Showing posts with label சந்திப்பு. Show all posts
Showing posts with label சந்திப்பு. Show all posts

Monday, April 23, 2007

சென்னை வலைபதிவர் சந்திப்பு 22-ஏப்ரல்

சரியாக மூன்று முப்பதுக்கு நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்ததால், எப்படியும் தொடங்கி இருக்க மாட்டார்கள் என்று பாலபாரதிக்கு போன் அடித்துக் கேட்டால், "தொடங்கியாச்சும்மா.. எல்லாரும் வந்துட்டாங்க.. நீங்க வரலையா?" என்றார்.

"இந்த வெயிலிலா?" என்று கேட்க நினைத்து பயந்து கேட்காமல் அவசர அவசரமாகக் கிளம்பினேன்.

சாகரன்
தேன்கூடு சாகரனுக்கு நினைவஞ்சலிகளுடன் தொடங்கியது பதிவர் சந்திப்பு. தொடர்ந்து சென்னபட்டினம் குழு சார்பாக சாகரன் நினைவுமலர் வெளியிடப்பட்டது. மா.சிவகுமார் மலரை வெளியிட, சாகரனின் உற்ற தோழர் பாலராஜன் கீதா பெற்றுக் கொண்டார்.

அடுத்து, சிறில் அலெக்ஸ் தேன்கூடு பெட்டகம் பற்றிப் பேசினார். இதெல்லாம் முடிந்த பின்னால் தான் நான் பூங்காவுக்குப் போய்ச் சேர்ந்ததே! ;)

மாற்று! - சிறில்
அடுத்தபடியாக பாஸ்டன் பாலாவை "ஸ்னாப் ஜட்ஜ் ஏன்? எதற்கு?? எப்படி???" என்று கேள்விகளால் துளைத்தோம். மாற்று! பற்றியும் பேச்சு வந்தது. மடை திறந்த வெள்ளம் போல் பேசினார் சிறில். பதிவர் சந்திப்பு நிகழ்ந்த மூன்று மணிநேரமும் முழு உற்சாகத்தோடு சோர்வடையாமல் எந்த தலைப்பானாலும் பேசியது சிறில் அலெக்ஸ் மட்டும் தான்:)

"மாற்று! தளத்தை இன்னும் சம்பிரதாயமாக, விளம்பரப்படுத்தி நிறுவவில்லை" என்பது சிறிலின் எண்ணம். "மாற்று! தளத்தில் பக்கங்களில், இன்னும் அதிக பதிவுகளைக் காட்சிப்படுத்தலாம்" என்றும் சொன்னார்.

வலைபதிவர் உதவிப்பக்கம் - விக்கி
அடுத்தபடியாக, "தமிழ்வலைபதிவர் உதவிப்பக்கத்தின்" செயல்பாடுகள் குறித்து விக்கி பேசினார். "நாமாக விதவிதமாகப் பதிவுகள் இடுவதை விட, பயனர்களின் கேள்விகள் என்று ஏதும் இருந்தால், அவற்றுக்குப் பதில் சொல்லும் விதமான இடுகைகள் இடலாம்" என்று சிறில் சொன்னார். "பதிவர் உதவிக்குழுவைச் சேர்ந்த எல்லாருக்கும் வசதியான ஒரு வாரத்தைத் தேர்ந்தெடுத்து பதிவர் குறைகேட்கும் வாரம் போல எல்லாருக்கும் உள்ள கேள்விகளைச் சேகரிக்கலாம்" என்றேன். எவ்வளவு தூரம் சாத்தியம் என்று பேச வேண்டும்.

ப்ளாக் கேம்ப் : வலைபதிவுக்கும் சமூகத்துக்கும் ஒரு பாலம் - ஓசை செல்லா
ஓசை செல்லா கோவையில் தான் நடத்த திட்டமிட்டிருக்கும் ப்ளாக் கேம்ப் பற்றிப் பேசினார். "வலைபதிவுகளை எழுதுபவர்களே படிப்பவர்கள் என்ற நிலையை மாற்றி நம்மைத் தவிர்த்த சமுகமும் வலைபதிவுகளைப் படிக்கத் தொடங்கும் பொழுது தான் இவற்றிற்கு ஒரு பயன் இருக்கும். அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக கோவையில் நடத்தப் போகும் ப்ளாக் கேம்ப் வழிவகுக்கும்" என்றார் செல்லா.

அடுத்து மாற்று!, கூகிள் ரீடர் சேவைகள் குறித்து நான் பேசுவதாக இருந்தது. ஏற்கனவே சிறில் பேசியதைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள வசதியான தலைப்பாகையால், ரொம்ப சுலபமாகப் போய்விட்டது.

வலைபதிவுகள் சிந்தனைக் கிட்டங்கியாக வேண்டும்: தருமி
பாதிப் பேச்சுக்களிடையிலேயே புகைக்கப் போன சிலர்(பலர்?) மீண்டு வந்தபின், தருமி தன்னுடைய வலைபதிவு அனுபவங்களைப் பேசினார். பல்வேறு பின்னணிகளிலிருந்து வந்திருக்கும் இளைஞர்கள் இத்தனை விஷயஞானம் உள்ளவர்களாகவும், சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும் இருப்பதை வியந்த தருமி, வலைப்பதிவுகளில் உள்ள சிந்தனை ஒரு சிந்தனைக் கிட்டங்கியாக(thinktank), மாற வேண்டும் என்று விரும்பியதாகவும் பல்வேறு விதமான சிந்தனைகள் கலக்கும் இவ்விடத்தில் அதுபோன்ற ஒருமித்த கிட்டங்கி என்பது சாத்தியமில்லை என்று இப்போது உணருவதாகவும் கூறிய போது, வெவ்வேறு எண்ணங்களுடைய வெவ்வேறு சிந்தனைகளின் வெளிப்பாடான இந்த வலைப்பதிவுலகமே சிறந்த கிட்டங்கி என்ற எதிர்க்கருத்து பலரிடமிருந்து வந்தது. ஒரே கருத்தை முன்வைத்து சிந்தனைக் கிட்டங்கி என்று அழைப்பதை விட, பல்வேறு கருத்துக்களும் இருக்குமிடத்தில் வந்து படிப்பவர்கள், எது சரி, எது தவறு என்பதைத் தத்தம் அனுபவங்கள், கல்வி, அறிவு சார்ந்து சிந்தித்து சீர்தூக்கி முடிவெடுப்பதே சரியானதொரு சிந்தனைக் கிட்டங்கியின் செயலாக இருக்கும் என்பதே என்னுடைய கருத்தும்.

