Sunday, May 14, 2006

அம்மா என்றழைக்காத...நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், டிடியில் செவ்வாய்க் கிழமைகளில் நாடகம் போடுவார்கள். ரொம்ப அறுவையாக இருக்கும் என்று பல இடங்களில் கிண்டல் செய்யப்பட்ட செவ்வாய்க் கிழமை நாடகங்களை நான் மிகுந்த ஆர்வத்துடன் பார்ப்பேன். ஒரே நாளில், ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும் அது போன்ற நாடங்கள் இன்றைய மெகா சீரியல் காலங்களில் வரப் பிரசாதமாகவே தோன்றுகின்றன.

சரி விஷயத்துக்கு வருவோம். அதில் ஒரு நாடகம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. பத்து வயதுப் பெண் ஒருத்தியின் பிறந்த நாள் விழா அது. பிறந்த நாளுக்கு அவளுடைய அப்பா கேக் எல்லாம் வாங்கி வைத்து விட்டார். அக்கம் பக்க வீட்டாரையும் அந்தச் சிறுமியின் நண்பர்களையும் அழைத்து விட்டார்கள். சிறுமி தன் தாயாருக்காகக் காத்திருக்கிறாள். "அம்மா ஏன்பா வரலை?" என்று நொடிக்கொரு தரம் வாசலுக்குச் சென்று பார்த்துக் கொண்டே இருக்கிறாள்.

விருந்தினர்கள் வர ஆரம்பித்த காரணத்தால், அப்பா வந்து பெண்ணை அழைக்கிறார். "அம்மாவுக்கு திடீர்னு ஏதாவது வேலை வந்திருக்கும். நீ வந்து புதுச் சட்டை போட்டுக்குவியாம்" என்று சொல்லி சமாதானப்படுத்தி அவளின் பிறந்த நாள் உடை அணிவிக்கிறார். தலைவாரிப் பின்னிவிட்டு அலங்கரித்து, எல்லாம் முடித்த பின்னும் அம்மா வரவில்லை. சிறுமிக்கு மிகுந்த வருத்தம். மீண்டும் வீட்டிலிருந்து வெளியில் வந்து பார்க்கிறாள். அம்மா வரவில்லை ஆனால் எல்லா விருந்தினரும் வந்து விட்டதால் கேக்கை வெட்டுமாறு அப்பா சொல்கிறார்.

முடியாது என்று சொல்லிவிட்டுக் கோபத்துடன் அந்தப் பெண் வெளியே ஓடிப் போய் அப்பாவின் ஸ்கூட்டரின் மேல் உட்கார்ந்து அழ ஆரம்பித்து விடுகிறாள். அப்பா விருந்தினர்களிடம் சொல்லிவிட்டு, பெண்ணைப் பார்க்க வருகிறார்.

"ஏம்மா ஓடி வந்துட்ட? " என்கிறார் அப்பா.

"அம்மா ஏன்பா இப்படி பண்றாங்க? இன்னிக்கு என் பர்த்டேன்னு அவங்களுக்குத் தெரியாதா? போனவாரம் ஆஷா பிறந்த நாள் வந்தபோது அவளோட அம்மா அவளுக்காக தானே கேக் செஞ்சி தந்தாங்க.. அம்மாவுக்கு என்மேல பாசமே இல்லைப்பா" என்று சொல்லி அழுகிறாள்.

அப்பா பொறுமையாக, பெண்ணைத் தேற்றிவிட்டு, 'உன் மேலும் தம்பி மேலும் அம்மாவுக்கு அதிக பாசம் உண்டு. அம்மா காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் வேலை செய்வது உனக்கும் உன் தம்பிக்காகவும் தான். உன் மேல் அவளுக்கு அதிக பாசம் இருந்தாலும் ஏதோ வேலை அதிகமாக இருப்பதால் அவரால் வராமல் போயிருக்க வேண்டும்.' என்று சின்னக் குழந்தைக்குப் புரியுமாறு தெளிவாகச் சொல்லுவார்.

சிறுமி இது கேட்டுத் தெளிவாகி, கண்ணைத் துடைத்துக் கொண்டு கேக் வெட்டப் போவதாகவும், கடைசி நொடியில் அம்மா வந்து விடுவதாகவும் கதை முடியும். இதில் அப்பாவாக சிவக்குமார் நடித்திருப்பார். அந்தக் குழந்தை நீனா என்று நினைக்கிறேன்..

என்னை இந்தக் கதை ரொம்பவும் பாதித்ததற்குக் காரணம், நானும் அப்போது அந்தச் சின்னப் பெண்ணின் நிலையில் இருந்ததால் தான்.. என் அம்மாவும் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பின், வாசலிலேயே உட்கார்ந்து கொண்டு அம்மாவிற்குக் காத்துக் கொண்டிருந்தது உண்டு.

வேலைக்குச் செல்லும் அம்மாக்கள் சின்ன வயதில் வருத்தத்திற்குரிய விஷயமாக இருந்தாலும், போகப் போகப் பழகி விடுகிறது. என் தோழிகள் பலரின் தாயார் வீட்டிலேயே இல்லத்தரசிகளாகவே இருந்தது மிகவும் உறுத்தலான ஒன்று. அதிலும் கொஞ்சம் விவரம் தெரிந்த வயதில், வீட்டில் அம்மா இல்லாதது ஒரு பெரிய குறை.

