Showing posts with label விளையாட்டு பொன்ஸ். Show all posts
Showing posts with label விளையாட்டு பொன்ஸ். Show all posts

Saturday, March 31, 2007

ஆமாமாம், நானும் ஒரு கிறுக்கு தான்...

கிறுக்குத்தனங்கள், விபரீத குணங்கள், விசித்திர பழக்கங்கள் இல்லாத மனிதர்களே இல்லை என்று தோன்றுகிறது, சமீபகால வியர்டு பதிவுகள் பார்த்து. என்னுடைய கிறுக்குத்தனங்களை எழுதச் சொல்லிக் கேட்ட அஞ்சா நெஞ்சர்களின் லிஸ்ட் இங்கே:

முதலில் அத்தனை ஆர்வம் இல்லாமல் தான் இருந்தது, ஆனால், எப்படியாவது யாழ்ப் பட்டியலில் சேர்ந்து விடுவது என்ற முடிவோடு, ஒரு உந்துதலோடு எழுத ஆரம்பித்திருக்கிறேன் இன்று ;)


1. புத்தகம் வாசிப்பது: வலைப்பதிவர் அனைவருக்கும் ஒரு பொதுவான குணமாக தெரிகிறது. அதிலும் சாப்பிட்டுக் கொண்டே வாசிப்பது இயல்பாகவே ஆகிவிட்டது. சிறுவயதில் என்னுடைய வாசிப்பிடங்கள் இருட்டானவையாக இருக்கும். பீரோக்களின் சந்துகளில், கட்டில் அடியில், அரிசி பீப்பாய் பின்புறம் என்று எளிதில் தேடிக் கண்டுபிடித்து யாரும் தொல்லை செய்யாத இடத்தில் ஒண்டிக் கொண்டு படிக்கப் பிடிக்கும். வளர்ந்த பின்னர், அதாவது இந்த இடங்களில் நுழைய வசதியில்லாமல் போன பின்னர், எல்லா நேரங்களிலும் என் கையில் புத்தகம் இருந்த நாட்கள் உண்டு. ஓடும் ரயிலில், பேருந்தில், எனக்கே இடமில்லாத ஷேர் ஆட்டோக்களில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து போகையில், முன்பு வசித்த புறநகர் பகுதியில் சைக்கிள் மிதிக்கையில், என்று அசைந்து கொண்டே படிக்கப் பிடிக்கும். பாலை அடுப்பில் வைத்துக் கொண்டே புத்தகம் படித்து பலநாள் புதுமனை புகுவிழா நடத்தி இருக்கேனாக்கும்.

2. பேசுவது: கணினி, பூனை, நாய், செடி, கொடிகளுடன் பேசுபவர்கள் பற்றிப் படிக்கையில், "அட நான் கூட இப்படித் தானே!" என்று நினைத்துக் கொண்டேன். இவற்றுடன் கூட, எனக்கு நானே பேசிக் கொள்வது அடிக்கடி செய்யும் செயல். பொதுவாக வண்டி ஓட்டும் பொழுது, துணி துவைக்கையில், பாத்திரம் துலக்குகையில், யாருக்காவது காத்திருக்கையில் என்று தனியாக இருக்கும்பொழுது ஏதேனும் யோசித்துக் கொண்டே என்னை அறியாது பேசி விடுவேன். ஒருமுறை இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டே நான் வீராவேசமாக என்னுடன் சண்டை போட்டுப் பேசிக் கொண்டே போவதை நண்பனின் தாயார் பார்த்துவிட, அன்று முழுவதும் ஓட்டித் தள்ளிவிட்டார்கள். வேலையில் சேர்ந்த புதிதில் நான் கணினியுடன் பேசுவதைக் கேட்டு பக்கத்து காபின் நண்பர் வேறிடம் மாற்றிக் கேட்குமளவுக்குத் தொல்லை செய்திருக்கேன் :)).

3. வாகனம் ஓட்டுவது: ஆளில்லாத சாலையில், அது என்ன வண்டியாக இருந்தாலும், வண்டி எடுத்து தனியே ஓட்டிக் கொண்டே போக பிடிக்கும். சைக்கிள் ஓட்டிய காலங்களில் சென்னையின் புறநகரான மடிப்பாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி பகுதிகள் முழுக்கவும் இப்படிச் சுற்றி இருக்கிறேன். கூடியவரை புதுப்புது வழிகள் கண்டுபிடிப்பது வழக்கம். இப்போது கூட தினமும் ஒரே வழியில் பயணிப்பது அலுத்துப் போய் வெவ்வேறு வழிகள் கண்டுபிடித்துக் கொண்டே போவேன்.

