Tuesday, December 19, 2006

சென்னை பதிவர் சந்திப்பு - 3

[பனகல் பூங்காவைப் பற்றிய சுறுசுறுப்பைக் குறைக்கும் தகவல்களுடன் செ.ப.ச 2 நாளை.] ஒரு வழியாக பனகல் பூங்கா வேண்டாம் என்று முடிவெடுத்து நடேசன் பார்க்கில் நான்கரை மணி சுமாருக்குக் கூடியது பதிவர் சந்திப்பு. திரு, பாலபாரதி, லக்கிலுக் என்று மூன்று செல்பேசிகளும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க, கிட்டத்தட்ட பனகல் சென்றிருக்கக் கூடிய அனைவரையும் நடேசன் பார்க்கிற்கு அழைத்துவிட்டோம்.வந்திருந்தவர்கள் மற்றும் அவர்கள் சிறு அறிமுகமாக முன்வைத்த விஷயங்களுடன்:

 1. அருள்குமார்: கதை கட்டுரை போன்ற விஷயங்களை "உணர்வின் பதிவுகள்" என்றும் மற்றபடி தன்னை பாதித்த விஷயங்களை "நான் பேச நினைப்பதெல்லாம்" என்ற வலைப்பூவிலும் எழுதி வருவதாகச் சொன்னார் இவர். பா.க.ச.வின் founder member இவர் தான் என்று சந்துக்குள்ளிருந்து பாலபாரதி பரிதாபமாக குரல் கொடுத்ததை யாரும் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்

 2. வீரமணி: உதவி இயக்குனராக பணியாற்றும் இவருக்கு வலைப்பூ அறிமுகப்படுத்தியது அருள்குமார் என்றும், தம் கவிதைகளுக்காகவே வலைப்பூ தொடங்கியதாகவும் தொடர்ந்து எழுதாவிட்டாலும் அவ்வப்போது வந்து தலைகாட்டி விட்டுப் போவதாகவும் குறிப்பிட்டார். (பொகச முதல் உறுப்பினரான வீரமணியை வலைப்பூக்களில் சேர்த்ததற்காக அருளைப் பார்த்துக் கொஞ்சம் பல்லைக் கடித்துக் கொள்வதைத் தவிர அப்போது வேறெதும் செய்ய முடியாமல் போயிற்று :( )

 3. திரு: கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்ட பின்னணியுடன் கடைசியாக தம்மை அறிமுகம் செய்து கொண்டார் திரு. ஆலமரம், பனித்துளி, பெரியார் என்ற தனது வலைப்பூக்களின் சிறு அறிமுகத்தையும் அளித்தார்.

 4. லக்கிலுக்: கருத்து போன்ற களங்களிலிருந்து வலைப்பூவிற்கு வந்ததாக குறிப்பிட்ட லக்கிலுக், சும்மா டைம் பாஸுக்குத் தான் பதிவெழுதுவதாகக் குறிப்பிட்டார். தன் புதுவருட வாக்குமூலத்தை இன்னுமொருமுறை நினைவுப்படுத்திக் கொண்டார்; அதை நிறைவேற்றுவது எத்தனை கஷ்டமாக இருக்கிறது என்பதையும்

 5. பகுத்தறிவு: அறிவகம் என்ற பெயரில் பதிவெழுதும் பகுத்தறிவும், கருத்துக் களம், தமிழ்நாடு டாக் போன்ற பாரம்களிலிருந்து வந்தவர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். ஏதோ ஒரு நாள் தமிழ்நாடு டாக்கில் ஒரு பதிவைப் பார்த்தபோது, தனக்குப் பிடித்த சில தலைவர்களை அங்கே குறைவாக எழுதி இருந்ததைப் பொறுக்காமல் பதிவெழுதத் தொடங்கியதாக விவரித்தார்

 6. ரியோ: தமிழ்நாடு டாக், கருத்துக் களம் வழியே லக்கிலுக் மூலமாக பதிவுகள் அறிமுகமானதாகச் சொன்னார் ரியோ. பொதுவாக கூட்டத்தில் மிக அமைதியாக இருந்தார்கள் இவ்விருவரும்

 7. சுந்தர்: கடந்த ஒரு மாதமாகத் தான் பதிவெழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்ன சுந்தர், இந்த சந்திப்புக்கு வந்ததே தனக்கு ஏன் பின்னூட்டங்கள் குறைவாக வருகின்றன என்று அறியத்தானாம். வலைப்பூ சண்டைகளைப் பார்த்து பயந்து வெறும் நகைச்சுவை சமாச்சாரமாகவே எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். [நகைச்சுவை என்றதும் பா.க.சவின் பெருமைகளைச் சொல்லிவிடுவோம் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். ஆனால் அதற்குள் தப்பித்துவிட்டார்! ].

