காலையிலிருந்தே இதோ, 'இப்போ வருவேன்', 'அப்போ வருவேன்' என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டே இருந்த மழையைத் தைரியமாக எதிர்த்துக் கொண்டே, கோயம்பேடு காய்கனி அங்காடிகளுக்குச் சிற்றுலா சென்ற போது மதிய உணவுக்குத் திரும்பிவிடலாம் என்பது மாதிரியான நேரம் தான். மார்க்கெட்டின் சிறுவியாபாரிகள் கடைகள் எல்லாவற்றையும் ஒரு சுற்று நோட்டம் விட்டுவிட்டு அன்றைக்குப் பச்சையாக புதிதாகத் தோன்றும் காய்களை மட்டுமே வாங்குவது எங்கள் வழக்கம்.
வெங்காயக் கடையில் சாம்பார் வெங்காயத்துக்கும் பெரிய வெங்காயத்துக்குமான விலைப்பேரம் பேசிக் கொண்டிருந்த போது தான் வெங்காயக் கூடைக்கும் கடைக்காரரின் இருக்கைக்கும் இடையில் லேசாக பூந்துடைப்பத்தின் நுனி ஒன்று தெரிந்தது. லேசான ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் பேச வாய்வராமல் "கிலோ இருபது ரூபாயா? கொள்ளை விலையா இருக்கே!" என்று பேசிக் கொண்டிருந்த அம்மாவை நான் தொடுவதற்கும் அந்தப் பூந்துடைப்பத்தின் தலை அதே இடைவெளியில் தென்படுவதற்கும் அதிகம் நேரமாகவில்லை.
சின்ன அணில் அது. அப்போது தான் அணில் ஒன்றை அத்தனை அருகில் பார்க்கிறேன். சிறுவயதில் இந்திப் புத்தகத்தில் மகாதேவி வர்மா வளர்த்த அணிலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நாங்கள் இருந்த வீடுகளில் எல்லாம் அங்குமிங்கும் வளர்ந்திருந்த மரங்களில் அவ்வப்போது ஓடி விளையாடும் அணில்களைப் பார்த்து ரசித்திருந்தாலும், அத்தனை அருகில் பார்த்ததில்லை.
அணில் மெல்ல தலையை வெங்காயக் கூடையிலிருந்து வெளியே விட்டதும், அம்மா என் தொடுதலை உணர்ந்து "ஆமாம் அத அவர் வளர்க்குறாரு" என்றார்.
"என்னது? அணில் வளர்க்கறீங்களா?" என்று நான் கேட்டதும், லேசான வெட்கம் கலந்த பெருமிதத்துடன் 'ஆம்' என்றார் அந்தக் கடைக்காரர். கடைக்காரர் என்று சொன்னாலும் சின்ன பையன் தான், பதினெட்டிலிருந்து இருபது வயது தான் சொல்லலாம். அணிலுடன் விளையாடும் வயது தான் என்று நினைத்துக் கொண்டேன்.
"சாப்பிட என்ன கொடுப்பீங்க?"
"பால் தான் கொடுக்கிறது." என்றபடி இடதுகை பக்கத்தில் வைத்திருந்த பாலை, அணில் கண்டுகொண்டு விடாமல், கையில் எடுத்துக் கொண்டார் அவர். அணிலும் சளைக்காமல் அந்தப் பாலைத் தேடத் தொடங்கியது. கடைக்காரரின் உடையின் மேல் ஏறிப் பின், உடலிலும் ஓடிப் போய் பின்கழுத்துவழியாக இடது கையில் இறங்கி, விரல்களில் இருந்த பாலுக்கு அருகில் சென்றபோது, கடைக்காரர் பால் டம்ப்ளரை வலதுகைக்கு மாற்றிக் கொண்டார். அணிலார் மறுபடி உடலெங்கும் இறங்கித் தேடத் தொடங்கினார்.
பக்கத்துக் கடைக்காரர் "டேய், அது கிட்ட காட்டாம குடின்னு அப்பவே சொன்னேன்ல?! " என்று அறிவுரை சொன்ன போது எங்கள் வியாபாரம் முடிந்து அடுத்த கடைக்கு நகரத் தொடங்கினோம். திரும்பி வரும் வழியில் அந்தக் கடைக்காரரும் அணிலும் மீண்டும் அதே ஒளிந்து பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது ரசிக்கும்படியாக இருந்தது.
