Showing posts with label நட்சத்திரப் பதிவுகள். Show all posts
Showing posts with label நட்சத்திரப் பதிவுகள். Show all posts

Monday, December 04, 2006

சோதனைப் பதிவு :(

தமிழ்மண நட்சத்திரத் திரட்டியில் கடைசி பதிவால் ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்க்க.. ஹி ஹி..

பின்னூட்டப் பெட்டியை மூடிய பதிவு இது :))


நட்சத்திர வாசிப்புரை

பொன்ஸ் என்னிடம் முதன்முறையாக 'இலவசமாய் ஏதுமில்லை' என்ற தனது கதையைப் பற்றி விமர்சிக்கச் சொன்னபோது நான் இப்படி எழுதியிருந்தேன்.

கத நல்லாத்தான் இருக்குது. ரொம்ப இயல்பான நடையில எழுதியிருக்கீங்க. வாசிக்க சுவையாத்தான் இருந்தது. ஆனாலும், கருத்து ரீதியா பார்த்தா எனக்கென்னமோ ராது செஞ்சது, 'குளத்து கிட்ட கோவிச்சுக்கிட்டு எவனோ எதயோ கழுவாம போன' கதயத்தான் ஞாவத்துக்குக் கொண்டு வந்தது.

பொறவென்னங்க.. இவுக கோவிச்சுட்டு போயிட்டா
அவரு வரதட்சணையை வாங்க மாட்டாரா? அழகா, புது்சா, படிச்ச, சம்பாதிக்குற பொண்டாட்டி வர்ற கனவுல இருக்குறவனுக்கு எப்படி வரதட்சணை பெரிய விசயமா இருக்கும்?அதனால அவனுக்கு
எடுத்துச்ட்டுபோட்டு இவங்க 'டயலாக்' அடிச்சுட்டு ஓடிப் போயிட்டாங்களாம்.

என்னமோ போங்க, பொம்பளைங்க கதை எழுதுனா ஆம்பளைங்களுக்கு 'சுருக்' மெச்செஜ் குடுக்குறதா நெனச்சு கதைக்கு சுருக்கைப் போட்டு தொங்க விட்டுடுறீங்க
இப்படிக் காட்டமாகச் சொல்லி இருந்தும் கூட தனது நட்சத்திரப்பதிவுகள் குறித்து என்னை வாசிப்புரை (நன்றி: பாபா) எழுதச் சொல்வதற்கு அவருக்கு உண்மையிலேயே துணிச்சல் அதிகம்தான்.

வழக்கமான தன்னடக்கத்துடன் (வழக்கமான என்றால், பொதுவாக நட்சத்திரங்கள் முதல்பதிவில் தங்களைப் பற்றி அடக்கமாக 'பீலா' விடுவதைத்தான் சொல்கிறேன் :-)) முதல் பதிவைத் துவங்கும் பொன்ஸ் அடுத்த பதிவான 'ப்ளாக்கர் பீட்டா'வை இருண்மையில் இருக்கும் வாசகன் நவீன கவிதை வாசித்து முழிபிதுங்கும் அதே அனுபவத்தைக் கட்டுரையாக வடித்திருக்கிறார். கணினியில் கொஞ்சம் பயிற்சியும், முயற்சியும் உள்ளவர்களுக்கு அதில் நிறைய தகவல்களும் செய்திகளும் அடங்கியிருக்க என்னைப் போன்ற கைநாட்டுகள், 'என்னமோ எழுதிருக்காங்க போல' என்று வேடிக்கை பார்த்ததோடு சரி..

மென்பொருளாக்கத்துக்கும் பல நிலைகள் உள்ளன. முதலில், மென்பொருளுக்கான பயன்களுக்குத்
தகுந்தாற்போல், அதை வடிவமைப்பது, அதன்பின், நிரலி எழுதுவது, கடைசியாக நிரலி வேண்டிய
வகையில் செயல்படுகிறதா என்று அறிய அதனைச் சோதிப்பது. பிளாக்கர் போன்ற இலவச
மென்பொருள்களைச் சோதிக்கும் பொழுது, அதன் இலவச பயனர்களையே இந்த வேலையைச் செய்ய உதவி
கோருவது வழக்கம்
என்று எளிய தமிழில் தொழில்நுட்ப கட்டுரையை அவர் எழுதியிருப்பதும்,அதை வாசிப்பவர்கள் எளிதாக சிரமமின்றிப் புரிந்து கொள்ள முடிகிறதென்பதும் கலைச்சொற்கள் அனாவசியம் என்று சொல்லும் 'தமிங்கலர்களுக்குப்' பாடமாக இருந்தால் நன்று.

புதிதாக ஒரு ஊருக்குப் போகும்போது அந்த ஊரைப் பற்றிய நல்ல விசயங்களை விட எச்சரிக்கையுணர்வை ஊட்டுகிறோம் பேர்வழி என்று கெட்ட விசயங்களை அடுக்கிச் சொல்வதற்கென்றே சிலர் பிறப்பெடுத்திருப்பார்கள்.பொன்ஸுக்கு அந்த மாதிரி ஆட்களின் பழக்கம் அதிகம் போலிருக்கிறது.

பெரும்பாலும் நாம் மனிதர்களை அவர்களது உருவத்தை வைத்தே எடைபோட்டுவிடுகிறோம். 'உருவு கண்டெள்ளாமை வேண்டும்' என்று வள்ளுவர் வேலையத்துச் சொல்லிட்டுப் போனாருன்னு நாமாவே நெனச்சுக்கிடறதால இப்படி. ஆனால், உண்மையில் எல்லா மனுசங்க கிட்டயும் ஏதாவது ஒரு நல்ல குணம் இருக்கத்தான் செய்யும். இதை உணரும்போது அந்த நன்மையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது மனிதம் நமக்குள்ளும் செழிக்கும்.

இந்த உண்மையை அமெரிக்காவில் (நிஜ) அப்பாவி பதிவில்,
சக மனிதரை, மனிதராக பார்க்கும் போது நிறம், இனம், மதம், நாடு என்ற எல்லா எல்லைகளும் தவிடு பொடியாகிப் போகிறது.
என்று அழகாகச் சொல்லியிருக்கிறார். சம்பவங்களை நேர்த்தியாகவும் கோர்வையாகவும் தெளிவாகவும் சொன்ன பதிவு இது.

'லிஃப்ட்' சிறுகதையைப் பற்றிப் பெருசாக சொல்ல ஒண்ணுமேயில்ல. 'வெகுஜனப் பத்திரிகைகளின் தாக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை என்னால்' என்று எழுதாத ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார் பொன்ஸ். கூடவே, 'பெண்புத்தி பின்புத்தி'ங்குறதை இப்படி ஒரு பெண்ணே பெருந்தன்மையோடு ஒப்புக் கொண்டிருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியலை. :-)

ஆனால், இதனை ஒரேயடியாகத் தூக்கிச்சாப்பிடும் விதத்தில், அடுத்த பதிவில் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார் பொன்ஸ். 'பெண் ஏன் அடிமையானாள்? ' பதிவின் மூலம். பெரியார் என்ன சொல்ல வந்தார் என்பதையே புரிந்துகொள்ளாமல் அவரை வசைபாடும் பெரியார் எதிரிகளும், அவரின் சீடர்களென சொல்லிக் கொண்டு பெரியாரின் பெயரை நாசப்படுத்துவோர்களுமாகப் பெரியாரை ஆளாளுக்கு சிறியாராக்கும் பெருமுயற்சி நடக்கும் இந்தச் சூழலில், பெரியாரின் எழுத்துக்களை உள்வாங்கிக்கொண்டு எழுதிய இந்தப் பதிவிற்காக சிறப்பு பாராட்டுக்கள். பெரியாரின் எழுத்துக்கள் அப்படியே ஏற்றுக் கொள்வதற்கல்ல. அவைகளை அவர் தனது கருத்தாக ஆழமாக வெளியிடுகிறார். அதை உள்வாங்கிக் கொண்டு அதனை ஏற்றுக்கொள்வதும் விட்டுத்தள்ளுவதும் அவரவரைச் சார்ந்ததுதான் என்று பெரியாரே சொல்லியிருந்தும் அவர் மேல் வரும் ஆயிரமாயிரம் விமர்சனங்களையும் தாண்டி பெரியார் இன்னமும் வாழ்வது அவரது சொல்லில் இருந்த நேர்மையால்தான். அதனை இந்தப் பத்வின் மூலம் மீண்டும் நிறுவியிருப்பதற்காகப் பொன்ஸைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

மீள்பதிவான 'ஏன்?' சிறுகதை மிக இரசிக்கும்படியாக, இலகுவாகச் சொல்லப்பட்டிருக்கும் கதை. ஒற்றைவரியில் ஏன் என்ற கேள்வியோடு முடியும்போது 'அட!இதுக்குத்தான் இந்த இழுப்பு இழுத்தீங்களாக்கும்?' என்ற கேள்வியை எழுப்புகிறது. எதிர்பாராத அதிர்வை வாசகனிடம் ஏற்படுத்த வலிந்து திணித்து கருத்துச் சொன்னது போன்றொரு உணர்வு. தமிழ் திரைப்பட குழந்தைகளின் பாதிப்பில் அந்தக் குழந்தை பேசும்போது மெலிதான அயர்ச்சி தோன்றத்தான் செய்கிறது. தவிர்த்திருந்தால் சிறப்பான சிறுகதையாக வந்திருக்கும்.

'படம் காட்டுறேன்' - ரொம்பப் படம் காட்டாத பாந்தமான பதிவு.படங்கள் அழகுற வடிவமைக்கப்பட்டிருந்ததும், மிகச் சிறிய அவசியமான குறிப்புகளும் குறிப்பிடத்தகுந்தவை

'பதிவுலகில் பெண்கள்' - பெண்கள் பதிவுலகில் சந்திக்கும் பிரச்னைகளைப் பட்டியலிட்டிருக்கிறார். இது கொஞ்சம் அதிகப்படியான குற்றச்சாட்டுதான். பதிவுலகில் மட்டுமில்லாமல் எல்லா இடங்களிலுமே ஆண்கள் அவர்களை அப்படித்தான் நடத்துகிறோம் என்பதுதான் உண்மை :-) இதனைப் புலம்பலாகப் பதிவாக்கவில்லை என்று பொன்ஸ் கூறியிருப்பது மிக முக்கியமானது. பெண்கள் பொது இடங்களில் எந்தச் சலுகையையும் எதிர்பார்க்கக் கூடாதென்ற வாதத்தில் உண்மை இருந்தாலும், பெண்களுக்கெதிரான சில இடர்ப்பாடுகளை பதிவு செய்த வகையில் இந்தப் பதிவு முக்கியமானது என்பதே என் கருத்து.

'தேன்மாவின் கொம்பத்து' மலையாளப் படத்தில் நெடுமுடி வேணுவும் ஸ்ரீனிவாசனும் சேர்ந்து மோகன்லாலைக் கவிழ்ப்பதற்கு திட்டம் போடுவார்கள். அப்போது ஸ்ரீனிவாசன் ஒரு அபாரமான திட்டத்தைச் சொல்லி, 'என் சிறுபுத்தியில் இதுதான் தோன்றியது' என்பார். 'கண்டிட்டு செறிய
புத்தியானென்னு தோணுன்னில்லல்லோ' என்று நெடுமுடி பதில் சொல்வார். இந்தப் பதிவைப் பார்த்ததும் அதுதான் மனதில் தோன்றியது. 'குழந்தைத்தனமான ஆசை' மாதிரி தெரியலியே?!

எல்லாரும்தான் புத்தகம் வாசிக்கிறோம். வாசித்த அனுபத்தைச் சொல்லி அடுத்தவர்களையும் படிக்கத் தூண்டும் விதம் எழுதுவது ஒரு கலை. சிலர் புத்தகத்தை விமர்சிப்பதை விடவும் தான் என்ன உணர்ந்தேன் என்பதைவிடவும் தங்கள் அறிவுஜீவித்தனத்தைத்தான் முன்னிறுத்துவார்கள். பொன்ஸ் நல்லவேளையாக அந்தக் கொடுமையைச் செய்யவில்லை. எளிமையான வாசிப்பனுவத்தை தோழமையோடு பகிர்ந்திருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது.

எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு கட்டுரை சிறப்பாக வந்திருக்கிறது. ஆனால்,
நோயை ஒட்டுவாரொட்டியாகச் சித்தரித்து, தொடுவதற்கே பயந்த சமூகத்தின் அறியாமை இருளை மொத்தமாக அழித்தெடுத்திருக்கின்றன இந்த அமைப்புகள்.
என்பதெல்லாம் ரொம்ப அதிகம். முன்பை விட நிலை தேவலாம் என்பதுதான் யதார்த்தம். 'மெத்தப்படித்தவர்கள்' நிறைந்த கேரளத்தில் கூட எயிட்ஸ் நோயாளிகளுக்கெதிரான சமூக மனோநிலை இன்னமும் அதல பாதாளத்தில்தான் இருக்கிறது. என்றாலும், சமயமறிந்து வெளியிட்ட கட்டுரைக்காக வாழ்த்துகள்!

நகைச்சுவையாக எதையும் சொல்ல முடியும் என்பதை வலியுறுத்தும் இன்னொரு பதிவு. பதிவுலகச் சிக்கல்களை பா.க.ச மூலம் தீர்த்து வைக்கக் கிளம்பியிருக்கும் நோக்கம் புரிகிறது. எங்க வூட்டுப் பூனை - நல்ல கவுஜை!!

எல்லா விசயத்தைப் பத்தியும் எழுதிடணும்கற முனைப்புல ஒரு மருத்துவ கட்டுரையும் எழுதியாச்சு. இதயம் நிற்காம இருக்கணும்னா என்ன செய்யணும்கற அறிவுரையோட முடிச்சிருக்காங்க - என்னமோ இந்த அறிவுரையைக் கேட்டுத்தான் இதயம் இயங்குற மாதிரி (என்னோட அறிவுரை - கவுஜைகளைப் படிக்காதீங்க!!)

பந்தாக்கள் பலவிதம்னாலும் அதை சுவையா எடுத்துச் சொல்றது கொஞ்சம் கஷ்டமான விசயம்தான். பி.பி. ஸ்ரீனிவாஸ் ஓர் அற்புதமான பாடகர். அவரை அவர்தான் என்று அறியாமலேயே யதேச்சையாக சந்தித்தபோது நிகழ்ந்த சம்பவங்களை பிசிறில்லாமல் சொல்லியிருக்கிறார். என்னடா, ஒரு பெண்பதிவாளரா இருந்து சாப்பாட்டுச் சமாச்சாரங்கள் எதப் பத்தியும் சொல்லலியேன்னு நெனைச்சேன். வந்ததப்பா சரவண பவன்! நடுத்தர மக்களுக்கான நல்ல உணவு விடுதி இல்லாதது குறித்த ஆதங்கத்தை நன்றாகத்தான் பகிர்ந்திருக்கிறார்.

மொத்தமாகப் பார்த்தால் தொழில் நுட்பக் கட்டுரை, கலாய்த்தல், கவுஜை, சிறுகதை, புத்தக விமர்சனம், மருத்துவம், குழந்தைகளுடனான பரிவு என்று தனது பல முகங்களையும் இந்த ஒரே வாரத்தில் காட்ட முனைந்திருக்கிறார்.
பொன்ஸின் எழுத்துக்களில் எனக்கு மிகப் பிடித்த விசயம் கூடுமானவரை ஆங்கிலம் தவிர்த்து எழுத அவர் காட்டும் முனைப்புதான். சிக்கலின்றி, இலகுவாகவும் சரளமாகவும் வாசிக்க வைக்க முடிவதுதான் அவரது எழுத்தின் பலம். சிறுகதைகள் என்று வரும்போது அவர் இன்னமும் கொஞ்சம் வாசிப்பனுவம் பெற்றுக் கொள்வது அவருக்கு நன்மையாக இருக்கும் (வாசகர்களுக்கும் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை :-) )

பதிவுகளையெல்லாம் தெளிவாக எழுதத் தெரிந்தவர் செய்த ஒரே தவறு இந்தப் பதிவுகளுக்கு என்னை வாசிப்புரை எழுதச் சொன்னதுதான். நல்லா இருங்கடே!!

'மாநாடு கண்ட' சாத்தான்குளத்தான்

Sunday, December 03, 2006

சரவணபவனுக்குப் போட்டியாக?

நினைவு தெரிந்த நாள் முதல் சென்னையில் ஹோட்டல் சாப்பாடு என்றாலே சரவணபவன் தான். அவர்களின் உயர்தர சைவ உணவின் சுவைக்கு மாற்றாக ஒரு உணவகம் இருக்கிறதா என்றே தெரிந்து கொள்ள முயன்றதில்லை. குடும்பத்திற்கே மிகவும் பிடித்த இந்த உணவகத்தைப் பொறுத்தவரை நாங்கள் சாப்பிட்டு பார்க்காத கிளைகளே இல்லை எனலாம். "அசோக் நகர் பத்தாவது அவன்யூ எப்படிப் போகணும்?" என்பன போன்ற கேள்விகளுக்குக் கூட அந்தப் பகுதி சரவணபவனை அடையாளமாக வைத்து வழி சொல்வது தான் வழக்கம். அத்தனை தூரம் அந்த உணவகத்துடன் ஒன்றிப் போயிருந்த எங்கள் குடும்பத்தில் முதன்முதலாக ஆட்சேபக் குரல் எழுப்பியது நானே.

விண்ணைத் தொடும் அவர்களின் கட்டணங்களும், மிக மிக மெத்தனமாக வாடிக்கையாளரைக் கவனிக்கும் விதமும், இடவசதியே போதாத அவர்களது கிளைகளும், மற்ற குடும்பத்தவருடன் சில சமயம் மேஜையைப் பகிர வேண்டிய துர்பாக்கியத்தின் காரணமாக வெளியில் சாப்பிடும் மகிழ்ச்சியே காணாமல் போய்விடுவதும் என்று எத்தனை காரணங்களை நான் அடுக்கினாலும் எங்கள் வீட்டாரின் ஒரே ஆயுதம் சரவணபவன் உணவுகளின் மிக அருமையான சுவையும், அவர்கள் பேணிப் பாதுகாத்துவரும் சுத்தமும் தான்.

'சுமார் 25 வருடங்களாக சென்னையின் சைவ உணவு சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னனாக விளங்கும் சரவணபவனுக்குப் போட்டியாக ஏன் இன்றுவரை எந்த உணவகமும் வரவில்லை?' என்ற விவாதம் திடீரென்று எங்களுக்குள் எழுந்தது.




சரவணபவனுக்குப் போட்டியாக ஒரு உணவகம் தொடங்க வேண்டுமானால், என்னென்ன செய்ய வேண்டியதிருக்கும்?

அவர்களின் ஒவ்வொரு உணவகம் போலவும் அந்தந்தப் பகுதியில் நடுநாயகமான இடங்களைத் தேர்ந்தெடுத்து கடை திறக்க வேண்டும். இன்றைய சென்னையின் ரியல் எஸ்டேட்(தமிழில் என்னங்க?:)) விலைகளைப் பொறுத்தவரை இதற்கான வாய்ப்பு மிக மிக விலையதிகமாக இருக்கும். ஆனால், அது ஒன்று தான் காரணம் என்று புதுப்புது உணவகங்கள் புறப்படாமல் இல்லையே.

சுவையான, சுகாதாரமான உணவுக்காக அவர்கள் வலியுறுத்தும் உச்சபட்ச சுத்தத்தைப் பேணுவது இன்னுமொரு கடினமான போட்டியாக இருக்கும். ஆரம்பகாலத்திலேயே, அதாவது தொடங்கி ஒருவருடத்திற்குள்ளேயே லாபம் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் உணவகங்களால் இது முடியாது என்பது அப்பாவின் வாதம். "அதிகாலையில், முதல் லோடு காய்கறி வரும்போதே அவங்க ஆட்கள் யாராவது வந்துடுவாங்க. கொஞ்சம் கூட இடிபாடோ, குறையோ இல்லாத காய்கறியா தேர்ந்தெடுத்து எடுத்திட்டுப் போய்டுவாங்க" - கோயம்பேட்டில் காய்கறி வியாபாரம் செய்யும் அப்பாவின் நண்பரொருவர் சரவணபவன் ஊழியர்கள் காய்கறி தேர்ந்தெடுக்கும் விதத்தை வர்ணித்தார். நல்ல காய்கறி வாங்கிச் சமைக்க வேண்டும் என்பது மட்டும் தான் பிரச்சனை என்றால் அதைச் செய்வதற்கு ஏன் இன்னுமொருவர் வரவில்லை?

ஆரம்பத்தில், ஹாட் சிப்ஸ்காரர்கள் சரவணபவன் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்க முயன்றார்களாம். சரவணபவனின் லாப நஷ்டக் கணக்கு பார்க்காமல் சுத்தம் மட்டுமே பார்த்து இயங்கும் விதத்திற்கு போட்டியாக இயங்க முடியாமல் இப்போது அவர்களின் தரம் குறைந்து போய் விட்டதாம். என்ன தான் மிக நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட உணவாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அதை வைத்துக் கொண்டிருக்காமல், அனாதை இல்லங்களுக்கோ, பிச்சைக்காரர்களுக்கோ கொடுத்துவிடும் சரவணபவன் ஹோட்டல்களுக்குக் நிகராக நஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படும் சராசரி ஆசாமிகள் பலமான போட்டியைக் கொடுக்க முடியாது தான்.

சரி, வெளியிலிருந்து ஒருவர், அனுபவமில்லாதவர் வந்து போட்டி போடுவது சிரமம் தான். ஓட்டலில் வேலை செய்பவர்களில் ஒருவரே தனியாக இயங்க முடிவெடுத்து வெளியேறினாலே நல்லதொரு புது உணவகம் கிடைத்துவிடாதா? அது கூட ஏன் நடக்கவில்லை? அப்படி என்ன செய்து சரவணபவன் தன் ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்கிறது? என்பதோடு எங்கள் விவாதம் ஒரு தீர்மானமில்லா முடிவுக்கு வந்தது.

