Monday, July 31, 2006

பாலு..

"என்னக்கா, ரெண்டு நாளா ஆளையே காணோம். ஊருக்குப் போயிருந்தீங்களா?" தண்ணீருடன் வந்த பாலு கேட்டான்.

"ப்ச்." என்றபடி தலையாட்டினேன், அவன் கொடுத்த தண்ணீரை அருந்திக் கொண்டே..

"வழக்கம் போல ஸ்ட்ராங்க் காபி தானேக்கா? வேற எதுனா வேணுமா? "

"டிபன் இன்னிக்கி இங்க தாண்டா!.. சொல்லிடு" என்றேன்.

மனமும் உடலும் சோர்ந்திருந்தது. மேனேஜருடன் இன்றைக்கும் தகராறு. என்னவோ அவனுக்குச் சேவை செய்யவே என் வீட்டில் பெற்றது போல.

பொதுவாகவே அவனுக்குத் தான் பெரிய ஆள் என்று எண்ணம். பெண்கள் வேலை செய்வதே பொறுக்காதவன்.. இதற்கு மேல், அவனுக்குக் கீழே வேலை செய்பவர்கள் என்றேனும் நல்ல பெயர் வாங்கிவிட்டால், அப்படியே கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும்.

போனவாரம் எங்கள் கிளைக்கு வந்திருந்த எம்.டி ஏதோ சின்ன வேலையை ஒழுங்காக முடித்து விட்டேன் என்று பாராட்டி விட்டார். அதிலிருந்து ஏதோ இஞ்சி தின்ற குரங்கு போல் முகத்தை வைத்துக் கொண்டு, என்ன செய்தாலும் குறை சொல்லிக் கொண்டு திரிகிறான்.. வழக்கமாகவே, சின்ன சின்ன வேலையெல்லாம் அவன் எடுத்து முடித்து விடுவான். பெரிய, கடினமான வேலைகள் வரும்போது, என் நினைவும் கூடவே வந்து விடும். நல்ல வேலை செய்வது விருப்பமான ஒன்றுதான். ஆனால், அந்த வேலை செய்து முடித்த பின், "தாங்க்ஸ் மீனா" என்று சொல்லிவிட்டு, அதை அவன் பெயரில் மேலிடத்திற்கு அனுப்பும்போது தான் எரிச்சலாக வரும்.

போன வாரம் அப்படிச் செய்ய முடியாமல் எங்கள் மேலாளர் அவனுக்கு முன்னாலேயே அமர்ந்திருந்தார். நான் தான் செய்தேன் என்ற போது மேனேஜரால் ஒன்றும் சொல்ல முடியாமல் போயிற்று. அதெல்லாம் சேர்த்து வைத்து தான் இந்த வாரம் காண்பிக்கிறான்.

ஏதோ எக்கேடாவது கெட்டுப் போகட்டும், நமக்குத் தேவை இந்தச் சம்பளப் பணம் தானே என்று இத்தனை நாள் பொறுத்துக் கொண்டு தான் இருந்தேன். இன்று கொஞ்சம் காட்டமாகப் பேசி விட்டான். அதிலும், உடல்நிலை சரியில்லாமல், இரண்டு நாள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்து விட்டு அலுவலகம் செல்லவும், உடனே ஒருவன் திட்டினால் எப்படி இருக்கும்?

நான் போகாத நாளாகப் பார்த்து, தரக் கட்டுப்பாட்டு ஆய்வு வந்து விட்டதாம். இதுவரை, தரமாவது, கட்டுப்பாடாவது, அது சம்பந்தப்பட்ட டாகுமென்டுகளாவது, எதுவும் தெரியாமல் இருந்த மேனேஜருக்கு இது ஒரு பெரிய கறுப்புப் புள்ளியாகி விட்டது. அது தான் அவனுக்கு ஒரே கோபம். பெண்கள் எல்லாரும் இப்படித் தானாம். வேலைக்கு முக்கியத்துவம் தரத் தெரியாதாம். அதிலும் எனக்கு போன வாரம் எம் டியே பாராட்டி விட்டார் என்று தலைக்கனமாம். என்னைப் போன்றவர்களை சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் அவனுக்கு இருந்தாலும் அதற்கு அவன் இளகிய மனம் அனுமதிக்க வில்லையாம்.

