Tuesday, November 28, 2006

லிப்ட்..(சிறுகதை)

சென்னையின் இதயப் பகுதியில் வேலை என்றதும் சாருவுக்கு முதலில் நிம்மதி தான் ஏற்பட்டது. இனிமேல் அதிகாலை எழுந்து விடிந்தும் விடியாத காலையில் அவசர அவசரமாக குளித்து, சமைத்து, டப்பாவில் போட்டுக் கொண்டு கம்பனி பஸ் பிடிக்க ஓட வேண்டாம். ஆற அமர சமைத்து சாப்பிட்டுவிட்டு குழந்தைக்கும் ஊட்டிவிட்டு மெல்லவே அலுவலகம் போகலாம். அத்துடன் மாலை அலுவலகத்திலிருந்து கிளம்பி வீடு சேரவே இரண்டு மணிநேர அலுவலகப் பேருந்து பயணம் என்றிருப்பது குறைந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டாலும் சீக்கிரமே வீடு வந்துவிடலாம். என்றெல்லாம் பெரிய அளவில் விரிந்தது அவளின் கற்பனைக் கோட்டை.

வேலைக்கு வந்து சேர்ந்த மூன்றாம் நாளே இதெல்லாம் எத்தனை முட்டாள்தனம் என்பது புரிந்து போயிற்று.

"சாரு மேடம், உங்க வீடு சிட்டிக்குள்ள தானே இருக்கு, நீங்க தான் எப்போ கிளம்பினாலும் அரை மணியில் போய்ச் சேர்ந்துடுவீங்க.. கொஞ்சம் இன்னிக்கு க்ளயண்ட் கால் நீங்க எடுத்துடுங்களேன்.. அடுத்த வாரம் நான் வேற ஏற்பாடு செய்யுறேன்" இது புதன் கிழமை.

"சாரு, பிராஜக்ட் லீடர் வாக்கு கொடுத்துட்டார் போலிருக்கு. கொஞ்சம் இருந்து முடிச்சு கொடுத்துடுங்களேன்.. ராணி, சங்கர் எல்லாம் புதுப் பசங்க பாருங்க.. நம்ம தான் எல்லாத்தையும் பொறுப்பெடுத்து செய்யணும்" என்று மேனஜர் கேட்டதால் வியாழனும் ஒன்பது மணியாகிவிட்டது கிளம்ப.

வெள்ளியாவது நேரத்தோடு கிளம்பி விட வேண்டும் என்று முடிவு செய்திருந்ததிலும் இடியைப் போட்டான், முதல் நாள் எழுதிய ப்ரோக்ராமை சோதனை செய்யும் ராகவ். அவன் திடீரென்று எடுத்துப் போட்ட நாலைந்து பிரச்சனைகளைச் சரி செய்து வேலையை முடித்துக் கொடுத்துவிட்டுக் கிளம்ப இன்று பத்து மணியாகிவிட்டது.

சாரு தன் கைனடிக் ஹோண்டாவின் ஆக்ஸிலரேட்டரை அதிக பட்ச அழுத்தத்துடன் முறுக்கினாள். ராகவின் மீதிருந்த கோபம் பூராவும் காட்டி வண்டியை உருட்டியபோது சாலையில் ஆள் நடமாட்டமே இருக்கவில்லை. தினசரி அவளைப் பல நிமிடங்கள் காக்கவைக்கும் கூட்டமான போக்குவரத்து விளக்குகள் பலவும் வெறும் எச்சரிக்கை விளக்காக எரிந்து கொண்டிருக்க, வசதியாக வண்டியை விட்டாள்.

அலுவலகத்திலிருந்து கிளம்பி இரண்டு நிமிடம் கூட தாண்டியிருக்காது, அந்த இருண்ட வீதியின் முனையில் ஒரு உருவம் தனியே நின்று கொண்டிருந்தது தெரிந்தது. இருட்டில் அதன் நிழலில் தாடி வைத்திருந்த உருவமாகப்பட்டது. அத்தனை நேராக வாரப்படாத தலை, ஜீன்ஸ், கசங்கிய சர்ட். 'இப்போதெல்லாம் தெருவோர பிச்சைக்காரன் கூட ஜீன்ஸ் போடுகிறான்' என்று தோன்றிய எண்ணத்தைச் சிரித்துக் கொண்டே ரசித்தவாறு அவனைப் பார்த்தபோது, லிப்ட் கேட்க 'கை போட்டது' அந்த உருவம்.

'இருட்டில், தனியாக வரும் பெண்ணிடம் லிப்ட் கேட்க எத்தனை தைரியம் இருக்க வேண்டும் இவனுக்கு' என்று தோன்றியது சாருவுக்கு. அத்துடன் வண்டி நிறுத்துமளவுக்கு அந்தத் தெரு அத்தனை வெளிச்சமானதில்லை. லிப்ட் கொடுக்கும் அளவுக்கு இவனும் அத்தனை டீசண்டானவனாகத் தோன்றவில்லை.

