Monday, April 09, 2007
பதிவர்கள் கவனிக்க: பின்னூட்டம் இனி இட மாட்டேன்
தோழி ஒருவர் அழைத்து, "பொன்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய ப்ரோபைல் ரெடியாகிறதே, பார்த்தாயா?" என்று கேட்டபொழுது, "அப்படியா!" என்று வியக்கத்தான் முடிந்தது.
பெண்களுக்கெதிரான வன்முறை மிகச் சுலபமாகக் கைவரக் கூடியது. அதிலும், நட்புரீதியாக கை நீட்டுபவர்களுடன் மிக இயல்பாகக் குலுக்கிவிடும் மனமுடைய என்னைப் பற்றி என்மூலமே திரட்டப்பட்ட தனிப்பட்ட தகவல்களுடனான பொய்யான ப்ரோபைல் உருவாக்க, இணையம் ஒரு வசதியான ஊடகம் என்பதில் சந்தேகம் என்ன இருக்க முடியும்..
சமீபத்தில், பெண்கள் தொடர்பான என்னுடைய இடுகைக்கு, எதிர்வினையான சில கும்மிப் பதிவுகளில், ஒரு அனானி இது போன்ற ஒரு ப்ரோபைலை உருவாக்கும் எண்ணத்தை வெளியிட்டிருந்தார். ஒருவழியாக இன்று அதை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்ட அவருக்கு என் வாழ்த்துக்கள். [விடுபட்டவை: போலி மட்டுமா போலி பதிவு ஏனோ திடீரென நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை ]
இந்த முகமிலிகளுடன் மோதி, தர்மயுத்தம் செய்ய எனக்கு அவகாசம் இல்லாத காரணத்தாலும், இதைப் பற்றிக் கவலைப்படாமல் நான் பின்னூட்டமிட்டால் கூட, ஒவ்வொருமுறையும் சோதித்து வெளியிடும் சிரமத்தை நண்பர்களுக்குக் கொடுப்பதில் விருப்பமில்லாததாலும், பின்னூட்டங்கள் இடுவதை நிறுத்திக் கொள்வது ஆகச் சிறந்த வழியாகத் தெரிகிறது.
எனவே, இன்று முதல், பொன்ஸின் எழுத்துக்கள், இங்கு பட்டியலில் உள்ள வலைப்பதிவுகளில் மட்டுமே வரும்.. மற்ற முகமிலிகளிடம், இரவல் முகத்துடன் வருபவர்களிடமும் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பு:
1. இரவல் முகத்துக்காரருக்கு லிங்க் கொடுத்துப் புகழ் சேர்க்க விருப்பமில்லை. அவகாசமும் அவசியமும் இருப்பவர்கள் தேடிக் கண்டு கொள்ளலாம் :)
2. தனிமடல்கள், தொலைபேசியில் பேசுபவர்கள், இந்த விசயம் குறித்து தயவு செய்து பேச வேண்டாம். வரப் போகும் பதிவர் சந்திப்பு தொடங்கி நாம் பேச எத்தனையோ ஆக்கப் பூர்வமான விசயங்கள் இருக்கின்றன தானே..
Saturday, March 31, 2007
ஆமாமாம், நானும் ஒரு கிறுக்கு தான்...
கிறுக்குத்தனங்கள், விபரீத குணங்கள், விசித்திர பழக்கங்கள் இல்லாத மனிதர்களே இல்லை என்று தோன்றுகிறது, சமீபகால வியர்டு பதிவுகள் பார்த்து. என்னுடைய கிறுக்குத்தனங்களை எழுதச் சொல்லிக் கேட்ட அஞ்சா நெஞ்சர்களின் லிஸ்ட் இங்கே:
முதலில் அத்தனை ஆர்வம் இல்லாமல் தான் இருந்தது, ஆனால், எப்படியாவது யாழ்ப் பட்டியலில் சேர்ந்து விடுவது என்ற முடிவோடு, ஒரு உந்துதலோடு எழுத ஆரம்பித்திருக்கிறேன் இன்று ;)
1. புத்தகம் வாசிப்பது: வலைப்பதிவர் அனைவருக்கும் ஒரு பொதுவான குணமாக தெரிகிறது. அதிலும் சாப்பிட்டுக் கொண்டே வாசிப்பது இயல்பாகவே ஆகிவிட்டது. சிறுவயதில் என்னுடைய வாசிப்பிடங்கள் இருட்டானவையாக இருக்கும். பீரோக்களின் சந்துகளில், கட்டில் அடியில், அரிசி பீப்பாய் பின்புறம் என்று எளிதில் தேடிக் கண்டுபிடித்து யாரும் தொல்லை செய்யாத இடத்தில் ஒண்டிக் கொண்டு படிக்கப் பிடிக்கும். வளர்ந்த பின்னர், அதாவது இந்த இடங்களில் நுழைய வசதியில்லாமல் போன பின்னர், எல்லா நேரங்களிலும் என் கையில் புத்தகம் இருந்த நாட்கள் உண்டு. ஓடும் ரயிலில், பேருந்தில், எனக்கே இடமில்லாத ஷேர் ஆட்டோக்களில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து போகையில், முன்பு வசித்த புறநகர் பகுதியில் சைக்கிள் மிதிக்கையில், என்று அசைந்து கொண்டே படிக்கப் பிடிக்கும். பாலை அடுப்பில் வைத்துக் கொண்டே புத்தகம் படித்து பலநாள் புதுமனை புகுவிழா நடத்தி இருக்கேனாக்கும்.
2. பேசுவது: கணினி, பூனை, நாய், செடி, கொடிகளுடன் பேசுபவர்கள் பற்றிப் படிக்கையில், "அட நான் கூட இப்படித் தானே!" என்று நினைத்துக் கொண்டேன். இவற்றுடன் கூட, எனக்கு நானே பேசிக் கொள்வது அடிக்கடி செய்யும் செயல். பொதுவாக வண்டி ஓட்டும் பொழுது, துணி துவைக்கையில், பாத்திரம் துலக்குகையில், யாருக்காவது காத்திருக்கையில் என்று தனியாக இருக்கும்பொழுது ஏதேனும் யோசித்துக் கொண்டே என்னை அறியாது பேசி விடுவேன். ஒருமுறை இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டே நான் வீராவேசமாக என்னுடன் சண்டை போட்டுப் பேசிக் கொண்டே போவதை நண்பனின் தாயார் பார்த்துவிட, அன்று முழுவதும் ஓட்டித் தள்ளிவிட்டார்கள். வேலையில் சேர்ந்த புதிதில் நான் கணினியுடன் பேசுவதைக் கேட்டு பக்கத்து காபின் நண்பர் வேறிடம் மாற்றிக் கேட்குமளவுக்குத் தொல்லை செய்திருக்கேன் :)).
3. வாகனம் ஓட்டுவது: ஆளில்லாத சாலையில், அது என்ன வண்டியாக இருந்தாலும், வண்டி எடுத்து தனியே ஓட்டிக் கொண்டே போக பிடிக்கும். சைக்கிள் ஓட்டிய காலங்களில் சென்னையின் புறநகரான மடிப்பாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி பகுதிகள் முழுக்கவும் இப்படிச் சுற்றி இருக்கிறேன். கூடியவரை புதுப்புது வழிகள் கண்டுபிடிப்பது வழக்கம். இப்போது கூட தினமும் ஒரே வழியில் பயணிப்பது அலுத்துப் போய் வெவ்வேறு வழிகள் கண்டுபிடித்துக் கொண்டே போவேன்.
4. கோபம்: ரொம்பவும் கலகலப்பானவள் தான், அதிகம் யார் மேலும் கோபம் வராதுதான். ஒருமுறை என் வண்டியில் மோதி விபத்துக்குள்ளாக்கிய ஆட்டோக்காரரைக் கூட அந்தக் கணம் திட்டத் தோன்றாத காந்தீயவாதிதான் ;), ஆனால், சில சமயங்களில் எதற்கென்றே தெரியாமல் ஒரு அனாவசியக் கோபம் வந்துவிடும். வெறுப்பு, டிப்ரெஷன் என்றும் சொல்லலாம். அதுபோன்ற சமயத்தில் யாரிடமாவது பேச நேர்ந்தால் கத்தி கலாட்டா பண்ணிவிடுவேன். பல சமயங்களில் நெருங்கிய நண்பர்கள் தான் இத்தகைய கோபத்துக்கு ஆளாவர்கள். அப்புறம் கூப்பிட்டு வெகுநேரம் மன்னிப்பு கேட்பேன். ஆனால், கொட்டிய வார்த்தைகளை அள்ளவா முடியும்? இப்போதெல்லாம் இந்தக் காரணமற்ற கோபம் குறைந்திருப்பதாக நம்புகிறேன். நண்பர்களைத் தான் கேட்க வேண்டும், பாவம்.
5. அதீத ஆர்வம், அல்லது ஆர்வமின்மை. ஏதாவது ஒரு விசயத்தில் ஆர்வம் உண்டானால், ஒரே ஆர்வக் கோளாறாக இருப்பேன். ஆனால், திடீரென்று அந்த விருப்பம் விட்டுப் போய்விடும். அப்படியே ஒதுங்கிவிடுவேன். ஐந்து வயதில் அடம்பிடித்து கேரம் போர்டு வாங்கி விளையாடி, ஆறுவயதில் அந்த போர்டை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு பல்லாங்குழி விளையாடப் போய்விட்ட கிறுக்குத்தனத்தை இன்றும் என் அப்பா சொல்லிக் காட்டிக் கொண்டே இருப்பார். தையல், பின்னல் போடுவது, மொழி கற்பது, பாட்டு கற்பது, கலர்கலர் வளையல், காதணி சேர்ப்பது, சின்னச் சின்ன பென்சில் சேர்ப்பது, தபால்தலை சேகரிப்பு, சுட்டிவிகடன் பொம்மைகள் செய்வது என்று எல்லா பொழுதுபோக்குகளும் ஒருசில நாள் ஆசை தான். வாசிக்கும் பழக்கம் மட்டும் தான் இத்தனை நாள் தொடர்ந்திருக்கிறது. விந்தையான விசயம் அதுதான் என்று தோன்றுகிறது.
இன்னும் ஐந்து பேரைக் கூப்பிடும் எண்ணமெல்லாம் இல்லை. எல்லாரும் எழுதிவிட்டார்கள் போலத் தெரிகிறது. அதனால் இத்தோட ஜூட் :).
Friday, March 16, 2007
அப்படி எல்லாம் விட்ருவோமா?!
