Friday, November 09, 2007

அடங்க மாட்டம்ல!

சென்னையில் இருந்த காலங்களில் ஏனோ மாவட்ட பொது நூல் நிலையங்களைப் பற்றி எல்லாம் யோசித்ததில்லை. நூலகங்களை அறிமுகப்படுத்தவேண்டிய எங்கள் பள்ளியிலோ, பள்ளிப் பாடங்களைத் தவிர மற்றவற்றைத் தொட்டுப் பார்ப்பதும் பாவமாக கருதப்பட்டது. இந்த ஊரில் ஒவ்வொரு தொகுதியிலும் நூலகங்கள் இருப்பதும் அவை பொதுவான அந்த வட்ட நூலகத்துடன் இணைந்து பணியாற்றுவதும் என்று நல்ல நூலகப் பின்னலாக கொஞ்சம் வியப்பேற்படுத்துவது உண்மை.
ஐஐடி நூலகத்தில், மிஞ்சி மிஞ்சிப் போனால் இருக்கும் புத்தகப் பட்டியலைச் சேமிக்கவும் அதில் தேடவும், ஒரு உள்வலைப்பின்னலுடனான கணினியைப் பார்த்திருக்கிறேன். எங்கள் கல்லூரி நூலகத்தில் அது கூட இருக்கவில்லை! ஆனால் இங்கே நூலகத்துக்கென்றே தனி இணையப் பக்கமும், இருக்கும் புத்தங்களை இணையத்திலேயே கண்டுபிடிக்கும் விதமும், தேவையான நூல்கள், பக்கத்து வட்டத்துக்குட்பட்ட நூலகத்தில் இருந்தாலும், இணையத்தில் பதிந்தாலே தருவித்துக் கொடுப்பதும், புத்தகம் திருப்பவும், நம் அட்டையில் எடுக்கவும் கூட பார் கோடுகளைப் படிக்கும் கணனி இயந்திரங்களும்… என்று கணனியை முழுமையாக பயன்படுத்துபவர்கள் இவர்கள் தான்.
சாண்டா க்ளாரா கவுண்டி லைப்ரரி புண்ணியத்தில், இதுவரை படிக்காத, படிக்க வாய்ப்பில்லாத நிறைய பழைய எழுத்தாளர்களின் புத்தகங்கள் படித்துவிட்டேன். துணைப்பாடமாக ‘செவ்வாழை’ படித்த நாளிலிருந்து ‘வேலைக்காரி‘யும் படிக்க வேண்டும் என்று அதீத ஆவல். எடுத்துப் படித்தபோது அண்ணா ரொம்பவும் ஏமாற்றிவிட்டார். மேடைப்பேச்சுக்குகந்த அவரின் தமிழ் நாடகத்தில் அதிகம் சோபிக்கவில்லை. பராசக்தி சினிமா போன்ற கொஞ்சம் அதீதமான கதைக்கரு; அப்பா செய்த தப்புக்குப் பழிவாங்க, அவரின் மகளைத் திருமணம் செய்து கொடுமைப்படுத்தும் கதாநாயகன். அறியாத வயதில் நான் எழுதிய அமெச்சூர் நாடகம் கூட இதைவிடத் தேவலை என்று தோன்ற வைத்துவிட்டார். நல்ல வேளையாக இரண்டு நாடகம் மட்டும் தான் எழுதியிருக்கிறார் என்றே எனக்குத் தோன்றியது.
அகிலனின் ‘கொள்ளைக்காரன்’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எதிர்பார்க்கக் கூடிய கதைதான் என்றாலும் கதை சொன்ன விதம் அருமை. அழகான கதை. துணைப்பாடப் பகுதியில் அகிலனின் ‘புயல்’ என்ற கதை படித்த போது, ‘ஏன் அகிலன் கதையெல்லாம் சேர்த்துவைக்கவில்லை?’ என்று எங்கள் வீட்டு நூலக உரிமையாளரான பாட்டியிடம் வருத்தப்பட்டதுண்டு. இப்போது புதையல் மாதிரி, அடுத்து ‘சித்திரப்பாவை’ சிக்கி இருக்கிறது.
ஏதேச்சையாக எடுத்து அதிசயமாக கிடைத்த இன்னொரு புத்தகம் சிவசங்கரியின் ‘அப்பா’. இரா.நடராசனின் ஆயிஷா படித்த பின்னர் சில நாட்களுக்கு, ‘சர் சி.வி.ராமனுக்குப் பிறகு நம் ஊரில் ஏன் ஒரு ஆராய்ச்சியாளர் உதிக்கவே இல்லை’ என்ற கேள்வி சுற்றிக் கொண்டே இருந்ததுண்டு. அப்போது தான் என் அப்பாவிடம் திடீரென்று நம்மூருக்கு மட்டுமே உரிய இட்லி தோசை மாவரைக்கும் இயந்திரங்களை யார் கண்டுபிடித்தார்கள்? என்று கேட்டுக் கொண்டிருந்தேன். ‘பூர்ணா, என்னாச்சு உனக்கு?! இதெல்லாம் பாடத்துல படிச்சிருப்பியே!’ என்று குட்டிவிட்டு ‘ஜி.டி.நாயுடு’ என்றார். ‘அட, ஆமாம்ல,’ என்பதோடு மேலும் துருவ அப்போதைக்கு நேரமில்லாமல் போய்விட்டது. திடீரென்று இங்கே வந்து ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு புத்தகம் கிடைக்கவும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். எழுதியவிதம் அவ்வளவாக ருசிக்கவில்லை.

