Saturday, February 07, 2009

Confessions of a Shopaholic

சின்ன வயதிலிருந்து எனக்குப் பழக்கமான ஒரே நல்ல வழக்கம் புத்தகம் படிப்பது. கடந்த ஒரு வருடமாக அந்தப் பழக்கம் கூட என்னைவிட்டுப் போய்விட்டதோ என்று ஒரு தீவிர சந்தேகம் எனக்கு! எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் ஒரு அளவுக்கு மேல் படிக்க முடியாமல், என்னவோ படிப்பது என்ற பழக்கமே இல்லாமல் போய்விட்ட ஒரு உணர்வு. நல்ல வேளையாக எடுத்த புத்தகத்தை கீழே வைக்காமல் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் படிக்கும் வேகம் என்னுள் இன்னும் இருக்கிறது என்று நிருபிக்கும் வகையாக சோபி கின்சில்லரின் “Confessions of a Shopaholic” கையில் கிடைத்தது.

கதை ஒன்றும் பெரிய விசயமில்லை. நம்ம ஊரு பகல்கனவு கண்ட தயிர்க்காரி கதையைக் கொஞ்சம் இந்தக் காலத்து ஷாப்பிங் ஆசை பிடித்த பெண்களின் மீது ஏற்றிப் பின்னி இருக்கிறார். ஆனால் கதை சொன்ன விதம் தான் ரொம்பவும் அருமை. ஒரு காலத்தில் என் பாட்டி சொன்ன கதை போல ஒரு தொடர்ச்சியோடு போகிறது கதை. அதிலும் கற்பனையிலேயே கோட்டை கட்டும் கதைநாயகி ரெபெக்கா மனதில் நினைப்பதை எல்லாம் எழுதிக் கொண்டே வந்ததில், அவள் யோசிக்கும் விதம் போல் நாமே அடுத்தடுத்து யோசிக்கத் தொடங்கி விடுகிறோம்.
முக்கியமாக அவளின் பேதைத்தனமான எண்ணப் போக்கும், அவ்வளவு கடன் இருக்கும்போது கூட ஷாப்பிங் செய்யக் கிளம்பி விடுவதும், கடைத் தெருவுக்குப் போவதும் ஏதாவது வாங்குவதுமே அவளை மகிழச் செய்வதும் என்று அவள் தானே கதை நாயகியாகவும் நகைச்சுவை அரசியாகவும் இருக்கிறாள். ஓரளவுக்கு அடுத்து என்ன என்று ஊகிக்க முடிகிறது தான். ஆனாலும் அந்த ஊகம் கூட சுவையாக இருக்கிறது.
Girly Girl புத்தகம் என்று நண்பன் ஒருவன் சொன்னான், சின்ன வயதுப் பெண்களில் மனநிலையை அழகாக பிரதிபலிக்கத் தான் செய்கிறது. சொந்தமாக சம்பாதிக்கும் 23 வயதான பெண்ணான கதைநாயகி கூட இப்படி வரவுக்கு மீறி செலவு செய்யும் freakஆக இருப்பது தான் எனக்கு ரொம்ப ஆச்சரியம். நானும் ஒரு காலத்தில் கடை கடையாகப் போய் - (நம்ம ஊர் ரங்கநாதன் தெரு மாதிரி ஹைதராபாத்தில் கோடி, சார்மினார் ரேஞ்சுங்க நாங்க.. )- இதே மாதிரி கைக்கொள்ளாமல் வாங்கி வந்ததுண்டு தான். ஆனால் அதிலும் கூட ஒரு தெளிவு இருக்கும் (ஆமாமாம் என்று என் அப்பா முணுமுணுப்பது கேட்கிறதுதான்..) - வாங்கும் சம்பளத்தில் ஒரு பத்து பதினைந்து சதவீதத்துக்கு மேல் இது போன்ற செலவு நாங்கள் செய்ததில்லை..
குடும்பத்துக்கோ சேமிப்புக்கோ பணம் செலவு செய்யத் தேவையில்லாத பெண்கள் இயல்பாக செலவு செய்வதைக் கூட இந்தப் புத்தகம் அழகாகவே படம் பிடித்துக் காட்டுகிறது கதை. கடைசியில், பெக்கி தன் வரவு செலவைச் சரியாக நிர்வகிக்காத பொறுப்பின்மையை தானே புரிந்து கொண்டது எல்லாவற்றிலும் அழகாக வந்து முடிந்துவிட்டது.
இது படமாக வந்திருக்கிறதாம், இத்தோடு நில்லாமல், அடுத்தடுத்து இதே சோபி கின்ஸில்லா மேலும் மேலும் ஷாப்பஹாலிக் தொடர்கள் எழுதி இருப்பதாக தெரிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னாக இருந்திருந்தால், ரெபக்கா மாதிரியே அடுத்தடுத்து அந்தப் புத்தகங்களையும் வாங்கிப் படித்திருப்பேன்.. நல்லவேளையாக வளர்ந்துவிட்டேன்.