Sunday, October 26, 2008

ஒரு வருட பாக்கி..

இங்கே வந்ததிலிருந்து ஒரு வருடமாக பார்த்த பல படங்களைப் பற்றி அன்றன்றைக்கு ஏதாவது எழுதி வைக்கும் பழக்கமுண்டு. சிலவற்றை மேலும் மெருகூட்டி தனி பதிவாக இட எண்ணி வைத்திருந்தேன்.. ஆனால், இப்படியே போனால் படம் பார்த்ததே கூட மறந்து போய்விடும் என்று தோன்றிவிட அவற்றை அப்படியே ஒன்று சேர்த்து இங்கு.
The Diary of Anne Frank
ஒரு படம் பார்த்த அன்று நிம்மதியான தூக்கம் காணாமல் போயிருக்கிறதா? அது போன்ற ஒரு அழகான படம் தான் டைரி ஆப் ஆன் ப்ராங்க். இரண்டாம் உலக யுத்த காலத்தில், ஒளிந்து வாழ்ந்த ஒரு யூதக் குடும்பத்தின் கதை.
ஆச்சரியம் என்னவென்றால் ஆன(Anne - கடைசி e ஐ, அவுக்கும் ஆவுக்கும் இடையில் படிக்க வேண்டும்) ஒரு பதின்மூன்று வயதுச் சிறுமியாக இருந்தபோது எழுதிய தன் சொந்த டைரி, உண்மைக் கதை. இரண்டு முழு வருடங்கள் மூன்று சின்ன அறைகள் கொண்ட வீட்டில் கிட்டத்தட்ட பத்து பேர் ஒளிந்து வாழ்கிறார்கள். அவர்களின் எண்ணப் போக்கு, தினசரி நடவடிக்கை, அந்தச் சூழ்நிலையில் கூட மலரும் மெல்லிய ஈர்ப்பு, காதல், அம்மாக்களுக்கும் பதினாறுகளில் இருக்கும் பெண்களுக்குமிடையில் இருக்கும் வழக்கமான புரிதலின்மை. இரண்டு முழு வருடங்கள் இரண்டு குடும்பங்கள் முழுமையாக ஒளிந்து மறைந்து வாழ நேர்ந்தமையால் ஏற்படும் சங்கடங்கள், நெருக்கம், சண்டை என்று அன்றாட நிகழ்வுகளை அழகாக பதிவு செய்து வைத்திருக்கிறார் ஆன..
படம் யாரோ சொன்னார்கள் என்று எடுத்துப் பார்த்தேன், அதன் பின் அந்தப் புத்தகத்தை அதைவிட ஆர்வமாக எடுத்துப் படித்தேன். அதுவும் ஒரு இனிமையான அனுபவம்…
Swing Kids
போர் ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் பைத்தியக்காரத்தனம். ஹிட்லரின் ஜெர்மனியில் குஞ்சு குளுவான்கள் எல்லாம் யூதர்களை எதிர்த்து, எதிர்ப்படும் யூதர்களை எல்லாம் கொசு அடிப்பது போல் நசுக்கி விட்டுப் போனது பற்றி பியானிஸ்ட் பேசியதென்றால், அந்த ஒட்டு மொத்தப் பைத்தியக்காரத்தனத்திலிருந்து தனித்து நின்ற மனிதர்களும் ஜெர்மனியில் இருந்திருக்கிறார்கள் என்கிறது swing kids.
ஹிட்லர் தீயது என்று ஒதுக்கிய அமெரிக்க பாப் இசையைக் கேட்டு, யூதர்களின் பாடல்களைப் பாராட்டி, இசைத்து வாழ்ந்த இந்தச் சில இளைஞர்கள், கலை மூலமாகவே நாசிக்களுக்குத் தம் எதிர்ப்பைக் காட்டினார்களாம். உலகம் தட்டையானது என்று நம்பிக் கொண்டிருந்த பூமியில் உருண்டை என்று சொன்ன சாக்ரடீஸ் போல யூதர்களை மனிதர்கள் என்று நினைத்த இந்தச் சில இளைஞர்களும் கைது செய்யப்பட்டு work campகளுக்கு அனுப்பப்பட்டனராம்.
‘ஹிட்லர் செய்வது தவறு என்றால் அவன் மட்டுமே அதற்குப் பொறுப்பல்ல. அவனைத் தவறு செய்ய விட்டுவிட்டு எதிர்ப்பு காட்டாமல் சும்மா இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் அதற்கு பெரும்பொறுப்பு ஏற்கத் தான் வேண்டும். எதிர்ப்பைப் பதிவு செய்யுமிடம் வீடு மட்டுமல்ல.. வெளியில் செய்ய வேண்டும், உரத்துச் செய்யவேண்டும்’ - தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று எதிர்ப்பை அமெரிக்க யூத இசை மூலம் பதிவு செய்கிறான் பீட்டர்.
ஒரு காலத்தில் ஹிட்லரை எதிர்த்து, அவனின் செயல்களை வெறுத்து swing இரவுக் கிளப்களை கதி என்று கிடந்த இரண்டு இளைஞர்கள், நாசிப் படையில் சேர்ந்த பின்னால் எப்படி உருவேற்றப்பட்டுகிறார்கள், எப்படி சொந்த குடும்பத்தைக் காட்டிக் கொடுக்கும் அளவுக்கு வெறியேற்றப்படுகிறார்கள், அந்த மடத்தனத்திலிருந்து, நாஜிப் படைகளின் யூத வெறுப்பு மந்திரக்கட்டிலிருந்து எப்படி ஒருவன் மட்டும் வெளிவருகிறான், அதன் பின்னான அந்த நண்பர்களின் நட்பும் விரிசலும்.. கதை இரண்டு நண்பர்களைப் பற்றியது மட்டுமல்ல. swing இயக்கம், நாஜிப் படைகளின் யூதவெறுப்பைப் பிஞ்சு மனங்களில் பதியவைக்கும் திறமை, நல்ல மனிதனாக வளரும் குழந்தைகள் எப்படி மதம்பிடித்த வெறியர்களாக ஆக்கப்படுகிறார்கள் என்ற விளக்கம்.. அழகான படம்..
The Prize winner of Defiance, Ohio
நம்மூர்ப் பெண்களைப் போல வேளா வேளைக்கு குடும்பத்தைக் கவனித்து, பொறுப்பில்லாத கணவனை மன்னித்து, அவனுக்கும் சேர்த்து தானே பணம் சம்பாதித்து - கடமை தவறாத அழகான அமெரிக்க மனைவி எவலின். கிட்டத்தட்ட பத்துக் குழந்தைகள் கொண்ட தனது வீட்டைக் கூட தன் சின்னச்சின்ன ஜிங்கிள் எழுதும் திறமையால் மட்டும் காப்பாற்றும் எவலின் அமெரிக்க வாழ்வியலில் கூட அமைவது எனக்குப் புதிது.
தன் எழுதும் திறமையைப் பயன்படுத்தி, புகழ் பெற்ற எழுத்தாளராகி இருந்திருந்தால் உலகம் பார்த்திருக்க முடியும். உலகம் எங்கும் சுற்றிப் பார்க்கும் ஆசை இருந்தும் அந்தச் சின்ன கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் கட்டுண்டு கிடந்த எவலின் என்ன சாதித்தாள்? அவள் கதையை எழுதி உலகுக்குச் சொல்ல, அவளின் மகள் இல்லாமல் போயிருந்தால் சுவடு தெரியாமல் போயிருப்பாள். ஆனால் எவலின் போன்ற பெண்கள் தான் அடுத்த தலைமுறையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறார்கள்; அந்தக் குடும்பத்துக்கே நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்கள்.
சிரித்த முகத்துடன், எத்தனை கஷ்டம் வந்தபோதும் புன்னகையோடு எதிர்கொள்ளும் எவலின் ஒரு கவிதையான பாத்திரம். பழைய காலத்துத் தமிழ்ப்படங்கள் காட்டும் பாசமான தாயாராவும், அடிபணியும் மனைவியாகவும் இருக்கும்போதும் சோகத்தைப் பிழியாமல் எல்லாரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் அம்மா வாத்தாக எவலின் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள்.
A Family Thing
எல்லா ஊர்க் கதைகளிலும் பெண்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். மனசாட்சிக்குப் பயந்தவர்களாக, ஆனால் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு அடங்கிப் போபவர்களாக…
எல்லா ஊர்களிலும் பெண்கள் தான் அதிகமாக, சுலபமாக வஞ்சிக்கப்படுகிறார்கள். மிக இயல்பாக.. அவர்களின் எண்ணம் பற்றிய கவலை இல்லாதவர்களால் சுலபமாக.. (படம் பார்த்த அன்று எழுதி வைத்தது இது.. மேலும் தெரிந்து கொள்ள படம் பாருங்கள் அல்லது அது பற்றிப் படியுங்கள்..)
woh lamhe அந்தக் கணங்கள்.
அழகான சில கணங்களைப் பற்றிய ஒரு படம்.. அழகான காதல்.. அந்த அளவுக்கு உயிரினும் இனிய காதல்கள் பொய் என்ற எண்ணம் ஏனோ ஏற்படவே இல்லை. அது போன்ற ஒரு காதலுக்காக ஏங்குகிறது மனசு. வாழ்க்கை, எதிர்காலம் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்தப் பெண்ணுக்காக மட்டுமே வாழும் ஒருவன் - வோ லம்ஹே ஒரு உண்மைக் கதையாம்! அது போன்ற ஒரு காதல் கிடைக்க பர்வீன் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த ஷீஷ்ரோப்ரீனியா போன்ற வியாதி அவளைப் பிரித்தது தான் பாவம்..
The Dreamer - Sonador
ஒவ்வொரு மகளின் - மகனின் - கனவும் தன் தந்தை போல வரவேண்டும் என்பதே.. தந்தை தனக்கு அவ்வளவாக பிடிக்காத, அதனால் பழக்காத அவரின் தொழிலான பந்தயக் குதிரை வளர்ப்பை அவரே ஆர்வத்துடன் மகளுக்குக் கற்றுக் கொடுக்க வைக்கும் அழகிய பெண்ணின் கதை.. அந்தப் பெண் போன்றே அப்பாவின் தொழிலில் புகுவதற்கு எனக்கும் ஆசை என்பதாலோ என்னவோ இந்தப் படம் அத்தனை ஈர்த்துவிட்டது…
கோதாவரி (தெலுங்கு - இன்னும் தமிழுக்கு வராத தெலுங்கு :) )
அற்புதமான படம்.. செ.லூயிஸில் இருந்தபோது வெளிவந்த படம். அப்போதே பொழுதுபோகாமல் போக எண்ணி இருந்ததுண்டு.. திரைப்படங்கள் குறித்த அப்போதைய ஆர்வமின்மையால் விட்டுப் போய்விட்டது..
‘கண்ட நாள் முதல்’ போல, சின்னவயதில் படித்த பி.வி.ஆரின் மேனேஜர் சேது கதை போல (நாவல் பெயர் மறந்துவிட்டது) ஏழு நாட்களில் பத்துக்கு மேற்பட்ட முறை பார்த்தாச்சு.. ஒரு சீன் கூட தள்ளிப் பார்க்கத் தோன்றவில்லை..
கோதாவரியில் படகில் ஏறி பத்ராச்சலம் போகும் வாய்ப்பும் ஒருதரம் ஹைதராபாத்தில் இருக்கும்போது கிடைத்தது. ஆனால் இதன் அருமை தெரியாமல் விட்டுப் போய்விட்டது..
அழகான கோதாவரி, அழகான கமலினி, அமைதியான சுமந்த், நல்ல கதை, மிக மெல்லிய காதல் கதை… நன்றாக இருக்கிறது.. சொல்ல வந்தது ஒரு காதல் கதை மட்டுமே என்ற அளவில் அதைத் தாண்டிய கதாநாயகியின் பிரச்சனைகளை அப்படியே விட்டுவிட்டார்கள் என்பது என்னுடைய குறை.. ஆனால் நல்ல கதை.. அழகான காட்சியமைப்பு..
கமலினி அடிக்கடி சொல்லிக் கொள்வது போல், எனக்கே ஏதோ ‘குயின் விக்டோரியா’ என்ற எண்ணம் வந்து போகிறது.. ஓரிரண்டு சின்ன மைனஸ்களைத் தவிர கோதாவரி அழகு.. பத்ராச்சலத்துக்கும் ராமாயணத்துக்கும் என்ன தொடர்பு என்று மட்டும் இன்னும் தெளிவாக புரிந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்… என்றாவது ஒருநாள் subtitleகளுடனான குறுந்தகடு வாங்கி பார்த்தால் புரிந்து போகும்.. பார்க்கலாம்.
பாடல்கள் எல்லாம் கர்நாடக சங்கீத அடிப்படையில் இருப்பதாலேயே இன்னும் அதிகம் என்னை ஈர்க்கிறது. பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசை கூட.. அதுவே இன்னும் அதிகமாக எனக்குப் பிடித்திருக்கிறது என்று தோன்றுகிறது.
புடவை கட்டிக் கொண்டு மயங்கி மயங்கி வந்து நிற்கும் கமலினி, ‘நான் சீதா மகாலட்சுமியாக்கும், நான் ஏன் காதலை முதலில் சொல்லணும்?’ என்று ஏறிக்கொள்ளும் கமலினி, ‘என்கிட்ட உனக்குப் பிடிச்ச விசயம் என்ன?’ என்று சுமந்தைத் துருவித் துருவிக் கேட்கும் கமலினி, ‘அம்மம்மாவை என்கிட்ட கொடுத்துடேன்!’ என்று கொஞ்சும் கமலினி.. எனக்கே இவ்வளவு பிடித்து போய்விட்டது அவளை.. அப்படியே இரண்டு கையிலும் தூக்கி கொஞ்ச வேண்டும் போல..
கமலினியின் இந்த எல்லா செயல்களுக்கும் பதிலுக்கு எதுவுமே செய்யாமல் சும்மா பார்த்துக் கொண்டே ஸ்கோர் பண்ணி விடுகிறார் சுமந்த். இந்த படத்தில் ஆர்வமாகி சுமந்தின் மற்ற இரண்டு படங்கள் பார்த்தது வருத்தம் தான். அவ்வளவு நன்றாக செய்யவில்லை.. இந்தப் படம் , இந்த அமைதி மட்டும் தான் ஒழுங்காக செய்ய வருகிறது போலும்..
மனசா வாச்சா, உப்பொங்கலே கோதாவரி, மனசா கெலுபு நீதேரா, எல்லாம் மனம் நிறைக்கும் பாடல்கள்.. இருங்க திரும்ப பார்த்துட்டு வரேன்..
The Rookie
பள்ளிக் கூடத்து பேஸ்பால் பயிற்சியாளர் ஒருவரிடம் அவரின் மாணவர்கள் சவால்விடுகிறார்கள். ‘பக்கத்து ஊர்ப் பள்ளியுடனான இந்தப் போட்டியில் நாங்கள் ஜெயித்தால், பெரிய அளவில் லீக் மாட்சுகள் விளையாட நீங்கள் முயல வேண்டும்!’ என்ற சவாலை ஏற்று, சின்ன வயதில் தன் கனவான, ஏதேதோ காரணங்களால் கிட்டாமல் போன லீக் மாட்சுகளுக்கு முயல கிளம்பிப் போகிறார் கதை நாயகன். கடன்கள், தினசரி குடும்பக் கவலைகள் எல்லாவற்றையும் தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி அவரை வழியனுப்பி வைக்கிறார் அவர் மனைவி.
நாற்பது வயதில் ரூக்கியாக(புதுவரவாக) வந்து சேரும் அவரை முதலில் சேர்த்துக் கொள்ள விரும்பாமல் பல குழுக்கள் தள்ளி வைக்கின்றன. மெல்ல தன் திறமையால் நாயகன் ஜிம் மாரிஸ் குழுவில் முன்னேறுவதும், சொந்த ஊருக்கே லீக் மேட்ச் ஆட வருவதும், அவரின் மாணவர்களே அவர் ஆடுவதைப் பார்க்க வருவதும் மிச்ச கதை..
கனவுகளை வென்றெடுப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்று ஆணித்தரமாகச் சொன்ன படம் - ஜிம் மோரிஸின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் எனும்போது இன்னும் அதிகமாக மனதைத் தைக்கிறது.
Field of Dreams
இதுவும் கனவுகளைப் பற்றிய, பேஸ்பால் படம் தான். பல வருடங்களில் பயணம் செய்து வரும் இந்தப் படம் பற்றி நான் எழுதுவதை விட நீங்களே கதை படித்து விடுங்கள். ஒரு மாதிரி படத்தின் கதை அடுக்கப்பட்டிருந்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனாலேயே இதை இங்கே வைத்திருக்கிறேன். மனம் சொல்வதைக் கேட்டு அப்படியே நடந்தால், நிச்சயம் நஷ்டமிருக்காது என்று சொல்லும் படம் இது..

