1986 இல் உலகம் முழுவதும் இருபதாயிரம் எயிட்ஸ் நோயாளிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்ட போது இந்தியர்கள் யாரும் அந்தப் பட்டியலில் இல்லை. உறுதிசெய்யப்பட்ட எண்ணிக்கை பூஜ்யமாக இருந்தாலும், கண்டிப்பாக இந்தியர்களிலும் எச்ஐவி நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள் என்று தான் நம்பியது அரசு.
சின்னச் சின்னச் சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்ட முதல் இந்திய எயிட்ஸ் நோயாளி, சென்னையைச் சேர்ந்த ஒரு பாலியல் தொழிலாளி. அடுத்த ஆண்டு நாடு முழுவதும் செய்யப்பட்ட சோதனைகளின் மூலம் மொத்தம் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான எயிட்ஸ் நோயாளிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
அப்போதே தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு முயற்சிகள் தொடங்கப்பட்டாலும், 1990 வரை நாடு முழுவதும் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. 1992வில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தை அமைத்து முயற்சிகளை ஒரு சீரான பாதைக்குக் கொண்டு வந்தது அரசு. பதினாறு ஆண்டுகள் கழித்து இப்போது கொஞ்சம் கொஞ்சமாக எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்திருக்கிறது..எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்கிறது தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கை.
எண்பதுகளில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சந்தித்த கொடுமைகள் கணக்கற்றவை. கட்டுப்பாடான கலாச்சாரம் மிக்க இந்தியாவில், பாலியல் நோய்களைப் பற்றிப் பேசுவதே குற்றமாக எண்ணப்பட்ட காலம் அது. எய்ட்ஸ் போன்ற நோயால் பாதிக்கப்பட்டது யாராக இருந்தாலும் அவரின் ஒழுக்கத்தைப் பற்றியே கேள்வி எழுப்பும் சமூகம். இது போன்ற சமுதாயத்தில் நோய்களுக்கான பரிசோதனை செய்வதே தயக்கத்துக்குரியதாகக் கருதப்பட்ட நேரம். இந்தத் தயக்கத்தின் காரணமாகவே நிறைய பேர் மருத்துவரை நாடாமல், நோயுடனே வாழ்ந்து வந்தனர்.
அப்படியும் மருத்துவரிடம் சென்று வரும் சில தைரியசாலி நோயாளிகளின் நிலை இன்னும் பரிதாபத்துக்குரியது. நல்ல வேலையில் உள்ளவரானால், அவர் வேலை பறிபோகும் அபாயம் இருந்தது. ஒழுக்கங்கெட்ட கணவனின் மூலம் நோய்வாய்ப்பட்ட மனைவியானால், அவளைத் தீண்டத்தகாதவளாகவே பார்க்கும் வழக்கம் இருந்தது. கணவனால் நோய்வாய்ப்பட்ட மனைவி, கணவனையும் பறிகொடுத்து, ஒழுக்கமில்லாதவள் என்ற அவப்பெயருடன் வேறு வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய பரிதாபங்கள்.
ஒரு பாவமும் அறியாத பிஞ்சுக் குழந்தைகளாக இருந்தால் கூட, பள்ளிகளில் பிரித்துப் பார்க்கப்பட்ட கொடுமைகளும் உண்டு. பெற்றோருக்கு இந்த நோய் இருந்தாலே, குழந்தையையும் சேர்த்துத் தண்டிக்கும் கொடூரமான சமூகமாக இருந்திருக்கிறது. எய்ட்ஸ் நோயாளியின் குடும்பம் என்பதற்காக ஊரை விட்டே ஒதுக்கி வைக்கும் கோரங்களும் நிகழ்ந்துள்ளன. எய்ட்ஸ் நோயாளியைத் தொட்டால், கைகுலுக்கினால், அவர்களுடன் பேச்சு வார்த்தை வைத்துக் கொண்டாலே ஒட்டிக் கொள்ளும் நோயாக அறியமையால் சித்தரிக்கப்பட்ட காலங்கள் அவை.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு நிறுவப்பட்ட பதினாறு வருடங்களில் இதை எல்லாம் கடந்து வந்த இன்றைய சமுதாயத்தின் பார்வை கொஞ்சம் அகலமாகி உள்ளது.
பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கே எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுப்பாடங்கள் சொல்லித்தரப் படுகின்றன. நான் பள்ளியில் படித்த போது எயிட்ஸ் ஹெல்ப்லைன் விளம்பரம் ஒன்றைப் பற்றி வினா எழுப்பியபோது மழுப்பலாக பதில் கிடைத்த காலம் தாண்டி, இப்போது பள்ளிச் சிறுவர் சிறுமியரே சிகப்பு ரிப்பன் அணிந்து எயிட்ஸை எதிர்த்துக் குரல் கொடுக்கும் பேரணிகளும் நடக்கிறது
ஊடகங்கள், தெரு நாடகங்கள், வானொலி, 24 மணிநேரத் தொலைபேசிச் சேவை என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பும், அந்தந்த மாநில அமைப்புகளும் முயன்று இன்றைக்கு எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துள்ளனர். நோயை ஒட்டுவாரொட்டியாகச் சித்தரித்து, தொடுவதற்கே பயந்த சமூகத்தின் அறியாமை இருளை மொத்தமாக அழித்தெடுத்திருக்கின்றன இந்த அமைப்புகள்.
எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகங்கள், தாயாருக்கு இருக்கும் எயிட்ஸ் கருவிலிருக்கும் குழந்தையைத் தாக்காமல் இருக்கும் வழி, கோவா போன்ற மாநிலங்களில், திருமணத்திற்கு முன் எயிட்ஸ் பரிசோதனைகளைக் கட்டாயமாக்குதல் என்று அரசின் இந்த அமைப்புகள் செய்திருக்கும் உதவி அளப்பற்கரியது.
இன்று எயிட்ஸால் பாதிக்கப்பட்ட ஒரு சின்னஞ்சிறு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார் சைதாப்பேட்டையைச் சார்ந்த தாயார் ஒருவர். அவரே பெற்ற குழந்தைகளுடனும் பிற குப்பத்துக் குழந்தைகளுடனும் சந்தோசமாக வேறுபாடில்லாமல் விளையாடி மகிழ்கிறது அந்தப் பிஞ்சு.
எயிட்ஸால் பாதிக்கப் பட்ட நாமக்கல் நகரத்துப் பெண்கள் சிலர் கூடி பாஸிடிவ் வுமன்ஸ் நெட்வொர்க் என்ற அமைப்பைத் தொடங்கி இருக்கிறார்கள். எயிட்ஸால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சுய உதவிக் குழுக்கள், எயிட்ஸ் நோயாளிகளின் குழந்தைகள் படிக்க உதவி, விழிப்புணர்வுப் பிரச்சாரம் என்று பல்வேறு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்த பாசிடிவ் பெண்கள்.
இன்னும் பல்வேறு தளங்களிலும் எயிட்ஸ் நோயைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்ய வேண்டும். "2010க்குள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ உதவிகள் கிடைக்கச் செய்வோம்" என்று வாக்களித்திருக்கிறார்கள் உலகின் தலைவர்கள். இந்த இலக்கை எட்டுவதற்கு உதவுவதும், வாக்களித்த அரசாங்கங்கள் 'இந்த இலக்கை எட்டிவிடுவோம்' என்ற நம்பகத்தன்மையை வளர்க்கும் செயல்களைச் செய்யத் துவங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதுமே 2006 டிசம்பர் ஒன்றான இன்றைய உலக எயிட்ஸ் தினத்தின் குறிக்கோளாகும்.
நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதும் எயிட்ஸ் நோயாளிகளைப் பிரித்துவைக்காமல் அன்போடு அவர்களை அணுகி நமக்குள் ஒருவராகக் கருதுவதே உலக எயிட்ஸ் தினத்தில் நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய உறுதி மொழி.
மலரட்டும் எயிட்ஸ் இல்லாத புதிய சமுதாயம்.
