Saturday, March 31, 2007

ஆமாமாம், நானும் ஒரு கிறுக்கு தான்...

கிறுக்குத்தனங்கள், விபரீத குணங்கள், விசித்திர பழக்கங்கள் இல்லாத மனிதர்களே இல்லை என்று தோன்றுகிறது, சமீபகால வியர்டு பதிவுகள் பார்த்து. என்னுடைய கிறுக்குத்தனங்களை எழுதச் சொல்லிக் கேட்ட அஞ்சா நெஞ்சர்களின் லிஸ்ட் இங்கே:

முதலில் அத்தனை ஆர்வம் இல்லாமல் தான் இருந்தது, ஆனால், எப்படியாவது யாழ்ப் பட்டியலில் சேர்ந்து விடுவது என்ற முடிவோடு, ஒரு உந்துதலோடு எழுத ஆரம்பித்திருக்கிறேன் இன்று ;)


1. புத்தகம் வாசிப்பது: வலைப்பதிவர் அனைவருக்கும் ஒரு பொதுவான குணமாக தெரிகிறது. அதிலும் சாப்பிட்டுக் கொண்டே வாசிப்பது இயல்பாகவே ஆகிவிட்டது. சிறுவயதில் என்னுடைய வாசிப்பிடங்கள் இருட்டானவையாக இருக்கும். பீரோக்களின் சந்துகளில், கட்டில் அடியில், அரிசி பீப்பாய் பின்புறம் என்று எளிதில் தேடிக் கண்டுபிடித்து யாரும் தொல்லை செய்யாத இடத்தில் ஒண்டிக் கொண்டு படிக்கப் பிடிக்கும். வளர்ந்த பின்னர், அதாவது இந்த இடங்களில் நுழைய வசதியில்லாமல் போன பின்னர், எல்லா நேரங்களிலும் என் கையில் புத்தகம் இருந்த நாட்கள் உண்டு. ஓடும் ரயிலில், பேருந்தில், எனக்கே இடமில்லாத ஷேர் ஆட்டோக்களில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து போகையில், முன்பு வசித்த புறநகர் பகுதியில் சைக்கிள் மிதிக்கையில், என்று அசைந்து கொண்டே படிக்கப் பிடிக்கும். பாலை அடுப்பில் வைத்துக் கொண்டே புத்தகம் படித்து பலநாள் புதுமனை புகுவிழா நடத்தி இருக்கேனாக்கும்.

2. பேசுவது: கணினி, பூனை, நாய், செடி, கொடிகளுடன் பேசுபவர்கள் பற்றிப் படிக்கையில், "அட நான் கூட இப்படித் தானே!" என்று நினைத்துக் கொண்டேன். இவற்றுடன் கூட, எனக்கு நானே பேசிக் கொள்வது அடிக்கடி செய்யும் செயல். பொதுவாக வண்டி ஓட்டும் பொழுது, துணி துவைக்கையில், பாத்திரம் துலக்குகையில், யாருக்காவது காத்திருக்கையில் என்று தனியாக இருக்கும்பொழுது ஏதேனும் யோசித்துக் கொண்டே என்னை அறியாது பேசி விடுவேன். ஒருமுறை இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டே நான் வீராவேசமாக என்னுடன் சண்டை போட்டுப் பேசிக் கொண்டே போவதை நண்பனின் தாயார் பார்த்துவிட, அன்று முழுவதும் ஓட்டித் தள்ளிவிட்டார்கள். வேலையில் சேர்ந்த புதிதில் நான் கணினியுடன் பேசுவதைக் கேட்டு பக்கத்து காபின் நண்பர் வேறிடம் மாற்றிக் கேட்குமளவுக்குத் தொல்லை செய்திருக்கேன் :)).

3. வாகனம் ஓட்டுவது: ஆளில்லாத சாலையில், அது என்ன வண்டியாக இருந்தாலும், வண்டி எடுத்து தனியே ஓட்டிக் கொண்டே போக பிடிக்கும். சைக்கிள் ஓட்டிய காலங்களில் சென்னையின் புறநகரான மடிப்பாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி பகுதிகள் முழுக்கவும் இப்படிச் சுற்றி இருக்கிறேன். கூடியவரை புதுப்புது வழிகள் கண்டுபிடிப்பது வழக்கம். இப்போது கூட தினமும் ஒரே வழியில் பயணிப்பது அலுத்துப் போய் வெவ்வேறு வழிகள் கண்டுபிடித்துக் கொண்டே போவேன்.

4. கோபம்: ரொம்பவும் கலகலப்பானவள் தான், அதிகம் யார் மேலும் கோபம் வராதுதான். ஒருமுறை என் வண்டியில் மோதி விபத்துக்குள்ளாக்கிய ஆட்டோக்காரரைக் கூட அந்தக் கணம் திட்டத் தோன்றாத காந்தீயவாதிதான் ;), ஆனால், சில சமயங்களில் எதற்கென்றே தெரியாமல் ஒரு அனாவசியக் கோபம் வந்துவிடும். வெறுப்பு, டிப்ரெஷன் என்றும் சொல்லலாம். அதுபோன்ற சமயத்தில் யாரிடமாவது பேச நேர்ந்தால் கத்தி கலாட்டா பண்ணிவிடுவேன். பல சமயங்களில் நெருங்கிய நண்பர்கள் தான் இத்தகைய கோபத்துக்கு ஆளாவர்கள். அப்புறம் கூப்பிட்டு வெகுநேரம் மன்னிப்பு கேட்பேன். ஆனால், கொட்டிய வார்த்தைகளை அள்ளவா முடியும்? இப்போதெல்லாம் இந்தக் காரணமற்ற கோபம் குறைந்திருப்பதாக நம்புகிறேன். நண்பர்களைத் தான் கேட்க வேண்டும், பாவம்.

5. அதீத ஆர்வம், அல்லது ஆர்வமின்மை. ஏதாவது ஒரு விசயத்தில் ஆர்வம் உண்டானால், ஒரே ஆர்வக் கோளாறாக இருப்பேன். ஆனால், திடீரென்று அந்த விருப்பம் விட்டுப் போய்விடும். அப்படியே ஒதுங்கிவிடுவேன். ஐந்து வயதில் அடம்பிடித்து கேரம் போர்டு வாங்கி விளையாடி, ஆறுவயதில் அந்த போர்டை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு பல்லாங்குழி விளையாடப் போய்விட்ட கிறுக்குத்தனத்தை இன்றும் என் அப்பா சொல்லிக் காட்டிக் கொண்டே இருப்பார். தையல், பின்னல் போடுவது, மொழி கற்பது, பாட்டு கற்பது, கலர்கலர் வளையல், காதணி சேர்ப்பது, சின்னச் சின்ன பென்சில் சேர்ப்பது, தபால்தலை சேகரிப்பு, சுட்டிவிகடன் பொம்மைகள் செய்வது என்று எல்லா பொழுதுபோக்குகளும் ஒருசில நாள் ஆசை தான். வாசிக்கும் பழக்கம் மட்டும் தான் இத்தனை நாள் தொடர்ந்திருக்கிறது. விந்தையான விசயம் அதுதான் என்று தோன்றுகிறது.

இன்னும் ஐந்து பேரைக் கூப்பிடும் எண்ணமெல்லாம் இல்லை. எல்லாரும் எழுதிவிட்டார்கள் போலத் தெரிகிறது. அதனால் இத்தோட ஜூட் :).

Thursday, March 29, 2007

தம்பிக்கு... (சிறுகதை)

"என்ன ரேங்க்டா?" என்றார் அப்பா, பாலு நீட்டிய பிராக்ரஸ் ரிப்போர்ட்டைக் கையில் வாங்கியபடியே.

"ரெண்டாவதுப்பா" ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியுடன் சொன்னான் பாலு.

"ம்ம்ம்." என்று பதில் சொன்ன அப்பாவின் குரலில் அதிகம் சுரத்தே இல்லை.

"ராமுவை விட ரெண்டு ரேங்க் முன்னால் எடுத்திருக்கேன்பா.." அவசர அவசரமாக பாலு சொல்லவும், அப்பா எந்தவித உணர்ச்சியுமில்லாமல் தலையாட்டினார்.

"சரி சரி, உள்ளே வந்து கைகால் கழுவிகிட்டு பலகாரம் சாப்பிடுப்பா" என்று அம்மா அன்போடு அழைக்கவும் பாலு சோர்வு பொங்க உள்ளே போனான்.

"இன்னைக்கும் இட்லி தானா? அதுக்கு ஒரு சட்னியாவது செஞ்சி வைக்கிறியா நீ!" என்று குற்றப்பத்திரிக்கையோடு பலகாரத்தை முடித்துக் கொண்டு வெளியே வரவும் ராமு அப்பாவுடன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

"நாலாவது ரேங்க் எடுத்திருக்கியாமே நீ?! வெரி குட்" என்று சொல்லிக் கொண்டிருந்தார் அப்பா.

"ஆமாம் அங்கிள் கொஞ்சம் குறைஞ்சு போச்சு இந்த முறை. தம்பி வாசுவுக்கு சுரம் வந்துடுச்சு இல்லையா, அதான் சில நாள் ஸ்கூல் தவறிப் போச்சு. " வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தது ராமுவே தான்.

"இந்தா, இந்த முறை நல்ல ரேங்க் எடுத்தா நான் தரேன்னு சொன்ன வாட்ச். வச்சிக்க.." புத்தம்புதிதாக ஒளிரும் கைக்கடிகாரம் ஒன்றை எடுத்து அப்பா நீட்டிய போது பாலுவுக்கு அதிகபட்ச கோபம் வந்தது. "அடுத்த முறையும் நல்லா வந்தால், சைக்கிள் வாங்கித் தருவேன் தெரியுமா?" என்று அவர் சொன்னதைக் கேட்க பாலு அங்கில்லை.

அவனும் எத்தனை நாட்களாக கைக்கடிகாரம் ஒன்று வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறான். இன்று வரை அவனுக்குக் கொடுக்காமலேயே அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் அப்பா. ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வரும்போதும் அவனுக்குக் கைக்கடிகாரம் உறுதி என்று நினைத்துக் கொள்வான், இதுவரை அப்பா அவனை இப்படிப் பாராட்டியது கூட இல்லை. போய் அந்தக் கடிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டு வந்துவிடலாமா என்று பார்த்தான். இருந்தாலும் அப்பாவிடம் அவனுக்குக் கொஞ்சம் பயம் தான். சட்டென சமையலறைக்குத் திரும்பிப் போய்விட்டான்.

"என்னப்பா கண்ணா, வெளியே விளையாடப் போவலியா?" என்றாள் அம்மா, ஆசையாக.

"ஆமாம். அது ஒண்ணு தான் கொறச்சல் இப்போ!"

பாலுவின் குரலைக்கேட்டு அம்மா அருகில் வந்தாள். "என்னப்பா பாலு, என்னவோ முணுமுணுக்கிறே?! அப்பா இருக்காரா வாசற்பக்கம்?"

"ஆமாம்.. அப்பாவாம் அப்பா.. என்னைக் கண்டாலே அவருக்கு ஆகிறதில்லே. பாரு, பக்கத்துவீட்டு ராமுவை அப்படிச் சீராட்டிகிட்டிருக்காரு! வாட்சாம், சைக்கிளாம்!"

"அவன் நல்ல பையன்; பாவம், அம்மா அப்பா இல்லாத பையனில்லையா.. அதான் கொடுக்கிறார்!"

"அப்போ நான் என்ன கெட்ட பையனா.. ம்ஹும் உனக்கும் என்னைப் பிடிக்கலை இல்லையா?"

"அப்படி இல்லைடா கண்ணா, நீயும் நல்ல பையன் தான்" தலையை வருடிக் கொடுத்த அம்மாவின் கரத்தைத் தட்டிவிட்டுவிட்டு, பின்பக்கமாகவே வெளியில் ஓடிப் போனான் பாலு.

*****************************

"ராமு! விளையாட வரியாடா?!" எங்கே வந்துவிடுவானோ என்று பயந்தபடி பார்த்தான் பாலு.
நல்லவேளை, "இல்லேடா, நீங்க விளையாடுங்க. நான் என் தம்பி வாசுவை ஸ்கூலிலிருந்து கூட்டி வரணும்." என்றபடி நடந்து போனான் ராமு.

