கத நல்லாத்தான் இருக்குது. ரொம்ப இயல்பான நடையில எழுதியிருக்கீங்க. வாசிக்க சுவையாத்தான் இருந்தது. ஆனாலும், கருத்து ரீதியா பார்த்தா எனக்கென்னமோ ராது செஞ்சது, 'குளத்து கிட்ட கோவிச்சுக்கிட்டு எவனோ எதயோ கழுவாம போன' கதயத்தான் ஞாவத்துக்குக் கொண்டு வந்தது.இப்படிக் காட்டமாகச் சொல்லி இருந்தும் கூட தனது நட்சத்திரப்பதிவுகள் குறித்து என்னை வாசிப்புரை (நன்றி: பாபா) எழுதச் சொல்வதற்கு அவருக்கு உண்மையிலேயே துணிச்சல் அதிகம்தான்.
பொறவென்னங்க.. இவுக கோவிச்சுட்டு போயிட்டா
அவரு வரதட்சணையை வாங்க மாட்டாரா? அழகா, புது்சா, படிச்ச, சம்பாதிக்குற பொண்டாட்டி வர்ற கனவுல இருக்குறவனுக்கு எப்படி வரதட்சணை பெரிய விசயமா இருக்கும்?அதனால அவனுக்கு
எடுத்துச்ட்டுபோட்டு இவங்க 'டயலாக்' அடிச்சுட்டு ஓடிப் போயிட்டாங்களாம்.
என்னமோ போங்க, பொம்பளைங்க கதை எழுதுனா ஆம்பளைங்களுக்கு 'சுருக்' மெச்செஜ் குடுக்குறதா நெனச்சு கதைக்கு சுருக்கைப் போட்டு தொங்க விட்டுடுறீங்க
வழக்கமான தன்னடக்கத்துடன் (வழக்கமான என்றால், பொதுவாக நட்சத்திரங்கள் முதல்பதிவில் தங்களைப் பற்றி அடக்கமாக 'பீலா' விடுவதைத்தான் சொல்கிறேன் :-)) முதல் பதிவைத் துவங்கும் பொன்ஸ் அடுத்த பதிவான 'ப்ளாக்கர் பீட்டா'வை இருண்மையில் இருக்கும் வாசகன் நவீன கவிதை வாசித்து முழிபிதுங்கும் அதே அனுபவத்தைக் கட்டுரையாக வடித்திருக்கிறார். கணினியில் கொஞ்சம் பயிற்சியும், முயற்சியும் உள்ளவர்களுக்கு அதில் நிறைய தகவல்களும் செய்திகளும் அடங்கியிருக்க என்னைப் போன்ற கைநாட்டுகள், 'என்னமோ எழுதிருக்காங்க போல' என்று வேடிக்கை பார்த்ததோடு சரி..
மென்பொருளாக்கத்துக்கும் பல நிலைகள் உள்ளன. முதலில், மென்பொருளுக்கான பயன்களுக்குத்என்று எளிய தமிழில் தொழில்நுட்ப கட்டுரையை அவர் எழுதியிருப்பதும்,அதை வாசிப்பவர்கள் எளிதாக சிரமமின்றிப் புரிந்து கொள்ள முடிகிறதென்பதும் கலைச்சொற்கள் அனாவசியம் என்று சொல்லும் 'தமிங்கலர்களுக்குப்' பாடமாக இருந்தால் நன்று.
தகுந்தாற்போல், அதை வடிவமைப்பது, அதன்பின், நிரலி எழுதுவது, கடைசியாக நிரலி வேண்டிய
வகையில் செயல்படுகிறதா என்று அறிய அதனைச் சோதிப்பது. பிளாக்கர் போன்ற இலவச
மென்பொருள்களைச் சோதிக்கும் பொழுது, அதன் இலவச பயனர்களையே இந்த வேலையைச் செய்ய உதவி
கோருவது வழக்கம்
புதிதாக ஒரு ஊருக்குப் போகும்போது அந்த ஊரைப் பற்றிய நல்ல விசயங்களை விட எச்சரிக்கையுணர்வை ஊட்டுகிறோம் பேர்வழி என்று கெட்ட விசயங்களை அடுக்கிச் சொல்வதற்கென்றே சிலர் பிறப்பெடுத்திருப்பார்கள்.பொன்ஸுக்கு அந்த மாதிரி ஆட்களின் பழக்கம் அதிகம் போலிருக்கிறது.