அப்படி வேலைக்குச் செல்லும் அம்மாக்களுக்குப் பெரிய பக்க பலம் அவரவர் கணவன்மார்கள் தான். இந்தக் கதையில் வரும் அப்பா போல் என் அப்பா எனக்கு அறிவுரைகள் கூறவில்லை என்ற போதும், என் அம்மா வேலைக்குச் செல்வதிலும், அதிலும் வங்கியில் வேலை செய்வதும் பெருமைக்குரிய விஷயமாக எண்ணச் செய்திருந்தார்கள். கதை நாயகர் போலவே என் அப்பாவும் எங்கள் இருவருக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுத்து விட்டு, எங்களைப் பள்ளிக்குக் கிளப்பிவிட்டுவிட்டுத் தான் அலுவலகம் செல்வார்.


சில சமயம் என் அம்மா அலுவலகக் கோபத்துடனோ, அலைச்சலால் உடல் சோர்வுடனோ வீடு வரும்போது அதை அறியாமல் நாங்கள் இருவரும் அவரைப் பல கேள்விகள் கேட்டுக் கோபப்படுத்தியது உண்டு. இன்று நிலைமை தலைகீழ்.

இப்போதெல்லாம், என் அம்மா வேலை ஓய்வில் வீட்டில் இருக்கிறார். நான் அலுவலகம் முடிந்து எப்போது வருவேன் என்று வாசல் பார்த்து அவர் அமர்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கும் போது என் சிறு வயது நாட்கள் நினைவு வருகின்றன. என்றேனும் வேலை முடியாமல் தாமதமாக வீட்டுக்கு வரும்போது அம்மாவுக்கும் இப்படித் தானே இருந்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது.

வாழ்க்கையில் பல பாடங்கள் மிகத் தாமதமாகத் தான் தெரிகின்றன. சில வருடங்களுக்கு முன் அம்மாவை அவ்வளவு கேள்வி கேட்டு, அதற்கு அவர் கோபமாக பதில் சொன்ன பொழுதுகளில் "அம்மாவுக்கு என் மேல பாசமே இல்லை" என்று தங்கையிடம் புலம்பியதை எண்ணும் போது இன்று வருத்தமாக இருக்கிறது.

இன்றைக்கு அன்னையர் தினமாம்; என் அம்மா மாதிரி வெளியில் வேலைக்கும் போய்க்கொண்டு, குழந்தைகளையும் சமுதாயப் பொறுப்புணர்வோடு வளர்க்கும் அனைத்து அன்னையருக்கும் என் அன்னையர் தின வாழ்த்துக்கள்..

அவர்களுக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருக்கும் தந்தையர்களுக்கும் இதே நாளில் வாழ்த்துக்கள்..

இதோட முடிச்சிக்கறேங்க.. இன்னிக்கி எங்க அம்மாவை வெளியில் கூட்டிப் போவதாகச் சொல்லி இருக்கேன்.. :)

55 comments:

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

வாழ்த்துக்களை பகிர்க..
//இன்னிக்கி எங்க அம்மாவை வெளியில் கூட்டிப் போவதாகச் சொல்லி இருக்கேன்.. :)//
இது விழாக்காலங்களில் மட்டுமல்லாது..
மற்ற ஓய்வு நாட்களிலும் தொடர்தல் அவசியம்.
மீண்டும் வாழ்த்துக்கள்.
:-)

முத்துகுமரன் said...

உங்கள் அன்னையருக்கும், அனைத்து அன்னையருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்...

நாள் வைத்து கொண்டாடக்கூடிய விசயமா தாயும் தாய்ப்பாசமும்...

தினமும் அன்னையர் தினமே.......

பரஞ்சோதி said...

பொன்ஸ்,

அம்மாவுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் சொல்லுங்க.

சில நேரங்களில் ஏன் அன்னையர் தினம், ஆசிரியர் தினம் என்று ஏன் விளம்பரம் செய்றாங்கன்னு நினைப்பேன், உண்மையில் இது போன்ற நாட்களிலாவது நாம் அவர்களை நினைத்துப் பார்க்க முடிகிறதே.

அன்னையின் மனம் மகிழ நாம் ஒன்றும் வாங்கி கொடுக்க வேண்டியதில்லை, கொஞ்ச நேரம் அன்னையுடன் மனம் விட்டு பேசி, அவர்கள் கையால் ஒருவேளை சாப்பிட்டாலே போதும், அதை விட மகிழ்ச்சியான விசயம் அவர்களுக்கு வேறு ஒன்றும் இருக்காது.

அன்னையின் அருமையை நான் தந்தையான பின்பு தான் முழுமையாக அறிந்தேன். பொன்ஸ் நீங்க எப்போ???

துளசி கோபால் said...