இந்தக் கடைக்கு வந்து பாலு அங்கும் இங்கும் ஓடியாடி வேலை செய்வதையும், வரும் வாடிக்கையாளர் எல்லாரிடமும் நைச்சியமாகப் பேசுவதையும் பார்த்தாலே பாதி சோர்வு போய்விடும். அதனால் தான் இன்றைக்கு இங்கு வந்தேன்.

"என்னண்ணே, நீங்க வழக்கமா அழைச்சிட்டு வருவீங்களே அந்த அக்கா இன்னிக்கு வரலையா?" யாரிடமோ கேட்டுக் கொண்டிருந்தவன் என்னைப் பார்த்துவிட்டு என்னை நோக்கி வந்தான்

"மீனாக்கா, என்ன மொகமெல்லாம் வாடிக் கெடக்கு?"

"ஒண்ணுமில்லை பாலு. உடம்பு கொஞ்சம் சரியில்லை"

"என்னக்கா, பறவைக் காய்ச்சலா? அது பறவைக்குத் தானே வரணும்? நீங்கதான் சுத்த சைவமாச்சே"

லேசான புன்னகையுடன் சொன்னேன், "இல்லடா, எனக்குத் தான் காய்ச்சல்"

"அப்போ மீனாக் காய்ச்சலா? " என் முகம் இன்னும் மலர்ந்தது.

"என்னக்கா, உங்க முகத்துல சிரிப்பே இல்லை. ஏதோ பிரச்சனை.. வீட்ல யாருக்காவது உடம்பு சரியில்லியா?"

"இல்லடா.."

"ஆபீஸ்ல உங்க மானேஜர் ஏதாவது சொல்லிட்டாரா?"

இல்லை என்று நான் தலை அசைத்தாலும், என் முகம் ஏதோ சொல்லி இருக்க வேண்டும்..

"அதானே பார்த்தேன்.. அதெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்கக்கா.. என்ன பெரிய மானேஜர்.. அவங்க திட்டறது எல்லாம் பெரிசா எடுத்துகிட்டா நாம எங்க தான் வேல பாக்க முடியும்.. இப்போ என்னையே எடுத்துக்குங்களேன்.. மாஸ்டர் என்னனென்னவோ சொல்லி திட்டுவாரு.. ஒரு நாளைக்காவது திட்டு வாங்காம இருந்ததில்லை.. ஆனாலும் அப்படியே தொடைச்சு போட்டுட்டு போக வேண்டியது தான்.. "

சின்ன வயதிலிருந்தே பொறுத்துப் போகவேண்டும் என்று யாராவது சொன்னால் சட்டென்று கோபம் வந்து விடும் எனக்கு.. இப்போதும் வந்தது.. எனக்கிருந்த கோபத்துக்கு பாலுவை அப்படியே கடித்துக் குதறி இருப்பேன். அப்போது பார்த்து என் செல்பேசி அழைத்தது..

யார் என்று பார்த்தேன்.. என் அம்மா. இப்போதுள்ள மனநிலையில் அவரிடம் பேச முடியாது.

"அக்கா, போன் அடிக்குது.. "

"அடிக்கட்டும்" கொஞ்சம் கோபமாகவே சொன்னேன் அடித்து ஓய்ந்தபின் தவறவிட்டது மூன்று அழைப்புகள் என்றது செல்பேசி

"என்னக்கா, மூணு தடவைக் கூப்பிட்டுட்டாங்க போலிருக்கு"

"மூணு நாளா கூப்பிடறாங்க.. எடுத்தா ஜுரம்னு சொல்லணும்.. ப்ச்"

அடுத்த முறை அடிக்கத் தொடங்கியது. நானே எதிர்பாராத போது, என் செல்லை எடுத்துப் பேசத் தொடங்கினான் பாலு

"அலோ! யாரு?"

"...."

"மீனாக்காவா? அவங்க நம்பர் தான்ங்கா இது.. ஆனா அவங்க செல்லை கடைல விட்டுட்டுப் போய்ட்டாங்க" எல்லாரும் இவனுக்கு அக்காவா? நானும் அக்கா, என் அம்மாவும் அக்கா..ஹ்ம்..

"...."

"ரெண்டு நாள் இருக்கும்"

"ம்ம். வந்தா சொல்றேன். இன்னிக்கோ நாளைக்கோ கடைக்கு வருவாங்க"

".."

