Wednesday, December 13, 2006

கூட்டணி ஆண்டு 2006

2006 ஆம் ஆண்டு வலைப்பதிவு நிகழ்வுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது கூட்டு வலைப்பதிவுகள் என்கிறார் பாஸ்டன் பாலா. அங்கொருவர் இங்கொருவராக தனித்தனியாகப் இயங்கிக் கொண்டிருந்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காக ஒன்றிணைந்து கூட்டாக எழுதத் தொடங்கியதென்பது, இப்போது யோசிக்கும் பொழுது கொஞ்சம் அதிசயத்தக்க நிகழ்வாகத் தான் தோன்றுகிறது.

தேவின் பார்வையிலான கூட்டு வலைப்பதிவுகளைப் பற்றிய செய்திகளைப் படித்தபின் எனக்கும் அது போன்ற ஒரு இடுகை எழுதும் ஆசை துளிர்த்துவிட்டது..


1. தமிழகத் தேர்தல் 2006 - ஜனவரி 2006.

வருடத் தொடக்கத்திலேயே தொடங்கப்பட்ட இந்தத் தளத்தை நான் பார்வையிட்டதே ரொம்பக் குறைவு. ஓட்டு போடுவதைத் தவிர தேர்தலுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று இருந்த ஆசாமியான என்னை, இந்தப் பதிவில் கவர்ந்தது, இதன் லோகோ தான் :). இடுகைகளை அதிகம் படிக்காத போதும் எனக்குத் தெரிந்து இன்றைக்கு இருக்கும் கூட்டு வலைப்பதிவுகளில் மிக அதிக இடுகைகள் உடையது இதுவாகத் தான் இருக்கும்... தேர்தல் முடிந்தபின்னும், செய்திக்கோவையாக தொடர்ந்த பாஸ்டன் பாலாவுக்கு மொத்த புகழும் என்று நினைக்கிறேன்.. வாக்கு கொடுத்தபடி, அமெரிக்க செனட் தேர்தல் வரை தொடருவார் என்று நினைத்தேன்.. ஏனோ அது நடக்கவில்லை ;)




2. சொல் ஒரு சொல் - ஏப்ரல் 2006

ஜனவரியில் தொடங்கப்பட்ட முதல் கூட்டு வலைப்பதிவை அடுத்த பதிவு ஏப்ரல் மாதத்தில் தான் சாத்தியமாகி இருக்கிறது. குமரன், ஜிராகவன் இருவரும் சேர்ந்து இயங்கிய சொல் ஒரு சொல், தமிழில் தாராளமாகப் புழங்கும் ஆங்கில, வடமொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொல் தரும் களமாக இயங்கத் தொடங்கியது.

குமரன், ஜிராவுடன் எஸ்கே, ஜெயஸ்ரீ என்று பின்னூட்டங்களில் ஒவ்வொருவராக சேர்ந்து கொள்ள நல்ல இடுகைகளாகவே இருந்தன ஒவ்வொன்றும். ஏனோ இந்தப் பதிவு இப்போது சுறுசுறுப்பாக இயங்கவில்லை என்று தோன்றுகிறது. சின்னதொரு சர்ச்சைக்குப் பின்னர் சொற்களின் வரவு கொஞ்சம் மந்தகதியில் இருப்பதாகவே தோன்றுகிறது. இன்னும் நிறைய சொல்லலாமே!

3. இயன்ற வரையிலும் இனிய தமிழில்... - ஏப்ரல் 2006

ஜீவாவின் தனிவலைப்பூவாகத் தொடங்கிய இந்த வெண்பா வடிக்கும் வலைப்பூ, ஏப்ரலில் இலவசக்கொத்தனாருடன் இருவராகி, கூட்டு வலைப்பதிவாகியது. வெண்பா வடிக்கும் விளையாட்டை மிகவும் உற்சாகமானதாக்கியது இந்தக் கூட்டுப் பதிவு. இந்த வலைப்பதிவின் மூலம் ஓகை நடராஜன், ப்ளோரைப் புயல் என்று (அப்போது) அதிகம் வலையுலகில் நடமாடாத நண்பர்களும் வெண்பாக்களால் வெளிவர வாய்ப்பாயிற்று.

