Wednesday, March 16, 2011

போர்க் கதைகள்..

சாண்டில்யன் நாவல்கள் படித்த காலத்திலிருந்தே போர்க்கதைகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். போர் பற்றிய எந்தக் கதையாக இருந்தாலும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடுவேன். ஆங்கிலக் கதைகள் படிக்கத் தொடங்கியதிலிருந்து உலகப் போர் பற்றிய கதைகள் தேடிப் படித்திருக்கிறேன். அதிலும் இரண்டாம் உலகப் போர் குறித்துத் தான் எத்தனை கதைகள்?! இரண்டாம் உலகப் போரைப் பொறுத்தவரை, ஜெர்மானியர்கள், இத்தாலியர்கள், ஆஸ்திரியர்கள், போலந்து மக்கள், பின்லாந்து மக்கள் என்று பல்வேறு மக்களின் பார்வையில் இரண்டாம் உலகப் போர்க் கதைகள் படித்திருக்கிறேன். ஆனால், ரஷ்யர்கள் இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப் பட்டார்கள் என்று எண்ணியதே கிடையாது.
சோவியத் ரஷ்யாவின் வரலாற்றை கம்யூனிசம் விரும்புபவர்கள், கம்யூனிசம் விரும்பாதவர்கள் என்ற இரண்டே நிறங்களில் தான் பார்த்துப் பழக்கப்பட்டிருக்கிறேன். மூன்றாதாக ஒரு பக்கம் உண்டு - அது சோவியத் ரஷ்யாவில் பிறந்து, வளர்ந்து, அரசியல் சார்பற்ற சாதாரணப் பெண்ணின் கண்களில் இருக்கிறது என்று முதன்முறையாக உணர்ந்தது - கிறிஸ்டின் ஹன்னாவின் The Winter Garden படித்த போது தான்! சரியாக நான்கு நாட்களில் இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டேன்! சிட்னி ஷெல்டனுக்குப் பின், என்னை இரவெல்லாம் கண்விழித்துப் படிக்க வைத்த கதையாசிரியர் ஹன்னா!
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் செய்த மிகப் பெரிய தவறு, லெனின்கிராடை முற்றுகை இட்டது தான். அந்த நான்கு வருட முற்றுகையின் முடிவில், ஜெர்மானியப் படை குளிர் ஜுரம், கடுங்குளிர் இவற்றைத் தாங்க முடியாமல் பின்வாங்கி அழந்துபட்டது என்று என்னுடைய ஒன்பதாம் வகுப்பு சரித்திர புத்தகம் சொன்ன லெனின்கிராட் தான் எனக்குத் தெரியும். ஆனால், The Winter Garden இன் கதாநாயகி, சாதாரண குடிமகள் அன்யா என்னும் வெரொனிகா காட்டும் லெனின்கிராட், இன்னும் பரிதாபமானது.
அன்யா, ஆப்பிள்களுக்குப் பெயர் போன வாஷிங்டன் மாகாணத்தில் ஒரு ஆப்பிள் தோப்பு முதலாளியின் அமைதியான மனைவி. அமைதி என்றால், அப்படி ஒரு அமைதி. தன் சொந்த மகள்களுடனேயே பேச மறுக்கும் அமைதி. அம்மாவின் பிறந்த நாள் கூட அறியாமல் வளரும் மகள்கள். பெரியவள் கணவர், குடும்பத்துடன் ஆப்பிள் தோட்டத்துக்கு அருகிலேயே, அப்பாவுக்கு உதவியாக வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறாள். சின்னவள், அம்மாவின் புறக்கணிப்பு தாங்காமல், உலகத்தில் போர் நடக்கும் இடங்களுக்கு எல்லாம் பறந்து போட்டோ பிடிப்பதைத் தொழிலாக்கிக் கொண்டு அலைகிறாள். அப்பா இறக்கும் போது, மகள்களுக்கும், மனைவிக்குமிடையில், இத்தனை பெரிய இடைவெளி இருப்பதை அவரால் தாங்க முடியாமல், அம்மாவை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று இளைய மகளிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டு இறக்கிறார்.
