Showing posts with label பாகச. Show all posts
Showing posts with label பாகச. Show all posts

Friday, March 16, 2007

அப்படி எல்லாம் விட்ருவோமா?!

இதோ, அதோ என்று அந்தத் துயர சம்பவம் நடந்து இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. அதாங்க, நான் வலைபதியத் தொடங்கிய சம்பவம் தான் \:D/

வெட்டியாக, ரொம்ப வெட்டியாக, ஒரு வேலையும் இல்லாமல், அலுவலகத்தில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு சமயம், சென்னை நெட்வொர்க்கில் கதை படித்துக் கொண்டிருந்தவள், அப்படியே கைதவறி கைப்புள்ளயின் பதிவு உரலைத் தட்டிவிட்ட பொழுது தொடங்கியது இந்தக் கிறுக்கு. அந்தச் சமயம் கைப்ஸ் தன் தம்பியுடன் அடித்த கூத்துகளை விலாவாரியாக எழுதிக் கொண்டிருந்தார். இயல்பாகவே நகைச்சுவை மிகவும் ரசிக்கும் நான் அதைப் படித்து, அதன்பின் அவருடைய அடுத்தடுத்த பதிவுகளுக்குள் விழுந்து எழுந்து, நாலு பதிவு விளையாட்டு உரலைக் கண்டுபிடித்தேன். விளையாட்டு கனஜோராக நடந்து கொண்டிருந்த அந்தச் சமயத்தில் ஒவ்வொருவரும் அடுத்தவரின் லிங்குகளைக் கொடுத்துக் கொண்டே வந்ததால், ஒவ்வொரு பதிவராக பிடித்துப் படித்துக் கொண்டே வர எனக்கும் ஏதுவாகிற்று.

எப்படியோ துளசிதளத்தில் தரையிறங்கிய போது, அக்கா அப்போதைய இந்தியச் சுற்றுபயணம் பற்றி பதிவெழுதிக் கொண்டிருந்தார். அதைப் படித்துவிட்டு, சரி, 'துளசி அக்கா, சென்னை வந்தால் நாம் கூட அவரைப் பார்க்கலாமே!' என்று நான் கேட்க, அவை 'இரண்டு மாதம் முந்தைய பயண விவரம்' என்று அவர் சொல்ல, நல்ல பல்பு அது :-) [அப்பா! இந்த சொல்லையெல்லாம் பயன்படுத்தி எத்தனை நாளாச்சு! பதிவிலக்கியத்தில், இதை மட்டும் எப்படி விட்டோம்?! ]

ஒவ்வொன்றாக தட்டி கடைசியாக பிளாக்கர் கணக்கு, தமிழில் எழுதுவது என்று எல்லாவற்றையும் பின்னூட்டங்கள் மூலமாக மட்டுமே கற்றேன். பிளாக்கரில் கணக்கு தொடங்கியாச்சு. வீட்டில் இருக்கும் பழைய கதைகளைப் பதிவிடலாம் என்று முடிவும் செய்தாச்சு. பு(ஆ)னைப்பெயர் கூட தேர்ந்தாச்சு. [பொன்ஸ் என்ற பெயர் வைத்த கதை தனிக்கதை.ஆரம்பத்தில் என்னுடைய பெயரை நெருங்கிய தோழியொருத்தி சுருக்கி அழைப்பது போல் poons என்று தான் வைத்திருந்தேன். அதைத் தமிழில் படித்த பினாத்தலார் பொன்ஸ் என்று மொழிபெயர்த்ததில், ரொம்ப பிடித்துப் போய் அப்படியே மாற்றியாச்சு. நடுவில் என் பாட்டி பெயரும் பொன்னம்மாவானதால், இந்தப் பெயரே விருப்பமானதாகிவிட்டது. நன்றி பினாத்தலார் ]. ஆனால், இத்தனை செய்தபின்னர் எழுதுவதில் ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது.

என் முதல் பதிவை இப்போது படித்தாலும் எனக்கே ஆச்சரியமாக இருக்கும். ரொம்ப ரொம்ப கொடுமையான பதிவு அது. அதை எழுதி முடித்து பப்ளிஷ் தட்டுவதா வேண்டாமா என்று வெகுநேரம் யோசித்து, ரொம்ப நேரம் கழித்து பிரசுரித்துவிட்டு ரியாக்ஷன்களுக்குப் பயந்து (ஏன் பயந்தேன் என்று இப்போதும் ஆச்சரியமாக இருக்கு), அப்படியே ஆறு மணி பஸ் பிடித்து வீட்டுக்கு ஓடி விட்டேன். மறுநாள் வரும் வழியெல்லாம் யோசித்துக் கொண்டே வந்தேன். "இதெல்லாம் தேவையா உனக்கு? எழுதுறவங்க எல்லாம் பெரியாளுங்க போலிருக்கு.. உனக்கெல்லாம் சரிபட்டு வருமா என்ன? பேசாம போய் அந்தப் பதிவை அழிச்சிடலாம்" என்று நினைத்து நான் வரவும், எனக்கு ரொம்ப பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. முத்து(தமிழினி), ராசா, ஜீவா, கீதாக்கா, கார்த்திக் ஜெயந்த் என்று நிறைய பேர் வந்து பின்னூட்டம் போட்டிருந்தார்கள்.. இவங்க பின்னூட்டங்கள் இல்லை என்றால், நீங்கள் ஒருவேளை இந்த அறுவையிலிருந்து தப்பியிருந்திருக்கலாம்.. ஏதோ உங்க கெட்ட காலம் ;))

ஆரம்பம் தான் அப்படி பயந்து பயந்து.. ஆனால் பாருங்க, அடுத்தடுத்த நாட்கள், கன்னாபின்னாவென்று கண்டதையும் எழுதியதில், மார்ச் மாதமே ஒன்பது பதிவுகள்! ஏப்ரல், மே - இல் ஏதோ கொஞ்சம் படிக்கிற வேலைகள் இருந்ததால் குறைந்தது, மீண்டும் ஜுன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவு என்று விடுமுறை நாட்கள் தவிர்த்த மற்ற நேரங்கள் ரொம்ப பிஸியாக இருந்தது பிளாக்கர் :)

பதிவுலகத்தில் என் முதல் நண்பர் என்றால் பாலபாரதியைத் தான் சொல்ல வேண்டும். "இப்படிப் பயந்து பயந்து எழுதுதே இந்தப் பொண்ணு" என்று நினைத்தோ என்னவோ, "அடிக்கடி டெம்ப்ளேட் மாத்தாதீங்க", "கவிதை எழுதாதீங்களேன் ப்ளீஸ்!" என்று ஏதேதோ யோசனை சொல்லிக் கொண்டிருந்தார் மனிதர். நம்மதான் எதையுமே சொன்னால் கேட்கிற சாதி இல்லையே.. யார் என்ன சொன்னாலும் விடாது கவுஜ என்ன, டெம்ப்ளேட் என்ன என்று எதையெதையோ செய்து கொண்டே இருந்தேன். பதிவுகளில் முதலில் போனில் பேசியதும் பாலாவிடம் தான். எனக்கு யோசனை சொன்ன நேரம், கை உடைத்துக் கொண்டு வீட்டில் இருந்ததாக கேள்விப்பட்டபோது பாவம் என்று நான் போன் போட, 'அவர் பேச, நான் கேட்க; நான் கேட்க, அவர் பேச' இப்படியாக எங்கள் முதல் போன் பேச்சு வார்த்தை ஒரு பக்கச் சார்பாகவே அமைந்தது. இப்ப வரைக்கும் பாலாவிடம் போன் போட்டு 'ஹலோ' தவிர ஒரு வார்த்தை நீங்கள் அதிகமாக பேசிவிட்டால், நீங்கள் பெரியாள் தான் :)). யோசித்துப் பார்க்கும் போது, பா.க.சவின் விதை அப்போதே விழுந்துவிட்டதாகக் காண்கிறது. அது டார்மெண்டாக இருந்து கொஞ்சம் வளர்ந்து மூன்று இலை விடத் தான் ஆறுமாதங்கள் ஆகிவிட்டன (*)[அதுக்கப்புறம் அசுர வளர்ச்சிதான் :-j ]