அடுத்தபடியாக தருமி சொல்லிய ஒருவிசயம் அமுகவின் கொள்கைக்கு விரோதமாக இருந்தாலும், பதிந்தே தீரவேண்டும்.. "அனானி முன்னேற்றக் கழகம்னு எல்லாம் சொல்றீங்க, ஆனா, ஒரு பதிவுல கருத்து சொல்லணும்னா, ஏதாவது ஒரு புனைப்பேரோடவாவது வந்து சொல்லுங்க.." என்ற பேராசிரியரின் கருத்துக்கு அமுக தலைகள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கும், எல்லாரும் அறிந்த புனைப்பெயரில் சொல்லாமல் ஏதோ அந்தச் சந்தர்ப்பத்துக்குத் தோன்றிய ஒரு புனைப்பெயரில் வருவதற்கும், அனானிமஸாக வருவதற்கும் அதிக வித்தியாசம் ஏதும் இல்லையே தருமி? எப்படி இருந்தால் என்ன?

மாணவர்களை வலைபதிவுக்குள் அழைத்துவர வேண்டும்
தருமியின் சிந்தனைக் கிட்டங்கி யோசனையை ஒட்டி, அப்படிச் சமூகத்துக்கும் சென்று சேர வேண்டுமானால், மாணவர்களை வலைபதிவுக்கு அழைத்து வருவதே வழி என்று விவாதம் திசை திரும்பியது. ஏற்கனவே சிலர் அதற்கான பணிகளில் ஈடுபட்டிருப்பதாக பாலபாரதி சொன்னார். "நிறைய பேருக்குத் தமிழில் எழுதலாம் என்பதும், அது இத்தனை சுலபம் என்பதும் தெரியவே இல்லை" என்று ஆதங்கப்பட்ட செல்லா, "கோவையில், ஒவ்வொரு இணைய மையத்தின் வாயிலிலும், தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், சுரதாவின் எழுத்துரு மாற்றி இவற்றின் உரலை ஒரே ஒரு நாள் ஒட்டியதற்கே ஹிட்ஸ் எகிறியது. இது போன்ற விவரங்கள் அடங்கிய போஸ்டர்களைச் சுலபமாக வடிவமைத்து அவரவர் இருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள இணைய மையங்களில் ஒட்டி வைக்கலாம். இணைய மையத்தின் பொறுப்பாளர்களுக்கும் இந்த சைட்களை அறிமுகப்படுத்தினாலே பலருக்கும் அவர்களே பரப்பிவிடுவார்கள்" என்றும் சொன்னார்.

மாணவர்களைத் தமிழ்ப் பதிவுலகுக்கு அழைத்துவரும் அளவுக்கு பதிவுலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா? என்று அடுத்த தலைப்புக்குச் சென்றது விவாதம். "என்னுடைய பதிவெல்லாம் மாணவர்கள் படிக்கிற சமாச்சாரமே இல்லை!" என்று சுய வாக்குமூலம் கொடுத்தார் செல்லா. அதையொட்டி சிவக்குமாருக்கும், செல்லாவுக்கும் சின்ன விவாதம் நடந்தது.

சிறுவர் திரட்டி- அனானி
"படிக்கும் மாணவர்கள் தமிழ்ப்பதிவுகளுக்கு வரவேண்டும் என்று எங்கோ இருப்பவர்களைப் பற்றிப் பேசுகிறோமே, நம்வீட்டுப் பிள்ளைகளை முதலில் அழைத்துவருவோமே!" என்று நான் கேட்ட போது, "சிறுவர்கள் படிக்கும் அளவுக்கு முதலில் வலைபதிவுகளை ஆரோக்கியமாக்குவோம், அதன்பின் அவர்களை அழைத்துவருவது நல்லது" என்றார் ஓகை. "சிறுவர்களுக்கு என்று தனித் திரட்டி உருவாக்கி, அதை ஓரளவுக்காவது கண்காணித்து வந்தாலொழிய சிறார்களைப் பதிவுலகுக்கு அழைத்து வருவது என்பது எட்டாக்கனி தான்" என்று சொன்னது யார் என்று எனக்கு நினைவில்லை :) ஆனால், சிறுவர் திரட்டி, அதன் கண்காணிப்புக் குழு என்பது மிகவும் ஆரோக்கியமான யோசனையாக தோன்றியது.

எ-கலப்பை குறுந்தகடு இலவச விநியோகம் - ஓகை நடராஜன்
இதற்கிடையே தமிழ் எழுதுகருவிகளைப் பற்றிப் பேசும் போது எகலப்பை போன்ற இலவச கருவிகள் இருப்பது தெரியாமல் விலை கொடுத்து தமிழ்க் கணிமைக்கான மென்பொருளை வாங்குபவர்கள் பற்றிப் பேச்சு எழுந்தது. "எ-கலப்பை போன்ற மென்பொருள் பற்றிய விழிப்புணர்வேற்படுத்த அடுத்த புத்தக கண்காட்சியில் ஏன் இதனை சின்னச் சின்னக் குறுந்தகடுகளாகச் செய்து இலவசமாகத் தரக் கூடாது?" என்று கேள்வி எழுப்பினார் பாலபாரதி. அப்படிச் செய்தால், அவற்றிற்கான செலவைப் பகிர்ந்து கொள்வதாக உடனுக்குடன் வாக்களித்தார் ஓகை நடராஜன். மக்கள் தொலைக்காட்சியின் செய்திகளின் போது இது போன்ற செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று வாக்களித்தார் கௌதம்.

தினமலர், தினத்தந்தி, விகடன், குமுதம் போன்ற தமிழ் ஊடகங்கள் இன்னமும் யூனித் தமிழுக்கு மாறாமல் தனக்கென ஒவ்வொரு விதமான எழுத்துருக்களை வைத்திருப்பதைக் குறித்து இராம.கி ஐயா வருந்தினார். "எப்படியும், நம்மைப் போன்ற நிறைய பதிவர்கள் யூனித்தமிழில் எழுதத் தொடங்கி அதில் பல இணைய பக்கங்கள் வந்துவிட்டால் இவர்களும் மாறிவிடுவார்கள்" என்று கருத்து தெரிவித்தார் மாஹிர்.

இதற்கிடையே மக்கள் தொலைகாட்சியின் ஒளிப்பதிவாளர்களும், குங்குமம் பத்திரிக்கையாளர்களும் வந்து படமெடுத்தார்கள். இன்று காலை 7:30 மணி செய்திகளில் இந்த விவரம் ஒளிபரப்பப்பட்டது.

