Tuesday, November 28, 2006

அமெரிக்காவில் (நிஜ) அப்பாவி

[முன்குறிப்பு: தலைப்புக்கும் இந்தத் தொடரின் பதிவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது :) ]

முதன்முறையாக வெளிநாடு போவதற்கு முன் எனக்குப் பல்வேறு பக்கங்களிலிருந்தும் வந்த அறிவுரை பெரும்பாலும் அந்த ஊர் கறுப்பின மக்களைப் பற்றியதாகவே இருந்தது. "பூர்ணா, கறுப்பின மக்கள் இருந்தா, ஜாக்கிரதையா இருங்க. பணம் அதிகம் எடுத்துப் போகாதீங்க.. தனியா இரவில் ஆறு ஏழு மணிக்கு மேல் வெளியில் இருந்தால் கூட உங்ககிட்டிருந்து பணம், நகை எல்லாம் பிடுங்கிட வாய்ப்பிருக்கு!" என்று பெரிய அளவில் கிலியேற்படுத்திவிட்டுப் போனார்கள்.

இந்த விசயத்தில் எனக்கு ஏற்பட்ட மற்றொரு துணைப்பயம், வித்தியாசமானது. நானே கொஞ்சம் மாநிறம் தான். எங்கள் வீட்டிலேயே நான் தான் அதிக கறுப்பு (கறுப்புத் தங்கம் ;)), இதை வைத்து, எனக்கென்னவோ வெளிநாட்டுக்குப்போய் அங்கிருக்கும் வெள்ளையர்களுக்கிடையில் நம் நிறம் இன்னும் அதிக கறுப்பாகத் தெரிந்து, நம்மைப் பார்த்து எல்லாரும் பயந்துவிடப் போகிறார்களே என்று தான் முதலில் பயந்தேன். அப்படி ஏதாவது ஆனால், கஷ்டம் தான் என்று எங்கே போனாலும் பாஸ்போர்ட், எங்கள் நிறுவன அடையாள அட்டை என்று தூக்கிக் கொண்டே சுற்றுவது என்று முடிவெடுத்துக் கொண்டேன்.



நியூயார்க் விமான நிலையத்தில் போய் இறங்கிய போது என் கையில் பத்து டாலருக்குக் குறைவான சில்லறையே இல்லை. அதனால், அங்கே சாமான் தள்ளும் வண்டிகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்ள முடியாமல், பெட்டி படுக்கைகளைக் கஷ்டப்பட்டு நானே தூக்கிக் கொண்டு கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் காட்டுவதற்கு முன்னால், கனம் தாங்காமல் ஒரு முறை கீழே விழுந்து, வடிவேலு மாதிரி "இல்ல, தரையெல்லாம் நல்லா சுத்தமா இருக்கான்னு பார்த்தேன்" என்று தடவிப் பார்த்துவிட்டு ஊருக்கு விமானம் ஏறினேன்.

செயின்ட் லூயிஸில் போய் இறங்கிய போது அந்த ஊர் நேரப்படி மணி ஏழரை. தூக்க முடியாமல் தூக்கி வந்த ஒரு பெட்டியை விமான நிலைய அதிகாரிகள் நியூயார்க்கில் தொலைத்துவிட, அதற்கான புகார்ப் பதிவு செய்வதில் ஒரு அரை மணி நேரம் போனது. தன்னந்தனியாக வெளிநாட்டுக்குக் கிளம்பியபோதும், புது ஊரில் எங்கள் அலுவலகத்தினர் யாருமே இல்லை என்ற போதிலும், விமான நிலையம் வந்து அழைத்துச் செல்வதற்குக் கூட யாரும் வர மாட்டார்கள் என்று வீட்டில் கவலைப்பட்ட போதும் ஏற்படாத பயம் எட்டரை மணிக்கு என் ஹோட்டலுக்கு எப்படி போவது என்று யோசித்த அந்தக் கணம் தான் முதன் முதலில் எட்டிப் பார்த்தது.

