Showing posts with label நுட்பம். Show all posts
Showing posts with label நுட்பம். Show all posts

Saturday, April 28, 2007

பதிவு மேம்பாட்டுக் கருவி பீட்டா அல்லது வெட்டியாய்ச் சுட்டவை

புரட்சிப் புரோக்ராம்மர் குழலி, கருவிப்பட்டை சேர்க்கும் பக்கத்தை வெளியிட்டதிலிருந்தே, அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். களத்துமேட்டில் நிறைய வேலை இருப்பதாக சொல்லியே நழுவிக் கொண்டிருந்ததால், நானே கொஞ்சநஞ்ச ஜாவா அறிவைச் சோதிச்சு பார்க்கிறதுன்னு இறங்கியாச்சு.

கணினியில் எனக்குப் பிடிக்காத மொழி என்றால் அது ஜாவா ஸ்க்ரிப்டிங் தான். HTML, ஜாவா ஸ்க்ரிப்டிங், சுலபமாக இருப்பதாலோ, அல்லது தனக்கு என்ன பிரச்சனை என்று தானே சொல்லத் தெரியாத குழந்தையாகவே இருப்பதாலோ, நான் முறையாக கற்காத மொழி என்பதாலோ, சுத்தமாக பிடிக்காது. இப்ப குழலி புண்ணியத்தில் அந்தக் கொடுமையையும் எழுதிப் பார்த்தாச்சு..

குழலியின் பழைய பக்கத்திலிருந்து நிரலி எடுத்து மேம்படுத்தி இருப்பது தான். மேம்பாடு என்றால், அதிலாவது ஏதாவது புதுசா செய்திருக்கிறேனோ என்று நினைத்துக் கொள்பவர்களுக்கு: அப்படியெல்லாம் புதிதாக ஒன்றுமில்லை. எல்லாம் சுட்ட பழங்கள் தான்

ஜெகத் எழுதி இருந்த நேரமும் நாளும் தமிழில் காட்டும் தமிழைசர் நிரலியை என் பதிவுக்காக இடும் போதே கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. முதலில் ஒன்றிரண்டை விட்டுவிட்டு, அப்புறம் சரி செய்து, என்று இரண்டு மூன்று முறை வார்ப்புருவை திருத்த வேண்டியதாகிவிட்டது. அதனால், இந்த தமிழ்ப்படுத்தும் நிரலியையும் குழலியின் கருவிப்பட்டை மேம்பாட்டுப் பக்க நிரலியில் சேர்த்துப் புதுப் பக்கம் ஒன்றை உருவாக்கி இருக்கிறேன்.

  • தமிழ்மணம் கருவிப்பட்டை சேர்த்தல்,
  • பழைய ப்ளாக்கர் பதிவுகளிலிருந்து வந்த ஒருங்குறிப் பின்னூட்டங்களைச் சரியாக்குதல்,
  • புது ப்ளாக்கரில் நாளும் நேரமும் தமிழில் காட்டுதல்,
  • தேன்கூட்டின் பின்னூட்ட திரட்டி நிரலியைச் சேர்த்தல்

- இவை மட்டுமே இன்று இந்தக் கருவியில் செய்யக் கூடியவை.

மேலும் செய்ய எண்ணி இருப்பவை:

  1. தன்னுடைய பதிவுகளில் தானே இடும் பின்னூட்டங்களை வேறு நிறத்தில் காட்டுதல் (author comment highlighting - என் பதிவில் வருவது போல்)
  2. முந்தைய இடுகை, அடுத்த இடுகை போன்ற ஆங்கில சுட்டிகளைத் தமிழாக்குதல்
  3. தீபாவின் நிரலி மூலம் யாஹூ சிரிப்பான்களைப் பதிவில் காட்டுதல்.

கருவிப்பட்டை மேம்பாட்டுப் பக்கத்தில், ஏதும் நுட்பச் சிக்கல்கள் இருக்கிறதா என்று நண்பர்கள்/பயனர்கள் கண்டறிந்து சொன்னால் உதவியாக இருக்கும். மேற்குறிப்பிட்டவை தவிர, "இதுவும் செய்யலாமே" என்று தோன்றும் வேறு மேம்பாட்டுச் சேவைகள் இருப்பின் அதையும் சொல்லுங்கள்.

Saturday, December 30, 2006

புது ப்ளாக்கருக்கு மாறலாம் வாங்க..

பழைய ப்ளாக்கர் பீட்டாவான இன்றைய ப்ளாக்கருக்கு மாறுவதில் உள்ள பிரச்சனைகள், பயங்கள் பற்றிய மணியனின் பதிவைப் பார்த்த பின்னால், இந்தப் பதிவை இடவேண்டும் என்று தோன்றியது. இந்தப் பதிவு பீட்டாவுக்கு மாறிய பின்னால் உங்களின் வார்ப்புரு மாற்றத்தைச் சுலபமாக்கும் பதிவு.

இதோ, பீட்டாவுக்கு மாறலாம் வாங்க...

பகுதி 1: வார்ப்புரு மாற்றம்
நிலை 1: உங்களின் பதிவை புது ப்ளாக்கருக்கு மாற்றும் முன்னர், உங்களின் பழைய வார்ப்புருவைப் படியெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

நிலை 2: புது ப்ளாக்கருக்கு மாறுங்கள் என்ற சுட்டி ஒன்று உங்களின் ப்ளாக்கர் கணக்கில் உட்புகுந்த உடனேயே தெரியும். அந்தச் சுட்டியைத் தட்டி அது கேட்கும் விஷயங்களைக் கொடுத்துவிட்டு, அப்படியே ஹாயாக இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தால், தானே உங்களின் பதிவு புது புளாக்கருக்கு மாறியபின் கூகிள் மடல் கணக்கிற்கு ஒரு மடல் வந்துவிடும்.

நிலை 3: இந்த முறை உங்களின் புது ப்ளாக்கர் பயனர் கடவுச் சொல் வழியே உட்புகுந்தால், உங்களின் பதிவுகள் ஏற்கனவே புது ப்ளாக்கருக்கு மாறி இருக்கும்.

நிலை 4: உங்கள் பதிவின் Layout அல்லது Template பக்கம் இது போல் காட்சி அளிக்கும்:




நிலை 5: இதில் "Customize Design" என்ற சுட்டியைத் தட்டி உங்களின் பழைய ப்ளாக்கர் வார்ப்புருவைப் புது வார்ப்புருவுக்கு மாற்றலாம் [ மாற்றினால் மட்டுமே புது ப்ளாக்கரின் பலவித நன்மைகள் உங்களுக்குக் கிடைக்கும்.]

நிலை 6: Customize Design இல் கீழ்காணும் Upgrade Your Template என்ற சுட்டி தெரியும். இதையும் தட்டுங்கள். உங்களின் பழைய வார்ப்புரு இல்லாமலே போய்விடும் என்றும் அதை வேண்டுமானால் திருப்பி எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது என்றும் ஒரு எச்சரிக்கை எட்டிப் பார்க்கும். "சரி சரி" என்று சொன்னால் புது ப்ளாக்கர் வார்ப்புருவுக்கு மாறிக் கொள்ளலாம்.



நிலை 7: புது ப்ளாக்கர் வார்ப்புருவும் பார்ப்பதற்கு பழைய ப்ளாக்கர் வார்ப்புருக்கள் போலத்தான் இருக்கின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்ந்துகொண்டு அதன் பின் Save Template என்ற பட்டனைத் தட்ட வேண்டும்.
நிலை 8: இப்போது உங்களின் வார்ப்புரு புது ப்ளாக்கருக்கு ஏற்றபடி மாறிவிட்டது. அதை உறுதிப் படுத்தும் விதமாகக் கீழ்க்காணும் பக்கம் திறக்கும்.

பகுதி 2: தமிழ்மணத்தில் சேர்ப்பது எப்படி?

புது ப்ளாக்கர் வார்ப்புருவுக்கு மாறியபின் தமிழ்மணத்தில் உடனடியாக சேர்க்க இயலாது. எப்படிச் சேர்ப்பது என்பதற்கான விளக்கமே இந்தப் பகுதி.

நிலை 9: நிலை 8இல் குறித்திருக்கும் Edit HTML சுட்டியைத் தட்டி, கீழ்வரும் பக்கத்திற்குச் செல்லவேண்டும்.

இங்கு ஓரத்தில் இருக்கும் Expand Widget Templates உக்கு 'ஆம்' என்று சொல்ல வேண்டும்.

நிலை 10: இப்போது, தமிழ்மணமும் ப்ளாக்கர் பீட்டாவும் பதிவில் கண்டிருப்பது போல் ]]></b:skin> என்ற பகுதியைக் கண்டுபிடிக்க வேண்டும்.


நிலை 11: இதன் கீழ் தமிழ்மணத்தின் கருவிப் பட்டிக்கான முதல் பகுதி நிரலை இணைக்க வேண்டும்.

அந்த நிரல் உங்களின் வசதிக்காக இங்கும்:




<!-- thamizmanam.com toolbar code Part 1, starts. Pathivu toolbar
(c)2005 thamizmanam.com -->

<script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'>

</script>

<!-- thamizmanam.com toolbar code Part 1, ends. Pathivu toolbar
(c)2005 thamizmanam.com -->




நிரலை இட்ட இடத்தின் கீழ் ]]</HEAD> என்ற பகுதி வரும்





நிலை 12: தமிழ்மண கருவிப் பட்டையின் இரண்டாம் பாகத்தை, நிரலியின் dateHeader பகுதியைக் கண்டுபிடித்து அதன் கீழ் இட வேண்டும். dateHeader பகுதி இப்படி இருக்கும்:





<b:if cond='data:post.dateHeader'>

<h2 class='date-header'><data:post.dateHeader/></h2>

</b:if>






நிலை 13: இட வேண்டிய தமிழ்மண கருவிப் பட்டி இரண்டாம் பாகத்திற்கான நிரல்:




<!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, starts. Pathivu toorlbar v1.1

(c)2005 thamizmanam.com -->



<b:if cond='data:blog.pageType == "item"'>

<script expr:src=' "http://services.thamizmanam.com/toolbar.php?date=" + data:post.timestamp

+ "&posturl=" + data:post.url

+ "&cmt=" + data:post.numComments

+ "&blogurl=" + data:blog.homepageUrl

+ "&photo=" + data:photo.url'

language='javascript' type='text/javascript'>

</script>

</b:if>



<!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, ends. Pathivu toolbar v1.1

(c)2005 thamizmanam.com -->




நிலை 14: இரண்டாம் பாகத்திற்கான நிரல் சரியான இடத்தில் இருந்தால், அதன் பின்னர், <b:include name="'post'/" data="'post'"> என்ற பகுதி வரும்.

நிலை 15: இதன் பின்னர், கீழுள்ள Save Template பித்தானை அழுத்தி இந்த மாற்றங்களைச் சேமிக்க வேண்டும்.
நிலை 16: இத்துடன் உங்கள் பதிவில் கருவிப் பட்டை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தெரியும். அத்துடன் பெரும்பாலான பதிவுகள் இந்த இடத்தில் தமிழ்மணத்தில் சேர்ந்து விடுகின்றன. மிக அதிக இடுகைகள், பின்னூட்டங்கள் உடைய பதிவுகள் சில சமயம் சேராமல் தொல்லை கொடுத்தால் தமிழ்மணத்தின் தளத்தில் அது குறித்தான பிரச்சனைகளை முன்வைக்கலாம்.

புதுப் ப்ளாக்கரின் வார்ப்புருவைப் பயன்படுத்துவதால், கீழுள்ளது போல் Add Page Element என்ற வசதியைப் பயன்படுத்தி வேண்டிய எண்ணுவான், உங்களின் ப்ரோபைல் பற்றிய விவரங்கள், சுட்டிகள் என்று பலவும் இணைக்கலாம். இதையும் ஒரு முறை பார்த்து இணைத்துக் கொண்டால் உங்கள் பக்கம் பார்க்க அருமையாக இருக்கும்.

படங்களுடனான விளக்கங்களுடன் மேலதிக தகவல்கள் இந்தத் தளத்திலும் உள்ளன.

ஆக, தைரியமாக புது ப்ளாக்கருக்கு மாறி புத்தாண்டு கொண்டாட வாழ்த்துக்கள்...

[பிகு: படங்களின் மீது க்ளிக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும். ]



புது ப்ளாக்கர் வார்ப்புருவில் பழைய பதிவர்களின் பின்னூட்டப் பெயர்கள் தெரியாமல் போகும். இதைச் சரி செய்ய, பதிவர் ஜெகத்தின் பதிவு உதவும்.

