Tuesday, September 20, 2011

Julie and Julia

திரைப்படம் பார்ப்பதே மறந்திருந்த வேளையில், வீட்டில் சமீபத்தில் டீவி தொடர்பு வாங்கியதால் இந்தப் படம் வரவேற்பறைக்கு வந்து அழைத்தது…
ஜூலியா சைல்ட் இரண்டாம் உலக யுத்தத்தில் எழுத்தராக பணியாற்றியவர். யுத்தத்துக்குப் பின்னர் கணவருடன் பாரிஸில் குடிபுகுந்த வேளையில், பிரஞ்சு சமையல் கற்று, எப்படி புத்தகம் எழுதப் புகுந்தார் என்பது ஒரு கதை. ஜூலி பொவல் 2002இல் ஜூலியாவின் இந்த பிரஞ்சு சமையற்குறிப்புகள் எல்லாவற்றையும் சமைத்து, முயன்று பார்த்து அது குறித்து வலைப்பதிவில் எழுதத் தொடங்குகிறார். இந்த செயல் எப்படி அவரை ஒரு புகழ்பெற்ற எழுத்தாளராக்குகிறது என்பது இரண்டாவது கதை.. இரண்டையும் சமமாக கலந்து சொல்லியிருப்பது திரைக்கதையின் அழகு.
ஜூலியா சமைப்பதும், புதிது புதிதாக கற்றுக் கொள்வதும், சமீப காலமாக புத்தகம் படித்துச் சமைக்கத் தொடங்கியிருக்கும் எனக்கு ரொம்பவும் சந்தோசமான ஒன்றாக இருந்தது. கொஞ்ச நாளாக, சமையலறைக்கு வெறும் சாப்பாடு நேரத்துக்கு மட்டும் வரப் பழகியிருக்கும் கணவரோ, ‘அட, உன்னை மாதிரியே ஒருத்தி புத்தகம் படிச்சி சமையல் பண்றா பாரு!’ என்று இப்பவரைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஜூலியாவாக நடித்திருக்கும் நடிகை மிக நன்றாக அந்தப் பாத்திரத்தை பிரதிபலிக்கிறார். கொஞ்சும் குரலில் பேசிக் கொண்டு, ‘நான் எப்படி வீட்ல சும்மா இருக்கிறது?’ என்று விதம் விதமான பயிற்சிப் பள்ளிகளுக்குப் போய் வந்து கொண்டு, ஆண்கள் கற்கும் சமையற்பள்ளியில் சேர்ந்து அவர்களுக்கு நிகராக சமைக்கப் போகிறேன் என்று, வீட்டிலிருக்கும் எல்லா வெங்காயத்தையும் வெட்டிக் கொண்டு, குழந்தைத்தனமும், குதூகலமும் கலந்து விளையாடுகிறார். அவரின் முதல புத்தகம் எப்படி அச்சுக்கு வந்தது, அதற்கு என்னவெல்லாம் பாடுபட்டார் என்பதை அழகாக காட்டியிருக்கிறார்கள். ஜூலியாவிற்குமுன் இது போல ஆங்கிலத்தில் பிரஞ்சு சமையல் பற்றி எல்லாருக்கும் புரியும் விதமான ஜனரஞ்சகமான புத்தகம் இருக்கவில்லையாம்.
சமீபத்தில் ஜூலியா சமையல் புத்தகம் எழுதிய கதையான ‘My life in France’ ஐயும் படிக்க கிடைத்தது. அந்த காலத்து பிரான்சு எப்படி இருந்தது என்று அழகாக விவரிக்கிறார் ஜூலியா. படிக்கும்போது, 1950களின் பாரிஸ் நம்ம கோயம்பேடு மார்க்கெட்டை நினைவுப் படுத்துகிறது. ஆங்காங்கே அண்ணாச்சி கடைகளும், பொருட்களைப் பார்த்து வாங்க முடியும் விதமும், அதே 50, 60களின் அமெரிக்காவிலோ, சூப்பர்மார்க்கெட்களும் என்று அந்த வித்தியாசங்களை அழகாக காட்டி இருக்கிறார் ஜூலியா. வேட்டைகாலத்தின் போது, Quail என்ற பறவை பாரிஸ் மார்க்கெட் எங்கும் நிறைந்திருக்குமாம். ஆனால், அதனை அப்படியே, வேட்டையாடிய மாதிரியே கொண்டு வந்து கொட்டி விற்பார்களாம்! (அப்ப தான் அடையாளம் தெரியும், அதன் இறகு நிறம் பார்த்து மக்கள் வாங்குவார்களாம்!) அதே சமயம் அமெரிக்க சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும் குயில்கள் நன்கு சுத்திகரிக்கப்பட்டு, குயிலா கோழிக்குஞ்சா என்று அடையாளம் தெரியாதபடி தோலுரிக்கப்பட்டு விற்கப்படுமாம்! இன்னும் ஒவ்வொரு கடையையும், எப்படி சீஸ் வாங்க வேண்டும், எப்படி ஆலிவ் எண்ணெய் வாங்க என்று ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசம் காட்டுகிறார் ஜூலியா.