4. கோபம்: ரொம்பவும் கலகலப்பானவள் தான், அதிகம் யார் மேலும் கோபம் வராதுதான். ஒருமுறை என் வண்டியில் மோதி விபத்துக்குள்ளாக்கிய ஆட்டோக்காரரைக் கூட அந்தக் கணம் திட்டத் தோன்றாத காந்தீயவாதிதான் ;), ஆனால், சில சமயங்களில் எதற்கென்றே தெரியாமல் ஒரு அனாவசியக் கோபம் வந்துவிடும். வெறுப்பு, டிப்ரெஷன் என்றும் சொல்லலாம். அதுபோன்ற சமயத்தில் யாரிடமாவது பேச நேர்ந்தால் கத்தி கலாட்டா பண்ணிவிடுவேன். பல சமயங்களில் நெருங்கிய நண்பர்கள் தான் இத்தகைய கோபத்துக்கு ஆளாவர்கள். அப்புறம் கூப்பிட்டு வெகுநேரம் மன்னிப்பு கேட்பேன். ஆனால், கொட்டிய வார்த்தைகளை அள்ளவா முடியும்? இப்போதெல்லாம் இந்தக் காரணமற்ற கோபம் குறைந்திருப்பதாக நம்புகிறேன். நண்பர்களைத் தான் கேட்க வேண்டும், பாவம்.

5. அதீத ஆர்வம், அல்லது ஆர்வமின்மை. ஏதாவது ஒரு விசயத்தில் ஆர்வம் உண்டானால், ஒரே ஆர்வக் கோளாறாக இருப்பேன். ஆனால், திடீரென்று அந்த விருப்பம் விட்டுப் போய்விடும். அப்படியே ஒதுங்கிவிடுவேன். ஐந்து வயதில் அடம்பிடித்து கேரம் போர்டு வாங்கி விளையாடி, ஆறுவயதில் அந்த போர்டை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு பல்லாங்குழி விளையாடப் போய்விட்ட கிறுக்குத்தனத்தை இன்றும் என் அப்பா சொல்லிக் காட்டிக் கொண்டே இருப்பார். தையல், பின்னல் போடுவது, மொழி கற்பது, பாட்டு கற்பது, கலர்கலர் வளையல், காதணி சேர்ப்பது, சின்னச் சின்ன பென்சில் சேர்ப்பது, தபால்தலை சேகரிப்பு, சுட்டிவிகடன் பொம்மைகள் செய்வது என்று எல்லா பொழுதுபோக்குகளும் ஒருசில நாள் ஆசை தான். வாசிக்கும் பழக்கம் மட்டும் தான் இத்தனை நாள் தொடர்ந்திருக்கிறது. விந்தையான விசயம் அதுதான் என்று தோன்றுகிறது.

இன்னும் ஐந்து பேரைக் கூப்பிடும் எண்ணமெல்லாம் இல்லை. எல்லாரும் எழுதிவிட்டார்கள் போலத் தெரிகிறது. அதனால் இத்தோட ஜூட் :).

Thursday, March 22, 2007

போட்டி முடிவுகள்: விடை தேடும் வினா? :

நிறைய பேர் படிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விரும்புவதை மட்டும் கொடுப்பதற்கு பதிவுகளா?

அல்லது

நமக்கு விருப்பமானதை, நாம் சொல்ல விரும்புவதை அனைத்தையும் சொல்ல நமது பதிவுகளா?

போன முறை போல் தலைப்பில் சில நெருடல்கள் இருந்தன. விவாதிப்பவர்கள் கண்டிப்பாகச் சுட்டிக் காட்டுவார்கள் என்று நாங்களும் விட்டுவிட்டோம். இது போன்ற தலைப்பின் கருத்துக் குழப்பங்களையும் சேர்த்துச் சுட்டிக் காட்டக் கூடியவர்கள் பங்கு கொள்ளும் பொழுது தான், இந்த விவாதங்கள் சரியான திசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதையும் உணர முடிகிறது.

எனவே, தலைப்பில் லேசான குழப்பம் இருப்பதை உணர்ந்து, அதில் தெளிவைக் கேட்டுப் பெற்ற இனியன் மற்றும் முத்துலட்சுமியின் பின்னூட்டங்களுக்குப் பின்னான பேச்சுக்களையே கருத்தில் கொண்டு தான் இந்த விவாதத்தின் வெற்றியாளரைத் தேர்வு செய்ய முடியும்.

ஒரு இடுகைக்கு நிறைய பின்னூட்டம் வருகிறது என்றால், அந்த இடுகையின் கருத்து நிறைய பேருக்குப் போய்ச் சேருகிறது. ஆக, நிறைய பேர் பின்னூட்டம் இடும் வண்ணமான, நிறைய பேர் ஒப்புக் கொள்ளும் விதமான வார்ப்பிலேயே நம் கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிறார் முத்துலட்சுமி. முத்துலட்சுமி கருத்துக்கு ஓரளவுக்கு ஒட்டி வருகிற, அதாவது நிறைய பின்னூட்டம் வேண்டும் என்று ஒரு பதிவர் நினைத்தால் அவர் நகைச்சுவைகளை மட்டுமே எழுதலாம் என்று பேசியிருக்கும் நிலா, நடுவில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்களையும் தலைப்புத் திருத்தங்களையும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