வெண்பா அந்தாதி விளையாடிய பொழுது, மரபுக் கவிதைகளைப் பற்றிய அச்சம் விலகி, நாமக்கல் சிபி, பெருசு, கெக்கே பிக்குணி என்று கூட்டம் சேர்ந்ததைக் கண்டுகொள்ளாமல் விட்டதில் இப்போது கொஞ்சம் சிதறித்தான் போய்விட்டதென்று தோன்றுகிறது. ஜீவாவும் கொத்தனாரும் இன்னும் ஈற்றடிகள் கொடுத்து வெண்பா வடிக்க வந்தால் நலம்..


4. வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் - ஏப்ரல் 2006

கூட்டு வலைப்பதிவுகளின் பொற்காலமான ஏப்ரல் 2006இல் தொடங்கிய மற்றொமொரு கூட்டுப்பதிவு வாலிபர் சங்கம். ஆங்காங்கே தனித்தனியாக கைப்புள்ள, தேவ், சிபி என்று விளையாடிக் கொண்டிருந்தவர்கள் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் கூடிக் கும்மி அடிக்கக் கட்டிய பதிவு. விளையாட்டுப் பதிவுகளாகவே இட்டு, வருட முடிவுக்குள் நூறு பதிவும் கண்டுவிட்ட குழுமத்தில் இருந்தவள் என்ற முறையில், இந்தக் கூட்டு வலைப்பதிவின் வெற்றியில் மிக முக்கிய பங்கு தேவுக்குத் தான். அவ்வபோது இடுகைகள் இடுவதில் சுணக்கமும், பல்வேறு வேலைகளும் என்று மக்கள் தொலைந்து போகும் போதெல்லாம் உசுப்பிவிட்டு பதிவிடத் தூண்டி, தமிழ் வலைப்பதிவுகளிடையில் எப்போதும் எல்லாருக்குமான சிரிப்பு வலைப்பூவாக இதைக் காப்பாற்றி வருவதில் தேவின் பங்கு கொஞ்சநஞ்சமல்ல. அதே போல், வ.வா.சங்கத்தின் நற்பெயருக்கு முக்கிய காரணி, கைப்புள்ள. சாம்பு முதல் கோவாலு வரை யார் வம்பிழுத்தாலும் நிதானம் தவறாமல், சிரிப்பை மட்டுமே முதல் நிலையில் வைத்துச் சங்கத்தைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் கைப்பு, "ரொம்ம்ம்ம்ம்ப நல்லவருங்க.. " ;)

மாதா மாதம் அட்லாஸ் வாலிபர், நூறாவது பதிவுக்கு பாஸ்டன் பாலா, கலைவாணர் பிறந்த நாளுக்கு தருமி என்று புதிய புதிய வருத்தப்படாத வாலிபர்களையும் அவ்வப்போது சங்கத்தில் காண முடிவது இன்னும் சிறப்பு. புது வருடத்துக்கு யார் வருவாரோ? ;)
வாலிபர்சங்கத்தில் என்னை மிகவும் கவர்ந்தது நிறைய தகவல்கள் இருந்தும் உறுத்தாத வார்ப்புரு. தொடர்ந்து கலக்குங்க...


5. திராவிட தமிழர்கள் வலைத்தளம் - மே 2006
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்ட இன்னுமொரு தளம் திராவிடத் தமிழர் வலைத்தளம். தேர்தலுக்குப் பின் உருவான இந்தத் தளத்தின் கட்டுரைகள், கொள்கை விளக்கக் கவிதைகள், திராவிடக் கருத்தாக்க பயிற்சிப் பட்டறைகள், சுலோகன் போட்டிகள் என்று களைகட்டிக் கொண்டே இருக்கிறது.


இன்னமும் அதிகமான எதிர்பார்ப்பு இந்தத் தளத்தின் மீது உள்ளது என்பது உண்மைதான்..


6. தமிழ்ச்சங்கம் - ஆகஸ்ட் 2006

இரண்டுமாத இடைவெளிக்குப் பின் மீண்டும் குழுப்பதிவுகள் துவக்கவிழாவைத் தொடங்கிவைத்தது தமிழ்ச்சங்கம். சங்கத்தின் கவிதைப் போட்டியும் அதன் முடிவுகளும் பரபரப்பானதாக இருந்தாலும் இன்னம் முழுமையான செயல்பாட்டுக்கு வராத சங்கமாகவே தோன்றுகிறது.