Friday, December 15, 2006

பின்னூட்டம் ஏற்காத பீட்டா

கவிதா, சர்வேசன், செந்தில் போன்ற ப்ளாக்கர் பீட்டா பதிவுகளில் சாதா ப்ளாக்கர் கணக்குடையவர்கள் பின்னூட்டமிட்டால், அவை ஒப்புக் கொள்ளப்படுவதில்லை. நேற்று, டிசம்பர் 14,2006லிருந்து இந்தப் பிரச்சனை புதிதாகத் துவங்கியுள்ளது.

அறிகுறி:

பீட்டா பதிவுகளில் பின்னூட்டப் பெட்டிக்கு நகரும் தருவாயில், ஏற்கனவே ப்ளாக்கர் கணக்கில் உள்நுழைந்திருந்தாலும், உங்களின் பெயர் காண்பிக்கப்படாது. கீழுள்ள படம் போல:



பிளாக்கர் மென்பொருளாக்கக் குழுமம் ஏற்கனவே இந்தப் பிரச்சனையைக் கண்டுகொண்டுள்ளது. இதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கி அவர்கள் வேலை செய்துகொண்டே இருக்கும்போதில், தற்காலிகத் தீர்வாக முன்வைப்பது:

  • புதுப் பக்கம் ஒன்றைத் திறந்து கொண்டு http://www.blogger.com/login.g என்ற பக்கத்திற்குச் செல்லவும்.
  • இதில் உங்கள் ப்ளாக்கர் பயனர்/கடவுச் சொல்லை அளித்து லாகின் செய்யவும்
  • பீட்டா ப்ளாக்கரில், நீங்கள் பின்னூட்டமிடவேண்டிய பக்கத்தின் உரலை எடுத்து இப்போது லாகின் செய்து வைத்திருக்கும் புதுப் பக்கத்தின் address bar இல் ஒட்டிவிடவும்.
  • இப்போது உங்கள் பெயர் பதிவில் தெரியும். நீங்களும் உங்கள் பயனர் பெயரிலேயே பின்னூட்டமிடலாம்.


இந்த வழி கடினமாக இருந்தால், இருக்கவே இருக்கிறது அனானி மற்றும் அதர் ஆப்ஷன்கள் :). மேலும் தகவல்களுக்கு இங்கு தட்டவும்.

Friday, December 01, 2006

பாலபாரதியின் செல்போன்

பகுதி ஒன்று இரண்டு மூன்று நான்கு

"இத்தோ.. பொன்ஸக்கா இங்கக் கீது சார்" கணினித் திரைக்குள் தலையை விட்டுக் கொண்டு கிட்டத்தட்ட அதன் ஒரு பாகமாகவே ஆகிவிட்ட என்னைக் கலைத்தது அந்தச் சத்தம். எங்கேயோ கேட்ட குரல். நிமிர்ந்து பார்த்தேன். அட நம்ம கோயிந்து.

"வா கோயிந்து.. எத்தனை நாளாச்சு உன்னைப் பார்த்து.. எங்கே போயிருந்த?"

"நான் எங்கப் போனேன்னு மெய்யாலுமே உனக்குத் தெரியாது? உன் பதிவைத் தொறந்து பார்த்தாலே ஏதோ மும்மாரி சோமாறின்னு சொல்லுதே! "

"கோயிந்து, நீ எங்கிருந்து படிக்கிறேன்னு அது சொல்லும். ஆனா உனக்கு மட்டும் தான் சொல்லும், எனக்குச் சொல்லாது. சரியா?"

"அதுல தான் எனக்கும் சாருக்கும் ஒரு பெரிய டவுட்டு"

"இன்னாபா டவுட்டு? ச்சே.. என்ன சந்தேகம்?" என்றேன்.

"இப்படிப் பதிவத் தொறக்கும்போதே எங்கேர்ந்து பார்க்குறான்னு கண்டுகிற தில்லாலங்கடி வேலைய எப்படிச் செய்யறான்? அதக் கேட்கத் தான் வந்துகினோம் நானும் சாரும்."

"உங்க சார் வேற வந்திருக்காரா? எங்க காணோமே.."

"அது ஒன்னியும் இல்ல.. சார் தன்னோட செல்போன எங்கயோ வச்சிட்டாராம்.. தேடிப் பார்த்துகிட்டிருக்காரு.."

வெளியே எட்டிப் பார்த்தால் பாலபாரதி தன் செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

"இல்லையே.. காதுல தானே வச்சிருக்காரு.."

"கிட்டப் போய் கேட்டுப் பாரும்மே.."

கொஞ்சம் அருகில் போய்க் காது கொடுத்துப் பார்த்தேன்.. "அருள், தல, என் செல்போனைக் காணோம்யா.. நீதான் எங்கயோ ஒளிச்சு வச்சிருக்கணும்.." என்று கெஞ்சிக் கொண்டிருந்தார் பாலபாரதி.

"நீ வா பொன்ஸு.. நம்ம வேலையப் பார்ப்போம். அருள் சார் அல்லாத்தையும் கண்டு பிடிச்சிக் கொட்திடுவாரு.." என்று அழைத்தான் கோயிந்து..

"சரி, கோயிந்து... நீ கேட்ட கேள்வி ரொம்ப சுலபம். உலகை ஒன்றாகச் சேர்க்கும் இணையம் இருக்கு இல்லையா? இது ஒரு நெட்வொர்க். இப்போ டெலிபோன் நெட்வொர்க் இருக்கே அது மாதிரி. இப்போ உன்னோட செல்போனையே எடுத்துக்குவோமே.. இதுல சிம்கார்ட் போட்டோம்னு வையி, உடனே உன்னைக் கூப்பிட முடியுமா? "

"அதெப்படி முடியும். ஆக்டிவேட் பண்ணுவாங்கல்ல?"

"அதே தான். அந்த தொலைதொடர்புச் சேவையைத் தருபவர்கள் ஆக்டிவேட் செய்தால் தான் உன்னால என்கிட்ட பேச முடியும். அதே மாதிரி தான் உன்னோட கணினிக்கு இணையத் தொடர்பும். இணையத்துக்குக்காக அகலப்பட்டை(broadband), தொலைபேசி வழிச் சேவை(dialup), கம்பியில்லாச் சேவை(wireless network)ன்னு எந்த மாதிரி சேவையில் இணையத்தில் தொடர்பு கொண்டாலும் உன்னோட கணினிக்கு ஒரு நம்பர் கொடுப்பாங்க. நம்ம போன் நம்பர் மாதிரி. இந்த நம்பரைத் தான் உன் கணினியின் ஐபி முகவரின்னு சொல்றோம். எந்த இணையச் சேவைமையத்தின் மூலமாகத் தொடர்பு கொள்ளுறீங்க, என்ன முகவரி என்றெல்லாம் கண்டுபிடித்துச் சொல்ல ஐபி ட்ராக்கர் நிரலிகள் இருக்கு. இந்த நிரலிகளில் ஒன்றை எடுத்து உங்க பக்கத்தின் வார்ப்புருவில் சேர்த்தா, அவ்வளவு தான்!"

"ஓ.. அவ்வளவு தானா, இத்த வச்சி தான் அவனவன், கஸ்மாலம், நீ சென்னைல கீற, தில்லீல சுத்துறன்னு சொல்லிகிட்டிருக்கானா?! இத்தப் போய் பெரிசா நெனச்சு பயந்துகினேம்மா! சார்..! சார்..!!" கோயிந்து பாலபாரதியை அழைத்துக் கொண்டே வாசற்பக்கம் போகவும் என் செல்பேசி சத்தமிடவும் சரியாக இருந்தது.

போன் செய்தது வரவணை. "ஏங்க பொன்ஸ், எங்க மாம்ஸோட ஒரே தொல்லையாப் போச்சுங்க.. கொஞ்சம் என்ன ஏதுன்னு கேட்கக் கூடாதா?"

"என்ன? ஏது?"

"அடச்சே, விளையாடாதீங்க.. எனக்குப் போன் பண்ணி, போனைத் தொலைச்சிட்டேன், காணோம்னு ஒரே தொல்லை.. கொஞ்சம் அந்தக் காதுலேர்ந்து எடுத்துக் கையில கொடுக்கக் கூடாதா? ஒரு வேலையும் பார்க்க முடியலை!" என்றார் வரவணை. "இந்த நேரம் பார்த்து அவருக்குப் போன் செஞ்சது வேற பெரிய தப்பாப் போச்சு. சொந்த செலவில் சூன்யம்!"

"உங்களுக்கேவா? அது சரி, இப்போ எப்படி எனக்குப் போன் பண்ணீங்க?"

"இன்னோரு லைன்லேர்ந்து பேசிகிட்டிருக்கேன் பொன்ஸ்.,அந்தப் பக்கம் மாம்ஸ் இன்னும் குறுக்குக் கேள்வியாக் கேட்டுகிட்டிருக்காரு!. நீங்களும் இப்படிக் கேட்காதீங்க. அளுதுடுவேன்.."

"சரி கவனிக்கிறேன்" என்று சொல்லிவிட்டுத் திரும்புவதற்குள், கோயிந்து திரும்பி வந்தான், பாலாவுடன்.

"என்ன பாலா? போன் கிடைச்சிதா?"

"இதோ இவன் தான் எடுத்து ஒளிச்சு வச்சிருந்தான்."

"என்னய்யா நடக்குது இங்க?" என்றேன் கோயிந்துவிடம்.

"நீ ஒன்னியும் கண்டுக்காத.. அடுத்த கேள்விக்குப் பதில் சொல்லு.."

"என்ன அடுத்து?"

"இப்போ எல்லாம் ரெண்டு வலைப்பதிவர் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தாலே 'எனக்குப் பத்தாயிரம் ஹிட்ஸ்', 'எனக்கு முப்பதாயிரம் ஹிட்ஸ்'னு ஏதோ ஏலம் விடுறவன் மாதிர் கெளம்புறாங்களே, இதென்ன ஹிட்ஸ்?"

நான் பதில் சொல்வதற்குள் என்னுடைய வலப்பக்கத்திலிருந்து "நீ உருப்பட மாட்டே" என்று ஒரு குரல் வந்தது. குரலுக்குரிய திசையை நான் திரும்பிப் பார்க்கவும், அதற்கு நேர் எதிர் திசையிலிருந்து "நீ தான் உருப்பட மாட்டே" என்று பதில் வந்தது.

என்னடா என்று இந்தப் பக்கம் திரும்பவும், பாலபாரதி ஒரு வினோத காரியம் செய்தார். "உருப்படமாட்டேனா?, அப்படி எல்லாம் சொல்லக் கூடாது, நாளைக்குப் படையல் போட்ருவோம்" என்றார் காற்றைப் பார்த்தபடி.

"கோயிந்து, என்னய்யா ஆச்சு உங்க சாருக்கு? காத்துகிட்ட எல்லாம் பேசத் தொடங்கிட்டாரு?"

"அவரை வுடு பொன்சு.. அவரோட கொல சாமிங்க இப்படித் தான் அப்பப்போ அனானியா வந்து கொரல் கொடுப்பாங்க.. நீ சொல்லு!"

"சரி, இணையத்தில நிறைய கவுண்ட்டர்கள் கிடைக்குது. இப்போ உன்னோட பக்கத்தை யாராவது திறக்கறாங்கன்னு வை, அப்போ இந்தக் கவுண்ட்டர் என்ன பண்ணும், ஒரு முறை திறந்திருக்கு உங்க பக்கம்னு நினைவு வைச்சிக்கும். அடுத்த முறை வேற யாராவது எங்கிருந்தாவது திறந்தால், ரெண்டுன்னு கணக்கை அதிகப்படுத்திடும். இப்படியே உங்க பக்கத்தை ஒவ்வொரு முறை திறக்கும் போதும் இந்தக் கணக்கு அதிகமாகும்."

"இப்போ, நானே ரெண்டு தபா தொறக்கறேன்னு வை, அப்போ ரெண்டுன்னு வருமா? இல்லை ஒண்ணுன்னு வருமா?"

"ரெண்டு தரமும் அப்டேட் ஆகும். அத்தோட இல்ல கோயிந்து, நீ இப்போ திறந்து வச்சிருக்கும் போதே, அந்தப் பக்கத்தை ஒரு முறை புதுப்பித்தால் (refresh), அப்போவும் ஒரு எண்ணிக்கை கூடும். "

"நம்ம பதிவை நாமே தொறந்தாலும் இந்தக் கணக்கு வருமா?"

"ஆமாமாம். நம்ம பதிவை நாமே தொறந்தாலும், இதில் எண்ணிக்கை கூடும். ஆனா சில நிரலிகள் இது போல் இல்லாமல், நம்ம பதிவை நாமே திறந்தால் அதைப் பதிவு செய்யாமல் இருக்கவும் வழி வச்சிருக்கு"

"அது நமக்கெதுக்கு.. இப்போ இந்த நம்பர் பெரிசா இருந்தாத் தான் பெருமையாமே! இந்த மாதிரி கவுண்டர்கள் எனக்கும் வேணும்னா எங்கிட்டுப் போகணும்?"