**********************
வழக்கமாகப் போகும் எங்கள் அருகாமை மருந்துக் கடை தான். கணவனும் மனைவியுமாக அந்தக் கடையை நடத்துகின்றனர். கணவர் சீட்டை வாங்கி மருந்தை எடுத்து வைக்க, மனைவி ரசீது போட்டுக் கொடுக்க மிக அழகான வியாபாரம் அவர்களுடையது. நான் போகும் நேரங்களில் விளையாட்டுப் பள்ளியில் படிக்கும் அவர்களது இரண்டரை வயது மகனும் பெரும்பாலும் கடையில் தான் இருப்பான். மருந்து எடுத்து வரும் அட்டை பெட்டிகளையோ அவனுக்கென்றே இருக்கும் பென்சில், ரப்பர் இத்யாதிகளையோ வைத்து விளையாடிக் கொண்டிருப்பான்.
நாம் ஏதாவது கேட்கும் போது அதை, தானே எடுத்துத் தர வேண்டும் என்று சில சமயம் அவனிடம் ஆர்வம் கொப்பளிக்கும். அவன் கைக்கு எட்டும் இடத்தில் இருக்கும் விக்ஸ், அமிர்தாஞ்சன் போன்ற மருந்துகளை எடுத்துக் காட்டி, "இது வேணுமா உங்களுக்கு?" என்னும்போது, "அதெல்லாம் வேண்டாம்டா கண்ணா, உன்னைத் தான் தூக்கிக் கொஞ்சணும்" என்று சொல்லலாம் போலிருக்கும்.
அன்றைக்குக் கடைக்குப் போகும்போது, சிறுவன் பயங்கர உற்சாகமாக இருந்தான். அவன் அம்மாவின் தம்பி வந்திருந்ததுதான் உற்சாகத்துக்கான காரணம் என்று தெரிந்தது. வேலையிலேயே மூழ்கி இருக்கும் அப்பாவுக்கும், கணக்கில் கறாராய் இருக்க வேண்டிய அம்மாவுக்கும் இடையில் விளையாடிக் கொண்டிருந்தாலும் தனிமை அவனை வாட்டிக் கொண்டிருந்ததென்பது இன்றைக்கு அவன் மாமாவுடன் பேசிக் கொண்டிருந்த மகிழ்ச்சியிலும் குதியாட்டத்திலும் தெளிவாகத் தெரிந்தது. மாமாவிடம் தன் கடை குளிர்சாதனப் பெட்டியைக் காட்ட வேண்டும் என்று திடீரென்று ஆசை வந்துவிட்டது நம் குட்டிப் பையனுக்கு.
"அப்பா, அப்பா, நம்ம பிரிட்ஜில, " என்றபடி எங்கள் சீட்டுக்கான மருந்தை எடுத்துக் கொண்டிருந்த அப்பாவின் முன் போய் ஒரே குதி குதித்தான். அன்றைக்கென்று என்ன பிரச்சனையோ அவருக்கு, மகன் அந்த வாக்கியத்தை முடிக்கும் முன்னரே, "இன்னிக்கு நீங்க ரொம்ப பேசுறீங்க.. ஆட்டம் அதிகமா இருக்கு, ஒரு இடத்துல உட்காரக் கூடாதா?!" என்று கொஞ்சம் காட்டமாகவே கேட்டுவிட்டார்..
பையனின் குதியல் பட்டென்று அடங்கிப் போயிற்று. அந்தக் கேள்வி கூட முடியவில்லை. கோபத்துடன் சிறுவன் கடை நடுவிலிருந்த அலமாரியின் பின்பக்கத்தில் போய் நின்று கொண்டான். அவனைக் கொஞ்சம் கடுமையாகவே பேசிவிட்டார் என்பதால் அப்பாவுடன் போயிருந்த என்முகமும் என்னவோ நானே திட்டுவாங்கியது போல் சுருங்கிப் போக, அப்பாவிடம் மருந்து பற்றிக் கேட்கவந்த கடைக்காரர், முகக்குறி படித்து, குழந்தையைக் கொஞ்சம் அதிகமாகவே சொல்லிவிட்டோமோ என்று வருத்தத்துடன் அலமாரி பின்னால் போனார்.
"பிரிட்ஜில என்ன, சொல்லுங்க.. " என்று குனிந்து கேட்டார்..