"எம்பேரு பாலுக்கா. நிச்சயம் சொல்றேங்கா! கவலைப் படாதீங்க.. நெறைய வேலை இருக்குன்னு சொன்னாங்க.. அதான் உங்களுக்கு பேசி இருக்க மாட்டாங்க.." அதற்கு மேல் எனக்குப் பொறுக்கவில்லை.

"போதுண்டா!" போனைப் பிடுங்கி அணைத்தேன்..

"அக்கா, ரொம்பக் கோபமா இருக்கீங்க.. ஜூஸ் கொண்டு வரவா?"

"ஒண்ணும் வேண்டாம்.. இதுவரைக்கும் நீ கொடுத்த உபதேசமே போதும்... எவ்வளவு ஆச்சு?"

"இல்லக்கா.. நீங்க கவலையா இருந்தீங்களேன்னு தான்.."

"போதுண்டா.. நான் கிளம்பறேன்.. இதுல நூறு ரூபா இருக்கு.. மிச்சம் இருந்தா வச்சிக்க.. அடுத்த முறை சாப்பிடும் போது பாக்கலாம்" சொல்லிவிட்டு பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினேன்.

அவன் அத்து மீறி என் செல்லை எடுத்ததனால் கோபமா இல்லை, என் மானேஜருக்குப் பரிந்து பேசியதா எது என்று எனக்குப் புரியவில்லை. கோபம் மட்டும் இருந்தது..


******** oooooooooooo ********





மீண்டும் நான் நாயர் கடைக்குப் போக ஒரு வாரம் ஆகிவிட்டது. கடையில் பாலு இல்லை
"சேட்டா, பாலு இல்லையா?" என்றேன். நாயரானாலும், அவருடைய பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் தமிழ்தான்

"அவன் போயாச்சு" என்றார் அவர்

"எங்கே? ஊருக்கா? "

என் கண்களில் ஒளிர்ந்த கலக்கத்தைப் பார்த்ததும், கேட்டார்:"ஏன், பணம் ஏதும் கொடுத்தோ?"

"ஆமாம்" என்றேன்..கவனிக்காமல்

"பக்கத்து சௌக்ல நோக்கியோ? அங்க தனிக்கடை உண்டு சாருக்கு இப்போ" என்றார்

தனிக்கடையா?!! வியந்தபடி பக்கத்து நாற்சந்திக்கு நடந்தேன்.

"வாங்கக்கா!!!" என்றான் பாலு..

சின்ன டீக்கடை தான்.. இட்லி, தயிர்சாதம், புளி சாதம், தோசை என்று மெனு எழுதி வைத்திருந்தான்.. இரண்டு பேர் தாராளமாக அமரலாம்.. நான்குபேர் கொஞ்சம் சுருக்கி குறுக்கி அமரலாம். "சொர்ணம் டீ ஸ்டால்" என்ற போர்டு, அவன் அம்மா பெயர் என்று நினைவு..

"என்னடா இதெல்லாம்? திடீர்னு?"

"காபி சொல்லவாக்கா? " என்று கேட்டுக் கொண்டே உள்ளே போய் காபி போட ஆரம்பித்தான்.

"நீங்க அன்னிக்கு கோபிச்சிகிட்டு போய்ட்டீங்க இல்லைக்கா... அப்புறம் எனக்கு மனசே சரியில்லை.. லீவு குடுங்க.. வெளியில போய்ட்டு வந்துர்றேன்னு சொன்னேன்.. மாஸ்டர் முடியாதுன்னுட்டாரு.. அது கூட பரவாயில்லை.. எனக்கு எப்பவுமே விளையாட்டு நெனப்புத் தானாம்.. வேலை எதுவும் சரியா செய்ய மாட்டேங்கறேனாம்.. இன்னும் என்னென்னவோ சொன்னாரு.. தெனைக்கும் சொல்றது தான்.. ஆனா, அன்னிக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு. உடனே போங்க நீங்களும் உங்க வேலையும்னு சொல்லி வேலையை விட்டுட்டு வந்துட்டேன்.. "

"ஏதுடா உனக்கு தனியா கடை போடற அளவு பணம்?"