கதை/கட்டுரை/கவிதைப் போட்டிகளை மாதமொருமுறையோ, காலாண்டு ரீதியாகவோ நடத்திக் கொண்டே இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. தமிழ்ச்சங்கத்தை நிறுவிய இளா பதிவுகளை விட்டு வெளியேறுவதாக அறிவித்திருக்கும் இப்போது, இந்தக் கூட்டு வலைப்பதிவின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டிய ஒன்று.




7. சென்னப்பட்டணம் - ஆகஸ்ட் 2006

சென்னை தினத்தை ஒட்டி துவங்கப்பட்ட மற்றுமொரு குழுமப் பதிவு சென்னப்பட்டணம். வ.வா.சங்கத்தின் தூண்டுகோல் தேவ் என்றால் சென்னப்பட்டினத்தில் பாலபாரதி. நெறிப்படுத்த மா. சிவகுமார். "சொல் ஒரு சொல்" போலவே, சமீபத்தைய சர்ச்சைகளுக்குப் பின்னர் கொஞ்சம் சுணக்கம் கண்டிருக்கும் சென்னப்பட்டினம் புது வருடத்தை ஒட்டி மீண்டும் உயிர்பெற வேண்டும்.


8. சக்தி - ஆகஸ்ட் 2006


வலைப்பதிவுகளில் பெண்களை மையப்படுத்திப் பிரச்சனைகள், பொதுப்படையான விமர்சனங்கள் அதிகரித்த காலத்தில், அவற்றை எதிர்கொள்ளும் விதமான பதிவாக வந்தது சக்தி. பல தளங்களில் பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளை அவதானித்துக் கொண்டிருக்கும், அது போன்ற பெண்களுக்கு உதவிக் கொண்டிருக்கும் பத்மாவும் செல்வநாயகியும் மதியுடன் இணைந்து எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டு வலைப்பதிவில் கட்டுரைகள் பொறுமையாகவும், ஆழமாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.


வலையுலகில் கூட பெண்களை இன்னும் புலம்பும் நிலையில் வைத்திருக்கும் சமுதாயத்தில்(நன்றி: இட்லிவடை) இது போன்ற வலைப்பதிவுகள் தேவையாக இருக்கின்றன.

9. முருகனருள் - செப்டம்பர் 2006
முருகன் மேல் பற்று கொண்ட ஆன்மீகவாதிகளுக்கான குழுத்தளம் முருகனருள். முருகன் பாடல்களைச் சேகரிக்கும் இந்தத் தளத்தில் பாடல் வரிகள் மட்டுமல்லாமல் பாடலைக் கேட்க சுட்டிகளும் கொடுக்கப் படுகின்றன. பாடல்களைத் தாண்டி உலகெங்கிலும் உள்ள முருகன் கோயில்களைப் பற்றியும் இதில் எழுதத் தொடங்கலாமே!


10. விக்கிபசங்க - அக்டோபர் 2006
சமீபத்தில் தொடங்கி சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் மற்றுமொரு குழுத்தளம் விக்கிபசங்க. என்ன கேட்டாலும் சொல்வதாகச் சொல்கிறார்கள்.
இடுகைகள் அனைத்தும் மிக மிகத் தெளிவாகவும் பயனுள்ளவையாகவும் உள்ளன. பின்னூட்டப் பெட்டியை அரட்டைக் களமாவதிலிருந்து காப்பாற்றி வந்தால், இன்னும் அருமையான தளமாகும் வாய்ப்பிருக்கிறது என்பது என்னுடைய எண்ணம்.



11. தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம் - டிசம்பர் 2006
தற்போதைய நிலவரப்படி இந்த வருடத்தின் கடைசி குழுப்பதிவாக இருக்கும் இந்தப் பதிவு, புதிதாக பதிவெழுத வரும் வலைஞர்களுக்கு உதவிப் பக்கமாக உருவெடுக்க இருக்கிறது. கொஞ்சங் கொஞ்சமாக பதிவுகள் தொடர்பான எல்லாமும் இங்கே கிடைக்கும் நிலை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். இன்னும் முழுமையாக முறைப்படுத்தப்படாத இந்த உதவிப் பக்கம் சீக்கிரமே நல்லதொரு பக்கமாக உருவாகும் என்று நம்புகிறோம்.