வீட்டுக்குப் பேசினால், ஒருவேளை மனம் கொஞ்சம் லேசாகும் என்று நினைத்தேன். இந்தியாவில் என்ன நேரம் இருக்குமோ என்பது வேறு கொஞ்சம் யோசனையாக இருந்தது. 'சில்லரையாக ஒன்றரை டாலர் போடு' என்றது கட்டணத் தொலைபேசி. என்னிடம் சில்லரையே இல்லாமல் போக, சுற்றுமுற்றும் பார்த்தேன். 'உதவிக்கு வரலாமா?" என்று எழுதி வைத்திருந்த இடத்தை அணுகி சில்லரை கேட்பது என்று முடிவெடுத்தேன்.

அந்த உதவி மையத்தில் இரண்டு பேர் இருந்தார்கள். வெள்ளை நிறத்தில் ஒரு பெண். கொஞ்சம் கருப்பாக ஒரு ஆண். நமக்குத் தான் நல்லாவே 'வழி' காட்டி இருந்தார்களே. இருந்திருந்து விமான நிலையத்துக்குள்ளேயே கருப்பர்களிடம் மாட்டிக் கொள்வதா, என்று பயந்து, அந்தப் பெண்ணிடம் தான் சில்லரை கேட்டேன்.

அவளுக்கோ வேலை நேரம் முடிகிறது போலிருக்கிறது. அவள் அந்த இளைஞனிடம் என்னை ஒப்படைத்து விட்டு பையை மாட்டிக் கொண்டு எனக்கும் ஒரு 'பை' சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள். நான் வெளிக்காட்டிக் கொள்ளாத பயத்துடன் அவனைப் பார்த்து, "இந்த பத்து டாலருக்குச் சில்லரை கிடைக்குமா?" என்றேன். என்னதான் குரலில் தெரியாவிட்டாலும், என் மிகப் பெரிய குறை என் கண்கள். கோபம், எரிச்சல், சிரிப்பு, குறும்பு, என்று எல்லாமே காட்டிக் கொடுத்துவிடும் என் கண்களில் அவருக்குப் பயம் தெரிந்திருக்க வேண்டும்.

"எங்கிருந்து வரீங்க?" என்று பதில் கேள்வி கேட்டார்.

"இந்தியாவிலிருந்து வரேன். "

"அப்பாடியோ! அத்தனை தூரத்திலிருந்தா வரீங்க? முதன் முறையா எங்க ஊருக்கு வரீங்களா?"

"ஆமாம். உங்க நாட்டுக்கே முதன்முறையா வரேன்"

"எங்க போகணும் உங்களுக்கு?"

நான் என் விலாசத்தை அவருக்குப் படித்துக் காண்பித்தேன்.

"இது ரொம்ம்ம்ப தூரமாச்சே! பக்கத்து ஊரு. எப்படிப் போகப் போறீங்க?"

"இதோ, இந்த நம்பரில் உள்ள டாக்ஸிக்காரங்களைக் கூப்பிட்டு வண்டி வரவழைச்சிக்கச் சொல்லி இருக்காங்க." எண்ணைக் காட்டினேன்.

"ஓ.."

"அதான், சில்லரை வேணும்.. "

"என்கிட்ட சில்லரை இல்லையே.. கொஞ்சம் இங்க உட்காருங்க. நான் போய் யார்கிட்டேர்ந்தாவது சில்லரை வாங்கி வரேன்"

என்னிடமிருந்து பத்து டாலரை வாங்கிக் கொண்டு, எங்கோ போனார் அவர். மிக நீளமான பத்து பதினைந்து நிமிடங்களுக்குப் பின், சில்லரையுடன் வந்தார். "அதோ, போன் இருக்குப் பாருங்க, அங்க போய் போன் பண்ணிப்பாருங்க.."

நான் முதலில் அம்மாவுக்குச் செய்தேன். என் நிலை, நேரம் மற்றும் இன்னபிறவற்றைச் சொல்லி அவர்களையும் கலவரப்படுத்தாமல், சகஜமாகப் பேசிவிட்டு, அடுத்து டாக்ஸி எண்ணுக்குச் செய்தேன். அவர்கள் எடுக்கவே இல்லை. தொலைபேசி அழைப்பு போய்க் கொண்டே இருந்து கடைசியாகக் குரற்பதிவாகிப் போனது. இரண்டாவது எண்ணும் அதே மாதிரி பயனில்லாமல் போக, அத்துடன் என் தைரியம் மொத்தமும் காணாமல் போனது.