வெள்ளி இரவில், இருட்டில் வீணாக வம்பில் மாட்டிக் கொள்வது நியாயமில்லை என்று தோன்றவே, தலையை மையமாக அசைத்து முடியாது என்று மறுத்துவிட்டு, வண்டியை இன்னும் வேகமாக ஓட்டினாள் சாரு.

அந்த கைக்குச் சொந்தமான மனிதன், மறுப்பை லட்சியம் செய்யாததோடு, தெருவின் குறுக்கேயே வந்துவிட்டான் சாருவை மறிப்பது போல். சாரு கடைசி நொடியில் கட் கொடுத்து அந்த மனிதனைத் தாண்டி வண்டியை ஓட்ட வேண்டியதாகிவிட்டது.

அருகில் பார்க்க நேர்ந்த போது, அந்த தாடிக்காரனின் முகத்தில் சிறு வெளிச்சம் படர்ந்தது. ஏதோ சொல்ல வருபவன் போல் தோன்றியது. 'என்னவோ சொல்லிவிட்டுப் போகட்டும்.. என்ன சொல்லப் போகிறான், மிஞ்சி மிஞ்சிப் போனால் ஏற்றிக் கொள்ளாததற்கு வருத்தமோ, கோபமோ தெரிவிக்கலாம். நியாயம் கூட சொல்லலாம், அவனை ஏன் ஏற்றிக் கொள்ளவேண்டும் என்று.. அதெல்லாம் இப்போ யாருக்கு வேண்டும்.. திவ்யாக்குட்டி எப்படி இருக்கிறாளோ, அவளைப் பற்றிய யோசனைகள் தான் இப்போது தேவை.. '

சாரு பின்னால் பார்க்கும் கண்ணாடியில் பார்த்தபோது, அவளுக்குப் பின்னாலேயே ஒரு வண்டி வருவதும், அதில் ஒரு இளைஞன் அமர்ந்திருப்பதும், நமது பழைய தாடிக்கார நண்பன் அந்த இளைஞனிடமும் கை நீட்டி லிப்ட் கேட்பதும் தெரிந்தது.

காலேஜ் காலத்திலிருந்தே இந்தக் 'கை போடுபவர்களின்' மீது சாருவுக்குத் தனி வெறுப்பு இருப்பதுண்டு. அதிலும் இவனைப் போல் யார் வந்தாலும் இருக்கட்டும் என்று லிப்ட் கேட்பவர்கள் தொல்லை தான். சாருவின் கல்லூரியில் அவளுடன் படித்த பையன் ஒருவன், பஸ்பாஸ் வாங்கவே மாட்டான். இப்படி வழி தோறும் லிப்ட் கேட்டே தினசரி காலேஜுக்கு வந்துவிடுவான். திரும்பிச் செல்வதற்கும் இதே மாதிரி அடுத்தவன் வண்டிதான். 'இதுல என்ன இருக்கு சாரு, ஜஸ்ட் ஒரு அரை அவர் முந்தி கிளம்பணும்,.. அவ்வளவு தான்' என்று தெனாவட்டாக சொல்லுவான். சாருவும் அவளை ஒத்த மற்ற பெண்களும் பேருந்தில் நிற்க முடியாமல் நின்று கொண்டு வரும்போது இவனுக்கு மட்டும் இத்தனை வசதியான சவாரியா என்று சாரு பொறாமைப்படுவது கூட உண்டு.

பின்னால் வந்த இளைஞன் தாடிக்காரனுக்காக வண்டியை நிறுத்தினான் போலும், சாருவின் பின்கண்ணாடியில் தெரிந்தது அவளைக் கொஞ்சம் துணுக்குறச் செய்தது. தாடி இளைஞன் வண்டியில் ஏறுவதற்கு முன் சாருவைக் கை காட்டி ஏதோ சொன்னான். வண்டிக்கார இளைஞனும் சாருவைப் பார்த்தபடி தலையசைப்பதையும் சாரு நொடிப்பொழுதில் கண்டு கொண்டாள்..

'என்ன சொல்லி இருப்பான்? அந்தப் பொண்ணு நிற்கவே இல்லை சார்' என்றா! அதை ஏன் அவனிடம் சொல்ல வேண்டும்?

சாரு யோசித்துக் கொண்டே இருக்கும் போது பின்னால் வந்த வண்டியானது தன்னை நோக்கித் தான் வருகிறது என்பதைக் கண்டுகொண்டாள்.

