இந்தமுறை எப்படியும் சாராவைக் கொன்று விட வேண்டும்.. ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணத்தால் தட்டிக் கொண்டே போகிறது...
யோசித்துக் கொண்டே வந்த என்னைப் பார்த்து "சலாம் மேம்சாப்" வாசலில் இருந்த செக்குரிட்டி வியப்புடன் சொன்னான்.
பதில் வணக்கம் சொன்னதும், "என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டீர்கள்" என்று கேட்டான் ஆங்கிலத்தில்.
"தலைவலி" என்றேன் பதிலுக்கு.
அடுக்குமாடிக் கட்டிடத்தில் குடியிருந்தால், இது ஒரு தொல்லை. நான் எப்போது அலுவலகத்திலிருந்து வந்தால் இவனுக்கு என்ன!!!!
"என்னம்மா, திடீர்னு தலைவலி? "
அந்தக் குடியிருப்பில் இருக்கும் ஒரு தமிழ்க்காரப் பாட்டி. இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை என்றா சொல்ல முடியும்?!! செயற்கையாக புன்னகைத்தபடி கடந்து சென்றேன்.
எல்லாவற்றிற்கும் காரணம் சாராதான். சாராவை என்ன செய்வது என்று யோசித்தே ஒரு வாரமாகவே நான் தூங்கவில்லை. எப்போதும் என்ன யோசிக்கிறீர்கள் என்று என் அலுவலகத்திலேயே கேட்க ஆரம்பித்த பின் தான் நான் இப்படி மதியமே வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறேன்.
சாரா மேல் எனக்கென்ன அப்படிக் கோபம் என்று பார்க்கிறீர்களா?
நீங்களே சொல்லுங்கள். பொதுவாக எனக்கு வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இருந்ததில்லை. அதிலும், என் அம்மா இறந்த பின் தனியாளாய் இருந்த எனக்கு ராம் நல்ல துணையாக இருப்பான் என்று நினைத்தேன். அவனையும் என்னிடமிருந்து பிடுங்க நினைத்தால்?!!!
ராம்? ராம் எனக்கு நண்பன்.. நான் இந்த அலுவலகத்தில் சேர்ந்த புதிதில், எனக்கு எதுவுமே பிடிக்கவில்லை. ஏன், சுந்தரின் கல்யாணத்திற்குப் பிறகே எனக்கு எதுவும் பிடிக்கவில்லை. அவனுடன் சேர்ந்து சுற்றிய ஊரில் இருக்க முடியாமல் தான் இந்த ஊருக்கு வந்தேன்.
சரி, சுந்தரைப் பற்றி என்ன இப்போது??.. யாரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்.. ஆங், ராம்; ராம் இந்த அலுவலகத்தில், எனக்கு வேலை சொல்லிக் கொடுத்தவன். வேலை என்று பேரே தவிர, மற்ற எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பான். இந்த ஊருக்கு வந்த புதிதில் நான் எங்கே தங்கினால் நன்றாக இருக்கும் என்று அவனே எனக்குப் பதிலாக வீடு பார்த்தான். அவன் அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே வீடு பார்த்துக் கொடுத்தான்.
அவன் விடுமுறைக்கு ஊருக்குப் போகும் போது எனக்குச் சொல்லாமலேயே என் அம்மாவை அழைத்து வந்து என்னை அழ வைத்தான். என் பிறந்தநாளை நினைவில் வைத்துக் கொண்டு விடிகாலையில் பூங்கொத்துடன் வாழ்த்துச் சொல்லி சிரிக்க வைத்தான். அம்மா இறந்த போது அவனே எல்லாம் பார்த்துச் செய்தான்.
அதன்பின் ஒரு நாள் கூட என்னைத் தனியாக இருக்க விடாமல், ஒரு மாதம் என் வீட்டில் தங்க அவன் அம்மாவை வரவழைத்தான்.
