அன்று தான் கவனித்தேன். புதிதாக இருந்தது. வழக்கமாய் இரவானால் பக்கத்து வீட்டில் அலைந்து கொண்டிருக்கும் பூனை இந்தப் பக்கம் நின்று கொண்டிருந்தது.
இரவு சாப்பாட்டின் போது, இரண்டாவது படிக்கும் என் மகன் வினயன் சொன்னான்.
"அப்பா! அந்த பூனை குட்டி போட்டிருக்கே"
"நிஜமாவா? உனக்கு எப்படித் தெரியும்?" இது என் மகள் சசிகலா. வினயனை விட இரு வயது மூத்தவள். அவள் பள்ளி இன்றும் உண்டு. வினுவிற்குத் தான் மழைக்காக ஒரு மாதம் லீவ் விட்டிருக்கிறார்கள். அப்படியும் ஒன்றும் பெரிய படிப்பு இல்லையே. அதனால் தான் அவன் இப்படி பூனையும் நாயுமாக விளையாடிக் கொண்டிருக்கிறானோ என்று எனக்குத் தோன்றியது.
"நம்ம வீட்டு கார் ஷெட்ல தான் இருக்கு... சாப்டதுக்கப்புறம் போய் பாக்கலாமா?"
"நம்ம வீட்டு கார் ஷெட்லயா?" என் மனைவி சுதாவைக் கேள்வியாகப் பார்த்தேன்...
"ஆமாங்க.. அங்க அழுக்குத் துணி, பழைய சாக்ஸ் எல்லாம் போட்டு ஒரு டப்பா வச்சிருக்கோம் இல்ல, அதுல தான் வந்து படுத்திருக்கு.. மழை வேற பெய்யுதா, கதகதப்புக்கு வந்திருக்கு போலிருக்கு" என்றாள் ஒன்றுமே நடக்காதது போல.
"அதுலயா படுத்துகிட்டிருக்கு?"
" ஆமாம்... ஏங்க?"
"இல்ல, பூனை எல்லாம் வீட்டுக்குள்ள வந்தா கஷ்டம்.. ஆஸ்துமா வரும்னு சொல்லுவாங்க.. கார் எடுக்கும் போது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆய்ட்டா, அது வேற பாவம். அதுக்கு தான் யோசிக்கறேன்".
"அப்பா, அதெல்லாம் பரவாயில்லைப்பா.. நீங்க ரெண்டு மாசம் நம்ம கார்த்திக் வீட்ல வண்டிய விட்டுக்குங்கப்பா. அவங்கப்பா தான் வெளிநாடு போய்ட்டாரே.." இது சசி. நன்றாகத் தான் யோசனை சொல்கிறாள், இத்தனைக்கும் இவள் இன்னும் அந்த பூனையைப் பார்க்கக் கூட இல்லை.
"என்னங்க, பாவமா இருக்குங்க.. இந்த மழைல அது குட்டியையும் வச்சிகிட்டு எங்கங்க போகும்? கொஞ்ச நாள் தானே.. குட்டி வளந்ததுக்கப்புறம் அதுவே வெளீல போய்டும். அது வரைக்கும் எங்களுக்கும் பொழுது போகும் இல்லையா? மழைக்காலம் வேற.. வினு இன்னிக்கு பூரா வெளியிலயே போகலை தெரியுமா.. எல்லாம் அந்த பூனைக்குட்டியால தான். இங்கயே இருக்கட்டுங்க" விட்டால் இவளே பூனை சங்கம் ஒன்று வைத்தாலும் வைப்பாள் போலிருந்தது.
"அப்பா பூனை ரொம்ப க்யூட்டா இருக்குப்பா.. அது பாவம்ப்பா.. இருக்கட்டும்பா. பக்கத்து வீட்டு கார்த்திகைக் கூட அது தொட விடலை தெரியுமா? நான் கிட்டக்க போனா மட்டும் தான், அது ஒண்ணும் பண்ணாம இருக்கு... அது எனக்கு ப்ரெண்ட் ஆய்டுச்சுப்பா.. இப்போ நாமும் போன்னு சொல்லிட்டா அது எங்கப்பா போகும்??!!!" வினுவின் மழலைப் பேச்சை மீறி ஒன்றும் செய்ய இயலாமல் போனது...