வெட்டியாக, ரொம்ப வெட்டியாக, ஒரு வேலையும் இல்லாமல், அலுவலகத்தில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு சமயம், சென்னை நெட்வொர்க்கில் கதை படித்துக் கொண்டிருந்தவள், அப்படியே கைதவறி கைப்புள்ளயின் பதிவு உரலைத் தட்டிவிட்ட பொழுது தொடங்கியது இந்தக் கிறுக்கு. அந்தச் சமயம் கைப்ஸ் தன் தம்பியுடன் அடித்த கூத்துகளை விலாவாரியாக எழுதிக் கொண்டிருந்தார். இயல்பாகவே நகைச்சுவை மிகவும் ரசிக்கும் நான் அதைப் படித்து, அதன்பின் அவருடைய அடுத்தடுத்த பதிவுகளுக்குள் விழுந்து எழுந்து, நாலு பதிவு விளையாட்டு உரலைக் கண்டுபிடித்தேன். விளையாட்டு கனஜோராக நடந்து கொண்டிருந்த அந்தச் சமயத்தில் ஒவ்வொருவரும் அடுத்தவரின் லிங்குகளைக் கொடுத்துக் கொண்டே வந்ததால், ஒவ்வொரு பதிவராக பிடித்துப் படித்துக் கொண்டே வர எனக்கும் ஏதுவாகிற்று.எப்படியோ துளசிதளத்தில் தரையிறங்கிய போது, அக்கா அப்போதைய இந்தியச் சுற்றுபயணம் பற்றி பதிவெழுதிக் கொண்டிருந்தார். அதைப் படித்துவிட்டு, சரி, 'துளசி அக்கா, சென்னை வந்தால் நாம் கூட அவரைப் பார்க்கலாமே!' என்று நான் கேட்க, அவை 'இரண்டு மாதம் முந்தைய பயண விவரம்' என்று அவர் சொல்ல, நல்ல பல்பு அது :-) [அப்பா! இந்த சொல்லையெல்லாம் பயன்படுத்தி எத்தனை நாளாச்சு! பதிவிலக்கியத்தில், இதை மட்டும் எப்படி விட்டோம்?! ]
என் முதல் பதிவை இப்போது படித்தாலும் எனக்கே ஆச்சரியமாக இருக்கும். ரொம்ப ரொம்ப கொடுமையான பதிவு அது. அதை எழுதி முடித்து பப்ளிஷ் தட்டுவதா வேண்டாமா என்று வெகுநேரம் யோசித்து, ரொம்ப நேரம் கழித்து பிரசுரித்துவிட்டு ரியாக்ஷன்களுக்குப் பயந்து (ஏன் பயந்தேன் என்று இப்போதும் ஆச்சரியமாக இருக்கு), அப்படியே ஆறு மணி பஸ் பிடித்து வீட்டுக்கு ஓடி விட்டேன். மறுநாள் வரும் வழியெல்லாம் யோசித்துக் கொண்டே வந்தேன். "இதெல்லாம் தேவையா உனக்கு? எழுதுறவங்க எல்லாம் பெரியாளுங்க போலிருக்கு.. உனக்கெல்லாம் சரிபட்டு வருமா என்ன? பேசாம போய் அந்தப் பதிவை அழிச்சிடலாம்" என்று நினைத்து நான் வரவும், எனக்கு ரொம்ப பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. முத்து(தமிழினி), ராசா, ஜீவா, கீதாக்கா, கார்த்திக் ஜெயந்த் என்று நிறைய பேர் வந்து பின்னூட்டம் போட்டிருந்தார்கள்.. இவங்க பின்னூட்டங்கள் இல்லை என்றால், நீங்கள் ஒருவேளை இந்த அறுவையிலிருந்து தப்பியிருந்திருக்கலாம்.. ஏதோ உங்க கெட்ட காலம் ;))ஆரம்பம் தான் அப்படி பயந்து பயந்து.. ஆனால் பாருங்க, அடுத்தடுத்த நாட்கள், கன்னாபின்னாவென்று கண்டதையும் எழுதியதில், மார்ச் மாதமே ஒன்பது பதிவுகள்! ஏப்ரல், மே - இல் ஏதோ கொஞ்சம் படிக்கிற வேலைகள் இருந்ததால் குறைந்தது, மீண்டும் ஜுன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவு என்று விடுமுறை நாட்கள் தவிர்த்த மற்ற நேரங்கள் ரொம்ப பிஸியாக இருந்தது பிளாக்கர் :)
பதிவுலகத்தில் என் முதல் நண்பர் என்றால் பாலபாரதியைத் தான் சொல்ல வேண்டும். "இப்படிப் பயந்து பயந்து எழுதுதே இந்தப் பொண்ணு" என்று நினைத்தோ என்னவோ, "அடிக்கடி டெம்ப்ளேட் மாத்தாதீங்க", "கவிதை எழுதாதீங்களேன் ப்ளீஸ்!" என்று ஏதேதோ யோசனை சொல்லிக் கொண்டிருந்தார் மனிதர். நம்மதான் எதையுமே சொன்னால் கேட்கிற சாதி இல்லையே.. யார் என்ன சொன்னாலும் விடாது கவுஜ என்ன, டெம்ப்ளேட் என்ன என்று எதையெதையோ செய்து கொண்டே இருந்தேன். பதிவுகளில் முதலில் போனில் பேசியதும் பாலாவிடம் தான். எனக்கு யோசனை சொன்ன நேரம், கை உடைத்துக் கொண்டு வீட்டில் இருந்ததாக கேள்விப்பட்டபோது பாவம் என்று நான் போன் போட, 'அவர் பேச, நான் கேட்க; நான் கேட்க, அவர் பேச' இப்படியாக எங்கள் முதல் போன் பேச்சு வார்த்தை ஒரு பக்கச் சார்பாகவே அமைந்தது. இப்ப வரைக்கும் பாலாவிடம் போன் போட்டு 'ஹலோ' தவிர ஒரு வார்த்தை நீங்கள் அதிகமாக பேசிவிட்டால், நீங்கள் பெரியாள் தான் :)). யோசித்துப் பார்க்கும் போது, பா.க.சவின் விதை அப்போதே விழுந்துவிட்டதாகக் காண்கிறது. அது டார்மெண்டாக இருந்து கொஞ்சம் வளர்ந்து மூன்று இலை விடத் தான் ஆறுமாதங்கள் ஆகிவிட்டன (*)[அதுக்கப்புறம் அசுர வளர்ச்சிதான் :-j ]
அடுத்து குறிப்பிடத்தகுந்த வலைநண்பர் சிபி. கைப்புவைக் கலாய்க்க அப்போதெல்லாம் பார்த்திபன் என்ற வலைஞர் சும்மாவேனும் கலாய்த்துக் கொண்டிருப்பார். ஒரு முறை வ.வாசங்கத்தின் தங்கத் தலைவர் கைப்பு அண்ணனுக்காக, பார்த்திபன் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு வெளியே வந்தால், சிபியிடமிருந்து ஒரு மடல். "நல்லா சொல்லி இருக்கீங்க பார்த்திபனுக்கு" என்று.. நான் எதார்த்தமாக, "நீங்க தான் பார்த்திபனா?" என்றேன். "அட! எப்படிக் கண்டுபிடிச்சீங்க?" என்று அவர் கேட்க, "அட, நெசமாவே நீங்கதானா?!", "நானாத் தான் உளறிட்டனா?" என்று ஆரம்பித்தது எங்களின் வருத்தப்படாத நட்பு! அப்படியே வருத்தபடாத வாலிபர் சங்கம், கலாய்த்தல் திணை, பாலபாரதியைக் கலாய்ப்போர் சங்கம் என்று நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வீட்டுக்குள் சிபியின் மனைவியைக் கலாய்ப்போர் சங்கத்திலும் எனக்கு கொஞ்சமே கொஞ்சம் இடம் கொடுத்திருக்கிறார் மனிதர் :)
அலுவலக வேலைக்காக மதுரை செல்ல நேர்ந்தபோது, தருமி என்ற வலைபதிவர் பெயரை மட்டும் வைத்து அவருக்கு ஒரு மடல் தட்டி நாங்கள் செல்ல இருந்த கல்லூரியிலிருந்து கோயில் செல்ல வழிகேட்டுக் கொண்டிருந்தேன். வழி, ஆட்டோ சார்ஜ் முதற்கொண்டு சொன்னவர், தன்னுடைய செல்பேசி எண்ணையும் சேர்த்துக் கொடுத்திருந்தார். அப்போது ஜோசியம் பற்றி ஏதோ தொடர் எழுதிக் கொண்டிருந்த தருமியை, நான் பின்னூட்டங்களில் மட்டுமே படித்திருந்தேன். அதனால், போன் போட்டு, "நான் உங்க பதிவு படிச்சதே இல்லை" என்று சொல்வது கொஞ்சம் ஓவராக இருக்கும் என்று நினைத்து, அமைதியாக மதுரை போய், நல்ல பிள்ளையாய் இன்டர்வியூ எல்லாம் செய்து விட்டு திரும்பி வந்துவிட்டேன். அதன்பின்னர் கொஞ்ச நாள் கழிந்து, ஜோசியத் தொடர் முடிந்து என்னை மாதிரி பாமரர்களும் படிப்பது போல் தருமி ஏதோ எழுதப் போக, பின்னூட்டங்கள் மூலம் நட்பாகி, அப்படியே ஒரு ஆறு மாதம் கழித்துத் தன் பழைய மடல்களைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போது, "நீங்க தானா அந்த மதுரைக்கு வழிகேட்டு வந்த ராஜாராம்?" என்றார்.. அந்தச் சமயத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்த மெயில் ஐடி அப்பா பெயரில் மட்டுமே இருக்கும், அதுவும் முழுதாக இருக்காது, அதனால் பேராசிரியர் குழம்பிப் போய்விட்டார் போலும் :)
அமெரிக்கா போய்ச் சேர்ந்து ஒரு வாரத்திற்குள் திடீரென்று ஒரு மடல், யாரோ ஒரு கந்தசாமியிடமிருந்து. "எங்கூருக்கு வந்திருக்கீங்களா பொன்ஸ்? ஏதும் உதவி தேவைன்னா சொல்லுங்க.. " என்று.. யாருப்பா இது, என்று யோசித்தபடியே அவரது ப்ரோபைலைப் பார்த்தால், ஏ! யப்பா.. எத்தனை பதிவுகள்..இத்தனையும் பார்த்து இது இன்னார் என்று நான் புரிந்து கொள்ளவே நாளாகும் என்று நினைத்து சாதாரணமாக ஒரு பதில் அனுப்பி வைத்தேன். அதிலும், கனடாவில் உட்கார்ந்து கொண்டு ஒருவர், "எங்கூருக்கு வந்திருக்கீங்களா?" என்று என்னைக் கேட்டால், என்னவென்று நினைப்பது? வெட்டியாக வலைமேய்ந்து கொண்டிருந்ததால், அப்படியே கொஞ்சம் பிளாஷ்பேக் பதிவுகளாகப் படித்து, இந்த மதி கந்தசாமி புங்குடு தீவில் புட்பால் ஆடியவர் என்பதையும், ஆங்கிலப் படங்களுக்கு அழகாக விமர்சனம் எழுதுபவர் என்பதையும் கண்டு கொண்டேன். அப்படியே தேடிக் கொண்டே போனால், ஏதோ ஒரு பதிவில் இளவஞ்சி, 'மதியக்கா' என்று விளித்து வாங்கிக் கட்டியதைப் படித்த பொழுது தான் புரிந்தது, "அட, இது அண்ணாச்சி இல்ல, யக்கோவ்!" என்று :-". மதி கலாய்ப்போர் சங்கத்தில் சேர தொடர்பு கொள்ளவும்: பொன்ஸ் பக்கங்கள் :)
யார் இன்னார் என்று தெரியாமலே பேசத் தொடங்கி, எங்கோ எப்போதோ என்னுடன் படித்தவர்கள், வேலை பார்த்தவர்களின் நண்பர்கள் என்று சுற்றிச் சுற்றிக் கண்டுபிடித்திருக்கிறேன் இந்த ஒருவருடத்தில். என்ன, என்னுடைய நேரடி நண்பர்கள் யாரும் இன்னும் தமிழ் எழுத வரவில்லை. ஏன், தமிழை இலவச இணையத்தில் கொடுத்தால் கூட படிக்க மறுக்கிறார்கள்.. விரட்டி விரட்டித் தான் படிக்க வைக்க வேண்டியிருக்கிறது.. அந்தவகையில் கொஞ்சம் வருத்தம் தான் :( பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், பண்பலைகள் என்று எல்லாவற்றிற்கும் மாற்று ஊடகமாக வளர்ந்து நிற்கும் வலைப்பதிவுகள், புது வரவுகளுக்கு மிகவும் வசதியான களமாக இருக்கிறது. கண்டுபிடித்துப் படிப்பவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது கொஞ்சம் வருத்தம். அதிலும் இணைய வசதி அதிகம் உள்ள சென்னை போன்ற பெருநகரங்களில் படித்து வளர்ந்தவர்கள், தமிழை ஒரு பாடமாகக் கூட படித்தறியாத காரணத்தால், பதிவுகள் போன்ற ஊடகங்களுக்கு வந்தாலும் ஆங்கிலத்தை அல்லது, தமிங்கிலத்தை விரும்புகிறார்கள். தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விருப்பமில்லாத சிலரும் எழுதத் தயங்குகிறார்கள் என்பது இன்னுமொரு தனிக் கதை.
ஒரே வருடத்தில் நான் வெற்றிகரமாகச் சந்தித்து பயமுறுத்திவிட்ட பதிவர்களைப் பட்டியலிட எண்ணியிருந்தேன். ஆனால், நடந்துவிட்ட மூன்று நான்கு சென்னை சந்திப்புகளில் பார்த்தவர்களையும், பதிவு என்பது ஒரு அறிமுகக் களமாக இருந்தாலும், குடும்ப நண்பர்களாகவே பழகிவிட்ட பதிவு நட்புகளையும் எந்தப் பட்டியலில் சேர்ப்பது என்று புரியாததால், வித்தியாசமான முன்னுரையுடன் அறிமுகமான நண்பர்களைப் பற்றி மட்டுமே இந்தப் பதிவில் எழுதி இருக்கிறேன்.
அடுத்த வருடமாவது ஏதாச்சும் உருப்படியா எழுத முடியுமான்னு பார்க்கிறேன்..

என்ன பார்க்குறீங்க? ஆமாமாம்..

கவுண்டர் Devil - பொன்ஸ்
"இதோ இப்பொழுது ஆரம்பிக்கிறது நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கவுண்டர் டெவில் ஷோ வித் பொன்ஸ்... இது ஒரு முழுக்க முழுக்க பொன்ஸ் கலாய்ப்போர் சங்கத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்ட நிகழ்ச்சியாகும், ஆகவே வழக்கம் போல் சங்கத்துக்கு அளிக்கும் ஆதரவை இப்போழுது பெருவாரியாக அளிக்கும்படி விரும்பிகேட்டுகொள்கிறேன் , இந்த பொன்னான வாய்ப்பளிந்த பொன்ஸ்க்காவிற்கு மிண்டும் நன்றி சொல்லி அமர்கிறேன், இவண் ஒங்க பாசக்காரபய இராம்"
கவுண்டர்:- "அடேய் மஞ்சகலரு முடி மண்டையா! மைக் கெடச்சா இப்பிடிதான் பேசணுமின்னு யாருடா ஒங்களுக்கெல்லாம் சொல்லி குடுக்கிறது , என்னையே ஆரம்பத்திலே டென்சன் பண்ணாத? சவுண்ட் விட்டமாதிரியே ஓடி போயிரு , இல்லே ஓடி வந்து குறுக்குலே மிதிச்சிருவேன்!, நம்ம ஆற்றலரசி பொன்னம்மா வந்துருக்காங்க ! அவங்கள நான் பேட்டியெடுக்கனும்?"
பொன்ஸ்:- "என்னது பொன்னம்மா'வா? நான் என்ன கிழவியா ?"

க:- "அப்புறம் நீ பொக்கம்மா'வா ? இங்க பாரு! நாந்தான் கேள்வி கேட்பேன், நீ ஏதாவது திருப்பி என்னை கேள்வி கேட்டேன்னு வை? அப்பிடியே அந்த தும்பிக்கையை பிடிச்சு கடிச்சி வைச்சிடுவேன்!? "
பொ:- "அதுதான் ஏன்னு கேட்கிறேன், ஏன் பித்தளைதான் கேள்வி கேட்கணுமோ ? எப்போவும் ஈயம் பதில் சொல்லிக்கிட்டே தான் இருக்கணுமா என்ன?"
பொன்ஸை அருகில் வரசொல்லி நறுக் நறுக்'ன்னு தலையிலே கொட்டுகிறார் கவுண்டர்...
க:- "போய் ஒழுங்கா ஒன்னோட சேர்'லே போயி ஒக்காரு , நான் என்ன கேட்டேன் நீ என்ன பதிலுக்கு கேள்வி கேட்கிறே?, இதேமாதிரி பித்தளைகாரனுக பேட்டிக்கு வந்திருந்தா நாலஞ்சு மண்டயா 'ன்னு சொல்லி திட்டிருப்பேன், நீ பொம்பளை பிள்ளையா போயிட்டே ? இன்னும் கொட்டு வேணுமின்னா இந்தமாதிரி டிஸ்டர்பன்ஸ் கொஸ்டின்ஸ் கேளு?"
பொ:- "ஐயோ வேணாங்கணா! நான் என்னோட தும்பிக்கையை சுருட்டிகிட்டு ஒக்கார்த்துகிறேன் , நீங்க கேள்வி கேளுங்கணா?"
க:- "அந்த பயம் மனசிலே இருக்கட்டும்! அடிச்சாதான் மிதிச்சாதான் எல்லாபேரும் ஒழுங்கா இருக்கீங்க ? ஆமா அம்மணி என்ன பேரு அது பொன்ஸ்?