 8. விக்கி: ஒருவருடமாகவே தண்டோரா கொட்டிக் கொண்டிருக்கும் விக்கி, தனக்குப் பதிவர்கள் அதிகம் தெரியாது என்றார். சமீபத்தில் தொடங்கப்பட்ட பிளாக்கர் உதவி பக்கத்தைப் பற்றியும் குறிப்பிட்டார்

 9. சிவஞானம்ஜி: தொடர்ந்து பதிவெழுதிக் கொண்டிருந்த தான் இப்போது அதிகம் எழுதாமல் பின்னூட்டங்களில் மட்டுமே வந்து கொண்டிருப்பதாக சோகமாகக் குறிப்பிட்ட சிஜி, தான் இப்போதும் ஜிபோஸ்ட்டில் லக்கிலுக்குடன் தொடர்ந்து போட்டியிடுவதையும் நினைவுப்படுத்தினார்

 10. துளசிகோபால்: "சொல்லிக்கிடற மாதிரி அதிகமில்லை. ரெண்டு வருசமா நானும் பதிவெழுதுறேன்" என்று தனக்கே உரிய அடக்கத்துடன் சொல்லிக் கொண்டார் துளசியக்கா. "முதன்முதல் யானையை வலையுலகுக்கு அழைத்து வந்தவர் நீங்கள் தான்" என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார் பாலபாரதி. "எனக்கு அப்புறம் பொன்ஸுக்குத் தான்" என்று ஏற்கனவே எழுதியிருந்ததை மீண்டும் சொல்லி உறுதி கொடுத்தார் துளசியக்கா. (தாங்க்ஸ் துளசிக்கா..)

 11. தமிழ்நதி: கனடாவிலிருந்து சென்னை வந்திருப்பதாகக் குறிப்பிட்ட நதி "இரண்டுமே எங்கள் சொந்த தேசமில்லை." என்று சேர்த்துக் கொண்டபோது லேசாக மனம் சோகமானது. சென்னை பற்றிய தமிழ்நதியின் பதிவைப் பற்றி ஓகை குறிப்பிட்டுப் பாராட்டினார்.

 12. பொன்ஸ்: நிறைய யானைகள் வைத்திருக்கும் வலைப்பூ என்னுடையது என்று முடிப்பதற்குள், அதனால் தான் லோட் ஆக லேட்டாகுது என்று எல்லா பக்கத்திலிருந்தும் குரல்கள் கிளம்பியது.

 13. மா.சிவகுமார்: லக்கி போல் சும்ம டைம் பாஸுக்கு இல்லாமல், நிஜமான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற முனைப்புடன் பதிவெழுத வந்ததாகக் குறிப்பிட்ட சிவகுமார், தம் எல்லா வலைப்பூக்களின் பெயர், காரணம் போன்ற விஷயங்களைச் சொன்னார்.

 14. யெஸ். பாலபாரதி: "குமுதம், விகடன் இவற்றின் அட்டைப்படத்தில் போடும் நடிகைகள் படம் மாதிரி நானும் வலைப்பூக்களில் இருக்கிறேன்" என்று சொல்லி எல்லாருடைய தன்னடக்கத்தையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார் பாலபாரதி. "இன்றைய தேதிக்கு பாகச அல்லது பாலபாரதி என்று எழுதினாலே பதிவுகளில் ஹிட்ஸ் கூடுவதாகச் சொல்கிறார்கள்" என்று உபரி தகவலையும் கொடுத்து, இதுவரை பா.க.சவில் இல்லாதவர்களையும் "நாம் கூட சேர்ந்துக்கிடலாமே!" என்று யோசிக்கவைத்தார்.

