Wednesday, November 15, 2006

தேவி எங்கே?

(குழந்தைகள் தினத்தன்னிக்குப் பதிவு போட விடாமல் வேலை வாங்கிய என் மேனேஜருக்குக் கண்டனங்களுடன் இந்தப் பதிவைத் தொடங்குகிறேன். குழந்தைகள் தின ஸ்பெஷல் - ஒரு குழந்தை எழுதிய கதை - பின்ன என்னங்க, ஒரு ஏழாவது எட்டாவது படிக்கிறப்போ எழுதின கதைன்னா அது குழந்தை எழுதின கதை தானே? :) லாஜிக் பார்க்காமல் ரசிக்க வேண்டுதலுடன் குழந்தைகள் தின வாழ்த்துக்களும்.. )

"தேவி, தேவி! மணியடிச்சாச்சு! வீட்டுக்குப் போகணும்" பள்ளி வாசலில் நின்று அழைத்துக் கொண்டிருந்தாள் வாணி.

"யாரு? தேவியையா தேடுறே? அவ வீட்டில் பங்க்ஷன். உனக்குத் தெரியாதா? அவங்க வீட்டுக்குப் பக்கத்து வீடு தானே உன்னுது? அவ இந்நேரம் வீட்டுக்குப் போயிருப்பா!" சொல்லிக் கொண்டே பள்ளியிலிருந்து வெளியே வந்தான் சந்தர்

"ஆமாம், ஆமாம். அப்படித் தான் இருக்கணும். மறந்திட்டேன். நானும் வீட்டுக்குப் போறேன்!" வாணி எழுந்து நடக்கலானான்.

வாணி, சந்தர், தேவி, பிரியா, சுரேஷ் அனைவரும் நண்பர்கள்; ஒரே வகுப்பினர். வழக்கமாய் வாணியும் தேவியும் ஒன்றாக வீட்டுக்குச் செல்வார்கள். ஒன்றாக வீட்டுப்பாடம் செய்வார்கள். எனவே வீடு திரும்பிய வாணி அன்றும் தேவிக்காக காத்திருந்தாள். மணி ஆறாகியும் தேவி வராததால், அவள் வீட்டுக்குச் சென்றபோது வீடு பூட்டியிருந்தது. வாணி வாசலில் நின்று "தேவி, தேவி " என்று கூப்பிட்டுப் பார்த்தாள். பதில் வராமல் போகவே வாணி திரும்பி நடந்தாள்.

நடக்கத் தொடங்கியவுடன் "ஹூம்!" என்றத் தீனப் பெருமூச்சு கேட்டது. வாணி நின்றாள். "தேவி, தேவீ!" மீண்டும் குரல் கொடுத்துப் பார்த்தாள்.

"ஹூம்..!" இம்முறை சத்தம் மிகத் தெளிவாகக் கேட்டது.

"என்ன வாணி? பூட்டின வீட்டுக்கு முன்னால நின்னு சத்தம் போடற?" குரல் வந்த திசையைப் பார்த்த வாணி, சுரேஷூம் ப்ரியாவும் புத்தகங்களுடன் டியூசனுக்குப் போய்க் கொண்டிருந்தனர்.

"இங்கே வா சுரேஷ்."

"என்ன வாணி?"

"தேவியைத் தேடி வந்தேன். வீடு பூட்டியிருக்கு. ஆனா, உள்ளே ஏதோ குரல் கேட்கிறது மாதிரி இருக்கு!"

மூவரும் பேச்சை நிறுத்திவிட்டு உற்றுக் கேட்கத் தொடங்கினர்.

"என்னப்பா, காந்தியடிகள் சொன்னதைக் குரங்குகளுக்குப் பதிலா நீங்களே நடிச்சி காட்டப் போறீங்களா?" சுந்தரின் குரல் மூன்று நண்பர்களின் கவனத்தையும் கவர்ந்த போது, ப்ரியா தன் காதுகளில் கையை வைத்து உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தாள். சுரேஷ் கண்ணாடியை இரு கைகளாலும் ச்பிடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். வாணி தன் வாயைப் பொத்திக் கொண்டு அந்தக் குரல் தன் வாயிலிருந்து வெளிவரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டிருந்தாள்.

"சந்தர், நீ எங்க இந்தப் பக்கம்?" பிரியா கேட்டாள்

"நம்ம கண்ணன் சார்கிட்ட ஒரு சந்தேகம் கேட்கக் கிளம்பினேன். நீங்க என்ன பண்றீங்க?"

"சுரேஷோட லைப்ரரி புத்தகங்களைத் திருப்பக் கிளம்பினோம்."

"இங்கே என்ன பண்றீங்க? தேவியோட அம்மா லைப்ரரி வேற தொடங்கிட்டாங்களா?"