வேறு ஏதேதோ படித்துக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது தான் சரவணபவன் அதிபர் இராஜகோபால் அவர்கள் எழுதிய "வெற்றிமீது ஆசை வைத்தேன்" புத்தகம். புத்தகம் எனக்கான விடைகளைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் வாங்கினேன்.

அருமையானது தான், தனிவாழ்க்கையின் எந்தப் பகுதியையும் இதில் கொண்டு வராமல் சரவணபவன் கொஞ்சங் கொஞ்சமாக வளர்ந்த கதையை எழுதி இருக்கிறார். எழுத்து நடை அத்தனை சுவாரஸ்யமாக இல்லை. அத்துடன் அவ்வப்போது சந்தித்த நம்பமுடியாத சிக்கல்கள், சின்னச் சின்னத் திருப்பங்களுடன் இதை எழுதி இருந்தால், ஒரு "Made in America" போன்றோ, ஒரு "Pepsi to Apple" போன்றோ, புத்தகம் பெயர் பெற்றிருக்கும்.

புத்தகம் தெளிவித்த விடைகள்: தானே ஓட்டல் தொழிலாளியாக இருந்து முதலாளியானவர் என்பதாலோ என்னவோ, தொழிலாளிகள் பொதுவாக சந்திக்க நேரும் ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக அணுகி இருக்கிறார் அண்ணாச்சி. அவர்களுக்கு வாடகைக்கு வீடுகள் பிடித்துக் கொடுப்பதாகட்டும், அவர்களின் பிள்ளைகள் படிப்புச் செலவுக்குத் உதவுதாகட்டும், ஊழியர்களுக்குத் தொலைபேசி வசதி செய்து கொடுப்பதாகட்டும், ஏதோ அரசு நிறுவன ஊழியர்கள் போலவே கவலையற்று வைத்திருக்க முயல்கிறார்கள். இது தவிர, பொங்கலுக்குப் புதுத் துணி எடுத்துக் கொடுப்பது, உடல்நிலை சரியில்லாத ஊழியர்களின் குடும்பத்திற்கு உதவுவது, ஆயுள்காப்பீடு போன்ற பாலிஸிகளை நிர்வாக செலவிலேயே எடுத்து வைப்பது, ஊழியர்களின் குழந்தைகள் திருமணத்திற்கு உதவுவது என்பன போன்ற திட்டங்கள் ஏதோ தனியார் நிறுவனத் திட்டங்களோ என்ற அளவுக்கு வியக்கவைக்கிறது.

எல்லாவற்றிலும் என்னைக் கவர்ந்த மூன்று விஷயங்கள்:

* ஊழியர்களின் குடும்பத்தில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவென்றே ஒருவரை வேலைக்கமர்த்தி இருக்கிறார்கள். அப்படி உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருப்பவர்களுக்கு மூன்று வேளை உணவு எடுத்துப் போகவும் இன்னுமொரு ஊழியர் அமர்த்தப்பட்டிருக்கிறார். இவர்களின் வேலையே ஆஸ்பத்திரிகளில் இருக்கும் சரவணபவன் ஊழியர்களுக்கு/குடும்பங்களுக்கு உதவுவது மட்டுமே!

* திருமணமான ஊழியர்களின் பெற்றோருக்கும் தனியாக பணம் அனுப்பும் புதுத் திட்டம் ஒன்றைச் சொல்கிறார்கள். நகரத்து வாழ்வில் செலவுகள் சமாளிக்க வசதியில்லாத ஊழியர்கள், ஊருக்குப் பணம் அனுப்ப விட்டுப் போய்விட்டால் அந்தப் பெற்றோர் படும் சிரமத்தை எண்ணி இந்தப் புதுத் திட்டமாம்!

* இவை தவிர, பன்னாட்டு நிறுவனங்கள் போல வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் வருடாவருடம் நடைபெறும் ஓட்டல் சாதனங்கள் மற்றும் உணவு விடுதிகளுக்கான பொருட்காட்சிக்கு சுழற்சி முறையில் ஒவ்வொரு ஊழியராக அனுப்பவது மிகவும் கவர்ச்சிகரமான திட்டமாகத் தான் தெரிகிறது.

இப்படி எல்லாமே நிறுவனத்திலேயே கிடைக்கும்போது வெளியேறி, தனிக்கடை தொடங்க யாருக்கு மனம் வரும்? எப்படிச் சாத்தியப்படப் போகிறது? அத்துடன் இருபத்தியைந்து வருடங்களுக்குப் பின்னர் இனிமேற்பட்டு ஒருவர் இது போல் வெளியேறி புது உணவகம் திறந்து அதை நிலைநிறுத்தி, என்பதெல்லாம் எழுதுவதற்கும் பேசுவதற்கும் சுலபமாக இருப்பது போல் நடைமுறையில் இருக்காதல்லவா. எத்தனை பன்னாட்டு உணவகங்கள் வந்தாலும், இன்னும் இன்னும் பல்வேறு சைவ/அசைவ உணவகங்கள் இருந்து கொண்டே இருந்தாலும், சென்னை சரவணபவனில் கூட்டம் என்னவோ குறையாமல் அப்படியே இருக்கிறது.

சமீபத்தில் தனது உணவகங்களைப் புதுப்பித்திருக்கும் சரவணபவன், ஸ்வாதி என்ற பெயரில் குளிர்சாதன உணவறைகளையும் நிறுவியிருக்கிறது. சாதா உணவறைகளைவிட இரண்டு மடங்கு அதிக விலை வைத்து விற்கும் இந்தக் குளிர்சாதன அறைகளிலும் கூட்டம் அலைமோதிக் கொண்டே இருக்கிறது. வசந்தபவன், ஹாட்சிப்ஸ், அபூர்வா சங்கீதா என்று பல்வேறு உணவகங்கள் இருந்தாலும், சரவணபவனின் விலைப்பட்டியலும் வாடிக்கையாளர் கூட்டமும் அதிகரித்துக் கொண்டே வருவது கண்கூடு.

எப்படியும் சரவணபவனுக்குப் போட்டியாக ஒரு உணவகம் சென்னையில் வரவேண்டும், ஊருக்கெல்லாம் ஒரே வியாபாரியாக இருக்கும் இன்றைய சர்வாதீனம் (monopoly : நன்றி மா.சி.) மாறவேண்டும் என்பதே என் ஆசை. நிறைவேறும் வாய்ப்பு தான் இப்போது கண்ணுக்குத் தெரியவில்லை.

Saturday, December 02, 2006

பந்தா பலவிதம்...

அமெரிக்கத் தூதரகம். அலுவலக முகவாண்மைத் துறையினரின் வழக்கமான குளறுபடிக்கு இன்றைக்கு நான் பலியாக, எல்லா பத்திரங்களையும் எடுத்துக் கொண்டு பத்தரை மணி நேர்முகத்துக்கு பதினொன்றே முக்காலுக்குத் தான் உள்ளே போனேன். 'அமெரிக்கர்கள் நேரம் தவறாதவர்கள்' என்பதெல்லாம் அவர்கள் ஊரோடு தான் போலும். நம்மூர் தூதரகங்களுக்கு பத்துமணி என்றால் தாராளமாக பதினோரு மணிக்கு வரலாம். மூன்று மணி என்றாலோ, ஐந்து மணிக்குப் போனால் சரியாக இருக்கும்.

நான் போகும் போதுதான் பத்தரை மணிக் கூட்டம் அப்போது தான் உள்ளே போயிருந்தது. வழக்கமாக தூதரகங்களில் காணப்படுவது போல், இன்றும் ஒரு வயதான தம்பதியர், என் பின்னால். வெயிலில் கொஞ்சம் காய்ந்து போன அந்த அம்மாளுக்கு, கணவர் போர்வையாக உதவ, அதன்பின் மழையில் கணவர் நனைந்துவிடப் போகிறாரே என்று மனைவி முந்தானையால் தலைக்கு மேல் குடைபிடிக்க, அற்புதமான காட்சி அது. ஒவ்வொரு வரிசையிலும் என் முறைகள் வந்து உள்ளே போய், வெளியேறி, எப்படியும் நேரமாகும் என்று தெரிந்த காரணத்தால் இரண்டு மூன்று புத்தகங்களுடன் போனது வீணாகவில்லை. புத்தகங்கள் முடிவதற்குள் கூப்பிட்டு, காலையில் அலைந்த அலைச்சலுக்கு நேர்முகம் மிக இனிதே முடிய மகிழ்ச்சியோடு நான் நுழைந்தது தூதரகத்துக்கு எதிரில் இருக்கும் உட்லண்ட்ஸ் தான்.

உட்லண்ட்ஸ் ஓட்டலுக்கு நான் கடந்த பத்து வருடமாகவே போய் வருவது வழக்கம். வண்டியோ செல்பேசியோ, ஏன், பணம் தவிர்த்த வேறு பையோ கூட அனுமதிக்காத தூதரக நூலகத்துக்கு வந்து கொண்டிருந்த காலம் முதலே என் நிரந்தர வண்டி நிறுத்துமிடம் உட்லண்ட்ஸ் தான். அதிகப்படியான பொருட்களை வண்டியில் போட்டுப் பூட்டிவிட்டுப் போனால், திரும்பி வரும் வரை பத்திரம் நிச்சயம். வண்டி நிறுத்தினோமே என்ற குற்ற உணர்வில் நிறுத்தக் கட்டணமாக ஒரு தோசையும் காப்பியும்.

இன்றும் அப்படி உணவகத்தின் உள்ளே நுழைந்த போது உட்கார தனி மேசை ஏதும் இருக்கவில்லை. ஏற்கனவே மக்கள் அமர்ந்திருந்த மேசைகளுக்குள் தலையில் பொன்னிற தலைப்பாகையோடு, தோளிலும் அதே நிறத்தில் துண்டோடு ஒரு வயதானவர் அமர்ந்திருந்த மேசை என் கவனத்தைக் கவர்ந்தது. ரொம்பவும் அறிமுகமான முகமாகத் தோன்றிய தலைப்பாகைத் தாத்தா ரொம்ப ஆர்வமாக ஒரு பேப்பரில் ஏதோ எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் அமைதியாக நானும் போய் எதிர்ப்புறம் அமர்ந்தேன். தாத்தா மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு ஏதோ எழுத முயற்சித்துக் கொண்டிருந்தார்.

ஏதும் சம்ஸ்கிருத அல்லது இந்தி பண்டிட்டாக இருப்பாரோ? அப்படி மொழி கற்றுக் கொண்டிருந்த காலங்களில் இவரைச் சந்தித்திருப்பேனோ என்று முதலில் யோசித்தேன். அப்புறம், அவர் பக்கத்தில் இருந்த பை முழுவதும் தெலுங்கு புத்தகங்களால் நிறைந்திருக்கவே, 'ஒருவேளை தெலுங்கு பண்டிட் தானோ, நான் இவரை எங்கோ பார்த்தது போல் இருப்பதெல்லாம் சும்மா தேவையில்லாத நினைவோ' என்று தோன்றியது.

தோசைக்குச் சொல்லிவிட்டு, என் நேர்முகத் தேர்வு சாகசங்களை நண்பர்கள் மற்றும் வீட்டினருக்குத் தொலைபேசிக் கொஞ்சம் பந்தா விட்டுக் கொண்டிருந்தேன். எதிர் இருக்கை தாத்தா என்னைக் கவனிக்கவே இல்லாமல் ரொம்பத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். ஏதோ கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது அவர் சொற்களை அடுக்கிய விதத்தில் தெரிந்தது.

அவரது தலைப்பாகை, கொஞ்சம் முன்னால் தூதரகத்தில் பார்த்த சிங் ஒருவரின் தலைப்பாகையை நினைவுப்படுத்தியது. அந்தக் கட்டுக்கும் இந்தக் கட்டுக்குமுள்ள வித்தியாசத்தை ஆராயலாம் என்று நிமிர்ந்து பார்த்தேன். ரொம்பப் பழைய பட்டு போலும், கூர்ந்து பார்க்கையில், பார்க்கவே பரிதாபமாகத் தோன்றியது. சீக்கியர்கள் கூட இப்போது வெளியூர்களுக்கு வரும் போது இது போல் தம் மத அடையாளத்தை வெளிக்காட்டி, தன்னை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தும் தலைப்பாகைகளை அணிந்து கொள்வதில்லை என்று சமீபத்தில் படித்த நினைவு. இந்தத் தாத்தா இப்படித் தான் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்ள இந்த இடத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாத உடையில் வந்திருப்பது நியாயமா? என்று தோன்றியது. தாத்தா மட்டும் கொஞ்சம் என் கண்ணைப் பார்த்துச் சிரித்திருந்தாரானால், கேட்டே இருப்பேன். ஆனால், தாத்தா வேறு உலகத்தில் ஆழ்ந்திருந்தார்.

நான் காப்பிக்குச் சொன்ன நேரத்தில் தாத்தா தான் எழுதிய சந்தத்திற்கு மெட்டு போட்டு சன்னமாகப் பாடவே தொடங்கி இருந்தார். ஹைதராபாத்தில் இருந்த காலத்தில் நான் கற்றுக் கொண்ட தெலுங்குப் பாடல்களில் ஒன்றாய் இருக்குமோ என்று காதைத் தீட்டிக் கேட்டுப் பார்த்தேன். சுத்தமாகப் புரியவில்லை! தாத்தா கர்ம சிரத்தையாக மற்றுமொரு நோட்டை எடுத்து, இதுவரை காகிதத்தில் எழுதியதை நோட்டில் படியெடுக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு அடியாய்ப் பாடிப் பார்த்துத் தளை தட்டுகிறதா என்று யோசித்து யோசித்து அவர் படியெடுப்பதை வேறு வழியில்லாமல் சிறிது நேரம் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

ஐந்து நிமிடத்தில் இன்னுமொரு பெண் வந்து எங்கள் மேசைக்கருகில் நின்றாள். என்னைவிட ஓரிரு வயது சிறியவளாக இருப்பாள். பேண்ட் சர்ட்டில் கழுத்தில் ஏதோ பட்டியுடன் வந்தாள். பக்கத்தில் இருக்கும் ஏதேனும் மென்பொருள் நிறுவனமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். "சார்" என்று தாத்தாவைக் கூப்பிட்டார். தலைவர் இந்த உலகத்தில் இல்லை. அவரது கடைசி சில அடிகள் எதிர்பார்த்த வகையில் இல்லாத காரணத்தால் மீண்டும் மோட்டு வளையில் ஏதோ ஜிலேபிக்களைத் தேடிக் கொண்டிருந்தார். "சார்!" மீண்டும் அழைத்தாள் அவள்.

உதவுவோமே என்று நானும் அவரை "ஐயா!" என்று அழைத்துப் பார்த்தேன். இப்போது ஏதோ ஒரு அசைவு தெரிந்தது. சரி, நம்மைக் கவனித்துவிட்டார் என்று நினைக்கும் போது கடைசிக்கு முன் வரியில் மீண்டும் ஜிலேபி போடத் தொடங்கினார். நான் அந்தப் பெண்ணைப் பார்த்து 'பிரயோசனமே இல்லை' என்பது போல் தலையாட்டினேன். அந்தப் பெண்ணோ.. 'இருக்கட்டும், காத்திருக்கேன்' என்றாள்.

கடைசியாக அந்தப் பாட்டு முடிந்த பின்னால் தாத்தா திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவள் "சார், நான் தான் XXXX. நான் தான் உங்களுக்குப் போன் பண்ணி இருந்தேன். XXX டீவியிலிருந்து" என்றாள்.

டீவி பெயரைக் கேட்டவுடன் நான் ஆர்வமானேன். "சரி, இவர் சம்ஸ்கிருத பண்டிட் தான். ஏதோ காலைமலர் நிகழ்ச்சிக்காக, யக்கா பேட்டி எடுக்க வந்திருக்கிறார்" என்று நினைத்துக் கொண்டே காதைத் தீட்டினேன். (அப்பவும் திரும்பி அவர்களைப் பார்க்கவில்லை.. வாசல் பக்கமாக போவோர் வருவோரை நோட்டம் விட்டுக் கொண்டே காதை மட்டும் கொடுத்தேன்)

"எங்க டீவியில் 2006 அவார்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்துறோம். அதில் பின்னணிப் பாடகர்கள் வரிசையில், நீங்க முதல் நாலு இடங்களில் வந்திருக்கீங்க" என்றாள் அந்தப் பெண். இத்துடன் நான் கொஞ்சம் அதிர்ந்தேன். 'இது ஏதடா, இந்தத் தாத்தா பாடகரா!'

"நானா?! நானெல்லாம் பாடினது ரொம்பக்காலம் ஆச்சே! " என்றார் தாத்தா. அப்போ இவர் பழங்காலப் பாடகரா?!

"ஆமாம் சார். அதான் ஆச்சரியம். இன்றைய பாடகர்களோட, உங்க பேரையும் சேர்த்துத் தேர்ந்தெடுத்திருக்காங்க மக்கள்!" என்றாள் அந்தப் பெண். தாத்தாவை விட எனக்குத் தான் ஆச்சரியம்.

"எல்லாம் கடவுள் அருள் தான். எனக்குக் கிடைச்ச புகழா நான் இதை நினைக்கலை, எனக்குப் பாட வாய்ப்பு கொடுத்த, நல்ல பாட்டுக்களைக் கொடுத்த எம்.எஸ்வீ மாதிரியான இசையமைப்பாளர்களுக்குத் தான் நான் நன்றி சொல்லணும்" என்றார் தாத்தா.

அதன் பின் யக்கா தாத்தாவிடம் கொஞ்ச நேரம் சாதாரணமாகப் பேசிவிட்டு(தாத்தாவின் கொஞ்சம் பழங்காலத் தமிழுக்குத் தடுமாறிவிட்டு) காமிரா முன்னால் என்ன சொன்னால் நன்றாக இருக்கும், என்றெல்லாம் சொல்லிவிட்டு, அந்த இடத்தில் படம் பிடிக்க அனுமதி வாங்கிவரப் போனார்.

கடைசி வரை இருவரும் பெயரைச் சொல்லிக் கொள்ளவில்லையாதலால், தாத்தா யாராக இருக்கும் என்று எனக்கு யோசனையாகவே இருந்தது. பழங்காலப் பின்னணிப்பாடகரான பி.பி. ஸ்ரினிவாசனாக இருப்பாரோ என்று சந்தேகம். சரி, அப்படியே இருந்தாலும், "உங்க பாட்டெல்லாம் ரொம்ப நல்லா இருக்கும் சார்" என்று இப்போது வைத்துச் சொல்லவா முடியும்? வந்து உட்கார்ந்த நேரத்திலேயே அல்லவா சொல்லி இருக்கணும்.

பிரபல பின்னணிப்பாடகர்களைப் பார்த்தவுடன் எல்லாருமே சொல்வது இதுவாகத் தான் இருக்கும். எனவே, நானும் சொன்னால், சம்பிரதாயமாகப் போய்விடும். ஹோட்டலுக்கு வந்திருப்பவர்களைப் பார்த்து, "சாப்பிடப் போறீங்களா?" என்று கேட்பது மாதிரி..

நான் அவர்கள் பேச்சிலும் கவனம் செலுத்தியதால், தாத்தா என்னிடம் திரும்பி "நீ வந்ததும், இவ தான்னு நினைச்சிட்டேன். நீ எங்கே வேலை செய்யறே?" என்று விசாரித்தார்.

பதில் சொல்லிவிட்டு, "பாட்டு எழுதிகிட்டு இருக்கீங்களா?" என்றேன்.

"ஆமாம். வித்யாவாணி ஸரஸ்வதி பேரில் பாட்டு எழுதிட்டிருக்கேன்" என்றார். அத்துடன் அந்தப் பாட்டின் சில பத்திகளைப் படித்து ஆங்கிலத்தில்சொல்லத் தொடங்கினார்.

சில நிமிடங்கள் முன்புவரை, இருந்து பேட்டியைக் கவனித்து அதையும் சேர்த்து பதிவில் போடுவோமா என்று தோன்றியதை இந்தப் பதில் மொத்தமாக சாப்பிட்டுவிட்டது. விட்டால் பாட்டு முழுவதையும் எனக்குப் படித்துக் காண்பித்துவிடுவாரோ என்ற பயம் கொஞ்சமாக எழுந்தது. அலுவலக வேலை வேறு அழைக்க, அந்தப் பாட்டை (அலைவரிசை மாற்றியைக் கையில் வைத்துக் கொண்டு) தொலைகாட்சியிலேயே கேட்டுவிடலாம் என்று முடிவெடுத்து அத்துடன் நான் நன்றி சொல்லி விடைபெற்றுக் கொண்டு வந்தேன். தாத்தாவுக்குத் துணைக்கு வந்திருப்பேன் என்று என்னைப் பற்றி நினைத்திருந்த அந்தப் பெண் நான் 'பை' சொல்வதை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டே போனாள்.




வெளியில் வந்து ஒவ்வொன்றாக யோசிக்கத் தொடங்கியபோது தான், தொலைக்காட்சி, பத்திரிக்கையில் பார்த்த முகம் என்று எனக்கும் பழக்கமாக இருந்திருக்கிறது என்பது புரிந்தது. அதனால் தான் வெறும் பிஸ்கெட் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த மனிதரை இப்படி ஓட்டலில் உட்கார்ந்து பாட்டெழுத அனுமதித்திருக்கிறார்கள். நான் அவருக்கு முன்புற இருக்கையில் உட்கார முயன்றபோது என்னை ஒரு மாதிரி சந்தேகமாக தாத்தா பார்த்ததும் நினைவுக்கு வந்து ஒரே தமாசாக இருந்தது.