"நீங்க கடைசியா கடைக்கு வந்த அன்னிக்கு கொஞ்சம் வருத்தமா இருந்திச்சிக்கா.. அன்னிக்கு நீங்க இருந்தப்போ வந்தாங்களே திலக் அண்ணா, அவர் தான் சொன்னாரு.. மனசிருந்தா வழி தானா தொறக்குமாமே.. அண்ணா கொஞ்சம் பணம் கொடுத்தாங்க சம்பளத்துல ஊருக்குப் போக வச்சிருந்தது.. எல்லாம் சேர்த்து எப்படியோ சமாளிச்சிட்டேன்.. தங்கி இருந்த இடத்தையும் காலி பண்ணியாச்சு.. காபி போடத் தான் நல்லா வரலை... கத்துகிட்டே இருக்கேன்.. "

பெருமையாக என்னை நிமிர்ந்து பார்த்தான்,

"அன்னிக்கு என்னவோ பெரிசா எனக்கு அறிவுரை சொன்ன?" என்னும் கேள்விகள் என் கண்களில் தெரிந்திருக்கவேண்டும்...

இரண்டு நிமிட மௌனத்துக்குப் பின், கொஞ்சம் இறங்கிய குரலில் சொன்னான். "ஒரு விதத்துல பார்த்தா நமக்கென்ன வேணும்னு நாம தாங்கா முடிவு பண்ணணும்.."

காபியை ஆற்றிக் கொண்டே அவன் சொல்லச் சொல்ல எனக்கு யாரோ பொட்டில் அடித்தாற்போல் இருந்தது

"என்னக்கா யோசனை?" என்றான், 'ம்' கூடக் கொட்டாமல் இருப்பதைப் பார்த்து.

"நானும் வேலையை விட்டுட்டலாமான்னு யோசிக்கிறேன்டா.. எத்தனை நாள் சம்பளத்துக்காக ஓடுறது?" சொல்லும்போது என் மனதினுள் ஒரு நம்பிக்கையும் நிம்மதியும் படர்வதை உணர்ந்தேன்..

[பிரசுரித்த நிலாச்சாரலுக்கு நன்றி.. அங்கு வந்த மறுமொழிகளை வைத்துக் கொஞ்சம் செப்பனிட்ட போதும், ஏதோ குறைவது போல் ஒரு எண்ணம்.. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.. ]

9 comments:

Udhayakumar said...

தெரியலையே... நல்லா இருக்குன்னு சொல்ல முடியலை. நல்லா இல்லைன்னும் சொல்ல முடியலை. உங்களுக்கும் பாலுவுக்கும் உள்ள உறவு (உரையாடல்?) நல்லா சொல்லியிருக்கலாம்.

கிவியன் said...

சர்வருக்கும் சாப்பிடவந்தவருக்குமான நட்பு, அதுவும் ஒரு ஆணும் பெண்ணுமாக வேறு இருப்பதால், யதார்த்தத்தை மீறியதாகதெரிவது சற்று சறுக்கல் (சமீபத்தில் சர்வர் சுந்தரம் பார்த்தீர்களா?)
சர்வர் எடுத்த முடிவு அவனுடை அனுபவம். இன்றைய தேதியில் இந்த மாதிரி உதாரண புருஷர்(ஷி)கள் ஏராளம். இவர்களை பார்த்து ஒவ்வொருவரும் மாறினால் இந்த உலகம் மிக இனியதாக இருக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமில்லை என்பதே நிதர்சனம். மாற்றம் உள்ளுக்குள் நிகழவேண்டும்.
ரிப்பேர் பண்ணிய வடிவம் கொஞ்சம் பரவாயில்லை. உரையாடல் வடிவம் சற்று மிகைப்படுத்துகிரது. முயற்சி திருவினைதான். ஆக்குங்கள் மேலும் கதைகளை.

வல்லிசிம்ஹன் said...

பொன்ஸ்,
நல்லா இருக்கு.
நடப்பதுதானே.
எங்க வீட்டுக்குக் கீரை கொடுக்கும் பொண்ணு பத்தாவது படிக்கிறது. அவளும் வயசுக்கு மீறி பேச்சு பேசும்போது
அரட்டை என்று ஒதுக்குவேன். சில சமயம் அது அசரீரி மனசில் படும்.ஆண் பெண் வித்தியாசம் எல்லாம் இல்லை.how you relate yrself to that to person என்பதுதான் முக்கியம்.வடிவமைப்பு நன்றாக வந்து இருக்கிறது.

மணியன் said...

