Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Tuesday, May 08, 2007

சற்றே பெரிய சிறுகதை

"கற்பகம், வர்ற பதினஞ்சாந்தேதி, எம் மூணாவது மருமவ சாந்திக்கு வளைகாப்பு சீமந்தம் வச்சிருக்கேன். நீ வீட்டுக்கு மூத்தவளா ஒரு வாரம் முந்தியே வந்திருந்து நல்லபடியா நடத்திக் கொடுக்கணும். பஸ்ஸு கெடைக்கல, ரயில்ல சீட்டெடுக்க மறந்திட்டோம்னு ஏதாச்சும் சொன்னே பாரு, கெட்ட கோவம் வரும் எனக்கு"

சமையலறையில், இரவு சாப்பாட்டுக்காக காய் அரிந்து கொண்டிருந்த சந்தனாவுக்கு, சின்ன மாமியார் இதைச் சொன்ன உடனே புரிந்து போனது, இவர்களது பேச்சுவார்த்தை அடுத்து எந்தப் பக்கம் போகும் என. பெருமூச்சு விட்டுக் கொண்டாள். கேட்டுக் கேட்டு மரத்துப் போன விசயம் தான். ஆனாலும், அவளுடைய அத்தை, புதிய விசயம் மாதிரி பேசும் போது கோபம் வந்து விடுவது வழக்கம்.

"ம்ம். என்னாத்தச் சொல்லுறது?! வீட்ல ஒரு மலட வச்சிகிட்டு இப்படி வளைகாப்பு, புள்ள பொறப்புக்கெல்லாம் போக முடியுமா? வர்றவ போறவ எல்லாம் இதையே கேட்டு உசிர வாங்குவாளுக. உங்கிட்ட சொல்றதுக்கென்ன, போன மாசம் நம்ம ரேவதி இல்ல, அவளோட, நாலாவது பேத்திக்குக் காதுகுத்து. இந்தப் பொண்ணையும் கூட்டித்தான் போயிருந்தேன். எனக்குன்னு வந்து சேர்ந்திருக்குது பாரு! நேர போய் சின்னக் கொழந்தைய தூக்கிடுச்சு. ரேவதி என்னடான்னா, என்ன தனியா கூப்பிட்டு சொல்லுது.. 'யக்கா, தப்பா நெனக்காதே, புள்ளைக்கு எதனா ஆகிடப் போவுது. கொஞ்சம் எறக்கி வுடச் சொல்லுன்னு'.. " மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டாள் கற்பகம்மாள்..

வெங்காயம் அரியத் தொடங்கும் முன்பே, சந்தனாவுக்கு கண்ணில் நீர் எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது. அன்றைக்கு அவள் செய்த பிழை என்ன என்று இப்போதும் அவளுக்குப் புரியவில்லை. ரேவதியின் மகள் சசிகலாவே தான் அந்தக் குழந்தையை அவள் கையில் கொடுத்து, "கொஞ்சம் பார்த்துக்க சந்தனா!" என்று சொல்லியிருந்தாள். அவளுடைய அம்மா அப்படி ஒரு ஆர்ப்பாட்டம் செய்த போது கூட, சந்தனாவுக்கு ஆதரவாகப் பேசியது சசி தான். இங்கே இந்தப் பேச்சு பேசும் அவளுடைய அத்தை தான், அன்றும் ரேவதி மதனியையும் தூண்டிவிட்டிருக்க வேண்டும் என்று இப்போது தோன்றியது.

"ஆமாங்க்கா, கண்ணாலமாகி ஆறு வருசம் இருக்குமில்ல? செந்தில் கல்யாணத்துக்கு முன்னாலயே வந்திடிச்சில்ல சந்தனா? இன்னுமா ஒரு புழுபூச்சி உண்டாகலை?" அக்காவுக்குச் சளைக்காத தங்கை தான்.

"அதையேங் கேக்குற? போகாத கோயில் இல்ல.. பார்க்காத வைத்தியமில்ல. எல்லா வைத்தியரும், சொல்லி வச்ச மாதிரி இதுகிட்ட எந்தக் கொறையும் இல்லங்குறானுங்க.. இவுக அப்பன் நெசமாவே சொல்லி வச்சிருப்பான் போலன்னு திடுதிப்னு கெளம்பி நமக்கு வேண்டிய டாக்டரிட்ட கூட போய்ப் பார்த்திட்டோம். ஒண்ணும் நடக்க மாட்டேங்குது. என் பரம்பரை குமரனோட முடிஞ்சிடும் போலக் கிடக்கு!"

"ஏங்கா, ஒருவேளை, குமரனுக்கு ஏதாச்சும் கொறை..." சந்தேகத்தை முடிக்கும் வரை கூடப் பொறுக்கவில்லை கற்பகத்துக்கு..

"பல்லப் பேத்துப்புடுவேன். ஆரப் பார்த்து என்ன கேட்ட? அவன் சிங்கம்டீ. அவுக அப்பா மாதிரியே அவனும் நல்ல ரோசக்காரன். இதே மாதிரி இந்தக் கிறுக்கச்சியோட அப்பன் கேட்டான்னு ஒருநா போய் நல்ல டாக்டர்கிட்ட சொல்லி சர்டிபிகேட் வாங்கியாந்து காட்டிட்டானில்ல.. அதெல்லாம் அவனுக்கு ஒரு கொறையும் இல்ல."

சிரித்துக் கொண்டாள் சந்தனா. இவள் அப்பா 'சொல்லி' இருக்கக் கூடாதென்று இவர்கள் டாக்டரை முடிவெடுப்பார்கள். அவன் டாக்டர் தோழனிடம் 'சொல்லியே' வாங்கிவரும் சர்டிபிகேட்டை இவளுடைய அப்பா சட்டம் போட்டு மாட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.. நல்ல கதை!

"சரி, அது போவட்டும், சந்தனா காலு எப்படி இருக்கு?"

"ஆமாமாம். அப்படியே துள்ளி குதிச்சு ஓடுவாளாட்டம் தான். ஏமாத்தி கட்டிவச்சிட்டானுவ.. எல்லாம் என் தலையெழுத்து" முந்தியை எடுத்து, இல்லாத கண்ணீரைத் துடைக்கலானாள் கற்பகம்.

இதற்கு மேல் அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று சந்தனாவுக்கு நன்றாக தெரியும். ஊரெல்லாம் தேடி கட்டிவைத்த தன் மகனுக்கு எப்படி ஊனமுற்ற ஒருத்தி வந்து சேர்ந்தாள் என்பதை உருக்கமாக விவரிப்பாள். அதெல்லாம் கைதேர்ந்தவள். கடந்த ஆறு வருடங்களாக இந்தக் 'கொடுமையை' அவளும் வந்து போகிறவர் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறாள். பாவம், சந்தனா எந்த ஒரு கணத்திலும் பொறுமை இழந்து கத்துவதில்லை. அவள் மாமியாருக்குத் தான் பொறுமை இல்லாமல் போய்விடுகிறது.

************************
எல்லா திருமணங்களும் போல, சந்தனா-குமரன் கல்யாணமும் சொர்க்கத்தில் பெரியோர் ஆசிகளுடன் தான் நிச்சயிக்கப்பட்டது. கைநிறைய சம்பாதிக்கும் பெண்ணாதலால், பத்து சவரன் நகையும் குமரனுக்கு ஒரு பைக்கும் என்று குறைவான பேரத்துடனேயே முடிந்தும்விட்டது. எல்லாப் பெண்களையும் போல, நிறைய கற்பனைகளுடன் தான் அந்த வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்தாள் சந்தனா. ஒரேயடியாக அவை அனைத்தும் பொய்யாகவுமில்லை.

குமரன் சராசரி கணவனாக இருந்தான். காதலை அளவுக்கதிகமாக, பொழியவும் இல்லை; இப்போது போல் முகம் பாராமல் போனதும் இல்லை. ஒரே மகனானதால், தன் தாய்க்குரிய பணிவிடைகளைச் செய்யும் மனைவியைத் தான் விரும்புவான் என்பதையும் முதலிரவிலேயே தெளிவாக்கி இருந்தான். கற்பகம் என்ன சொன்னாலும், செய்தாலும் பொறுமையாக போக வேண்டும் என்பதில் கறாராக இருந்தான் குமரன். 'ஓஹோ!' என்றில்லாவிட்டாலும், சசியின் வாழ்வு போல், சராசரியாகவாவது அமைந்திருக்கும், அந்த விபத்து மட்டும் நேராமல் இருந்திருந்தால்...

தினசரி ஒரு மணி நேர மின்தொடர்வண்டி பயணத்தில் இருந்தது சந்தனாவின் அலுவலகம். திருமணமான நான்காம் மாதம், அதிகாலை எழுந்து பரபரப்பாக சமைத்துவைத்து, கற்பகத்துக்கு மதிய காப்பியும் போட்டு பிளாஸ்கில் வைத்துவிட்டு, (இப்படி காலை போடும் காப்பி மதியம் பழசாகிவிடுகிறதென நொள்ளை வேறு!), அவள் திடீரென கேட்ட தோசைக்கு மாவரைத்ததில் சில நொடிகள் தாமதமாகிப் போய்விட்டது அன்று. அவசர அவசரமாக ரயில்வே ட்ராக்கைக் கடந்த ஒரு இக்கட்டான தருணத்தில் சந்தனாவின் வலது கால் மீது ரயில் ஏறி இறங்கி போய்விட்டது. நல்லவேளையாக நிறைய ரத்த சேதம் ஆவதற்குள், சந்தனாவின் தோழி பார்த்து, ஆம்புலன்ஸ் அழைத்து ஆஸ்பத்திரிக்கே கொண்டு போய்விட்டாள்.

அந்த ஒற்றை விபத்து, சந்தனாவின் மனதையும் குமரனுடன் எப்படியும் சேர்ந்து கட்டிவிடலாம் என்று அவள் நினைத்திருந்த அழகான கூட்டையும் சுழற்காற்றாக, கலைத்துப் போட்டுவிட்டுப் போய்விட்டது.

அவசர அவசரமாக காலில் ஒரு ஆபரேசன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அணுகுகையில், யாரை அழைப்பது என்று குழம்பி, அவள் தோழி சந்தனாவின் கணவனுக்குப் போன் செய்தாள். "அய்யய்யோ அப்படியா! பெரிய விபத்தா? நான் இப்போ ஒரு மீட்டிங்கில் இருக்கேன். அவங்க அப்பாவுக்குச் சொல்லிடறீங்களா?" என்று குரலில் மட்டுமே பதற்றத்தைக் காட்டிச் சொன்னானாம் குமரன்.

சந்தனா கண் முழித்துப் பார்த்தபோது அம்மா அவள் பக்கத்தில் உட்கார்ந்து ஆதுரமாக முடியைக் கோதி விட்டுக் கொண்டிருந்தாள். அப்பா தான் பணம் செலுத்தி ஆபரேசனுக்கு முடிவு செய்யும் பேப்பரில் கையெழுத்து போட்டார் என்பதையும் குமரனோ கற்பகமோ இன்னும் ஒருமுறை வந்து அவளைப் பார்க்கக் கூட இல்லை என்பதையும் அறிந்த போது சந்தனாவுக்குச் 'சீ' என்றாகிவிட்டது.

அம்மாவோ அப்பாவோ கவலைப்படக் கூடாது என்பதால், இரவுகளில் மட்டுமே ஆஸ்பத்திரி தலையணைகளை நனைத்தாள். இன்னும் ஒரு வாரத்தில் வீட்டுக்கு அழைத்துப் போகலாம் என்ற நிலையில் அப்பா போய் கற்பகத்திடம் நேரடியாக பேசிவிட்டு வந்தார். "நோயாளியப் பார்த்துக்கிடற அளவுக்கு எனக்கு ஒடம்பு முடியாதுங்க.. நானே சந்தனா இல்லாததுனால, தொணைக்குச் சொந்தக்காரப் பொண்ண ஊர்லேர்ந்து கூட்டியாரலாம்னு இருக்கேன். நீங்களே அழைச்சிட்டுப் போய் நல்லா ஒடம்பத் தேத்தி அனுப்பிவிடுங்க.." என்று பரிதாபமாகச் சொன்னாளாம் அத்தைக்காரி. குமரன் ஒருவார்த்தை பேசினால் தானே! ம்ஹும்..

அம்மா வீட்டில் இருக்கும் நாளெல்லாம் இது பற்றிய யோசனை அவளை ரொம்பவும் வருத்தமாக்கிவிட்டது. நல்லவேளையாக அப்பாவுக்குப் பாரமில்லாமல், சந்தனா வேலை செய்த நிறுவனத்தில் அவளுக்கும் சேர்த்து இன்சூரன்ஸ் செய்திருந்ததால், ஆஸ்பத்திரி, ஆபரேசன், மற்ற செலவுகள் எல்லாம் கொடுத்துவிட்டார்கள். தோழி சசி தான் அத்தனையும் அவளுக்காக ஓடியாடி வாங்கிக் கொடுத்ததும்.

அம்மாவுக்குத்தான் பாரம். படுக்கையிலிருந்த அவளைக் குளிப்பாட்டுவது தொடங்கி, மீண்டும் குழந்தையாக பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம். நடுவில் சந்தனாவின் அக்கா மஞ்சுளா வேறு பிரசவத்திற்கு வந்துவிட, இரண்டு பெண்களுக்கும் வேண்டியதைச் செய்து, அப்புறம் மீண்டும் ஆஸ்பத்திரி, சிசேரின் என்று அல்லாடிப் போனாள் அம்மா.

மஞ்சுவின் கணவன் செந்தில், ரொம்பவும் பாசக்காரனாக இருந்தான். அலுவலகம் முடிந்தவுடன் ஓடோடி வந்துவிடுவான் அவளைப் பார்க்க. இரவு வரை இருந்து, வாங்கிவந்த பழங்கள், குங்குமப்பூ, ஹார்லிக்ஸ் என்று மாலைகளில் அவளுக்குக் கரைத்துக் கொடுத்து, தானும் கரைந்து போய் அமர்ந்திருப்பான். இதற்காகவே மஞ்சுளா, சந்தனா இருவருக்குமான அறையிலிருந்து சந்தனாவை அவள் தங்கை இந்திராவின் அறைக்கு மாற்றிவிட்டார்கள்.

இந்திரா பாடம் படிக்கையில் சந்தனா கண்ணீருடன் படுத்திருப்பாள். சில சமயம் அவள் அம்மா வந்து தேற்றுவாள். சில சமயம் அப்பா வந்து பார்த்துவிட்டுப் பக்கத்தில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார். இந்திரா இவற்றைப் பார்த்து தானும் அழத் தொடங்கிவிடுவாள். படிக்கிற பெண்ணை இப்படி தொந்தரவு செய்கிறோமே என்ற குற்ற உணர்வும் சந்தனாவுக்கு வரும்.

ஒருவழியாக உடல் தேறி, நடக்குமளவுக்கு வந்தபோது, அந்தப் பெரிய இடி விழுந்தது. சந்தனாவால் இனிமேல் முன்னால் மாதிரி நடக்க முடியாது. அவளின் வலது கால் இடது காலை விடக் கொஞ்சம் குட்டையாகிவிட்டது. இனிமேல், சந்தனா அந்தக் காலை இழுத்து இழுத்து தான் நடக்க முடியும். அல்லது, ஆயிரத்தி சொச்சத்துக்குக் கிடைக்கும் ஒரு செருப்பை வாங்கிப் போட்டால் அவளால் ஒருவேளை சரியாக நடக்க முடியலாம்!

இடிந்து போக இருந்தவளை, பழையபடி அம்மாவும் அப்பாவும் தேற்றினார்கள். ஊனமுற்ற பின்னரும் ஜெயித்து வந்த பெண்களைச் சுட்டிக் காட்டினார்கள். என்னென்னவோ சொன்னார்கள்.. இவளும் மனம் தேறினாள். வேலைக்குப் போகத் தொடங்கினாள். கொஞ்ச நாள் வரை வாழ்க்கை இனிமையாகத் தான் போய்க் கொண்டிருந்தது. இந்திராவும் சந்தனாவுமாக திரைப்படங்களுக்குப் போவதென்ன, மஞ்சுளா கணவன் டாக்ஸி வைத்து சகோதரியர் மூவரையும் கடற்கரைக்கு அழைத்துப் போவதென்ன, என்று சந்தோசங்கள் அனைத்தும் மீண்டுவந்துவிட்டது போல் இருந்தது, அப்பா அவள் புகுந்த வீட்டுப் பேச்சை எடுக்கும் வரை.

"என்னம்மா, உங்க வீட்டுக்கு எப்போ போகலாம்?" என்று அவர் கேட்டபோது, சந்தனா கண்கள் நீர்த்திரையிட்டது.

"ஏம்பா? இது என் வீடு இல்லையா?!" என்று மகள் தழுதழுத்ததும் அவர் கூட கொஞ்சம் அதிர்ந்து போனார்.

"இல்லம்மா.. ஒலக வழக்கம்னு ஒண்ணு இருக்கில்லையா?" என்று தொடங்கி, அம்மா, அக்கா வாழ்க்கையோடு ஒப்பிட்டு அவளும் கற்பகம், குமரனுடன் தான் இருக்க வேண்டும் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்த்தினார் அப்பா. அம்மாவும் தன் பங்குக்கு சந்தனா தன் கணவன் வீட்டுக்குப் போனால் தான், இந்திராவுக்கு நல்ல வரன் அமையும் என்று கோடிக் காட்டினாள்.

அடிபட்டு ஒன்றரை மாதம் அம்மா வீட்டில் இருந்த காலத்தில் ஒரு பேச்சுக்குக் கூட போன் செய்து எப்படி இருக்கிறாள் என்று அறிய விரும்பாதவர்களின் வீட்டுக்குப் போய் அவளால் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியுமா? சந்தனாவுக்கு வாழ்க்கையே ஒரு பெரிய கேள்விக் குறியாக தோன்றியது.

அப்பா கணவன் வீட்டுக்கு, அழைத்து போய் விட்டார். தன்னை எப்படி கடந்த ஒரு வாரத்தில் ஜுரமும் தலைவலியும் வாட்டி எடுத்தன என்பதையும், மருமகள் சீக்கிரமே வந்திருந்தால், தனக்கு வசதியாக இருக்கும் என்றும் கற்பகப் ரொம்ப வருத்ததுடன் சொன்னாள். அப்போதும் சந்தனா சாப்பிட வேண்டிய மருந்து மாத்திரை பற்றி எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. சசி மூலம், இரண்டு வாரம் முன்பே சந்தனா அலுவலகம் செல்லத் தொடங்கிவிட்டது தெரிந்திருந்த காரணத்தால், வீட்டுக்கு வர அந்த இரண்டு வாரம் தாமதமானது கற்பகத்துக்குப் பெரிய பிரச்சனையாக இருந்தது. சொல்லிச் சொல்லியே மாய்ந்து போனாள்.

வந்தவுடன் சமையலறைப் பொறுப்பை சந்தனா ஏற்றுக் கொண்டதில், கொஞ்சம் மனம் ஆறுதலடைந்தாலும், புலம்பிக் கொண்டே டீவியில் ஆழ்ந்தாள். பெற்றோரின் தொடர்ந்த போதனைகளால், 'குமரன் ஒருவேளை தன்னைப் பார்க்க வரவேண்டும் என்று நினைத்தானோ என்னவோ, அவன் அம்மா தான் அதை அனுமதிக்கவில்லையோ என்னவோ' என்று நல்லவிதமாக நினைத்துக் கொண்டு, அவனுக்காக எதிர்பார்க்கத் தொடங்கினாள் சந்தனா.

சமையலறைக்குள் வந்து அவன் அம்மாவுக்குத் தெரியாமல் கட்டி அணைத்து குசலம் விசாரித்துவிட்டு, அம்மா தன்னை எப்படி வீட்டோடு கட்டிப் போட்டுவிட்டாள் என்பதையும், அலுவலக வேலைகள் எப்படி அவன் காலைக் கட்டி இழுத்தன என்பதையும் அவன் சொல்லப் போவதைக் கற்பனை செய்தபடி அவனுக்குப் பிடித்த உணவு வகைகளாக செய்தாள். துவைக்கிற இயந்திரத்தின் முன்னால் ஒரு மாதத் துணிகள் குவிந்து கிடந்தன. துணி உலர்த்தக் கூட நேரம் செலவழிக்க விருப்பமில்லாத மாமியாரை மனதுக்குள் திட்டிக் கொண்டே அதை இயக்கினாள்.

ஒருவழியாக இரவு வெகுநேரம் கழித்து குமரன் வந்தான், சாப்பிட உட்கார்ந்தான். 'நல்லா இருக்கியா?' போன்ற விசாரிப்புகளாவது அவளை ஆசுவாசப்படுத்தியிருக்கக் கூடும். ஒன்றுமில்லாமல், அவளைப் பார்த்து அதிகபட்சமாக புன்னகைத்தான். 'ரொம்பவும் கீழ்ப்படிதல் உள்ள மகன்!' என்று நினைத்துக் கொண்டாள்.

கற்பகமும் வழக்கம் போல் மகனுடன் சாப்பிட உட்கார்ந்தாள். சந்தனா மெல்ல ஒவ்வொரு பதார்த்தமாக மேஜைக்குக் கொண்டுவந்தாள். அப்பளத்தை எடுத்துவரும் போது கற்பகத்திடமிருந்து வந்தது அந்தக் கத்தல்.

"ஏய்.. நில்லு!" என்றாள் அதட்டலாக. அதிர்ச்சியில் ஒரு அப்பளம் கீழே விழுந்து உடைந்து சிதறியது.

"என்னம்மா?" என்றான் மகன்.

"நட!" என்றாள் அம்மா.

நடந்தாள் சந்தனா. அடுத்து வருவது என்ன என்பது சொல்லாமலே புரிந்து போனது.

"ஏன் விந்தி விந்தி நடக்குற?" என்றான் குமரன், அம்மாவின் பார்வை போன இடம் புரிந்ததில்.

"இந்தக் கால்ல தானே ஆபரேசன் பண்ணாங்க.. அதுல கொஞ்சம் கூடக் கொறைய ஆகிடுச்சு. " என்று விளக்கினாள் சந்தனா.

"என்னது?! கூடக் கொறைய ஆகிடுச்சா! என்னவோ பூ வியாபாரம் மாதிரி சொல்லுற!? உண்மையாச் சொல்லு, இது கல்யாணத்துக்கு முன்னாலயே இருந்தது தானே? விபத்து அது இதுன்னு சொன்னதெல்லாமே பொய்தானே!?" மாமியார் கத்த தொடங்கியதும், சந்தனாவின் பொறுமை கரை கடந்து விட்டது. பதில் சொல்லாமல் குமரனைப் பார்த்தாள். அவன் இதெல்லாம் தனக்குத் தொடர்பில்லாதது போல் அவள் கொண்டு வந்து வைத்த அப்பளத்தில் இருந்து ஒன்றெடுத்து நொறுக்கினான்.

"சொல்லுடி அழுத்தக்காரி!, வாய்ல என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க? இதையேன் உங்கப்பன் இன்னிக்கு கொண்டு விடும்போது சொல்லல?"

"அப்பவே சொல்லி இருந்தா, என்ன பண்ணிருப்பீங்க?"

"உள்ள வராதேன்னிருப்பேன். எம்புள்ளைக்கு இன்னோரு நல்ல பொண்ணா, நொண்டி முடமில்லாம பார்த்து கட்டி வச்சிருப்பேன்!"