 15. ப்ரியன்: நான் தான் ப்ரியன் என்றவுடனேயே, "ஓ.. காதல் கவிதைகள் எழுதும் ப்ரியனா?' என்று நாலாபுறத்திலிருந்தும் சத்தம் வந்தது. கவிதைகள் எழுதும் ப்ரியன் என்று இவரும் அடக்கம் கொள்ள, விடாமல் யாரோ, காதல் கவிதைகள் என்று அழுத்திச் சொன்னார்கள். "இல்லை.. மற்ற பொருட்களிலும் கவிதை எழுதுவேன்; ஆனால் காதல் கவிதைகள் தாம் அதிகம் கவனம் பெறுகின்றன போலும்" என்று கழன்றுகொண்டார்.

 16. த. அகிலன்: கனவுகளின் உலகம் என்று பதிவெழுதி வருகிறேன் என்றார் அகிலன். போன கூட்டத்தில் மின்னியதற்குத் தொடர்பில்லாமல், இவரும் அமைதியே உருவாக இருந்தார்.

 17. கோ. இராகவன்: "ஆன்மீக விஷயங்கள் சிலது எழுதுவேன். அத்தோட, எங்கயாவது ஊருக்கு போய் வந்தா, படிக்கிறவங்க வெறுத்துப் போகுமளவுக்குத் தொடரா எழுதி போரடிப்பது என் வழக்கம்" என்று அடுத்த தன்னடக்க விளக்கத்தோடு வந்தார் ஜி.ரா.

 18. ஓகை நடராஜன்: "சும்மாத் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்; கொஞ்ச நாளாகத் தான். அதிகம் எழுதும், பொதுவாக பின்னூட்டம் மட்டும் இடுபவன்" என்று அறிமுகம் செய்து கொண்டார் ஓகை. "இதுவரை நான் பின்னூட்டமிடாத பதிவுகளே இருக்க முடியாது. இங்குள்ள அனைவருக்குமே பின்னூட்டம் போட்டிருக்கிறேன்" என்று சொன்னதும், சுந்தர் குறுக்கிட்டு, "எனக்கு இன்னும் யாரும் போடலை" என்று அங்கலாய்த்துக் கொண்டார் (சுந்தர் கவனிக்க, பாலபாரதி சொன்ன யோசனையை முயற்சி செய்து பார்க்கலாம் ;)]

 19. தமிழி: இந்த வார சந்திப்பில் நட்சத்திரம் தமிழி. ஜெய்சங்கரின் மூலம் பதிவுகளுக்கு அறிமுகமான தமிழி, புது ஊருக்கு வந்ததால் நண்பர்கள் அதிகம் இல்லாமல் போன கவலைக்கு வடிகாலாக பதிவெழுதத் தொடங்கியதாகக் குறித்தார். பொதுவாக எல்லா விவாதங்களையும் இந்த முறை தொடங்கி வைத்தவர் இவரே எனலாம். லக்கிலுக்குக்கு ஜிபோஸ்டில் தீவிர போட்டியைக் கொடுப்பவர்களில் தானும் ஒருவர் என்பதையும் சொல்லிக் கொண்டார்.

 20. We the people: "என்னைக் கவர்ந்த அரசியல், சுற்றியுள்ள உலகம் இவற்றைப் பற்றி எழுதவே வலைப்பூ வைத்திருக்கிறேன்" என்பதுடன் மறக்காமல், "பாகசவின் தூண்களில் ஒருவன்" என்பதையும் குறிப்பிட்டார் ஜெய். ஜெய் இருப்பதால் தான் பாகச இன்னும் ஆட்டம் காணாமல் இருக்கிறது என்றால் மிகையில்லை.

 21. நிர்மலா: "அனுபவம் நிகழ்வுகள் என்று எப்போதாவது எழுதுவது என்வழக்கம்" என்றார் நிர்மலா. "அடுத்த கூட்டத்திற்கு வரும் முன்னராவது கொஞ்சம் வலைப்பூக்களில் என்ன நடக்கிறதென்று தெரிந்து கொண்டு வரவேண்டும்" என்று சொல்லிக் கொண்டார்.

 22. அன்புடன் ச.சங்கர்: முதன் முறையாக கூட்டங்களுக்கு வரும் சங்கரும், தாம் இதுவரை அதிகம் எழுதவில்லை என்றார். கடைசியாக எழுதிய முல்லை பெரியார் பற்றிய கட்டுரை பூங்காவில் இடம்பெற்றதைக் குறிப்பிட்டுத் தம்மை அடையாளம் காட்டிக் கொண்டார்.

