Tuesday, May 30, 2006

இரவு மணி பன்னிரண்டு - II

<< சுரேஷ், சுஜா பற்றி அறிய இங்கே.. >>

ராம் ஆறு மாதங்களுக்கு முன் எங்களுடன் வேலை செய்தான்; ஆறு மாதங்கள் மட்டுமே செய்தான். ரொம்ப நல்லவன். கொஞ்சம் எங்கள் அனைவரையும் விட வயதில் பெரியவன். ஆனால் அந்த மாதிரி வித்தியாசம் எதுவும் பார்க்க மாட்டான். நன்றாக பேசுவான். பயந்த சுபாவம். இந்தப் பசங்களுடன் ஒன்றாகப் பழகுவான். நாலு வருடம் சீனியர் என்ற எண்ணமே தோன்றாத வண்ணம் இருக்கும் அவனது செயல்பாடுகள்.

அத்தனை கலந்து பழகியவன் மனதில் பெரிய ரணம் ஏதோ இருந்திருக்கிறது, எங்களுக்குத் தெரியாமலே போய்விட்டது.

ஆறு மாதத்திற்கு முன்னால் ஒரு வெள்ளிக் கிழமை; சிவாவும் கமலாவும் ஊருக்குப் போயிருந்த அன்று, சுரேஷுக்கும் இரவு வேலை இருந்த அன்று எந்த காரணமும் எழுதி வைக்காமல் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்து போனான் ராம். அன்று இரவும், பன்னிரண்டு மணிக்கு சுரேஷ் இதே போல் தொலைபேசியில் அழைத்தது, இருவருமாகச் சென்று நாயுடு உதவியுடன் கதவை உடைத்துத் திறந்தது, கண்ணெதிரில் காணும் முதல் இறப்பாதலால் பயந்து போய், கொஞ்சமே கொஞ்சம் தைரியத்தோடு முன்வந்து அவன் அம்மாவுக்குத் தெரிவித்தது... அது ஒரு கறுப்பு வெள்ளி!!!

யார் யாரோ வந்து எப்படி எப்படியோ கேட்டுப் பார்த்தார்கள். 'ராமுக்குத் தற்கொலை செய்யும் அளவுக்கு என்ன காரணம் இருந்தது?' என்று. எங்கள் நால்வருக்குமே தெரியவில்லை. கொஞ்ச நாளாக அவன் பேசியது, அவனுக்கு கடைசியாக வந்த மின்னஞ்சல், தொலைபேசி அழைப்பு, அவன் எழுதி வைத்திருந்த கவிதைப் புத்தகங்கள் எல்லாம் தேடிப் பார்த்து விட்டு சோர்ந்து விட்டு விட்டோம்.

"அதான் போய்ச் சேர்ந்துட்டானே.. என்ன காரணம் இருந்தால் என்ன?" என்ற எண்ணம் வருவதற்குள் மூன்று மாதம் ஓடிவிட்டது!!

சிவாவும் சுரேஷும் வீடு மாற்றிக் கொள்கிறோம் என்று சொல்லி இரண்டாம் மாடியிலிருந்து முதல் மாடிக்கு மாறிப் போனார்கள். அதன்பின் இன்று தான் சுரேஷ் தன்னந்தனியாக இருந்திருக்கிறான். அதனால் தான் பயந்து விட்டான் போலும்.

கொஞ்சம் கொஞ்சமாகத் தனியாக இருக்க நேரிடும் போதெல்லாம் சுரேஷுக்கு மட்டும் இந்த தோற்றம் ஏற்படுவது தொடர ஆரம்பித்தது. எப்போது பார்த்தாலும் "ராம் வந்தான், சிகரெட் கேட்டான்" என்றே சொல்லிக் கொண்டிருந்தான்.

சரியாக பன்னிரண்டு மணியிலிருந்து இரண்டு மணி வரை தான் ராம் வருவான் -கனவோ நினைவோ, ஏதோ ஒன்று. அப்புறம் சுரேஷுக்குப் பயம் இருக்காது.

"அதென்னடா பன்னிரண்டிலிருந்து ரெண்டு? என்ன ஷிப்ட் அது?" என்று கிண்டலடித்துக் கொண்டே இருப்போம்.

ஒரு நாள் யாரும் இல்லாத ஒரு பன்னிரண்டு மணிக்கு என்னை மறுபடி எழுப்பி விட்டு தூக்கத்தைக் கலைத்த போது சுரேஷ் என்னிடம் அந்த ரகசியத்தைச் சொன்னான். ஏன் அவனுக்கு மட்டும் ராமிடம் இத்தனை பயம்?