"சரி, இருக்கட்டும்.. ஆனா இது தான் சாக்குன்னு அந்த பூனையெல்லாம் தொடக் கூடாது. அப்புறம் சுதா, உனக்கு தான் சொல்றேன், அந்த பூனை கார் ஷெட்டோட இருக்கட்டும். வீட்டுக்குள்ள எல்லாம் வரவிடாதே.."
*** ***** ***
சாப்பிட்டபின் எல்லாரும் வெளியே போய் அந்தப் பூனையைப் பார்க்க போனபோது நானும் போனேன். என் வீட்டுப் பூனையை நானே பார்க்கவில்லை என்றால் எப்படி... பார்த்து வைத்தால், அதன் மேல் கார் இடிக்காமல் நிறுத்த வசதியாகவும் இருக்கும்.
தாய்ப் பூனை படுத்துக்கொண்டிருக்க, அதன் உடலுக்கும் வாலுக்கும் இடையில் சின்னதாய் ஒரு குட்டிப் பூனை இருந்தது. வினு சொன்னது போல், அவன் தொட்டுப் பார்த்தும் ஒன்றும் செய்யாமல் தலையை மட்டும் நிமிர்த்திப் பார்த்து விட்டு திரும்பி படுத்துக் கொண்டது.
'பூனையைத் தொடக்கூடாது' என்ற நானே அதன் அழகில் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பூனைகள் இரண்டும் ஒரே நிறம், கருப்பு வெள்ளையில் இருந்த அவை இரண்டும், என் பழைய காபி கலர் சாக்ஸ் மேல் படுத்திருந்ததும் அழகாக இருந்தது. சின்னப் பூனை ரொம்ப சின்னதாக இருந்தது. கண்ணே திறக்கவில்லை போலும். குரலும் எழும்பவில்லை.
பெரிய பூனை மெதுவாக முனகியது. அது என்னைப் பார்த்த பார்வை ரொம்ப பாவமாக இருந்தது.
நான் என்னவென்று யோசிப்பதற்கு முன்னமே சுதா ஒரு கொட்டாங்குச்சியில் பால் எடுத்து வந்தாள். அந்த பெட்டியிலிருந்து கொஞ்சம் தள்ளி வைத்ததும், சொல்லிக் கொடுத்தது போல் அந்தப் பூனை மெல்ல வெளியில் இறங்கிக் குடிக்க ஆரம்பித்தது. குட்டிப் பூனை அம்மாவின் தேகச் சூடு காணாமல் தேடித் தேடி, மெள்ளமாக வாயைத் திறந்து மியாவ் என்றது. வினு அதை மெதுவாகத் தடவிக் கொடுத்தான். என்ன புரிந்ததோ, அது அமைதியாகத் தூங்க ஆரம்பித்தது.
"அதுக்குள்ள எல்லாம் சொல்லிக் குடுத்துட்டீங்களா" என்றேன் சுதாவைப் பார்த்து.
"அது ரொம்ப இன்டெல்லிஜன்ட் பூனைப்பா.. என்னை மாதிரி".. என்றான் வினு.
"அது சரி".
"ஏய் பூனை, வாட் இஸ் யுவர் நேம்" சசிகலா, பால் குடித்து முடித்து பெட்டிக்குள் ஏற இருந்த பூனையைப் பிடித்து விட்டாள்.
"ஏய் சசி, அதைக் கீழ விடு.. பாவம். டயர்டா இருக்கு பாரு" என்றபடி, அவள் கைகளிலிருந்து பூனையை விடுவித்த சுதா, "அதுக்கு பேர் எல்லாம் நாம தான் வைக்கணும்... அதுக்கு தெரியாது.."
"அம்மா, அப்போ சசின்னு வைக்கலாம்மா... " கெஞ்சவே ஆரம்பித்துவிட்டாள் சசிகலா.
"சசி வேண்டாம்டா, அப்புறம், அம்மா சசி ஹார்லிக்ஸ் குடீன்னா, அது வந்து குடிச்சிடுமே" என்றேன் நான்..
"அப்போ, சசிக்கு மேச்சிங்கா, புஸின்னு வைக்கலாமா? "
"புஸின்னா பூனை, ஹைய்யா.. புஸ்ஸிகாட், புஸ்ஸிகாட் வாட் டு யூ டூ.." - சசிகலா...