பொ:- "மிஸ்டர் கவுண்டர் ஒங்களை என்னாலே அண்ணா'ன்னு கூப்பிடமுடியாதுன்னு சொல்லிக்கிறேன் , எனக்கே அது ஓவரா இருக்கு, சின்னபொண்ணு தாத்தா மாதிரி இருக்கிறவரை அண்ணா 'ன்னு கூப்பிடமுடியாது?"
க:- "ஏய் ஆரம்பிச்சுட்டியே நீயி? நான் இந்நேரம் எங்க எப்பிடி இருக்கவேண்டியவன் , இந்நேரம் நான் பீக்'லே இருந்தா கோவாபீச் 'லே நமிதா'கூடா ஏ லெக் லெக்' ன்னு டூயட் பாடிட்டுருப்பேன், எங்கஷ்டகாலம், இங்க வந்து ஒன்கிட்டே பேட்டியெடுக்கிறமாதிரி ஆகிட்டேன். ஒழுங்கா நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லு இல்லேன்னா இன்னொரு செட் கொட்டு வைச்சிருவேன்"
பொ: "ஓ அந்த பெயர் காரணம் சொல்லணுமின்னா ஒரு மணிநேரமில்லை ரெண்டு மணி நேரமில்லை முணுமணி நேரமெல்லாம் பத்தாது"
க:- "ஸ்டாப் த நான்சென்ஸ்? நான் என்ன கேட்டாலும் நீ எடக்குமொடக்கா 'தான் பதில் சொல்லனுமின்னு வந்திருக்கே? என்ன பண்ணுறது ? அதெயன் என்னதையாவது ஒன்னை மாத்திக்கிட்டே இருக்கே தாயி?"
பொ:- "மாற்றம் என்பது தொடர் நிகழ்ச்சி. மாற்றங்கள் சில இல்லையென்றால் சரித்திரங்கள் எழுதவே வாய்ப்பில்லை.'ன்னு பெரியவயங்க சொல்லிருங்காங்க! என்னோட சரித்தரமும் அஞ்சாம்வகுப்பு வரலாற்று பாட பொஸ்தகத்திலே வரனுமின்னு மாற்றமா பண்ணிட்டு இருக்கேன்!"
க:- "ஒன்னோட சரித்திரம் பொஸ்தகத்திலே வந்தா அது வரலாற்றுக்கே பிடிச்சே தரித்தரம்? ஏம்மா நீ என்ன போன ஜென்மத்திலே யானை மேச்சிட்டு இருந்தியா? எங்க பாரு யானை யானை' னு திரியுற?

பொ:- "இந்தமாதிரி அறிவுப்பூர்வமான கொஸ்டினை தான் நான் உங்ககிட்டே எதிர்பார்த்தேன், யானையை பத்தி நான் சொன்னா நாலு மணிநேரத்திலே முடிச்சிருவேன்னு தும்பிக்கை சாரி நம்பிக்கை இருக்கு, ஒங்களுக்கு அதெய்ல்லாம் கேட்க டயமிருக்காது, என்னோட எழுத்துபூர்வமான பதிவை படிச்சி பாருங்க."
க:- "ஆமாம், இவுக பெரிய எழுத்தாளினி அப்பிடியே எழுத்தாணியை வெச்சு ஓலையிலே செதுக்கி வைச்சமாதிரி என்ன பில்டப், இங்கப்பார் நான் என்ன கேட்கிறோனோ அதுக்கு ஒழுங்கா பதிலே சொல்லனும்,இல்லே சொன்னமாதிரியே தும்பிக்கைய பிடிச்சு கடிச்சி வைச்சிருவேன், நானும் எல்லாபயலுகளையும் பார்க்கிறேன், ஆளுக்குஆளு கதை எழுதுறேன், கவிதை எழுதுறேன்னு சொல்லிட்டு திரியிறீங்க, ஒங்களுக்கு வேலைவெட்டியெல்லாம் இருக்காதா?"
பொ:- "மிஸ்டர் கவுண்டர், ஒங்க கொஸ்டின்'லே பிழை இருக்கு, அது பேரு கவிதை இல்லே, கவுஜ...
க:- "ஐயோ இந்த இம்சையை யாருடா பேட்டியெடுக்க கூப்பிட்டு வந்தது? அடேய் காட்டுமண்டையனுகளா இந்தம்மா தொல்லை தாங்கமுடியலைடா? இதை திரும்ப கூட்டிட்டு போயி காட்டுலே விடுங்கடா?நான் என்ன கேட்டாலும் திரும்பி எனக்கே கேள்வி கேட்கிது, இல்லேன்னா திருத்தம் பண்ணுறேன்னு உசுரை வாங்குது?? ஏய் யானையத்தா ஒழுங்கா இரு இல்லே கோமுட்டிதலையனுக்கு எத்து விடறமாதிரி ஒனக்கும் விட்டுறுவேன், அப்புறம் கொட்டு வாங்கிட்டு அழுதமாதிரி இப்போவும் அழுதுட்டு இருப்பே? சிறுவர் கதை எழுதுறேன்னு சின்னவயசிலே பூந்தளிர், அம்புலிமாமா'விலே இருக்கிறதே உல்டா பண்ணி போட்டுறே இல்லே?"
பொ:- "பார்த்தீங்களா நீங்களே என்னோட நினைவாற்றலை புகழ்றீங்க, போங்க சார் எனக்கு கொஞ்சம் வெக்கமாயிருக்கு!"
க:- "ஈயடிச்சான் காப்பியடிக்கிறேன்னு சொன்னா அது புகழுறதா? நீ இன்னிக்கு எடக்குமொடக்கு பண்ணியே தப்பிக்கலாமின்னு திரியுறே? என்னோமோ அறிவு சுரங்கம் மாதிரி டெக்னிக்கல் விஷயமா எழுதி கொட்டுறீயே? ஏந்தாயி இன்னொரு தடவை திரும்ப கேட்கிறேன், ஆபிசுன்னு ஒன்னு இருக்கே, தினமும் அதுக்கு வேறே தவறாமே போறியே, அங்கே வேலைன்னு ஒன்னே பார்ப்பியா மாட்டியா?"
பொ:- "ஹலோ சார், நான் ஒரு அஷ்டவதானி, என்னாலே ஒரே நேரத்திலே நிறைய வேலைகளை பார்க்கமுடியும்,"
க:- "இப்பிடியே தற்பெருமையா பேசிட்டு திரிஞ்சுட்டு இரு? வெளங்கிரும்? இந்த பொஸ்தகம் படிச்சா சும்மா இருக்கமாட்டாமே அதை வேற பதிவிலே எழுதிட்டு திரியிறே இல்லே நீயி? அதெப்படி ஒனக்கு மட்டும் யானை சம்பந்தப்பட்ட எல்லா பொஸ்தகமெல்லாம் கிடைக்கிது? இதுக்கு பதில் சொல்லுறேன்னு சொல்லி நான் ஒரு அறிவாளி, தண்ணிவாளின்னு சொன்னேன்னு வை,நான் மிருகமா ஆகிருவேன்.!"
பொ:- "ஹி ஹி அதெல்லாம் இல்லே கவுண்டரே, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் சொல்லிருக்காங்க! அதுதான் எல்லாரும் நான் படிச்சு பயன்பெற்றதை ஷேர் பண்ணிக்கிறேன்"
க:- "ஆமா மிச்சப்பேருல்லாம் படிக்க தெரியாத கம்னாட்டிக! இவக பெரிய படிப்பாளி, எல்லாருக்கு படிச்சு காட்டுறாங்களாம்! ஏய் நீ முதியோர் கல்வியிலே பொஸ்தகம் வாசிக்கிற ஆயா வேலையா பார்க்கிறே? ஒங்கூட பேசி என்னோட பாதி உசுரு போச்சு, கடைசியா ஒன்னு கேட்கிறேன், அதுக்காவது ஒழுங்க பதிலே சொல்லிடு தாயி, போறே போக்கிலே ஒனக்கு புண்ணியமா போயிரும்!"
பொ: "சரி கேளுங்க! பதில் சொல்ல முயற்சி பண்ணுறேன்!"
க:- "போனவருசம் இதே நாளிலே வந்து பயமா இருக்குன்னு சொல்லிட்டு உள்ளே வந்தியே? இன்னிக்கு வரைக்கும் என்ன சாதிச்சு இருக்கே?
பொ: "கவுண்டர் சார், என்னோட சாதனையெல்லாம் பட்டியலிட்டா அது கிலோமிட்டர் கணக்கிலே போகும், அதிலே முக்கியமான சாதனை'ன்னா நீங்க என்னை பேட்டியெடுத்தது ,அதைவிட எல்லாரும் மாதிரியே நீங்களும் என்கூட பேச பயந்ததது, இன்னும் சொல்ல நிறைய இருக்கு, ஒங்களுக்கு டயமிருக்கா? :)"இவ்வாறு பொன்ஸக்கா சொல்லிக்கிட்டு இருக்கும்போதே தன் டெவில் ஷோ வாழ்க்கையில் முதன்முறையாக பின்னாங்கால் பிடறியில் அடிக்க ஓடுகிறார் கவுண்டர்.
Monday, March 12, 2007
மகளிர் சக்தி - அறிமுகம்
தமிழ் எழுதும் அறுபது சொச்சம் பெண்களின் உரல்களைச் சேர்த்து, மகளிர் திரட்டியாக எழுந்து நிற்கிறது மதி உருவாக்கிய மகளிர் சக்தி.
பல்வேறு காரணங்களால், தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளின் இடுகைகளைத் தவற விடுபவர்கள், இந்தச் சுட்டியினை உங்களின் கூகிள் வாசிப்பகத்தில் இணைத்துக் கொண்டு பெண் பதிவர்களின் இடுகைகளை விடாமல் படிக்கலாம்.
இந்தச் சுட்டியினை உங்கள் பதிவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சமீபத்தைய ஐந்து இடுகைகளை உங்கள் பக்கத்திலேயே கூட பார்க்கலாம். புது பிளாக்கரில் உங்கள் பக்கம் இருந்தால், மகளிர் சக்தியை இணைக்க, இங்கே உள்ள "சக்தி கொடு" பொத்தானைப் பயன்படுத்தலாம்.
என் பதிவின் பக்கப்பட்டியில் இருக்கும் "சக்தி கொடு" பொத்தானையும் பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். தோழிகள் எல்லாருடைய பதிவுகளையும் இதில் சேர்த்திருக்கிறோம். இருப்பினும் யாராவது விட்டுப் போயிருந்தால் சொல்லுங்கள். அத்தோடு, தோழிகள் அனைவரும் இந்தப் பக்கப் பட்டியைத் தங்கள் பதிவில் இணைத்துக் கொண்டால் மிகநன்றாக இருக்கும்.
[பிகு: இது பிளாக்கரின் விட்ஜட் உருவாக்கும் ஆப்ஷனைப் பயன்படுத்தி உருவாக்கியது. சமீபத்தில் வந்த மறுமொழிகள் தொடங்கி, வேறு பலவற்றையும் இது போன்ற விட்ஜட்டாக கொடுக்கலாம். வேறெதும் விட்ஜெட் வேண்டும் என்று நினைத்தால் பின்னூட்டமிடுங்கள். முடிந்தால் அதுவும் உருவாக்கி கொடுக்கலாம் :) ]
Friday, March 09, 2007
அம்பாரியில் வந்த சுடர்
சுடர் தொடங்கிய பொழுது சாகரனிடமிருந்து ஒரு மடல் வந்திருந்தது. அதுவே அவருடனான கடைசி பேச்சுவார்த்தையாக இருக்கும் என்று நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை. வெகுநாள் ஆகிவிட்ட போதும், அவர் நம்மிடையே இல்லை என்பதை இன்றும் நம்ப முடியவில்லை. "இன்றில்லை என்னும் பெருமை" உடைத்த உலகம் என்பதன் பொருளை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறது நான் படிக்கும் ஒவ்வொரு சுடரும்; என் நெஞ்சார்ந்த அஞ்சலிகள் சாகரன்...
மங்கை கையில் சுடர் போன போது அங்கிருந்து வேறு யாருக்காவது போகும் என்று நினைத்திருந்தேன். ஆனால், என் கையில் கொடுத்து விட்டார்கள்.. ம்ம்ம்.. நீங்க கொடுத்து வச்சது அவ்வளவு தான் :)
1) உங்க அனுபவத்தில, பணி புரியும் பெண்களுக்கு 'Glass ceiling' இருக்கிறத நீங்க உணர்ந்து இருக்கீங்களா?... அப்படி இருந்தா அத தாண்டி வர பெண்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள்.
Glass Ceiling என்ற சொல் எனக்குப் புதிது. அகராதி பார்த்து தெரிந்து கொண்ட பொருள்: "பெண்கள் அல்லது சிறுபான்மையரைப் பெரிய பதிவிகளுக்கு வரவிடாமல் தடுக்கும் கண்ணுக்குத் தெரியாத கண்ணாடித் திரை" என்கிறது ஆன்ஸர்ஸ்
கண்ணுக்குத் தெரியாத இது போன்ற திரைகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. முன்பே ஒரு பதிவில் சொன்னது போல், கொடுத்த வேலையை முடிப்பது, முடிக்காதது என்பதைத் தாண்டி, வெகு நேரம் இருந்து வேலை செய்பவர்கள் நல்ல பணியாளராக அடையாளம் காட்டப்படும் இடம் இந்த மென்பொருள் துறை. ஆக, திருமணத்திற்கு முன்னர் இது போல் எத்தனை நேரம் வேண்டுமானலும் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும் நமது பெண்கள் திருமணத்திற்குப் பின்னர் பல்வேறு காரணங்களால், இது போன்ற வெகுநேரம் வேலை செய்ய முடியாமல் போகிறது. 'எப்படியும் கல்யாணம் செய்தால் விட வேண்டிய வேலை தானே!' , 'மேலாளர் சொல்வதை அப்படியே செய்வோம். நம்ம எதுக்கு அனாவசியமா யோசிக்கணும், கேள்வி கேட்கணும்?' என்பது போன்ற மெத்தனங்களையும் அடிமை மனநிலைகளையும் தாண்டியும் கூட பல பெண்கள் இங்கே வெற்றிப்படிகளில் ஏறிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
வாடிக்கையாளர் நிறுவனங்கள், வெளிநாடுகள் செல்ல இயலாமை, கணவனின் பணியிட நெருக்கடிகளை முன்னிட்டு வேலையை துறக்க நிர்ப்பந்தம், குழந்தைகளைக் கவனிக்க சீக்கிரம் வீடு திரும்ப வேண்டிய நெருக்கடி என்பன போன்ற காரணங்களால், திருமணத்திற்குப் பின் பெண்கள் அடுத்த பிரமோஷன் மீது அதிகம் கருத்து செலுத்துவதில்லை. பணியில் மந்தமாக இருக்கும் ஆண்களுக்கும் இந்த பிரச்சனைகள் இருக்கும் என்றாலும், பெண்கள் என்று வரும் போது வீட்டுப் பிரச்சனைகள் தான் முக்கியமான காரணிகளாக இருக்கின்றன.