எதிரணியில் பேசியிருப்பவர்கள், ராமச்சந்திரன் உஷாவும் இனியனும். "குழந்தைகள் வளரும் கால கட்டங்களில் ஆரம்பகால பாராட்டுகளாக பின்னூட்டங்கள் அவசியம், ஆனால், கொஞ்சம் வளர்ந்த பின்னர், நம் கருத்துக்களுக்காக நமது வலைப்பதிவு என்று மாறுவது மிக முக்கியம்" என்ற உஷாவின் வாதம் ரொம்பவும் ஏற்புடையாதாக தோன்றுகிறது. முக்கியமாக, இனியன் சொல்லும்,

"மற்றவர்கள் விரும்புவதைத் தான் எழுதவேண்டும் என்றால்.. யார் அந்த மற்றவர்கள்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் இருக்கும். எல்லோருடைய விருப்பத்தையும் பதிவு எழுதும் உங்களால் பூர்த்தி செய்ய இயலுமா? என் கருத்தோடு ஒத்துப்போகிறவர்களின் விருப்பத்தை மட்டுமே நிறைவேற்றுகிறேன் என்று நீங்கள் சொன்னால்.. அதில் உங்கள் விருப்பமும் அடங்கித்தானே இருக்கிறது. பின் எப்படி விருப்புவதை எழுதினேன் என்று சொல்லி விட முடியும்..?"


போன்ற பகுதிகள் கண்டிப்பாக சிந்தனையைத் தூண்டுபவை. அதிலும்
"நாம் எழுதும் பதிவுகளை படித்த உடன் எதிரில் இருக்கும் ஒருவர் உடனடியாக திருந்த வேண்டும் என்று சினிமா பாணியில் எதிர்பார்ப்பது மடத்தனம். நம் எழுத்து ஒருவரை கொஞ்சம் நம் கோணத்திலிருந்து சிந்திக்க வைத்தாலே மாற்றத்திற்கான விதை தூவப்பட்டு விட்டது என்று பொருள் கொள்ள முடியும். அதுவே பெரிய சாதனை தான்."
என்பது மிக நல்ல புரிதல். இதை எழுதுபவர் இன்னமும் வலைப்பதிவு வாசகர் தான் என்பதை எண்ணிப் பார்க்கையில், ஆச்சரியம் கூடுவதும் உண்மை; வாழ்த்துக்கள் இனியன்.

இதன் பின்னரும்,
"நிறைய பேர் படிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விரும்புவதை மட்டும் கொடுங்கள் அதில் உங்கள் விரூப்பத்தை இணைத்துக்கொள்ளுங்கள்"

என்னும் முத்துலட்சுமியின் சமரசம், எடுபடவில்லை என்பதை வருத்தத்துடன் சொல்ல வேண்டி இருக்கிறது.

தாமதமாக உட்புகுந்து அடித்து ஆடி முதல் வருகையிலேயே வெற்றி பெற்ற இனியனுக்கு என் வாழ்த்துக்கள்; சீக்கிரமே, உங்க பதிவிலும், உங்களின் ஆக்கங்களைக் காண ஆசை என்ற கோரிக்கையுடன்..

[பொன்ஸ் பக்கங்களின் ஆண்டு விழாவை ஒட்டி இந்தப் பட்டிமன்றத்தை நடத்துவதற்கு யோசனையும் இடமும் கொடுத்த சிந்தாநதிக்கு நன்றி :)) முதலிலேயே சொன்னால் எல்லாரும் ஓடிப் போயிடப் போறாங்களோன்னு போட்டி முடிந்த பிறகு... :)) ]

Wednesday, March 07, 2007

பா.கே.ப.பி

அதாங்க, கார்த்திக் பிரபு தொடங்கி, மோகன்தாஸ் என்னிடம் ஒப்படைத்த, பார்த்ததில், கேட்டதில் படித்ததில் பிடித்தது சங்கிலித் தொடரின் சுருக்கம்..

இவர்கள் இருவரது பதிவையும் பார்த்துவிட்டு, இப்படி வரிசையாக பட்டியலிட்டு ஒரு பதிவு எழுதத் தான் வேண்டுமா என்று கொஞ்ச நாட்களாக யோசித்துக் கொண்டே இருந்தேன். நம்ம பட்டியலுக்கு ஒரு ப்ளாக் போதுமா? ;) இருந்தாலும், எழுதித் தான் பார்ப்போமே என்று இப்போ தொடங்கியாச்சு..

பிடித்தது என்பது மாறிக் கொண்டே இருந்திருக்கிறது. வாழ்க்கை, மாற்றங்களால் ஆனது. விருப்பங்களும், பிடிப்புகளும் கூட. இன்று பிடித்தது நாளை பிடிக்காமல் போகலாம், அவள் விகடன் விளம்பரம் போல...