ஆறு மாதத்திற்குப் பின், அன்யா, இளைய மகளின் தூண்டுதலின் பேரில் மெல்ல பேசத் துவங்கும்போது தான் வெரா வெளியே வருகிறாள். ‘ஸ்டாலினின் ரஷ்யாவில், அம்மா, அப்பா, தங்கை ஓல்காவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறாள் வெரா. பதினாறு வயதில் தன்னுடைய அன்புக்குரிய இளவரசனை அவள் சந்திக்கும் நாளில், அவளுடைய தந்தையை அரசாங்க கைதியாகச் சிறைபிடித்துப் போகின்றனர். அத்துடன் தந்தை பெட்ராவின் உடலைக் கூட மீண்டும் பார்க்கும் வாய்ப்பு அவளுக்கு கிடைக்கவில்லை. குடும்பத்தலைவரை இழந்தபின், மற்ற பெண்கள் அனைவரும் வேலை பார்த்து தான் வாழ்க்கை நடத்த முடியும் என்ற கட்டாயத்துக்குத் தள்ளப் படுகின்றனர். அம்மா, ரொட்டித் தொழிற்சாலைக்கும், வெரா புத்தகசாலைக்கும், ஓல்கா மியூசியத்துக்கும் வேலைக்குப் போகிறார்கள். கல்லூரிக்குப் போய், தந்தையைப் போன்று கவிதை படிக்க வேண்டும் என்ற வெராவின் கனவுகள் சின்னாபின்னமாகின்றன. அப்பாவுடன் வசித்த வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமல், அம்மாவின் அம்மா வீட்டுக்கு இடம் மாறி வருகின்றனர். அம்மா-அப்பாவின் காதலை எதிர்த்த பாட்டி முன்னால், அப்பா பற்றிப் பேசும் உரிமை கூட இல்லாமல் போகிறது.
நாட்டின் criminalஇன் மகள் என்ற முறையில், தன் தாய்நாட்டுப் பற்றை நிரூபிக்க வேண்டி இன்னும் இன்னும் அதிக வேலை பார்க்க வேண்டி வருகிறது வெராவுக்கு. யாரிடமும் பேசாமல், அறிவுப் பசிக்கு வேண்டிய தீனி கிடைக்காமல், வெரா சோர்ந்திருக்கும்போது, அவளுடைய இளவரசனை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இளவரசன் சாஷாவின் குடும்பத்தினர் அனைவரும் ஏற்கனவே ஸ்டாலினால் கைது செய்யப்பட்டிருந்தார்கள். சாஷாவுக்கும் வெராவுக்குமான தூய்மையான காதலை அங்கீகரிக்கும் வெராவின் தாய், சாஷா கவிதை படிக்கக் கூடாது என்ற வாக்குறுதியின் பேரில், அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய ஒப்புகிறாள். இருபது வயதுக்குள், அன்யா (மகள்), லியோ (மகன்) என்ற இரண்டு செல்வங்களைப் பெற்றெடுக்கிறாள் வெரா.
அதுவரை வசந்த காலமாக இருந்த வாழ்க்கையில் புயல் வீசும் விதமாக போர் வருகிறது. ஜெர்மானியப் படைகள் லெனின்கிராடை முற்றுகை இட்ட நாள் முதல், எல்லாருக்கும் உணவு ரேசன் அளவு குறைகிறது. வேலைக்குப் போகாதவர்களுக்கும் குழந்தைகளுக்கும் அளவு மிக மிகக் குறைவு. வங்கியில் பணம் இருந்தும் எடுக்க முடியாது தடை செய்யப் படுகிறது. சாஷா உள்ளிட்ட எல்லா ஆண்களும் போர்முனைக்குக் கிளம்பிப் போகிறார்கள். சில நாள் கழித்து, ஸ்டாலினின் ஆணையின் பேரில், குழந்தைகள் எல்லாரையும் ரயிலில் ஏற்றி பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தும் முயற்சி நடக்கிறது. பிள்ளைகளைப் பிரிய முடியாத வெராவும், தன் குழந்தைகளோடு கூடப் போகிறாள், பாதி வழியில் அந்த ரயிலை