முக்கியமாக நாயுடுவின் மகன் கோபாலின் பார்வையில் எழுதி இருக்கிறார் சிவசங்கரி. அப்பாவின் குறைகளாக கோபால் பார்ப்பவற்றை நிறைகளாகவும், நிறைகளாக அவர் குறிப்பிடுபவனவற்றை குறைகளாகவும் தான் என்னால் பார்க்க முடிகிறது என்பதால் கூட இந்தப் புத்தகம் திருப்திகரமாக இல்லாதிருக்கலாம். எப்படியும் நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றைத் தோண்டித் துருவ ஆரம்பமாக இருந்தது என்றால் மிகையில்லை. அதிலும், ஃபோர்டு போல, பில் கேட்ஸ் போல ஐடியாக்களைப் பணமாக்கும் ஆர்வம் நாயுடுவுக்கு இருந்தது. மக்களுக்குப் பயன்படும் உபகரணங்களைக் கண்டுபிடிக்கும் ஆவலும். வேறு நாட்டில் பிறந்திருந்தால் இன்னும் நிறைய செய்திருப்பாரோ என்னவோ. அவரின், பாதியில் நிறுத்திவிட்டுப் போன ஆராய்ச்சிகளை யாராவது தொடர்கிறார்களா என்ன?
இரண்டு மாதம் முன்னால் விமான நிலையத்தில் வாங்கி இங்கு வந்த முதல் வாரத்தில் படித்து முடித்தது வேல. ராமமூர்த்தியின் ‘கூட்டாஞ்சோறு‘. 1957இல் நடந்த முதுகுளத்தூர்க் கலவரத்தைப் பின்னணியாகக் கொண்டு, கலவரத்துக்கு முன்பான கள்ளர் சாதி மக்களின் வாழ்க்கை முறைகளை விவரிக்கும் நாவல். விறுவிறுப்பான கதை தான். ஆனால் கொஞ்சம் ஆங்காங்கே வேகம் குறைந்தாற்போல் இருக்கிறது. கதையில் வரும் ஒரு சாமியார், சாமியார் வளர்க்கும் பெண் போன்ற பாத்திரங்கள், இயல்பான வரலாறு என்று படித்துக் கொண்டிருப்பவர்களைத் தலையில் தட்டி, ‘இது ஒரு கற்பனைக் கதை’ என்று சொல்லிப் போகின்றன. திருடுவது தம் குலத் தொழில் அதில் எந்தத் தப்பும் இல்லை என்று நம்பும் வெள்ளந்தியான மனிதர்களைப் பற்றிய கதை. வெள்ளைக்காரர்கள் ஆண்ட இந்தியாவில் இந்த இனம் எப்படி ஒடுக்கப்பட்டது என்பதைப் பற்றிய வரலாற்றுப் பதிவு என்னும் வகையில் நன்றாகவே எழுதி இருக்கிறார்.
இடையில் இங்கே கூட கொஞ்சம் சீரியசான தமிழ் இலக்கியம் படிக்கும் தோழியைக் கண்டுபிடித்து அவரின் குட்டி நூலகத்திலிருந்து தாத்தா கி.ரா.வின் ‘கோபல்லபுரத்து மக்களை’ லவுட்டிக் கொண்டு வந்துவிட்டேன். முன்பு ‘செந்நெல்’ நாவல் இரவல் கொடுத்த நண்பர், ‘ உண்மையைச் சொல்லுங்க, இந்தக் கதை உங்களுக்குப் புரிஞ்சதா? இந்த அளவுக்கு வட்டார வழக்கு சென்னைப் பொண்ணான உங்களுக்குப் பழக்கமாயிருக்க வாய்ப்பே இல்லையே’ என்று நம்பிக்கையின்றி கேட்டுக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. தாத்தா எனக்குப் பரிச்சயமான தமிழ் கொஞ்சம் கூட தலைகாட்டிவிடாமல் கவனமாக எழுதி இருக்கிறார். ஆனாலும் புதிய வார்த்தைகளை அவ்வப்போது பழக்கிக் கொடுப்பதும், விளக்குவதுமாக அழகாக கதை சொல்கிறார்.