பெரும்பாலும் நாம் மனிதர்களை அவர்களது உருவத்தை வைத்தே எடைபோட்டுவிடுகிறோம். 'உருவு கண்டெள்ளாமை வேண்டும்' என்று வள்ளுவர் வேலையத்துச் சொல்லிட்டுப் போனாருன்னு நாமாவே நெனச்சுக்கிடறதால இப்படி. ஆனால், உண்மையில் எல்லா மனுசங்க கிட்டயும் ஏதாவது ஒரு நல்ல குணம் இருக்கத்தான் செய்யும். இதை உணரும்போது அந்த நன்மையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது மனிதம் நமக்குள்ளும் செழிக்கும்.
இந்த உண்மையை அமெரிக்காவில் (நிஜ) அப்பாவி பதிவில்,
சக மனிதரை, மனிதராக பார்க்கும் போது நிறம், இனம், மதம், நாடு என்ற எல்லா எல்லைகளும் தவிடு பொடியாகிப் போகிறது.என்று அழகாகச் சொல்லியிருக்கிறார். சம்பவங்களை நேர்த்தியாகவும் கோர்வையாகவும் தெளிவாகவும் சொன்ன பதிவு இது.
'லிஃப்ட்' சிறுகதையைப் பற்றிப் பெருசாக சொல்ல ஒண்ணுமேயில்ல. 'வெகுஜனப் பத்திரிகைகளின் தாக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை என்னால்' என்று எழுதாத ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார் பொன்ஸ். கூடவே, 'பெண்புத்தி பின்புத்தி'ங்குறதை இப்படி ஒரு பெண்ணே பெருந்தன்மையோடு ஒப்புக் கொண்டிருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியலை. :-)
ஆனால், இதனை ஒரேயடியாகத் தூக்கிச்சாப்பிடும் விதத்தில், அடுத்த பதிவில் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார் பொன்ஸ். 'பெண் ஏன் அடிமையானாள்? ' பதிவின் மூலம். பெரியார் என்ன சொல்ல வந்தார் என்பதையே புரிந்துகொள்ளாமல் அவரை வசைபாடும் பெரியார் எதிரிகளும், அவரின் சீடர்களென சொல்லிக் கொண்டு பெரியாரின் பெயரை நாசப்படுத்துவோர்களுமாகப் பெரியாரை ஆளாளுக்கு சிறியாராக்கும் பெருமுயற்சி நடக்கும் இந்தச் சூழலில், பெரியாரின் எழுத்துக்களை உள்வாங்கிக்கொண்டு எழுதிய இந்தப் பதிவிற்காக சிறப்பு பாராட்டுக்கள். பெரியாரின் எழுத்துக்கள் அப்படியே ஏற்றுக் கொள்வதற்கல்ல. அவைகளை அவர் தனது கருத்தாக ஆழமாக வெளியிடுகிறார். அதை உள்வாங்கிக் கொண்டு அதனை ஏற்றுக்கொள்வதும் விட்டுத்தள்ளுவதும் அவரவரைச் சார்ந்ததுதான் என்று பெரியாரே சொல்லியிருந்தும் அவர் மேல் வரும் ஆயிரமாயிரம் விமர்சனங்களையும் தாண்டி பெரியார் இன்னமும் வாழ்வது அவரது சொல்லில் இருந்த நேர்மையால்தான். அதனை இந்தப் பத்வின் மூலம் மீண்டும் நிறுவியிருப்பதற்காகப் பொன்ஸைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
மீள்பதிவான 'ஏன்?' சிறுகதை மிக இரசிக்கும்படியாக, இலகுவாகச் சொல்லப்பட்டிருக்கும் கதை. ஒற்றைவரியில் ஏன் என்ற கேள்வியோடு முடியும்போது 'அட!இதுக்குத்தான் இந்த இழுப்பு இழுத்தீங்களாக்கும்?' என்ற கேள்வியை எழுப்புகிறது. எதிர்பாராத அதிர்வை வாசகனிடம் ஏற்படுத்த வலிந்து திணித்து கருத்துச் சொன்னது போன்றொரு உணர்வு. தமிழ் திரைப்பட குழந்தைகளின் பாதிப்பில் அந்தக் குழந்தை பேசும்போது மெலிதான அயர்ச்சி தோன்றத்தான் செய்கிறது. தவிர்த்திருந்தால் சிறப்பான சிறுகதையாக வந்திருக்கும்.