எதிரிகள் தாக்க அதிர்ந்து போய், தன்னால் முடிந்த அளவு பிள்ளைகளைக் காப்பாற்றிக் கொண்டு லெனின்கிராட் திரும்புகிறாள். கொஞ்ச நாள் கழித்து, அடுத்த அழைப்பு நகரத்தின் இளம்பெண்களுக்கு வருகிறது. வெராவும், ஓல்காவும், மற்ற பெண்களோடு லூகா நதியின் எல்லைக்குச் சென்று, நாள் முழுக்க மண்ணை நோண்டி குழிகள் உருவாக்குகிறார்கள். இதன் மூலம் எதிரிகள் அந்த பக்கத்திலிருந்து உள்ளே வருவதைத் தவிர்க்கும் வழி இது. எல்லா முக்கிய போர்க்கருவிகளையும் ஆண்கள் எடுத்துச் சென்றுவிட்டதால், வெறும், கம்பு, கரண்டி, நகம், கை என்று நோண்டும் இந்தப் பெண்களை நிறுத்த ஜெர்மானியப் படை குண்டு போடுகிறது. குண்டுச் சத்தம் கேட்கும் போதெல்லாம் ஓடி ஓடி ஒளிந்து கொண்டாலும், மீண்டும் மீண்டும் வந்து தோண்டுகிறார்கள் பெண்கள். ஒரு சில மாதங்களுக்குள்ளேயே ஓல்கா சோர்ந்து விடுகிறாள். உணவு உண்ணவும் வருவதில்லை, தன்னையொத்த பெண்கள் தன்னருகிலேயே இறப்பது பார்த்து அவளின் மனம் சோர்ந்து போகிறாள். அடுத்த ஒரு சில நாட்களில் பைத்தியம் மாதிரி, குண்டு பற்றிய எச்சரிக்கையை அவமதித்து, ஓடி மறையாமல், குண்டடிபட்டு இறந்து போகிறாள்.
குளிர்காலம் வந்து, இனி நோண்ட மண் இடம் கொடுக்காது என்ற போது, வெரா தனியாக வீட்டுக்கு வருகிறாள். அம்மாவுக்கு உடனே புரிந்து போகிறது, ‘சித்தி எங்கே?’ என்று கேட்டு பிள்ளைகள் தான் அழுதழது மாய்ந்து போகிறார்கள். ஜெர்மானிய முற்றுகையின் முதல் குளிர்காலம் மிகக் கொடுமையாக நகர்கிறது. உணவு ரேசன் இன்னும் குறைந்து போகிறது. கிடைக்கும் சிறதளவு பிரட் கூட மரத்துகள், கொள்ளு, போன்ற மனிதர் உண்ணத் தகுதியில்லாத பொருட்கள் நிறைந்து இருக்கிறது. டிசம்பர் தொடங்கிய போது, நீருக்கு வழியில்லாது போகிறது. வெரா வெகுதூரம் சென்று, உறைந்திருக்கும் தண்ணீரை எடுத்து வருகிறாள். கொஞ்ச நாளில் நகரப் போக்குவரத்து நின்று விட்டது. வேலைக்கும் எல்லோரும் நடந்து தான் போக வேண்டும். நகரின் பிரபலமான பிரட் கிடங்கில் வேலை செய்யும் பாட்டியும் அம்மாவும் அவ்வப்போது ஏதாவது திருடி வருவதை வைத்துத் தான் குழந்தைகள் உடல் நலத்தைப் பேண வேண்டி இருக்கிறது. எதிரியின் குண்டு விழுவது மட்டும் இன்னும் நின்ற பாடில்லை. வெராவின் வீட்டில் பதுங்கு குழிகள் இல்லாத காரணத்தால், பக்கத்து வீட்டு பதுங்கு குழிக்குத் தான் செல்ல வேண்டியதாய் இருக்கிறது. வெரா, அவள் வயதை ஒத்த மற்ற பெண்களைப் போல, குண்டு விழும் போது, கட்டிடங்கள் நெருப்புக்கு இரையாகாமல் பாதுகாக்கும் ரோந்து வேலையிலும் இருக்கிறாள். ஒருமுறை குண்டு விழும்போது அவள் விரைந்து சென்று நெருப்பை அணைத்ததால், அவளின் வீட்டைக் காப்பாற்ற முடிகிறது, ஆனால் அந்தக் குண்டு அவளின் பாட்டி வேலை செய்து கொண்டிருந்த பிரட் தொழிற்சாலையில் விழுந்து அவர்கள் வீட்டு உறுப்பினர் எண்ணிக்கையைக் குறைக்கிறது.