இவற்றிலிருந்து வெளிவர பெண்கள் என்ன செய்யலாம்? "உன் வேலை போல என் வேலையும் எனக்கு முக்கியம்" என்று கணவனிடமும், "உன் குழந்தைகளுடன் நேரம் செலவிடாமல் வேலை மட்டுமே வாழ்க்கை என்று நீ இருந்தால், நானும் அதையே செய்ய வேண்டிய அவசியமில்லை!" என்று மேலாளர், சக பணியாளர் என்று எல்லாரிடமும் இந்த மனநிலையை உருவாக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இருக்கிறது. இதை உருவாக்கி, வெற்றி பெறும் பெண்கள் எண்ணிக்கையில் குறைவானாலும், இருக்கிறார்கள் என்பதை மறுக்கலாகாது. என் அனுபவத்திலேயே அது போன்ற பெண்களைப் பார்த்திருக்கிறேன், என்னுடைய மேலாளர்களாக...
2) மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிய பெண்களுக்கு படிப்பு மட்டும் இருந்தால் போதாது. ஆண்களுக்கே சில சமயம் சவாலா இருக்கும் போது, வேலைப் பளு, மன அளுத்தம், இவற்றை சமாளிக்க அவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
அறிவுரை என்று சொல்ல முடியாது; கூடியவரை வேலை நேரத்திற்குப் பின்னும் அலுவலகத்தில் பெஞ்சைத் தேய்த்தல், ஓசி இணையம், சினிமாச் செய்திகள், சீரியல்கள் என்று நேரம் வீணடிக்காமல், மனதுக்குப் பிடித்த, உடலுக்குப் புத்துணர்ச்சி ஊட்டும் பொழுது போக்குகளை வளர்த்துக் கொள்வது நல்லது. புத்தகம் படிப்பது, விளையாடுவது, சமைப்பது, நீச்சல், புது மொழி கற்றுக் கொள்வது, நண்பர்களுடன் விண்டோ ஷாப்பிங் என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
3) சமூக விழிப்புணர்வோட சில நல்ல காரியங்களை செய்துட்டு வரீங்க- வாழ்த்துக்கள்..
அப்படியா?!! :)
அதை இன்னும் நல்லா, அனைவரையும் ஈடுபடுத்தி செய்யறதுக்கு ஏதேனும் திட்டம் வச்சுட்டு இருக்கீங்களா?
அப்படி பெரிய அளவில் யோசிச்சதில்லை மங்கை. கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவர்கள், உணவகக் குழந்தைத் தொழிலாளிகள், பஞ்சர் ஒட்டும் சிறுவர்கள், பேப்பர் கடையில் பார்க்கும் குழந்தைகள் என்று படிப்பு எட்டாக்கனியாக இருக்கும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வி கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்று ஒரு ஆசை உண்டு. பல நாட்களாக நினைத்துக் கொண்டிருப்பது இது, இன்னும் நேரம் வரவில்லை; யோசனை வடிவிலேயே இருக்கிறது. இயல்பாகவே எனக்குள் இருக்கும் சோம்பேறித்தனமும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.
4)கணினி தவிர உங்களை ஓரிடத்தில் உட்கார வைக்கும் வேறு விஷயங்கள்
புத்தகங்கள்.. பிடித்த புத்தகங்களுக்குள் மூழ்கிப் போவது ஒரு பிடித்த பொழுதுபோக்கு.
5) வலைப்பதிவு உலகில என்ன புதுமை செய்ய முடியும்...
தமிழ்வலைப்பதிவுகளைப் பொருத்தவரை புதிதாகத் தொடங்கியது போல் தான் உள்ளது. நிறைய மாற்றங்கள் மிச்சமிருக்கு; புதுமைகளும் தான்.
நுட்பத்தைப் பொறுத்தவரை, பிளாக்கரையும் வோர்ட்பிரஸ்ஸையும் தவிர வேற பதிவுக் கருவிகளே பெரிய அளவில் பயன்பாட்டில் இல்லை. இதில் தமிழ் வலைகருவிகள் வந்தால் நல்லா இருக்கும். இன்னும் திரட்டிகள், துறைசார்ந்த திரட்டிகள், அல்லது தன்வயப்படுத்தக் கூடிய திரட்டிகள்(பர்சனலைஸ்) தமிழுக்குத் தேவை. 'பின்னூட்ட எண்ணிக்கை மட்டுமே பதிவின் சாரத்தை முடிவு செய்யக் கூடியதில்லை' என்று தெரிந்தும் நாம் இன்னும் பின்னூட்ட எண்ணிக்கை அல்லது எழுதியவர்களின் பெயர் - இவற்றை நம்பியே ஒரு பதிவைப் படிக்கிறோம். இதைத் தாண்டி, நல்ல இடுகைகள் பல சமயம் அடையாளம் தெரியாமல் போய்விடுகிறது. பூங்கா போல இன்னும் பல இதழ்கள் வரலாம்; வரவேண்டும்.
பத்திரிக்கைகள் போல ஸ்டேடிக்கான ஊடகமாக இல்லாமல், ஒலி, ஒளி, படங்கள், படத் துண்டுகள்னு அசையக் கூடிய விதங்களில் கொடுக்க முடிந்த பதிவு ஊடகத்தை நாம் இன்னும் முழுமையாக புரிந்து, பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. மலைநாடனின் வானொலி போல, பினாத்தலாரின் ப்ளாஷ் விளையாட்டுகள் போல, அவ்வப்போது இணைக்கப்படும் படத்துண்டுகள் போல, இன்னும் பல நுட்பங்கள் பரவலாக்கப்படவேண்டும். இருக்கும் நுட்பங்களைப் பரவலாக்கல் ஒருபுறம் இருந்தாலும், குழலியின் கருவிப்பட்டி சேர்ப்பான் போல புதுநுட்ப கருவிகளும் ஒருபக்கம் அதிகரிக்க வேண்டியது அவசியம்.
இப்ப நிறைய பேர் புதுசா வர ஆரம்பிச்சு இருக்காங்க... இதன் எதிர்காலம் எப்படி இருக்கும்னு நினக்குறீங்க..
நிறைய பேர் வருவது மலர்ச்சியின், வளர்ச்சியின் அடையாளம். அதே ஐம்பது பேர், அதே பத்து பதினோரு விசயங்களைப் பற்றி ஒரே கோணத்தில் எழுதுவதை விட, தினம் புதுப் புது ஆட்கள் வரும் போது கோணங்களும் மாறுபடும். துறைசார்ந்த பதிவுகளின் தேவை இன்னும் தமிழில் இருந்து கொண்டே இருக்கிறது. மிருகவியல், தாவரவியலுக்கு ஒரு இயற்கை நேசி, மருத்துவத்திற்கு ஒரு எஸ்கே, அறிவியலுக்கு ஒரு வைசா, கூகிளுக்கு ஒரு பகீ, வேலைவாய்ப்புக்கு ஒரு ரவி என்று எல்லாமே "ஒரு"வாக இல்லாமல் இன்னும் அதே துறையைச் சேர்ந்த பலர் வரும்போது வெவ்வேறு பார்வைக்கோணங்களும் தமிழில் கிடைக்கும்.
ஆனால், ஏனோ புதிதாக வருபவர்கள் பின்னூட்ட எண்ணிக்கையைத் தாண்டி, யோசிக்காமல் இருந்து விடுகிறார்களோ என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. வலைப்பதிவுகள், நமக்கான, நாம் விரும்புவதைப் பேச வேண்டிய ஒரு ஊடகமாக, நம் குரலாக இல்லாமல், பின்னூட்டமிடும் வாசகர்களுக்கான காம்ப்ரமைஸாக, அவர்கள் விரும்புவதை மட்டும் எழுதும் இடமாக மாறிப் போவது தான் கொஞ்சம் வருத்தம். பின்னூட்டங்கள் ஒரு காரணம் என்று சொன்னாலும், வலைப்பதிவு என்ற சுதந்திரமான ஊடகத்தின், சில ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளாலும், திறந்த புத்தகமாக தத்தம் வலைப்பதிவுகளை வைத்துக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது. இந்தக் காரணங்களால் கூட புதியவர்கள் திசைமாறிப் போய்விடுவதாக எனக்குத் தோன்றுகிறது. கூடியவரை பதிவுகளைப் படிக்கும் புதியவர்களை எழுத ஊக்குவிப்பதைத் தவிர, நம்மாலும் இதற்கு ஏதும் செய்துவிட முடியாதென்பதே என்னுடைய எண்ணம். மாற்றம் என்பது அவரவர் உள்ளிருந்து வரவேண்டியது தான்.
*******************************************************
சுடர் வந்த பிறகு கண்டுபிடித்த முக்கியமான விசயம், கேள்வி என்று ஒன்று வந்துவிட்டால், பதில்சொல்வது சுலபம். ஆனால் எதுவுமே இல்லாத இடத்தில் கேள்விகளை உருவாக்குவது பெரிய வேலைதான். அதிலும் எதிராளி மனம் நோகாமல், பொதுவில் வைக்கப்படும் கேள்விகள் என்னும் போது, கொஞ்சம் கவனம் அதிகமாகவே தேவையாக இருக்கிறது. யாரை மாட்டிவைக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தபொழுது, நடுநாயமாக அமர்ந்து இருப்பவர் தான் நம் கண்ணில் சட்டென மாட்டியவர். அக்கா, அண்ணா என்று விளித்து பழகிக் கொண்டிருந்தாலும் நிஜமாகவே எனக்கு, ஒரு தமக்கையைப் போன்ற பாசம் காட்டும், தற்போது நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் என் நதியக்காவுக்கு நகர்கிறது சுடர்.
1. நீங்கள் வந்த புதிதில், சென்னையை எப்படி உணர்ந்தீர்கள் என்பதை உங்கள் பதிவுகளில் படித்திருக்கிறேன். இன்றைக்கு சென்னையில் முக்கியமான தேவையாக, அடுத்து செய்யவேண்டிய மேம்பாட்டுக்கான பணியாக நீங்கள் எதைக் கூறுவீர்கள்?
2. தமிழகத் தொலைக்காட்சியில் நீங்கள் தொடர்ந்து பார்க்கும், உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சி எது?
3. பெண்களுக்கான விழிப்புணர்வூட்ட சிறந்த ஊடகம் எது என்று நினைக்கிறீர்கள்?
4. எங்களுக்காக ஒரு நகைச்சுவைத் துணுக்கு சொல்ல முடியுமா? :)
5. வலைபதிவுகள் அளிக்கும் நண்பர் வட்டத்தைத் தாண்டி, பதிவுகள் மூலமாக வேறென்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?
நதி, சுலபமான கேள்விகள் தான் கேட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். நட்சத்திரத்துடன் சுடராகவும் ஜொலிக்க சீக்கிரமே வந்து விடுங்களேன்..
Friday, December 29, 2006
கில்லி 365 - ஒரு வாசிப்புரை
அமெரிக்கா, அரசியல், உலகம் என்று ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் ஒரு இடுகையைப் பரிந்துரைப்பதாகட்டும், ஒரு நாளைக்கு வரும் இடுகைகளிலிருந்து பலவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பதாகட்டும், இவர்களின் தன்னார்வச் சேவை நிச்சயம் பாராட்டிற்குரியது.
கில்லியின் “தமிழில் எழுதுவது எப்படி?” போன்ற பதிவுகள் புதிதாக பதிவெழுத வரும் எல்லாருக்கும் ஒரு வரம் என்றால் மிகையல்ல.
சரி, பில்டப் போதும்.. என்னை இங்கே அழைத்தது இந்த மாதிரி கதை அடிக்க இல்லை.. கில்லியின் வாசகர் உரையாக, கில்லி மூலம் படித்த, எனக்குப் பிடித்த பதிவுகளின் பட்டியல் கொடுக்கவே.
1. ரவுசு.. போட்டோவைப் பார்த்துச் சிரிச்சிட்டேன்.. புகைப்படத்தின் கவர்ச்சியில் தான் பதிவைப் படிக்கப் போனேன்..
2.
சென்னைக்கு ஒரு விவேகானந்தா கல்வி நிலையம். வலைப்பதிவுக்கு ஒரு சிறில் அலெக்ஸ்
கில்லி குழுவின் பளிச் கமெண்ட்ஸ் மற்றொரு கவரும் அம்சம்
3.
ஆனால், சொல்கிற பாய்ண்ட் ஒவ்வொன்றுக்கு, ஒரு உதாரணா கவிதையை எடுத்துப் போட்டிருந்தா, இன்னும் எளிமையா விளங்குமே..
போன்ற கமெண்ட்களை நீங்கள் ஏன் அந்த இடுகையிலும் சொல்லக் கூடாது? இடுகைக்கு நீங்கள் கொடுக்கும் சுட்டி ஒரு சில பதிவுகளில் மட்டுமே தெரிகிறதே..!
அதிலும் சில சமயம் இடுகை வந்து சில நாட்களுக்குப் பின் பரிந்துரைக்கும் போது, இந்த இடுகையை எழுதியவர் படிப்பதும், கவனிப்பதும் குறைவே என்றும் தோன்றுகிறது!
4. இதைப் போல நக்கலான புதுமைப் பதிவுகள் கண்டிப்பாக கில்லியில் இடம்பெற்றுவிடும் என்று நம்பலாம்..
