Wednesday, November 29, 2006

படம் காட்டுறேன்..

வெகு நாட்கள் முன்பே இட்டிருக்க வேண்டிய பதிவு இது. அமெரிக்காவில் பார்த்த ஒரு குகைப்பகுதியின் அறிமுகம். நான் தங்கியிருந்த ஊரிலிருந்து ஒரு மணிநேரப் பயணமான இடத்தில் இருந்தது இந்தக் குகை. மெரிமெக் குகைகள்(Meramec Caves) என்று பெயர். இதை ஜெஸ்ஸி ஜேம்ஸ் ஒளிந்திருந்த இடம்(Jesse James Hideout) என்றும் சொல்கிறார்கள்.


1870களில் அமெரிக்காவைக் கலக்கிய கொள்ளைக்காரனான ஜெஸ்ஸி ஜேம்ஸும் அவனது கூட்டத்தாரும் தங்க இடம் அளித்த குகையாம் இது.அருகாமை வங்கிகளிலும் ரயில்களிலும் கொள்ளையடித்தபின் இந்தக் குகையில் வந்து தான் அவர்கள் ஒளிந்து கொள்வார்களாம்.ஒளிந்து கொண்ட இடத்துக்கும் மாதிரி செய்து வைத்திருக்கிறார்கள்:அருகாமைப் பள்ளிக்கூடத்துக் குழந்தைகள் செய்து கொடுத்த காந்தசக்தியைப் பயன்படுத்தும் பென்டுலம்:


உலகிலேயே இது போல் மொத்தம் பன்னிரண்டு பெண்டுலங்கள் தான் இருக்கின்றனவாம். அவற்றிலும் இது சிறப்பு மிக்கது, ஏனெனில் இந்த பெண்டுலத்தைச் செய்த குழந்தைகள் இதன் நிறையில் கைவைத்து விட்டார்களாம். அதனால், பெண்டுலம் ஒரு நிமிடம் போல தாமதமாக நகர்கிறதாம். ;)


இன்றைய "சவால்" மாதிரியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் போல் 1950களில் அமெரிக்காவின் மிகவும் புகழ் பெற்ற தொகா நிகழ்ச்சி பீபிள் ஆர் ஃபன்னி(People are Funny). அந்த நிகழ்ச்சியின் பகுதியாக, குகையைச் சேர்ந்த கீழுள்ள பகுதிக்குள் தம்பதியராக ஐந்து நாட்கள் போல் தங்கியிருக்க வேண்டும்.இடம் மொத்தமே இவ்வளவு தான். ஆனால், அங்கேயும் தங்கி இருந்து ஒரு ஜோடி பரிசு பெற்று பஹாமாஸுக்கு ஒரு மாதச் சுற்றுலா சென்று வந்தார்களாம்!


என்னத்தச் சொல்ல, மக்கள் உண்மையாகவே கோமாளிகள் தாம்!


தண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கும் இந்தக் குகைப்பாறைகளில், ஓன்க்ஸ்(Onyx) என்னும் புதுவிதமான பாறைகள் உருவாகின்றன. அழகானவை இந்த ஓன்க்ஸ்.ஓன்க்ஸின் இன்னுமொரு காட்சிஓன்க்ஸ் இன்னும் அழகாக


இந்தப் பாறைகளின் மேல் விதவிதமாக, வெவ்வேறு நிறங்களில் வெளிச்சமடித்து பின்னணியில் பாடல் ஒன்றையும் ஓட விட்டு விடுகிறார்கள். பாடல் இசைக்கு ஏற்ப வெளிச்சமும் பாறைகளின் மீது விளையாடுகிறது. அழகான காட்சியாக இருக்கிறது.. ஏதோ நடனம் போல..
வைன் டேபிள் என்கிறார்கள் கீழே உள்ள குதிரையை


மூன்று கால்களால் நிற்கும் இந்தக் குதிரையும் நீருக்கடியில் உருவான ஓன்க்ஸ் பாறைகளால் ஆனது. திராட்சைக் கொத்துகள் போல் இருக்கும் இதன் உடலமைப்பைப் பார்த்துத் தான் இது 'வைன்' டேபிள் என்று அழைக்கப்படுகிறது.உலகிலேயே மொத்தம் மூன்று இடங்களில் மட்டுமே இருக்கும் இந்த வைன் டேபிள் உருவாக்கம், இந்தக் குகைகளில் மட்டுமே தண்ணீருக்கு மேலே இருந்து மக்களுக்குப் பார்ப்பதற்குக் கிடைக்கிறது.