தொடர்புடைய சுட்டிகள்
1. நிர்மல் அளித்தது
2. பாலபாரதி
3. மங்கை
9 comments:
//இன்று எயிட்ஸால் பாதிக்கப்பட்ட ஒரு சின்னஞ்சிறு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார் சைதாப்பேட்டையைச் சார்ந்த தாயார் ஒருவர். அவரே பெற்ற குழந்தைகளுடனும் பிற குப்பத்துக் குழந்தைகளுடனும் சந்தோசமாக வேறுபாடில்லாமல் விளையாடி மகிழ்கிறது அந்தப் பிஞ்சு.//
வாவ்! நல்ல பதிவு பொன்ஸ்...
நல்ல பதிவு பொன்ஸ்!
நட்சத்திர வாரத்தை மிகவும் பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
இன்றைய தினத்தில் விழிப்புணர்வு எந்த அளவுக்கு மக்களிடையே எட்டி இருக்கிறது என்று கூறியுள்ளீர்கள். அது போலவே இன்னும் எந்த அளவுக்கு எட்ட வேண்டியிருக்கிறது என்பது பற்றி சொல்லவில்லை. எட்டுவதற்கு நம்முடைய பங்கு என்ன என்பது பற்றியும் சிறிது சொல்லியிருக்கலாம்.
பாராட்டுக்கள்.
என்னது பறக்கும் யாணை?
தினம் ஒரு குரல்/கவிதை/பதிவு தெரியும்...!
இது என்ன புது கலாட்டா.. தினமொரு யாணை!
Good Post!
அது என்ன மேலே ம்ம்ம்மாட்டிக்கிட்டீங்க?
ஏதோ தப்பு தப்பா ஏதொ கணினி பேரெல்லாம் சொல்லுது ?
ஏன் யானை ?
நல்ல பதிவு.
சென்னையில் Hope Foundation நல்ல முறையில் சேவை செய்துவருகிறது.
எங்க நண்பரும் அவர் மனைவியும் இதில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைப்பத்தியும்,
ஹோப்பைப் பத்தியும் ஒரு ஆறு மாசம் முந்தி எழுதுன ஞாபகம்.
பொன்ஸ்,
மிகவும் பயனுள்ள பதிவு. ஆனால் சேர வேண்டியவர்களைப் போய்ச் சேர வேண்டும்.நிற்க.
தமிழகத்தில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் போன்ற புள்ளி விபரங்கள் ஏதேனும் உங்களிடம் உண்டா?
காலையிருந்து நெட் பண்ண சொத்தப்பல்னால வளையேற்ற முடியவில்லை...பரவாயில்லை அத நீங்க செய்துட்டீங்க..
முதல்ல தயார் பண்ண பதிவி நிறைய படங்களுடன் தகவல்களுடன் இருந்து.. ஆனா அது போட முடியலை.
அதனால இப்ப சின்னதா ஒன்னு தயார் பண்ணி இப்பதான் தான் போட்டேன்..
நல்ல பதிவு..நன்றி..
பாராட்டுக்கள் பொன்ஸ்..
நன்றி சேது
மங்கை, நிர்மல்,
உங்கள் சுட்டிகளையும் பதிவில் சேர்த்துவிட்டேன். நன்றி
//எட்டுவதற்கு நம்முடைய பங்கு என்ன என்பது பற்றியும் சிறிது சொல்லியிருக்கலாம்//
சிபி, நம்மளவில் நம்மாலானது நோய்வாய்ப்பட்டவர்களைப் பிரித்து வைக்காமல் நம்மவர்களாகவே நடத்துவது. அத்துடன் எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவதும் கூட.. இறுதிப் பத்தி இதையே பேசுகிறதே..
இம்சை, எங்க கொஞ்ச நாளாக் காணோம்?
//ஹோப்பைப் பத்தியும் ஒரு ஆறு மாசம் முந்தி எழுதுன ஞாபகம். //
ஆமாம் துளசி அக்கா.. நினைவிருக்கு.. நம்பர் கூட வச்சிருக்கேன். கூப்பிடணும்.. சீக்கிரமே..
வெற்றி, புள்ளிவிவரங்களுக்கு மங்கையின் பதிவைப் பார்க்கலாம். சுட்டி இப்போது இணைத்துள்ளேன்.. மற்றும் இங்கும் பார்க்கலாம்
நல்ல பதிவு! இதையும் மேலே சேர்த்துக்கங்க!
Post a Comment