அவன் அம்மாவும் 'சரி' சொல்லியபின் ஒரு சுபயோக சுப தினத்தில் என்னிடம் வந்து "சுபா, உன்னை நான் விரும்பறேன்.. " என்றான்.
அப்போது தான் நான் என் வாழ்வின் முதல் முட்டாள்தனத்தைச் செய்தேன். "சாரி ராம். நான் சுந்தர்னு ஒருத்தனை விரும்பறேன். அவன் என்னை விட்டுட்டு போய்ட்டான். ஆனால், நான் இன்னும் அவனை விரும்பறேன்... " என்றேன்.
ஏனோ அவன் என்னை வற்புறுத்தவில்லை. அவன் அம்மா தான் கொஞ்ச நாள் என் மனதை மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தாள். என் மனம் மாறாது என்று முடிவு செய்து அவள் தன் அடுத்த மகனைப் பார்க்க ஊர் திரும்பிய பின் தான் சாரா எங்கள் நிறுவனத்தில் சேர்ந்தாள்.
சாரா, கல்லூரியில் ராமுடன் சேர்ந்து படித்தவள். அந்த வகையில், அவளை இங்கே சேர்த்து விட்டதும் ராம் தான். இப்படி ஒரு பின்புலத்துடன் வந்தாலும் ராம் எனக்கு மட்டும் தான் நண்பனாக இருப்பான் என்று நான் நினைத்தேன்.
சேர்ந்த முதல் நாளே ராம் அவளை மதிய உணவுக்கு அழைத்து வரத் தொடங்கினான். என் வீட்டிலேயே அவளுக்கு தற்காலிகமாக இடம் கிடைக்குமா என்று கேட்டான்.
அதெல்லாம் கூட நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சாரா, கொஞ்சம் கொஞ்சமாக அவள் ராமைத் தன் பக்கம் ஈர்த்துக் கொள்கிறாள் என்று எனக்குத் தோன்றியது.
காலை எழுந்ததும் அவனுக்கு போன் பண்ணி எழுப்பி விடுவதும், காலை உணவு தயார் செய்து விட்டு அவனுக்குக் கொடுக்கிறேன் என்று எடுத்துப் போவதும், மாலை, அவன் இருக்கும் வரை அலுவலகத்தில் இருந்து அவன் வண்டியிலேயே வீட்டுக்கு வருவதும் என்று சாரா செய்யும் சேட்டைகள் பார்க்க சகிக்கவில்லை.
அதற்குத் தகுந்தாற்போல் இவனும் அவளுக்கு ஏற்றாற்போல் ஆடுகிறான் என்று தோன்ற ஆரம்பித்த பின் தான் எனக்குத் தூக்கம் வரவில்லை.
இன்றைக்கு எப்படியாவது இவளைக் கொன்றுவிட வேண்டும்...
இதற்கெல்லாம் யாராவது கொலை செய்வார்களா என்கிறீர்களா?.. என்ன செய்ய..எனக்கு வேறு வழி தெரியவில்லை. இவளைக் கொல்வது தான் நல்ல முடிவு..
ஒரு வாரமாக, இரவும் பகலுமாக யோசித்துக் கண்டுபிடித்த வழி தான் அது.. இந்த வார இறுதியில் ராம் ஊருக்குப் போகிறான். அந்த நேரம் பார்த்து எங்கள் பத்து மாடிக் கட்டிடத்தின் மாடியில் இருந்து அவளைத் தள்ளி விட்டால்??
இன்றைக்கு வெள்ளி. ராம் இன்று என் கோபத்தை மேலும் கிளறி விட்டான். என்னிடம் சொல்லாமல், அவளிடம் சிரித்து சிரித்துச் சொல்லிவிட்டு ஊருக்குப் போகிறான்.
சிரி சாரா, சிரி. நன்றாகச் சிரி..இன்றுடன் இந்தச் சிரிப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறேன்.