அடுத்து குறிப்பிடத்தகுந்த வலைநண்பர் சிபி. கைப்புவைக் கலாய்க்க அப்போதெல்லாம் பார்த்திபன் என்ற வலைஞர் சும்மாவேனும் கலாய்த்துக் கொண்டிருப்பார். ஒரு முறை வ.வாசங்கத்தின் தங்கத் தலைவர் கைப்பு அண்ணனுக்காக, பார்த்திபன் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு வெளியே வந்தால், சிபியிடமிருந்து ஒரு மடல். "நல்லா சொல்லி இருக்கீங்க பார்த்திபனுக்கு" என்று.. நான் எதார்த்தமாக, "நீங்க தான் பார்த்திபனா?" என்றேன். "அட! எப்படிக் கண்டுபிடிச்சீங்க?" என்று அவர் கேட்க, "அட, நெசமாவே நீங்கதானா?!", "நானாத் தான் உளறிட்டனா?" என்று ஆரம்பித்தது எங்களின் வருத்தப்படாத நட்பு! அப்படியே வருத்தபடாத வாலிபர் சங்கம், கலாய்த்தல் திணை, பாலபாரதியைக் கலாய்ப்போர் சங்கம் என்று நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வீட்டுக்குள் சிபியின் மனைவியைக் கலாய்ப்போர் சங்கத்திலும் எனக்கு கொஞ்சமே கொஞ்சம் இடம் கொடுத்திருக்கிறார் மனிதர் :)

அலுவலக வேலைக்காக மதுரை செல்ல நேர்ந்தபோது, தருமி என்ற வலைபதிவர் பெயரை மட்டும் வைத்து அவருக்கு ஒரு மடல் தட்டி நாங்கள் செல்ல இருந்த கல்லூரியிலிருந்து கோயில் செல்ல வழிகேட்டுக் கொண்டிருந்தேன். வழி, ஆட்டோ சார்ஜ் முதற்கொண்டு சொன்னவர், தன்னுடைய செல்பேசி எண்ணையும் சேர்த்துக் கொடுத்திருந்தார். அப்போது ஜோசியம் பற்றி ஏதோ தொடர் எழுதிக் கொண்டிருந்த தருமியை, நான் பின்னூட்டங்களில் மட்டுமே படித்திருந்தேன். அதனால், போன் போட்டு, "நான் உங்க பதிவு படிச்சதே இல்லை" என்று சொல்வது கொஞ்சம் ஓவராக இருக்கும் என்று நினைத்து, அமைதியாக மதுரை போய், நல்ல பிள்ளையாய் இன்டர்வியூ எல்லாம் செய்து விட்டு திரும்பி வந்துவிட்டேன். அதன்பின்னர் கொஞ்ச நாள் கழிந்து, ஜோசியத் தொடர் முடிந்து என்னை மாதிரி பாமரர்களும் படிப்பது போல் தருமி ஏதோ எழுதப் போக, பின்னூட்டங்கள் மூலம் நட்பாகி, அப்படியே ஒரு ஆறு மாதம் கழித்துத் தன் பழைய மடல்களைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போது, "நீங்க தானா அந்த மதுரைக்கு வழிகேட்டு வந்த ராஜாராம்?" என்றார்.. அந்தச் சமயத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்த மெயில் ஐடி அப்பா பெயரில் மட்டுமே இருக்கும், அதுவும் முழுதாக இருக்காது, அதனால் பேராசிரியர் குழம்பிப் போய்விட்டார் போலும் :)

அமெரிக்கா போய்ச் சேர்ந்து ஒரு வாரத்திற்குள் திடீரென்று ஒரு மடல், யாரோ ஒரு கந்தசாமியிடமிருந்து. "எங்கூருக்கு வந்திருக்கீங்களா பொன்ஸ்? ஏதும் உதவி தேவைன்னா சொல்லுங்க.. " என்று.. யாருப்பா இது, என்று யோசித்தபடியே அவரது ப்ரோபைலைப் பார்த்தால், ஏ! யப்பா.. எத்தனை பதிவுகள்..இத்தனையும் பார்த்து இது இன்னார் என்று நான் புரிந்து கொள்ளவே நாளாகும் என்று நினைத்து சாதாரணமாக ஒரு பதில் அனுப்பி வைத்தேன். அதிலும், கனடாவில் உட்கார்ந்து கொண்டு ஒருவர், "எங்கூருக்கு வந்திருக்கீங்களா?" என்று என்னைக் கேட்டால், என்னவென்று நினைப்பது? வெட்டியாக வலைமேய்ந்து கொண்டிருந்ததால், அப்படியே கொஞ்சம் பிளாஷ்பேக் பதிவுகளாகப் படித்து, இந்த மதி கந்தசாமி புங்குடு தீவில் புட்பால் ஆடியவர் என்பதையும், ஆங்கிலப் படங்களுக்கு அழகாக விமர்சனம் எழுதுபவர் என்பதையும் கண்டு கொண்டேன். அப்படியே தேடிக் கொண்டே போனால், ஏதோ ஒரு பதிவில் இளவஞ்சி, 'மதியக்கா' என்று விளித்து வாங்கிக் கட்டியதைப் படித்த பொழுது தான் புரிந்தது, "அட, இது அண்ணாச்சி இல்ல, யக்கோவ்!" என்று :-". மதி கலாய்ப்போர் சங்கத்தில் சேர தொடர்பு கொள்ளவும்: பொன்ஸ் பக்கங்கள் :)

யார் இன்னார் என்று தெரியாமலே பேசத் தொடங்கி, எங்கோ எப்போதோ என்னுடன் படித்தவர்கள், வேலை பார்த்தவர்களின் நண்பர்கள் என்று சுற்றிச் சுற்றிக் கண்டுபிடித்திருக்கிறேன் இந்த ஒருவருடத்தில். என்ன, என்னுடைய நேரடி நண்பர்கள் யாரும் இன்னும் தமிழ் எழுத வரவில்லை. ஏன், தமிழை இலவச இணையத்தில் கொடுத்தால் கூட படிக்க மறுக்கிறார்கள்.. விரட்டி விரட்டித் தான் படிக்க வைக்க வேண்டியிருக்கிறது.. அந்தவகையில் கொஞ்சம் வருத்தம் தான் :( பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், பண்பலைகள் என்று எல்லாவற்றிற்கும் மாற்று ஊடகமாக வளர்ந்து நிற்கும் வலைப்பதிவுகள், புது வரவுகளுக்கு மிகவும் வசதியான களமாக இருக்கிறது. கண்டுபிடித்துப் படிப்பவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது கொஞ்சம் வருத்தம். அதிலும் இணைய வசதி அதிகம் உள்ள சென்னை போன்ற பெருநகரங்களில் படித்து வளர்ந்தவர்கள், தமிழை ஒரு பாடமாகக் கூட படித்தறியாத காரணத்தால், பதிவுகள் போன்ற ஊடகங்களுக்கு வந்தாலும் ஆங்கிலத்தை அல்லது, தமிங்கிலத்தை விரும்புகிறார்கள். தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விருப்பமில்லாத சிலரும் எழுதத் தயங்குகிறார்கள் என்பது இன்னுமொரு தனிக் கதை.