எனக்குப் பிடித்த எல்லாமும் என்று நீள் பட்டியலிட அவ்வளவாக விருப்பமில்லை. நினைவு தெரிந்து முதன்முதலில் பிடித்தது, சமீபத்தில் பிடித்தது என்று இரண்டிரண்டு விசயங்களாகப் பட்டியல் போடப் போகிறேன்:

பார்த்ததில் பிடித்தது:
1. நினைவு தெரிந்து நான் விரும்பிப் பார்த்த சின்னத்திரைத் தொடர், ப்ளைட் 172.




மௌலியின் நகைச்சுவையும், அவர் ஜாலியான ஆங்கிலமும் என்று இந்தத் தொடரை நாங்கள் மொத்தமாக ரெகார்ட் செய்து வைத்திருந்தோம். அவ்வப்போது போட்டுப் பார்த்துச் சிரிப்பது ஒரு நல்ல பொழுது போக்கு..

2. சமீபத்தில் பார்த்ததில் பிடித்தது, நம்ம ஹாப்பி பீட் தான்..




கேட்டதில் பிடித்தது
1. சின்ன வயதில் பாட்டி சொன்ன ஈக்கதை.

ஈ ஒன்று தன் வீட்டு வாசலில் இருந்த அதிக தண்ணீரில் வழுக்கி விழுந்து தன் பெயரை மறந்துவிடும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற விலங்குகள், மனிதர்கள், பொருட்கள் என்று கிட்டத் தட்ட இருபது பேரிடம் தன்னுடைய பெயர் என்ன என்று கேட்டுப் பார்த்துவிட்டு, கடைசியாக, ஒரு குதிரையைக் கேட்டு, குதிரை "ஹீஹீ" என்று கனைத்ததில் தன் பெயர் ஈ என்று நினைவுக்கு வந்து வீடு திரும்பிவிடுவதாக முடியும் அந்தக் கதை என்னுடைய சிறுவயது விருப்பம்.

அப்போது அந்தக் கதையைப் பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பேன். உச்சரிப்புக்காகவும், புதிய பொருட்கள், விலங்குகளின் பெயர்களை அறிமுகப்படுத்தும் விதமாகவும் வரும் அந்தக் கதை எனக்கு மிக மிகப் பிடித்த ஒன்று.

2. சமீபத்தில்: போக்கிரி படத்தில் "நீ முத்தமொன்று கொடுத்தால், முத்தமிழ்" பாட்டு.





படித்ததில் பிடித்தது.
1. முதன்முதலில் நானாகப் படித்து, அப்படிப் படித்ததில் பிடித்த புத்தகம், சிறுவர்மலர். அதில் வந்த பல காமிக்ஸ் சிறுகதைகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும்



2. சமீபத்தில் படித்ததில் பிடித்தது : இரா.நடராசனின் ஆயிஷா.


பா.கே.ப என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது வாரமலர் அந்துமணி. அந்துமணி என்றவுடன் நம் எல்லாருக்குமே நினைவுக்கு வருவது, மருதக்கார தம்பி, ராயல் ராம். [அது ஏன் என்பதை ராமிடமே கேட்கவும் :)]. எனவே, இந்த விளையாட்டை ஆட ராமை அழைத்து விட்டு நான் இப்போ அப்பீட்டு....

Wednesday, September 27, 2006

விடைகள்..... மான்குட்டி..

    அட அடுத்து அக்டோபர் மாதம் புதிர்களுக்கான விடைகள், மற்றும் விளக்கங்கள். இத்துடன் ஐயா ப்ளோரைப் புயல் அவர்கள் அளித்த வெண்பாக்களையும் இங்கே பதிக்கிறேன்..:

  • 1. ஒரு குறிப்பிட்ட வருடத்தில் 13 என்ற தேதி வெள்ளிக் கிழமையாக இல்லாமல் இருக்க முடியுமா?
    முடியாது

    2. அப்படியானால் அதிக பட்சமாக எத்தனை நாட்கள் 13 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை இரண்டுமாகவும் இருக்க முடியும்?
    அதிகபட்சம் - மூன்று
    குறைந்த பட்சம் - ஒன்று

    விளக்கம்:

    படத்தில் உள்ள விவரத்தை வைத்து remainder- கள் 0- 6 வரை வரலாம். இதில் 0 என்றால், ஜனவரி ஒன்று என்ன கிழமையோ, அந்த மாதத்தின் 13 ஆம் தேதியும் இதே கிழமை தான். 1 என்றால் ஜனவரி 1 இல் இருந்து அடுத்த கிழமை. இப்படிப் பார்க்கும் போது, 0-6 வரை எல்லா எண்களும் ஒரு முறையாவது வந்து விடுகிறது. எனவே இதில் வெள்ளிக்கிழமை ஒரு முறையாவது வந்துவிடும். அதே போல் சாதா ஆண்டுகளில் 2 என்னும் எண்ணும், லீப் வருடங்களில் 6 என்னும் எண்ணும், மூன்று முறை வருகின்றன. இந்த வகையில் சாதா ஆண்டுகளில் ஜனவரி 1 புதன் கிழமையாக இருந்தால், 3 13-வெள்ளிகளும், லீப் வருடங்களில் ஜனவரி 1 சனிக் கிழமையாக இருந்தால், மூன்று 13-வெள்ளிகளும் சாத்தியம். எனவே குறைந்த பட்ச எண்ணிக்கை 1, அதிக பட்ச 13 வெள்ளிகளின் எண்ணிக்கை 3