இரவு. சாராவின் அறையைப் பார்த்துக் கொண்டே பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். இதோ சாரா வந்து விட்டாள்.
வா சாரா வா.. முடிவை நோக்கி..
"சுபா, இன்னிக்கு ராம் இல்ல, அவனோட ஒரே தமாஷ்.. நீ ஏன் சீக்கிரமே வீட்டுக்கு வந்துட்ட?"
"எனக்கு நல்ல தலைவலி. அதான் வந்துட்டேன்."
"தலைவலியா?.. கமான் சுபா.. நீ ரொம்ப வீக்.. டாக்டர் கிட்ட போலாமா?"
"அதெல்லாம் வேண்டாம்.. மாத்திரை சாப்பிட்டா சரியாப் போய்டும்"
"சரி. உன் இஷ்டம்" அவள் சென்று கதவை சார்த்திக் கொண்டாள்.
சே.. நல்ல சந்தர்ப்பம்.. விட்டு விட்டேனோ.. சரி சொல்லி, அவளை பால்கனிவரை அழைத்துச் சென்று..
மூடிய கதவு லேசாகத் திறந்தது. நான் உள்ளே எட்டிப் பார்த்தேன். சாரா நைட்டிக்கு மாறி விட்டாள். கதவு ஓசை கேட்டு என்னைப் பார்த்தாள்.
"வா வா சுபா.. என்ன அதிசயம்? மனசை மாத்திகிட்டயா?"
"இல்லை.. வலி ரொம்ப அதிகமாய் இருந்தது.. அதான் உன்கூட கொஞ்சம் பேசலாமேன்னு வந்தேன். "
"வா, வா, வந்து உக்காரு"
"பெப்ஸி சாப்பிடலாமா?" அவள் தான் கேட்டாள்
"ஓ யெஸ்..டின்னர் சாப்ட்டுட்டியா?"
"ம்ம்.. நல்லா சாப்ட்டுட்டு வந்தேன். ஒரே தூக்கமா வருது"..
கொட்டாவி விட்டுக் கொண்டே ப்ரிட்ஜைத் திறந்து இரண்டு பெப்ஸி பாட்டிலை எடுத்தாள். நான் வாங்கிக் கொண்டே அவளுடன் பேச்சு கொடுத்தேன்.
அன்று சாப்பிட்ட டின்னர் பற்றியும், அவளுக்கு தொல்லை கொடுப்பதே வேலை என்று கருதும் மேலதிகாரி பற்றியும் சொன்னாள். எல்லாவற்றிற்கும் சரி சொல்லியபடி அமர்ந்திருந்தேன்.
கொஞ்சம் கொஞ்சமாக பேச்சின் மும்முரத்தில் எங்களுக்குள் இருந்த இறுக்கம் குறைந்தது... அவள் ரொம்பவும் விரும்பிய ஒருவனை அவள் தோழியும் விரும்பி கல்யாணம் பண்ணிக் கொண்டு போனதை உருக்கமாக சொன்னாள். இப்போ மட்டும் இவள் என்ன செய்கிறாளாம் என்று நினைத்தபடி அதைக் கேட்காமல் 'உம்' கொட்டினேன். அதன்பின் சில நிமிடங்கள் அவள் ஒன்றும் பேசாமல் இருந்தாள்.
தூங்கி விட்டாளா, அப்படியே எழுப்பி பால்கனிக்கு அழைத்துப் போகலாமா?.. யோசித்தபடி, அவளைப் பார்த்தேன்.
"சாரா, வெளியே போய் நிக்கலாமா? " மெதுவாக தலை ஆட்டினாள்.
அவளுக்கு பெரிதாய் ஆர்வம் ஒன்றும் இல்லை என்று தோன்றியது. இன்னுமொரு முறை தன் க்ளாஸை நிரப்பிக் கொண்டாள். என் கோப்பையையும் நிரப்பினாள். பெப்ஸி பாட்டில் முழுவதும் காலி ஆகிவிட்டது.