"நான் உயிரோட இருக்கும் போது அதை நீங்க செய்ய முடியாது." அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் சந்தனா.

"அதுக்காக எம்புள்ள ஒரு நொண்டியோட எத்தினி நாள் குடும்பம் நடத்த முடியும்?"

"ஏன், நீங்க இல்ல, உங்களுக்கு ஒடம்புல இல்லாத வியாதியே இல்ல. அப்படியும் உங்களை வச்சி நாங்க குடும்பம் நடத்தல?! எத்தனை நாளா இருந்தாலும் செய்யத் தானே போறம்?"

"ஏய்.., அம்மாவை எதிர்ப்பேச்சு பேசாதேன்னு உனக்கு முதல் நாளே சொல்லி இருக்கேன். அவங்க கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு. இல்லைன்னா, வாய மூடு. புரியுதா?" - ஒருவழியாக மௌனம் கலைத்தான் குமரன்!

அதன்பின் சந்தனா பேசவே இல்லை. அந்த இரவு தனிமையில் கூட குமரன் அவளுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை சொல்லவில்லை. பல நாட்களாக அவள் இல்லாமல் தனியாக உறங்க நேர்ந்த ஆத்திரத்தை அவள் உடல் மேல் காட்டினான். ஆபரேசன் ஆன உடம்பு என்பது ஏனோ அவனுடைய மரமண்டைக்கு உறைக்கவே இல்லை. அவன் நிம்மதியாக உறங்கத் தொடங்கிய போது அவள் கசங்கிய பூ போல் வாடிப் போய் படுத்திருந்தாள். அழுகை, கழிவிரக்கம், யோசனை, வலிகளை மீறி தூக்கம் தழுவக் கூடிய நேரம் வந்த போது, அவள் எழுந்து சமைத்தால் தான் வேலைக்குப் போக முடியும் என்றானது.

இந்திராவைப் பற்றிய நினைப்பு மட்டும் தான் அவளை இன்னும் இந்த வீட்டில் பிடித்து வைத்திருக்கிறது என்றால் மிகையல்ல. தினசரி குத்தல், குறை சொல்லுதல். கணவன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கற்பகத்துக்குப் பதில் சொல்லுவதில்லை என்று முடிவெடுத்துவிட்டாள் சந்தனா. கற்பகம் எங்கே அழைத்தாலும் போனாள். குமரன் எப்போது அழைத்தாலும் இணங்கினாள். உணர்ச்சிகள் இல்லாமலே போய்விட்டது அவளுக்கு.

மஞ்சுளா குழந்தையோடு வந்து பார்த்துவிட்டுப் போனபோது ரொம்ப வருத்தப்பட்டாள். அம்மாவிடம் போய்ச் சொல்லி இருப்பாள் போலும், ஒரு நாள் அம்மா இந்திராவுடன் அலுவலகத்துக்கே வந்துவிட்டாள். அம்மாவைச் சமாதானப்படுத்தி அனுப்பிவைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. தானாக ஏதும் வீட்டுக்குச் சொல்லாத போதும், மஞ்சுளா கணவன் ரொம்ப வருத்தப்பட்டு குமரனுக்குத் தொலைபேசினான். அன்றும் ஒரு பஞ்சாயத்து வைத்தாள் கற்பகம்.

"ஏண்டீ, உன்னை என்ன நாங்க அப்படிக் கொடுமைப்படுத்திட்டம்னு அவன் இந்தக் குதி குதிக்கிறான்? எம்புள்ள என்னிக்காவது எந்தக் கெட்டப் பழக்கத்துக்காவது போயிருப்பானா? கை நீட்டி உன்ன அடிச்சிருப்பானா? இல்ல நாந்தான் உன்னைத் தொட்டிருக்கேனா? என்ன ....க்கு அவன் போன் போட்டு சமாதானம் பேசுறான்?" என்று தொடங்கி மஞ்சுளா கணவன் செந்திலையும் வைத்து வாங்கினாள். சந்தனா ஒரு வார்த்தை பேச வேண்டுமே. ம்ஹும். கை நீட்டி அடிப்பது மட்டுமே வன்முறை என்ற அவளது வாதம் சந்தனாவுக்குச் சிரிப்பைத்தான் கொடுத்தது. சசி ஒருத்தி தான் சந்தனாவுக்கு ஆதரவு. அலுவலகத்தில் அவளிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதுவிட்டால் கொஞ்சம் மனசு லேசாகும். அவளும் பிள்ளைப் பேறுக்காக லீவில் போன பின்னர் சந்தனா தனிமரமாகி இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.

*******************************

"ஒரு விதத்துல நல்லது தான்னு வையி.. இதப் போலவே நொண்டியாப் பொறந்திட்டா எப்படி வளர்க்குறது?! ஒரு நொண்டிய வச்சிகிட்டு நாங்க படுற பாடே போதும்.!" என்ற கற்பகத்தின் குரல் சந்தனாவின் கவனத்தைக் கலைத்தது.

இப்படி எல்லாம் பேசினால், சந்தனா கொதித்துவிடப் போகிறாளா என்ன? கற்பகத்தை எதிர்த்துப் பேசாத வரை தான் அவள் குமரனின் மனைவி. குமரனின் மனைவியாக அவள் இருந்தால் தான் இந்திராவுக்கு நல்ல வாழ்க்கை அமையும். அவள் பெற்றோருக்கு உறவினர் மத்தியில் மரியாதை இருக்கும். அத்தனை பேரின் மானம் மரியாதையைக் காக்க வேண்டுமென்றால், கற்பகத்தின் முன்னால் அவள் மரியாதை எதிர்பார்க்கக் கூடாது.

சந்தனா எப்போதோ இயந்திரமாகிவிட்டாள். இயந்திரங்கள் மரியாதையை எதிர்பார்ப்பதில்லை; அன்பான வார்த்தையையோ, பாசத்தையோ எதிர்பார்த்து ஏங்குவதில்லை. கற்பகத்திற்குக் கைகால் பிடித்துவிட, சமைத்துப் போட, துணிதுவைக்க, என்று அவள் ஒரு ரோபோ. குமரனுக்கு அவள் வேறு விதமான பொம்மை - மனைவி பொம்மை. நல்ல விலைக்குக் கிடைக்கிறதே சந்தையில்! பொன்னும் பொருளும் கொடுத்து பொம்மையையும் கொடுக்கிறார்களே! சந்தனா இப்படி இருப்பதைத் தான் கற்பகமும் விரும்பினாள். ஆனால், ஏனோ, இயந்திரங்களுக்குப் பிள்ளை பிறக்காது என்பது மட்டும் அவளுக்குப் புரியவில்லை.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நிஜத்தில் இங்கே தான் இன்னும் இருக்கிறது என் சந்தனாவின் வாழ்க்கை... கற்பனைக் கதையிலாவது, இன்னும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாமே அவள் என்று நினைத்ததன் விளைவு, மீதிக் கதை:

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

"ஒரு விதத்துல நல்லது தான்னு வையி.. இதப் போலவே நொண்டியாப் பொறந்திட்டா எப்படி வளர்க்குறது?! ஒரு நொண்டிய வச்சிகிட்டு நாங்க படுற பாடே போதும்.!" என்ற கற்பகத்தின் குரல் சந்தனாவின் கவனத்தைக் கலைத்தது.

சந்தனாவைக் குத்துவதற்கே சத்தம் போட்டுப் பேசிக் கொண்டிருந்தவளின் குரல் திடீரென குறைந்தது. "ஓ, வாங்க!" அசுவாரசியமான அழைப்பு, வந்திருப்பது சந்தனா வீட்டாராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது.

யார் என்று பார்க்க வெளியே வந்தாள் சந்தனா.

மஞ்சுளா, அவள் கணவன், அம்மா, அப்பா,.. எல்லாரும் எதற்கு வந்திருக்கிறார்கள்? சமையலறை வாசலில் இருந்து அவள் எட்டிப் பார்த்த போது, மஞ்சுவின் குழந்தை '..த்தி' என்று காலைக் கட்டிக் கொண்டது. அழைக்காமல் எட்டிப் பார்த்த மருமகளை அடுத்த வாய்ப்பில் வார்த்தையால் காயப்படுத்த தயாராகிக் கொண்டே கற்பகம், "என்ன, எல்லாரும் ஒட்டுக்க வந்திருக்கீங்க?" என்றாள்.

"சம்பந்தியம்மா, எங்க கடைசி பொண்ணு இந்துவுக்குக் கல்யாணம் வச்சிருக்கம். அதான் பத்திரிக்கையக் கொடுத்திட்டு, சந்தனாவையும் கூட்டிப் போகலாம்னு வந்தோம்!" அப்பா தான் பேசினார்.

"அப்படியா..எங்க குமரனிட்ட ஒரு வார்த்தை சொல்லாம பத்திரிக்கை வரை அடிச்சிட்டீங்களா?!" என்று தங்கைமுன் தன் முக்கியத்துவத்தை வலியுறுத்தக் கேட்டாள் கற்பகம்.

"அதுக்கு நேரமிருக்கலைம்மா.. திடீர்னு முடிவாகிடுச்சு.." என்றபடி, அம்மா பத்திரிக்கையை எடுத்துக் கொடுக்கவும், ஆவலை அடக்க மாட்டாமல் சந்தனாவின் சின்ன மாமியாரும் எட்டிப் பார்த்தாள்.

"இதென்னதிது? பையன் என்ன குலம் கோத்திரம்னு போடவே இல்லையே!" கற்பகத்திடமிருந்து இந்தக் கல்யாணத்திற்கு ஒப்புதல் கிடைக்காதென்று சந்தனாவுக்கு உறுதியாகத் தெரியும். தொலைபேசிய பொழுது, அவள் தான் இது போன்றதொரு கல்யாணத்தை ஊக்கப்படுத்தி இருந்தாள்.

"குலங்கோத்திரம் பார்த்து பண்ணல்லைங்கம்மா.. பொண்ணுக்குப் பையன பிடிச்சி போச்சு. மாப்பிள்ளை வீட்லயும் பச்ச கொடி காட்டிடாங்க.. சின்னஞ் சிறுசுகன்னாலும் வாழப் போகிறது அதுங்க தானே. அதான் நாங்களும் ஒண்ணும் சொல்லலை." அப்பா மீண்டும் கெஞ்சத் தொடங்கினார்.

"அது சரி.. நீங்க என்ன வேணாலும் செய்யலாம். நொண்டிய நல்ல பொண்ணுங்கிற மாதிரி ஏமாத்தி கட்டிவச்சவுக தானே. அதான் இன்னொரு இளிச்சவாயனை வேற சாதியில பிடிச்சிட்டீங்க போலிருக்கு. இந்தக் கண்றாவிக்கு நாங்க வந்தா, சொந்தக்காரவுக மத்தியில் எங்க பேரு என்னாவுறது? இப்படி ஒரு பத்திரிக்கையைக் கையில வாங்கிப் பார்த்தேன்னு தெரிஞ்சாலே குமரனுக்குக் கெட்ட கோபம் வந்திடும் தெரியுமில்ல?" முழுதாக பேசவிடாமல் பத்திரிக்கையை அவள் கையிலிருந்து பிடுங்கினாள் மஞ்சுளா.

"எங்களுக்குத் தெரியும். அதனால தான் இந்தப் பத்திரிக்கையை சும்மா காட்டிட்டு போகலாம்னு வந்தோம். சந்து, உன் ரூம் எதும்மா?" என்றாள் மஞ்சு

சந்தனா கையைத் துடைத்துக் கொண்டு அக்காவின் குழந்தையைத் தூக்கிக் கொண்டே வந்து தன் அறையைக் காட்டினாள். மஞ்சுளாவும் அவள் கணவனும் உள்ளே நுழைந்து சந்தனாவின் துணிகளை ஒன்று விடாமல் அடுக்கத் தொடங்கினர். அந்த அறையிலிருந்த கட்டில், வீட்டிலிருந்த டீவி, மேஜை, பயன்படுத்தாமல் பரணில் வைத்திருந்த சந்தனா கொண்டுவந்த வெள்ளிப் பாத்திரங்கள் என்று வரிசையாக கட்டத் தொடங்கினர். பின்னாலேயே நான்கு ஆட்கள் வேறு வந்து எல்லாவற்றையும் தூக்க ஆரம்பித்த போது கற்பகம் குழப்பமாக பார்த்தாள். சந்தனாவின் அம்மாவைப் பார்த்து, "என்ன நடக்குது இங்கே?" என்று அவள் கேட்டதற்கு யாரும் பதில் கூடச் சொல்லவில்லை.

வாசல் பக்கம் போய் எட்டிப் பார்த்தபோது லாரியில் அத்தனை பொருட்களும் ஏறிக் கொண்டிருந்தது. "நிறுத்து, நிறுத்து!" என்ற கற்பகத்தை யாருமே கண்டுகொள்ளவில்லை.

"தே கெய்வி.. வளி வுடு.. இட்ச்சேன்னு வையி, ஸ்ட்ரெயிட்டா கைலாசம் தான்!" கட்டில் காலைப் பிடித்துக் கொண்டிருந்த ஒருவன் சொல்லவும், கற்பகம் பயத்துடன் நகர்ந்து போனாள்.

"இந்திரா கல்யாணத்துக்கு மட்டுமில்ல, இனிமே எங்க வீட்ல நடக்கப் போகிற சந்தனா கல்யாணத்துக்கும் நீங்க வர வேண்டாம். உங்க குமரனுக்கும் சொல்லிடுங்க. இந்த மாதிரி ஒரு காட்டுல எங்க பொண்ணை விட்டுவைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இனிமேலும் இல்லை. முறையா வக்கீல் நோட்டீஸ் வரும். முடிஞ்சா எங்க பொண்ணு இன்னிவரைக்கும் சம்பாதிச்சு கொடுத்த பணம், லாக்கரில் வச்சிருக்கிற பத்துபவுன் நகை, நீங்களும் ஒங்க பையனும் சாப்பிடுற வெள்ளித்தட்டு, இது மூணுத்தையும் எடுத்து வந்து கொடுத்துட்டீங்கன்னா, உங்களுக்கு மரியாதை. இல்லைன்னா கோர்ட் மூலமா அதையும் பார்த்துக்கிடறோம்.. என்ன? வாம்மா சந்தனா!" என்றார் மஞ்சுவின் கணவர்.

சந்தனா, கட்டிய புடவையுடன் தூக்கிய குழந்தையுடன், "போய்ட்டு வரேன்" என்று சொல்லும் முகமாக அத்தையைப் பார்த்தாள். "கத்திரிக்காய் அரிஞ்சிட்டிருந்தேன். அடுப்புல சாம்பார் கொதிக்குது. முடிஞ்சா எல்லாத்தையும் அரிஞ்சு சீக்கிரம் போட்டுருங்க..!" என்று சொல்லிவிட்டு வெளியே போகலானாள்.

"ஏய், தடிச்சி, எங்கடீ போகுறே! இப்படி ஒரு நொண்டி வாழாவெட்டியா வந்திட்டாள்னு தெரிஞ்சா, ஒந் தங்கையை எவன் கட்டுவான்?"

கூடியவரை காயப்படுத்த வேண்டும் என்று கிளம்பிய கற்பகத்தின் குரலை எதிர்த்துவந்தது இன்னுமொரு குரல். "அதெல்லாம் தேவையே இல்லைங்கம்மா! இந்த ஜென்மத்துல கல்யாணம்னு கட்டிகிட்டா இந்திரா தான்னு முடிவெடுத்தாச்சு. மனைவியைப் பொறுத்தவரை மனசளவுல ஊமையா, நீங்க செய்யும் கொடுமையெல்லாம் கண்டும் காணாம போயிட்டிருக்கிற உங்க மகனோட, இங்க இருக்கிறதை விட, சந்தனாக்கா எங்க கூடவே சந்தோசமா இருப்பாங்க!" என்றபடி உள்ளே வந்த இளைஞன், சந்தனா கையிலிருந்து குழந்தையையும் வாங்கிக் கொண்டான். மஞ்சு அவள் கையைப் பிடித்து ஆறுதலாக அமுக்க, வெளியேறி காரை நோக்கிப் போன போது, பல இரவுகளாக தொலைத்த அவளுடைய சந்தோசமும் நிம்மதியும் மீண்டு வந்திருந்தது..

Thursday, March 29, 2007

தம்பிக்கு... (சிறுகதை)

"என்ன ரேங்க்டா?" என்றார் அப்பா, பாலு நீட்டிய பிராக்ரஸ் ரிப்போர்ட்டைக் கையில் வாங்கியபடியே.

"ரெண்டாவதுப்பா" ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியுடன் சொன்னான் பாலு.

"ம்ம்ம்." என்று பதில் சொன்ன அப்பாவின் குரலில் அதிகம் சுரத்தே இல்லை.

"ராமுவை விட ரெண்டு ரேங்க் முன்னால் எடுத்திருக்கேன்பா.." அவசர அவசரமாக பாலு சொல்லவும், அப்பா எந்தவித உணர்ச்சியுமில்லாமல் தலையாட்டினார்.

"சரி சரி, உள்ளே வந்து கைகால் கழுவிகிட்டு பலகாரம் சாப்பிடுப்பா" என்று அம்மா அன்போடு அழைக்கவும் பாலு சோர்வு பொங்க உள்ளே போனான்.

"இன்னைக்கும் இட்லி தானா? அதுக்கு ஒரு சட்னியாவது செஞ்சி வைக்கிறியா நீ!" என்று குற்றப்பத்திரிக்கையோடு பலகாரத்தை முடித்துக் கொண்டு வெளியே வரவும் ராமு அப்பாவுடன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

"நாலாவது ரேங்க் எடுத்திருக்கியாமே நீ?! வெரி குட்" என்று சொல்லிக் கொண்டிருந்தார் அப்பா.

"ஆமாம் அங்கிள் கொஞ்சம் குறைஞ்சு போச்சு இந்த முறை. தம்பி வாசுவுக்கு சுரம் வந்துடுச்சு இல்லையா, அதான் சில நாள் ஸ்கூல் தவறிப் போச்சு. " வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தது ராமுவே தான்.

"இந்தா, இந்த முறை நல்ல ரேங்க் எடுத்தா நான் தரேன்னு சொன்ன வாட்ச். வச்சிக்க.." புத்தம்புதிதாக ஒளிரும் கைக்கடிகாரம் ஒன்றை எடுத்து அப்பா நீட்டிய போது பாலுவுக்கு அதிகபட்ச கோபம் வந்தது. "அடுத்த முறையும் நல்லா வந்தால், சைக்கிள் வாங்கித் தருவேன் தெரியுமா?" என்று அவர் சொன்னதைக் கேட்க பாலு அங்கில்லை.

அவனும் எத்தனை நாட்களாக கைக்கடிகாரம் ஒன்று வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறான். இன்று வரை அவனுக்குக் கொடுக்காமலேயே அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் அப்பா. ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வரும்போதும் அவனுக்குக் கைக்கடிகாரம் உறுதி என்று நினைத்துக் கொள்வான், இதுவரை அப்பா அவனை இப்படிப் பாராட்டியது கூட இல்லை. போய் அந்தக் கடிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டு வந்துவிடலாமா என்று பார்த்தான். இருந்தாலும் அப்பாவிடம் அவனுக்குக் கொஞ்சம் பயம் தான். சட்டென சமையலறைக்குத் திரும்பிப் போய்விட்டான்.

"என்னப்பா கண்ணா, வெளியே விளையாடப் போவலியா?" என்றாள் அம்மா, ஆசையாக.

"ஆமாம். அது ஒண்ணு தான் கொறச்சல் இப்போ!"

பாலுவின் குரலைக்கேட்டு அம்மா அருகில் வந்தாள். "என்னப்பா பாலு, என்னவோ முணுமுணுக்கிறே?! அப்பா இருக்காரா வாசற்பக்கம்?"

"ஆமாம்.. அப்பாவாம் அப்பா.. என்னைக் கண்டாலே அவருக்கு ஆகிறதில்லே. பாரு, பக்கத்துவீட்டு ராமுவை அப்படிச் சீராட்டிகிட்டிருக்காரு! வாட்சாம், சைக்கிளாம்!"

"அவன் நல்ல பையன்; பாவம், அம்மா அப்பா இல்லாத பையனில்லையா.. அதான் கொடுக்கிறார்!"

"அப்போ நான் என்ன கெட்ட பையனா.. ம்ஹும் உனக்கும் என்னைப் பிடிக்கலை இல்லையா?"

"அப்படி இல்லைடா கண்ணா, நீயும் நல்ல பையன் தான்" தலையை வருடிக் கொடுத்த அம்மாவின் கரத்தைத் தட்டிவிட்டுவிட்டு, பின்பக்கமாகவே வெளியில் ஓடிப் போனான் பாலு.

*****************************

"ராமு! விளையாட வரியாடா?!" எங்கே வந்துவிடுவானோ என்று பயந்தபடி பார்த்தான் பாலு.
நல்லவேளை, "இல்லேடா, நீங்க விளையாடுங்க. நான் என் தம்பி வாசுவை ஸ்கூலிலிருந்து கூட்டி வரணும்." என்றபடி நடந்து போனான் ராமு.

அதே சமயம், "ஏய் பாலு!" என்று அம்மா அழைத்தார்கள்.

"என்னம்மா? எதுக்கு இப்போ சத்தம் போடுறே?"

"உன் தம்பி சந்துருவை டியூசனிலிருந்து கூட்டி வரணும்.. கொஞ்சம் போய்ட்டு வரியா?"

"அடப்போம்மா.. எனக்கு விளையாடப் போவணும்.. அவனை நீயே போய்க் கூட்டி வர வேண்டியது தானே!"

அதிக வேலைச் சுமையினூடே இதை எப்படிச் செய்வதென்று தெரியாமல் அம்மா வருத்தப்பட்டதில், போனால் போகிறதென்று கிளம்பிப் போனான் பாலு.
******

பாலு சைக்கிள் ஓட்டும் அழகே தனி. அதிவேகமாக அவன் ஓட்டும் போது அது சைக்கிள் மாதிரியே இருக்காது. ஏதோ ரேஸ் குதிரை மாதிரி பறக்கும். தம்பியை வண்டியில் பின்னால் அமர வைத்துக் கொண்டு வண்டியை எடுத்தான் பாலு.

"அண்ணா, இந்த ஸ்கூல் பையைக் கொஞ்சம் நீ எடுத்துக்கிறியா.. ரொம்ப கனமா இருக்குண்ணா!" திக்கித் திணறித்தான் சொன்னான் தம்பி.

"அடப் போடா, உன்னைச் சுமக்கிறதே பெரிய வேலை. இதுல உன் பையை வேற நான் சுமக்கணுமோ.. எல்லாம் முதுகில மாட்டிகிட்டே உட்காரு!" எகத்தாளமாக சொல்லிக் கொண்டே பாலு வண்டியை மிதித்தான்.