அந்தத் தெய்வம் சற்று நேரம் முன்னால் நடந்ததை முற்றிலுமாக மறந்து போய் இந்த அங்கீகாரத்துக்கே குளிர்ந்து, "பிரிட்ஜில் இருக்கிற சாக்லேட்டை மாமாவுக்குக் கொடுக்கலாமா?" என்று கேட்கத் தொடங்கியது..
*****************************
இரண்டு சம்பவங்களைப் பார்த்ததிலிருந்து என் மனதில் ஏனோ பல்லாயிரம் கேள்விகள். முதல் முதல் வேலை பார்த்த நிறுவனத்தில் பிந்து என்ற என் தோழி ஒருத்தி அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து ஆறு மணி வாக்கில் அலுவலகம் வந்து விடுவாள். மதியம் இரண்டு மணிக்கு அவள் வீட்டுக்குக் கிளம்பும் நேரம் தான் நான் அவளைப் பார்க்கக் கூடிய நேரம். "இத்தனை சீக்கிரம் கிளம்புறீங்க?!" என்று தான் எனக்கும் அவளுக்குமான பேச்சு வார்த்தை தொடங்கியது. பிந்துவின் இரண்டு வயது மகள் ப்ளே ஸ்கூலிலிருந்து திரும்பும் மூன்று மணிக்கு அவள் வீட்டிலிருக்க வேண்டும் என்று தான் இத்தனை அதிகாலையில் எழுந்து அலுவலகம் வருகிறாளாம் அவள். இப்படி வராவிட்டால் குழந்தையுடனான நேரம் ரொம்பவே குறைந்துவிடுகிறதாம்.
மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து இந்தக் காரணத்தை அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கிறேன். குழந்தை கொஞ்சம் தவழ, பேசத் தொடங்கிவிட்டால், அவனோ அவளோ பள்ளிக்குப் போகத் தொடங்கும் வரை வேலையை கைவிட்டு விடுபவர்கள், சூழ்நிலை காரணமாக வேலைக்கு வந்தாலும் குழந்தை சாப்பிட்டானா? தூங்கினாளா? வெயிலில் அலையாமல் இருக்கிறாளா ? என்று கவலைப்பட்டுக் கொண்டே இருக்கும் பெற்றோரை அடிக்கடி பார்க்க முடிகிறது.
செல்லப் பிராணிகள் வளர்க்கும் போதும் இந்தப் பிரச்சனை இருக்கிறது. நாயோ பூனையோ வளர்க்க வேண்டும் என்று சொன்னபோது எங்கள் வீட்டில் எழுந்த முதல் கேள்வி, அதைப் பகல் பொழுதில் யார் பார்த்துக் கொள்வது என்பது தான்.
"மகளிர் மட்டும்" திரைப்படத்தில் வந்தது போல் ஏன் குழந்தைகளை அலுவலகத்துக்கே அழைத்து வர நம்மால் முடிவதில்லை. இது போன்ற அலுவலகங்கள் உலகெங்கிலும் எங்காவது இருக்கின்றனவா? பன்னாட்டு நிறுவனங்களில் சிலவற்றில் ஊழியர்களுக்கான குழந்தைகள் காப்பகங்களே இருக்கின்ற போதும் அவை இருக்குமிடம் பணியிடத்திலிருந்து பலகாத தொலைவாகவே இருக்கிறது.
காப்பி, மதிய உணவு இடைவெளிகளில் மட்டுமாவது குழந்தைகளைப் பார்க்க முடிந்த அருகாமை இடங்களாக இருந்தால் குழந்தைகளைப் பற்றிய கவலைகள் இல்லாமல் வேலை செய்யும் பெற்றோரின் பணித்திறமும் அதிகரிக்கும் தானே? அதை ஏன் காண முடிவதே இல்லை? களத்து மேட்டில் குழந்தையைத் தூளியில் போட்டுவிட்டு வயலுக்குப் போய்க் கொண்டிருந்த நமது கலாச்சாரத்தை எங்கு இழந்தோம்?
பத்து மணி நேரத்துக்கும் மேல் கணினித் திரையையே பார்த்துக் கண்ணைக் கெடுத்துக் கொள்ளாமல் இருக்க, விளையாட்டுக்காக டேபிள் டென்னிஸ், கேரம் போன்ற விளையாட்டு அறைகள் கொண்ட நிறுவனங்கள் கூட, இவற்றுக்குப் பதிலாக குழந்தைகள் அறை வைத்திருந்தால் இடமும் கலகலப்பாகும்; கொஞ்ச நேரம் குழந்தைகளிடம் செலவு செய்துவிட்டு வரும்போது வேலையும் சுறுசுறுப்பாக நடக்கும் அல்லவா?