அதே சமயம், "ஏய் பாலு!" என்று அம்மா அழைத்தார்கள்.

"என்னம்மா? எதுக்கு இப்போ சத்தம் போடுறே?"

"உன் தம்பி சந்துருவை டியூசனிலிருந்து கூட்டி வரணும்.. கொஞ்சம் போய்ட்டு வரியா?"

"அடப்போம்மா.. எனக்கு விளையாடப் போவணும்.. அவனை நீயே போய்க் கூட்டி வர வேண்டியது தானே!"

அதிக வேலைச் சுமையினூடே இதை எப்படிச் செய்வதென்று தெரியாமல் அம்மா வருத்தப்பட்டதில், போனால் போகிறதென்று கிளம்பிப் போனான் பாலு.
******

பாலு சைக்கிள் ஓட்டும் அழகே தனி. அதிவேகமாக அவன் ஓட்டும் போது அது சைக்கிள் மாதிரியே இருக்காது. ஏதோ ரேஸ் குதிரை மாதிரி பறக்கும். தம்பியை வண்டியில் பின்னால் அமர வைத்துக் கொண்டு வண்டியை எடுத்தான் பாலு.

"அண்ணா, இந்த ஸ்கூல் பையைக் கொஞ்சம் நீ எடுத்துக்கிறியா.. ரொம்ப கனமா இருக்குண்ணா!" திக்கித் திணறித்தான் சொன்னான் தம்பி.

"அடப் போடா, உன்னைச் சுமக்கிறதே பெரிய வேலை. இதுல உன் பையை வேற நான் சுமக்கணுமோ.. எல்லாம் முதுகில மாட்டிகிட்டே உட்காரு!" எகத்தாளமாக சொல்லிக் கொண்டே பாலு வண்டியை மிதித்தான்.

குதிரை மாதிரி பாய்ந்து சென்ற வண்டியைத் திருப்பத்திலும் அதே வேகத்தில் விட்டது தான் பாலு செய்த தவறு. முன்னால் சாலையைக் கடந்து கொண்டிருந்த இருவர் மீது வண்டி கிட்டத்தட்ட மோதுவது போல் போயிற்று. அதிலும், கொஞ்சம் மெதுவாக சென்று கொண்டிருந்த சின்னப் பையனின் மீது நிச்சயமாக மோதி இருப்பான், கூட இருந்தவன் அவனைப் பிடித்திழுத்திராவிட்டால். அதிர்ச்சியில் உடனே பிரேக் பிடிக்கக் கூட தோன்றாமல், கொஞ்சம் தள்ளிப் போய் வண்டியை நிறுத்தினான் பாலு.
வந்து கொண்டிருந்தது, ராமுவும் அவன் தம்பியும் தான். தம்பியைப் பிடித்து இழுத்ததில் பாலன்ஸ் தவறி ராமு கீழே மண்ணில் விழுந்துவிட்டான்.
"சாரி ராமு.." குரல் நடுநடுங்க பாலு சொல்லவும், முட்டிக்காலில் சிராய்த்த இடத்திலிருந்து எட்டிப் பார்த்த இரத்தத்தைத் துடைத்தபடியே, "பரவாயில்லை பாலு! வாசு கொஞ்சம் மெதுவாத் தான் நடப்பான். அது தான் பிரச்சனை. என் மேல தான் தப்பு. அவனைப் போய் இந்த ரோட்டைக் கிராஸ் பண்ணத் தனியா விட்டிருக்கக் கூடாது.." ராமு சொல்லவும், பாலு கூனிக் குறுகிப் போனான்.

பதிலுக்குக் காத்திராமல், விபத்தின் அதிர்ச்சியில் பயந்து போய் அழத் தொடங்கிவிட்டிருந்த தம்பியைத் தட்டிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தி, அவன் பை மட்டுமில்லாமல் அவனையும் கொஞ்ச நேரம் தூக்கிவைத்துக் கொண்டு நடந்த ராமுவைப் பார்த்துக் கொண்டே இருந்த பாலுவுக்குத் தன் தவறும் அப்பா ராமுவைக் கொண்டாடுவதற்கான காரணமும் மெல்ல புரியத் தொடங்கியது.

'தன்னை அழைத்துப் போக வந்ததால் தான் இந்த விபத்து நிகழ்ந்துவிட்டது' என்று அண்ணன் குற்றம் சாட்டப் போகிறானோ என்று எதிர்பார்த்து பயந்து குறுகிக் கொண்டு அமர்ந்திருந்த தம்பி சந்துருவை ஆதரவாக பார்த்த பாலு அவன் முதுகில் இருந்து பையை வாங்கிக் கொண்டு பாசமாக அவன் தலையைத் தடவியும் கொடுத்தது சந்துருவுக்கு மிகப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. அன்றிலிருந்து தம்பி விசயத்தில், பாலுவின் மனமாற்றத்தைக் கவனித்த அவர்கள் அம்மா, அப்பாவுக்கும் தான்!


கோப்புக்காக இங்கே.. பிரசுரித்த தமிழோவியத்திற்கும் தேர்வு செய்த அன்றைய சிறப்பாசிரியர் லக்கிலுக்கிற்கும் நன்றிகளுடன்...

Tuesday, March 27, 2007

ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது

'பெண்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்', 'பெண்புத்தி பின்புத்தி' என்பது போன்ற பழமொழிகள்/பொதுமொழிகள் உருவானதற்கு ஒரே காரணமாக, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் முன்வைப்பது ஆண்கள் சமைப்பதில்லை என்பது தான். "நச்சரிக்கும் வீட்டு வேலைகளைப் பெண்கள் தலையில் கட்டிவிட்டு, வீடு, சமையல் போன்ற தளைகள் அவர்கள் கால்களைப் பிடித்து இழுத்துக் கொண்டே இருக்கும் பொழுது எப்படி மற்ற உலக விசயங்களில் அவர்களால் கவனம் செலுத்த முடியும்? பழமொழிகள் எதிர்பார்க்கும் முன்யோசனைக்காரிகளாய் அவர்களால் எப்படிப் பிரகாசிக்க முடியும்?" என்ற கேள்வியை முன்வைக்கிறது இந்தப் புத்தகம்.

"ஆதிகாலம் முதலே சமைப்பது ஆணின் தொழில். ஏமாற்றிப் பெண்கள் தலையில் ஏற்றிவிட்டார்கள்" என்று தொடங்குகிறது "ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது" புத்தகம். மானுட இனத்தின் தோற்றம், பரிணாம வளர்ச்சி என்று சரித்திரங்களிலிருந்து சமையல் வரை மெல்ல மெல்ல அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர்.

தானே சமைத்துச் சாப்பிடவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுமே என்ற ஒரே காரணத்திற்காக, வெளிநாடுகளுக்குப் போகத் தயங்கும் என் தோழனிடம் "ஒரு மனிதன் தான் உயிர் வாழத் தேவையான உணவைத் தானே சமைக்கத் தெரியாவிட்டால், அவன் வாழ்வதற்கே தகுதியில்லாதவன்" என்று பழிச்சண்டை போட்டுக் கொண்டிருக்கும் என் கையில் இந்த மாதிரி, "சமையல் என்பதே முழுதாக, மொத்தமாக ஆணின் வேலை தான்; பெண்கள் செய்யத் தேவையே இல்லை" என்று சொல்லும் புத்தகம் கிடைத்தால் விட முடியுமா? (என்னத்த சொல்ல, தோழனுக்குத் தமிழ் படிக்கத் தெரியாது. ஆங்கிலப் பெயர்ப்பு இருக்கான்னு கேட்க வேண்டும்..)

சமையல் பெண்பாற்தொழில் ஆனதன் காரணங்களை வேண்டிய மட்டும் அலசிய பின்னர், சமைத்தல் வரலாற்றுக்குள்ளும், உணவின் அரசியலுக்குள்ளும் புகுந்து வேகமெடுக்கிறது புத்தகம். இந்திய சமையல் என்று இன்று அழைக்கப்படும் சமையலில் எப்படி ஒவ்வொரு கட்டத்தில் அரேபியர், சிரியர்கள், கிரீஸ், சீனர்கள், போர்த்துகீசியர்கள் என்று பல நாட்டு விளைபொருட்களும் சமையல் முறைகளும் எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை விளக்குகிறார் நூலாசிரியர். ஒருசில உணவுவகைகளை விட்டு ஒதுங்குதல், ஒதுக்குதல் மூலம் எப்படி மனிதர்களிடையே உயர்வு-தாழ்வு கற்பிக்கப்படுகிறது என்னும் உணவின் அரசியலையும் தொட்டுச் செல்லத் தயங்கவில்லை.

வரலாற்றை அடுத்து சமையலறையின் சுற்றுக் காரியங்களை விளக்குகிறார். அடுக்களையின் ஒழுங்கு, சுத்தம், பாத்திரங்கள் அடுக்கும் முறை, தரை மொழுகுதல், கழுவுதல், பொருட்களைத் தேவையான சமயத்தில் வாங்கி நிரப்புவது என்று ஒவ்வொரு சின்னச் சின்ன தகவலையும் திறம்படத் தொகுத்துத் தருகிறார். வீட்டை விட்டு முதன்முதல் வெளியூர் சென்று நாங்கள் சமையலறை அமைத்தபொழுது செய்யவிட்டுப் போன விவரங்கள் கூட இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. "எங்கள் உறவினர் வீட்டில், திருமணமாகி தனிக்குடித்தனம் போகும் பெண்ணுக்கு ரூல்ட் நோட் போட்டு சின்னச் சின்ன சமையற்குறிப்புகள் எழுதிக் கொடுத்திருந்தார் அவர் தாயார்." என்று எப்போதோ படித்த மங்கையர் மலர் சிறுகுறிப்பு நினைவுக்கு வருகிறது. ரூல்டு நோட்களை விட, நண்பனின்/சகோதரனின் திருமணத்தில் பரிசளிக்க மிக நல்ல புத்தகம் இது தான்.

சமையலறை ஒழுங்குக்கு அடுத்து சமையலறைக் காதல் மிக அழகான பகுதி. கணவனும் மனைவியுமாக சமைக்கும் பொழுது பேசும் ஒவ்வொரு வார்த்தையுமே கவிதை தான் என்பதைப் படிக்கையில், எங்கள் வீட்டில் அம்மாவும் அப்பாவும் (கொஞ்சம் அலுத்துக் கொண்டாலும்) சேர்ந்து சமைக்கும் நாட்களின் நினைவு வந்து போவதைத் தடுக்க முடிவதில்லை. என்ன இருந்தாலும் அடுக்களைக் காதல் அழகு தான் :)

அரிசிக்கும் பருப்புக்கும் தெரியாது -
சமைப்பது ஆணா பெண்ணா என்பது.
யார் மூட்டினாலும் அடுப்பு எரியத்தான் செய்கிறது.
அரிசி வேகத்தான் செய்கிறது. ஆனாலும் சமைப்பது
பெண்களின் வேலை தான் என்கிற மனப்பதிவு
ஆண்டாண்டு காலமாய் நமக்குள் அழுத்தமாய்க் கிடக்கிறது.
.....
அம்மாவையும் மனைவியையும்
மகளையும் உயிரினும் மேலாய் நேசிக்கிற
நாம் அவர்களின் விடுதலை பற்றி
நிஜமாகவே அக்கறை கொண்டுள்ளோமா?

- ச. தமிழ்ச்செல்வன்அழகு என்றதும் அடுத்த அத்தியாயம் சமையலின் அழகியல் பேசுகிறது. ஒவ்வொரு பதார்த்தமும் காய் நறுக்கும் அளவுகளில் தொடங்கி, மசாலா அளவுகள், மஞ்சள் பொடி அளவுகள் என்று ஒவ்வொரு கட்டத்திலும் அழகுக்கான கூறுகள் கொட்டிக் கிடப்பதை நூலாசிரியர் விளக்கும்போது, பழக்கத்தின் காரணமான செய்முறை மூலமே கற்கும் இது போன்ற விவரங்களை முழுமையாக பட்டியலிட ஏன் வேறு புத்தகங்கள் இல்லை என்ற கேள்வி எழுகிறது.