அந்த ஊர்த்தொடர்பு என்று என்னிடம் இருந்தது அந்த எண் மட்டும் தான். இவர்களும் எடுக்கவில்லை என்றால், இந்த விமான நிலையத்திலேயே தான் நான் இருந்தாக வேண்டும். அடுத்து என்ன செய்யலாம் என்று குழப்பமாக யோசித்துக் கொண்டே தொலைபேசியைப் பிடித்துக் கொண்டு நான் நிற்கவும் அந்த உதவி மைய இளைஞன் "என்னடா, ரொம்ப நேரமாக இவளைக் காணோமே" என்று தேடி வரவும் சரியாக இருந்தது.

"என்னாச்சு? நம்பர் கிடைச்சிதா?"

"இல்லை." என்றேன் சுருதி இறங்கிய குரலில்

"எனக்குத் தெரிஞ்ச ஒரு டிரைவர் இருக்கார். நான் உங்க அட்ரஸை அவர் கிட்ட சொல்லி இங்கிருந்து போக எத்தனை பணம் ஆகும்னு கேட்டேன். அவர் கிட்டத் தட்ட நாற்பது டாலர் ஆகும்னு சொல்றார். அவரையே வரச் சொல்லட்டுமா?"

எனக்கு என் காதுகளையே நம்ப முடியவில்லை. நம்ம ஊர் மாதிரி உதவி செய்ய யார் வந்து கேட்கப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தால், அதெல்லாம் ஒன்றும் பிரச்சனையே இல்லை என்பது மாதிரி இவர் தானாக வந்து வழி சொல்லி, வண்டி ஏற்பாடு செய்ததே எனக்குப் பெரிய நிம்மதியாகத் தோன்றியது. "ம்ம்.. சரி, " என்று மையமாகத் தலையாட்டினேன்..

கொஞ்சம் சந்தேகமும் இருந்தது. கிட்டத் தட்ட ஒன்பது மணிக்கு இப்படி ஒரு ஊர் பேர் தெரியாதவர் ஏற்பாடு செய்யும் ஓட்டுநருடன் போவது சரியா என்று முதல் கவலை. ஆனால், வேறு என்ன தான் வழி இருக்கிறது என்பது அடுத்த கேள்வி. 'சரி, வரட்டும் பார்க்கலாம்' என்று நினைத்தபடி, அந்த நண்பர் காட்டிய வழியில் போய் கார் பார்க்கிங்குக்கு அருகில் உட்கார்ந்து கொண்டேன். பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து, அதே நண்பர் மாடி யேறி கார் பார்க்கிங் நோக்கி வந்தார். "இன்னும் வரலையா, வண்டி?" என்று கேட்டார்

நான் "தெரியலை!" என்றேன்.

நான் இன்னும் படபடப்பாகவே இருப்பதைப் பார்த்து கொஞ்ச நேரம் அருகில் உட்கார்ந்து என்னுடைய கல்வி, நான் எத்தனை மாதம் தங்கப் போகிறேன், சுற்று வட்டாரத்தில் என்னென்ன பார்க்க இருக்கிறது என்று கொஞ்ச நேரம் பேசி என்னை சகஜமாக்கிக் கொண்டிருந்தார்.ஒரு வழியாக ஒன்பதரைக்கு வண்டி வந்தது. ஓட்டுநர் இறங்கி வந்து என் நண்பருடன் கைகுலுக்கினார், நண்பரின் அறிமுகத்துக்குப் பின் என்னிடமும். என் கலவரம் அதிகமானது. இந்த ஓட்டுநரும், கறுப்பு நிறத்தவராய் இருந்தார். அவர்கள் பேசிய ஆங்கிலமும் ஏதோ கலப்பு மொழியாக புரியாததாகவே இருந்தது.