ஒரே வருடத்தில் நான் வெற்றிகரமாகச் சந்தித்து பயமுறுத்திவிட்ட பதிவர்களைப் பட்டியலிட எண்ணியிருந்தேன். ஆனால், நடந்துவிட்ட மூன்று நான்கு சென்னை சந்திப்புகளில் பார்த்தவர்களையும், பதிவு என்பது ஒரு அறிமுகக் களமாக இருந்தாலும், குடும்ப நண்பர்களாகவே பழகிவிட்ட பதிவு நட்புகளையும் எந்தப் பட்டியலில் சேர்ப்பது என்று புரியாததால், வித்தியாசமான முன்னுரையுடன் அறிமுகமான நண்பர்களைப் பற்றி மட்டுமே இந்தப் பதிவில் எழுதி இருக்கிறேன்.

அடுத்த வருடமாவது ஏதாச்சும் உருப்படியா எழுத முடியுமான்னு பார்க்கிறேன்..




என்ன பார்க்குறீங்க? ஆமாமாம்..
தொல்லை தொடர்கிறது <:-P

Friday, December 01, 2006

பாலபாரதியின் செல்போன்

பகுதி ஒன்று இரண்டு மூன்று நான்கு

"இத்தோ.. பொன்ஸக்கா இங்கக் கீது சார்" கணினித் திரைக்குள் தலையை விட்டுக் கொண்டு கிட்டத்தட்ட அதன் ஒரு பாகமாகவே ஆகிவிட்ட என்னைக் கலைத்தது அந்தச் சத்தம். எங்கேயோ கேட்ட குரல். நிமிர்ந்து பார்த்தேன். அட நம்ம கோயிந்து.

"வா கோயிந்து.. எத்தனை நாளாச்சு உன்னைப் பார்த்து.. எங்கே போயிருந்த?"

"நான் எங்கப் போனேன்னு மெய்யாலுமே உனக்குத் தெரியாது? உன் பதிவைத் தொறந்து பார்த்தாலே ஏதோ மும்மாரி சோமாறின்னு சொல்லுதே! "

"கோயிந்து, நீ எங்கிருந்து படிக்கிறேன்னு அது சொல்லும். ஆனா உனக்கு மட்டும் தான் சொல்லும், எனக்குச் சொல்லாது. சரியா?"

"அதுல தான் எனக்கும் சாருக்கும் ஒரு பெரிய டவுட்டு"

"இன்னாபா டவுட்டு? ச்சே.. என்ன சந்தேகம்?" என்றேன்.

"இப்படிப் பதிவத் தொறக்கும்போதே எங்கேர்ந்து பார்க்குறான்னு கண்டுகிற தில்லாலங்கடி வேலைய எப்படிச் செய்யறான்? அதக் கேட்கத் தான் வந்துகினோம் நானும் சாரும்."

"உங்க சார் வேற வந்திருக்காரா? எங்க காணோமே.."

"அது ஒன்னியும் இல்ல.. சார் தன்னோட செல்போன எங்கயோ வச்சிட்டாராம்.. தேடிப் பார்த்துகிட்டிருக்காரு.."

வெளியே எட்டிப் பார்த்தால் பாலபாரதி தன் செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

"இல்லையே.. காதுல தானே வச்சிருக்காரு.."

"கிட்டப் போய் கேட்டுப் பாரும்மே.."

கொஞ்சம் அருகில் போய்க் காது கொடுத்துப் பார்த்தேன்.. "அருள், தல, என் செல்போனைக் காணோம்யா.. நீதான் எங்கயோ ஒளிச்சு வச்சிருக்கணும்.." என்று கெஞ்சிக் கொண்டிருந்தார் பாலபாரதி.

"நீ வா பொன்ஸு.. நம்ம வேலையப் பார்ப்போம். அருள் சார் அல்லாத்தையும் கண்டு பிடிச்சிக் கொட்திடுவாரு.." என்று அழைத்தான் கோயிந்து..

"சரி, கோயிந்து... நீ கேட்ட கேள்வி ரொம்ப சுலபம். உலகை ஒன்றாகச் சேர்க்கும் இணையம் இருக்கு இல்லையா? இது ஒரு நெட்வொர்க். இப்போ டெலிபோன் நெட்வொர்க் இருக்கே அது மாதிரி. இப்போ உன்னோட செல்போனையே எடுத்துக்குவோமே.. இதுல சிம்கார்ட் போட்டோம்னு வையி, உடனே உன்னைக் கூப்பிட முடியுமா? "

"அதெப்படி முடியும். ஆக்டிவேட் பண்ணுவாங்கல்ல?"

"அதே தான். அந்த தொலைதொடர்புச் சேவையைத் தருபவர்கள் ஆக்டிவேட் செய்தால் தான் உன்னால என்கிட்ட பேச முடியும். அதே மாதிரி தான் உன்னோட கணினிக்கு இணையத் தொடர்பும். இணையத்துக்குக்காக அகலப்பட்டை(broadband), தொலைபேசி வழிச் சேவை(dialup), கம்பியில்லாச் சேவை(wireless network)ன்னு எந்த மாதிரி சேவையில் இணையத்தில் தொடர்பு கொண்டாலும் உன்னோட கணினிக்கு ஒரு நம்பர் கொடுப்பாங்க. நம்ம போன் நம்பர் மாதிரி. இந்த நம்பரைத் தான் உன் கணினியின் ஐபி முகவரின்னு சொல்றோம். எந்த இணையச் சேவைமையத்தின் மூலமாகத் தொடர்பு கொள்ளுறீங்க, என்ன முகவரி என்றெல்லாம் கண்டுபிடித்துச் சொல்ல ஐபி ட்ராக்கர் நிரலிகள் இருக்கு. இந்த நிரலிகளில் ஒன்றை எடுத்து உங்க பக்கத்தின் வார்ப்புருவில் சேர்த்தா, அவ்வளவு தான்!"

"ஓ.. அவ்வளவு தானா, இத்த வச்சி தான் அவனவன், கஸ்மாலம், நீ சென்னைல கீற, தில்லீல சுத்துறன்னு சொல்லிகிட்டிருக்கானா?! இத்தப் போய் பெரிசா நெனச்சு பயந்துகினேம்மா! சார்..! சார்..!!" கோயிந்து பாலபாரதியை அழைத்துக் கொண்டே வாசற்பக்கம் போகவும் என் செல்பேசி சத்தமிடவும் சரியாக இருந்தது.

போன் செய்தது வரவணை. "ஏங்க பொன்ஸ், எங்க மாம்ஸோட ஒரே தொல்லையாப் போச்சுங்க.. கொஞ்சம் என்ன ஏதுன்னு கேட்கக் கூடாதா?"

"என்ன? ஏது?"

"அடச்சே, விளையாடாதீங்க.. எனக்குப் போன் பண்ணி, போனைத் தொலைச்சிட்டேன், காணோம்னு ஒரே தொல்லை.. கொஞ்சம் அந்தக் காதுலேர்ந்து எடுத்துக் கையில கொடுக்கக் கூடாதா? ஒரு வேலையும் பார்க்க முடியலை!" என்றார் வரவணை. "இந்த நேரம் பார்த்து அவருக்குப் போன் செஞ்சது வேற பெரிய தப்பாப் போச்சு. சொந்த செலவில் சூன்யம்!"

"உங்களுக்கேவா? அது சரி, இப்போ எப்படி எனக்குப் போன் பண்ணீங்க?"

"இன்னோரு லைன்லேர்ந்து பேசிகிட்டிருக்கேன் பொன்ஸ்.,அந்தப் பக்கம் மாம்ஸ் இன்னும் குறுக்குக் கேள்வியாக் கேட்டுகிட்டிருக்காரு!. நீங்களும் இப்படிக் கேட்காதீங்க. அளுதுடுவேன்.."