"விளையாடாதே சந்தர். தேவி வீடு பூட்டியிருக்கு, ஆனா, உள்ளாற ஏதோ சத்தம் கேட்குது. " வாணி நிஜமான பயத்துடன் சொன்னதும் சந்தர் சைக்கிளை விட்டு இறங்கி வந்தான்.

"இப்போ என்ன செய்யறது?" பிரியா வினவினாள்

"கதவை உடைச்சிடலாமா?" என்றாள் வாணி

"கார்ப்பெண்டர் பொண்ணுன்னு நிரூபிக்கிறா பாரு" என்றான் சந்தர்.

"அவ சொல்றது நல்ல ஐடியா தானே? அப்படியே செய்யலாமே!" என்றான் சுரேஷ்.

"பின்பக்கக் கதவைப் பார்க்கலாம். இதை உடைச்சா வர்ரவங்க போறவங்களுக்கெல்லாம் விளக்கம் கொடுக்கணும்." என்றாள் வாணி.

"அதானே பார்த்தேன். உன் மூளை ரொம்பவே நேரா வேலை செய்யுதேன்னு.."

"சந்தர்! விளையாடாதே! "

"சரி வாங்க உடைக்கலாம்"

நால்வரும் வீட்டை வலம் வந்து அதன் பின்புறக் கதவை இடித்தனர். இரண்டே தட்டில் கதவு திறந்து கொண்டது.

"நீ குழந்தையா இருக்கறச்சே... , இந்தக் கதவைச் செஞ்சிருப்பாங்க போலிருக்கு " சந்தர் உட்வர்ட்ஸ் குரலில் சொல்லவும் வாணி "உஷ்!" என்று வாயில் விரல் வைத்து சைகை செய்தாள்

உள்ளே நுழைந்த ப்ரீயா "வீல்" என்று அலறினாள்.

"என்னாச்சு?!" சுரேஷ் பயத்துடன்..

"ஒண்ணுமில்லை.. ஒரு சுண்டெலி!"

"விநாயகரோட வாகனத்துக்கே இப்படிப் பயந்தா, நம்ம பிளேடு பக்கிரியை இவ அடுத்த வருசம் எப்படி சமாளிக்கப் போறா?"- சந்தர்

"யாரது பக்கிரி?" - இது வாணி

"நம்ம அடுத்த வருஷ கெமிஸ்டரி வாத்தியார் தான். ஒரே ரம்பமாம்!"

"சே! பேசாம வர மாட்டே?!" சுரேஷ் மிரட்டிக் கொண்டே உள்ளே நுழைந்தான்

சந்தர் காலைத் தூக்கி உள்ளே வைக்கவும், பிரியா திக்கித் தடவி விளக்கைப் போடவும் சரியாக இருந்தது.

"ஹே.. யாரது? ஏதோ சந்திர மண்டலத்துலேர்ந்து புது மிருகமா?" சந்தர் கை நீட்டிக் கொண்டே சத்தமாய்க் கேட்கவும் அவன் விரல் போன திக்கில் மூன்று ஜோடி விழிகளும் திரும்பின.

"ஆண்ட்டி! நீங்களா?!! " என்றபடி வாணி சேருடன் கட்டிப் போட்டிருந்த அந்த அந்த உருவத்தை நோக்கி ஓடினாள். முகம், கை, கால் எல்லாம் வெள்ளைத் துணியால் கட்டி இருக்க, நாற்காலியுடன் நீளக் கயிறு ஒன்று அவரைப் பிணைத்திருக்க, பெரிய பஞ்சுக் குவியல் அடங்கிய வாயுடன், சந்தர் சொன்னது போல் வேற்றுக் கிரக மனிதராகத் தான் தோற்றமளித்தார் தேவியின் தாயார். மயங்கிக் கிடந்த அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, கட்டுக்களை அவிழ்த்து விட்டுக் கொஞ்சம் சுய நினைவு வந்தவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி "தேவி எங்கே?" என்பது தான்!

(தொடரும்)

13 comments:

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

அய்யோ அம்மா நீங்களும் தொடர்கதை எடுத ஆரம்பிச்சாச்சா..?
இருங்க படிச்சுட்டு சொல்றேன்.

காலைச்சுற்றும் சுண்டெலி said...

அசையாம இப்படியே இருந்த நல்லது.
இல்லாவிட்டால் நான் நசுங்கிடுவேன்.
(ப்ரோபேலில் யானையும் வைடு ஆங்கிளில் நல்ல இருக்கு!)