"இந்தப் பக்கத்தில் புள்ளி விவரச் சேவைன்னு பட்டியல் போட்டுச் சொல்லி இருக்காங்க பாரு. அங்கிருந்து எடுக்கலாம். மொதல்ல சொன்ன ஐப்பி டிராக்கர் வேணும்னா இப்போதைக்கு எனக்குத் தெரிஞ்ச ஒரே இடம் இது மட்டும் தான். "

"யக்கா பொன்ஸ், இந்த கவுண்டரை வச்சு எங்க கொல சாமிகளா வருது யாருன்னு சொல்ல முடியுங்கிறாங்களே அது உண்மையா?" முதன்முறையாகப் பேசினார் - எங்களிடம் பேசினார் -பாலபாரதி

"ஒரு மாதிரி ஊகிக்கலாம். இப்போ இந்த கவுண்ட்டர்களில் சிலது ஐப்பி டிராக்கராகவும் செயல்படுது. இந்த ஐப்பி டிராக்கர் நமக்காக நம்ம பக்கத்துக்கு வந்து போன ஐப்பிகளைச் சேமிக்கும். இன்னும் சரியாச் சொல்வதானால், உலகின் எந்தெந்த ஐப்பிக்களை உடைய கணினிக்களில் நமது பதிவு திறந்து பார்க்கப் பட்டது என்பதை இது சேமித்து வைக்கும். ஸ்டேட் கவுண்டர் அப்படி ஒரு தளம். இதில் உங்களுக்குன்னு ஒரு கணக்குத் தொடங்கி இது கொடுக்கும் நிரலியை உங்கள் பதிவில் பதித்துவிட்டால், இந்த இடத்தில் உங்கள் பதிவுக்கு வந்து போகும் கணினி முகவரிகள் சேமிக்கப் படும். எப்போ வேணாலும் எடுத்துப் பார்க்கலாம். ப்ராக்ஸி மூலம் வந்தால் இங்கயும் பார்க்க முடியாது."

"ப்ராக்ஸின்னா? " என்றார் பாலா.

"அதான் நைனா, பள்ளிக்கொடத்துல அட்டெண்டன்ஸ் எடுக்கும் போது, ஒனக்குப் பதிலா வேற எவனாவது உள்ளேன் சொல்லுறது தான். இன்னும் சுளுவா சொல்லணும்னா, இப்போ நீ இல்லாத பதிவுகள்ல கூட ஒன்னைக் கலாசினா பாகசவில் சேர்ந்துடுவாங்கன்னு வீத பீப்பிள் சொன்னார் இல்ல, அது மாதிரி.."

"ஓ.. " என்றார் பாலா.

"அதே தத்துவம் தான். நமது முகவரியிலிருந்து பக்கத்தைப் பார்க்காமல், வேறொரு தளத்திலிருந்து பார்க்கலாம். இது மாதிரி சுத்தி வந்து பார்க்கிற போது, அதை இந்தக் கவுண்டர்களால கண்டுபிடிக்க முடியாது"

கோயிந்து தன் செல் போன் கூப்பிட்டதால் எடுத்துப் பார்த்தார்..

"என்ன கோயிந்து?"

"அதுவா, இந்தச் சேதுக்கரசி, நாடோடி, தங்கவேல்னு யாராவது எஸ் எம் எஸ் பண்ணி அப்பப்போ பாகச ன்னா என்னான்னு கேட்பாங்க.. அதுக்குன்னு ஒரு அறிமுக மெஸேஜ் வச்சிருக்கேனே.. அதையும் நம்ம ஜெய் பதிவையும் சேர்த்துத் தர்றது தான்.. பாகசவுக்குக் கொளுகைப் பரப்புச் செயலாளர் மாதிரி ஆய்டிச்சு நம்ம நெலம! என்னத்தச் சொல்ல!"

கோயிந்துவைப் பார்த்து, "நீதானா அது?" என்று முறைத்தார் பாலா. "பின்ன பாருங்க பொன்ஸ், தினசரி எனக்குப் பத்து பின்னூட்டமாவது வருது.. எனக்கு சர்டிபிகேட் கொடுங்க, இவனுக்குக் கொடுங்கன்னு.. !"

"என்ன சர்டிபிகேட்?"

"பாகச சர்டிபிகேட் தான்!" நொந்து கொண்டே சொன்னார் பாலா..

"சரி அதென்ன செல்பேசி தொலைஞ்சு போச்சுன்னு செல்லுலயே பொலம்பிகிட்டிருந்தீங்க?" கோயிந்து கொடுத்த குறுஞ்செய்தி இடைவெளியில் கேட்டேன்.

"பேசிகிட்டிருந்தது என்னோட செல்லு.."

"அப்போ தொலைஞ்சது?"

"அது கடலை செல்!" என்றபடியே திரும்பி வந்தான் கோயிந்து. 'அடப்பாவிங்களா!' என்று நினைத்துக் கொண்டேன். "பாலா பாய் மேட்டர் ஒனக்குத் தெரியாதா?" என்று அடுத்த முடிச்சைப் போட்டான்.

"அது என்ன? தெரியாதே!" என்றேன் ஆவலோடு.

பதில் வருவதற்குள், பாலா, பேச்சை மாற்றிவிட்டார். "அதெல்லாம் அப்புறம் பேசுவோம், ஆமாம், சில சமயம் ஒரே பக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு கவுண்டரும் ஒரு நம்பர் காட்டுதே அது எப்படி?"

"ஒவ்வொரு கவுண்டரையும் ஒவ்வொரு நேரத்தில் அந்தப் பக்கத்தில் சேர்த்திருப்பாங்க.. அவ்வளவு தான்"

இதற்குள் கோயிந்துவின் செல்போன் சிணுங்கியது.

"இன்னா நைனா? என்னது? புதுசா கவுண்டர் போட்டுத் தரணுமா.. இப்போ " " இல் இருக்கேன்; இங்க புதுசா ஒரு கஸ்டமரு.. 'கவுண்டர்னா கவுண்டமணியா'ன்னு கேட்டு ஒரே ரவுசு.. இப்போ தான் கொஞ்ச கொஞ்சமா புரிய வச்சேன்.. நீ அங்கயே இரு.. இதோ நான் என் அஸிஸ்டெண்டைக் கூட்டிகிட்டு இதோ வந்துகினே கீறேன்; எங்காச்சும் போய்டாத என்ன?" என்றபடி போனை வைத்தவர், "அந்தப் போனை என்னாண்ட கொடு சார். கௌதம் சாருக்கு வலைப்பதிவு இஞ்சினியரப் பார்க்கணுமாம். உன்னக் கூட்டிகினு வாரேன்னு சொல்லிட்டேன், அந்தப் போன் உங்கைல இருந்தா நீ மறுக்கா கடல போட ஆரம்பிச்சிடுவ.. இங்க கொடு பார்க்கலாம்... " என்று பாலாவிடம் சொல்லிக் கொண்டே, என்னைப் பார்த்து, "அப்பால வந்து கண்டுகிறேன் பொன்ஸு. பார்க்கலாம் என்ன?" என்று கிளம்பினான் கோயிந்து..
உண்மையாகவே கவுண்டரிடம் அடி வாங்கிய செந்தில் மாதிரி பாவமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.




[ப்ரியன் யோசனைப் படி, உருவான இந்தப் பதிவு, பாகசவின் கோடிக் கணக்கான உறுப்பினர்களுக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது. ]

Monday, November 27, 2006

ப்ளாக்கர் பீட்டா?

இன்றைக்குப் ப்ளாக்கரில் பதிவிடும் பலர் மனதிலும் இருக்கும் முக்கியமான கேள்வி, பீட்டாவுக்கு மாறலாமா கூடாதா என்பது தான். பீட்டா ஒரு பூதம் மாதிரி பயமுறுத்தவும் செய்கிறது, அதன் அழகான புதிய வார்ப்புருக்கள் "வா, வா" என்று மோகினியாக அழைக்கவும் அழைக்கிறது. பீட்டாவின் நன்மை தீமைகளைப் பட்டியலிடுவது மட்டுமே இந்தப் பதிவின் நோக்கம்.

பீட்டாவா? அப்படீன்னா?

இன்னும் முழுமையாக உருவாக்கப்படாத மென்பொருளின் சோதனை வடிவத்தைத் தான் பீட்டா என்று அழைக்கிறோம். யாஹூ பீட்டா, கூகிள் குழும பீட்டா, ப்ளாக்கர் பீட்டா, எல்லாமே இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவை தான்.

உருவாக்கமே முடியாத நிலையில் இது போன்ற மென்பொருள்களைப் பயனர்களுக்குத் தருவதில் என்ன பயனிருக்கப் போகிறது?

ஒவ்வொரு மென்பொருளாக்கத்துக்கும் பல நிலைகள் உள்ளன. முதலில், மென்பொருளுக்கான பயன்களுக்குத் தகுந்தாற்போல், அதை வடிவமைப்பது, அதன்பின், நிரலி எழுதுவது, கடைசியாக நிரலி வேண்டிய வகையில் செயல்படுகிறதா என்று அறிய அதனைச் சோதிப்பது. பிளாக்கர் போன்ற இலவச மென்பொருள்களைச் சோதிக்கும் பொழுது, அதன் இலவச பயனர்களையே இந்த வேலையைச் செய்ய உதவி கோருவது வழக்கம். இலவசமாக பிளக்கரைப் பயன்படுத்தும் நமக்குத் தானே, அதனை எந்தெந்த விதங்களில் எல்லாம் பயன்படுத்துகிறோம் என்று முழுமையாகத் தெரியும்?

உதாரணமாக, கூகிள் நிறுவனத்தில் வேலை செய்யும் சோதனைப் பொறியிலாளர்களில் எத்தனை பேர் யூனிக்கோடு முறையில் தமிழ் எழுதப் போகிறார்கள்? எத்தனை பேர் பிளாஷ் போன்ற மென்பொருளையோ, வீடியோ, ஆடியோ துண்டுகளையோ உள்நுழைக்க முயலப் போகிறார்கள்?

இவை எல்லாவற்றையும், இன்னும் அதிகமாகவும் நம் போன்ற பயனர்கள் இந்த மென்பொருளைச் சோதிக்க முடியும் என்பதால், கொஞ்சம் பயன்படுத்தக் கூடிய வடிவத்துக்கு வரும் போது இது போன்ற மென்பொருட்களுக்கு பீட்டா என்ற பாகத்தை உருவாக்கி அதனைச் சோதிப்பதில் நமது உதவியை நாடுகிறார்கள்.

பீட்டா - ப்ளாக்கரை விட எந்தெந்த வகையில் வசதியாக இருக்கிறது?
1. லேபிள்கள்
புதிய பீட்டா ப்ளாக்கரின் மிக முக்கியமான வித்தியாசம், அதன் லேபில்கள். கூகிள் மடல்கள் போலவே ஒவ்வொரு இடுகைக்கும் ஒரு வகைப்பெயர் கொடுத்து வகைப்படுத்தலாம். தமிழ்மணத்தின்/தேன்கூட்டின் வகைகளை விட, புதிது புதிதாக நமக்கு நாமே வகைப் பெயர்களை உருவாக்கிக் கொள்ளும் வசதியைக் கொடுக்கிறது இந்த லேபில்.
லேபிளை வைத்து இடுகைகளைத் தேடவும் செய்யலாம். வோர்ட்பிரஸ்ஸின் வகைகள் போலவே இந்த லேபில்கள் உதவுகின்றன.

2. வேகமான செயல்பாடு
புகைப்படங்கள், ஒளிப்படங்களின் வலையேற்றம் வழக்கமான பிளாக்கர் வலையேற்றத்தை விட மிக மிக வேகமாக உள்ளது. இப்போதைய பிளாக்கரின் புகைப்படங்கள் எக்ஸ்புளோரர் வழியாக வலையேற்றும்போது சிலசமயம் படமே வலையேறுவதில்லை. பீட்டாவில் இந்தப் பிரச்சனைகள் இப்போது இல்லை.

3. பதிவுகளின் வார்ப்புரு
வார்ப்புருவை மிக மிகச் சுலபமாக மாற்ற முடிகிறது. பழைய பதிவுகள், லேபில்கள், பதிவர் விவரங்கள், இன்னும் ஒவ்வொரு விஷயத்தையும் தனித் தனியாக எடுத்துப் பதிவில் சேர்த்துக் கொள்ளலாம். நிரலி முறை வார்ப்புருக்களாக இல்லாமல் நாமே நம் கையால் ஒவ்வொரு பெட்டியாக இழுத்து, எடுத்து ஆங்காங்கே சேர்த்துக் கொள்ளலாம்.