Wednesday, October 08, 2008

ரயிலோடு உறவாடி..

ரயில் என்றாலே ஒரு மகிழ்ச்சி எங்கிருந்தோ வந்து சேர்ந்துவிடுகிறது. இன்றைக்கும் ரயிலைப் பார்த்தால் சின்னக் குழந்தை மாதிரி கடைசி பெட்டிவரை பார்த்துக் களிப்பது ஒரு பழக்கம். நான் பிறந்த புதிதில் எங்கள் வீடு மாம்பலம் ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்தது. முதல் மாடி பால்கனியிலிருந்து ரயில் பார்ப்பது என்னுடைய சிறு வயது பொழுதுபோக்குகளில் முதன்மையானது.
பாட்டி இடுப்பிலேறி ரயில் பார்த்துக் கொண்டே உணவுண்ட நாட்கள் தொடங்கி மாமா மகளுக்கு ஊட்டிக் கொண்டிருந்த போது அவரின் காலைச் சுற்றிக் கொண்டிருந்த நாள்வரை அந்த பால்கனி நாட்கள் இன்னும் பசுமையாக நினைவிருக்கின்றன. காலை நேர சென்னையின் மின்சார ரயில்கள் நிரம்பி வழிந்து கொண்டு செல்வதிலிருந்து மாலை நேரம் அது திரும்பவும் மனிதர்களை நிரப்பிக் கொண்டு வந்து சேர்க்கும் வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு தரம் அந்த பால்கனிக்கு ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்ததுண்டு.
அம்மா ரயில் (அம்மா அலுவலகம் சென்று வரும் ரயில்) என்று தான் எட்டு முதல் எட்டரை வரும் ரயில்களை நாங்கள் குறிப்பிடுவோம். போகும் வரும் எல்லா ரயில்களுக்கும் கைகாட்டி விட்டு, அதில் யாராவது ஒரு பிரயாணி திரும்பி கையாட்டிவிட்டால் ஏற்படும் பூரிப்பு சொல்லி முடியாது. கொஞ்சம் வளர்ந்த பின், மாலை நான்கரைக்கு வரும் முத்துநகர் விரைவு வண்டியிலிருந்து எத்தனை மனிதர்கள் இறங்கினார்கள், எத்தனை பேர் ஏறினார்கள் என்று கணக்கிட்ட நாட்களும் உண்டு.
பன்னிரண்டு வயதில் அந்த வீட்டை விட்டு வேறு சொந்த வீடு கட்டிக் கொண்டு ஊருக்கு வெளியில் போக நேர்ந்த சமயம், ரயில் சத்தமில்லாமல் எப்படித் தூக்கம் வரும் என்று அப்பாவைக் கேட்டுக் கொண்டிருப்பேன். அப்புறம் ரயில்புற வாழ்க்கை மெல்ல மறைந்து அமைதியான புறநகர் வாழ்க்கைக்குப் பழகியபின்னரும், ரயில் என்பது ஒரு ஆச்சரியமான விசயமாகவே இருந்திருக்கிறது.

அடுத்து ரயிலுடனான உறவு வெளியூர்களுக்குச் செல்லும் நாட்களோடு நின்றுவிட்டது. இன்றைய விமானப் பயணங்களைக் காட்டிலும் ரயில் பயணங்கள் அருமையானவை. விமானம் அல்லது பேருந்து போல ரயில் பயணங்கள் உடல் சோர்வைத் தருவதில்லை. பகல் வேளைகளில் ஜன்னல் அருகே அமர்ந்து இந்திய கிராமங்களின் வயலையும் வாய்க்காலையும் பார்ப்பது ஒரு மகிழ்ச்சி என்றால், இரவின் தனிமையில் ரயிலிருந்து விழும் மெல்லிய வெளிச்சம் தரையில் விழுந்து உருண்டோடுவதைப் பார்ப்பது மற்றுமொரு சந்தோசம். ஜன்னல் கம்பிகளுக்கு இடையே விழுந்து ஓடும் வெளிச்சத்தைப் பார்க்கும்போது என்னுடைய கற்பனை பொங்கி நிறைய குட்டிக் குட்டிக் கதைகள் உதயமாவதுண்டு. ஊட்டியின் தள்ளு ரயில்களும், மலைப்பாதையில் திரும்பும்போது ரயிலின் உள்ளே இருந்துகொண்டே அதன் மற்ற பகுதிகளைப் பார்க்கக்கூடிய சில தருணங்களும் எப்போதும் ஆச்சரியம் தருபவை.
ஹைதராபாத்தில் வேலை பார்த்த காலங்களில் கிட்டத் தட்ட மாதமொருமுறை ரயில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். வேலைக்கு என்று முதன்முதல் செல்லும்போது தான் இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்துப் போனோம். என் அலுவலகத்தில் பயணச்செலவைத் திருப்புவதாக சொல்லி இருந்த காரணத்தால், நானே அப்பாவை இரண்டாம் வகுப்பில் அழைத்துச் செல்வது பற்றிய ஒரு பெருமை இருந்தது எனக்கு. அதற்கு முன் எத்தனையோ தரம் அப்பா இரண்டாம், மூன்றாம் வகுப்புப் பெட்டிகளில் பயணித்திருப்பார் என்றாலும், மகளாக நான் அவரை அழைத்துச் சென்ற முதல் பயணமல்லவா!
திரும்பவும் அதற்கு அடுத்த மாதம் ஒரு வார இறுதி சென்னை வந்து போனதும் மறக்கமுடியாத பயணம் தான். முதன்முதலாக நான் மட்டும் தனியாக ரயிலில் வரப் போவதைப் பற்றிய ஒரு தயக்கமும், பயமும் இருந்துகொண்டே இருந்தது. வெளிக் காட்டவில்லை என்று நினைத்துக் கொண்டே தான் வந்தேன். ஆனால் எதிரில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணும் அவள் தாயாரும் இரவு உணவின் போது, ‘தனியாளா வரியாம்மா?’ என்று கேட்ட போது பொறுக்காமல், நான் வேலைக்கு சேர்ந்தது தொடங்கி முழுக்கதையும் சொல்லித் தான் மூச்சுவிட்டேன். துணைக்கு நல்ல ஆள் கிடைத்ததாக மகிழ்ச்சி வேறு.

அதன்பின் எத்தனையோ தரம் அந்த ரயிலில் போய் வந்திருக்கிறேன் - நல்லகுண்டாவிலும் குண்டூரிலும் கிடைக்கும் ‘வெடிகா’ சமூசாக்களையும், கூடூரில் நடு இரவில் கிடைக்கும் சூடான தோசை, சில்லென்று ஒரு ஆப்பிள் ரசம் என்று ரவுண்டு கட்டி அடித்திருக்கிறேன்; அடுத்த மாத டிக்கெட்டுடன் வண்டியேறி, ‘என் பேரை எப்படி சார்ட்டில் விட்டுப் போச்சு’ என்று சண்டைபோட்டிருக்கிறேன்; நண்பர்களுடன் கொட்டமடித்து, பாட்டுப் பாடிக் கொண்டு, யாரும் இல்லாமல் தன்னந்தனியாக புத்தகம் படித்துக் கொண்டு என்று பலவிதமாக அந்த ரயில் பயணங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி ருசிதான்.
இப்போது இந்த ஊருக்கு வந்த புதிதில், இந்த ஊரின் விதம்விதமான ரயில்கள் மீண்டும் என்னை குழந்தைக் காலத்துக்கு அழைத்துப் போய்விட்டது. உள்ளூரில் ஓடும் மரவட்டை போன்ற விடிஏ, கொஞ்சம் வெளியூராக பக்கத்து பெருநகரம் வரை ஓடும் இரட்டை அடுக்கு கால்டிரெயின், கடல் தாண்டி அடுத்த விரிகுடாவுக்கும் போகும் விரைவு வண்டியாக பார்ட், என்று பார்த்த எல்லா வண்டிகளிலும் ஏறி பயணம் செய்தாகிவிட்டது. இன்னும் கூட மிச்சம் இருக்கும் இருவகை ரயில்களில் ஏற நாள் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய அமெரிக்காவில் இருந்த போது, என் க்ளையண்ட் மேலாளர் வார இறுதிக்கு பிள்ளைகளை ரயிலில் வெளியூர் அழைத்துப் போவதாக மிக மகிழ்ச்சியோடு சொன்னார். அதென்ன பெரிய விசயமா என்று நினைத்த எனக்கு அவரின் அடுத்த சொற்கள் ஆச்சரியமாக இருந்தன : ‘என் பிள்ளைகள் இதுவரை ரயிலையே பார்த்ததில்லையா அதனால ரொம்ப உற்சாகமா இருக்காங்க’ என்றார். உலகத்தில் இப்படிப் பட்ட குழந்தைகள் கூட இருக்காங்களா! என்று வியந்து போனேன்..
நேற்று வண்டி எடுக்கையில், காரைக் கிளப்பிய பின்னால் பக்கத்தில் இருந்த இருப்புப்பாதையில் திடீரென்று ரயில் போவதைப் பார்த்து விட்டு டக்கென அப்படியே உட்கார்ந்து வேடிக்கை பார்க்கத் தொடங்கிய போது தான் எத்தனை நாளானாலும் இந்த ரயில் பார்த்துக் குழந்தையாகும் மனம் மாறவே மாறாது என்று புரிந்து போனது…

Saturday, September 27, 2008

bike ஓட்டலியோ bike

எங்க ஊர் ஒரு Biker friendly Community தெரியுமா? அதென்னங்க பைக்கர் friendly? பைக் ஓட்டுறவங்க எல்லாம் நட்பா ரோட்ல போற மத்தவங்களைப் பார்த்துப் பத்திரமா ஓட்டுவாங்களான்னு கேட்டுறாதீங்க….
முதல் விசயம் என்னன்னா, அமெரிக்காவல பைக்னா நம்ம ஊர்ல சைக்கிள் - அதாங்க மிதிவண்டி. மோடார்னா அது கார். அப்ப நம்ம ஊரு மோட்டார் பைக்குக்கு என்ன பேர் சொல்லுவாங்கன்னு கேட்காதீங்க.. அதை நான் இன்னும் கண்டுபடிக்கலை.
ஆக Biker friendly Communityன்னா, சைக்கிள் ஓட்டுறவங்களை ஊக்கப் படுத்தும், அவங்க சேதாரமில்லாம வீட்டுக்குப் போக உதவும் ஊருன்னு அர்த்தம். இவ்வளவு பாசக்கார பசங்களா இருக்காங்களேன்னு நானும் ஒரு சைக்கிள் ஓட்டுறதுன்னு முடிவு பண்ணேன்.
சரியா ஆறு மாசத்துக்கு முன்னால் தினமும் சைக்கிளில் வரும் எங்க அலுவலக நண்பர் அந்தப் பெரிய உதவியை எனக்குச் செய்ய முன்வந்தார். அவரும் நானுமா போய் பக்கத்து அண்ணாச்சி கடையில் (அதாங்க வால் அண்ணாச்சி கடை) நல்லதா ஐம்பது டாலருக்கு ஒரு சைக்கிள் வாங்கியாந்தேன். ஆன விலை கம்மி, அங்குசந்தான் விலை அதிகம்ங்கிற மாதிரி, அதுக்கு வாங்கின சுத்துப்பட்டு சாதனங்கள் எல்லாம் சேர்ந்து நூத்துப்பத்து டாலராகிடுச்சு. அப்படி என்னத்த சுத்துப் ‘பட்டு’ சாதனங்கள்னு கேட்டீங்கன்னா,
- முன்னாடி, பின்னாடி பாட்டரி விளக்கு
- தலைக்கவசம்
(இது ரெண்டும் இங்க விதிப்படி இருந்தாகணும். )
- குளிர்காலத்துல போட்டுகிட்டு ஓட்ட ஒரு கையுறை
- சீட் கொஞ்சம் நல்லா இல்லாததினால அதுக்கு ஒரு பஞ்சு வைத்த உறை
- வண்டியில் ஏதாச்சும் சின்ன பிரச்சனைன்னா சரி பண்ண ஆயுத பொட்டி
- பஞ்சர் ஒட்ட, டயரை கழற்ற ஒரு ஸ்பானர்
- காத்தடிக்க பம்பு
- பூட்டு
From பொன்ஸ் பக்கங்கள்
இது தவிர அப்புறமா இந்த பைக்கைத் தொடர்ந்து ஓட்ட வாங்கினது:
- வண்டியில் முன்புறம் மாட்ட ஒரு பை
From பொன்ஸ் பக்கங்கள்
வேலைக்குப் போக இந்த வண்டி தான் இப்ப.. வாரத்துல ரெண்டு நாள் தான் ஓட்ட முடியுது, மத்த நாள் எல்லாம் ஆத்திர அவசரமா மீட்டிங் பேசிகிட்டே ஓடிகிட்டிருக்கேன்.
இங்க எல்லாம் சைக்கிளே நாலஞ்சு வகையில் கிடைக்குது. முக்கியமா எனக்குத் தெரிஞ்சி மூன்று பெரும்பிரிவுகள்:
1. சாதாரண சாலைக்கான வண்டி - Road bike
2. மலைகளுக்கான வண்டி - Mountain Bike
3. ரெண்டும் கலந்த கலவை - Hybrid
சாலை வண்டி மெல்லிசா பஞ்சத்துல அடிபட்டதாட்டம் ஒல்லியா இருக்கும். ஆனா சாதா சாலைகளில் நல்லா வழுக்கிகிட்டு போகும். ரொம்ப பலமா மிதிக்க வேண்டாம். அதோட கைப்பிடி கொஞ்சம் வளைவா இருக்கும். படுத்துட்டு ஓட்டுறது மாதிரி இருக்கும் ஆனா அதுவும் முதுகுக்கு நல்லதுன்னு சொல்லுறாங்க.