ஜனவரி தொடங்கும்போது, அம்மா மொத்தமாக படுத்த படுக்கையாகிவிட்டார். குழந்தைகள் பாதியாக இளைத்துவிட்டனர். குளிரில் உறைந்து இறக்காமல் இருக்க, வீட்டின் ஒவ்வொரு மரச் சாமானாக அடுப்புக்குப் போகிறது. அப்பாவுக்குப் பிடித்தமான புத்தகங்களில் பாதி நெருப்புக்கு இறையாகிவிட்டது. உணவு என்று சாப்பிடவது, வெறும் மரத்தூள், அவ்வப்போது ஒரு உருளைக்கிழங்கு, ஏன் ஒருதரம், அவர்கள் பேப்பர் சூப் கூட குடித்திருக்கிறார்கள். பெரியவள் அன்யா அம்மாவின் கஷ்டம் உணர்ந்து எதையாவது சாப்பிட்டு விடுவாள். சின்னவன் லியோ தான், சாப்பிட மறுப்பான். வெரா லைப்ரரிக்குச் சென்று வரும் அந்தச் சில மணி நேரம் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதே, கடினமான வேலையாக இருக்கிறது அம்மாவுக்கு. அம்மா இப்போதெல்லாம் சாப்பிடுவதே இல்லை- சாப்பிட முடிவதில்லை என்பது ஒரு காரணம் என்றால், இருக்கும் கொஞ்சம் உணவில், தனக்கும் பங்கு வைக்கச் சொல்ல அவருக்கு விருப்பமில்லை போல. வெராவால் குழந்தைகளா, அம்மாவா என்ற கேள்விக்கு உறுதியான முடிவெடுக்க முடியவில்லை. இப்போதெல்லாம் வெரா மார்க்கெட்டுக்குப் போவதே இல்லை. அங்கே போய் உணவு வாங்கி வர அவளிடம் ஏது பணம்? அத்தோடு, இப்போதெல்லாம் மார்க்கெட்டில் மனித மாமிசம் வேறு கிடைக்கிறதாம்! கேட்கவே பயங்கரமாக இருந்தது வெராவுக்கு. ஒரு இரவு அவள் வீட்டுக் கதவை யாரோ தட்டும் சத்தம். அவளைப் பார்க்க யார் வரப் போகிறார்கள்? பயந்து கொண்டே கதவைத் திறந்து பார்த்தால், சாஷா! வெராவுக்கு உயிர் திரும்பியது மாதிரி இருந்தது. சாஷா ஒரு நாள் அவளையும் அவள் பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டான். எல்லாருக்கும் ஊரை விட்டு வெளியேற வழி செய்து கொண்டிருப்பதாயும், அவள் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் விளக்கினான். சாஷாவைப் பார்த்த நிம்மதியிலேயே அம்மாவின் உயிர் போய்விட்டது. அம்மாவைப் புதைக்க சாஷா உதவி செய்தான். இருவருமாக அம்மாவை இடுகாட்டுக்கு இழுத்துப் போகும் வழியெங்கும் குளிரிலும், பசியிலும் இறந்து போன உடல்கள்! தோண்டக் கூட முடியாத உறைந்து போன பூமி! மற்றவர்கள் போல, இடுகாட்டில் அந்த உடலை அப்படியே போட்டுவிட்டுப் போக மனமில்லாமல் ஒரு பெரிய மரத்தடியில் இலைகளுக்கு இடையில் அம்மாவைப் புதைத்துவிட்டு வருகிறார்கள் சாஷாவும் வெராவும்!
