக்கும் குடும்ப சகிதம் மெடிக்ளெய்ம் எடுத்துக் கொடுத்திருந்தார்கள். ஆனால் அந்த ஆஸ்பத்திரி இந்த மருத்துவக் காப்பீட்டின் கீழ் வராது என்பது நண்பனுக்குத் தெரிந்திருக்கவில்லை (என்று நினைவு).. இக்கட்டான அந்த நொடியில் மற்றொரு நண்பர் தனது கடன் அட்டையைத் தேய்த்து மருத்துவச் செலவுகளைக் கொடுத்து ஒருவழியாக பிரச்சனையைத் தீர்த்து வைத்தார். இல்லையென்றால் இருபதாம் தேதி வாக்கில் நிகழ்ந்துவிட்ட அந்த செலவைச் சமாளிக்க எங்கள் மூவரின் சம்பளத்தைச் சேர்த்தாலும் முடிந்திருக்காது.
அன்றைக்கு முடிவெடுத்து ஒருவழியாக எங்கள் அலுவலக சிபாரிசில் கடன் அட்டை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினேன். அப்போதெல்லாம், இப்போது போல் நொடிக்கு மூன்று பேர் அழைத்து ‘எங்க வங்கி கடன் அட்டை வாங்குங்களேன்..’ என்று கூவி விற்கும் காலமில்லை.. ஆனால் கடன் அட்டையை பயன்படுத்தாவிட்டால் அதை திரும்ப எடுத்துக் கொண்டுவிடப் போகிறார்களே என்று பயந்தே அதை பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.
குறித்த நாளில் கடன் அட்டைக்கான பணத்தைக் கட்டிவிடுவேன். ஒரு முறை கூட வட்டியோ, தாமதத்திற்கான பணத்தையோ, அதிக தொகையையோ கொடுத்ததாக நினைவில்லை.. ‘உனக்கெல்லாம் கடன் அட்டையே தேவையில்லை’ என்று தோழிகளும், ‘கடன் அட்டைன்னு பேர் இருக்கும் போது, அதைப் போய் பயன்படுத்தலாமா?’ என்று வீட்டிலும் என இரு பக்கமும் எனக்கு இடி தான் ;-)
இப்ப என்னத்துக்கு இந்தக் கதையெல்லாம்ங்கிறீங்களா? ம்ஹூம்.. இந்த ஊரில் இப்பத்தைய என் மிகப் பெரிய பிரச்சனையே கடன் வரலாறு இல்லாதது தான்.. வீடு கொடுப்பதானாலும், போன் இணைப்பு கொடுப்பதானாலும், அட கரண்ட் கனெக்ஷனுக்குக் கூட கடன் வரலாறு இருக்கான்னு கேட்கிறாங்க இங்க..
‘ஐயா, பணமா கொடுத்துடறேன்.. கடனே வேண்டாம்னு’ சொன்னால்.. ‘பணமெல்லாம் வாங்க மாட்டோம். உங்க கடன் அட்டை எண்ணைக் கொடுத்தாலே போதும்.. அப்புறம் நாங்க உங்க கடன் வரலாற்றைக் கண்டு பிடிச்சிகிட்டு வரோம்.. அதுக்குக் கூட அதிகம் சார்ஜ் பண்ண மாட்டோம்’ என்று ஒரு உதார்.
‘எனக்கு இந்த ஊரில் கடனும் இல்லை அதனால் வரலாறும் இல்லை, இந்திய கடன் அட்டை நம்பர் கொடுக்கவா? அதோட வரலாற்றைத் தெரிஞ்சிகிட்டு வரீங்களா? ‘
‘அந்நிய நாட்டு விவரங்களை நாங்க நம்ப மாட்டோம். உங்க பாஸ்போர்ட் எண்ணையே எங்க அரசாங்க முத்திரை இருந்தா தானே நம்புவோம்.. ‘
‘ம்கும்.. இப்ப நான் என்னதான் பண்ணனும்?’
‘எங்க நாட்டில் நல்ல கடன் வரலாறு இருக்கிற ஒரு நண்பர் அல்லது உறவினர் உங்களுக்கு உத்திரவாதம் கொடுத்தா உங்களுக்கு வீடு தரோம்.. ‘
‘இல்லைன்னா?’
‘இல்லைன்னா, சரியான கடன் வரலாறு இல்லைங்கிறதுனால நீங்க இன்னும் அதிக டெபாசிட் கட்ட வேண்டி இருக்கும். ‘
“கடன் அன்பை முறிக்கும்” என்று விழுந்து விழுந்து சொல்லிக் கொடுத்த அப்பாவிடம் சொல்லிக் கத்த வேண்டும் போலிருந்தது.. கடனுக்கு -இல்லை- கடன் வரலாறுக்கு இங்கே எத்தனை மதிப்பு என்பதைப் பற்றி..