பொன்ஸ்,

இனி தினமும் அன்னையர் தினம்னு அம்மாகிட்டே சொல்லிருங்க.
புதுசா இப்பத்தான் மெகா சீரியல்லே சொன்னாங்க, இதை:-))))

manasu said...

ம்ம்....

அந்த ஒரே ஹால்ல ஒரே sofa செட் arrangement யும், டீப்பாய் ல பூத்தொட்டி யும் மாற்றி வச்சு வேற வேற வீடா காட்டுவாங்களே அந்த நாடகம் தானே....

நானும் பார்த்திருக்கிறேன் சுண்டல் எல்லாம் ரெடி பண்ணி வச்சுகிட்டு...

அப்பாவையும் கூட்டிட்டு போங்க...
பாவம்.நாம தந்தையர் தினமெல்லாம் கொண்டாடுறது வேற இல்ல.

கீதா சாம்பசிவம் said...

வாழ்த்துக்கள் பொன்ஸ்,, உங்கள் புரிந்து கொள்ளலுக்கும் நேர்மையான சுய அலசலுக்கும். நீங்கள் வாழ்க்கையில் ஒரு வெற்றிகரமான தாயாக மிளிர ஒரு தாயின் வாழ்த்துக்கள்.

Dharumi said...

எப்படி காலம் ஓடிடிச்சி பாத்தீங்களா? நீங்கள் அம்மாவுக்காகக் காத்திருந்தது போக,இன்று அம்மா உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். விரைவில் உங்கள் மகள் அவள் அம்மாவுக்காகக் காத்திருப்பாளோ?

காலச்சக்கரம்...எவ்வளவு பொருத்தமான சொல்!

chithi said...

பொன்ஸ்,
பெற்றோர்கள் பிள்ளைகள் (குறிப்பாக பெண் பிள்ளைகள்) மேல் வைக்கும் அன்பு ஒன் வே என்று சொல்வார்கள். அதற்கு அவர்களை குற்றம் சொல்ல முடியாத படி அவசர உலகத்தில் வாழ்கிறார்கள் என்றும் தங்களுக்கு தாங்களே சமாதானமும் செய்து கொள்கிறார்கள்.
இப்படிப் பட்ட அவசர உலகத்திலும் அன்னையை மரியாதை செய்யும் விதமாய் என்ன அருமையான பதிவு!!!!
வாழ்த்துக்கள் பொன்ஸ்!!!
அருமையான மகளைப் பெற்ற உங்கள் அன்னைக்கும் என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்....

Kuppusamy Chellamuthu said...

நல்ல பதிவு!!

-குப்புசாமி செல்லமுத்து

வந்தியத்தேவன் said...

எனக்கு அழுகாச்சியா வருது :((((

இளவஞ்சி said...

//அன்னையருக்கும் என் அன்னையர் தின வாழ்த்துக்கள்..

அவர்களுக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருக்கும் தந்தையர்களுக்கும் இதே நாளில் வாழ்த்துக்கள்.. //

அடடா! கலக்கிட்டீங்க! :))

நிலவு நண்பன் said...

//நாள் வைத்து கொண்டாடக்கூடிய விசயமா தாயும் தாய்ப்பாசமும்...

தினமும் அன்னையர் தினமே.......//


:)

:)

இலவசக்கொத்தனார் said...

ஒரு வாழ்த்தில் அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் ஐஸ் வெச்சாச்சு. நல்ல திறமைதான். வரும்படி அதிகம் இருக்கும். என்ன கிடைச்சதுன்னு ஒரு பதிவு போடுங்க.

நன்மனம் said...

பொன்ஸ்,

வாழ்த்துக்களை பகிர்க.

இன்னிக்கு நிச்சயம் அம்மா சொன்னதை "எல்லாம்" கேட்டிருப்பீங்கனு நினைக்கிறேன்:-))

மா சிவகுமார் said...

எங்கள் அம்மாவும் வேலைக்குச் சென்று வருவாங்க. மற்ற அம்மாக்கள் மாதிரி நம்ம அம்மாவும் வீட்டில் இருக்கக் கூடாதா, மாலை வேளைகளில் எரிந்து விழாமல் இருக்கக் கூடாதா என்று நீங்கள் சொன்ன உணர்வுகள் எல்லாம் மனதில் ஓடியிருக்கின்றன. நல்ல பதிவு அன்னையர் தினத்தில்.

வல்லிசிம்ஹன் said...

பொன்ஸ், எல்லோருடைய அம்மாக்களின் வாழ்த்துக்களும் உங்களுக்கு வருகிறது. இதுதான் வாழ்க்கை சக்கரம் ஓடுவதை சொல்கிறது. நிறைய பேருக்கு அம்மாவின் அன்புக்கரங்களுக்கு சேவை செய்யும் அதிட்டம் கிடைத்தால் அதுவே கொடுப்பினை தான்.நீங்கள் சொல்லும் நாடகம் எனக்கும் நினைவில் இருக்கிறது.உங்கள் அம்மாவுக்கு என் வனக்கங்கள்.

Ms.Congeniality said...