'படம் காட்டுறேன்' - ரொம்பப் படம் காட்டாத பாந்தமான பதிவு.படங்கள் அழகுற வடிவமைக்கப்பட்டிருந்ததும், மிகச் சிறிய அவசியமான குறிப்புகளும் குறிப்பிடத்தகுந்தவை
'பதிவுலகில் பெண்கள்' - பெண்கள் பதிவுலகில் சந்திக்கும் பிரச்னைகளைப் பட்டியலிட்டிருக்கிறார். இது கொஞ்சம் அதிகப்படியான குற்றச்சாட்டுதான். பதிவுலகில் மட்டுமில்லாமல் எல்லா இடங்களிலுமே ஆண்கள் அவர்களை அப்படித்தான் நடத்துகிறோம் என்பதுதான் உண்மை :-) இதனைப் புலம்பலாகப் பதிவாக்கவில்லை என்று பொன்ஸ் கூறியிருப்பது மிக முக்கியமானது. பெண்கள் பொது இடங்களில் எந்தச் சலுகையையும் எதிர்பார்க்கக் கூடாதென்ற வாதத்தில் உண்மை இருந்தாலும், பெண்களுக்கெதிரான சில இடர்ப்பாடுகளை பதிவு செய்த வகையில் இந்தப் பதிவு முக்கியமானது என்பதே என் கருத்து.
'தேன்மாவின் கொம்பத்து' மலையாளப் படத்தில் நெடுமுடி வேணுவும் ஸ்ரீனிவாசனும் சேர்ந்து மோகன்லாலைக் கவிழ்ப்பதற்கு திட்டம் போடுவார்கள். அப்போது ஸ்ரீனிவாசன் ஒரு அபாரமான திட்டத்தைச் சொல்லி, 'என் சிறுபுத்தியில் இதுதான் தோன்றியது' என்பார். 'கண்டிட்டு செறிய
புத்தியானென்னு தோணுன்னில்லல்லோ' என்று நெடுமுடி பதில் சொல்வார். இந்தப் பதிவைப் பார்த்ததும் அதுதான் மனதில் தோன்றியது. 'குழந்தைத்தனமான ஆசை' மாதிரி தெரியலியே?!
எல்லாரும்தான் புத்தகம் வாசிக்கிறோம். வாசித்த அனுபத்தைச் சொல்லி அடுத்தவர்களையும் படிக்கத் தூண்டும் விதம் எழுதுவது ஒரு கலை. சிலர் புத்தகத்தை விமர்சிப்பதை விடவும் தான் என்ன உணர்ந்தேன் என்பதைவிடவும் தங்கள் அறிவுஜீவித்தனத்தைத்தான் முன்னிறுத்துவார்கள். பொன்ஸ் நல்லவேளையாக அந்தக் கொடுமையைச் செய்யவில்லை. எளிமையான வாசிப்பனுவத்தை தோழமையோடு பகிர்ந்திருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது.
எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு கட்டுரை சிறப்பாக வந்திருக்கிறது. ஆனால்,
நோயை ஒட்டுவாரொட்டியாகச் சித்தரித்து, தொடுவதற்கே பயந்த சமூகத்தின் அறியாமை இருளை மொத்தமாக அழித்தெடுத்திருக்கின்றன இந்த அமைப்புகள்.என்பதெல்லாம் ரொம்ப அதிகம். முன்பை விட நிலை தேவலாம் என்பதுதான் யதார்த்தம். 'மெத்தப்படித்தவர்கள்' நிறைந்த கேரளத்தில் கூட எயிட்ஸ் நோயாளிகளுக்கெதிரான சமூக மனோநிலை இன்னமும் அதல பாதாளத்தில்தான் இருக்கிறது. என்றாலும், சமயமறிந்து வெளியிட்ட கட்டுரைக்காக வாழ்த்துகள்!