    பதின்மூன்று வெள்ளியின்பாற் பட்டுவரும் நாட்கள்
    அதுவாண்டில் எத்தனை ஈண்டருகும் என்ன
    பதின்மூன்று ரோமத்தில் பாங்காய் எழுத
    பதிலாக நிற்கும் பிரிந்து.
    [XIII - X - முடியாது என்பதைக் குறிக்க, III - அதிகபட்சம் 3 வெள்ளிகள் என்பதைக் குறிக்கிறது.]

  • பெருக்குத் தொகை 36 வர வேண்டுமெனில், அதன் factors (தமிழில்? :( )
    1, 2, 18 = 36, 21
    1, 3, 12 = 36, 16
    1, 4, 9 = 36, 14
    1, 6, 6 = 36, 13
    2, 2, 9 = 36, 13
    2, 3, 6 = 36, 12
    3, 3, 4 = 36, 10

    இதில் 13 என்பது பக்கத்து வீட்டு எண்ணாக இருந்தால் மட்டும் தான் குழப்பம் வரவாய்ப்பிருக்கிறது. இதில் முதல் மகள் பள்ளிக்குப் போவதால், மற்ற இரு மகள்கள் தான் இரட்டையர்களாக இருக்க வேண்டும். எனவே, இதற்கான விடை 2, 2, 9




  • விடை:

    அருகோணம் உள்ளேயோ ஆறுண்டு முக்கோணம்
    அருக்கணுமே மூன்றாய் அவற்றை - வருகும்
    முன்னுனி ஒட்டமூ முக்கோணம் சுற்றருகில்
    ஒன்றைவிட்டு ஒன்றை ஒழி.




  • இந்தத் தேதி ஒரு 3 எண்களின் பெருக்குத் தொகை. அத்துடன் நான்குவிதமான பெருக்கல்கள் மட்டுமே சாத்தியமான ஒரு எண்.
    எனவே விடை 24. இதன் factors:
    1, 2, 12
    1, 3, 8
    1, 4, 6
    2, 2, 6 (இது ஆட்டைக்கு சேர்த்துக் கொள்ளப் பட மாட்டாது. ஒவ்வொரு குழுவிலும் வெவ்வேறு எண்ணிக்கையிலான மக்கள் இருந்தார்களே!)
    2, 3, 4.

    ராமு கேட்ட கேள்வி = ஒரு குழுவில் ஒரே ஒருவர் இருப்பது சாத்தியமா? என்பதாகும்.

    இல்லை என்று சொன்னவுடன், பதிலான 2,3,4 என்பதைச் சொல்லிவிட்டார்.

    சிவஞானம்ஜி, சிவகுமார், கத்திரிக்காய் ஆகியோர் சொன்ன 30உம் சரிதான்.
    (factors:
    1, 2, 15
    1, 3, 10
    1, 5, 6
    2, 3, 5)
    ஆனால், இந்த மாதம் என்ற சொல்லை இந்தப் புதிரில் சேர்த்ததே கடந்து போன தேதி என்பதைக் குறிக்கத் தான் :)

புதிரில் கலந்து கொண்ட செந்தில் குமரன், ஜயராமன், ராசுக்குட்டி, சிவஞானம்ஜி, சிவகுமார், மனதின் ஓசை, முரட்டுக் காளை, ஆவி, கத்திரிக்காய், ப்ளோரைப் புயலார், உதயகுமார், எல்லாருக்கும் நன்றி :) . போட்டிக்கு சைடில் நின்று பின்னூட்ட ஆதரவு மட்டும் கொடுத்த ராம் மற்றும் ஸ்யாமுக்கு ஹி ஹி.. வேறென்ன, நன்றி தான்:)

சரியா பதில் சொன்னவங்களுக்கு இதோ பரிசு, சர்வீஸ் போய் புதுப் பொலிவுடன் வந்த மான்குட்டியின் போட்டோ:

Tuesday, September 26, 2006

அட! அடுத்தது அக்டோபர் மாதம்..

"அடங்கவே மாட்டியா" என்று கேட்பதற்கு முன்னால், எல்லாக் கிழமையும் ஒரு சுற்று வந்துடுச்சே.. அதான் மாதத்துக்குப் போக வேண்டியதாப் போச்சு.. இதுக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்க நினைக்கிறவங்க, கடைசி வரை படியுங்க பார்க்கலாம்:

  • 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமையாக வந்தால் அதை நமது ஆவிம்மணிக்குரிய நாளாகக் கருதுகின்றனர் அமெரிக்கர்கள்( ஐரோப்பியர்கள்?). ஒரு குறிப்பிட்ட வருடத்தில் 13 என்ற தேதி வெள்ளிக் கிழமையாக இல்லாமல் இருக்க முடியுமா? அப்படியானால் அதிக பட்சமாக எத்தனை நாட்கள் 13 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை இரண்டுமாகவும் இருக்க முடியும்?