  • பதினோரு கூட்டு வலைப்பதிவுகள்,
  • இன்னமும் ஒரு சில அதிகம் செயல்படாத குழுப்பதிவுகள்,
  • தமிழ்வெளி போன்ற ஆரம்பித்து தொடராமல் போன வலைப்பதிவு வார இதழ்கள்,
  • நண்பர்களின் உதவியுடன் செயல்படும் செந்தழல் ரவியின் வேலைவாய்ப்பு பதிவுகள்
என்று 2006 கூட்டுப் பதிவுகளின் வருடமாகத் தான் பரிமளிக்கிறது. ஆண்டு முடிவுக்கு இன்னும் பதினைந்து நாட்கள் இருக்கும் தருவாயில் இன்னும் கூட கூட்டுப்பதிவுகள் வரலாம்; பிரகாசிக்கலாம்.

கருத்துத் தளங்களில் வேறுபாடுள்ள பதிவர்களும், வ.வா.சங்கம், விக்கிபசங்க, ப்ளாக் உதவி போன்ற முயற்சிகளுக்காக ஒன்று சேரும் பொழுது பதிவர்களுக்கிடையிலான நட்பும், புரிதலும் பெருகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. குழுப்பதிவுகளில் இன்னும் ஈடுபடாத நண்பர்களும் இனியும் சில குழுப்பதிவுகளில் சேர்ந்து இயங்குதல் தமிழ்ப்பதிவுலக ஆரோக்கியத்தை நிச்சயம் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது.

வாழ்க கூட்டணி ஆட்சி ;)

15 comments:

G.Ragavan said...

நல்லதொரு ஆய்வு. தனியொருவராக சாதிக்க முடியாததை குழுவாகச் சாதிக்க முடிகிற பொழுது...இந்தக் குழுச்சேர்க்கை இயல்பானதே.

சொல் ஒரு சொல் நல்ல தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்தியதும்..படுத்தி வருவதும் உண்மைதான். இன்னும் நிறைய செய்வோம். வேலைப்பளுவின் காரணமாக சற்றுத் தொய்வு. விரைவில் சுறுசுறுப்பாவோம்.

முருகனருள் நன்றாகவே செல்கிறது. பலர் கூடி இழுக்கும் தேர் அது. இன்னும் சிறப்பாகச் செய்ய முருகனருள் கிட்டும் என்றே நம்புகிறோம்.

தமிழ்ச்சங்கம்...சற்று ஒழுங்கு படுத்தப் பட வேண்டியுள்ளது. அதற்காக வழிமுறைகளை நெறிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். புத்தாண்டில் புதுப் பொலிவில் தமிழ்சங்கம் சிறப்பாகப் பணியாற்றும் என்று அதோடு தொடர்புடைய நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

அழகாக தொகுத்துத் தந்திருக்கிறீர்கள். இது வரை நான் கவனிக்காத சில பதிவுகளை தெரிந்து கொள்ள முடிந்தது.

Unknown said...

பொன்ஸ் சங்கம் குறித்தான உங்கள் பதிவின் கருத்துக்களுக்கு என் நன்றி!!!

நம்ம சங்கம் உதயமான வரலாறு என்ற ஒரு விஷ்யம் எழுத முடியுமான்னு எனக்குத் தெரியல்ல.. ஆனா சில விஷ்யங்களை உங்கப் பதிவின் மூலம் பகிர்ந்துக் கொள்ளணும்ன்னு நினைக்கிறேன்.

மக்களே, வ.வா.சங்கம் என்ற இந்தக் கூட்டுப் பதிவினைத் தோற்றுவித்தப் பெருமை நம்ம பொன் ஸ் அவர்களையேச் சாரும்.

இன்றும் பல நண்பர்களாலும் பாராட்டப் படும் சங்க வார்ப்புருவின் பின் பலமாக இரவு பகல் என் உழைப்பவர் நம் பாசத்துக்குரிய விவசாயி இளா. இவருடைய பங்களிப்பு சங்கத்துக்கு மிகவும் இன்றியமையாதது... சங்கத்தின் சுறுசுறுப்பு டானிக்ன்னு அது நம்ம இளா தான்.

ஆரம்பக் காலங்களில் சங்கத்தின் வரவை அனைவருக்கும் எடுத்துச் சொல்ல பொன் ஸ் மற்றும் தளபதி சிபி செய்த முயற்சிகள் வெறும் வார்த்தைகளில் சொல்ல முடியாது.

சிவா, மதிப்பிற்குரிய அக்கா கீதா சாம்பசிவம் ஆகியோரது சங்கப் பிராச்சாரங்கள் மிகவும் பிரசித்தம்.