குதிரை மாதிரி பாய்ந்து சென்ற வண்டியைத் திருப்பத்திலும் அதே வேகத்தில் விட்டது தான் பாலு செய்த தவறு. முன்னால் சாலையைக் கடந்து கொண்டிருந்த இருவர் மீது வண்டி கிட்டத்தட்ட மோதுவது போல் போயிற்று. அதிலும், கொஞ்சம் மெதுவாக சென்று கொண்டிருந்த சின்னப் பையனின் மீது நிச்சயமாக மோதி இருப்பான், கூட இருந்தவன் அவனைப் பிடித்திழுத்திராவிட்டால். அதிர்ச்சியில் உடனே பிரேக் பிடிக்கக் கூட தோன்றாமல், கொஞ்சம் தள்ளிப் போய் வண்டியை நிறுத்தினான் பாலு.
வந்து கொண்டிருந்தது, ராமுவும் அவன் தம்பியும் தான். தம்பியைப் பிடித்து இழுத்ததில் பாலன்ஸ் தவறி ராமு கீழே மண்ணில் விழுந்துவிட்டான்.
"சாரி ராமு.." குரல் நடுநடுங்க பாலு சொல்லவும், முட்டிக்காலில் சிராய்த்த இடத்திலிருந்து எட்டிப் பார்த்த இரத்தத்தைத் துடைத்தபடியே, "பரவாயில்லை பாலு! வாசு கொஞ்சம் மெதுவாத் தான் நடப்பான். அது தான் பிரச்சனை. என் மேல தான் தப்பு. அவனைப் போய் இந்த ரோட்டைக் கிராஸ் பண்ணத் தனியா விட்டிருக்கக் கூடாது.." ராமு சொல்லவும், பாலு கூனிக் குறுகிப் போனான்.

பதிலுக்குக் காத்திராமல், விபத்தின் அதிர்ச்சியில் பயந்து போய் அழத் தொடங்கிவிட்டிருந்த தம்பியைத் தட்டிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தி, அவன் பை மட்டுமில்லாமல் அவனையும் கொஞ்ச நேரம் தூக்கிவைத்துக் கொண்டு நடந்த ராமுவைப் பார்த்துக் கொண்டே இருந்த பாலுவுக்குத் தன் தவறும் அப்பா ராமுவைக் கொண்டாடுவதற்கான காரணமும் மெல்ல புரியத் தொடங்கியது.

'தன்னை அழைத்துப் போக வந்ததால் தான் இந்த விபத்து நிகழ்ந்துவிட்டது' என்று அண்ணன் குற்றம் சாட்டப் போகிறானோ என்று எதிர்பார்த்து பயந்து குறுகிக் கொண்டு அமர்ந்திருந்த தம்பி சந்துருவை ஆதரவாக பார்த்த பாலு அவன் முதுகில் இருந்து பையை வாங்கிக் கொண்டு பாசமாக அவன் தலையைத் தடவியும் கொடுத்தது சந்துருவுக்கு மிகப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. அன்றிலிருந்து தம்பி விசயத்தில், பாலுவின் மனமாற்றத்தைக் கவனித்த அவர்கள் அம்மா, அப்பாவுக்கும் தான்!


கோப்புக்காக இங்கே.. பிரசுரித்த தமிழோவியத்திற்கும் தேர்வு செய்த அன்றைய சிறப்பாசிரியர் லக்கிலுக்கிற்கும் நன்றிகளுடன்...

Wednesday, January 24, 2007

தேடல் தொடர்கிறதே

நான் பத்தாவது முறையாக அந்தத் தாளைப் படித்தேன்.

DR. சிவகுமார்,
9, பதி தெரு,
சேத்துப் பட்டு,
சென்னை.


'கோழி ஒன்றைப் பிடித்து, அது கதறக் கதற, அதன் கால்களை மை டப்பாவுக்குள் அழுத்தி, அதன் பின் அந்த பார்சலில் ஓட விட்டிருப்பார்களோ?' என்று சந்தேகம் வந்தது எனக்கு. அந்த அளவுக்குக் கோழிக் கிறுக்கல் என்ற பதத்திற்கே விளக்கமாக இருந்தது அந்த முகவரி. ஒன்பதாம் எண் வீடு தானா என்று பலமுறை சோதித்துவிட்டுக் கேட்டால், "இங்க செவக்குமாரு, செபக்குமாருன்னு யாரும் இல்லீங்களே.." என்று சொல்கிறார் அந்த வீட்டம்மாள்.

அந்தத் தெரு தான் பதி தெரு என்று பலபேர் உறுதி கூறினார்கள். ஆனால், அந்தத் தெரு மட்டுமன்றி, அதன் வலது, இடது பக்கத்து அடுத்தடுத்த தெருக்களில் கூட மருத்துவர்களின் வாசனையே இல்லை என்று பல்குத்திக் கொண்டிருந்த பெரியவர் சொன்னார்.

தெருமுனை டீக்கடையில் இன்றைக்கு நான் தான் சூடான விவாதப் பொருள்.
"அந்தாள் சரியாத் தாம்லே கேட்குறாரு.. பார்சலைத் தான் நான் கைல வாங்கிப் பார்த்தேன்லா" என்றும், "எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு பெருசு. ஏதாச்சும் புள்ள புடிக்கிறவனா இருக்கப் போறான், சாக்கிரதையா கவனிக்கோணம்" என்றும் என் காதுபடவே பேசிக் கொண்டிருந்தார்கள்..

"ஏன் சார், நீங்களாவது சொல்லுங்க, இது சென்னை தானே?" என்பதை மட்டும் தான் நான் கேட்கவில்லை. மற்ற எல்லா கேள்விகளையும் கேட்டாகி விட்டது.

இன்னும் நான் வழி கேட்காத ஒரே ஜீவன் அதோ அந்தத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் சின்ன பையன் மட்டும் தான். பாவம், அவன் கையில் இருந்த பிளாஸ்டிக் பொம்மை சிகப்பா, பச்சையா என்று கேட்டால் கூட அவனுக்குத் தெரிந்திருக்காது. இப்போது போய் அவனிடம் பதி தெரு என்றால், டீக்கடைக்காரர்கள் ஒரு முடிவுக்கே வந்துவிடுவார்கள்.

இன்னும் கொஞ்சம் நேரம் போனால், "மரமே, டாக்டர் சிவகுமாரைத் தெரியுமா?", "கொசுவே! சிவகுமார் வீடு எது?" என்று நான் விசாரிக்க வேண்டியது தான். கடைசி முயற்சி ஒன்று செய்துவிட்டு, பார்சலைத் திரும்பி அனுப்ப வேண்டும்..

கடைசி முயற்சி..., கடைசி முயற்சி? என்ன செய்யலாம்? ஆங்! பத்தாவதில் பொற்கைப் பாண்டியன் கதை படித்தது நினைவுக்கு வந்தது; அதைத் தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு கதவாகத் தட்டிக் கேட்டுவிட வேண்டியது தான். கை போனால் கஷ்டம் தான். எதற்கும் திருடன் என்று சந்தேகிக்கும் அந்த டீக்கடை ஆசாமியை ஒரு முறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன். வெகுநேரம் ஆனதால் எங்கோ போய்விட்டார் போலும், ஆளைக் காணவில்லை. நான் தைரியமாக போய் ஒன்றாம் எண் வீட்டின் கதவைத் தட்டினேன். நல்லவேளையாக அந்தத் தெருவில் முப்பத்தி ஓரு வீடுகள் தாம் என்பது எதேச்சையாக நினைவுக்கு வந்து ஒருவித நிம்மதி அளித்தது.

கதவைத் திறந்தவருக்குச் சுமார் முப்பது முப்பத்தியைந்து வயதிருக்கலாம். முன்வழுக்கை வேறே. "ஏன் சார், டாக்டர் சிவகுமார்ங்கிறவரு.. இந்த வீட்ல இருக்காருங்களா?"

"டாக்டரா?" தொடங்கிவிட்டார். இனிமேல் இல்லை என்பதை நீட்டி முழக்கிச் சொல்வார். ஏமாற்றத்திற்குத் தயார் செய்தபடி "ஆமாம் சார்" என்றேன்.

"இந்தத் தெரு தானுங்களா?"

தலையாட்டினேன். வாய்திறக்கும் பொறுமை இருக்கவில்லை.

"இந்தத் தெருவில இருக்கிற ஒரே சிவகுமார் நான் தான். ஆனா, நான் டாக்டர் இல்லையே.. ப்ளம்பர். அதான் குழப்பமா இருக்கு!" என்றார் அவர்..

குழப்பம் எனக்கும் தொற்ற, அவசர அவசரமாக அந்தப் பார்சலை எடுத்து அவரிடம் நீட்டினேன். "இந்தத் தாளைப் பாருங்க.."

படித்தவர் பெரிதாகச் சிரித்தார்.

"என்ன சார்?"

"இது எனக்கு வந்தது தான் சார். இது டாக்டர் சிவகுமார் இல்லை.. டி.ஆர். சிவகுமார். என்னுடைய இனிஷியல். ஏதோ அவசரத்துல புள்ளி வைக்காம விட்டுட்டாங்க போலிருக்கு! நம்பரையும் தப்பா எழுதிருக்காங்க..."

இன்னும் பெரிதாக அவர் சிரித்துக் கொண்டே போக, ஆளைக் கண்டுபிடித்த நிம்மதியும், அதுவரை அலைந்த களைப்புமாக, அவர் வீட்டு வாசற்திண்ணையில் தொப்பென்று உட்கார்ந்து சிரிக்கத் தொடங்கினேன்.

Tuesday, January 16, 2007

சுஜாதா (குமுதம் சிறுகதை)

[இன்றைக்குத் தமிழ்ப் பதிவுலகில், மிக மிக சூடாக விற்பனை ஆகிக் கொண்டிருப்பது சுஜாதாவின் சிறுகதை தான். அதான், நானும் ஒரு பதிவு போடலாமே என்று..
தொடர்புள்ள சுட்டிகள்:
சிறுகதை-1
சிறுகதை-2 ]


"ஏய்! உங்கப்பன் வீட்டுக்குப் போய் மோதிரம் வாங்கிட்டு வான்னு சொன்னேன் இல்ல?" கணவன் சுந்தருக்கு இவ்வளவு கோபம் கூட வரும் என்று சுஜாதா எதிர்பார்க்கவே இல்லை.

"நீங்க பேசுறது உங்களுக்கே நல்லா இருக்கா? இப்பத் தான் வீட்டை வித்து கலாவுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்காங்க. இப்பப் போய் மோதிரம் போடு, பிரேஸ்லெட் போடுன்னா, எப்படிச் செய்ய முடியும்? கொஞ்சம் மனுசத்தன்மையோட பேசுங்க!"

"கலா புருஷன் நிரஞ்சனுக்கு மட்டும் மோதிரம் போட்டிருக்காங்க, நான் என்ன இளிச்சவாயனா? அவன் என்னடான்னா, ஆபீஸுக்கு தெனக்கும் போட்டுகிட்டு வந்து அலட்டக்கிறான். என்னை எல்லாரும் கேனயன் மாதிரி பார்க்கிறாங்க!"

கலாவின் கணவனும் சுஜாவின் கணவனும் ஒரே அலுவலகத்தில் ஒரே நிலையில் வேலை பார்க்கிறார்கள். இத்தனைக்கும் கலாவுக்குத் திருமணப் பேச்சு வந்த போது நிரஞ்சனை வழிமொழிந்தவனே சுந்தர் தான்.

"அவரு வீட்ல அதைத் தவிர வேறெதுவும் கேட்கலே. இங்க அப்படியா? ஒட்டியாணம் என்ன, தோடு என்னான்னு அநியாயமா கேட்கலியா உங்கம்மா? இப்ப உம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, அந்த ஒட்டியாணத்தை அழிச்சு நாலு மோதிரமா பண்ணிடுவோம்!"

இந்தக் கீதை எல்லாம் நிரஞ்சனின் மோதிரத்தின் முன் தவிடு பொடியானது. எனவே அடுத்த ஒரு வாரத்தில் சுஜாதா பெட்டியுடன் தாய்வீட்டு வாசலில் நின்றாள்.

"என்னம்மா சுஜாதா! திடீர்னு வந்திருக்கே!" அம்மாவின் ஆதரவான கேள்விக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த கடன்காரன், பால்காரன், சத்திரத்து காண்டிராக்டர் கணக்குகள் சுஜாதாவின் வாயை மொத்தமாக அடைத்துவிட்டன.

"ஒண்ணுமில்லைம்மா.. அவரு ஒரு மாசம் டெல்லிக்கு டூர் போகிறாரு. அதான், கலா வேற இல்லாம நீங்க ரெண்டு பேரும் ரொம்ப போரடிச்சி போயிருப்பீங்களேன்னு வந்தேன்!" என்று அப்போதைக்கு ஏதோ சொன்னாள் சுஜா.

சுஜாதா தாய்வீட்டுக்கு வந்து ஒருவாரம் போயிருக்கும். அம்மாவுடன் சேர்ந்து கல்யாணம் விசாரிக்க வருபவர்களைக் கவனிப்பதிலும், அப்பாவுடன் கணக்குகளில் உதவுதலிலும், அலுவலக பிஸியிலும், நாட்கள் போனதே தெரியாமல் போயிற்று. சுஜாதான் கல்மனசு என்றால், சுந்தர் இன்னும் கடுமையான கோபத்தில் இருந்தான். "மாப்பிள்ளை ஒரு போன் கூட செய்யலியே" என்று அம்மாதான் மாய்ந்து போனாள். "போன எடத்துல நேரம் இருந்திருக்காதம்மா..", "ஆபீஸுக்குப் பேசிட்டாரம்மா!" போன்ற சமாதானங்களுடன் நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன.

அந்த சனிக்கிழமை வங்கிக்குப் போன அப்பாவே தற்செயலாக சுந்தரைப் பார்த்துவிட்டார். குரல் தழதழக்க சுஜாதாவைக் கேட்கவும், மோதிரக் குட்டு கொஞ்சம் கொஞ்சமாக உடைந்தது. இன்னும் யாரிடம் கடன் வாங்கவில்லை என்று அப்பா யோசித்துக் கொண்டிருக்கும்போதே சுஜாதா, நிச்சயமாய்ச் சொல்லிவிட்டாள் "நீங்க எதுக்கப்பா போடணும்? பெத்து வளர்த்து நல்ல வேலையிலும் அமர்த்தி அந்த வருமானத்தோட பலன் கூட உங்களைச் சேராதபோது, நீங்க எதுக்கு இன்னும் மேல மேல செய்யணும்?" என்ற சுஜாவின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாவிட்டாலும், அம்மாவும் அப்பாவும் கூடிக் கூடி ஏதோ பேசிக் கொண்டே இருந்தனர்.

"இங்க பாருங்க, இதை விக்கலாமா, அதை அடகு வக்கலாமான்னு யோசிச்சிகிட்டே இருந்தீங்கன்னா, நான் டைவர்ஸ் கேஸ் போடுறது பத்தி யோசிக்க வேண்டியதாகிடும்! அவரா வந்து அழைச்சிகிட்டு போனா பார்க்கலாம், இல்ல அந்த மோதிரம் தான் முக்கியம்னா இப்படியே இங்கயே இருந்துட்டு போறேன். வயசான காலத்துல உங்களுக்கும் துணைக்கொரு ஆளாச்சு!"

ரணகளமாக இருந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் கலா வந்தாள். "ஏய் சுஜா! இங்க தான் இருக்கியா? உங்க ஹஸ்பெண்ட் கையை வெட்டிகிட்டார்னும் செப்டிக் ஆகிடுச்சு, ஜுரம் அது இதுன்னு இவர் சொன்னாரே!" என்ற சேதியுடன்.

அவ்வளவு தான்; சுஜாதா, தான் கொண்டுவந்த பெட்டியைக் கூட மறந்து போனாள். உடனடியாகக் கிளம்பி வீட்டுக்குப் போகவும், சுந்தர் வீட்டில் தான் இருந்தான். மிகப் பயங்கர அமைதியில் இருந்த வீட்டில் அம்மாவைப் பார்த்ததும் ஓடி வந்து காலைக் கட்டிக் கொள்ளும் குழந்தை மாதிரி, சுந்தர் சுஜாவைப் பார்த்ததும் ஓடி வந்தான்.

"சாரி சுஜா! நீ இல்லைன்னா எத்தனை கஷ்டம்னு இப்போத் தான் புரிஞ்சிகிட்டேன்.! நிம்மதியா தூங்க முடியலை, நீ பேசுறதைக் கேட்காம சாப்பாடு கூட இறங்கலை! காய் நறுக்கும் போது மோதிரவிரலில் வெட்டிகிட்டு... இங்க பாரு! இனி மாமனாரே வாங்கிக் கொடுத்தாலும் மோதிரமே கேட்பேன்? ம்ஹூம்!" சுந்தர் வெட்டுப்பட்ட விரலைக் காட்டினான்.

"நீங்களா கேட்கலைன்னாலும், எங்க அப்பா கொடுத்துவிட்டிருக்காரு, எங்க கைய நீட்டுங்க!" என்று சொல்லி கொண்டுவந்திருந்த பாண்ட் எய்டை விரலில் மாட்டிவிட்டுச் சிரித்தாள் சுஜாதா.

[வேற எதுனா எதிர்பார்த்து வந்திருந்தா, ஹி ஹி ;) மேல இருக்கும் தொடர்புள்ள சுட்டிகள் குமுதம் ஒரு பக்க வகையில் முயன்ற என்னுடைய பழைய சிறுகதைகள் ;) ]

Friday, January 05, 2007

ஒரு நிமிடக் கதை?

"டேய்! இது தப்புடா!" பெண்பார்க்க வந்த இடத்தில் இராம்குமாரின் தந்தை அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

"என்னப்பா தப்பு? நான் தானே கல்யாணம் பண்ணிக்கப் போகிறவன்? எனக்கு யாரைப் பிடிக்குதோ அவளைத் தானே கட்டிக்க முடியும்?" ராம் சீறினான்.

"மாப்பிள்ளை என்ன சொல்றாரு?" தீபாவின் அப்பா, இன்னும் மாமனார் ஆகாதவர், கேட்டார்.

"வந்து.." அப்பா மென்று முழுங்கிக் கொண்டிருக்க, ராம் போட்டு உடைத்தான்

"நான் சொல்றேன் சார். எனக்கு உங்க ரெண்டாவது பொண்ணைத் தான் பிடிச்சிருக்கு!" கேட்டவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

"இப்போ சின்னவளுக்குக் கல்யாணம் செய்யுறதா இல்லை. அவளுக்குப் பார்க்க ஆரம்பிக்கும் போது உங்களுக்குச் சொல்லிவிடச் சொல்லுறேன்" சீக்கிரமே அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு விட்ட தீபாவின் தாயார் வரவழைத்துக் கொண்ட புன்முறுவலுடன் சொல்லி நிலைமையைக் கொஞ்சம் சரி செய்தார்.

******************
ஒரு வாரம் கழித்து அடுத்த சுற்று பெண் பார்க்கும் படலம்.

"டேய் ராமா, இங்கேயும் முறைகெட்டத் தனமா ஏதாவது சொல்லிகிட்டிருக்காதே. அவங்க கேட்கிற பொண்ணைப் பிடிச்சிருந்தா, பிடிச்சிருக்குன்னு சொல்லு. இல்லைன்னா இல்லைன்னு சொல்லு. அதை விட்டுட்டு தங்கச்சியக் கட்டிக்கிறேன்., கெழவியைக் கட்டிக்கிறேன்னு நின்னேன்னா இது தான் உனக்கு நான் பார்க்கிற கடைசி பொண்ணு.. அதுக்கப்புறம் நீயாச்சு உன் கல்யாணமாச்சு" அப்பா போன வாரத் தலைகுனிவிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை

"அவன் கேட்டதில் என்னப்பா தப்பு? அவனுக்கு விருப்பமானவளை அவன் சொல்லக் கூடாதா?" இளையவன் ரவி, பரிந்து கொண்டு வந்தான்.

"ரவி! இதெல்லாம் பார்த்து நீ கத்துக்கிடாதே. அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியது?" என்றார் அப்பா. பிள்ளைகள் இருவரும் வேண்டா வெறுப்பாக முகம் திருப்பிக் கொண்டனர்.

*********

"என்ன ராம், பொண்ணு எப்படி?"

பிடிச்சிருக்கு என்று தலையசைத்தான் இராம். அப்பா பெருமூச்சு விட்டார். பெண்ணின் தந்தை முகத்தில் கண நேர மகிழ்ச்சி வந்தது.

"எதுக்கும் பெண்ணையும் ஒரு வார்த்தை கேளுங்களேன்.." என்றார் பெண் வீட்டுப் பெரியவர் ஒருவர்.

பெண்ணின் தந்தை எழுந்து உள்ளே போனார்.

"என்ன சொல்றா பொண்ணு?" இராம்குமாரின் தந்தை

"அது.. வந்து.. " பெண்ணின் தந்தை தயங்கி மயங்கிப் பேச முயல, மணப்பெண் சுதா வெளியே வந்தாள்.

"சார்! எனக்கு உங்க சின்னப் பையனைத் தான் பிடிச்சிருக்கு. உங்களுக்குச் சம்மதம்னா.."

இராம்குமார் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.
"என்னடா ராம். என்ன சொல்றே இப்போ?" அப்பா அவன் காதுக்குள் கேட்டார்.

"அப்பா அந்த தீபாவையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் பா.." என்றவனின் குரலில் ஒரு தெளிவு இருந்தது.

[பத்து வருடங்களுக்கு முன்னால், குமுதம் ஒரு பக்கக் கதைகள் வகையில் முயற்சித்தது..

Friday, December 29, 2006

தம்பி

"அப்பா! எனக்கு ஒரு வாட்ச் வேணும்பா!" தயங்கித் தயங்கித் தன் வேண்டுகோளைத் தந்தை முன் வைத்தான் கோபி.

"பள்ளிக்கூடத்தில் படிக்கிற பையனுக்கு வாட்செல்லாம் எதுக்குடா?" அப்பாவின் குரல் ஓங்கி ஒலிக்கவும் கோபி காணாமல் போயிருந்தான்.

"அப்போ, மேசை மேல வச்சிருந்தாரே அந்த வாட்ச் யாருக்கு?" என்று அவனுக்குள் ஒரு கேள்வி எழுந்தது

அன்றே அந்தக் கடிகாரத்தைப் பக்கத்து வீட்டு பாலுவுக்கு அவன் தந்தையே அழைத்துக் கொடுப்பதைப் பார்த்த போது கோபிக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது.



பாலுவும் கோபியும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். இருவரும் படிப்பில் சுட்டி. ஆனால், கோபியின் தந்தை, பாலுவுக்கே பரிசுகள் தருகிறார். பாலுவின் குடும்பமும் அப்படி ஒன்றும் வசதி குறைந்ததில்லை. அவனைப் பாராட்டும் போது கோபிக்குக் கோபம் கோபமாய் வரும்.

வழக்கம் போல் திங்கட்கிழமை, கோபி 'பரபர'வென்று பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். "ஏம்பா கோபி! கொஞ்சம் இருந்து தம்பி பாபுவையும் கூடக் கூட்டிகிட்டுப் போப்பா.." அம்மா கெஞ்சித் தான் கேட்டாள். "அடப் போம்மா! வேற வேலையில்லை! நான் இன்னிக்குச் சீக்கிரம் ஸ்கூல் போகணும். கணக்கு வாத்தியார் சீக்கிரம் வரச் சொல்லி இருக்காரு. உன் பையன் இப்பத் தான் எழுந்திருக்கான். இனிமே இவன் குளிச்சி, சாப்பிட்டு, ரெடியாகி, நான் எப்பப் போகிறது?" பொய்யாகவே ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டு நகர்ந்தான் கோபி.