  • துப்பறியும் நிபுணர் வேம்பு, ராதிகாவிடம் அவரது குழந்தைகள் பற்றிக் கேட்டார். "எனக்கு அன்னம், ஆதிரை, இனியான்னு மூணு பொண்ணுங்க... அவங்க எல்லார் வயதின் பெருக்குத் தொகை 36. கூட்டுத் தொகையோ, எங்கள் வீட்டுப் பக்கத்துவீட்டு எண். "

    வேம்பு பக்கத்துவீட்டில் போய் பார்த்துவிட்டு வந்து ராதிகாவிடம், "இன்னும் முழுதாகச் சொல்லவில்லை நீங்கள்" என்றார். "ஓ, மறந்துட்டேன், என் பெரிய பொண்ணு பள்ளிக்குப் போயிருக்கா" என்றாள் ராதிகா.

    "அப்படியானால் சரி" என்றார் வேம்பு. அவர்களது வயது என்ன என்று உங்களுக்குத் தெரிகிறதா?

  • அருகில் இருக்கும் படத்திலிருந்து மூன்று தீக்குச்சிகளை எடுத்தபின் ஒரே பரப்பளவிலான மூன்று முக்கோணங்கள் மிஞ்சவேண்டும், அந்த மூன்று முக்கோணங்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டியும் இருக்க வேண்டும். முடியுமா?



  • ராமு அவன் டியுசன் வாத்தியார் சரவணனைப் பார்க்க இந்த மாதம் போயிருந்தான். சரவணனுக்கு மிக்க மகிழ்ச்சி, "அட, ராமுவா, வா! வா! ஆச்சரியம் பாரு, இன்னிக்குன்னு பார்த்து என்னோட பழைய மாணவர்கள் எல்லாரும் வந்து பார்க்கிறாங்க. இப்போ நீ வருவதற்கு முன்னால் கூட மூன்று வேறு மாணவர் குழுக்கள் வந்து போச்சு. அதுல பாரு, ஒவ்வொரு குழுவிலுமிருந்த மாணவர் எண்ணிக்கை வேற வேற. எல்லாக் குழுவின் எண்ணிக்கையையும் சேர்த்துப் பெருக்கினால், அதன் பெருக்குத் தொகை இன்னிக்கு தேதி தான். எங்கே, ஒவ்வொரு குழுவிலும் எத்தனை பேர் இருந்தாங்கன்னு சொல்லு பார்ப்போம்.." என்றார்.

    "இது ஏதடா, இவர் நம்மை விட மாட்டார் போலிருக்கே" என்று நினைத்துக் கொண்டாலும் கணக்குப் போடத் தொடங்கினான் ராமு. தேதியைப் பார்த்தபோது, நான்கு வெவ்வேறு பதில்கள் சாத்தியம் என்று தெரிந்தது. சரவணன் சாரிடம் இன்னும் ஒரே ஒரு கேள்வி கேட்டதற்கு சார் "இல்லை" என்று சொல்லிவிட்டார். இதைச் சொன்னது தான் தாமதம், நம்மாள் பட்டென்று விடை சொல்லிவிட்டான்.

    ராமு சரவணனைப் பார்க்கப் போனது என்ன தேதி? சரவணன் சார் கேட்ட கேள்விக்குப் பதில் என்ன? சரவணன் சாரிடம் ராமு கேட்டது என்ன கேள்வி?

[பிற்சேர்க்கை: இந்தப் புதிரில் குழு என்பதை batch என்ற பொருளில் படிக்கவேண்டும்..]


தலைப்புக்கு காரணமா? என்னங்க நீங்க? இன்னுமா அதை மறக்கலை? ;)

அதான் தேதியில் ஆரம்பிச்சி மாசத்துல முடிச்சிருக்கேனே!

Wednesday, August 02, 2006

100%

நானும் ஜோதியில்..

1.

அன்புத் தோழி தயா


2.

நித்தியா

3.

ஜெயந்தி சங்கர்

4.

துளசி கோபால்

5.

ராமசந்திரன் உஷா

6.

ஜெஸிலா

7.

சந்திரவதனா

8.

லிவிங் ஸ்மைல் வித்யா

-- கண்டனங்களுடன்

கண்டுபிடிக்கலாம்.. க்ளூக்கள் தேவையில்லை என்றே நினைக்கிறேன்..

தேவையானால், பின்னால்..