இயல்பான பாதுகாப்பு உணர்ச்சியில் வண்டியை இன்னும் விரைவாக்கினாள். சாருவின் வண்டி சீறிப் பறந்தது. பின்னால் அந்த இளைஞர்களும் தொடர்வது தெரிந்தது. ஒருவேளை இப்படி இருக்குமோ! அந்த புது பைக்காரனும், காத்திருந்தவனும் ஏற்கனவே அறிமுகமானவர்களாக இருப்பார்களோ! தாடிக்காரன் இவளை நிறுத்தி, லிப்ட் கேட்டு, அப்படி ஏதாவது செய்யும்போது, இந்த பைக் காரன் பின்னால் வந்து அவளைப் பயமுறுத்தி, கையில் கழுத்தில் உள்ளதைப் பறிக்கத்தான் இந்தத் திட்டமோ? இப்போது அவள் தப்பிவிட்டதில் பின் தொடர்ந்து வந்து பிடுங்கிக் கொள்ளப் பார்க்கிறார்களோ?

யோசித்துக் கொண்டே நூறடி ரோடுக்கு வந்துவிட்ட சாருவுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இங்கே கொஞ்சம் மக்கள் கூட்டம் இருக்கும். ஆனால், அட, இங்கு சிக்னல்களும் வேலை செய்கிறதே! சோதனையாக, வெள்ளிக்கிழமை பத்துமணிக்கு அந்த ரோடிலும் அத்தனை கூட்டம் இல்லை. ஆனால், சிக்னல்கள் மட்டும் வேலை செய்தன.

அடடா.. சிக்னல் விழப் போகிறது, அந்த யம காதகன்களோ விடாமல் இந்த ரோடு வரை துரத்தி வருகிறார்களே! அவர்கள் கையில் சிக்காமல் தப்பிவிட முடியுமா?

முதல் சிக்னலைக் கடைசி நிமிடத்தில் சிகப்பு விழுந்துவிட்ட போதும் பரவாயில்லை என்று தாண்டி வந்தாள் சாரு. பின்னால் வந்தவர்கள் இப்போது நின்று விடுவார்கள். நிம்மதியாக ஓட்டலாம் என்ற அவளது நினைப்பைக் கெடுப்பது போல் முன்னால் இருந்த சிக்னல் ஒன்று சுத்தமாக சிகப்பு காட்டி அவளை நிற்கச் சொன்னது.

பின் சிக்னல் பச்சை விளக்கு வரும் முன் தனக்கு வழி கிடைத்துவிட்டால் தப்பிவிடலாம். எங்கே.. நடக்கக் கூடிய கதையா என்று பார்க்கவேண்டும். சாரு சிக்னலையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பின் பக்கம் பார்க்கும் கண்ணாடியைப் பார்த்தபோது, பின் துரத்தி வந்த பைக் இன்னும் அருகில் வந்துவிட்டது. படுபாவி இளைஞர்கள், சிக்னல் டிராபிக் எல்லாம் மதிக்கும் வழக்கமே இல்லை போலும்! இவள் தான் இப்படி விதிகளை மதித்து ரொம்ப கஷ்டப் படுகிறாள்!

சாரு பார்த்த போது, அந்த பைக் அவளுக்கு மிக மிக அருகில் வந்தாயிற்று. நிச்சயம் வண்டியை நிறுத்தப் போகிறார்கள். "என்ன வேண்டும் இவன்களுக்கு! கேட்டுத் தான் பார்த்துவிடுவோமே. இதுவோ கொஞ்சம் பிரதான சாலை தான். விளக்குகள் வேறு இருக்கின்றன. இந்த இடத்தில் இல்லாவிட்டால், அடுத்து சாரு தனது வீடு இருக்கும் சந்துக்குள் திரும்பினால் அங்கே எல்லாம் இந்த வீணாய்ப் போன இளைஞர்கள் வர வேண்டாம்.. வீட்டைக் காட்டிக் கொடுப்பதில் சாருவுக்கு மனமே இல்லை.. மிஞ்சி மிஞ்சிப் போனால் பணத்தைப் பிடுங்கிக் கொள்வார்கள்.. வெள்ளிக் கிழமை. அவளே பணம் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். பர்ஸிலும் அதிகம் இருக்காது.. போகட்டும்.. என்ன வேண்டும் என்று கேட்டே விடுவோம்.." சாரு யோசித்துக் கொண்டே இருக்கும் போது அந்த இளைஞர்கள் சாருவின் அருகில் வந்துவிட்டனர்.