தருமி பேசி முடித்தவுடன், கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சிதறி, தனித்தனியான கலந்துரையாடல்களாகிவிட்டது. சிந்தாநதியின் தமிழ்நாடு டாக் பட்டிமன்றங்களில் பங்கு பெற்று, வெற்றி பெற்ற இனியன், நந்தா மற்றும் எனக்கும் வரவேண்டிய பரிசுகளை அளித்தார்கள். தொடர்ந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டவுடன் கூட்டம் பல்வேறு பிரிவுகளாகக் கலைந்தது.

தேநீர் சாப்பிடலாம் என்று சொல்லி பின்புற வாயில் வழியாக அழைத்துச் சென்று ஒரு கடையும் இல்லாமல் வெட்டியாக நேரம் செலவழிக்க வைத்த பாலாபாய்க்கு, வழக்கம் போல கண்டனங்களுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.

பங்கேற்றவர்கள் விவரங்கள்: (என்னுடைய மொக்கை குறிப்புகளோடு ;) )
1. உங்கள் நண்பன் சரவணன் : இந்த முறை சந்திப்பு கொஞ்சம் புரிகிறாற் போல இருந்தது என்று கடைசியாக வாக்களித்தார். ;)
2. மா. சிவகுமார்
3. தருமி - "தாத்தா முறுக்கெல்லாம் சாப்பிட முடியுமா?" என்று கிண்டல் செய்ததில், சிவக்குமாரின் முறுக்கையும் மிடுக்காகக் கடித்து தூள் பண்ணிவிட்டார்..
4. வினையூக்கி - எப்போதோ வாக்கு கொடுத்த ஐநூறு ரூபாய் நன்கொடை என்னிடம் கொடுக்காததனினால் பல மாதங்களாக சரியாக தூங்காமலிருந்தவர், கடைசியாக நேற்று நன்றாக தூங்கி இருப்பார் என்று நினைக்கிறேன்.
5. ஓகை நடராஜன் - நான் சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல.. லக்கி சொல்லிட்டாரு ;)
6. ஐகாரஸ் பிரகாஷ்
7. பாஸ்டன் பாலா
8. லியோ சுரேஷ்: இன்னும் வலைபதிவு தொடங்கவில்லை என்றார். ஆனால், நிறைய விசயம் வைத்திருக்கிறார். சீக்கிரமே எழுதுவதாக வாக்களித்திருக்கிறார்.
9. விக்கி
10. சிறில் அலெக்ஸ்: மொதல்லயே சொல்லிட்டேன். சோர்வடையாமல் பேசி முழு உற்சாகத்தோடு நிறைய கருத்துக்கள் பகிர்ந்து கொண்டது சிறில் தான். மக்கள் தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டி உட்பட பல விசயங்களை எந்த முன்னேற்பாடும் இல்லாமல் அழகாக சொல்லிக் கொண்டே இருந்தார்.
11. பாலராஜன் கீதா : இரண்டு நாட்களாக, "பதிவர் சந்திப்புக்கு வாங்க, நினைவு மலர் நீங்க தான் வாங்கிக்கிடணும்" என்று டார்ச்சர் பண்ணிக் கொண்டே இருந்தேன் ;). கடைசியில் நான் லேட்..
12. இராம.கி ஐயா
13. லக்கிலுக்: செக்கச் செவேலென்று ஒரு டீசர்ட் போட்டுவந்து தருமியின் கருப்பு டீசர்ட் பக்கத்தில் நின்று அவ்வப்போது கட்சிப் பாசம் காட்டிக் கொண்டே இருந்தார்.
14. நந்தா: நாமக்கல்லார் வலைபதிவு அப்ரண்டைஸ்களுக்காக நடத்திய வகுப்புகளில் கலந்து கொண்டவர்களுள் இவரும் ஒருவர்.
15. உண்மைத் தமிழன்: நான் ஒண்ணும் சொல்றதா இல்லை.. சுகுணா திவாகர் இன்னும் தெளிவாக எழுதிவிட்டார் ;)
16. சுந்தர்: "நினைவு மலர்" என்று கொடுத்ததைச் சரியாக பயன்படுத்தியவர் இவர் ஒருவர் தான். தனக்கு நினைவில் இருக்கத் தேவையான எல்லார் மின் முகவரியும்/தொலைபேசி எண்ணும் வாங்கி அந்தப் புத்தகத்தில் எழுதிவைத்துக் கொண்டார் ;)
17. ஓசை செல்லா : என்னத்தச் சொல்ல, என்னைப் பாத்து, என்ன்ன்னைப் பாத்து நிறைய மொக்கைன்னுட்டாரு.. செல்லா, நீங்க எங்க தல பாலாவோட போனில் பேசினதே இல்லையா? ;)
18. ப்ரியன்: இப்போதும் கூட நிறையபேர், ப்ரியனையும், விக்கியையும் குழப்பிக் கொள்கிறார்கள். சந்திப்பில் கூட யாரோ இதே போல் அவரிடம் வந்து இவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.
19. சு.க்ருபாசங்கர்: மோகன் தாஸுடன் சீரியஸாக கணினி தொழிற்நுட்பங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். இரும்படிக்கும் இடத்தில் கொஞ்சம் நேரம் உட்கார்ந்துவிட்டு, தலைக்கு எட்டாமல் போகவும் பறந்துவிட்டேன்.
20. மோகன்தாஸ்: அக்கா மீது ஏன் இத்தனை பாசம் என்று எனக்கு இப்பதான் புரியுது ;) தினமும் உங்கள் கூந்தலை அள்ளி முடிந்து விடும் அக்கா மீது அந்தப் பாசம் இல்லாம போகுமா :))) [உடனே பெண்கள் மட்டும் தான் கூந்தல் வளர்க்கணுமா என்று வந்துடாதீங்க, இது ச்ச்சும்மா விளையாட்டுக்குத் தான் :)) ]
21. ஜி.ராகவன் : சீக்கிரமே கிளம்பிவிட்டார், ஜி.ரா வந்ததுக்கே நன்றி சொல்லணும்..
22. முத்து தமிழினி
23. பகுத்தறிவு
24. பொன்ஸ்
25. We the People
26. ஜே கே : சிபியின் நண்பர். இந்தச் சந்திப்பில் பாகசவில் சேர்ந்த கன்னிச்சாமி ;)
27. நாமக்கல் சிபி : புதுப் புது பதிவர்களாக பாகசவில் சேர்த்துக் கொண்டே இருக்கிறார்..
28. விஜயராஜ்
29. மாரிக்கனி
30. மாஹிர் : கூகிளிலும் கூட்டாக சாட் செய்வதற்கு ஒரு புதுக் கருவியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் தமிழூற்று மாஹிர்.
31. நவீன் பிரகாஷ்
32. தமிழ்வாய்ஸ்
33. 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்
34. யோசிப்பவர்: "ஹிந்தியில் நேரடியாக வலைபதிவு செய்யும் தொழில்நுட்பத்தை ப்ளாக்கர் அறிமுகப் படுத்தியிருப்பதை ஏன் தமிழிலும் நாம் செய்ய முடியாது?" என்று கேட்டுக் கொண்டிருந்தார். அத்தனை ஆழமான நுட்ப அறிவு இல்லாததால், க்ருபாசங்கரைக் கைகாட்டிவிட்டேன் ;)
35. நிலாரசிகன்
36. தங்கவேல்: அந்த ஹெல்மெட்டை விடவே மாட்டீங்களா? பூங்கா மண்ணிலும் பாதுகாக்கணுமா?
37. மிதக்கும்வெளி: நடை பாதையில் வாக்கிக் கொண்டிருந்தவர்களைக் கவனித்த அளவுக்கு இவருக்குக் கூட்டம் ரசிக்கவில்லை. சுற்றுப்பாதையில் நடந்து கொண்டிருந்த கருப்பு டிசர்ட் பெண்(இதுலயும் கருப்பா? ;) ) இல்லாமல் இருந்திருந்தால், சீக்கிரமே எஸ்கேப் ஆகி இருப்பார் என்று தோன்றியது ;)
38. செந்தில்
39. WeeBee
40. ஜி. கௌதம்: தொலைக்காட்சிக் குழுவை அழைத்து வந்ததோடல்லாமல், சந்திப்பின் போது "பெண்ணே நீ" பத்திரிக்கை விநியோகத்துக்கும் ஏற்பாடு செய்திருந்தார் கௌதம்.
41. வடுவூர் குமார்: திடீர் விருந்தினராக வந்து அசத்தியவர் குமார். சிங்கையிலிருந்து விடுமுறைக்காக வந்திருந்தாராம்.
42. சார்லஸ்: புதிய பதிவர். அன்புடன், முத்தமிழ்க் குழுமங்களில் ஏற்கனவே சுறுசுறுப்பாக செயல்பட்டு வருபவர்.
43. யெஸ். பாலபாரதி
இது தவிர, மரத்தின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த இட்லிவடை ;), மற்றும் அவ்வப்போது நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கைதட்டி ரசித்துக் கொண்டிருந்த [நிறுத்த வைத்த ;)] அனானிக் கூட்டம் ஒன்று, மொக்கை தாங்காமல் துண்டை விரித்து எங்கள் கூட்டத்திற்கு மிகச் சமீபத்தில் படுத்து உறங்கிய அனானி ஒருவர்.