மலை மிதிவண்டி நல்லா பெரிய பெரிய டயர்களோட குண்டா இருக்கும். ஏறி மிதிக்கவே கொஞ்சம் கடினம் தான். ஆனா இந்த ஊர்ல அந்த வண்டியை வச்சிகிட்டு நல்லா பெரிய பெரிய மலைகளே ஏறுறாங்க. ஏறுவதற்கு தனி கியர், இறக்கத்துக்கு தனி கியர். வித்தியாசமான வண்டி. சாதா சாலையில் ஓட்ட கொஞ்சம் கஷ்டம் தான்

ரெண்டுங்கெட்டான் வண்டி (அதாங்க hybrid) இது ரெண்டும் கலந்திருக்கும். வண்டி சக்கரம் பருமனுமில்லாம, ஒல்லியுமில்லாம நம்ம ஊரு சக்கரம் சைசுக்கு இருக்கும். கைப்பிடி வளைவா இருக்காது, படுத்துட்டு ஓட்ட வேண்டாம். சாலை, மலை ரெண்டுத்துலயும் நல்லா போகும்.

வண்டி வாங்கப் போனபோது இத்தனையும் தெரியாது.. வாங்கி வந்து ஓட்ட சிரமப்பட்டபோது ஆராய்ச்சி பண்ணி தெரிஞ்சிகிட்டேன். வாலண்ணாச்சி கடையில் வாங்குறதும் அவ்வளவு சரியில்லைன்னு வண்டி மாசத்துக்கு ஒரு தரம் பிரேக் வேலை செய்யாம போகும்போது தான் புரிஞ்சது. அடுத்து வாங்குறவங்களுக்கு வாலண்ணன் வேண்டாம் வேண்டாம், டார்கெட் தம்பி கடையை முயற்சி பண்ணுங்கன்னு சொல்லிகிட்டிருக்கேன்.
நம்மை மாதிரி இந்தியாவிலிருந்து வரும் மென்பொருள் கூலிங்களுக்கு ஓரளவு கட்டிவரும் விலையில் இருக்கும். அது தவிர இந்த பைக் விற்கிறதுக்குன்னே கடை கண்ணி இருக்கும், அங்க எல்லாம் போய் பைக் விலை கேட்டா, ரெண்டு பைக் வாங்குற விலையில் ஒரு பழைய காரே வாங்கிடலாம்னு தோணும். ஓவர் சீன் உடம்புக்காகாதுன்னு வண்டி ஓட்டும் யோசனையை விட்டுட்டு வந்துடுவீங்க..
ஆக ஒரு வழியா வண்டி வாங்கியாச்சா. அடுத்து முக்கியமா கவனிச்சது என்னான்னா, இந்த ஊர் வண்டிகளுக்கு
- பின்னாடி கேரியர் கிடையாது
- மட்கார்ட், செயின் கார்ட் ஒரு மண்ணாங்கட்டி கார்டும் கிடையாது. அதனால நீங்க கண்டிப்பா பாண்ட் போட்டுத் தான் வண்டி ஓட்டணும். நம்மூர்ல பொண்ணுங்க சேலையை இழுத்து சொருகிட்டு ஓட்டுறதை எல்லாம் இவங்க ஜிம்னாஸ்டிக்ஸ்ல சேர்த்துருவாங்கன்னு நினைக்கிறேன். அங்க துப்பட்டாவை மட்டும்தான் பிடிக்கிற வேலை. ஆனா இங்க முதல்ல கட்டவேண்டியது உங்க காலை. அதாவது கணுக்கால் பக்கத்தில் கொஞ்சம் freeயா துணி இருந்தா அது கண்டிப்பா கருப்பாகிடும். அதனால அதை முதலில் ஒரு ரப்பர் பேண்ட் வச்சி கட்டணும்.
அடுத்து குளிர் காலத்துல வண்டி ஓட்டணும்னா ஒரு ஜெர்கின் போட்டாகணும். வெயில் காலத்துல அலுவலகம் போகிறதுக்குள்ள தொப்பலா நனைஞ்சிடுவோம்ங்கிறதினால அதுக்கு முன்னாடி வேற சட்டை போட்டுகிட்டு பையில் ஒரு துண்டு வச்சிகிட்டு போகணும். சிலர் வண்டி மிதிச்சிகிட்டு போனதுக்காகவே அலுவலகம் வந்து குளிக்கிறவங்களும் இருக்காங்க.

இங்க பல சாலைகளில் பைக்குக்குன்னு தனி lane உண்டு. அதில் ஓட்டலாம். அது இல்லாத சாலைகளில் ஓரமா, கடைசி லேனில் ஓட்டலாம். சைக்கிள் காரங்களுக்கு வழி விட்டு மரியாதையா நடக்க வேண்டியது வேகமா ஓடும், பாதுகாப்பான மற்ற வண்டி ஓட்டுனர்களோட (கார், பேருந்து, ட்ரக்) கடமை. நடைபாதைகளிலும் பைக் ஓட்டலாம். அப்ப முன்னாடி பின்னாடி பார்த்து, நடக்கிறவங்க மேல மோதாம ஓட்டுறது பைக் ஓட்டுனரோட கடமை.
பைக் ஓட்டுறது ஒரு நல்ல உடற்பயிற்சி. இங்க நல்லா வெகு தூரம் ஓட்டுறவங்க கூட இருக்காங்க. அதே போல பைக் ஓட்டுறதுங்கிறது ஒரு குடும்ப நிகழ்வாவும் பயன்படுத்துறாங்க. அப்பா, பையன், அம்மான்னு எல்லாமா வண்டி எடுத்துகிட்டு விடுமுறை நாளில் ஓட்டக் கிளம்பிடறாங்க. எங்க அலுவலகத்துக்கே ஒரு குடும்பம், அம்மா, அப்பா, ரெண்டு பசங்க எல்லாமா சைக்கிளில் வருவாங்க. அப்பாவும் அம்மாவும் தனித் தனியா வண்டி ஓட்ட, பசங்க ரெண்டுத்துக்கும் ஒரு குட்டி பல்லக்கு மாதிரி வண்டியில் வச்சி அப்பா வண்டியில் கட்டி அதையும் இழுத்துகிட்டு ஓட்டுறார் அவர். பசங்க ரெண்டும் சிறுசு, அலுவலகத்தைச் சேர்ந்த குழந்தைகள் காப்பகத்துக்குத்தான் வருது.
இந்த ஊரு ரயில், பேருந்து எல்லாத்துலயும் பைக்கை ஏத்துவாங்க. நம்ம பைக்கை நாமே ஏத்தி ரயிலில் அதுக்குன்னு இருக்கும் இடத்தில் தூக்கி மாட்டிரணும்.
From பொன்ஸ் பக்கங்கள்
நமக்கான இறங்குமிடம் வரும்போது அதை நாமே எடுத்துகிட்டு இறங்கிட வேண்டியது. பேருந்திலும் இதே தான்- என்ன பைக் மாட்டுமிடம் பேருந்துக்கு வெளியில். உயரமான பேருந்தாச்சா, அதன் முன் பக்க கண்ணாடிக்கு கீழே ஒரு பைக் மாட்டுமளவுக்கு இடம் இருக்கும். மக்களுக்கு அதிக அவசரமே இல்லை. பேருந்து ஓட்டுனர் நம்ம பைக்கை ஏற்றி இறக்கும் வரை காத்திருப்பாரு - பயணிகளும்.
புத்தகசாலைகள், பணியிடங்கள், விற்பனையகங்கள்னு எல்லா இடத்திலும் பைக் நிறுத்துமிடங்கள் இருக்கும். நிறுத்துமிடம்னா பெரிசா ஏதாவது கற்பனை பண்ணாதீங்க. சும்மா ரெண்டு மூணு வளைவு இருக்கும். அந்த வளைவுகளில் நம்ம வண்டியை தள்ளி பூட்டிக்க வேண்டியது தான
From பொன்ஸ் பக்கங்கள்
இது தவிர சில Park&Ride ரயில் நிலையங்களில் வண்டியை வச்சிப் பூட்ட பூட்டு சாவி கூட கொடுக்கிறாங்களாம். என்ன பூட்டினாலும் வண்டியை அடிச்சிட்டு போகிறவங்க இந்த ஊரிலும் இருக்காங்க.. ஒண்ணும் செய்ய முடியாது.. எங்க அலுவலகத்தில் சில சமயம் ‘என் பைக் விளக்கை எல்லாம் எடுத்துட்டுப் போனவங்க பத்திரமா கொண்டு வந்து வச்சிடுங்க, மக்கள் கவனிச்சுகிட்டு தான் இருக்காங்க’ன்னு போர்ட் எல்லாம் வைப்பாங்க
எல்லா விளையாட்டும் போல சைக்கிளுக்கும் இவங்க காலம் வச்சிருக்காங்க. வெயில் காலம், வசந்த காலம், ஏன் இலையுதிர் காலம் வரை சைக்கிள் நல்லா ஓட்டறாங்க. அப்புறம் குளிர் காலத்துல ஓட்டணுமானா அதுக்கு காலை மட்டும் தனியா சூடாக்கும் பேண்ட், மேலுக்கு ஜெர்க்கின்னு ரெண்டாளு சைசுக்கு உடை மாட்டிகிட்டுத் தான் சைக்கிள் மிதிக்க முடியும்.
From பொன்ஸ் பக்கங்கள்
ஏப்ரல் போல சைக்கிள் நிறைய கடைக்கு வரும். மே, ஜூன் எல்லாம் கேட்டாலும் கிடைக்காது. நான் நல்ல வேளையா பிப்ரவரியை ஒட்டி வாங்கிட்டேன். நல்ல சைக்கிளே கிடைச்சது அப்ப. இப்ப முயற்சி பண்றவங்களுக்கே சரியா கிடைக்கிறதில்லை.
நம்மளை மாதிரி அலுவலகத்துக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு மிதிவண்டி ஓட்டிப் போறவங்களை விட, குடும்பமா வெளிய கிளம்பி பக்கத்து தீவுக்கோ, ஊருக்கோ போய் வண்டி ஓட்டுறவங்க இருக்காங்க. வண்டியை கார்ல மாட்ட தனியா ஒரு accessory கிடைக்குது.. அதில் ரெண்டு மூணு மிதிவண்டியைக் கூட எடுத்து மாட்டிகிட்டு குடும்பத்தோட கிளம்பிடறாங்க.. ரெண்டு சின்ன வண்டி, ரெண்டு பெரிய வண்டின்னு கார் பின்னால அது தொங்குறதைப் பார்க்கிறப்ப நல்லா இருக்கும்..

எப்படியோ, அப்பப்ப, ‘நாங்க எல்லாம் பத்து மைல் தொலைவு வண்டி மிதிச்சி படிச்சிட்டு வந்தமாக்கும்’னு எங்கப்பா சொல்லும்போது, நானும் இப்ப எல்லாம், ‘நாங்களும் அஞ்சரை மைல் வண்டி மிதிச்சுத் தான் ஆபீஸ் போறம்’னு நெட்டி முறிக்கிறேன்ல..

Sunday, September 14, 2008

குவியம்

ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே எங்கள் வீட்டு ராணி முத்து காலண்டரில் ராசி பலன் படிக்க முடியாமல் சிரமப்படுவதைப் பார்த்து பயந்து கண்மருத்துவரிடம் அழைத்துப்போய்க் கண்ணாடி வாங்கி மாட்டிவிட்டுவிட்டார் அப்பா. வாங்கிய புதிதில் என்னுடைய கண்ணாடி பற்றி எனக்கு ரொம்பவும் பெருமை இருந்ததுண்டு.
‘கொஞ்சம் நல்ல frame. குழந்தை கீழ எல்லாம் போட்டா அவ்வளவு சுலபத்துல உடையாது சார்’ என்று நம்பிக்கையுடன் சொல்லிய கடைக்காரர் கொடுத்த பெருமை.
கண்ணாடி வாங்கி போட்ட அன்றே அதை முட்டிக்கால் உயரத்திலிருந்து, இடுப்பளவிலிருந்து, தோள் உயரத்திலிருந்து, தலைக்கு மேலிருந்து என்று கீழே போட்டுப் போட்டுச் சோதனை செய்து அது உடையவில்லை என்று கண்ட பின்னரே பள்ளிக்குப் போனேன். பள்ளியில் சும்மா இருக்காமல், என்னுடைய புதுக் கண்ணாடியின் மாண்பை நிருபிக்கும் விதமாக அதை அதன் மென்கூட்டுக்குள் போட்டு கையால் ‘பட் பட் பட் ‘ என்று தட்டோ தட்டென்று தட்டிவிட்டு, மந்திரவாதி மாதிரி திறந்து காட்டினால், அப்போதும் அந்த frame உடையவே இல்லை. ஆனால் கண்ணாடியின் குவியப்பகுதி தான் சுக்கு நூறாக உடைந்து சரி பண்ணவே முடியாதநிலையில் அதைக் கூட்டை விட்டு வெளியில் எடுத்தால் கீழெல்லாம் சிதறிவடும் வகையில் இருந்தது.
‘விளையாடும்போது கீழ விழுந்து தான் உடைஞ்சது’ என்று நான் சொன்னதை இன்றும் என் அப்பா நம்பிக் கொண்டிருக்கிறார் என்று தான் நம்புகிறேன்..
அன்று தொடங்கி சராசரியாக ஆறு மாதத்துக்கு ஒருமுறை நான் புதுக்கண்ணாடி போட்டிருக்கிறேன். ப்ளாஸ்டிக் frame, உலோக frame, ஆமை ஓட்டு frame, என்று விதம் விதமாகவும், கண்ணாடியைப் பிடித்துக் கொள்ள தலைக்கயிறு, என்று உடன்பொருட்களாகவும் என் அப்பாவும் வெவ்வேறு முறைகளைக் கையாண்டு பார்த்து அலுத்துத் தான் போய்விட்டார்.