பால்கனியில் வந்து நின்றோம்.
"சுபா, நீ யாரையாவது காதலிச்சிருக்கியா?" கதை விபரீதமாகப் போகிறதே என்று நினைத்தேன்.
"ம்ம்.. ரெண்டு வருஷம் முன்னால.. அவன் பேரு சுந்தர். "
"என்னாச்சு?"
"அவனுக்கு என்னைப் பிடிக்கலை.. வேற ஒருத்தியோட கல்யாணம் ஆயிடுச்சு... ".
"ராம் உன்னை விரும்பறான். உனக்குத் தெரியுமா?"
ஒரு நிமிடம் என் காதை என்னாலேயே நம்ப முடியவில்லை. லேசாக தலை சுத்துவது போல் இருந்தது எனக்கு. என்ன சொல்லப் போகிறாள் இவள்?!!
"எனக்கு எப்படி தெரியும்னு பாக்கறியா? அவன் தான் சொன்னான். என்கிட்டயே.. வந்து சொன்னான். அது மட்டும் இல்ல.. உதவி வேற கேட்டான். அவனை நான் விரும்பறதா நடிக்கணுமாம். ஒவரா அவன் மேல அக்கரை காட்டுறா மாதிரி ஆக்ட் பண்ணணுமாம்."
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அப்படியானால், ராம் இன்னும் என்னை விரும்புகிறானா? நான் தான் தப்பாக இவளைக் கொல்ல நினைத்தேனா?!!
"அதைப் பாத்துட்டு உனக்கு அவன் மேல காதல் வருமாம். ஏதோ தமிழ்ப் பட கதை மாதிரி இருக்கு இல்ல?!! ஆனா, நான் அப்படி எல்லாம் செய்ய முடியாது. நான் ராமை விரும்பறேன். காலேஜ் படிச்ச காலத்திலேர்ந்து அவனை நான் விரும்பறேன். அதெப்படி உனக்கு விட்டுக் கொடுக்க முடியும்? நல்ல வேளையாய் நீ அவனை வேண்டாம்னு சொல்லிட்ட.."
இப்போது எனக்கு சாராவைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. ஆனால் ஏன் எனக்கு சாராவின் முகம் தெளிவாய்த் தெரியவில்லை. சாரா ஏன் மேலும் மேலும் என் அருகில் வருகிறாள்?
"ஆனா, இப்போ ஒரு வாரமா, உன்கிட்ட மாற்றம் தெரியுது. நீயும் ராமை விரும்ப ஆரம்பிச்சிருக்க. அவன் சொன்ன தமிழ் சினிமா சென்டிமென்ட் உன்கிட்ட பலிச்சிட்டது. ஆனா, என்கிட்ட இந்த சென்டிமென்ட் எல்லாம் பலிக்காது. நீ அவனை உடனே மறந்தாகணும்."
எனக்கு ரொம்ப சிரிப்பு வந்தது. ஆனால், சிரிக்க முடியவில்லை. இப்போது சாரா என் அருகில் வந்து என்னைப் பிடித்துக் கொண்டாள். மெல்ல என்னைத் தொடுகிறாள்.
"ராம் திரும்பி வரும் போது நீ இருக்க மாட்ட.. உன்னால ராமை இனிமே நினைக்க முடியாது. "
இப்போது இவள் என்ன செய்கிறாள்? என்னை ஏன் பால்கனியின் கைப்பிடி அருகில் நிற்க வைக்கிறாள்?!! என்னால் ஏன் தடுமாறாமல் நிற்க முடியவில்லை, நான் ஏன் குனிந்து பார்க்கிறேன்?.. கீழிருந்து வாட்ச்மேன் என்னவோ சொல்கிறான். உள்ளே போ என்று காட்டுகிறானா..