Pons,
Me too sailing on the same boat!!Beautiful post :-)

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்களுக்கு நன்றி பாலா,
//இது விழாக்காலங்களில் மட்டுமல்லாது.. மற்ற ஓய்வு நாட்களிலும் தொடர்தல் அவசியம்.//
எப்போவும் கூப்பிடுவது தான்.. ஆனா இந்த மாதிரி பண்டிகை நாட்களில் தான் மறுக்காமல் வருவாங்க.. என்ன செய்ய?!! :)

//நாள் வைத்து கொண்டாடக்கூடிய விசயமா தாயும் தாய்ப்பாசமும்...//
உண்மைதான் முத்துகுமரன்.. தினமும் அன்னையர் தினமே..ஆனால் இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளக் கிடைத்த நல்ல வாய்ப்பாகவே இன்று எழுதினேன். உங்கள் அன்னைக்கும் என் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும் :)

paarvai said...

உலகத்துயிர்களின் உன்னதத் தாய்மையை போற்றுகிறேன். போற்றுவோம்.
இங்கு; பிரான்சில் எதிர்வரும் 28-05- 2006; அன்னையர் தினம்.
யோகன்
பாரிஸ்

பொன்ஸ்~~Poorna said...

// சில நேரங்களில் ஏன் அன்னையர் தினம், ஆசிரியர் தினம் என்று ஏன் விளம்பரம் செய்றாங்கன்னு நினைப்பேன், உண்மையில் இது போன்ற நாட்களிலாவது நாம் அவர்களை நினைத்துப் பார்க்க முடிகிறதே. //
இன்றைய வேகமான நாட்களில் இவையெல்லாம் சற்று தேவைதான்.. நினைத்துப்பார்க்க, அன்பு செய்ய.. நாள்வைத்துக் கொண்டாடும் நிலைக்கு நான் வந்துவிட்டோம் என்பது உண்மைதான் :(

// அன்னையின் மனம் மகிழ நாம் ஒன்றும் வாங்கி கொடுக்க வேண்டியதில்லை, கொஞ்ச நேரம் அன்னையுடன் மனம் விட்டு பேசி, அவர்கள் கையால் ஒருவேளை சாப்பிட்டாலே போதும், அதை விட மகிழ்ச்சியான விசயம் அவர்களுக்கு வேறு ஒன்றும் இருக்காது.//
அந்த விசயத்தில் நான் கொடுத்து வைத்தவள்.. இப்போது சில நாட்களாக அம்மா கையால் சாப்படும், அவர்களுடன் கொஞ்ச நேர அளவலாவலும் நிச்சயம் உண்டு - அலுவல் காரணங்களும் இல்லாத சில நாட்கள் :)

// அன்னையின் அருமையை நான் தந்தையான பின்பு தான் முழுமையாக அறிந்தேன். பொன்ஸ் நீங்க எப்போ??? //
தெரியலீங்க பரஞ்சோதி.. :).

வெற்றி said...

பொன்ஸ்,
நல்ல பதிவு.

//என்னை இந்தக் கதை ரொம்பவும் பாதித்ததற்குக் காரணம், நானும் அப்போது அந்தச் சின்னப் பெண்ணின் நிலையில் இருந்ததால் தான்.. //

இன்று மேலைத்தேச நாடுகளில் வாழும் பல தமிழ்க்குழந்தைகளின் நிலைமையும் இது தான்.

பொன்ஸ்~~Poorna said...

// இனி தினமும் அன்னையர் தினம்னு அம்மாகிட்டே சொல்லிருங்க. புதுசா இப்பத்தான் மெகா சீரியல்லே சொன்னாங்க, இதை:-)))) //
நிச்சயமா சொல்றேங்கா, நீங்க சொன்னாலே போதுமே.. மெகா சீரியல்ல சொல்லி கேக்கணுமா என்ன? :)

//அந்த ஒரே ஹால்ல ஒரே sofa செட் arrangement யும், டீப்பாய் ல பூத்தொட்டி யும் மாற்றி வச்சு வேற வேற வீடா காட்டுவாங்களே அந்த நாடகம் தானே....//
அதே தான் மனசு..

//அப்பாவையும் கூட்டிட்டு போங்க...
பாவம்.நாம தந்தையர் தினமெல்லாம் கொண்டாடுறது வேற இல்ல//
அவர் இல்லாமலா? அவருக்கும் வாழ்த்துச் சொல்லியாச்சே :)

பொன்ஸ்~~Poorna said...

//வாழ்த்துக்கள் பொன்ஸ்,, உங்கள் புரிந்து கொள்ளலுக்கும் நேர்மையான சுய அலசலுக்கும். நீங்கள் வாழ்க்கையில் ஒரு வெற்றிகரமான தாயாக மிளிர ஒரு தாயின் வாழ்த்துக்கள். //
நன்றி கீதாக்கா, நீங்க இப்படிப் புகழும் போது, இன்னும் கொஞ்சம் நேர்மையா யோசிச்சி இருக்கலாமோன்னு தோணுது :), வெகு நாட்களுக்கு முன்னேயே :)..