இந்தக் காலப் பிள்ளைகள் போலில்லாமல், கண்ணாடி போட்டால் என் அழகே கூடிப் போவதாக அப்பா சொன்னதில், நான் இரவு பகல் எக்காலமும் கண்ணாடியைக் கழற்றாமல், கர்ணனுக்குத் தங்கை மாதிரி சுற்றிக் கொண்டிருந்தேன். தூங்கும் நேரங்களில் கூட சில நாள் கண்ணாடியைப் போட்டுக் கொண்டே தூங்கி, யாராவது கவனித்து அதை அவிழ்த்து வைக்காக நாட்களில், அதைப் போட்டுக் கொண்டே காலை எழுந்திருந்திருக்கிறேன். மாதமொருமுறை கண்ணாடியுடன் சேர்ந்து குளித்து அதையும் சுத்த(!)ப்படுத்துவது சின்னவயதுப் பழக்கம்.
நினைவு தெரிந்து கல்லூரிக் காலத்தில் தான் போட்டுவிட்ட கண்ணாடியை நான்கு வருடம் போல மாற்றாமல், உடைக்காமல் பத்திரமாக வைத்திருந்தேன். அதன் பின் நான் உடைக்காவிட்டாலும், கண்ணின் குறைபாடு அதிகமாக ஆக, வருடா வருடம் கண்ணாடி மாற்றியே ஆக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
கண்ணாடி போட்டுக் கொண்டே பிறந்தவள் போல நான் செய்யும் அழும்பு தாங்காமல், அம்மா லென்ஸுக்கு மாறச் சொல்லி கேட்டுக் கொண்டே இருந்தார். கூட தங்கியிருந்த சில குவியத்(;-)) தோழிகள் இந்திய தூசியில் படும் கஷ்டத்தைப் பார்த்த பின்னால் அந்த முடிவைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். இங்கே வந்து அதையும் முயன்று பார்ப்போமே என்று தோன்ற, இதோ, இத்தோடு இரண்டு மாதமாக வெற்றிகரமாக கண்ணாடி இல்லாத பூர்ணாவாகிவிட்டேன்.
இந்த ஊர் மருத்துவர்கள், குவியத்தை முயன்று பார்க்கவென்றே ஒரு வாரம் தருகிறார்கள். முயன்று ‘பொருந்துகிறது, உறுத்தவில்லை’ என்று நாம் சொன்னால் தான் அடுத்து மருந்துச் சீட்டே எழுதித் தருகிறார்கள். ஆரம்பத்தில் கண்ணுக்குள் போட்டு எடுப்பது ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. கிட்டத் தட்ட அரை மணி நேரம் கண்ணாடி முன்னால் செலவு செய்யவேண்டிய அவசியம் இருந்தது. இப்போதெல்லாம் அப்படியே ஒரே நொடியில், பாட்டு பாடிக் கொண்டே, கார் கண்ணாடியைப் பார்த்தபடியே என்று சுலபமாக எடுக்கவும் போடவும் கற்றுக் கொண்டுவிட்டேன்.
முதல் நாள் லென்ஸ் போட்டு விட்டுவிட்டு,அந்த டாக்டரம்மா தன்னுடைய உதவியாளரை அழைத்து எனக்கு போட்டுக் கழற்றச் சொல்லிக் கொடுக்கச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். கம்பவுண்டர் பெண்ணும் வந்து, வலது கண் லென்ஸை கழற்றி மாட்டுவது எப்படி என்று விளக்கினாள், என்னையும் செய்ய வைத்தாள். அடுத்து இடது கண்ணுக்கும் சொல்லித் தருவாள் என்று பார்த்தால், ‘நாங்க ஒரு கண்ணுக்குத் தான் சொல்லித் தருவோம், வேணும்னா நீயே கழற்றிப் போட்டுக்கோ’ என்றுவிட்டுப் போய்விட்டாள்.
நான் இடது கண் லென்ஸை வெகு சுலபமாக ஒரே முயற்சியில் கழற்றிவிட்டு ‘குட் ஜாப் பூர்ணா’ என்று என் தோளை நானே தட்டிக் கொடுத்துவிட்டு திரும்பிப் போட முயன்றேன். இடது கை நடுவிரலால் கண்ணின் மேல்பக்கத்தைத் தூக்கி, வலது கை நடுவிரலால் கீழ்ப்பக்கத்தை இழுத்து, ஆட்காட்டி விரலில் இருந்த லென்ஸைப் போட முயன்றால், கண் தானாக மூடிக் கொள்கிறது! ஒரு முழு லென்ஸ் போடும் அளவுக்கு அங்கே இடம் இருந்தால் தானே!

நான்கு முறை முயன்றுவிட்டு அந்தப் பெண்ணைப் பரிதாபமாக பார்த்தேன். அவளே கொஞ்சம் நேரம் கிடைத்த போது வந்து ‘என்ன?’ என்றாள். பிரச்சனையைச் சொல்லி, அதைச் செய்தும் காண்பித்தேன். ‘ஓகே, நீ என்ன தப்பு பண்றேன்னு எனக்குப் புரியுது… நீ இடது கண் கிட்ட லென்ஸைக் கொண்டு போகிறப்போ, வலது கண்ணை மொத்தமா மூடிடறே. அதனால உனக்கு கண்ணே தெரியாம போயிடுது(!).. அதான் லென்ஸைப் போட முடியலை.. முதல்ல ரெண்டு கண்ணையும் திறந்து வச்சிகிட்டு முயற்சி பண்ணு’ என்றாள். என் கையைப் பார்த்தே பயந்து போகும் என் கண்ணை நொந்துகொண்டே மறுபடி முயன்று ஒருவழியாக போட்டு முடித்தேன்.
‘ஆல் த பெஸ்ட்’ சொல்லி அனுப்பிவைத்தவளை அடுத்த இரண்டே நாளில் அழைக்க வேண்டிவரும் என்று நினைக்கவே இல்லை. புதன்கிழமை காலை எட்டு மணி கூட்டத்துக்காக அவசர அவசரமாக குளித்து, வேக வேகமாக தயாராகி கண்ணில் மீண்டும் லென்ஸ் போட்டால், இடது கண் ரொம்பவும் கரித்தது, ஒரே உறுத்தலும் கூட. கொஞ்ச நேரத்தில் அந்தக் கண் சரியாக தெரியாமல் வேறு போய்விட்டது. வேறு வழியின்றி வீட்டிலிருந்தே கூட்டத்தை முடித்து அடுத்த வேலையாக கண்ணாடி முன்னால் நின்று கண்ணிலிருந்து லென்ஸை எடுக்க முயன்று கொண்டே இருந்தேன்.
நானும் மேல் இமையைத் தூக்கி, கீழ் இமையை இழுத்து பாப்பாவுக்கு அருகில் கிள்ளினால், அந்த லென்ஸ் மட்டும் வரவே மாட்டேன் என்கிறது. தொடர்ந்து செய்யச் செய்ய கண் சிவப்பாகி எரிவது தான் மிச்சம். ஒரு சந்தேகத்தில், கண்ணாடியை மாட்டிக் கொண்டு பார்த்தால், கண் நன்றாக தெரிகிறது! ‘பூர்ணா நீங்க லென்ஸே போடலை, வெறும் கண்ணைக் கிள்ளிகிட்டிருக்கீங்க. அதான் சிவந்து போச்சு!’ என்று சொல்லி சிரிக்கிறார் அனுபவஸ்தரான அறைத்தோழி. அவரின் காலருகில் விழுந்து கிடந்த என்னுடைய இடது கண் குவியத்தையும் எடுத்துக் கொடுத்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.
இந்த முறை எப்படியும் இந்த லென்ஸ் போடும் வித்தையை வென்றே தீருவது என்றே முடிவெடுத்து தொடர்ந்து போட்டு ஒரு வார சோதனைக் காலமும் கடந்தபின் என் அப்பாவிடம் போன் செய்து சொன்னேன்.
 • - லென்ஸ் போட்டு
 • * குளிக்கக் கூடாது
  * தூங்க கூடாது
  * முகம் கழுவக் கூடாது
  * அழக் கூடாது
  * நீஞ்சக் கூடாது
 • கையை கூடியவரை சுத்தமா வச்சிக்கணும்
 • நகத்தைச் சின்னதா வச்சிக்கணும்.
 • என்று அந்த மருத்துவர் சொன்னதெல்லாம் சொல்லி முடித்ததும், என் அப்பா கேட்ட கேள்வி,’இதுல எதுவுமே உன்னால முடியாதே! நீ கண்டிப்பா லென்ஸ் போடத் தான் போறியா? ஆமா, அதை கீழ மேல போட்டு பாக்கு வெட்டியில் போட்டு இடிச்சி சோதனை எல்லாம் செய்தாச்சா?’

  Monday, June 09, 2008

  The Pianist

  போர் பற்றிய கதைகள் முடிவதே இல்லை. அதிலும் இரண்டாம் உலகப் போரைப் பற்றியும் அதில் தப்பிப் பிழைத்தவர்கள் பற்றியுமான கதைகள் இன்னும் எத்தனை இருக்கின்றனவோ.. அது போன்ற ஒவ்வொரு திரைப்படம் பார்க்கும்போதும் அடுத்த படத்தைப் பார்க்கக் கூடாது என்று நிச்சயம் நினைத்துக் கொள்கிறேன்… Life is beautiful(France), The Diary of Anne Frank(Austria), இப்போது The Pianist(Poland). இரண்டாம் உலகப் போர் பற்றியும் யூதர்களின் concentration camp பற்றியும் சொல்ல ஒவ்வொரு நாட்டுக்கும் பல விசயங்கள் இருக்கும் போலும்.
  The Pianist, முந்தைய இரு படங்கள் போல குழந்தைகள் பற்றி இல்லாமல், ஒரு கலைஞன் பற்றியது. சோகக் கதையையும் இவ்வளவு இசை மயமாக எடுத்திருப்பது அருமை. போலந்தில் ஹிட்லரின் படைகள் வந்திறங்கிய விதம் குறித்தும் போர்வியூகங்கள் குறித்தும் பல முறை படித்திருக்கிறேன். ஆனால் சில நுண்தகவல்களை இந்தப் படத்தில் புதிதாக தெரிந்து
  கொள்ள முடிந்தது உண்மை தான்.

  யூதர்களை நகரத்தின் நடுமத்திக்கு அனுப்ப ஹிட்லர் முடிவு செய்வது, எல்லா யூதர்களும் வலது கையில் தாம் யூதர் என்பதற்கான அடையாளத்தைத் தாங்க வேண்டும் என்ற விதி, என்று புதுப் புது விவரங்கள்.. தெரிந்து என்ன செய்வது என்றாலும், தெரிந்து கொள்ள வேண்டியது உலக குடிமகள் என்ற முறையில் என்னுடைய கடமையும் கூடத் தான். முழு படமுமே நெஞ்சைத் தொடும் என்றாலும், ஸ்பில்ஸ்மென் குடும்பத்தினர் கடைசியாக இறப்பை நோக்கிப் போவதற்கு முன்னால் குடும்பத்துடன் ஒன்றாக உண்ணும் கடைசி உணவான அதிக பணம் கொடுத்து வாங்கப்பட்ட ஒற்றைச் சாக்லெட் பற்றிய காட்சியும், உணவுக்கு ஏங்கி தரையில் கொட்டிக் கிடக்கும் கோதுமையைக் கூட உண்ணத் தயாராக இருக்கும் வயதான யூதர்கள் பற்றிய காட்சியும் நினைவில் நிற்பவை. கடைசி சில காலம் ஸ்பில்ஸ்மென் உயிருடன் இருக்க உதவும் ஜெர்மனிய ராணுவ அதிகாரி பரிதாபகரமாக ரஷ்ய சிறைக் கேம்பில் இறப்பது பெரிய நகைமுரண்.
  முக்கியமாக கதையின் ஆரம்பத்தில் வரும் சொந்த மக்களை வருத்தி வேலையில் இருக்க நினைக்கும் யூதப் போலீஸ்காரருக்கும், யூதர்களை ஆதரிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டிய பொறுப்பில் இருந்தும் யூதனுக்கு உணவு கொடுத்த ஆதரித்த ஜெர்மனிய ராணுவ அதிகாரிக்கும் ஒரே முடிவு வாய்க்கிறது.
  ஸ்பில்ஸ்மென் பிழைத்து வந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே இந்தக் கதையை எழுதிவிட்டதால் இதில் நிறைய கற்பனை கலக்க வாய்ப்பில்லை. ஆனால் இது எழுதிய உடனேயே வெளிவராமல் போக ரஷ்யர்கள் விடவில்லை என்று சொல்லப்படுவதற்கு சரியான காரணம் தான் எனக்குக் கிடைக்கவே இல்லை.
  [கூடியவரை கதை சொல்லாமல் எழுத முயன்றிருக்கிறேன். முழுமையடையாதது போன்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்கமுடியவல்லை.. ]

  Monday, May 19, 2008

  ஏன் இந்தக் கோடை…

  ஜெய்சிங்கை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ஒரு இடத்தில் உட்காராமல் ஓடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருப்பான். ஆனால் பாடத்தில் படு சுட்டி. ஒரு தரம் சொன்னால் உடனுக்குடன் பிடித்துக் கொள்ளும் பஞ்சு மூளை அவனது. ரஜினி ஸ்டைல் போல, ‘ஒரு தரம் கேட்டால் ஓராயிரம் கேட்டது மாதிரி’ அவனுக்கு. அடுத்த முறை அதே பாடத்தை, அதே சொல்லைக் கேட்க போரடிக்கும் போலும், மீண்டும் மீண்டும் சொல்லித் தரப்படும் எதையும் அமர்ந்து காது கொடுத்து கேட்க மாட்டான். ஆனாலும் கூரிய மூளை; இந்த உலகத்தில் அதீத அறிவாளிகள் படும் எல்லா பிரச்சனைகளையும் இந்த வயதிலேயே படத் தொடங்கிவிட்டான் என்று நினைக்கையில் வருத்தம் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது. மெல்ல எல்லாரையும் போல் சராசரி குழந்தையாக மாறிவிடுவான். :(
  சாந்திக்கு தமிழ் வகுப்புக்கு வந்தால், தமிழைத் தவிர எல்லாம் பேசப் பிடிக்கும். தியா அல்லது நேகா பக்கத்தில் அவளை அமர்த்தவே கூடாது. ‘என் டோரா ஷூக்களை அப்பா வாங்கிக் கொடுத்தார். உன்னுடைய டிரஸ் புதிதா என்ன? எங்கே வாங்கினாய்?’, ‘இந்த தலையலங்காரம் உனக்கு ரொம்ப அழகாக இருக்கிறது. அம்மா செய்து விட்டார்களா?’ என்று விசாரிக்கவென்றே அவளுக்கு நிறைய விசயம் இருக்கும். டீச்சர் என்று பார்க்காமல் என்னிடம் கூட, ‘இந்த வெள்ளைக் காதணி ரொம்ப அழகாக இருக்கிறது. உங்க அம்மா வாங்கி கொடுத்தாங்களா?’ என்று கேட்டிருக்கிறாள். தப்பித் தவறி கூட ‘இ’க்கு அப்புறம் என்ன வரும் என்று கேட்டோ, இலையின் நிறம் பச்சை என்று சொல்லியோ நான் கேட்டதில்லை. அவள் புது ஷூவின் நிறத்தைத் தமிழில் சொல்லச் செய்து தான் நிறங்கள் பற்றி விளக்க முடியும் அவளுக்கு.
  நேகா எனக்கு ரொம்பவும் பிடித்தமான மாணவி. இன்னுமொரு குறும்புக்காரி. கண்களால் நடிக்கவும், அழுதோ, அழுவது போல் முகத்தை வைத்துக் கொண்டோ வேண்டியதை சாதிப்பது அவளின் கைவந்த கலை. படிப்பு என்பதை விட தமிழ்வகுப்பு அவளுக்கு பெரிய விளையாட்டுக் கூடம் தான். அந்த அழகான கண்களை உருட்டி அவள் கேட்கும்போதில் மறுக்க மனமின்றி பலநாள் தூக்கி வைத்துக் கொண்டு வகுப்பறையில் நின்றிருக்கிறேன். கடைசியாக பள்ளி இறுதி நாளில், தன் ரப்பர் பாண்டை எடுத்து வந்து தலையில் போட்டு விடச் சொன்ன அன்று, அந்தக் குட்டித் தலைக்குப் போட்டுவிடத் தெரியாமல் நான் முழிக்கவும், சிரித்துக் கொண்டே தன் அப்பாவிடம் ஓடிப் போனதை மறக்கவே முடியாது.
  நிரஞ்சன் ரொம்பவும் கவனம் கேட்கும் குழந்தை. ஐந்து நிமிடங்களுக்கு ஒருதரம் அவன் முகத்தைப் பார்த்துவிட வேண்டும். இல்லையெனில் குற்றம் சொல்லும் பாவனையிலும், அழும் விதமாகவும் அது சட்டென மாறிவிடும். நல்ல பதில் சொன்னதற்காக சாஷ்வத் ஒரு ஹைபை(hi5) வாங்கினான் என்றால் அடுத்த கேள்விக்கு நிரஞ்சன் டாண் என்று யாரும் சொல்லுமுன் பதில் சொல்லிவிடுவான். எழுந்து குதித்ததற்காக வர்ஷா டைம் அவுட் வாங்கினாள் என்றால், அந்தக் கவனம் தனக்கு கிடைக்கவில்லையே என்று தானும் குதித்து டைம் அவுட் வாங்கினால் தான் அவனுக்கு மனசு ஆறும். ரொம்பவும் அதிக கவனம் கேட்கும் குழந்தை என்றாலும் புத்திசாலிப்பையன்.

