Tuesday, July 04, 2006

வெரோனிகா இறக்கப் போகிறாள்

தி அல்கெமிஸ்ட்(The Alchemist) என்னும் "இரும்பைப் பொன்னாக்குபவனின்" கதை மூலம் புகழடைந்த பாலோ கோய்லோ (Paulo Coelho) எனக்கு அறிமுகமானது தற்செயல் தான். புது வேலை தேடும் போது, என்னவெல்லாம் கஷ்டங்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறது என்று பேசப் போக, சக அலுவலகத் தோழி வாழ்க்கையின் பொருளை (அர்த்தத்தைத்) தேடும் இளைஞனைப் பற்றிய இந்தக் கதையைக் கொடுத்தார். அதிலிருந்து தொடங்கி கிட்டத்தட்ட பாலோவின் எல்லா நாவல்களையும் நான் படித்திருக்கிறேன்.

பாலோவின் நாவல்களில் எனக்குப் பிடித்த விஷயங்கள் இரண்டு.

1. அமெரிக்கப் பின்னணியிலேயே எழுதப்பட்ட ஆங்கில நாவல்களிலிருந்து வேறுபட்டு பாலோவின் நாவல்கள் ஐரோப்பியாவின் அதிகம் கேள்விப்படாத பக்கங்களைப் பேசுவது வழக்கம் - அதிலும் அமெரிக்கக் கண்ணோட்டத்தில் இல்லாமல் ஐரோப்பியாவைப் பேசும்.

2. எல்லாக் கதைகளும், ஆற்றொழுக்கான இயல்பான நடையில், அவருடைய சொந்தக் கதை தானோ என்று எண்ணும் அளவுக்கு ஒன்றிப் போய் எழுதி இருப்பார். வாசகனின் கூறுகளையும் சில(பல) இடங்களில் கதை நாயகனிடம்/நாயகியிடம் பார்க்க முடியும்.

நான் படித்த நாவல்களில் எனக்குப் பிடித்த பக்கங்களை இந்தப் பதிவில் எழுதப் போகிறேன். திறனாய்வு என்று சொல்ல முடியாது. திறனாயும் அளவுக்குக் குறைகள் பிடிபடவில்லை.

Eleven Minutes

பிரேசிலின் குக்கிராமத்தில் வளர்ந்த ஒரு சின்னப் பெண் மரியா, காதலுடனான தன் ஆரம்பத் தோல்விகளால் மனமுடைந்து காதல் என்பதான ஒன்று உலகத்தில் இல்லவே இல்லை என்று முடிவெடுக்கிறாள். பணம் தான் முக்கியம், காதல் அன்பு பாசம் என்பதெல்லாம் வெறும் அடிமைத்தனமே என்னும் எண்ணத்துடன் அந்தக் கிராமத்தை விட்டுத் தப்பிப்பது தான் பணம் சேர்க்க ஒரே வழி என்றும் கண்டு கொள்ளுகிறாள்.

சுற்றுலாப் பிரயாணி ஒருவனின் உதவியால் ஜெனிவா செல்லவும் அங்கு மாடலாகிச் சம்பாதிக்கலாம் என்றும் எண்ணி வீட்டை விட்டு ஓடி வந்துவிடுகிறாள். பல நாட்கள் ஆகியும் அவளை மாடலாக வைத்துப் படம் எடுக்கவோ, விளம்பரப்படம் செய்யவோ யாரும் முன்வரவில்லை. கொண்டுவந்த பணம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்த பொழுது, தோற்றுப் போய் ஊர்திரும்பப் பிடிக்காமல் இப்போதைய ஆடம்பரமான வாழ்க்கையையும் விட முடியாமல், ஏற்கனவே உணவு பரிமாறும் வேலை மட்டும் செய்யும் உணவு விடுதியில் விபச்சாரியாகவும் தொழில் தொடங்குகிறாள்.