//விரைவில் உங்கள் மகள் அவள் அம்மாவுக்காகக் காத்திருப்பாளோ?
காலச்சக்கரம்...எவ்வளவு பொருத்தமான சொல்! //
உண்மைதான் தருமி.. காலம் நிற்காம ஓடிகிட்டே இருக்கு.. அந்தக் காலத்துல மகா பாரதம் சீரியல்ல வருமே அது மாதிரி :)

பொன்ஸ்~~Poorna said...

//பெற்றோர்கள் பிள்ளைகள் (குறிப்பாக பெண் பிள்ளைகள்) மேல் வைக்கும் அன்பு ஒன் வே என்று சொல்வார்கள். //
சித்தி ஐயா, இது தப்போன்னு தோணுதுங்க.. எனக்குத் தெரிஞ்ச அளவில், பெண்பிள்ளைகள் தான் அம்மா அப்பாவுக்குத் திருப்பி அன்பு செய்வதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்று தோன்றுகிறது.. எதுக்குங்க பொண்ணு பையன்னு சொல்லிகிட்டு..எல்லாரும் அம்மா அப்பாவை மதித்து, புரிந்து நடந்தால் போதும் :).. வாழ்த்துக்களுக்கு நன்றி :) :)

நன்றி குப்புசாமி செல்லமுத்து :)

வந்தியத்தேவன், எதுக்குங்க அழுவறீங்க? இது ஒண்ணும் சோகக் கதை இல்லையே?!!

பொன்ஸ்~~Poorna said...

இளவஞ்சி, அந்த வாக்கியத்தை எழுதும் போது, உங்களை நினைத்துத் தான் எழுதினேன்.. கரெக்டா பிடிச்சிட்டீங்க.. இது மாதிரி அப்பாவுக்கும் நன்றி சொல்லும் பொண்ணுங்க இருக்காங்க, அதுனால, இப்படி பொங்கல் போட்டு புலம்ப வேண்டாம் :)

வருகைக்கு நன்றி நிலவு நண்பன் :)

கொத்ஸ், அன்பைப் பத்தின பதிவுல, என்ன கிடைச்சுதுன்னு கேக்கறீங்களே.. நான் தான் ஏதாச்சும் வாங்கித் தர்றேன்னு சொன்னேன், அவங்க வேண்டாம்னுட்டாங்க :)

பொன்ஸ்~~Poorna said...

நன்மனம்,
//இன்னிக்கு நிச்சயம் அம்மா சொன்னதை "எல்லாம்" கேட்டிருப்பீங்கனு நினைக்கிறேன்:-)) //
எங்க, நாம தான் என்னிக்குமே குட் கேர்ள் ஆச்சே.. எல்லா நாளும் அவங்க சொல்றதைக் கேட்கிறது தான் :) நமக்கு வசதியா இருக்கும் போது மட்டும் ;)

நன்றி சிவகுமார்.. உங்க அம்மாவுக்கும் என் வாழ்த்துக்களைச் சொல்லுங்க :)

வள்ளி, உங்களுக்காவது அந்த நாடகம் நினைவிருக்கே.. அதுக்கு முதல் நன்றிங்க.. அப்படியே வாழ்த்துகளுக்கும் பெரிய நன்றி. உங்க அம்மாவுக்கும் என் வாழ்த்துக்கள் :)

Thanks Ms. Congeniality, When I wrote this one, I was thinking about you too :) in my place :)

பொன்ஸ்~~Poorna said...

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி யோகன்

முதல் வருகைக்கு நன்றி வெற்றி, இந்த மாதிரி நாடகங்கள் அங்கே வருகின்றனவா? இன்றைய தினம், இந்தமாதிரி நல்ல கருத்துள்ள நாடகங்கள் இந்தியாவிலேயே காணவில்லை.. :(.. அங்கே இருக்கும் என்பது ஒரு பேராசை தான் :(

பத்மா அர்விந்த் said...

இதுபோல சில தினங்கள் வருவது முதிய்யொர் இல்லங்களிலோ அல்லது கிராமங்களிலோ இருக்கும் பெற்றோருக்கு இரு வடிகால். அதேபோல தினமும் ஒரே மாதிரி இருக்கும் குடும்பத்தினர் அனைவரும் பழைய விஷய்ங்களை நினக்கவும் மரியாதை செலுத்தவும் தான்.
தந்தையர் தினர் ஜூன் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை.

Sam said...

பொன்ஸ்
உங்கள் அம்மாவிற்கு என் வாழ்த்தையும் சொல்லுங்கள். நல்ல பதிவு.
சாம்

வெற்றி said...

அய்யோ!
பொன்ஸ்,
//இந்த மாதிரி நாடகங்கள் அங்கே வருகின்றனவா? இன்றைய தினம், இந்தமாதிரி நல்ல கருத்துள்ள நாடகங்கள் இந்தியாவிலேயே காணவில்லை.. :(.. அங்கே இருக்கும் என்பது ஒரு பேராசை தான் :( //

என்ன சொல்கிறீர்கள்? புரியவில்லையே?
நாடகமா? நான் எங்கே நாடகங்கள் பற்றிச் சொன்னேன்? நான் சொன்னது, மேற்குலக நாடுகளில் வாழும் பல தமிழ்க் குடும்பங்களில் நடக்கும் உண்மை நிலையை!