சாஷா மீண்டும் போர் நடக்கும் எல்லைப் புறத்துக்குப் போய் நால்வருக்கும் நாட்டை விட்டு வெளியேற வழிசெய்யப் போகிறான். இன்னும் சில வாரம் தனியாக - இந்த முறை அம்மாவின் துணையும் இல்லாமல் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள வெரா துணிகிறாள். லியோவுக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போகிறது. வெரா குழந்தையைத் தூக்கும் சக்தியற்று பிள்ளைகள் விளையாடும் தள்ளுவண்டியில் லியோவைக் கட்டி ஆஸ்பத்திரிக்கு இழுத்துப் போகிறாள். டாக்டரைப் பார்க்க பெரிய வரிசை நிற்கிறது, சொல்லப் போனால் சிலர் அந்த வரிசையில் இறந்தே போயிருக்கிறார்கள்! ஏதோ ஒரு நர்ஸ் லியோவைப் பார்த்து மருந்து எழுதிக்கொடுக்கிறாள். ‘பெயர் என்ன?’ என்கிறாள் - ‘லியோ’ என்கிறாள் வெரா. ‘என் மகன் —– என்று இருந்தான்’ என்கிறாள் அந்த நர்ஸ் - கடைசியாக மிச்சமிருப்பது அந்தப் பெயர் மட்டும்தான் என்பது போல!
எல்லா உணவும் தீர்ந்து போய் கடைசி பிரட் துண்டத்தை மூன்றாகப் பங்கிட்டு சாப்பிட்ட அன்று வெராவுக்கு எல்லா நம்பிக்கையும் செத்துப் போகிறது. பசியையும் அடுத்து இல்லாமல் போய்விடுவோமோ என்ற பயத்தையும் வெற்றி கொள்ள கவிதை எழுதுகிறாள். அப்பாவின் கவிதைப் புத்தகத்தில் மிச்சமிருக்கும் பக்கத்தில் அவள் எழுதிக் கொண்டே இருக்கும்போது, சாஷாவிடமிருந்து தகவல் வருகிறது - அவர்களுக்கான பயணக் கடிதங்களுடன் ஒரே ஒரு sausage துண்டத்தையும் பதுக்கி அனுப்பி இருக்கிறான் சாஷா. செய்தி எடுத்துவந்த பக்கத்து வீட்டு இளைஞன், அன்று இரவு மீண்டும் வந்து கதவைத் தட்டுகிறான். குழப்பத்தோடு கதவு திறந்த வெராவுக்கு அவன் கையில் இருந்த வாட்காவும் பிரட்டும் ஆச்சரியமூட்டுகிறது. அவன் தாயார் இரவு தாங்க மாட்டார்கள் என்று எண்ணுவுதாகவும், அதனால் வெராவுக்கு அவளுடைய ரேசனான அந்த உணவைக் கொடுக்குமாறு அவள் சொன்னதாகவும் அவன் சொல்கிறான். வேண்டாம் என்று சொல்ல மனம் வராமல், வாங்கிக் கொள்கிறாள் வெரா. அவனுக்கும் சாஷா போன்ற போர்வீரர்களுக்கும் அரசாங்கம் போரிடப் போதுமான உணவு கொடுப்பார்கள். அவள் போன்ற குடிமக்களுக்குத் தான் ரேசன்!
அன்று வெரா தன் வாழ்நாளின் நெடிய பயணத்துக்குத் தயாராகிறாள். வீட்டில் எரியாமல், விற்காமல், சாப்பிடாமல், மிச்சமிருக்கும் எல்லா பொருட்களையும் சேர்த்தாலும் சின்ன பையில் நிரம்பி விடுகிறது. உணவையும், தந்தையின் கவிதைப்புத்தகத்தையும் தூக்கிக் கொண்டு பிள்ளைகளுடன் கிளம்புகிறாள். பாதி வழி செல்கையில் பிள்ளை லியோ ‘பசி, பசி’ என்று அழுதபடி உறங்கிவிடுகிறான். பசித்த மனிதர்கள் நிறைந்திருக்கும் ரயிலில் அந்த ஒரு மாமிசத் துண்டத்துக்காகவே அவளைக் கொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?! ஒரு நாள் பயணத்தில் அவர்கள் வந்திறங்கிய போது லியோ கண்திறக்க மறுக்கிறான். வெரா பயந்து போய் அடுத்த ஊரில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கிறாள். ஆஸ்பத்திரியில் அவன் இரண்டு மூன்று நாள் தாங்க மாட்டான் என்கிறார்கள். அடுத்த நாளே தான் பயணப்பட வேண்டும் என்று வெரா சொல்லும்போது, ‘இது போன்ற தேறாத கேஸ்களை நாட்டைவிட்டு அனுப்ப அனுமதிக்க மாட்டார்கள்’ என்கிறாள் அந்த நர்ஸ். ஒரு இரவுக்குப் பின் அதே நர்ஸ், ‘இவனைப் பிழைக்க வைக்க எங்களால் ஆகாது, ஆனால், இப்போது நீ போனால், இவளைக் காப்பாற்றலாம்’ என்று அன்யாவைக் காட்டுகிறாள். வெரா ஒரு உறுதியோடு அன்யாவை மட்டும் ரயிலேற்றி, அவளின் தந்தையிடம் அனுப்பி விடுகிறாள். அடுத்த நாள் லியோ இறந்து விடுகிறான் - scurvy - என்கிறார்கள்.