5. நிகழ்வுகள் பற்றிய குறிப்புகளைச் சுலபமாகப் பெற முடிகிறது கில்லியில்.
6. இதைப் போல் இரண்டு மூன்று தொடர்புள்ள பதிவுகள், விவாதங்களை முன்வைப்பது மிகவும் பிடித்த ஒன்று. இது போல் எல்லா விவாதங்களையும் கொண்டுவரலாமே..
7. பின்னூட்டங்களுக்கும் கில்லியில் இட ஒதுக்கீடு இருக்கிறது போலும் :-D, பின்னூட்டங்களிலும் சிறந்த விவாதங்களை உள்ளடக்கிய பதிவுகளையும் கொஞ்சம் பேசலாமே..
8. ஐநாவின் மனிதவள மேம்பட்டு அறிக்கை பற்றிய எண்ணங்களைப் போன்ற சமூக விழிப்புணர்வூட்டும் பதிவுகளும் கில்லியின் சிறப்பு.
9. இதைப் போன்ற ஆறாம் திணை, குமுதம், பிபிசி என்று பிற இணைய பத்திரிக்கைகளிலிருந்து பொறுக்கி எடுத்துக் கொடுக்கும் சுட்டிகளும் மிகவும் பயனுள்ளவை.
10. நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் பற்றிய பதிவுகளின் தொகுப்பு.
11. OIGக்கு விளக்கம் புரியாவிட்டாலும், இது போன்ற அந்த நாள் நியாபகம் பதிவுகளும் அவசியம் தேவை தான்..
கிட்டத்தட்ட தினம் பத்து பரிந்துரைகள் தரும் கில்லியிலிருந்து சுமார் பத்து வாசகர் பரிந்துரைகள் எடுத்துக் கொடுக்கச் சொன்னார் பிரகாஷ்.. அதனால் சமீபத்துப் பரிந்துரைகள் சிலவற்றை மட்டுமே இங்கே பட்டியலிட்டுள்ளேன்..
பொதுவாக, பரிந்துரைக்கும் விதமும், பதிவின் கருத்துக்களிலிருந்து சிறந்த பகுதியை மட்டும் எடுத்துக் காட்டும் விதமுமே கில்லியின் தனித் தன்மைகளாக இருக்கின்றன.
கில்லிக்கு என்னுடைய பரிந்துரை :-D:
1. இடுகைகளைத் தேடுவதற்கு இன்னும் வசதியான வழிமுறைகளை உருவாக்கிக் கொடுக்கலாமே.. (சினிமா விமர்சனம், இளையராஜா - இரண்டு வகையிலும் ஆங்கிலப் பதிவு அல்லாத சுட்டிகள் மட்டுமே எனக்குத் தேவை என்பது போல..)
2. தேன்கூடு தளத்தில் தெரியும் பரிந்துரைகள் போல, சின்னதொரு நிரலியை பதிவர்கள் தத்தம் பக்கத்தில் இட்டுக் கொண்டு கில்லி பரிந்துரைகளைப் பார்க்க வழிசெய்யலாம்.
3. பதிவுகளுக்கு விளம்பரம் கொடுக்கும் கில்லியிலும் கூகிள் விளம்பரங்களை உள்ளிட்டுக் கொள்ளலாமே..
இறுதியாக, இரண்டாயிரம் இடுகைகளைத் தாண்டிவிட்ட கில்லிக்கு என் வாழ்த்துக்கள்; இன்னும் கில்லி மாதிரி சொல்லி அடிக்கவும்.. :)))
கோப்புக்காக... பிரசுரமானது இங்கே
Tuesday, December 19, 2006
மெகா தொடர்கள் 2006
* கல்யாணமாம் கல்யாணம் - இளவஞ்சி
கல்யாணத்திற்குத் தயாராகும்/தயாராக மாட்டேன் என்று அடம் பிடிக்கும் இளைஞர்களுக்கான தொடர். வாராவாரம் ஆரவாரம் என்ற பதத்திற்குப் பொறுத்தமாக அடுத்த இடுகை எப்போது வரும் என்று ஆவலுடன் காக்கவைத்தார் வாத்தியார்.. அப்புறம் எங்கே போனார் என்று தான் தெரியவில்லை.. வாத்தியார்! எங்கே இருக்கீங்க?!!
* பாலியல் கல்வி- பெற்றோருக்கு - எஸ் கே
மருத்துவர் எஸ்கேவின் பாலியல் கல்வி பற்றிய தொடர். பாலியல் கல்வி என்பதற்கும் மேலே, பொதுவாக குழந்தை வளர்ப்புக்கே பயனுள்ள தொடர் இது. கண்டிப்பாக படிக்க வேண்டியது
* அறிவியலும் ஆன்மீகமும் - செந்தில் குமரன்
கூடியவரை இந்தத் தொடரைப் படித்துவிடுவது என் வழக்கம். இன்னும் இதில் சமீபத்துப் பதிவுகள் சில விட்டுப் போய்விட்டன. இடுகைகளின் நீளம், அதீத ஆங்கிலச் சொற்களின் பயன்பாடு, வருத்தங்கள் இருந்தாலும், தொடர்ந்து படிக்க நல்ல தொடர் இது. இப்போது தமிழோவியத்திலும் இடம்பெற்றுவிட்டது போலும்.. வாழ்த்துக்கள் செந்தில்!
* வலைபதிவர்களுக்குப் பட்டமளிப்பு விழா - வரவனையான்
வலைபதிவர் கூட்டங்களை இத்தனை அற்புதமான கற்பனை கலந்து, விளையாட்டாக எழுத முடியுமா என்று வியக்க வைத்த தொடர் இது. இந்தப் பதிவின் மூலம் தான் வரவனையின் பிற பதிவுகளையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாயிற்று. அத்துடன் இந்தத் தொடர் மூலம் எங்கள் பா.க.சவிற்கு ஒரு நிரந்தரத் தலைவரும் கிடைத்தார்.
* அமானுஷ்ய வாசகி - நாமக்கல் சிபி
நான் முதன்முதல் பதிவுகளில் அடியெடுத்து வைத்த போது வந்த தொடர் இது. விறுவிறுப்பான நடையும், சஸ்பென்ஸான அத்தியாயமுமாக போன தொடரை மிக வேகமாக படித்து முடித்தேன். முடிவு தான் மனதுக்கு அத்தனை சாந்தியாக இல்லை. (ஆவி கதையில் சாந்தம் வேறா? :) ) ஏனோ சிபி இது போல் இப்போதெல்லாம் எழுதுவதில்லை.. பேசாம, இன்னுமொரு அமானுஷ்ய தொடர் போட வேண்டியது தானே?! ஆவிகள் உலகம் உங்களுக்கு உதவும் ;)
* நேரில் வந்து சந்தித்த பதிவர் - கோவி கண்ணன்
உருக்கமான ஒரு பதிவர் சந்திப்பு.. பொதுவாக காமெடியும் கலாட்டாவாகவுமே பதியும் சந்திப்புகளைக் கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக பகிர்ந்துள்ளார் கோவி.
* ஜோதிடத் தொடர் - தருமி
ஜோதிடம், எண்கணிதம், வாஸ்து என்று பக்கம் பக்கமாக பிரித்தெடுக்கும் இந்தத் தொடர் 2005லேயே தொடங்கப்பட்டிருந்தாலும் முடிவுக்கு வந்தது 2006இல் என்பதாலும், நான் இப்போது தான் படித்தேன் என்பதாலும் இந்த வருடத்தில் சேர்கிறது. தொடர் தொடும் பல பகுதிகளைப் பேச எனக்கு விஷயஞானம் இல்லாவிட்டாலும் இந்தப் பதிவின் காரணமாகவே தருமியை இணைய ஜோதிடர் என்று விளையாட்டாய் அழைக்கப் போய், நண்பர் ஒருவர் அவரிடம் தன் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய் நின்றதாக கேள்வி :)
* நானும் சாய்பாபாவும் - சதயம்
சாய்பாபா பற்றிய தனிப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும், சதயம் போன்ற தன்னை நாத்திகவாதி என்று சொல்லிக் கொள்பவரும் சாய்பாபா பக்தராக இருப்பது பற்றி எழுதிய இந்தத் தொடரை ஆவல் காரணமாகவே தொடர்ந்து படித்தேன். எழுதும் விதத்தில் அடுத்தப் பதிவைப் படிக்க வைக்கும் திறனும், சின்னச் சின்ன இடுகைகளும், என்று நல்லதொரு வாசிப்பனுபவம் இந்தத் தொடர் - பதிவுகள் சொன்ன கருத்துக்கள் முரணாக இருந்தாலும்.
* சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க - வெட்டிப் பயல்
தமிழ்ப்பதிவுகளை ஆனந்த விகடனில் பார்த்தது நட்சத்திரம் வெட்டிப்பயலால் தான். சாப்ட்வேர் இஞ்ஜினியர் பதிவுகள் மிகவும் தெளிவாகவும், சுலபமாகவும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருந்த ஒன்று. இது போன்ற தொடர்கள் இன்னும் எழுதலாமே..
இன்னும் செந்தழல் ரவியின் இன்னும் முடியாத திவ்யா கதை, கடல்கணேசனின் தொடர்ந்து கொண்டே இருக்கும் கப்பல் பயணங்கள், உஷாவின் "ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கதை", பெனாத்தலாரின் டாகில்லி கோடு, தமிழ்சசியின் சதுரங்க ஆட்டத்தில் தமீழீழம் போன்றவையும் தொடர்ந்து படித்ததுண்டு.. அவை பற்றி இன்னுமொரு சமயம்...
விட்டுப் போன முக்கியமான தொடர் காசியின் சில முயற்சிகள், சில அனுபவங்கள். தமிழ்மணம் உருவானது எப்படி என்பதைப் பற்றிய நல்லதொரு தொடர் இது. இன்று தமிழ்மணத்தில் இணைத்துக் கொண்டிருக்கும் அனைவரும் நிச்சயம் படித்துப் பார்க்க வேண்டியது..
(பதிவின் உரல் தெரியாமல் முதலில் எழுதியபோது குறிப்பிடாமல் விட்டுவிட்டேன்..)
Friday, December 15, 2006
சர்வேயல்
சர்வேசன் கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது வந்து சர்வே எடுத்துக் கொண்டே இருக்கிறார். பதிவர்களைப் பற்றிய வாக்கெடுப்பை அறிமுகப் படுத்தியதும் சர்வேசனின் பின்னூட்ட எண்ணிக்கை முதல், பதிவு தட்டப்படும் எண்ணிக்கைவரை எல்லாம், எல்லாம், எல்லாமே ஏறி விட்டது போலும்... :)
"நவம்பர் மாதம் பிளாக்கர் கணக்கு உருவாக்கிய சர்வேசன் அதற்குள் பதிவர்களை அளக்கும் அளவுக்கு எப்படி வந்தார்" என்று கேள்வி எழுப்புகிறார்கள் அமுகவினர். "சர்வேசனை நம்பலாமா?" என்று இன்னுமொரு அளப்பானே தொடங்கிவிட்டார் இம்சை அரசன்.
என் பங்குக்கு என் மனதில் இருக்கும் சந்தேகங்களையும் முன்வைத்துவிடுகிறேன்:
- பல்சுவை, ஆன்மீகம், சமூக அக்கறை, அரசியல் தவிர வேறு வகைகளே இல்லையா என்ன? யோசித்தால் அறிவியல் (வைசா, செந்தில் குமரன்..), மருத்துவம்(எஸ்கே, மங்கை, பத்மா..), கவிதை(ப்ரியன், ரசிகவ்,..), செய்திகள்(இட்லிவடை, ஊசி,..), பங்குவணிகம்(குப்புசாமி, தமிழ்சசி, சதயம்..), நகைச்சுவை(வெட்டிப்பயல், கைப்புள்ள..), புதிர்கள்(யோசிப்பவர்..), தொழிற்நுட்பம்(ஹை கோபி, ரவிசங்கர்..) இன்னும் எத்தனை பிரிவுகள் எட்டிப் பார்க்கின்றன?!
- இன்னின்னார் இன்னின வகைகளில் மட்டுமே அடங்குவார்கள் என்பதைத் தீர்மானிக்க மூவர் குழு என்ன அளவுகளைப் பயன்படுத்தியது என்பதைப் பற்றிய தெளிவான குறிப்பு காணோம். உதாரணத்திற்கு, தமிழ்சசியைப் பல்சுவையில் எப்படிக் கொண்டுவந்தார்கள் என்பதே புரியவில்லை. ஆழமான அரசியல் கட்டுரைகளையும், தீர்க்கமான வணிக ஆய்வுகளையும் கொடுக்கும் தமிழ்சசியின் கட்டுரைகளை பிற "நிஜமான" பல்சுவைப் பதிவர்களுடன் சேர்த்துப் பட்டியலிட்டால், "பல்சுவை" என்ற தலைப்புக்குப் பொருத்தமான பதிவர் என்று பார்த்து ஓட்டு போடுவதா? அல்லது சிறந்த என்பதைப் பார்ப்பதா?
- அரசியல்/ சமூகம் என்று தான் தமிழ்மணமே வகை பிரிக்கிறது. அரசியல் கட்டுரைகளையும் சமூக அக்கறையையும் எப்படிப் பிரிக்கிறார்கள்? எந்த அளவைகளில் இவற்றைத் தனித்தனியாக பார்க்க முடிகிறது? அரசியல் இல்லாத சமூகம் இருக்கிறதா என்ன? அத்துடன், சமூகம் குறித்தான விஷயங்களை எழுதும் பதிவர்களுக்கும் ஒரு அரசியல் பார்வை இருக்குமே. அப்படியான அரசியல் பார்வைகளும் சமூக அக்கறையுடனான அவர்கள் பதிவுகளில் கண்டிப்பாக வெளிப்பட்டிருக்கும். ஆக, அரசியலையும் சமூகத்தையும் எப்படிப் பிரிக்கிறீர்கள்?
- பல விஷயங்களையும் எழுதக் கூடிய, அரசியல் நையாண்டிப் பதிவுகளை அற்புதமாகக் கொடுக்கும் செல்வனை, சமூக அக்கறைப் பிரிவில் சுருக்குவது/out of place ஆக்குவது ஆகாதா?