Udhayakumar said...

என் சித்தி பெண் என் அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்து சொன்ன போது நானும் சேர்ந்து வாழ்த்தினேன், அவ்வளவே ;-(

//நாள் வைத்து கொண்டாடக்கூடிய விசயமா தாயும் தாய்ப்பாசமும்...//

என் கருத்தும் இதுவே...

வந்தியத்தேவன் said...

//வந்தியத்தேவன், எதுக்குங்க அழுவறீங்க? இது ஒண்ணும் சோகக் கதை இல்லையே?!!//

அம்மாவைப் பார்த்து 2 வருஷமாச்சு, அதான் உங்க பதிவு படிச்சதும் பீலிங்கி :((.


சீக்கிரம் ஊருக்குப் போகனும்...

செல்வன் said...

பொன்ஸ் அக்கா,
அம்மாவை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் தினமும் தினமும் அன்னையர் தினம்தான்

Ramya Nageswaran said...

நல்ல இயல்பான நடையிலே எழுதியிருக்கீங்க பொன்ஸ்.

எங்க வீட்லே கூட்டு குடும்பமா இருந்த்தாலே அம்மாவுக்கு நிறைய வேலை இருக்கும். அதை புரிஞ்சுக்காம அம்மா சரியான டிஃபன் செய்யலைன்னு ("உப்புமா ஒரு டிஃபனா?") கோபப்பட்டிருக்கேன். கல்யாணம் ஆகி அமெரிக்காவுலே படிக்க போன பொழுது டின்னருக்கே உப்புமா கிடைச்சா போதும்ங்கிற காலம் எல்லாம் வந்தது. அப்போ தான் புரிஞ்சது அம்மாவோட அருமை (உப்புமாவோட அருமையும் தான்!).

பொன்ஸ்~~Poorna said...

//அதேபோல தினமும் ஒரே மாதிரி இருக்கும் குடும்பத்தினர் அனைவரும் பழைய விஷய்ங்களை நினக்கவும் மரியாதை செலுத்தவும் தான்.
//
உண்மை தான் தேன் துளி.. தந்தையர் தினம் பற்றித் தகவல் சொன்னதுக்கு நன்றி.. என்னைப் போல் ரொம்பப் பேருக்குத் தெரியாத சமாச்சாரம் :)

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சாம் :)

மன்னிச்சுக்குங்க வெற்றி, கொஞ்சம் குழம்பி விட்டேன் :) (வழக்கம் போல)

பொன்ஸ்~~Poorna said...

//நாள் வைத்து கொண்டாடக்கூடிய விசயமா தாயும் தாய்ப்பாசமும்...//
என் கருத்தும் இதுவே... //
உதயகுமார், இதுக்குத் தேன் துளி சரியான பதில் சொல்லி இருக்காங்க..

சீக்கிரம் ஊருக்குப் போய் அம்மாவைப் பாருங்க வந்தியத் தேவன் :)

செல்வன், நேசிபது மட்டுமில்லை, அதை வெளியில் சொல்வது/ காட்டுவதும் அவசியம் என்று எத்தனை பேருக்குப் புரிகிறது?!! அதைச் செய்வது தான் இந்தமாதிரி நாட்களின் நோக்கம்.. இந்த நோக்கம் எனக்குப் புரிஞ்சது நேற்றைக்குத் தான்.. இந்தப் பதிவை எங்க அம்மாவை விட்டு படிக்கச் சொன்னேன்.. அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.. என்னோட கண்ணோட்டத்திலிருந்து அவங்க இதுவரை பாத்திருக்காங்களான்னு தெரியாது..ஆனா, இதுவரை இல்லாம, நேத்திக்கி ராத்திரி நானும் அம்மாவும் வெகு நேரம் பல விஷயம் பத்தி பேச இந்தப் பதிவு ஒரு ஆரம்பமா இருந்தது:)

பொன்ஸ்~~Poorna said...

நன்றி ரம்யா..

// கல்யாணம் ஆகி அமெரிக்காவுலே படிக்க போன பொழுது டின்னருக்கே உப்புமா கிடைச்சா போதும்ங்கிற காலம் எல்லாம் வந்தது. அப்போ தான் புரிஞ்சது அம்மாவோட அருமை (உப்புமாவோட அருமையும் தான்!).
//
இது மாதிரி அநுபவமும் எனக்கு உண்டு.. உங்களுக்காவது, உப்புமா கிடைக்கலை.. நானே உப்புமா செய்யறேன்னு முயற்சி பண்ணி, அது கஞ்சி மாதிரி ஆகி.. நல்ல காமெடி.. கண்ல நீர்வழிய, அம்மாவை நினைச்சிகிட்டே அந்த 'உப்புமாவை' டம்பளர்ல விட்டு குடிச்சதெல்லாம் நடந்திருக்கு :)

குமரன் (Kumaran) said...

//அவர்களுக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருக்கும் தந்தையர்களுக்கும் இதே நாளில் வாழ்த்துக்கள்..
//

நன்றி பொன்ஸ். என் பொண்ணும் வருங்காலத்துல இப்படிச் சொல்லுவாள் என்று நம்புகிறேன். :-)

குமரன் (Kumaran) said...