  ரித்விக்கும் வர்ஷாவும் ரொம்ப புத்திசாலி. ரித்விக்குக்கு கொஞ்சம் பூஞ்சை உடம்பு, வர்ஷா, வகுப்பின் மற்ற பிள்ளைகளை விட அதிகம் நல்ல தமிழ் பேசுபவள். ஆனால் இருவரும் சுலபமாக சமத்திலிருந்து குறும்புக்காரப் பிள்ளைகளாக மாறுவதில் வல்லவர்கள். யாராவது ஒரு சின்ன பொறியைக் கிளப்பிவிட்டால் போதும், டக்கென எழுந்து விழுந்து புரண்டு, அடுத்தவர்கள் மேல் குதித்து கலவரத்தை உண்டாக்குவது அவர்களுக்குக் கைவந்த கலை. ‘நல்ல பையன் யாரு??’ ‘நல்ல பொண்ணு தானே நீ?’ என்ற ஒற்றைக் கேள்வியில் சட்டென உட்கார்ந்து கவனிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
  சாஷ்வத், ப்ரீத்தி, தியா, சூர்யா இவர்கள் நால்வரும் பிள்ளைகள் தானா என்று சந்தேகம் ஏற்படுத்தும் விதமான அமைதியான குழந்தைகள். சாஷ்வத் எல்லா நாளும் வகுப்புக்கு வந்துவிடுவான். ரொம்பவும் நல்ல பையன். சொன்னதைக் கேட்டு, ரொம்பவும் குறும்பு செய்யாமல், எல்லா கேள்விகளுக்கும் அழகாக பதில் சொல்லி, அந்தந்த வாரப் பாடங்களைச் சரியாக கவனித்து, வகுப்பில் முதல் மாணவன் என்றால் மிகையில்லை.
  ப்ரீத்தியும் ரொம்ப அமைதி. உட்கார்ந்த இடத்தை விட்டு எழாமல் வகுப்பு கவனிக்கக் கூடியவள் அவள் மட்டும்தான். மேலே வந்து விழுந்து விளையாடும் பிள்ளைகளையும் தள்ளாமல், தான் நகர்ந்து உட்கார்ந்து படிக்கக் கூடியவள்.
  தியா பொதுவாக தனி உலகத்தில் இருப்பாள். சாந்தி, வர்ஷா என்று வேறு பெண்கள் அருகில் அமர்ந்தால் மட்டும் கொஞ்சம் கதை பேசுவதுண்டு. மற்றபடி அமைதிக் கடல் தான் அவளும். எண்கள் சொல்ல வைக்க வேண்டும் என்றால் கூட அவளின் உடையில் உள்ள பூக்களையோ, செருப்பில் உள்ள வண்ணத்துப் பூச்சிகளையோ தான் எண்ண வைக்க வேண்டும். ஆனாலும் அதுவும் ஒரு பஞ்சு மூளை தான்; என்ன, தன்னுடைய சின்ன உலகத்தை விட்டு வெளியே வந்து நம் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தான் நேரமெடுக்கும்.
  சூர்யா அடுத்த வித்தியாசமான பிள்ளை. சொல்வதைக் கேட்டு அப்படியே கிரகித்து, நினைவில் இருத்தி பதில் சொல்வது அவனுக்கு வழக்கம். ஆனால் யாராவது தொடங்கி வைத்தால் குதிப்பதில் அவனுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஜே பாடினால் கூட சேர்ந்து பாடுவான், வர்ஷா குதித்தால் கூட சேர்ந்து குதிப்பான். வருண் அறையின் விளக்கை அணைத்தால், தானும் செய்வான். கலவரத்தில் யாராவது கீழே தள்ளினால் கூட அழத்தெரியாத பிள்ளை அவன்.
  வாரம் ஒரு ஒன்றரை மணி நேரம் இது போன்ற ஒரு சூழ்நிலையில், இந்த அழகான பூக்களின் நடுவில் இருந்து குதிக்கும்போது குதித்து, பாடும்போது பாடி, ஒருங்கிணைத்து வேலைசெய்து என்று அது ஒரு நல்ல ஓய்வு நேரமாக இருந்தது இன்றுடன் முடிவடைகிறது. இனிமேல் இங்கே கோடை விடுமுறை. இன்னும் மூன்று மாதங்களுக்குப் பள்ளி இல்லை. இந்தப் பிள்ளைகளை இனி் பார்க்க செப்டம்பர் வரை பொறுக்க வேண்டும். அப்படிப் பார்த்தாலும் அவர்களுக்கு நான் இனி ‘ப்ரீஸ்கூல் ஒன் டீச்சர்’. அடுத்த வருடம் வேறு வகுப்பு, வேறு ஆசிரியர், புதிய பாடங்கள், வேறு புதுப் பாடல்கள்.
  ஆனால் செப்டம்பரில் வேறு புதிய மனிதர்கள் எனக்கும் கூடத் தான் அறிமுகமாவார்கள், என்றபோதிலும், இந்த வகுப்பு இப்போது கொஞ்ச நாட்களுக்கு இருக்காது என்பது பெரிய வருத்தம் தான். ‘மூஊஊஊன்று மாதங்களா கோடை விடுமுறை தருவார்கள்? அதிகமாக இல்லை?!’ என்று குழந்தை மாதிரி கேட்டுக் கொண்டு நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறேன். அதுவரை இந்த உயிரற்ற, ஓடாத கணினிப் பெட்டிகளைத் தட்டிக் கொண்டு காத்திருக்க வேண்டும்!
  பின்குறிப்பு: கலிபோர்னியா தமிழ் அகதமி மூலம் புலம் பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகளுக்கு தமிழ்மொழி சொல்லிக் கொடுக்கும் மகிழ்ச்சியான வேலையைப் பற்றித் தான் இந்த இடுகை. தென்றலில் அகதமி.
  Hi5 - இங்கே வளரும் பிள்ளைகளுக்கு இது ஒரு பாராட்டு போல. நம் கைகளை நீட்டினால் அவர்கள் தம் பிஞ்சு கைகளால் அதை அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்வார்கள்
  TimeOut: தண்டனை தான். நம்ம ஊரில் ‘கிளாஸுக்கு வெளியே நிறுத்திவிடுவேன்’ என்று சொல்வதை இங்கே வகுப்புக்கு உள்ளேயே தனியே சேர் போட்டு ஐந்து பத்து நிமிடம் உட்கார வைத்து தண்டிப்பது.

  Sunday, May 18, 2008

  Beyond the Gates - அந்தக் கதவுகளுக்கு அப்பால்

  எதேச்சசையாகத் தான் கையிலெடுத்த படம், ஆனால், தூக்கத்தை முழுமையாக மறக்கடித்துவிட்ட படம்- Beyond the Gates
  1994இல் ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. 1994இல் ருவாண்டாவில் ஈகோல் என்ற ஐரோப்பிய நாடுகளால் நடத்தப்பட்டப் பள்ளி ஒன்றைச் சுற்றிய படம்.

  கிறிஸ்டோபர் என்ற பாதிரியார் நடத்தும் இந்தப் பள்ளியின் வேலை செய்யும் ஜோ என்ற ஆசிரியர் தான் நாயகன்; ஒரு விதத்தில் ஜோவின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைத் தவிர அவனிடம் எந்த கதைநாயக குணத்தையும் திணிக்காமல் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
  ருவாண்டாவின் டூட்ஸி மற்றும் ஹூடு இனத்தின் இரு பிரிவாரும் படிக்கும் இந்தப் பள்ளியில் எல்லா விதமான பாடமும் எடுக்கும் ஒரு கிராமத்துப் பள்ளி ஆசிரியர் ஜோ. ஆசிரியருக்குப் பிடித்தமான மாணவி மரியா, ஒரு டூட்ஸி; ஓட்டப் பந்தைய வீராங்கனையும் கூட. நாடு அமைதியாக இருந்த போது எல்லாம் நன்றாக இருக்கிறது. கள்ளங்கபடமில்லாத ஆப்பிரிக்க மக்களுடன் ஜோ கலந்து பழகி மகிழ்ச்சியாக வாழ்கிறான். பாதிரியார் கிறிஸ்டோபர் அந்தப் பக்கத்து மக்களுக்கு மட்டுமின்றி ஜோவுக்கும் ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்கிறார்.
  மெல்ல நிலமை மாறுகிறது. ஹூட்டு இனத்தவரான ருவாண்ட ஜனாதிபதி சுட்டுக் கொல்லப்படுகிறார். உலக நாடுகள் சபையின் அமைதி காக்கும் படை ஈகோல் பள்ளியில் தனது மையத்தை அமைத்துக் கொள்கிறது. அமைதிப் படை தளபதி, ‘தன்னுடைய வேலை அமைதி காப்பது மட்டுமே அன்றி (இந்த விவகாரத்தில் தலையிட்டு) அமைதி உருவாக்குவது இல்லை’ என்பதில் தெளிவாக இருக்கிறான். இந்த நிலையில் ஹூட்டூ இனத்தவர்கள் டூட்ஸி இனத்தவர்களைத் தேடித் தேடிக் கொல்லும் இனப்படுகொலை மெல்ல தொடங்குகிறது. டூட்ஸி மக்கள் பாதுகாப்பு வேண்டி ஈகோல் பள்ளிக்கு வந்து சேருகிறார்கள். முதலில் ஜோவுடன் கூடவே இருக்கும் ஹூட்டூ இனத்தவனான பிரான்ஸுவா மக்கள் அதிகம் வர வர விடுவித்துக் கொண்டு வெளியேறிவிடுகிறான். ஹூட்டூக்களுக்கும் டூட்ஸிக்களுக்குமிடையில் இருக்கும் பகைமையும் பரஸ்பர நம்பிக்கையின்மையும், வெறுப்பும் ஜோவுக்கு அதிசயமாகவும் கொஞ்சம் கொஞ்சமாக முகத்தில் அறையும் நிஜமாகவும் இருக்கிறது.
  இந்நிலையில் பள்ளியில் சிக்கியிருக்கும் வெள்ளைக் காரர்களை மட்டும் அழைத்துப் போக பிரஞ்சு அரசாங்கத்தின் இராணுவ வண்டிகள் வருகின்றன. பிரான்ஸுவா, உயிர்காக்கும் மருந்து விற்கும் மருத்துவக் கடைக்காரன் என்று ‘நல்லவர்களாக’ அறியப்பட்ட ஹூட்டூக்கள் கூட கூட்டத்துடன் சேர்ந்து இனப் படுகொலை நிகழ்த்துவதைப் பார்த்து ஜோ திகைத்துப் போகிறான். இத்தனையும் பார்த்துக் கொண்டு ‘தற்காப்புக்காக மட்டுமே எங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த முடியும்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் அமைதிப்படைத் தளபதியோடு அவ்வப்போது பேசினாலும் தோல்வி மட்டுமே மிஞ்சுகிறது.
  கடைசியாக உலக நாடுகள் சபை, தனது அமைதிப்படையைத் திரும்ப அழைத்துக் கொள்ள முடிவெடுக்கும் போது, ஜோ மற்றும் கிறிஸ்டோபரால் எதுவும் செய்ய இயலாமல் போகிறது. உயிர்ப் பயம் மேலோங்க ஜோ மட்டும் அவர்களுடன் கிளம்புகிறான். கிறிஸ்டோபர் மிச்சம் இருக்கும் ஒரே ஒரு வண்டியில் குழந்தைகளை மட்டும் ஏற்றிக் கொண்டு அவர்களையும் மறைத்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியேறுகிறார். பள்ளியின் எல்லைக் கதவுகளுக்கு அப்பால் இதற்காகவே காத்திருந்த ஹூட்டூக் கொலைகாரக் கும்பல் கூச்சலோடு உள்ளிருப்பவர்களை ஒரேயடியாக வெட்டிச் சாய்க்க முன்னேறுகிறது.
  குழந்தைகளுடன் வண்டி ஓட்டிச் சென்ற கிறிஸ்டோபரை அவருடைய நண்பனான மருந்துக் கடைக்காரனே ஊர் எல்லையில் நிறுத்தி விசாரித்து பேச்சு வார்த்தை முற்றுகையில் கொன்று விடுகிறான். இந்தப் பேச்சு வார்த்தையின் தொடக்கத்தில் மெல்ல தப்பித்து வெளியேறும் மரியா மட்டும் தப்புகிறாள்; உயிருக்காக ஓடுகிறாள். தடகள வீராங்கனையாக பயிற்சி பெற்றது இப்போது உயிர்காக்க, ஐந்து வருடங்கள் கழித்து ஆசிரியர் ஜோவை எங்கெல்லாமோ தேடி கண்டுபிடிக்கிறாள்.
  ‘அன்னிக்கு எங்களை ஏன் விட்டுட்டு வந்தாய் ஜோ?’ என்று அவள் கேட்கவும்,
  ‘உயிர்ப்பயம் தான் காரணம்’ என்கிறான் ஜோ.
  ‘கடவுள் நமக்கு வாழக் கொடுத்திருக்கும் வாய்ப்பே ரொம்ப சின்னது. அதில் முடிந்தவரை அதிகம் அடுத்தவங்களுக்காக உதவி செய்யப் பார்க்கணும்’ என்று மரியா சொல்வதோடு படம் முடிகிறது.
  1994 இனப் படுகொலைகளில் எல்லாரையும், எல்லாவற்றையும் இழந்தும் உயிர்தப்பிய ஒரு சிலரின் உதவி கொண்டே இந்தப் படம் தயாரிக்கப் பட்டிருக்கிறது. குடும்பம் முழுவதையும் இழந்தவர்கள், தாயை, தந்தையை, கணவனை, பெற்ற பிள்ளையை இழந்தவர்கள், வன்புணரப்பட்டவர்கள் என்று இழப்புகளை மீறிச் சாதித்துக் காட்டிய திரைப்படக் குழுவினரையும் இறுதியில் அறிமுகப்படுத்துகிறார்கள்.
  இனம், மதம் போன்ற பிரிவினைகள் படுகொலை அளவுக்குப் போகும்போது அவற்றின் உள்ளார்ந்த வெறி, மனிதனின் நல்ல பக்கத்தை மொத்தமாக எடுத்துக் கொண்டு விடுகிறது. நேற்று பிறந்த குழந்தை வரை கையிலிருந்து பிடுங்கிக் கொல்லத் தோன்றுகிறது. கொலை நடந்த நாட்களில் உதவாத மற்ற தேசங்கள், அந்த நேரம் தனது அமைதிப் படைகளை திரும்ப அழைத்துக் கொண்ட உலகநாடுகள் சபை என்று எல்லாம் முடிந்த பின்னர் வந்து துக்கம் கேட்கும் வழக்கம் தனி மனிதருக்கு மட்டுமில்லை, அமைப்புகளுக்கும் அதே தான். முக்கியமாக உலக நாடுகள் சபை, அது ஒரு திட்டமிட்ட இனப் படுகொலை என்று உணர்ந்தும் கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்ததையும், ‘ருவாண்டாவில் நடந்ததை ஒரு இனப் படுகொலை என்ற பெயரிட்டு அழைக்க முடியாது. அது ஒரு உள் நாட்டுக் கலவரம் என்ற அளவில் தான் பார்க்க வேண்டும்’ என்று விளக்கம் வேறு சொல்வதையும் முதற்கருத்தாக எடுத்துக்காட்ட வந்த படம், இன்னும் மேலே போய், பிபிசி போன்ற உலக அளவில் பெயர்பெற்ற தொலைக்காட்சி நிருபர்கள் கூட ‘எங்கள் பள்ளியில் நிறைய வெள்ளையர்களும் உயிருக்காக ஒளிந்திருக்கிறார்கள்’ என்று சொன்ன பின்னர் தான் அதைப் படம் பிடிக்க வரவே தயாராக இருக்கிறார்கள் என்பதையும் காட்டி இருக்கிறார்கள்.
  ஒவ்வொரு காட்சியும் அழகாக, உண்மையை அப்படியே எடுத்திருப்பது போல இருக்கிறது. பிபிசி நிருபரை அழைத்து வரப் போய் அரிவாள் முனையில் நிறுத்தப்பட்டு பல நாள் பழகிய நண்பனையே கொலைகாரனாக பார்த்து அதிர்ந்துபோய் ஓடிவரும் ஜோ, இந்தக் களேபரத்தில் பிறந்த குழந்தையின் உடல்நலத்துக்காக உயிரைத் திரணமாக மதித்து வெளியே போய் ” ஒரு ஹூட்டூ இனக் குழந்தைக்கு’ என்று பொய் சொல்லி மருந்து வாங்கி வரும் பாதிரியார் கிறிஸ்தோபர், கடைசியாக ஜோவும் கிளம்பும்போது, ‘நீயும் போறியா ஜோ?’ என்று கேட்டுக் கலங்கவைக்கும் மரியா, தன் மகள் பற்றிய கவலையின்றி மற்ற குழந்தைகளை முதலில் காப்பாற்ற வண்டி ஏற்றிவிட்டு பின்னர் இடமிருந்தால் மரியாவுக்கும் என்று கேட்கும் அவளின் தந்தை..இதைப் படிப்பதை விட, படம் பார்த்தால் தான் அதன் தாக்கத்தை உணர முடியும்.
  விட்டுப் போன ஒரே கேள்வி என்னைப் பொறுத்தவரை, இத்தனை டூட்ஸிக்கள் பள்ளியில் மொத்தமாக கூடி நிற்கும்போது அவர்களால் சேர்ந்து சண்டை போடக் கூட முடியாதா என்ன? இப்படி அடிவாங்கிக் கொண்டே இருக்க எந்த மனித இனத்தாலும் முடியாது. ஏதாவது ஒரு சின்ன டூட்ஸி கூட்டமாவது திருப்பி அடிக்காமலா இருந்திருக்கும்? அந்தப் பகுதியை ஏன் இந்த இயக்குனர் சேர்க்கவே இல்லை?!
  ரூவாண்டாவின் சரித்திரம் பற்றி மேலும் படிக்கவேண்டும் என்ற ஆவலை இந்தப் படம் கிளப்பி விட்டிருக்கிறது. முடிந்தால் டூட்ஸிக்கள் திருப்பி அடித்தார்களா? ஏன் ஹூட்டுக்களுக்கு மட்டும் உலகநாடுகள் சபை பரிய வேண்டும்? ரூவாண்டாவின் இன்றைய நிலை என்ன? போன்ற கேள்விகளுக்குப் பதில் தேடி எடுக்க வேண்டும்.
  எப்படி இருந்தாலும், இன்னும் எத்தனை இனப்படுகொலைகள் இதே போல் உள் நாட்டுப் போர் என்று மூடி மறைத்துக் கொண்டு, எல்லாம் நடந்து முடிந்தபின்னர் ‘உண்மைக் கதை’ எடுத்துக் கொண்டிருக்கப் போகிறோமோ? என்ற கேள்வியை எழுப்பிய வகையின் இயக்குனர் வெற்றி பெற்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்…
  இயக்குனர்: மைக்கல் கான்டன் ஜோன்ஸ்( Michael Caton-Jones)
  கதையாசிரியர்: டேவின் வோல்ஸ்டன்க்ராப்ட் (David Wolstencroft)
  வருடம் : 2007