 23. சுகுணா திவாகர்: மிதக்கும் வெளி என்ற பெயரில் கவிதை கட்டுரை முதலியவை எழுதி வருவதாகச் சொல்லிக் கொண்டார் சுகுணா. போட்டி சந்திப்பு என்னவாயிற்று என்று கடைசி வரை சொல்லவில்லை :)


அறிமுகங்கள் முடிந்தபின் திரு தமது கையெழுத்து இயக்கத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார். இதுவரை சேர்ந்துள்ள ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துகளுடன் அந்தக் கோரிக்கையையும் இந்திய அரசாங்கத்திற்கோ அல்லது தமிழக அரசுக்கோ அனுப்பலாம் என்று யோசனையை முன்வைத்தார். தமிழி, "இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காவது அரசியல் தலைவர்கள் ஏதேனும் பேசவாவது செய்கிறார்கள், நம்மை மட்டுமே நம்பி வந்து சேரும் அகதிகளை நாம் நடத்தும் விதம் அதை விடக் கொடுமையாக இருக்கிறது" என்று ஆதங்கப்பட்டார். மதுரையில் தான் சென்று நேரில் பார்த்து வந்த அகதி முகாம் ஒன்றினைப் பற்றி அவர் விவரிக்கவும், அதைப் பற்றி என்ன செய்யலாம் என்று பேசப்பட்டது."பத்து வருடங்களுக்கு முன்னால் இதைப் போல் பூங்காக்களில் அமர்ந்து இலங்கை பற்றிப் பேசக் கூட நம்மால் முடிந்திருக்காது" என்றார் சிவகுமார். 'சொந்த நாட்டு மக்களையே அகதிகள் போல் நடத்தும் அரசாங்கத்தில் அகதிகளை மதிப்புடன் நடத்துவது கடினமே' என்றார் சுகுணா திவாகர். திபெத்திய, வங்க தேச அகதிகளை மிகவும் நன்றாக நடத்துவதாகத் தான் கண்டு வந்த வட இந்திய அகதி முகாம்களின் நிலையைப் பேசினார் பாலபாரதி.வலைபதிவர்களுக்குள் ஒரு குழு போல் அமைத்து அகதி முகாம்களைப் பார்வையிட்டு வந்தால், எல்லாரும் சேர்ந்து தெரிந்தவர் அறிந்தவர் வட்டத்தில் விவரம் தெரிவித்து இன்னுமொரு கையெழுத்து இயக்கம் தொடங்கலாம் என்ற யோசனையை முன்வைத்தார் தமிழி. அதற்கான ஏற்பாடுகள் என்னவென்பதைக் கண்டு சொல்வதாக பாலபாரதி சொன்னார். வலைபதிவர் குழுவென்றால், அதில் யார் யார் இருக்க வேண்டும் அந்த ஐந்து ஆறு பேருக்கு ஒரே சமயத்தில் நேரம் கிடைக்குமா என்றெல்லாம் விவாதம் நீண்டது. எப்படியும் வெளியாட்கள் யாரையாவது சேர்த்துக் கொண்டுதான் போக வேண்டி இருக்கும் என்றார் பாலபாரதி.வெளிநாட்டினருக்குத் தெரிவதை விட ஈழம் குறித்த பிரச்சனைகள் இந்திய நாட்டினருக்குத் தெரிவது மிக மிகக் குறைவே என்றார் திரு. பெல்ஜியத்தில் தெரிந்து வந்த விஷயங்கள் தாம் இன்னமும் தான் பேசிக் கொண்டிருக்கும் ஈழ நிலை என்று அவர் சொன்னபோது ஈழப் பிரச்சனையில் ஊடகங்களின் பங்கு எத்தனை குறைவாக உள்ளது என்பதை எல்லாரும் உணர ஏதுவாயிற்று.தமிழி கிளப்பிய அடுத்த பிரச்சனை பின்னூட்ட மட்டுறுத்தல் பற்றியது. தன்னைப் பாராட்டும் விமர்சனங்களை மட்டுமே வெளியிட இந்தப் பின்னூட்ட மட்டுறுத்தல் உதவி செய்கிறது என்பதால் மட்டுறுத்தல் இருக்கக் கூடாது என்றார் தமிழி. மட்டுறுத்தல் இல்லாத காலங்களைப் பற்றிய விவரங்களை அவருக்குச் சொல்லிப் புரியவைக்கவும், அடுத்து தேன்கூடு போட்டியைப் பற்றியும் தனது அதிருப்தியை வெளியிட்டார். ஆக்கங்களைப் படிக்காமலே தெரிந்த பதிவர் பெயர் பார்த்தே ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வழி வகுக்கும் தேன்கூடு போட்டியின் நடைமுறையில் தமக்கு ஒப்புமை இல்லை என்றார்.முதலில் ஒரு நடுவர் குழு ஆக்கங்களைப் படித்து அவற்றில் முதல் பத்து என்று தேர்ந்தெடுத்துக் கொடுத்து அதன்பின் ஓட்டெடுப்பு என்பது போல் இருந்தால், குறைந்த பட்சம் ஓட்டு போடுபவர்களாவது எல்லாவற்றையும் படிப்பார்கள் என்ற யோசனையை கோ. ராகவனும் ஆமோதித்தார்.அடுத்ததாக, பதிவர் சந்திப்பு பற்றிய விவரங்கள் லக்கிலுக் பதிவில் மட்டும் வந்ததால் அதிகம் பேர் பார்வையிட்டிருக்க முடியாமல் போயிருக்கும் என்றார் ஓகை. தமிழ்மணம்/ தேன்கூடு போன்ற வலைதிரட்டிகளின் முகப்பில் இது போன்ற சந்திப்பின் செய்திகள் வெளியிடலாம் என்ற யோசனையையும் முன்வைத்தார். வலைபதிவர் சந்திப்பு மாதமாகவே ஆகிவிட்ட நவம்பர்-டிசம்பரில் இது போன்ற அறிவிப்புகளை அடுக்குவது நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வி எழுந்தது. என்னைப் பொறுத்தவரை, இது போன்ற சந்திப்புகளைப் பற்றி ஒரே ஒரு பதிவர் அறிவிப்பு கொடுப்பதை விட, தினம் ஒரு பதிவர் என்ற கணக்கில் குறைந்தது மூன்று பதிவர்களின் வலைப்பூக்களில் அறிவிப்பு கொடுக்கலாம்.முதன்முறையாக பதிவர் சந்திப்புகளில் இனிப்புகள் வழங்கப்பட, அத்துடன் கூட்டம் கலைந்து சின்னச் சின்னக் குழுக்களாக பிரிந்து பேசத் தொடங்கினர். ஏழரை மணிக்குப் பூங்காவை விட்டு நான் வெளியேறும் போது, இன்னமும் பலர் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.ஆகக் கூடி இந்தப் பதிவர் சந்திப்பின் முடிவுகள்/தீர்மானங்கள்:

