தொடர்ந்து அழைத்த தொலைபேசியின் குரலில் வேறு வழியின்றி விழித்துக் கொண்டேன்.. இருட்டில் ஒளிரும் செல்பேசித் திரையில் மணி பன்னிரண்டு பதினைந்து என்று காட்டியது. இந்த நேரத்திற்குக் கூப்பிடுவது யாராய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டே ஒலிவாங்கியை எடுத்தேன்.
"சுஜா!!! சுஜா!! நான் சுரேஷ் பேசறேன்.. கொஞ்சம் கதவைத் திற.." பதற்றத்தோடு பேசிய சுரேஷின் குரல் என் தூக்கத்தை முற்றிலுமாகத் தெளிவித்தது.
"என்னாச்சு சுரேஷ்? எங்க இருக்க? மணி என்ன தெரியுமா?"
"இங்க தான் உன் வீட்டு வாசல்ல தான் இருக்கேன்.. மணி பன்னண்டு.. அதானே.. தெரியும் சுஜா.. சீக்கிரம் கதவத் திறவேன்!! "
இதற்கு மேல் என்ன கேட்பது?.. மிக்க அவசரம் போலிருக்கு என்று எண்ணிக் கொண்டே கதவைத் திறக்கப் போனேன்..அருகில் படுத்திருந்த கமலா அரைத் தூக்கத்தில் கேட்டாள்,
"யாரு?"
"சுரேஷ்!!!.. நீ தூங்கு, நான் பார்க்கிறேன்!!.. என்னன்னு தெரியலை.. இந்த நேரத்தில் வந்திருக்கான்"
கண்களைத் தடவிக் கொண்டே எழுந்திருக்க முயன்று பின் தொடர்ந்து தூங்க ஆரம்பித்தாள் கமலா.. பாவம். போன வாரம் முழுவதும் அவளுக்கு இரவு பகல் வேலை..
கதவைத் திறந்தேன்; சுரேஷ் வேர்வை வழிய நின்றிருந்தான். வெளியில் பால்கனியிலிருந்து தெரியும் கும்மிருட்டை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான். இத்தனை பரபரப்பிலும் கையிலிருந்த துண்டு சிகரெட் கீழே விழாமல் இரண்டு மாடியேறி எப்படி வந்தான் என்று ஒரு நிமிடம் வியந்தேன்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். என் கண் போகும் திக்கைப் பார்த்துவிட்டு சிகரெட்டை அணைத்து கீழே போட்டு மிதித்தான்.
"அப்படித்தான்.. நல்லா கோலத்துல போட்டு மிதி!!! உருப்படும்!!!" என்றேன்.
கீழே குனிந்து பொறுக்கி பால்கனி வழியே வெளியே எறிந்தான்."தெருவுல யார் மேலயாவது படப் போகுது" என்று நான் சொல்லுமுன் அவசர அவசரமாக "உள்ள போய் பேசலாமா" என்று கேட்டான்.
இந்த நிலைமையில் உள்ள ஒருவனை இன்னும் கொடுமைப்படுத்தக் கூடாது என்று நினைத்து கதவை இன்னும் அகலமாகத் திறந்தேன். நேரே வந்தவன் கீழே தரையில் டீவிக்கு முன்பாக வழக்கமாக அமரும் இடத்தில் வந்து உட்கார்ந்தான்.
"என்னாச்சு? ஏன் இத்தனை பதற்றம்? இந்த நேரத்துக்கு எதுக்கு வந்த?" என்றேன்
"ஒண்ணும் இல்லை.. சிவா ஊரில் இல்லை.."
"அது தான் எனக்குத் தெரியுமே.. அதுக்கும் நீ இப்போ இங்க வந்திருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?"
"நீ... நீ சிரிக்கக் கூடாது.. " தயங்கித் தயங்கிச் சொன்னான்.
"சரி சிரிக்கலை.. சொல்லு.. என்ன விஷயம்?"
"ராமைப் பார்த்தேன்.. என் ரூமில்.. "
"என்னது? ராமா? என்ன உளர்ற?"
"ஆமாம்.. ராம் தான்.. ராமே தான்.. இன்னிக்கி டிசம்பர் 12. ராமோட பிறந்த நாள்."
"தெரியும்.. போன வருடம் நம்ம எல்லாம் சேர்ந்து தானே வெளில போய் சாப்பிட்டோம்"
"ஆமாம்.. அதுக்கப்புறம்.. ரூம்ல நான், ராம், சிவா மூணு பேரும் விடிய விடிய பேசிகிட்டு இருந்தோம்"
"எது? நீங்க, மூணு பேரு? சும்மா, பேசிகிட்டு இருந்தீங்க?!! அதான் வைன் சாப்ல ஏதோ வாங்கிகிட்டு வந்தீங்களே.. நாயுடு சொன்னாரு.."
"சரி.. ஏதோ ஒண்ணு.. உனக்குத் தெரியாம ஒண்ணும் பண்ணமுடியாதா இந்த ப்ளாட்ல?!!"
"சரி, மேல சொல்லு.. அதுக்கும் இன்னிக்கி நீ இப்படி ஓடி வர்றதுக்கும் என்ன சம்பந்தம்?"