"உன் கடைசி பெப்ஸில நான் அந்த மாத்திரையைப் போட்டுட்டேன். இப்போ நீ கீழ விழப் போறே.. காப்பாத்துங்கன்னு நான் கத்தப் போறேன். யாரலயும் உன்னைக் காப்பாத்த முடியாது. சுந்தர் உனக்கு கிடைக்காததினால, ராம் உன்னைத் தொந்தரவு செய்யறதுனால, உங்க அம்மா இறந்ததைத் தாங்கிக்க முடியாம, நீ ட்ரக் அடிக்ட் ஆய்ட்ட.. இன்னிக்கி கொஞ்சம் ஓவரா போயிடிச்சி.. பாலன்ஸ் இல்லாம தவறி விழப் போற. ராம் ரெண்டு மாசம் புலம்பிட்டு என்னைக் "...
சாராவின் கடைசி வார்த்தைகள் என் காதில் விழவில்லை. நான் கீழே, கீழே, கீழே போய்க் கொண்டிருந்தேன். வாட்ச்மேனைக் காணவில்லை. மேலே எட்டிப் பார்த்து "பசாவ்" என்று கத்திய சாராவின் முகம் கொஞ்ச கொஞ்சமாகச் சின்னதாகிக் காணாமல் போய்க் கொண்டிருந்தது.
25 comments:
நல்ல எழுத்து முயற்சி... பொதுவாக பெண்கள் க்ரைம் பக்கமே வரமாட்டார்கள். நீங்கள் வந்ததற்கு பாராட்டுக்கள். சுஜாத தமிழுக்கு அறிமுகப்படுத்திய நடை இது.
பொன்ஸ்... ஒண்ணு சொல்லவா... ஏற்கனவே சொன்னது தாங்க....
//
பொன்ஸ்... பேசாம நான் கடய மூடிடலாமான்னு யோசிக்கிறேன். அட்டகாசமா எழுதுறீங்க... வாசகர் வட்ட்மும் பெருகுது... சீக்கரமே.. ஸ்டார் ஆகிடுவீங்க போல...
ம்ம்
வாழ்த்துக்கள்..
(வயித்தெரிச்சல் தாங்க,...
)
எஸ்.பாலபாரதி 3/24/2006 09:16:56 AMமணிக்கு, எழுதியவர்:
நன்றி பாலா.. எல்லாம் நீங்க எல்லாம் கொடுக்கும் ஊக்கம் தான். :)
நல்ல கதை.. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி
POONS,
பயங்கரங்க..இதை குமுதம், பாக்யா இங்க அனுப்பினா போடுவாங்க..ட்ரை பண்ணுங்க..
வருகைக்கு நன்றி தமியன்.. தொடர்ந்து வாங்க..
//இதை குமுதம், பாக்யா இங்க அனுப்பினா போடுவாங்க..//
தேங்க்ஸ் முத்து;.. ஆனா குமுதம், பாக்யாவுக்கெல்லாம் அனுப்பறா மாதிரி ஐடியா இல்ல.. வலைப்பதிவாளர்கள் படிச்சு 'பயன் பெற்றால்' அதுவே எமக்கு மகிழ்ச்சி :)
//'பயன் பெற்றால்' //
இது உங்க கதையை விட பயங்கரமால்ல இருக்கு :)))))))))
பொன்ஸ்,
பயங்கர கதாயினியா நீங்க?
நல்லா இருக்கு.
//வலைப்பதிவாளர்கள் படிச்சு 'பயன் பெற்றால்' அதுவே எமக்கு மகிழ்ச்சி //
என்னத்த சொல்றது... :))
நன்றி இராமனாதன்.
// இதே மாதிரியே...
தொடர்வதாக திட்டமா... //
இதே மாதிரி எழுதினால், எனக்கே போரடிச்சிடுங்க.. வேற ஏதாவது எழுதறேன். பேய்க் கதை ஏற்கனமே சிபி எழுதிட்டாரே.. இங்க பாருங்க..