''இவருடன் இன்னும் அரை மணி நேரப் பயணமா! ஐயோ' என்று பயந்தபடியே வேறு வழியின்றி போய் ஏறிக் கொண்டேன். ஆனால், நான் பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை. வழக்கமாக நள்ளிரவு டாக்ஸிக்காரர்களிடம் செய்வது போல் இந்த ஓட்டுநரிடமும் பேசிக் கொண்டே வரத் தொடங்கினேன். வழியெங்கும் காணவேண்டிய இடங்கள் என்று அவர் நினைத்ததை எல்லாம் எனக்குச் சொல்லிக் கொண்டே வந்தார். அந்த மனிதர் வெளியூரில் இருந்து வந்து இந்த ஊரில் வேலை செய்பவராம். பத்தரை மணிக்கு என்னுடைய ஹோட்டல் வாசலில் பத்திரமாக என்னைக் கொண்டுவந்து இறக்கிவிட்டுவிட்டு, பேசியபடி நாற்பது டாலர் மட்டுமே வாங்கிக் கொண்டு (அதன்பின் வெளிச்சத்தில் ஒரு முறை விமான நிலையத்துக்கு நான் போனபோது, நாற்பதுக்கு மேலேயே இருந்தது.) "வணக்கம்" சொல்லி விடைபெற்றுச் சென்றதுடன், கறுப்பினத்தவரைப் பற்றி ஊரிலிருந்து அள்ளிக் கொண்டு வந்திருந்த கதைகள் எல்லாமே காற்றோடு கலந்து போனது.

சக மனிதரை, மனிதராக பார்க்கும் போது நிறம், இனம், மதம், நாடு என்ற எல்லா எல்லைகளும் தவிடு பொடியாகிப் போகிறது. முதன் முறையாகச் சந்திக்கும் போதே அத்தனை நட்பும், அன்பும் பாராட்ட முடிந்தவர்கள் நிறைந்த நாடும் கூட கொஞ்சம் பிடித்துத் தான் போனது.

27 comments:

துளசி கோபால் said...

தோலோடு குற்றங்களைச் சம்பந்தப்படுத்தும் பழக்கம் எப்படி எங்கே உருவாச்சு?

இங்கே கதை அப்படியே இன்னொரு பாதையில். இங்கத்துப் பழங்குடிகள் மேலே
இப்படி எல்லாத்தையும் சுமத்திருவாங்க.

உண்மை என்னன்னா, விகிதாச்சாரபடிப் பார்த்தால் எல்லாம் சமம்.

கால்கரி சிவா said...

இங்கே பெரும்பாலன மக்கள் சட்டத்தை மதிக்கும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். அதுவும் தனியாள், வழி தெரியாதவர்களுக்கு நல்ல உதவி செய்கிறார்கள்.

மக்கள் மக்கள் தான். மனம்கள்தான் வெவ்வெறு

சுந்தர் / Sundar said...

அனுபவம் புதுமை...
இந்த மாதிரி தான் நான் யு.ஸ் கான்சுலெட் விசா போகும் பொதும் இப்படிதான் .... என்ன பயம் புரிதிட்டாங்க...
அங்க கெட்டது எனமொ , உன் பெரு என்ன? எங்க வேல பாக்குர ? ரெண்டே கேள்வி தான் .

அனுப்வங்கலை பகிர்ந்து கொண்டதர்கு நன்றி.

Anonymous said...

In reality, in this country, I feel safe with coloured ppl than whites.

Anonymous said...

நல்லவங்க கெட்டவங்க எல்லா இனத்திலும் இருப்பாங்க ஆனா கறுப்பினர் மீது இப்படி ஒரு முத்திரை விழச் செய்துவிட்டார்கள்.வெளிநாட்டில் இன்னும் கூட இந்தியா வர பயந்தவர்கள் இருக்கிறார்கள்..அவர்களும் உங்களைப் போல பயமுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.இந்தியா என்னும் நாடு பாம்புகள் நிறைந்தது என்று.

Anonymous said...

Skin color never matters
(It matters sometimes,When it happened to Stripoff in front of Security person for being a Brown Color skin once)

"farmer" ILA

thiru said...

//சக மனிதரை, மனிதராக பார்க்கும் போது நிறம், இனம், மதம், நாடு என்ற எல்லா எல்லைகளும் தவிடு பொடியாகிப் போகிறது.//

உண்மை!
நான் ஆப்பிரிக்கா போற நேரம் நண்பர்களின் உரையாடல் இது:

"பயமா இல்லியா திரு இந்த____ஆட்களுடன் பழக?" இது நண்பர்கள்

"ஏன்?" நான்

"அவங்க தான் நம்மை விட_________இருக்காங்களே"

அந்த மக்களுடைய அன்பை, பரிவை சொல்லிய பின்பு ஆச்சரியப்பட்டார்கள்!