4. தனிப்பட்ட பதிவுகள்.
பதிவுகள், இடுகைகள் என்பவையே ஒவ்வொருவருக்குமான டைரி என்ற அளவில் நடைமுறைக்கு வந்த விஷயங்கள் தாம். வீட்டுக்குள்ளேயே தத்தம் டைரிகளை எழுதிக் கொண்டிருந்தவர்களுக்கு வசதியாக தனிப்பக்கம் போட்டு எழுத வழிவகுக்கிறது பீட்டா பிளாக்கர். இந்தப் பக்கங்களைப் பிறர் பார்க்காமல் மறைத்துவைக்க முடியும். நமது நண்பர்கள் மட்டும் பார்க்குமாறு வசதி செய்யவும் முடியும். இவ்வாறு தனிக் குழும வேலைகளுக்கும் இந்த பதிவுகள் பயன்படும்

5. மற்ற பதிவர்களுக்கு நம் பதிவுப் பெட்டிகள்
நம் பதிவில் சின்னச் சின்னப் பெட்டிகள் உருவாக்கி மற்ற பதிவுகளில் தெரியுமாறு கொடுக்கலாம். இதன் மூலம், உங்கள் பதிவைப் பற்றிய சிறு விளம்பரமோ, பதிவரைச் சார்ந்த விவரங்களோ எதையாவது மற்ற பதிவுகளிலும் இடம்பெறுமாறு செய்யலாம்.

6. நிறம் மற்றும் எழுத்துருக்கள்
தமிழ் எழுத்துக்களைப் பொறுத்தவரை இந்தப் பொதுவான எழுத்துருக்கள் எத்தனை தூரம் பயனுள்ளதாக இருக்கும் என்று புரியவில்லை. ஆனால், வார்ப்புருக்களில் ஆங்கில எழுத்துக்களுக்கான எழுத்துருக்களை நாமே பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுக்கலாம். வார்ப்புருவில் நிரலிப் பயன்பாட்டால், நிறங்களுக்கு எண்களை மட்டுமே தரவேண்டிய கட்டாயத்தை நீக்கிவிட்டு, பார்க்கும் நிறத்தை நாமே தேர்ந்தெடுக்கும் வசதியையும் பீட்டா வழங்குகிறது.

7. சேமித்தவுடனே பார்க்கக் கூடிய மாற்றங்கள்
இதுவரை பதிவுகளிலோ, நிரலியிலோ மாற்றங்களைச் செய்துவிட்டுப் பார்க்கக் காத்திருப்பது போல் அல்லாமல், வார்ப்புருவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்து, சேமித்தாலே பதிவில் தெரியவைக்கிறது பீட்டா பிளாக்கர்.

8. ஒருமுகப் பயனர்/கடவுச்சொல்
பிளாக்கர், கூகிள் குழுமங்கள், கூகிள் ரீடர், கூகிள் பேஜ் கிரியேட்டர், என்று எல்லா கூகிள் சேவைகளுக்கும் ஒரே பயனர்/கடவுச்சொல் பயன்பாட்டைக் கொண்டுவந்திருக்கிறார்கள். இதன்மூலம் உங்களின் மின்மடல் முகவரியைக் கொண்டே எல்லாவித சேவைகளிலும் பதிந்து கொள்ளலாம்.

பீட்டா - சறுக்கும் இடங்கள்:
1. இப்போதைய ப்ளாக்கரிலிருந்து பதிவுகளைப் பீட்டாவுக்கு மாற்றும் பொழுது, மறுமொழிகளில் உள்ள பயனர் பெயர்கள் தமிழில் இருந்தால் அவை பூச்சிகளாகத் தெரிகின்றன.

2. இட்லிவடை போல் புதுப் பக்கத்தில் பின்னூட்டப்பெட்டி திறக்கும் பதிவுகளில் தமிழில் எழுதுவது மிகமிக மெதுவாக இருக்கிறது. கிவியன் போல் அதே பக்கத்தில் திறக்கும் பதிவுகளில் கூட பின்னூட்டத்தைப் பார்ப்பதே ரகசியகாப்பு ஒப்பந்தத்தை முறிப்பது என்பது போல் கேள்வி கேட்டுக் கொடுமைப்படுத்துகிறது வலையுலாவி.

3. பீட்டாவின் நிரலி புரிந்து கொள்வதற்குச் சுலபமாக இல்லாத காரணத்தால் அதில் மாற்றம் செய்யவேண்டுமானால், கொஞ்சம் நேரம் செலவழிக்க வேண்டியதிருக்கும்.

4. இது தவிர இன்னும் அதிக பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் கண்டுபிடிக்கப்பட்டு அவை களையப்படுகின்றன. இந்தத் தளத்தில் பீட்டாவின் தற்போதைய பிரச்சனைகள் மட்டும் பட்டியலிடப்பட்டுள்ளன - தீர்வு கண்டாயிற்றா இல்லையா என்ற விளக்கங்களுடன்.

5. மின்மடல் முகவரி தான் பயனர் பெயர் என்று தெரியும்போது, கடவுச்சொல்லை உடைக்க முயற்சி செய்பவர்களுக்கு இன்னும் வசதியாகப் போய்விடும் அபாயம் உள்ளது. அத்தனை சீக்கிரம் செய்வது இயலாது என்ற போதிலும், இப்படி ஒரு குறுக்கு வழிப் பிரச்சனையையும் நாம் பேசத் தான் வேண்டியுள்ளது.

பீட்டாவுக்கு எப்படி மாறுவது:

"பீட்டாவுக்கு மாறிப் பாருங்களேன்" என்ற சுட்டி ஒன்று நீங்கள் பிளாக்கர் கணக்கில் உட்புகுந்ததும் கேட்கப்படும். ஆம் என்றால், சில மணிநேரங்களில் உங்கள் பதிவுகள் பீட்டாவுக்கு மாற்றப்பட்டுவிடுகின்றன.

அதன்பின் தமிழ்மணத்தின் பட்டியை மீண்டும் சேர்ப்பதிலிருந்து பல்வேறு வேலைகள் துவங்குகின்றன. தமிழ்மணத்தில் சேர்க்க இந்தப் பதிவின்படி செய்ய வேண்டும். ஒரு முறை செய்துவிட்டால் நினைவில் வைத்துக் கொள்கிறது பீட்டா, அதன் பின் வார்ப்புருக்களை மாற்றி விளையாடினாலும், தமிழ்மணத்துக்காகச் சேர்த்த நிரலி மறைவதில்லை. தமிழ்மணம், இது போல் மாறி வந்த பீட்டாப் பதிவுகளை ஏற்க மறுத்து சிலசமயம் மக்கர் செய்தால், அதே தளத்தில் முறையிட்டால் சரி செய்து விடுகிறார்கள்.

எனக்கு மட்டும் ஏன்?
பீட்டாவுக்கு மாறுங்கள் என்ற சுட்டி உங்கள் பிளாக்கர் கணக்கில் தெரியவில்லையா, கவலை வேண்டாம். உங்கள் பதிவைப் பீட்டா சோதனைக்கு உரிய பதிவாக இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை என்று பொருள்.


இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன:

  1. பிளாக்பிளஸ் எனப்படும் பிளாக்கரால் பல நாட்களுக்கு முன் தரப்பட்ட ஒரு அப்டேட்டை நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.
  2. அது ஒரு குழுப் பதிவாக இருக்கலாம்
  3. அல்லது மிக அதிக இடுகைகள் கொண்ட பதிவாக இருக்கலாம். (ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடுகைகள் அல்லது பின்னூட்டங்கள்)
  4. சில நாட்கள் முன்பு, பிளாக்கர் உங்களைப் பீட்டாவுக்கு மாறுங்கள் என்று கெஞ்சிப் பார்த்து சோர்ந்து போயிருக்கலாம்.

மனம் சோர்ந்துவிடாமல் புதிதாக ஒரு பீட்டாப் பதிவைத் திறந்து அதில் உங்கள் சோதனைகளைச் செய்து பார்க்கலாம். பின்னாளில் இந்தப் புதுக் கணக்கை பழைய ப்ளாக்கர் கணக்குடனும் சேர்த்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் பிளாக்கர் ஆட்கள்.

ஆக, பிளாக்கர் பீட்டா மிக மிக வசதியான, சுலபமான வலைப்பதிவுச் சேவையாகத் தான் இருக்கிறது. பீட்டாவுக்குத் தைரியமாக மாறலாம், முயற்சியைக் கைவிடாமல் தமிழ்மணத்தில் சொல்லி அதைச் சேர்த்துக் கொள்ளச் சொல்லலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள ஒருசில பிரச்சனைகளைத் தவிர பிளாக்கர் பீட்டா நன்றாகவே வேலைசெய்கிறது. 'எப்படியும் பீட்டா முழுமையான கட்டுமானத்துக்குப் பின், எல்லாச் சோதனைகளுக்கும் பின்னர் நடைமுறைக்கு வரத்தான் போகிறது. அப்போது புது பிளாக்கருக்கே மாறிக் கொள்கிறோம். இப்போது சோதனை எலிகளாக விரும்பவில்லை' என்றாலும், அதுவும் சரிதான்.

பழைய பதிவுகளோடு விளையாட பயமாக இருந்தால், பீட்டாவில் புதுக் கணக்குத் தொடங்கிச் சோதித்துப் பார்க்கலாம். ஆக, புகுந்து விளையாடுங்க..

[பிகு: கட்டுரைக்குத் தகவல் திரட்ட உதவிய பயனர்கள் இட்லிவடை மற்றும் செந்திலுக்கு நன்றி]

Tuesday, October 31, 2006

உலகத் தொலைபேசிகளிலேயே முதன் முறையாக...

"இன்னும் சுமார் அரை மணி நேரத்திற்குள் ஒரு பெரிய புயல் கரையைக் கடக்கப் போகிறது. பாதுகாப்பான இடத்துக்குப் போகவும்"

"உங்கள் வீடு இருக்கும் பகுதிகளில் 7.3 அளவிலான பூகம்பம் தாக்கிக் கொண்டிருக்கிறது. கட்டிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும்"

"தமிழ் நாட்டில் இன்னும் இருபத்திநான்கு மணி நேரத்திற்கு தொடர்மழை நீடிக்கும்"

திடீரென்று ஒரு நாள் இப்படிப்பட்ட குறுஞ்செய்திகள் உங்கள் செல்பேசியில் வந்தால் உங்கள் குறும்புக்கார நண்பனின் வழக்கமான விளையாட்டு என்று அலட்சியப்படுத்திவிட வேண்டாம். இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையிலிருந்து இப்படிப் பட்ட எச்சரிக்கை குறுஞ்செய்திகள் வருவதற்கு வெகு நாட்களாகப் போவதில்லை - அதுவும் உங்கள் மாநில மொழியிலேயே!

பெங்களூரைச் சேர்ந்த "ஜெனிவா சாப்ட்வேர் டெக்னாலஜிஸ்" நிறுவனமும் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமும் சேர்ந்து ஆபத்துகால தகவல் துறையுடன் இணைந்து இப்படிப்பட்டக் குறுஞ்செய்திகளை நாடு முழுவதும் அனுப்ப உள்ளன. ஜெனிவா நிறுவனத்தினர் ஆங்கிலத்தில் வரும் குறுஞ்செய்திகளை மொழிபெயர்ப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இப்போதைய நிலவரப்படி (14 இந்திய மொழிகள் உட்பட) 57 உலகமொழிகளில் இம்மாதிரியான செய்திகளை மொழிபெயர்க்கும் வேலை முடிந்துவிட்டது.

இன்றைக்குக் குக்கிராமங்களில் கூட செல்பேசிகளைப் பார்க்க முடிகிறது. விரிந்திருக்கும் தனியார் மற்றும் அரசு சார் தொலைபேசிச் சேவைகளின் மூலம், இந்தியா முழுவதும் செல்பேசிகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஆக, எந்த ஒரு ஆபத்தைப் பற்றிய எச்சரிக்கையும் செல்பேசிகளுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்போது அவை பல்வேறு தரப்பினரையும், அதிக அளவிலான மக்களையும் மிகச் சுலபமாகப் போய்ச் சேரும். அதிலும் அந்தந்த பகுதிகளுக்கேற்ற மொழிகளில் அனுப்பப்படும் போது அவற்றின் பலன்களும் சரியான நேரத்துக்குள் போய்ச் சேர ஏதுவாகும்.