சமையலின் வரலாறு, சுற்றுக் காரியங்கள், அழகியல் என்று எல்லா வெளிவிவகாரங்கள் மூலம் கொஞ்சங் கொஞ்சமாக இழுத்து, சமையலறையின் உள்ளே கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர். அடுப்பின் வகைகள், அவற்றைப் பயன்படுத்தும் முறைகள், தேவையான பாத்திரங்கள், கரண்டிகள் போன்ற சமையல் சார்ந்த பொருட்களை அறிமுகப்படுத்தி அப்படியே தொடர்ந்து, குழம்பு, ரசம் போன்றவற்றிற்கான மசாலா பொடிகள், வடகங்கள், இட்லி, தோசைப் பொடிகள் ஊறுகாய் வகைகள் போன்ற முன் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளின் சமையற்குறிப்பையும் முன்வைக்கிறார்.

சமையலின் முன் தயாரிப்புகளையும், சமைப்பதற்கான காரண காரியங்களையும் கொஞ்சம் விரிவாகவே அலசும் இந்நூல், தினசரி சமையலுக்கான குறிப்புகளைக் குறைவாகவே கொண்டிருக்கிறது. சாதம், குழம்பு, ரசம், பொரியல், கூட்டு, தோசை, இட்லி, சப்பாத்தி, பூரி, குருமா, உப்புமா போன்ற சுலபவகை குறிப்புகளுடன் நிறுத்திக் கொள்கிறார் நூலாசிரியர். எப்படியும், இந்த அடிப்படை சமையல் குறிப்புகள் தெளிவாகிவிட்டால், அடுத்தடுத்து வெவ்வேறு பெரிய புத்தகங்களைப் படித்து நன்றாக சமைக்கத் தொடங்கிவிடலாம் என்பதும் உண்மை தான். அடிப்படை சமையற்குறிப்புகள் கூட பொதுவான சமையற்குறிப்பு புத்தகங்கள் சொல்வது போன்ற மேலோட்டமான - அதாவது ஏற்கனவே வெந்நீர் வைக்கும் அளவுக்காவது தெரிந்தவர்களுக்கான- குறிப்பாக இல்லாமல், சமையல் பற்றி ஏதும் தெரியாதவர்களுக்கான சின்னச் சின்ன விவரங்களையும் சேர்த்துச் சொல்கிறது.

நடனம், இசை, தையல், எம்ப்ராய்டரி போன்ற நுண்கலைகளும், மாரல் ஸ்டடிடீஸ், கணக்கு போன்ற தினசரி வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களையும் கொண்டு விளங்கும் நமது பாட திட்டத்தில் சமையல் கலைக்கு ஏன் இடமில்லை? ஏதேதோ வேதியல் வினைகளை அடுப்புகளுடனும், ஆசிட்களுடனும் சின்ன வயதிலேயே சோதித்துப் பார்க்க முடிந்த குழந்தைகள் ஏன் சமையல் மட்டும் கற்பதில்லை?

இந்த நூல் எனக்குள் ஏற்படுத்திய இந்தக் கேள்விக்குப் பதில் பல வகையாக இருக்கின்றன. சமையல் வேலைகளை, பெரிய மனம் கொண்டு ஆண்கள் இப்போதெல்லாம் பகிர்ந்து கொண்டாலும், அடிப்படையில் இந்தப் பெண்கள் தொழிலை ஆண்களுக்கு எப்படிச் சொல்லிக் கொடுக்க முடியும்? கோ-எட் பள்ளிகளில் இதைச் செய்யாமலும் ஒதுக்குவதும் சிரமம்.

இன்னுமொரு காரணம், பொதுவாக சமையல் ஒவ்வொரு இனக் குழு சார்ந்த பயிற்சியாக இருக்கிறது. அந்தந்த இனக் குழுவில் இருப்பவர்கள் அவர்தம் வழிமுறைகளுக்கும், வீட்டு வழக்கங்களுக்கும் ஏற்ப சமையலின் சில சின்னச் சின்ன விவரங்களைக் கற்கிறார்கள். முற்காலத்தில் பெண்களே தத்தம் கணவன் வீடுகளுக்குப் போனபின்னால் தான் சமையல் கற்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கணவன் வீட்டாரின் ருசிகளுக்கும் வழக்கத்திற்கும் ஏற்றாற்போல், சமைத்து புகுந்த வீட்டுப் பெருமையையும் பிறந்தவீட்டுப் புகழையும் கட்டிக் காக்க அவர்களுக்கு இந்த வழி அவசியமாக இருந்திருக்க வேண்டும். இந்தக் காரணத்துக்காகவும் ஒரு பொதுவான சமையலறை, பள்ளிகளில் சாத்தியமில்லாமல் போயிருக்கலாம்.

எப்படியோ, இனிமேல் சமையலென்று ஒரு பாடத்தைச் சேர்ப்பதாக இருந்தால், புத்தகம் தனியாக அச்சடிக்க வேண்டாம். "

இந்தப் புத்தகத்தின் வரவேற்பைப் பார்த்தபின், ஆண்களுக்கான சமையற்பட்டறைகளை உருவாக்கும் யோசனை ஆசிரியருக்கு இருந்திருக்கும் என்பது முன்னுரையில் தெரிகிறது. டிசம்பர் 2006இல் முதற்பதிப்பு கண்ட புத்தகத்தின் சமையற்பயிற்சி பட்டறை ஜனவரியிலேயே சாத்தியமாகி இருக்கிறது. இன்னும் இது போன்ற பயிற்சிப் பட்டறைகள் எண்ணிக்கை அதிகமாக ஆக, நூலாசிரியர் கற்பனை செய்யும் 'சமையலறைக் காதல்கள்' சீக்கிரமே தமிழகமெங்கும் சாத்தியமாகிவிடும் என்றே தோன்றுகிறது.


புத்தகம் : ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது
ஆசிரியர் : ச. தமிழ்ச்செல்வன்
வெளியிட்டோர் : வாசல்,
4 Oடி/4, முதல் தெரு,
வசந்த நகர்,
மதுரை - 625 003
செல் - 98421 02133
முதல் பதிப்பு : டிசம்பர் 2006
விலை : ரூ 45/-முதலடி எடுத்துக் கொடுத்து உதவிய ஆசிப் அண்ணாச்சிக்கு இந்த இடுகை சமர்ப்பணம் :-D

அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்

தனி மனிதன் இடமற்ற இடத்தில் (Non-Place) வாழ நேர்ந்தவன். அனுதினமும் மொழி, தேசம், இனம் போன்ற அடையாளங்களைத் தொலைத்து வருபவன். தவிரவும் புலம் பெயர்தலால் கலாச்சார அதிர்ச்சிகளுக்கு ஆளானாவன். நிச்சயமற்ற இருத்தலின் விளைவாக சமநிலை குலைந்து போனவன். இயல்பிலேயே இரட்டைத்தன்மை கொண்டவன். இதனால் சமயங்களில் இவன் தான்(Ego) வேறு தன் ஆன்மா(Alter Ego) வேறு என்று பிரிந்து போக நேர்கிறது. அதன் விளைவாக தன் ஆன்மாவுடனேயே தான் மோதிக் கொள்ளும் மல்யுத்தம் சாத்தியமாகிறது.

இந்த யுத்தம் சம்பந்தமற்றதை இணைக்கிறது (Fuses), சம்பந்தமுள்ளதைக் குழப்புகிறது (Confuses), கால வித்தியாசத்தைக் கடந்து எல்லாக் காலங்களுக்குமாக வியாபிக்கிறது (Diffuses). எனவே இவனைப் பற்றி பின்னப்படும் ஒரு கதை பல கதைகளாகத் தன்னைப் பெருக்கிக் கொள்வது (Autofiction) தவிர்க்க முடியாததாகிவிடுகிறது
என்ற குழப்பமான முன்னுரையோடு தொடங்கியது புதுப்புனல் பதிப்பகத்தின் "அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்" புத்தகத்தினுடனான என் பயணம்."வரலாற்று நாவல், சமூக நாவல் என்று பிரித்தே படித்திருக்கிறோம், இரண்டும் கலந்த ஒரு நாவல் தமிழில் இல்லையா?" என்று நண்பரிடம் கேட்ட காரணத்தால் என் கைக்கு வந்து சேர்ந்தது இந்தப் புதினம்.

சரித்திரத்தின் இணையற்ற வீரன் மகா அலெக்ஸாண்டரின் மரணப்படுக்கையிலிருந்து தொடங்கும் இந்த நாவல், சமகாலத்தில் அலெக்ஸ் என்ற புலம்பெயர்ந்த ஈழத் தமிழனின் வாழ்க்கையையும் ஏககாலத்தில் விவரிக்கிறது. சரித்திரகால அலெக்ஸ் பாரசீகத்தில், தன் மரணப்படுக்கையில் பழைய நினைவுகளில் தோய்ந்து எழும்பொழுது, சமகால அலெக்ஸ் எகிப்தில் ஒரு மோசடி வேலையில் இறங்கி இருக்கிறான்.

சரித்திர நாவலாக அலெக்ஸின் பிறந்தநாள் தொட்டு ஒவ்வொரு நிகழ்வும் அவன் கண்வழியே சொல்லப்படுகிறது. தன்னுடைய தவறுகள், வெற்றிகள், வித்தியாசமான சந்திப்புகள், கேளிக்கைகள், குற்றங்கள் என்று அலெக்ஸின் உள்ளே கனன்று கொண்டிருக்கும் போர்வெறியை அழகாக சித்தரிக்கிறார் ஆசிரியர்.

இன்னொரு பக்கம், இளவயதிலிருந்து போரின் கொடுமைகளால் அலைக்கழிக்கப்பட்டு, போரே பிடிக்காமல் போன சமகால அலெக்ஸ், அவனை உளவு பார்க்க வந்திருக்கும் இலங்கை அரசாங்க ஒற்றன் ரனில் என்று வெவ்வேறு கால நிலையை ஆரம்பத்திலிருந்தே அழகாக சொல்லிச் செல்கிறார்.

ஏனோ, தமிழ்சினிமா பார்த்துக் கெட்டுபோன எனக்கு, கதையில் ஒரு நாயகி வந்த பின்னால் தான் சுறுசுறுப்பாக படிக்க முடிகிறது. அதுவரையிலான எழுபது பக்கங்களை இரண்டு மாதமாக தடவிக் கொண்டிருந்தவள், நாயகி ருக்ஸானா வந்த பின்னால் ஒரே இரவில் கீழே வைக்காமல் படித்து முடித்துவிட்டேன்.

இந்த இரண்டு அலெக்ஸாண்டர்களைத் தவிர, அமெரிக்க உளவாளிகள், சர்வதேச பயங்கரவாதிகள், சமகாலத்தின் மற்றொரு போர்ப்பிரதேசமான குர்திஸ்தானின் இனப் போராட்டம் என்று கதை பல்வேறு திசைகளில் பயணிக்கிறது. கடந்த காலம், நிகழ்காலம் தவிர்த்து, எதிர்காலத்துக்குள்ளும் பிரவேசிக்கிறார் ஆசிரியர்.

காலயந்திரம் போன்றதொரு கற்பனையில் கதைநாயகன் சமகால அலெக்ஸும் அவன் தோழி ருக்சானாவும் வெவ்வேறு எதிர்காலங்களுக்குப் போய்வருகிறார்கள். IF-ELSE-ENDIF வைத்து எழுதிய C நிரலி மாதிரி, எல்லாமே சாத்தியமாகக் கூடிய வருங்காலங்களாகத் தான் தோன்றுகின்றன..

  • அணுஆயுதப் போரில் பெரும்பாலும் அழிந்து பதுங்கு குழிகளுள் மனிதர்கள் வாழும் ஒரு உலகம்,
  • செயற்கையான பரிணாம வளர்ச்சியால், அதீத மனிதன், மனிதன், உப மனிதன் என்று வர்ணாசிரம தர்மத்தின் நூதன வடிவத்தில் பிரிந்து இன்னும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் உலகம்,
  • உண்மையான கம்யூனிச ஆட்சி மலர்ந்து அரசாங்கங்கள் அழிந்த மக்களாட்சி மிக்க மற்றொரு உலகம்,
  • சுற்றுச்சூழல் பிரச்சனைகளால் பூமியை விட்டுவிட்டு வெவ்வேறு கிரகங்களுக்கு மாறிப் போய்விட்ட ஒரு உலகம்

என்று வெவ்வேறு எதிர்காலங்கள் சித்தரிக்கப்படுகின்றன.