அறியாமையும், அனுபவின்மையும், இப்படிப்பட்ட பேதங்களை வளர்க்கிறது.

நல்ல பதிவு பொன்ஸ்!

பொன்ஸ்~~Poorna said...

//தோலோடு குற்றங்களைச் சம்பந்தப்படுத்தும் பழக்கம் எப்படி எங்கே உருவாச்சு?
//
தெரியலை துளசி அக்கா. ஆனால் இது எல்லா இடத்திலயும் நடந்து கிட்டு தான் இருக்கு.. :(

//மக்கள் மக்கள் தான். மனம்கள்தான் வெவ்வெறு //
உண்மை தான் சிவா..

//இந்த மாதிரி தான் நான் யு.ஸ் கான்சுலெட் விசா போகும் பொதும் இப்படிதான் //
சுந்தர், இதே மாதிரி ஒரு கதையும் இருக்கு என்கிட்ட.. அப்புறமா எழுதறேன் அது பத்தி..

//In reality, in this country, I feel safe with coloured ppl than whites. //
உண்மை தான் அனானி. எனக்குக் கூட அப்படித் தான் தோன்றியது.

//இந்தியா வர பயந்தவர்கள் இருக்கிறார்கள்..//
ஆமாம் லக்ஷ்மி, என்னிடம் பேசியவர்கள் நமது நாட்டின் பல்வேறு மதங்கள்/மொழிகளைப் பற்றித் தான் வியந்தார்கள். பாம்புகளின் நாடு என்ற கற்பிதம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது என்றே நம்புகிறேன்.

//"farmer" ILA //
என்னங்க இது, அதர் ஆப்ஷன்ல? என்னாச்சு இகலப்பை? காணோமா? :))

//அறியாமையும், அனுபவின்மையும், இப்படிப்பட்ட பேதங்களை வளர்க்கிறது.
//
ஆமாம் திரு..

VSK said...

நேத்து உங்க பதிவுல நான் கேட்ட அந்த அபத்த கேள்விக்கு, என்னைப் பத்திதான் எழுதினீங்களோன்னு ஒரு நிமிஷம் நினைச்சுட்டேன்!

:))

ரவி said...

////சக மனிதரை, மனிதராக பார்க்கும் போது நிறம், இனம், மதம், நாடு என்ற எல்லா எல்லைகளும் தவிடு பொடியாகிப் போகிறது. ///

வெல் செட்...கடைசியில் இருந்து மேற்க்கோள் காட்டுறதில் இருந்து முழுமையா படிச்சிட்டேங்கறதை புரிஞ்சுக்கோங்க.

Anonymous said...

CRASH ன்னு ஒரு அற்புதமான படம் வந்திருக்கிறது. அதை வாங்கிப் பாருங்கள். நிதர்சனத்தைத் தெ ளிவாக அலசியிருப்பார்கள். கருப்பர்களுக்கும், தப்பு தப்பு ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கும் வெள்ளைக்கார அமெரிக்கர்களுக்கும் நடக்கும் நிறரீதியான மன உணர்வுகளை சுற்றிப் பின்னப்பட்ட படம். ஆஸ்கார் வாங்கிய படமாக்கும் இது.

கைப்புள்ள said...

நல்ல பதிவு பொன்ஸ். யாதும் ஊரே யாவரும் கேளிர்னு நெனச்சா கறுப்பா இருந்தாலும் செவப்பா இருந்தாலும், எல்லாருமே நம் நண்பர்கள் தான். உங்கள் நட்சத்திர வாரம் சிறப்பாக அமைய என் வாழ்த்துகள்.

Syam said...

சரியா சொன்னீங்க கறுப்பர்கள் எல்லோரும் கெட்டவங்க இல்ல வெள்ளையர்கள் எல்லோரும் நல்லவங்க இல்ல :-)

நாமக்கல் சிபி said...

அருமையான பதிவுங்க...