  Friday, May 16, 2008

  ராஜபாட்டை..

  The Man who founded California - The Life of Blessed Junipero Serra

  தற்காலிகமானாலும், வாழுமிடம் என்றவகையில், கலிபோர்னியாவின் வரலாற்றைப் புரிந்து கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தான் இந்தப் புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்தேன். அத்துடன், கார்மல் பள்ளத்தாக்குக்குச் சென்ற போது வழி தவறிப் போன ஒரு மிஷன் சர்ச்சும் ஆர்வத்துக்குத் தீனி போட காரணம்.
  கலிபோர்னியா- எனப்படும் எங்கள் தங்க மாநிலம் உண்மையில் முதன்முதலில் பிரிட்டனிடமிருந்து ‘சுதந்திரம் பெற்ற’ அமெரிக்காவில் இருக்கவில்லை. ஸ்பானியர்கள் கண்டுபிடித்த ‘கலி’யை அதன் செல்வச் செழிப்பைப் பார்த்து, பிற்பாடு மெக்ஸிகோவிடமிருந்து பணம் கொடுத்து வாங்கியவர்கள் அமெரிக்கர்கள். ஸ்பானிய மக்கள் வருவதற்கு முன்னரே இந்த ஊரில் அமெரிக்காவின் பூர்வ குடிகளான சிவப்பிந்தியர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
  பிரிட்டிஷ் இனத்தவரைப் போல் இல்லாமல், ஸ்பானிய மக்கள் இந்த இந்தியர்களைப் போரிட்டு கொல்லாமல், அவர்களுடன் கலந்து பழகி கூடியவரை அவர்களைப் பயன்படுத்தி தன்னுடைய செல்வத்தைப் பெருக்க முயன்றிருக்கிறார்கள். இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பனி போல கலியைப் பொறுத்தவரை, ஸ்பானியர்கள் முக்கியமாக வந்தது தம் மதபிரச்சாரம் செய்யவே. அப்படி மெக்ஸிகோ வந்தவர் தான் யூனிபரோ செர்ரா (ஸ்பானிய மொழியில் Jயை H போல படிக்கவேண்டுமாம், அதிலும் சொல்லின் முதலில் வரும்போது அது யூ ஆகிவிடுகிறது). மெக்ஸிகோ தொடங்கி மெல்ல மெல்ல மேலேறி வந்து முதலில் சான் டியாகோ, அப்புறம் மாண்டரி என்று வடக்கே வந்திருக்கிறார்.
  யூனிபரோ வந்த போது இந்த நாட்டுக் குடிமக்கள் உடை கூட அணியாத ஆதிவாசிகளாக இருந்தார்கள் என்கிறது புத்தகம். ஆனால் ஒவ்வொரு குழுவும் தனித்தனி மொழி பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். தந்தை யூனிபரோ அந்த மொழிகளைக் கற்றுத் தான் அவர்களுடன் நட்பாகி மதமாற்றத்துக்கும் மொழி மாற்றத்துக்கும் வழிகோலி இருக்கிறார். கற்கால ஆயுதங்களைப் பயன்படுத்தி வேட்டையாடி வாழ்ந்திருக்கிறார்கள். திருமணம் போன்ற சடங்குகள் கூட அவர்களுக்குள் இருந்திருக்கும் போல இருக்கிறது. அப்புறம் என்னத்தை நாகரிகம் சொல்லிக் கொடுக்க இந்த ஸ்பானிய கனவான்கள் தேவைப்பட்டார்கள் என்று புரியவில்லை.
  போகும் வழியெங்கும் Mission எனப்படும் வழிபாட்டு, வாழ்விடங்களை அமைத்தாராம் யூனிபரோ. கலிபோர்னிய கடலோரம் நூல்பிடித்தாற் போல் செல்லும் முக்கிய சாலை ‘எல் கமினோ ரியால்’ - El Camino Real. இந்த ஸ்பானிய சொல்லுக்குப் பொருள் - ராஜபாட்டை. எல் கமினோ ரியாலின் சாலையோரங்களில் நம்ம ஊர் பல்லவ மன்னர்கள் சத்திரங்கள் கட்டிய கணக்காய் மிஷன்கள் கட்டி இருக்கிறார்கள் ஸ்பானியர்கள். ஒவ்வொரு ஏரியாவாக பிரித்துக் கொண்டு கலியின் முழு நிலப்பரப்பையும் ஆண்டு கொண்டிருந்தன இந்த மிஷன்கள். விவசாயம் செய்யவும், படிக்கவும், பானை செய்யவும், ஆடை நெய்யவும் இன்னும் பல விசயங்கள் செய்யவும் இந்த ஊரின் இந்தியர்களுக்குச் சொல்லிக் கொடுத்து அவர்களை ‘நாகரிக குடிகளா’க்கியதில் இந்த மிஷன்களுக்குப் பெரும்பங்குண்டாம்.

  மொத்தம் 21 மிஷன்களைத் தொட்டுத் தான் அந்த ராஜபாட்டை ஓடுகிறது. நம்ம ஊர் பன்னிரண்டு லிங்கம் கணக்காக இந்த மிஷன்களையும் அதன் சர்ச்சுகளையும் புனித, மற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களாக எண்ணி வந்து பார்த்துச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஏராளம்.
  எல்லா வரலாறுகளைப் போலவும், மிஷன்களைக் காக்க வந்த ஸ்பானிய வீரர்கள் ‘நாகரிகமில்லாத’ இந்தியப் பழங்குடிப் பெண்களை வன்புணர்ந்த, அதைத் தடுக்க வந்த அவர்தம் கணவன்மார்களைக் கொன்ற இரத்தம் தோய்ந்த பக்கங்கள் மிஷன் வரலாற்றிலும் உண்டு. அத்தோடு, ஐரோப்பியர்களின் வருகையினால், அதிகம் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத செவ்விந்திய இனம் புது நோய்களுடன் போராட முடியாமல் மெல்ல அழிந்து பட்டது என்கிறார்கள்.
  மெக்ஸிகோ ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் பெற்று மதவேறுபாடற்ற ஆட்சியாக மலர்ந்த போது, இந்த மிஷன்களின் சொத்துக்கு ஆசைப்பட்டு அவற்றை அரசுடைமையாக்க முயற்சிகள் நடந்தது என்றும் சொல்கிறது புத்தகம். எல்லா மதங்களின் கோயில்களிலும், சொத்துப் பிரச்சனை தான் பெரிய பிரச்சனை! ராஜபாட்டையில் இருந்த கொண்டு அரசாங்கத்தை நம்பாவிட்டால் எப்படி?!
  இந்த மிஷன்களில் இந்தியர் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்து, மேலும் சில மிஷன்களைப் பார்த்து வர எண்ணி இருந்தேன். ஆனால் புத்தகம் படித்தபின்னால், உண்மையான இந்தியர்களின் வாழ்க்கையை அறிய மிஷன்களைத் தாண்டிய காடுகளுக்குத் தான் போக வேண்டும் என்று தோன்றிவிட்டது.