கோபி எப்போதும் இப்படித் தான். தம்பிக்கு என்று வரும்போது நழுவிவிடுவான். இத்தனைக்கும் கோபிக்கு அவன் அப்பா சைக்கிள் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதில் பின்னால் உட்கார வைத்து அழைத்துப் போவதைத் தான் முடியாது என்று வீரம் பேசிவிட்டு வந்து கொண்டிருக்கிறான்.




கோபி காலையழகை ரசித்துக் கொண்டே மெதுவாக சைக்கிளை மிதித்தான். சற்று தூரத்தில் பாலுவைப் பார்த்தவுடன் தன் மிதிவண்டித் திறமையை அவனுக்குக் காட்டி வெறுப்பேற்ற வேண்டும் என்று ஏனோ தோன்றியது. வண்டியை வேகமாக மிதித்தான், மணியடித்தபடி. அந்த நேரம் பார்த்துத் தானா பாலுவின் தம்பி சாலையைக் கடந்து அண்ணனிடம் ஓட எண்ணி நடுவில் குதிக்க வேண்டும்?

கண்ணிமைக்கும் நொடியில் நடந்துவிட்ட இந்த நிகழ்வால், "ஒரு வேளை அவன் மீது மோதிவிடுவேனோ?" என்று பயந்து போனான் கோபி. ப்ரேக் போடக் கூடப் அவனுக்குக் கைவரவில்லை. யாரும் எதிர்பாராதவிதமாய் நடந்தது அது. பாலு சாலையின் குறுக்கே பாய்ந்து தன் தம்பியைப் பிடித்து இழுத்துவிட்டான். கோபி செயல்பட்டு பிரேக்கைப் பிடித்தபோது, பாலு கீழே விழுந்து, மணலைத் தட்டிக் கொண்டு எழுந்திருப்பதையும், அவன் தம்பி மருண்டு முழிப்பதையும் பார்க்க முடிந்தது. பாலுவின் காலில் லேசான சிராய்ப்பு வேறே..

சில நொடிகள் என்ன செய்வதென்று தெரியாத குழப்பத்துடனும், எல்லாத்துக்கும் தானே காரணம் என்ற குற்ற உணர்வுடனும் கோபி தயங்கி நின்றான்.

"சாரி பாலு!" கீழே விழுந்துவிட்ட தம்பியின் புத்தகமூட்டையை எடுத்து அதிலும் மணலைத் தட்டிக் கொண்டிருந்த பாலுவிடம் தயங்கித் தயங்கிச் சொன்னான் கோபி

"பரவாயில்லை கோபி! யாருக்கும் எதுவும் ஆகலை.. இவன் தான் அவசர அவசரமா ஓடி வந்து குறுக்கப் புகுந்திட்டான். நீ போ!" பாலு சொல்லச் சொல்ல கோபி ஆச்சரியத்துடன் பார்த்தான்.

"ரத்தம் வருதே பாலு!"

"நீ கவலைப் படாதே. நான் போய் ஸ்கூல் லைப்ரரில கீழே விழுந்துட்டேன்னு சொல்லி, முதலுதவிப் பெட்டி கேட்டு மருந்து போட்டுக்கிறேன். நீ கிளம்பு!" பாலு நடக்கவே தொடங்கிவிட்டான்.

கோபி அங்கேயே நின்று கொண்டிருந்தான். அவனுக்குள் ஏதோ கரைந்து ஓடிக்கொண்டிருந்தது. தம்பியின் புத்தகப் பையைச் சுமந்து கொண்டு, "இனிமே இப்படி எல்லாம் ரோட்டில் ஓடி வரக் கூடாது என்ன? ரெண்டு பக்கமும் பார்த்து தான் கிராஸ் பண்ணனும்" என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்த பாலுவைப் பார்த்துக் கொண்டே நின்றான். அவன் அப்பா ஏன் அவனை விட்டுவிட்டு பாலுவைத் தூக்கி வைத்துப் பாராட்டுகிறார் என்பது புரிகிறாற்போல் இருந்தது.

சைக்கிளை எடுத்தவன் சர்ரென்று திரும்பி, வீட்டுக்கு வந்து, "அம்மா, தம்பி ரெடியாய்ட்டானா?, அவனையும் கூட்டிகிட்டே போறேன்." என்று குரல் கொடுத்த போது அம்மாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

தமிழோவியத்தில் பிரசுரமானது - கோப்புக்காக.

Wednesday, November 29, 2006

ஏன்??? (மீள்பதிவு)

["நட்சத்திர வாரத்தில் ஒரு மீள் பதிவு கூட போடலைன்னா எப்படி?" என்றார் நண்பர் ஒருவர். இதுவரை பதிப்பித்த கதைகளிலேயே எனக்கு ரொம்பப் பிடித்த கதை இது. ஆகவே இங்கும் ஒரு மீள்பதிவு. ]

ன்று தான் கவனித்தேன். புதிதாக இருந்தது. வழக்கமாய் இரவானால் பக்கத்து வீட்டில் அலைந்து கொண்டிருக்கும் பூனை இந்தப் பக்கம் நின்று கொண்டிருந்தது.

இரவு சாப்பாட்டின் போது, இரண்டாவது படிக்கும் என் மகன் வினயன் சொன்னான்.

"அப்பா! அந்த பூனை குட்டி போட்டிருக்கே"

"நிஜமாவா? உனக்கு எப்படித் தெரியும்?" இது என் மகள் சசிகலா. வினயனை விட இரு வயது மூத்தவள். அவள் பள்ளி இன்றும் உண்டு. வினுவிற்குத் தான் மழைக்காக ஒரு மாதம் லீவ் விட்டிருக்கிறார்கள். அப்படியும் ஒன்றும் பெரிய படிப்பு இல்லையே. அதனால் தான் அவன் இப்படி பூனையும் நாயுமாக விளையாடிக் கொண்டிருக்கிறானோ என்று எனக்குத் தோன்றியது.

"நம்ம வீட்டு கார் ஷெட்ல தான் இருக்கு... சாப்பிட்டதுக்கப்புறம் போய் பாக்கலாமா?"

"நம்ம வீட்டு கார் ஷெட்லயா?" என் மனைவி சுதாவைக் கேள்வியாகப் பார்த்தேன்...

"ஆமாங்க.. அங்க அழுக்குத் துணி, பழைய சாக்ஸ் எல்லாம் போட்டு ஒரு டப்பா வச்சிருக்கோம் இல்ல, அதுல தான் வந்து படுத்திருக்கு.. மழை வேற பெய்யுதா, கதகதப்புக்கு வந்திருக்கு போலிருக்கு" என்றாள் ஒன்றுமே நடக்காதது போல.

"அதுலயா படுத்துகிட்டிருக்கு?"

" ஆமாம்... ஏங்க?"

"இல்ல, பூனை எல்லாம் வீட்டுக்குள்ள வந்தா கஷ்டம்.. ஆஸ்துமா வரும்னு சொல்லுவாங்க.. கார் எடுக்கும் போது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆய்ட்டா, அது வேற பாவம். அதுக்கு தான் யோசிக்கறேன்".

"அப்பா, அதெல்லாம் பரவாயில்லைப்பா.. நீங்க ரெண்டு மாசம் நம்ம கார்த்திக் வீட்ல வண்டிய விட்டுக்குங்கப்பா. அவங்கப்பா தான் வெளிநாடு போய்ட்டாரே.." இது சசி. நன்றாகத் தான் யோசனை சொல்கிறாள், இத்தனைக்கும் இவள் இன்னும் அந்த பூனையைப் பார்க்கக் கூட இல்லை.

"என்னங்க, பாவமா இருக்குங்க.. இந்த மழைல அது குட்டியையும் வச்சிகிட்டு எங்கங்க போகும்? கொஞ்ச நாள் தானே.. குட்டி வளந்ததுக்கப்புறம் அதுவே வெளீல போய்டும். அது வரைக்கும் எங்களுக்கும் பொழுது போகும் இல்லையா? மழைக்காலம் வேற.. வினு இன்னிக்கு பூரா வெளியிலயே போகலை தெரியுமா.. எல்லாம் அந்த பூனைக்குட்டியால தான். இங்கயே இருக்கட்டுங்க" விட்டால் இவளே பூனை சங்கம் ஒன்று வைத்தாலும் வைப்பாள் போலிருந்தது.

"அப்பா பூனை ரொம்ப க்யூட்டா இருக்குப்பா.. அது பாவம்ப்பா.. இருக்கட்டும்பா. பக்கத்து வீட்டு கார்த்திகைக் கூட அது தொட விடலை தெரியுமா? நான் கிட்டக்க போனா மட்டும் தான், அது ஒண்ணும் பண்ணாம இருக்கு... அது எனக்கு ப்ரெண்ட் ஆய்டுச்சுப்பா.. இப்போ நாமும் போன்னு சொல்லிட்டா அது எங்கப்பா போகும்??!!!" வினுவின் மழலைப் பேச்சை மீறி ஒன்றும் செய்ய இயலாமல் போனது...


"சரி, இருக்கட்டும்.. ஆனா இது தான் சாக்குன்னு அந்த பூனையெல்லாம் தொடக் கூடாது. அப்புறம் சுதா, உனக்கு தான் சொல்றேன், அந்த பூனை கார் ஷெட்டோட இருக்கட்டும். வீட்டுக்குள்ள எல்லாம் வரவிடாதே.."


***********



சாப்பிட்டபின் எல்லாரும் வெளியே போய் அந்தப் பூனையைப் பார்க்க போனபோது நானும் போனேன். என் வீட்டுப் பூனையை நானே பார்க்கவில்லை என்றால் எப்படி?!. பார்த்து வைத்தால், அதன் மேல் கார் இடிக்காமல் நிறுத்த வசதியாகவும் இருக்கும்.

தாய்ப் பூனை படுத்துக்கொண்டிருக்க, அதன் உடலுக்கும் வாலுக்கும் இடையில் சின்னதாய் ஒரு குட்டிப் பூனை இருந்தது. வினு சொன்னது போல், அவன் தொட்டுப் பார்த்தும் ஒன்றும் செய்யாமல் தலையை மட்டும் நிமிர்த்திப் பார்த்து விட்டு திரும்பி படுத்துக் கொண்டது.

'பூனையைத் தொடக்கூடாது' என்ற நானே அதன் அழகில் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பூனைகள் இரண்டும் ஒரே நிறம், கருப்பு வெள்ளையில் இருந்த அவை இரண்டும், என் பழைய காபி கலர் சாக்ஸ் மேல் படுத்திருந்ததும் அழகாக இருந்தது. சின்னப் பூனை ரொம்ப சின்னதாக இருந்தது. கண்ணே திறக்கவில்லை போலும். குரலும் எழும்பவில்லை.

பெரிய பூனை மெதுவாக முனகியது. அது என்னைப் பார்த்த பார்வை ரொம்ப பாவமாக இருந்தது.

நான் என்னவென்று யோசிப்பதற்கு முன்னமே சுதா ஒரு கொட்டாங்குச்சியில் பால் எடுத்து வந்தாள். அந்த பெட்டியிலிருந்து கொஞ்சம் தள்ளி வைத்ததும், சொல்லிக் கொடுத்தது போல் அந்தப் பூனை மெல்ல வெளியில் இறங்கிக் குடிக்க ஆரம்பித்தது. குட்டிப் பூனை அம்மாவின் தேகச் சூடு காணாமல் தேடித் தேடி, மெள்ளமாக வாயைத் திறந்து மியாவ் என்றது. வினு அதை மெதுவாகத் தடவிக் கொடுத்தான். என்ன புரிந்ததோ, அது அமைதியாகத் தூங்க ஆரம்பித்தது.

"அதுக்குள்ள எல்லாம் சொல்லிக் குடுத்துட்டீங்களா" என்றேன் சுதாவைப் பார்த்து.

"அது ரொம்ப இன்டெல்லிஜண்ட் பூனைப்பா.. என்னை மாதிரி".. என்றான் வினு.
"அது சரி".

"ஏய் பூனை, வாட் இஸ் யுவர் நேம்" சசிகலா, பால் குடித்து முடித்து பெட்டிக்குள் ஏற இருந்த பூனையைப் பிடித்து விட்டாள்.

"ஏய் சசி, அதைக் கீழ விடு.. பாவம். டயர்டா இருக்கு பாரு" என்றபடி, அவள் கைகளிலிருந்து பூனையை விடுவித்த சுதா, "அதுக்கு பேர் எல்லாம் நாம தான் வைக்கணும்... அதுக்கு தெரியாது.."

"அம்மா, அப்போ சசின்னு வைக்கலாம்மா... " கெஞ்சவே ஆரம்பித்துவிட்டாள் சசிகலா.

"சசி வேண்டாம்டா, அப்புறம், அம்மா சசி ஹார்லிக்ஸ் குடீன்னா, அது வந்து குடிச்சிடுமே" என்றேன் நான்.

"அப்போ, சசிக்கு மேச்சிங்கா, புஸின்னு வைக்கலாமா? "

"புஸின்னா பூனை, ஹைய்யா.. புஸ்ஸிகாட், புஸ்ஸிகாட் வாட் டு யூ டூ.." - சசிகலா.

"அம்மா, அப்போ குட்டிப் பூனைக்கு மனுன்னு வைக்கலாம்... வினுக்கு மேட்சா இருக்கும்"

"சரி வினு சார்.. நிச்சயம் உங்க பேர் தான். இப்போ மனுவும் புஸ்ஸியும் தூங்க போறாங்க.. அப்பாவும் டயர்டா இருக்கேன்.. வாங்க ரெண்டு பேரும் தூங்கலாம்."

ராத்திரி பூராவும் பூனையுடன் என்ன விளையாடுவது என்று யோசித்துக்கொண்டே தூங்கிப் போனார்கள் இருவரும்.



***********



றுநாள் முதல் பூனையுடன் விளையாடுவது என்பது சாப்பிடுவது, தூங்குவது போல் தினப்படி வேலையானது. வினு எங்கே என்றால், நிச்சயம் கார்ஷெட்டில் தான் இருப்பான்.

சசியைத் தினம் ஸ்கூலுக்கு அனுப்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். "வினுவை மத்தியானம் பூரா விளையாட விடாமல் பார்த்துக் கொள்கிறேன்" என்று உறுதி கொடுத்தபின் தான் பள்ளிக்கே போவாள்.

புதிது புதிதாய் கற்றுத் தரும் ரைம்ஸ் எல்லாம், புஸ்ஸிக்கும் மனுக்கும் தான் முதலில் சொல்லிக் காட்டப்படும். பூனையைப் பற்றிக் கேள்விப்பட்டு ஒரு நாளைப்போல் தினமும் சசி, வினுவின் யாராவது ஒரு தோழியோ, தோழனோ, மனுவைப் பார்க்க வந்து விடுவார்கள்.

ஒரு மாதம் ஓடிப் போனது. மனு இன்னும் அம்மாவிடம் பால் குடிக்கிறது. புஸ்ஸி மேலும் நம்பிக்கை கொண்டு மனுவை வினுவிடமும் சுதாவிடமும் விட்டு விட்டு, வேட்டைக்குப் போகிறது.

இரவில் சுதா பிசைந்து போடும் பால் சாதத்தை இப்போது மனுவும் சாப்பிடுகிறது. சில சமயம் வினு சாப்பிடும் முறுக்கிலும், சசி சாப்பிடும் குர்குரேவிலும் கூட பங்கு கேட்கிறது.

ஒரு மாதமாக, வார இறுதியில் "வெளியே போகலாம்பா, பீச்சுக்குப் போலாம்பா" என்று வினுவோ சசியோ கேட்கவே இல்லை. மனு அவர்களை எப்போதும் பிஸியாக வைத்துக் கொண்டான். வினு, சசியுடன் சேர்ந்து ஒரு குட்டிப் ப்ளாஸ்டிக் பந்தை அடித்து விளையாடத் தொடங்கி விட்டது.



***********



ன்று வெள்ளிக்கிழமை. நான் வீட்டுக்கு வந்தபோது, வழக்கத்துக்கு மாறாக, புஸ்ஸியையும் மனுவையும் காணவில்லை. வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டுக் கார்த்திக்கின் அம்மா என் தலையைப் பார்த்து சாவியை எடுத்து வந்தாள்.

"சுதா, குழந்தைங்க எல்லாம் எங்கே?" நான் கேட்டு முடிக்குமுன் வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. சுதாவும், குழந்தைகளும், புஸ்ஸியும், கார்த்திக்கின் பாட்டியும் கூட அதிலிருந்து இறங்கினர். எல்லோரும் ரொம்ப சோர்ந்து இருப்பதாகத் தோன்றியது. சுதா பணம் கொடுத்து விட்டு வருவதற்குள், சசியும் வினுவும் ஓடி வந்தனர்.

"அப்பா, மனு ... மனு... " அதற்கு மேல் பேச முடியாமல், அவர்கள் இருவர் கண்களும் கலங்கிப் போயின.

வாசலில் நின்று எதுவும் கேட்க வேண்டாம் என்று நான் கதவைத் திறந்து உள்ளே போகச் சொன்னேன். புஸ்ஸி நேரே கார் ஷெட்டுக்குப் போய் அதன் இருப்பிடத்தில் படுத்துக் கொண்டது.

கார்த்திக்கின் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு சுதாவும் உள்ளே வந்தாள். அவள் கண்களும் கலங்கிக் கிடந்தது.

"என்னாச்சு சுதா? மனு எங்கே?"

நான் கேட்பதற்குக் காத்திருந்தது போலவே சுதா சொல்ல ஆரம்பித்தாள். கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் போன அவளின் அழுகைக்கும் விசும்பலுக்குமிடையில் நான் சேகரித்தது இது தான்:

கொஞ்ச நாளாக இந்தப் பக்கம் சுற்றிக் கொண்டிருந்த தெருநாய் ஒன்றுடன், மனு சண்டைக்கு போயிருக்கிறது. இளங்கன்று அல்லவா, பயமறியவில்லை. அந்த நாய் மனுவின் கழுத்தில் கடித்ததில், அது அலறிக் கொண்டே எங்கள் வீட்டு வாசலில் வந்து விழுந்திருக்கிறது.

இயலாமையுடன் கத்திய புஸ்ஸியின் குரல் கேட்டு தான் டீவி பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் வாசலுக்கு போய்ப் பார்த்துவிட்டு சுதாவைக் கூப்பிட்டார்களாம். அதற்குள் மனுவுக்கு ரொம்பவும் ரத்த சேதமாகி, வலிப்பும் வந்துவிட்டதாம்.

சுதா உடனே ஒரு ஆட்டோ அழைத்து அருகிலுள்ள விலங்கியல் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறாள். ரொம்ப தாமதமாக வந்துவிட்டதாகச் சொன்ன மருத்துவர், ஒரு ஊசி போட்டுவிட்டு, அங்கேயே காத்திருக்குமாறு சொல்லிவிட்டாராம். ஒரு மணி நேரத்திற்குள் மனு மண்ணுலகை விட்டு, அதனை நக்கிக் கொண்டே சுதாவையும் வினுவையும் பாவமாக பார்த்து கத்திக்கொண்டிருந்த புஸ்ஸியையும் விட்டு விட்டுச் சென்றுவிட்டதாம்.

கடித்தது வெறிநாய் என்பதால், அந்த மருத்துவர், அங்கேயே எரித்துவிடச் சொன்னாராம். அவரிடமே ஒப்படைத்துவிட்டு வந்துவிட்டார்களாம்.

கேட்ட எனக்கே நெஞ்சு கனத்தது என்றால், கண்ணால் கண்ட சுதாவுக்கும் குழந்தைகளுக்கும் எப்படி இருந்திருக்கும்?!!...

சசியும் சுதாவும் இரவு வெகு நேரம் வரை அழுது கொண்டே இருந்தனர். யாரும் இரவு உணவு சாப்பிடத் தயாராய் இல்லை. நான் தான் ஏதாவது சாப்பிடச் சொல்வோம் என்று நினைத்து எல்லாருக்கும் பால் கொண்டு கொடுத்தேன். பாலைப் பார்த்தவுடன், மீண்டும் சுதா அழ ஆரம்பித்து விட்டாள்..

"இதே டம்பள்ர்ல தாங்க மனுவுக்கும் பால் விடுவேன். இப்படி நம்ம விட்டுட்டு போய்டுச்சே"...

"வெளீல ஏம்பா போச்சு?!!! நான் டாம் அன்ட் ஜெர்ரி பார்த்துனால தானே.. இனிமே பாக்க மாட்டேன்னு காட் கிட்ட சொல்லுப்பா.. நான் இனிமே மனுவை நல்லா பார்த்துக்கறேன்.. என் கிட்ட திருப்பிக் குடுக்கச் சொல்லுப்பா..." சசிக்கு என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை.

சமாதானம் செய்ய முடியாமல், இன்னும் கொஞ்சம் நேரம் அழுது விட்டு சசி களைத்துப் போய்த் தூங்கிவிட்டாள். இதில் எதுவும் கலந்து கொள்ளாமல், டீவி பார்த்துக்கொண்டிருந்தான் வினு. இவனுக்கு என்ன ஆனது என்று நினைத்துக் கொண்டே போய் வினு அருகில் அமர்ந்தேன்.

"என்னாச்சு வினு, ஒண்ணும் சொல்ல மாட்டேங்கற?"

"மனு சாமி கிட்ட போய்டுச்சுன்னு கார்த்திக் பாட்டி சொன்னாங்க.. என்ன பண்றது?!!! மனுவை எனக்கு ரொம்ப பிடிக்கும். சாமிக்கும் பிடிக்கும் போலிருக்கு.. அதான் அங்க கூப்டுகிட்டாருன்னு கார்த்திக் பாட்டி தான் சொன்னாங்க. சாமிகிட்ட போய்ட்டாத் திரும்பி வர மாட்டாங்கன்னு நீ தானேப்பா சொன்ன... நம்ம பாட்டியும் இப்டி தானே போனாங்க.. அழுதா மட்டும் திரும்பி குடுத்துரவா போறாரு?"

அப்பனுக்கு புத்தி சொன்ன சுப்பய்யாவாக வினு பேசிக்கொண்டே போக, என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. வினுவை அப்படியே அணைத்துக் கொண்டு மனம் மாறி டீவி பார்க்க ஆரம்பித்தேன்.

தலைப்புச் செய்திகளுடன் செய்திக்கோவை முடிந்துகொண்டிருந்தது. பாலம் ஒன்று உடைந்து 2 பேருக்கு பலத்த அடி. ஏதோ ஒரு ஊரில் இந்து முஸ்லிம் கலவரம். 10 பேர் பலி. இரவில் தனியாக வேலைக்குப் போய்க் கொண்டிருந்த பெண் கொல்லப்பட்டாள். மனதில் நில்லாமல், செய்திகள் ஓட, வினுவைப் பார்த்தேன்.

வினு இப்படித்தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நியூஸ் பார்த்துக் கொண்டே இருப்பான். என்னைப்போல என்று நான் மகிழ்ந்து கொள்வது வழக்கம். இன்று வேறு ஏதாவது பார்த்தால் நலம் என்று தோன்றியது.

"அப்பா!, நான் ஒண்ணு கேட்கட்டா?"

"என்னடா வினு?" மீண்டும் பூனையைப் பற்றிப் பேசும் தெம்பு எனக்கு சுத்தமாக இருக்கவில்லை. வேறு ஏதாவது கேட்டால் நலம்.

"நம்ம வீட்டுப் பூனையை அந்த நாய் கடிச்சிடிச்சி. அந்த நாயை அப்புறம் கார்ப்பொரெஷன் வேன்ல அழைச்சிட்டு போய்ட்டாங்களாம்; கொன்னுடுவாங்களாமே, கார்த்திக் சொன்னான். "

என்ன கேட்கப் போகிறான் என்று அவன் முகத்தையே பார்க்கத் தொடங்கினேன்.