---விடைகள் சேர்க்கப் பட்டது

Tuesday, May 09, 2006

11. தேறுமோ தேர்தல் கணிப்பு (வெ.வ.வா)

வ.வா.சங்கம் தேர்தலுக்குப் பிறகு என்ன ஆச்சு என்று வருத்தப் படும் அன்பர்களுக்காக வ.வா.சங்கத்தின் பொதுக் கூட்ட அறைக்குள் ஒரு சிறு பார்வை:

சங்கத்தின் தலை கைப்புள்ள தலைமை ஏற்கும் இலக்கண மன்றம்

கைப்பு: ஏம்மா பொன்ஸு, இப்போ, எலக்கணம் கத்து இங்ஙன இருக்குற பசங்கள்லாம் என்ன பண்ணப் போறாங்க? எதுக்கு இந்தக் கூட்டம்?

சிபி: இல்ல தல, ஏதோ இப்ப கத்துகிட்டாலாவது, அடுத்த தேர்தல்ல நல்லபடியா திருத்தமா அறிக்கை விடலாம்ல..

கைப்பு: சரி சரி.. என்னாத்த சொல்லப் போற?

பொன்ஸ்: இன்னிக்கு நாம பாக்கப் போறது, சொல் இலக்கணம்.. அதுல புணர்ச்சி விதிகள்.

ஜொ. பாண்டி: அக்கா, அற்புதமான டாபிக்கா எடுக்கறீங்கக்கா.. நீங்க அறுக்கப் போறீங்கன்னு வந்தேன்.. ஆற்றலரசி பொன்ஸ் வாழ்க.

பேராசிரியர் கார்த்திக்: வாழ்க வாழ்க.!!!

பொன்ஸ்: ரொம்ப உணர்ச்சி வசப்படாத பாண்டி, இது, ரெண்டு சொல்லைச் சேர்க்கும் போது எங்கெல்லாம் ஒற்று வரணும், எங்க வரக் கூடாதுங்கற பாடம் இது.

ஜொ. பாண்டி: அவ்வளவு தானா?!! ம்ஹும்.. (சோகமாகப் பாட ஆரம்பித்து விடுகிறார்) குயிலப் பிடிச்சி கூண்டிலடைச்சு கூவச் சொல்லுகிற உலகம்!!!

பொன்ஸ்: நண்பர்களே, பாண்டி இப்போது உருகி உருகிப் பாடிய பாட்டையே எடுத்துக் கொள்வோம்:

கூவச் சொல்லுகிற: இந்தப் பதத்தில், கூவ என்பது நிலைமொழி, சொல்லுகிற என்பது வருமொழி. நிலைமொழி கடைசி எழுத்தும், வருமொழி முதல் எழுத்தும் எப்படிச் சேருதுங்கறதுக்கான விளக்கம் தான் புணர்ச்சி விதி.

கூவச் சொல்லுகிற இதைப் பிரிச்சா, கூவ + ச்+ சொல்லுகிறன்னு வரும். இந்த 'ச்' ஒற்று. வினையெச்சத்துக்கு முன்னாடி க, ச, த, ப இந்த எழுத்துக்கள் வந்தா, ஒற்று வரும்.

பார்த்திபன்: அம்மணி பொன்ஸு, வினையெச்சத்தப் பத்திப் பேசி உனக்கு நீயே வினைய வரவழைக்கிற.. இப்போ இந்த "குயிலப் பிடிச்சு, கூண்டில் அடைச்சு கூவ" இதுல, பிடிச்சு, அடைச்சு எல்லாமும் வினையெச்சம் தானே? இதுல ஏன் உங்க ஒற்றர்கள் வரலை?

பொன்ஸ்: நல்ல கேள்வி பார்த்தி!!

கட்டத்துரை: கேள்வி புரியலைன்னா நல்ல கேள்வின்னு சொல்லிடுவீங்களே!! நல்ல தல, நல்ல தொண்டர்..

பொன்ஸ்: இந்த விதிக்கு ஒரு விலக்கு இருக்கு. 'அ','இ','ய்' இதுல முடியும் வினையெச்சங்களுக்குத் தான் ஒற்று மிகும். இங்க 'பிடிச்சு', 'அடைச்சு', இவை எல்லாம் 'உ' வில் முடியுது. அதான் இதுக்கு ஒற்று வரலை.

பெருசு ஏதோ இல்லை என்று தலையாட்டியபடி இருக்கிறார்.
பொன்ஸ்: பெருசு, என்னாச்சு? என்ன யோசனை?

பெருசு: குயிலப் பிடிச்சு.. இதுல இருக்கிற 'ப்'ஐப் பத்தி சொல்லாமயே விட்டுப் போச்சே!!!

பார்த்தி (சரளாக்காவிடம்): பெருசு, நம்மாளா, வவாசவா?

சரளாக்கா: எப்படி இருந்தா என்ன?.. மடக்கிட்டாரில்ல...

பொன்ஸ்: அது சரியான சந்தேகம்.

சரளாக்கா: ம்ஹும், வெளக்கம் சொல்லுன்னா.. !!!