வெரா தாள முடியாத துயரத்தோடு கணவரிடம் போக ரயிலேறுகிறாள். வண்டி நின்றதும், அவளின் எஞ்சிய இரு கண்களான சாஷாவும் அன்யாவும் வரி வடிவமாகத் தெரிகிறார்கள். அவள் வேகமாக அவர்களிடம் ஓடும் போது ரயில் பாதையில் இருந்த குண்டு வெடிக்கிறது. அத்தோடு எல்லாரும் தனித் தனியாக சிதறுகிறார்கள். வெரா உயிர் பிழைத்து, எழும்போது அவள் ரயிலடியில் ஒரு சிகிச்சை முகாமில் இருக்கிறாள். அவளைத் தவிர ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை என்று அறிகிறாள். அத்தோடு அன்யா அணிந்திருந்த ஸ்வெட்டரின் ஒரு சின்ன பகுதி அவள் கைக்குக் கிடைக்கிறது. வாழ்க்கையின் ஒரே நம்பிக்கையை இழந்தபோதும் வெராவால் உயிரை மாய்த்துக் கொள்ள முடியவில்லை. ஜெர்மானியப் படையால் சிறைபிடிக்கப்படும் அவளை இவான் என்னும் அமெரிக்கர் கண்டெடுத்து, விரும்பி மணம் புரிந்து அமெரிக்கா அழைத்து வருகிறார்.’
அன்யா என்று தன் மகளின் பெயரைச் சூட்டிக் கொண்டு அமெரிக்கா வந்த வெரொனிகாவின் கதை அவளின் மகள்களின் மனநிலையை எப்படி மாற்றுகிறது, வெராவின் உயிரான அன்யா பிழைத்து வந்து அம்மாவைச் சந்திப்பது என்று கதை நல்ல மகிழ்ச்சியான விதமாக முடிகிறது.
புத்தகம் படித்து முடித்த முதல் ஒரு வாரம் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. கண்ணைத் திறந்து பார்த்தால், வெளியே நடந்து போனால் ஒருவேளை கதையில் வந்தது போல் குளிரில் உறைந்த உடல்கள் இருக்குமோ என்னும் அளவுக்கு என்னைப் பாதித்து விட்டது. Holocaust Surviver என்பார்கள் - இந்த siege of Leningrad Survivorகளும் அது போன்ற ஒரு extreme துன்பங்கள் பட்டவர்கள் தான். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ஒன்றுமில்லாமல், பேப்பரைச் சுரண்டி தின்பது என்றால்?! அப்பா!! படிக்கவே பயங்கரமாக இருக்கிறதே! லெனின்கிராட் முற்றுகையின் முதல் பனிக்காலத்தில் தான் நகரின் மூன்றில் இரண்டு பேர் உயிரை விட்டார்களாம் - குளிர், பசி, scurvy இவை தான் முக்கிய காரணங்களாம்! முதல் பனிக்காலத்தில் பிழைத்த ஒவ்வொருவரும், உயிருடன் இருக்கக் காரணம் மற்ற இரண்டு பேரின் தியாகத்தால் தானாம் - வெராவின் அன்னை போல, பக்கத்து வீட்டுப் பையனின் அன்னை போல, கடைசி சாப்பாட்டைத் துறந்தவர்கள் பலர் உண்டாம். நிஜமாகவே - அந்த முதல் குளிர் காலத்தில் - இறந்த மனிதரின் மாமிசத்தைக் கூட சமைத்துச் சாப்பிட்ட காட்டுமிராண்டித்தனம், நகரத்தின் சில இடங்களில் இருந்ததுவாம்! வெரா போல தப்பித்தவர்கள் நிறைய பேர். அப்படி நகரத்தை விட்டுப் பிரியாமல் இருந்த சிலரை அரசாங்கம் வெயில் காலத்தில் அப்புறப் படுத்தி, மேற்கு-கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பிவிட்டார்களாம். அத்தோடு, அடுத்த வருடம் கூட லெனின்கிராட்டில் இருக்க விரும்பிய மனிதர்களுக்கு, அரசாங்கமே விதைகள் கொடுத்து காய்கறி வளர்க்க உதவி செய்தார்களாம். முதன் முறையாக, சோவியத் ரஷ்யாவில், தன் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கும் காய்கறி வகைகளைத் தானே பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டதாம். இது தவிர தனியாக கூட்டுறவுத் தோட்டங்களிலும் வந்து விவசாயம் செய்ய மக்கள் அழைக்கப் பட்டார்களாம்.