"நாய் நாயையே கொல்லறது இல்ல.. பூனை பூனையைக் கொல்லாது. அப்புறம் ஏன்பா மனுஷங்க மட்டும் இன்னொரு மனுஷனை ஈஸியாக் கொல்றாங்க?"

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், வினுவைப் பார்த்தேன்.

"அப்பா டயர்டா இருக்கேன்.. நாளைக்கு சொல்றேன்டா கண்ணா"!! என்பதைத்தவிர வேறு எதுவும் சொல்ல எனக்கு தோன்றவில்லை.

Tuesday, November 28, 2006

லிப்ட்..(சிறுகதை)

சென்னையின் இதயப் பகுதியில் வேலை என்றதும் சாருவுக்கு முதலில் நிம்மதி தான் ஏற்பட்டது. இனிமேல் அதிகாலை எழுந்து விடிந்தும் விடியாத காலையில் அவசர அவசரமாக குளித்து, சமைத்து, டப்பாவில் போட்டுக் கொண்டு கம்பனி பஸ் பிடிக்க ஓட வேண்டாம். ஆற அமர சமைத்து சாப்பிட்டுவிட்டு குழந்தைக்கும் ஊட்டிவிட்டு மெல்லவே அலுவலகம் போகலாம். அத்துடன் மாலை அலுவலகத்திலிருந்து கிளம்பி வீடு சேரவே இரண்டு மணிநேர அலுவலகப் பேருந்து பயணம் என்றிருப்பது குறைந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டாலும் சீக்கிரமே வீடு வந்துவிடலாம். என்றெல்லாம் பெரிய அளவில் விரிந்தது அவளின் கற்பனைக் கோட்டை.

வேலைக்கு வந்து சேர்ந்த மூன்றாம் நாளே இதெல்லாம் எத்தனை முட்டாள்தனம் என்பது புரிந்து போயிற்று.

"சாரு மேடம், உங்க வீடு சிட்டிக்குள்ள தானே இருக்கு, நீங்க தான் எப்போ கிளம்பினாலும் அரை மணியில் போய்ச் சேர்ந்துடுவீங்க.. கொஞ்சம் இன்னிக்கு க்ளயண்ட் கால் நீங்க எடுத்துடுங்களேன்.. அடுத்த வாரம் நான் வேற ஏற்பாடு செய்யுறேன்" இது புதன் கிழமை.

"சாரு, பிராஜக்ட் லீடர் வாக்கு கொடுத்துட்டார் போலிருக்கு. கொஞ்சம் இருந்து முடிச்சு கொடுத்துடுங்களேன்.. ராணி, சங்கர் எல்லாம் புதுப் பசங்க பாருங்க.. நம்ம தான் எல்லாத்தையும் பொறுப்பெடுத்து செய்யணும்" என்று மேனஜர் கேட்டதால் வியாழனும் ஒன்பது மணியாகிவிட்டது கிளம்ப.

வெள்ளியாவது நேரத்தோடு கிளம்பி விட வேண்டும் என்று முடிவு செய்திருந்ததிலும் இடியைப் போட்டான், முதல் நாள் எழுதிய ப்ரோக்ராமை சோதனை செய்யும் ராகவ். அவன் திடீரென்று எடுத்துப் போட்ட நாலைந்து பிரச்சனைகளைச் சரி செய்து வேலையை முடித்துக் கொடுத்துவிட்டுக் கிளம்ப இன்று பத்து மணியாகிவிட்டது.

சாரு தன் கைனடிக் ஹோண்டாவின் ஆக்ஸிலரேட்டரை அதிக பட்ச அழுத்தத்துடன் முறுக்கினாள். ராகவின் மீதிருந்த கோபம் பூராவும் காட்டி வண்டியை உருட்டியபோது சாலையில் ஆள் நடமாட்டமே இருக்கவில்லை. தினசரி அவளைப் பல நிமிடங்கள் காக்கவைக்கும் கூட்டமான போக்குவரத்து விளக்குகள் பலவும் வெறும் எச்சரிக்கை விளக்காக எரிந்து கொண்டிருக்க, வசதியாக வண்டியை விட்டாள்.

அலுவலகத்திலிருந்து கிளம்பி இரண்டு நிமிடம் கூட தாண்டியிருக்காது, அந்த இருண்ட வீதியின் முனையில் ஒரு உருவம் தனியே நின்று கொண்டிருந்தது தெரிந்தது. இருட்டில் அதன் நிழலில் தாடி வைத்திருந்த உருவமாகப்பட்டது. அத்தனை நேராக வாரப்படாத தலை, ஜீன்ஸ், கசங்கிய சர்ட். 'இப்போதெல்லாம் தெருவோர பிச்சைக்காரன் கூட ஜீன்ஸ் போடுகிறான்' என்று தோன்றிய எண்ணத்தைச் சிரித்துக் கொண்டே ரசித்தவாறு அவனைப் பார்த்தபோது, லிப்ட் கேட்க 'கை போட்டது' அந்த உருவம்.

'இருட்டில், தனியாக வரும் பெண்ணிடம் லிப்ட் கேட்க எத்தனை தைரியம் இருக்க வேண்டும் இவனுக்கு' என்று தோன்றியது சாருவுக்கு. அத்துடன் வண்டி நிறுத்துமளவுக்கு அந்தத் தெரு அத்தனை வெளிச்சமானதில்லை. லிப்ட் கொடுக்கும் அளவுக்கு இவனும் அத்தனை டீசண்டானவனாகத் தோன்றவில்லை.

வெள்ளி இரவில், இருட்டில் வீணாக வம்பில் மாட்டிக் கொள்வது நியாயமில்லை என்று தோன்றவே, தலையை மையமாக அசைத்து முடியாது என்று மறுத்துவிட்டு, வண்டியை இன்னும் வேகமாக ஓட்டினாள் சாரு.

அந்த கைக்குச் சொந்தமான மனிதன், மறுப்பை லட்சியம் செய்யாததோடு, தெருவின் குறுக்கேயே வந்துவிட்டான் சாருவை மறிப்பது போல். சாரு கடைசி நொடியில் கட் கொடுத்து அந்த மனிதனைத் தாண்டி வண்டியை ஓட்ட வேண்டியதாகிவிட்டது.

அருகில் பார்க்க நேர்ந்த போது, அந்த தாடிக்காரனின் முகத்தில் சிறு வெளிச்சம் படர்ந்தது. ஏதோ சொல்ல வருபவன் போல் தோன்றியது. 'என்னவோ சொல்லிவிட்டுப் போகட்டும்.. என்ன சொல்லப் போகிறான், மிஞ்சி மிஞ்சிப் போனால் ஏற்றிக் கொள்ளாததற்கு வருத்தமோ, கோபமோ தெரிவிக்கலாம். நியாயம் கூட சொல்லலாம், அவனை ஏன் ஏற்றிக் கொள்ளவேண்டும் என்று.. அதெல்லாம் இப்போ யாருக்கு வேண்டும்.. திவ்யாக்குட்டி எப்படி இருக்கிறாளோ, அவளைப் பற்றிய யோசனைகள் தான் இப்போது தேவை.. '

சாரு பின்னால் பார்க்கும் கண்ணாடியில் பார்த்தபோது, அவளுக்குப் பின்னாலேயே ஒரு வண்டி வருவதும், அதில் ஒரு இளைஞன் அமர்ந்திருப்பதும், நமது பழைய தாடிக்கார நண்பன் அந்த இளைஞனிடமும் கை நீட்டி லிப்ட் கேட்பதும் தெரிந்தது.

காலேஜ் காலத்திலிருந்தே இந்தக் 'கை போடுபவர்களின்' மீது சாருவுக்குத் தனி வெறுப்பு இருப்பதுண்டு. அதிலும் இவனைப் போல் யார் வந்தாலும் இருக்கட்டும் என்று லிப்ட் கேட்பவர்கள் தொல்லை தான். சாருவின் கல்லூரியில் அவளுடன் படித்த பையன் ஒருவன், பஸ்பாஸ் வாங்கவே மாட்டான். இப்படி வழி தோறும் லிப்ட் கேட்டே தினசரி காலேஜுக்கு வந்துவிடுவான். திரும்பிச் செல்வதற்கும் இதே மாதிரி அடுத்தவன் வண்டிதான். 'இதுல என்ன இருக்கு சாரு, ஜஸ்ட் ஒரு அரை அவர் முந்தி கிளம்பணும்,.. அவ்வளவு தான்' என்று தெனாவட்டாக சொல்லுவான். சாருவும் அவளை ஒத்த மற்ற பெண்களும் பேருந்தில் நிற்க முடியாமல் நின்று கொண்டு வரும்போது இவனுக்கு மட்டும் இத்தனை வசதியான சவாரியா என்று சாரு பொறாமைப்படுவது கூட உண்டு.

பின்னால் வந்த இளைஞன் தாடிக்காரனுக்காக வண்டியை நிறுத்தினான் போலும், சாருவின் பின்கண்ணாடியில் தெரிந்தது அவளைக் கொஞ்சம் துணுக்குறச் செய்தது. தாடி இளைஞன் வண்டியில் ஏறுவதற்கு முன் சாருவைக் கை காட்டி ஏதோ சொன்னான். வண்டிக்கார இளைஞனும் சாருவைப் பார்த்தபடி தலையசைப்பதையும் சாரு நொடிப்பொழுதில் கண்டு கொண்டாள்..

'என்ன சொல்லி இருப்பான்? அந்தப் பொண்ணு நிற்கவே இல்லை சார்' என்றா! அதை ஏன் அவனிடம் சொல்ல வேண்டும்?

சாரு யோசித்துக் கொண்டே இருக்கும் போது பின்னால் வந்த வண்டியானது தன்னை நோக்கித் தான் வருகிறது என்பதைக் கண்டுகொண்டாள்.

இயல்பான பாதுகாப்பு உணர்ச்சியில் வண்டியை இன்னும் விரைவாக்கினாள். சாருவின் வண்டி சீறிப் பறந்தது. பின்னால் அந்த இளைஞர்களும் தொடர்வது தெரிந்தது. ஒருவேளை இப்படி இருக்குமோ! அந்த புது பைக்காரனும், காத்திருந்தவனும் ஏற்கனவே அறிமுகமானவர்களாக இருப்பார்களோ! தாடிக்காரன் இவளை நிறுத்தி, லிப்ட் கேட்டு, அப்படி ஏதாவது செய்யும்போது, இந்த பைக் காரன் பின்னால் வந்து அவளைப் பயமுறுத்தி, கையில் கழுத்தில் உள்ளதைப் பறிக்கத்தான் இந்தத் திட்டமோ? இப்போது அவள் தப்பிவிட்டதில் பின் தொடர்ந்து வந்து பிடுங்கிக் கொள்ளப் பார்க்கிறார்களோ?

யோசித்துக் கொண்டே நூறடி ரோடுக்கு வந்துவிட்ட சாருவுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இங்கே கொஞ்சம் மக்கள் கூட்டம் இருக்கும். ஆனால், அட, இங்கு சிக்னல்களும் வேலை செய்கிறதே! சோதனையாக, வெள்ளிக்கிழமை பத்துமணிக்கு அந்த ரோடிலும் அத்தனை கூட்டம் இல்லை. ஆனால், சிக்னல்கள் மட்டும் வேலை செய்தன.

அடடா.. சிக்னல் விழப் போகிறது, அந்த யம காதகன்களோ விடாமல் இந்த ரோடு வரை துரத்தி வருகிறார்களே! அவர்கள் கையில் சிக்காமல் தப்பிவிட முடியுமா?

முதல் சிக்னலைக் கடைசி நிமிடத்தில் சிகப்பு விழுந்துவிட்ட போதும் பரவாயில்லை என்று தாண்டி வந்தாள் சாரு. பின்னால் வந்தவர்கள் இப்போது நின்று விடுவார்கள். நிம்மதியாக ஓட்டலாம் என்ற அவளது நினைப்பைக் கெடுப்பது போல் முன்னால் இருந்த சிக்னல் ஒன்று சுத்தமாக சிகப்பு காட்டி அவளை நிற்கச் சொன்னது.

பின் சிக்னல் பச்சை விளக்கு வரும் முன் தனக்கு வழி கிடைத்துவிட்டால் தப்பிவிடலாம். எங்கே.. நடக்கக் கூடிய கதையா என்று பார்க்கவேண்டும். சாரு சிக்னலையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பின் பக்கம் பார்க்கும் கண்ணாடியைப் பார்த்தபோது, பின் துரத்தி வந்த பைக் இன்னும் அருகில் வந்துவிட்டது. படுபாவி இளைஞர்கள், சிக்னல் டிராபிக் எல்லாம் மதிக்கும் வழக்கமே இல்லை போலும்! இவள் தான் இப்படி விதிகளை மதித்து ரொம்ப கஷ்டப் படுகிறாள்!

சாரு பார்த்த போது, அந்த பைக் அவளுக்கு மிக மிக அருகில் வந்தாயிற்று. நிச்சயம் வண்டியை நிறுத்தப் போகிறார்கள். "என்ன வேண்டும் இவன்களுக்கு! கேட்டுத் தான் பார்த்துவிடுவோமே. இதுவோ கொஞ்சம் பிரதான சாலை தான். விளக்குகள் வேறு இருக்கின்றன. இந்த இடத்தில் இல்லாவிட்டால், அடுத்து சாரு தனது வீடு இருக்கும் சந்துக்குள் திரும்பினால் அங்கே எல்லாம் இந்த வீணாய்ப் போன இளைஞர்கள் வர வேண்டாம்.. வீட்டைக் காட்டிக் கொடுப்பதில் சாருவுக்கு மனமே இல்லை.. மிஞ்சி மிஞ்சிப் போனால் பணத்தைப் பிடுங்கிக் கொள்வார்கள்.. வெள்ளிக் கிழமை. அவளே பணம் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். பர்ஸிலும் அதிகம் இருக்காது.. போகட்டும்.. என்ன வேண்டும் என்று கேட்டே விடுவோம்.." சாரு யோசித்துக் கொண்டே இருக்கும் போது அந்த இளைஞர்கள் சாருவின் அருகில் வந்துவிட்டனர்.

நல்ல வேளையாக சிக்னலும் பச்சையாகவே சாரு வண்டியை முறுக்கினாள். இளைஞர்கள் இதைச் சற்றும் எதிர்பாராததால் கொஞ்சமே பின் தங்கினாலும் பின்னாலேயே வந்துவிட்டனர். கிட்டத் தட்ட சாருவை நெருங்கிவிட்ட அவர்கள் அவளைக் கொஞ்சம் தாண்டியும் சென்றபோது, பின்னால் இருந்தவன் சாருவைப் பார்த்துக் கத்தினான். "துப்பட்டாவை ஒழுங்கா பிடிச்சிகிட்டு ஓட்டும்மா! எப்படிப் பறக்குது பாரு! அதைச் சொல்லத் தான் உன்னைத் துரத்திகிட்டே வாரோம்!" என்றவன், "இப்போ வெரசா ஓட்டு சார்.. அதோ அந்த பெட்ரோல் பங்க் கீது பாரு, அங்க தான் நம்ம ஆட்டோ நிக்குது. " என்று சொல்லிக் கொண்டே சென்றது தேய்ந்து ஒலித்தது..

சாரு மட்டும் இன்னும் ஆச்சரியம் விலகாமல், பின்பக்கமாகப் பறந்து கொண்டிருந்த துப்பட்டாவை இழுத்துவிட்டுக் கொண்டாள்.

Wednesday, November 22, 2006

கோகுலம் - இதழ் 2

இந்த வாரம் பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன். பழைய குப்பைகளைக் கிளறிக் கொண்டிருந்த போது ஒரு பேப்பர் கிடைத்ததாக பாட்டி எடுத்துக் கொடுத்தார்.

ஆமாமாம், எல்லாம் உங்க அன்புக்குரிய பொன்ஸின் மழலைக் கதை தான்.

ம்ம்ம்ம்ம்ம்மாட்டிக்கினாங்க..










இனி கதை:

தங்கமும் தேங்காய் நாரும்

ரு ஊரில் ஏழைத் தம்பதிகளான ராமனும் சீதையும் வாழ்ந்து வந்தார்கள். குழந்தைப் பேறில்லாத சீதா, ராமனிடம் சதா "பழனிக்குப் போகவேண்டும்" என்று சொல்லிக் கொண்டிருப்பாள்.

ஒருநாள் போதுமான பணம் சேர்ந்ததும் அவர்கள் இருவரும் பழநிக்குச் சென்றனர். அங்கு சீதா, தனக்குக் குழந்தை பிறந்தால் அதன் எடைக்குச் சம எடையாக தேங்காய் நார் காணிக்கையாக்குவதாக வேண்டிக் கொண்டாள்

இது நடந்து ஒரு வருடத்திற்குள் அவர்கட்கு குழந்தை பிறந்தது. அத்தோடு பெரும் பணக்காரர்களாக ஆனார்கள். இருப்பினும் அவர்கள் பழனிக்குச் சென்றனர். செல்லும்போது சீதா, கடவுளுக்குத் தேங்காய் நார் வைக்கக் கூடாது. தங்கம் வைக்கலாம்" என்றாள்.

ஆனால், எவ்வளவு தங்கம் வைத்தாலும் குழந்தை உள்ள தட்டே தழைந்தது. கலவரமடைந்த அவர்களை குருக்கள் தங்கத்தை எடுக்கச் சொன்னார். அதன்பின் ஒரு அர்ச்சனை செய்யச் சென்றுவிட்டார். அப்போது அவர் உடைத்த தேங்காயின் குடுமியைப் பிய்த்துப் போட்டார். அது சென்று தட்டின் மேலே விழுந்தது. உடன் அது சமமாகிவிட்டது


[இராம நாராயணன் அல்லது பேரரசு கேட்டால், பஞ்ச் வசனங்களுடன் காப்பி ரைட்ஸ் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் ;) ]

கோகுலம் படிப்பவர்களே, ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்.. குழந்தைகளுக்காக

Thursday, November 16, 2006

தேவி எங்கே? (நிறைவுப் பகுதி)

"தேவி எங்கே?" அம்மா கேட்டார்.

"கெட்டது குடி! பால்காரரே கஸ்டமர் கிட்ட மாடு எங்கேன்னு கேட்கிற மாதிரி, நீங்களே இப்படிக் கேட்டா, நாங்க என்ன செய்யுறது?" என்றபடி மிச்சமிருந்த நீரை வாய்க்குள் கவிழ்த்துக் கொண்டான் சந்தர்.

"சந்தர், உன் திருவாயை மூடிக் கிட்டு சும்மா இருக்கியா?" என்ற வாணி, மெதுவாக, "ஆண்ட்டி, என்ன நடந்தது? தேவி எங்கே?" என்று கேட்டாள்.

"தேவி இன்னிக்கு அவங்க சித்தப்பா பொண்ணு பிறந்தநாளுக்காக அவங்க வீட்டுக்குப் போவதா இருந்தது. அதனால பாதி நாள்ல ஸ்கூல்லேர்ந்து வந்துட்டா. நாங்க கிளம்பிகிட்டே இருந்தப்போ, நாலு பேர் திமு திமுன்னு உள்ளே வந்து என்னைக் கட்டிப் போட்டுட்டு தேவியைத் தூக்கிட்டுப் போய்ட்டாங்க." திக்கித் திணறி சொல்லி முடித்தார் அந்தத் தாயார்.

"எதுக்குக் கடத்துறாங்கன்னு ஒண்ணும் சொல்லலியா?" என்றான் சுரேஷ்

"தேவியோட அப்பா, போன மாதம் சேதுபதின்னு ஒரு திருடனை பிடிச்சாராம். அவனை விட்டுட்டால் தேவியைத் திருப்பி அனுப்பவதாகச் சொன்னாங்க.. எல்லாத்தையும் சொல்லிட்டு என்னையும் அடிச்சிட்டுப் போய்ட்டாங்க." விசும்பலுடன் தேவியின் தாயார் சொல்லி முடித்தார்.

"எந்தப் பக்கமாப் போனாங்க?" என்றாள் பிரியா

"வாசற்பக்கமாத் தான்.." என்ற தேவியின் அம்மா குரல் கொஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்ததினாலேயே "வாசல் வழியாப் போகாம, பின்ன ஜன்னல் வழியாவாப் போக முடியும்" என்று தொண்டை வரை வந்த நக்கலை அப்படியே விழுங்கினான் சந்தர்.

"பிரியா, ஆண்ட்டிய பக்கத்துத் தெரு டாக்டர் வீட்டில் விட்டுட்டு அப்படியே போலீஸ் ஸ்டேசன் போய் தேவியின் அப்பாவுக்கும் தகவல் சொல்லிட்டு வந்துடு. நாங்க அவங்க போன வழியை விசாரிச்சிகிட்டுப் போறோம்." சுரேஷ் சொன்னதும் பிரியா தவிர்த்து மற்ற மூவரும் கிளம்பினர். வாசல்பக்கம் மீண்டும் வந்து நின்ற போது சந்தர் ஒற்றைக் காலைத் தூக்கிக் கொண்டே கத்தினான்

"ஆ, ஒரு கடி ராணியைத் தேடப் போறோம்னு எறும்புக்குக் கூட தெரிஞ்சிருக்கு!" என்றபடி குனிந்து பார்த்தச் சந்தர் "ஐ அரிசி மிட்டாய்!" என்று குதித்தபடி நிமிர்ந்தான். "இதென்னாப்பா, கவர்மெண்டுல புதுசா மிட்டாய் ரோடு போடுறாங்களா? வரிசையா இரைச்சிருக்காங்க!"

மூவரும் குனிந்து பார்த்தனர். வரிசையாய் ஒரே நேர்க்கோட்டில் அரிசிமிட்டாய் இரைந்து கிடந்தது.

"வெயிட். வெயிட். சுரேஷ், தேவியோட பெட் வச்சி நீ தோத்ததுக்கு இன்னிக்குத் தானே பெட் படி இந்த அரிசி மிட்டாய் வாங்கித் தந்தே?" வாணியின் குரலில் புதிய உற்சாகம் வீசியது

"அட ஆமாம்! அதே மாதிரி தான் இருக்கு!"

"அப்படின்னா மிட்டாய் ரோடு போட்டது நம்ம தேவி தானா?" சந்தர் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தான். "தேவி வர வர இந்தச் சந்தர் மாதிரி புத்திசாலியாகிகிட்டே வரா!"

"ஆமாம். அதனால தான் மிட்டாய் ரோடு போட்டிருக்கா. கொஞ்சம் லேட்டா வந்திருந்தா எறும்பு எடுத்திட்டுப் போயிருக்கும். ஆனது தான் ஆனா, வாணி மாதிரி புத்திசாலியாகக் கூடாது!"

"போதும் உங்க சண்டை, மிச்சத்தை எறும்பு எடுக்கிறதுக்குள்ள நம்ம வேட்டையாடுவோம்!"