நான் முதல்ல நியூ ஜேர்ஸில இறங்கி இப்படித்தான் தனியா சுத்திட்டு இருந்தேன். போன் பேசறதுக்கு சில்லரை இல்லாம யாரை கேக்கறதுனு கூட தெரியாம.. அப்படியே 6 மணி நேரம் ஏர்போர்ட்ல உக்கார்ந்திருந்தேன் (ஃப்ளைட் டிலே).

நம்மலும் அவுங்க கலர்லே இருக்கறதால அவுங்க மேல எனக்கு ஒரு பாசம்தான்... அவுங்களுக்கும் தான் :-))

Anonymous said...

அன்புள்ள பொன்ஸ்,

அர்த்தம் செறிந்த பதிவு...ஜாதி, மொழி, இனம், மதம், நிறம் போன்ற அளவுகோல்களை தாண்டி நிற்க கூடியது மனிதம் என்ற கருத்தை அனுபவித்து எழுதியுள்ளீர்கள்...

நான் கூட கேரளத்துக்கு பணியாற்றச் சென்றபோது சில குறுகிய மனம் கொண்டவர்கள் "கொலையாளியை நம்பலாம் ஆனால் மலையாளியை நம்ப முடியாது" என்று மூளைச்சலவை செய்ய முயண்றனர்...ஆனால், எனக்கு அங்கு அற்புதமான பல உறவுகள் கிட்டின most of which are lifelong ones i believe...so its all humbug...சரிதானே?

நாமக்கல் சிபி said...

ம்! பயண அனுபவம் என்றவுடன் முதல் ஆளாக வந்தது காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டிருக்கும் துளசியக்காவா!

எனிவே! நல்லா இருந்தது! புது நாடு! புது ஊரு! உங்களைப் பார்த்துதான் திகிலாயிருப்பாங்கன்னு நினைச்சேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அமெரிக்காவில் (நிஜ) அப்பாவி //

பொன்ஸ்
உண்மைய மறைக்காமச் சொல்லுங்க!
அப்பாவின்னு அந்த Driverஐ மட்டும் அல்லாது உங்களையும் சேத்து தானே சொல்லிக்கினிங்க! :-)))

ஒரு காலத்தில் NY-JFK இல் இறங்கி வண்டி பிடிப்பவர்களை ஊரையே சுத்திச்சுத்தி, ATMகளில் பணம் எடுத்துத் தரச் சொன்ன ஓட்டுநர்களும் உண்டு! அரசு முறைப்படுத்திய பின் இப்போதெல்லாம் பிரச்சினை இல்லை!

ஆனால் நீங்கள் சொன்னது போல, இதற்கும் கலருக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது! பணம்/வேலை இல்லா சில அடித்தட்டு மக்கள், தூய்மை இன்மை, வித்தியாசமான திகைக்க வைக்கும் நடை உடை, இது தான் ஏற்படும் கிலிக்கு முக்கியமான காரணம்!

நமக்குத் தான் "அரண்டவன் கண்ணுக்கு இருண்டெதெல்லாம் பேய் ஆயிற்றே!"

சேதுக்கரசி said...

அமெரிக்காவைப் பற்றிய மிகப் பெரிய myth-களில் ஒன்றை முறியடித்த பொன்ஸ் பதிவுக்கு ஒரு "ஓஓஓ!" உண்மையிலேயே அமெரிக்காவில் "சீரியல் கிரைம்" செய்பவர்களில் பலர் வெள்ளைக்காரர்களே!

Chellamuthu Kuppusamy said...

இருவர் படம் பாத்திருக்கீங்களா? "இந்தப் படத்தில் வரும் பாத்திரங்களும், காட்சிகளும் கற்பனை" ன்னு ஒரு அறிவிப்பு போட்ட பிறகு தான் படம் ஆரம்பிக்கும். :-)

பொன்ஸ்~~Poorna said...

நன்றி வைசா, உங்கள் அனுபவத்தையும் படிக்க ஆவலாக உள்ளேன்..

டாக்டர் எஸ்கே, அப்பாவியா? நீங்களா?!! அட, விளையாடாதீங்க :))

//கடைசியில் இருந்து மேற்க்கோள் காட்டுறதில் இருந்து முழுமையா படிச்சிட்டேங்கறதை புரிஞ்சுக்கோங்க.//
ரவி, ஓஓஹோ. [மாடுலேஷனுடன் படித்துக் கொள்ளவும் ;) ]

திருவடியான், கிராஷ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.. தங்கள் பின்னூட்டம் கண்டபின் தேடிப் பார்க்கும் ஆர்வம் அதிகரித்து விட்டது.. நன்றி.