வேனிற் காலத்திலேயே, பொதுக் கழிப்பிடங்கள், பொதுக் குளியலறைகள் கட்டப்பட்டு, அடுத்தடுத்த பனிக்காலங்களுக்கு லெனின்கிராட் தயார் செய்யப்பட்டது. மொத்தம் நான்கு வருடங்கள் நீடித்த லெனின்கிராட் முற்றுகை, முதல் வருடம் மட்டும் தான் பல உயிர்களைப் பலிவாங்கியது. கடைசியாக நான்காவது வருடம் அந்த ஊரில் இருந்த மக்களுக்கு அரசாங்கம் ‘medal for the defence of Leningrad’ என்று விருது வழங்கிக் கௌரவித்ததாம்!
The Winter Garden - முழுக்க முழுக்க கற்பனைக் கதை என்கிறார் ஆசிரியர். என்னால் ஒப்ப முடியவில்லை. ஏதாவது ஒரு வெராவையோ, அல்லது, ஒரு சில வெராக்களுடனோ பேசாமல், எப்படி இப்படி ஒரு கதையை எழுத முடியும் ? வெறும் ஆராய்ச்சி, வரலாற்றுக் கதைகள் வைத்து எப்படி இப்படி ஒரு காவியத்தைப் படைக்க முடியும்?
புத்தகம் படித்து முடித்தபின் “The Siege of Leningrad” குறித்து வேறு கதைகள் வந்திருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன், வேறு எதுவும் கிடைக்கவில்லை!

Tuesday, March 08, 2011

உலக மகளிர் தினம்…

எங்கள் புது டீமில் மொத்தமே மூன்று பெண்கள் மட்டும் தான்- அதிலும் என் ஊரில் இருக்கும் டீமில், நான் மட்டும் தான். எனக்கு முன்னால் இந்த டீம்மில் இருந்த மற்ற பெண்களுக்கும் சேர்த்து ஐந்து பேருக்கு இன்று காலை ஒரு வாழ்த்து மடல் அனுப்பினேன். நான் முன்னர் இருந்த டீமிலும் ஒன்றிரண்டு பேருக்கு நானே அழைத்து மகளிர் தின வாழ்த்துக்கள் சொன்னேன் - வந்த பதில்கள் மிக்க ஆச்சரியமாக இருந்தது. ரொம்ப பேருக்கு இப்படி ஒரு தினம் இருப்பது தெரியவில்லை. பல பேருக்கு மகளிர் தினம் எல்லாம் எதற்கு கொண்டாட வேண்டும் என்பது மாதிரி எண்ணம். ஒரு சிலர் ஆர்வமாக திரும்பச் சொன்னார்கள்..
உலக மகளிர் தினம் - முதன்முதலில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து தொழிற்சாலைகளில் வேலை செய்த போது, அவர்களுக்கும் ஆண்களுக்குமான சம்பளத்தில் பெரிய வித்தியாசம் இருந்தது. பெண்கள் பலமில்லாதவர்கள் என்ற எண்ணத்தில், அவர்களுக்கான சலுகைகள் மறுக்கப்பட்டன. இதை எல்லாம் எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர்களின் நாள்.. ஆனால், இன்றைக்கும் கூட பல இடங்களில் இந்த வித்தியாசம் தெரியத்தான் செய்கிறது.