அந்த மிட்டாய்களைப் பின்பற்றி மூவரும் நடந்தனர். அந்தக் கோடு கடைசியாய் ஒரு கூரை வேய்ந்த வீட்டினுள் சென்று மறைந்தது. கதவு பூட்டப் பட்டிருந்த அந்த வீட்டை மூவரும் சுற்றிச் சுற்றி வந்தனர். அந்தக் குடிசைக்கு வேறு வழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சந்தர் மெல்ல கதவின் மீது கைவைத்தான். ஓசையின்றி திறந்து கொண்டது கதவு. மூவரும் வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

சுந்தரும் வாணியும் மட்டும் உள்ளே நுழைவது என்று முடிவானது. சுரேஷ் வெளியே காவலாக நின்றிருந்தான். கண்கள் இருளுக்குப் பழகியவுடன் குடிசையின் நடுவில் நாற்காலியில் ஒரு உருவம் அமர்ந்திருப்பது தெரிந்தது. வாணி ஓசையின்றி அந்த உருவத்தை நெருங்கினாள். ஆம். அது தேவி தான். !

வாணியைப் பார்த்தவுடன் தேவியின் முகமும் மலர்ந்தது. அதுவரை ஒரே மாதிரி மயங்கி இருப்பது போல் அமர்ந்திருந்த அவள் இப்போது எழுந்து வாணியின் கரத்தைப் பற்றிக் கொண்டாள். ஏதோ பேசத் தொடங்கிய தேவியின் குரல் உடைந்து மெல்லிய விக்கல் வந்திருக்கும், அவள் வாயை அந்தக் கை பொத்தாமல் இருந்தால். வாணி பயந்து போய் நிமிர்ந்து பார்த்த போது அந்தக் கரத்துக்குரியவன் சந்தர் தான் என்று புரிந்தது.

சந்தர் இப்போது கை நீட்டி ஒரு திசையைச் சுட்டிக் காட்டினான். அங்க நான்கைந்து பேர் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். மூவரும் ஓசை செய்யாமல் வாசல்பக்கம் நகர்ந்தனர். கதவை மெல்லச் சாத்தித் தாழிட்டதும், சத்தம் கேட்டு, "தேவி! நல்லா இருக்கியா?" என்றபடி வந்தான் சுரேஷ்.

"அவங்க உன்னை ரொம்ப அடிச்சாங்களா?" வாணி கேட்டாள்

"என்னைத் தூக்கிட்டு வந்து கட்டிப் போட்டுடாங்க. நான் அவங்க பேச்சைக் கேட்டு பயந்து போய் மயக்கமாகிட்டமாதிரி நடிச்சேன்.. அதான் அந்தப் பக்கம் போய்ட்டாங்க.." சொல்லி முடிப்பதற்குள் தேவிக்குக் குரல் கம்மியது.

"ஆமாம், தேவி அப்பாவை யார் போய் மிரட்டணும், எத்தனை மணிக்குப் போய் போன் பண்ணனும்னு பேசிகிட்டிருந்தாங்க! சரி, கவலையை விடுங்க. அதான் வெளியே வந்துட்டமே.!" - சந்தர்

வாணிக்கு ஆனால் பயம் இன்னும் மறையவில்லை "என்ன கவலையில்லை? இந்தக் கதவை அந்த ரௌடிங்க ஒடைக்க எத்தனை நேரமாகும்? அவங்களோ நாலு பேர். நம்மைப் பார்த்திட்டாலும் கஷ்டம் தானே? வாங்க மொதல்ல இந்த இடத்தை விட்டு ஓடலாம்.." என்றாள்.

"அங்க தான் நீ ஐயாவோட மூளையைப் பார்க்கணும். இந்த வீட்டுக்கு வேற வழியே இல்லை. பிரியா சீக்கிரமே வந்துடுவா. அதுவரை இங்கேயே இருந்து இவங்களைக் கண்காணிக்க வேண்டாமா? அப்படியும் எந்தச் சந்தேகமும் வராது, அதான் இவ மயங்கிக் கிடக்கிறான்னு அவங்க ரொம்பவே நம்பறாங்களே!" சந்தர் லாஜிக்கில்லாமல் பேசிக் கொண்டிருப்பதாகச் சந்தேகம் வந்தாலும் வாணியால் மறுத்துப் பேச முடியவில்லை.

அடுத்த ஐந்து நிமிடத்தில் நிஜமாகவே தேவியின் அப்பாவுடன் பிரியா வந்துவிட்டாள். இந்தத் திருடர்களின் மறைவிடம் அவருக்கு முன்னமே தெரியும் என்றாலும் பெரியதொரு கைதுக்கு உதவி செய்த காரணத்துக்காக ஐந்து சுட்டிகளும் டீவி, பேப்பர் என்று பரபரக்கப் பட்டது பற்றி இன்னுமொரு நாள்..

(முற்றும்)

[பின் குறிப்பு: ரொம்ப சொதப்பலா இருந்தா, சாரி, குழந்தைங்க எழுதுற கதை வேற எப்படிங்க இருக்கும்?

எச்சரிக்கை: கிட்டத் தட்ட இதே ரேஞ்சுல இன்னும் நாலஞ்சு கதை இருக்கு. முடிஞ்சா ஒவ்வொண்ணா வலையேத்தி பொன்ஸ் பக்கங்களை வலையுலக கோகுலமா ஆக்கிடலாம்னு யோசனை.. பார்க்கலாம் :)]

Wednesday, November 15, 2006

தேவி எங்கே?

(குழந்தைகள் தினத்தன்னிக்குப் பதிவு போட விடாமல் வேலை வாங்கிய என் மேனேஜருக்குக் கண்டனங்களுடன் இந்தப் பதிவைத் தொடங்குகிறேன். குழந்தைகள் தின ஸ்பெஷல் - ஒரு குழந்தை எழுதிய கதை - பின்ன என்னங்க, ஒரு ஏழாவது எட்டாவது படிக்கிறப்போ எழுதின கதைன்னா அது குழந்தை எழுதின கதை தானே? :) லாஜிக் பார்க்காமல் ரசிக்க வேண்டுதலுடன் குழந்தைகள் தின வாழ்த்துக்களும்.. )

"தேவி, தேவி! மணியடிச்சாச்சு! வீட்டுக்குப் போகணும்" பள்ளி வாசலில் நின்று அழைத்துக் கொண்டிருந்தாள் வாணி.

"யாரு? தேவியையா தேடுறே? அவ வீட்டில் பங்க்ஷன். உனக்குத் தெரியாதா? அவங்க வீட்டுக்குப் பக்கத்து வீடு தானே உன்னுது? அவ இந்நேரம் வீட்டுக்குப் போயிருப்பா!" சொல்லிக் கொண்டே பள்ளியிலிருந்து வெளியே வந்தான் சந்தர்

"ஆமாம், ஆமாம். அப்படித் தான் இருக்கணும். மறந்திட்டேன். நானும் வீட்டுக்குப் போறேன்!" வாணி எழுந்து நடக்கலானான்.

வாணி, சந்தர், தேவி, பிரியா, சுரேஷ் அனைவரும் நண்பர்கள்; ஒரே வகுப்பினர். வழக்கமாய் வாணியும் தேவியும் ஒன்றாக வீட்டுக்குச் செல்வார்கள். ஒன்றாக வீட்டுப்பாடம் செய்வார்கள். எனவே வீடு திரும்பிய வாணி அன்றும் தேவிக்காக காத்திருந்தாள். மணி ஆறாகியும் தேவி வராததால், அவள் வீட்டுக்குச் சென்றபோது வீடு பூட்டியிருந்தது. வாணி வாசலில் நின்று "தேவி, தேவி " என்று கூப்பிட்டுப் பார்த்தாள். பதில் வராமல் போகவே வாணி திரும்பி நடந்தாள்.

நடக்கத் தொடங்கியவுடன் "ஹூம்!" என்றத் தீனப் பெருமூச்சு கேட்டது. வாணி நின்றாள். "தேவி, தேவீ!" மீண்டும் குரல் கொடுத்துப் பார்த்தாள்.

"ஹூம்..!" இம்முறை சத்தம் மிகத் தெளிவாகக் கேட்டது.

"என்ன வாணி? பூட்டின வீட்டுக்கு முன்னால நின்னு சத்தம் போடற?" குரல் வந்த திசையைப் பார்த்த வாணி, சுரேஷூம் ப்ரியாவும் புத்தகங்களுடன் டியூசனுக்குப் போய்க் கொண்டிருந்தனர்.

"இங்கே வா சுரேஷ்."

"என்ன வாணி?"

"தேவியைத் தேடி வந்தேன். வீடு பூட்டியிருக்கு. ஆனா, உள்ளே ஏதோ குரல் கேட்கிறது மாதிரி இருக்கு!"

மூவரும் பேச்சை நிறுத்திவிட்டு உற்றுக் கேட்கத் தொடங்கினர்.

"என்னப்பா, காந்தியடிகள் சொன்னதைக் குரங்குகளுக்குப் பதிலா நீங்களே நடிச்சி காட்டப் போறீங்களா?" சுந்தரின் குரல் மூன்று நண்பர்களின் கவனத்தையும் கவர்ந்த போது, ப்ரியா தன் காதுகளில் கையை வைத்து உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தாள். சுரேஷ் கண்ணாடியை இரு கைகளாலும் ச்பிடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். வாணி தன் வாயைப் பொத்திக் கொண்டு அந்தக் குரல் தன் வாயிலிருந்து வெளிவரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டிருந்தாள்.

"சந்தர், நீ எங்க இந்தப் பக்கம்?" பிரியா கேட்டாள்

"நம்ம கண்ணன் சார்கிட்ட ஒரு சந்தேகம் கேட்கக் கிளம்பினேன். நீங்க என்ன பண்றீங்க?"

"சுரேஷோட லைப்ரரி புத்தகங்களைத் திருப்பக் கிளம்பினோம்."

"இங்கே என்ன பண்றீங்க? தேவியோட அம்மா லைப்ரரி வேற தொடங்கிட்டாங்களா?"

"விளையாடாதே சந்தர். தேவி வீடு பூட்டியிருக்கு, ஆனா, உள்ளாற ஏதோ சத்தம் கேட்குது. " வாணி நிஜமான பயத்துடன் சொன்னதும் சந்தர் சைக்கிளை விட்டு இறங்கி வந்தான்.

"இப்போ என்ன செய்யறது?" பிரியா வினவினாள்

"கதவை உடைச்சிடலாமா?" என்றாள் வாணி

"கார்ப்பெண்டர் பொண்ணுன்னு நிரூபிக்கிறா பாரு" என்றான் சந்தர்.

"அவ சொல்றது நல்ல ஐடியா தானே? அப்படியே செய்யலாமே!" என்றான் சுரேஷ்.

"பின்பக்கக் கதவைப் பார்க்கலாம். இதை உடைச்சா வர்ரவங்க போறவங்களுக்கெல்லாம் விளக்கம் கொடுக்கணும்." என்றாள் வாணி.

"அதானே பார்த்தேன். உன் மூளை ரொம்பவே நேரா வேலை செய்யுதேன்னு.."

"சந்தர்! விளையாடாதே! "

"சரி வாங்க உடைக்கலாம்"

நால்வரும் வீட்டை வலம் வந்து அதன் பின்புறக் கதவை இடித்தனர். இரண்டே தட்டில் கதவு திறந்து கொண்டது.

"நீ குழந்தையா இருக்கறச்சே... , இந்தக் கதவைச் செஞ்சிருப்பாங்க போலிருக்கு " சந்தர் உட்வர்ட்ஸ் குரலில் சொல்லவும் வாணி "உஷ்!" என்று வாயில் விரல் வைத்து சைகை செய்தாள்

உள்ளே நுழைந்த ப்ரீயா "வீல்" என்று அலறினாள்.

"என்னாச்சு?!" சுரேஷ் பயத்துடன்..

"ஒண்ணுமில்லை.. ஒரு சுண்டெலி!"

"விநாயகரோட வாகனத்துக்கே இப்படிப் பயந்தா, நம்ம பிளேடு பக்கிரியை இவ அடுத்த வருசம் எப்படி சமாளிக்கப் போறா?"- சந்தர்

"யாரது பக்கிரி?" - இது வாணி

"நம்ம அடுத்த வருஷ கெமிஸ்டரி வாத்தியார் தான். ஒரே ரம்பமாம்!"

"சே! பேசாம வர மாட்டே?!" சுரேஷ் மிரட்டிக் கொண்டே உள்ளே நுழைந்தான்

சந்தர் காலைத் தூக்கி உள்ளே வைக்கவும், பிரியா திக்கித் தடவி விளக்கைப் போடவும் சரியாக இருந்தது.

"ஹே.. யாரது? ஏதோ சந்திர மண்டலத்துலேர்ந்து புது மிருகமா?" சந்தர் கை நீட்டிக் கொண்டே சத்தமாய்க் கேட்கவும் அவன் விரல் போன திக்கில் மூன்று ஜோடி விழிகளும் திரும்பின.

"ஆண்ட்டி! நீங்களா?!! " என்றபடி வாணி சேருடன் கட்டிப் போட்டிருந்த அந்த அந்த உருவத்தை நோக்கி ஓடினாள். முகம், கை, கால் எல்லாம் வெள்ளைத் துணியால் கட்டி இருக்க, நாற்காலியுடன் நீளக் கயிறு ஒன்று அவரைப் பிணைத்திருக்க, பெரிய பஞ்சுக் குவியல் அடங்கிய வாயுடன், சந்தர் சொன்னது போல் வேற்றுக் கிரக மனிதராகத் தான் தோற்றமளித்தார் தேவியின் தாயார். மயங்கிக் கிடந்த அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, கட்டுக்களை அவிழ்த்து விட்டுக் கொஞ்சம் சுய நினைவு வந்தவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி "தேவி எங்கே?" என்பது தான்!

(தொடரும்)

Friday, November 03, 2006

இலவசமாய் ஏதுமில்லை..

"இந்த இடம் வரை 10ன்னு வருவது எப்படி திடீர்னு இங்கே வரும்போது 12 ஆகுது?" கணினியில் தட்டிக் கொண்டிருந்த சீ ப்ரோகிராமைப் பார்த்துக் கேட்டபின் தான் அதை வாய்விட்டு கேட்டுவிட்டதை உணர்ந்தாள் ராதிகா. லேசாக நாக்கைக் கடித்துக் கொண்டே திரும்பிப் பார்த்தபோது பிரபாகர் பின்னால் நின்றிருந்தான்.

கணினியுடன் பேசிக் கொண்டிருந்த காமெடியைப் பார்த்திருப்பானோ என்று அவஸ்தையாய்ச் சிரித்தபடி "எப்போ வந்தே பிரபா?" என்றாள்.

"நீ சீ(C) கம்பைலரோட பேசத் தொடங்கினப்பவே வந்திட்டேன்.. என்ன சொல்லுது உன் ப்ரோக்ராம்? சொன்னபடி கேட்குமாமா?" சிரித்துக் கொண்டே கேட்டான் பிரபாகர்.

"எங்கே?! அது அப்படியே என் தம்பி சுரேஷ் மாதிரி இருக்கு. நீ என்ன சொல்றது, நான் என்ன கேட்கிறதுன்னு ஒரே அடம்.."

"ஏதாச்சும் உதவி வேணுமா? நான் பார்க்கவா?"

"வேணாம் வேண்டாம்.. எல்லாம் சுரேஷுக்குச் செய்கிற மாதிரி கன்னத்துல ரெண்டு, முதுகில ரெண்டு கொடுத்து வழிக்குக் கொண்டு வந்துக்கிறேன். நீ எதுக்கு வந்தே, அதைச் சொல்லு.. இத்தனை தூரம் என்னைத் தேடி வரவே மாட்டியே பொதுவா.."

"ம்ம்... " என்றவன் சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்தான்.. "அப்படியே காபி மெஷின் வரை போய்ட்டு வருவோமா? இங்கே வச்சி சொல்றது ரொம்ப கஷ்டம்.."

"சரி சரி வா.. காபி குடிக்கிற நேரம் தான்" என்றபடி ராது எழுந்து கொண்டாள்.

அவர்கள் காபி போடும் இயந்திரத்தை நெருங்குமுன் அவர்களின் சின்ன முன்கதைச் சுருக்கம்: ராதிகாவும் பிரபாகரும் ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பில் அருகாமை வீடுகளில் வளர்ந்தவர்கள். சிலகாலத்தில் இரண்டு வீட்டாருமே புறநகரில் சொந்தவீடு கட்டிக் கொண்டு வெளியேறியபோதும் அதிசயமாக அங்கும் ஒரே பள்ளியில் சேர்ந்து, ஒரே கல்லூரியில் கூத்தடித்து - கவனிக்கவும், எங்குமே படித்தார்கள் என்று சொல்லவில்லை, ஏனெனில் அதைப் பற்றி அவர்களுக்கே சந்தேகம் உண்டு.. - ஒரே பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தால் "வளாக வேலைவாய்ப்புத் திட்டத்தில்" (காம்பஸ் ரெக்ரூட்டை எப்படிங்க சொல்றது? ) வேலை கிடைக்கப் பெற்று நல்லவேளையாக இங்கேயாவது வெவ்வேறு குழுவில் இவள் சீயும்(C) அவன் கோபாலுமாக (COBOL) பொட்டி தட்டிக் கொண்டு, இப்போதெல்லாம் பொட்டியுடனும் நிரலியுடனும் பேசிக் கொண்டுமிருக்கிறார்கள்.



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"இந்த ப்ளோரில் காபிக்குச் சக்கரையே பத்தமாட்டேங்குது.. ஏன்னு புரியவே இல்லை.." என்றபடி வெளியில் வந்து பால்கனியருகில் நிற்கலானாள் ராதிகா.

"எல்லாம் உன்னை மாதிரி சக்கரை வியாதி கேஸ் இருக்குன்னு அவங்களுக்கு முன்னாலயே தெரிஞ்சிருக்கும்.. "

"என்னது? சக்கரை வியாதியா? எனக்கா?"

"அதாம்மா, சக்கரையைப் பார்த்தாலே அள்ளி வாயில் போட்டுக் கொள்ளும் வியாதி. "

"சொல்ல மாட்டே.. சரி, என்ன திடீர்னு ஐயாவுக்கு வேலை நேரத்தில் என் நினைவு? "

"ம்ம்.. அது வந்து.. இன்னிக்கு ஈவினிங் சீக்கிரம் கிளம்ப முடியுமா உன்னால?"

"கிளம்பலாம், ஒன்றும் பிரச்சனை இல்லை.. ஆனா, என்ன மேட்டர்?"

"இல்லை.. அம்மா சீக்கிரம் வரச் சொன்னாங்க... கோடம்பாக்கம் வரை போறோம்.."

"என்ன விஷயம்? எனக்குத் தெரிஞ்சு கோடம்பாக்கத்தில் எல்லாம் உனக்குச் சொந்தக்காரங்க கூட கிடையாதே! "

"அது வந்து.. அங்க.. அங்க எனக்கு... பொ... பொண்ணு பார்க்கப் போறோம்.. நீயும் கூட வந்தால் எனக்குக் கொஞ்சம் தைரியமா இருக்கும்.." மென்று விழுங்கிச் சொல்லும் தன் நண்பனைப் பார்க்கச் சிரிப்பு வந்தது ராதுவுக்கு..

"அப்படிப் போடு! கலக்கல்.. கங்கிராட்ஸ்.. யார் வாழ்க்கையைக் கெடுக்கப் போறே?! இந்தப் பாவத்துக்கு நானும் உடந்தையா இருக்கணுமா?!"

"போடி ராது, ரொம்ப கிண்டல் செய்யறதாக இருந்தா நீ வர வேணாம்.. நானே தனியாப் போய்க்கிறேன்.. ஏதோ எங்க அம்மா உன்னைக் கேட்கச் சொன்னாங்களேன்னு கேட்டேன்.." முகத்தைத் திருப்பிக் கொண்டான் பிரபாகர்.

"சரி சரி.. மாப்பிள்ளை முறுக்கெல்லாம் பத்திரமா வச்சிக்கோ. போற இடத்துல காட்டிக்கிடலாம். இப்போ உனக்குத் தோழியா இருந்த பாவத்துக்கு வந்து தொலையறேன்.. அந்தப் பாவப்பட்ட பெண்ணுக்கு முடிஞ்சா கொஞ்சம் எச்சரிக்கையும் செய்யலாம் இல்ல.."

கிண்டலும் கேலியுமாக காப்பி முடிந்து பிரபாகர் முகமெல்லாம் வெட்கமும் சந்தோசமுமாக அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியேறி அவனுடைய பணியிடத்துக்கு விரைந்தான்.