பிரபலங்களுக்கு முன்னால் எப்படி நடந்து கொள்வது என்பது தெரியாமல் போவது என்னுடைய மிகப் பெரிய பலவீனம். தாத்தாவிடம் ஒரு கையெழுத்தாவது வாங்கி இருக்கலாம். வாங்கி என்ன செய்ய? அதான் இத்தனை பெரிய பாடகரைப் பார்த்து, அவரோடு சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டாயிற்றே! அப்புறம் அவரைப் பார்த்தேன் என்பதை யாருக்கு நிருபிப்பதற்காக கையெழுத்து, புகைப்படம் எல்லாம்!

ஆனாலும் மனிதர் இப்படித் துளி கூட பந்தா இல்லாமல் அமைதியே உருவாக பாட்டெழுதிக் கொண்டிருக்கும் போது, அவரைத் தொல்லை செய்வது போல் எல்லாருக்கும் போன் போட்டு என் விசா வந்த அளப்பறையைப் பேசியதை நினைக்கும் போது இப்போது ரொம்ப ரொம்ப வெட்கமாக இருக்கிறது. இதில் அம்மாவிடம் "ரொம்ப பந்தா பண்ணாம இருந்தா எல்லாமே ஈஸி தான்" என்று அடித்து விட்டது.. ஐயோ ஐயோ. இதுக்கு மேல என்னைக் கேட்காதீங்கோ!!

திடீர் இதய நிறுத்தம் தெரியுமா?

அப்பாவின் நண்பர் ஒருவரின் மனைவி இறந்து விட்டதாக அப்பா வந்து சொன்ன போது அம்மாவுக்கு அது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

"யாரு? இராஜேந்திரன் மனைவியா? ரொம்ப சின்ன பொண்ணாச்சே!" இது அம்மா

"ஆமாமாம்.. வயத்தெரிச்சல் என்னன்னா மாசமா இருந்திருக்கா! "

"அடப்பாவமே! அவங்களுக்கு ரொம்ப நாளா குழந்தை இல்லாம இருந்ததில்லை?"

"ஆமாம்.. கல்யாணமாகி பத்து வருஷமா குழந்தைகள் இல்லாம இருந்திருக்காங்க. எந்தப் பூசை பரிகாரமும் பலம் கொடுக்காம இப்போ தான் செயற்கை முறையில் இந்த டெஸ்ட் ட்யூப் பேபி மாதிரி ஏதோ முயற்சி செஞ்சிருக்காங்க.."

"அது தான் உயிருக்கே ஆபத்தாகிடுச்சோ?"

"இல்லைம்மா, இப்போ ஒன்பதாவது மாதம் தான். ஆனா நேத்து அவளுக்கு வலியெடுத்திருக்கு காலைல. ராஜேந்திரன் தான் அவளை க்ளினிக்குக்கு அழைச்சிட்டு போயிருக்கான். போகும் வரை நல்லாத் தான் இருந்திருக்கா. பேசிகிட்டே வேற வந்திருக்கா. திரும்பி வந்து அந்த நாளைக்கு என்னென்ன வேலை பாக்கி இருக்கு என்பது வரை பேசிகிட்டு வந்தவ, அங்க நர்சிங் ஹோம் போன கொஞ்ச நேரத்துலயே அங்கயே இறந்துட்டாளாம். ஹார்ட் அர்ரெஸ்டுன்னு சொன்னாங்களாம்!"

"ஹார்ட் அட்டாக்கா?"

"இல்லை, கார்டியாக் அரெஸ்ட்னு சொல்றாங்க."

"புது மாதிரியா இருக்கு? இந்த டெஸ்ட் ட்யுப் அது இதுன்னு முயற்சி செஞ்சதால வந்த வினையா இது?"

"இல்லை இல்லை, இது ஏதோ இருக்கிற வியாதி தானாம். இதயம் திடீர்னு செயலிழக்கிறது. ஹார்ட் அட்டாக்கில் பிரச்சனை என்னன்னா, இதயத்தில் நாலு அறைகள் இருக்குதுன்னு உனக்குத் தெரியும் தானே? அந்த அறைகளுக்கு நல்ல ரத்தம் கொண்டுவரும் ரத்த நாளங்கள்ல ஏதும் அடைப்பு இருந்து அதனால் இதயத்துக்கு வரும் ஆக்சிஜன் அளவு குறையும்போது ஹார்ட் அட்டாக் வருது. இந்த கார்டியாக் அரெஸ்ட்ங்கிறது, இதயத்தின் கீழ் அறைகளான வெண்ட்ரிகல்கள் திடீர்னு தன் சீரான அசைவிலிருந்து மாறுபடும்போது ஏற்படுது. இந்த நேரங்களில் வெண்ட்ரிகல்கள் விரிவடைவதற்குப் பதில் சுருங்குகின்றன. இந்த மாற்றத்தால் மூளைக்கும் உடலுக்கும் நல்ல ரத்தத்தை அனுப்பும் செயல் தடைபடுது. இதனால் தான் திடீர்னு அந்த இதயம் நின்னு போகுது. இதயத்துக்கு வரும் பிராணவாயு குறையும் போதும் இந்த திடீர் இதய நிறுத்தம் ஏற்படலாமாம். பொதுவா இதயம் ரொம்ப வீக்கா இருக்கிறவங்க, ஏற்கனவே ஹார்ட் அட்டாக்கை அனுபவிச்சவங்களுக்கு இந்தப் பிரச்சனைகள் வரும் வாய்ப்பு அதிகம். நம்ம பழங்காலத்தில் பயத்தில் இறந்தவர்கள்னு சொல்லுவோம் இல்லையா. அது கூட இதே மாதிரியான காரணங்களால் இறந்தவர்களைத் தானாம்."




"என்ன இருந்தாலும் சின்ன பொண்ணு.. பாவம் தான். ஆஸ்பத்திரிக்குப் போன பின்னாடி தானே பிரச்சனை வந்திருக்கு. ஏதும் முதலுதவி, வைத்தியம் பண்ணி இருப்பாங்களே!"

"இந்தப் பிரச்சனைக்கு முதலுதவி எல்லாம் பெரிய அளவில் உதவுவதில்லை. செயற்கை சுவாசம் எல்லாம் செய்து பார்த்திருக்காங்க. முதல் ஐந்து பத்து நிமிடங்களில் இந்த முதலுதவிகளைக் கொடுக்க வேண்டியதிருக்கும். இந்தப் பொண்ணுக்கு எல்லாம் செய்திருக்காங்க. ஆனா, அதனால் எல்லாம், போகிற உயிரைப் பிடிச்சி நிறுத்த முடியலை."

"இதைத் தடுக்க என்ன வழி?"

"ஹார்ட் அட்டாக்கைத் தடுக்கும் வழிகளைத் தான் இதைத் தடுக்கவும் சொல்கிறார்கள் - புகை பிடிக்காம இருப்பது, உடற்கொழுப்பைக் கட்டுக்குள் வைப்பது, அதிக டென்சன் இல்லாமல், ஆத்திரப்படாமல் இருப்பது. சக்கரை வியாதி, வயதாகுதல் என்று தடுப்பு முயற்சிகள் பலன் தராத காரணங்களும் இந்த நோய்க்குக் காரணமாகலாம்."

"ம்ம்... ஆக, ரொம்பக் கோபப்படாமல், சிரித்து வாழ்ந்தாலே உடல் ஆரோக்கியமா இருக்கும்ங்கிறாங்க.."

"அது என்னவோ உண்மை தான் சிரிப்புக்கு நிகரான மருந்து வேற என்ன இருக்கு... அத்தோட நல்ல பழக்க வழக்கங்கள்."

Friday, December 01, 2006

பூனை.. பூனை.. பூனைக் குட்டி...

[தலைப்புக்காக நாடோடிக்கு நன்றி. பதிவும் இன்னுமொரு மீள் பதிவு தான். சிறுவர் பூங்காவில் இருந்ததை இங்கே பொன்ஸ் பக்கங்களில்..]


எங்கள் வீட்டுப் பூனை


எங்கள் வீட்டுப் பூனை
எங்கும் ஓடும் பூனை
முறுக்குத் தின்னும் பூனை
மூலையில் அமரும் பூனை

எலியைக் கண்டு விரைவாய்
எதிர்ப்பக்கம் ஓடும் பூனை;
சலிக்காமல் தான் வெளியே
சாலை சுற்றும் பூனை

பல்லி பிடித்து வாலை
மட்டும் வெட்டும் பூனை
மல்லிப்பூ போல் வெண்மை
மாறாத பூனை


தங்கையோடு சேர்ந்து
தானும் தூங்கும் பூனை.
சங்கு கழுத்தைத் தூக்கி
தாய்மடி கேட்கும் பூனை

நாயைக் கண்டு நடுங்கி
நன்றாய் ஓடும் பூனை
வாயை மெல்லத் திறந்து
கொட்டாவி விடும் பூனை

காலை சரியாய் அழைத்து
உறக்கும் கலைக்கும் பூனை
பாலைக் குடித்து மீதம்
பகைக்கும் வைக்கும் பூனை




அருஞ்சொற் பொருள்:[இது ஒண்ணு தான் குறைச்சல் :) ]
பகை = பகைவனான காட்டுப் பூனை

படத்தில் இருப்பது நாங்கள் வளர்த்த செல்லப் பூனை பொம்மு.

பாலபாரதியின் செல்போன்

பகுதி ஒன்று இரண்டு மூன்று நான்கு

"இத்தோ.. பொன்ஸக்கா இங்கக் கீது சார்" கணினித் திரைக்குள் தலையை விட்டுக் கொண்டு கிட்டத்தட்ட அதன் ஒரு பாகமாகவே ஆகிவிட்ட என்னைக் கலைத்தது அந்தச் சத்தம். எங்கேயோ கேட்ட குரல். நிமிர்ந்து பார்த்தேன். அட நம்ம கோயிந்து.

"வா கோயிந்து.. எத்தனை நாளாச்சு உன்னைப் பார்த்து.. எங்கே போயிருந்த?"

"நான் எங்கப் போனேன்னு மெய்யாலுமே உனக்குத் தெரியாது? உன் பதிவைத் தொறந்து பார்த்தாலே ஏதோ மும்மாரி சோமாறின்னு சொல்லுதே! "

"கோயிந்து, நீ எங்கிருந்து படிக்கிறேன்னு அது சொல்லும். ஆனா உனக்கு மட்டும் தான் சொல்லும், எனக்குச் சொல்லாது. சரியா?"

"அதுல தான் எனக்கும் சாருக்கும் ஒரு பெரிய டவுட்டு"

"இன்னாபா டவுட்டு? ச்சே.. என்ன சந்தேகம்?" என்றேன்.

"இப்படிப் பதிவத் தொறக்கும்போதே எங்கேர்ந்து பார்க்குறான்னு கண்டுகிற தில்லாலங்கடி வேலைய எப்படிச் செய்யறான்? அதக் கேட்கத் தான் வந்துகினோம் நானும் சாரும்."

"உங்க சார் வேற வந்திருக்காரா? எங்க காணோமே.."

"அது ஒன்னியும் இல்ல.. சார் தன்னோட செல்போன எங்கயோ வச்சிட்டாராம்.. தேடிப் பார்த்துகிட்டிருக்காரு.."

வெளியே எட்டிப் பார்த்தால் பாலபாரதி தன் செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

"இல்லையே.. காதுல தானே வச்சிருக்காரு.."

"கிட்டப் போய் கேட்டுப் பாரும்மே.."

கொஞ்சம் அருகில் போய்க் காது கொடுத்துப் பார்த்தேன்.. "அருள், தல, என் செல்போனைக் காணோம்யா.. நீதான் எங்கயோ ஒளிச்சு வச்சிருக்கணும்.." என்று கெஞ்சிக் கொண்டிருந்தார் பாலபாரதி.

"நீ வா பொன்ஸு.. நம்ம வேலையப் பார்ப்போம். அருள் சார் அல்லாத்தையும் கண்டு பிடிச்சிக் கொட்திடுவாரு.." என்று அழைத்தான் கோயிந்து..

"சரி, கோயிந்து... நீ கேட்ட கேள்வி ரொம்ப சுலபம். உலகை ஒன்றாகச் சேர்க்கும் இணையம் இருக்கு இல்லையா? இது ஒரு நெட்வொர்க். இப்போ டெலிபோன் நெட்வொர்க் இருக்கே அது மாதிரி. இப்போ உன்னோட செல்போனையே எடுத்துக்குவோமே.. இதுல சிம்கார்ட் போட்டோம்னு வையி, உடனே உன்னைக் கூப்பிட முடியுமா? "

"அதெப்படி முடியும். ஆக்டிவேட் பண்ணுவாங்கல்ல?"

"அதே தான். அந்த தொலைதொடர்புச் சேவையைத் தருபவர்கள் ஆக்டிவேட் செய்தால் தான் உன்னால என்கிட்ட பேச முடியும். அதே மாதிரி தான் உன்னோட கணினிக்கு இணையத் தொடர்பும். இணையத்துக்குக்காக அகலப்பட்டை(broadband), தொலைபேசி வழிச் சேவை(dialup), கம்பியில்லாச் சேவை(wireless network)ன்னு எந்த மாதிரி சேவையில் இணையத்தில் தொடர்பு கொண்டாலும் உன்னோட கணினிக்கு ஒரு நம்பர் கொடுப்பாங்க. நம்ம போன் நம்பர் மாதிரி. இந்த நம்பரைத் தான் உன் கணினியின் ஐபி முகவரின்னு சொல்றோம். எந்த இணையச் சேவைமையத்தின் மூலமாகத் தொடர்பு கொள்ளுறீங்க, என்ன முகவரி என்றெல்லாம் கண்டுபிடித்துச் சொல்ல ஐபி ட்ராக்கர் நிரலிகள் இருக்கு. இந்த நிரலிகளில் ஒன்றை எடுத்து உங்க பக்கத்தின் வார்ப்புருவில் சேர்த்தா, அவ்வளவு தான்!"

"ஓ.. அவ்வளவு தானா, இத்த வச்சி தான் அவனவன், கஸ்மாலம், நீ சென்னைல கீற, தில்லீல சுத்துறன்னு சொல்லிகிட்டிருக்கானா?! இத்தப் போய் பெரிசா நெனச்சு பயந்துகினேம்மா! சார்..! சார்..!!" கோயிந்து பாலபாரதியை அழைத்துக் கொண்டே வாசற்பக்கம் போகவும் என் செல்பேசி சத்தமிடவும் சரியாக இருந்தது.

போன் செய்தது வரவணை. "ஏங்க பொன்ஸ், எங்க மாம்ஸோட ஒரே தொல்லையாப் போச்சுங்க.. கொஞ்சம் என்ன ஏதுன்னு கேட்கக் கூடாதா?"

"என்ன? ஏது?"

"அடச்சே, விளையாடாதீங்க.. எனக்குப் போன் பண்ணி, போனைத் தொலைச்சிட்டேன், காணோம்னு ஒரே தொல்லை.. கொஞ்சம் அந்தக் காதுலேர்ந்து எடுத்துக் கையில கொடுக்கக் கூடாதா? ஒரு வேலையும் பார்க்க முடியலை!" என்றார் வரவணை. "இந்த நேரம் பார்த்து அவருக்குப் போன் செஞ்சது வேற பெரிய தப்பாப் போச்சு. சொந்த செலவில் சூன்யம்!"

"உங்களுக்கேவா? அது சரி, இப்போ எப்படி எனக்குப் போன் பண்ணீங்க?"

"இன்னோரு லைன்லேர்ந்து பேசிகிட்டிருக்கேன் பொன்ஸ்.,அந்தப் பக்கம் மாம்ஸ் இன்னும் குறுக்குக் கேள்வியாக் கேட்டுகிட்டிருக்காரு!. நீங்களும் இப்படிக் கேட்காதீங்க. அளுதுடுவேன்.."

"சரி கவனிக்கிறேன்" என்று சொல்லிவிட்டுத் திரும்புவதற்குள், கோயிந்து திரும்பி வந்தான், பாலாவுடன்.

"என்ன பாலா? போன் கிடைச்சிதா?"

"இதோ இவன் தான் எடுத்து ஒளிச்சு வச்சிருந்தான்."

"என்னய்யா நடக்குது இங்க?" என்றேன் கோயிந்துவிடம்.

"நீ ஒன்னியும் கண்டுக்காத.. அடுத்த கேள்விக்குப் பதில் சொல்லு.."

"என்ன அடுத்து?"

"இப்போ எல்லாம் ரெண்டு வலைப்பதிவர் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தாலே 'எனக்குப் பத்தாயிரம் ஹிட்ஸ்', 'எனக்கு முப்பதாயிரம் ஹிட்ஸ்'னு ஏதோ ஏலம் விடுறவன் மாதிர் கெளம்புறாங்களே, இதென்ன ஹிட்ஸ்?"

நான் பதில் சொல்வதற்குள் என்னுடைய வலப்பக்கத்திலிருந்து "நீ உருப்பட மாட்டே" என்று ஒரு குரல் வந்தது. குரலுக்குரிய திசையை நான் திரும்பிப் பார்க்கவும், அதற்கு நேர் எதிர் திசையிலிருந்து "நீ தான் உருப்பட மாட்டே" என்று பதில் வந்தது.

என்னடா என்று இந்தப் பக்கம் திரும்பவும், பாலபாரதி ஒரு வினோத காரியம் செய்தார். "உருப்படமாட்டேனா?, அப்படி எல்லாம் சொல்லக் கூடாது, நாளைக்குப் படையல் போட்ருவோம்" என்றார் காற்றைப் பார்த்தபடி.

"கோயிந்து, என்னய்யா ஆச்சு உங்க சாருக்கு? காத்துகிட்ட எல்லாம் பேசத் தொடங்கிட்டாரு?"

"அவரை வுடு பொன்சு.. அவரோட கொல சாமிங்க இப்படித் தான் அப்பப்போ அனானியா வந்து கொரல் கொடுப்பாங்க.. நீ சொல்லு!"

"சரி, இணையத்தில நிறைய கவுண்ட்டர்கள் கிடைக்குது. இப்போ உன்னோட பக்கத்தை யாராவது திறக்கறாங்கன்னு வை, அப்போ இந்தக் கவுண்ட்டர் என்ன பண்ணும், ஒரு முறை திறந்திருக்கு உங்க பக்கம்னு நினைவு வைச்சிக்கும். அடுத்த முறை வேற யாராவது எங்கிருந்தாவது திறந்தால், ரெண்டுன்னு கணக்கை அதிகப்படுத்திடும். இப்படியே உங்க பக்கத்தை ஒவ்வொரு முறை திறக்கும் போதும் இந்தக் கணக்கு அதிகமாகும்."

"இப்போ, நானே ரெண்டு தபா தொறக்கறேன்னு வை, அப்போ ரெண்டுன்னு வருமா? இல்லை ஒண்ணுன்னு வருமா?"

"ரெண்டு தரமும் அப்டேட் ஆகும். அத்தோட இல்ல கோயிந்து, நீ இப்போ திறந்து வச்சிருக்கும் போதே, அந்தப் பக்கத்தை ஒரு முறை புதுப்பித்தால் (refresh), அப்போவும் ஒரு எண்ணிக்கை கூடும். "

"நம்ம பதிவை நாமே தொறந்தாலும் இந்தக் கணக்கு வருமா?"

"ஆமாமாம். நம்ம பதிவை நாமே தொறந்தாலும், இதில் எண்ணிக்கை கூடும். ஆனா சில நிரலிகள் இது போல் இல்லாமல், நம்ம பதிவை நாமே திறந்தால் அதைப் பதிவு செய்யாமல் இருக்கவும் வழி வச்சிருக்கு"

"அது நமக்கெதுக்கு.. இப்போ இந்த நம்பர் பெரிசா இருந்தாத் தான் பெருமையாமே! இந்த மாதிரி கவுண்டர்கள் எனக்கும் வேணும்னா எங்கிட்டுப் போகணும்?"

"இந்தப் பக்கத்தில் புள்ளி விவரச் சேவைன்னு பட்டியல் போட்டுச் சொல்லி இருக்காங்க பாரு. அங்கிருந்து எடுக்கலாம். மொதல்ல சொன்ன ஐப்பி டிராக்கர் வேணும்னா இப்போதைக்கு எனக்குத் தெரிஞ்ச ஒரே இடம் இது மட்டும் தான். "

"யக்கா பொன்ஸ், இந்த கவுண்டரை வச்சு எங்க கொல சாமிகளா வருது யாருன்னு சொல்ல முடியுங்கிறாங்களே அது உண்மையா?" முதன்முறையாகப் பேசினார் - எங்களிடம் பேசினார் -பாலபாரதி

"ஒரு மாதிரி ஊகிக்கலாம். இப்போ இந்த கவுண்ட்டர்களில் சிலது ஐப்பி டிராக்கராகவும் செயல்படுது. இந்த ஐப்பி டிராக்கர் நமக்காக நம்ம பக்கத்துக்கு வந்து போன ஐப்பிகளைச் சேமிக்கும். இன்னும் சரியாச் சொல்வதானால், உலகின் எந்தெந்த ஐப்பிக்களை உடைய கணினிக்களில் நமது பதிவு திறந்து பார்க்கப் பட்டது என்பதை இது சேமித்து வைக்கும். ஸ்டேட் கவுண்டர் அப்படி ஒரு தளம். இதில் உங்களுக்குன்னு ஒரு கணக்குத் தொடங்கி இது கொடுக்கும் நிரலியை உங்கள் பதிவில் பதித்துவிட்டால், இந்த இடத்தில் உங்கள் பதிவுக்கு வந்து போகும் கணினி முகவரிகள் சேமிக்கப் படும். எப்போ வேணாலும் எடுத்துப் பார்க்கலாம். ப்ராக்ஸி மூலம் வந்தால் இங்கயும் பார்க்க முடியாது."

"ப்ராக்ஸின்னா? " என்றார் பாலா.

"அதான் நைனா, பள்ளிக்கொடத்துல அட்டெண்டன்ஸ் எடுக்கும் போது, ஒனக்குப் பதிலா வேற எவனாவது உள்ளேன் சொல்லுறது தான். இன்னும் சுளுவா சொல்லணும்னா, இப்போ நீ இல்லாத பதிவுகள்ல கூட ஒன்னைக் கலாசினா பாகசவில் சேர்ந்துடுவாங்கன்னு வீத பீப்பிள் சொன்னார் இல்ல, அது மாதிரி.."