"அம்மா, அப்போ குட்டிப் பூனைக்கு மனுன்னு வைக்கலாம்... வினுக்கு மேட்சா இருக்கும்"
"சரி வினு சார்.. நிச்சயம் உங்க பேர் தான். இப்போ மனுவும் புஸ்ஸியும் தூங்க போறாங்க.. அப்பாவும் டயர்டா இருக்கேன்.. வாங்க ரெண்டு பேரும் தூங்கலாம்."
ராத்திரி பூராவும் பூனையுடன் என்ன விளையாடுவது என்று யோசித்துக்கொண்டே தூங்கிப் போனார்கள் இருவரும்.
*** ***** ***
மறுநாள் முதல் பூனையுடன் விளையாடுவது என்பது சாப்பிடுவது, தூங்குவது போல் தினப்படி வேலையானது. வினு எங்கே என்றால், நிச்சயம் கார்ஷெட்டில் தான் இருப்பான்.
சசியைத் தினம் ஸ்கூலுக்கு அனுப்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். "வினுவை மத்தியானம் பூரா விளையாட விடாமல் பார்த்துக் கொள்கிறேன்" என்று உறுதி கொடுத்தபின் தான் பள்ளிக்கே போவாள்.
புதிது புதிதாய் கற்றுத் தரும் ரைம்ஸ் எல்லாம், புஸ்ஸிக்கும் மனுக்கும் தான் முதலில் சொல்லிக் காட்டப்படும். பூனையைப் பற்றிக் கேள்விப்பட்டு ஒரு நாளைப்போல் தினமும் சசி, வினுவின் யாராவது ஒரு தோழியோ, தோழனோ, மனுவைப் பார்க்க வந்து விடுவார்கள்.
ஒரு மாதம் ஓடிப் போனது. மனு இன்னும் அம்மாவிடம் பால் குடிக்கிறது. புஸ்ஸி மேலும் நம்பிக்கை கொண்டு மனுவை வினுவிடமும் சுதாவிடமும் விட்டு விட்டு, வேட்டைக்குப் போகிறது.
இரவில் சுதா பிசைந்து போடும் பால் சாதத்தை இப்போது மனுவும் சாப்பிடுகிறது. சில சமயம் வினு சாப்பிடும் முறுக்கிலும், சசி சாப்பிடும் குர்குரேவில் கூட பங்கு கேட்கிறது.
ஒரு மாதமாக, வார இறுதியில் "வெளியே போகலாம்பா, பீச்சுக்குப் போலாம்பா" என்று வினுவோ சசியோ கேட்கவே இல்லை. மனு அவர்களை எப்போதும் பிஸியாக வைத்துக் கொண்டான். வினு, சசியுடன் சேர்ந்து ஒரு குட்டிப் ப்ளாஸ்டிக் பந்தை அடித்து விளையாடத் தொடங்கி விட்டது.
*** ***** ***
அன்று வெள்ளிக்கிழமை. நான் வீட்டுக்கு வந்தபோது, வழக்கத்துக்கு மாறாக, புஸ்ஸியையும் மனுவையும் காணவில்லை. வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டுக் கார்த்திக்கின் அம்மா என் தலையைப் பார்த்து சாவியை எடுத்து வந்தாள்.
"சுதா, குழந்தைங்க எல்லாம் எங்கே?" நான் கேட்டு முடிக்குமுன் வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. சுதாவும், குழந்தைகளும், புஸ்ஸியும், கார்த்திக்கின் பாட்டியும் கூட அதிலிருந்து இறங்கினர். எல்லோரும் ரொம்ப சோர்ந்து இருப்பதாகத் தோன்றியது. சுதா பணம் கொடுத்து விட்டு வருவதற்குள், சசியும் வினுவும் ஓடி வந்தனர்.
"அப்பா, மனு ... மனு... " அதற்கு மேல் பேச முடியாமல், அவர்கள் இருவர் கண்களும் கலங்கிப் போயின.
வாசலில் நின்று எதுவும் கேட்க வேண்டாம் என்று நான் கதவைத் திறந்து உள்ளே போகச் சொன்னேன். புஸ்ஸி நேரே கார் ஷெட்டுக்குப் போய் அதன் இருப்பிடத்தில் படுத்துக் கொண்டது.
கார்த்திக்கின் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு சுதாவும் உள்ளே வந்தாள். அவள் கண்களும் கலங்கிக் கிடந்தது.
"என்னாச்சு சுதா? மனு எங்கே?"