இந்தப் பல்வேறு வருங்காலங்களின் பிரச்சனைகள், சிறப்புகள், வசதிகள், புரட்சிகள், monotony என்று எல்லாவற்றையும் பேசுகிறார் ஆசிரியர்.

  • அதீத மனிதர்கள் உலகத்தின் தலைவன் சேர்மன் அலெக்ஸாண்டர்,
  • எல்லா மனிதர்களிடையிலும் அதீத சமநிலை வலியுறுத்தும் கம்யூனிச உலகம் ஒரே மாதிரி இருப்பதால் வெறுத்துப்போய் தற்கொலை செய்ய விரும்பும் கலைஞன் அலெக்ஸாண்டர்,
  • சமகாலத்தில் காரணமின்றி தீவிரவாதி என்று சந்தேகத்திற்கு உட்படுத்தப்படுவதால், சர்வதேச தீவிரவாதிகளுடன் இணைந்து மோசடிக்கும்பலுக்கு உதவும் வரைகலைஞன் அலெக்ஸாண்டர்,
  • போர்வெறி பிடித்த பண்டைய அலெக்ஸாண்டர்

- அனைவரும் ஒன்றாக சந்தித்து அவரவர் சூழல் சார்ந்த மனநிலையில் பேசும் பகுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

குர்திஸ் இனப் போராளி ஓசலோன் பற்றிய குறிப்புகள், அலெக்ஸாண்டரின் வாழ்க்கை வரலாறு, சி.ஐ.ஏ விசாரணை முறைகள், எகிப்தின் தற்கால வாழ்நிலை, பிரமிடுகளின் பண்டைய வரலாற்றுச் செய்திகள் என்று பலதுறை குறிப்புகளில் ஆசிரியரின் உழைப்பு மிக அருமையாகத் தெரிகிறது. ஆங்கில நாவலாக இருந்திருந்தால், கண்டிப்பாக இது ஒரு பெஸ்ட் செல்லராகி இருக்கும்.

தமிழில் வரலாற்றுப் புதினங்கள், சமகால புதினங்கள் என்ற பெயரில் ஓரிரு குடும்பங்களுக்குள் நிகழ்பவற்றை முன்வைக்கும் சமூகக் கதைகள், இதிகாச, புராண, வரலாற்று நையாண்டிகள் என்று ஒரே மாதிரியான நாவல்கள் படித்திருந்த எனக்கு, இந்த பல்வேறு காலங்களையும் தொட்டுப் போகும், சமகால அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் ஆழ்ந்த தெளிவில்லாமலேயே மேலோட்டமாக கொஞ்சமே உள் அரசியலைத் தொட்டு சொல்லிச் செல்லும் அதிரடி, துப்பறியும், சர்வதேசம் சார்ந்த ஒரு வேகமான தமிழ்நாவல் நல்லதொரு வாசிப்பனுபவமாக இருந்தது. ஒரு கதை பல கதைகளாக பெருக்கிக் கொள்ளும் ஒரு ஆட்டோபிக்சன் கதையில், ஒவ்வொரு கதையையும் என்னால் தொடர முடிகிறதென்பதையும், இன்னும் அதைப் புரிந்து ரசிக்கவும் முடிகிறதென்பதையும் இன்னமும் நம்பமுடியவில்லை.புத்தகம் : அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்
ஆசிரியர் : எம்.ஜி. சுரேஷ்
வெளியிட்டோர் : புதுப்புனல் பதிப்பகம்
முதல் பதிப்பு : டிசம்பர் 2000
விலை : ரூ 115/-

Thursday, March 22, 2007

போட்டி முடிவுகள்: விடை தேடும் வினா? :

நிறைய பேர் படிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விரும்புவதை மட்டும் கொடுப்பதற்கு பதிவுகளா?

அல்லது

நமக்கு விருப்பமானதை, நாம் சொல்ல விரும்புவதை அனைத்தையும் சொல்ல நமது பதிவுகளா?

போன முறை போல் தலைப்பில் சில நெருடல்கள் இருந்தன. விவாதிப்பவர்கள் கண்டிப்பாகச் சுட்டிக் காட்டுவார்கள் என்று நாங்களும் விட்டுவிட்டோம். இது போன்ற தலைப்பின் கருத்துக் குழப்பங்களையும் சேர்த்துச் சுட்டிக் காட்டக் கூடியவர்கள் பங்கு கொள்ளும் பொழுது தான், இந்த விவாதங்கள் சரியான திசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதையும் உணர முடிகிறது.

எனவே, தலைப்பில் லேசான குழப்பம் இருப்பதை உணர்ந்து, அதில் தெளிவைக் கேட்டுப் பெற்ற இனியன் மற்றும் முத்துலட்சுமியின் பின்னூட்டங்களுக்குப் பின்னான பேச்சுக்களையே கருத்தில் கொண்டு தான் இந்த விவாதத்தின் வெற்றியாளரைத் தேர்வு செய்ய முடியும்.

ஒரு இடுகைக்கு நிறைய பின்னூட்டம் வருகிறது என்றால், அந்த இடுகையின் கருத்து நிறைய பேருக்குப் போய்ச் சேருகிறது. ஆக, நிறைய பேர் பின்னூட்டம் இடும் வண்ணமான, நிறைய பேர் ஒப்புக் கொள்ளும் விதமான வார்ப்பிலேயே நம் கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிறார் முத்துலட்சுமி. முத்துலட்சுமி கருத்துக்கு ஓரளவுக்கு ஒட்டி வருகிற, அதாவது நிறைய பின்னூட்டம் வேண்டும் என்று ஒரு பதிவர் நினைத்தால் அவர் நகைச்சுவைகளை மட்டுமே எழுதலாம் என்று பேசியிருக்கும் நிலா, நடுவில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்களையும் தலைப்புத் திருத்தங்களையும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

எதிரணியில் பேசியிருப்பவர்கள், ராமச்சந்திரன் உஷாவும் இனியனும். "குழந்தைகள் வளரும் கால கட்டங்களில் ஆரம்பகால பாராட்டுகளாக பின்னூட்டங்கள் அவசியம், ஆனால், கொஞ்சம் வளர்ந்த பின்னர், நம் கருத்துக்களுக்காக நமது வலைப்பதிவு என்று மாறுவது மிக முக்கியம்" என்ற உஷாவின் வாதம் ரொம்பவும் ஏற்புடையாதாக தோன்றுகிறது. முக்கியமாக, இனியன் சொல்லும்,

"மற்றவர்கள் விரும்புவதைத் தான் எழுதவேண்டும் என்றால்.. யார் அந்த மற்றவர்கள்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் இருக்கும். எல்லோருடைய விருப்பத்தையும் பதிவு எழுதும் உங்களால் பூர்த்தி செய்ய இயலுமா? என் கருத்தோடு ஒத்துப்போகிறவர்களின் விருப்பத்தை மட்டுமே நிறைவேற்றுகிறேன் என்று நீங்கள் சொன்னால்.. அதில் உங்கள் விருப்பமும் அடங்கித்தானே இருக்கிறது. பின் எப்படி விருப்புவதை எழுதினேன் என்று சொல்லி விட முடியும்..?"


போன்ற பகுதிகள் கண்டிப்பாக சிந்தனையைத் தூண்டுபவை. அதிலும்
"நாம் எழுதும் பதிவுகளை படித்த உடன் எதிரில் இருக்கும் ஒருவர் உடனடியாக திருந்த வேண்டும் என்று சினிமா பாணியில் எதிர்பார்ப்பது மடத்தனம். நம் எழுத்து ஒருவரை கொஞ்சம் நம் கோணத்திலிருந்து சிந்திக்க வைத்தாலே மாற்றத்திற்கான விதை தூவப்பட்டு விட்டது என்று பொருள் கொள்ள முடியும். அதுவே பெரிய சாதனை தான்."
என்பது மிக நல்ல புரிதல். இதை எழுதுபவர் இன்னமும் வலைப்பதிவு வாசகர் தான் என்பதை எண்ணிப் பார்க்கையில், ஆச்சரியம் கூடுவதும் உண்மை; வாழ்த்துக்கள் இனியன்.

இதன் பின்னரும்,
"நிறைய பேர் படிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விரும்புவதை மட்டும் கொடுங்கள் அதில் உங்கள் விரூப்பத்தை இணைத்துக்கொள்ளுங்கள்"

என்னும் முத்துலட்சுமியின் சமரசம், எடுபடவில்லை என்பதை வருத்தத்துடன் சொல்ல வேண்டி இருக்கிறது.

தாமதமாக உட்புகுந்து அடித்து ஆடி முதல் வருகையிலேயே வெற்றி பெற்ற இனியனுக்கு என் வாழ்த்துக்கள்; சீக்கிரமே, உங்க பதிவிலும், உங்களின் ஆக்கங்களைக் காண ஆசை என்ற கோரிக்கையுடன்..

[பொன்ஸ் பக்கங்களின் ஆண்டு விழாவை ஒட்டி இந்தப் பட்டிமன்றத்தை நடத்துவதற்கு யோசனையும் இடமும் கொடுத்த சிந்தாநதிக்கு நன்றி :)) முதலிலேயே சொன்னால் எல்லாரும் ஓடிப் போயிடப் போறாங்களோன்னு போட்டி முடிந்த பிறகு... :)) ]

Friday, March 16, 2007

அப்படி எல்லாம் விட்ருவோமா?!

இதோ, அதோ என்று அந்தத் துயர சம்பவம் நடந்து இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. அதாங்க, நான் வலைபதியத் தொடங்கிய சம்பவம் தான் \:D/

வெட்டியாக, ரொம்ப வெட்டியாக, ஒரு வேலையும் இல்லாமல், அலுவலகத்தில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு சமயம், சென்னை நெட்வொர்க்கில் கதை படித்துக் கொண்டிருந்தவள், அப்படியே கைதவறி கைப்புள்ளயின் பதிவு உரலைத் தட்டிவிட்ட பொழுது தொடங்கியது இந்தக் கிறுக்கு. அந்தச் சமயம் கைப்ஸ் தன் தம்பியுடன் அடித்த கூத்துகளை விலாவாரியாக எழுதிக் கொண்டிருந்தார். இயல்பாகவே நகைச்சுவை மிகவும் ரசிக்கும் நான் அதைப் படித்து, அதன்பின் அவருடைய அடுத்தடுத்த பதிவுகளுக்குள் விழுந்து எழுந்து, நாலு பதிவு விளையாட்டு உரலைக் கண்டுபிடித்தேன். விளையாட்டு கனஜோராக நடந்து கொண்டிருந்த அந்தச் சமயத்தில் ஒவ்வொருவரும் அடுத்தவரின் லிங்குகளைக் கொடுத்துக் கொண்டே வந்ததால், ஒவ்வொரு பதிவராக பிடித்துப் படித்துக் கொண்டே வர எனக்கும் ஏதுவாகிற்று.

எப்படியோ துளசிதளத்தில் தரையிறங்கிய போது, அக்கா அப்போதைய இந்தியச் சுற்றுபயணம் பற்றி பதிவெழுதிக் கொண்டிருந்தார். அதைப் படித்துவிட்டு, சரி, 'துளசி அக்கா, சென்னை வந்தால் நாம் கூட அவரைப் பார்க்கலாமே!' என்று நான் கேட்க, அவை 'இரண்டு மாதம் முந்தைய பயண விவரம்' என்று அவர் சொல்ல, நல்ல பல்பு அது :-) [அப்பா! இந்த சொல்லையெல்லாம் பயன்படுத்தி எத்தனை நாளாச்சு! பதிவிலக்கியத்தில், இதை மட்டும் எப்படி விட்டோம்?! ]

ஒவ்வொன்றாக தட்டி கடைசியாக பிளாக்கர் கணக்கு, தமிழில் எழுதுவது என்று எல்லாவற்றையும் பின்னூட்டங்கள் மூலமாக மட்டுமே கற்றேன். பிளாக்கரில் கணக்கு தொடங்கியாச்சு. வீட்டில் இருக்கும் பழைய கதைகளைப் பதிவிடலாம் என்று முடிவும் செய்தாச்சு. பு(ஆ)னைப்பெயர் கூட தேர்ந்தாச்சு. [பொன்ஸ் என்ற பெயர் வைத்த கதை தனிக்கதை.ஆரம்பத்தில் என்னுடைய பெயரை நெருங்கிய தோழியொருத்தி சுருக்கி அழைப்பது போல் poons என்று தான் வைத்திருந்தேன். அதைத் தமிழில் படித்த பினாத்தலார் பொன்ஸ் என்று மொழிபெயர்த்ததில், ரொம்ப பிடித்துப் போய் அப்படியே மாற்றியாச்சு. நடுவில் என் பாட்டி பெயரும் பொன்னம்மாவானதால், இந்தப் பெயரே விருப்பமானதாகிவிட்டது. நன்றி பினாத்தலார் ]. ஆனால், இத்தனை செய்தபின்னர் எழுதுவதில் ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது.