நல்ல வேளையாக சிக்னலும் பச்சையாகவே சாரு வண்டியை முறுக்கினாள். இளைஞர்கள் இதைச் சற்றும் எதிர்பாராததால் கொஞ்சமே பின் தங்கினாலும் பின்னாலேயே வந்துவிட்டனர். கிட்டத் தட்ட சாருவை நெருங்கிவிட்ட அவர்கள் அவளைக் கொஞ்சம் தாண்டியும் சென்றபோது, பின்னால் இருந்தவன் சாருவைப் பார்த்துக் கத்தினான். "துப்பட்டாவை ஒழுங்கா பிடிச்சிகிட்டு ஓட்டும்மா! எப்படிப் பறக்குது பாரு! அதைச் சொல்லத் தான் உன்னைத் துரத்திகிட்டே வாரோம்!" என்றவன், "இப்போ வெரசா ஓட்டு சார்.. அதோ அந்த பெட்ரோல் பங்க் கீது பாரு, அங்க தான் நம்ம ஆட்டோ நிக்குது. " என்று சொல்லிக் கொண்டே சென்றது தேய்ந்து ஒலித்தது..

சாரு மட்டும் இன்னும் ஆச்சரியம் விலகாமல், பின்பக்கமாகப் பறந்து கொண்டிருந்த துப்பட்டாவை இழுத்துவிட்டுக் கொண்டாள்.

11 comments:

Anonymous said...

//ம்ம்ம்ம்ம்ம்மாட்டிக்கினாங்க.. :)//

இதில் தவறுதலாக ஸ்மைலி மாறுபட்டிருக்கிறது. :((((( என்று வர வேண்டும்.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

என்ன ஆச்சு உங்களுக்கு.., ஒரே னான் பிக்ஷனாக எழுதி.., கதை வரமாட்டேன்கிறதா..?
இந்தமுறை எப்படியும்... , ஏன்??? மற்றும் சத்திரா அத்தை போல் இல்லாமல், கொஞ்சம் ஏமாற்றத்தை தந்தது உண்மை எனில், இதுக்கு இத்தனை பில்டப் கொடுத்து இவ்வ்வ்வ்வ்வ்ளவு பெரிசாஆஆஆஆ எழுதி இருக்கனுமா?

Anonymous said...

நான் கூட வண்டியோட side stand எடுக்கலையோன்னு நெனைச்சேன்..

ரொம்ப suspense வச்சுட்டீங்க!!

லதா said...

ரொம்ப நாள்களுக்குப்பிறகு குமுதத்தில் சிறுகதை படிப்பதுபோல இருந்தது.
:-) / :-(
எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்.

பொன்ஸ்~~Poorna said...

// :(((((// :DDDDDD

//இதுக்கு இத்தனை பில்டப் கொடுத்து இவ்வ்வ்வ்வ்வ்ளவு பெரிசாஆஆஆஆ எழுதி இருக்கனுமா? //

//ரொம்ப suspense வச்சுட்டீங்க!! //

//:-) / :-(
எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்.//
யாழிசை, சுந்தரி சொல்வதையெல்லாம் பார்க்கும் போது :-((((( தான் எடுத்துக்கணும் லதா :))

எனிவே அடுத்த கதை உருப்படியா வந்தாலும் வரலாம்.. ;)

இலவசக்கொத்தனார் said...

சொந்த அனுபவந்தான் போல.

இந்த மாதிரி விரட்டிக் கொண்டு போன அனுபவம் எனக்கும் உண்டு. கார் கதவையோ, டிக்கியையோ மூடாமல், அல்லது விளக்கை அணைக்காமல் பார்க் செய்து விட்டு சென்றவர்கள், கீழே எதையாவது போட்டுவிட்டு சென்றவர்கள் என பல துரத்தல்கள்.

செந்தழல் ரவி said...

பொன்ஸ்...அடுத்த கதையை எதிர்பார்க்கிறேன்...

சேதுக்கரசி said...

பயங்கர பில்டப் குடுத்து கடைசியில இப்படிக் கவுத்துட்டீங்களே :-/

//ரொம்ப நாள்களுக்குப்பிறகு குமுதத்தில் சிறுகதை படிப்பதுபோல இருந்தது.//

லதா சொல்வது சரி :-)

வினையூக்கி said...

Smiles. Narration was nice. End a bit of anti-climax

பொன்ஸ்~~Poorna said...

//சொந்த அனுபவந்தான் போல. //
அப்படி இல்லை கொத்ஸ், ஆனா, இந்தக் கதை படிச்சிட்டு வீட்டிலிருந்து
"கிளம்பி வரும்போது துப்பட்டாவை இழுத்துக் கட்டிட்டுவா"ன்னு போனே வந்துடுச்சு :))))

நன்றி ரவி, சேது, வினையூக்கி :))

ஒரு திருஷ்டிப் போட்டு மாதிரி இருந்துட்டு போகட்டும் :)))

யோசிப்பவர் said...

;(