தினசரி பார்க்கும் ஆண்கள், அவர்தம் பயங்கள், ஆசைகள், தயக்கங்கள், கஷ்டங்கள் இவையெல்லாம் சேர்ந்து வெறும் பதினோரு நிமிடத்தில் முடிந்துவிடக் கூடிய உறவுக்காக, பல வருடங்கள் சேர்ந்து வாழ்வது, குழந்தை, குடும்பம், பொறுப்பு, வேலை, எல்லாமே வீணான ஒன்று என்னும் எண்ணத்தைப் பலப்படுத்துகிறது.

"உண்மைக் காதல் என்ற ஒன்று உலகத்தில் இல்லை. நான் நானாக இருக்க அனுமதிக்கும் அடிமைத் தனமில்லாத அன்பு கிடைக்க வாய்ப்பே இல்லை" என்று மரியா முடிவெடுக்கும் போது தான் அவள் எதிர்பார்த்த அந்தக் காதலனைப் பார்க்கிறாள். இவன் எனக்கானவன் என்று மரியாவும் அந்த இளைஞனும் உணரும் போது, அந்தப் பதினோரு நிமிடங்களைப் பற்றிய அவளது பார்வை மாறுகிறது. பாசாங்குகளற்ற உறவுக்கும் அடிமைத்தனமில்லாத அன்புக்குமான வழி அவளுக்குத் திறக்கிறது.

வெரோனிகா இறக்கப் போகிறாள்


வெரோனிகா தன் இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் அழகான இளம்பெண். சொந்த சம்பாத்தியம், நண்பர்கள், இயல்பான வாழ்க்கை என்று வாழ்ந்துகொண்டிருக்கும் போது தான் ஒரு நாள் அந்த முடிவுக்கு வருகிறாள் - தற்கொலை.

ஒரே மாதிரி சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை எப்படியும் ஒரு நாள் முடியப் போகிறது. வயதாகும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? இன்றே இறந்துவிடலாமே. அவள் அம்மாவைத் தவிர வேறு யாருக்கும் அவளது இறப்பு எந்தத் துன்பத்தையும் தராது. அருகில் இல்லாத அம்மாவும் கொஞ்ச நாள் வருந்துவாள். எப்படியும் ஒரு நாள் இறக்கவேண்டியவள் தானே வெரோனிகா. அது ஏன் இன்றாக இருக்கக் கூடாது?

இப்படி ஆரம்பிக்கும் Veronika Decides to Die, அந்நாளைய யூகோஸ்லோவியாவிலிருந்து பிரிந்து வந்த ஸ்லோவினியா என்னும் நாட்டைக் கதைக் களமாகக் கொண்டிருக்கிறது.

தூக்க மாத்திரைகளை விழுங்கி இறக்க முடிவெடுக்கும் வெரோனிகா கடைசி கடிதம் என்று யாருக்கு எழுதுவது என்று தெரியாமல், அன்றைய தினசரிகளில் வந்திருக்கும் ஒரு கட்டுரையாசிரியருக்கு எழுதுகிறாள். அந்தக் கட்டுரை "ஸ்லோவினியா என்பது எங்குள்ளது?" என்று ஒரு நாட்டின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிக் கொண்டு தொடங்குகிறது.

பாதி எழுதுகையில் மயங்கிவிடும் வெரோனிகா ஸ்லோவினியத் தலைநகரமான ஜூப்ளிஜானாவின் புகழ்பெற்ற மனநல விடுதியில் கண்விழிக்கிறாள். - பத்திரிக்கைக் கட்டுரைக்காக உயிர்விடத் துணிந்தவளை வேறெங்கே அனுமதிப்பார்கள்?