  Wednesday, April 23, 2008

  ஒரே ஒரு சந்திப்பு - 2 (முற்றும்)

  ஒரே ஒரு சந்திப்பு - 1
  ‘அம்மா! உன்னால இதுல ஏதும் செய்ய முடியயதா?’ உலர்ந்த துணிகளை மடித்துக் கொண்டிருந்த ரேவதி மகன் குரல் கேட்டு நிமிர்ந்தாள்.
  ‘எதுலடா? ஏன் டல்லா இருக்கே?’ ஒன்றுமே தெரியாதது போல் அவள் கேட்கவும சந்தரு நொந்து விட்டான்.
  ‘ம்… என் வாழ்க்கையைப் பத்தித் தான்… ‘
  ‘ஓ! சத்யா விசயமா? அப்பா சொல்ற பொண்ணையே கல்யாணம் பண்றேன்னு ஓபன் ஸ்டேட்மென்ட் விட்டது யாரூ? இப்ப என்னவோ என்னைக் கேட்கறே?!’
  ‘இப்படி ஆகும்னு யார் எதிர்பார்த்தா? அப்பாவுக்கு சத்யா பிடிக்கும்! ஆனா எனக்குப் பிடிக்காதுன்னு தெரியாதா? இந்த ரெண்டு அப்பாக்களும் சேர்ந்து எங்களை ஏன் இந்த பொருந்தாத திருமணத்துல சேர்க்க நினைக்கிறாங்கன்னு தான் புரியலை.. ‘
  ‘சந்துரு! அங்க தான் நீ தப்பு பண்றே! உன்னைத் தான் கல்யாணம் பண்ணுவேன்னு ஒத்த கால்ல நிற்கிறது சத்யாதான்! ரெண்டு வருஷ பிரிவே தாங்க முடியலை, சந்துருவோட போட்ட சண்டைகள் தான் இனிமை ன்னு சொன்னது அவ தான்!’
  ‘ ‘ சந்துரு நம்பிக்கையில்லாமல் அம்மாவைப் பார்த்தான்.
  ‘உண்மை தான்டா! சத்யா அம்மா பத்மாவே போன் பண்ணி என்கிட்ட ரிக்வஸ்ட் செய்தா. உங்கிட்ட சொல்லி சம்மதிக்க வைக்க சொன்னாளாம் சத்யா.’
  ‘இட் இஸ் வெரி பேட்! எந்த நம்பிக்கையில் சத்யா என்னை மணக்க நினைக்கிறா?!’ அதிர்ந்து போயிருந்தவன், உணர்வு பெற்றுக் கத்தினான்.
  ‘சந்துரு! ரொம்ப சத்தம் போடாதே! கொஞ்சம் யோசி! காலேஜ் முடிஞ்சு ரெண்டு வருசமாகுது, நீ அவளைச் சுத்தமா மறந்துட்டியா என்ன? இப்பவும் யாராவது பழைய நண்பர்களைப் பார்த்தா, உங்கிட்ட அவளைப் பத்திதான் கேட்கறாங்க! நீயும் உன் பழைய கோபதாபத்தை எல்லாம் மறந்து நல்லவிதமாகவே பதில் சொல்றே!’
  ‘என்னம்மா, நீயுமா? அவ நம்ம அப்பாவுக்கு நேர்கீழ வேலை செய்யறா! அந்த முறையில் என்கிட்ட கேட்கறாங்க, நானும் சொல்றேன். இதைப் போய்.. ‘
  ‘சரி, அதைவிடு! போன வாரம் யாரோ அந்த ரம்யா கேங்கோட படத்துக்குப் போனே, அதிசயமா பாதியில் திரும்பி வந்துட்டயேன்னு கேட்டா, ‘அந்தப்படத்துல என்னையும் சத்யாவும் மாதிரியே ரெண்டுபேர் சண்டைபோட்டுக்கறாங்க’ன்னு ரொம்ப ஃபீல் பண்ணி சொல்ற’
  ‘அனாவசியமா அவ ஞாபகம் வர்றதே பிடிக்காம திரும்பி வந்துட்டேன்மா’
  ‘இந்தக் கதையெல்லாம் வேண்டாம், பத்மா சொன்னதைப் பார்த்தா நீயும் சத்யாவும் ரொம்ப நாளா சந்திச்சி, பேசி வச்சி ப்ளான் பண்ணி வேலை செய்த மாதிரி தெரியுது!’
  ‘கரெக்ட்!’ என்றான் சந்துரு
  ‘என்ன, சரியா? ‘ ரேவதி நிமிர்ந்து பார்த்தாள்.
  ‘அவளை ஒரு முறை மீட் பண்ணி பேசினா, இதுக்கு ஒரு ்முடிவு கட்டிடுவேன்!’
  சந்துரு சொல்லி முடிக்கவே காத்திருந்தது போல் தொலைபேசி அலறியது.
  ‘நான் சொன்னது சரின்னு மணி அடிக்குது பாரு!’ என்று குதூகலித்தான் சந்துரு.
  ‘ம், ஆமாண்டா சொல்லி வச்சா மாதிரி அவ தான் உன் சத்யா தான் பண்றா’ காலர் ஐடியைப் பார்த்து சொல்லியபடியே எடுத்துப் பேசினாள் ரேவதி, ‘ஹலோ!’
  ‘ஆண்டி! நான் சத்யா பேசறேன். பாஸ் இல்லை?’
  ‘பாஸ் வேணுமா? அங்கிள் ்வேணுமா?’
  ‘இப்ப ஆபீஸ் நேரம் ஆரம்பிச்சிடுச்சே ஆண்டி, சும்மா இன்னிக்கு லீவு கேட்கலாம்னு போன் பண்ணிருக்கேன், அதனால இப்ப பாஸ் தான். சாயங்காலம் நேர்ல வரும்போது அங்கிளா மீட் பண்ணிக்கிறேன். ‘
  ‘இன்னிக்கு நேர்ல வந்து அங்கிளை பார்க்கணும்னா, முதல்ல உன் சந்துருவைச் சரிபண்ணு!’
  ‘ஏன் பந்தா பண்றானா? போன் கொடுங்க அவன்ட்ட!’
  அதுவரை ஒலிவாங்கியைப் பிடுங்க முயன்று கொண்டிருந்தவன் உடனுக்குடன் பேசத் தொடங்கினான். சில நொடிகளே பேசி இருப்பான், ரேவதி கவனிக்குமுன், ‘அம்மா! வழக்கமா நிற்கிற காலேஜ் பஸ் ஸ்டாப்பில் இருக்காளாம். பார்த்திட்டு வந்திடறேன்’ என்றபடி பைக் சாவியைச் சுற்றியபடியே கிளம்பி போனான் சந்துரு
  *********************************
  சரியாக அரை மணி கழிந்து மீண்டும் தொலைபேசி அலறி ரேவதியின் வேலையில் ்குறுக்கிட்டது.
  ‘ஹலோ!’ என்றாள் ரேவதி
  ‘ஹலோ! ரேவதியா?’
  ‘ஆமாம் பத்மா! என்ன விசயம்? ஏன் பதட்டமா இருக்கே?’
  ‘இல்ல, இப்பத் தான் காலேஜ்லேர்ந்து வரேன். வீடு பூட்டியிருந்தது. பொண்ணு எங்கன்னு கேட்டா, போன் பண்ணிட்டு எங்கயோ போனதா சொன்னாங்க பக்கத்து வீட்டில். அதான் ரீடயல் பண்ணேன்.. பார்த்தா உங்க வீட்டுக்குத் தான் பண்ணி இருக்கா… அங்க வந்திருக்காளா என்ன?’
  ‘இல்லை. சந்துருவும் சத்யாவும் எங்கயோ வெளியில் போயிருக்காங்க.. பேசப் போறேன்னு சொல்லிட்டிருந்தான் சத்யாகிட்ட..அதுக்குத் தான் நேரம் பார்த்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்.’
  ‘ஓ.. அட, அப்ப சம்பந்தியம்மாவா நீங்க இனிமே?! மரியாதை கொடுத்து தான் பேசணுமா?’ மகிழ்ச்சி கொந்தளிக்கக் கேட்டாள் பத்மா.
  ‘இல்லை பத்மா, எனக்கு நம்பிக்கையே இல்லை. சந்துருவுக்கு ஏனோ இந்த கல்யாண ஏற்பாடே பிடித்தம் இல்லைங்கிறான். சத்யா மனசை மாத்தியே தீருவேன்னு சொல்லிட்டுத் தான் இப்ப கிளம்பியே போயிருக்கான்.’
  ‘சத்யாவும் இதையே தான் சொல்லிகிட்டிருந்தா. ஒரு தரம் அவனை நேரில் ்பார்த்தா போதும், அவன் மனசை மாத்திட்டுத் தான் மறுவேலைன்னா… பார்க்கலாம், எல்லாம் சரியாகிடும் ரேவதி! கவலைப்படாதே…!’
  ******************************
  ‘சத்யா!’, கணினியில் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருந்த பரத்துக்கு, மகள் சோர்ந்து போய் வீட்டுக்குள் ்நுழைந்தது சங்கடமாக இருந்தது. ‘சந்துரு என்னம்மா சொன்னான்?’ என்றார் அவளை அருகில் அமர்த்திக் கொண்டே.
  ‘அவன் சொன்னதெல்லாம் சரிதான் டாடி! நான் தான் கடைசிவரை ஒப்புக்கலை’
  ‘அப்படி என்னம்மா சொன்னான்?’ பரத் மகளின் ்தலையை ஆதரவாகக் கோதினார்.
  ‘அவனுக்கும் எனக்கும் ஒத்தே வராது. கல்யாணம்னு பண்ணா அப்புறம் வீடு சந்தைக் கடை தான். ஒத்துப் போகாம என்ன வாழ்க்கை?! அவனோட ்பேசிகிட்டிருந்த வரை அவன் சொன்னது புரியலை. ஏதேதோ பேசி ஆர்க்யூ பண்ணிகிட்டே இருந்தேன். ஒரு மணி நேரம் போல இப்படி பிரயோசனமே இல்லாம பேசிட்டு அப்புறம் அவன் பிரண்டு மணி வந்தான்னு கிளம்பிப் போய்ட்டான். அதுக்கு அப்புறம் தனியா உட்கார்ந்து யோசிச்சப்ப தான் எனக்கும் சரின்னு தோணிச்சு..!’
  ‘……’
  ‘அவன் சொல்றது தான் சரி, பேர்வல் பார்ட்டில ்சொன்னது போல லெட்ஸ் பார்ட் ஆஸ் பிரண்ட்ஸ் தான் ஒத்து வரும்!’ சத்யா பேச்சினிடையில் குரல் உடைந்து தழுதழுக்கத் தொடங்கி இருந்தாள்.
  பரத் அவளைச் சமாதானப்படுத்தும்விதமாக ஏதும் சொல்லவில்லை. லேசாக ்தோளில் சாய்த்து, தட்டிக் கொடுத்தார்.
  ‘இப்ப என்ன செய்யறது?’ என்று அவரின் கண்கள் மட்டும் பத்மாவிடம் கேட்டன.
  ‘ஏதோ, சத்யா தெளிவானவரை மகிழ்ச்சி’ என்றாள் அவள், அதேபோல கண்ஜாடையில்.
  *********************************
  ‘அம்மா!…’ சந்துரு ஓடி வந்தான்.
  ‘என்னடா? பேசி முடிச்சாச்சா? இனிமே அப்பா பார்க்காத பொண்ணா தேடுவோமா?’
  ‘இல்லம்மா, அவ தான் முடிச்சிட்டா.. அவ சொல்றது சரி தான். ஆனா அவகிட்ட இனிமே தான் அதைச் சொல்லணும்..’
  ‘என்னடா சொல்ற?’
  ‘அவளோட ்பேசினபோது அவ சொன்னதெல்லாம் தப்பாவே தெரிஞ்சது. பதிலுக்குப் பதில் பேசிகிட்டே வந்தேன். கடைசியா எங்க பழைய கிளாஸ்மேட் மணி வந்தான். சத்யாவுக்கு பை சொல்லிட்டு காபி சாப்பிடப் போனோம். என்னடா இன்னும் பீச்லயே மீட் பண்றீங்க? எப்போ கல்யாணச் சாப்பாடு போட எண்ணம்னான்..
  ஏண்டா, உனக்கெல்லாம் வேற விதமா யோசிக்கவே முடியாதான்னேன்
  இல்லடா, காலேஜ்ல கூட நீ எப்பவும் சத்யா பத்தியே பேசிகிட்டிருப்ப.. அவளும் உங்கூட சண்டை போடவே க்ளாஸ் வராளோன்னு தோணும். அதான் கேட்டேன்.. ன்னான்
  அவனை ட்ராப் பண்ணிட்டு அவன் சொன்னதைப் பத்தி யோசிச்சிகிட்டே வந்தேன்.. நான் என்ன பேசினாலும், என்ன செஞ்சாலும், இந்த ரெண்டு வருசமும் அவ நினைப்பு என்னை விட்டு நகரவே இல்லல. இப்படி சொல்றேனே, இதைப் பத்தி அவ என்ன கமெண்ட் அடிச்சிருப்பா, இந்த ஹேர் ஸ்டைலைப் பார்த்தா நக்கல் அடிப்பாளோன்னு அவளைப் பத்தியே யோசிச்சிகிட்டிருந்திருக்கேன். அவளை மிஸ் பண்ணவே இல்லலயோன்னு கூட தோணுது, போற இடத்துல எல்லாம் இப்படி யோசிச்சி யோசிச்சே அவளையும் கூட்டிப் போயிருக்கேன். இப்ப மிஸ்பண்ணா எப்படி இருக்கும்னு தெரியலை.. ‘
  ‘எப்படியோ, அவளையே கல்யாணம் பண்றேங்கிற.. சரிதான் இனிமே உங்க சண்டையைத் தீர்த்து வைக்கிறதை என்னோட தினசரி கடமைல சேர்த்துக்கணுமாக்கும். பத்மாகிட்ட டியூசன் படிக்க எப்ப அவளுக்கு நேரம்னு கேட்கணும்….. ‘
  ‘இரும்மா, மொதல்ல சத்யாகிட்ட சொல்றேன். அப்புறமா அவங்க அம்மாவைக் கேட்கிறதெல்லாம் இருக்கட்டும்.. ‘ என்றபடி போனை நோக்கிப் போனான் சந்துரு.
  ***********************
  ‘ஹலோ!’
  ‘சத்யா?’
  ‘ஆமாம் சந்துரு.. அப்பாகிட்ட ்பேசணுமா?
  ‘இல்லை இல்லை. உங்கிட்ட பேசத் தான் ்கூப்பிட்டேன். ‘
  ‘ம்.. நானே உனக்குப் பேசணும்னு இருந்தேன்..’
  ‘இரு.. முதல்ல நானே சொல்லிடறேன். மணி போன பிறகு நான் நீ சொன்னதைப் பத்தி யோசிச்சேன் சத்யா..!’
  ‘ம்.. நானும் யோசிச்சேன் சந்துரு.. உன்னைப் போட்டு படுத்தி எடுத்ததுக்கு முதல்ல சாரி சொல்லணும்னு இருந்தேன். அவ்வளவு வாக்குவாதம் செய்திருக்கவே வேணாம். ‘
  ‘நானும் தான் சத்யா.. ஆனா நீ சொன்னதுல ஒரு பாயிண்ட் இ்ருக்கு தான். நீ இல்லாம வாழ முடியாதுன்னு இப்பத் தான் கண்டுபிடிச்சிருக்கேன்.. ‘
  ‘நோ சந்துரு! நம்ம சேர்ந்து வாழறது தான் கஷ்டம். நீ சொன்னது தான் சரி. ‘
  ‘தப்பு சத்யா! சண்டையே போடாம இருந்தா அது உறவு இல்லை.. உரிமை இருக்குங்கிற உணர்வால தானே சண்டையே வருது..’
  ‘இல்லை சந்துரு… நம்ம நேர்ல பார்த்து பேசுவோமா? இது சரியில்லை.. ‘
  ‘அம்மா! நானும் சந்துருவும், ஏன் நண்பர்களா பிரியணும்னு புரிய வச்சிட்டு வரேன்’ சத்யா துப்பட்டாவை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு கிளம்பிய ்போது பத்மாவுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை..
  (முற்றும்)