என் முதல் பதிவை இப்போது படித்தாலும் எனக்கே ஆச்சரியமாக இருக்கும். ரொம்ப ரொம்ப கொடுமையான பதிவு அது. அதை எழுதி முடித்து பப்ளிஷ் தட்டுவதா வேண்டாமா என்று வெகுநேரம் யோசித்து, ரொம்ப நேரம் கழித்து பிரசுரித்துவிட்டு ரியாக்ஷன்களுக்குப் பயந்து (ஏன் பயந்தேன் என்று இப்போதும் ஆச்சரியமாக இருக்கு), அப்படியே ஆறு மணி பஸ் பிடித்து வீட்டுக்கு ஓடி விட்டேன். மறுநாள் வரும் வழியெல்லாம் யோசித்துக் கொண்டே வந்தேன். "இதெல்லாம் தேவையா உனக்கு? எழுதுறவங்க எல்லாம் பெரியாளுங்க போலிருக்கு.. உனக்கெல்லாம் சரிபட்டு வருமா என்ன? பேசாம போய் அந்தப் பதிவை அழிச்சிடலாம்" என்று நினைத்து நான் வரவும், எனக்கு ரொம்ப பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. முத்து(தமிழினி), ராசா, ஜீவா, கீதாக்கா, கார்த்திக் ஜெயந்த் என்று நிறைய பேர் வந்து பின்னூட்டம் போட்டிருந்தார்கள்.. இவங்க பின்னூட்டங்கள் இல்லை என்றால், நீங்கள் ஒருவேளை இந்த அறுவையிலிருந்து தப்பியிருந்திருக்கலாம்.. ஏதோ உங்க கெட்ட காலம் ;))

ஆரம்பம் தான் அப்படி பயந்து பயந்து.. ஆனால் பாருங்க, அடுத்தடுத்த நாட்கள், கன்னாபின்னாவென்று கண்டதையும் எழுதியதில், மார்ச் மாதமே ஒன்பது பதிவுகள்! ஏப்ரல், மே - இல் ஏதோ கொஞ்சம் படிக்கிற வேலைகள் இருந்ததால் குறைந்தது, மீண்டும் ஜுன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவு என்று விடுமுறை நாட்கள் தவிர்த்த மற்ற நேரங்கள் ரொம்ப பிஸியாக இருந்தது பிளாக்கர் :)

பதிவுலகத்தில் என் முதல் நண்பர் என்றால் பாலபாரதியைத் தான் சொல்ல வேண்டும். "இப்படிப் பயந்து பயந்து எழுதுதே இந்தப் பொண்ணு" என்று நினைத்தோ என்னவோ, "அடிக்கடி டெம்ப்ளேட் மாத்தாதீங்க", "கவிதை எழுதாதீங்களேன் ப்ளீஸ்!" என்று ஏதேதோ யோசனை சொல்லிக் கொண்டிருந்தார் மனிதர். நம்மதான் எதையுமே சொன்னால் கேட்கிற சாதி இல்லையே.. யார் என்ன சொன்னாலும் விடாது கவுஜ என்ன, டெம்ப்ளேட் என்ன என்று எதையெதையோ செய்து கொண்டே இருந்தேன். பதிவுகளில் முதலில் போனில் பேசியதும் பாலாவிடம் தான். எனக்கு யோசனை சொன்ன நேரம், கை உடைத்துக் கொண்டு வீட்டில் இருந்ததாக கேள்விப்பட்டபோது பாவம் என்று நான் போன் போட, 'அவர் பேச, நான் கேட்க; நான் கேட்க, அவர் பேச' இப்படியாக எங்கள் முதல் போன் பேச்சு வார்த்தை ஒரு பக்கச் சார்பாகவே அமைந்தது. இப்ப வரைக்கும் பாலாவிடம் போன் போட்டு 'ஹலோ' தவிர ஒரு வார்த்தை நீங்கள் அதிகமாக பேசிவிட்டால், நீங்கள் பெரியாள் தான் :)). யோசித்துப் பார்க்கும் போது, பா.க.சவின் விதை அப்போதே விழுந்துவிட்டதாகக் காண்கிறது. அது டார்மெண்டாக இருந்து கொஞ்சம் வளர்ந்து மூன்று இலை விடத் தான் ஆறுமாதங்கள் ஆகிவிட்டன (*)[அதுக்கப்புறம் அசுர வளர்ச்சிதான் :-j ]

அடுத்து குறிப்பிடத்தகுந்த வலைநண்பர் சிபி. கைப்புவைக் கலாய்க்க அப்போதெல்லாம் பார்த்திபன் என்ற வலைஞர் சும்மாவேனும் கலாய்த்துக் கொண்டிருப்பார். ஒரு முறை வ.வாசங்கத்தின் தங்கத் தலைவர் கைப்பு அண்ணனுக்காக, பார்த்திபன் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு வெளியே வந்தால், சிபியிடமிருந்து ஒரு மடல். "நல்லா சொல்லி இருக்கீங்க பார்த்திபனுக்கு" என்று.. நான் எதார்த்தமாக, "நீங்க தான் பார்த்திபனா?" என்றேன். "அட! எப்படிக் கண்டுபிடிச்சீங்க?" என்று அவர் கேட்க, "அட, நெசமாவே நீங்கதானா?!", "நானாத் தான் உளறிட்டனா?" என்று ஆரம்பித்தது எங்களின் வருத்தப்படாத நட்பு! அப்படியே வருத்தபடாத வாலிபர் சங்கம், கலாய்த்தல் திணை, பாலபாரதியைக் கலாய்ப்போர் சங்கம் என்று நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வீட்டுக்குள் சிபியின் மனைவியைக் கலாய்ப்போர் சங்கத்திலும் எனக்கு கொஞ்சமே கொஞ்சம் இடம் கொடுத்திருக்கிறார் மனிதர் :)

அலுவலக வேலைக்காக மதுரை செல்ல நேர்ந்தபோது, தருமி என்ற வலைபதிவர் பெயரை மட்டும் வைத்து அவருக்கு ஒரு மடல் தட்டி நாங்கள் செல்ல இருந்த கல்லூரியிலிருந்து கோயில் செல்ல வழிகேட்டுக் கொண்டிருந்தேன். வழி, ஆட்டோ சார்ஜ் முதற்கொண்டு சொன்னவர், தன்னுடைய செல்பேசி எண்ணையும் சேர்த்துக் கொடுத்திருந்தார். அப்போது ஜோசியம் பற்றி ஏதோ தொடர் எழுதிக் கொண்டிருந்த தருமியை, நான் பின்னூட்டங்களில் மட்டுமே படித்திருந்தேன். அதனால், போன் போட்டு, "நான் உங்க பதிவு படிச்சதே இல்லை" என்று சொல்வது கொஞ்சம் ஓவராக இருக்கும் என்று நினைத்து, அமைதியாக மதுரை போய், நல்ல பிள்ளையாய் இன்டர்வியூ எல்லாம் செய்து விட்டு திரும்பி வந்துவிட்டேன். அதன்பின்னர் கொஞ்ச நாள் கழிந்து, ஜோசியத் தொடர் முடிந்து என்னை மாதிரி பாமரர்களும் படிப்பது போல் தருமி ஏதோ எழுதப் போக, பின்னூட்டங்கள் மூலம் நட்பாகி, அப்படியே ஒரு ஆறு மாதம் கழித்துத் தன் பழைய மடல்களைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போது, "நீங்க தானா அந்த மதுரைக்கு வழிகேட்டு வந்த ராஜாராம்?" என்றார்.. அந்தச் சமயத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்த மெயில் ஐடி அப்பா பெயரில் மட்டுமே இருக்கும், அதுவும் முழுதாக இருக்காது, அதனால் பேராசிரியர் குழம்பிப் போய்விட்டார் போலும் :)

அமெரிக்கா போய்ச் சேர்ந்து ஒரு வாரத்திற்குள் திடீரென்று ஒரு மடல், யாரோ ஒரு கந்தசாமியிடமிருந்து. "எங்கூருக்கு வந்திருக்கீங்களா பொன்ஸ்? ஏதும் உதவி தேவைன்னா சொல்லுங்க.. " என்று.. யாருப்பா இது, என்று யோசித்தபடியே அவரது ப்ரோபைலைப் பார்த்தால், ஏ! யப்பா.. எத்தனை பதிவுகள்..இத்தனையும் பார்த்து இது இன்னார் என்று நான் புரிந்து கொள்ளவே நாளாகும் என்று நினைத்து சாதாரணமாக ஒரு பதில் அனுப்பி வைத்தேன். அதிலும், கனடாவில் உட்கார்ந்து கொண்டு ஒருவர், "எங்கூருக்கு வந்திருக்கீங்களா?" என்று என்னைக் கேட்டால், என்னவென்று நினைப்பது? வெட்டியாக வலைமேய்ந்து கொண்டிருந்ததால், அப்படியே கொஞ்சம் பிளாஷ்பேக் பதிவுகளாகப் படித்து, இந்த மதி கந்தசாமி புங்குடு தீவில் புட்பால் ஆடியவர் என்பதையும், ஆங்கிலப் படங்களுக்கு அழகாக விமர்சனம் எழுதுபவர் என்பதையும் கண்டு கொண்டேன். அப்படியே தேடிக் கொண்டே போனால், ஏதோ ஒரு பதிவில் இளவஞ்சி, 'மதியக்கா' என்று விளித்து வாங்கிக் கட்டியதைப் படித்த பொழுது தான் புரிந்தது, "அட, இது அண்ணாச்சி இல்ல, யக்கோவ்!" என்று :-". மதி கலாய்ப்போர் சங்கத்தில் சேர தொடர்பு கொள்ளவும்: பொன்ஸ் பக்கங்கள் :)

யார் இன்னார் என்று தெரியாமலே பேசத் தொடங்கி, எங்கோ எப்போதோ என்னுடன் படித்தவர்கள், வேலை பார்த்தவர்களின் நண்பர்கள் என்று சுற்றிச் சுற்றிக் கண்டுபிடித்திருக்கிறேன் இந்த ஒருவருடத்தில். என்ன, என்னுடைய நேரடி நண்பர்கள் யாரும் இன்னும் தமிழ் எழுத வரவில்லை. ஏன், தமிழை இலவச இணையத்தில் கொடுத்தால் கூட படிக்க மறுக்கிறார்கள்.. விரட்டி விரட்டித் தான் படிக்க வைக்க வேண்டியிருக்கிறது.. அந்தவகையில் கொஞ்சம் வருத்தம் தான் :( பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், பண்பலைகள் என்று எல்லாவற்றிற்கும் மாற்று ஊடகமாக வளர்ந்து நிற்கும் வலைப்பதிவுகள், புது வரவுகளுக்கு மிகவும் வசதியான களமாக இருக்கிறது. கண்டுபிடித்துப் படிப்பவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது கொஞ்சம் வருத்தம். அதிலும் இணைய வசதி அதிகம் உள்ள சென்னை போன்ற பெருநகரங்களில் படித்து வளர்ந்தவர்கள், தமிழை ஒரு பாடமாகக் கூட படித்தறியாத காரணத்தால், பதிவுகள் போன்ற ஊடகங்களுக்கு வந்தாலும் ஆங்கிலத்தை அல்லது, தமிங்கிலத்தை விரும்புகிறார்கள். தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விருப்பமில்லாத சிலரும் எழுதத் தயங்குகிறார்கள் என்பது இன்னுமொரு தனிக் கதை.