"சரி கவனிக்கிறேன்" என்று சொல்லிவிட்டுத் திரும்புவதற்குள், கோயிந்து திரும்பி வந்தான், பாலாவுடன்.

"என்ன பாலா? போன் கிடைச்சிதா?"

"இதோ இவன் தான் எடுத்து ஒளிச்சு வச்சிருந்தான்."

"என்னய்யா நடக்குது இங்க?" என்றேன் கோயிந்துவிடம்.

"நீ ஒன்னியும் கண்டுக்காத.. அடுத்த கேள்விக்குப் பதில் சொல்லு.."

"என்ன அடுத்து?"

"இப்போ எல்லாம் ரெண்டு வலைப்பதிவர் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தாலே 'எனக்குப் பத்தாயிரம் ஹிட்ஸ்', 'எனக்கு முப்பதாயிரம் ஹிட்ஸ்'னு ஏதோ ஏலம் விடுறவன் மாதிர் கெளம்புறாங்களே, இதென்ன ஹிட்ஸ்?"

நான் பதில் சொல்வதற்குள் என்னுடைய வலப்பக்கத்திலிருந்து "நீ உருப்பட மாட்டே" என்று ஒரு குரல் வந்தது. குரலுக்குரிய திசையை நான் திரும்பிப் பார்க்கவும், அதற்கு நேர் எதிர் திசையிலிருந்து "நீ தான் உருப்பட மாட்டே" என்று பதில் வந்தது.

என்னடா என்று இந்தப் பக்கம் திரும்பவும், பாலபாரதி ஒரு வினோத காரியம் செய்தார். "உருப்படமாட்டேனா?, அப்படி எல்லாம் சொல்லக் கூடாது, நாளைக்குப் படையல் போட்ருவோம்" என்றார் காற்றைப் பார்த்தபடி.

"கோயிந்து, என்னய்யா ஆச்சு உங்க சாருக்கு? காத்துகிட்ட எல்லாம் பேசத் தொடங்கிட்டாரு?"

"அவரை வுடு பொன்சு.. அவரோட கொல சாமிங்க இப்படித் தான் அப்பப்போ அனானியா வந்து கொரல் கொடுப்பாங்க.. நீ சொல்லு!"

"சரி, இணையத்தில நிறைய கவுண்ட்டர்கள் கிடைக்குது. இப்போ உன்னோட பக்கத்தை யாராவது திறக்கறாங்கன்னு வை, அப்போ இந்தக் கவுண்ட்டர் என்ன பண்ணும், ஒரு முறை திறந்திருக்கு உங்க பக்கம்னு நினைவு வைச்சிக்கும். அடுத்த முறை வேற யாராவது எங்கிருந்தாவது திறந்தால், ரெண்டுன்னு கணக்கை அதிகப்படுத்திடும். இப்படியே உங்க பக்கத்தை ஒவ்வொரு முறை திறக்கும் போதும் இந்தக் கணக்கு அதிகமாகும்."

"இப்போ, நானே ரெண்டு தபா தொறக்கறேன்னு வை, அப்போ ரெண்டுன்னு வருமா? இல்லை ஒண்ணுன்னு வருமா?"

"ரெண்டு தரமும் அப்டேட் ஆகும். அத்தோட இல்ல கோயிந்து, நீ இப்போ திறந்து வச்சிருக்கும் போதே, அந்தப் பக்கத்தை ஒரு முறை புதுப்பித்தால் (refresh), அப்போவும் ஒரு எண்ணிக்கை கூடும். "

"நம்ம பதிவை நாமே தொறந்தாலும் இந்தக் கணக்கு வருமா?"

"ஆமாமாம். நம்ம பதிவை நாமே தொறந்தாலும், இதில் எண்ணிக்கை கூடும். ஆனா சில நிரலிகள் இது போல் இல்லாமல், நம்ம பதிவை நாமே திறந்தால் அதைப் பதிவு செய்யாமல் இருக்கவும் வழி வச்சிருக்கு"

"அது நமக்கெதுக்கு.. இப்போ இந்த நம்பர் பெரிசா இருந்தாத் தான் பெருமையாமே! இந்த மாதிரி கவுண்டர்கள் எனக்கும் வேணும்னா எங்கிட்டுப் போகணும்?"

"இந்தப் பக்கத்தில் புள்ளி விவரச் சேவைன்னு பட்டியல் போட்டுச் சொல்லி இருக்காங்க பாரு. அங்கிருந்து எடுக்கலாம். மொதல்ல சொன்ன ஐப்பி டிராக்கர் வேணும்னா இப்போதைக்கு எனக்குத் தெரிஞ்ச ஒரே இடம் இது மட்டும் தான். "

"யக்கா பொன்ஸ், இந்த கவுண்டரை வச்சு எங்க கொல சாமிகளா வருது யாருன்னு சொல்ல முடியுங்கிறாங்களே அது உண்மையா?" முதன்முறையாகப் பேசினார் - எங்களிடம் பேசினார் -பாலபாரதி

"ஒரு மாதிரி ஊகிக்கலாம். இப்போ இந்த கவுண்ட்டர்களில் சிலது ஐப்பி டிராக்கராகவும் செயல்படுது. இந்த ஐப்பி டிராக்கர் நமக்காக நம்ம பக்கத்துக்கு வந்து போன ஐப்பிகளைச் சேமிக்கும். இன்னும் சரியாச் சொல்வதானால், உலகின் எந்தெந்த ஐப்பிக்களை உடைய கணினிக்களில் நமது பதிவு திறந்து பார்க்கப் பட்டது என்பதை இது சேமித்து வைக்கும். ஸ்டேட் கவுண்டர் அப்படி ஒரு தளம். இதில் உங்களுக்குன்னு ஒரு கணக்குத் தொடங்கி இது கொடுக்கும் நிரலியை உங்கள் பதிவில் பதித்துவிட்டால், இந்த இடத்தில் உங்கள் பதிவுக்கு வந்து போகும் கணினி முகவரிகள் சேமிக்கப் படும். எப்போ வேணாலும் எடுத்துப் பார்க்கலாம். ப்ராக்ஸி மூலம் வந்தால் இங்கயும் பார்க்க முடியாது."

"ப்ராக்ஸின்னா? " என்றார் பாலா.

"அதான் நைனா, பள்ளிக்கொடத்துல அட்டெண்டன்ஸ் எடுக்கும் போது, ஒனக்குப் பதிலா வேற எவனாவது உள்ளேன் சொல்லுறது தான். இன்னும் சுளுவா சொல்லணும்னா, இப்போ நீ இல்லாத பதிவுகள்ல கூட ஒன்னைக் கலாசினா பாகசவில் சேர்ந்துடுவாங்கன்னு வீத பீப்பிள் சொன்னார் இல்ல, அது மாதிரி.."

"ஓ.. " என்றார் பாலா.

"அதே தத்துவம் தான். நமது முகவரியிலிருந்து பக்கத்தைப் பார்க்காமல், வேறொரு தளத்திலிருந்து பார்க்கலாம். இது மாதிரி சுத்தி வந்து பார்க்கிற போது, அதை இந்தக் கவுண்டர்களால கண்டுபிடிக்க முடியாது"

கோயிந்து தன் செல் போன் கூப்பிட்டதால் எடுத்துப் பார்த்தார்..

"என்ன கோயிந்து?"