பொன்ஸ்: குயிலப் பிடிச்சு, இதை குயிலை+ ப்+பிடிச்சுந்னு பிரிக்கலாம். இதுல இரண்டாம் வேற்றுமை விகுதி 'ஐ' வருதில்லையா, இரண்டாம் வேற்றுமையிலும்(ஐ), நான்காம் வேற்றுமையிலும்(கு) ஒற்று வரும். அதனால தான் அங்க ப் வருது..

கைப்பு: எலே பாண்டி, நீ பாடின ஒரு பாட்டுல இத்தனை விதியா!!
அண்ணனைப் பாராட்டி அடுத்த பாட்டு பாடு பாக்கலாம்.

பாண்டி: "சிங்கமொன்று புறப்பட்டதே " என்று பாட ஆரம்பிக்கிறார்

பார்த்தி(இதைப் பொறுக்காமல்): "அடிவாங்க, சிங்கமொன்று புறப்பட்டதே-
உதை வாங்க சிங்கமொன்று புறப்பட்டதே"

என்றபடி கைப்புவை அடிக்க ஓடுகிறார். கைப்பு பயந்து போய் அப்படியே எஸ்கேப்பாக, ஜொ.பாண்டிக்கு அவரது உடன்பிறப்பிடமிருந்து அழைப்பு வருகிறது புதுத்துணி வாங்க வேண்டும் என்று. "இதோ வந்துட்டேன் தங்கச்சி" என்று அவரும் ஓட எல்லாரும் கட்சியின் விதிப்படி மூலைக்கொருவராகச் சிதறி ஓடுகிறார்கள்.

கவிதா, நீங்க சங்கத்துல என்ன பண்றாங்கன்னு கேட்டுகிட்டே இருந்ததினால சங்கத்தின் உருப்படியான செயல்பாடுகளைப் பதிவு பண்ணிட்டேன்.

அப்படியே இது "வெண்பா வடிக்கலாம் வா"வோட தொடர்ச்சிங்கறதுனால, இந்த வார ஈற்றடி

"தேறுமோ தேர்தல் கணிப்பு"

இது நம்ம வெண்பா:


ஊருளோர் பொய்களை ஒட்டிக் கணித்தாலே
தேறுமோ தேர்தல் கணிப்பு?!!!

Friday, April 21, 2006

கட்டுங்க கட்டுங்க..

ப.ம.கவைப் பாத்து "கதை கட்டுங்க கட்டுங்க"ன்னு சொல்றா மாதிரி இருந்தாலும், இந்தப் பதிவோட நோக்கம் அது இல்ல..

கௌசிகன் திடீர்னு காணாம போய்ட்டதுனால, நானே ஒரு கட்டம் போட்டு நிரப்பிப் பார்த்தேன்.. சரி, நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு பதிவிலயும் போட்டுட்டேன்.




குறிப்புகள்:

எல்லாத்துக்கும் பொதுவான குறிப்பு, இதுல வர்ற எல்லாம் பதிவாளர்களின் பெயர்களே, அவங்களே வச்சுகிட்ட பேராகவும் இருக்கலாம், அன்பா வைக்கப்பட்ட பேராகவும் இருக்கலாம்.. :

குறுக்கு

1. 125:360 :: 150:84 - இப்போதைய நிலவரம்(6)
3. ஆங்கிலத்தில் பாதி இல்லை; தமிழில் திருப்பினாலும் நிறையவில்லை (2)
5. கமண்டல நீரில் ஆறு தந்தான் ஒரு முனிவன்; ஆற்றில் பாலம் கட்டுகிறான் இந்த முனிவன் (4)
7. உலகம் சுற்றுபவர் இப்போ கட்டத்தில் (8)
11. ரோஜா, பூக்கட்டினார்; பாக் கட்டுவார்; பாதிதான் கிட்டினார் (5)
12. நல்ல மனசுய்யா உமக்கு (3)
13. விட மாட்டாரா இவரு (4)
15. திருப்பித் திருப்பிப் பேசுவார் 'அவன்' (6)

நெடுக்கு

2. ஒரு பேர்; ரெண்டு பேர்; மூணு பேரா - சீ சீ, போலிகளைக் கண்டு ஏமாறாதீர்(4)
4. பொய்யில்லை (3)
6. காப்பி இல்லாமலா காலை உணவு? (5)
8. இவர் காவியம் செய்தால் வாசிப்பது மனிதர்கள் மட்டும் தானா? (7)
9. கட்டம் போட்டியா, ஒட்டு போட்டேனே!
பக்கம் இல்லையே என்னைக் கட்டிபோட (3)
10. இடிதாங்கும் இளைஞர்; பாசக்கார தலைவர் (5)
14. வெள்ளை ஒளியில் பிள்ளை விளையாட்டு (2)

எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் நான் எழுதி இருக்கேன்.. ஏதாச்சும் தப்பு இருந்தா மன்னிச்சிடுங்க... ஈஸியா இருக்கும்னு தான் நினைக்கிறேன்...