மற்ற புத்தகங்களையாவது அவ்வப்போது இடைவெளி கொடுத்துப் படித்தேன். ‘கோபல்லபுரத்து மக்கள்’ கையில் எடுத்தது கீழே இறங்காமல் ஒவ்வொரு பாகமுமாக இரண்டே நாளில் படித்து முடித்து விட்டேன். என்னுடைய இப்போதைய வேகத்துக்கு இதுவே ரொம்ப அதிகம் தான் :). தாத்தாவின் மற்ற புத்தகங்களை அடுத்து தேட வேண்டும்..
துணிகர முயற்சியாக அதே தோழியிடமிருந்து ‘ம்‘ வேறு வாங்கி வந்திருக்கேனாக்கும். இந்த வருட நன்றி நவிலும் தினங்களில் நான் பயங்கர பிஸி இப்பவே சொல்லிக்கிறேன் ;-)

Friday, November 02, 2007

எங்க ஊரு ஹாலோவீன் ஸ்பெசல்

இந்த ஊருக்கு வந்த பின்னர் அதிகம் செய்யும் அதி முக்கியமான வேலையைத் தான் அன்றும் செய்து கொண்டிருந்தேன் - தொலைபேசியில் தோழியுடன் அரட்டை!. இதே ஊரைச் சேர்ந்த தோழி என்பதால், பொதுவாக அடுத்த நாள் வரப் போகும் ஹாலோவீன் பண்டிகை பற்றியும், அதற்கு என்னென்ன ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது தான் அது நடந்தது
எங்கள் வீட்டை யாரோ ஒருவர் இரண்டு கைகளாலும் அப்படியே தூக்கிப் பிடித்து ஆட்டுவது போல் சுவரெல்லாம் ஆடியது. மரத்தாலாகிய வீடாதலால், சத்தமும் அதிகமாக இருந்தது. அத்துடன் உலுக்கல் கொஞ்ச கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே போனது.
பொதுவாகவே இந்த வீட்டில் துணி உலர்த்தும் இயந்திரங்களையோ, பாத்திரம் கழுவும் இயந்திரத்தையோ இயக்கினாலே பெரிய சத்தம் கேட்பது இயல்பாக இருப்பதால் அப்படி ஏதோ ஒரு புதிய இயந்திரத்தைத் தான் அறைத்தோழி தவறுதலாக போட்டுவிட்டார்களாக்கும் என்று முதலில் நினைத்தேன். போனை முடித்துக் கொண்டு அவரை அழைத்துச் சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருக்கையில், எதிர்முனையில் தோழியும், “ஏய் என்ன ஆடுது?! ஹே, Earthquake! earthquake!!” என்று சத்தமிட்டுக் கொண்டே அவர்கள் வீட்டாரை எச்சரிக்கச் சென்றுவிட்டார்.
ஒருமாதிரியாக விசயம் புரிந்து கதவைத் திறந்து வெளியே வந்தேன். இணையத்தில் பேசிக் கொண்டிருந்த அறைத்தோழியும் என்னுடனேயே வெளியே வந்தார். ‘என்னங்க, இப்படி ஆடுதே!’ என்று பயந்து கொண்டே இருந்த அவரைச் சமாதானப்படுத்தி கொஞ்சம் ஆட்டம் நின்றவுடன் மீண்டும் வீட்டுக்குள் போனோம். அலுவலகம் முடிந்து திரும்பிவிட்டிருந்த அருகாமை வீட்டு மனிதர்களும் கூட ஒன்றிரண்டு பேராக வெளியேறி வந்து நின்றுகொண்டிருந்தனர்.
வாழ்நாளில் அனுபவிக்கும் முதல் நிலநடுக்கம் என்பதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எந்தச் சேதமும் இல்லாமல் லேசாக குலுக்கிக் காட்டிவிட்டுப் போய்விட்டது.
‘அட! நமக்குக் கூட பூமி இப்படி குலுங்கி நடுங்கி வேடிக்கை காட்டுகிறதே’ என்று மலர்ச்சி வேறு.
உடனே கூகிளாண்டவரைப் பிடித்து விவரம் கேட்டால், எதிர்பார்த்தது போலவே கட்டம் போட்டுக் காட்டிவிட்டார். எங்கள் வீட்டிலிருந்து ஐந்து மைல் தொலைவில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவுக்குப் பதிவாகி இருந்ததாம். எந்தச் சேதமும் இல்லாமல் சாதாரண நடுக்கம் தானாம்.