"ஓ.. " என்றார் பாலா.

"அதே தத்துவம் தான். நமது முகவரியிலிருந்து பக்கத்தைப் பார்க்காமல், வேறொரு தளத்திலிருந்து பார்க்கலாம். இது மாதிரி சுத்தி வந்து பார்க்கிற போது, அதை இந்தக் கவுண்டர்களால கண்டுபிடிக்க முடியாது"

கோயிந்து தன் செல் போன் கூப்பிட்டதால் எடுத்துப் பார்த்தார்..

"என்ன கோயிந்து?"

"அதுவா, இந்தச் சேதுக்கரசி, நாடோடி, தங்கவேல்னு யாராவது எஸ் எம் எஸ் பண்ணி அப்பப்போ பாகச ன்னா என்னான்னு கேட்பாங்க.. அதுக்குன்னு ஒரு அறிமுக மெஸேஜ் வச்சிருக்கேனே.. அதையும் நம்ம ஜெய் பதிவையும் சேர்த்துத் தர்றது தான்.. பாகசவுக்குக் கொளுகைப் பரப்புச் செயலாளர் மாதிரி ஆய்டிச்சு நம்ம நெலம! என்னத்தச் சொல்ல!"

கோயிந்துவைப் பார்த்து, "நீதானா அது?" என்று முறைத்தார் பாலா. "பின்ன பாருங்க பொன்ஸ், தினசரி எனக்குப் பத்து பின்னூட்டமாவது வருது.. எனக்கு சர்டிபிகேட் கொடுங்க, இவனுக்குக் கொடுங்கன்னு.. !"

"என்ன சர்டிபிகேட்?"

"பாகச சர்டிபிகேட் தான்!" நொந்து கொண்டே சொன்னார் பாலா..

"சரி அதென்ன செல்பேசி தொலைஞ்சு போச்சுன்னு செல்லுலயே பொலம்பிகிட்டிருந்தீங்க?" கோயிந்து கொடுத்த குறுஞ்செய்தி இடைவெளியில் கேட்டேன்.

"பேசிகிட்டிருந்தது என்னோட செல்லு.."

"அப்போ தொலைஞ்சது?"

"அது கடலை செல்!" என்றபடியே திரும்பி வந்தான் கோயிந்து. 'அடப்பாவிங்களா!' என்று நினைத்துக் கொண்டேன். "பாலா பாய் மேட்டர் ஒனக்குத் தெரியாதா?" என்று அடுத்த முடிச்சைப் போட்டான்.

"அது என்ன? தெரியாதே!" என்றேன் ஆவலோடு.

பதில் வருவதற்குள், பாலா, பேச்சை மாற்றிவிட்டார். "அதெல்லாம் அப்புறம் பேசுவோம், ஆமாம், சில சமயம் ஒரே பக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு கவுண்டரும் ஒரு நம்பர் காட்டுதே அது எப்படி?"

"ஒவ்வொரு கவுண்டரையும் ஒவ்வொரு நேரத்தில் அந்தப் பக்கத்தில் சேர்த்திருப்பாங்க.. அவ்வளவு தான்"

இதற்குள் கோயிந்துவின் செல்போன் சிணுங்கியது.

"இன்னா நைனா? என்னது? புதுசா கவுண்டர் போட்டுத் தரணுமா.. இப்போ " " இல் இருக்கேன்; இங்க புதுசா ஒரு கஸ்டமரு.. 'கவுண்டர்னா கவுண்டமணியா'ன்னு கேட்டு ஒரே ரவுசு.. இப்போ தான் கொஞ்ச கொஞ்சமா புரிய வச்சேன்.. நீ அங்கயே இரு.. இதோ நான் என் அஸிஸ்டெண்டைக் கூட்டிகிட்டு இதோ வந்துகினே கீறேன்; எங்காச்சும் போய்டாத என்ன?" என்றபடி போனை வைத்தவர், "அந்தப் போனை என்னாண்ட கொடு சார். கௌதம் சாருக்கு வலைப்பதிவு இஞ்சினியரப் பார்க்கணுமாம். உன்னக் கூட்டிகினு வாரேன்னு சொல்லிட்டேன், அந்தப் போன் உங்கைல இருந்தா நீ மறுக்கா கடல போட ஆரம்பிச்சிடுவ.. இங்க கொடு பார்க்கலாம்... " என்று பாலாவிடம் சொல்லிக் கொண்டே, என்னைப் பார்த்து, "அப்பால வந்து கண்டுகிறேன் பொன்ஸு. பார்க்கலாம் என்ன?" என்று கிளம்பினான் கோயிந்து..
உண்மையாகவே கவுண்டரிடம் அடி வாங்கிய செந்தில் மாதிரி பாவமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.




[ப்ரியன் யோசனைப் படி, உருவான இந்தப் பதிவு, பாகசவின் கோடிக் கணக்கான உறுப்பினர்களுக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது. ]

உலக எயிட்ஸ் விழிப்புணர்வு தினம்

1986 இல் உலகம் முழுவதும் இருபதாயிரம் எயிட்ஸ் நோயாளிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்ட போது இந்தியர்கள் யாரும் அந்தப் பட்டியலில் இல்லை. உறுதிசெய்யப்பட்ட எண்ணிக்கை பூஜ்யமாக இருந்தாலும், கண்டிப்பாக இந்தியர்களிலும் எச்ஐவி நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள் என்று தான் நம்பியது அரசு.

சின்னச் சின்னச் சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்ட முதல் இந்திய எயிட்ஸ் நோயாளி, சென்னையைச் சேர்ந்த ஒரு பாலியல் தொழிலாளி. அடுத்த ஆண்டு நாடு முழுவதும் செய்யப்பட்ட சோதனைகளின் மூலம் மொத்தம் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான எயிட்ஸ் நோயாளிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

அப்போதே தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு முயற்சிகள் தொடங்கப்பட்டாலும், 1990 வரை நாடு முழுவதும் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. 1992வில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தை அமைத்து முயற்சிகளை ஒரு சீரான பாதைக்குக் கொண்டு வந்தது அரசு. பதினாறு ஆண்டுகள் கழித்து இப்போது கொஞ்சம் கொஞ்சமாக எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்திருக்கிறது..எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்கிறது தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கை.



எண்பதுகளில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சந்தித்த கொடுமைகள் கணக்கற்றவை. கட்டுப்பாடான கலாச்சாரம் மிக்க இந்தியாவில், பாலியல் நோய்களைப் பற்றிப் பேசுவதே குற்றமாக எண்ணப்பட்ட காலம் அது. எய்ட்ஸ் போன்ற நோயால் பாதிக்கப்பட்டது யாராக இருந்தாலும் அவரின் ஒழுக்கத்தைப் பற்றியே கேள்வி எழுப்பும் சமூகம். இது போன்ற சமுதாயத்தில் நோய்களுக்கான பரிசோதனை செய்வதே தயக்கத்துக்குரியதாகக் கருதப்பட்ட நேரம். இந்தத் தயக்கத்தின் காரணமாகவே நிறைய பேர் மருத்துவரை நாடாமல், நோயுடனே வாழ்ந்து வந்தனர்.

அப்படியும் மருத்துவரிடம் சென்று வரும் சில தைரியசாலி நோயாளிகளின் நிலை இன்னும் பரிதாபத்துக்குரியது. நல்ல வேலையில் உள்ளவரானால், அவர் வேலை பறிபோகும் அபாயம் இருந்தது. ஒழுக்கங்கெட்ட கணவனின் மூலம் நோய்வாய்ப்பட்ட மனைவியானால், அவளைத் தீண்டத்தகாதவளாகவே பார்க்கும் வழக்கம் இருந்தது. கணவனால் நோய்வாய்ப்பட்ட மனைவி, கணவனையும் பறிகொடுத்து, ஒழுக்கமில்லாதவள் என்ற அவப்பெயருடன் வேறு வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய பரிதாபங்கள்.

ஒரு பாவமும் அறியாத பிஞ்சுக் குழந்தைகளாக இருந்தால் கூட, பள்ளிகளில் பிரித்துப் பார்க்கப்பட்ட கொடுமைகளும் உண்டு. பெற்றோருக்கு இந்த நோய் இருந்தாலே, குழந்தையையும் சேர்த்துத் தண்டிக்கும் கொடூரமான சமூகமாக இருந்திருக்கிறது. எய்ட்ஸ் நோயாளியின் குடும்பம் என்பதற்காக ஊரை விட்டே ஒதுக்கி வைக்கும் கோரங்களும் நிகழ்ந்துள்ளன. எய்ட்ஸ் நோயாளியைத் தொட்டால், கைகுலுக்கினால், அவர்களுடன் பேச்சு வார்த்தை வைத்துக் கொண்டாலே ஒட்டிக் கொள்ளும் நோயாக அறியமையால் சித்தரிக்கப்பட்ட காலங்கள் அவை.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு நிறுவப்பட்ட பதினாறு வருடங்களில் இதை எல்லாம் கடந்து வந்த இன்றைய சமுதாயத்தின் பார்வை கொஞ்சம் அகலமாகி உள்ளது.

பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கே எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுப்பாடங்கள் சொல்லித்தரப் படுகின்றன. நான் பள்ளியில் படித்த போது எயிட்ஸ் ஹெல்ப்லைன் விளம்பரம் ஒன்றைப் பற்றி வினா எழுப்பியபோது மழுப்பலாக பதில் கிடைத்த காலம் தாண்டி, இப்போது பள்ளிச் சிறுவர் சிறுமியரே சிகப்பு ரிப்பன் அணிந்து எயிட்ஸை எதிர்த்துக் குரல் கொடுக்கும் பேரணிகளும் நடக்கிறது

ஊடகங்கள், தெரு நாடகங்கள், வானொலி, 24 மணிநேரத் தொலைபேசிச் சேவை என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பும், அந்தந்த மாநில அமைப்புகளும் முயன்று இன்றைக்கு எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துள்ளனர். நோயை ஒட்டுவாரொட்டியாகச் சித்தரித்து, தொடுவதற்கே பயந்த சமூகத்தின் அறியாமை இருளை மொத்தமாக அழித்தெடுத்திருக்கின்றன இந்த அமைப்புகள்.

எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகங்கள், தாயாருக்கு இருக்கும் எயிட்ஸ் கருவிலிருக்கும் குழந்தையைத் தாக்காமல் இருக்கும் வழி, கோவா போன்ற மாநிலங்களில், திருமணத்திற்கு முன் எயிட்ஸ் பரிசோதனைகளைக் கட்டாயமாக்குதல் என்று அரசின் இந்த அமைப்புகள் செய்திருக்கும் உதவி அளப்பற்கரியது.

இன்று எயிட்ஸால் பாதிக்கப்பட்ட ஒரு சின்னஞ்சிறு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார் சைதாப்பேட்டையைச் சார்ந்த தாயார் ஒருவர். அவரே பெற்ற குழந்தைகளுடனும் பிற குப்பத்துக் குழந்தைகளுடனும் சந்தோசமாக வேறுபாடில்லாமல் விளையாடி மகிழ்கிறது அந்தப் பிஞ்சு.

எயிட்ஸால் பாதிக்கப் பட்ட நாமக்கல் நகரத்துப் பெண்கள் சிலர் கூடி பாஸிடிவ் வுமன்ஸ் நெட்வொர்க் என்ற அமைப்பைத் தொடங்கி இருக்கிறார்கள். எயிட்ஸால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சுய உதவிக் குழுக்கள், எயிட்ஸ் நோயாளிகளின் குழந்தைகள் படிக்க உதவி, விழிப்புணர்வுப் பிரச்சாரம் என்று பல்வேறு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்த பாசிடிவ் பெண்கள்.

இன்னும் பல்வேறு தளங்களிலும் எயிட்ஸ் நோயைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்ய வேண்டும். "2010க்குள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ உதவிகள் கிடைக்கச் செய்வோம்" என்று வாக்களித்திருக்கிறார்கள் உலகின் தலைவர்கள். இந்த இலக்கை எட்டுவதற்கு உதவுவதும், வாக்களித்த அரசாங்கங்கள் 'இந்த இலக்கை எட்டிவிடுவோம்' என்ற நம்பகத்தன்மையை வளர்க்கும் செயல்களைச் செய்யத் துவங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதுமே 2006 டிசம்பர் ஒன்றான இன்றைய உலக எயிட்ஸ் தினத்தின் குறிக்கோளாகும்.

நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதும் எயிட்ஸ் நோயாளிகளைப் பிரித்துவைக்காமல் அன்போடு அவர்களை அணுகி நமக்குள் ஒருவராகக் கருதுவதே உலக எயிட்ஸ் தினத்தில் நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய உறுதி மொழி.
மலரட்டும் எயிட்ஸ் இல்லாத புதிய சமுதாயம்.

தொடர்புடைய சுட்டிகள்
1. நிர்மல் அளித்தது
2. பாலபாரதி
3. மங்கை

Thursday, November 30, 2006

வெயிலோடு போய்

சவுத் ஏசியன் புக்ஸ் வெளியீடான ச.தமிழ்ச்செல்வன் எழுதிய "வெயிலோடு போய்" புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. (முதல் பதிப்பு 1985. நான் படித்தது மூன்றாவது பதிப்பு 1994) [ச.தமிழ்ச்செல்வனைப் பற்றிய சிறு அறிமுகத்தை இங்கு பத்ரியின் மறுமொழியில் பார்க்கலாம்.]

ஏற்கனவே தமிழ்ச்செல்வனின் "அரசியல் எனக்குப் பிடிக்கும்" படித்திருக்கிறேன். அந்தப் புத்தகத்தின் தொடக்கப் பகுதிகள் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக, ஓட்டு போடுவது மட்டுமே அரசுக்கும் பொது மக்களுக்குமான தொடர்பு என்ற என் பழைய எண்ணங்களிலிருந்து, தான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு சாதா குடிமகனின் தினசரி வாழ்வு அரசுடன் எத்தனை பிணைத்திருக்கிறது என்று புரியவந்தது. நடுநிலை என்ற ஒன்று இல்லவே இல்லை என்கிறார் ஆசிரியர். கணினி மொழியில் சொல்லும் ஒன்றும் பூஜ்யமும் இல்லாத இடைப்பட்ட நிலையான fuzzy logic மாதிரியான நிலைகள் ஒரு மனிதனின் அரசியல் நிலைப்பாட்டில் இருக்கவே முடியாது என்ற அந்தக் கருத்தும் எனக்குப் புதுமையான ஒன்று. மற்ற விமர்சனங்கள் ஏற்கனவே வந்துவிட்டன. கடைசி சில அத்தியாயங்கள் மட்டும் ஏதோ கம்யூனிச கட்சிப் பிரசாரம் போல் எனக்குத் தோன்றியது. மற்றபடி மிக அற்புதமான புத்தகம் அது.

அந்தப் புத்தகத்தைப் படித்த அதே உணர்வோடு வெயிலோடு போகத் தொடங்கினேன். "வெயிலோடு போய்", பெரும்பாலும் தீப்பெட்டித் தொழிற்சாலைகளினால் மட்டுமே பிழைக்கும் குடும்பங்களின் அன்றாட வாழ்வைப் பற்றிய கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் படித்து முடித்தபின் குறைந்தது இரண்டு நிமிடமாவது ஒதுக்கிச் சிந்திக்கத் தூண்டுகின்றன. வாழ்வியலின் யதார்த்தம் அடங்கிய கதைகள்.




பெற்றோரும் குழந்தைகளும் எத்தனைதான் நாளெல்லாம் உழைத்தாலும், ஒரு இனிப்பு வாங்கிச் சாப்பிடக் கூட முடியாத அவலங்களைப் பேசுகிறது 'பாவனை'. குழந்தைகள், இனிப்பு வண்டிக்காரனின் வண்டியில் இருக்கும் இனிப்புகளைச் சாப்பிடுவதாக பாவனை செய்து மகிழ்வதைப் படிக்கும் போது எங்கள் வீட்டருகில் வந்த குல்பி வண்டிக்காரனிடமிருந்து உடல் நிலைக்காக "தினசரி ஐஸ்கிரீம் வாங்கித் தரமாட்டேன்" என்று அப்பா சொன்னபோது கோபப்பட்டு அழுத நாட்களின் நினைவு அவமானத்துடன் எழுகிறது.

"வார்த்தை" என்ற கதையில் பள்ளிச் சுற்றுலாவுக்காக தயாராகும் சின்னப் பையனின் கண்ணினூடாக நகரும் சிறுகதையும் அடுத்த அழகான கதை. மிக மிக இயல்பான வார்த்தைகளைப் பயன்படுத்தி சின்ன குடும்பத்தின் பாசம், அன்பு, கண்டிப்பு என்று எல்லா உணர்ச்சிகளையும் அற்புதமாக வடித்தெடுத்திருக்கிறார் ஆசிரியர். கதை படிக்கத் தொடங்கும்போதே முடிவை ஒரு மாதிரி ஊகித்துவிட முடிகிறது என்றாலும் கதையின் அழகு 'இன்னும் இன்னும்' என்று திருப்ப வைப்பதுடன், கடைசியில் சிறுவன் சோலையின் சோகம் நமக்குள்ளும் வந்து ஒட்டிக் கொள்கிறது.

'சுப்புத்தாய்'உம் 'அசோகவனங்களும்' கொஞ்சம் வளர்ந்த தீப்பெட்டித் தொழிலாளிகளின் சோகம். வேலைக்கு என்று வீட்டை விட்டு வெளியே வரும் பெண்களைத் தவறான கோணத்தில் பார்ப்பதென்பது அடிமட்ட துப்புரவுத் தொழிலாளர்களில் தொடங்கி, கால் சென்டர்களில் கைநிறைய சம்பளம் வாங்கும் பெண்கள் வரை எல்லா நிலையிலும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. பால் கொடுக்கும் தாயின் மார்பைப் பார்த்து மகிழும் சுப்பத்தாயின் தொழிற்சாலைக் கணக்கனையும், கட்டின கணவன் மாதிரி மரியாதை இல்லாமல் அழைக்கும் மாரியம்மாவின் கணக்கப் பிள்ளையும் இருக்கும் வரை எல்லா வேலையிடங்களும் அசோகவனங்கள் தான்.

அசோகவனங்களைப் பற்றிச் சொல்லி முடிக்கும் போதே தொகுப்புக்குப் பெயர் கொடுத்த 'வெயிலோடு போய்' மாரியம்மாவின் புருஷனைப் பற்றியும் எழுதவேண்டும். தன் முறை மச்சானுக்கு என்றே வளர்ந்து வேறு இடத்தில் வாழ்க்கைப்பட்ட பெண் என்பதையும் பாராமல் அவளுடன் அன்பாக இருப்பதும் அவள் கேட்கும் பொழுதெல்லாம் தாய்வீட்டுக்குப் போக அனுமதிப்பதும், என்ன ஏதென்று தெரியாமலே ஆறுதல் சொல்வதும் என்று அன்பானவராகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார் அந்தக் கணவர். அதே போல் என்னை ரொம்பவும் கவர்ந்த மற்றொரு பாத்திரம் 'கருப்பசாமியின் அய்யா'. சாகசங்கள் செய்வதிலும், 'பெரிய சாதனைக்காரன்' என்று பெயர் வாங்குவதிலும் மட்டுமே ஆசையுள்ள கருப்பசாமியின் தந்தையை அவள் தாய் காளியம்மா 'திருத்தி' அதாவது இன்றைய வர்த்தக உலகத்துக்கு ஏற்றவாறு மாற்றி, சாதாரண வாழ்க்கையை வாழவைக்கிறாள். 'சாதாரண மனிதர்களால் செய்ய முடிந்தவற்றைச் செய்யக் கூடாது' என்று நினைக்கும் ஒரு சாதனையாளனின் வாழ்வு பொருளாதாரக் காரணங்களால் மட்டுமே எப்படி மாறிப் போகிறது என்கிறது இந்தக் கதை.

அதிகாரத்துக்குப் பயந்து வேலை செய்வதன் கொடுமைகளைப் பேசுகிறது 'பிரக்ஞை'. 'எப்போதும் எல்லாரும் என்னைப் பார்த்துப் பயப்பட வேண்டும்' என்று நினைக்கும் ஹெட்கிளார்க்கின் கொத்தடிமைக் கட்டுகளுக்குப் பணியாத ஒரு இளைஞனின் கதை. அப்படிப்பட்டவனைச் சமுதாயமும், அதிகார வர்க்கமும் எப்படிப் பார்க்கிறது என்பது வரை..

நெஞ்சைத் தொட்ட மற்றொரு கதை "வேறு ஊர்". தன் காலமெல்லாம் உழைத்துச் சம்பாதித்துப் பெற்ற பிள்ளையைப் படிக்க வைத்தும், அந்தக் கல்வி மகனது வாழ்க்கையிலும் பொருளாதார உயர்வைத் தர இயலாமல் போனதை நினைத்து வாடும் முதியவரின் கதை. வயதானவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் இன்றைய நாட்களில் ஏழ்மை என்ற ஒரே காரணத்துக்காகவே தன் பெற்றோரைக் கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு அழைத்துப் போகிற மகனின் கதையும் கூட.

'அப்பாவின் பிள்ளைகள்', பிடிக்காத வேலையைச் செய்யும் மனம் எப்படி அதிசீக்கிரம் சோர்ந்து துவண்டு போவதைச் சொல்கிறதென்றால், 'குரல்கள்', தீப்பெட்டித் தொழிற்சாலை விபத்தில் இறக்காமல் தப்பிப் பிழைத்த சிறுவனின் எஞ்சிய வாழ்நாள் முழுவதுமே கொடூரமான கனவுகளால் நிரம்பி இருக்கும் அவலத்தைப் படம்பிடிக்கிறது.