சந்திப்பின் பொழுது (என்னிடம்) தொலைபேசியவர்கள்:
1. சந்திப்புக்கு வராமல் எஸ்கேப்பான செந்தழல் ரவி
2. 22ஆம் தேதி பதிவர் சந்திப்பு பற்றிய முதல் பதிவு போட்ட அபி அப்பா
3. அமுக அவுஸ்திரேலிய கிளையை முழுக் குத்தகை எடுத்து நடத்தும் பொட்டீக்கடை சத்யா

நிச்சயம் வந்துவிடுவதாக வெள்ளிக்கிழமை கூட உறுதி கூறிய சிவஞானம்ஜி, சிந்தாநதியின் பரிசை வாங்கிக் கொள்ள வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இனியன், தாயகம் திரும்பிய கப்பி பய, முதல் பதிவர் சந்திப்பு என்று குதித்துக் கொண்டிருந்த பிரின்ஸ், "அடுத்த சந்திப்பில் சாகரன் பற்றிப் பேசுவீங்கன்னா, நான் கண்டிப்பா வருவேன்" என்று வெகு நாட்களுக்கு முன்பே சொல்லிக் கொண்டிருந்த தேவ், பெங்களூரில் இருந்து வருவதாக சொல்லி இருந்த மகேஸ், இவர்கள் எல்லாம், கடைசி நிமிடம் வரை வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.. ஆனால் :((((

Tuesday, December 19, 2006

சென்னை பதிவர் சந்திப்பு - 3

[பனகல் பூங்காவைப் பற்றிய சுறுசுறுப்பைக் குறைக்கும் தகவல்களுடன் செ.ப.ச 2 நாளை.] ஒரு வழியாக பனகல் பூங்கா வேண்டாம் என்று முடிவெடுத்து நடேசன் பார்க்கில் நான்கரை மணி சுமாருக்குக் கூடியது பதிவர் சந்திப்பு. திரு, பாலபாரதி, லக்கிலுக் என்று மூன்று செல்பேசிகளும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க, கிட்டத்தட்ட பனகல் சென்றிருக்கக் கூடிய அனைவரையும் நடேசன் பார்க்கிற்கு அழைத்துவிட்டோம்.



வந்திருந்தவர்கள் மற்றும் அவர்கள் சிறு அறிமுகமாக முன்வைத்த விஷயங்களுடன்:

  1. அருள்குமார்: கதை கட்டுரை போன்ற விஷயங்களை "உணர்வின் பதிவுகள்" என்றும் மற்றபடி தன்னை பாதித்த விஷயங்களை "நான் பேச நினைப்பதெல்லாம்" என்ற வலைப்பூவிலும் எழுதி வருவதாகச் சொன்னார் இவர். பா.க.ச.வின் founder member இவர் தான் என்று சந்துக்குள்ளிருந்து பாலபாரதி பரிதாபமாக குரல் கொடுத்ததை யாரும் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்

  2. வீரமணி: உதவி இயக்குனராக பணியாற்றும் இவருக்கு வலைப்பூ அறிமுகப்படுத்தியது அருள்குமார் என்றும், தம் கவிதைகளுக்காகவே வலைப்பூ தொடங்கியதாகவும் தொடர்ந்து எழுதாவிட்டாலும் அவ்வப்போது வந்து தலைகாட்டி விட்டுப் போவதாகவும் குறிப்பிட்டார். (பொகச முதல் உறுப்பினரான வீரமணியை வலைப்பூக்களில் சேர்த்ததற்காக அருளைப் பார்த்துக் கொஞ்சம் பல்லைக் கடித்துக் கொள்வதைத் தவிர அப்போது வேறெதும் செய்ய முடியாமல் போயிற்று :( )

  3. திரு: கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்ட பின்னணியுடன் கடைசியாக தம்மை அறிமுகம் செய்து கொண்டார் திரு. ஆலமரம், பனித்துளி, பெரியார் என்ற தனது வலைப்பூக்களின் சிறு அறிமுகத்தையும் அளித்தார்.