 • ஈழ அகதி முகாம்களைப் பார்க்கச் செல்வது பற்றிய விவரங்களைப் பாலபாரதி சேகரித்து அளிப்பார்
 • இனிமேல் பதிவர் சந்திப்புகள் வைத்தால் குறைந்த பட்சம் சந்திப்பு நடக்கும் தினத்திலாவது வலைதிரட்டிகளின் அறிவிப்பு பகுதியில் அவற்றைத் தெரியச் செய்யலாம்.- வேறு யோசனைகள் இருந்தாலும் பின்னூட்டத்தில் முன்வைக்கலாம்
 • கையெழுத்து இயக்கத்தில் சேர்ந்த கையெழுத்துகளோடு ஐநா தலைவர்களுக்கு திரு நமது முறையீட்டை அனுப்பி வைப்பார்
 • சுந்தரும் தமிழியும் தீவிர பாகச உறுப்பினர்களாகச் செயல்படத் துவங்குவார்கள் (தமிழி பூங்காவிலேயே தொடங்கிவிட்டார் :) )


இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வதென்னவென்றால், துளசி அக்கா இன்னும் இங்கே இருப்பதனால், புதுவருடத்தை ஒட்டி இன்னுமொரு சந்திப்பு இருக்கலாம்.

28 comments:

S. அருள் குமார் said...

பொன்ஸ்,
விரிவாக, தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். சந்திப்பிற்கு வராதவர்களுக்குக் கூட வந்த உணர்வை இந்தப் பதிவு தரும் என நம்புகிறேன்.
நன்றி!