"அதுவா, இந்தச் சேதுக்கரசி, நாடோடி, தங்கவேல்னு யாராவது எஸ் எம் எஸ் பண்ணி அப்பப்போ பாகச ன்னா என்னான்னு கேட்பாங்க.. அதுக்குன்னு ஒரு அறிமுக மெஸேஜ் வச்சிருக்கேனே.. அதையும் நம்ம ஜெய் பதிவையும் சேர்த்துத் தர்றது தான்.. பாகசவுக்குக் கொளுகைப் பரப்புச் செயலாளர் மாதிரி ஆய்டிச்சு நம்ம நெலம! என்னத்தச் சொல்ல!"

கோயிந்துவைப் பார்த்து, "நீதானா அது?" என்று முறைத்தார் பாலா. "பின்ன பாருங்க பொன்ஸ், தினசரி எனக்குப் பத்து பின்னூட்டமாவது வருது.. எனக்கு சர்டிபிகேட் கொடுங்க, இவனுக்குக் கொடுங்கன்னு.. !"

"என்ன சர்டிபிகேட்?"

"பாகச சர்டிபிகேட் தான்!" நொந்து கொண்டே சொன்னார் பாலா..

"சரி அதென்ன செல்பேசி தொலைஞ்சு போச்சுன்னு செல்லுலயே பொலம்பிகிட்டிருந்தீங்க?" கோயிந்து கொடுத்த குறுஞ்செய்தி இடைவெளியில் கேட்டேன்.

"பேசிகிட்டிருந்தது என்னோட செல்லு.."

"அப்போ தொலைஞ்சது?"

"அது கடலை செல்!" என்றபடியே திரும்பி வந்தான் கோயிந்து. 'அடப்பாவிங்களா!' என்று நினைத்துக் கொண்டேன். "பாலா பாய் மேட்டர் ஒனக்குத் தெரியாதா?" என்று அடுத்த முடிச்சைப் போட்டான்.

"அது என்ன? தெரியாதே!" என்றேன் ஆவலோடு.

பதில் வருவதற்குள், பாலா, பேச்சை மாற்றிவிட்டார். "அதெல்லாம் அப்புறம் பேசுவோம், ஆமாம், சில சமயம் ஒரே பக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு கவுண்டரும் ஒரு நம்பர் காட்டுதே அது எப்படி?"

"ஒவ்வொரு கவுண்டரையும் ஒவ்வொரு நேரத்தில் அந்தப் பக்கத்தில் சேர்த்திருப்பாங்க.. அவ்வளவு தான்"

இதற்குள் கோயிந்துவின் செல்போன் சிணுங்கியது.

"இன்னா நைனா? என்னது? புதுசா கவுண்டர் போட்டுத் தரணுமா.. இப்போ " " இல் இருக்கேன்; இங்க புதுசா ஒரு கஸ்டமரு.. 'கவுண்டர்னா கவுண்டமணியா'ன்னு கேட்டு ஒரே ரவுசு.. இப்போ தான் கொஞ்ச கொஞ்சமா புரிய வச்சேன்.. நீ அங்கயே இரு.. இதோ நான் என் அஸிஸ்டெண்டைக் கூட்டிகிட்டு இதோ வந்துகினே கீறேன்; எங்காச்சும் போய்டாத என்ன?" என்றபடி போனை வைத்தவர், "அந்தப் போனை என்னாண்ட கொடு சார். கௌதம் சாருக்கு வலைப்பதிவு இஞ்சினியரப் பார்க்கணுமாம். உன்னக் கூட்டிகினு வாரேன்னு சொல்லிட்டேன், அந்தப் போன் உங்கைல இருந்தா நீ மறுக்கா கடல போட ஆரம்பிச்சிடுவ.. இங்க கொடு பார்க்கலாம்... " என்று பாலாவிடம் சொல்லிக் கொண்டே, என்னைப் பார்த்து, "அப்பால வந்து கண்டுகிறேன் பொன்ஸு. பார்க்கலாம் என்ன?" என்று கிளம்பினான் கோயிந்து..
உண்மையாகவே கவுண்டரிடம் அடி வாங்கிய செந்தில் மாதிரி பாவமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.




[ப்ரியன் யோசனைப் படி, உருவான இந்தப் பதிவு, பாகசவின் கோடிக் கணக்கான உறுப்பினர்களுக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது. ]

Tuesday, September 12, 2006

மீண்டும் கோயிந்து

அன்றைய சந்திப்புக்குப் பின் கோயிந்துவைக் கையில் பிடிக்க முடியாத அளவுக்கு தலைவர் ரொம்ப பிஸியாகிவிட்டார்.

பாலபாரதியிடமாவது விசாரிக்கலாம் என்றால், எப்போது பார்த்தாலும் அவரது தொலைபேசி பிஸியாகவே இருந்தது. காரணம் என்னவென்பதை சமீபத்திய வரவணையான் பதிவைப் பார்த்துத் தான் நானும் தெரிந்து கொண்டேன்... 'சரி, இது வேலைக்காவாது' என்று நேரடியாக நேற்று கிளம்பி கோயிந்துவைப் போய்ப் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன்.

நான் போனபோது கோயிந்து கணினியைப் பார்த்தபடி என்னவோ ரொம்ப தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டிருந்தான்.

"என்ன கோயிந்து, வலைபதிவர் சந்திப்புக்குக் கூட வராம அப்படி என்ன வேலை உனக்கு?" என்றேன்.

"அது வந்து பொன்ஸூ, புது டெக்னாலஜி கண்டுபிடிக்க முயற்சி செஞ்சிகிட்டிருக்கேன்.. எஞ்ஜினியர் சொல்லி இருப்பாரே.. "

"ஒண்ணும் சொல்லலியே.. என்ன டெக்னாலஜி அது?"

"இப்போ உன்னோட ரொம்பப் பழைய பதிவெல்லாம் இருக்கில்ல.. அதை
அன்னிக்கி தேதிக்கி பார்க்காம தவறவிட்ட ஆட்கள் இருப்பாங்கல்ல.. அவங்களுக்குக் காட்டணும்னு ஆசப் பட்டன்னு வை.. எப்படி பண்ணுவ?"

"அதான் இப்போ அந்நியலோகத்தின் featured post எல்லாம் இருக்கே.. அதில்
வந்துடுமே.."

"ஆமாம்.. ஆனா அதுல உனக்குத் தேவையான பதிவு வருமா? அந்நியலோகம் பூவா தலையா போட்டு தேர்ந்தெடுத்துக் காட்டுறது தானே!"

"அதுவும் சரிதான்.. அதுனால?"

"அதுக்குத் தான் ஏற்கனவே இருக்கிற பதிவ மக்கள் பார்க்க, திரும்பி பழைய
பதிவ எடுத்து மொத்தமா திருப்பி போடணும்னு தல சொல்லிகினாரு.. அதச் செய்ய புது டெக்னாலஜி கண்டுபிடிச்சிகிட்டிருந்தேன்.. அந்த கேப்ல வலைபதிவர் சந்திப்பு முடிஞ்சிடுச்சு."

"ஆமாம் கோயிந்து, அதுக்கு ஏன் இத்தனை கஷ்டப்படுறே? பேசாம ஒரு
மீள்பதிவு போட்டுற வேண்டியது தானே.. "

"மீள்பதிவா? ஐ.. இதப் பார்றா.. பேரெல்லாம் ஷோக்காத் தான் சொல்ற
பொன்ஸு.. எப்படிப் போடுவ மீள்பதிவு? "

"அட ரொம்ப சுலபம்பா.. உன்னோட பழைய பதிவை எடு. அதை எடிட் மோடில் திறந்துக்க. இப்போ இதுல கீழ ஒரு ஆப்ஷன் இருக்கு பாரு:
Post and Comment Options: அப்டீன்னு






அதைத் திறக்கணும்(அம்புக்குறி மாதிரி இருப்பதைக் க்ளிக் செய்யவும்).. அதுல பதிவுக்கு நேரம் இருக்கும்.