கவர்ந்த மற்றொரு கதை 'மீடியம்'. ஒரு உள்ளாடையை வைத்து இத்தனை அற்புதமான கதையா?! நாகரிகக் காரணங்களுக்காக கோவணத்திலிருந்து ஜட்டிக்கு மாறி, அதுவே வருமானத்துக்கு மீறிய செலவாகக் கஷ்டப்படும் மனிதரின் கதை. 'நம் ஊரில் ஒரு ஜட்டி கூட வாங்க முடியாத அளவுக்கு ஏழை மக்களா!' என்ற அதிர்ச்சி மட்டுமே மிச்சம்.

இவை தவிர ராணுவப் பின்னணியான 'அந்நியம்', சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் கதையான '26ம் பக்கத்து மடிப்பு' என்று இந்தப் புத்தகம் முழுவதுமே பொக்கிஷம்.

தீப்பெட்டித் தொழிலாளர்களின் வாழ்வில் பெட்டியை ஒட்டுவதால் ஏற்படும் சிரங்கும், அழுக்கும், ஏழ்மையும் எப்போதும் கூட வருபவை என்று இந்தக் கதைகள் உணர்த்துகின்றன. அம்மா, அப்பா இருவருமே நாள் முழுவதும் வேலை செய்யும் குடும்பங்களில் கூட வறுமை இறுதிவரை தாண்டவமாடுவதைப் பார்க்கும் போது மனித உழைப்புக்கு இவ்வளவு தான் மதிப்பா? என்று மனம் வெறுத்துப் போகிறது.

குழந்தைத்தனமான ஒரு ஆசை...

காலையிலிருந்தே இதோ, 'இப்போ வருவேன்', 'அப்போ வருவேன்' என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டே இருந்த மழையைத் தைரியமாக எதிர்த்துக் கொண்டே, கோயம்பேடு காய்கனி அங்காடிகளுக்குச் சிற்றுலா சென்ற போது மதிய உணவுக்குத் திரும்பிவிடலாம் என்பது மாதிரியான நேரம் தான். மார்க்கெட்டின் சிறுவியாபாரிகள் கடைகள் எல்லாவற்றையும் ஒரு சுற்று நோட்டம் விட்டுவிட்டு அன்றைக்குப் பச்சையாக புதிதாகத் தோன்றும் காய்களை மட்டுமே வாங்குவது எங்கள் வழக்கம்.

வெங்காயக் கடையில் சாம்பார் வெங்காயத்துக்கும் பெரிய வெங்காயத்துக்குமான விலைப்பேரம் பேசிக் கொண்டிருந்த போது தான் வெங்காயக் கூடைக்கும் கடைக்காரரின் இருக்கைக்கும் இடையில் லேசாக பூந்துடைப்பத்தின் நுனி ஒன்று தெரிந்தது. லேசான ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் பேச வாய்வராமல் "கிலோ இருபது ரூபாயா? கொள்ளை விலையா இருக்கே!" என்று பேசிக் கொண்டிருந்த அம்மாவை நான் தொடுவதற்கும் அந்தப் பூந்துடைப்பத்தின் தலை அதே இடைவெளியில் தென்படுவதற்கும் அதிகம் நேரமாகவில்லை.

சின்ன அணில் அது. அப்போது தான் அணில் ஒன்றை அத்தனை அருகில் பார்க்கிறேன். சிறுவயதில் இந்திப் புத்தகத்தில் மகாதேவி வர்மா வளர்த்த அணிலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நாங்கள் இருந்த வீடுகளில் எல்லாம் அங்குமிங்கும் வளர்ந்திருந்த மரங்களில் அவ்வப்போது ஓடி விளையாடும் அணில்களைப் பார்த்து ரசித்திருந்தாலும், அத்தனை அருகில் பார்த்ததில்லை.

அணில் மெல்ல தலையை வெங்காயக் கூடையிலிருந்து வெளியே விட்டதும், அம்மா என் தொடுதலை உணர்ந்து "ஆமாம் அத அவர் வளர்க்குறாரு" என்றார்.

"என்னது? அணில் வளர்க்கறீங்களா?" என்று நான் கேட்டதும், லேசான வெட்கம் கலந்த பெருமிதத்துடன் 'ஆம்' என்றார் அந்தக் கடைக்காரர். கடைக்காரர் என்று சொன்னாலும் சின்ன பையன் தான், பதினெட்டிலிருந்து இருபது வயது தான் சொல்லலாம். அணிலுடன் விளையாடும் வயது தான் என்று நினைத்துக் கொண்டேன்.

"சாப்பிட என்ன கொடுப்பீங்க?"

"பால் தான் கொடுக்கிறது." என்றபடி இடதுகை பக்கத்தில் வைத்திருந்த பாலை, அணில் கண்டுகொண்டு விடாமல், கையில் எடுத்துக் கொண்டார் அவர். அணிலும் சளைக்காமல் அந்தப் பாலைத் தேடத் தொடங்கியது. கடைக்காரரின் உடையின் மேல் ஏறிப் பின், உடலிலும் ஓடிப் போய் பின்கழுத்துவழியாக இடது கையில் இறங்கி, விரல்களில் இருந்த பாலுக்கு அருகில் சென்றபோது, கடைக்காரர் பால் டம்ப்ளரை வலதுகைக்கு மாற்றிக் கொண்டார். அணிலார் மறுபடி உடலெங்கும் இறங்கித் தேடத் தொடங்கினார்.

பக்கத்துக் கடைக்காரர் "டேய், அது கிட்ட காட்டாம குடின்னு அப்பவே சொன்னேன்ல?! " என்று அறிவுரை சொன்ன போது எங்கள் வியாபாரம் முடிந்து அடுத்த கடைக்கு நகரத் தொடங்கினோம். திரும்பி வரும் வழியில் அந்தக் கடைக்காரரும் அணிலும் மீண்டும் அதே ஒளிந்து பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது ரசிக்கும்படியாக இருந்தது.

**********************

வழக்கமாகப் போகும் எங்கள் அருகாமை மருந்துக் கடை தான். கணவனும் மனைவியுமாக அந்தக் கடையை நடத்துகின்றனர். கணவர் சீட்டை வாங்கி மருந்தை எடுத்து வைக்க, மனைவி ரசீது போட்டுக் கொடுக்க மிக அழகான வியாபாரம் அவர்களுடையது. நான் போகும் நேரங்களில் விளையாட்டுப் பள்ளியில் படிக்கும் அவர்களது இரண்டரை வயது மகனும் பெரும்பாலும் கடையில் தான் இருப்பான். மருந்து எடுத்து வரும் அட்டை பெட்டிகளையோ அவனுக்கென்றே இருக்கும் பென்சில், ரப்பர் இத்யாதிகளையோ வைத்து விளையாடிக் கொண்டிருப்பான்.

நாம் ஏதாவது கேட்கும் போது அதை, தானே எடுத்துத் தர வேண்டும் என்று சில சமயம் அவனிடம் ஆர்வம் கொப்பளிக்கும். அவன் கைக்கு எட்டும் இடத்தில் இருக்கும் விக்ஸ், அமிர்தாஞ்சன் போன்ற மருந்துகளை எடுத்துக் காட்டி, "இது வேணுமா உங்களுக்கு?" என்னும்போது, "அதெல்லாம் வேண்டாம்டா கண்ணா, உன்னைத் தான் தூக்கிக் கொஞ்சணும்" என்று சொல்லலாம் போலிருக்கும்.

அன்றைக்குக் கடைக்குப் போகும்போது, சிறுவன் பயங்கர உற்சாகமாக இருந்தான். அவன் அம்மாவின் தம்பி வந்திருந்ததுதான் உற்சாகத்துக்கான காரணம் என்று தெரிந்தது. வேலையிலேயே மூழ்கி இருக்கும் அப்பாவுக்கும், கணக்கில் கறாராய் இருக்க வேண்டிய அம்மாவுக்கும் இடையில் விளையாடிக் கொண்டிருந்தாலும் தனிமை அவனை வாட்டிக் கொண்டிருந்ததென்பது இன்றைக்கு அவன் மாமாவுடன் பேசிக் கொண்டிருந்த மகிழ்ச்சியிலும் குதியாட்டத்திலும் தெளிவாகத் தெரிந்தது. மாமாவிடம் தன் கடை குளிர்சாதனப் பெட்டியைக் காட்ட வேண்டும் என்று திடீரென்று ஆசை வந்துவிட்டது நம் குட்டிப் பையனுக்கு.

"அப்பா, அப்பா, நம்ம பிரிட்ஜில, " என்றபடி எங்கள் சீட்டுக்கான மருந்தை எடுத்துக் கொண்டிருந்த அப்பாவின் முன் போய் ஒரே குதி குதித்தான். அன்றைக்கென்று என்ன பிரச்சனையோ அவருக்கு, மகன் அந்த வாக்கியத்தை முடிக்கும் முன்னரே, "இன்னிக்கு நீங்க ரொம்ப பேசுறீங்க.. ஆட்டம் அதிகமா இருக்கு, ஒரு இடத்துல உட்காரக் கூடாதா?!" என்று கொஞ்சம் காட்டமாகவே கேட்டுவிட்டார்..

பையனின் குதியல் பட்டென்று அடங்கிப் போயிற்று. அந்தக் கேள்வி கூட முடியவில்லை. கோபத்துடன் சிறுவன் கடை நடுவிலிருந்த அலமாரியின் பின்பக்கத்தில் போய் நின்று கொண்டான். அவனைக் கொஞ்சம் கடுமையாகவே பேசிவிட்டார் என்பதால் அப்பாவுடன் போயிருந்த என்முகமும் என்னவோ நானே திட்டுவாங்கியது போல் சுருங்கிப் போக, அப்பாவிடம் மருந்து பற்றிக் கேட்கவந்த கடைக்காரர், முகக்குறி படித்து, குழந்தையைக் கொஞ்சம் அதிகமாகவே சொல்லிவிட்டோமோ என்று வருத்தத்துடன் அலமாரி பின்னால் போனார்.

"பிரிட்ஜில என்ன, சொல்லுங்க.. " என்று குனிந்து கேட்டார்..

அந்தத் தெய்வம் சற்று நேரம் முன்னால் நடந்ததை முற்றிலுமாக மறந்து போய் இந்த அங்கீகாரத்துக்கே குளிர்ந்து, "பிரிட்ஜில் இருக்கிற சாக்லேட்டை மாமாவுக்குக் கொடுக்கலாமா?" என்று கேட்கத் தொடங்கியது..

*****************************

இரண்டு சம்பவங்களைப் பார்த்ததிலிருந்து என் மனதில் ஏனோ பல்லாயிரம் கேள்விகள். முதல் முதல் வேலை பார்த்த நிறுவனத்தில் பிந்து என்ற என் தோழி ஒருத்தி அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து ஆறு மணி வாக்கில் அலுவலகம் வந்து விடுவாள். மதியம் இரண்டு மணிக்கு அவள் வீட்டுக்குக் கிளம்பும் நேரம் தான் நான் அவளைப் பார்க்கக் கூடிய நேரம். "இத்தனை சீக்கிரம் கிளம்புறீங்க?!" என்று தான் எனக்கும் அவளுக்குமான பேச்சு வார்த்தை தொடங்கியது. பிந்துவின் இரண்டு வயது மகள் ப்ளே ஸ்கூலிலிருந்து திரும்பும் மூன்று மணிக்கு அவள் வீட்டிலிருக்க வேண்டும் என்று தான் இத்தனை அதிகாலையில் எழுந்து அலுவலகம் வருகிறாளாம் அவள். இப்படி வராவிட்டால் குழந்தையுடனான நேரம் ரொம்பவே குறைந்துவிடுகிறதாம்.

மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து இந்தக் காரணத்தை அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கிறேன். குழந்தை கொஞ்சம் தவழ, பேசத் தொடங்கிவிட்டால், அவனோ அவளோ பள்ளிக்குப் போகத் தொடங்கும் வரை வேலையை கைவிட்டு விடுபவர்கள், சூழ்நிலை காரணமாக வேலைக்கு வந்தாலும் குழந்தை சாப்பிட்டானா? தூங்கினாளா? வெயிலில் அலையாமல் இருக்கிறாளா ? என்று கவலைப்பட்டுக் கொண்டே இருக்கும் பெற்றோரை அடிக்கடி பார்க்க முடிகிறது.

செல்லப் பிராணிகள் வளர்க்கும் போதும் இந்தப் பிரச்சனை இருக்கிறது. நாயோ பூனையோ வளர்க்க வேண்டும் என்று சொன்னபோது எங்கள் வீட்டில் எழுந்த முதல் கேள்வி, அதைப் பகல் பொழுதில் யார் பார்த்துக் கொள்வது என்பது தான்.

"மகளிர் மட்டும்" திரைப்படத்தில் வந்தது போல் ஏன் குழந்தைகளை அலுவலகத்துக்கே அழைத்து வர நம்மால் முடிவதில்லை. இது போன்ற அலுவலகங்கள் உலகெங்கிலும் எங்காவது இருக்கின்றனவா? பன்னாட்டு நிறுவனங்களில் சிலவற்றில் ஊழியர்களுக்கான குழந்தைகள் காப்பகங்களே இருக்கின்ற போதும் அவை இருக்குமிடம் பணியிடத்திலிருந்து பலகாத தொலைவாகவே இருக்கிறது.




காப்பி, மதிய உணவு இடைவெளிகளில் மட்டுமாவது குழந்தைகளைப் பார்க்க முடிந்த அருகாமை இடங்களாக இருந்தால் குழந்தைகளைப் பற்றிய கவலைகள் இல்லாமல் வேலை செய்யும் பெற்றோரின் பணித்திறமும் அதிகரிக்கும் தானே? அதை ஏன் காண முடிவதே இல்லை? களத்து மேட்டில் குழந்தையைத் தூளியில் போட்டுவிட்டு வயலுக்குப் போய்க் கொண்டிருந்த நமது கலாச்சாரத்தை எங்கு இழந்தோம்?

பத்து மணி நேரத்துக்கும் மேல் கணினித் திரையையே பார்த்துக் கண்ணைக் கெடுத்துக் கொள்ளாமல் இருக்க, விளையாட்டுக்காக டேபிள் டென்னிஸ், கேரம் போன்ற விளையாட்டு அறைகள் கொண்ட நிறுவனங்கள் கூட, இவற்றுக்குப் பதிலாக குழந்தைகள் அறை வைத்திருந்தால் இடமும் கலகலப்பாகும்; கொஞ்ச நேரம் குழந்தைகளிடம் செலவு செய்துவிட்டு வரும்போது வேலையும் சுறுசுறுப்பாக நடக்கும் அல்லவா?

ஏதோ ஒரு படத்தில் நாகேஷ் தன் கைக்குழந்தையை ஒளித்து மறைத்து அலுவலகத்துக்குத் தூக்கி வருவார். அந்த மாதிரியான ஒரு அலுவலகம் உலகில் எங்கேயாவது இருக்கிறதா என்ன?

Wednesday, November 29, 2006

பதிவுலகில் பெண்கள்?!

"தமிழ்ப் பதிவுலகுல பார்த்தீங்கன்னா பொன்ஸ், பெண் பதிவாளர்கள் ரொம்ப குறைவு"


- எழுத வந்த ஐந்தாம் மாதம் பல்வேறு காரணிகளால், 'மூட்டை கட்டலாம்' என்று நான் முடிவு செய்திருந்த போது மதி சொன்னது எனக்கு.

உண்மை தான்; பதிவுலகில் பெண் பதிவாளர்களின் எண்ணிக்கைக் குறைவாகத்தான் இருக்கிறது. அதிலும் தொடர்ந்து இயங்குபவர்கள் மிகமிக சொற்பம். வீட்டளவில் பேசுவதற்கே போன நூற்றாண்டு வரை அனுமதி மறுக்கப்பட்ட பெண்கள், பொது ஊடகங்களில் பேச இன்னும் அதிகமான தடைகள் வந்து உட்கார்ந்து கொள்கின்றன.



ஆபாச வார்த்தைகளில் திட்டுபவர்கள் ஒருபக்கம் என்றால், வெளிப்படையாக புரியாதபடி நக்கல் தொனிகளில் விரும்பத்தகாத விமர்சனங்கள் இன்னொரு பக்கம். இன்னும் சிலர் தைரியமாக எல்லாருக்கும் புரிகிற விதத்திலேயே, "உங்களைப் பற்றி மற்றவர்கள் சொல்லி இருப்பதை எல்லாம் படிக்கையில் உங்களைப் பார்க்கும் ஆசை வந்துவிட்டது" என்று எழுந்து நிற்கும் வக்கிரம்.

வீட்டில் சொல்லாமல் எழுதும் பெண்களும் இங்கே இருக்கிறார்கள்; சொன்னால், ஒரு பெண் எதைப் படிக்கவேண்டும் என்பதையே கணவர்கள் தீர்மானிக்கும் இந்தக் காலத்தில், எதை எழுதுவது என்பதிலும் தலையீடு வருவதை விரும்பாமலோ, எழுதுவதிலே தலையீடு வருமோ என்று பயந்தோ! கோலம், யானைகள், சமையற்குறிப்பு போன்ற தலைப்புகளில் இன்னும் அதிகம் கூட எழுதுங்கள். ஆனால், கற்பு, கத்திரிக்காய், சந்தித்த பாலியல் வக்கிரங்கள், வேலைக்குப் போகும் பெண்களின் உண்மையான பிரச்சனைகள் என்று தொட்டுப் பாருங்கள், அப்போது தெரியும் உங்கள் எழுத்தைத் தீர்மானிப்பது யார் என்று!

எழுதுபவர்களை ஊக்குவிக்கிறேன் பேர்வழியென்று, வக்கிரமாக "நீங்க பெண் என்கிறதால் தான் அதிக பின்னூட்டம் வந்து விழுது!" என்று சொல்லி, எழுத்தைக் கீழ்மைப்படுத்தும் 'நண்பர்கள்' இருக்கிறார்கள். எனக்குக் கூட அப்படியான பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன.

பெண்ணியம் என்றாலே "ஆணுக்குப் பெண் நிகர்னு சொல்ல வந்திருக்கீங்க, எதுக்கு பெண்ணுன்னு தனித்துச் சொல்றீங்க?" என்ற கேள்வி எழுகிறது. அதே, "நாம் பயன்படுத்தும் செல்போன், ஸ்கூட்டி எல்லாம், பெண்களுக்கும் வாங்கிக் கொடுத்துட்டோம்" என்று பிரித்துச் சொல்பவர்களிடம், பிரிந்து நின்று தானே கேட்க வேண்டியிருக்கிறது?

"எங்களால எழுத வரலைங்கிறீங்க, நாங்க உதவி செஞ்சாலும் அதைச் சொல்லிக்கக் கூடாதுங்கிறீங்க, அப்போ பிரச்சனைன்னு வந்தா எங்களைக் கேட்கக் கூடாது". ஆகா, பிரச்சனைகளில் உதவிக்கு வராமல், தாமாக சரி செய்து கொள்பவர்களுக்கும் தான் முத்திரைகள் தயாராக இருக்கின்றனவே. "உங்க பிரச்சனையை எப்படிச் சமாளிச்சி தீர்வு பெற்றீங்கன்னு எங்களுக்குத் தெரியாதா?!" என்ற எகத்தாளங்கள் குதித்து வந்து விடுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேல், வெளிச்சமூகத்தில் படிப்பறிவில்லாத மக்கள் தாம் ஆண்-பெண் நட்பைக் கொச்சைப்படுத்துகிறார்கள் என்றால், படிப்பறிவாளர்கள் மிகுந்த பதிவுலகிலும், வேறெந்த ஆயுதமும் பலன் தராதவுடனே, பெண் பதிவாளருக்குத் தொடர் நண்பராக இருக்கும் ஆண்களை அல்லது, ஆண் பதிவர்களின் தோழியைச் சேர்த்து வம்பிழுப்பது சுலபமான உத்தியாகப் பயன்படத் தொடங்கிவிட்டது.

எங்களை நாங்களாக இருக்க விடுங்கள், "நீ இப்படி இருப்பதற்கு நான் தான் காரணம்" என்று ஆதிக்க உணர்வில் பேசுவதையும் நிறுத்திவிட்டு.

இறுதியாக, பெண் பதிவர்களையும் சக மனிதர்களாகப் பார்க்கும் எந்த நண்பரையும் இந்தப் பதிவு சாடவில்லை. இந்தக் கட்டுரையின் பேசுபொருள் மீது உங்களுக்குக் கோபம் வந்தால், உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்யும் காலம் வந்துவிட்டது என்றுதான் பொருள்.

தொடர்புள்ள பதிவுகள் :

1. அயனுலகம்

2. நிலா

3. இட்லிவடை

4. சக்தி

படம் காட்டுறேன்..

வெகு நாட்கள் முன்பே இட்டிருக்க வேண்டிய பதிவு இது. அமெரிக்காவில் பார்த்த ஒரு குகைப்பகுதியின் அறிமுகம். நான் தங்கியிருந்த ஊரிலிருந்து ஒரு மணிநேரப் பயணமான இடத்தில் இருந்தது இந்தக் குகை. மெரிமெக் குகைகள்(Meramec Caves) என்று பெயர். இதை ஜெஸ்ஸி ஜேம்ஸ் ஒளிந்திருந்த இடம்(Jesse James Hideout) என்றும் சொல்கிறார்கள்.


1870களில் அமெரிக்காவைக் கலக்கிய கொள்ளைக்காரனான ஜெஸ்ஸி ஜேம்ஸும் அவனது கூட்டத்தாரும் தங்க இடம் அளித்த குகையாம் இது.



அருகாமை வங்கிகளிலும் ரயில்களிலும் கொள்ளையடித்தபின் இந்தக் குகையில் வந்து தான் அவர்கள் ஒளிந்து கொள்வார்களாம்.