//பா.க.ச.வின் founder member இவர் தான் என்று சந்துக்குள்ளிருந்து பாலபாரதி பரிதாபமாக குரல் கொடுத்ததை யாரும் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்//

அதனால் என்ன, இப்போதுதான் எல்லோரும் கவனிக்கும்படி நீங்கள் சொல்லிவிட்டீர்களே :))

G.Ragavan said...

எல்லாஞ் சரிதான். தலைப்பு -2ன்னுல்ல இருந்திருக்கனும். 3ன்னு இருக்கே?

அது சரி....ஆனை மயிலை மிதிக்க வந்ததையும் மயில் ஜிவ்வென்று எஸ்கேப் ஆகிப் பறந்ததையும் விட்டு விட்டீர்களே!

Anonymous said...

டீம் மீட்டிங்ல நீங்கதான் மினிட்ஸ் எழுதுவீங்களோ?

விரிவான குறிப்புகள்.

த.அகிலன் said...

யக்கோவ்,என்னதிது நான் எங்கே சொன்னேன் கனவுகளின் உலகம் என்று அது கனவுகளின் தொலைவு இம்மாம்பெரிய காதைவச்சுக்கினு என்னக்காயிது?
(குறிப்பு நான் பொ.க.ச ஆள் கிடையாது)

Anonymous said...

Hi there, have a nice day!
info.depot
http://menarique.blogspot.com/

தமிழி said...

நல்முறையில் வகைப்படுத்தி தெளிவாய் உள்ளது.
வாழ்த்துகள் பொன்ஸ்.

நல்லவை நடக்க வேண்டுகிறேன்..

-தமிழி.

தமிழி said...

ஆமாம்...அது என்ன "சென்னை பதிவர் சந்திப்பு - 1" மற்றும் "சென்னை பதிவர் சந்திப்பு - 3"

எங்கே போய்ற்று..."சென்னை பதிவர் சந்திப்பு - 2" ஒரு வேளை என் கண்களுக்கு தெரியவில்லையா! இல்லை மட்டறுத்தப்பட்டதா???

:)

(ஸ்மைலி போட்டதனினால் திட்டியது என்று எண்ண வேண்டாம்.)

பொன்ஸ்~~Poorna said...

அருள்,
//இப்போதுதான் எல்லோரும் கவனிக்கும்படி நீங்கள் சொல்லிவிட்டீர்களே :)) //
ஏதோ, பாகசவுக்கு என்னாலானது :)

//ஆனை மயிலை மிதிக்க வந்ததையும் மயில் ஜிவ்வென்று எஸ்கேப் ஆகிப் பறந்ததையும் விட்டு விட்டீர்களே! //
நீங்க உங்க சென்னை வந்து போன பயணக்கட்டுரையில் சேர்ப்பீங்கன்னு நினைச்சேனே ராகவன் :)

//டீம் மீட்டிங்ல நீங்கதான் மினிட்ஸ் எழுதுவீங்களோ?//
ஹி ஹி..நன்றி அனானி..

//இம்மாம்பெரிய காதைவச்சுக்கினு என்னக்காயிது? //
ஹி ஹி அகிலன், அந்த நேரம் காதை மூடிகிட்டேன் போலிருக்கு :-D பொகசவில் சேராதவரை நன்றி :)

info@depot - யாருங்க நீங்க? அடிக்கடி வந்து கமெண்டுறீங்களேன்னு பிரசுரிச்சேன்.. எப்படியோ, உங்களுக்கும் நைஸ் டே..

நன்றி தமிழி, பகுதி இரண்டைப் பற்றி முதல் வரியில் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.. :) :) (ரெண்டு ஸ்மைலி ;) ) சந்திப்பு பற்றி நீங்களும் ஒரு பதிவு போடவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் தமிழி..

icarus prakash said...

உங்க 'எனர்ஜி' மட்டும் எனக்கு இருந்திருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்... ஹும்ம்ம்ம்

Anonymous said...

அடுத்த முறை கட்டாயம் வர முயற்சிக்கிறேன் பொன்ஸ்!!

பெனாத்தல் சுரேஷ் said...

பகுதி 2 இல்லாததுக்கு எனக்கு காரணம் தெரியும்..

திரட்டி மூலமா இடுகைக்கு வந்து, "அட என்னடா இது 3 இருக்கே"ன்னு ரெண்டாவதைத் தேடி பதிவின் சுட்டிய அழுத்தி - அதனால ஒரு 100 ஹிட் அதிகமாகாதா என்ற ஆசைதானே?