ஏதோ ஒரு படத்தில் நாகேஷ் தன் கைக்குழந்தையை ஒளித்து மறைத்து அலுவலகத்துக்குத் தூக்கி வருவார். அந்த மாதிரியான ஒரு அலுவலகம் உலகில் எங்கேயாவது இருக்கிறதா என்ன?
26 comments:
//"குழந்தைத்தனமான ஒரு ஆசை..." //
பதிவை படிக்கும் போது உள்ளம் கொள்ளைப் போகுது !
//ஒரு படத்தில் நாகேஷ் தன் கைக்குழந்தையை ஒளித்து மறைத்து அலுவலகத்துக்குத் தூக்கி வருவார்//
இரு கோடுகள்!
நட்சத்திரத்தின் ஜொளிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது!
அருமையான பதிவு!
//களத்து மேட்டில் குழந்தையைத் தூளியில் போட்டுவிட்டு வயலுக்குப் போய்க் கொண்டிருந்த நமது கலாச்சாரத்தை எங்கு இழந்தோம்?
//
நல்ல கேள்வி!
பாராட்டுக்கள்!
எனக்கு ரொம்பப் பிடிச்ச பதிவு இது. மனம் நிறைவா இருக்கு.
நேத்து ஒரு நண்பர்கிட்டே பேசிக்கிட்டு இருந்தப்ப இதைப் பத்திப் பேச்சு வந்துச்சு.
அவரோட அலுவலகத்தில்( அவர்தான் பாஸ்) தாய்மார்களையே பகுதி நேர வேலைக்கு
எடுக்கறாராம். பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துலே விட்டுட்டு அவுங்க வேலைக்கு வந்துட்டு,
பகல் மூணு மணிக்கு, பள்ளிக்கூடம் விடும்போது போயிருவாங்களாம்.
எந்த அலட்டலும் இல்லாம அந்த 6 மணிக்கும் குறைவான நேரத்துலேயே அநேகமா
எல்லா வேலைகளும் முடிஞ்சுருதாம்.
பிள்ளைங்க, உடம்பு சரியில்லாமப்போய் பள்ளிக்குப் போகலைன்னா?
பிரச்சனை இல்லை. வேலையை வீட்டுக்குக் கொண்டுபோய்
முடிச்சுத் தந்துருவாங்களாம்.
நல்ல ஐடியாவா இருக்குதானே?
Obviously, there were many companies (IT Companies) has child care centre's. My company has.
Nice write up & concept. Keep writing.
- Lakshman
---காப்பி, மதிய உணவு இடைவெளிகளில் மட்டுமாவது---
ஒத்த கருத்துடைய உளவியளாலர்களின் கருத்தை ஏற்று, வெகு சில நிறுவனங்கள் இதை பின்பற்ற ஆரம்பித்திருக்கின்றன. 90-களின் இறுதியில், வேலைக்கு ஆள் கிடைப்பது கஷ்டமாக இருந்தபோது, புதிய perk என்று அறிவித்து பலர் தூண்டில் போட்டார்கள்.
இப்போது, 'best places to work' என்னும் பட்டியலில் இடம்பெறுபவர்களில் சிலர் மட்டுமே தொடர்கிறார்கள். நேரங்கடந்து வேலை செய்வது, இறுக்கம் தளர்ந்து காணப்படுவது என்று நிறுவனத்துக்கும் பல நன்மைகள்.
// "அந்தத் தெய்வம்" சற்று நேரம் முன்னால் //
உண்மை! வெறும் புகழ்ச்சியில்லை. நெகிழ்ச்சி மட்டுமே...
பொன்ஸ்,
இப்பதிவு மனதை என்னவோ செய்தது. ஆனால், மிகப் பெரிய தத்துவ விசாரப் பதிவுகளைவிட, இப்பதிவை மனதிற்கு நெருக்கமாக உணர்ந்தேன். ஒருவேளை, எனக்கு ஒரு குழந்தை பிறந்திருப்பதாலோ என்னவோ?