"உனக்குத் தெரியாது சுஜா, ராம் இறந்ததுக்கு நீயும் நானும் தான் காரணம்.."

"டேய் என்னடா உளர்ற?"

"ராம் உன்னை விரும்பினான்.. அவன் எழுதி இருந்த கவிதை எல்லாம் உன்னைப் பத்தித் தான்.."

"போதும்.. உளறாத.. அப்படி ஏதாச்சும் இருந்தா என்கிட்ட வந்து சொல்லி இருக்க மாட்டானா?"

"இல்லை.. நீயும் நானும் பழகறதை அவன் வேற மாதிரி எடுத்துகிட்டான்.. அன்னிக்குக் கூட, அந்த வெள்ளிக்கிழமை, அவன் இறப்பதற்கு முன்னாடி வாரம், நீயும் நானும் சாப்பிடப் போகும் போது அவன் ஒரு மாதிரி பார்த்தான் நினைவிருக்கா?"

"என்னடா பார்த்தான்? ஒண்ணும் சொல்லலியே!! நீ அவனோட சாப்பிட வர்றேன்னு சொல்லிட்டு என்னைப் பார்த்ததும் அவனை விட்டுட்டு வந்திட்ட!! அதான்"

"இல்லை.. வியாழக் கிழமை என்கிட்ட கிட்டத் தட்ட சொல்லிட்டான்."

"என்ன சொன்னான்? "

"ஏதோ பிரச்சனைன்னு சொன்னான்.. தனக்குன்னு யாருமே இல்லைங்கிறது அவனோட எண்ணம்.. அவனுக்கு யாரைப் பிடிச்சாலும் அவங்களுக்கு அவனைப் பிடிக்காம போய்டுதாம்"

"சரி தான்.. இதெல்லாம் விடு, என்னைப் பத்தி என்ன சொன்னான்?"

"சுஜான்னு பேர் சொல்லி ஒண்ணும் சொல்லலை.. "

"உன்னை ஏதாவது சொன்னானா?"

"இல்லை.."

"அப்புறம் என்னடா?"

"பாதி சொல்லிகிட்டு வந்தான்.. நாளைக்குப் பேசலாம்னு சொன்னான்.. அவனைச் சாப்பிட கூட்டிகிட்டு போயிருந்தா, அன்னிக்கு அவனோட இன்னும் கொஞ்சம் நேரம் செலவு செஞ்சிருந்தா, அவனுக்கு தற்கொலை மாதிரியான எண்ணம் தோன்றியே இருக்காது.. எல்லாத்துக்கும் நான் தான் காரணம்!!" சுரேஷ் அழ ஆரம்பித்துவிட்டான்.

"சுரேஷ், அழாதடா.. என்னத்துக்கு இப்படி அழற?"

"இல்ல சுஜா.. நானும் நீயும் சேர்ந்து ஒரு உயிர் போகக் காரணமாய்ட்டோம்!!"

"டேய், நீன்னு வேணா சொல்லிக்க. என்னை ஏண்டா இழுக்கிற?"

ஆறுதல் சொல்லப் போகிறேன் என்று நினைத்திருக்கவேண்டும். இந்த மாதிரி நான் சொன்னவுடன், சுரேஷ் தலை நிமிர்த்திப் பார்த்தான்.

"ஏய், நான் என்ன விளையாட்டுக்குச் சொல்றேன்னு நினைக்கிறியா?"

"இங்க பாரு சுரேஷ், உனக்கும் எனக்கும் இடையில் எந்த உறவும் இல்லைன்னு ராமுக்குத் தெரியும்.. இல்லைன்னா நம்ம கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்.. என்னைத் தானே விரும்பினான், என்கிட்ட கேட்டிருக்கலாம் இல்லை? சரி, அதை விடு.. இப்போ உனக்கு இதுல என்ன பங்கு இருக்குன்னு நினைக்கிற? யார்கிட்டயும் ஒரு வார்த்தை கூட சொல்லாம இறந்து போகும் அளவுக்கு முடிவை எடுக்கிறவங்களை என்ன செய்ய முடியும்? "

"இல்ல சுஜா.. அன்னிக்கு நான் அவன்கிட்ட பேசி இருந்தா எல்லாம் சரியாப் போயிருக்கும்.. அவன் அதைத் தான் எதிர்பார்த்தான்."

"சரி சுரேஷ்.. உன் புலம்பலை உன்னோட வச்சிக்கோ.. இதுல என் பெயரை இழுத்து விடாத.. நீயாச்சு ராமாச்சு.. இந்த விளையாட்டுக்கு நான் வரலை"

"காட் ப்ராமிஸ் சுஜா, நான் என்ன உன்னை ஏமாத்தவா சொல்லிகிட்டு இருக்கேன்?!!"