இன்று காப்பாற்றப்பட்டாலும், இன்னும் ஏழு நாட்களில் இறக்கப் போகும் உண்மையை வெரோனிகாவிடம் சொல்கிறார் தலைமை மருத்துவர்.
உயிரின் மீது எந்த ஆசையும் இல்லாமல், அதற்கு முன்பே இறந்து போக என்னவழி என்று யோசித்துக் கொண்டிருக்கும் வெரோனிகாவின் வாழ்விலும் அன்பு என்னும் அமுத சுரபி குறுக்கிடுகிறது, மற்றொரு மனநோயாளி என்று இல்லத்தில் வசிக்கும் இளைஞன் மூலம்.

பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்து, பணம் சம்பாதிக்கும் ஆர்வமே இல்லாத இந்த இளைஞன் ஆசிரியரின் மறுபதிப்பே. யாரிடமும் பேச மறுக்கும் இந்த இளைஞன், வெரோனிகாவின் இனிய பியானோ இசைக்கு ரசிகனாகி, பின்னர் வெரோனிகாவின் பாசாங்கற்ற நேசத்துக்கும் உரித்தாகிறான். பலகாலமாக வெளியுலகில் இருவரும் தேடிக் கொண்டிருந்த அந்த அன்பு அவர்களுக்கு ஒரு மனநோயாளிகளின் காப்பகத்தில் கிடைக்கிறது..

இந்தக் கதையின் முதல் பகுதி என்னைக் கவர்ந்தது. வெரோனிகாவின் தற்கொலை முயற்சியும், அதுசமயம் அவளுடைய எண்ண ஓட்டங்களும், ஆசிரியர் அழகாக விவரித்திருப்பார். இறுதியில், வேறு யாருடனும் இல்லாத வகையில் கதை நாயகனுடன் வெரோனிகா தான் தானாக இருக்கும் சில நிமிடங்களும் மிக அழகான ஆர்ப்பாட்டமில்லாத வர்ணனையாகும்.

பொதுவாக, பாலோவின் கதைகளை, அடுத்து என்ன ஆகப் போகிறது என்று ஊகிக்காமல், கதையின் போக்கிலேயே போய்ப் படிக்க வேண்டும்.
எல்லாக் கதைகளுமே இது மாதிரி பாசாங்கில்லாத அன்பையும் அடிமைத்தனமில்லா நேசத்தியும் அடிப்படையாகக் கொண்டது தான். இன்னும் எனக்குப் பிடித்த மற்றொரு கதை O Zahir.

கதைகளைப் படித்துப் பல நாட்கள் ஆன போதும் அருளின் இந்தப் பதிவும் அதில் குழலியின் பின்னூட்டங்களும் இந்தக் கதைகளை மீண்டும் நினைவுப்படுத்தி விட்டன..

இந்தக் கதைகள் படிக்கையில், மற்றவர் மீதான நமது அன்பை நிச்சயம் ஒருமுறை மீள் பரிசோதனை செய்யத் தூண்டும்.

30 comments:

வெற்றி said...

பொன்ஸ்,
தகவலுக்கு நன்றிகள்.
நீங்கள் குறிப்பிட்ட நாவல்களை இதுவரை வாசிக்கவில்லை. உங்களின் பதிவைப் பார்த்ததும் வாசிக்க வேண்டுமென ஆவலாக உள்ளது.

மிக்க நன்றி.

பாலசந்தர் கணேசன். said...

ஒரு நல்ல அறிமுகத்தை அளித்து உள்ளீர்கள். ஆனால் இன்னமும் கொஞ்சம் ஆர்வம் தூண்டும் வண்ணம் எழுதி இருக்கலாம்.

செல்வன் said...

இந்த 2 நாவல்களையும் படிக்கவில்லை பொன்ஸ்.ஆனால் நீங்கள் எழுதியதை வைத்து பார்த்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றுகிறது.

Thekkikattan said...

பொன்ஸு,

அட்டகாசம, புத்தக விமர்சனம் பண்ணியிருங்கீங்க. வேறு என்னதான் பாக்கி இருக்கு. சொல்லுங்க.