பதிவோட நேரத்தைத் தற்போதைய நேரமாகவோ, இல்லைன்னா,
உன்னுடைய சமீபத்திய பதிவின் நேரத்தை விட அதிக நேரமாகவோ ஆக்கிட்டு, அதை திருப்பி பப்ளிஷ் பண்ணனும்.

உதாரணத்துக்கு உங்காளு இப்போ சமீபத்துல ஒரு மீள்பதிவு போட்டார் இல்லையா.. அந்த அருணா பொண்ணு பத்தி.. அதை முதல் முதல் போட்டது -பிப்ரவரி 08, 2006 தேதி. அந்தப் பதிவை எடுத்துப் பார்த்தால், கீழே அந்தத் தேதி இருக்கும். அதுல அந்தத் தேதியை மாத்தி இன்னிக்கி தேதி வச்சிட்டு பப்ளிஷ் பண்ணியிருந்தார்னா, அந்தப் பதிவு புதுப் பதிவா ஆகி இருக்கும். இது தான் மீள்பதிவு"

"நீ சுளுவா சொல்லிக்கின.. இப்போ அப்படி எல்லாம் செஞ்சா பழைய பதிவு இருக்குமா? இருக்காதா?"

"பழைய பதிவு தான் புதுப் பதிவாகிடுச்சே.. அந்தத் தேதியில் இந்தப் பதிவு இருக்காது.. "

"அப்போ முத மொற போட்டப்போ நாலு பேர் பின்னூட்டம் போட்டிருப்பாங்க இல்ல? அந்த பின்னூட்டமெல்லாம் தொலஞ்சி பூடுமே.. அதை எல்லாம் என்ன மறந்துடச் சொல்றியா?"

"இல்ல கோயிந்து.. அந்தப் பின்னூட்டம் எல்லாம் உன்னோட புதுப் பதிவில
வந்திருக்கும். ஆக, புதுப் பதிவு வரும்போதே அந்தப் பின்னூட்டங்களோட
வரும்.. மக்கள் குழம்பாம இருக்க, மீள்பதிவுன்னு சொல்றது நல்லது.."

"சரி சரி.. ஏதாவது சொல்லச் சொன்னா போதுமே. பெரிய சாமியார் ரேஞ்சுக்கு
கடைசில நீதி சொல்லாம முடிக்கத் தெரியாதே உனக்கு.. மீள் பதிவுன்னு
எழுதுறாங்களாம்!! ரொம்பத் தான் படம் போடுறம்மணி.. சரி, இந்தப் படம்
போடுறதப் பத்தி சொல்றேன் சொல்றேன்னு சொல்லியே ஒரு மாசம் ஓட்டிட்டயே, அதுபத்தி சொல்லப் போறியா இல்லையா?"

"படம் போடுறது பத்தி என்ன?"

"பதிவுல படம் எப்படிப் போடுறது?"

"பதிவுல படம் போடுறதுக்கு ரெண்டு வழி இருக்கு. ஒண்ணு, ப்ளாக்கரிலேயே
படத்தை ஏத்திட்டு, பதிவுல போடணும். இன்னும் ஒரு வழி, ப்ளாக்கர் அல்லாத வேற இடங்களில் படத்தை வலையேத்திட்டு, அதை லிங்க் எடுத்து ப்ளாக்கரில் கொடுத்திடணும்.."

"எங்க வலையேத்தலாம்னு சொல்ற?"

"இப்போ photobucket.com, flickr.com என்று பல்வேறு சைட் இருக்கே எதுக்குன்னு.. அதுல எதுலயாவது ஏத்திடவேண்டியது தான். இதெல்லாம் வேண்டாம்னா, இங்கே இன்னும் நிறைய படம் வழங்கி சேவைகளின் பெயர்கள் இருக்கு. இதில் படத்தை வலையேற்றும் போது உனக்கு ஒரு உரல் (லிங்க்) கிடைக்கும்."

"இந்த உரலை எங்க கொடுக்கணும்?"

"புதுப் பதிவு போடும்போது இதோ இந்த இடத்தில் இருக்கும் படம் மாதிரியான சின்ன பொத்தானைத் (ஐகான்) தட்டி அதுல கொடுக்க வேண்டியது தான்.. ரொம்ப சுலபம்.."





"ம்ம்.. ஆனா, சிலசமயம் இந்த ஐகானைத் தட்டி கொட்டிப் போட்டாலும் வராம இருக்கே, அப்போ என்ன செய்யுறது.. ?"

"இன்னொரு வழி இருக்கு. கொஞ்சம் HTML தெரிஞ்சால், இதைச் செய்யலாம்.. படத்தை வலையேற்றிய பின், அதை எடுத்துப் பயன் படுத்த இந்த 'img' டேக்கை பயன்படுத்தலாம். கீழே இருக்கும் கோட் மொத்தமும் பயன்படுத்தி இந்தப் படத்தை உங்க பக்கத்தில் சேர்க்கலாம் :





இதில் படத்திற்கான உரலை மட்டும் மாற்ற வேண்டும்.. அவ்வளவு தான்.. ரொம்ப சுலபம்.. "

"அது சரி.. எனக்கென்னவோ இதை விட சுலபமான வழிமுறை இருக்குன்னு
தோணுது.. அம்மணி வழக்கம்போல தலையச் சுத்தி மூக்கைத் தொடுறீங்க..
இருக்கட்டும்.. யாராவது இன்னும் சுலபவழி சொல்லி அந்த மூக்கை உடைக்கிறாங்களா இல்லையான்னு பார்த்திடலாம்.. "

"சரி.. மத்த கேள்வியெல்லாம் ஒரு நாள் கேட்டியே, அதுக்கெல்லாம் பதில்
சொல்லவா?"

"ஆமாம்.. நீ ஒரு மாமாங்கம் கழிச்சி சொல்லுவ. அதுவரை எங்களுக்குத்
தெரியாதுன்னா நினைச்சிகிட்டிருக்க?"

"அப்போ தெரியுமா? நான் கிளம்பவா?"

"அட, இரு அம்மணி, எங்க தப்பிக்கிற? சொல்லு சொல்லு, நீ கத்துகிட்டு வந்தது சரியா இல்லையான்னு நான் செக் பண்ணனும் இல்ல?"

என் நிலைமையை நொந்து கொண்டு பதில் சொல்லத் தொடங்கினேன்..

[இந்தத் தொடரின் பழைய பகுதிகள் : 1 2 3 ]

பிற்சேர்க்கை: படம் போடுவதற்கு இன்னும் சுலபமான வழியை ரவி சொல்லி இருக்கிறார் இங்கே

தொடரும்

Tuesday, August 22, 2006

எடிட்.. edit.. எடிட்...

பகுதி 1
பகுதி 2

"டீ எங்க வாங்கினது?" என்றேன் கிளாஸின் நிலையைப் பார்த்தபடி.

"ஆரம்பிச்சிட்டாங்கப்பா! எங்க வாங்கினது; எப்படி வாங்கினது; பணம் கொடுத்தா, கிரெடிட் கார்டா எல்லாத்தையும் சொல்லணுமே!!" என்று அலுத்துக் கொண்டான் கோயிந்து

"இல்லை, ஸ்டார்பக்ஸ்ல டீ குடிச்சுட்டு இப்படிப் பட்ட கிளாஸ்ல எல்லாம்.. "

"அம்மணி! அடங்குங்க!! டீ குடிக்கிறதுன்னா குடிங்க.. இல்லைன்னா கிளாஸைக் கீழ வச்சிட்டு பதிலைச் சொல்லுங்க!!" என்ற பாலாவின் கட்டளைக்கிணங்க, கண்ணை மூடிக் கொண்டு குடித்து விட்டு, நிமிர்ந்தேன்.