அத்துடன் அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளிவைத்தேன். அப்புறமும் அவன் குற்ற உணர்ச்சியைப் போக்க நிறைய முயன்றேன். ஒன்றும் நடக்கவில்லை. பன்னிரண்டு மணிக்குத் தனியாக இருந்தால் மட்டும் தான் ராம் இவனைப் பார்க்க வருகிறான். ஒன்றும் செய்ய முடியவில்லை.

மன நல மருத்துவர், லோக்கல் கோயில் பூசாரி எல்லாரையும் பார்த்துவிட்டாகி விட்டது. "தனியா விடாதீங்க!" என்று சுலபமாக முடித்துக் கொண்டார் மருத்துவர்.

என்னிடம் உண்மையைச் சொன்ன ஒருமாதத்தில் ஊர் மாற்றிக் கொண்டு அம்மா அப்பாவுடன் போய்விட்டான்.

* * * * *

ஆறு வருடங்கள் இருக்கும் இது நடந்து. திருமணம் முடிந்து அமெரிக்காவில் வேலை தேடிக் கொண்டிருந்த போது திடீரென்று அம்மாவிடமிருந்து சுரேஷின் தொலைபேசி எண் கிடைத்தது. "இங்கு தான் இருக்கிறான்.. ஒருவார்த்தை பேசு" என்னும் அன்புக் கட்டளையுடன்.

"ஏய் சுஜா!! என்ன பண்ற? எப்படி இருக்க?"

"நல்லா இருக்கேன் சுரேஷ். நீ எப்படி இருக்க?"

"சூப்பரா இருக்கேன்.. நீ இந்த ஊர்ல தான் இருக்கன்னு அம்மா சொன்னாங்க.. நேர்ல பார்ப்போமா? எங்க இருக்கன்னு சொல்லு.. நானே வர்றேன்"

சொன்னேன்; இரவு உணவுக்கு வந்தான். என் கணவரிடம் ஒரு அரை மணி நேரம் தொழில் பற்றியும் வாழ்க்கை முறை பற்றியும் பேசிவிட்டு, என்னிடமும் நீண்ட நேரம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான்.

ஒருவழியாக எல்லாம் முடிந்து சாப்பிட்டு, பேசி முடித்து கிளம்பும் போது மணி பதினொன்று நாற்பது. இன்னும் பல மைல் தொலைவு போகவேண்டும். குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும் என்னும்போது தான் எனக்கு ராம் பற்றிய இவனின் பயம் நினைவு வந்தது. இப்போது கேட்டு மறந்து போனவனை நினைவுப் படுத்துவானேன் என்று விட்டு விட்டேன்.

மறு நாள் போன் செய்தேன். "சுரேஷ், பத்திரமா போய்ச் சேர்ந்தியா?"

"இதைக் கேட்கவா போன் பண்ணின?!! நல்லா வந்து சேர்ந்தேன்.. இங்க எல்லாம் பொதுவா வண்டி ஓட்டறது தானே!!"

"இல்லை, நீ கிளம்பும் போதே பன்னிரண்டு கிட்ட ஆய்டுச்சு.. அதான் உன்னோட பன்னிரண்டு மணி ராம் வந்தான்னா, பயந்திருக்கப் போறியேன்னு..."

"அட.. சுஜா.. நீ இன்னும் அதை மறக்கலியா..!! அதெல்லாம் எப்பவோ போயாச்சு அந்தப் பயம்.. "

"எப்படி சுரேஷ்?"

"இப்போ இங்க பன்னிரண்டு மணி ஆகும்போது, இந்தியாவில் பகல்.. ராமுக்கு இந்திய நேரம் தானே தெரியும்?"

"அப்போ இந்திய நேரம் இரவு பன்னிரண்டு மணிக்கு?"

"அப்போ இங்க பகல்.. ராம்தான் பகல்ல வர மாட்டானே!!"

நான் ஒன்றும் சொல்லவில்லை..

"என்ன சுஜா? ஆச்சரியமா இருக்கா? வந்த புதுசுல இப்படித் தான் நினைச்சேன்.. அத்தோட கொஞ்ச நாளில் ராமின் நிலைக்கு நம்ம காரணம் இல்லைன்னு புரிஞ்சிடுச்சு.. அவனுக்கு அறிவில்லை.. அதான் இப்படி ஒரு முடிவெடுத்துட்டான்.. நம்ம என்ன செய்ய முடியும்?!!"