நகைச்சுவையாக எதையும் சொல்ல முடியும் என்பதை வலியுறுத்தும் இன்னொரு பதிவு. பதிவுலகச் சிக்கல்களை பா.க.ச மூலம் தீர்த்து வைக்கக் கிளம்பியிருக்கும் நோக்கம் புரிகிறது. எங்க வூட்டுப் பூனை - நல்ல கவுஜை!!
எல்லா விசயத்தைப் பத்தியும் எழுதிடணும்கற முனைப்புல ஒரு மருத்துவ கட்டுரையும் எழுதியாச்சு. இதயம் நிற்காம இருக்கணும்னா என்ன செய்யணும்கற அறிவுரையோட முடிச்சிருக்காங்க - என்னமோ இந்த அறிவுரையைக் கேட்டுத்தான் இதயம் இயங்குற மாதிரி (என்னோட அறிவுரை - கவுஜைகளைப் படிக்காதீங்க!!)
பந்தாக்கள் பலவிதம்னாலும் அதை சுவையா எடுத்துச் சொல்றது கொஞ்சம் கஷ்டமான விசயம்தான். பி.பி. ஸ்ரீனிவாஸ் ஓர் அற்புதமான பாடகர். அவரை அவர்தான் என்று அறியாமலேயே யதேச்சையாக சந்தித்தபோது நிகழ்ந்த சம்பவங்களை பிசிறில்லாமல் சொல்லியிருக்கிறார். என்னடா, ஒரு பெண்பதிவாளரா இருந்து சாப்பாட்டுச் சமாச்சாரங்கள் எதப் பத்தியும் சொல்லலியேன்னு நெனைச்சேன். வந்ததப்பா சரவண பவன்! நடுத்தர மக்களுக்கான நல்ல உணவு விடுதி இல்லாதது குறித்த ஆதங்கத்தை நன்றாகத்தான் பகிர்ந்திருக்கிறார்.
மொத்தமாகப் பார்த்தால் தொழில் நுட்பக் கட்டுரை, கலாய்த்தல், கவுஜை, சிறுகதை, புத்தக விமர்சனம், மருத்துவம், குழந்தைகளுடனான பரிவு என்று தனது பல முகங்களையும் இந்த ஒரே வாரத்தில் காட்ட முனைந்திருக்கிறார்.
பொன்ஸின் எழுத்துக்களில் எனக்கு மிகப் பிடித்த விசயம் கூடுமானவரை ஆங்கிலம் தவிர்த்து எழுத அவர் காட்டும் முனைப்புதான். சிக்கலின்றி, இலகுவாகவும் சரளமாகவும் வாசிக்க வைக்க முடிவதுதான் அவரது எழுத்தின் பலம். சிறுகதைகள் என்று வரும்போது அவர் இன்னமும் கொஞ்சம் வாசிப்பனுவம் பெற்றுக் கொள்வது அவருக்கு நன்மையாக இருக்கும் (வாசகர்களுக்கும் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை :-) )
பதிவுகளையெல்லாம் தெளிவாக எழுதத் தெரிந்தவர் செய்த ஒரே தவறு இந்தப் பதிவுகளுக்கு என்னை வாசிப்புரை எழுதச் சொன்னதுதான். நல்லா இருங்கடே!!
'மாநாடு கண்ட' சாத்தான்குளத்தான்
30 comments:
நட்சத்திர வாரம் முடியும் பொழுது ஒரு முடிவுரை இடுவது வழக்கமாக இருக்கிறது. சம்பிரதாயமான முடிவுரையாக இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக ஏதும் செய்யலாம் என்று நினைத்த போது நினைவுக்கு வந்தவர் அண்ணாச்சி தான். வித்தியாசம் என்றாலே ஆசிப் அண்ணாச்சி தானே :))
இருப்பினும் முடிவுரை இல்லாவிட்டாலும், ஒரு நன்றியுரையாவது இருக்க வேண்டுமாதலால்....
விளையாட்டாக எழுதிக் கொண்டிருந்த என்னையும் நட்சட்திரமாக்கி நடுவில் நிற்கவைத்த தமிழ்மணத்தாருக்கு முதல் நன்றிகள்!
என் பதிவுகளைப் படித்து, ரசித்து, கருத்துப் பிழை, எழுத்துப் பிழைகளைத் திருத்த உதவி, பின்னூட்டங்கள் மூலமாகவும், தனிமடல்கள் மூலமாகவும் எனக்கு ஊக்கமளித்த அன்பர்கள், நண்பர்களுக்கும் என் உளங்கனிந்த நன்றிகள்!!