எங்க அம்மா இப்போ இல்லை. அதனால என் பொண்ணோட அம்மாவுக்குத் தான் எல்லா மரியாதையும். (எல்லா நாட்களிலும் உண்டு. இந்த நாளில் கொஞ்சம் அதிகம். அவ்வளவு தான் :-) ) வழக்கம் போல் இந்த வருடமும் மதியம் வெளியே சாப்பாடு. பின்னர் எந்தக் கடைக்கு போகவேண்டுமானாலும் அழைத்துச் சென்று அவருக்கு என்னவெல்லாம் வேண்டுமோ அதனை மறுக்காமல் வாங்கிக் கொடுத்தேன். (அதென்ன வாங்கிக் கொடுக்கிறது? அவங்களும் சம்பாதிக்கிறாங்களே. அவங்களே வாங்கிக்க மாட்டாங்களான்னு கேக்காதீங்க. இன்னும் அவங்க இந்தியத் தாய்மாராகத் தான் இருக்காங்க.) இந்த வருடம் ஒரு கூடுதல் மகிழ்ச்சி. என்னவென்று புரியாமலேயே நான் சொல்லிக் கொடுத்தபடி என் மகள் அவங்க அம்மாகிட்ட ஒரு இருபது தடவையாவது 'ஹாப்பி மதர்ஸ் டே' சொல்லியிருப்பாள். ஒவ்வொரு முறையும் கேட்பதற்கு நன்றாக இருந்தது. :-) அப்புறம் அவளே கேட்டு அவங்க அம்மா சொல்லிக் கொடுத்த படி எனக்கும் 'ஹாப்பி ஃபாதர்ஸ் டே' சொல்லிக் கொண்டிருந்தாள். (சொல் ஒரு சொல்லின் பாதிப்பை மகளிடம் ஏற்படுத்தக் கொஞ்சம் நாள் செல்லவேண்டும்).

நாமக்கல் சிபி said...

இந்த நாளில் மட்டுமல்ல இனிவரும் எல்லா நாட்களிலும் அன்னையருக்கு தேவை அவர்களுடன் நீங்கள் செலவிடும் சில மணித்துளிகளே! அன்பான செவிமடுப்பும் அனுசரணையான வார்த்தைகளையும் விட அவர்களை மகிழ்விக்கக் கூடியது வேறேது? அவர்கள் தம் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பதும் அவைதானே!

வாழ்த்துக்கள்! இந்நாளில் உங்கள் அன்னைக்கும், எதிர்ககாலத்தில் உங்கள் பிள்ளையின் அன்னைக்கும்!

barath said...

நல்ல பதிவு,வாழ்த்துக்கள்

மஞ்சூர் ராசா said...

அன்னையர்தின வாழ்த்துக்கள் சொல்லும் இந்த நேரத்தில், கிராமங்களில் இருக்கும் அன்னையர்கள் தோட்டங்களுக்கு சென்று திரும்பி வரும் போது அவர்களுக்காக காத்திருக்கும் குழந்தைகளின் ஞாபகம் ஏனோ மனதின் ஓரத்தில்.
கூடவே இப்போது மேலுலகத்தில் இருக்கும் என் அன்னையும்.....
சில நாட்களில் தோட்டத்தில் தேயிலை பறிக்க சென்றிருக்கும் அம்மாவிற்காக கொண்டு செல்லும் பகல் உணவில் ஏற்கனவே நான் சாப்பிட்டிருந்தாலும், பாதிக்கு மேல் எனக்கே ஊட்டிவிடும் அந்த அன்பு கண்களில் நீர்துளிகளோடு

கவிதா|Kavitha said...

நல்ல பதிவு பொன்ஸ், எங்க வீட்டுல யாரு கொண்டாடினாங்கன்னு சந்தேகம் வந்தது..என் பெயர் சொல்லி பணம் வாங்கி என் மகன், அம்மான்னா எல்லாத்தையும் விட்டு கொடுக்கனும், அதனால ஐஸ் கீரீமை நானே சாப்பிடறம்மா ...ச்சாப்பிட்டுடான்..அதுமட்டுமல்ல.. நீ என்னைக்குமே.. உடம்பு முடியல முடியல ன்னு ரெஸ்டு எடுக்கற..அதனால் உனக்கு தினமும் அன்னையர் தினம் சொல்லி அன்னையர் தினத்த சிம்பிலா முடிச்சிட்டான். ம்ம்..என்னத்த சொல்ல அதற்கு மேல் பேசினால்..இப்படி ஒரு அன்னைக்கு பிறந்த தவ புதல்வன் ஆச்சே..உன்னை மாதிரியே நானும் இருப்பேன்னு..வம்புக்கு இழுப்பான்..

பொன்ஸ்~~Poorna said...