ஒரே வருடத்தில் நான் வெற்றிகரமாகச் சந்தித்து பயமுறுத்திவிட்ட பதிவர்களைப் பட்டியலிட எண்ணியிருந்தேன். ஆனால், நடந்துவிட்ட மூன்று நான்கு சென்னை சந்திப்புகளில் பார்த்தவர்களையும், பதிவு என்பது ஒரு அறிமுகக் களமாக இருந்தாலும், குடும்ப நண்பர்களாகவே பழகிவிட்ட பதிவு நட்புகளையும் எந்தப் பட்டியலில் சேர்ப்பது என்று புரியாததால், வித்தியாசமான முன்னுரையுடன் அறிமுகமான நண்பர்களைப் பற்றி மட்டுமே இந்தப் பதிவில் எழுதி இருக்கிறேன்.

அடுத்த வருடமாவது ஏதாச்சும் உருப்படியா எழுத முடியுமான்னு பார்க்கிறேன்..
என்ன பார்க்குறீங்க? ஆமாமாம்..
தொல்லை தொடர்கிறது <:-P

கவுண்டர் Devil - பொன்ஸ்

"வார்த்தைகளில் விவரிக்க இயலாத அறிவும் திறமை மிகுந்த ஆற்றலரசி பராக் பராக்"'ன்னு கோமுட்டிதலையன் ஸ்டியோ வெளியிலிருந்து கட்டியம் சொல்லுறமாதிரி சவுண்ட் விட நம்ம படகுக்கா or பூனையக்கா or பப்பியக்கா or பொன்ஸ்க்கா அலங்காரம் செய்யப்பட்ட வண்டியிலிருந்து இறங்கி ஸ்டியோ'க்குள்ளே வருகிறார், வாசலிலே நிற்கும் கோமுட்டிதலை'கிட்டே "ரொம்ப நன்றிண்ணே! நான் சொன்னமாதிரியே, கூவிட்டிங்க, இந்தாங்க நீங்க கேட்ட மணப்பாறை முருக்கு பொட்டலம், கவுண்டருண்ணே உள்ள இருக்காங்களா"ன்னு லஞ்சம் கொடுத்துட்டு ஸ்டியோ'க்குள்ளே நுழைகிறார் ...

"இதோ இப்பொழுது ஆரம்பிக்கிறது நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கவுண்டர் டெவில் ஷோ வித் பொன்ஸ்... இது ஒரு முழுக்க முழுக்க பொன்ஸ் கலாய்ப்போர் சங்கத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்ட நிகழ்ச்சியாகும், ஆகவே வழக்கம் போல் சங்கத்துக்கு அளிக்கும் ஆதரவை இப்போழுது பெருவாரியாக அளிக்கும்படி விரும்பிகேட்டுகொள்கிறேன் , இந்த பொன்னான வாய்ப்பளிந்த பொன்ஸ்க்காவிற்கு மிண்டும் நன்றி சொல்லி அமர்கிறேன், இவண் ஒங்க பாசக்காரபய இராம்"

கவுண்டர்:- "அடேய் மஞ்சகலரு முடி மண்டையா! மைக் கெடச்சா இப்பிடிதான் பேசணுமின்னு யாருடா ஒங்களுக்கெல்லாம் சொல்லி குடுக்கிறது , என்னையே ஆரம்பத்திலே டென்சன் பண்ணாத? சவுண்ட் விட்டமாதிரியே ஓடி போயிரு , இல்லே ஓடி வந்து குறுக்குலே மிதிச்சிருவேன்!, நம்ம ஆற்றலரசி பொன்னம்மா வந்துருக்காங்க ! அவங்கள நான் பேட்டியெடுக்கனும்?"

பொன்ஸ்:- "என்னது பொன்னம்மா'வா? நான் என்ன கிழவியா ?"க:- "அப்புறம் நீ பொக்கம்மா'வா ? இங்க பாரு! நாந்தான் கேள்வி கேட்பேன், நீ ஏதாவது திருப்பி என்னை கேள்வி கேட்டேன்னு வை? அப்பிடியே அந்த தும்பிக்கையை பிடிச்சு கடிச்சி வைச்சிடுவேன்!? "

பொ:- "அதுதான் ஏன்னு கேட்கிறேன், ஏன் பித்தளைதான் கேள்வி கேட்கணுமோ ? எப்போவும் ஈயம் பதில் சொல்லிக்கிட்டே தான் இருக்கணுமா என்ன?"

பொன்ஸை அருகில் வரசொல்லி நறுக் நறுக்'ன்னு தலையிலே கொட்டுகிறார் கவுண்டர்...

க:- "போய் ஒழுங்கா ஒன்னோட சேர்'லே போயி ஒக்காரு , நான் என்ன கேட்டேன் நீ என்ன பதிலுக்கு கேள்வி கேட்கிறே?, இதேமாதிரி பித்தளைகாரனுக பேட்டிக்கு வந்திருந்தா நாலஞ்சு மண்டயா 'ன்னு சொல்லி திட்டிருப்பேன், நீ பொம்பளை பிள்ளையா போயிட்டே ? இன்னும் கொட்டு வேணுமின்னா இந்தமாதிரி டிஸ்டர்பன்ஸ் கொஸ்டின்ஸ் கேளு?"

பொ:- "ஐயோ வேணாங்கணா! நான் என்னோட தும்பிக்கையை சுருட்டிகிட்டு ஒக்கார்த்துகிறேன் , நீங்க கேள்வி கேளுங்கணா?"

க:- "அந்த பயம் மனசிலே இருக்கட்டும்! அடிச்சாதான் மிதிச்சாதான் எல்லாபேரும் ஒழுங்கா இருக்கீங்க ? ஆமா அம்மணி என்ன பேரு அது பொன்ஸ்?

பொ:- "மிஸ்டர் கவுண்டர் ஒங்களை என்னாலே அண்ணா'ன்னு கூப்பிடமுடியாதுன்னு சொல்லிக்கிறேன் , எனக்கே அது ஓவரா இருக்கு, சின்னபொண்ணு தாத்தா மாதிரி இருக்கிறவரை அண்ணா 'ன்னு கூப்பிடமுடியாது?"

க:- "ஏய் ஆரம்பிச்சுட்டியே நீயி? நான் இந்நேரம் எங்க எப்பிடி இருக்கவேண்டியவன் , இந்நேரம் நான் பீக்'லே இருந்தா கோவாபீச் 'லே நமிதா'கூடா ஏ லெக் லெக்' ன்னு டூயட் பாடிட்டுருப்பேன், எங்கஷ்டகாலம், இங்க வந்து ஒன்கிட்டே பேட்டியெடுக்கிறமாதிரி ஆகிட்டேன். ஒழுங்கா நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லு இல்லேன்னா இன்னொரு செட் கொட்டு வைச்சிருவேன்"

பொ: "ஓ அந்த பெயர் காரணம் சொல்லணுமின்னா ஒரு மணிநேரமில்லை ரெண்டு மணி நேரமில்லை முணுமணி நேரமெல்லாம் பத்தாது"

க:- "ஸ்டாப் த நான்சென்ஸ்? நான் என்ன கேட்டாலும் நீ எடக்குமொடக்கா 'தான் பதில் சொல்லனுமின்னு வந்திருக்கே? என்ன பண்ணுறது ? அதெயன் என்னதையாவது ஒன்னை மாத்திக்கிட்டே இருக்கே தாயி?"

பொ:- "மாற்றம் என்பது தொடர் நிகழ்ச்சி. மாற்றங்கள் சில இல்லையென்றால் சரித்திரங்கள் எழுதவே வாய்ப்பில்லை.'ன்னு பெரியவயங்க சொல்லிருங்காங்க! என்னோட சரித்தரமும் அஞ்சாம்வகுப்பு வரலாற்று பாட பொஸ்தகத்திலே வரனுமின்னு மாற்றமா பண்ணிட்டு இருக்கேன்!"

க:- "ஒன்னோட சரித்திரம் பொஸ்தகத்திலே வந்தா அது வரலாற்றுக்கே பிடிச்சே தரித்தரம்? ஏம்மா நீ என்ன போன ஜென்மத்திலே யானை மேச்சிட்டு இருந்தியா? எங்க பாரு யானை யானை' னு திரியுற?


பொ:- "இந்தமாதிரி அறிவுப்பூர்வமான கொஸ்டினை தான் நான் உங்ககிட்டே எதிர்பார்த்தேன், யானையை பத்தி நான் சொன்னா நாலு மணிநேரத்திலே முடிச்சிருவேன்னு தும்பிக்கை சாரி நம்பிக்கை இருக்கு, ஒங்களுக்கு அதெய்ல்லாம் கேட்க டயமிருக்காது, என்னோட எழுத்துபூர்வமான பதிவை படிச்சி பாருங்க."

க:- "ஆமாம், இவுக பெரிய எழுத்தாளினி அப்பிடியே எழுத்தாணியை வெச்சு ஓலையிலே செதுக்கி வைச்சமாதிரி என்ன பில்டப், இங்கப்பார் நான் என்ன கேட்கிறோனோ அதுக்கு ஒழுங்கா பதிலே சொல்லனும்,இல்லே சொன்னமாதிரியே தும்பிக்கைய பிடிச்சு கடிச்சி வைச்சிருவேன், நானும் எல்லாபயலுகளையும் பார்க்கிறேன், ஆளுக்குஆளு கதை எழுதுறேன், கவிதை எழுதுறேன்னு சொல்லிட்டு திரியிறீங்க, ஒங்களுக்கு வேலைவெட்டியெல்லாம் இருக்காதா?"

பொ:- "மிஸ்டர் கவுண்டர், ஒங்க கொஸ்டின்'லே பிழை இருக்கு, அது பேரு கவிதை இல்லே, கவுஜ...

க:- "ஐயோ இந்த இம்சையை யாருடா பேட்டியெடுக்க கூப்பிட்டு வந்தது? அடேய் காட்டுமண்டையனுகளா இந்தம்மா தொல்லை தாங்கமுடியலைடா? இதை திரும்ப கூட்டிட்டு போயி காட்டுலே விடுங்கடா?நான் என்ன கேட்டாலும் திரும்பி எனக்கே கேள்வி கேட்கிது, இல்லேன்னா திருத்தம் பண்ணுறேன்னு உசுரை வாங்குது?? ஏய் யானையத்தா ஒழுங்கா இரு இல்லே கோமுட்டிதலையனுக்கு எத்து விடறமாதிரி ஒனக்கும் விட்டுறுவேன், அப்புறம் கொட்டு வாங்கிட்டு அழுதமாதிரி இப்போவும் அழுதுட்டு இருப்பே? சிறுவர் கதை எழுதுறேன்னு சின்னவயசிலே பூந்தளிர், அம்புலிமாமா'விலே இருக்கிறதே உல்டா பண்ணி போட்டுறே இல்லே?"

பொ:- "பார்த்தீங்களா நீங்களே என்னோட நினைவாற்றலை புகழ்றீங்க, போங்க சார் எனக்கு கொஞ்சம் வெக்கமாயிருக்கு!"

க:- "ஈயடிச்சான் காப்பியடிக்கிறேன்னு சொன்னா அது புகழுறதா? நீ இன்னிக்கு எடக்குமொடக்கு பண்ணியே தப்பிக்கலாமின்னு திரியுறே? என்னோமோ அறிவு சுரங்கம் மாதிரி டெக்னிக்கல் விஷயமா எழுதி கொட்டுறீயே? ஏந்தாயி இன்னொரு தடவை திரும்ப கேட்கிறேன், ஆபிசுன்னு ஒன்னு இருக்கே, தினமும் அதுக்கு வேறே தவறாமே போறியே, அங்கே வேலைன்னு ஒன்னே பார்ப்பியா மாட்டியா?"