படித்து முடிப்பதற்குள், அடுத்தடுத்து தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கிவிட்டன.. ‘என்னம்மா, நல்லாக்கீறியா?’ என்பதிலிருந்து, ‘என்னங்க, ரெண்டு வருடமா இங்க இருக்கேன், இன்னி வரை இப்படி பூமி ஆடிப் பார்த்ததில்லை.. நீங்க வந்த உடனே இதெல்லாம் கூட்டி வந்துட்டீங்க?’ என்பதுவரை வரிசையாக அழைப்புகள்..
ஓடும் ரயிலில் இருந்தவர்கள் ரயில்கள் நின்று போய் பூமி நிற்க காத்திருந்ததைச் சொன்னார்கள். தூங்கிக் கொண்டிருந்த சிலருக்கு தெரியவே இல்லையாம். ஒரு நண்பனை அலுவலகத்தில் வெளியேறச் சொன்னதாகவும் அத்தோடு விட்டால் போதும் என்று வண்டி எடுத்து ஓடி வந்துவிட்டதாகவும் நிலநடுக்கத்துக்கு நன்றியோடு சொன்னான்.
‘ஏங்க, aftershocks எல்லாம் வரும்னு சொல்லுவாங்களே! இன்னும் கொஞ்ச நேரம் வெளியில் போய் இருந்துட்டு வருவோமா?’ என்றார் அறைத்தோழி.
‘அதெல்லாம் இதை விட சின்னதா இருக்கும். என்னங்க, சும்மா 5.6 ரிக்டர் தானே! இதெல்லாம் ஒண்ணுமே இல்லீங்க!’ என்று ஆறுதல் சொல்ல வேண்டியதாகிவிட்டது.
அடுத்த நாள் அலுவலகத்தில் மதியம் போல மீண்டும் லேசான நடுக்கம். எனக்குத் தான் ஏதோ தலைசுற்றும் உணர்ச்சி போலும் என்று நினைத்தால், முதல்நாள் மாலையிலிருந்து பூமி நடுங்கிக் கொண்டே தான் இருந்திருக்கிறது! சின்னச் சின்ன அதிர்வுகள், 2 ரிக்டருக்கும் கீழான அதிர்வுகளை யாரும் கண்டு கொள்ளாததில் கோபப்பட்டு அடுத்த ஒரு 3.7 ரிக்டர் அதிர்வைக் காட்டிப் பயமுறுத்தி இருக்கிறது!
ம்.. இன்னும் கூட அவ்வப்போது நடுங்கி நடுங்கி, இந்த நிமிடம் வரை 165 தொடர்நடுக்கங்கள் பதிவாகி இருக்கின்றன. இன்னும் கூட பெரிய நிலநடுக்கம் வரலாம் என்பதற்கு இது ஒரு அறிகுறி என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
கலிபோர்னிய ஆளுநர் தான் பாவம், தெற்குப் பக்கம் இப்போது தான் இரண்டு உயிர்களைப் பலிவாங்கிய நெருப்பை அரும்பாடுபட்டு அணைத்திருக்கிறார்கள். அதற்குள்ளாக வட பகுதியில் நிலம் வேறு நடுங்கி பீதியைக் கிளப்புகிறது. எனக்கென்னவோ ஹாலோவீன் பேய்த்திருவிழாவைப் பூமியும் கொண்டாடி சும்மா வம்பு பண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. அடுத்த பெரிய நடுக்கம் வரும்வரை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டியது தான் :-)