- செந்தழல் ரவியின் வேலைவாய்ப்புப் பதிவை அசுரன், சபாபதி சரவணன் இவர்களின் சமூகம் குறித்த பதிவுடன் ஒப்பிடுவது கூட குயிலையும் மயிலையும் ஒப்பிடும் விதமாகத் தான் இருக்கிறது.
- ஒரு கட்சி சார்பாகவோ, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சித்தோ இருக்கக் கூடிய பதிவுகளை மட்டுமே அரசியல் பதிவாக முன்வைப்பதாக இருந்தால், We the people எழுதும் பல சமூகம் சார்ந்த பதிவுகள் எந்தக் கட்சியையும் முன்வைப்பதாக இல்லை என்பது தானே உண்மை?
- ஈழ அரசியலையும், சமூகத்தையும் பற்றிப் பேசும் தமிழ்நதி, அகிலன், வசந்தன் போன்றோருக்கு இடமே இல்லாமல் ஒரு சர்வே என்பது அடுத்த ஆச்சரியம்!
- ஆன்மீகப் பிரிவில், கண்ணபிரான் ரவிசங்கர், ஞானவெட்டியான் போன்ற ஆன்மீகப் பதிவர்கள் விட்டுப்போனது ஒரு குறை என்றால், தருமி போன்ற நாத்திகவாதிகளையும் அதில் சேர்த்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம். கடவுள் சிந்தனையாளர்களுடன், கடவுள் மறுப்புச் சிந்தனையாளர்களையும் சேர்ப்பது தான் நடுநிலையான வாக்குப் பதிவாக இருக்கும் என்று தோன்றுகிறது.
இன்னும் பல கேள்விகள்.. நேற்றே எழுதி இருக்க வேண்டிய இந்தப் பதிவை ஒரு நாள் தள்ளி இடுவதற்கு காரணம், சர்வே குறித்த கேள்விகளை, அதில் பெயர் வராத ஏக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளாக திரிந்துவிடக் கூடாதென்ற பயம். மேலும் இவற்றில் சில கேள்விகளை முன்வைத்த போது சர்வேசன் எழுதிய ஒரே பதில், "மூவர்குழுவுக்கு மதிப்பு கொடுத்து இதைச் செய்திருக்கிறேன்" என்பது தான்.
சர்வேசன் மிகவும் மதிக்கும் அந்த மூவர் குழுவின் பேரில், சர்வேயில் வாக்கு போட விரும்புபவர்களுக்கும் மதிப்பு வர வேண்டுமென்றால், அந்த மூவர் யாரென்று வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இந்த கருத்துக் கணிப்பில் உதவும் மூவர் குழுவின் அரசியல் பார்வை, அவர்கள் பயன்படுத்தும் அளவுகள் என்பதெல்லாம் தெரியாமல், எப்படி வாக்களிக்க முடியும்?
ஐயா, சர்வேசா, நேர்மையான தேர்தல் என்றால், தேர்தல் அதிகாரிகள் பேரைச் சொல்லும்மைய்யா...
Wednesday, December 13, 2006
கூட்டணி ஆண்டு 2006
தேவின் பார்வையிலான கூட்டு வலைப்பதிவுகளைப் பற்றிய செய்திகளைப் படித்தபின் எனக்கும் அது போன்ற ஒரு இடுகை எழுதும் ஆசை துளிர்த்துவிட்டது..
1. தமிழகத் தேர்தல் 2006 - ஜனவரி 2006.
வருடத் தொடக்கத்திலேயே தொடங்கப்பட்ட இந்தத் தளத்தை நான் பார்வையிட்டதே ரொம்பக் குறைவு. ஓட்டு போடுவதைத் தவிர தேர்தலுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று இருந்த ஆசாமியான என்னை, இந்தப் பதிவில் கவர்ந்தது, இதன் லோகோ தான் :). இடுகைகளை அதிகம் படிக்காத போதும் எனக்குத் தெரிந்து இன்றைக்கு இருக்கும் கூட்டு வலைப்பதிவுகளில் மிக அதிக இடுகைகள் உடையது இதுவாகத் தான் இருக்கும்... தேர்தல் முடிந்தபின்னும், செய்திக்கோவையாக தொடர்ந்த பாஸ்டன் பாலாவுக்கு மொத்த புகழும் என்று நினைக்கிறேன்.. வாக்கு கொடுத்தபடி, அமெரிக்க செனட் தேர்தல் வரை தொடருவார் என்று நினைத்தேன்.. ஏனோ அது நடக்கவில்லை ;)
2. சொல் ஒரு சொல் - ஏப்ரல் 2006
ஜனவரியில் தொடங்கப்பட்ட முதல் கூட்டு வலைப்பதிவை அடுத்த பதிவு ஏப்ரல் மாதத்தில் தான் சாத்தியமாகி இருக்கிறது. குமரன், ஜிராகவன் இருவரும் சேர்ந்து இயங்கிய சொல் ஒரு சொல், தமிழில் தாராளமாகப் புழங்கும் ஆங்கில, வடமொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொல் தரும் களமாக இயங்கத் தொடங்கியது.
குமரன், ஜிராவுடன் எஸ்கே, ஜெயஸ்ரீ என்று பின்னூட்டங்களில் ஒவ்வொருவராக சேர்ந்து கொள்ள நல்ல இடுகைகளாகவே இருந்தன ஒவ்வொன்றும். ஏனோ இந்தப் பதிவு இப்போது சுறுசுறுப்பாக இயங்கவில்லை என்று தோன்றுகிறது. சின்னதொரு சர்ச்சைக்குப் பின்னர் சொற்களின் வரவு கொஞ்சம் மந்தகதியில் இருப்பதாகவே தோன்றுகிறது. இன்னும் நிறைய சொல்லலாமே!
3. இயன்ற வரையிலும் இனிய தமிழில்... - ஏப்ரல் 2006
ஜீவாவின் தனிவலைப்பூவாகத் தொடங்கிய இந்த வெண்பா வடிக்கும் வலைப்பூ, ஏப்ரலில் இலவசக்கொத்தனாருடன் இருவராகி, கூட்டு வலைப்பதிவாகியது. வெண்பா வடிக்கும் விளையாட்டை மிகவும் உற்சாகமானதாக்கியது இந்தக் கூட்டுப் பதிவு. இந்த வலைப்பதிவின் மூலம் ஓகை நடராஜன், ப்ளோரைப் புயல் என்று (அப்போது) அதிகம் வலையுலகில் நடமாடாத நண்பர்களும் வெண்பாக்களால் வெளிவர வாய்ப்பாயிற்று.
வெண்பா அந்தாதி விளையாடிய பொழுது, மரபுக் கவிதைகளைப் பற்றிய அச்சம் விலகி, நாமக்கல் சிபி, பெருசு, கெக்கே பிக்குணி என்று கூட்டம் சேர்ந்ததைக் கண்டுகொள்ளாமல் விட்டதில் இப்போது கொஞ்சம் சிதறித்தான் போய்விட்டதென்று தோன்றுகிறது. ஜீவாவும் கொத்தனாரும் இன்னும் ஈற்றடிகள் கொடுத்து வெண்பா வடிக்க வந்தால் நலம்..
4. வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் - ஏப்ரல் 2006
கூட்டு வலைப்பதிவுகளின் பொற்காலமான ஏப்ரல் 2006இல் தொடங்கிய மற்றொமொரு கூட்டுப்பதிவு வாலிபர் சங்கம். ஆங்காங்கே தனித்தனியாக கைப்புள்ள, தேவ், சிபி என்று விளையாடிக் கொண்டிருந்தவர்கள் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் கூடிக் கும்மி அடிக்கக் கட்டிய பதிவு. விளையாட்டுப் பதிவுகளாகவே இட்டு, வருட முடிவுக்குள் நூறு பதிவும் கண்டுவிட்ட குழுமத்தில் இருந்தவள் என்ற முறையில், இந்தக் கூட்டு வலைப்பதிவின் வெற்றியில் மிக முக்கிய பங்கு தேவுக்குத் தான். அவ்வபோது இடுகைகள் இடுவதில் சுணக்கமும், பல்வேறு வேலைகளும் என்று மக்கள் தொலைந்து போகும் போதெல்லாம் உசுப்பிவிட்டு பதிவிடத் தூண்டி, தமிழ் வலைப்பதிவுகளிடையில் எப்போதும் எல்லாருக்குமான சிரிப்பு வலைப்பூவாக இதைக் காப்பாற்றி வருவதில் தேவின் பங்கு கொஞ்சநஞ்சமல்ல. அதே போல், வ.வா.சங்கத்தின் நற்பெயருக்கு முக்கிய காரணி, கைப்புள்ள. சாம்பு முதல் கோவாலு வரை யார் வம்பிழுத்தாலும் நிதானம் தவறாமல், சிரிப்பை மட்டுமே முதல் நிலையில் வைத்துச் சங்கத்தைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் கைப்பு, "ரொம்ம்ம்ம்ம்ப நல்லவருங்க.. " ;)
மாதா மாதம் அட்லாஸ் வாலிபர், நூறாவது பதிவுக்கு பாஸ்டன் பாலா, கலைவாணர் பிறந்த நாளுக்கு தருமி என்று புதிய புதிய வருத்தப்படாத வாலிபர்களையும் அவ்வப்போது சங்கத்தில் காண முடிவது இன்னும் சிறப்பு. புது வருடத்துக்கு யார் வருவாரோ? ;)
வாலிபர்சங்கத்தில் என்னை மிகவும் கவர்ந்தது நிறைய தகவல்கள் இருந்தும் உறுத்தாத வார்ப்புரு. தொடர்ந்து கலக்குங்க...
5. திராவிட தமிழர்கள் வலைத்தளம் - மே 2006
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்ட இன்னுமொரு தளம் திராவிடத் தமிழர் வலைத்தளம். தேர்தலுக்குப் பின் உருவான இந்தத் தளத்தின் கட்டுரைகள், கொள்கை விளக்கக் கவிதைகள், திராவிடக் கருத்தாக்க பயிற்சிப் பட்டறைகள், சுலோகன் போட்டிகள் என்று களைகட்டிக் கொண்டே இருக்கிறது.
இன்னமும் அதிகமான எதிர்பார்ப்பு இந்தத் தளத்தின் மீது உள்ளது என்பது உண்மைதான்..
6. தமிழ்ச்சங்கம் - ஆகஸ்ட் 2006
இரண்டுமாத இடைவெளிக்குப் பின் மீண்டும் குழுப்பதிவுகள் துவக்கவிழாவைத் தொடங்கிவைத்தது தமிழ்ச்சங்கம். சங்கத்தின் கவிதைப் போட்டியும் அதன் முடிவுகளும் பரபரப்பானதாக இருந்தாலும் இன்னம் முழுமையான செயல்பாட்டுக்கு வராத சங்கமாகவே தோன்றுகிறது.
கதை/கட்டுரை/கவிதைப் போட்டிகளை மாதமொருமுறையோ, காலாண்டு ரீதியாகவோ நடத்திக் கொண்டே இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. தமிழ்ச்சங்கத்தை நிறுவிய இளா பதிவுகளை விட்டு வெளியேறுவதாக அறிவித்திருக்கும் இப்போது, இந்தக் கூட்டு வலைப்பதிவின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டிய ஒன்று.
7. சென்னப்பட்டணம் - ஆகஸ்ட் 2006 சென்னை தினத்தை ஒட்டி துவங்கப்பட்ட மற்றுமொரு குழுமப் பதிவு சென்னப்பட்டணம். வ.வா.சங்கத்தின் தூண்டுகோல் தேவ் என்றால் சென்னப்பட்டினத்தில் பாலபாரதி. நெறிப்படுத்த மா. சிவகுமார். "சொல் ஒரு சொல்" போலவே, சமீபத்தைய சர்ச்சைகளுக்குப் பின்னர் கொஞ்சம் சுணக்கம் கண்டிருக்கும் சென்னப்பட்டினம் புது வருடத்தை ஒட்டி மீண்டும் உயிர்பெற வேண்டும்.
8. சக்தி - ஆகஸ்ட் 2006
வலைப்பதிவுகளில் பெண்களை மையப்படுத்திப் பிரச்சனைகள், பொதுப்படையான விமர்சனங்கள் அதிகரித்த காலத்தில், அவற்றை எதிர்கொள்ளும் விதமான பதிவாக வந்தது சக்தி. பல தளங்களில் பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளை அவதானித்துக் கொண்டிருக்கும், அது போன்ற பெண்களுக்கு உதவிக் கொண்டிருக்கும் பத்மாவும் செல்வநாயகியும் மதியுடன் இணைந்து எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டு வலைப்பதிவில் கட்டுரைகள் பொறுமையாகவும், ஆழமாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
வலையுலகில் கூட பெண்களை இன்னும் புலம்பும் நிலையில் வைத்திருக்கும் சமுதாயத்தில்(நன்றி: இட்லிவடை) இது போன்ற வலைப்பதிவுகள் தேவையாக இருக்கின்றன.
9. முருகனருள் - செப்டம்பர் 2006
முருகன் மேல் பற்று கொண்ட ஆன்மீகவாதிகளுக்கான குழுத்தளம் முருகனருள். முருகன் பாடல்களைச் சேகரிக்கும் இந்தத் தளத்தில் பாடல் வரிகள் மட்டுமல்லாமல் பாடலைக் கேட்க சுட்டிகளும் கொடுக்கப் படுகின்றன. பாடல்களைத் தாண்டி உலகெங்கிலும் உள்ள முருகன் கோயில்களைப் பற்றியும் இதில் எழுதத் தொடங்கலாமே!
10. விக்கிபசங்க - அக்டோபர் 2006 சமீபத்தில் தொடங்கி சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் மற்றுமொரு குழுத்தளம் விக்கிபசங்க. என்ன கேட்டாலும் சொல்வதாகச் சொல்கிறார்கள்.
இடுகைகள் அனைத்தும் மிக மிகத் தெளிவாகவும் பயனுள்ளவையாகவும் உள்ளன. பின்னூட்டப் பெட்டியை அரட்டைக் களமாவதிலிருந்து காப்பாற்றி வந்தால், இன்னும் அருமையான தளமாகும் வாய்ப்பிருக்கிறது என்பது என்னுடைய எண்ணம்.
11. தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம் - டிசம்பர் 2006
தற்போதைய நிலவரப்படி இந்த வருடத்தின் கடைசி குழுப்பதிவாக இருக்கும் இந்தப் பதிவு, புதிதாக பதிவெழுத வரும் வலைஞர்களுக்கு உதவிப் பக்கமாக உருவெடுக்க இருக்கிறது. கொஞ்சங் கொஞ்சமாக பதிவுகள் தொடர்பான எல்லாமும் இங்கே கிடைக்கும் நிலை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். இன்னும் முழுமையாக முறைப்படுத்தப்படாத இந்த உதவிப் பக்கம் சீக்கிரமே நல்லதொரு பக்கமாக உருவாகும் என்று நம்புகிறோம்.
- பதினோரு கூட்டு வலைப்பதிவுகள்,
- இன்னமும் ஒரு சில அதிகம் செயல்படாத குழுப்பதிவுகள்,
- தமிழ்வெளி போன்ற ஆரம்பித்து தொடராமல் போன வலைப்பதிவு வார இதழ்கள்,
- நண்பர்களின் உதவியுடன் செயல்படும் செந்தழல் ரவியின் வேலைவாய்ப்பு பதிவுகள்
கருத்துத் தளங்களில் வேறுபாடுள்ள பதிவர்களும், வ.வா.சங்கம், விக்கிபசங்க, ப்ளாக் உதவி போன்ற முயற்சிகளுக்காக ஒன்று சேரும் பொழுது பதிவர்களுக்கிடையிலான நட்பும், புரிதலும் பெருகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. குழுப்பதிவுகளில் இன்னும் ஈடுபடாத நண்பர்களும் இனியும் சில குழுப்பதிவுகளில் சேர்ந்து இயங்குதல் தமிழ்ப்பதிவுலக ஆரோக்கியத்தை நிச்சயம் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது.
வாழ்க கூட்டணி ஆட்சி ;)
Wednesday, November 29, 2006
பதிவுலகில் பெண்கள்?!
"தமிழ்ப் பதிவுலகுல பார்த்தீங்கன்னா பொன்ஸ், பெண் பதிவாளர்கள் ரொம்ப குறைவு"
- எழுத வந்த ஐந்தாம் மாதம் பல்வேறு காரணிகளால், 'மூட்டை கட்டலாம்' என்று நான் முடிவு செய்திருந்த போது மதி சொன்னது எனக்கு.
உண்மை தான்; பதிவுலகில் பெண் பதிவாளர்களின் எண்ணிக்கைக் குறைவாகத்தான் இருக்கிறது. அதிலும் தொடர்ந்து இயங்குபவர்கள் மிகமிக சொற்பம். வீட்டளவில் பேசுவதற்கே போன நூற்றாண்டு வரை அனுமதி மறுக்கப்பட்ட பெண்கள், பொது ஊடகங்களில் பேச இன்னும் அதிகமான தடைகள் வந்து உட்கார்ந்து கொள்கின்றன.
ஆபாச வார்த்தைகளில் திட்டுபவர்கள் ஒருபக்கம் என்றால், வெளிப்படையாக புரியாதபடி நக்கல் தொனிகளில் விரும்பத்தகாத விமர்சனங்கள் இன்னொரு பக்கம். இன்னும் சிலர் தைரியமாக எல்லாருக்கும் புரிகிற விதத்திலேயே, "உங்களைப் பற்றி மற்றவர்கள் சொல்லி இருப்பதை எல்லாம் படிக்கையில் உங்களைப் பார்க்கும் ஆசை வந்துவிட்டது" என்று எழுந்து நிற்கும் வக்கிரம்.
வீட்டில் சொல்லாமல் எழுதும் பெண்களும் இங்கே இருக்கிறார்கள்; சொன்னால், ஒரு பெண் எதைப் படிக்கவேண்டும் என்பதையே கணவர்கள் தீர்மானிக்கும் இந்தக் காலத்தில், எதை எழுதுவது என்பதிலும் தலையீடு வருவதை விரும்பாமலோ, எழுதுவதிலே தலையீடு வருமோ என்று பயந்தோ! கோலம், யானைகள், சமையற்குறிப்பு போன்ற தலைப்புகளில் இன்னும் அதிகம் கூட எழுதுங்கள். ஆனால், கற்பு, கத்திரிக்காய், சந்தித்த பாலியல் வக்கிரங்கள், வேலைக்குப் போகும் பெண்களின் உண்மையான பிரச்சனைகள் என்று தொட்டுப் பாருங்கள், அப்போது தெரியும் உங்கள் எழுத்தைத் தீர்மானிப்பது யார் என்று!
எழுதுபவர்களை ஊக்குவிக்கிறேன் பேர்வழியென்று, வக்கிரமாக "நீங்க பெண் என்கிறதால் தான் அதிக பின்னூட்டம் வந்து விழுது!" என்று சொல்லி, எழுத்தைக் கீழ்மைப்படுத்தும் 'நண்பர்கள்' இருக்கிறார்கள். எனக்குக் கூட அப்படியான பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன.
பெண்ணியம் என்றாலே "ஆணுக்குப் பெண் நிகர்னு சொல்ல வந்திருக்கீங்க, எதுக்கு பெண்ணுன்னு தனித்துச் சொல்றீங்க?" என்ற கேள்வி எழுகிறது. அதே, "நாம் பயன்படுத்தும் செல்போன், ஸ்கூட்டி எல்லாம், பெண்களுக்கும் வாங்கிக் கொடுத்துட்டோம்" என்று பிரித்துச் சொல்பவர்களிடம், பிரிந்து நின்று தானே கேட்க வேண்டியிருக்கிறது?
"எங்களால எழுத வரலைங்கிறீங்க, நாங்க உதவி செஞ்சாலும் அதைச் சொல்லிக்கக் கூடாதுங்கிறீங்க, அப்போ பிரச்சனைன்னு வந்தா எங்களைக் கேட்கக் கூடாது". ஆகா, பிரச்சனைகளில் உதவிக்கு வராமல், தாமாக சரி செய்து கொள்பவர்களுக்கும் தான் முத்திரைகள் தயாராக இருக்கின்றனவே. "உங்க பிரச்சனையை எப்படிச் சமாளிச்சி தீர்வு பெற்றீங்கன்னு எங்களுக்குத் தெரியாதா?!" என்ற எகத்தாளங்கள் குதித்து வந்து விடுகின்றன.
எல்லாவற்றிற்கும் மேல், வெளிச்சமூகத்தில் படிப்பறிவில்லாத மக்கள் தாம் ஆண்-பெண் நட்பைக் கொச்சைப்படுத்துகிறார்கள் என்றால், படிப்பறிவாளர்கள் மிகுந்த பதிவுலகிலும், வேறெந்த ஆயுதமும் பலன் தராதவுடனே, பெண் பதிவாளருக்குத் தொடர் நண்பராக இருக்கும் ஆண்களை அல்லது, ஆண் பதிவர்களின் தோழியைச் சேர்த்து வம்பிழுப்பது சுலபமான உத்தியாகப் பயன்படத் தொடங்கிவிட்டது.
எங்களை நாங்களாக இருக்க விடுங்கள், "நீ இப்படி இருப்பதற்கு நான் தான் காரணம்" என்று ஆதிக்க உணர்வில் பேசுவதையும் நிறுத்திவிட்டு.
இறுதியாக, பெண் பதிவர்களையும் சக மனிதர்களாகப் பார்க்கும் எந்த நண்பரையும் இந்தப் பதிவு சாடவில்லை. இந்தக் கட்டுரையின் பேசுபொருள் மீது உங்களுக்குக் கோபம் வந்தால், உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்யும் காலம் வந்துவிட்டது என்றுதான் பொருள்.
தொடர்புள்ள பதிவுகள் :
1. அயனுலகம்
2. நிலா
3. இட்லிவடை
4. சக்தி
Thursday, November 23, 2006
சிவகுமார்! இது நியாயமா?
நான் எழுந்து வரும் போது அம்மா சமையலறையில் வழக்கம்போல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டோ, காய் நறுக்கிக் கொண்டோ இருந்தாலும் அப்பா பொதுவாக அன்றைக்கு எந்த அறையைத் தேர்வு செய்யலாம் என்று முடிவெடுத்துக் கொண்டிருப்பார். எந்த அறை என்று தேர்வானதும், என்னை அழைத்து உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தொடங்கிவிடுவார்.
"இதோ இந்த பீரோ இருக்கில்ல, இதை பக்கத்து ரூமுக்கு மாத்திடுவோம். ஹாலில் இருக்கும் டீவியை, பெட்ரூமுக்கு அனுப்பிடலாம். சமையலறையில் இருக்கும் பிரிட்ஜ் இந்த டீவி இடத்துக்கு வரட்டும்." அப்பா சொல்லிக் கொண்டே போக, நானும் தங்கையும் ஒவ்வொன்றாகச் செய்ய உதவுவோம்.
ஞாயிற்றுக்கிழமை மதியம்போல் சமையல் தயாராகிச் சாப்பிடத் தொடங்கும்போது, வீட்டில் உள்ள எல்லாப் பொருட்களும் இடம் மாறியிருக்கும். வண்டிகள் எல்லாம் துடைக்கப்பட்டு வெளியில் நிறுத்தப்பட்டிருக்கும்.
சிலநாட்கள் வீட்டை மாற்றுவது போரடித்தால், குளிர்சாதனப்பெட்டியின் உள்ளிருக்கும் பொருட்களை எடுத்துவிட்டுத் துடைத்து அங்குமிங்குமாக மாற்றிவைப்போம்.
அலங்கார அலமாரிப் பொருட்களும் எங்களின் இந்தப் படையெடுப்புக்குத் தப்பித்ததில்லை.
இதெல்லாம் தவிர அவரவர் துணியலமாரியையும், புத்தக அலமாரியையும் கூட ஞாயிற்றுக் கிழமைகளில் துடைத்து வைத்துவிடவேண்டும்.
ஒவ்வொரு வாரமும் புதிய வீட்டில் இருப்பது போலான தோற்றத்தை இந்த மாற்றங்களே கொடுத்துவிடுவதால், இன்றுவரை வீடுகளும் அத்தனை போரடித்ததாகத் தோன்றியதில்லை.
இருந்தாலும் ஒவ்வொரு ஞாயிறும் எனக்கும் அப்பாவுக்கும் இடையில் ஒரு போராட்டம் தான்.
"இப்போ எதுக்கு இதை மாத்தணும்ங்கிறீங்க?"
"ஒரு விஷயம் இருக்கிற இடத்தில் இருந்தாப் பிடிக்காதே உங்களுக்கு"
"வீட்டோட அழகே போச்சு"
என்று நாங்களும்
"அந்த கத்திரிக்கோல் இங்க தானே வச்சிருந்தேன். அதை எடுத்து எங்க வச்சார் உங்கப்பா?"
என்று வாரம் முழுவதும் ஒவ்வொன்றாகத் தேடும் அம்மாவும், போனவாரத்துக்கு இந்தவாரம் கட்டில் கொஞ்சம் நகர்ந்திருப்பதால் வீடு பெருக்கும்போது கவனமில்லாமல் காலில் இடித்துக் கொண்டு தன் தாயாரை அழைக்கும் வேலைக்கார அம்மாவுமாகச் சேர்ந்து அப்பாவுக்கு வாரம் பூராவும் ஞாயிற்றின் பின்விளைவுகளைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயமாகிவிடும். அப்படியும் சிரித்துக் கொண்டே அதைக் கடந்து போய்விடுவார் அப்பா.
பொதுவில் வீட்டுப் பொருட்களை மாற்றுவது போல் தோன்றினாலும் இந்த வேலைகளினால்,
1. குடும்பம் முழுவதும் ஒரே வேலையில் ஈடுபடுவதன் மூலம் ஒன்றாக செலவழிக்கும் அந்த நேரமும்
2. அரிசிமூட்டை முதல் பெரிய கட்டில் வரை அங்குமிங்கும் நகர்த்த உதவுவதால் உடற்பயிற்சிக்களமாகவும்
3. தொலைக்காட்சிகளிலும் சினிமாக்களிலும் வீணாகாத ஒரு ஞாயிறும்
4. ஏதாவது பாட்டுப் பாடிக் கொண்டோ, பேசிக் கொண்டோ செய்வதால், மனமும் லேசாகும் ஒரு மனப் பயிற்சியாகவும்..
என்று எங்களுக்கு லாபங்களும் நிறைய தான்.
என்ன திடீர்னு வார நாளிலேயே ஞாயிற்றுக் கிழமை நினைவு என்று கேட்கிறீர்களா?
சிவகுமாரின் பதிவில் ,
பெண் வலைப்பதிவாளர்களில் சிலர் தமது வீட்டை அலங்கரிப்பது போல பார்த்து பார்த்து அழகு படுத்தி வைத்திருக்கிறார்கள். சில பதிவுகளின் அலங்காரம் வாரத்துக்கு ஒரு தடவை மாறி விடும்
என்று சொல்லியிருப்பதைப் பார்த்தவுடன், அப்பாவிடம் "இப்போ இதை எல்லாம் மாத்தவச்சி, எங்களை வேலை வாங்கி என்னதான் சாதிச்சீங்க?" என்று சும்மாவே கடிந்து கொண்டது நினைவுக்கு வருகிறது.
வலைப் பதிவு அடைப்பலகைகளும் மாறிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற இந்த உணர்வும் என் ஜீனில் உள்ளதோ?
(சிவகுமார், இருந்திருந்து பெண்வலைப்பதிவர்களுக்கு மட்டும் இந்த எண்ணம் உள்ளது என்பது போல் எழுதி இருக்கீங்களே... தேவ் பதிவெல்லாம் பார்த்ததில்லையா.. )
Saturday, August 12, 2006
பட்ட காலிலேயே படும்
- சென்னையின் இப்போதைய நிலையை வேறு எப்படிச் சொல்வது?
1, 2, 3, 4 : இவற்றைத் தொடர்ந்து நானும் சென்னைக்கு வரும் அறிவிப்பு.