பொ:- "ஹலோ சார், நான் ஒரு அஷ்டவதானி, என்னாலே ஒரே நேரத்திலே நிறைய வேலைகளை பார்க்கமுடியும்,"

க:- "இப்பிடியே தற்பெருமையா பேசிட்டு திரிஞ்சுட்டு இரு? வெளங்கிரும்? இந்த பொஸ்தகம் படிச்சா சும்மா இருக்கமாட்டாமே அதை வேற பதிவிலே எழுதிட்டு திரியிறே இல்லே நீயி? அதெப்படி ஒனக்கு மட்டும் யானை சம்பந்தப்பட்ட எல்லா பொஸ்தகமெல்லாம் கிடைக்கிது? இதுக்கு பதில் சொல்லுறேன்னு சொல்லி நான் ஒரு அறிவாளி, தண்ணிவாளின்னு சொன்னேன்னு வை,நான் மிருகமா ஆகிருவேன்.!"

பொ:- "ஹி ஹி அதெல்லாம் இல்லே கவுண்டரே, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் சொல்லிருக்காங்க! அதுதான் எல்லாரும் நான் படிச்சு பயன்பெற்றதை ஷேர் பண்ணிக்கிறேன்"

க:- "ஆமா மிச்சப்பேருல்லாம் படிக்க தெரியாத கம்னாட்டிக! இவக பெரிய படிப்பாளி, எல்லாருக்கு படிச்சு காட்டுறாங்களாம்! ஏய் நீ முதியோர் கல்வியிலே பொஸ்தகம் வாசிக்கிற ஆயா வேலையா பார்க்கிறே? ஒங்கூட பேசி என்னோட பாதி உசுரு போச்சு, கடைசியா ஒன்னு கேட்கிறேன், அதுக்காவது ஒழுங்க பதிலே சொல்லிடு தாயி, போறே போக்கிலே ஒனக்கு புண்ணியமா போயிரும்!"

பொ: "சரி கேளுங்க! பதில் சொல்ல முயற்சி பண்ணுறேன்!"

க:- "போனவருசம் இதே நாளிலே வந்து பயமா இருக்குன்னு சொல்லிட்டு உள்ளே வந்தியே? இன்னிக்கு வரைக்கும் என்ன சாதிச்சு இருக்கே?

பொ: "கவுண்டர் சார், என்னோட சாதனையெல்லாம் பட்டியலிட்டா அது கிலோமிட்டர் கணக்கிலே போகும், அதிலே முக்கியமான சாதனை'ன்னா நீங்க என்னை பேட்டியெடுத்தது ,அதைவிட எல்லாரும் மாதிரியே நீங்களும் என்கூட பேச பயந்ததது, இன்னும் சொல்ல நிறைய இருக்கு, ஒங்களுக்கு டயமிருக்கா? :)"

இவ்வாறு பொன்ஸக்கா சொல்லிக்கிட்டு இருக்கும்போதே தன் டெவில் ஷோ வாழ்க்கையில் முதன்முறையாக பின்னாங்கால் பிடறியில் அடிக்க ஓடுகிறார் கவுண்டர்.

Monday, March 12, 2007

மகளிர் சக்தி - அறிமுகம்

கூகிள் வாசிப்பகத்தைப் பயன்படுத்தி தனக்கேயான, தனிப்பட்ட திரட்டியை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று ரவிசங்கர் எழுதியிருந்தது நினைவிருக்கலாம். அதிலும் துறை சார்ந்த திரட்டி பற்றி ஆண்டிறுதியில் கூறியிருந்ததை மெய்ப்பிப்பது போல், இப்போது பெண்களுக்கான திரட்டி ஒன்றை உருவாக்கி இருக்கிறோம்.

தமிழ் எழுதும் அறுபது சொச்சம் பெண்களின் உரல்களைச் சேர்த்து, மகளிர் திரட்டியாக எழுந்து நிற்கிறது மதி உருவாக்கிய மகளிர் சக்தி.

பல்வேறு காரணங்களால், தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளின் இடுகைகளைத் தவற விடுபவர்கள், இந்தச் சுட்டியினை உங்களின் கூகிள் வாசிப்பகத்தில் இணைத்துக் கொண்டு பெண் பதிவர்களின் இடுகைகளை விடாமல் படிக்கலாம்.


இந்தச் சுட்டியினை உங்கள் பதிவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சமீபத்தைய ஐந்து இடுகைகளை உங்கள் பக்கத்திலேயே கூட பார்க்கலாம். புது பிளாக்கரில் உங்கள் பக்கம் இருந்தால், மகளிர் சக்தியை இணைக்க, இங்கே உள்ள "சக்தி கொடு" பொத்தானைப் பயன்படுத்தலாம்.


என் பதிவின் பக்கப்பட்டியில் இருக்கும் "சக்தி கொடு" பொத்தானையும் பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். தோழிகள் எல்லாருடைய பதிவுகளையும் இதில் சேர்த்திருக்கிறோம். இருப்பினும் யாராவது விட்டுப் போயிருந்தால் சொல்லுங்கள். அத்தோடு, தோழிகள் அனைவரும் இந்தப் பக்கப் பட்டியைத் தங்கள் பதிவில் இணைத்துக் கொண்டால் மிகநன்றாக இருக்கும்.

[பிகு: இது பிளாக்கரின் விட்ஜட் உருவாக்கும் ஆப்ஷனைப் பயன்படுத்தி உருவாக்கியது. சமீபத்தில் வந்த மறுமொழிகள் தொடங்கி, வேறு பலவற்றையும் இது போன்ற விட்ஜட்டாக கொடுக்கலாம். வேறெதும் விட்ஜெட் வேண்டும் என்று நினைத்தால் பின்னூட்டமிடுங்கள். முடிந்தால் அதுவும் உருவாக்கி கொடுக்கலாம் :) ]

Friday, March 09, 2007

அம்பாரியில் வந்த சுடர்சுடர் தொடங்கிய பொழுது சாகரனிடமிருந்து ஒரு மடல் வந்திருந்தது. அதுவே அவருடனான கடைசி பேச்சுவார்த்தையாக இருக்கும் என்று நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை. வெகுநாள் ஆகிவிட்ட போதும், அவர் நம்மிடையே இல்லை என்பதை இன்றும் நம்ப முடியவில்லை. "இன்றில்லை என்னும் பெருமை" உடைத்த உலகம் என்பதன் பொருளை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறது நான் படிக்கும் ஒவ்வொரு சுடரும்; என் நெஞ்சார்ந்த அஞ்சலிகள் சாகரன்...

மங்கை கையில் சுடர் போன போது அங்கிருந்து வேறு யாருக்காவது போகும் என்று நினைத்திருந்தேன். ஆனால், என் கையில் கொடுத்து விட்டார்கள்.. ம்ம்ம்.. நீங்க கொடுத்து வச்சது அவ்வளவு தான் :)
1) உங்க அனுபவத்தில, பணி புரியும் பெண்களுக்கு 'Glass ceiling' இருக்கிறத நீங்க உணர்ந்து இருக்கீங்களா?... அப்படி இருந்தா அத தாண்டி வர பெண்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள்.

Glass Ceiling என்ற சொல் எனக்குப் புதிது. அகராதி பார்த்து தெரிந்து கொண்ட பொருள்: "பெண்கள் அல்லது சிறுபான்மையரைப் பெரிய பதிவிகளுக்கு வரவிடாமல் தடுக்கும் கண்ணுக்குத் தெரியாத கண்ணாடித் திரை" என்கிறது ஆன்ஸர்ஸ்

கண்ணுக்குத் தெரியாத இது போன்ற திரைகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. முன்பே ஒரு பதிவில் சொன்னது போல், கொடுத்த வேலையை முடிப்பது, முடிக்காதது என்பதைத் தாண்டி, வெகு நேரம் இருந்து வேலை செய்பவர்கள் நல்ல பணியாளராக அடையாளம் காட்டப்படும் இடம் இந்த மென்பொருள் துறை. ஆக, திருமணத்திற்கு முன்னர் இது போல் எத்தனை நேரம் வேண்டுமானலும் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும் நமது பெண்கள் திருமணத்திற்குப் பின்னர் பல்வேறு காரணங்களால், இது போன்ற வெகுநேரம் வேலை செய்ய முடியாமல் போகிறது. 'எப்படியும் கல்யாணம் செய்தால் விட வேண்டிய வேலை தானே!' , 'மேலாளர் சொல்வதை அப்படியே செய்வோம். நம்ம எதுக்கு அனாவசியமா யோசிக்கணும், கேள்வி கேட்கணும்?' என்பது போன்ற மெத்தனங்களையும் அடிமை மனநிலைகளையும் தாண்டியும் கூட பல பெண்கள் இங்கே வெற்றிப்படிகளில் ஏறிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
வாடிக்கையாளர் நிறுவனங்கள், வெளிநாடுகள் செல்ல இயலாமை, கணவனின் பணியிட நெருக்கடிகளை முன்னிட்டு வேலையை துறக்க நிர்ப்பந்தம், குழந்தைகளைக் கவனிக்க சீக்கிரம் வீடு திரும்ப வேண்டிய நெருக்கடி என்பன போன்ற காரணங்களால், திருமணத்திற்குப் பின் பெண்கள் அடுத்த பிரமோஷன் மீது அதிகம் கருத்து செலுத்துவதில்லை. பணியில் மந்தமாக இருக்கும் ஆண்களுக்கும் இந்த பிரச்சனைகள் இருக்கும் என்றாலும், பெண்கள் என்று வரும் போது வீட்டுப் பிரச்சனைகள் தான் முக்கியமான காரணிகளாக இருக்கின்றன.

இவற்றிலிருந்து வெளிவர பெண்கள் என்ன செய்யலாம்? "உன் வேலை போல என் வேலையும் எனக்கு முக்கியம்" என்று கணவனிடமும், "உன் குழந்தைகளுடன் நேரம் செலவிடாமல் வேலை மட்டுமே வாழ்க்கை என்று நீ இருந்தால், நானும் அதையே செய்ய வேண்டிய அவசியமில்லை!" என்று மேலாளர், சக பணியாளர் என்று எல்லாரிடமும் இந்த மனநிலையை உருவாக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இருக்கிறது. இதை உருவாக்கி, வெற்றி பெறும் பெண்கள் எண்ணிக்கையில் குறைவானாலும், இருக்கிறார்கள் என்பதை மறுக்கலாகாது. என் அனுபவத்திலேயே அது போன்ற பெண்களைப் பார்த்திருக்கிறேன், என்னுடைய மேலாளர்களாக...

2) மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிய பெண்களுக்கு படிப்பு மட்டும் இருந்தால் போதாது. ஆண்களுக்கே சில சமயம் சவாலா இருக்கும் போது, வேலைப் பளு, மன அளுத்தம், இவற்றை சமாளிக்க அவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
அறிவுரை என்று சொல்ல முடியாது; கூடியவரை வேலை நேரத்திற்குப் பின்னும் அலுவலகத்தில் பெஞ்சைத் தேய்த்தல், ஓசி இணையம், சினிமாச் செய்திகள், சீரியல்கள் என்று நேரம் வீணடிக்காமல், மனதுக்குப் பிடித்த, உடலுக்குப் புத்துணர்ச்சி ஊட்டும் பொழுது போக்குகளை வளர்த்துக் கொள்வது நல்லது. புத்தகம் படிப்பது, விளையாடுவது, சமைப்பது, நீச்சல், புது மொழி கற்றுக் கொள்வது, நண்பர்களுடன் விண்டோ ஷாப்பிங் என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

3) சமூக விழிப்புணர்வோட சில நல்ல காரியங்களை செய்துட்டு வரீங்க- வாழ்த்துக்கள்..
அப்படியா?!! :)
அதை இன்னும் நல்லா, அனைவரையும் ஈடுபடுத்தி செய்யறதுக்கு ஏதேனும் திட்டம் வச்சுட்டு இருக்கீங்களா?
அப்படி பெரிய அளவில் யோசிச்சதில்லை மங்கை. கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவர்கள், உணவகக் குழந்தைத் தொழிலாளிகள், பஞ்சர் ஒட்டும் சிறுவர்கள், பேப்பர் கடையில் பார்க்கும் குழந்தைகள் என்று படிப்பு எட்டாக்கனியாக இருக்கும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வி கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்று ஒரு ஆசை உண்டு. பல நாட்களாக நினைத்துக் கொண்டிருப்பது இது, இன்னும் நேரம் வரவில்லை; யோசனை வடிவிலேயே இருக்கிறது. இயல்பாகவே எனக்குள் இருக்கும் சோம்பேறித்தனமும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

4)கணினி தவிர உங்களை ஓரிடத்தில் உட்கார வைக்கும் வேறு விஷயங்கள்
புத்தகங்கள்.. பிடித்த புத்தகங்களுக்குள் மூழ்கிப் போவது ஒரு பிடித்த பொழுதுபோக்கு.