ஜெனிவாவின் இந்த மென்பொருள் மூலம், தமிழில் குறுஞ்செய்தி அனுப்பினால், அதை உள்வாங்கும் செல்பேசியும் யூனிக்கோடு முறையில் இயங்குவதாக இருக்க வேண்டியதில்லை. மொழி பெயர்ப்பதோடல்லாது, இந்த மென்பொருள், குறுஞ்செய்தியை படமாகவும் மாற்றுவதால், மறுமுனை சின்ன படங்களை உள்வாங்குவதாக இருந்தாலே போதுமானது (picture messages not MMS)

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மூலம் பெறப்படும் இது போன்ற ஆபத்துகால செய்திகள் தனியார் மற்றும் அரசாங்க தொலைதொடர்பு நிறுவனங்களின் உதவியுடன் அந்தந்தப் பகுதிகளில் உள்ள செல்பேசிகளுக்கு மட்டும் அவரவர் தேர்ந்தெடுத்திருக்கும் மொழியில் குறுஞ்செய்திகளாக அனுப்பப்படும். சுனாமி மாதிரியான இயற்கைப் பேரழிவின் போது ஆபத்து காலத்திற்குப் பல மணி நேரத்துக்கு முன்னரே இது போன்ற குறுஞ்செய்தித் தகவல்களை மக்களுக்கு அளிப்பதன் மூலம் உயிர்ச்சேதங்களையும் பொருட்சேதங்களையும் பெரிய அளவில் தடுக்கலாம். சமீபத்தைய மும்பை குண்டு வெடிப்புச் சம்பவங்களின் போது கூட பத்து நிமிட இடைவெளியில் வெடித்த இந்தக் குண்டுகளைப் பற்றி சில நொடிகளுக்குள் தகவலனுப்பி இருக்கலாம். இன்னும், மும்பை மழைகள், சென்னை, ஆந்திர வெள்ளம் என்று பல்வேறு காலங்களில் இந்த மாதிரியான குறுஞ்செய்தித் தகவல்கள் மிக மிகப் பயனுள்ளதாக இருக்கும்.



"இப்படிப்பட்ட ஆபத்து கால பன்மொழிக் குறுஞ்செய்தித் தகவல் முறையை உலகிலேயே முதன் முறையாக செயல்படுத்தப் போகும் நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்கே உரியது. இந்தச் சேவையின் மூலம் பேரழிவு எச்சரிக்கைகள் முப்பது வினாடிகளுக்குள் பொதுமக்களுக்குப் போய்ச்சேர முடியும்" என்கிறார் அறிவியல், தொழிற்நுட்பத் துறை அமைச்சரான கபில் சிபல். குண்டுவெடிப்புகளின் போது செல்பேசித் தொடர்புகளில் குளறுபடியானாலும், குறுஞ்செய்திமுறையில் எல்லாருக்கும் செய்தி அனுப்புவது சாத்தியம் என்றும் அறிவியல் தொழிற்நுட்பத்துறை அமைச்சகம் நம்புகிறது.

குறுஞ்செய்திகள் தவிர தரைவழித் தொடர்புள்ள தொலைபேசிகளிலும், குரற்பதிவாக செய்தி அனுப்பவும், ஆங்காங்கு இதற்காகவே அமைக்கப்படும் கம்பியில்லா பொது அறிவிப்புக் கருவிகளின் மூலமும் தொலை தொடர்பைப் பரவலாக்கும் திட்டமும் இருக்கிறது. சுமார் 5.19 கோடி செலவில் செப்டம்பர் 2004 முதலே உருவாக்கப்பட்டு வரும் ஆபத்துகால பன்மொழிக் குறுஞ்செய்தித் திட்டம் பற்றி மீன்வளத்துறை, எல்லைப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அமைச்சகங்களுக்கு ஏற்கனவே செயல்முறை விளக்கம் கொடுத்தாகிவிட்டது. உள்நாட்டு அமைச்சகத்தின் இறுதி தலையசைப்புக்காக மட்டுமே தற்போது காத்திருக்கிறது இந்தத் திட்டம்.

சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கும் பணிகள் சீரான வேகத்தில் சென்றாலுமே செப்டெம்பர் 2007இல் தான் முழுச் செயல்பாட்டுக்கு வரும் என்னும் போது, இந்த மாதிரியான குறுஞ்செய்திச் சேவைகள் இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை நிரம்பிய நாட்டில் உடனடித் தேவையாகும். சீக்கிரமே இந்தச் சேவை செயல்பாட்டிற்கு வந்தால் ஆபத்துகளின் போது பெரிய அளவிலான உயிர்ச்சேதத்தைத் தவிர்த்துவிடமுடியும்.

மேலும் செய்திகளுக்கு

நிறைய தமிழ்ப் படுத்தி இருப்பதால் ஏதும் தவறாகி இருக்குமோவென்று:
இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை - Indian Meterological Department
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் - Ministry of Science and Technology
பன்மொழிக் குறுஞ்செய்தித் தகவல் - Multilingual Messaging Service
குரற்பதிவு - Voice Mail
கம்பியில்லா பொது அறிவிப்புக் கருவிகள் - Wireless Public Addressing System
ஆபத்துதவி மையம் - Disaster Management Cell

Wednesday, October 04, 2006

முதல் முயற்சி






flash-இல் இது என் முதல் முயற்சி.. குடைக்குள் மழை.. இதைச் செய்ய தூண்டுதலாக இருந்தது பினாத்தலாரின் இந்தப் பதிவே.

இன்னுமொரு முயற்சி:



தமிழ் எழுத்துருக்கள் சரியாக வராததால்,
"எந்த ப்ளாட்பார்மல கீறே?"

Tuesday, September 12, 2006

மீண்டும் கோயிந்து

அன்றைய சந்திப்புக்குப் பின் கோயிந்துவைக் கையில் பிடிக்க முடியாத அளவுக்கு தலைவர் ரொம்ப பிஸியாகிவிட்டார்.

பாலபாரதியிடமாவது விசாரிக்கலாம் என்றால், எப்போது பார்த்தாலும் அவரது தொலைபேசி பிஸியாகவே இருந்தது. காரணம் என்னவென்பதை சமீபத்திய வரவணையான் பதிவைப் பார்த்துத் தான் நானும் தெரிந்து கொண்டேன்... 'சரி, இது வேலைக்காவாது' என்று நேரடியாக நேற்று கிளம்பி கோயிந்துவைப் போய்ப் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன்.

நான் போனபோது கோயிந்து கணினியைப் பார்த்தபடி என்னவோ ரொம்ப தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டிருந்தான்.

"என்ன கோயிந்து, வலைபதிவர் சந்திப்புக்குக் கூட வராம அப்படி என்ன வேலை உனக்கு?" என்றேன்.

"அது வந்து பொன்ஸூ, புது டெக்னாலஜி கண்டுபிடிக்க முயற்சி செஞ்சிகிட்டிருக்கேன்.. எஞ்ஜினியர் சொல்லி இருப்பாரே.. "

"ஒண்ணும் சொல்லலியே.. என்ன டெக்னாலஜி அது?"

"இப்போ உன்னோட ரொம்பப் பழைய பதிவெல்லாம் இருக்கில்ல.. அதை
அன்னிக்கி தேதிக்கி பார்க்காம தவறவிட்ட ஆட்கள் இருப்பாங்கல்ல.. அவங்களுக்குக் காட்டணும்னு ஆசப் பட்டன்னு வை.. எப்படி பண்ணுவ?"

"அதான் இப்போ அந்நியலோகத்தின் featured post எல்லாம் இருக்கே.. அதில்
வந்துடுமே.."

"ஆமாம்.. ஆனா அதுல உனக்குத் தேவையான பதிவு வருமா? அந்நியலோகம் பூவா தலையா போட்டு தேர்ந்தெடுத்துக் காட்டுறது தானே!"

"அதுவும் சரிதான்.. அதுனால?"

"அதுக்குத் தான் ஏற்கனவே இருக்கிற பதிவ மக்கள் பார்க்க, திரும்பி பழைய
பதிவ எடுத்து மொத்தமா திருப்பி போடணும்னு தல சொல்லிகினாரு.. அதச் செய்ய புது டெக்னாலஜி கண்டுபிடிச்சிகிட்டிருந்தேன்.. அந்த கேப்ல வலைபதிவர் சந்திப்பு முடிஞ்சிடுச்சு."

"ஆமாம் கோயிந்து, அதுக்கு ஏன் இத்தனை கஷ்டப்படுறே? பேசாம ஒரு
மீள்பதிவு போட்டுற வேண்டியது தானே.. "

"மீள்பதிவா? ஐ.. இதப் பார்றா.. பேரெல்லாம் ஷோக்காத் தான் சொல்ற
பொன்ஸு.. எப்படிப் போடுவ மீள்பதிவு? "

"அட ரொம்ப சுலபம்பா.. உன்னோட பழைய பதிவை எடு. அதை எடிட் மோடில் திறந்துக்க. இப்போ இதுல கீழ ஒரு ஆப்ஷன் இருக்கு பாரு:
Post and Comment Options: அப்டீன்னு






அதைத் திறக்கணும்(அம்புக்குறி மாதிரி இருப்பதைக் க்ளிக் செய்யவும்).. அதுல பதிவுக்கு நேரம் இருக்கும்.




பதிவோட நேரத்தைத் தற்போதைய நேரமாகவோ, இல்லைன்னா,
உன்னுடைய சமீபத்திய பதிவின் நேரத்தை விட அதிக நேரமாகவோ ஆக்கிட்டு, அதை திருப்பி பப்ளிஷ் பண்ணனும்.

உதாரணத்துக்கு உங்காளு இப்போ சமீபத்துல ஒரு மீள்பதிவு போட்டார் இல்லையா.. அந்த அருணா பொண்ணு பத்தி.. அதை முதல் முதல் போட்டது -பிப்ரவரி 08, 2006 தேதி. அந்தப் பதிவை எடுத்துப் பார்த்தால், கீழே அந்தத் தேதி இருக்கும். அதுல அந்தத் தேதியை மாத்தி இன்னிக்கி தேதி வச்சிட்டு பப்ளிஷ் பண்ணியிருந்தார்னா, அந்தப் பதிவு புதுப் பதிவா ஆகி இருக்கும். இது தான் மீள்பதிவு"

"நீ சுளுவா சொல்லிக்கின.. இப்போ அப்படி எல்லாம் செஞ்சா பழைய பதிவு இருக்குமா? இருக்காதா?"

"பழைய பதிவு தான் புதுப் பதிவாகிடுச்சே.. அந்தத் தேதியில் இந்தப் பதிவு இருக்காது.. "

"அப்போ முத மொற போட்டப்போ நாலு பேர் பின்னூட்டம் போட்டிருப்பாங்க இல்ல? அந்த பின்னூட்டமெல்லாம் தொலஞ்சி பூடுமே.. அதை எல்லாம் என்ன மறந்துடச் சொல்றியா?"

"இல்ல கோயிந்து.. அந்தப் பின்னூட்டம் எல்லாம் உன்னோட புதுப் பதிவில
வந்திருக்கும். ஆக, புதுப் பதிவு வரும்போதே அந்தப் பின்னூட்டங்களோட
வரும்.. மக்கள் குழம்பாம இருக்க, மீள்பதிவுன்னு சொல்றது நல்லது.."

"சரி சரி.. ஏதாவது சொல்லச் சொன்னா போதுமே. பெரிய சாமியார் ரேஞ்சுக்கு
கடைசில நீதி சொல்லாம முடிக்கத் தெரியாதே உனக்கு.. மீள் பதிவுன்னு
எழுதுறாங்களாம்!! ரொம்பத் தான் படம் போடுறம்மணி.. சரி, இந்தப் படம்
போடுறதப் பத்தி சொல்றேன் சொல்றேன்னு சொல்லியே ஒரு மாசம் ஓட்டிட்டயே, அதுபத்தி சொல்லப் போறியா இல்லையா?"

"படம் போடுறது பத்தி என்ன?"

"பதிவுல படம் எப்படிப் போடுறது?"

"பதிவுல படம் போடுறதுக்கு ரெண்டு வழி இருக்கு. ஒண்ணு, ப்ளாக்கரிலேயே
படத்தை ஏத்திட்டு, பதிவுல போடணும். இன்னும் ஒரு வழி, ப்ளாக்கர் அல்லாத வேற இடங்களில் படத்தை வலையேத்திட்டு, அதை லிங்க் எடுத்து ப்ளாக்கரில் கொடுத்திடணும்.."

"எங்க வலையேத்தலாம்னு சொல்ற?"