ஒளிந்து கொண்ட இடத்துக்கும் மாதிரி செய்து வைத்திருக்கிறார்கள்:



அருகாமைப் பள்ளிக்கூடத்துக் குழந்தைகள் செய்து கொடுத்த காந்தசக்தியைப் பயன்படுத்தும் பென்டுலம்:


உலகிலேயே இது போல் மொத்தம் பன்னிரண்டு பெண்டுலங்கள் தான் இருக்கின்றனவாம். அவற்றிலும் இது சிறப்பு மிக்கது, ஏனெனில் இந்த பெண்டுலத்தைச் செய்த குழந்தைகள் இதன் நிறையில் கைவைத்து விட்டார்களாம். அதனால், பெண்டுலம் ஒரு நிமிடம் போல தாமதமாக நகர்கிறதாம். ;)


இன்றைய "சவால்" மாதிரியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் போல் 1950களில் அமெரிக்காவின் மிகவும் புகழ் பெற்ற தொகா நிகழ்ச்சி பீபிள் ஆர் ஃபன்னி(People are Funny). அந்த நிகழ்ச்சியின் பகுதியாக, குகையைச் சேர்ந்த கீழுள்ள பகுதிக்குள் தம்பதியராக ஐந்து நாட்கள் போல் தங்கியிருக்க வேண்டும்.



இடம் மொத்தமே இவ்வளவு தான். ஆனால், அங்கேயும் தங்கி இருந்து ஒரு ஜோடி பரிசு பெற்று பஹாமாஸுக்கு ஒரு மாதச் சுற்றுலா சென்று வந்தார்களாம்!


என்னத்தச் சொல்ல, மக்கள் உண்மையாகவே கோமாளிகள் தாம்!






தண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கும் இந்தக் குகைப்பாறைகளில், ஓன்க்ஸ்(Onyx) என்னும் புதுவிதமான பாறைகள் உருவாகின்றன. அழகானவை இந்த ஓன்க்ஸ்.



ஓன்க்ஸின் இன்னுமொரு காட்சி



ஓன்க்ஸ் இன்னும் அழகாக


இந்தப் பாறைகளின் மேல் விதவிதமாக, வெவ்வேறு நிறங்களில் வெளிச்சமடித்து பின்னணியில் பாடல் ஒன்றையும் ஓட விட்டு விடுகிறார்கள். பாடல் இசைக்கு ஏற்ப வெளிச்சமும் பாறைகளின் மீது விளையாடுகிறது. அழகான காட்சியாக இருக்கிறது.. ஏதோ நடனம் போல..




வைன் டேபிள் என்கிறார்கள் கீழே உள்ள குதிரையை


மூன்று கால்களால் நிற்கும் இந்தக் குதிரையும் நீருக்கடியில் உருவான ஓன்க்ஸ் பாறைகளால் ஆனது. திராட்சைக் கொத்துகள் போல் இருக்கும் இதன் உடலமைப்பைப் பார்த்துத் தான் இது 'வைன்' டேபிள் என்று அழைக்கப்படுகிறது.



உலகிலேயே மொத்தம் மூன்று இடங்களில் மட்டுமே இருக்கும் இந்த வைன் டேபிள் உருவாக்கம், இந்தக் குகைகளில் மட்டுமே தண்ணீருக்கு மேலே இருந்து மக்களுக்குப் பார்ப்பதற்குக் கிடைக்கிறது.


அழகான இந்தக் குகைக்கு மொத்தம் ஏழு நிலைகள் இருக்கின்றன. இரண்டு நிலைகள் மட்டுமே நாம் பார்க்கக் கிடைக்கிறது. மற்றவை இன்னும் தண்ணீருக்கடியில் இருக்கின்றன போலும். குகையைச் சுற்றிப் பார்க்க இருபதிருபது பேராக அனுப்புகிறார்கள். வழிகாட்டிகளின் துணையில்லாமல் உள்ளே போகவே அனுமதிப்பதில்லை. வழிகாட்டி, சுற்றுலா எல்லாவற்றிற்குமாகச் சேர்ந்து $20 செலவு என்று நினைவு.

அமெரிக்காவின் எல்லா சுற்றுலா இடங்கள் போலவும் இங்கும் உள்ளே நுழையுமுன் நம்மை ஒரு நிழற்படம் எடுத்துக் கொள்கிறார்கள். திரும்பி வரும் போது அந்தப் படத்தை நினைவுக்காக நாமே பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இல்லையென்றாலும் அவர்களே வைத்துக் கொள்கிறார்கள். (ஏதாவது பாதுகாப்பு ஏற்பாடாய் இருக்குமோ என்று எனக்குச் சந்தேகம் :) )

இந்தக் குகையைப் பார்த்து முடித்து வந்த போது எனக்கு நம் விசாகப் பட்டினத்துக்கருகில் இருக்கும் போராக் குகைகள் நினைவுக்கு வந்தது. கிட்டத் தட்ட இதே போல், மூன்று நிலைகள் அடங்கிய, மற்றும் பல்வேறு விதமான பாறைகளுடன், அமெரிக்கக் குகையை விட இன்னும் அதிசயமான வரலாற்றுடன் இருக்கும் நமது போரா குகைகளையும் இதே போல் விளக்கும் சிற்றுலாக்கள் ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். அரசாங்கத்துக்கும் வருமானமாயிற்று.

ஏன்??? (மீள்பதிவு)

["நட்சத்திர வாரத்தில் ஒரு மீள் பதிவு கூட போடலைன்னா எப்படி?" என்றார் நண்பர் ஒருவர். இதுவரை பதிப்பித்த கதைகளிலேயே எனக்கு ரொம்பப் பிடித்த கதை இது. ஆகவே இங்கும் ஒரு மீள்பதிவு. ]

ன்று தான் கவனித்தேன். புதிதாக இருந்தது. வழக்கமாய் இரவானால் பக்கத்து வீட்டில் அலைந்து கொண்டிருக்கும் பூனை இந்தப் பக்கம் நின்று கொண்டிருந்தது.

இரவு சாப்பாட்டின் போது, இரண்டாவது படிக்கும் என் மகன் வினயன் சொன்னான்.

"அப்பா! அந்த பூனை குட்டி போட்டிருக்கே"

"நிஜமாவா? உனக்கு எப்படித் தெரியும்?" இது என் மகள் சசிகலா. வினயனை விட இரு வயது மூத்தவள். அவள் பள்ளி இன்றும் உண்டு. வினுவிற்குத் தான் மழைக்காக ஒரு மாதம் லீவ் விட்டிருக்கிறார்கள். அப்படியும் ஒன்றும் பெரிய படிப்பு இல்லையே. அதனால் தான் அவன் இப்படி பூனையும் நாயுமாக விளையாடிக் கொண்டிருக்கிறானோ என்று எனக்குத் தோன்றியது.

"நம்ம வீட்டு கார் ஷெட்ல தான் இருக்கு... சாப்பிட்டதுக்கப்புறம் போய் பாக்கலாமா?"

"நம்ம வீட்டு கார் ஷெட்லயா?" என் மனைவி சுதாவைக் கேள்வியாகப் பார்த்தேன்...

"ஆமாங்க.. அங்க அழுக்குத் துணி, பழைய சாக்ஸ் எல்லாம் போட்டு ஒரு டப்பா வச்சிருக்கோம் இல்ல, அதுல தான் வந்து படுத்திருக்கு.. மழை வேற பெய்யுதா, கதகதப்புக்கு வந்திருக்கு போலிருக்கு" என்றாள் ஒன்றுமே நடக்காதது போல.

"அதுலயா படுத்துகிட்டிருக்கு?"

" ஆமாம்... ஏங்க?"

"இல்ல, பூனை எல்லாம் வீட்டுக்குள்ள வந்தா கஷ்டம்.. ஆஸ்துமா வரும்னு சொல்லுவாங்க.. கார் எடுக்கும் போது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆய்ட்டா, அது வேற பாவம். அதுக்கு தான் யோசிக்கறேன்".

"அப்பா, அதெல்லாம் பரவாயில்லைப்பா.. நீங்க ரெண்டு மாசம் நம்ம கார்த்திக் வீட்ல வண்டிய விட்டுக்குங்கப்பா. அவங்கப்பா தான் வெளிநாடு போய்ட்டாரே.." இது சசி. நன்றாகத் தான் யோசனை சொல்கிறாள், இத்தனைக்கும் இவள் இன்னும் அந்த பூனையைப் பார்க்கக் கூட இல்லை.

"என்னங்க, பாவமா இருக்குங்க.. இந்த மழைல அது குட்டியையும் வச்சிகிட்டு எங்கங்க போகும்? கொஞ்ச நாள் தானே.. குட்டி வளந்ததுக்கப்புறம் அதுவே வெளீல போய்டும். அது வரைக்கும் எங்களுக்கும் பொழுது போகும் இல்லையா? மழைக்காலம் வேற.. வினு இன்னிக்கு பூரா வெளியிலயே போகலை தெரியுமா.. எல்லாம் அந்த பூனைக்குட்டியால தான். இங்கயே இருக்கட்டுங்க" விட்டால் இவளே பூனை சங்கம் ஒன்று வைத்தாலும் வைப்பாள் போலிருந்தது.

"அப்பா பூனை ரொம்ப க்யூட்டா இருக்குப்பா.. அது பாவம்ப்பா.. இருக்கட்டும்பா. பக்கத்து வீட்டு கார்த்திகைக் கூட அது தொட விடலை தெரியுமா? நான் கிட்டக்க போனா மட்டும் தான், அது ஒண்ணும் பண்ணாம இருக்கு... அது எனக்கு ப்ரெண்ட் ஆய்டுச்சுப்பா.. இப்போ நாமும் போன்னு சொல்லிட்டா அது எங்கப்பா போகும்??!!!" வினுவின் மழலைப் பேச்சை மீறி ஒன்றும் செய்ய இயலாமல் போனது...


"சரி, இருக்கட்டும்.. ஆனா இது தான் சாக்குன்னு அந்த பூனையெல்லாம் தொடக் கூடாது. அப்புறம் சுதா, உனக்கு தான் சொல்றேன், அந்த பூனை கார் ஷெட்டோட இருக்கட்டும். வீட்டுக்குள்ள எல்லாம் வரவிடாதே.."


***********



சாப்பிட்டபின் எல்லாரும் வெளியே போய் அந்தப் பூனையைப் பார்க்க போனபோது நானும் போனேன். என் வீட்டுப் பூனையை நானே பார்க்கவில்லை என்றால் எப்படி?!. பார்த்து வைத்தால், அதன் மேல் கார் இடிக்காமல் நிறுத்த வசதியாகவும் இருக்கும்.

தாய்ப் பூனை படுத்துக்கொண்டிருக்க, அதன் உடலுக்கும் வாலுக்கும் இடையில் சின்னதாய் ஒரு குட்டிப் பூனை இருந்தது. வினு சொன்னது போல், அவன் தொட்டுப் பார்த்தும் ஒன்றும் செய்யாமல் தலையை மட்டும் நிமிர்த்திப் பார்த்து விட்டு திரும்பி படுத்துக் கொண்டது.

'பூனையைத் தொடக்கூடாது' என்ற நானே அதன் அழகில் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பூனைகள் இரண்டும் ஒரே நிறம், கருப்பு வெள்ளையில் இருந்த அவை இரண்டும், என் பழைய காபி கலர் சாக்ஸ் மேல் படுத்திருந்ததும் அழகாக இருந்தது. சின்னப் பூனை ரொம்ப சின்னதாக இருந்தது. கண்ணே திறக்கவில்லை போலும். குரலும் எழும்பவில்லை.

பெரிய பூனை மெதுவாக முனகியது. அது என்னைப் பார்த்த பார்வை ரொம்ப பாவமாக இருந்தது.

நான் என்னவென்று யோசிப்பதற்கு முன்னமே சுதா ஒரு கொட்டாங்குச்சியில் பால் எடுத்து வந்தாள். அந்த பெட்டியிலிருந்து கொஞ்சம் தள்ளி வைத்ததும், சொல்லிக் கொடுத்தது போல் அந்தப் பூனை மெல்ல வெளியில் இறங்கிக் குடிக்க ஆரம்பித்தது. குட்டிப் பூனை அம்மாவின் தேகச் சூடு காணாமல் தேடித் தேடி, மெள்ளமாக வாயைத் திறந்து மியாவ் என்றது. வினு அதை மெதுவாகத் தடவிக் கொடுத்தான். என்ன புரிந்ததோ, அது அமைதியாகத் தூங்க ஆரம்பித்தது.

"அதுக்குள்ள எல்லாம் சொல்லிக் குடுத்துட்டீங்களா" என்றேன் சுதாவைப் பார்த்து.

"அது ரொம்ப இன்டெல்லிஜண்ட் பூனைப்பா.. என்னை மாதிரி".. என்றான் வினு.
"அது சரி".

"ஏய் பூனை, வாட் இஸ் யுவர் நேம்" சசிகலா, பால் குடித்து முடித்து பெட்டிக்குள் ஏற இருந்த பூனையைப் பிடித்து விட்டாள்.

"ஏய் சசி, அதைக் கீழ விடு.. பாவம். டயர்டா இருக்கு பாரு" என்றபடி, அவள் கைகளிலிருந்து பூனையை விடுவித்த சுதா, "அதுக்கு பேர் எல்லாம் நாம தான் வைக்கணும்... அதுக்கு தெரியாது.."

"அம்மா, அப்போ சசின்னு வைக்கலாம்மா... " கெஞ்சவே ஆரம்பித்துவிட்டாள் சசிகலா.

"சசி வேண்டாம்டா, அப்புறம், அம்மா சசி ஹார்லிக்ஸ் குடீன்னா, அது வந்து குடிச்சிடுமே" என்றேன் நான்.

"அப்போ, சசிக்கு மேச்சிங்கா, புஸின்னு வைக்கலாமா? "

"புஸின்னா பூனை, ஹைய்யா.. புஸ்ஸிகாட், புஸ்ஸிகாட் வாட் டு யூ டூ.." - சசிகலா.

"அம்மா, அப்போ குட்டிப் பூனைக்கு மனுன்னு வைக்கலாம்... வினுக்கு மேட்சா இருக்கும்"

"சரி வினு சார்.. நிச்சயம் உங்க பேர் தான். இப்போ மனுவும் புஸ்ஸியும் தூங்க போறாங்க.. அப்பாவும் டயர்டா இருக்கேன்.. வாங்க ரெண்டு பேரும் தூங்கலாம்."

ராத்திரி பூராவும் பூனையுடன் என்ன விளையாடுவது என்று யோசித்துக்கொண்டே தூங்கிப் போனார்கள் இருவரும்.



***********



றுநாள் முதல் பூனையுடன் விளையாடுவது என்பது சாப்பிடுவது, தூங்குவது போல் தினப்படி வேலையானது. வினு எங்கே என்றால், நிச்சயம் கார்ஷெட்டில் தான் இருப்பான்.

சசியைத் தினம் ஸ்கூலுக்கு அனுப்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். "வினுவை மத்தியானம் பூரா விளையாட விடாமல் பார்த்துக் கொள்கிறேன்" என்று உறுதி கொடுத்தபின் தான் பள்ளிக்கே போவாள்.

புதிது புதிதாய் கற்றுத் தரும் ரைம்ஸ் எல்லாம், புஸ்ஸிக்கும் மனுக்கும் தான் முதலில் சொல்லிக் காட்டப்படும். பூனையைப் பற்றிக் கேள்விப்பட்டு ஒரு நாளைப்போல் தினமும் சசி, வினுவின் யாராவது ஒரு தோழியோ, தோழனோ, மனுவைப் பார்க்க வந்து விடுவார்கள்.

ஒரு மாதம் ஓடிப் போனது. மனு இன்னும் அம்மாவிடம் பால் குடிக்கிறது. புஸ்ஸி மேலும் நம்பிக்கை கொண்டு மனுவை வினுவிடமும் சுதாவிடமும் விட்டு விட்டு, வேட்டைக்குப் போகிறது.

இரவில் சுதா பிசைந்து போடும் பால் சாதத்தை இப்போது மனுவும் சாப்பிடுகிறது. சில சமயம் வினு சாப்பிடும் முறுக்கிலும், சசி சாப்பிடும் குர்குரேவிலும் கூட பங்கு கேட்கிறது.

ஒரு மாதமாக, வார இறுதியில் "வெளியே போகலாம்பா, பீச்சுக்குப் போலாம்பா" என்று வினுவோ சசியோ கேட்கவே இல்லை. மனு அவர்களை எப்போதும் பிஸியாக வைத்துக் கொண்டான். வினு, சசியுடன் சேர்ந்து ஒரு குட்டிப் ப்ளாஸ்டிக் பந்தை அடித்து விளையாடத் தொடங்கி விட்டது.



***********



ன்று வெள்ளிக்கிழமை. நான் வீட்டுக்கு வந்தபோது, வழக்கத்துக்கு மாறாக, புஸ்ஸியையும் மனுவையும் காணவில்லை. வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டுக் கார்த்திக்கின் அம்மா என் தலையைப் பார்த்து சாவியை எடுத்து வந்தாள்.

"சுதா, குழந்தைங்க எல்லாம் எங்கே?" நான் கேட்டு முடிக்குமுன் வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. சுதாவும், குழந்தைகளும், புஸ்ஸியும், கார்த்திக்கின் பாட்டியும் கூட அதிலிருந்து இறங்கினர். எல்லோரும் ரொம்ப சோர்ந்து இருப்பதாகத் தோன்றியது. சுதா பணம் கொடுத்து விட்டு வருவதற்குள், சசியும் வினுவும் ஓடி வந்தனர்.

"அப்பா, மனு ... மனு... " அதற்கு மேல் பேச முடியாமல், அவர்கள் இருவர் கண்களும் கலங்கிப் போயின.

வாசலில் நின்று எதுவும் கேட்க வேண்டாம் என்று நான் கதவைத் திறந்து உள்ளே போகச் சொன்னேன். புஸ்ஸி நேரே கார் ஷெட்டுக்குப் போய் அதன் இருப்பிடத்தில் படுத்துக் கொண்டது.

கார்த்திக்கின் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு சுதாவும் உள்ளே வந்தாள். அவள் கண்களும் கலங்கிக் கிடந்தது.

"என்னாச்சு சுதா? மனு எங்கே?"

நான் கேட்பதற்குக் காத்திருந்தது போலவே சுதா சொல்ல ஆரம்பித்தாள். கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் போன அவளின் அழுகைக்கும் விசும்பலுக்குமிடையில் நான் சேகரித்தது இது தான்:

கொஞ்ச நாளாக இந்தப் பக்கம் சுற்றிக் கொண்டிருந்த தெருநாய் ஒன்றுடன், மனு சண்டைக்கு போயிருக்கிறது. இளங்கன்று அல்லவா, பயமறியவில்லை. அந்த நாய் மனுவின் கழுத்தில் கடித்ததில், அது அலறிக் கொண்டே எங்கள் வீட்டு வாசலில் வந்து விழுந்திருக்கிறது.

இயலாமையுடன் கத்திய புஸ்ஸியின் குரல் கேட்டு தான் டீவி பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் வாசலுக்கு போய்ப் பார்த்துவிட்டு சுதாவைக் கூப்பிட்டார்களாம். அதற்குள் மனுவுக்கு ரொம்பவும் ரத்த சேதமாகி, வலிப்பும் வந்துவிட்டதாம்.

சுதா உடனே ஒரு ஆட்டோ அழைத்து அருகிலுள்ள விலங்கியல் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறாள். ரொம்ப தாமதமாக வந்துவிட்டதாகச் சொன்ன மருத்துவர், ஒரு ஊசி போட்டுவிட்டு, அங்கேயே காத்திருக்குமாறு சொல்லிவிட்டாராம். ஒரு மணி நேரத்திற்குள் மனு மண்ணுலகை விட்டு, அதனை நக்கிக் கொண்டே சுதாவையும் வினுவையும் பாவமாக பார்த்து கத்திக்கொண்டிருந்த புஸ்ஸியையும் விட்டு விட்டுச் சென்றுவிட்டதாம்.

கடித்தது வெறிநாய் என்பதால், அந்த மருத்துவர், அங்கேயே எரித்துவிடச் சொன்னாராம். அவரிடமே ஒப்படைத்துவிட்டு வந்துவிட்டார்களாம்.

கேட்ட எனக்கே நெஞ்சு கனத்தது என்றால், கண்ணால் கண்ட சுதாவுக்கும் குழந்தைகளுக்கும் எப்படி இருந்திருக்கும்?!!...

சசியும் சுதாவும் இரவு வெகு நேரம் வரை அழுது கொண்டே இருந்தனர். யாரும் இரவு உணவு சாப்பிடத் தயாராய் இல்லை. நான் தான் ஏதாவது சாப்பிடச் சொல்வோம் என்று நினைத்து எல்லாருக்கும் பால் கொண்டு கொடுத்தேன். பாலைப் பார்த்தவுடன், மீண்டும் சுதா அழ ஆரம்பித்து விட்டாள்..

"இதே டம்பள்ர்ல தாங்க மனுவுக்கும் பால் விடுவேன். இப்படி நம்ம விட்டுட்டு போய்டுச்சே"...

"வெளீல ஏம்பா போச்சு?!!! நான் டாம் அன்ட் ஜெர்ரி பார்த்துனால தானே.. இனிமே பாக்க மாட்டேன்னு காட் கிட்ட சொல்லுப்பா.. நான் இனிமே மனுவை நல்லா பார்த்துக்கறேன்.. என் கிட்ட திருப்பிக் குடுக்கச் சொல்லுப்பா..." சசிக்கு என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை.

சமாதானம் செய்ய முடியாமல், இன்னும் கொஞ்சம் நேரம் அழுது விட்டு சசி களைத்துப் போய்த் தூங்கிவிட்டாள். இதில் எதுவும் கலந்து கொள்ளாமல், டீவி பார்த்துக்கொண்டிருந்தான் வினு. இவனுக்கு என்ன ஆனது என்று நினைத்துக் கொண்டே போய் வினு அருகில் அமர்ந்தேன்.