நான் கேட்பதற்குக் காத்திருந்தது போலவே சுதா சொல்ல ஆரம்பித்தாள். கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் போன அவளின் அழுகைக்கும் விசும்பலுக்குமிடையில் நான் சேகரித்தது இது தான்:
கொஞ்ச நாளாக இந்தப் பக்கம் சுற்றிக் கொண்டிருந்த தெருநாய் ஒன்றுடன், மனு சண்டைக்கு போயிருக்கிறது. இளம் கன்று அல்லவா, பயமறியவில்லை. அந்த நாய் மனுவின் கழுத்தில் கடித்ததில், அது அலறிக் கொண்டே எங்கள் வீட்டு வாசலில் வந்து விழுந்திருக்கிறது.
இயலாமையுடன் கத்திய புஸ்ஸியின் குரல் கேட்டு தான் டீவி பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் வாசலுக்கு போய்ப் பார்த்துவிட்டு சுதாவைக் கூப்பிட்டார்களாம். அதற்குள் மனுவுக்கு ரொம்பவும் ரத்த சேதமாகி, வலிப்பும் வந்துவிட்டதாம்.
சுதா உடனே ஒரு ஆட்டோ அழைத்து அருகிலுள்ள விலங்கியல் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறாள். ரொம்ப தாமதமாக வந்துவிட்டதாகச் சொன்ன மருத்துவர், ஒரு ஊசி போட்டுவிட்டு, அங்கேயே காத்திருக்குமாறு சொல்லிவிட்டாராம். ஒரு மணி நேரத்திற்குள் மனு மண்ணுலகை விட்டு, அதனை நக்கிக் கொண்டே சுதாவையும் வினுவையும் பாவமாக பார்த்து கத்திக்கொண்டிருந்த புஸ்ஸியையும் விட்டு விட்டுச் சென்றுவிட்டதாம்.
கடித்தது வெறிநாய் என்பதால், அந்த மருத்துவர், அங்கேயே எரித்துவிடச் சொன்னாராம். அவரிடமே ஒப்படைத்துவிட்டு வந்துவிட்டார்களாம்.
கேட்ட எனக்கே நெஞ்சு கனத்தது என்றால், கண்ணால் கண்ட சுதாவுக்கும் குழந்தைகளுக்கும் எப்படி இருந்திருக்கும்?!!...
சசியும் சுதாவும் இரவு வெகு நேரம் வரை அழுது கொண்டே இருந்தனர். யாரும் இரவு உணவு சாப்பிடத் தயாராய் இல்லை. நான் தான் ஏதாவது சாப்பிடச் சொல்வோம் என்று நினைத்து அப்புறம் எல்லாருக்கும் பால் கொடுத்தேன். பாலைப் பார்த்தவுடன், மீண்டும் சுதா அழ ஆரம்பித்து விட்டாள்..
"இதே டம்பள்ர்ல தாங்க மனுவுக்கும் பால் விடுவேன். இப்படி நம்ம விட்டுட்டு போய்டுச்சே"...
"வெளீல ஏம்பா போச்சு?!!! நான் டாம் அன்ட் ஜெர்ரி பார்த்துனால தானே.. இனிமே பாக்க மாட்டேன்னு காட் கிட்ட சொல்லுப்பா.. நான் இனிமே மனுவை நல்லா பார்த்துக்கறேன்.. என் கிட்ட திருப்பிக் குடுக்கச் சொல்லுப்பா..." சசிக்கு என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை.
சமாதானம் செய்ய முடியாமல், இன்னும் கொஞ்சம் நேரம் அழுது விட்டு சசி களைத்துப் போய்த் தூங்கிவிட்டாள். இதில் எதுவும் கலந்து கொள்ளாமல், டீவி பார்த்துக்கொண்டிருந்தான் வினு. இவனுக்கு என்ன ஆனது என்று நினைத்துக் கொண்டே போய் வினு அருகில் அமர்ந்தேன்.
"என்னாச்சு வினு, ஒண்ணும் சொல்ல மாட்டேங்கற?"
"மனு சாமி கிட்ட போய்டுச்சுன்னு கார்த்திக் பாட்டி சொன்னாங்க.. என்ன பண்றது?!!! மனுவை எனக்கு ரொம்ப பிடிக்கும். சாமிக்கும் பிடிக்கும் போலிருக்கு.. அதான் அங்க கூப்டுகிட்டாருன்னு கார்த்திக் பாட்டி தான் சொன்னாங்க. சாமிகிட்ட போய்ட்டாத் திரும்பி வர மாட்டாங்கன்னு நீ தானேப்பா சொன்ன... நம்ம பாட்டியும் இப்டி தானே போனாங்க.. அழுதா மட்டும் திரும்பி குடுத்துரவா போறாரு?"