"ம்ம்.. இப்போ சொல்லுங்க.. மத்தவங்க நம்ம பதிவில் போடும் பின்னூட்டத்தை எப்படி எடிட் செய்வது?" என்றார் பாலா.. கேள்வியை மறக்காமல்.

"உங்க லாகின் வழியா உங்க பக்கத்தைப் பாருங்க. அதில் இருக்கும் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கு அடியிலும் ஒரு குப்பைத் தொட்டி தெரியும். அதை க்ளிக் பண்ணுங்க."

"ஐய்யோ.. அப்புறம் அழிஞ்சிடுமே.. " என்றான் கோயிந்து.

"இரு இரு.. என்ன அவசரம்? " என்றேன். "இப்போ அந்தப் புதுப் பக்கத்தோட உரல் இப்படி இருக்கும்"

http://www.blogger.com/delete-comment.g?blogID=24180143&postID=115623777191154907

அதுல delete-comment : இந்த வார்த்தைகளை மட்டும் எடுத்துட்டு post-edit இந்த வார்த்தைகளைப் போடணும்.. அப்புறம் இப்படி வரும்:

http://www.blogger.com/post-edit.g?blogID=24180143&postID=115623777191154907

இந்த உரலை ஒரு முறை தட்டி பக்கத்துக்குப் போகணும். இந்தப் பக்கம் நம்ம ப்ளாக்கரின் புதுப் பதிவு போடும் பக்கம்(Create Post) மாதிரியே இருக்கும்.. ஆனா, எடிட் செய்யும் பகுதியில் பதிவுகளுக்குப் பதில் நீங்க தேர்ந்தெடுத்த பின்னூட்டம் வரும்.. இந்தப் பின்னூட்டத்தை வேண்டிய மாற்றங்கள் செய்து பப்ளிஷ் பட்டனைத் தட்டி வெளியிட வேண்டியது தான்..

ஒரு மரியாதைக்கு, வார்த்தைகள் எடிட் செய்யப் பட்டுள்ளது என்று எழுதுவது நல்லது. "

"இது மாதிரி யார் வேணா, யாரோட பின்னூட்டத்தை வேணா மாத்தலாமா? " என்றார் பாலா

"ஆமாம்.. மாத்தலாம்.." என்றேன்..

தீவிர சிந்தனையிலிருந்த கோயிந்து மெல்லத் தலையாட்டினான்..

"என்ன கோயிந்து? என்ன விஷயம்? " என்றார் பாலா

"இப்போ தான் புரியுது, கொஞ்சம் சீனியர் பதிவர்கள் எல்லாம் ஏன் தன்னோட பின்னூட்டத்தைத் தனியாச் சேமிக்கிறாங்கன்னு!" என்று கோயிந்து சொன்ன போது ப்ளாக் இஞ்ஜினியரின் சிஷ்யன் நிஜமாகவே புத்திசாலி தானோ என்று எனக்கு அடுத்த சந்தேகம் வந்துவிட்டது..

"பொன்ஸ், எனக்கொரு சந்தேகம்" என்றார் பாலா என் சிந்தனையைக் கலைத்து, "நான் தானே உங்களுக்கு ப்ளாக் ஆரம்பித்த புதிதில் தமிழ்மணத்தில் சேருவது பற்றி எல்லாம் சொன்னேன். நீங்க எங்கேர்ந்து இந்த விஷயம் எல்லாம் கத்துகிட்டீங்க?"

"அதுவா பாலா..இந்த வார நட்சத்திரம் தான் சொல்லிக் கொடுத்தார்.. பதிவே போட்டிருக்கார் பாருங்க.. நட்சத்திரத்துக்குத் தான் நன்றி.." என்றேன்..

"ஆமாம், இப்படித் தான் ஒவ்வொருத்தர் கிட்டயா ஒவ்வொண்ணு கத்துகிட்டு தனித் தொடர் போட்டு ஊரை ஏமாத்தறீங்களா? உங்களுக்கு அந்த பின்னூட்டம் அழிக்கிறது எப்படின்னு சொல்லித்தர மாட்டேனாக்கும்" என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார்..

"அட, என்னபா நீ.. உனக்குத் தான் அதெல்லாம் ஒண்ணும் தெரியாதே.. பொன்ஸக்காவை ஏமாத்தி இன்னும் ரெண்டு டெக்னாலஜி கத்துகிட்டு அப்புறமா இப்படி சொல்லிருக்கலாம்ல? " என்று உண்மையை உடைத்து என்னை இன்னும் திகைக்க வைத்தான் கோயிந்து..

[பி.கு: ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் இந்த உரல் மாறுபடும். எனவே ஒவ்வொரு பின்னூட்டத்தையும் பப்ளிஷ் செய்தபின் அதன் உரலைக் கண்டுபிடித்து தான் இந்த மாறுதலைச் செய்ய வேண்டும் ]

பிற்சேர்க்கை: பின்னூட்டங்களில் வந்த வழிமுறைகளில், மாயவரத்தான் சொன்னது இன்னும் கொஞ்சம் சுலபமானதாக இருக்கிறது. இந்தப் பக்கத்திற்குச் சென்று, அங்கிருக்கும் பெட்டியில் டெலிட் கமென்ட் பக்கத்தின் உரலை இட்டால், சுலபமாக பின்னூட்டத்தை மாற்ற முடியும். URL-ஐ மாற்ற முயன்று தப்பு செய்யாமல், இது இன்னும் சுலபம்..

தொடர்ச்சி

Monday, August 21, 2006

பாலபாரதி - இஞ்ஜினியர், தமிழ் வலைப் பதிவுகள்

ப்ளாக் இஞ்ஜினியர் பாலாவிடமிருந்து தப்பித்து ஓடி விடலாம் என்று தான் முதலில் நினைத்தேன் (தப்பியோட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்றறிய இங்கு பார்க்கவும்) . ஆனால், அது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. கோயிந்துவை வேறு காரியமாக வெளியில் அனுப்பிய பொறியாளர், அடுத்து என்னைக் குறிவைத்தார்.

"பொன்ஸ், உங்களுக்கு இந்த பின்னூட்டத்தை மொத்தமா அழிக்கத் தெரியுமா?"

"அது ஒண்ணும் பெரிய மேட்டர் இல்லையே பாலா! ரொம்ப சுலபம். நீங்க உங்க ப்ளாக்குக்குப் போங்க. பின்னுட்டப் பெட்டியில் ஒன்றும் தட்டச்சாமலே, உங்க பெயரையும், கடவுச் சொல்லையும் கொடுங்க. இப்போ ஒவ்வொரு பின்னூட்டத்துக்கு அடியிலும், ஒரு குப்பைத் தொட்டி தெரியும் பாருங்க. அதைத் தட்டினா, "பின்னூட்டத்தை மொத்தமா அழிக்கவா? , இல்லை அடையாளத்தை விட்டுவைக்கவா?" ன்னு கேட்கும். பதில் சொல்லி அழிங்க.. அவ்வளவு தானே" என்றேன்.

"ஏம்மணி, என்னன்னவோ செய்யுறோம், இது தெரியாதா எனக்கு? உங்க பக்கத்துல இருக்கிற பின்னூட்டத்த அழிங்க, அழிக்காதீங்க. என்ன வேணா செய்யுங்க. அடுத்தவன் பக்கத்துல இருக்கும் உங்க பின்னூட்டத்தை மொத்தமா அழிக்கத் தெரியுமா?"

நான் ஒரு நிமிடம் பயந்து போனேன். பாலா நிஜமாவே பெரிய பொறியாளர் தானோ? நான் தான் தப்பா நினைத்திருக்கேனோ.?!!

"எப்படி பாலா செய்வீங்க?" இதைக் கேட்ட போது என் குரல் எனக்கே கேட்கவில்லை.