"இப்போ photobucket.com, flickr.com என்று பல்வேறு சைட் இருக்கே எதுக்குன்னு.. அதுல எதுலயாவது ஏத்திடவேண்டியது தான். இதெல்லாம் வேண்டாம்னா, இங்கே இன்னும் நிறைய படம் வழங்கி சேவைகளின் பெயர்கள் இருக்கு. இதில் படத்தை வலையேற்றும் போது உனக்கு ஒரு உரல் (லிங்க்) கிடைக்கும்."

"இந்த உரலை எங்க கொடுக்கணும்?"

"புதுப் பதிவு போடும்போது இதோ இந்த இடத்தில் இருக்கும் படம் மாதிரியான சின்ன பொத்தானைத் (ஐகான்) தட்டி அதுல கொடுக்க வேண்டியது தான்.. ரொம்ப சுலபம்.."





"ம்ம்.. ஆனா, சிலசமயம் இந்த ஐகானைத் தட்டி கொட்டிப் போட்டாலும் வராம இருக்கே, அப்போ என்ன செய்யுறது.. ?"

"இன்னொரு வழி இருக்கு. கொஞ்சம் HTML தெரிஞ்சால், இதைச் செய்யலாம்.. படத்தை வலையேற்றிய பின், அதை எடுத்துப் பயன் படுத்த இந்த 'img' டேக்கை பயன்படுத்தலாம். கீழே இருக்கும் கோட் மொத்தமும் பயன்படுத்தி இந்தப் படத்தை உங்க பக்கத்தில் சேர்க்கலாம் :





இதில் படத்திற்கான உரலை மட்டும் மாற்ற வேண்டும்.. அவ்வளவு தான்.. ரொம்ப சுலபம்.. "

"அது சரி.. எனக்கென்னவோ இதை விட சுலபமான வழிமுறை இருக்குன்னு
தோணுது.. அம்மணி வழக்கம்போல தலையச் சுத்தி மூக்கைத் தொடுறீங்க..
இருக்கட்டும்.. யாராவது இன்னும் சுலபவழி சொல்லி அந்த மூக்கை உடைக்கிறாங்களா இல்லையான்னு பார்த்திடலாம்.. "

"சரி.. மத்த கேள்வியெல்லாம் ஒரு நாள் கேட்டியே, அதுக்கெல்லாம் பதில்
சொல்லவா?"

"ஆமாம்.. நீ ஒரு மாமாங்கம் கழிச்சி சொல்லுவ. அதுவரை எங்களுக்குத்
தெரியாதுன்னா நினைச்சிகிட்டிருக்க?"

"அப்போ தெரியுமா? நான் கிளம்பவா?"

"அட, இரு அம்மணி, எங்க தப்பிக்கிற? சொல்லு சொல்லு, நீ கத்துகிட்டு வந்தது சரியா இல்லையான்னு நான் செக் பண்ணனும் இல்ல?"

என் நிலைமையை நொந்து கொண்டு பதில் சொல்லத் தொடங்கினேன்..

[இந்தத் தொடரின் பழைய பகுதிகள் : 1 2 3 ]

பிற்சேர்க்கை: படம் போடுவதற்கு இன்னும் சுலபமான வழியை ரவி சொல்லி இருக்கிறார் இங்கே

தொடரும்

Tuesday, August 22, 2006

எடிட்.. edit.. எடிட்...

பகுதி 1
பகுதி 2

"டீ எங்க வாங்கினது?" என்றேன் கிளாஸின் நிலையைப் பார்த்தபடி.

"ஆரம்பிச்சிட்டாங்கப்பா! எங்க வாங்கினது; எப்படி வாங்கினது; பணம் கொடுத்தா, கிரெடிட் கார்டா எல்லாத்தையும் சொல்லணுமே!!" என்று அலுத்துக் கொண்டான் கோயிந்து

"இல்லை, ஸ்டார்பக்ஸ்ல டீ குடிச்சுட்டு இப்படிப் பட்ட கிளாஸ்ல எல்லாம்.. "

"அம்மணி! அடங்குங்க!! டீ குடிக்கிறதுன்னா குடிங்க.. இல்லைன்னா கிளாஸைக் கீழ வச்சிட்டு பதிலைச் சொல்லுங்க!!" என்ற பாலாவின் கட்டளைக்கிணங்க, கண்ணை மூடிக் கொண்டு குடித்து விட்டு, நிமிர்ந்தேன்.

"ம்ம்.. இப்போ சொல்லுங்க.. மத்தவங்க நம்ம பதிவில் போடும் பின்னூட்டத்தை எப்படி எடிட் செய்வது?" என்றார் பாலா.. கேள்வியை மறக்காமல்.

"உங்க லாகின் வழியா உங்க பக்கத்தைப் பாருங்க. அதில் இருக்கும் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கு அடியிலும் ஒரு குப்பைத் தொட்டி தெரியும். அதை க்ளிக் பண்ணுங்க."

"ஐய்யோ.. அப்புறம் அழிஞ்சிடுமே.. " என்றான் கோயிந்து.

"இரு இரு.. என்ன அவசரம்? " என்றேன். "இப்போ அந்தப் புதுப் பக்கத்தோட உரல் இப்படி இருக்கும்"

http://www.blogger.com/delete-comment.g?blogID=24180143&postID=115623777191154907

அதுல delete-comment : இந்த வார்த்தைகளை மட்டும் எடுத்துட்டு post-edit இந்த வார்த்தைகளைப் போடணும்.. அப்புறம் இப்படி வரும்:

http://www.blogger.com/post-edit.g?blogID=24180143&postID=115623777191154907

இந்த உரலை ஒரு முறை தட்டி பக்கத்துக்குப் போகணும். இந்தப் பக்கம் நம்ம ப்ளாக்கரின் புதுப் பதிவு போடும் பக்கம்(Create Post) மாதிரியே இருக்கும்.. ஆனா, எடிட் செய்யும் பகுதியில் பதிவுகளுக்குப் பதில் நீங்க தேர்ந்தெடுத்த பின்னூட்டம் வரும்.. இந்தப் பின்னூட்டத்தை வேண்டிய மாற்றங்கள் செய்து பப்ளிஷ் பட்டனைத் தட்டி வெளியிட வேண்டியது தான்..

ஒரு மரியாதைக்கு, வார்த்தைகள் எடிட் செய்யப் பட்டுள்ளது என்று எழுதுவது நல்லது. "

"இது மாதிரி யார் வேணா, யாரோட பின்னூட்டத்தை வேணா மாத்தலாமா? " என்றார் பாலா

"ஆமாம்.. மாத்தலாம்.." என்றேன்..

தீவிர சிந்தனையிலிருந்த கோயிந்து மெல்லத் தலையாட்டினான்..

"என்ன கோயிந்து? என்ன விஷயம்? " என்றார் பாலா

"இப்போ தான் புரியுது, கொஞ்சம் சீனியர் பதிவர்கள் எல்லாம் ஏன் தன்னோட பின்னூட்டத்தைத் தனியாச் சேமிக்கிறாங்கன்னு!" என்று கோயிந்து சொன்ன போது ப்ளாக் இஞ்ஜினியரின் சிஷ்யன் நிஜமாகவே புத்திசாலி தானோ என்று எனக்கு அடுத்த சந்தேகம் வந்துவிட்டது..

"பொன்ஸ், எனக்கொரு சந்தேகம்" என்றார் பாலா என் சிந்தனையைக் கலைத்து, "நான் தானே உங்களுக்கு ப்ளாக் ஆரம்பித்த புதிதில் தமிழ்மணத்தில் சேருவது பற்றி எல்லாம் சொன்னேன். நீங்க எங்கேர்ந்து இந்த விஷயம் எல்லாம் கத்துகிட்டீங்க?"

"அதுவா பாலா..இந்த வார நட்சத்திரம் தான் சொல்லிக் கொடுத்தார்.. பதிவே போட்டிருக்கார் பாருங்க.. நட்சத்திரத்துக்குத் தான் நன்றி.." என்றேன்..

"ஆமாம், இப்படித் தான் ஒவ்வொருத்தர் கிட்டயா ஒவ்வொண்ணு கத்துகிட்டு தனித் தொடர் போட்டு ஊரை ஏமாத்தறீங்களா? உங்களுக்கு அந்த பின்னூட்டம் அழிக்கிறது எப்படின்னு சொல்லித்தர மாட்டேனாக்கும்" என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார்..

"அட, என்னபா நீ.. உனக்குத் தான் அதெல்லாம் ஒண்ணும் தெரியாதே.. பொன்ஸக்காவை ஏமாத்தி இன்னும் ரெண்டு டெக்னாலஜி கத்துகிட்டு அப்புறமா இப்படி சொல்லிருக்கலாம்ல? " என்று உண்மையை உடைத்து என்னை இன்னும் திகைக்க வைத்தான் கோயிந்து..

[பி.கு: ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் இந்த உரல் மாறுபடும். எனவே ஒவ்வொரு பின்னூட்டத்தையும் பப்ளிஷ் செய்தபின் அதன் உரலைக் கண்டுபிடித்து தான் இந்த மாறுதலைச் செய்ய வேண்டும் ]

பிற்சேர்க்கை: பின்னூட்டங்களில் வந்த வழிமுறைகளில், மாயவரத்தான் சொன்னது இன்னும் கொஞ்சம் சுலபமானதாக இருக்கிறது. இந்தப் பக்கத்திற்குச் சென்று, அங்கிருக்கும் பெட்டியில் டெலிட் கமென்ட் பக்கத்தின் உரலை இட்டால், சுலபமாக பின்னூட்டத்தை மாற்ற முடியும். URL-ஐ மாற்ற முயன்று தப்பு செய்யாமல், இது இன்னும் சுலபம்..

தொடர்ச்சி

Monday, August 21, 2006

பாலபாரதி - இஞ்ஜினியர், தமிழ் வலைப் பதிவுகள்

ப்ளாக் இஞ்ஜினியர் பாலாவிடமிருந்து தப்பித்து ஓடி விடலாம் என்று தான் முதலில் நினைத்தேன் (தப்பியோட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்றறிய இங்கு பார்க்கவும்) . ஆனால், அது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. கோயிந்துவை வேறு காரியமாக வெளியில் அனுப்பிய பொறியாளர், அடுத்து என்னைக் குறிவைத்தார்.

"பொன்ஸ், உங்களுக்கு இந்த பின்னூட்டத்தை மொத்தமா அழிக்கத் தெரியுமா?"

"அது ஒண்ணும் பெரிய மேட்டர் இல்லையே பாலா! ரொம்ப சுலபம். நீங்க உங்க ப்ளாக்குக்குப் போங்க. பின்னுட்டப் பெட்டியில் ஒன்றும் தட்டச்சாமலே, உங்க பெயரையும், கடவுச் சொல்லையும் கொடுங்க. இப்போ ஒவ்வொரு பின்னூட்டத்துக்கு அடியிலும், ஒரு குப்பைத் தொட்டி தெரியும் பாருங்க. அதைத் தட்டினா, "பின்னூட்டத்தை மொத்தமா அழிக்கவா? , இல்லை அடையாளத்தை விட்டுவைக்கவா?" ன்னு கேட்கும். பதில் சொல்லி அழிங்க.. அவ்வளவு தானே" என்றேன்.

"ஏம்மணி, என்னன்னவோ செய்யுறோம், இது தெரியாதா எனக்கு? உங்க பக்கத்துல இருக்கிற பின்னூட்டத்த அழிங்க, அழிக்காதீங்க. என்ன வேணா செய்யுங்க. அடுத்தவன் பக்கத்துல இருக்கும் உங்க பின்னூட்டத்தை மொத்தமா அழிக்கத் தெரியுமா?"

நான் ஒரு நிமிடம் பயந்து போனேன். பாலா நிஜமாவே பெரிய பொறியாளர் தானோ? நான் தான் தப்பா நினைத்திருக்கேனோ.?!!

"எப்படி பாலா செய்வீங்க?" இதைக் கேட்ட போது என் குரல் எனக்கே கேட்கவில்லை.

"அது சொல்றேன். அதுக்கு முந்தி, பின்னூட்டத்தில் ஒரு சில வார்த்தைகளை மட்டும் நல்லா டார்க்கா போடுறீங்களே எப்படி? அதைச் சொல்லுங்க. இதைச் சொல்றேன்" என்றார்.

"சரி, பின்னூட்டத்தில் டைப் பண்ணும் போது, அங்கயும் சில டேக்(tag) இருக்கு. கொஞ்சம் தான்:



இப்போ பின்னூட்டத்தில் பொன்ஸ் - இந்த வார்த்தையைத் தனிச்சுக் காட்டணும்னு வைங்க. இதுக்கு முன்னும் பின்னும்


போடணும். இப்படி:

இப்படிப் போட்டா, இது நல்லா தடியா, தனிச்சுத் தெரியும்..