இப்பொதெல்லாம் சென்னையில் நிறைய நிறுவனங்கள் (பொதுவாக மென்பொருள்) பகுதி நேர வேலைக்கும், வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலையைச் செய்வதற்கும் வாய்ப்பளிப்பதாக செய்திகள் (http://www.hindu.com/2006/08/16/stories/2006081602241600.htm) வருகின்றன. ஆனால், நீங்க சொன்னமாதிரி, குழந்தைகள் காப்பகம் ஒன்று தான் வேலைபார்க்கும் அலுவலகத்திலேயே இருப்பது மிகவும் நன்று. எங்கள் அலுவலகத்தில் முன்பு இதை யோசித்து, போதிய இடமின்மையால் கைவிட்டனர் (சாப்பிடுவதற்கே நல்ல இடம் கிடையாது).
//அந்தத் தெய்வம் சற்று நேரம் முன்னால் நடந்ததை முற்றிலுமாக மறந்து போய் இந்த அங்கீகாரத்துக்கே குளிர்ந்து, "பிரிட்ஜில் இருக்கிற சாக்லேட்டை மாமாவுக்குக் கொடுக்கலாமா?" என்று கேட்கத் தொடங்கியது..
//
இதைத்தான் குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள்!
பொன்ஸ் எங்கள் அலுவலகத்திற்கு அருகிலேயே ஒரு சிறந்த கிரச் உள்ளது. சில பெற்றோர்கள் பிள்ளைகளை கூடவே பஸ்ஸில் கூட்டி வந்து கிரெச்சில் விடுவார்கள். மதியச் சாப்பாட்டு வேளையில் எட்டிப் பார்ப்பது...மாலை வீட்டிற்குப் போகையில் அழைத்துப் போய் விடுவார்கள். ஆனால்...இப்படியெல்லாம் செய்யத்தான் வேண்டுமா என்று கூட சமயத்தில் தோன்றுகிறது! ஆனால் வாழ்க்கை அனைத்தையும் ஏற்றுக் கொண்டு முன்னால் போய்க்கொண்டேயிருக்கிறது. நாமும் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
பொன்ஸ், பின்னூட்டத்தில் எப்படி hyperlink கொடுப்பது?
சிங்கையில் சில நிறுவனங்கள் உள்ளன.
இது சில காலங்களுக்கு முன்பு இங்கு ஹாட் டாபிக்காக இருந்தது.
தங்கவேல், இங்கே பாருங்கள்..
இப்பொதெல்லாம் சென்னையில் நிறைய நிறுவனங்கள் (பொதுவாக மென்பொருள்) பகுதி நேர வேலைக்கும், வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலையைச் செய்வதற்கும் வாய்ப்பளிப்பதாக (< 'a' href="http://www.hindu.com/2006/08/16/stories/2006081602241600.htm/">
செய்திகள் < /a வருகின்றன.
பொன்ஸ், உங்கள் பதிவை என்னுடைய பரிசோதனைத்தளமாக உபயோகப்படுத்தியதற்கு மன்னிக்கவும். லிங்க் கொடுப்பதில் ஏதோ தவறு நேர்ந்துவிட்டது. பிறிதொருநாள் சோதனை செய்து பார்க்கிறேன்.
பொன்ஸ்
உங்கள் பதிவுகள் அனைத்தையும் இந்த வாரம் படித்துக்கொண்டுதானிருக்கிறேன். நிறைய எழுத வேண்டும் போல தோன்றினாலும் இப்போதைக்கு நேரம் இல்லை. பின்னொருநாளில் எழுதுகிறேன்.எபோதும் தெரிகிற பொன்ஸ் பக்கங்களுக்கும் இதற்கும் இடையே மாற்றங்கள் தெரிகிறது. படங்களை மட்டும் சொல்லவில்லை, கருத்துக்களையும் சேர்த்தே. பாராட்டுக்கள்
Good one.
இன்றைய வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் இருந்து...
Work & Family - WSJ.com :: More New Mothers Stay Home: More new mothers are staying home, even when it causes financial pain.