வாழ்வில் நாம் குழம்பியிருக்கும்போது மற்றவர்களின் அனுபவங்கள் நமக்கு திருப்புமுனையாக அமைகின்றன. அவை ஒரு செயலாகவோ, சொல்லாகவோ அல்லது சைகையாகவோ கூட இருக்கலாம். நமக்குள் ஏற்படும் பொறி அதை ஏற்படுத்தியவருக்கு தெரியாமலும் போகலாம்.

ஓகை said...

கதையில் ஏதோ குறைவதாக எனக்கும் தோன்றியது. என்னவென்று தெரியவில்லை.

உங்கள் பதிவில் இருக்கும் 'வெண்பா' தொடர்பை இன்றுதான் பார்த்தேன். நான் அவருக்கு இட்ட மறுமொழி.

என்பாக்கள் என்றொன்று உண்டென்று சொன்னநல்
பொன்னம்மா வாழ்க புளோரைப்பா முன்னமே
சந்த வசந்தத்தில் வந்ததைக் கண்டுள்ளேன்
சிந்தை அறிந்ததே இன்று.

வெண்பா பக்கமே யாரும் வருவதில்லையே ஏன்?

மனதின் ஓசை said...

அந்த உறவு யதர்த்தமான்னு தெரியல ..... ஆனா பிடிச்சிருக்கு...
மற்ற சம்பவங்கள் எல்லாம் நடைமுறையில் நடப்பவைதான்..

Anu said...

pons
enakku ennamo indha kadai pidichirundadhu
neraiya nerattula indha madiri erichhal erpadum..ana..adukkaga velaia vidara dhairiamum kedayadu
i think indha madiri problem middle classku dan jaasthi

மா சிவகுமார் said...

நிலாச்சாரலில் இருப்பதே நல்லாத்தானே இருக்கு. எப்படியும் அறிவுரை சொல்வது என்று முடிவு செய்துட்டீங்க! அதில் எதற்கு அடக்கி வாசிக்க வேண்டும். திருத்திய பிறகு கடைசிப் பகுதிகள் முழுமை இல்லாமல் இருக்கு. போய் நிலாச்சாரலில் படித்தால் புரிந்தது.

மற்றபடி, முதல் பாதி நடந்ததை நீங்கள் கவனித்தது, பிற்பகுதி அதற்கு நீங்கள் கொடுக்க முயலும் தீர்வு என்று படுகிறது, சரியா? உங்கள் கதையில் முதல் பாதியில் வரும் டீக்கடையில் வேலை பார்க்கும் பையனும், மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்ணும் அந்தப் பாதியில் வெளிப்படுத்தும் பண்புகளுக்கு ஒத்து வராமல் இரண்டாவது பாதி இருப்பது போலத் தோன்றுகிறது.

அன்புடன்,

மா சிவகுமார்

பொன்ஸ்~~Poorna said...

கதை பிடிச்சிருக்குன்னு சொன்ன மனதின் ஓசை, அனிதா, மணியன், மனு, எல்லாருக்கும் நன்றி..

குழப்பத்தில் இருக்கும் உதய்.. :-D தாங்க்ஸு..

கிவியன், அந்த மாதிரி உறவுகளும் இப்ப இப்ப இருக்கிறது தான். நானே அப்படி ஒரு சின்ன பையனிடம் பேசி இருக்கேன்.. கதை அதைச் சுத்தி பில்டப்.. நீங்க சொன்னது போல் இந்த வயசுப் பையன் தனிக் கடை போடுவதால் தான் எதார்த்தத்தை மீறி விட்டதோ..

சிவகுமார், அறிவுரையா எழுத வேண்டாம்னு பார்த்தேங்க.. இந்தக் கதை வடிவமே தப்போன்னு இப்ப தோணுது.. சின்ன சம்பவத்தைச் சுற்றிக் கட்டியது... சுற்றுச் சுவர் சரியில்லை.. இன்னும் வேற ப்ளான் போட்டிருக்கலாம்னு இப்போ தோணுது.. இரண்டாவது பாதி கொஞ்சம் ஒட்டவில்லை என்பது உண்மைதான்..

சிங்கை நாதன், அதாவது, ரெண்டு பேருக்கும் மேலாளர்.. Managing Director-நு சொல்ல முயற்சி.. ஏதோ மிஸ்.. ஹி ஹி.. தமிழை ஏன் வாருறீங்க.. எல்லாம் என் கை வண்ணம் தான் சரியில்லை :)