நன்றி கைப்புள்ள, ஷ்யாம்,

//நம்மலும் அவுங்க கலர்லே இருக்கறதால அவுங்க மேல எனக்கு ஒரு பாசம்தான்... அவுங்களுக்கும் தான் //
வெட்டி, அதே அதே..

//so its all humbug...சரிதானே?//
மிகச் சரி அகத்தீ..

//உங்களைப் பார்த்துதான் திகிலாயிருப்பாங்கன்னு நினைச்சேன்!//
சிபி, ஹி ஹி..

//அப்பாவின்னு அந்த Driverஐ மட்டும் அல்லாது உங்களையும் சேத்து தானே சொல்லிக்கினிங்க//
அப்பாடா.. என்னை அப்பாவின்னு ஒருத்தர் ஒத்துக்கினாரே :) சிபி, இதைக் கொஞ்சம் கண்டுக்கிடறது..

//ஒரு "ஓஓஓ!"//
சேது, ஓவுக்கு ஒரு ஹி ஹி..

//இருவர் படம் பாத்திருக்கீங்களா? "இந்தப் படத்தில் வரும் பாத்திரங்களும், காட்சிகளும் கற்பனை" ன்னு ஒரு அறிவிப்பு போட்ட பிறகு தான் படம் ஆரம்பிக்கும். :-)//
குப்பு, என்ன சொல்ல வரீங்க? :))

Boston Bala said...

உதவி கேட்பதென்பது என்பதை ஆண்கள் தரக்குறைவாக நினைப்பதாக கிண்டல் செய்வார்கள். (ஓரளவு உண்மைதான்?!)

'மே ஐ ஹெல்ப் யூ'வைத் தவிர வேறு எவரையாவது (அமெரிக்காவில்) நிறுத்தி கேள்வி கேட்டிருந்தால், அவர்களும் கொஞ்சம் பயத்துடனே பதில் சொல்வார்கள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

நல்ல பதிவு பூர்ணா.

Machi said...

சிகாகோவில் என் நண்பனோட நண்பன் தனியா போனப்போ 2 கருப்பங்க காசு கேட்டு மிரட்டியிருக்காங்க இவரும் பர்ஸயே கொடுத்திருக்கார் அதில் இருந்த $10 எடுத்துக்கிட்டு அவரி சுட்டு கொன்னுட்டாங்க இந்த மாதிரி கதையை நீங்க கேட்டதில்லையா.

அமெரிக்காவில் இன்னும் நிறவெறி இருக்குங்க அதனாலயே செனட் தேர்தல்ல ஒருத்தர் தோற்றுவிட்டார். இது தொடர்பான எனது பதிவு பார்க்க http://kurumban.blogspot.com/2006/11/gop_10.html

முக்கியமா நாம இந்தியர்கள் ஒரு நிறவெறியர்கள். இது தொடர்பா ஒரு பதிவு போடனும்னு ரொம்ப நாளா நினைச்சிக்கிட்டு இருக்கேன்.

பொன்ஸ்~~Poorna said...

நன்றி பாபா, குமரன்,

//முக்கியமா நாம இந்தியர்கள் ஒரு நிறவெறியர்கள். இது தொடர்பா ஒரு பதிவு போடனும்னு ரொம்ப நாளா நினைச்சிக்கிட்டு இருக்கேன்.//
போடுங்க குறும்பன். உங்க பதிவும் பார்க்கிறேன்..

Unknown said...

/சக மனிதரை, மனிதராக பார்க்கும் போது நிறம், இனம், மதம், நாடு என்ற எல்லா எல்லைகளும் தவிடு பொடியாகிப் போகிறது. /

அதே!! அதே!!!

யாத்ரீகன் said...

http://yaathirigan.blogspot.com/2005/11/blog-post_113158742705669505.html

பொன்ஸ்~~Poorna said...

நன்றி அருட்பெருங்கோ..

யாத்ரீகன், உங்கள் பதிவு படித்தேன்.. மனம் கனத்துப் போய்விட்டது! :((