சொன்ன மாதிரியே செஞ்சுட்டீங்க.

நன்றி.

S. அருள் குமார் said...

மிக நல்ல அறிமுகம் பொன்ஸ்.

//எல்லாக் கதைகளுமே இது மாதிரி பாசாங்கில்லாத அன்பையும் அடிமைத்தனமில்லா நேசத்தியும் அடிப்படையாகக் கொண்டது தான்.// எனில் நிச்சயம் படிக்கவேண்டும்.

//இன்னும் எனக்குப் பிடித்த மற்றொரு கதை O Zahir.// ...தொடர்ந்து எழுதுங்கள்.

இக் கதைகளைப்பற்றி நீங்கள் எழுதிய விதமே நன்றாக இருக்கிறது.

//வெரோனிகா இறக்கப் போகிறாள்// -
'வெரோனிகா இறந்துவிட முடிவெடுத்தாள்' என்பது சரியாக இருக்குமோ?!

G.Ragavan said...

முதல் கதையை விட இரண்டாவது கதை சிக்கலான தளத்தில் இயங்குவது போலத் தெரிகிறது. உயிர்ப் பரிமாண பயங்களை உரித்து எரிந்து விட்டு பிழைப்பது என்பதைப் பொய்மைக்கா மனவளம் நிறைத்து வழிதேட முற்படல்களைச் சிறப்பான ஒரு செயல் என்று நம்பிச் செய்வதாலோ என்னவோ அதற்குப் பின்னடவைகள் எல்லாம் சிறப்பாகவே அமைந்து அவளது நம்பிக்கை அடித்தளத்தில் உயர்ந்த ஆனந்தக் கட்டிடங்களை எழுப்ப முயல்கின்றன.

Ponnarasi Kothandaraman said...

Pons,
Tht was awesome!

On an unrelated subject, was happy 2 c ur name..[my nickname is Pons :) ] Came here thru Bala.g's page. Is this ur full name???

பொன்ஸ்~~Poorna said...

வெற்றி, வாசிச்சிட்டு சொல்லுங்க..

பாலசந்தர், நீங்க சொன்னதுக்கு அப்புறம் எனக்கும் தோணுது. புத்தகம் படிச்சு கொஞ்ச நாள் ஆய்டுச்சு.. அது கூட காரணமா இருக்கலாம்.. அந்தத் தாக்கம் குறைஞ்சிருக்கலாம்.. அடுத்தமுறை திருத்திக் கொள்ள முயல்கிறேன். நன்றி :)

படிச்சி பாருங்க செல்வன்.. :)

பொன்ஸ்~~Poorna said...

அருள்,
//எனில் நிச்சயம் படிக்கவேண்டும்.//
கண்டிப்பாகப் படியுங்கள், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.. :)

//தொடர்ந்து எழுதுங்கள்.// நிச்சயம்.. அந்தக் கதையை மறுமுறை மீள்வாசிப்பு செய்துவிட்டு எழுதுகிறேன்..

//'வெரோனிகா இறந்துவிட முடிவெடுத்தாள்' என்பது சரியாக இருக்குமோ?! //
சரி தான்.. ஆனால் ஆங்கிலத் தலைப்பு ஏற்படுத்தும் தாக்கம் இல்லை - இரண்டு தலைப்பிலும்.. ஏதோ ப்ளாக்கர் திட்டிவிடப் போகிறதே என்று சுருக்கிவிட்டேன் :) :)

பொன்ஸ்~~Poorna said...

தெகா, நன்றி, படியுங்க.. உங்களுக்கு இந்த வெரோனிகா புத்தகம் பிடிக்கும்..