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

அம்மாடியோவ்..
சஸ்பெஸ் தாங்கல.. அடுத்த பாகம் எப்ப வரும்? நடை ஓகே! ஆனா முதல் பாகத்திலேயே நிறைய பெயர்கள் குழப்பத்தை கொடுக்குது.
------
குறிப்பு:-
இதையும் கவனிக்கவும். :-)))
//..வாணி எழுந்து நடக்கலானான்.//

//..கண்ணாடியை இரு கைகளாலும் ச்பிடித்துக் கொண்டு...//

ramachandranusha said...

ஹைய், அந்த கால கோகுலம் படிக்கிற மாதிரி இருக்கு. நல்லா இருக்கு, தினம் ஒரு பகுதியாவது போடுங்க
பொன்ஸ், நடுவுல டூரு டூரூன்னு ஒரு ரிப்பன் வெச்ச யானைக்குட்டி
ஓடிக்கிட்டு இருக்குமே, அதை எங்க காணோம்?

இராம் said...

யக்கா இது பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம்.

எதுக்கு இத்தனை யானை படம். உங்க பக்கம்ங்களிலே ஒன்னு லோட் ஆகவே ரொம்ப நேரமாகுது.... :(

இராம் said...

இது பதிவுக்கு சம்பந்தமான பின்னூட்டம். :)

கதை நல்லாயிருக்கு!!!! அடுத்த பாகம் எப்போ வரும்...????

luckylook said...

//தேவி எங்கே? //

ஆமா. எங்கே?

G.Ragavan said...

தேவி எங்க? தேவியோட அம்மாவைக் கட்டிப் போட்டது யாரு? இந்த மாதிரி famous five பாத்திரங்களை வெச்சி முந்தி ரத்னபாலா, அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர், பொம்மைல படிச்ச கதைகள் நல்லா நினைவுக்கு வருது. நல்லாயிருக்கு கதை. தொடரட்டும் இதமாக.

Anonymous said...

// முதல் கேள்வி "தேவி எங்கே?" என்பது தான்! //
அண்ணா சாலையில் சாந்தி பக்கத்தில்
:-)))))

S. அருள் குமார் said...

ஏழாவது எட்டாவது படிக்கும்போதேவா? great! கலக்கியிருக்கீங்க.

நானும் ஸ்கூல் படிக்கறப்போவே சிறுகதையெல்லாம் எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன்! எல்லாம் ஆர்வக்கோளாறுதான் ;)

பொன்ஸ்~~Poorna said...

//(ப்ரோபேலில் யானையும் வைடு ஆங்கிளில் நல்ல இருக்கு!)//
சுண்டெலி, டாங்க்ஸ் :))

//சஸ்பெஸ் தாங்கல.. அடுத்த பாகம் எப்ப வரும்//
ஹி ஹி..

//ஆனா முதல் பாகத்திலேயே நிறைய பெயர்கள் குழப்பத்தை கொடுக்குது.//
மொத்தமே இத்தனை பேர் தான்..

//இதையும் கவனிக்கவும். :-)))//
ம்ஹும்.. நேரம் சரியில்லை.. நல்ல ராகு காலத்துல வந்த பின்னூட்டமா, அதான் இப்படி ஆயிடுச்சு ;)

பொன்ஸ்~~Poorna said...

//நடுவுல டூரு டூரூன்னு ஒரு ரிப்பன் வெச்ச யானைக்குட்டி
ஓடிக்கிட்டு இருக்குமே//
உஷா, இருக்கிற யானைகளுக்கே ராம்னு ஒரு எதிரி கீழே முளைச்சிருக்காரு பாருங்க.. இதுல அந்த யானையை வேற போட்டால் அவ்வளவு தான் :(

//அடுத்த பாகம் எப்போ வரும்...???? //
ராம், போட்டாச்சு..

//ஆமா. எங்கே?//
லக்கி, அனானி உங்களுக்கும் எனக்கும் பதில் சொல்லி இருக்கார் பாருங்க.. //அண்ணா சாலையில் சாந்தி பக்கத்தில்// :))))
(அனானி, தேவிபாலாவா, தேவி கலான்னு சொல்லவே இல்லையே! :)) )

பொன்ஸ்~~Poorna said...

//நல்லாயிருக்கு கதை. தொடரட்டும் இதமாக.
//
நன்றி ராகவன்

//ஏழாவது எட்டாவது படிக்கும்போதேவா? great! கலக்கியிருக்கீங்க. //
ரெண்டாவது பாகத்தைப் பார்த்துட்டு அடிக்க வந்துடாதீங்க :))

// நானும் ஸ்கூல் படிக்கறப்போவே சிறுகதையெல்லாம் எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன்! எல்லாம் ஆர்வக்கோளாறுதான் ;)
//
அதுல ஒண்ணெடுத்து "உணர்வின் பதி"யறது.. :)