அழகான இந்தக் குகைக்கு மொத்தம் ஏழு நிலைகள் இருக்கின்றன. இரண்டு நிலைகள் மட்டுமே நாம் பார்க்கக் கிடைக்கிறது. மற்றவை இன்னும் தண்ணீருக்கடியில் இருக்கின்றன போலும். குகையைச் சுற்றிப் பார்க்க இருபதிருபது பேராக அனுப்புகிறார்கள். வழிகாட்டிகளின் துணையில்லாமல் உள்ளே போகவே அனுமதிப்பதில்லை. வழிகாட்டி, சுற்றுலா எல்லாவற்றிற்குமாகச் சேர்ந்து $20 செலவு என்று நினைவு.

அமெரிக்காவின் எல்லா சுற்றுலா இடங்கள் போலவும் இங்கும் உள்ளே நுழையுமுன் நம்மை ஒரு நிழற்படம் எடுத்துக் கொள்கிறார்கள். திரும்பி வரும் போது அந்தப் படத்தை நினைவுக்காக நாமே பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இல்லையென்றாலும் அவர்களே வைத்துக் கொள்கிறார்கள். (ஏதாவது பாதுகாப்பு ஏற்பாடாய் இருக்குமோ என்று எனக்குச் சந்தேகம் :) )

இந்தக் குகையைப் பார்த்து முடித்து வந்த போது எனக்கு நம் விசாகப் பட்டினத்துக்கருகில் இருக்கும் போராக் குகைகள் நினைவுக்கு வந்தது. கிட்டத் தட்ட இதே போல், மூன்று நிலைகள் அடங்கிய, மற்றும் பல்வேறு விதமான பாறைகளுடன், அமெரிக்கக் குகையை விட இன்னும் அதிசயமான வரலாற்றுடன் இருக்கும் நமது போரா குகைகளையும் இதே போல் விளக்கும் சிற்றுலாக்கள் ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். அரசாங்கத்துக்கும் வருமானமாயிற்று.

15 comments:

Anonymous said...

பொன்ஸ், ரொம்ப சோம்பேறி ஆயிட்டேன்னு நெனச்சு, தமிழ்மணம் திறந்தா, நீங்க நட்சத்திரமா மின்னிகிட்டிருந்தீங்க! வாழ்த்துக்கள்! இதுல முதல் பின்னூட்டம் என்னதுதான். :) படங்கள், தகவல்கல் போன்றவை, என்னைப்போல் இக்கரைக் காப்போருக்கு (இதுக்கு அர்த்தம் கேட்டா, தனி பதிவே போடவேண்டிவரும்) புதிய செய்திகள். நல்லாயிருக்கு!

Boston Bala said...

குகைப் படங்கள் நன்றாக இருந்தது. (படங்களைப்ப் போட்ட format-ம் அருமை.)

குமரன் (Kumaran) said...

நம் சுற்றுலாத்துறை அமைச்சர்களை இந்த மாதிரி இடங்களுக்கு அனுப்பவேண்டும். 50 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சிறு நிகழ்ச்சியை வைத்துக் கொண்டே அது வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் என்று சொல்லி சுற்றுலா பயணிகளிடம் படம் காட்டிப் பணம் பண்ணும் வேலையைக் கற்று வரலாம் அவர்கள். :-)

மலைநாடான் said...

யக்கோவ்!

திருச்செந்தூரில் பஞ்சலிங்கங்களிருக்கும் குகைகூட ரசிக்கத் தக்கதுதானுங்கோ.:)

Anonymous said...

எங்க இருக்கு இந்த கேவர்ன்ஸ். லூரே கேவர்ன்ஸ் பார்த்து இருக்கீங்காளா.

இதை போலவே நன்றாக இருக்கும்.

செந்தழல் ரவி said...

படங்கள் நல்லருந்தது...உங்க காமிரா என்ன காமிரா ? படங்கள் நீங்களே எடுத்ததா இல்லை மண்டபத்தில் யாரேனும் எடுத்து கொடுத்ததா ?

Premalatha said...

Indiaல சகஸ்தரதார-ங்கிற (இமயமலையடிவாரம்) இடத்துல இதே மாதிரி குகை இருக்கு.