பொன்ஸ் பக்கங்களுக்குக் கூட இங்கே முன்வினை, தன்வினை, எதிர்வினைப் பதிவுகள் இட்டு என்னைத் திக்குமுக்காடச் செய்த நண்பர்கள், ப்ரியன், அயன், நிலா, அசுரன், வெளிகண்ட நாதர், இட்லிவடைக்கும் அன்பார்ந்த நன்றிகள்!!!
அமீரக வலைபதிவர் மாநாட்டின் கடும் பணிகளுக்கிடையிலும், மைக் கிடைத்தால் பேச்சை நிப்பாட்டாத தலைவர்கள் மாதிரி எழுதித் தள்ளிக் கொண்டிருந்த என் இடுகைகள் அனைத்தையும் படித்து, வாசிப்புரை எழுதிக் கொடுத்த அண்ணாச்சிக்கு.. ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி :))))
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்தப்பிச்சிட்டாங்க :))))
மீண்டும் செய்திகள் இரவு எட்டு முப்பது மணிக்குன்னு சொல்லும் போது ஓடி வந்து நியூஸ் பாத்துப் பழகிட்டேன் பொன்ஸ் இப்பல்லாம்.. மன்னிக்கணும்..
கிளைமேக்ஸ் முடிஞ்சு வர்ற போலீஸ் மாதிரி வந்து பின்னூட்டம் போடுறதுக்கும் :-)
அருமையான விமர்சனம். நானும் ஏதோ பதிவு என்றால் வெறும் காமெடியும், நிகழ்வுகளும் மட்டுமே இருக்கும் என்றுதான் முதன்முதல் கால் பதித்தேன். இப்போதுதான் தெரிகிறது எவ்வளவு விசயங்கள் இங்கே அடங்கியிருக்கிறது. இவ்வளவு நாட்கள் பதிவு உலகை பார்க்காத என்னுடைய அறியாமையை நினைத்து வருத்தப் படுகிறேன்.
பொன்ஸ்
விரும்பி படித்தேன் எல்லா பதிவுகளையும். பாராட்டுக்கள்
அட! இது நல்ல ஐடியாவா இருக்கே! ஓஓஒ தமிழிலே சொன்னா 'யுக்தி'ன்னு
இருக்கணுமோ? ஆமா...'யுக்தி'ன்றது தமிழ்ச் சொல்லா? புரியலையே...(-:
அது போட்டும் விடுங்க.
புத்தகம் போடும்போது , முன்னுரை, மதிப்பீடு இதுக்கெல்லாம் பிரபலங்களைக்
கேட்டுக்கறமாதிரி, நட்சத்திரப்பதிவுக்கு பின்னுரை இன்னொரு புகழ்(??) பெற்ற
வலைஞர்கிட்டே வாங்கிக்கறதைத்தான் சொல்றேன். ( யப்பாடா....இப்படி
நீட்டி முழக்கவேண்டி இருக்கு பாருங்க)
நல்ல வாரமா இருந்தது பொன்ஸ்.
வாழ்த்து(க்)கள்.
பொன்ஸ்,
நல்லதொரு வாரத்திற்கு மிக்க நன்றி.
நல்ல முயற்சி இது.
வித்தியாசமான நட்சத்திர வாரத்தை வழங்கியமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்!
தோழன்
பாலா
//ஒரு பெண்பதிவாளரா இருந்து சாப்பாட்டுச் சமாச்சாரங்கள் எதப் பத்தியும் சொல்லலியேன்னு நெனைச்சேன். வந்ததப்பா சரவண பவன்! //
அண்ணாச்சி.. என்ன வார்த்தை இது?
நல்ல வாரம் பொன்ஸ்.
வாழ்த்துக்கள்.
நல்ல வாரம்தான் பொன்ஸ். உங்களின் பல கருத்துக்களில் எனக்கு 'பூர்ண' உடன்படிக்கை இல்லை என்றால் எல்லா பதிவுகளையும் படித்தேன். வித்தியாசமான பல தலைப்புகளில் எழுதி கவனத்தை ஈர்த்து படிக்க வைத்தீர்கள்.
நன்றி.