ஜொள்ளூப்பாண்டியின் பங்களிப்பு, லேட்டா வந்தாலும் சங்கப் பணியை மிகவும் ஈடுபாட்டோடு செய்யும் நண்பர்கள் பாலாஜி, ராம் ஆகியோரது முயற்சிகள் இவை அனைத்து இணைந்தே சங்கம் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.

இவைத் தவிர நம்ம சஙக்ம் மீது பற்றும் அக்கறையும் கொண்ட நம்ம அனைத்து அட்லாஸ் வாலிபர்களூம்.. பெயர் கூற முடியாத நல்ல உள்ளங்களின் அன்பும் ஆதரவுமே சங்கம் கவனிக்கப்படுவதற்கு அதி முக்கிய காரண்ம்.

இந்தக் காரணங்களில் நானும் சங்கத்தின் ஒரு சிறு அங்கம் அவ்வளவே. மொத்தத்துக்கும் அடி வாங்க எங்க தல கைப்புள்ள காத்து கிடக்கும் போது என்னிய ஏத்தி விட்டுருராதீங்கோஓஓஓஓஒ....

SP.VR. SUBBIAH said...

என்னைப் போன்றோர் கூட்டணிகளில் சேர என்ன வழி?
அதைச் சொல்லாமல் விட்டு விட்டீர்களே?

SP.VR.SUBBIAH

சென்ஷி said...

நாந்தான் பர்ஸ்ட்டா

மிக நல்ல தொகுப்பு

சென்ஷி

Anony said...

சூப்ப்பர் பதிவு பொன்ஸ்.

பிடியுங்கள் பாராட்டை.

குமரன் (Kumaran) said...

பொன்ஸ்,

இரவிசங்கரின் 'தமிழ்மணம் தேவையா?' பதிவின் மூலம் இங்கே வந்தேன். நல்ல தொகுப்பு. இன்னும் சில கூட்டுப் பதிவுகள் இருக்கின்றன. அவை உங்களின் ஆர்வத்திற்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம்; அதனால் உங்கள் கவனத்திற்கு வராமல் போயிருக்கலாம். :-)

இராகவன் சொன்னது போல் 'சொல் ஒரு சொல்' தொய்வு பெற்றதற்கு வேலைப் பளு தான் காரணமே ஒழிய வேறெந்த சர்ச்சையும் இல்லை.

அண்மையில் முருகனருளைப் போல் தொடங்கப்பட்ட 'கண்ணன் பாட்டு' கூட்டுப் பதிவினையும் பார்த்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

:-)

குமரன் (Kumaran) said...

வாத்தியார் ஐயா.

உங்களுக்கு எந்தப் பதிவுகளில் கூட்டாகச் சேர வேண்டும் என்று தோன்றுகிறதோ அந்த பதிவில் உள்ளவருக்கு (உள்ளவர்களுக்கு) மின்னஞ்சலோ பின்னூட்டமோ இடுங்கள். கூட்டுப் பதிவின் நோக்கங்கள் உங்களுக்கும் ஒத்துவந்தால் கூட்டுப் பதிவில் சேர்ந்துவிடலாம். அவ்வளவு தான். பெரிய விதயமில்லை.

பொன்ஸ்~~Poorna said...

//இன்னும் சில கூட்டுப் பதிவுகள் இருக்கின்றன. அவை உங்களின் ஆர்வத்திற்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம்; அதனால் உங்கள் கவனத்திற்கு வராமல் போயிருக்கலாம். :-)//
குமரன், எனக்கும் உங்களுக்கு முன் பின்னூட்டமிட்ட பிறருக்கும் கவனத்தைக் கவராத அந்த பிற கூட்டு வலைப்பதிவுகளின் சின்ன அறிமுகங்களை நீங்கள் இடலாமே..

மேலும், இப்போது நீங்கள் சொல்லி இருக்கும் கண்ணன்பாட்டின் உரலையும் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்..

குமரன் (Kumaran) said...

பொன்ஸ். கண்ணன் பாட்டின் சுட்டி இதோ.

http://kannansongs.blogspot.com/

மற்ற கூட்டு வலைப்பூக்கள் ஒவ்வொன்றாகத் தானே கவனத்தைப் பெறும் பொன்ஸ். அது தான் சரி.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Pons,

Lack of has forced me to be 'short n sweet'. :)

I'm afraid, i cannot agree with the title.. Group blogs have been in vogue from the beginning.

valaippoo - http://valaippoo.blogspot.com and http://valaippoo.yarl.net would be the first group blog per.se.