அடுத்து இந்த வார்த்தைக்கு ஒரு லிங்க் கொடுக்கணும்.. பொன்ஸ் -> இதுக்கு லிங்க்: http://poonspakkangkal.blogspot.com

அப்போ டேக் பயன்படுத்தி இப்படி எழுதணும்:



அப்புறம், ஒரு வார்த்தையைச் சாய்வெழுத்தா எழுதவேணும்னா, பொன்ஸ் இப்படி வரணும்னா, i tag பயன்படுத்தணும்.. இப்படி:


அவ்வளவு தான்.. புரிஞ்சிதா?"

"ஆமாம்.. பெரிய, ராக்கெட் டெக்னாலஜி!! இல்ல, அவ்வளவு பெரிய விஷயம் சொல்லித் தரப் போறேனே, அது உங்களுக்குப் புரியுமான்னு பார்த்தேன். பரவாயில்லை முதல் அடியில் தேறிட்டீங்க..

இன்னும் ஒண்ணு சொல்லுங்க.. நம்ம சரவணன் கேட்கிறாரு, மத்தவங்க அனுப்பும் பின்னூட்டத்தை, பப்ளிஷ் செய்த பிறகோ முன்னாலோ, அதன் வார்த்தைகளை மாற்ற முடியுமா?"

பாலாவின் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்குள் கோயிந்து,

"காப்பி வாங்க போனேன், டீ வாங்கி வந்தேன்" என்று பாடிக் கொண்டே வந்தான்.. அவன் கொண்டு வந்த டீயைக் குடித்து விட்டு நான் சொன்ன பதில் நாளை..

[குறிப்பு: இந்தப் பதிவிலேயே பின்னூட்டம் போடுபவர்கள் ஏதேனும் ஒரு டேக்கை முயற்சிக்கலாம்.. வசதியாக இருக்கும் ;) ]

தொடரும்

திருவாளர் கோயிந்தும் அப்பாவி பொன்ஸும்

சென்னைக்கு வந்து நான் எது நடந்துவிடும் என்று பயந்து கொண்டே இருந்தேனோ, அது நடந்தே விட்டது.. ஆம், நேற்று எதேச்சையாக தமிழ் வலைப்பதிவுகளின் ஒரே ப்ளாக் இஞ்சினியரான பாலபாரதியையும் அவரது நண்பர் திருவாளர் கோயிந்தையும் சந்திக்க வேண்டியதாகிவிட்டது. போன இடத்தில் ஒரு கணினியும் அகப்படவே திருவாளர் கோயிந்து காலம் நேரம் பார்க்காமல் பதிவு பொறியாளரிடம்(Blog Engineer ;) ) தான் கற்ற வித்தை ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடத் தொடங்கினார்.

முதலில் அத்தனை ஆர்வமாகக் கேட்கவில்லை என்றாலும், பொறியாளரின் பதிவில் இருக்கும் தொட்டால் மட்டுமே தோன்றும் பக்கப்பட்டி (அதாங்க, sidebar) எப்படிப் போடுவது என்னும் ஒரே விஷயம் என் ஆர்வத்தைத் தூண்ட, அதை மட்டுமே தெரிந்து கொள்வதற்காக, பிறவற்றையும் கவனிக்க வேண்டியதாகிவிட்டது.

"அம்மணி பொன்ஸூ, பதிவுல லிங்க் கொடுக்கிறது எப்படின்னு உனக்குத் தெரியுமா?"என்றபடித் தொடங்கினார் கோயிந்து..

"லிங்கா? அதான் எனக்குத் தெரியுமே.. இதோ புது போஸ்ட் அடிக்கும் போது கம்போஸ் மோடு(Compose Mode) க்குப் போய்ட்டு, அதுல எந்த நாலு வார்த்தைக்கு லிங்க் கொடுக்கணுமோ, அதை மட்டும் செலக்ட் பண்ணி, இதோ இந்த பட்டன் இருக்கு பாரு


இதைத் தட்டணும்.. அப்புறம் ஒரு புது விண்டோ வரும்.. அதுல உன்னோட லிங்கைப் போட வேண்டியது தான்.."


"சரி.. அத்த வுடு.. கொஞ்சம் லெட்டர் பெருசாவும், கொஞ்சம் சின்னதாவும் எப்படி மாத்தணும்? அது தெரியுமா?" என்று அடுத்த டெஸ்ட் வைத்தான் கோயிந்து..

இதுவரை அத்தனை ஆர்வமாக பதில் சொல்லாமல் இருந்த நான் இந்தக் கேள்வியில் அதிக உற்சாகத்தோடு சொல்ல ஆரம்பித்தேன்..
"மறுபடி உனக்கு வேண்டிய நாலு வார்த்தையை செலக்ட் பண்ணு.. மேல பாரு Normal Size-னு ஒரு ட்ராப் டவுன் இருக்கு பாரு..."


"என்னாது? ட்ராப்பு.. டவுனா?!! இன்னாது அது?"


"அதாம்பா.. இங்க இருக்குப் பாரு.. "


"இதை எடுத்து உனக்கு வேணுங்கிற சைஸுக்கு மாத்து.. அவ்வளவு தான்.."


"அம்புட்டு தானா?" என்று கோயிந்து கேட்டுக் கொண்டிருக்கும் போதே இஞ்சினியர் சார் தனது திடீர் போன் காலை முடித்துக் கொண்டு வந்தார்..


நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எனது ஞானத் தந்தை கோயிந்து நான் ஏதும் பேசும் முன், இஞ்ஜினியர் சாரிடம், "ஏம்பா, ஏதோ, லிங்க் போடுறது எப்படின்னு கத்துக்க சொன்னியே.. இதோ பாரு இப்படித் தான் போடணுமாம்.. " என்றான்..

வாயடைத்து பார்த்துக் கொண்டே இருக்கும் போது அடுத்து சொன்னான்.

"இதைத் தான் நானே முட்டி மோதி கத்துகிட்டேனே, அடுத்து அந்தப் படம் போடுறது எப்படின்னு கொஞ்சம் சொல்லுறது?" என்று..

"அட.. என்ன பொன்ஸ் அப்படிப் பார்க்கறீங்க.. சொன்னேனே.. நம்ம சிஷ்யப் பயல் கோயிந்து.. ரொம்ப புத்திசாலி.." என்று பாலா என்னைப் பார்த்து சொல்ல, நான் எஸ்கேப்..

(பதிவில் லிங்க் போடுவது எப்படி, படம் போடுவது எப்படி என்று சிலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க கோயிந்துவைப் பாலாவிடமிருந்து சில நாள் கடத்தி வந்து இந்தத் தொடர்.. வேறு ஏதாவது எனக்குத் தெரிந்த ப்ளாக் விஷயங்கள் கேட்டால், அதையும் சேர்த்துக் கொள்கிறேன்.. :) )



தொடரும்

Sunday, June 18, 2006

ஏன் என்ற கேள்வி.. -2

மட்டுறுத்தல் நண்பன் - நண்பனா? எதிரியா? என்று கேட்டிருந்தோம். இந்த விவாதத்திற்குப் பதில் வருமா என்று சந்தேகமாகவே இருந்தது. உங்கள் கருத்துகளைக் கண்ட பின் தான் செயலியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. வெறும் புரிதல் பிரச்சனைகளே என்று தெளிவானது. கருத்தளித்த எல்லாருக்கும் நன்றி.

இந்தப் பதிவில், முன் கேட்ட இரண்டு கேள்விகளுக்கும் அதற்கு மேல் மற்ற கேள்விகளுக்கும் பதில் சொல்லி உள்ளோம். மேலும் சந்தேகங்கள் இருப்பின் விவாதிக்கலாம்:

முதலில் போன பதிவில் முன்வைத்த இரண்டு கேள்விகள்:
1. கொடுக்கப்படும், நினைவில் வைக்கப்படும் இந்த கடவுச் சொல்லை எப்படிப் பயன்படுத்துகிறார்கள்? எங்காவது தேக்கி(store) வைக்கப்படுகிறதா?(அப்புறமேட்டு ரமணி எடுத்துக்கிடத் தான் :) )

2. நினைவில் வைக்கப்படும் கடவுச் சொல்லை வேறு யாராவது நிங்கிலிருந்து எடுத்தால் என்ன செய்வது?

டெக்னிகல் சமாச்சாரங்களான இவற்றிற்குப் பதில் சொல்லி விட்டு அடுத்த சாதாரண சமாச்சாரங்களுக்குப் போகலாம்.
கொடுக்கப்படும் கடவுச்சொல், நிங்குக்கு அனுப்பப்படுவதில்லை. இந்த ப்ளாக்கர் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உங்கள் வலை உலாவியே(Browser) தான் மறுமொழி மட்டுறுத்தல் பக்கத்தைத் திறக்கிறது. அதனால் தான் முதன் முறையாக இந்தப் பக்கத்தைத் திறக்கும் போது உங்களிடமே உங்கள் பயனர்/கடவுச்சொல்லைக் கேட்கிறது.

அடுத்து, இந்த கடவுச்சொல்லை அன்னியனின் மென்பொருள் எங்கும் பயன் படுத்தவோ சேர்த்து வைக்கவோ இல்லை. இது வலை உலாவிக்கும் ப்ளாக்கருக்கும் மட்டுமே உள்ள கொடுக்கல் வாங்கல்.

இப்போது நீங்கள் தமிழ்மணம்/தேன்கூடு படிக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட வலையுலாவி ஜன்னல்களைத் திறப்பீர்களேயானால், அவற்றில் ஒன்றில் லாக் இன் செய்தால் போதும் அல்லவா? நீங்கள் தான் பயனர் என்பது ஒரு முறை லாக் இன் செய்தாலே எப்படி எல்லா புது உலாவிகளுக்கும் போய்ச் சேருகிறதோ அதே மாதிரி, ஏன் அதே காரணத்தால் தான் இந்த அன்னியன் மென்பொருளிலும் மறுமொழிகள் மட்டுறுத்தப்படுகின்றன. ஆக, உங்கள் கடவுச்சொல் அன்னியனின் கையில் கிடைக்கவே முடியாத போது ரமணிக்கும் கிடைப்பது அரிது தான். ப்ளாக்கரிலிருந்து வேறு யாரும் நமது கடவுச்சொல்லை எடுத்து விட மாட்டார்கள் என்று எப்படி நம்புகிறோமோ, அதே மாதிரி, இங்கே கொடுக்கப்படும் கடவுச்சொல்லையும் வேறு யாரும் எடுக்க முடியாது

இனி மற்ற பின்னூட்டக் கேள்விகள்:

3. என்னிடம் 24 மணி நேர இணையமோ, கணிணியோ இல்லையே.. நான் இதைப் பயன் படுத்த முடியுமா?

ப: கண்டிப்பாக முடியும். 24 மணி நேரமும் பயன்பாட்டில் கணினி இல்லாவிட்டாலும் எப்போது கணினி பயன்பாட்டிற்கு வருகிறதோ அப்போது ப்ளாக்கரிலிருந்து மறுமொழி மட்டுறுத்துதலை விட, அன்னியலோகம் பக்கத்தைத் திறந்தாலே போதும்.

4. எந்தக் கணினியில் இருந்து மின்னஞ்சல் முகவரி கொடுத்தோமோ அந்த கணினி எப்போதும் பயன்பாட்டில் இருக்கவேண்டுமா?
ப: நிச்சயமாக இல்லை. எந்தக் கணினியில் வேண்டுமானாலும் இதைப் பயன் படுத்தலாம். எப்போது வேண்டுமானாலும்.

5. அடிப்படைக் கணிணி அறிவு அதிகம் இல்லாத நான், இந்த ப்ளாக்கர் மட்டுறுத்துதலைத் தாண்டி ஏன் வர வேண்டும்? ஏதோ ஒன்றிரண்டு பின்னூட்டங்களில் சந்தேகம் வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளுகிறேன்..
ப: ஒரு வேளை உங்களுக்குச் சந்தேகம் வராத வார்த்தைகளில் பின்னூட்டங்கள் வரும்போது பின்னூட்டியவரின் பக்கத்துச் சென்று அதன் நம்பகத் தன்மையைப் பார்த்து சோதிப்பதும் அதிகப்படி வேலையாகிறதே.

6. அன்னியலோகமே ஒரு வேளை போலியான சைட்டாக இருந்தால்? எனது விவரங்களை விலை பேசும் ஏமாற்றுப் பக்கமாக இருந்தால்?
ப: அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். அன்னியலோகம் நிச்சயம் நம்பக் கூடியதே. மேலும், நாம் நமது ப்ளாக்கர் ஐடியைத் தரப் போவதில்லையே..வெறும் ஜிமெயில் கடவுச் சொல் தானே. அதிலும் பின்னூட்ட மட்டுறுத்தலுக்காகவே தொடங்கப் பட்ட புதிய ஜிமெயில் அக்கவுன்டைத் தருவதால், இதை வைத்து எதுவுமே செய்ய முடியாது.