"இன்னிக்கு ஒருவருசம் ஆச்சு.. ராம் இன்னிக்கு இல்லை.. "
"ஆமாம்.." அந்த கறுப்பு வெள்ளியை எதற்கு நினைவுப் படுத்துகிறான் இப்போது?!!!"ஆனா, ராம் ரூமுக்கு வந்திருக்கான்.."
"டேய் சுரேஷ், என்ன உளர்ற? ஏதாவது பார்ட்டிக்குப் போய் நல்லா 'சாப்டுட்டு' வந்திருக்கியா? ராமை எப்படிப் பார்க்க முடியும்?"
"நான் ராமைப் பார்த்தேன்.. வழக்கமா நாங்க நின்னு தம்மடிக்கிற பால்கனியில் என் பக்கத்திலயே வந்து 'என்னடா.. என்னை மறந்துட்டு இங்க வந்துட்ட'ன்னு கேட்டுகிட்டு..."
இதற்குள் கமலா எழுந்து வந்து விட்டாள்.. "என்னாச்சு?" என்றாள் வெளிச்சத்திற்குப் பழகாமல் கூசும் கண்ணைக் கசக்கிக் கொண்டே.
"ஒண்ணும் இல்லை.. இவன் சொல்றான், ராமைப் பார்த்தானாம்!!"
"ராமையா? என்னது?" கமலாவின் தூக்கம் மொத்தமாகக் கலைந்தது, அந்த ஒரு வார்த்தையில். "நிஜமாவே பார்த்தியா சுரேஷ்?" என்றாள், பயந்த குரலில்.
ஏதேது, இதைக் கேட்டதற்கே இவள் ஜுரத்தில் விழுந்துவிடப் போகிறாளே என்று தோன்றியது..
"சுரேஷ், நீ ஏதோ விளையாடறயோன்னு தோணுது.. என்ன பிரச்சனை உனக்கு?"
"சுஜா, இந்த ராத்திரியில் உன்கிட்ட விளையாடி எனக்கு என்ன ஆகப் போகுது?!! நான் நிஜமாவே ராமைப் பார்த்தேன்.. என்கிட்ட பேசினான்.. திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்துட்டேன்.. "
"சரி.. நீ ராமைப் பார்த்தேன்னே நம்பறேன்.. ஏதோ இன்னிக்கு ராமோட பிறந்த நாள், போன வருசம் பேசினது எல்லாத்தையும் நினைச்சிகிட்டு பால்கனியில் நின்னுகிட்டு இருந்திருக்கே.. அப்படி ஒரு பீலிங்.. இதுக்கெல்லாம் பயப்படலாமா? இவ்வளவு பெரிய பையனா இருக்கே.. என்னை விட நீ பெரியவன்.. நீ எல்லாம் கூட இருக்கன்ற தைரியத்துல தானே எங்க வீட்ல என்னை இவ்ளோ தூரத்தில் வேலை பார்க்க விட்டிருக்காங்க.. நீயே பயந்தா நியாயமா? "
"இப்போ என்ன பண்ணனும்னு சொல்ற? என் நிலைமைல நீ இருந்தா தெரியும்.. இப்படி எல்லாம் உபதேசம் பண்ணிகிட்டு இருக்க மாட்ட!!! டேய் ராம்.. இங்க கொஞ்சம் வந்து இந்த சுஜா முன்னாடி தரிசனம் குடுடா"
கீழே இருந்த அவனது அறையைப் பார்த்து அவன் சொல்லவும், கமலா பாய்ந்து வந்து சொன்னாள்:"ஏய். அதெல்லாம் வேண்டாம்.. அதான் சரின்னு வந்துடப் போறான்!!!"
இவர்கள் இரண்டு பேரையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று பார்த்த நான் கொஞ்சம் யோசித்தேன். "இங்க பாரு நீ ராமைப் பார்த்த.. சரி.. இப்போ நான் என்ன செய்யணும்? இங்க எதுக்கு வந்த?" என்று கேட்டேன் சுரேஷிடம்.
"என்னால என் ரூமுக்குத் தனியாப் போகமுடியாது.. தனியா இருக்கவும் முடியாது.. முடிஞ்சா நீயும் என்கூட வா.. இல்லைன்னா, என்னை இங்கயே விடு.. இப்படியே ஒரு ஓரமா படுத்துக்கிடறேன்.. என்ன சொல்ற?"
"நீ சொல்ல மாட்ட?!! இங்க ரெண்டு பொண்ணுங்க மட்டும் தான் தனியா இருக்கோம்.. இதுவும் பாச்சிலர்ஸ் வீடு மாதிரி தான்.. உன்னையெல்லாம் உள்ள விட்டா நல்லாத் தான் இருக்குமா? இல்லை அது நியாயமா? யோசிச்சி பாரு.."
"ஆனா சுஜா, ராம் வந்திருக்கான்னா, இவன் எப்படி அங்க போக முடியும்?"
ராம் என்னவோ ஒரு ரோந்துப் போலீஸ் மாதிரியும் இப்படி இரவு உலா வருவது அவனுக்கு முழு நேர வேலை மாதிரியும் கமலா சொன்ன போது எனக்கு இன்னும் ஆத்திரம் வந்தது.