இத்தோடு, பாரிஸில் அந்தக் காலத்தில் வீட்டு வேலைக்கு ஆள் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். ஜூலியா வீட்டுக்கே, வாடகைக்கு வீடு எடுத்த போது கூட ஒரு வேலைக்காரியையும் கொடுத்தார்களாம்! அவருக்கும் சாப்பாடு சேர்த்துப் போட வேண்டியது வாடகைக்கு இருப்பவர்களின் கடமையாம். அதே 50-60களில் அமெரிக்காவிலோ, உதவிக்கு ஆள் இல்லாத இல்லத்தரசிகள் தான் அதிகமாம் (அதாவது, ஜூலியா பிறந்த கலிபோர்னியா மாகணத்திலும், புகுந்த வீடான பாஸ்டனிலும் உதவிக்கு 50-60களில் ஆள் கிடையாது.. மற்றபடி தென்மாகாணங்களில் அடிமைகளை நன்கு பிழிந்து கொண்டு தான் இருந்தார்கள்!)
ஜூலியை 2002இல் நியூயார்க் நகரத்தில் வாழும் பெண். கல்லூரிக் காலங்களில் புகழ் பெற்ற எழுத்தாளராக வேண்டும் என்ற அவளின் லட்சியம் வெற்றிபெறாமல், முப்பது வயதில் ஏதோ பிடிக்காத வேலையில் (911இல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் கால் சென்டர்) உட்கார்ந்து கொண்டு வாழ்க்கையைக் கொஞ்சமேனும் சுவாரசியமாக்க வேண்டும் என்ற காரணத்துக்காக சமையல் செய்பவள். 2002களின் சூப்பர் மார்க்கெட் கலாசாரம், தேவையில்லாத பகட்டான நட்புகள், என்று இன்றைய நடுத்தர அமெரிக்க குடிமகளைப் படம் பிடித்துக் காட்டுகிறார். அடிக்கடி போன் செய்து, ‘நீ எழுதுற ப்ளாக்கை எவனும் படிக்கிறதில்லை.. இது தேவையில்லாத வேலை’ என்று பேசிக் கொண்டே இருக்கும் (முகம் காட்டாத) அம்மா கதாபாத்திரம் அழகு.
இத்தோடு இந்தப் படத்தை ஒரு பத்து முறை பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறையும் அலுப்பு தட்டவே இல்லை! சொல்லப் போனால் ஜூலியாவின் மூல புத்தகத்தைப் படித்த பின்னர், படத்தில் வழக்கம் போல பல விசயங்கள் மாறி வருவது வியப்பாக இருக்கிறது.
முதல் தரம் படம் பார்த்து முடித்த பின்னர், அது வரை மீனாட்சி அம்மாள் மட்டுமே வைத்து சமைத்துக் கொண்டிருந்த நான், அடுத்து ஜூலியாவின் சமையற்குறிப்புகளில், நம்ம சமைக்கக் கூடியதாக ஏதாவது சிக்குகிறதா என்று பார்க்கத் தொடங்கிவிட்டேன்! பாவம் ரங்ஸ் ;-)
மீண்டும் பதிவுகளுக்கு வர - புதிதாக இப்படி சமையல் பதிவு போடத் தொடங்கலாமா என்று ஒரு ரோசனை வேறு.. ஜாக்கிரதை மக்கள்ஸ் :-)