"என்னாச்சு வினு, ஒண்ணும் சொல்ல மாட்டேங்கற?"

"மனு சாமி கிட்ட போய்டுச்சுன்னு கார்த்திக் பாட்டி சொன்னாங்க.. என்ன பண்றது?!!! மனுவை எனக்கு ரொம்ப பிடிக்கும். சாமிக்கும் பிடிக்கும் போலிருக்கு.. அதான் அங்க கூப்டுகிட்டாருன்னு கார்த்திக் பாட்டி தான் சொன்னாங்க. சாமிகிட்ட போய்ட்டாத் திரும்பி வர மாட்டாங்கன்னு நீ தானேப்பா சொன்ன... நம்ம பாட்டியும் இப்டி தானே போனாங்க.. அழுதா மட்டும் திரும்பி குடுத்துரவா போறாரு?"

அப்பனுக்கு புத்தி சொன்ன சுப்பய்யாவாக வினு பேசிக்கொண்டே போக, என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. வினுவை அப்படியே அணைத்துக் கொண்டு மனம் மாறி டீவி பார்க்க ஆரம்பித்தேன்.

தலைப்புச் செய்திகளுடன் செய்திக்கோவை முடிந்துகொண்டிருந்தது. பாலம் ஒன்று உடைந்து 2 பேருக்கு பலத்த அடி. ஏதோ ஒரு ஊரில் இந்து முஸ்லிம் கலவரம். 10 பேர் பலி. இரவில் தனியாக வேலைக்குப் போய்க் கொண்டிருந்த பெண் கொல்லப்பட்டாள். மனதில் நில்லாமல், செய்திகள் ஓட, வினுவைப் பார்த்தேன்.

வினு இப்படித்தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நியூஸ் பார்த்துக் கொண்டே இருப்பான். என்னைப்போல என்று நான் மகிழ்ந்து கொள்வது வழக்கம். இன்று வேறு ஏதாவது பார்த்தால் நலம் என்று தோன்றியது.

"அப்பா!, நான் ஒண்ணு கேட்கட்டா?"

"என்னடா வினு?" மீண்டும் பூனையைப் பற்றிப் பேசும் தெம்பு எனக்கு சுத்தமாக இருக்கவில்லை. வேறு ஏதாவது கேட்டால் நலம்.

"நம்ம வீட்டுப் பூனையை அந்த நாய் கடிச்சிடிச்சி. அந்த நாயை அப்புறம் கார்ப்பொரெஷன் வேன்ல அழைச்சிட்டு போய்ட்டாங்களாம்; கொன்னுடுவாங்களாமே, கார்த்திக் சொன்னான். "

என்ன கேட்கப் போகிறான் என்று அவன் முகத்தையே பார்க்கத் தொடங்கினேன்.

"நாய் நாயையே கொல்லறது இல்ல.. பூனை பூனையைக் கொல்லாது. அப்புறம் ஏன்பா மனுஷங்க மட்டும் இன்னொரு மனுஷனை ஈஸியாக் கொல்றாங்க?"

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், வினுவைப் பார்த்தேன்.

"அப்பா டயர்டா இருக்கேன்.. நாளைக்கு சொல்றேன்டா கண்ணா"!! என்பதைத்தவிர வேறு எதுவும் சொல்ல எனக்கு தோன்றவில்லை.

Tuesday, November 28, 2006

பெண் ஏன் அடிமையானாள்?

போனவாரம் படித்து முடித்த புத்தகம் பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்?". பெரியார் எழுத்துக்கள் படித்ததில்லை. இந்தக்கால எழுத்துக்களை ஒப்பிடுகையில் மிகவும் கடினமான உரைநடையாக இருக்கிறது. "பார்த்தோமேயானால்" போன்ற சொற்களால் நீள நீளமாகும் வாக்கியங்கள்."நான்" என்பதை ஒழித்து "நாம்" என்று அவர் எழுதுவதைப் புரிந்து கொள்ளவும் எனக்குக் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. சரளமாக பயன்படும் சம்ஸ்கிருத சொற்களைப் பார்க்கையில் மணிப்பிரவாள நடையைத் தாண்டி, நாம் இன்றைக்கு எத்தனை தூரம் தனித்தமிழுக்கு அல்லது, தங்கிலீஸுக்கு வந்துவிட்டோம் என்பது கொஞ்சம் ஆறுதலாக(?!) இருந்தது.




இப்போது புத்தகத்தைப் பற்றி:

விடுதலை ஆப்செட் ப்ரிண்டர்ஸ் வெளியீடான இந்தப் புத்தகம், முதன்முதலில் எழுதப்பட்டது 1942ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில். அறுபது ஆண்டுகள் கழிந்து, சுதந்திர இந்தியாவில் கூட புத்தகம் பேசும் பிரச்சனைகள் இன்றும் அதே உயிர்ப்புடன் மாறாமல் இருப்பது தான் வேதனை.

கற்பு என்ற அத்தியாயத்துடன் தொடங்குகிறது நூல். கற்பு என்பது இருபாலருக்கும் பொதுவாக இல்லாமல் வெறும் பெண்ணுடைமையாக்கப் பட்ட விதத்தின் சுலபமான விளக்கம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. தெய்வத் திருமறை என்றும் எக்காலத்துக்கும் பொருந்தும் கருத்துக்களைக் கூறும் உலகப் பொதுமறையாகவும் போற்றப்படும் திருக்குறளும் இந்த விசயத்தில் சறுக்குவதைப் படிக்கும் போது, ஆண்டாண்டு காலமாக மக்கள் மனதில் ஊட்டப்பட்டு வந்த பெண்ணடிமைச் சிந்தனைகளைத் தாண்டி இந்த ராமசாமிப் பெரியாரால் மட்டும் எப்படி வித்தியாசமாக யோசிக்க முடிந்தது என்ற எண்ணம் எழுந்தது. முதல் அத்தியாயத்தில் சும்மா கோடிக் காட்டும் பெரியார், அடுத்தடுத்த அத்தியாயங்களில், வள்ளுவரைக் கிட்டத்தட்ட துவைத்துக் காயப் போட்டுவிடுகிறார். வள்ளுவர் இன்றைக்கு இருந்து இதைப் படித்தால், உலகப் பொதுமறையிலும் மூன்றில் ஒரு பாகத்தை வாசுகி அம்மையாரை எழுதச் சொல்லி இருப்பார் என்பது திண்ணம்.



வண்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது, வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிகளுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை.

நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில், ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வண்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்

- பெரியார்




கற்பின் இலக்கணத்தைக் காலிசெய்தபின்னர், காதலையும் உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயமாக்கிவிடுகிறார். இன்றைய தொலைக்காட்சி சீரியல்கள் பெரியாரின் இந்த அத்தியாயத்திலிருந்து தான் கருத்துக்களை எடுத்துக் கொண்டிருக்கிறதோ என்று நினைக்குமளவு, நடைமுறையில் காதல் எப்படி ஒரே ஆணுக்கும் ஒரே பெண்ணுக்கும் இடையில் ஏற்படுவதில்லை என்ற விளக்கத்தை மறுக்க ஏதும் இருப்பதாகவே தெரியவில்லை.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் 'கற்பு பெண்ணடிமை அடையாளம், காதல் வெறும் ஆசை, என்றானால், கல்யாணத்தை மட்டும் எதற்குப் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும்?' என்று பெரியார் கேட்பது பதிலில்லாத கேள்வியாகிவிடுகிறது. பிடிக்காத திருமண பந்தத்தை உதறிவிட்டு வெளியேற வேண்டிய அவசியத்தை இருபாலருக்கும் பொதுவாகவே வைக்கிறார் பெரியார். இன்றைக்காவது திருமணபந்தத்தை விட்டு வெளியேறி வந்திருக்கும் பெண்களை "வாழாவெட்டி", போன்ற சொற்களால் காயப்படுத்துவதைச் சமூகம் நிறுத்தியிருக்கிறது. கௌதம புத்தர், மரணத்துக்குச் சொன்னது போல் குறைந்த பட்சம் குடும்பத்தில் ஒரு விவாகரத்தாவது இல்லாத வீடுகள் இன்னும் சில நாட்களில் நிச்சயம் அரிதாகிவிடும்.

விவாகரத்தை ஓரளவு சாதாரணமாக ஏற்றுக் கொண்டுவிட்ட இன்றைய சமுதாயம் கூட மறுமணத்தை முழுமனதுடன் ஒப்புக் கொள்ள மறுக்கிறது. முக்கியமாக பெண்கள் மறுமணம் செய்வதை - அது விதவா விவாகமானாலும் கூட. எங்கேயோ அத்தி பூத்தாற்போல் ஒன்றிரண்டு பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை 'அவள் விகடன்' முதலான பத்திரிக்கைகள் பேட்டி கண்டு பிரசுரித்து பாராட்ட வேண்டிய அளவில் தான் இன்றைக்கு மறுமணம் பார்க்கப்படுகிறது. அது போன்ற பேட்டிகளிலும் கூட அந்தப் பெண் நிச்சயமாக "இவர் ரொம்ப நல்லவர்.. பெரிய மனசு இவருக்கு. என்னையும் குழந்தையையும் ரொம்ப சந்தோஷமா வச்சிக்கிறார்" என்ற சொற்களைச் சொல்லியிருப்பார், அல்லது, சொல்லாவிட்டாலும் எழுதி இருப்பார்கள். கல்யாணம் பண்றதே சந்தோஷமா வச்சிக்கிறதுக்குத் தானே, இதைத் தனியாகச் சொல்லும்போதே, சமூகம் அது போல் நடக்காமலும் போகலாம் என்ற பயத்தை அந்தப் பெண்ணின் மனதில் நன்றாகவே விதைத்திருக்கிறது என்று தானே பொருள்?

சமுதாயத்தைச் சீரழிப்பதில் இன்றைய பெண்கள் பெயர் தாங்கிய சீரியல்கள் அடுத்த குற்றவாளிகள். ஊரெல்லாம் சுத்தி, வியாபாரம் செய்யும் அபி, மறுமணம் செய்யாமலேயே கஷ்டப்படுவாளாம், அவள் முன்னாள் கணவன் பாஸ்கர் சுலபமாகத் திருமணம் செய்து கொண்டு விடுவானாம்(கோலங்கள்)!

விதவைகள் எண்ணிக்கை இன்றைய மருத்துவ விஞ்ஞான உலகில் குறைந்திருந்தாலும், குழந்தைத் திருமணங்கள் குறைந்துவிட்டாலும் இருக்கிற விதவைகளின் நிலை மட்டும் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதிலிருந்து இன்றும் பெரிதும் மாறாமல் இருந்திருக்கிறது, என்பதை திருவின் இந்தக் கட்டுரையிலும் காணலாம்.

இன்றைய நிலையில் பெண்களின் சொத்துரிமை ஓரளவுக்குக் காப்பாற்றப்பட்டிருக்கிறது, இந்த விஷயத்தில் கொடுமைக்கார மாமியார்களுக்கும் நம் நன்றிகள் உரித்தாக வேண்டும். அப்படியும் சில படிப்பறிவில்லாத பெண்களை ஏமாற்றுவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பொதுவாகவே இரக்க சுபாவம் கொண்ட பெண்களும், சகோதரர்களுக்கு விட்டுக் கொடுத்து ஏமாறுவது மற்றொரு விதம். இவை எல்லாம் தவிர பல்வேறு சட்டங்களின் மூலம் பெண்கள் பெற்றோர் சொத்தில் உரிமை பெறுவது இன்றைக்கு நடக்கக்கூடியதாகவே இருக்கிறது.

விடுதலை பெற்ற இந்தியாவில் அமலுக்கு வந்தக் கர்ப்பத்தடை பற்றியும் பிரிட்டிஷ் இந்தியாவிலேயே பேசி இருக்கிறார் பெரியார். "நான் உழைக்கிறதெல்லாம் இந்தக் குழந்தைக்காகத் தான்", "இந்தப் புள்ளைங்க இருக்குதேன்னு தான் எல்லா அவமானத்தையும் பொறுத்துப் போறேன்" என்பன போன்ற சீரியல், சினிமா டயலாக்குகளை எல்லாம் தூள் தூளாக்கி, "அவமானத்தை உண்டு பண்ணும் பிள்ளைகளை எதுக்குப் பெத்துக்கிறீங்க?" என்று ஒரே போடாகப் போடுகிறார். குழந்தைகள் என்றிருந்தால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை தானே உருவாகிறது, அதெல்லாம் எதுக்கு? என்று அவர் கேட்கும் போது, சும்மாவேனும் சண்டை போட சாக்குதேடி குழந்தைகளின் மீது சுமத்திக் கொள்ளும் கணவன் மனைவிக்கு நல்ல இடி தான்.

இறுதியாக, இந்தப் புத்தகத்தில் எனக்கு மிக மிகப் பிடித்த அத்தியாமுமான விபச்சாரம் பற்றிப் பேச வரும்போது, தமிழ்ழும் ஒரு ஆணாதிக்க மொழி என்பதை நம்ப வேண்டியதாகத் தான் இருக்கிறது. விபச்சாரி, வாழாவெட்டி, விதவை என்று எந்தப் பையனைப் பார்த்துச் சொல்கிறோம்? எல்லாம் பெண்பாற்சொற்கள் மட்டும் தானே. இன்றைக்குக் 'கண்ணியத்துக்கும்' 'மரியாதைக்கும்' கட்டுப்பட்டு மனதால் மட்டும் விபச்சாரம் செய்யும் ஆண் விபச்சாரிகள் இல்லையா என்ன? குடித்துவிட்டு ரோட்டில் மனைவியைப் போட்டு அடித்துக் கொண்டிருந்த ஒரு புருஷன், தன் குற்றங்களை முன்வைத்ததற்காக, "ஏண்டீ தே..." என்று திட்டியதைப் பார்த்தபின், ஆண்களின் மிகக் கேவலமான ஆயுதமாக இன்றும் அந்தச் சொல் இருப்பது அழிக்க முடியாத உண்மையாக இருக்கிறது! இன்று தொழிற்நுட்ப வல்லுனர்களான, இணையத்தில் திட்டும் படித்தவர்கள் கூட, திட்டு வாங்குபவனின் தாயாரைத் தானே இந்த வார்த்தைகள் சொல்லித் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்! அப்பாவையோ அல்லது எதிரியையோ நேரடியாக 'விபச்சாரன்' என்று திட்டவேண்டியது தானே!

'எத்தனை பெரியார் வந்தாலும் சமூகத்தைத் திருத்த முடியாது' என்ற சொற்கள் உண்மைதான் என்று இந்தப் புத்தகத்திலேயே புரிந்துவிட்டது. இருந்தாலும் மிகவும் கட்டுப்பெட்டியான சமூகத்தில் தன் தங்கை மகளான ஒரு இளம் விதவைக்குத் திருமணம் செய்து வைத்து வெறும் வாய்ச்சொல் வீரர் ஆகாமல் செயலிலும் காட்டிய பெரியாரின் சுயசரிதையைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற ஆவலை எனக்குள் விதைத்துவிட்டது இந்தப் புத்தகம். பெண்விடுதலை பற்றி யாருமே யோசிக்காத, யோசிக்கவும் தயங்கிய காலத்தில் இப்படியெல்லாம் யோசிக்கும் எண்ணம் ஒருவனுக்கு உண்டானதென்றால், அந்த மனிதரின் வாழ்க்கை எப்படிப் பட்டதாக இருக்கும்!

லிப்ட்..(சிறுகதை)

சென்னையின் இதயப் பகுதியில் வேலை என்றதும் சாருவுக்கு முதலில் நிம்மதி தான் ஏற்பட்டது. இனிமேல் அதிகாலை எழுந்து விடிந்தும் விடியாத காலையில் அவசர அவசரமாக குளித்து, சமைத்து, டப்பாவில் போட்டுக் கொண்டு கம்பனி பஸ் பிடிக்க ஓட வேண்டாம். ஆற அமர சமைத்து சாப்பிட்டுவிட்டு குழந்தைக்கும் ஊட்டிவிட்டு மெல்லவே அலுவலகம் போகலாம். அத்துடன் மாலை அலுவலகத்திலிருந்து கிளம்பி வீடு சேரவே இரண்டு மணிநேர அலுவலகப் பேருந்து பயணம் என்றிருப்பது குறைந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டாலும் சீக்கிரமே வீடு வந்துவிடலாம். என்றெல்லாம் பெரிய அளவில் விரிந்தது அவளின் கற்பனைக் கோட்டை.

வேலைக்கு வந்து சேர்ந்த மூன்றாம் நாளே இதெல்லாம் எத்தனை முட்டாள்தனம் என்பது புரிந்து போயிற்று.

"சாரு மேடம், உங்க வீடு சிட்டிக்குள்ள தானே இருக்கு, நீங்க தான் எப்போ கிளம்பினாலும் அரை மணியில் போய்ச் சேர்ந்துடுவீங்க.. கொஞ்சம் இன்னிக்கு க்ளயண்ட் கால் நீங்க எடுத்துடுங்களேன்.. அடுத்த வாரம் நான் வேற ஏற்பாடு செய்யுறேன்" இது புதன் கிழமை.

"சாரு, பிராஜக்ட் லீடர் வாக்கு கொடுத்துட்டார் போலிருக்கு. கொஞ்சம் இருந்து முடிச்சு கொடுத்துடுங்களேன்.. ராணி, சங்கர் எல்லாம் புதுப் பசங்க பாருங்க.. நம்ம தான் எல்லாத்தையும் பொறுப்பெடுத்து செய்யணும்" என்று மேனஜர் கேட்டதால் வியாழனும் ஒன்பது மணியாகிவிட்டது கிளம்ப.

வெள்ளியாவது நேரத்தோடு கிளம்பி விட வேண்டும் என்று முடிவு செய்திருந்ததிலும் இடியைப் போட்டான், முதல் நாள் எழுதிய ப்ரோக்ராமை சோதனை செய்யும் ராகவ். அவன் திடீரென்று எடுத்துப் போட்ட நாலைந்து பிரச்சனைகளைச் சரி செய்து வேலையை முடித்துக் கொடுத்துவிட்டுக் கிளம்ப இன்று பத்து மணியாகிவிட்டது.

சாரு தன் கைனடிக் ஹோண்டாவின் ஆக்ஸிலரேட்டரை அதிக பட்ச அழுத்தத்துடன் முறுக்கினாள். ராகவின் மீதிருந்த கோபம் பூராவும் காட்டி வண்டியை உருட்டியபோது சாலையில் ஆள் நடமாட்டமே இருக்கவில்லை. தினசரி அவளைப் பல நிமிடங்கள் காக்கவைக்கும் கூட்டமான போக்குவரத்து விளக்குகள் பலவும் வெறும் எச்சரிக்கை விளக்காக எரிந்து கொண்டிருக்க, வசதியாக வண்டியை விட்டாள்.

அலுவலகத்திலிருந்து கிளம்பி இரண்டு நிமிடம் கூட தாண்டியிருக்காது, அந்த இருண்ட வீதியின் முனையில் ஒரு உருவம் தனியே நின்று கொண்டிருந்தது தெரிந்தது. இருட்டில் அதன் நிழலில் தாடி வைத்திருந்த உருவமாகப்பட்டது. அத்தனை நேராக வாரப்படாத தலை, ஜீன்ஸ், கசங்கிய சர்ட். 'இப்போதெல்லாம் தெருவோர பிச்சைக்காரன் கூட ஜீன்ஸ் போடுகிறான்' என்று தோன்றிய எண்ணத்தைச் சிரித்துக் கொண்டே ரசித்தவாறு அவனைப் பார்த்தபோது, லிப்ட் கேட்க 'கை போட்டது' அந்த உருவம்.

'இருட்டில், தனியாக வரும் பெண்ணிடம் லிப்ட் கேட்க எத்தனை தைரியம் இருக்க வேண்டும் இவனுக்கு' என்று தோன்றியது சாருவுக்கு. அத்துடன் வண்டி நிறுத்துமளவுக்கு அந்தத் தெரு அத்தனை வெளிச்சமானதில்லை. லிப்ட் கொடுக்கும் அளவுக்கு இவனும் அத்தனை டீசண்டானவனாகத் தோன்றவில்லை.

வெள்ளி இரவில், இருட்டில் வீணாக வம்பில் மாட்டிக் கொள்வது நியாயமில்லை என்று தோன்றவே, தலையை மையமாக அசைத்து முடியாது என்று மறுத்துவிட்டு, வண்டியை இன்னும் வேகமாக ஓட்டினாள் சாரு.

அந்த கைக்குச் சொந்தமான மனிதன், மறுப்பை லட்சியம் செய்யாததோடு, தெருவின் குறுக்கேயே வந்துவிட்டான் சாருவை மறிப்பது போல். சாரு கடைசி நொடியில் கட் கொடுத்து அந்த மனிதனைத் தாண்டி வண்டியை ஓட்ட வேண்டியதாகிவிட்டது.

அருகில் பார்க்க நேர்ந்த போது, அந்த தாடிக்காரனின் முகத்தில் சிறு வெளிச்சம் படர்ந்தது. ஏதோ சொல்ல வருபவன் போல் தோன்றியது. 'என்னவோ சொல்லிவிட்டுப் போகட்டும்.. என்ன சொல்லப் போகிறான், மிஞ்சி மிஞ்சிப் போனால் ஏற்றிக் கொள்ளாததற்கு வருத்தமோ, கோபமோ தெரிவிக்கலாம். நியாயம் கூட சொல்லலாம், அவனை ஏன் ஏற்றிக் கொள்ளவேண்டும் என்று.. அதெல்லாம் இப்போ யாருக்கு வேண்டும்.. திவ்யாக்குட்டி எப்படி இருக்கிறாளோ, அவளைப் பற்றிய யோசனைகள் தான் இப்போது தேவை.. '

சாரு பின்னால் பார்க்கும் கண்ணாடியில் பார்த்தபோது, அவளுக்குப் பின்னாலேயே ஒரு வண்டி வருவதும், அதில் ஒரு இளைஞன் அமர்ந்திருப்பதும், நமது பழைய தாடிக்கார நண்பன் அந்த இளைஞனிடமும் கை நீட்டி லிப்ட் கேட்பதும் தெரிந்தது.