காரணங்கள் - போரஸ் கால்கேரியஸ் பாறைகள், ground water, capillary actionனால மேல போயி... மறந்து போச்.

சகஸ்தரதாரால இந்த குகைக்குப் பக்கத்திலேயே சல்பர் ஊற்றும் இருக்கு. (பலமுறை போயிருக்கேன். பக்கத்துலதான் நாலுவருசம் குப்ப கொட்டினேன்).


//குகைப் படங்கள் நன்றாக இருந்தது. (படங்களைப்ப் போட்ட format-ம் அருமை.) //

டிட்டோ.

சேதுக்கரசி said...

//(ஏதாவது பாதுகாப்பு ஏற்பாடாய் இருக்குமோ என்று எனக்குச் சந்தேகம் :) )//

நம்பவே நம்பாதீங்க.. பணம் பிடுங்கும் ஏற்பாடு தான் :)

படங்கள் நல்லா இருந்துச்சு பொன்ஸ். அடுத்த முறை வரும்போது வெர்ஜீனியாவில் லுரே காவெர்ன்ஸ்க்குப் போங்க :)

பொன்ஸ்~~Poorna said...

வாங்க சந்திரா. ஆளைக் காணோமேன்னு நினைச்சிகிட்டிருந்தேன், முதல் ஆளா வந்துட்டீங்க இங்க :))
உங்களை மாதிரி இக்கரை காப்போர் எல்லாம் இருக்கிறதால தான் நாங்க நிம்மதியா அக்கரை பார்த்துட்டு வர முடியுது :))

//படங்களைப்ப் போட்ட format-ம் அருமை//
நன்றி பாபா, பிரேம்லதா

//50 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சிறு நிகழ்ச்சியை வைத்துக் கொண்டே அது வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் என்று சொல்லி//
:)))) குமரன், உள்ளூர்க் காரர்களே அதிகம் சுற்றுபவர்களாக இருப்பதால் இப்படி இருக்குமோ? இங்கும் கொஞ்சம் கொஞ்சமாக வார இறுதிச் சுற்றுலாக்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. நமது சுற்றுலாத் துறையும் சுறுசுறுப்பாகும் என்று நம்புவோம் :)

//திருச்செந்தூரில் பஞ்சலிங்கங்களிருக்கும் குகைகூட ரசிக்கத் தக்கதுதானுங்கோ.:)//
ஆகா.. நான் பார்த்ததில்லையே மலைநாடன், பார்த்திடுவோம்..

//எங்க இருக்கு இந்த கேவர்ன்ஸ். லூரே கேவர்ன்ஸ் பார்த்து இருக்கீங்காளா. //
அகில், இது மிசோரி, செயிண்ட் லூயிஸ் அருகில். லூரே பார்த்ததில்லை :(

//உங்க காமிரா என்ன காமிரா ? படங்கள் நீங்களே எடுத்ததா இல்லை மண்டபத்தில் யாரேனும் எடுத்து கொடுத்ததா ?//
அடப்பாவி! சொந்தக் கேமிரா தான் சோனி, மாடல் பார்த்து எழுதுகிறேன்.

//நம்பவே நம்பாதீங்க.. பணம் பிடுங்கும் ஏற்பாடு தான் :)//
:))))

இலவசக்கொத்தனார் said...

பிரேமலதாக்கா, நானும் சகஸ்ரதாரா குகைகளுக்குப் போயிருக்கேன். அந்த சல்பரின் வாசனை(?) இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. தோல் வியாதிக்கு அங்கு குளித்தால் நல்லதென்று சொன்னார்கள். ஐஸ்லாந்தில் ப்ளூ லகூன் என்ற இடமும் இது போலத்தான்.

வெர்ஜீனியாவில் ஷெனட்டோவா குகைகளும் இருக்கிறது. உங்கள் படத்தில் இருப்பது போலத்தான் பாறைப் படிமங்கள். அங்கு ஒரு சிலை நம்ம திருவள்ளுவர் மாதிரியே இருக்கிறது. அவர்கள் புத்தா என்கிறார்கள். சிவலிங்கங்களும் உண்டு.

இலவசக்கொத்தனார் said...