  4. லக்கிலுக்: கருத்து போன்ற களங்களிலிருந்து வலைப்பூவிற்கு வந்ததாக குறிப்பிட்ட லக்கிலுக், சும்மா டைம் பாஸுக்குத் தான் பதிவெழுதுவதாகக் குறிப்பிட்டார். தன் புதுவருட வாக்குமூலத்தை இன்னுமொருமுறை நினைவுப்படுத்திக் கொண்டார்; அதை நிறைவேற்றுவது எத்தனை கஷ்டமாக இருக்கிறது என்பதையும்

  5. பகுத்தறிவு: அறிவகம் என்ற பெயரில் பதிவெழுதும் பகுத்தறிவும், கருத்துக் களம், தமிழ்நாடு டாக் போன்ற பாரம்களிலிருந்து வந்தவர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். ஏதோ ஒரு நாள் தமிழ்நாடு டாக்கில் ஒரு பதிவைப் பார்த்தபோது, தனக்குப் பிடித்த சில தலைவர்களை அங்கே குறைவாக எழுதி இருந்ததைப் பொறுக்காமல் பதிவெழுதத் தொடங்கியதாக விவரித்தார்

  6. ரியோ: தமிழ்நாடு டாக், கருத்துக் களம் வழியே லக்கிலுக் மூலமாக பதிவுகள் அறிமுகமானதாகச் சொன்னார் ரியோ. பொதுவாக கூட்டத்தில் மிக அமைதியாக இருந்தார்கள் இவ்விருவரும்

  7. சுந்தர்: கடந்த ஒரு மாதமாகத் தான் பதிவெழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்ன சுந்தர், இந்த சந்திப்புக்கு வந்ததே தனக்கு ஏன் பின்னூட்டங்கள் குறைவாக வருகின்றன என்று அறியத்தானாம். வலைப்பூ சண்டைகளைப் பார்த்து பயந்து வெறும் நகைச்சுவை சமாச்சாரமாகவே எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். [நகைச்சுவை என்றதும் பா.க.சவின் பெருமைகளைச் சொல்லிவிடுவோம் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். ஆனால் அதற்குள் தப்பித்துவிட்டார்! ].

  8. விக்கி: ஒருவருடமாகவே தண்டோரா கொட்டிக் கொண்டிருக்கும் விக்கி, தனக்குப் பதிவர்கள் அதிகம் தெரியாது என்றார். சமீபத்தில் தொடங்கப்பட்ட பிளாக்கர் உதவி பக்கத்தைப் பற்றியும் குறிப்பிட்டார்

  9. சிவஞானம்ஜி: தொடர்ந்து பதிவெழுதிக் கொண்டிருந்த தான் இப்போது அதிகம் எழுதாமல் பின்னூட்டங்களில் மட்டுமே வந்து கொண்டிருப்பதாக சோகமாகக் குறிப்பிட்ட சிஜி, தான் இப்போதும் ஜிபோஸ்ட்டில் லக்கிலுக்குடன் தொடர்ந்து போட்டியிடுவதையும் நினைவுப்படுத்தினார்

  10. துளசிகோபால்: "சொல்லிக்கிடற மாதிரி அதிகமில்லை. ரெண்டு வருசமா நானும் பதிவெழுதுறேன்" என்று தனக்கே உரிய அடக்கத்துடன் சொல்லிக் கொண்டார் துளசியக்கா. "முதன்முதல் யானையை வலையுலகுக்கு அழைத்து வந்தவர் நீங்கள் தான்" என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார் பாலபாரதி. "எனக்கு அப்புறம் பொன்ஸுக்குத் தான்" என்று ஏற்கனவே எழுதியிருந்ததை மீண்டும் சொல்லி உறுதி கொடுத்தார் துளசியக்கா. (தாங்க்ஸ் துளசிக்கா..)

  11. தமிழ்நதி: கனடாவிலிருந்து சென்னை வந்திருப்பதாகக் குறிப்பிட்ட நதி "இரண்டுமே எங்கள் சொந்த தேசமில்லை." என்று சேர்த்துக் கொண்டபோது லேசாக மனம் சோகமானது. சென்னை பற்றிய தமிழ்நதியின் பதிவைப் பற்றி ஓகை குறிப்பிட்டுப் பாராட்டினார்.

  12. பொன்ஸ்: நிறைய யானைகள் வைத்திருக்கும் வலைப்பூ என்னுடையது என்று முடிப்பதற்குள், அதனால் தான் லோட் ஆக லேட்டாகுது என்று எல்லா பக்கத்திலிருந்தும் குரல்கள் கிளம்பியது.

  13. மா.சிவகுமார்: லக்கி போல் சும்ம டைம் பாஸுக்கு இல்லாமல், நிஜமான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற முனைப்புடன் பதிவெழுத வந்ததாகக் குறிப்பிட்ட சிவகுமார், தம் எல்லா வலைப்பூக்களின் பெயர், காரணம் போன்ற விஷயங்களைச் சொன்னார்.

  14. யெஸ். பாலபாரதி: "குமுதம், விகடன் இவற்றின் அட்டைப்படத்தில் போடும் நடிகைகள் படம் மாதிரி நானும் வலைப்பூக்களில் இருக்கிறேன்" என்று சொல்லி எல்லாருடைய தன்னடக்கத்தையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார் பாலபாரதி. "இன்றைய தேதிக்கு பாகச அல்லது பாலபாரதி என்று எழுதினாலே பதிவுகளில் ஹிட்ஸ் கூடுவதாகச் சொல்கிறார்கள்" என்று உபரி தகவலையும் கொடுத்து, இதுவரை பா.க.சவில் இல்லாதவர்களையும் "நாம் கூட சேர்ந்துக்கிடலாமே!" என்று யோசிக்கவைத்தார்.

  15. ப்ரியன்: நான் தான் ப்ரியன் என்றவுடனேயே, "ஓ.. காதல் கவிதைகள் எழுதும் ப்ரியனா?' என்று நாலாபுறத்திலிருந்தும் சத்தம் வந்தது. கவிதைகள் எழுதும் ப்ரியன் என்று இவரும் அடக்கம் கொள்ள, விடாமல் யாரோ, காதல் கவிதைகள் என்று அழுத்திச் சொன்னார்கள். "இல்லை.. மற்ற பொருட்களிலும் கவிதை எழுதுவேன்; ஆனால் காதல் கவிதைகள் தாம் அதிகம் கவனம் பெறுகின்றன போலும்" என்று கழன்றுகொண்டார்.