7. மறு மொழி மட்டுறுத்தலுக்கு ஒரு வெண்பட்டியல், இன்று ரமணி தயாரித்திருக்கிறார். நாளை வேறொருவர் வந்து வேறு ஒரு பட்டியல் தருவார். எல்லாருடைய பட்டியலுக்கும் சென்று என் பெயரைச் சேர்க்கச் சொல்ல வேண்டுமா?
ப: தமிழ்மணத்தில் சேரும் பதிவர்களின் பெயர்களைத் தானாகச் சேர்க்க முயற்சி செய்வோம். அது பற்றி சீக்கிரம் அறிவிக்கலாம்

8. இந்த மறுமொழி மட்டுறுத்தலை ஏற்றால், அதர் மற்றும் அனானி ஆப்ஷனை விட்டு விட வேண்டுமா?
ப: அதர் மற்றும் அனானி ஆப்ஷனை நீக்க வேண்டிய தேவை இல்லை. இவற்றின் மூலம் இடப் படும் பின்னூட்டம் தானே பிரசுரமோ/மறுக்கப் படவோ மாட்டாது. அதை நீங்கள் தான் செய்ய வேண்டும். ப்ளாக்காருக்குப் போய்ச் செய்ய வேண்டும்.

9. புதுப் பதிவர்கள் வந்தால் அவர்கள் பின்னூட்டம் ரிஜக்ட் செய்யப் படுமா?
ப: புதுப் பதிவர்களின் பின்னூட்டங்கள் உங்கள் பின்னூட்டப் பெட்டியில் தான் இருக்கும். வேண்டுமென்றால் எடுத்து பப்ளிஷ் செய்யலாம்.

10. புதுப் பதிவர்களின் பின்னூட்டங்களும் இருக்கும், அதர் அனானி ஆப்ஷன் பின்னூட்டங்களும் இருக்கும் என்றால், இந்தச் செயலி எதைத் தான் ரிஜக்ட் செய்யும்?
ப: அ. ஆட்சேபிக்கக் கூடிய வார்த்தை உள்ள பின்னூட்டங்கள் (பல வார்த்தைகள் எங்கள் பட்டியலில் உள்ளது. ஏதேனும் புது வார்த்தை சேர்க்கவேண்டுமாயின் ரமணியிடம் சொல்லவும்)
ஆ. வெண்பட்டியிலில் உள்ள பதிவரது பெயருடன் வேறு ஒரு ப்ரோபைல் எண்ணிலிருந்து வரும் பின்னூட்டம் (போலி)
இ. கறுப்புப் பட்டியலில் உள்ள ப்ரோபைல் எண்கள்

இத்துடன், இந்தச் செயலியால் எனக்குத் தெரியும் நன்மைகளையும் சொல்லி விடுகிறேன் :
1. நிச்சயமாக வெண்பட்டியலில் இருப்பவரின் பின்னூட்டங்கள் மட்டும் தான் அங்கீகரிக்கப்படுவதால், பின்னூட்டங்கள் வரும்போது அவற்றை இட்டவரின் நம்பகத் தன்மையைச் சோதித்து அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லாது போகிறது.
2. தமிழ்மணத்தில் மட்டுறுத்தல் வந்த புதிதில் அது என்னவோ பெரிய தொந்தரவு என்ற எண்ணத்தை வெளிப்படுத்தும் பல பதிவுகளைக் காண முடிந்தது.(அந்தச் சமயம் நான் வலைபதிய வரவில்லை). இந்த மட்டுறுத்தல் நண்பன் பக்கத்தைத் திறந்து வைத்துக் கொண்டால், நம்பகமான பின்னூட்டங்கள் தானாக பிரசுரித்துக் கொள்கின்றன. நாம் இன்னொரு பக்கம் நமது வேலையைச் செய்து முடித்து விட்டு வந்து பார்க்கலாம்.
3. தனி மடல் என்று போட்டு வரும் பின்னூட்டங்கள் தானாக பிரசுரிக்கப்படுவதில்லை என்பதால், அந்தக் கவலையும் இல்லை.

இத்தனையும் சொன்ன பின், இந்தப் பதிவைப் படிப்பவருக்கு ஒரு வேண்டு கோள்.

பின்வரும் கேள்விக்கு ஆம் இல்லை என்று காரணத்துடன் பதில் சொன்னால், மேல் விளக்கங்கள் கொடுக்க வசதியாக இருக்கும்:

1. மட்டுறுத்தல் நண்பனை நீங்கள் பயன் படுத்துகிறீர்களா?
2. ஆம் எனில் ஏதேனும் மாற்றங்கள் தேவையா?
3. இல்லை எனில் ஏன்? (அட போங்கப்பா.. இதெல்லாம் வேஸ்ட்.. ட்ரெடிஷனல் மாடரேஷன்(traditional moderation) தான் த்ரில்லிங்கா இருக்கு என்றும் சொல்லலாம் )

மட்டுறுத்தல் நண்பன் - நண்பனா? எதிரியா?

பொதுவாக நான் பதிவுகளில் டெக்னிகல் சமாச்சாரங்கள் பேசுவதில்லை. தொழில் முறையில் தினசரி பயன்படுத்தி வரும் விஷயங்களை வலைப்பதிவுகளிலும் பேசுவது எனக்கு ரொம்பவும் அலுப்பான ஒன்று. ஆனால், நேற்று வழக்கம் போல எல்லா வலைப்பதிவுகளுக்கும் போய் வந்து கொண்டிருந்தபோது, திரு மகேந்திரனின் பதிவில் மட்டுறுத்தல் செயலியைப் பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு டுபாக்கூர் என்பவரும் பின்னூட்டமிட்டு அன்னியலோகத்தைப் பற்றிய தன் 'உறுதியான சந்தேகங்களை'ச் சொல்லி இருந்தார்.

ரமணி தன்னளவில் அதற்கு பதில் சொல்லி விட்டார் என்ற போதும் எனக்கு இன்னும் கொஞ்சம் சுலபமாக இதை விளக்கிச் சொல்லலாமே என்று தோன்றியது. அதன் விளைவே இந்தப் பதிவு.

ரமணியின் மட்டுறுத்தல் நண்பன் செயலியை அன்னியலோகம் என்னும் பக்கத்தில் இருந்து பயன்படுத்தலாம். மட்டுறுத்தல் நண்பன், மூன்று வெவ்வேறு உதவிகளைச் செய்கிறான்

* பரிசீலித்து மட்டுறுத்தல் ஆலோசனைகளை மட்டும் வழங்கு (show suggestions only)
* தன்னியக்க நிராகரித்தல் மட்டும் (autoreject only)
* தன்னியக்க பிரசுரித்தல் மற்றும் நிராகரித்தல் (autopublish and autoreject)

இது எல்லாவற்றிற்கும் தேவை உங்கள் ஜிமெயில் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல். இரண்டாவது மற்றும் மூன்றாவது வசதிகளைப் பயன்படுத்த மட்டுமே உங்கள் ப்ளாக்கர் பயனர் பெயரும் கடவுச் சொல்லும் தேவை.

பரிசீலித்து மட்டுறுத்தல் ஆலோசனைகளை மட்டும் வழங்கு (show suggestions only)
நிங்க் இணையதளம் மட்டுறுத்தல் செயலிக்கு ஒரு செய்தியோடையைக் கொடுக்கிறது.. அதாவது லைப்ரரி என்கிறோம். நிங்கில் உங்கள் ஜிமெயில் பயனர் பெயரையும் கடவுச் சொல்லையும் கொடுத்தால், அந்த மெயில் பாக்ஸினுள் நுழைந்து ஒவ்வொரு பின்னூட்ட மெயிலாக எடுத்து நோட்டம் விட்டு அந்த பின்னூட்டம் உங்களுக்கு அனுப்பியவர் தமிழ்மணத்திலோ தேன்கூட்டிலோ இருப்பவர் தானா, இல்லையா என்பதைக் காட்டுகிறது..(தமிழ்மணத்தில் இருப்பவர் பற்றிய விவரங்களை வெண்பட்டியலாக ரமணி தனியாகச் சேகரித்து வைத்துள்ளார்) அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த பின்னூட்டத்தை அனுமதிக்கவும், இல்லாத போது அதை அனுமதிக்காமல் மறுக்கவும் இது பரிந்துரைக்கிறது.

மற்ற இரண்டு ஆப்ஷன்கள் அப்படி அனுமதிக்கக் கூடிய பின்னூட்டங்களை அனுமதிப்பதற்கும், சரியில்லை என்று கருதப்படும் பின்னூட்டங்களைத் தானே ரிஜக்ட் செய்வதற்குமானவை.

இந்த இரண்டு ஆப்ஷன்களுக்குத் தான் ப்ளாக்கர் பயனர் பெயரும் கடவுச் சொல்லும் தேவை. முதல் ஆப்ஷனுக்குத் தேவை இல்லை.

அடுத்தது, டூபாக்கூர் வைத்த முக்கிய குற்றச் சாட்டு,
//அங்கு சேரும் எல்லாரும் மெயில் முகவரியையும் அதன் பாஸ்வேர்டையும் கொடுத்தால் எல்லா பாஸ்வேர்டும் வெங்கட்ரமணிக்கு போய்ச் சேருகிறது. அதன்பிறகு வேண்டாதவர்களை (வலைப்பூக்களை) இந்த பேஸ்வேர்டு கொண்டு அழித்து விட முடியும்.//

இதுவரை விளக்கிய வகையில், முதல் ஆப்ஷனைப் பயன்படுத்த உங்கள் ப்ளாக்கர் ஐடி தேவையே இல்லை. வெறும் ஜிமெயில் ஐடியே போதும். அதுவும் புத்தம்புதிதாக, மட்டுறுத்தலுக்கு மட்டும் நீங்கள் துவங்கப் போகும் ஐடியே போதும். எனவே அதை வைத்து எதையும் அழிக்க முடியாது.. (அந்த ஜிமெயில் ஐடியைக் கூட அழிக்க முடியாது.. பாவம் ரமணி!! )

மற்ற இரண்டு ஆப்ஷன்களை எடுத்துக் கொண்டோமானால், அவற்றில் ப்ளாக்கர் பயனர் பெயர் கொடுக்கப் படுகிறது. இந்தப் பெயரை அந்தப் பக்கத்தை மூடும் வரை வலைஉலாவிகள்(Browser) நினைவில் வைத்துக் கொள்கின்றன.

இதில் தோன்றக் கூடிய சந்தேகங்கள் இரண்டு:
1. கொடுக்கப்படும், நினைவில் வைக்கப்படும் இந்த கடவுச் சொல்லை எப்படிப் பயன்படுத்துகிறார்கள்? எங்காவது தேக்கி(store) வைக்கப்படுகிறதா?(அப்புறமேட்டு ரமணி எடுத்துக்கிடத் தான் :) )
2. நினைவில் வைக்கப்படும் கடவுச் சொல்லை வேறு யாராவது நிங்கிலிருந்து எடுத்தால் என்ன செய்வது?

பதில்கள் சுலபம் தான். நீளமாகப் போய்விட்டதால், அடுத்த பதிவில் பதில்கள் தொடருகிறேன்.

ஒன்று மட்டும் சொல்லி இந்தப் பதிவை முடிக்கிறேன்.
இந்த மென்பொருளை உருவாக்க ரமணிக்கு ஆன பணச்செலவு அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை என்ற போதும், மென்பொருளாளரின் வாழ்வில் கணினிக்கு அருகில் செலவிடாத ஒவ்வொரு மணித் துளியும் எத்தனை உபயோகமானது என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அதிலும் ரமணியின் வீட்டில் ஒரு புது வரவு வேறு வந்திருக்கும் சமயத்தில் இந்த அன்னியன் மென்பொருளுக்கு அவர் செலவு செய்த ஒவ்வொரு நிமிடமும் பெரிய முதலீடு தான். இது இலவசம் என்பதுடன், தேன்கூடு, தமிழ்மணம் போன்றவர்களால் விளம்பரம் செய்யப்பட்டும் இதை அதிகம் பேர் பயன்படுத்த முன்வராததுமன்றி, (டூபாக்கூர் போன்றவர்களால்) உருவாக்கியவரின் நோக்கத்தை கேள்விக்குரியதாக்கும் போது தான் அலுப்பாக இருக்கிறது.

வேறு கேள்விகள் இருந்தாலும் பின்னூட்டத்தில் சொல்லலாம்.