இருந்தாலும் சுபாவைப் பத்தி கன்டின்யூ பண்ணி எழுதலாம்னு ஐடியா இருக்கு..
அப்படியே சுபா ஆவியா வந்து சாராவை பழி வாங்கறா மாதிரி கண்டினியூ பண்ணி எழுதுங்க. சின்னத்திரைக்கு சீக்கிரமே போயிடலாம். :)
//அப்படியே சுபா ஆவியா வந்து சாராவை பழி வாங்கறா மாதிரி கண்டினியூ பண்ணி எழுதுங்க. சின்னத்திரைக்கு சீக்கிரமே போயிடலாம். :)
//
கொத்தனார், இப்படி எல்லாம் சொல்லி நீங்க தப்பிக்க முடியாது. சின்னத்திரைக்கெல்லாம் போக மாட்டேன். இந்த வலைப்பதிவாளர்கள் தான் என் டார்கெட் :)
//மன்னிக்கனும் மேடம்...
நான் ராமநாதன் இல்லை.
தமியன்.... :( //
தமியன், அது உங்களுக்கு இல்லேங்க.. இதையும் தப்பா எடுத்துக்க போறீங்களேன்னு இந்த முறை தனியா நன்றிப் பின்னூட்டம் போட்டுட்டேன்
ஆமாம், தமியன்னா என்னாங்க? தனித்துவமானவன், தனியாளா நிக்கறவன் அப்படி ஏதாவதா?
நல்ல சுவாரசியமான கதை. பாராட்டுக்கள்.
//பொதுவாக பெண்கள் க்ரைம் பக்கமே வரமாட்டார்கள். நீங்கள் வந்ததற்கு பாராட்டுக்கள்//
நானும் அதே.
//வயித்தெரிச்சல் தாங்க,...//
நீங்க எதுக்கும் சுத்திப் போட்டுங்க!
//அட்டகாசமா எழுதுறீங்க... வாசகர் வட்ட்மும் பெருகுது... சீக்கரமே.. ஸ்டார் ஆகிடுவீங்க போல...
//
நாங்க எழுத நினைக்கரதெல்லாம் பால பாரதியே எழுதிடறாரே! நிச்சயமா ஸ்டார் ஆவீங்க சீக்கிரமே! அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
//வலைப்பதிவாளர்கள் படிச்சு 'பயன் பெற்றால்' அதுவே எமக்கு மகிழ்ச்சி //
வலைப்பதிவோடு நின்றுவிடக்கூடாது உங்கள் திறன். இதழ்களுக்கும் அனுப்புங்கள். பின்னாளில் இந்த எழுத்தாளினி எங்களுக்கு தெரிந்தவர் என்று கூறி நாங்கள் பெருமைப்படக் கூடும். அனுப்புங்கள்.
/இந்த வலைப்பதிவாளர்கள் தான் என் டார்கெட் //
:( நாங்க மட்டும் என்ன பாவம் செஞ்சோம். :)
நம்ம அமானுஷ்ய வாசகிக்கு ஒரு விளம்பரமும் குடுத்திருக்கீங்க. அதுக்கு ஒரு நன்றி.
குமர காவியம் 05 போட்டாச்சு வந்து பாருங்க.
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
தூள் :)
ஜீவா
//"தலைவலியா?.. கமான் சுபா.. நீ ரொம்ப வீக்.. டாக்டர் கிட்ட போலாமா?"//
சாராவிற்குத்தான் சுபா மீது எவ்வளவு அன்பு? அவளுக்கா சுபாவைக் கொல்லும் எண்ணம் வந்திருக்கக் கூடும்?
// "அதெல்லாம் வேண்டாம்.. மாத்திரை சாப்பிட்டா சரியாப் போய்டும்"
"சரி. உன் இஷ்டம்" அவள் சென்று கதவை சார்த்திக் கொண்டாள்.//
சாராவிற்கு சுபாவைக் கொல்லவேண்டும் என்ற எண்ணமிருந்தால் ஒரு நல்ல வாய்ப்பைத் தவறவிடுவார்களா என்ன ?