அது சரி.. இதத் தானேடா நானும் மொதல்லேர்ந்து சொல்லிகிட்டு இருக்கேன்!!!

44 comments:

Chellamuthu Kuppusamy said...

அடப் போங்க.. மேட்டர சப்புனு முடிச்சுட்டீங்க..

இலவசக்கொத்தனார் said...

அட என்னங்க நீங்க. அமெரிக்கா வந்து time difference பத்தி அனுபவிச்ச உடனே வந்த கற்பனையா? இப்படி ஒண்ணுமில்லாம முடிச்சிட்டீங்க. சரி மார்க் போடறேன்.

முதல் பதிவு - சூப்பர்.
இரண்டாம் பதிவு (முதல் பாதி) - ஓக்கே
இரண்டாம் பதிவு (இரண்டாவது பாதி) - ஆறிப்போன அரசமீனவன்.

சொந்தக்கதை / உண்மை சம்பவம் என்று ஜல்லியடித்தால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

துளசி கோபால் said...

இப்ப ராமுக்கு ஒரு கன்ஃப்யூஷனும் இல்லையாம். இனிமே அமெரிக்கா 12 மணிக்கு( ராத்திரி) ஆஜராயிடுவானாம்.

இங்கே எங்க 12 மணிக்கு வந்து சொல்லிக்கிட்டுப் போனான் நேத்து.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

முதல் பாதில ஒரு பயங்கர எதிர்பார்ப்பை உருவாக்கிட்டு இரண்டாம் பாதி இப்படி முடிச்சுட்டீங்க.

முதல் பாதில உங்களுக்குள்ள தூங்கீட்டு இருக்கற எழுத்தாளர தட்டி எழுப்பீட்டு இரண்டாம் பாதில் திரும்ப தூங்க விட்டுட்டீங்களா?

ஆனா முதல் பாதில இருந்து நல்லா தெரியுது உங்களுக்குள் நல்ல எழுத்தாளர் இருக்கிறார் என்பது. தொடர்ந்து எழுதவும்.

Pavals said...

ம்ம்..
இன்னும் கொஞ்சம் நல்லா எழுதியிருக்கலாமோ .. கொஞ்சம் டைம் எடுத்துகிட்டு??

(no offences meant :) )

Unknown said...

இத நான் சத்தியமா எதிர்பார்க்கல பொன்ஸ். ஆவி கதைக்கே ஒரு புது கோணத்தை உண்டாக்கிட்டீங்க. அதோட ஆவிக்கு பயப்படறவங்களுக்கு ஒரு யோசனையும் சொல்லீட்டீங்க.. 'வெளிநாட்டுக்கு போங்க.. ஆவிக்கு நாட்டுப்பற்று ஜாஸ்தி' ;-)

Unknown said...

I second Kothanaar's comments:)

ரிஷி said...

"அட" அப்படி சொல்லாமுனு பார்தா இப்படி முடிவு போட்டு "ஓகே" தான்.

நாகை சிவா said...

நான் கதையின் முடிவை வேற மாதிரி எதிர்ப்பார்த்தேன். நம்ம தமிழ் சினிமா டைரக்டர் மாதிரி நீங்களும் கவுத்துடீங்க.
அது சரி, சொந்த சரக்கா, இல்ல வாடகைக்கு ஏதும்..........

Unknown said...

நன்று

நாமக்கல் சிபி said...

//"இப்போ இங்க பன்னிரண்டு மணி ஆகும்போது, இந்தியாவில் பகல்.. ராமுக்கு இந்திய நேரம் தானே தெரியும்?"

"அப்போ இந்திய நேரம் இரவு பன்னிரண்டு மணிக்கு?"

"அப்போ இங்க பகல்.. ராம்தான் பகல்ல வர மாட்டானே!!"
//

இப்படியொரு கிளைமாக்ஸை நான் எதிர்பார்க்கவே இல்லை. செம த்ரில்லாங்கான கிளைமாக்ஸ்.

பின்னீட்டீங்க பொன்ஸ்!

தருமி said...

மொதல்ல
'ஆவி' டராக்ல போய், டகார்னு 'காமெடி'ட்ராக்ல போய் முடிச்சிட்டீங்க.. :-)

பரத் said...

kathai nallayirukku...
nadai suvaarasyama irukku
thodarnthu try pannunga
:-)

சாணக்கியன் said...

பொன்ஸ், முடிவு அவ்ளோக்கு இல்லன்னாலும் உங்களுக்கு நல்லா கதை எழுத வருது. எதுவாது பிரசுரமாயிருக்கா?

VSK said...