ராகவன், உங்கள் பின்னூட்டம் எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை.. உயிர்ப்பரிமாண பயங்களை வெரோனிகா துறந்தது நல்லது என்கிறீர்களா? இல்லையா?
முதல் கதையை விட இரண்டாவது எனக்கும் மிகப் பிடித்திருந்தது.. ஒரு விதத்தில் வெரோனிகாவின் கேள்வி எனக்கும் எழுவது தான்.. எல்லாவற்றுக்கும் மரணம் முடிவு.. எப்படியும் நம்மைத் தொடத் தான் போகிறது.. என்றால், நாம் எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்?!!

பொன்னரசி.. ஹி ஹி.. இல்லீங்க.. பொன்ஸ் என்பது என் பாட்டி பெயரின் சுருக்கம். :) அவங்க பேரும் பொன்னரசி இல்லீங்க.. :)

G.Ragavan said...

என்னது என்னோட பின்னூட்டம் புரியலையா.........இதென்ன அக்கிரமம். எவ்வளவு கஷ்டப்பட்டு யோசிச்சுக் கீசிச்சி முன்பழமைத்துவமும் பின்நவீனத்துவமும் ஒட்டும் புள்ளியில் உள்ள அன்றையநிசர்சனத்தின் கோணத்திலிருந்து ஒரு பின்னூட்டம் போட்டிருக்கேன். நீங்க இப்பிடி சொல்லீட்டீங்களே!

Chandrasekaran Krishnan said...

Cool. Even I have liked Coelho. But nothing impressed me as much as "The Alchemist".
He has got extremely powerful style of writing.

Anonymous said...

oru periya novalai surukki engalukku arimugappaduththiya ponskku vazhththukkal.
migavum nandraaga irundhathu

புதுமை விரும்பி said...

பாலோ கோய்லோ என்றாலே "alchemist" மட்டும் தான் என்று நினைத்திருக்கும் இலக்கிய வட்டத்திற்கு, அவரின் மற்ற நூல்கள் பற்றிய இந்த அறிமுகம் அவசியம். "வெரோனிகா இறக்கப் போகிறாள்" என்பது சரியான மொழிபெயர்ப்பாக எனக்குத் தெரியவில்லை. "வெரோனிகா இறந்துபோக முடிவு செய்கிறாள்" என்பது இன்னும் சரியான மொழிபெயர்ப்பாக இருந்திருக்கும். என்னிடம் பாலோ கோய்லோவின் சில படைப்புகள் மென்புத்தக (e-book) வடிவத்தில் இருக்கின்றன. விரும்பியவர்கள் என்னிடம் பெற்றுக்கொள்ளலாம்.

மின்னுது மின்னல் said...

i will come next time sorry

Udhayakumar said...

நான் ராகவன் பின்னூட்டத்தை படித்துவிட்டு மண்டை காய்ந்து இது நமக்கான இடல் இல்லைன்னு நகர நேரத்துல நீங்க புரியலைன்னு பட்டுன்னு சொல்லிட்டீங்க... எப்படி இப்படி???

By the way, my friend referred alchemist long back and still it is with us without reading a single page.

பொன்ஸ்~~Poorna said...

//முன்பழமைத்துவமும் பின்நவீனத்துவமும் ஒட்டும் புள்ளியில் உள்ள அன்றையநிசர்சனத்தின் கோணத்திலிருந்து //
ராகவன், உங்களுக்குக் கைல தானே அடி? ;) சரி சரி விடுங்க.. நான் இன்னும் உங்க லெவலுக்கு வரலை போலிருக்கு..:)))

சந்திரசேகரன், மிச்சமும் படிச்சி பாருங்க.. எனக்கு அல்கெமிஸ்டை (alchemist) விட சஹிர்(zahir) பிடிக்கும்..

புதுமை விரும்பி, தலைப்பு மொழிபெயர்ப்பு அத்தனை சரியில்லை என்பது உண்மைதான்.. அருளுக்கு விளக்கம் கொடுத்திருக்கேன் பாருங்க.. எனக்கும் ஒரு காபி அனுப்புங்களேன்... எல்லா புத்தகத்தையும் படிக்க ஆவலாக இருக்கிறேன்..