5) வலைப்பதிவு உலகில என்ன புதுமை செய்ய முடியும்...
தமிழ்வலைப்பதிவுகளைப் பொருத்தவரை புதிதாகத் தொடங்கியது போல் தான் உள்ளது. நிறைய மாற்றங்கள் மிச்சமிருக்கு; புதுமைகளும் தான்.
நுட்பத்தைப் பொறுத்தவரை, பிளாக்கரையும் வோர்ட்பிரஸ்ஸையும் தவிர வேற பதிவுக் கருவிகளே பெரிய அளவில் பயன்பாட்டில் இல்லை. இதில் தமிழ் வலைகருவிகள் வந்தால் நல்லா இருக்கும். இன்னும் திரட்டிகள், துறைசார்ந்த திரட்டிகள், அல்லது தன்வயப்படுத்தக் கூடிய திரட்டிகள்(பர்சனலைஸ்) தமிழுக்குத் தேவை. 'பின்னூட்ட எண்ணிக்கை மட்டுமே பதிவின் சாரத்தை முடிவு செய்யக் கூடியதில்லை' என்று தெரிந்தும் நாம் இன்னும் பின்னூட்ட எண்ணிக்கை அல்லது எழுதியவர்களின் பெயர் - இவற்றை நம்பியே ஒரு பதிவைப் படிக்கிறோம். இதைத் தாண்டி, நல்ல இடுகைகள் பல சமயம் அடையாளம் தெரியாமல் போய்விடுகிறது. பூங்கா போல இன்னும் பல இதழ்கள் வரலாம்; வரவேண்டும்.

பத்திரிக்கைகள் போல ஸ்டேடிக்கான ஊடகமாக இல்லாமல், ஒலி, ஒளி, படங்கள், படத் துண்டுகள்னு அசையக் கூடிய விதங்களில் கொடுக்க முடிந்த பதிவு ஊடகத்தை நாம் இன்னும் முழுமையாக புரிந்து, பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. மலைநாடனின் வானொலி போல, பினாத்தலாரின் ப்ளாஷ் விளையாட்டுகள் போல, அவ்வப்போது இணைக்கப்படும் படத்துண்டுகள் போல, இன்னும் பல நுட்பங்கள் பரவலாக்கப்படவேண்டும். இருக்கும் நுட்பங்களைப் பரவலாக்கல் ஒருபுறம் இருந்தாலும், குழலியின் கருவிப்பட்டி சேர்ப்பான் போல புதுநுட்ப கருவிகளும் ஒருபக்கம் அதிகரிக்க வேண்டியது அவசியம்.

இப்ப நிறைய பேர் புதுசா வர ஆரம்பிச்சு இருக்காங்க... இதன் எதிர்காலம் எப்படி இருக்கும்னு நினக்குறீங்க..
நிறைய பேர் வருவது மலர்ச்சியின், வளர்ச்சியின் அடையாளம். அதே ஐம்பது பேர், அதே பத்து பதினோரு விசயங்களைப் பற்றி ஒரே கோணத்தில் எழுதுவதை விட, தினம் புதுப் புது ஆட்கள் வரும் போது கோணங்களும் மாறுபடும். துறைசார்ந்த பதிவுகளின் தேவை இன்னும் தமிழில் இருந்து கொண்டே இருக்கிறது. மிருகவியல், தாவரவியலுக்கு ஒரு இயற்கை நேசி, மருத்துவத்திற்கு ஒரு எஸ்கே, அறிவியலுக்கு ஒரு வைசா, கூகிளுக்கு ஒரு பகீ, வேலைவாய்ப்புக்கு ஒரு ரவி என்று எல்லாமே "ஒரு"வாக இல்லாமல் இன்னும் அதே துறையைச் சேர்ந்த பலர் வரும்போது வெவ்வேறு பார்வைக்கோணங்களும் தமிழில் கிடைக்கும்.

ஆனால், ஏனோ புதிதாக வருபவர்கள் பின்னூட்ட எண்ணிக்கையைத் தாண்டி, யோசிக்காமல் இருந்து விடுகிறார்களோ என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. வலைப்பதிவுகள், நமக்கான, நாம் விரும்புவதைப் பேச வேண்டிய ஒரு ஊடகமாக, நம் குரலாக இல்லாமல், பின்னூட்டமிடும் வாசகர்களுக்கான காம்ப்ரமைஸாக, அவர்கள் விரும்புவதை மட்டும் எழுதும் இடமாக மாறிப் போவது தான் கொஞ்சம் வருத்தம். பின்னூட்டங்கள் ஒரு காரணம் என்று சொன்னாலும், வலைப்பதிவு என்ற சுதந்திரமான ஊடகத்தின், சில ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளாலும், திறந்த புத்தகமாக தத்தம் வலைப்பதிவுகளை வைத்துக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது. இந்தக் காரணங்களால் கூட புதியவர்கள் திசைமாறிப் போய்விடுவதாக எனக்குத் தோன்றுகிறது. கூடியவரை பதிவுகளைப் படிக்கும் புதியவர்களை எழுத ஊக்குவிப்பதைத் தவிர, நம்மாலும் இதற்கு ஏதும் செய்துவிட முடியாதென்பதே என்னுடைய எண்ணம். மாற்றம் என்பது அவரவர் உள்ளிருந்து வரவேண்டியது தான்.

*******************************************************

சுடர் வந்த பிறகு கண்டுபிடித்த முக்கியமான விசயம், கேள்வி என்று ஒன்று வந்துவிட்டால், பதில்சொல்வது சுலபம். ஆனால் எதுவுமே இல்லாத இடத்தில் கேள்விகளை உருவாக்குவது பெரிய வேலைதான். அதிலும் எதிராளி மனம் நோகாமல், பொதுவில் வைக்கப்படும் கேள்விகள் என்னும் போது, கொஞ்சம் கவனம் அதிகமாகவே தேவையாக இருக்கிறது. யாரை மாட்டிவைக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தபொழுது, நடுநாயமாக அமர்ந்து இருப்பவர் தான் நம் கண்ணில் சட்டென மாட்டியவர். அக்கா, அண்ணா என்று விளித்து பழகிக் கொண்டிருந்தாலும் நிஜமாகவே எனக்கு, ஒரு தமக்கையைப் போன்ற பாசம் காட்டும், தற்போது நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் என் நதியக்காவுக்கு நகர்கிறது சுடர்.

1. நீங்கள் வந்த புதிதில், சென்னையை எப்படி உணர்ந்தீர்கள் என்பதை உங்கள் பதிவுகளில் படித்திருக்கிறேன். இன்றைக்கு சென்னையில் முக்கியமான தேவையாக, அடுத்து செய்யவேண்டிய மேம்பாட்டுக்கான பணியாக நீங்கள் எதைக் கூறுவீர்கள்?

2. தமிழகத் தொலைக்காட்சியில் நீங்கள் தொடர்ந்து பார்க்கும், உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சி எது?

3. பெண்களுக்கான விழிப்புணர்வூட்ட சிறந்த ஊடகம் எது என்று நினைக்கிறீர்கள்?

4. எங்களுக்காக ஒரு நகைச்சுவைத் துணுக்கு சொல்ல முடியுமா? :)

5. வலைபதிவுகள் அளிக்கும் நண்பர் வட்டத்தைத் தாண்டி, பதிவுகள் மூலமாக வேறென்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?

நதி, சுலபமான கேள்விகள் தான் கேட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். நட்சத்திரத்துடன் சுடராகவும் ஜொலிக்க சீக்கிரமே வந்து விடுங்களேன்..

Wednesday, March 07, 2007

பா.கே.ப.பி

அதாங்க, கார்த்திக் பிரபு தொடங்கி, மோகன்தாஸ் என்னிடம் ஒப்படைத்த, பார்த்ததில், கேட்டதில் படித்ததில் பிடித்தது சங்கிலித் தொடரின் சுருக்கம்..

இவர்கள் இருவரது பதிவையும் பார்த்துவிட்டு, இப்படி வரிசையாக பட்டியலிட்டு ஒரு பதிவு எழுதத் தான் வேண்டுமா என்று கொஞ்ச நாட்களாக யோசித்துக் கொண்டே இருந்தேன். நம்ம பட்டியலுக்கு ஒரு ப்ளாக் போதுமா? ;) இருந்தாலும், எழுதித் தான் பார்ப்போமே என்று இப்போ தொடங்கியாச்சு..

பிடித்தது என்பது மாறிக் கொண்டே இருந்திருக்கிறது. வாழ்க்கை, மாற்றங்களால் ஆனது. விருப்பங்களும், பிடிப்புகளும் கூட. இன்று பிடித்தது நாளை பிடிக்காமல் போகலாம், அவள் விகடன் விளம்பரம் போல...

எனக்குப் பிடித்த எல்லாமும் என்று நீள் பட்டியலிட அவ்வளவாக விருப்பமில்லை. நினைவு தெரிந்து முதன்முதலில் பிடித்தது, சமீபத்தில் பிடித்தது என்று இரண்டிரண்டு விசயங்களாகப் பட்டியல் போடப் போகிறேன்:

பார்த்ததில் பிடித்தது:
1. நினைவு தெரிந்து நான் விரும்பிப் பார்த்த சின்னத்திரைத் தொடர், ப்ளைட் 172.
மௌலியின் நகைச்சுவையும், அவர் ஜாலியான ஆங்கிலமும் என்று இந்தத் தொடரை நாங்கள் மொத்தமாக ரெகார்ட் செய்து வைத்திருந்தோம். அவ்வப்போது போட்டுப் பார்த்துச் சிரிப்பது ஒரு நல்ல பொழுது போக்கு..

2. சமீபத்தில் பார்த்ததில் பிடித்தது, நம்ம ஹாப்பி பீட் தான்..
கேட்டதில் பிடித்தது
1. சின்ன வயதில் பாட்டி சொன்ன ஈக்கதை.

ஈ ஒன்று தன் வீட்டு வாசலில் இருந்த அதிக தண்ணீரில் வழுக்கி விழுந்து தன் பெயரை மறந்துவிடும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற விலங்குகள், மனிதர்கள், பொருட்கள் என்று கிட்டத் தட்ட இருபது பேரிடம் தன்னுடைய பெயர் என்ன என்று கேட்டுப் பார்த்துவிட்டு, கடைசியாக, ஒரு குதிரையைக் கேட்டு, குதிரை "ஹீஹீ" என்று கனைத்ததில் தன் பெயர் ஈ என்று நினைவுக்கு வந்து வீடு திரும்பிவிடுவதாக முடியும் அந்தக் கதை என்னுடைய சிறுவயது விருப்பம்.

அப்போது அந்தக் கதையைப் பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பேன். உச்சரிப்புக்காகவும், புதிய பொருட்கள், விலங்குகளின் பெயர்களை அறிமுகப்படுத்தும் விதமாகவும் வரும் அந்தக் கதை எனக்கு மிக மிகப் பிடித்த ஒன்று.

2. சமீபத்தில்: போக்கிரி படத்தில் "நீ முத்தமொன்று கொடுத்தால், முத்தமிழ்" பாட்டு.

படித்ததில் பிடித்தது.
1. முதன்முதலில் நானாகப் படித்து, அப்படிப் படித்ததில் பிடித்த புத்தகம், சிறுவர்மலர். அதில் வந்த பல காமிக்ஸ் சிறுகதைகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும்2. சமீபத்தில் படித்ததில் பிடித்தது : இரா.நடராசனின் ஆயிஷா.


பா.கே.ப என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது வாரமலர் அந்துமணி. அந்துமணி என்றவுடன் நம் எல்லாருக்குமே நினைவுக்கு வருவது, மருதக்கார தம்பி, ராயல் ராம். [அது ஏன் என்பதை ராமிடமே கேட்கவும் :)]. எனவே, இந்த விளையாட்டை ஆட ராமை அழைத்து விட்டு நான் இப்போ அப்பீட்டு....