மற்றவர்களெல்லாம் சொன்னது போல, கதை பொசுக்கென முடிந்து போனாலும், உளவியல் ரீதியாக எனக்கு இந்தக் கதை பிடித்திருந்தது!

எல்லாரும் சுரேஷ் கோணத்திலிருந்து கதையைப் படித்து சற்று ஏமாந்திருக்கலாம்; அது சரியும் கூட!

ஆனால், 'உங்கள்' கோணத்திலிருந்து பார்த்தால்,.........
6 ஆண்டுகள் ஆகியும்,
சுரேஷைப் பற்றிக் கவலைபடாமல் கல்யாணம் செய்துகொண்டு ஊரை விட்டு வந்திருந்தாலும்,
அவனைப் பார்த்ததும்,
சட்டென்று அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது,...
ஒருவேளை சுரேஷ் சொன்ன 'அந்தக் காரணம்' எதோ ஒரு வகையில் உண்மையாக இருக்குமோ என,
'உங்களின்' அடிமனதில் குடிகொண்டிருந்த உளவெளிப்பாடு பட்டென்று வார்த்தைகளாய் வெளிவந்து,
சுரேஷுக்குப் ஃபோன் போட்டுக் கேட்கும் அளவுக்கு 'உங்களைப்' பாதித்திருந்தது,
என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள்!

அதிலும் அந்தக் கடைசி வரிகள், தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு ஆறுதல் அடையும் ஒரு மனதின் நிலை, எனக்கு மிகவும் பிடித்தது!

இதுதான் 'உங்கள்' எண்ணமுமா எனத் தெரியாது!
இருப்பினும் சொல்லிவைக்கிறேன்!

கைப்புள்ள said...

ஒங்களுக்கு ஜெட் லாக்னால தூக்கம் வரலை...அதுனால தானே இப்பிடியெல்லாம்? கதை எழுதுற பாணி வழக்கம் போல நல்லாருக்கு. எஸ்கே இந்த கதையைச் சுரேஷ் கோணத்துலேருந்து பாக்கறாரு...எனக்கும் கிட்டத்தட்ட அதே thinking தான்...தூக்கம் வராம 12லேருந்து 2 வரைக்கும் முழிச்சிருக்குறதை தானே இப்பிடி சூசகமா ராம் மூலமா சொல்லிருக்கீங்க?
:)

பொன்ஸ்~~Poorna said...

எஸ்கே, நீங்க சொன்னது, ஓரளவுக்கு சரிதான்..

இன்னும் கொஞ்சம் இருக்கு.. நான் சொல்லவந்தது...

//சொந்தக்கதை / உண்மை சம்பவம் என்று ஜல்லியடித்தால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
//

சுரேஷ், சுஜா, ராம் எல்லாரும் உண்மை.. சுஜாவும் சுரேஷும் இன்னும் இருக்காங்க.. ஆறு வருஷம் எல்லாம் இன்னும் ஆகவில்லை...

G.Ragavan said...

பொன்ஸ் ரொம்பவே நல்ல முயற்சி. ரொம்பவே அழகான நடை.

முடிவு எல்லாருக்கும் சப்பென்று இருந்திருக்கிறது. ஆனால் எதிர்பார்க்காத முடிவுதான். நானாக இருந்தால்....சுஜி நான் உன்னை விரும்பினேன். ராமு இறந்ததை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு என்னை உன்னிடம் தெரியப் படுத்த முயன்றேன். ஆனால் நீ விருப்பமில்லாமல் இருந்ததால் நானும் விட்டு விட்டேன். இப்பொழுது இவ்வளவு ஆயிருச்சேன்னுதான் உண்மைய உன் கிட்ட சொன்னேன். இதையும் கூட நம்ம தமிழ்மணக் கில்லாடிகள் எதிர்பார்த்திருப்பாங்க. :-)

Ms Congeniality said...

Ur story-telling capability is awesome :-)

VSK said...

என்னங்க கைப்புள்ள,
கதையவே மாத்துறீங்க!
நான் சுரேஷ் கோண்த்தில் அல்லாமல்,
சுஜாவின் பார்வையிலிருந்து பார்த்த எண்ணங்கள் அவை!

சுஜாவின் உள்ளக்கிளர்ப்பாடை,
'சுரேஷ் இன்னமும் தன் மேல் ஒரு 'இது' வைத்திருக்கிறானா' என அறிய விழையும் ஒரு பெண்ணின் துடிப்பும்,
'அது இல்லை; அவன் தன் வாழ்க்கைத் தேடலில் 'இதை' மறந்து நகர்ந்து விட்டான்' என்றவுடன்,

ஒருவகையான ஏமாற்றத்துடன், அந்தக் கடைசி வரிகளை சுஜா சொல்லியிருக்கக் கூடுமோ எனவும் நினைத்தேன்!