"சரி.. அப்போ உன் ரூம்ல உன் கூட இருக்க ஒரு ஆள் இருந்தா நீ ரூமுக்குப் போய்டுவியா?" என்றேன் சுரேஷைப் பார்த்து.
"சரி" என்று தயங்கித் தயங்கித் தலையாட்டினான் யோசனையோடு. திரும்பி கமலாவை நான் பார்த்த ஒரு பார்வைக்கே அவள் லேசாக நடுங்கியபடி, "நான் போக மாட்டேன்பா.. ராம் கடைசியா ட்ரீட் கேட்ட போது கொடுக்காம ஏமாத்திட்டேன்" என்றாள்.
தலையில் அடித்துக் கொண்டு சொன்னேன் "அடச் சீ.. உன்னை யாரு இப்போ போகச் சொன்னாங்க.. நான் போய் நாயுடுவை அழைச்சிகிட்டு வர்றேன்.. அவரு நிச்சயம் உதவுவாரு.. அதான் நீயும் வர்றியான்னு"
இருவருமே என்னோடு கீழிறங்கிச் சென்று நாயுடுவைப் பார்த்துப் பேச தயாராக இல்லை.
"நீ போய்ட்டுவா.. நாங்க ரெண்டு பேரும் இங்க உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கோம்.." என்றான் சுரேஷ்.
"சரி.. ஆனா, ராம் பத்தி இனி பேசக் கூடாது.. டீவி வேணா போட்டு பாருங்க" என்று சொல்லிவிட்டு செருப்பை மாட்டிக் கொண்டேன்.
(ராம், அந்த கறுப்பு வெள்ளி பற்றித் தெரிந்துகொள்ள....)
12 comments:
விறுவிறுப்பு சாஸ்தியா மயிர்க்கூச்செரிகிறது ஆற்றலரசி. மீதி கதையை சீக்கிரம் போடுங்க.
என்னம்மா பொன்ஸ்,
தமிழ்மணத்துலேற் இதூ 'ஆவிகள்' வாரமா? ஆஆஆஆஆஆஆஆஆ
சரி, சீக்கிரம் 'பாக்கி'யைப் போடுங்க.
இதையெல்லாம் படித்தால், பேசாம
நீங்க அமெரிக்காவிலேயே தங்கிடறது நல்லதுன்னு நினைக்கிறேன்!
கற்பனை சும்மா பெருக்கெடுத்து ஓடுது.....
தனியா இருக்கையிலே!
'தனியே தன்னந்தனியே' பாடலும், கருத்தும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை!
ஒரு சில 'க்ளிட்சஸ்'[Glitches] இருக்கிறது!
முழுக்கதையும் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்!
நடை நன்றாக இருக்கிறது!
என்ன ஆச்சு? சொந்த கதை சோகக் கதையானதுனால க்ரைம் நாவலா?
நல்லாத்தான் இருக்கு. நடத்துங்க.
என்னங்க பேய்கதை எல்லாம் போட ஆரம்பிச்சுடீங்க?சினிமால வர்ர மாதிரி ராம் உயிரோட இருக்கானோ என்னவோ?
ம்ம்.. அடுத்த பகுதி எப்போ?
நல்லா எழுதுறீங்க பொன்ஸ்.
சுவாரஸ்யமா இருக்கு பொன்ஸ். நிஜமாகவே இதை நான் எதிர்பார்க்கவில்லை. You execeeded my expectations.
ரமணி, அந்நியனுக்கே விறுவிறுப்பா?? :)
துளசிக்கா, வேற யாரு ஆவி பத்தி எழுதுறாங்க இப்போ? ச்சும்மா தெரிஞ்சிக்கத் தான்...
சரிதான் எஸ்கே.. ஏதாவது செய்யணுமே.. :)
கொத்ஸ், இந்த க்ரைம் நாவல் உங்கள் விருப்பம். ஒரு மாசத்துக்கு முந்திக்ரைம் நாவல் கேட்டிங்க இல்ல?
செல்வன் உங்களுக்குப் பதில் அடுத்தப் பதிவில்..
மதி, ரெடியாய்டுச்சு.. இன்னும் கொஞ்சம் பேர் இந்தப் பதிவைப் பார்த்தபின் போட்டுடறேன்..
அடுத்த பார்ட்டும் போட்டுட்டேங்க.. எனக்கு சஸ்பென்ஸ் தாங்கலை.. அதான்...
குப்புசாமி, அடுத்த பார்ட் படிச்சிட்டு சென்செக்ஸ் மாதிரி டக்குனு இறங்கிடப் போகுதுன்னு நினைக்கிறேன் :)
யக்காவ்.. ரொம்ப பிகிலேத்தரீங்க.. சீக்கிரம் அடுத்த பாகத்தை போட்ருங்க..
நடை விறுவிறுப்பு சஸ்பென்ஸ் எல்லாமே சூப்பர்
அட உங சொந்த கதையா? கற்பனையா? நல்லா இருக்கே!
Post a Comment