// சே.. நல்ல சந்தர்ப்பம்.. விட்டு விட்டேனோ.. சரி சொல்லி, அவளை பால்கனிவரை அழைத்துச் சென்று..மூடிய கதவு லேசாகத் திறந்து//
ஓஓஓ கதை அப்படிப் போகிறதோ, சாரா விரித்த வலையில் சுபா விழுந்துவிட்டார்களா
// "பெப்ஸி சாப்பிடலாமா?" அவள் தான் கேட்டாள்
"ஓ யெஸ்..டின்னர் சாப்ட்டுட்டியா?"
"ம்ம்.. நல்லா சாப்ட்டுட்டு வந்தேன். ஒரே தூக்கமா வருது"..
கொட்டாவி விட்டுக் கொண்டே ப்ரிட்ஜைத் திறந்து இரண்டு பெப்ஸி பாட்டிலை எடுத்தாள் //
இதற்குமேல் கதை படிக்கவேண்டுமா என்ன ?
:-)))
அன்புடன்,
லதா
Kalakiteenga,
Very interesting story and very well written. I can see that u already have a lot of fans.
நான் தான் அப்பவே சொன்னேனே...நீங்க எழுத்தாளருன்னு! நான் சொன்னதை உண்மைன்னு நிரூபிச்சிட்டீங்க. அருமையான கதை...நல்லா எழுதியிருக்கீங்க.
சிபி, அடுத்த கதை எழுதணுங்க.. திகில் கதைக்குத் தான் முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்.. கை அரிக்குது.. பாக்கலாம்..:)
லதா,, இப்படி பிரிச்சு பிரிச்சுப் பாக்கவும் ஆள் இருக்கா,.. நான் இன்னும் கவனமா எழுதணும்.. ம்ம்.. அடுத்த முறை பாருங்க :)
Thanks, Ms. Congeniality :)
அண்ணே, நீங்க சொன்னப்புறம் தான் நல்லா எழுதி இருக்கறதா எனக்கே தோணுது.. எல்லாம் உங்க கட்சில இருக்கிறதுனால தான் அண்ணே.... :)
நல்ல முயற்சி.பெண் க்ரைம் எழுத்தாளினி! ஆனா, முடிவை முதல்லயே யோசிச்சு தொலைச்சுட்டேன் :(
good one.
மிகவும் நன்றாக இருந்தது.எதிர்பாராத ட்விஸ்ட்.Good job
எங்கேயோஓஓஓஓஓஓஓ உயர உயரப்
போறது மாதிரி இருக்கு...போங்க...போங்க...
பொன்ஸ்,சுபா வருவாளோ இல்லையோ, அது இருக்கட்டும்.
இதென்ன புதுசா பயமுறுத்தரீங்க?
ரொம்ப நல்ல முயற்சி.
நல்லா வந்து இருக்கு.
கொஞ்சம் திகில்,கொஞ்சம் காதல்,கொஞ்சம் சதி.
காம்பினேஷன் பிரமாதம் வாழ்த்துகள்.
பொன்ஸ்,
இன்னும் உங்கள் கதையைப் படிக்கவில்லை. ஆனால் பின்னூட்டங்களை மேலோட்டமாக வாசித்தபோது, கதை மிகவும் பிரமாதமான் கதை போல் தான் தெரிகிறது. எதற்கும் வரும் வார இறுதியில் வாசித்துவிட்டு என் கருத்துக்களைச் சொல்கிறேன்.
பி.கு :- மறுமொழி இடுக எனும் சுட்டிக்குப் பக்கத்தில் அடைப்புக்குறிக்குள் "வெளியிடப்பாடாமலும் போகலாம்" என ஓர் அறிவுறுத்தல் ஏன்?
Post a Comment