அப்பனுக்கு புத்தி சொன்ன சுப்பய்யாவாக வினு பேசிக்கொண்டே போக, என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. வினுவை அப்படியே அணைத்துக் கொண்டு மனம் மாறி டீவி பார்க்க ஆரம்பித்தேன்.
தலைப்புச் செய்திகளுடன் செய்திக்கோவை முடிந்துகொண்டிருந்தது. பாலம் ஒன்று உடைந்து 2 பேருக்கு பலத்த அடி. ஏதோ ஒரு ஊரில் இந்து முஸ்லிம் கலவரம். 10 பேர் பலி. இரவில் தனியாக வேலைக்குப் போய்க் கொண்டிருந்த பெண் கொல்லப்பட்டாள். மனதில் நில்லாமல், செய்திகள் ஓட, வினுவைப் பார்த்தேன்.
வினு இப்படித்தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நியூஸ் பார்த்துக் கொண்டே இருப்பான். என்னைப்போல என்று நான் மகிழ்ந்து கொள்வது வழக்கம். இன்று வேறு ஏதாவது பார்த்தால் நலம் என்று தோன்றியது.
"அப்பா!, நான் ஒண்ணு கேட்கட்டா?"
"என்னடா வினு?" மீண்டும் பூனையைப் பற்றிப் பேசும் தெம்பு எனக்கு சுத்தமாக இருக்கவில்லை. வேறு ஏதாவது கேட்டால் நலம்.
"நம்ம வீட்டு பூனையை அந்த நாய் கடிச்சிடுத்து. அந்த நாயை அப்புறம் கார்ப்பொரெஷன் வேன்ல அழைச்சிட்டு போய்ட்டாங்களாம்; கொன்னுடுவாங்களாமே, கார்த்திக் சொன்னான். "
என்ன கேட்கப் போகிறான் என்று அவன் முகத்தையே பார்க்கத் தொடங்கினேன்.
"ஸோ, நாய் நாயையே கொல்லறது இல்ல.. பூனை பூனையைக் கொல்லாது. அப்புறம் ஏன் நம்ம மனுஷங்க மட்டும் இன்னொரு மனுஷனை ஈஸியாக் கொல்லறாங்க?"
இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், வினுவைப் பார்த்தேன்.
"அப்பா டயர்டா இருக்கேன்.. நாளைக்கு சொல்றேன்டா கண்ணா"!! என்பதைத்தவிர வேறு எதுவும் சொல்ல எனக்கு தோன்றவில்லை.
17 comments:
நல்ல பதிவு.. அழகான சிறுகதை.
கலக்குங்க...
தொடரட்டும் கலக்கல்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ரொம்ப நன்றி பாலா.. ரொம்பவும் பெரிய கதையாச்சேன்னு நினைச்சேன்.. படிச்சு பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.
அருமையான பதிவு. செல்லப்பிராணிகளின் உயிழப்பு இப்படித்தான் நம்மை (நம் மனதை) பாடாய்ப்படுத்தி விடும்.
//அழகிய பதிவு - முதல் பதிவு என்று சொன்னால்தான் தெரிகிறது.//
ரொம்ப நன்றி உண்மை.. உண்மையே சொல்லிட்டதுனால இனி இந்த கதையை ரொம்ப பேர் படிக்க போறாங்க...
// செல்லப்பிராணிகளின் உயிழப்பு இப்படித்தான் நம்மை (நம் மனதை) பாடாய்ப்படுத்தி விடும். //
-- ஆமாம் சிபிசார்.. இது நாங்கள் வளர்த்த ஒரு பூனை தான்.. இன்னும் பல குட்டிகள், ஒவ்வொன்றும் கிட்டத் தட்ட இதே மாதிரி காயம் ஏற்படுத்தியவைதான்.
(ஒவ்வொன்றாய் எழுதி இந்த பதிவை சோகமயமாக்கும் எண்ணம் எனக்கு நிச்சயம் இல்லை. )
அன்பு பொன்ஸ்,
நாளைக்கு சொல்றன்டா கண்ணா என்று குழந்தைகளிடம் நாம் சொல்லக்கூடிய பொய்கள் நிறையவே உள்ளன நாம் வாழும் உலகில்அன். எளிய நிறைவான கருத்துள்ள கதை.