எப்படியும் இப்போ இருக்கும் நிலையில் வந்து சேருவது கஷ்டம் என்று மகிழும் மக்களே, நான் பிரிட்டன் வழியாக வரவில்லை.. எனவே சீக்கிரமே வந்து சேர்ந்துவிட வாய்ப்புகள் உள்ளன.. எச்சரிக்கையாக இருக்கவும்.
பாபாவின் செய்தித் தொகுப்பைப் பார்த்தால், நல்ல adventurous ட்ரிப்பாக இருக்கும் போல் தோன்றுகிறது.. (வரும்போதே என்னை ஒரு மாதிரி பார்த்து, நாலு முறை சோதனை போட்டு அனுப்பினாங்க.. இப்போ சுத்தம் :)
Thursday, August 10, 2006
அருளுக்கு நன்றி!
என்னடா, எல்லாரும் பாலபாரதிக்கும் கௌதம் ஜிக்கும் நன்றி சொல்லிகிட்டிருக்காங்க, இது புது நன்றியா இருக்கேன்னு பார்க்காதீங்க..
குங்குமத்தில் போடப் போகிறோம்னு கௌதம் சொன்ன போதோ,
அச்சில் வந்திருக்குன்னு பாலா அறிவிப்பு பார்த்த போதோ,
"பொன்ஸ் உங்க கவிதை வந்திருக்கு" என்று சிவகுமார் மடல் பார்த்த போதோ ஏற்படாத மகிழ்ச்சி,
அதை அருள் ஸ்கேன் செய்து அனுப்பியதைப் பார்த்த போது எனக்கு பயங்கர சந்தோஷமாகிடுச்சு.
அதான்.. நேரம் இல்லாத நேரத்திலும் இந்த நன்றி போஸ்ட்..
அருள்! நன்றி, நன்றி, நன்றி!
Thursday, August 03, 2006
ஓசிப் பதிவு
ஆகஸ்ட் முதல் ஞாயிறு: நண்பர்கள் தினம்..
இந்த நண்பர்கள் தின வாழ்த்துக்களை உங்களுக்கு வழங்குவோர்..
- வீர மங்கை கவிதாவும், அவர்தம் கலங்காத் தோழி அனிதாவும்
- சங்கப் போர்வாள் தேவ்
- இணையத்தின் ஒன்லி ஒன் பத்திரிக்கை ரிப்போர்ட்டர் இட்டிவடை
- திடீர்ப் பின்னூட்ட ஜாம்பவான் கோவி கண்ணன்
- இணைய நண்புக்கு இலக்கியம் படைக்கும் சிறில் அலெக்ஸ்
- "உயிர்" நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லும் ராசுக்குட்டி
- புதிய பதிவர் அனிதா
வேற யாராவது விட்டுப் போச்சுன்னா சொல்லுங்க.. சேர்த்துடலாம் ;)
பி.கு: ஐம்பதாவது பதிவுக்கு ஏதாச்சும் போடணும்னு யோசிச்சிகிட்டே இருந்தேன். என்ன போடுறதுன்னு தெரியலை. அதான்!!
பதிவு போட விஷயம் இல்லைன்னா என்ன பண்ணுவோம்?!!!
கரெக்ட்.. படம் மாத்திடுவோம்ல..
கொட்டிய பொன்னைக்
கொண்டோடியது
யானை
ஓடிய கால்கள்
ஓய்வெடுக்க வந்தது..
ஆடியபடி..
என் பாய்மரம்..
(இப்படியே மிதந்துகிட்டே ஊருக்குப் போனா நல்லாத் தான் இருக்கும்.. எப்போ போய்ச் சேருறது!!!)
Thursday, July 27, 2006
வாத்தியாருக்காக - விட்டுப் போன யானைகள்
___________________________________________________
நாடக ஆசிரியர்கள் சந்தித்துக் கொண்டால்...
இளவஞ்சி வாத்தியார் படம் பிடிக்காம விட்டுப் போன யானையைப் போடலாம்னு தான் வந்தேன்.. ஆனா, நானும் ஊர்விட்டு ஊர்வந்து சொந்தக்காரவங்களைப் பார்த்தேன்னு பின்ன எப்படிச் சொல்றதாம்?! அதான் மத்தவங்களையும் போட்டாச்சு..
இந்தப் போட்டோவுக்கெல்லாம் என்ன கமென்ட் கொடுக்கலாம்னு யோசிச்சா, ஒண்ணும் சட்டுன்னு தோணலை.. சரின்னு தமிழ்மணத்தில் இன்று வந்த இடுகைகளின் தலைப்பை எடுத்து கொடுத்தாச்சு.. உள்ளே என்ன இருக்குன்னு நான் படிக்கலை.. ஏதாச்சும் இடுகையோட உள்ளடக்கம் பத்தி விவகாரமா கேட்டா நான் எஸ்கேப்..
எல்லாம் சரிதான், யானைக்கு மட்டும் ஏன் கமென்ட் இல்லைன்னு கேட்கறீங்களா? யானையை எல்லாம் கமென்ட் அடிக்க மனசு வரலை. பொதுவா விசாரிச்ச வகையில் என் ப்ரோபைலில் இருக்கும் யானையை எல்லாக் குழந்தைகளுக்கும் பிடிச்சிருக்காம். ஆக, யானைகள் குட்டி தேவதைகளுக்குப் பிரியமானவை (அட என்னையும் சேர்த்து தான் ;) ).. கமென்ட் அடிச்சா தேவதை சாபத்துக்கு ஆளாய்டுவீங்க ;)
Wednesday, June 28, 2006
நிலவுக்குப் போகும் நட்சத்திரம்
அதனால், ரசிகவ் ஞானியார் பற்றி எனக்குத் தெரிஞ்சதை ஒரு பதிவாகப் போடலாம் என்று பார்க்கிறேன்.. அப்படியே எனக்கு ரொம்ப தெரியும்னு நினைச்சி படிக்காதீங்க.. நான் வந்த நாளிலிருந்து(அதிகமில்லை ஜென்டில்மேன், March 2006 தான்) ஞானியார் என்ன புதுப் பதிவு போட்டாலும் படிச்சிடுவேன். அந்த மாதிரி ஒரு தொடர் வாசகி என்னும் முறையில் எனக்குத் தெரிஞ்சதை இங்கே பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
நிலவு நண்பன் பக்கங்களில் எல்லாக் காலத்துக்கும், எல்லாப் பொருளிலும் கவிதைகள் இருப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். அப்பாவுக்கான அவரது கடிதம் மிகச் சமீபத்தில் மீள்பதிவாகி வந்தது.
காதல் கவிதைகள் பற்றிக் கேட்கவே வேண்டாம்..
இலங்கைத் தமிழர்களுக்கான அவரது கவிதையும் இப்போதும் பொருந்தும் ஒன்று (இனிவரும் காலங்களில் பொருந்தாமல் போகட்டும்! )
எந்தக் காரணங்களுக்காகவோ தனி வலைப்பூ தொடங்கிப் பார்த்திருக்கிறோம். சமூகத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தனி வலைப்பூ தொடங்கியது ஞானியார் ஒருவர் தான் என்று நினைக்கிறேன். அவரது விதைகள் என்னும் வலைப்பூ மூலம் பல உயிர்களைப் பிழைக்க வைத்தது, வைத்துக் கொண்டிருப்பது எத்தனை பாராட்டினாலும் தீராது..
அட, மாப்பிள்ளையா லட்சணமா சமையலும் பழகி இருக்காருங்க..
கவிதைல நகைச்சுவை குறைவுன்னு யாருங்க சொன்னாங்க? இதைப் பார்க்கச் சொல்லுங்க..
நான் கொடுத்த அறிமுகத்தைப் பார்த்துட்டீங்க.. நிலவு நண்பன் தானே தன் ஒரு வருட வலைப் பயணத்தைத் திரும்பிப் பார்த்த நினைவுகள் இங்க இருக்கு. அதையும் பார்த்துடுங்க..
ஞானியார் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு பதிவுகளை மட்டும் சொல்லிட்டு இந்தப் பதிவை முடிச்சிக்கிறேன்:
* இணையத்தில் கவிஞர் பெயரில்லாமல் வலம் வந்த காலத்திலேயே இந்தக் கவிதை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நம்ம நிலவு நண்பன் எழுதியது என்றவுடன், இன்னும் அதிகம் விரும்பிய கவிதையாகி விட்டது. இதுவரைக்கும் பார்க்கலைன்னா, படிச்சி பாருங்க. நல்ல கவிதை.
* அடுத்து எனக்குப் பிடிச்சது அவரோட காதலர் தினப் பதிவு. இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள். உரைநடைப் பதிவுல இத்தனைக் கவிதையா எழுத முடியுமா என்ன? அது சரி, காதலைப் பத்தி நிலவு நண்பன் எழுதினால் கவிதை வராமல் எப்படி? இந்தப் பதிவுல எங்கயோ ஞானியாரோட நிலவைப் பத்தியும் க்ளூ இருக்கு.. எனக்குத் தான் புரியலை.. உங்களுக்கு? :)
கடைசியா ஊருக்குப் போவதற்கு முன்னால், ஆறு பதிவு போல ஒரு ஐந்து பதிவு போட்டார்.. என்னைத் தான் அடுத்ததா அஞ்சு கேள்விக்கும் பதில் எழுதித் தொடரச் சொன்னார்..
ஞானியார், நமக்கு கேள்வி கேட்கத் தான் தெரியும்.. பதில் சொல்றதுன்னா. "ஹி ஹி" தான்.. அதான் இத்தனை பெரிய பதிவு போட்டிருக்கேனே.. அந்தக் கேள்வியெல்லாம் சாய்ஸ்ல விட்டிரலாமா? :))
நண்பர்களே, தமிழ்மண நட்சத்திரமான நிலவு நண்பனுக்காக நான் இப்போ ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன்.. இந்த ஒரு வாரம், மாப்பிள்ளை சார் ஊரில் இல்லாததால், ஞானியாரைத் தெரிந்த மற்ற நண்பர்கள் இது போல அவரவருக்குத் தெரிந்ததை, ஞானியார் பதிவுகளில் ரசித்ததை, விதைகள் மூலம் சாத்தியமான உதவிகளை, எது பற்றி வேண்டுமானாலும் எழுதுங்க..
தினசரி ஒரு பதிவுன்னு எழுதினா நல்லா இருக்கும்.. தமிழ்மண நண்பர்கள் சார்பா ஞானியார்-ஜஹானுக்கு நமது திருமணப் பரிசு.. இந்தப் பதிவெல்லாம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சம் வெட்டி ஒட்டி ஒரு கார்டுல போட்டு கல்யாணத்துக்கு நேர்ல போகிறவங்க அவர் கையில் கொடுக்கலாம்.. - சஜஷன் தான் - என்ன சொல்றீங்க?
Thursday, June 08, 2006
நெற்றிக்கண் திறப்பினும்...
தருமியோட "நான் ஏன் மதம் மாறினேன்" ஏழு பாகமும் படிச்சதும், நல்லா ரெஸ்ட் எடுத்து தூங்கி கிட்டு இருந்த மூளை(?! அட நம்புங்க.. இங்கயும் கொஞ்சமே கொஞ்சம் இருக்கு :)) நான் என்ன சொல்லியும் கேட்காம எழும்பி டக்குனு உட்கார்ந்திடுச்சு.. எவ்வளவு சொல்லியும் சமாதானமாகாம நம்ம சிறுமூளையும் பெருமூளையும் ஓவர் டைம் போட்டதுல, தருமி இன்னோரு பார்ட் மதம் மாறியதை விளக்கும் அளவுக்கு தொல்லையாய்டுச்சு..
ஏன் பதிவு போடலைன்னு கேட்கும் நூற்றுக் கணக்கான மகா ஜனங்களுக்கு (எல்லாம் ஒரு பில்டப் தான் :)) ஒரே ஒருத்தர் தான் தப்பித் தவறி கேட்டுட்டாரு):
இந்த பதிவைப் போய் பாருங்க.. தருமி வீட்ல கொஞ்ச நாளைக்கு நம்மளும் கோ ஹோஸ்ட்..
தர்ம அடி கொடுக்கணும்னு நினைக்கிறவங்களும் அங்கயே வந்து நல்லா போடலாம் :)[பிகு: வ.வா.சங்கத்துக்கும் இந்த தர்ம அடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. சங்கத்து மக்கள் அக்காவுக்கு என்னாச்சுன்னு பயந்து போய் வேப்பிலை அடிக்க பூசாரிகளை அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் :)]
Monday, May 29, 2006
துளசி அக்காவுக்கு தாங்க்ஸ்!!!!
நுண்ணலை அடுப்பில் துளசி அக்கா தந்த செய்முறைப்படி சாதம் தயார்.. !!!
அக்கா சொன்ன சமையற்குறிப்பு இதோ:
மைக்ரோவேவ் ரைஸ் குக்கர் வாங்கிரணும். 1 கப் அரிசிக்கு ரெண்டு கப் தண்ணி. நான் அவ்வளோதான் ஊத்தறேன். ஆனா இது ஜாஸ்மின் அரிசிக்கு. பாசுமதின்னா 3 கப்.
100% பவர்லே 4 நிமிஷம், 70% பவர்லே 4 நிமிஷம், 9 நிமிஷம் 59% பவர்,அப்படிப் போட்டாத்தான் தண்ணி வழியாது.
இதில் ரைஸ் குக்கர் மட்டும் நான் வாங்கவில்லை..
மற்றபடி அக்கா சொன்ன பவர்/நிமிடக் கணக்கு அப்படியே பின்பற்ற, மல்லிப்பூ போல உதிரி உதிரியான சாதம் தயார்.
அக்கா, உங்களுக்கு என் ஸ்பெசல் தாங்க்ஸ்!!!:)
என் நன்றிகளைத் தெரிவிக்க, பலூனுடன் யானையாரை நியூசிக்கு அனுப்பியுள்ளேன்.. :) .. ஏர்போர்ட்டிலிருந்து ரிசீவ் செய்துகொள்ளவும். கடப்பாறையை எடுத்துப் போய்டாதீங்க, பயந்து ஓடிடப் போறாரு :)
கொத்தனார், ஜிரா கவனிக்க: நானும் ஒரு சமையற்குறிப்பு பதிவு போட்டுவிட்டேன் :)