'அதான் எனக்குத் தெரியுமே' என்கிறமாதிரி. !!!

பொன்ஸ்~~Poorna said...

எஸ்கே, ஏற்கனவே அலசிப் பிழிஞ்சிட்டீங்க.. மறுபடியுமா? விட்ருங்க.. சுஜா பாவம்..:)

(நல்லவேளை சுஜா இதையெல்லாம் படிக்கலை.. அவ கண்ல பட்டா அவ்வளவுதான்..
கைப்பு!! எனக்கும் தர்ம அடி வாங்கிக் கொடுப்பதிலயே இருக்கீங்களே!!! :))

VSK said...

அலச வேணாங்க்றீங்க!

சரி விட்டுருவோம்!

இன்னும் கொஞ்சம் எழுதலாம்னு நெனச்சேன்!

:(())

பொன்ஸ்~~Poorna said...

எஸ்.கே, ஒண்ணு தனிமடலில் பேசுவோம்.. இல்லை உங்க பதிவில் போடுங்க.. இங்க வேண்டாம்.. புதிதாக படிப்பவரகளுக்கு யோசிக்க எதுவுமில்லாமல், எல்லாமே நீங்களே சொல்லிட்டா??

இலவசக்கொத்தனார் said...

ஜிரா, உங்க முடிவைத்தான் நான் நினைச்சேன், நேரா சொல்ல பயந்து இந்த ஆவியை துணைக்கு அழைசுக்கிட்டதா. ஆனா இந்தம்மா அதை விட்டுட்டு வேற டிராக்கில் போயி சொதப்பிட்டாங்க.

பொன்ஸ்~~Poorna said...

கொத்ஸ், நீங்களும் ராகவனும் யோசிக்கிறதையே சுரேஷும் பொன்ஸும் யோசிக்கிறதா இருந்தா அப்புறம், கொத்தனார், ஜி.ரா, பொன்ஸ்ன்னு தனித் தனி ஆட்கள் எதுக்கு?!!

இதுவரை எல்லா கதைகளும் நீங்க நினைச்ச மாதிரியே போனதால, இதுவும் அப்படி இருக்கும்னு உங்களுக்குத் தோணிடுச்சு.. அவ்வளவுதான்.. சொதப்பல் என்று எனக்கு இன்னும் தோன்றவில்லை.. யாருக்காவது புரியும்... :)

நன்மனம் said...

புதிய கோணத்தில் நல்ல முயற்சி.

Syam said...

யக்கோவ் அசத்திட்டீங்க...கொஞ்ச நாளா ஆவி பயம் இல்லாம இருந்தேன் இப்போ???!!!

Unknown said...

வழக்கமா இல்லாம வித்யாசமா இயல்பா இருக்கு.

நம்ம பிரச்சனைகளுக்கு தீர்வு நம்ம கிட்ட தான் இருக்குங்கறதை ரொம்ப இயல்பா சொல்லிருக்கிங்க.சுரேஷ் துக்கு போட்டுட்டான்,பேய் பிசாசு இருக்கும்னு கதை முடிஞ்சிருந்தா நாடகத்தன்மையோட இருந்திருக்கும்.

பொன்ஸ்~~Poorna said...

//நம்ம பிரச்சனைகளுக்கு தீர்வு நம்ம கிட்ட தான் இருக்குங்கறதை //

வாழ்க செல்வன்.. குரங்கே கடவுள்!!!

இதைத் தாங்க சொல்ல முயற்சி பண்ணிகிட்டு இருந்தேன்!! ரொம்ப நன்றி.. சரியான சொற்களில் சொன்னதற்கு :)

பொன்ஸ்~~Poorna said...

குப்புசாமி, கொத்தனார், துளசி அக்கா, தருமி, செந்தில்குமரன், ராசா, ரமணி, தேவ், சூடான் சிவா, சாணக்கியன், கைப்புள்ள, ஹமீது, ரிஷி, சிபி !!
எல்லாருக்கும் நன்றி.. முடிவு அவ்வளவாக சரியில்லை, திருப்திகரமாக இல்லை என்ற போதும், பின்னூட்டமிட்டதற்கு.

நம் எல்லாரிடமும் உள்ள பிரச்சனை இதுதான்.. எந்தக் கஷ்டமாக இருந்தாலும் வெளியில் தீர்வு தேடுகிறோம்.. நாமே முடிவு செய்து கொண்ட சில காரணங்களுக்காக மற்றவரின் பரிதாபத்தையும் பரிவான சொற்களையும் மட்டுமே எதிர்பார்க்கிறோம் - தீர்வுகளை இக்னோர் செய்துவிட்டு...