வருகைக்கு நன்றி குமரன், நிச்சயம் உங்க பெண்ணும் சொல்லுவாங்க.. உங்க அம்மாவுக்குச் செஞ்சா என்ன, வீட்டம்மாவுக்குச் செஞ்சா என்ன?!! தாய்க்குப் பின் தாரம் தானே:)

வாழ்த்துக்களுக்கு நன்றி சிபி.. நீங்க சொல்வது 100% உண்மை:)

நன்றி பரத்:)

பொன்ஸ்~~Poorna said...

முதல் வருகைக்கு முதற்கண் நன்றி மஞ்சூர் ராசா, ரெண்டு வாக்கியத்துல இப்படி நெகிழ வச்சிட்டீங்க.....

விடுங்க கவிதா.. இன்னும் கொஞ்சம் பெரியவன் ஆனால், என்னை மாதிரி உங்க மகனும் அன்பு அன்னையர் தினம்னு ஒரேடியா உருகுவாரு பாருங்க.. :) அணில் குட்டியின் அன்னையர் தினம் எப்படி?

தேவ் | Dev said...

//என்னை இந்தக் கதை ரொம்பவும் பாதித்ததற்குக் காரணம், நானும் அப்போது அந்தச் சின்னப் பெண்ணின் நிலையில் இருந்ததால் தான்.. //

அப்போப் புரியல்ல இப்போ புரியுது:)))

வவ்வால் said...

வணக்கம் பொன் ஸ்!
நல்ல ஒரு உணர்வு பூர்வமான பதிவு.கால ஓட்டத்தில் எல்லாமே மாறி விடும் நேற்று நீ இன்று நான்! தான்.தொலைக்காட்சிக்கு இப்படி ஒரு அருமையான பயண் இருக்கும் போது எவன் சொன்னான் அதை இடியட் பொட்டி என்று!(கலைஞர் இலவச தொ.கா பெட்டி தருவதற்கு நல்ல காரணம் மாட்டி விட்டதே!)

Kuppusamy Chellamuthu said...

எந்தக் காலத்திலும் எவருக்கும் இதம் தருவது தாய்ப் பாசம் தான். அனைவரும் சொன்னது போல, குறிப்பிட்ட தினத்தில் மட்டும் இல்லாது ஆயுள் முழுதும் போற்றப் பட வேண்டியவர்கள் அன்னையர்.
-குப்புசாமி செல்லமுத்து

Syam said...

poons, indha post padicha appuram enaku innondru gnabagam vandhathu....8.40 samachar podara varaikum hindi la enna ennavo poduvaan atha yellam parthitu samachar vandha udaney makkal elundu poga aarambichuduvaanga...ennamo ithu varaikum vandha hindi nigalchikal ellam purinja maathiriyum ini vara samaachaar puriyaatha maathiriyum...
anyways ungal post migavum nandraga irundhathu came thru Ms.Congeniality's blog...

....

தி. ரா. ச.(T.R.C.) said...

தாயன்பும் தந்தை பாசத்தையும் அருமையையும் நன்கு உணர்தவன் நாந்தான். இருவரையும் இளம் வயதில் இழந்தவன்.தாயில்லாததால் சாப்பாட்டிற்கும்,தந்தையில்லாததால் கல்விக்கும் பட்ட கஷ்டம் அம்மம்மா, அப்பப்பா. என்னைபொருத்தவரை தினமும் அன்னையர் தினம்தான். தி.ரா.ச

கைப்புள்ள said...

நல்ல படியா போய் எறங்கியாச்சா? பிரயாணம் எல்லாம் சவுகரியமா இருந்துச்சா?

கீதா சாம்பசிவம் said...

"புத்தர்" பார்க்கப் போயிருக்கும் பொன்ஸே, பிறந்த நாள்வாழ்த்துக்களுக்கு நன்றி.
அது சரி, என்ன திடீர்னு சங்கப் பொறுப்புல இருந்து ஜகா வாங்கியிருக்கீங்க. நிஜமான ஆஃபீஸ் வேலை வந்துடுச்சா?

பொன்ஸ்~~Poorna said...

தேவ், உங்களுக்கு என்ன புரியுது? எனக்குப் புரியலையே :)

//அருமையான பயண் இருக்கும் போது எவன் சொன்னான் அதை இடியட் பொட்டி என்று!(//
:)) நன்றி வவ்வால். மீண்டும் பயன் பயண் ஆகி விட்டது :)

தி.ரா.ச, சியாம் மற்றும் குப்புசாமி, படித்துப் பின்னூட்டம் பதிந்ததற்கு, மிக்க நன்றி :)

பொன்ஸ்~~Poorna said...

கைப்பு அண்ணா, கீதாக்கா, உங்களுக்கான பதில்கள் அடுத்த பதிவில், ஏற்கனவே பார்த்திருப்பீர்கள் :)

aadhi said...

அடடா.. எப்படி இந்த பதிவை பார்க்கவில்லை:-(((.நானும் உங்களை மாதிரி வேலை பார்க்கும் அம்மாவினைப் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறேன்.குறை சொல்லியிருக்கிறேன்.எப்போ என்க்கு மகள் பிறந்து வேலை முடிந்து வரும் போது தெரிகிறது.ம்ம்ம்ம்ம்ம்..pay back time...!!!
..aadhi