மின்னல், அனானி, நன்றி.

//எப்படி இப்படி???//
ஹி ஹி.. எதையும் மனசுல வச்சிக்கிறது இல்லீங்க உதய்.. :))) படிங்க.. நல்ல புக்.. ஒரு முறை படிச்சி பாருங்க..

Sivabalan said...

பொன்ஸ்,

நல்ல விசயம்

நன்றி.

பிரசன்னா said...

எல்லா புக்குமே மின்பதிப்பாய் கிடைக்கிறது.. யாருக்காவது வேணும்னா தம்பிக்கு மெயில் பண்ணுங்க...
அட தம்பின நாந்தாங்க..

நாமக்கல் சிபி said...

ரெண்டு கதையுமே நல்லா இருக்கும் போல இருக்கே!

ஆங்கில நாவல்களா?
தமிழ் நாவல்கள் படிக்கவே நேரம் போதவில்லை! :( இருப்பினும் நேரம் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.

வெரோனிகா கதை நன்றாக இருக்கிறது.

Thekkikattan said...

நல்லெ டீலுக்கு தேடிகிட்டேடேடே இருக்கேன், $8.00 தரேங்கிறான் ஈ.பேயிலெ... இன்னும் யோசிக்கிறேன் ;-) அடுத்த வாரத்திக்குள்ளே கையிலெ கிடைக்குமான்னு, கிடைச்சா ஒரு ட்ரிப்லெ படிக்க வசதியா இருக்குமின்னு, இல்லென்னா, முழு விலை கொடுத்து வாங்கிட்டு. தாயீகிட்டே 'பில்'லெ அனுப்பி கலெக்ட் பண்ணிட வேண்டியதுதான்... நீங்க என்னெ நினைக்கிறீங்க ஹி.பி. குருவே! :-))

நாமக்கல் சிபி said...

//$8.00 தரேங்கிறான் //

பழைய புத்தகமல்லவா கிடைக்கும்.

புதிதே வாங்கிடுங்கள் தெகா! பில்லை சேர்க்குமிடத்தில் செர்த்திடுங்கள்.

"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்"

வினையூக்கி said...

naanum "paulo Coelho" rasigan than...
veronica and the alchemist rendum naanum padichu irukken.

சீனு said...

ஹூம்...எனக்கும் இதைப் போன்ற நாவல்கள் படிக்கவேண்டுமென்று தான் ஆசை. ஆனால், பொறுமை வேண்டும் + 2, 3 தடவை படித்தால் தான் புரியும் எனும் பொழுது என்ன செய்ய!!!

பொன்ஸ்~~Poorna said...

நன்றி சிவபாலன்

சிபி, வெயிட் பண்ணுங்க.. சென்னை திரும்பி வந்து தரேன்.. ஒரு புத்தகம் என்கிட்ட இருக்கு.. அருளுக்கு அப்புறம் உங்களுக்குத் தரேன்..

//பில்லை சேர்க்குமிடத்தில் செர்த்திடுங்கள்.//
சேர்க்குமிடத்தில் என்பது , குருவிடம் தானே?!! ;)

வினையூக்கி,
வருகைக்கு நன்றி, உங்க பதிவுல எங்கயோ இந்த அல்கெமிஸ்ட் பத்தி எழுதினதப் படிச்சிட்டு தான் இது மாதிரி பதிவு போடலாம்னு தோணிச்சு.

Thekkikattan said...

/புதிதே வாங்கிடுங்கள் தெகா! பில்லை சேர்க்குமிடத்தில் செர்த்திடுங்கள்.

"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" //


ஓகே. பில் ரெடி, நீங்க ரெண்டு பேரும் ஒரு முடிவுக்கு வாங்க, யார் கிட்ட பில்லெ அனுப்புறதன்னு.