கால மாற்றத்தில் ஒரு சமயத்தில் பெரிய விஷயமாகத் தோன்றிய எதுவும் பின்னாளில் ஒன்றுமில்லாமல் போய்விடும்..

இந்த இரண்டு விஷயங்களைத் தான் இந்தக் கதையில் சொல்ல முயன்றேன்..

விளக்கம் சொல்லவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் எந்தப் படைப்பும் 100% முழுமையானதல்ல! இதுவும்... :(

பொன்ஸ்~~Poorna said...

செந்தில் குமரன், உங்களுக்குப் புரியும்னு நினைச்சேன் :)

பிரசுரத்துக்கு முயற்சிக்கவே இல்லை சாணக்கியன்.. :)

நன்றி பாலாஜி, பரத், Ms. Congeniality, நன்மனம், ஸ்யாம்

எஸ்.கே, இனி உங்க கோணத்து ஆராய்ச்சியை இன்னும் கொஞ்சம் செய்வதானாலும் ஓகே தான்..

//முடிவு எல்லாருக்கும் சப்பென்று இருந்திருக்கிறது//
உங்களுக்கு எப்படின்னு சொல்லவே இல்லையே ராகவன்?

லதா said...

// திருமணம் முடிந்து அமெரிக்காவில் வேலை தேடிக் கொண்டிருந்த போது //

// "இல்லை, நீ கிளம்பும் போதே பன்னிரண்டு கிட்ட ஆய்டுச்சு.. அதான் உன்னோட பன்னிரண்டு மணி ராம் வந்தானா, பயந்திருக்கப் போறியேன்னு..." //

சுரேஷு*க்கும்* கல்யாணம் நடந்து முடிந்துவிட்டிடுருந்தது என்ற ஒரு முக்கியமான வரியை நீங்கள் எழுத மறந்துவிட்டீர்களா ?
:-)))

பொன்ஸ்~~Poorna said...

இல்லை லதா, கதைப் படி, சுரேஷுக்குக் கல்யாணம் எல்லாம் ஆகவில்லை.. திருமணம் ஆனது சுஜாவுக்குத் தான்

Muthu said...

கதை சொதப்பிடுச்சுன்னு நினைக்கிறேன்.

( திட்டு போதுமா.இன்னும் வேணுமா)

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ஓ நீங்க ஜென் கதை ரேஞ்சுக்கு எழுத ஆரம்பிச்சிடீங்களா அதுதான் எனக்கு புரியலை. அதாவது சராசரியானர்களுக்கு சில விசயங்களை புரிந்து கொள்வதற்க்கு கஷ்டமாத்தான் இருக்கும். இனி உங்கள் கதைகளை ஊன்றி படிக்க ஆரம்பிச்சுடுறேன். அடுத்த தடவை புடிச்சுடுறேன். உங்க ரேஞ்ச் எங்கயோ போயிடுச்சு என்பதற்கு ஆதாரமாக இதை போல் உள்ள ஜென் கதை ஒன்று.

மறு கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று சத்தியம் வாங்கி கொண்டு இறந்து விடுகிறாள் மனைவி. கணவன் சில நாட்களில் வேறு ஒரு பெண்ணை காதல் செய்ய ஆரம்பிக்க மனைவியின் ஆவி கணவனை தினமும் இரவில் அவன் நாள் முழுவதும் செய்த காரியங்களையும், புது காதலியுடன் கொண்ட உரையாடல்களையும் பற்றி மிகச் சரியாக கேட்டு தொந்தரவு செய்கிறாள்.

ஜென் மாஸ்டர் கணவனுக்கு சொன்ன யோசனை யோசனையின் பெயரில் கணவன் அன்று இரவு வந்த ஆவியிடம் நான் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் கூறாவிட்டால் என்னை தொந்தரவு செய்ய கூடாது என்கிறான். சரி என்று ஆவி ஒத்து கொள்கிறது.

தன்னை பற்றிய பல கேள்விகளுக்கு பதில் சொன்ன பிறகு ஆவ்யிடம் ஒரு மூட்டையில் இருந்து ஒரு கைப்பிடி நெல்லை எடுத்து இதில் எத்தனை அரிசி உள்ளது என்று சொல் என்கிறான்.

ஆவி தொல்லை அன்றுடன் இல்லை.

---------------------------------

உங்களுக்குள்ள பெரிய விசயம் எல்லாம் இருக்கும் போல இருக்கே?