ராதிகா தொடர்ந்து சில நிமிடங்கள் காலி கோப்பையுடன் நின்று கொண்டிருந்தாள் - லேசான சோகமும் எட்டிப் பார்க்க.. கூடவே வளர்ந்தவனுக்குக் கல்யாணமே வந்துவிட்டது. அவளுக்கு இன்னும் லைன் கிளியராகும் வழியைக் காணோம். அவளின் அக்கா ரஞ்சனிக்கு அப்பா வரன் பார்த்துப் பார்த்து ஓய்ந்தே விட்டார். இந்தச் சந்தையில் அவளுக்கான விலையைக் கொடுக்கும் வசதியோ சக்தியோ அப்பாவுக்கு இல்லை. முதல் மகளான ரஞ்சனிக்கே இப்படி என்றால், ராதுவுக்கு என்று வரும் போது இன்னும் எத்தனை நாள் போகுமோ.. பெருமூச்சுடன் காலி கோப்பையைக் குப்பையில் போட்டுவிட்டு பத்து பன்னிரண்டான மாயத்தைப் பார்க்க இருக்கைக்கு விரைந்தாள் ராதிகா.



~~~~~~~~~~~~~~~~~~~~~~



"ராது, என்ன சொல்றே? மஞ்சு எப்படி?" மதிய உணவுக்கு வெளியில் போகலாம் என்று பிரபாகர் சொன்ன போதே தெரியும் இதைப் பற்றித் தான் பேசப் போகிறான் என்று.

"நல்லாத் தான் இருக்கா.. நீதான் முடிவெடுக்கணும்.. உனக்கு எப்படித் தோணுது?" பந்தை அவன் பக்கம் அனுப்பினாள் ராதிகா.

"ரொம்ப அழகா இருக்கா ராது.."

"ம்ம்.."

"எத்தனை இனிமையான குரல் அவளுது.! "

"ம்ம்.."

"அவ டிரெஸ் சென்ஸ் கூட பயங்கர ரசனையா இருக்கு.. டிப்ளோமெட்டிக்கா பேசுறா.."

"அப்புறம்?"

"ரொம்ப நல்ல பொண்ணு.. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கூட அவளை ரொம்ப பிடிச்சிபோச்சு." பேசும்போதே துள்ளி குதித்துக் கொண்டு பேசினான் பிரபாகர்.

"ம்ம்.. "

"என்ன ராது, ரொம்ப ஆர்வமே இல்லாம கேட்குறே.. நேத்தே பார்த்தேன், உன் முகம் அத்தனை தெளிவா இல்லை. கோடம்பாக்கம் வரை வரும்போதும் சரி, அங்கே மஞ்சுவைப் பார்த்துப் பேசும் போதும் சரி.. நீ ஏதோ யோசனையிலேயே இருந்தா மாதிரி இருந்தது.. தப்பா நினைக்கக் கூடாது.. ராம் சொல்றான், நான் வேற இடத்தில் பெண்பார்க்கப் போனது, அதுக்கு உன்னையே செலக்ஷன் கமிட்டிக்குக் கூப்பிட்டது அது தான் உனக்குப் பிடிக்கலைன்னு.. அதான்.. அதான்.. அதனால உனக்கு ஏதும் ?" கேள்வியை முடிக்க முடியாமலேயே பிரபாகரன் திக்கியபோது வெகு நேரத்துக்குப் பின் ராதிகாவுக்குச் சிரிப்பு வந்தது.

"ராமை விடு, நான் ஒரு கேள்வி கேட்கலாமா?"

"ம்ம்.. கேளு.. உனக்கில்லாத உரிமையா.." ஏதும் சங்கடமான கேள்வியாக இருக்கக் கூடாதென்று பிரபாகரன் இருக்கும் தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொள்வது அவன் முகத்தில் தெள்ளெனத் தெரிந்தது.

"உனக்கு எவ்வளவு சம்பளம்?"

"உன் சம்பளமே தான்.. மாசம் முப்பதாயிரம் தான்.. நான் கொஞ்சம் டாக்ஸ் ஸேவிங்க்ஸ் எல்லாம் செய்திருக்கிறதுனால கூட ஒரு மூவாயிரம் வரும்.."

"உங்க கொட்டிவாக்கம் வீடு சொந்த வீடு தானே? ஒரே பையன்ங்கிற முறையில் அதுவும் உனக்குத் தானே?"

"ஆமாம்.. அப்பா பேரில் இருக்கு ஆனா, என் வீடு தான்.. என்ன சந்தேகம் திடீர்னு?"

"மஞ்சுவுக்கும் கிட்டத் தட்ட இதே சம்பளம் தானே?"

"ஆமாம். அவளுக்கு ஒரு ஐயாயிரம் குறைவுன்னு நினைவு.."

"நல்லா படிச்சிருக்க, சொந்தமா வண்டி வேற வாங்கிட்டே.. வீடு இருக்கு. மாசா மாசம் கைநிறைய சம்பளம். மஞ்சுவின் சம்பாத்தியமும் இனிமே உனக்குத் தான் வரப் போகுது. அப்புறம் ஏன் உங்கம்மா நேத்து அந்த மஞ்சு வீட்டில் அத்தனை கண்டீஷன் போடறாங்க?!"

"என்ன கண்டீஷன்?"

"ஆகாகா.. என்னவோ தெரியாத மாதிரி கேட்கிறே! நீ மஞ்சுவோட தனியாப் பேசணும்னு வெளியில் போனப்போதான் பேசிகிட்டிருந்தாங்க.. ஒரு லட்சம் ரொக்கம், ஐம்பது சவரன் நகை.. அப்புறம் ஐயாவுக்கு ஒரு கார் வேற வேணுமாமே, பேரம் பேசுறது மாதிரி ஒரு பேச்சு வார்த்தைக்குப் பிறகு, இந்த காரை வேணாம்னு சொல்லிகிட்டாங்க.. உனக்கெதுக்கு இதெல்லாம் இப்போ?!!"

"இதெல்லாமே கேட்டாங்களா அம்மா?! " பிரபாகரனின் முகம் கொஞ்சம் மாறியது போலிருந்தது.

"ஓ உனக்குத் தெரியாதா?! சொல்லவே இல்லையா?! " தன் நண்பனுக்கு இந்த அநியாயத்தில் பங்கில்லை என்று தெரிந்தபோது ராதுவுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

"சொல்லவே இல்லை.. ம்ம்.. இருக்கட்டும், அம்மா கேட்டால் கேட்கட்டுமே...என்ன வந்தது இப்போ. " ஒன்றுமே நடக்காதது மாதிரி இனிப்பை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான் பிரபாகர்..

"டேய் என்னடா சொல்ற நீ? வரதட்சணை வாங்குறது பாவமில்லையா! இந்தப் பணம் வந்து தான் உனக்கு அடுத்த வேளை சாப்பாடுன்னு இல்லையே! "

"இருக்கட்டுமே ராது, ஃப்ரீயா விடு, இலவசமா வர்றது தானே.. என்ன மாதிரி வந்தா என்ன, மஞ்சுவுக்கு தானே அவுங்க வீட்ல செய்யப் போறாங்க.. நானா கேட்டேன்? தானா வரப் போகுது, நான் கேட்கலை, வேணாம்னும் சொல்றதாக இல்லை. நீ சாப்பிடு.."

ராதிகா அருகிலிருந்த சர்வரை அழைத்து சாப்பாட்டுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டுச் சொன்னாள்.."நான் கிளம்புறேன் பிரபா, என்னோட தோசை வரும், அதையும் நீயே சாப்பிட்டுடு.".

"ஹே ராது, எங்க போறே? "

"எதுவுமே இலவசமா வருவதில்லை பிரபா, உன் திருமணத்துக்கான இலவச இணைப்பா நீ நினைக்கிற அந்த காருக்கும் நகைக்கும் நீ கொடுக்கும் விலை, உன் இளம்பருவத் தோழியின் நட்பு. இனிமேல் என்னைப் பார்க்க வராதே.. குட் பை.."

விளக்கங்களுக்கோ விவாதங்களுக்கோ நேரம் கொடுக்காமல் நடந்து கொண்டிருந்த ராதிகாவை வியப்புடன் பார்க்கத் தொடங்கினான் பிரபாகர்.

Tuesday, October 17, 2006

அஞ்சு பேரும் ஒரு டீயும்..

"என்ன வேணும்? வழக்கம் போல ஸ்பெஷல் டீ தானே?"

"ஆமாம் ஆமாம்..சொல்லிடு.."

"அப்புறம், அந்த பூத்துக்கு உள்ள போனவுடனே என்ன நடந்தது தெரியுமா.."

"ஹைய்யோ..! "

"என்னாச்சு?! என்னாச்சு?"

"செம க்யூட்.. "

"தாங்க்ஸ்.. இப்போ தான் பார்த்தியா? இந்த டீ சர்ட்டைத் தானே சொல்றே?"

"ஆசை தோசை.. உன்னை எவ சொன்னா?!"

"பின்ன? யாரைச் சொல்றே?"

"அட! அஞ்சு பேர் இருக்காங்கடா.. எத்தனை அழகா இருக்கானுங்க.."

"அஞ்சு பேரு எனக்குப் போட்டியா?! யாரு ? எங்க இருக்கானுங்க?"

"பயங்கர துறு துறுன்னு இருக்கானுங்க இல்ல?"

"என்கிட்டயேவா? நான் கூட ரொம்ப சுறுசுறுப்பா இருக்கிறதா நேத்து தானே சொன்னே?"

"அது நேத்திக்கு.. இன்னிக்கு இவங்க தான் பயங்கர துடிப்பா இருக்கானுங்க.. அங்க பாரேன்.."

"சரி சரி, மொதல்ல நீ இந்த டீய கைல வாங்கு!"

"அச்சிச்சோ.."

"என்னாச்சு? ரொம்ப சூடா? கையச் சுட்டுகிட்டியா?"

"இல்லடா.. அங்க பாரு, சண்டை போட ஆரம்பிச்சிட்டாங்க.. வா வெலக்கிவிடலாம்.."

"அடச்சீ.. சும்மா இரு! டீயக் குடிச்சி முடிப்பியா! வந்துட்டா.. வெலக்கி விடுறாளாம்!"

"பாவண்டா.. சண்டை போட்டு ஏதும் காயமாய்ட்டா!"

"ஒண்ணும் ஆகாது. அஞ்சு நிமிஷத்துல அடங்கிடுவானுங்க.. நம்ம எல்லாம் அங்க போனா ஆட்டுச் சண்டையில் நரி புகுந்த மாதிரி தான். நீ பேசாம டீயக் குடி!"

"நீ ஒரு ஜீனியஸ்டா!"

"அப்பா.. ஐயாவைப் பத்தி இப்போவாவது புரிஞ்சுதே.. எப்படிச் சொல்றே?"

"அங்க பாரு சண்டை ஓய்ஞ்சு சமத்தா தூங்க ஆரம்பிச்சிட்டாங்க.."

"ஐயோ!!" தலையில் அடித்துக் கொள்கிறான்.










[பிகு: ஹி ஹி.. flash-க்கு அடுத்து வீடியோ போட்டு பார்க்கலாமே என்ற (விபரீத) ஆசையின் விளைவு ;) எங்க அலுவலகத்துக்கு எதிர் டீக்கடை புதுசா வந்திருக்கும் கஸ்டமருங்க.. ]

Friday, October 06, 2006

விடுதலை

"லே கருப்பா, நாளைக்கு காலைல உனக்கு விடுதலைடா" நமுட்டுச் சிரிப்போடு சொல்லி விட்டுப் போனது சொக்கன் தான்.. விடுதல! ஒருவழியா, இங்ஙன வந்து அஞ்சு மாசம் கழிச்சு இப்போவாச்சும் விடுதலைன்னு ஒரு வார்த்தையச் சொன்னானுவளே.. அதுவே பெரிய ஆறுதலா இருக்கு..

இந்த விடுதலைக்கு எதுவுமே இணையில்ல. இன்னொரு முறை இப்படி ஒரு எடத்துல யாரோடயாச்சும் நாலு சுவத்துக்கு நடுவுல அடைச்சுவச்சிடுவாங்களோன்னு பயம் இல்லை. திரும்பத் திரும்ப இன்னும் வெவ்வேற ஊருக்கு அலைய வேண்டியதில்லை. இப்படி ஒரு விடுதலை கிடைக்க கொடுத்துவச்சிருக்கணும்.. விடுதலைன்னு சொல்லி "வெளில போடா"ன்னுட்டாங்கன்னா, அது தான் கொடுமை இந்த வயசுல. இத்தனை வருசம் பாதுகாப்பா இருந்துட்டு இனி வெளில போய் எப்படி பிழைக்கிறது?

இதுவரை இங்கேர்ந்து யாரும் வெளியில போய் நான் பார்த்ததில்லை. எல்லாருக்குமே "பெரிய விடுதலை" தான். ம்ம், விடுதலைன்னவுடனே கொஞ்சம் மனசு விட்டுப் போச்சு போல, ஏதேதோ பேசுறேன்..

தோ வந்து சொல்லிட்டு போறானே சொக்கன், இவன் ஒருத்தன் தான் இங்க வந்ததுல இருந்து எனக்கு ஒரே தொணை. எப்ப பார்த்தாலும் இங்க தான் இருப்பான். எனக்குப் பசியோ தாகமோ எல்லாத்தையும் இவன் கிட்ட தான் சொல்றது. வேளாவேளைக்கு சாப்பாடு போட்டு, தாகம் தீர்த்து நல்லபடியாத் தான் பார்த்துக்கிடறான்.. என்னை மட்டுமா இங்க உள்ள எல்லா பேத்தையும் இவன் தான் பாத்துக்கிடறான். எல்லாத்துக்கும் பேரு வச்சிருக்கான். எனக்கு வச்சது போலவே.

பொறந்தப்போ எனக்கு வச்ச பேரு ராமசாமி. என்னவோ போன பொறப்புல கேட்ட பேர் மாதிரி ஆகிடுச்சு. "டே ராமு"ன்னு ஆசையா கூப்பிட்டது பெரியகுளம் பண்ணையார் மவந்தான். அம்மா ஏனோ பேர் சொல்லிக் கூப்டாது. பால் குடிக்கும்போது ஆசையா தடவி குடுக்கும். அதெல்லாம் கொஞ்ச காலந்தான். பால்குடி மறக்கிறதுக்குள்ளயே பண்ணையார் வூட்ல கொண்டு விட்டுட்டாங்க. சின்னப் பண்ணை மாணிக்கம் அப்போ பொறக்கவே இல்ல. மாணிக்கத்துக்கு பத்து பன்னெண்டு வயசு வரை நான் தான் அவரோட கூட்டாளி. என்னொட ஆசையா வெளையாடுவாரு. முதுகுல சொமந்துகிட்டு ஊரெல்லாம் சுத்திக் காட்டி இருக்கேன் பல நாள்.

ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம். இந்தக் காலத்துப் புள்ளைக எது வளர்ந்ததுக்கப்புறம் அப்பனாத்தா மேல பாசமா இருக்கானுவ. தேனும் பாலுமா ஊட்டி வளர்த்த பண்ணையாரையே முதியோர் இல்லத்துல சேர்க்குறேன்னு சொன்னவுங்க தானே.. என்னையெல்லாம் எங்க கண்டுக்கிடறது?! நல்ல வேளை பண்ணையார் மாதிரி எனக்கு புள்ளகுட்டியெல்லாம் இல்லை. புள்ளகுட்டி தான் இல்லைனாலும், ஆடின ஆட்டம் சும்மா இல்லை.. பண்ணையார் போய்வந்த ஊரெல்லாம் எனக்கும் சொந்தபந்தம் இருந்துகிட்டே தான் இருந்துச்சு.. சின்னசேலம் சித்ரா, பனையூர் பரிமளம், கோட்டூர் கோமளான்னு எல்லாம் இப்போ இருக்காளுவளோ, இல்லை இந்த விடுதலை முன்னமே கெடைச்சிடுச்சோ!

நல்லா ராஜா மாதிரி வச்சிருந்தாரு பண்ணையாரு என்னைய, மவராசன்! மாணிக்கத்தோட பொஞ்சாதி, அந்தப் புண்ணியவதி ஏதோ ஒரு நாள் தண்டச் சோறுன்னு சொல்லிட்டா.. அந்த ஒத்தச் சொல்லு பொறுக்காம அன்னிக்கு ராவு படுத்தவரு அப்புறம் எந்திரிக்கவே இல்லையே!

பண்ணையார் போய்ச் சேர்ந்த ஒரே வருசத்துல நானும் மாணிக்கத்துக்குப் பாரமாப் போய்ட்டேன்..ஆடின ஆட்டத்துக்கு நம்ம ஒடம்பெல்லாம் பண்ணையார் மாதிரி ரொம்ப நாள் தாங்குற ஒடம்பும் இல்ல.. அப்புறம் எங்கெங்கோ அலைஞ்சேன்.. கொஞ்ச நாள் சென்னைப் பட்டினத்துல கூட சுத்தி இருக்கேன்னா பார்த்துக்குங்க..

என் கடைசி எஜமான் வூட்ல இருந்தப்போ ஒரு நாள் ஒரு லாரி வந்துச்சு. நானும் இன்னும் அந்த வூட்ல இருந்த சிலபேரும் ஏறிகிட்டோம். அப்படியே இன்னோரு வூட்ல போய் அதே மாதிரி ஏத்திகிட்டாங்க.. மூச்சு முட்டுச்சு.. நிக்கவே எடமில்ல. வெயில் வேற.. ஒரே நச நசன்னு வருது. நல்லவேளையா இங்க கொண்டுவந்து எறக்கி விட்டாங்க. அப்போத்திலிருந்து இது தான் எங்களுக்கு வூடு, வாசல், கொட்டில் எல்லாம். நாலு மாசமாச்சு. ஏதோ போதும் போதாம, வேளாவேளைக்கு சாப்பாடு. கொஞ்சமா தண்ணி குடிச்சு வாழக் கத்துகிட்டோம். இதோ நாளைக்கு இந்தத் தொல்லைகள்லேர்ந்து விடுதலை. ம்ம்ம்.

அட, பேசிகிட்டே இருக்கும் போதே விடிஞ்சுடுச்சே. அதோ சொக்கன் வரான். சாகும் போது தான் ரொம்ப கஷ்டமா இருக்கும்னு மீனாட்சி சொல்லிச்சு. இப்போவெல்லாம் ஏதோ மருந்து கொடுக்கிறாங்களாமே.. வலிதெரியாம இருக்கிறதுக்கு.. பார்க்கலாம்..

சொக்கன் வந்து என்னவோ என்னைப் பார்க்குறானே. கயத்த அவுக்கப் போறானா இல்லையா.. "டேய் கருப்பா, உன் நேரம் நல்லா இருக்குடா. இங்கையும் உன்னையெல்லாம் கொல்லக் கூடாதுன்னு சட்டம் போட்டுட்டானுவளாம். இன்னும் ஒரு வாரம் உனக்கு வாழ்வு தான். தயாரா இரு. இன்னிக்கு மதியமே எல்லாரும் கேரளா போவப் போறோம்.. உனக்குந்தாண்டி மூக்காயி, தயாரா இரு என்ன" சொக்கன் சொல்லிட்டு போய்ட்டான்..

அப்போ அவ்வளவு தானா?! இன்னும் ஒரு வாரம் இந்தக் கொடுமைய சகிக்கணுமா! அதிலும் கேரளா போவணும்னா மறுக்கா அந்த லாரில மூச்சு மூட்டுர கூட்டத்துல ஒரு ராத்திரி பூரா நின்னுகிட்டே போகணும்!

அடக் கொடுமையே.. அடேய் எம தர்ம ராசா, எப்போதான் வரப் போறியோ.. எனக்கு என்னிக்குத் தான் விடுதலையோ.. என்னைப் போய் உன்னோட வாகனம்னு சொல்றாங்களே! நான் உன்னைத் தூக்குறது இருக்கட்டும், நீ என்னிக்கு என்னை இந்த சுயநலம் பிடிச்ச மனுஷப் பயகிட்டேர்ந்து விடுதலை பண்ணப் போறே!


Saturday, September 09, 2006

தேவைகள்

வெளியில் நன்கு இருட்டிவிட்டது. மாதக் கடைசி நாள் ஆதலால், கணக்கைச் சரி பார்த்து லெட்ஜரை மூடிவிட்டு எழுந்தாள் ராஜி. 8 மணி ஆக பத்து நிமிடம் இன்னும் உள்ளது என்றது சுவர்க் கடிகாரம். பாலு வந்திருப்பான். வீட்டுக்கு ஓட வேண்டும்.


நேற்று முழுவதும் மேனேஜர் ரத்னசாமி "ராஜி மேடம் மாதிரி வருமா. அவங்க சுறுசுறுப்பென்ன, வேலைல ஒழுங்கென்ன" என்று இனிக்க இனிக்க பேசியது எதற்கு என்று, இன்று இந்தக் கணக்குகளுக்கிடையில் தனியே விட்டு விட்டு, "மனைவியை ஷாப்பிங் செல்ல அழைத்துப் போகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போன போது தான் புரிந்தது.

கிளம்பலாம் என்று பையை எடுக்கும் போது அருகிலிருந்த தொலைபேசி அடித்தது. எடுத்தாள், பயந்து கொண்டே.

"அம்மா, என்னம்மா, இன்னிக்கு கிரிக்கெட் பேட் வாங்கப் போகலாம்னு சொல்லி இருந்தியே.. மறந்தாச்சா?" பாலுவின் குரலில் வழக்கத்தை விட அதிக கோபம் தெரிந்தது.

"இல்லைடா கண்ணா, இன்னிக்கு புக் க்ளோஸிங் இல்லையா.. கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. இதோ இன்னோரு பத்து நிமிஷத்துல வந்துருவேன். போய் பேட் வாங்கலாம். சரியா?"

"பேட்டும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். இன்னிக்கு எவன் இந்நேரத்துக்கு மேல கடை திறந்து வச்சிருப்பான்.. எல்லாம் நீயே வச்சிக்கோ.. எப்போ பார்த்தாலும் பாங்க்.. வேலை.. என்னை எல்லாம் நினைவிருந்தால் தானே?!!"

"அப்படி இல்லைமா பாலு" அதற்குள் எதிர்முனையில் பட்டென தொலை பேசி வைக்கப் பட்டது. ம்ஹும். இந்தக் கோபம் குறையாது. இன்றைக்கு பூரா தொடரும்.. நாளைக்கும்.. அடுத்த நாளைக்கும் கூட.. அப்பா இல்லாத பையன் என்று செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பாகி விட்டது. பத்து வயதில் எத்தனை கோபம்?, ஆத்திரம், எல்லாம்?!!

மெல்ல கை நீட்டி தொலை பேசி ரிசீவரை வைத்தாள். வைப்பதற்காகவே காத்திருந்தது போல் மீண்டும் அடித்தது. இந்த முறை பேசியது மோகன்.

"இன்னும் கிளம்பலியா? நேரமாகுமா?"

"கிளம்பிட்டேன் மோகன், எங்க இருக்கீங்க? வீட்லயா?"

"ஆமாம். உங்க வீட்டுக்கு இப்போ தான் வந்தேன்.. புக் க்ளோஸிங், லேட் ஆகிடுச்சுன்னு பாலு சொன்னான். அதான் கூப்பிட்டேன். நேரம் ஆகுமா? தனியா வந்திடுவீங்களான்னு கேட்கத் தான் உடனே திருப்பி போன் பண்ணினேன்"

"இல்லைப்பா, கிளம்பிட்டேன். நானே வந்திருவேன். "

"சரி, வாங்க. நானும் பாலுவும் வெளியே போகிறோம். சாவி இருக்கு இல்லையா?"

"ம்ம்.. இருக்கு. "

"சரி, அப்போ பார்க்கலாம்.. வைக்கிறேன். "

"ம்ம்..." போனை மீண்டும் வைக்க இருந்தவள், மீண்டும் அழைத்தாள் "மோகன்.. "

"சொல்லுங்க ராஜி,"

"ரொம்ப தாங்க்ஸ்"

"அட, இதிலென்ன இருக்கு.. "

மோகன் ஒரு அருமையான நண்பன். ராஜியின் அதிகம் பயனில்லாத குறுகிய திருமண வாழ்வில் கிடைத்த ஒரே நல்ல விஷயம் மோகனின் நட்பு.
யோசனைகள் அலைக்கழித்தாலும் ஒரு நிலைப்படுத்திக் கொண்டு வெளியில் வந்து வண்டியை எடுத்தாள்.

*************

வீட்டுக்கு வந்த போது மோகனும் பாலுவும் திரும்பி இருந்தனர். பாலுவின் கையில் ஒரு புதிய கிரிக்கெட் பேட். பந்து வேறே.. இருட்டில் வெளியில் விளையாட இடமில்லாமல் மோகனும் பாலுவுமே வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

"அம்மா.. இங்க பத்தியா, பேட்... அங்கிள் வாங்கிக் கொடுத்தாரு.. " என்றபடி ஓடி வந்த மகனின் முகத்தில் சந்தோஷத்தைப் பார்த்த ராஜியின் முகமும் நன்றியால் நிறைந்தது.

ராஜி நன்றி சொல்வதற்குள், மோகன் கிளம்பிவிட்டான்.

"நேரமாயிடுச்சு.. நீங்க இந்நேரத்துக்குப் பிறகு வந்து சமைக்க முடியுமான்னு தெரியலை. அதான்.. டிபன் வாங்கி வச்சிருக்கேன்.. கை கால் கழுவிட்டு சாப்பிடுங்க.." என்றபடி கிளம்பிப் போன அவனுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியாமல் ராஜி புன்னகைத்தாள்.