நண்பர் ஒருவர் அவரின் டீம்மை உருவாக்கும்போது, ‘நல்லவேளை என்னுடைய டீமில் பெண்களே இல்லை’ என்றார். ‘ஏன் அப்படிச் சொல்றீங்க?’ என்றேன். ‘இல்லீங்க, நான் தான் பார்க்கிறேனே, மத்த டீம்ல உள்ள பொண்ணுங்க சரியா நாலு மணியானா கிளம்பிப் போயிடறாங்க.. எப்ப பார்த்தாலும் வீட்டுக்குப் போன் போட்டு பேசிகிட்டே இருக்காங்க.. காலைல 8:00 மணிக்கு மீட்டிங் வச்சா வரவே மாட்டேங்கறாங்க.. ‘
குற்றப்பத்திரிக்கையின் அளவு நீண்டுகொண்டே போனது. என்னுடன் வேலை பார்க்கும் 10 ஆண்களில் மூன்று பேர் 8 மணிக்கு மீட்டிங் வைத்தால் வர மறுப்பவர்கள் தான்.. ஒருவருக்கு அது ரொம்ப அதிகாலை, மற்ற இருவருக்கும் தத்தம் பிள்ளைகளைப் பள்ளியில் விடும் நேரம் அது தான். வேறு மூன்று பேர் மாலை நான்கு மணிக்குக் குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வரும் பொறுப்பில் இருப்பதால் அந்த நேரம் மீட்டிங் வைத்தால் ஒப்புக் கொள்ள முடியாது. ‘இதெல்லாம் ஒரு பிரச்சனையா, அப்புறம் அவங்க பெத்த பிள்ளைங்களை அவங்க தானே பார்க்கணும்’ என்றால், ‘அப்ப வீட்லயே இருக்கலாம் இல்ல, இல்லைன்னா ஸ்கூல்ல வேலைக்கு சேர்ந்தா அந்தப் பிள்ளைங்க கூடவே வீட்டுக்கு வந்துடலாம்’ என்று ஐடியா கொடுக்கிறார்!
எனக்கு நினைவு தெரிந்து, நான் வேலைக்குப் போகத் தொடங்கிய வருடம் முதல், என்னுடைய அம்மா தொடர்ச்சியாக இந்த மகளிர் தினத்துக்கு வாழ்த்துச் சொல்லுவார். ஆரம்பத்தில், நான் அதைப் பெரிதாக நினைத்தது இல்லை.. ‘அம்மா, ஆண்கள் தினம், பெண்கள் தினம் வேறயா.. என்னை நான் வேலை செய்யுமிடத்தில் எந்த வித்தியாசமும் பார்க்காம நடத்துறாங்க.. இதை எல்லாம் ஏன் நான் கொண்டாடி அதை நானே மறுத்துக்கொள்ளணும்?’ என்று கேட்டுவிட்டுப் போய்விடுவேன். முக்கியமாக, பெண்கள் தினம் என்றால், அது குறித்து எல்லா அழகு சாதனக் கடைகள், துணிக்கடைகளில் தள்ளுபடி விற்பனை களைகட்டும்போது, இது போன்ற ஒரு fancy தினத்தைக் கொண்டாடுவது ஒரு முட்டாள்தனம் என்று நினைத்ததுண்டு..
இன்று நானே வலிய போய் உடன் பணிபுரியும் பல தோழிகளுக்கு வாழ்த்தும் போது தான், என்னை விட வயதிலும், பதவியிலும், பல படிகள் மேலே இருக்கும் அவர்கள் கூட இது போன்ற தப்பான அபிப்ராயங்களில் இருப்பது புரிந்தது… என்னாலானது, இன்றைக்கு ஒரு நாலு பெண்களுக்கு உலக மகளிர் தினத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். நாள் முடியும் முன் இன்னும் சிலருக்கும் சொல்ல வேண்டும்..
இந்த வருடம், உலக மகளிர் தினத்தின் நூற்றாண்டு விழாவாம்!
படிக்கும் தோழிகளுக்கு - உலக மகளிர் தின வாழ்த்துக்கள்!!!