Anonymous said...

உங்களுக்கு இவ்வளவு ஞாபகசக்தியா.. ! வாழ்த்துக்கள்
உள்ளதை உள்ளபடியே கூறியதற்கு

கணினி கைநாட்டு said...

தொடர்புடைய பிளிறல்கள்னு இருக்கு;
பட்டியல் இல்லயே? அங்கே எப்படி
போவது?

மணியன் said...

நன்றாகவே தொகுத்தளித்திருக்கிறீர்கள்.

//அது என்ன "சென்னை பதிவர் சந்திப்பு - 1" மற்றும் "சென்னை பதிவர் சந்திப்பு - 3"
//

//பகுதி இரண்டைப் பற்றி முதல் வரியில் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.. :) :) (//

தகவல் தொழிற்நுட்பக் காரர் என்பதற்காக packet எண்ணைப் பார்த்து சேர்த்துக் கொள்ள வேண்டுமா ? எண்ணிடுவது எழுதும் காலக்கிரமவரிசையிலா அன்றி நிகழ்ச்சிகள் நடந்த காலக்கிரம வரிசையிலா ?

Vicky said...

பொன்ஸ்,

எல்லாரும் இந்த முறை ஏன் அடக்கி வாசிக்கிறாங்கனு யோசிச்சிட்டிருந்தேன். நல்ல விரிவாய் எழுதியிருக்கீங்க.

// புதுவருடத்தை ஒட்டி இன்னுமொரு சந்திப்பு இருக்கலாம்.

Gr8.. கொஞ்சம் முன் கூட்டியே திட்டமிட்டு இன்னும் சிறப்பாக நடத்தலாம்.

ச.சங்கர் said...

"""""முதன் முறையாக கூட்டங்களுக்கு வரும் சங்கரும், தாம் இதுவரை அதிகம் எழுதவில்லை என்றார். கடைசியாக எழுதிய முல்லை பெரியார் பற்றிய கட்டுரை பூங்காவில் இடம்பெற்றதைக் குறிப்பிட்டுத் தம்மை அடையாளம் காட்டிக் கொண்டார். """"""

என்னை மாதிரி ""அஸிஸ்டட் டச்சப் பாய்""" பெயரையும் படத்தோட டைடில்ல ஓட விட்டுட்டீங்க..ரொம்ப டாங்ஸ் யானை அம்மணி.

அல்லாம் சரி ..பனகல் பார்க் வாசலில் உள்ள கடைக்காரரிடம் "மீட்டிங் வென்யு " நடேசன் பார்க்குக் மாத்தி விட்டோம் என்று தகவல் பரப்பு / பகிர்வு செய்து விட்டு வந்த யானையின் சமயோசிதத்தைப் பற்றி சொல்லாட்டி எப்படி :) அவர் குடுத்த info-ல தான் நாங்களெல்லாம் வென்யு மாற்றப்பட்டதை தெரிந்து கொண்டு நடேசன் பார்க் போய் சேர்ந்தோம்.

அன்புடன்...ச.சங்கர்

senshe said...

//பொன்ஸ்: நிறைய யானைகள் வைத்திருக்கும் வலைப்பூ என்னுடையது என்று முடிப்பதற்குள், அதனால் தான் லோட் ஆக லேட்டாகுது என்று எல்லா பக்கத்திலிருந்தும் குரல்கள் கிளம்பியது. //

:))))))

சென்ஷி

பொன்ஸ்~~Poorna said...

ப்ரகாஷ், சுந்தர், ஹி ஹி.. நன்றி,

நிச்சயம் வாங்க முல்லை.. நல்லா இருக்கும்..

சுரேஷ், இதெல்லாம் டூமச் ஆமாம் சொல்லிட்டேன் :)))

கணினி கைநாட்டு சாமி, அது யாராவது பிளிறினாத் தான் சொல்லும். இன்னும் யாரும் இந்தச் சுட்டியைச் சுட்டிக் காட்டிச் சத்தம் வுடலை :)

மணியன், ஏதோ ஒரு வரிசை :) ஆனால், 2,3 நிகழ்ச்சி நடந்த வரிசையாக இருக்கும்... :)

விக்கி, உங்க பதிவு எங்க? நான் கிளம்பிய பிறகு என்ன பேசினீங்க என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கேன்..