"அது சொல்றேன். அதுக்கு முந்தி, பின்னூட்டத்தில் ஒரு சில வார்த்தைகளை மட்டும் நல்லா டார்க்கா போடுறீங்களே எப்படி? அதைச் சொல்லுங்க. இதைச் சொல்றேன்" என்றார்.

"சரி, பின்னூட்டத்தில் டைப் பண்ணும் போது, அங்கயும் சில டேக்(tag) இருக்கு. கொஞ்சம் தான்:



இப்போ பின்னூட்டத்தில் பொன்ஸ் - இந்த வார்த்தையைத் தனிச்சுக் காட்டணும்னு வைங்க. இதுக்கு முன்னும் பின்னும்


போடணும். இப்படி:

இப்படிப் போட்டா, இது நல்லா தடியா, தனிச்சுத் தெரியும்..

அடுத்து இந்த வார்த்தைக்கு ஒரு லிங்க் கொடுக்கணும்.. பொன்ஸ் -> இதுக்கு லிங்க்: http://poonspakkangkal.blogspot.com

அப்போ டேக் பயன்படுத்தி இப்படி எழுதணும்:



அப்புறம், ஒரு வார்த்தையைச் சாய்வெழுத்தா எழுதவேணும்னா, பொன்ஸ் இப்படி வரணும்னா, i tag பயன்படுத்தணும்.. இப்படி:


அவ்வளவு தான்.. புரிஞ்சிதா?"

"ஆமாம்.. பெரிய, ராக்கெட் டெக்னாலஜி!! இல்ல, அவ்வளவு பெரிய விஷயம் சொல்லித் தரப் போறேனே, அது உங்களுக்குப் புரியுமான்னு பார்த்தேன். பரவாயில்லை முதல் அடியில் தேறிட்டீங்க..

இன்னும் ஒண்ணு சொல்லுங்க.. நம்ம சரவணன் கேட்கிறாரு, மத்தவங்க அனுப்பும் பின்னூட்டத்தை, பப்ளிஷ் செய்த பிறகோ முன்னாலோ, அதன் வார்த்தைகளை மாற்ற முடியுமா?"

பாலாவின் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்குள் கோயிந்து,

"காப்பி வாங்க போனேன், டீ வாங்கி வந்தேன்" என்று பாடிக் கொண்டே வந்தான்.. அவன் கொண்டு வந்த டீயைக் குடித்து விட்டு நான் சொன்ன பதில் நாளை..

[குறிப்பு: இந்தப் பதிவிலேயே பின்னூட்டம் போடுபவர்கள் ஏதேனும் ஒரு டேக்கை முயற்சிக்கலாம்.. வசதியாக இருக்கும் ;) ]

தொடரும்

திருவாளர் கோயிந்தும் அப்பாவி பொன்ஸும்

சென்னைக்கு வந்து நான் எது நடந்துவிடும் என்று பயந்து கொண்டே இருந்தேனோ, அது நடந்தே விட்டது.. ஆம், நேற்று எதேச்சையாக தமிழ் வலைப்பதிவுகளின் ஒரே ப்ளாக் இஞ்சினியரான பாலபாரதியையும் அவரது நண்பர் திருவாளர் கோயிந்தையும் சந்திக்க வேண்டியதாகிவிட்டது. போன இடத்தில் ஒரு கணினியும் அகப்படவே திருவாளர் கோயிந்து காலம் நேரம் பார்க்காமல் பதிவு பொறியாளரிடம்(Blog Engineer ;) ) தான் கற்ற வித்தை ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடத் தொடங்கினார்.

முதலில் அத்தனை ஆர்வமாகக் கேட்கவில்லை என்றாலும், பொறியாளரின் பதிவில் இருக்கும் தொட்டால் மட்டுமே தோன்றும் பக்கப்பட்டி (அதாங்க, sidebar) எப்படிப் போடுவது என்னும் ஒரே விஷயம் என் ஆர்வத்தைத் தூண்ட, அதை மட்டுமே தெரிந்து கொள்வதற்காக, பிறவற்றையும் கவனிக்க வேண்டியதாகிவிட்டது.

"அம்மணி பொன்ஸூ, பதிவுல லிங்க் கொடுக்கிறது எப்படின்னு உனக்குத் தெரியுமா?"என்றபடித் தொடங்கினார் கோயிந்து..

"லிங்கா? அதான் எனக்குத் தெரியுமே.. இதோ புது போஸ்ட் அடிக்கும் போது கம்போஸ் மோடு(Compose Mode) க்குப் போய்ட்டு, அதுல எந்த நாலு வார்த்தைக்கு லிங்க் கொடுக்கணுமோ, அதை மட்டும் செலக்ட் பண்ணி, இதோ இந்த பட்டன் இருக்கு பாரு


இதைத் தட்டணும்.. அப்புறம் ஒரு புது விண்டோ வரும்.. அதுல உன்னோட லிங்கைப் போட வேண்டியது தான்.."


"சரி.. அத்த வுடு.. கொஞ்சம் லெட்டர் பெருசாவும், கொஞ்சம் சின்னதாவும் எப்படி மாத்தணும்? அது தெரியுமா?" என்று அடுத்த டெஸ்ட் வைத்தான் கோயிந்து..

இதுவரை அத்தனை ஆர்வமாக பதில் சொல்லாமல் இருந்த நான் இந்தக் கேள்வியில் அதிக உற்சாகத்தோடு சொல்ல ஆரம்பித்தேன்..
"மறுபடி உனக்கு வேண்டிய நாலு வார்த்தையை செலக்ட் பண்ணு.. மேல பாரு Normal Size-னு ஒரு ட்ராப் டவுன் இருக்கு பாரு..."


"என்னாது? ட்ராப்பு.. டவுனா?!! இன்னாது அது?"


"அதாம்பா.. இங்க இருக்குப் பாரு.. "


"இதை எடுத்து உனக்கு வேணுங்கிற சைஸுக்கு மாத்து.. அவ்வளவு தான்.."


"அம்புட்டு தானா?" என்று கோயிந்து கேட்டுக் கொண்டிருக்கும் போதே இஞ்சினியர் சார் தனது திடீர் போன் காலை முடித்துக் கொண்டு வந்தார்..


நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எனது ஞானத் தந்தை கோயிந்து நான் ஏதும் பேசும் முன், இஞ்ஜினியர் சாரிடம், "ஏம்பா, ஏதோ, லிங்க் போடுறது எப்படின்னு கத்துக்க சொன்னியே.. இதோ பாரு இப்படித் தான் போடணுமாம்.. " என்றான்..

வாயடைத்து பார்த்துக் கொண்டே இருக்கும் போது அடுத்து சொன்னான்.

"இதைத் தான் நானே முட்டி மோதி கத்துகிட்டேனே, அடுத்து அந்தப் படம் போடுறது எப்படின்னு கொஞ்சம் சொல்லுறது?" என்று..

"அட.. என்ன பொன்ஸ் அப்படிப் பார்க்கறீங்க.. சொன்னேனே.. நம்ம சிஷ்யப் பயல் கோயிந்து.. ரொம்ப புத்திசாலி.." என்று பாலா என்னைப் பார்த்து சொல்ல, நான் எஸ்கேப்..

(பதிவில் லிங்க் போடுவது எப்படி, படம் போடுவது எப்படி என்று சிலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க கோயிந்துவைப் பாலாவிடமிருந்து சில நாள் கடத்தி வந்து இந்தத் தொடர்.. வேறு ஏதாவது எனக்குத் தெரிந்த ப்ளாக் விஷயங்கள் கேட்டால், அதையும் சேர்த்துக் கொள்கிறேன்.. :) )



தொடரும்