தங்கள் பதிவின் முகப்பில், ஏன் ஒரேயொரு இடுகை மட்டுமே தெரியுமாறு அமைத்திருக்கிறீர்கள்?
காசா...பணமா? ஆறேழு ஒரே சமயத்தில் வந்து விழுமாறு மாற்றலாமே... நன்றி.
இந்த வார இடுகைகள் அருமையாக இருந்தன பொன்ஸ். [ஹிஹி. இரண்டு கதைகளையும் படிக்கலைங்கிற உண்மையை இங்க சொல்லிர்ரேன்.]
பொன்ஸ் என்றால் விளையாட்டுப்பிள்ளைன்னு இருந்த பிம்பத்தை உடைச்சுட்டீங்க. நல்லது!
இப்படிச் சொல்றேங்கிறதுக்காக பொ.க.ச. கனேடியக் கிளை திறக்க மாட்டேன்னு நினைக்காதீங்க. ;)
ஒரு விசயம்: ஆனாலும் அசாத்திய தைரியம் தாயி உங்களுக்கு! கவிமடத் தலைவரையே எழுத வைச்சுட்டீங்களே!
//காசா...பணமா? ஆறேழு ஒரே சமயத்தில் வந்து விழுமாறு மாற்றலாமே... //
பாபா, அப்படித் தான் ஆரம்பத்தில் வைத்திருந்தேன். ஆனால் லோட் ஆக தாமதமாகிறது...
பக்கம் தெரிய தாமதமாகும் ஒவ்வொரு வினாடிக்கும் இங்கே செலவு தான் :((( :))
//இப்படிச் சொல்றேங்கிறதுக்காக பொ.க.ச. கனேடியக் கிளை திறக்க மாட்டேன்னு நினைக்காதீங்க. ;)//
பொ.க.ச அகில ஒலக தலைவி மதி வாழ்க!வாழ்க!!
சங்கத்துப் போர் வாள்(எனக்கு எவன் பட்டம் கொடுக்குறது.. நானே சொல்லிக்க வேண்டியது தான்)
பாலா
//தங்கள் பதிவின் முகப்பில், ஏன் ஒரேயொரு இடுகை மட்டுமே தெரியுமாறு அமைத்திருக்கிறீர்கள்?
காசா...பணமா? ஆறேழு ஒரே சமயத்தில் வந்து விழுமாறு மாற்றலாமே//
அய்யே... இது தெரியாமையா ப்ளாக்குள இருக்கீங்க பாபா!
அது ஹிட் கூட்டுறாதுக்கு வச்சு இருக்காங்க..! :-)
(பொ.க.ச முதல் முயற்சி)
:-)
---இது தெரியாமையா ப்ளாக்குள இருக்கீங்க பாபா!---
அப்படிப் போவுதா கத...
- பால் மணம் மாறா அசல் பால(கன்)ாஜி
வணக்கம் பொன்ஸ்
ஒவ்வொரு பதிவுக்கும் பதிற் பின்னூட்டம் போடாவிட்டாலும், எல்லாவைற்றையும் சாப்பிட்டு மகிழ்ந்தேன் சாந்தி தியேட்டர் பக்கம் இருக்கும் சரவணபவன் அறுசுவை விருந்து போலத் தித்தித்தன. ம்ம்ம்ம்ம்மாட்டிக்கினீங்க....:-)
மிக அருமையான வாரமாக இருந்தது பொன்ஸ்!
நல்ல வாசிப்பின் அனுபவம்!!
வாழ்த்துக்கள்!!
//
பொ.க.ச முதல் முயற்சி
//
பாலா, எனக்கு நேத்து நைட்டு 2 மணிக்கு பொ.க.ச ஆரம்பிக்கறது மாதிரி கனவு வந்தது...இங்கே வந்து பார்த்தா நீங்க ஆட்டத்தை ஆரம்பிச்சிருக்கீங்க...ஏதாவது பூர்வஜென்ம ?????
மிக அருமையான வாசிப்புரை. நல்ல விமர்ச்னம்.
நட்சத்திர வாரத்தில் மிக நன்றாக ஆடியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் பல!
//(பொ.க.ச முதல் முயற்சி)
:-)
//
சபாஷ் சரியான போட்டி. இந்த முயற்சி தொடர்ந்து பெரும் வெற்றியாக வாழ்த்துக்கள்!!!