Some reasons women drop out of the work force after childbirth:
• Desire to nurture babies in their first years
• Poor quality of available child care
• High cost of acceptable child care
• Lack of extended maternity leave
• Lack of flexible return-to-work options
• Decision to switch to a more family-friendly career
// அந்தத் தெய்வம் சற்று நேரம் முன்னால் நடந்ததை முற்றிலுமாக மறந்து போய் இந்த அங்கீகாரத்துக்கே குளிர்ந்து, "பிரிட்ஜில் இருக்கிற சாக்லேட்டை மாமாவுக்குக் கொடுக்கலாமா?" என்று கேட்கத் தொடங்கியது.. //
லியோ டால்ஸ்டாயின் "Little girls are wiser than men" என்ற சிறுகதை நினைவிற்கு வந்தது.
உள்ளத்து ஆசைகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். நியாயமான ஆசைகளும் கூட.
தலைப்பு - 'ஒரு' ஆசை - தவறு.
'ஓர்' ஆசை - சரி.
மெய்யெழுத்துக்களுக்கு முன்னால் "ஓர்" என்பதே இலக்கண விதி.
(என் தலை விதி என்கிறீர்களா?)
//அந்தத் தெய்வம் சற்று நேரம் முன்னால் நடந்ததை முற்றிலுமாக மறந்து போய்//
சம்பவத்தை அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறீர்கள்!
//"மகளிர் மட்டும்" திரைப்படத்தில் வந்தது போல் ஏன் குழந்தைகளை அலுவலகத்துக்கே அழைத்து வர நம்மால் முடிவதில்லை. இது போன்ற அலுவலகங்கள் உலகெங்கிலும் எங்காவது இருக்கின்றனவா?//
இங்கே பல அலுவலகங்களில் எந்நேரமும் குழந்தைகளை உடன் வைத்துக்கொள்ளமுடியாவிட்டாலும், அவ்வப்போது அழைத்துக்கொண்டு வரலாம். உதாரணத்துக்கு, பெற்றோரில் ஒருவர் முக்கியமாக எங்காவது வெளியே செல்லவேண்டும், அல்லது மருத்துவரைப் பார்க்கவேண்டுமென்றால் இன்னொருவரின் அலுவலகத்தில் இரண்டொரு மணிநேரம் செலவிடமுடியும். இரண்டு பெற்றோர்களில் ஒருவர் மட்டுமே வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் இவ்வாறு செய்துகொள்வது வழக்கம். e.g. அம்மா சிறிது நேரம் குழந்தையை அப்பாவின் அலுவலகத்தில் விட்டுவிட்டுச் செல்லுதல்.
//காப்பி, மதிய உணவு இடைவெளிகளில் மட்டுமாவது குழந்தைகளைப் பார்க்க முடிந்த அருகாமை இடங்களாக இருந்தால் குழந்தைகளைப் பற்றிய கவலைகள் இல்லாமல் வேலை செய்யும் பெற்றோரின் பணித்திறமும் அதிகரிக்கும் தானே?//
இது நல்லது தானென்றாலும் இதில் ஒரு சிரமம் உண்டு. சில குழந்தைகளுக்கு separation anxiety அதிகம் இருக்கும். தாய்/தந்தை சிறிது நேரம் வந்து பார்த்துவிட்டுப் போனால் அவர்கள் போகும்போது சில குழந்தைகள் அழுக வாய்ப்புண்டு. நாள் பூராவும் சும்மா இருக்கக்கூடிய குழந்தை, வந்து பார்த்துவிட்டு மீண்டும் விட்டுவிட்டுப் போகும்போது அழ வாய்ப்புண்டு. ஆனால் இது எல்லாக் குழந்தைகளுக்கும் பொருந்தாது தான். இது ஒரு கண்ணோட்டம் மட்டுமே.
//மெய்யெழுத்துக்களுக்கு முன்னால் "ஓர்" என்பதே இலக்கண விதி.
//
மெய்யெழுத்துகளுக்கு முன்னால்தானே!
ஆசை என்பதில் வரும் முதலெழுத்து "ஆ" உயிரெழுத்துதானே!
//பதிவை படிக்கும் போது உள்ளம் கொள்ளைப் போகுது ! //
நன்றி கோவி
//அருமையான பதிவு! //
நன்றி சிபி
//வேலையை வீட்டுக்குக் கொண்டுபோய்
முடிச்சுத் தந்துருவாங்களாம்.//
துளசி அக்கா, வீட்டிலிருந்தே வேலை செய்வது எங்க நிறுவனத்திலும் அனுமதிக்கப் படுகிறது. ஆனால், தினமும் அப்படிச் செய்ய முடியாது. மாதத்தில் ஒரு நாள், இரண்டு நாள் செய்யலாம்..