என்னுடைய சிங் கதையில் உங்களுடைய இரண்டாம் வாசிப்பின் கருத்தை படித்தேன்.நன்றி. சரியான புள்ளியை இந்த முறை தொட்டதற்கு வாழ்த்துக்கள்.
(தமிழ்மணத்தில் இணைச்சிருங்க உங்க பதிவை)
முத்து,
//சரியான புள்ளியை இந்த முறை தொட்டதற்கு வாழ்த்துக்கள்.//
-- போன முறை கொஞ்சம் அவசரமாகப் படித்து விட்டேன்.
//(தமிழ்மணத்தில் இணைச்சிருங்க உங்க பதிவை) //
-- எங்க.. குறைந்த பட்சம் மூன்று பதிவாவது போடணுமாம் :(.. பாக்கலாம். இதுக்கே இவ்வளவு நாள் ஆயிடுச்சு... கூடிய சீக்கிரம் இணைச்சிடறேன்..
வந்ததற்கும், பின்னூட்டமிட்டதிற்கும் ரொம்ப நன்றிங்க.. :)
Plaese suggest the font.Am not able to view these.
பொன்ஸ்,
கதை அருமையாயிருந்துதுங்க. சின்ன பசங்களோட சிந்தனைகளையும் அழகா காட்டியிருக்கீங்க.
//சாமிகிட்ட போய்ட்டாத் திரும்பி வர மாட்டாங்கன்னு நீ தானேப்பா சொன்ன... நம்ம பாட்டியும் இப்டி தானே போனாங்க.. அழுதா மட்டும் திரும்பி குடுத்துரவா போறாரு?"
அப்பனுக்கு புத்தி சொன்ன சுப்பய்யாவாக வினு பேசிக்கொண்டே போக, என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.//
இத ரொம்பவே ரசிச்சேன்.
//சின்ன பசங்களோட சிந்தனைகளையும் அழகா காட்டியிருக்கீங்க.//
நன்றி கைப்புள்ள.. தொடர்ந்து வாங்க..
Ganesh, please try installing one of the fonts in the following URL:
http://www.nilacharal.com/help.html
Poons,
Kalakiteenga.. Well expressed!! I did take quite sometime to read it but the time I took was worth it!!
Ms.Congeniality,
neenga ivlo tamilla ezhuthi irukkarathu padikka maattingkannu ninaichchen :)
Thanks for reading it
சொல்ல வந்த கருத்தை சொல்லிவிட்டீர்கள். கதையின் துவக்கத்தில் இருந்து எனக்கு இது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதா அல்லது முழுவதும் கற்பனைக் கதையா என்ற சந்தேகம் இருந்ததது.
7 வயது சிறுவன்,
//ஸோ, நாய் நாயையே கொல்லறது இல்ல.. பூனை பூனையைக் கொல்லாது. அப்புறம் ஏன் நம்ம மனுஷங்க மட்டும் இன்னொரு மனுஷனை ஈஸியாக் கொல்லறாங்க?"//
என்று கேட்பது சற்று செயற்கையாக இருப்பதாக தோன்றுகிறது.
பொன்ஸ்,
இப்பதான் இந்த கதையை படிச்சேன். ரொம்ப அருமையா இருக்கு கதை. கதையில் வரும் இரண்டு சிறுவர்கள் உரையாடும்போது மணிரத்னம் படத்தில வரும் குழந்தைகள் மாதிரி அதிகமா சிந்திக்க வைக்கறாங்க.
பூனையை பற்றி நான் எழுதி இருக்கும் பதிவை பாருங்க.
http://umakathir.blogspot.com/2006/06/blog-post_114969068905750148.html
அன்புடன்
தம்பி
ponS,
intha kathaiyil n-adai rompa laivvaaka irukkiRathu!
பொன்ஸ், ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல சிறுகதை படிச்ச திருப்தி. மனம் ஒரு பெரிய கல்லா ஆகிட்ட மாதிரி, தொண்டையில ஒரு பாரம் வந்து அழுத்தினது மாதிரி இருக்குங்க. பாராட்ட வார்த்தையே வரலைங்க. ரொம்ப நல்ல இருக்கு.
Note: டெம்ப்லேட் அருமைங்க
Post a Comment