Then there was the group blog for women - most of the present day female bloggers started blogging there. the blog was hacked repeatedly and we lost most of the data. Anyway, that blog was started to encourage women bloggers. So, I didnt concentrate on it after it got hacked (happened more than a year ago). the link jfi - http://womankind.yarl.net

Another group blog was started for science too. well, that got hacked too. :) :( it was also hosted by suratha and yarl.net. They were the first people to offer free blog service to tamil bloggers. they offered blogs in Movable Type initially and later in wordpress.

will try to write a post soon..

Boston Bala said...

---valaippoo - http://valaippoo.blogspot.com and http://valaippoo.yarl.net would be the first group blog per.se.---

வாரம் ஒரு வலைப்பதிவரின் எழுத்துக்களை பரவலாக்கும் நோக்குடன் செயல்பட்ட வலைப்பூ நட்சத்திரத் தேர்ந்தெடுப்பை, குழுப்பதிவாக சொல்ல முடியாது.

படப்பிடிப்பில் அனைத்து வெளிச்சமும் ஒருவரின் மேல் பாயும்.

ஒளி பாய்ச்சப்படுபவராக நடிகர் ஒருவரும், ஒளிப்பதிவராக இன்னொருவரும் இருப்பதால் கூட்டு உழைப்பு என்று கொள்ளலாம். காசி & மதியின் தேர்ந்தெடுப்பில் பலரும் வலைவாசகருக்கு அறிமுகமானார்கள்.

ஆங்கிலத்தைப் பொருத்தவரை கூட சென்ற ஆண்டில் சென்னை மெட்ப்ளாக்ஸ், தேஸிக்ரிடிக்ஸ் என்று குழுப்பதிவுகளில் அபரிமிதமான & குறிப்பிடத்தக்க வளர்ச்சி. தனித்தனியாக நின்ற பதிவர்கள், குழாமாக செயல்படுவதன் நிர்ப்பந்தத்தை உணர்ந்து, பலதரப்பட்டப் பதிவுகளைத் தொடங்கி இருக்கிறார்கள்.


---அங்கொருவர் இங்கொருவராக தனித்தனியாகப் இயங்கிக் கொண்டிருந்தவர்கள் ---

தமிழ்மணம்/தேன்கூடு போன்றவையே கூட்டணிதானே...? காட்டாக, நான் இன்று நாற்பது பதிவுகள் எழுதத் தீர்மானித்து, மணிக்கு இரண்டாக தமிழ்மண/தேன்கூட்டை எரிதமாக நிரப்பினால், மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கும். நாற்பதும் ஓரளவு தேறுகிற (சொந்த சரக்கு மற்றும் க்வாலிடி) பதிவாக இருந்தாலும், மற்றவரை எரிச்சலடைய வைக்கும். இந்த மாதிரி தார்மீக சுயக் கட்டுப்பாடுக்குள் இயங்குவது குழுநெறிக்குள் அடங்குமா? அடங்காதா?

பதிவுகளை இடுவது போல் மறுமொழிப் பெட்டிக்கு இதே வழிமுறைகள் பின்பற்றாமல் இருப்பதையும் குழுப்பதிவில் ஒப்புக்கொள்ளப்பட்ட நியதியாக எடுத்துக் கொள்ளலாம்!

கைப்புள்ள said...

தமிழ் வலையுலகில் இருக்கும் கூட்டு வலைப்புக்களைப் பற்றி நிரம்ப ஆய்ந்து உங்கள் கருத்துகளையும் சேர்த்து ஒரு நிறைவானக் கட்டுரையாக இப்பதிவை இட்டிருக்கிறீர்கள். தங்களுடைய வாழ்த்துகளுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், வ.வா.ச வை ஆரம்பித்து வைத்த தங்களுக்கு என் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Anonymous said...

பல விஷயங்கள் புதியனவாய் இருக்கின்றன.கட்டுரைக்குப் பின்னால் நிறைய உழைப்பு இருப்பது புரிகிறது.நல்ல பதிவுக்கு நன்றி....

Anonymous said...

நல்லதொரு கட்டுரை பொன்ஸ். குழுக்களே வலைப்பூக்களை பின்னி செய்த மாலை என்றால் அவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்த இந்தப் பதிவை என்ன பூக்கடை என்று சொல்வதா?

இப்பல்லாம் உங்கள் எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. திடீர்னு எப்படி வயசாச்சி??