யார் அந்த புக்-ஆ படிக்கச் சொல்லி ரெகமெண்ட் பண்ணங்கலோ அவங்கதான் நியாயம புத்தகத்தை இரவல் கொடுத்து என்கேரேஷ் பண்ணணும்... ஸோ, பில்லு வந்து..... அட்ரெஸ் கொடுங்க ப்ளீஸ் ;-)

//தமிழ் நாவல்கள் படிக்கவே நேரம் போதவில்லை! //

பெருசு, மத்த நாட்டு ஆளுங்களும் எழுதுறத படிங்க... அப்பத்தானே அவங்களுக்கும் அடிப்படை உணர்வு என்னங்கிறது விளங்கும்.. .. ஹி...ஹி..., லூஸ்லெ விடுங்க :-))

பொன்ஸ்~~Poorna said...

//ஆனால், பொறுமை வேண்டும் + 2, 3 தடவை படித்தால் தான் புரியும் எனும் பொழுது என்ன செய்ய!!!
//
சீனு, பாட புத்தகமும் இப்படித் தானே படிச்சோம்...ஹி ஹி.. ஆனா இந்த நாவல் எல்லாம் இன்னும் ஈஸியா இருக்குமுங்க.. :)

//யார் அந்த புக்-ஆ படிக்கச் சொல்லி ரெகமெண்ட் பண்ணங்கலோ அவங்கதான் நியாயம புத்தகத்தை இரவல் கொடுத்து என்கேரேஷ் பண்ணணும்//
ஐ.. ஆச.. ஆச.. ஒரு ட்ரிப்ல படிக்கிறேன்னீங்களே, எல்லாம் எங்கூரைத் தாண்டித் தானே பறந்தீங்க? நடுவுல இறங்கி புக்கை இரவல் வாங்கிகிட்டு போயிருக்க வேண்டியதுதானே? ;)

Udhayakumar said...

பொன்ஸ், The Alchemist படிச்சிட்டேன். ரொம்ப நல்ல கதை, அதே லைன்ல எனக்கும் ஒரு அனுபவம் நிகழ்ந்தது போன வாரத்துல.

வெரோனிகா வும், Fifth mountain கையில் இருக்கு, படிக்கணும்.

சீனு said...

//பாட புத்தகமும் இப்படித் தானே படிச்சோம்//
பாட புத்தகமெல்லாம் கடமைக்காக, ஆனால் நாவல்கள் அதன் சுவையை அனுபவிப்பதற்காக.

ரவிசங்கர் said...

alchemist பக்ககத்துக்குப் பக்கம், வரிக்கு வரி எனக்கு மனப்பாடம். ஆர்குட்டில் ஆல்கெமிஸ்ட் ரசிகர் மன்றம் கூட இருக்கிறது. 15 முறைக்கு மேல் முழுமையாகப் படித்து இருப்பேன். பிற கதைகள் ஆல்கெமிஸ்ட் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. அவரது பல புதினங்களைப் படித்து இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள zahir, veronika, eleven minutes கதைகள் மட்டும் தான் நினைவில் நிற்கின்றன. மிச்சவை எல்லாம் கதைக்களம், பாத்திரங்கள் உட்பட மறந்துவிட்டன. ஒரு வகையில் ஒரே மாதிரி எழுதப்பட்ட கதைகள். சின்ன வயசில் மு.வ புதினங்கள் படித்த போதும் இப்படி எல்லாமும் ஒரே மாதிரி இருந்ததாகத் தோன்றியது. அவரது கதைகள் ஒன்று கூட நினைவில்லை. பொதுவாக எல்லா எழுத்தாளர்களுக்கும் masterpiece என்று ஓரிரு புதினங்களும் அதே பாணியில் அமைந்த பல புதினங்களும் இருக்கின்றன. கல்கி, நா. பா எல்லாம் இந்த வகை தான். தற்காலத் தமிழ் எழுத்தாளர்களை அவ்வளவாகப் படித்தது இல்லை.