************

அன்று ராஜி வீட்டுக்கு வந்த போது அவள் மாமியார் அமர்ந்திருந்தாள். மடியில் அவள் பேரன், பாட்டி ஊட்டி விட்டுக் கொண்டிருக்கும் பலகாரத்தைச் சாப்பிட்டபடி.

"ஏம்மா ராஜி, வாரத்துக்கு ஒரு முறை பிள்ளைய கூட்டி வந்து காட்டுறேன்னு சொல்லித் தானே தனியா போனே.. இப்போ ஒரு மாசமாச்சு பிள்ளையப் பார்க்காம என் கண்ணு ரெண்டு பூத்து போச்சு.. "

"இல்லத்தே.. ரொம்ப வேலை.. அதான்.. " என்றபடி உள்ளே சென்று காபி கலக்கத் தொடங்கினாள் ராஜி.

காபி, டிபன் முடிக்கும் வரை அத்தை பையனை வைத்து விளையாடிக் கொண்டே இருந்தாள்.. "வீட்ல அண்ணன், அண்ணி, பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா?"

"ம்ம்.. அவங்களுக்கென்ன.. அவங்க எல்லாம் நல்லாத்தான் இருக்காங்க.."

"என்னத்தே அலுத்துக்குறீங்க.. என்னாச்சு, உங்களுக்கு? உடம்பு ஏதும் சரியில்லையா?"

"எனக்கு என்னம்மா.. காடு வா வாங்குது.. வீடு போ போங்குது.. என்னிக்கு கட்டையச் சாய்க்கப் போறேன்னு தெரியலை.. பார்ப்போம்.. "

"என்ன அத்தை அதுக்குள்ள அப்படிச் சொல்லிட்டீங்க.. உங்களுக்கு அப்படி என்ன வயசாய்டுச்சு?" என்று சொல்வதற்குள் ராஜிக்கு ஒரே திணறல் தான்.. என்ன வேண்டும் என்று நேரடியாகச் சொல்லவேண்டியது தானே. இதென்ன, பூடகமாக பேசிக் கொண்டு..

"ம்ம்.. நீ இப்படி சொல்ற.. ஆனா ஆண்டவன் வேற மாதிரி இல்ல எழுதி இருக்கான்.. "

"ஏதாச்சும் பிரச்சனையா அத்தை?"

"ரெண்டு நாள் முந்தி நம்ம தனத்தைப் பொண்ணு பார்க்க வந்தாங்க.. அதுல பாரு.. பார்க்க வந்தவங்க பெரிய இடம்.. " என்று அத்தை தொடங்கவும், ராஜிக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது.. இன்னும் அரை மணி நேரம் போல் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டுக் கதையைப் பேசிவிட்டு, மெல்ல விஷயத்துக்கு வந்தார் அத்தை..

விஷயம் சின்னது தான். அத்தைக்கு காலில் ஏதோ அடி. அதற்கு வைத்தியம் பார்த்த டாக்டர், ஒரு முழு செக்கப்பும் செய்து கொள்ளச் சொல்லி அறிவுருத்த, அதற்கு முதல் மகன் முடியாது என்று சொல்லி இருக்கிறான். "போய் உன் சின்ன மருமகளைக் கேளேன்" என்று நிர்தாட்சண்யமாகச் சொல்லிவிட, அத்தை இங்கே வந்துவிட்டாள்..

நேரடியாக, செக்கப்புக்குப் பணம் கொடு என்று சொல்லி இருந்தால், இந்தா என்று எடுத்துத் தந்து விடலாம். ஒரு அரை மணி பேசி, நீட்டி முழக்கி இறுதியில் கேட்டதாகவே இல்லாமல் கேட்கும் விதத்தில் ராஜிக்கு அலுப்பு தட்டிவிட்டது.

"இந்தாங்க அத்தை " என்று அவள் செக் கிழித்துத் தரும் வரை அத்தை ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள்.

*************

"ராஜி, இங்க கொஞ்சம் வாயேன்.. ஏதேதோ கேட்குறாங்கம்மா நீ கொடுத்த செக்கைப் பத்தி" என்று தொலை பேசி அழைப்பு வந்த போது ராஜி மிக முக்கியமான ஒரு கோப்பைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எங்கேர்ந்து அத்தை பேசுறீங்க?"

"ம்ம்.. இங்க தான்.. ஆஸ்பத்திரிலேர்ந்து பேசுறேன் கண்ணு.. என்ன ஆசுபத்திரிடீ இது.. ?"

"இந்திரா ஹாஸ்பிடல், அடையார்னு சொல்லுங்கத்தே.. " அண்ணியின் குரல் கேட்டது

"அத்தை.. நான் இப்போ ரொம்ப முக்கியமான வேலைல இருக்கேன். ஒரு அரை மணி அங்கயே காத்திருக்கீங்களா.. வந்து பார்க்கிறேன்?"

"அரை மணியா?!! அதெல்லாம் முடியாது.. என்ன பெரிய கலெக்டர் உத்யோகமா பார்க்குற.. உடனே கிளம்பி வாம்மா.. இப்படி செல்லாத செக்கைக் கொடுத்து ஏமாத்த பார்க்குறியா!!"

"சரி வரேன்.. " சத்தம் அதிகமானால், ஆஸ்பத்திரி முழுவதும் அத்தையைப் பார்க்கத் தொடங்கிவிடும் என்பதாலும் அந்த மாதிரி சூழ்நிலையில் தான் சென்றால் இன்னும் திரும்பக் கூடிய முகங்களையும் நினைத்தபடி ராஜி மேனஜரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பியபோது, மேனஜரின் குரலில் சுத்தமாக இணக்கமில்லை.

"ராஜி மேடம் எப்பவும் இப்படித் தான்.. வேலையில் முழு கவனம் இல்லவே இல்லை" என்று அவர் அக்கவுண்டன்டிடம் சொன்னது தேய்ந்த ஒலியில் கேட்டது..

போக்குவரத்துப் பிரச்சனையால் பத்து நிமிடம் அதிகமாகிப் போய்விட, அத்தை கத்திய கத்தலில் ராஜி எது நடக்கக் கூடாது என்று நினைத்தாளோ, அது நன்றாகவே நடந்தது.

அத்தை பெயருக்குக் கொடுத்த செக்கை அப்படியே எடுத்து வந்து ஆஸ்பத்திரி கவுன்டரில் கொடுத்தால் அவன் என்ன செய்வான்.. எப்படித் தான் இப்படி எல்லாம் யோசிக்க முடிகிறதோ என்று நொந்தபடி அன்றைய வேலை நேரம் அத்துடன் முடிந்து போனது ராஜிக்கு..

**********

"மோகன், பைத்தியம் பிடிச்சிடும் போலிருக்கு எனக்கு" கடலையும் அதன் அருகில் விளையாடும் பாலுவையும் பார்த்தபடி சொன்னாள்..

"என்னாச்சு ராஜி, என்ன பிரச்சனை உங்களுக்கு?"

"எனக்கு என்ன பிரச்சனை இல்லை?! ஒரு மனுஷிகிட்டேர்ந்து எத்தனை எதிர்பார்ப்பாங்க மோகன்? மேனேஜர், வேலையைச் சரியா முடிக்கணும்னு எதிர்பார்க்கிறார்.. பாலு, ஒரு நாள் சொன்னதை வாங்கிக் கொடுக்க தாமதமானதற்காக ஒரே கோபம்.. அத்தை, உங்க உறவே வேண்டாம்னு விட்டுட்டு வந்த பின்னும், தேடி வந்து பணம் கேட்கிறாங்க, அது கூட பரவாயில்லை. வேலை நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு வரலைன்னு ஒரே கோபம்..... எத்தனை எதிர்பார்ப்பு?!! எங்கயாவது ஓடிடலாம் போலிருக்கு!! அதுவும் இவங்க யார்கிட்டேர்ந்த்தும் நான் எதுவுமே எதிர்பார்க்காத போது.. "

மோகன் சின்னதாக ஒரு புன்னகை பூத்தான்..

"என்ன மோகன் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க?!!"

மோகனின் புன்னகை இன்னும் பெரிதானது.. ராஜி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.. லேசான கோபத்துடன்

"இப்போ செய்யறீங்களே.. இது எதிர்பார்ப்பில்லையா?"

"என்ன? எது?"

"நீங்க ஏதாவது சொன்னால், அதுக்குப் பதில் சொல்லணும்னு எதிர்பார்க்குறீங்க.. சொல்லாம போனா, உங்களுக்கு ஒரு சின்ன ஏமாற்றம்.. பாலுவிடம் இதை விட, கொஞ்சம் அதிகம் இருக்கு. உங்க அத்தையிடம் இன்னும் கொஞ்சம்.. மேனேஜரிடம் கொஞ்சம்.. அவ்வளவு தான்.. இதெல்லாம் ஒரு உரிமை தானே.. எதிர்பார்க்கக் கூடிய அளவு உங்களிடம் ஏதோ உரிமை இருக்கு.. இல்லைன்னா, ஏதோ அன்பு.. இந்த மாதிரி உரிமையும், ஒரு நாள் எதிர்பார்ப்பும், கோபங்களும் இல்லைன்னா, வாழ்க்கை ஒரே மாதிரி இருக்கும் இல்லையா?" சொல்லிக் கொண்டே வந்தவன், செல்பேசி அழைத்ததில் எடுத்துப் பேசத் தொடங்கினான்..

"அம்மா, போன தடவை வந்தப்போ சொன்னியே சோளம் சாப்பிடலாம்னு.. நீயே கேட்பேன்னு பார்த்தேன்.. ம்ஹும்.. இனி வேண்டாம் போ..!" என்று அலுத்துக் கொண்ட பாலுவைப் பார்த்து ராஜிக்கு இந்த முறை எந்த அலுப்பும் வரவில்லை.

(நன்றி தமிழோவியம்)

Monday, July 31, 2006

பாலு..

"என்னக்கா, ரெண்டு நாளா ஆளையே காணோம். ஊருக்குப் போயிருந்தீங்களா?" தண்ணீருடன் வந்த பாலு கேட்டான்.

"ப்ச்." என்றபடி தலையாட்டினேன், அவன் கொடுத்த தண்ணீரை அருந்திக் கொண்டே..

"வழக்கம் போல ஸ்ட்ராங்க் காபி தானேக்கா? வேற எதுனா வேணுமா? "

"டிபன் இன்னிக்கி இங்க தாண்டா!.. சொல்லிடு" என்றேன்.

மனமும் உடலும் சோர்ந்திருந்தது. மேனேஜருடன் இன்றைக்கும் தகராறு. என்னவோ அவனுக்குச் சேவை செய்யவே என் வீட்டில் பெற்றது போல.

பொதுவாகவே அவனுக்குத் தான் பெரிய ஆள் என்று எண்ணம். பெண்கள் வேலை செய்வதே பொறுக்காதவன்.. இதற்கு மேல், அவனுக்குக் கீழே வேலை செய்பவர்கள் என்றேனும் நல்ல பெயர் வாங்கிவிட்டால், அப்படியே கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும்.

போனவாரம் எங்கள் கிளைக்கு வந்திருந்த எம்.டி ஏதோ சின்ன வேலையை ஒழுங்காக முடித்து விட்டேன் என்று பாராட்டி விட்டார். அதிலிருந்து ஏதோ இஞ்சி தின்ற குரங்கு போல் முகத்தை வைத்துக் கொண்டு, என்ன செய்தாலும் குறை சொல்லிக் கொண்டு திரிகிறான்.. வழக்கமாகவே, சின்ன சின்ன வேலையெல்லாம் அவன் எடுத்து முடித்து விடுவான். பெரிய, கடினமான வேலைகள் வரும்போது, என் நினைவும் கூடவே வந்து விடும். நல்ல வேலை செய்வது விருப்பமான ஒன்றுதான். ஆனால், அந்த வேலை செய்து முடித்த பின், "தாங்க்ஸ் மீனா" என்று சொல்லிவிட்டு, அதை அவன் பெயரில் மேலிடத்திற்கு அனுப்பும்போது தான் எரிச்சலாக வரும்.

போன வாரம் அப்படிச் செய்ய முடியாமல் எங்கள் மேலாளர் அவனுக்கு முன்னாலேயே அமர்ந்திருந்தார். நான் தான் செய்தேன் என்ற போது மேனேஜரால் ஒன்றும் சொல்ல முடியாமல் போயிற்று. அதெல்லாம் சேர்த்து வைத்து தான் இந்த வாரம் காண்பிக்கிறான்.

ஏதோ எக்கேடாவது கெட்டுப் போகட்டும், நமக்குத் தேவை இந்தச் சம்பளப் பணம் தானே என்று இத்தனை நாள் பொறுத்துக் கொண்டு தான் இருந்தேன். இன்று கொஞ்சம் காட்டமாகப் பேசி விட்டான். அதிலும், உடல்நிலை சரியில்லாமல், இரண்டு நாள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்து விட்டு அலுவலகம் செல்லவும், உடனே ஒருவன் திட்டினால் எப்படி இருக்கும்?

நான் போகாத நாளாகப் பார்த்து, தரக் கட்டுப்பாட்டு ஆய்வு வந்து விட்டதாம். இதுவரை, தரமாவது, கட்டுப்பாடாவது, அது சம்பந்தப்பட்ட டாகுமென்டுகளாவது, எதுவும் தெரியாமல் இருந்த மேனேஜருக்கு இது ஒரு பெரிய கறுப்புப் புள்ளியாகி விட்டது. அது தான் அவனுக்கு ஒரே கோபம். பெண்கள் எல்லாரும் இப்படித் தானாம். வேலைக்கு முக்கியத்துவம் தரத் தெரியாதாம். அதிலும் எனக்கு போன வாரம் எம் டியே பாராட்டி விட்டார் என்று தலைக்கனமாம். என்னைப் போன்றவர்களை சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் அவனுக்கு இருந்தாலும் அதற்கு அவன் இளகிய மனம் அனுமதிக்க வில்லையாம்.

இந்தக் கடைக்கு வந்து பாலு அங்கும் இங்கும் ஓடியாடி வேலை செய்வதையும், வரும் வாடிக்கையாளர் எல்லாரிடமும் நைச்சியமாகப் பேசுவதையும் பார்த்தாலே பாதி சோர்வு போய்விடும். அதனால் தான் இன்றைக்கு இங்கு வந்தேன்.

"என்னண்ணே, நீங்க வழக்கமா அழைச்சிட்டு வருவீங்களே அந்த அக்கா இன்னிக்கு வரலையா?" யாரிடமோ கேட்டுக் கொண்டிருந்தவன் என்னைப் பார்த்துவிட்டு என்னை நோக்கி வந்தான்

"மீனாக்கா, என்ன மொகமெல்லாம் வாடிக் கெடக்கு?"

"ஒண்ணுமில்லை பாலு. உடம்பு கொஞ்சம் சரியில்லை"

"என்னக்கா, பறவைக் காய்ச்சலா? அது பறவைக்குத் தானே வரணும்? நீங்கதான் சுத்த சைவமாச்சே"

லேசான புன்னகையுடன் சொன்னேன், "இல்லடா, எனக்குத் தான் காய்ச்சல்"

"அப்போ மீனாக் காய்ச்சலா? " என் முகம் இன்னும் மலர்ந்தது.

"என்னக்கா, உங்க முகத்துல சிரிப்பே இல்லை. ஏதோ பிரச்சனை.. வீட்ல யாருக்காவது உடம்பு சரியில்லியா?"

"இல்லடா.."

"ஆபீஸ்ல உங்க மானேஜர் ஏதாவது சொல்லிட்டாரா?"

இல்லை என்று நான் தலை அசைத்தாலும், என் முகம் ஏதோ சொல்லி இருக்க வேண்டும்..

"அதானே பார்த்தேன்.. அதெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்கக்கா.. என்ன பெரிய மானேஜர்.. அவங்க திட்டறது எல்லாம் பெரிசா எடுத்துகிட்டா நாம எங்க தான் வேல பாக்க முடியும்.. இப்போ என்னையே எடுத்துக்குங்களேன்.. மாஸ்டர் என்னனென்னவோ சொல்லி திட்டுவாரு.. ஒரு நாளைக்காவது திட்டு வாங்காம இருந்ததில்லை.. ஆனாலும் அப்படியே தொடைச்சு போட்டுட்டு போக வேண்டியது தான்.. "

சின்ன வயதிலிருந்தே பொறுத்துப் போகவேண்டும் என்று யாராவது சொன்னால் சட்டென்று கோபம் வந்து விடும் எனக்கு.. இப்போதும் வந்தது.. எனக்கிருந்த கோபத்துக்கு பாலுவை அப்படியே கடித்துக் குதறி இருப்பேன். அப்போது பார்த்து என் செல்பேசி அழைத்தது..

யார் என்று பார்த்தேன்.. என் அம்மா. இப்போதுள்ள மனநிலையில் அவரிடம் பேச முடியாது.

"அக்கா, போன் அடிக்குது.. "

"அடிக்கட்டும்" கொஞ்சம் கோபமாகவே சொன்னேன் அடித்து ஓய்ந்தபின் தவறவிட்டது மூன்று அழைப்புகள் என்றது செல்பேசி

"என்னக்கா, மூணு தடவைக் கூப்பிட்டுட்டாங்க போலிருக்கு"

"மூணு நாளா கூப்பிடறாங்க.. எடுத்தா ஜுரம்னு சொல்லணும்.. ப்ச்"

அடுத்த முறை அடிக்கத் தொடங்கியது. நானே எதிர்பாராத போது, என் செல்லை எடுத்துப் பேசத் தொடங்கினான் பாலு

"அலோ! யாரு?"

"...."

"மீனாக்காவா? அவங்க நம்பர் தான்ங்கா இது.. ஆனா அவங்க செல்லை கடைல விட்டுட்டுப் போய்ட்டாங்க" எல்லாரும் இவனுக்கு அக்காவா? நானும் அக்கா, என் அம்மாவும் அக்கா..ஹ்ம்..

"...."

"ரெண்டு நாள் இருக்கும்"

"ம்ம். வந்தா சொல்றேன். இன்னிக்கோ நாளைக்கோ கடைக்கு வருவாங்க"

".."

"எம்பேரு பாலுக்கா. நிச்சயம் சொல்றேங்கா! கவலைப் படாதீங்க.. நெறைய வேலை இருக்குன்னு சொன்னாங்க.. அதான் உங்களுக்கு பேசி இருக்க மாட்டாங்க.." அதற்கு மேல் எனக்குப் பொறுக்கவில்லை.

"போதுண்டா!" போனைப் பிடுங்கி அணைத்தேன்..

"அக்கா, ரொம்பக் கோபமா இருக்கீங்க.. ஜூஸ் கொண்டு வரவா?"

"ஒண்ணும் வேண்டாம்.. இதுவரைக்கும் நீ கொடுத்த உபதேசமே போதும்... எவ்வளவு ஆச்சு?"

"இல்லக்கா.. நீங்க கவலையா இருந்தீங்களேன்னு தான்.."

"போதுண்டா.. நான் கிளம்பறேன்.. இதுல நூறு ரூபா இருக்கு.. மிச்சம் இருந்தா வச்சிக்க.. அடுத்த முறை சாப்பிடும் போது பாக்கலாம்" சொல்லிவிட்டு பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினேன்.

அவன் அத்து மீறி என் செல்லை எடுத்ததனால் கோபமா இல்லை, என் மானேஜருக்குப் பரிந்து பேசியதா எது என்று எனக்குப் புரியவில்லை. கோபம் மட்டும் இருந்தது..


******** oooooooooooo ********





மீண்டும் நான் நாயர் கடைக்குப் போக ஒரு வாரம் ஆகிவிட்டது. கடையில் பாலு இல்லை
"சேட்டா, பாலு இல்லையா?" என்றேன். நாயரானாலும், அவருடைய பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் தமிழ்தான்

"அவன் போயாச்சு" என்றார் அவர்

"எங்கே? ஊருக்கா? "

என் கண்களில் ஒளிர்ந்த கலக்கத்தைப் பார்த்ததும், கேட்டார்:"ஏன், பணம் ஏதும் கொடுத்தோ?"

"ஆமாம்" என்றேன்..கவனிக்காமல்

"பக்கத்து சௌக்ல நோக்கியோ? அங்க தனிக்கடை உண்டு சாருக்கு இப்போ" என்றார்

தனிக்கடையா?!! வியந்தபடி பக்கத்து நாற்சந்திக்கு நடந்தேன்.

"வாங்கக்கா!!!" என்றான் பாலு..

சின்ன டீக்கடை தான்.. இட்லி, தயிர்சாதம், புளி சாதம், தோசை என்று மெனு எழுதி வைத்திருந்தான்.. இரண்டு பேர் தாராளமாக அமரலாம்.. நான்குபேர் கொஞ்சம் சுருக்கி குறுக்கி அமரலாம். "சொர்ணம் டீ ஸ்டால்" என்ற போர்டு, அவன் அம்மா பெயர் என்று நினைவு..

"என்னடா இதெல்லாம்? திடீர்னு?"

"காபி சொல்லவாக்கா? " என்று கேட்டுக் கொண்டே உள்ளே போய் காபி போட ஆரம்பித்தான்.

"நீங்க அன்னிக்கு கோபிச்சிகிட்டு போய்ட்டீங்க இல்லைக்கா... அப்புறம் எனக்கு மனசே சரியில்லை.. லீவு குடுங்க.. வெளியில போய்ட்டு வந்துர்றேன்னு சொன்னேன்.. மாஸ்டர் முடியாதுன்னுட்டாரு.. அது கூட பரவாயில்லை.. எனக்கு எப்பவுமே விளையாட்டு நெனப்புத் தானாம்.. வேலை எதுவும் சரியா செய்ய மாட்டேங்கறேனாம்.. இன்னும் என்னென்னவோ சொன்னாரு.. தெனைக்கும் சொல்றது தான்.. ஆனா, அன்னிக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு. உடனே போங்க நீங்களும் உங்க வேலையும்னு சொல்லி வேலையை விட்டுட்டு வந்துட்டேன்.. "

"ஏதுடா உனக்கு தனியா கடை போடற அளவு பணம்?"

"நீங்க கடைசியா கடைக்கு வந்த அன்னிக்கு கொஞ்சம் வருத்தமா இருந்திச்சிக்கா.. அன்னிக்கு நீங்க இருந்தப்போ வந்தாங்களே திலக் அண்ணா, அவர் தான் சொன்னாரு.. மனசிருந்தா வழி தானா தொறக்குமாமே.. அண்ணா கொஞ்சம் பணம் கொடுத்தாங்க சம்பளத்துல ஊருக்குப் போக வச்சிருந்தது.. எல்லாம் சேர்த்து எப்படியோ சமாளிச்சிட்டேன்.. தங்கி இருந்த இடத்தையும் காலி பண்ணியாச்சு.. காபி போடத் தான் நல்லா வரலை... கத்துகிட்டே இருக்கேன்.. "

பெருமையாக என்னை நிமிர்ந்து பார்த்தான்,

"அன்னிக்கு என்னவோ பெரிசா எனக்கு அறிவுரை சொன்ன?" என்னும் கேள்விகள் என் கண்களில் தெரிந்திருக்கவேண்டும்...

இரண்டு நிமிட மௌனத்துக்குப் பின், கொஞ்சம் இறங்கிய குரலில் சொன்னான். "ஒரு விதத்துல பார்த்தா நமக்கென்ன வேணும்னு நாம தாங்கா முடிவு பண்ணணும்.."

காபியை ஆற்றிக் கொண்டே அவன் சொல்லச் சொல்ல எனக்கு யாரோ பொட்டில் அடித்தாற்போல் இருந்தது

"என்னக்கா யோசனை?" என்றான், 'ம்' கூடக் கொட்டாமல் இருப்பதைப் பார்த்து.

"நானும் வேலையை விட்டுட்டலாமான்னு யோசிக்கிறேன்டா.. எத்தனை நாள் சம்பளத்துக்காக ஓடுறது?" சொல்லும்போது என் மனதினுள் ஒரு நம்பிக்கையும் நிம்மதியும் படர்வதை உணர்ந்தேன்..

[பிரசுரித்த நிலாச்சாரலுக்கு நன்றி.. அங்கு வந்த மறுமொழிகளை வைத்துக் கொஞ்சம் செப்பனிட்ட போதும், ஏதோ குறைவது போல் ஒரு எண்ணம்.. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.. ]