//(ஏதாவது பாதுகாப்பு ஏற்பாடாய் இருக்குமோ என்று எனக்குச் சந்தேகம் :) )//

நம்பவே நம்பாதீங்க.. பணம் பிடுங்கும் ஏற்பாடு தான் :)//

முன்ன எல்லாம் இது வெறும் பணம் புடுங்கத்தான். ஆனா இப்போ எல்லாம் இது பாதுகாப்புக்கும். இந்த போட்டோ எல்லாம் சேர்த்து வெச்சுக்கறாங்க. எதாவது நடந்துதுனா யார் யார் வந்தாங்கன்னு தெரியணமுல்ல.

உணர்விலி said...

திருச்செந்தூர் குகை மெய்யான சித்தர் தியானம் செய்த இடம். அங்கே சென்றால் மெய் சிலிர்க்கிறது. ஆனால் செல்லும் வழி பயமாக இருக்கிறது.

நம் அறிவு ஜீவிகள் 60 முதல் 200 ஆண்டுக்கால ஆங்கிலேயக் கட்டடங்கள் சிதிலமானால் பாரம்பரியக் கட்டடம் இடிகிறதே என்று ஓலமிடுவார்கள். ஆனால் ஆயிரம் ஆண்டுக்கும் மேல் தொன்மையான சித்தர் குகைகளும் கோயில்களும் இடிந்தாலோ, பாழாய்ப்போனாலோ அவர்களது மதச்சார்பின்மை அவர்களின் வாயைக் கட்டிப்போட அவர்கள் அந்த நாளைய சித்தர்களை விட வாய் மூடி மௌனி ஆகிவிடுவார்கள். நமது அரசுகளும் தம் மதசார்பின்மைக் கொள்கையை நிரூபிப்பார்கள்.

எல்லோரா சித்தன்னவாசல் கதி எவரும் அறிந்ததே. பாமியான் புத்தர் கதி இங்கும் வர அதிக நாட்கள் இருப்பதாகத் தோன்றவில்லை.

இப்போதுதான் நம் சுற்றுலா அமைச்சர்கள் (மைய, மாநில) உருப்படியாக வெளிநாடுகளில் உள்ள சில சுற்றுலா இடங்களுக்கும் வர்த்தகச் சந்தைகளுக்கும் சென்று வந்திருக்கிறார்கள். இதன் பயன் நாட்டுக்குக் கிடைப்பதற்குள் அவர்கள் துறை மாற்றப்படக்கூடாது அல்லது அரசு கவிழக்கூடாது.

மதச்சார்பற்ற இறைவன் இந்நாட்டைக் காக்கட்டும்.

மகேஸ் said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்றைக்குத்தான் தமிழ்மணம் திறந்து பார்த்தேன். நீங்கள் நட்சத்திரமாகத் தேர்வு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

G.Ragavan said...

பொன்ஸ்....நல்லாயிருக்கு படங்கள். இதே மாதிரி ஒரு இடம் ஹன்சூர் லெசே. பெல்ஜியம்ல இருக்கு. ஆனா அங்க சுண்ணாம்புப் பாறைகள். இதையும் விட ரொம்பவே அழகு. உள்ள போனா போய்க்கிட்டேயிருக்கலாம். அவ்வளவு எடம். ஒரு நிகழ்ச்சியே நடத்துற அளவுக்கு உள்ள ஒரு பெரிய இடம். நாலஞ்சு மாதந்தான் தொறந்திருக்குமாம். மத்த நேரத்துல உள்ள தண்ணியும் ஐசுந்தான். இந்த ஓனிக்ஸ் குச்சிகள் ரொம்பவே அழகு. உள்ள மின்விளக்கு வசதி செஞ்சி ஒரு லைட் ஷோ காட்டுறாங்க. சூப்பரப்பு!

பொன்ஸ்~~Poorna said...

//எதாவது நடந்துதுனா யார் யார் வந்தாங்கன்னு தெரியணமுல்ல.//
கொத்ஸ், இதே தான் நானும் நினைச்சேன்..

உணர்விலி, எல்லோரா நல்லாத் தானே இருக்கு? தமிழகத்துக் குகைக் கோயில்கள் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், மற்றமாநிலங்களில் ஓரளவு ஒழுங்காகப் பாதுகாக்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது...

நன்றி மகேஸ்,

ராகவன், அது போன்ற ஒரு லைட்ஷோ தான் நானும் பார்த்தேன்.. பின்னாடி ஏதோ இசையை ஓடவிட்டு.. ரொம்ப அருமை அது..