லக்ஷ்மண், என்ன கம்பனிங்க உங்களது? ரொம்ப நல்லா இருக்கே..
பாபா, நிறைய தகவல்கள், செய்திகள், மெதுவாகப் படிக்கணும்...நன்றி :)
நன்றி பிரதீப்
நன்றி தங்கவேல், நீங்க அந்தப் பழைய பதிவிலேயே உங்கள் முயற்சிகளைச் செய்து பார்க்கலாம் :)) செய்தி முன்னமே படிச்சது தான்.. பகிர்ந்தமைக்கு நன்றி :)
// நாமும் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.//
ராகவன், ஏனோ இப்படி எனக்குத் தோன்றியதில்லை. விரும்பியோ விரும்பாமலோ இந்த ஓடும் வாழ்க்கைக்குள் காலெடுத்து வைத்துவிட்டோம். ஓட்டம் இன்னும் சுலபமாக, விருப்பதிற்குரியதாக இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று தானே பார்க்க வேண்டும். ஒதுங்கி நிற்க முடியுமானால், எப்போதோ ஒதுங்கி இருக்கலாம் :)
நன்றி வடுவூர் குமார், நிர்மல், வினையூக்கி, மதுரா, லதா
பத்மா, எழுதுங்கள், உங்கள் கருத்துக்களைப் படிக்க ஆவலாக உள்ளேன்.. உங்களுக்குச் சீக்கிரம் நேரம் கிடைக்கட்டும் :))
உணர்விலி,
//மெய்யெழுத்துக்களுக்கு முன்னால் "ஓர்" என்பதே இலக்கண விதி.//
அது சரி.. இன்னுமொரு எழுத்துப் பிழையாரா? :))) எம் ஞான குரு சிபியார் சிஷ்யைக்குச் சாதகமாக இதற்குப் பதிலிறுத்திருப்பதைப் பாருங்கள். குருவே சரணம்!:)))
//அம்மா சிறிது நேரம் குழந்தையை அப்பாவின் அலுவலகத்தில் விட்டுவிட்டுச் செல்லுதல்.//
அட! சூப்பராக இருக்கே சேது!
உங்களின் அடுத்த கண்ணோட்டமும் யோசிக்க வேண்டியது தான். ப்ளே
ஸ்கூல் மாதிரி இந்த அலுவலக குழந்தைகள் காப்பக அறைக்கும் தனியே ஆட்களை நியமித்துக் கொள்ளலாமே! குழந்தை உடைய பெற்றோர் மட்டுமே அவர்களுக்குரிய செலவைக் கொடுத்துவிட்டால், முடிகிற போது வந்து பார்த்துச் செல்லவும் முடியும், நீங்கள் சொல்வதுபோன்ற எண்ணங்களைக் குழந்தைகள் மனதிலிருந்து அகற்றவும் செய்யலாம்..
பல அரசுத் துறை அலுவலகங்களில் crèche உண்டு.
இதற்காகத் தான் கணி, தகவல் நுட்பத் துறையில் தொழிற்சங்கம் வேண்டும் என்பது.
// மெய்யெழுத்துக்களுக்கு முன்னால் "ஓர்" என்பதே இலக்கண விதி. //
உயிரெழுத்தில் ஆரம்பிக்கும் சொல்லின் முன் ஓர் வரும் என்றுதான் உணர்விலி சொல்ல நினைத்திருப்பார். பொதுவாகத் தமிழ்ச்சொல் மெய்யெழுத்தில் தொடங்காது என்று நினைவு.
ஒரு தமிழ்த் திரைப்படப் பாடல் ----
"எனக்கொரு ஆசை இப்போது உனக்கதைச் சொல்வேன் மறக்காமல் வரவேண்டும் "
--- இலக்கணத்தில் வழுவமைதி என்றால் அடிக்க வந்துவிடுவீர்கள் :-)
//இதற்காகத் தான் கணி, தகவல் நுட்பத் துறையில் தொழிற்சங்கம் வேண்டும் என்பது.//
மணியன் :))) இது நல்லா இருக்கே!
//இலக்கணத்தில் வழுவமைதி என்றால் அடிக்க வந்துவிடுவீர்கள் :-)//
பாலராஜன், எனக்கு நல்லதாச் சொன்னா எதுக்கு அடிக்க வரேன் :))))
Post a Comment