மனதின் ஓசை said...

பொன்ஸ் மற்றும் நண்பர்களே,
இந்த பதிவை படித்த பொழுது எனக்கு ஞாபகம் வந்த ஒரு நிகழ்ச்சியை என்னுடைய முதல் பதிவாக பதிந்து இருக்கிறேன்..சுட்டி இங்கே:
http://manathinoosai.blogspot.com/2006/05/blog-post.html

படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லவும்...

பொன்ஸ்~~Poorna said...

இங்க போதும் முத்து.. தனியாப் பேசிக்கலாம் :) படிச்சதுக்கு நன்றி :)

போதுங்க செந்தில் குமரன்.. ஜென்கதைன்னு சொல்லி படிக்க வர்றவங்களைப் பயமுறுத்தாதீங்க :)

குமரன் (Kumaran) said...

நன்றாய் இருந்தது பொன்ஸ். பின்னூட்டங்களை இன்னும் படிக்கவில்லை. படித்துப் பார்க்கிறேன்.

Geetha Sambasivam said...

ஏன் இப்படி சப்புனு முடிச்சுட்டீங்க?
சரி, மெயில் வந்ததா? பதிலே இல்லை? அவ்வளவுதானா?

சிவா said...

//முடிவு எல்லாருக்கும் சப்பென்று இருந்திருக்கிறது. ஆனால் எதிர்பார்க்காத முடிவுதான். நானாக இருந்தால்....சுஜி நான் உன்னை விரும்பினேன். ராமு இறந்ததை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு என்னை உன்னிடம் தெரியப் படுத்த முயன்றேன். ஆனால் நீ விருப்பமில்லாமல் இருந்ததால் நானும் விட்டு விட்டேன். இப்பொழுது இவ்வளவு ஆயிருச்சேன்னுதான் உண்மைய உன் கிட்ட சொன்னேன். //

நானும் கதை அப்படி தான் முடியும்னு நெனைச்சேன்.. ஹி ஹி ஹி...

பொன்ஸ் ! கதை நல்ல எழுதறீங்க. மேலும் எழுத வாழ்த்துக்கள்.

Prasanna said...

யக்கோவ்! கதை நல்லாதான் இருக்கு, அப்புறம் ஏன் நம்ம கதைய ஜென் கதைனு சொன்னீங்கனு இப்பதான் புரியுது. நல்ல கதை நல்ல முடிவு. நல்ல வேளைக்கு, ஆவி வந்து திரும்ப லவ் பண்ணுதுனு சொல்லாம இருந்தீங்களே...

பொன்ஸ்~~Poorna said...

நன்றி குமரன்..

கீதாக்கா, பதில் விரைவில்..

சிவா, முதல் முறை வந்திருக்கீங்க.. இப்படி க்ரைம் கதையா போய்டுச்சே! இந்தக் கதை ஒண்ணு தான் இப்படி...பயந்துகிட்டு வராம போய்டாதீங்க.. :)

பிரசன்னா, நெஜமாவே சொல்றேங்க.. என் கதையைப் பத்தி கருத்து சொல்றவங்களை உங்க கதைகளைப் படிக்க அனுப்பிடலாம்னு இருக்கேன் :)

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்!

லக ..லக்க ..லக .... பின்றிங்க போங்க எங்கேயோ போய்டிங்க ....,போன வாரம் கவிதை இந்த வாரம் கதை அடுத்த வாரம் .. நாடகம் போட போரிங்களா :-)) கவிதாயினி,கதாசிரியை ... இன்னும் எத்தனை அவதாரம் தசாவாதாரம் எடுக்கும் உத்தேசமா !(இன்னும் முதல் பகுதி படிக்கவே இல்லை 4 நாட்கள் தேசந்திர உலா போய் இருந்ததில் தமிழ்மணம் பார்க்கல...) அதையும் படிச்சுட்டு வந்து மொத்தமா கவனிக்கிறேன்

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்!

லக ..லக்க ..லக .... பின்றிங்க போங்க எங்கேயோ போய்டிங்க ....,போன வாரம் கவிதை இந்த வாரம் கதை அடுத்த வாரம் .. நாடகம் போட போரிங்களா :-)) கவிதாயினி,கதாசிரியை ... இன்னும் எத்தனை அவதாரம் தசாவாதாரம் எடுக்கும் உத்தேசமா !(இன்னும் முதல் பகுதி படிக்கவே இல்லை 4 நாட்கள் தேசந்திர உலா போய் இருந்ததில் தமிழ்மணம் பார்க்கல...) அதையும் படிச்சுட்டு வந்து மொத்தமா கவனிக்கிறேன்