  16. த. அகிலன்: கனவுகளின் உலகம் என்று பதிவெழுதி வருகிறேன் என்றார் அகிலன். போன கூட்டத்தில் மின்னியதற்குத் தொடர்பில்லாமல், இவரும் அமைதியே உருவாக இருந்தார்.

  17. கோ. இராகவன்: "ஆன்மீக விஷயங்கள் சிலது எழுதுவேன். அத்தோட, எங்கயாவது ஊருக்கு போய் வந்தா, படிக்கிறவங்க வெறுத்துப் போகுமளவுக்குத் தொடரா எழுதி போரடிப்பது என் வழக்கம்" என்று அடுத்த தன்னடக்க விளக்கத்தோடு வந்தார் ஜி.ரா.

  18. ஓகை நடராஜன்: "சும்மாத் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்; கொஞ்ச நாளாகத் தான். அதிகம் எழுதும், பொதுவாக பின்னூட்டம் மட்டும் இடுபவன்" என்று அறிமுகம் செய்து கொண்டார் ஓகை. "இதுவரை நான் பின்னூட்டமிடாத பதிவுகளே இருக்க முடியாது. இங்குள்ள அனைவருக்குமே பின்னூட்டம் போட்டிருக்கிறேன்" என்று சொன்னதும், சுந்தர் குறுக்கிட்டு, "எனக்கு இன்னும் யாரும் போடலை" என்று அங்கலாய்த்துக் கொண்டார் (சுந்தர் கவனிக்க, பாலபாரதி சொன்ன யோசனையை முயற்சி செய்து பார்க்கலாம் ;)]

  19. தமிழி: இந்த வார சந்திப்பில் நட்சத்திரம் தமிழி. ஜெய்சங்கரின் மூலம் பதிவுகளுக்கு அறிமுகமான தமிழி, புது ஊருக்கு வந்ததால் நண்பர்கள் அதிகம் இல்லாமல் போன கவலைக்கு வடிகாலாக பதிவெழுதத் தொடங்கியதாகக் குறித்தார். பொதுவாக எல்லா விவாதங்களையும் இந்த முறை தொடங்கி வைத்தவர் இவரே எனலாம். லக்கிலுக்குக்கு ஜிபோஸ்டில் தீவிர போட்டியைக் கொடுப்பவர்களில் தானும் ஒருவர் என்பதையும் சொல்லிக் கொண்டார்.

  20. We the people: "என்னைக் கவர்ந்த அரசியல், சுற்றியுள்ள உலகம் இவற்றைப் பற்றி எழுதவே வலைப்பூ வைத்திருக்கிறேன்" என்பதுடன் மறக்காமல், "பாகசவின் தூண்களில் ஒருவன்" என்பதையும் குறிப்பிட்டார் ஜெய். ஜெய் இருப்பதால் தான் பாகச இன்னும் ஆட்டம் காணாமல் இருக்கிறது என்றால் மிகையில்லை.

  21. நிர்மலா: "அனுபவம் நிகழ்வுகள் என்று எப்போதாவது எழுதுவது என்வழக்கம்" என்றார் நிர்மலா. "அடுத்த கூட்டத்திற்கு வரும் முன்னராவது கொஞ்சம் வலைப்பூக்களில் என்ன நடக்கிறதென்று தெரிந்து கொண்டு வரவேண்டும்" என்று சொல்லிக் கொண்டார்.

  22. அன்புடன் ச.சங்கர்: முதன் முறையாக கூட்டங்களுக்கு வரும் சங்கரும், தாம் இதுவரை அதிகம் எழுதவில்லை என்றார். கடைசியாக எழுதிய முல்லை பெரியார் பற்றிய கட்டுரை பூங்காவில் இடம்பெற்றதைக் குறிப்பிட்டுத் தம்மை அடையாளம் காட்டிக் கொண்டார்.

  23. சுகுணா திவாகர்: மிதக்கும் வெளி என்ற பெயரில் கவிதை கட்டுரை முதலியவை எழுதி வருவதாகச் சொல்லிக் கொண்டார் சுகுணா. போட்டி சந்திப்பு என்னவாயிற்று என்று கடைசி வரை சொல்லவில்லை :)


அறிமுகங்கள் முடிந்தபின் திரு தமது கையெழுத்து இயக்கத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார். இதுவரை சேர்ந்துள்ள ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துகளுடன் அந்தக் கோரிக்கையையும் இந்திய அரசாங்கத்திற்கோ அல்லது தமிழக அரசுக்கோ அனுப்பலாம் என்று யோசனையை முன்வைத்தார். தமிழி, "இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காவது அரசியல் தலைவர்கள் ஏதேனும் பேசவாவது செய்கிறார்கள், நம்மை மட்டுமே நம்பி வந்து சேரும் அகதிகளை நாம் நடத்தும் விதம் அதை விடக் கொடுமையாக இருக்கிறது" என்று ஆதங்கப்பட்டார். மதுரையில் தான் சென்று நேரில் பார்த்து வந்த அகதி முகாம் ஒன்றினைப் பற்றி அவர் விவரிக்கவும், அதைப் பற்றி என்ன செய்யலாம் என்று பேசப்பட்டது.



"பத்து வருடங்களுக்கு முன்னால் இதைப் போல் பூங்காக்களில் அமர்ந்து இலங்கை பற்றிப் பேசக் கூட நம்மால் முடிந்திருக்காது" என்றார் சிவகுமார். 'சொந்த நாட்டு மக்களையே அகதிகள் போல் நடத்தும் அரசாங்கத்தில் அகதிகளை மதிப்புடன் நடத்துவது கடினமே' என்றார் சுகுணா திவாகர். திபெத்திய, வங்க தேச அகதிகளை மிகவும் நன்றாக நடத்துவதாகத் தான் கண்டு வந்த வட இந்திய அகதி முகாம்களின் நிலையைப் பேசினார் பாலபாரதி.



வலைபதிவர்களுக்குள் ஒரு குழு போல் அமைத்து அகதி முகாம்களைப் பார்வையிட்டு வந்தால், எல்லாரும் சேர்ந்து தெரிந்தவர் அறிந்தவர் வட்டத்தில் விவரம் தெரிவித்து இன்னுமொரு கையெழுத்து இயக்கம் தொடங்கலாம் என்ற யோசனையை முன்வைத்தார் தமிழி. அதற்கான ஏற்பாடுகள் என்னவென்பதைக் கண்டு சொல்வதாக பாலபாரதி சொன்னார். வலைபதிவர் குழுவென்றால், அதில் யார் யார் இருக்க வேண்டும் அந்த ஐந்து ஆறு பேருக்கு ஒரே சமயத்தில் நேரம் கிடைக்குமா என்றெல்லாம் விவாதம் நீண்டது. எப்படியும் வெளியாட்கள் யாரையாவது சேர்த்துக் கொண்டுதான் போக வேண்டி இருக்கும் என்றார் பாலபாரதி.