சங்கர் :))) அஸிஸ்டட் டச்சப் பாய்?!!! நீங்களா? நிறைய பேசினீங்களே சங்கர், அகதிகள் முகாம் குறித்தெல்லாம்..

சென்ஷி!! ம்ம்.. சிரிங்க சிரிங்க.. :) ஏதோ.. நம்மால நாலு பேரு சந்தோசமா இருந்தா சரி :)

Dharumi said...

//முதன்முறையாக பதிவர் சந்திப்புகளில் இனிப்புகள் வழங்கப்பட,..//

எங்க ஊரு சந்திப்பில நாங்க அதிரசம் சாப்பிட்டோமே.. அதெல்லாம் இனிப்போடு சேர்த்தியில்லைய்யா.. ?

மதுமிதா said...

நம்ம நடேசன் பார்க்குங்க:-)
ம்ம்ம் சரி சந்தோஷம்
பொன்ஸ் நேரில் சந்திக்கும்போது மீதி பேசலாம்.நல்லாவே சொல்லியிருக்கிறீங்க

✪சிந்தாநதி said...

பொகச ஆரம்பிக்கப் பட்ட தகவலையும் அறியத் தந்ததற்கு நன்றி!

வீரமணி... எங்கே உறுப்பினர் படிவம்?

வல்லிசிம்ஹன் said...

பொன்ஸ், நன்றாக நடந்து இருக்கிறது பதிவாளர்கள் கூட்டம்.

இன்னும் பா.க.ச என்றால் என்ன என்று தெரியவில்லை:-(

அப்புறம் இன்னொரு விஷயம்.
நான் முதல் தடவைப் பாட்டி இல்லை. மூணாவது தடவை பாட்டி.:-)

பெருசு said...

hi akka

just missed the meet by one day.

I'm in chennai.

hope to meet you soon.

இராம் said...

//எங்க ஊரு சந்திப்பில நாங்க அதிரசம் சாப்பிட்டோமே.. அதெல்லாம் இனிப்போடு சேர்த்தியில்லைய்யா.. ? //

ஐயா,

நல்ல கேள்வி...

பொன்ஸ்க்கா பாருங்க நாங்கெல்லும் சீக்கிரமே ஒரு மீட்டிங் ஏற்பாடு பண்ணி அதிலே எங்கூரு ஸ்பெசல் ஜிகர்தண்டா சாப்பிட்டு, அதே முதன்முறையாக பதிவர் சந்திப்புகளில் ஜிகர்தண்டா வழங்கப்பட ன்னு பிளிறுவோம்....
:-))))

மஞ்சூர் ராசா said...

சந்திப்பை பற்றிய விவரங்கள் தெளிவாக இருக்கிறது.

தமிழியின் பதிவையும் உங்கள் பதிவின் மூலம் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. திருவின் பதிவிலும் கையொப்பம் இட்டுவிட்டேன்.

நன்றி.

மிதக்கும் வெளி said...

'சுகுணா திவாகர்: மிதக்கும் வெளி என்ற பெயரில் கவிதை கட்டுரை முதலியவை எழுதி வருவதாகச் சொல்லிக் கொண்டார் சுகுணா.'


அப்ப சும்மா சொல்லிக்கிட்டு அலையறேன்றீங்களா? 'உண்மை' வார இதழில் உங்கள் சிறுகதை படித்தேன்.

திரு said...

சந்திப்பு பற்றிய விரிவான அறிக்கை தந்தமைக்கு நன்றி பொன்ஸ் :)

Prabakaran said...

// திபெத்திய, வங்க தேச அகதிகளை மிகவும் நன்றாக நடத்துவதாகத் தான் கண்டு வந்த வட இந்திய அகதி முகாம்களின் நிலையைப் பேசினார் பாலபாரதி. //

Thanks Pons.

Please read the article in the below link.

http://www.keetru.com/vizhippunarvu/sep06/students.html
முகம் இருந்தும் முகவரி அற்றவர்கள்
also see the pictures in the below Link

திபெத் அகதி முகாம் படங்கள் ...
http://www.keetru.com/vizhippunarvu/sep06/tibet.html

ஈழ அகதிகள் முகாம் படங்கள் ...
http://www.keetru.com/vizhippunarvu/sep06/eelam.html