  Tuesday, March 11, 2008

  Code is a story…

  ஒரு திரைப்படத்தில், ஒரு புத்தகத்தில், ஒரு பயணத்தில் கட்டுண்டு போக வேண்டுமென்றால் என்னவெல்லாம் தேவைப்படுகிறது? எனக்குத் தேவை வெறும் கதை மட்டுமே. ஒவ்வொரு பாத்திரமும் அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற ஆர்வம். வேலை நேரம், 8:30 ரயில், தேர்வு, வீட்டினரின் தொலைபேசி அழைப்பு என்று எதுவும் கலைக்கமுடியாத ஆர்வத்தைக் கொடுக்கும் ஒரு கதையைப் பாதியில் விட்டுவிட்டு என்னால் வர முடிந்ததே இல்லை.
  இரண்டு வயது நிரம்பும் முன்னரே கதை சொல்லக் கற்றுக் கொடுத்தார் என் அத்தைப் பாட்டி. அவரிடம் கற்ற கதையை அவருக்கே கண், மூக்கு, வாய் வைத்துச் சொல்வது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்காக அப்போது இருந்தது. அதன்பின்னர் நான் சொன்ன அம்யா கதைகளைப் பற்றி என் அம்மா நிறைய சொல்லுவார். குழந்தையாக இருந்த காலத்தில், நான் குளிக்கவோ, சாப்பிடவோ, தூங்கவோ வேண்டுமென்றால் அப்பாவோ அம்மாவோ அருகிலமர்ந்து அம்யா கதை கேட்டால் தான் நடக்கும். கதை சொல்ல வேண்டாம்; கேட்க வேண்டும். கீழ்வீட்டிலிருந்து கொண்டு என்னை ‘மாடியாத்து பூர்ணா’ பொம்மையாக்கி விளையாடிய வீட்டுச் சொந்தக்காரர் மகள் ரம்யா தான் என் கதைகளின் நாயகி. நிஜத்தில் அவள் பெரியவளாய், நான் சின்னவளாய் இருந்த காலங்களை மாற்றி, அம்யா ஓடி வருவதும், விழுவதும், அவள் அம்மா திட்டுவதுமாய் எனக்குப் பிடித்தச் சித்திரத்தைத் தீட்டிக் காட்ட அந்தக் கதைகள் உதவின.
  கொஞ்சம் வளர்ந்த போதில் என் மாமா மகனுக்குக் கதை சொன்ன நாட்கள் எனக்கே நினைவில் இருக்கின்றன, அவன் மறந்துவிட்ட போதும். வழக்கமான குழந்தைகள் கதைகள் தான் முதலில் சொன்னவை. மெல்ல மெல்ல, அதில் சொந்தக் கதை கலக்கத் தொடங்கியது எப்போதென நினைவில்லை. கதை சொல்லும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, சொல்லும் கதை கேட்க ஆளில்லாமல் போன நாட்கள் அதிகரித்த பொழுதுகளில் தான் எழுதும் வழக்கம் தொடங்கியது. சின்னச் சின்ன கதைகள், பாதி உண்மையாக நடந்தவை, மீதி எப்படி நடந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்தவை.
  விடுமுறைக் காலப் பயணங்களில் அப்பாவின் பக்கத்தில் உட்கார்ந்து பயணிக்கவே ரொம்பவும் பிடிக்கும். அப்பா அதிகமாக, ‘இதைச் செய்யாதே!’, ‘அதைச் செய்யாதே!’ என்று ஒழுக்கம் கற்பிக்க மாட்டார் என்பதோடு, அழகான கதைகள் நிறைய சொல்லுவார். ஒரு இடத்தைப் பற்றிய பழங்கால வரலாற்றைக் கதை போல சொல்லும் இயல்பு அப்பாவுக்கு இருந்தது. அப்பா சொல்வது மட்டுமே வேதம், பாட புத்தகங்கள் கூட தப்பாகச் சொல்ல வாய்ப்பிருக்கிறது என்று நம்பி கேட்கும் மனமும் எனக்கிருந்தது. சமகால வரலாற்றையும் பத்திரிக்கைச் செய்திகளையும் இடையிடையே அம்மா சொல்வதும், அப்பா சொல்லும் சரித்திரத்தில் சில தவறுகளைச் சரிசெய்வதும் கூட அப்பாவின் கதைகளைக் குறைத்துக் காட்டும் முயற்சியாக எண்ணி மறுதலித்ததுண்டு.
  சரித்திரம் மட்டுமல்ல, நிகழ்காலத்திலேயே அருகில் இருக்கும் ஒன்றிரண்டு மனிதர்களைப் பாத்திரங்களாக்கி சின்னச் சின்ன நாடகங்களை அப்பா உருவாக்கிவிடுவார். எதிர் இருக்கையில் உட்கார்ந்து பயணிப்பவர்களைப் பார்த்தபடியே, “அந்த அம்மா அப்பத்திலேர்ந்து அவங்க வீட்டுக்காரரை எழுந்திருக்கச் சொல்றாங்க, பையனுக்கு ஜன்னல் சீட் வேணும்னு. ஆனா அவர் எழுந்துக்காம அடம் பண்ணிட்டிருக்கார்” என்று அவர்கள் பேசுவதை தூரத்திலிருந்து பார்த்தே ஊகமாய்ச் சொல்லும்போது, அது உண்மையாகத் தான் இருக்கவேண்டும் என்று நம்பி இருக்கிறேன். கொஞ்சம் பெரிய வயதில், ‘இப்படி வம்பு பேசாதப்பா!’ என்று சொன்னாலும், பயணங்களில் அடுத்தவர்களைக் கவனிக்கும் பழக்கம் அவர்களுக்கு உதவவும், நாம் உதவி கேட்கவும் கூட பெரிதாக பயன்பட்டிருக்கின்றன.
  இன்றைக்கும் கூட ஒரு நல்ல கதையுள்ள படமோ புத்தகமோ ஈர்க்குமளவுக்கு வேறேதும் மனம் மயக்குவதில்லை. “Exception எல்லாம் handle பண்ணிட்டீங்க சங்கீதா, raise பண்ணணும் அப்பத் தான் நம்ம program ஒழுங்கா வேலை செய்யும்” என்றதை விட, “இப்ப உங்க பொண்ணு ஏதாச்சும் விசமம் பண்ணா, அவளை நீங்க கண்டிக்கிறீங்க, அத்தோட விட்டுட்டீங்கன்னா, நீங்களே handle பண்ணின மாதிரி. ஆனா கொஞ்சம் பெரிய பிரச்சனையா இருந்தா, உங்க வீட்டுக்காரர் வந்ததும் அவர்ட்ட complaint பண்ணுவீங்க இல்லையா, அதுக்குப் பேரு தான் raise பண்ணுறது” என்று கதையாக சொல்லிக் கொடுக்கும்போது நிரலி கூட கதையாகி அழகாகி ஆர்வமூட்டுவதாகி புரிந்து விடுகிறது.
  கொஞ்ச நாட்களாக PL/SQL மொழியில் தான் என் கதைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.. அடடா, போனவாரம் எழுதிக் கொடுத்த கதையில் ஏதோ இலக்கியப் பிழையாம், பார்த்துவிட்டு வந்து மிச்சம் கதைக்கலாம்…
  பிகு: கடந்த சில நாட்களில் பார்த்த, படித்த The Dreamer, Good Will Hunting மற்றும் பா.ராவின் மெல்லினம் பற்றி எழுதத் தான் ஆரம்பித்தேன். ஆனால் என்னுடைய கதைகள் எப்போதுமே இலக்குகளின் எல்லைக்குள் நின்று நடப்பவை இல்லை என்பதால் எங்கேயோ போய், எப்படியோ முடிந்துவிட்டன..

  Saturday, February 16, 2008

  ஒரே ஒரு சந்திப்பு

  “அப்பா! உங்க கிட்ட ஒரு விசயம் பேசணுமே!’
  பரத் கண்களில் ஆச்சரியம் மின்ன திரும்பிப் பார்த்தார். அவரின் ஒரே செல்ல மகள் சத்யா அவரிடம் பேசவே அனுமதி கேட்கிறாள்!
  ‘சொல்லுடா!’ என்றார் அவள் தோளைத் தொட்டு அமர வைத்துக் கொண்டே!
  ‘வந்து… வந்துப்பா… நீங்க தப்பா நினைக்க மாட்டீங்களே?’
  பரத் வெடித்துச் சிரித்தார். ‘என் செல்ல பொண்ணு நீ, உன்னை என்னைக்காவது தப்பா நினைச்சிருக்கேனா? நான் உன் நண்பன்டா! என் சத்யாவின் முதல் பாய் பிரண்ட் நான் தானே?!’ என்றபடி அவளின் தலையில் மெல்ல தட்டினார்..
  ‘ஆமாம்பா.. அதனால் தான் என் இரண்டாவது பாய்பிரண்ட் யாரா இருக்கணும்னு, உங்ககிட்டயே சொல்லிடலாம்னு…’ உடனே முடிக்கக் கூடியவள்தான், ஆனால் சத்யாவுக்குக் கூட அப்போது வெட்கம் வந்துவிட்டது போலும்.
  படபடவென்று எப்போதும் சிறகடித்துக் கொண்டிருக்கும் தன் மகள் முதன்முறையாக தயங்கி மயங்கி பேசுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டே, ‘இன்டரெஸ்டிங்! என் கஷ்டத்தைக் குறைச்சிட்டாய்! யார் அந்த அதிர்ஷ்டசாலி?!’ என்றார் பரத்.
  ‘உங்க பார்ட்னர் சிவசாமி அங்கிள் மகன் சந்துரு!’ எப்படியோ சொல்லி முடித்துவிட்டாள் சத்யா.
  ‘சந்துருவா?! ஆறாவதிலிருந்து உன்கூட படிச்சு தினம் தினம் ரெண்டு சண்டையாவது போடுவானே அந்த சந்துருவா?’
  ‘ஆமாம்பா! படிக்கிற காலத்தில், அவனோட சும்மா சண்டை போட்டுகிட்டே இருந்தேன்! இப்போ நினைச்சா ஆச்சரியமா இருக்கு! ரெண்டு வருசம் அவன் கூட பேசாம பார்க்காம இருந்த இந்த டைம்ல தான் அவன் அருமை புரியுது. அவனையே எனக்கு.. ‘
  ‘நீ கேட்டு நான் மறுத்திருக்கேனா செல்லம்மா! அவன் தான் நம்ம மாப்பிள்ளை போதுமா?’
  *****************
  ‘என்னது? சந்துருவா? ரேவதி பையனையா சொல்றா? உங்க பொண்ணு சீரியசாத் தான் சொல்றாளா? இல்லை உங்க காதுல ஏதாச்சும் கோளாறா?’ பரத்தின் மனைவி பத்மா அதிசயப்பட்டாள்.
  ‘அவனேதாம்மா! இவ முகத்தைப் பார்த்தா பொய்யாத் தெரியலை. தவிரவும் காதல் கண்ணில் ்தெரியும் இல்லையா?’ கண்சிமிட்டிக் கேட்டார் பரத்
  ‘கண்ணுல எல்லாம் தெரியும் தான், ஆனா நீங்க கண்ணாடி போட்டு பார்த்தீங்களா?’ பத்மா சீண்டினாள்.
  ‘ம்ஹூம்! எம் பொண்ணைப் பத்தி எனக்குத் தெரியாதா?’ முகத்தைத் திருப்பிக் கொண்டார் பரத்.
  ‘சரி சரி! அவ ஒண்ணும் உங்களுக்கு மட்டும் பொண்ணில்லை.. எனக்கும் தான். நான் பார்த்தவரை காலேஜில் எலியும் பூனையுமா அடிச்சிக்குவாங்க! அந்தப் பையன் ஒத்துகிட்டானா என்ன?’
  ‘இனிமே தான் கேட்கணும். யாரா இருந்தாலும் என் பொண்ணை வேண்டாம்னு சொல்லிடுவானா?’
  ‘அதெல்லாம் சந்துரு விசயத்தில் சரிபடாது! அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்ட அழகைக் கண்ணால பார்த்திருந்தா, இப்படிச் சொல்ல மாட்டீங்க!’
  ‘இங்க பாரு பத்மா, நம்ப பொண்ணு ஆசைப்பட்டுட்டா! அதைக் கூட நிறைவேத்தாத, நம்ம எதுக்கு அப்பா, அம்மா? உனக்கும் சிவா வொய்ப் ரேவதி அண்ணி ரொம்ப பிரண்டு தானே, அவங்க கிட்ட பேசி பையனைச் சம்மதிக்க வைக்கச் சொல்லு. அதைத் தான் உன்கிட்ட சொல்ல வந்தேன்.’
  ‘முயற்சி பண்றேன். ஏனோ எனக்குஅவ்வளவு நம்பிக்கை இல்லை.’ என்று பேச்சை முடித்தாள் பத்மா
  ***************************
  ‘அப்பா கிட்ட சொன்னதெல்லாம் உண்மைதானா?’ உறுதிப்படுத்திக் கொள்ள மகளிடமும் வந்தாள்.
  ‘எது?ய என்றவள் சட்டென புரிந்து கொண்டு, கணனியிலிருந்து தலைதிருப்பிச் சொன்னாள் - ‘ஓ! சந்துரு விசயமா! ஆமாம் அது உண்மை தான். ஏம்மா இப்படி சந்தேகம் அதில்? ‘
  ‘இல்லைம்மா, நீங்க ரெண்டுபேரும் கடைசியா மூணு வருசம் சண்டை போட்ட அழகை உங்க கிளாஸ் ப்ரொபஸரா நான் கண்ணால் பார்த்தேன். சின்னச் சின்ன விசயத்திலேர்ந்து பெரிய விசயங்கள் வரை யோசிச்சு பார்த்தா நீங்க ரெண்டு பேரும் சண்டை போடாத ஒரு ஐட்டமே காலேஜில் இ்ல்லை.. அவனைப் போய்..’
  சத்யாவிடமிருந்து பதிலே இல்லை. யோசிக்கிறாள் போலும்.
  ”ஃபேர்வெல் பார்ட்டியில் கூட, மத்தவங்க எல்லாம் உருக்கமா ஒருத்தரை ஒருத்தர் பிரியணுமேன்னு ஃபீல் பண்ணா நீ என்ன செஞ்சேன்னு நினைவிருக்கா?’
  ‘நல்லா நினைவிருக்கும்மா! வேணும்னே சந்துருகிட்ட நீ எங்க வேலைக்குப் போவேன்னு இப்பவே சொல்லிடு, அங்கயே நானும் வந்து சேராம இருக்கேன்னேன்…’
  ‘அதுக்கு அவனும் நல்லா திருப்பிக் கொடுத்தான் இல்ல?’
  ‘ஏதோ இல்லைம்மா, ‘தாயே, உங்க அப்பாகிட்ட தான் அசிஸ்டண்டா சேரப் போறேன், அங்க மட்டும் வந்துடாதே!’ன்னான்’ சத்யா இந்தப் பதிலை ரசித்தாள் போலும், இயல்பாகச் சிரித்தாள்.
  ‘இந்த எல்லாத்தையும் எதுக்கு இப்ப நினைவுப்படுத்தினேன்னா, அவ்வளவு தூரம் வெறுக்கப் பேசினவன், உன்னை மணக்கச் சம்மதிப்பானா?’
  ‘ ‘
  சத்யாவுக்கு யோசிக்க நேரம் கொடுத்துவிட்டு பத்மா வேறு வேலையைக் கவனிக்கச் சென்றாள்.
  சில நிமிட யோசனைக்குப் பின் சத்யா தாய் இருந்த இடம் தேடி வந்து சொன்னாள், ‘அம்மா! அவன் ஒருவேளை ஒப்புக்கலைன்னா, ஒரு தரம், ஒரே ஒரு தரம் நான் அவனைச் சந்திக்க ஏற்பாடு பண்ணு! அவனைத் திருப்ப முடியும்னு நான் நம்பறேன்’ திடமாகச் சொன்னாள் சத்யா.
  (தொடரும்)