வெளிநாட்டினருக்குத் தெரிவதை விட ஈழம் குறித்த பிரச்சனைகள் இந்திய நாட்டினருக்குத் தெரிவது மிக மிகக் குறைவே என்றார் திரு. பெல்ஜியத்தில் தெரிந்து வந்த விஷயங்கள் தாம் இன்னமும் தான் பேசிக் கொண்டிருக்கும் ஈழ நிலை என்று அவர் சொன்னபோது ஈழப் பிரச்சனையில் ஊடகங்களின் பங்கு எத்தனை குறைவாக உள்ளது என்பதை எல்லாரும் உணர ஏதுவாயிற்று.



தமிழி கிளப்பிய அடுத்த பிரச்சனை பின்னூட்ட மட்டுறுத்தல் பற்றியது. தன்னைப் பாராட்டும் விமர்சனங்களை மட்டுமே வெளியிட இந்தப் பின்னூட்ட மட்டுறுத்தல் உதவி செய்கிறது என்பதால் மட்டுறுத்தல் இருக்கக் கூடாது என்றார் தமிழி. மட்டுறுத்தல் இல்லாத காலங்களைப் பற்றிய விவரங்களை அவருக்குச் சொல்லிப் புரியவைக்கவும், அடுத்து தேன்கூடு போட்டியைப் பற்றியும் தனது அதிருப்தியை வெளியிட்டார். ஆக்கங்களைப் படிக்காமலே தெரிந்த பதிவர் பெயர் பார்த்தே ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வழி வகுக்கும் தேன்கூடு போட்டியின் நடைமுறையில் தமக்கு ஒப்புமை இல்லை என்றார்.



முதலில் ஒரு நடுவர் குழு ஆக்கங்களைப் படித்து அவற்றில் முதல் பத்து என்று தேர்ந்தெடுத்துக் கொடுத்து அதன்பின் ஓட்டெடுப்பு என்பது போல் இருந்தால், குறைந்த பட்சம் ஓட்டு போடுபவர்களாவது எல்லாவற்றையும் படிப்பார்கள் என்ற யோசனையை கோ. ராகவனும் ஆமோதித்தார்.



அடுத்ததாக, பதிவர் சந்திப்பு பற்றிய விவரங்கள் லக்கிலுக் பதிவில் மட்டும் வந்ததால் அதிகம் பேர் பார்வையிட்டிருக்க முடியாமல் போயிருக்கும் என்றார் ஓகை. தமிழ்மணம்/ தேன்கூடு போன்ற வலைதிரட்டிகளின் முகப்பில் இது போன்ற சந்திப்பின் செய்திகள் வெளியிடலாம் என்ற யோசனையையும் முன்வைத்தார். வலைபதிவர் சந்திப்பு மாதமாகவே ஆகிவிட்ட நவம்பர்-டிசம்பரில் இது போன்ற அறிவிப்புகளை அடுக்குவது நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வி எழுந்தது. என்னைப் பொறுத்தவரை, இது போன்ற சந்திப்புகளைப் பற்றி ஒரே ஒரு பதிவர் அறிவிப்பு கொடுப்பதை விட, தினம் ஒரு பதிவர் என்ற கணக்கில் குறைந்தது மூன்று பதிவர்களின் வலைப்பூக்களில் அறிவிப்பு கொடுக்கலாம்.



முதன்முறையாக பதிவர் சந்திப்புகளில் இனிப்புகள் வழங்கப்பட, அத்துடன் கூட்டம் கலைந்து சின்னச் சின்னக் குழுக்களாக பிரிந்து பேசத் தொடங்கினர். ஏழரை மணிக்குப் பூங்காவை விட்டு நான் வெளியேறும் போது, இன்னமும் பலர் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.



ஆகக் கூடி இந்தப் பதிவர் சந்திப்பின் முடிவுகள்/தீர்மானங்கள்:

  • ஈழ அகதி முகாம்களைப் பார்க்கச் செல்வது பற்றிய விவரங்களைப் பாலபாரதி சேகரித்து அளிப்பார்
  • இனிமேல் பதிவர் சந்திப்புகள் வைத்தால் குறைந்த பட்சம் சந்திப்பு நடக்கும் தினத்திலாவது வலைதிரட்டிகளின் அறிவிப்பு பகுதியில் அவற்றைத் தெரியச் செய்யலாம்.- வேறு யோசனைகள் இருந்தாலும் பின்னூட்டத்தில் முன்வைக்கலாம்
  • கையெழுத்து இயக்கத்தில் சேர்ந்த கையெழுத்துகளோடு ஐநா தலைவர்களுக்கு திரு நமது முறையீட்டை அனுப்பி வைப்பார்
  • சுந்தரும் தமிழியும் தீவிர பாகச உறுப்பினர்களாகச் செயல்படத் துவங்குவார்கள் (தமிழி பூங்காவிலேயே தொடங்கிவிட்டார் :) )


இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வதென்னவென்றால், துளசி அக்கா இன்னும் இங்கே இருப்பதனால், புதுவருடத்தை ஒட்டி இன்னுமொரு சந்திப்பு இருக்கலாம்.

Monday, December 18, 2006

சென்னை சந்திப்பு - 1



தொடர்புள்ள இடுகைகள்:
1. தமிழ்நதி
2. அன்புடன் ச.சங்கர்
3. சிவஞானம்ஜி
4. மா. சிவகுமார்

சூடான செய்திகளுக்கு:

நாமக்கல் சிபி

Friday, June 02, 2006

ஒற்றைச் சிறகில் நின்ற மயிலார்

சோழிங்க நல்லூர்

மே 15, 2006



சென்னையை அடுத்த சோழிங்க நல்லூரில் பிரத்யங்கரா தேவி கோயில் மிகப் பிரசித்தம். பிரத்யங்கரா மற்றுமன்றி சித்திவினாயகர், முச்சந்தி வினாயகர், ஆக்சென்சர் அம்மன் (அதாங்க அந்தக் கம்பனி வாசல்ல பந்தல் போட்டு வச்சிருக்காங்களே) முதலான சிலபல சக்திவாய்ந்த தெய்வங்களும் உள்ளன.