காலேஜ் காலத்திலிருந்தே இந்தக் 'கை போடுபவர்களின்' மீது சாருவுக்குத் தனி வெறுப்பு இருப்பதுண்டு. அதிலும் இவனைப் போல் யார் வந்தாலும் இருக்கட்டும் என்று லிப்ட் கேட்பவர்கள் தொல்லை தான். சாருவின் கல்லூரியில் அவளுடன் படித்த பையன் ஒருவன், பஸ்பாஸ் வாங்கவே மாட்டான். இப்படி வழி தோறும் லிப்ட் கேட்டே தினசரி காலேஜுக்கு வந்துவிடுவான். திரும்பிச் செல்வதற்கும் இதே மாதிரி அடுத்தவன் வண்டிதான். 'இதுல என்ன இருக்கு சாரு, ஜஸ்ட் ஒரு அரை அவர் முந்தி கிளம்பணும்,.. அவ்வளவு தான்' என்று தெனாவட்டாக சொல்லுவான். சாருவும் அவளை ஒத்த மற்ற பெண்களும் பேருந்தில் நிற்க முடியாமல் நின்று கொண்டு வரும்போது இவனுக்கு மட்டும் இத்தனை வசதியான சவாரியா என்று சாரு பொறாமைப்படுவது கூட உண்டு.

பின்னால் வந்த இளைஞன் தாடிக்காரனுக்காக வண்டியை நிறுத்தினான் போலும், சாருவின் பின்கண்ணாடியில் தெரிந்தது அவளைக் கொஞ்சம் துணுக்குறச் செய்தது. தாடி இளைஞன் வண்டியில் ஏறுவதற்கு முன் சாருவைக் கை காட்டி ஏதோ சொன்னான். வண்டிக்கார இளைஞனும் சாருவைப் பார்த்தபடி தலையசைப்பதையும் சாரு நொடிப்பொழுதில் கண்டு கொண்டாள்..

'என்ன சொல்லி இருப்பான்? அந்தப் பொண்ணு நிற்கவே இல்லை சார்' என்றா! அதை ஏன் அவனிடம் சொல்ல வேண்டும்?

சாரு யோசித்துக் கொண்டே இருக்கும் போது பின்னால் வந்த வண்டியானது தன்னை நோக்கித் தான் வருகிறது என்பதைக் கண்டுகொண்டாள்.

இயல்பான பாதுகாப்பு உணர்ச்சியில் வண்டியை இன்னும் விரைவாக்கினாள். சாருவின் வண்டி சீறிப் பறந்தது. பின்னால் அந்த இளைஞர்களும் தொடர்வது தெரிந்தது. ஒருவேளை இப்படி இருக்குமோ! அந்த புது பைக்காரனும், காத்திருந்தவனும் ஏற்கனவே அறிமுகமானவர்களாக இருப்பார்களோ! தாடிக்காரன் இவளை நிறுத்தி, லிப்ட் கேட்டு, அப்படி ஏதாவது செய்யும்போது, இந்த பைக் காரன் பின்னால் வந்து அவளைப் பயமுறுத்தி, கையில் கழுத்தில் உள்ளதைப் பறிக்கத்தான் இந்தத் திட்டமோ? இப்போது அவள் தப்பிவிட்டதில் பின் தொடர்ந்து வந்து பிடுங்கிக் கொள்ளப் பார்க்கிறார்களோ?

யோசித்துக் கொண்டே நூறடி ரோடுக்கு வந்துவிட்ட சாருவுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இங்கே கொஞ்சம் மக்கள் கூட்டம் இருக்கும். ஆனால், அட, இங்கு சிக்னல்களும் வேலை செய்கிறதே! சோதனையாக, வெள்ளிக்கிழமை பத்துமணிக்கு அந்த ரோடிலும் அத்தனை கூட்டம் இல்லை. ஆனால், சிக்னல்கள் மட்டும் வேலை செய்தன.

அடடா.. சிக்னல் விழப் போகிறது, அந்த யம காதகன்களோ விடாமல் இந்த ரோடு வரை துரத்தி வருகிறார்களே! அவர்கள் கையில் சிக்காமல் தப்பிவிட முடியுமா?

முதல் சிக்னலைக் கடைசி நிமிடத்தில் சிகப்பு விழுந்துவிட்ட போதும் பரவாயில்லை என்று தாண்டி வந்தாள் சாரு. பின்னால் வந்தவர்கள் இப்போது நின்று விடுவார்கள். நிம்மதியாக ஓட்டலாம் என்ற அவளது நினைப்பைக் கெடுப்பது போல் முன்னால் இருந்த சிக்னல் ஒன்று சுத்தமாக சிகப்பு காட்டி அவளை நிற்கச் சொன்னது.

பின் சிக்னல் பச்சை விளக்கு வரும் முன் தனக்கு வழி கிடைத்துவிட்டால் தப்பிவிடலாம். எங்கே.. நடக்கக் கூடிய கதையா என்று பார்க்கவேண்டும். சாரு சிக்னலையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பின் பக்கம் பார்க்கும் கண்ணாடியைப் பார்த்தபோது, பின் துரத்தி வந்த பைக் இன்னும் அருகில் வந்துவிட்டது. படுபாவி இளைஞர்கள், சிக்னல் டிராபிக் எல்லாம் மதிக்கும் வழக்கமே இல்லை போலும்! இவள் தான் இப்படி விதிகளை மதித்து ரொம்ப கஷ்டப் படுகிறாள்!

சாரு பார்த்த போது, அந்த பைக் அவளுக்கு மிக மிக அருகில் வந்தாயிற்று. நிச்சயம் வண்டியை நிறுத்தப் போகிறார்கள். "என்ன வேண்டும் இவன்களுக்கு! கேட்டுத் தான் பார்த்துவிடுவோமே. இதுவோ கொஞ்சம் பிரதான சாலை தான். விளக்குகள் வேறு இருக்கின்றன. இந்த இடத்தில் இல்லாவிட்டால், அடுத்து சாரு தனது வீடு இருக்கும் சந்துக்குள் திரும்பினால் அங்கே எல்லாம் இந்த வீணாய்ப் போன இளைஞர்கள் வர வேண்டாம்.. வீட்டைக் காட்டிக் கொடுப்பதில் சாருவுக்கு மனமே இல்லை.. மிஞ்சி மிஞ்சிப் போனால் பணத்தைப் பிடுங்கிக் கொள்வார்கள்.. வெள்ளிக் கிழமை. அவளே பணம் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். பர்ஸிலும் அதிகம் இருக்காது.. போகட்டும்.. என்ன வேண்டும் என்று கேட்டே விடுவோம்.." சாரு யோசித்துக் கொண்டே இருக்கும் போது அந்த இளைஞர்கள் சாருவின் அருகில் வந்துவிட்டனர்.

நல்ல வேளையாக சிக்னலும் பச்சையாகவே சாரு வண்டியை முறுக்கினாள். இளைஞர்கள் இதைச் சற்றும் எதிர்பாராததால் கொஞ்சமே பின் தங்கினாலும் பின்னாலேயே வந்துவிட்டனர். கிட்டத் தட்ட சாருவை நெருங்கிவிட்ட அவர்கள் அவளைக் கொஞ்சம் தாண்டியும் சென்றபோது, பின்னால் இருந்தவன் சாருவைப் பார்த்துக் கத்தினான். "துப்பட்டாவை ஒழுங்கா பிடிச்சிகிட்டு ஓட்டும்மா! எப்படிப் பறக்குது பாரு! அதைச் சொல்லத் தான் உன்னைத் துரத்திகிட்டே வாரோம்!" என்றவன், "இப்போ வெரசா ஓட்டு சார்.. அதோ அந்த பெட்ரோல் பங்க் கீது பாரு, அங்க தான் நம்ம ஆட்டோ நிக்குது. " என்று சொல்லிக் கொண்டே சென்றது தேய்ந்து ஒலித்தது..

சாரு மட்டும் இன்னும் ஆச்சரியம் விலகாமல், பின்பக்கமாகப் பறந்து கொண்டிருந்த துப்பட்டாவை இழுத்துவிட்டுக் கொண்டாள்.

அமெரிக்காவில் (நிஜ) அப்பாவி

[முன்குறிப்பு: தலைப்புக்கும் இந்தத் தொடரின் பதிவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது :) ]

முதன்முறையாக வெளிநாடு போவதற்கு முன் எனக்குப் பல்வேறு பக்கங்களிலிருந்தும் வந்த அறிவுரை பெரும்பாலும் அந்த ஊர் கறுப்பின மக்களைப் பற்றியதாகவே இருந்தது. "பூர்ணா, கறுப்பின மக்கள் இருந்தா, ஜாக்கிரதையா இருங்க. பணம் அதிகம் எடுத்துப் போகாதீங்க.. தனியா இரவில் ஆறு ஏழு மணிக்கு மேல் வெளியில் இருந்தால் கூட உங்ககிட்டிருந்து பணம், நகை எல்லாம் பிடுங்கிட வாய்ப்பிருக்கு!" என்று பெரிய அளவில் கிலியேற்படுத்திவிட்டுப் போனார்கள்.

இந்த விசயத்தில் எனக்கு ஏற்பட்ட மற்றொரு துணைப்பயம், வித்தியாசமானது. நானே கொஞ்சம் மாநிறம் தான். எங்கள் வீட்டிலேயே நான் தான் அதிக கறுப்பு (கறுப்புத் தங்கம் ;)), இதை வைத்து, எனக்கென்னவோ வெளிநாட்டுக்குப்போய் அங்கிருக்கும் வெள்ளையர்களுக்கிடையில் நம் நிறம் இன்னும் அதிக கறுப்பாகத் தெரிந்து, நம்மைப் பார்த்து எல்லாரும் பயந்துவிடப் போகிறார்களே என்று தான் முதலில் பயந்தேன். அப்படி ஏதாவது ஆனால், கஷ்டம் தான் என்று எங்கே போனாலும் பாஸ்போர்ட், எங்கள் நிறுவன அடையாள அட்டை என்று தூக்கிக் கொண்டே சுற்றுவது என்று முடிவெடுத்துக் கொண்டேன்.



நியூயார்க் விமான நிலையத்தில் போய் இறங்கிய போது என் கையில் பத்து டாலருக்குக் குறைவான சில்லறையே இல்லை. அதனால், அங்கே சாமான் தள்ளும் வண்டிகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்ள முடியாமல், பெட்டி படுக்கைகளைக் கஷ்டப்பட்டு நானே தூக்கிக் கொண்டு கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் காட்டுவதற்கு முன்னால், கனம் தாங்காமல் ஒரு முறை கீழே விழுந்து, வடிவேலு மாதிரி "இல்ல, தரையெல்லாம் நல்லா சுத்தமா இருக்கான்னு பார்த்தேன்" என்று தடவிப் பார்த்துவிட்டு ஊருக்கு விமானம் ஏறினேன்.

செயின்ட் லூயிஸில் போய் இறங்கிய போது அந்த ஊர் நேரப்படி மணி ஏழரை. தூக்க முடியாமல் தூக்கி வந்த ஒரு பெட்டியை விமான நிலைய அதிகாரிகள் நியூயார்க்கில் தொலைத்துவிட, அதற்கான புகார்ப் பதிவு செய்வதில் ஒரு அரை மணி நேரம் போனது. தன்னந்தனியாக வெளிநாட்டுக்குக் கிளம்பியபோதும், புது ஊரில் எங்கள் அலுவலகத்தினர் யாருமே இல்லை என்ற போதிலும், விமான நிலையம் வந்து அழைத்துச் செல்வதற்குக் கூட யாரும் வர மாட்டார்கள் என்று வீட்டில் கவலைப்பட்ட போதும் ஏற்படாத பயம் எட்டரை மணிக்கு என் ஹோட்டலுக்கு எப்படி போவது என்று யோசித்த அந்தக் கணம் தான் முதன் முதலில் எட்டிப் பார்த்தது.

வீட்டுக்குப் பேசினால், ஒருவேளை மனம் கொஞ்சம் லேசாகும் என்று நினைத்தேன். இந்தியாவில் என்ன நேரம் இருக்குமோ என்பது வேறு கொஞ்சம் யோசனையாக இருந்தது. 'சில்லரையாக ஒன்றரை டாலர் போடு' என்றது கட்டணத் தொலைபேசி. என்னிடம் சில்லரையே இல்லாமல் போக, சுற்றுமுற்றும் பார்த்தேன். 'உதவிக்கு வரலாமா?" என்று எழுதி வைத்திருந்த இடத்தை அணுகி சில்லரை கேட்பது என்று முடிவெடுத்தேன்.

அந்த உதவி மையத்தில் இரண்டு பேர் இருந்தார்கள். வெள்ளை நிறத்தில் ஒரு பெண். கொஞ்சம் கருப்பாக ஒரு ஆண். நமக்குத் தான் நல்லாவே 'வழி' காட்டி இருந்தார்களே. இருந்திருந்து விமான நிலையத்துக்குள்ளேயே கருப்பர்களிடம் மாட்டிக் கொள்வதா, என்று பயந்து, அந்தப் பெண்ணிடம் தான் சில்லரை கேட்டேன்.

அவளுக்கோ வேலை நேரம் முடிகிறது போலிருக்கிறது. அவள் அந்த இளைஞனிடம் என்னை ஒப்படைத்து விட்டு பையை மாட்டிக் கொண்டு எனக்கும் ஒரு 'பை' சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள். நான் வெளிக்காட்டிக் கொள்ளாத பயத்துடன் அவனைப் பார்த்து, "இந்த பத்து டாலருக்குச் சில்லரை கிடைக்குமா?" என்றேன். என்னதான் குரலில் தெரியாவிட்டாலும், என் மிகப் பெரிய குறை என் கண்கள். கோபம், எரிச்சல், சிரிப்பு, குறும்பு, என்று எல்லாமே காட்டிக் கொடுத்துவிடும் என் கண்களில் அவருக்குப் பயம் தெரிந்திருக்க வேண்டும்.

"எங்கிருந்து வரீங்க?" என்று பதில் கேள்வி கேட்டார்.

"இந்தியாவிலிருந்து வரேன். "

"அப்பாடியோ! அத்தனை தூரத்திலிருந்தா வரீங்க? முதன் முறையா எங்க ஊருக்கு வரீங்களா?"

"ஆமாம். உங்க நாட்டுக்கே முதன்முறையா வரேன்"

"எங்க போகணும் உங்களுக்கு?"

நான் என் விலாசத்தை அவருக்குப் படித்துக் காண்பித்தேன்.

"இது ரொம்ம்ம்ப தூரமாச்சே! பக்கத்து ஊரு. எப்படிப் போகப் போறீங்க?"

"இதோ, இந்த நம்பரில் உள்ள டாக்ஸிக்காரங்களைக் கூப்பிட்டு வண்டி வரவழைச்சிக்கச் சொல்லி இருக்காங்க." எண்ணைக் காட்டினேன்.

"ஓ.."

"அதான், சில்லரை வேணும்.. "

"என்கிட்ட சில்லரை இல்லையே.. கொஞ்சம் இங்க உட்காருங்க. நான் போய் யார்கிட்டேர்ந்தாவது சில்லரை வாங்கி வரேன்"

என்னிடமிருந்து பத்து டாலரை வாங்கிக் கொண்டு, எங்கோ போனார் அவர். மிக நீளமான பத்து பதினைந்து நிமிடங்களுக்குப் பின், சில்லரையுடன் வந்தார். "அதோ, போன் இருக்குப் பாருங்க, அங்க போய் போன் பண்ணிப்பாருங்க.."

நான் முதலில் அம்மாவுக்குச் செய்தேன். என் நிலை, நேரம் மற்றும் இன்னபிறவற்றைச் சொல்லி அவர்களையும் கலவரப்படுத்தாமல், சகஜமாகப் பேசிவிட்டு, அடுத்து டாக்ஸி எண்ணுக்குச் செய்தேன். அவர்கள் எடுக்கவே இல்லை. தொலைபேசி அழைப்பு போய்க் கொண்டே இருந்து கடைசியாகக் குரற்பதிவாகிப் போனது. இரண்டாவது எண்ணும் அதே மாதிரி பயனில்லாமல் போக, அத்துடன் என் தைரியம் மொத்தமும் காணாமல் போனது.

அந்த ஊர்த்தொடர்பு என்று என்னிடம் இருந்தது அந்த எண் மட்டும் தான். இவர்களும் எடுக்கவில்லை என்றால், இந்த விமான நிலையத்திலேயே தான் நான் இருந்தாக வேண்டும். அடுத்து என்ன செய்யலாம் என்று குழப்பமாக யோசித்துக் கொண்டே தொலைபேசியைப் பிடித்துக் கொண்டு நான் நிற்கவும் அந்த உதவி மைய இளைஞன் "என்னடா, ரொம்ப நேரமாக இவளைக் காணோமே" என்று தேடி வரவும் சரியாக இருந்தது.

"என்னாச்சு? நம்பர் கிடைச்சிதா?"

"இல்லை." என்றேன் சுருதி இறங்கிய குரலில்

"எனக்குத் தெரிஞ்ச ஒரு டிரைவர் இருக்கார். நான் உங்க அட்ரஸை அவர் கிட்ட சொல்லி இங்கிருந்து போக எத்தனை பணம் ஆகும்னு கேட்டேன். அவர் கிட்டத் தட்ட நாற்பது டாலர் ஆகும்னு சொல்றார். அவரையே வரச் சொல்லட்டுமா?"

எனக்கு என் காதுகளையே நம்ப முடியவில்லை. நம்ம ஊர் மாதிரி உதவி செய்ய யார் வந்து கேட்கப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தால், அதெல்லாம் ஒன்றும் பிரச்சனையே இல்லை என்பது மாதிரி இவர் தானாக வந்து வழி சொல்லி, வண்டி ஏற்பாடு செய்ததே எனக்குப் பெரிய நிம்மதியாகத் தோன்றியது. "ம்ம்.. சரி, " என்று மையமாகத் தலையாட்டினேன்..

கொஞ்சம் சந்தேகமும் இருந்தது. கிட்டத் தட்ட ஒன்பது மணிக்கு இப்படி ஒரு ஊர் பேர் தெரியாதவர் ஏற்பாடு செய்யும் ஓட்டுநருடன் போவது சரியா என்று முதல் கவலை. ஆனால், வேறு என்ன தான் வழி இருக்கிறது என்பது அடுத்த கேள்வி. 'சரி, வரட்டும் பார்க்கலாம்' என்று நினைத்தபடி, அந்த நண்பர் காட்டிய வழியில் போய் கார் பார்க்கிங்குக்கு அருகில் உட்கார்ந்து கொண்டேன். பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து, அதே நண்பர் மாடி யேறி கார் பார்க்கிங் நோக்கி வந்தார். "இன்னும் வரலையா, வண்டி?" என்று கேட்டார்

நான் "தெரியலை!" என்றேன்.

நான் இன்னும் படபடப்பாகவே இருப்பதைப் பார்த்து கொஞ்ச நேரம் அருகில் உட்கார்ந்து என்னுடைய கல்வி, நான் எத்தனை மாதம் தங்கப் போகிறேன், சுற்று வட்டாரத்தில் என்னென்ன பார்க்க இருக்கிறது என்று கொஞ்ச நேரம் பேசி என்னை சகஜமாக்கிக் கொண்டிருந்தார்.ஒரு வழியாக ஒன்பதரைக்கு வண்டி வந்தது. ஓட்டுநர் இறங்கி வந்து என் நண்பருடன் கைகுலுக்கினார், நண்பரின் அறிமுகத்துக்குப் பின் என்னிடமும். என் கலவரம் அதிகமானது. இந்த ஓட்டுநரும், கறுப்பு நிறத்தவராய் இருந்தார். அவர்கள் பேசிய ஆங்கிலமும் ஏதோ கலப்பு மொழியாக புரியாததாகவே இருந்தது.

''இவருடன் இன்னும் அரை மணி நேரப் பயணமா! ஐயோ' என்று பயந்தபடியே வேறு வழியின்றி போய் ஏறிக் கொண்டேன். ஆனால், நான் பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை. வழக்கமாக நள்ளிரவு டாக்ஸிக்காரர்களிடம் செய்வது போல் இந்த ஓட்டுநரிடமும் பேசிக் கொண்டே வரத் தொடங்கினேன். வழியெங்கும் காணவேண்டிய இடங்கள் என்று அவர் நினைத்ததை எல்லாம் எனக்குச் சொல்லிக் கொண்டே வந்தார். அந்த மனிதர் வெளியூரில் இருந்து வந்து இந்த ஊரில் வேலை செய்பவராம். பத்தரை மணிக்கு என்னுடைய ஹோட்டல் வாசலில் பத்திரமாக என்னைக் கொண்டுவந்து இறக்கிவிட்டுவிட்டு, பேசியபடி நாற்பது டாலர் மட்டுமே வாங்கிக் கொண்டு (அதன்பின் வெளிச்சத்தில் ஒரு முறை விமான நிலையத்துக்கு நான் போனபோது, நாற்பதுக்கு மேலேயே இருந்தது.) "வணக்கம்" சொல்லி விடைபெற்றுச் சென்றதுடன், கறுப்பினத்தவரைப் பற்றி ஊரிலிருந்து அள்ளிக் கொண்டு வந்திருந்த கதைகள் எல்லாமே காற்றோடு கலந்து போனது.

சக மனிதரை, மனிதராக பார்க்கும் போது நிறம், இனம், மதம், நாடு என்ற எல்லா எல்லைகளும் தவிடு பொடியாகிப் போகிறது. முதன் முறையாகச் சந்திக்கும் போதே அத்தனை நட்பும், அன்பும் பாராட்ட முடிந்தவர்கள் நிறைந்த நாடும் கூட கொஞ்சம் பிடித்துத் தான் போனது.