Friday, May 16, 2008

ராஜபாட்டை..

The Man who founded California - The Life of Blessed Junipero Serra

தற்காலிகமானாலும், வாழுமிடம் என்றவகையில், கலிபோர்னியாவின் வரலாற்றைப் புரிந்து கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தான் இந்தப் புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்தேன். அத்துடன், கார்மல் பள்ளத்தாக்குக்குச் சென்ற போது வழி தவறிப் போன ஒரு மிஷன் சர்ச்சும் ஆர்வத்துக்குத் தீனி போட காரணம்.
கலிபோர்னியா- எனப்படும் எங்கள் தங்க மாநிலம் உண்மையில் முதன்முதலில் பிரிட்டனிடமிருந்து ‘சுதந்திரம் பெற்ற’ அமெரிக்காவில் இருக்கவில்லை. ஸ்பானியர்கள் கண்டுபிடித்த ‘கலி’யை அதன் செல்வச் செழிப்பைப் பார்த்து, பிற்பாடு மெக்ஸிகோவிடமிருந்து பணம் கொடுத்து வாங்கியவர்கள் அமெரிக்கர்கள். ஸ்பானிய மக்கள் வருவதற்கு முன்னரே இந்த ஊரில் அமெரிக்காவின் பூர்வ குடிகளான சிவப்பிந்தியர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
பிரிட்டிஷ் இனத்தவரைப் போல் இல்லாமல், ஸ்பானிய மக்கள் இந்த இந்தியர்களைப் போரிட்டு கொல்லாமல், அவர்களுடன் கலந்து பழகி கூடியவரை அவர்களைப் பயன்படுத்தி தன்னுடைய செல்வத்தைப் பெருக்க முயன்றிருக்கிறார்கள். இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பனி போல கலியைப் பொறுத்தவரை, ஸ்பானியர்கள் முக்கியமாக வந்தது தம் மதபிரச்சாரம் செய்யவே. அப்படி மெக்ஸிகோ வந்தவர் தான் யூனிபரோ செர்ரா (ஸ்பானிய மொழியில் Jயை H போல படிக்கவேண்டுமாம், அதிலும் சொல்லின் முதலில் வரும்போது அது யூ ஆகிவிடுகிறது). மெக்ஸிகோ தொடங்கி மெல்ல மெல்ல மேலேறி வந்து முதலில் சான் டியாகோ, அப்புறம் மாண்டரி என்று வடக்கே வந்திருக்கிறார்.
யூனிபரோ வந்த போது இந்த நாட்டுக் குடிமக்கள் உடை கூட அணியாத ஆதிவாசிகளாக இருந்தார்கள் என்கிறது புத்தகம். ஆனால் ஒவ்வொரு குழுவும் தனித்தனி மொழி பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். தந்தை யூனிபரோ அந்த மொழிகளைக் கற்றுத் தான் அவர்களுடன் நட்பாகி மதமாற்றத்துக்கும் மொழி மாற்றத்துக்கும் வழிகோலி இருக்கிறார். கற்கால ஆயுதங்களைப் பயன்படுத்தி வேட்டையாடி வாழ்ந்திருக்கிறார்கள். திருமணம் போன்ற சடங்குகள் கூட அவர்களுக்குள் இருந்திருக்கும் போல இருக்கிறது. அப்புறம் என்னத்தை நாகரிகம் சொல்லிக் கொடுக்க இந்த ஸ்பானிய கனவான்கள் தேவைப்பட்டார்கள் என்று புரியவில்லை.
போகும் வழியெங்கும் Mission எனப்படும் வழிபாட்டு, வாழ்விடங்களை அமைத்தாராம் யூனிபரோ. கலிபோர்னிய கடலோரம் நூல்பிடித்தாற் போல் செல்லும் முக்கிய சாலை ‘எல் கமினோ ரியால்’ - El Camino Real. இந்த ஸ்பானிய சொல்லுக்குப் பொருள் - ராஜபாட்டை. எல் கமினோ ரியாலின் சாலையோரங்களில் நம்ம ஊர் பல்லவ மன்னர்கள் சத்திரங்கள் கட்டிய கணக்காய் மிஷன்கள் கட்டி இருக்கிறார்கள் ஸ்பானியர்கள். ஒவ்வொரு ஏரியாவாக பிரித்துக் கொண்டு கலியின் முழு நிலப்பரப்பையும் ஆண்டு கொண்டிருந்தன இந்த மிஷன்கள். விவசாயம் செய்யவும், படிக்கவும், பானை செய்யவும், ஆடை நெய்யவும் இன்னும் பல விசயங்கள் செய்யவும் இந்த ஊரின் இந்தியர்களுக்குச் சொல்லிக் கொடுத்து அவர்களை ‘நாகரிக குடிகளா’க்கியதில் இந்த மிஷன்களுக்குப் பெரும்பங்குண்டாம்.

மொத்தம் 21 மிஷன்களைத் தொட்டுத் தான் அந்த ராஜபாட்டை ஓடுகிறது. நம்ம ஊர் பன்னிரண்டு லிங்கம் கணக்காக இந்த மிஷன்களையும் அதன் சர்ச்சுகளையும் புனித, மற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களாக எண்ணி வந்து பார்த்துச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஏராளம்.
எல்லா வரலாறுகளைப் போலவும், மிஷன்களைக் காக்க வந்த ஸ்பானிய வீரர்கள் ‘நாகரிகமில்லாத’ இந்தியப் பழங்குடிப் பெண்களை வன்புணர்ந்த, அதைத் தடுக்க வந்த அவர்தம் கணவன்மார்களைக் கொன்ற இரத்தம் தோய்ந்த பக்கங்கள் மிஷன் வரலாற்றிலும் உண்டு. அத்தோடு, ஐரோப்பியர்களின் வருகையினால், அதிகம் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத செவ்விந்திய இனம் புது நோய்களுடன் போராட முடியாமல் மெல்ல அழிந்து பட்டது என்கிறார்கள்.
மெக்ஸிகோ ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் பெற்று மதவேறுபாடற்ற ஆட்சியாக மலர்ந்த போது, இந்த மிஷன்களின் சொத்துக்கு ஆசைப்பட்டு அவற்றை அரசுடைமையாக்க முயற்சிகள் நடந்தது என்றும் சொல்கிறது புத்தகம். எல்லா மதங்களின் கோயில்களிலும், சொத்துப் பிரச்சனை தான் பெரிய பிரச்சனை! ராஜபாட்டையில் இருந்த கொண்டு அரசாங்கத்தை நம்பாவிட்டால் எப்படி?!
இந்த மிஷன்களில் இந்தியர் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்து, மேலும் சில மிஷன்களைப் பார்த்து வர எண்ணி இருந்தேன். ஆனால் புத்தகம் படித்தபின்னால், உண்மையான இந்தியர்களின் வாழ்க்கையை அறிய மிஷன்களைத் தாண்டிய காடுகளுக்குத் தான் போக வேண்டும் என்று தோன்றிவிட்டது.