இப்படிப் பட்ட ஆன்மிகச் சிறப்பு வாய்ந்த தலத்தில் தான், ('தமிழ்மண'க்கும் நேரத்தில் மட்டும்) செய்யும் தொழிலே தெய்வம் என்னும் 'கொள்கை'ப் பிடிப்புடைய பொன்ஸின் அலுவலகமும் உள்ளது. இவ்வாறான வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தலத்திற்கு, தமிழ்ப் பதிவுலகின் பிஞ்சில் பழுத்த ஆன்மீகச் செம்மலும், தமது மர்மமான மயிலாருடன் பல்வேறு புண்ணியஸ்தல யாத்திரைகளை அடிக்கடி மேற்கொள்ளும் ஜி.ரா எனப்படும் கோ.ராகவன் சமீபத்தில் விஜயம் செய்தது, பதிவுலகில் பலரும் அறிந்ததே..



'கல்கி' வார இதழில் கைப்புள்ள கட்சி பற்றி வெளிவந்த பொன்னான நாளில், வ.வா.சவின் மின்னல் வேக வளர்ச்சியையும் தலைவர் கைப்புள்ளையையும் பாராட்டவேண்டும் என்று ஜி.ராவின் மயிலார் ஒற்றைச் சிறகை மட்டும் விரித்து அடம்பிடித்த காரணத்தால் வேறு வழியின்றி ப.ம.கவின் பெங்களூர் கிளை கொபசெ ஜி.ராவும், வ.வா.ச.வின் அனைத்திந்திய கொபசெ பொன்ஸை அவரது அலுவலகத்திலேயே (அட, அலுவலக கேன்டீனிலேயே) சென்று சந்தித்தார்.



பழைய ஆறிப்போன செய்தியாக இருந்தாலும், வலையுலக அன்பர்களின் வேண்டுகோளுக்காகவும்(?!), (கனவு) கண்டதை எல்லாம் சந்திப்பு என்று எழுதும் சிலரின்(சிபியின் அல்ல) கொட்டத்தை அடக்கவும், மீண்டும் பழைய நினைவுகளைத் தூசி தட்டி, உங்கள் பார்வைக்கு:* ராகவன் அலுவலகத்தில் வ.வா.சவைச் சேர்ந்த 'புகழ் பெற்ற' மக்களை உள்ளே விடுவதில்லை என்னும் காரணத்தால், சங்கத்தின் கொள்கைகளைப் போன்ற பரந்த மனதும், நிறைந்த இடமும் கொண்ட பொன்ஸின் அலுவலகத்திலேயே இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

  • ராகவன் வழக்கம் போல, இதுவரை வலைபதிவுகளில் இடம்பெற்ற எந்தப் புகைப்படத்துடனும் ஒத்துப் போகாத முற்றிலும் புதிய தோற்றத்தில் வந்திருந்தார்.. அடையாளம் தெரியாமல் "திரு திருவென" முழித்து நின்ற பொன்ஸை எப்படியோ (திரு திரு ?!) அவரே தெரிந்துகொண்டார்

  • மதிய உணவு வேளையாதலால் கிட்டத் தட்ட 500 பேர் பங்கு கொண்ட இந்தக் கூட்டத்தில், ஜி.ரா, பொன்ஸைத் தவிர மற்றவர்களை வலை பதிவர்களுக்கு மட்டுமல்லாது, பொன்ஸுக்கே (அதென்ன 'கே'? அட, எங்க கம்பனியாச்சே!) வேறு யாரையும் தெரியாது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது

  • ராகவன் புதிய தொழிற்நுட்பத்தைச் சேர்ந்த புதுமாதிரியான டிபன் பாக்ஸ் வைத்திருக்கிறார். ப்ளாஸ்டிக்கால் ஆன (ப்ளாஸ்டிக் தானே ஜி.ரா?) அந்த மூன்றடுக்கு சிற்றுண்டி டப்பாவைத் திறக்கும் விதமே புதுமை.. ஒவ்வொரு அடுக்கும் திருகுக் குழல்களோடு அடுத்த அடுக்கின் மேல் பொருந்துவதால், உள்ளே எடுத்து வரப்படும் திரவ உணவு எதுவும் வெளியே சிந்துவதில்லை. புதுமையான அந்த சிற்றுண்டி (பேருண்டி) டப்பாவைச் சற்று உற்று பார்த்துவிட்டு அதன் பின் தான் சொந்த டப்பாவைத் திறக்கவே முடிந்தது.

  • அத்தனை முன்னேற்பாடு இல்லாத காரணத்தால் மெனு பெரிய விதத்தில் சிறப்பாக இல்லை. கூட்டணி பற்றியும் பேச விழைந்ததால் ஜி.ரா மட்டும் ஏதோ ஒரு கூட்டை எடுத்து வந்ததாக நினைவு.. இங்கிருந்து அந்த உணவைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், பொன்ஸ் விடும் பெருமூச்சுகள் கணினித் திரையைப் பாழாக்கிவிட வாய்ப்பிருப்பதால், ஓவர் டூ ஜி.ரா. நியாபகம் இருந்தா எடுத்து விடுங்க..

  • அதிக பட்சம் ஒரு மணி நேரமே நீடித்த இந்தச் சந்திப்பின்போது,
    • மால்கேட்டிலிருந்து மெயிலே வராத போது, கைப்புள்ள கல்கியில் வந்தது எப்படி?

    • இளவஞ்சி வாத்தியாரின் எந்தெந்த வகுப்புகளுக்கு யார் யார் போவது, எந்தெந்த வகுப்புகளை யார் யார் கட்டடிப்பது?

    • ராகவன் அலசிப் பிழிஞ்ச தேர்தல் முடிவுகள் காய்ந்து விட்டனவா?

    • அதே நேரத்தில் சென்னையில் இருந்த தருமியைச் சந்திக்க முடியுமா? (கடைசி வரை முடியவில்லை, ஜூனியர் ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வருவது போல் 'தருமி ரொம்ப பிஸி..')
    • வ.வா.ச., ப.ம.க நல்லிணக்கக் கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?


    என்பது போன்ற நாட்டுக்குத் 'தேவையான' முக்கியமான சங்கதிகள் விவாதிக்கப்பட்டன. மேலும் பல பேசப் பட்டிருந்தாலும், மேலான விஷயமான மெனுவே மறந்து போனதால், மற்ற சங்கதிகள் சுத்தமாக ப்ளாங்க்!! ராகவனுக்கோ மயிலாருக்கோ நினைவிருந்தால் சொல்லட்டும்.



சாப்பாடு முடிந்ததும், அலுவலக வளாகத்தை அதிகம் சுற்றாமலேயே பார்த்துவிட்டு ஜி.ராவும் மயிலும் விடைபெற்றுச் சென்றனர். (அப்பாடா.. ஒருவழியா எழுதிட்டேன் ஜி.ரா. இனியும் நீங்க என்னை மிரட்ட முடியாது!!)