--பாலபாரதி அனுதாபிகள் சங்கம்
பொன்ஸ்,
ஆசிப் குறிப்பிட்டிருக்கும் இடுகைகளுக்கான சுட்டியைக் கொடுத்தால் நன்றாகவிருக்குமே. பிற்காலத்தில் படிக்க வருபவர்களுக்கு உதவியாக இருக்கும். இப்போது தவற விட்டவர்களுக்குந்தான்.
//அய்யே... இது தெரியாமையா ப்ளாக்குள இருக்கீங்க பாபா!
அது ஹிட் கூட்டுறாதுக்கு வச்சு இருக்காங்க..! :-)
(பொ.க.ச முதல் முயற்சி)
:-) //
அது!!!
சங்கத்துப்போர்வாள் என்பதை நிரூபிச்சிட்டீங்க பாலாபாய். ;)
நட்சத்திர வாரப் பதிவுகள் போலவே சாத்தான்குளத்தாரின் விமரிசனமும் அருமை!
//ஆசிப் குறிப்பிட்டிருக்கும் இடுகைகளுக்கான சுட்டியைக் கொடுத்தால் நன்றாகவிருக்குமே. பிற்காலத்தில் படிக்க வருபவர்களுக்கு உதவியாக இருக்கும். இப்போது தவற விட்டவர்களுக்குந்தான். //
மதி, செஞ்சிட்டேன்..
பாலா, பார்த்துக்குங்க, இந்தச் சுட்டியெல்லாம் சேர்த்தது மதி சொல்லித் தான். நாளைக்கு வந்து ஹிட்ஸ் கூட்டும் முயற்சின்னு போட்டுக் கொடுக்கக் கூடாது :)))
எமது தாராள மனதின் காரணமாக நட்சத்திரத்தை விட்டுக்கொடுத்தோம். தமிழ்மணத்தில் பரபரப்பு ஏற்படுத்தினோம். ஆனால் நன்றி நவில்கையில் எம் பெயர் விட்டுப்போதது, எதேர்ச்சையானதா.. அல்லது சதியா?
அட! இப்படி ஒரு வாய்ப்பு....இன்கேயே பின்னூட்டம் போட்டிருக்கலாமோ......?
பலதரப்பட்ட கருத்துக்களை முன்னெடுத்து வைத்த நட்சத்திர வாரத்தின் முத்தாய்ப்பாக அண்ணாச்சியின் மதிப்புரை அமைந்துள்ளது.
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
நல்ல கவுஜை-னு கவிப்பகைவனே சொல்லிட்டார் :)
அமெரிக்காவில் அப்பாவி முதல்
எயிட்ஸ் விழிப்புணர்வு வரை
பிளாக்கர் பீட்டா முதல்
பூனைக்குட்டி வரை
பதிவுலகில் பெண்கள் முதல்
பாலபாரதி :) வரை
பலவித பந்தாக்கள் முதல்
படம் காட்டும் வரை
சரவணபவன் முதல்
வுட்லேண்ட்ஸ் வரை
நாள்தோறும் தமிழ்மணத்தில்
நல்ல பல பதிவுகள் இட்டு
நட்சத்திரமாய் மின்னிய
நம்ம பொன்ஸுக்கு
நல்லா ஒரு "ஓ" போடுங்க!
வாழ்த்துக்கள் பொன்ஸ்!
ஆசிப் எழுதினா சும்மாவா... சூப்பர் விமரிசனம். ஆனாலும் பெண்புத்தி பின்புத்தின்னு எங்கேயாவது குறிப்பிடாம விட மனசு வராதே?
//ஆமா...'யுக்தி'ன்றது தமிழ்ச் சொல்லா? புரியலையே...(-://
துளசி -- சங்கத்தமிழில், யகரம் மொழிமுன் வராதுன்னு சொல்வாங்க. இதோட தமிழாக்கம், "உத்தி" :-)
//அப்படித் தான் ஆரம்பத்தில் வைத்திருந்தேன். ஆனால் லோட் ஆக தாமதமாகிறது//
ஆமா இப்ப மட்டும் என்ன கிழிக்குது :-D
//ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாட்டிகினாங்க....//
//ம்ம்ம்ம்ம்ம்ம்ம்தப்பிச்சிட்டாங்க :))))//
நல்ல ரசனை...
Post a Comment