சென்னையிலிருந்து டெல்லி, பூனா எல்லா இடமும் சுலபமாகப் போய்விடலாம். பெங்களூர் போகத் தான் ஒரே அடிதடி. அதிலும் பாருங்கள், வெள்ளி இரவு, ஞாயிறு மாலை என்றால், இரண்டு பக்கமும் பேருந்து, தொடர்வண்டி என்று எதுவும் கிடைக்காது. நான் வழக்கமாக முன்னமேயே பதிவு செய்து விடுவேன், இந்த அனுபவத்திற்குப் பிறகு.
அந்த வாரம் திங்கள் விடுமுறை. அந்தத் திங்கள் தான் சென்னையின் சரி பாதி ஜனத்தொகை பெங்களூர் போகிறது போலும், எனக்கு ஊர் திரும்ப டிக்கெட் கிடைக்கவில்லை. பேருந்தோ, தொடர்வண்டியோ எதிலேயாவது வந்து விடலாம் என்று முடிவு செய்து, தைரியமாக சென்னை போய் விட்டேன். ஞாயிற்றுக்கிழமை அன்று காலை சென்ட்ரல் சென்று மதியம் புறப்படும் வண்டிகள் எதிலாவது இடம் கிடைக்குமா என்று நானும் அப்பாவும் கேட்டோம்.குளிரூட்டப்பட்ட பெட்டிகள் உட்பட ஒன்றிலும் இடம் இல்லை என்று பதில் வந்தது.
சரி என்று சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு முன்னால் இருக்கும் தனியார் பேருந்து இயக்ககங்களுக்கு (ரொம்ப கஷ்டமா இருக்கு.. ட்ராவல்ஸ்னே சொல்லி இருக்கலாம்) அழைத்துச் சென்றார். தொடர்ந்த தேடல்களுக்குப் பின், ஒரு சாதா பேருந்தில், ஜன்னலோர இருக்கை கிடைத்தது. பொதுவாக தொலைதூரப் பேருந்துகளில், சுமார் நான்கு இருக்கைகளைப் பெண்களுக்கு ஒதுக்கி இருப்பார்கள். அவை அனைத்தும் நிரம்பிவிட, ஒரே ஒரு பொது இருக்கை மட்டும் இருந்தது.
"வேறு யாராவது பெண்கள் வந்தால் மாற்றி அமரவைக்க முயற்சிக்கிறோம், இல்லையெனில் அட்ஜெஸ்ட் செய்துகொள்ள வேண்டும்" என்ற விதிமுறைகளுடன், நூறு ரூபாய் அதிகம் வேறு கொடுத்து அந்த டிக்கெட்டை வாங்கினேன்.
திங்கள்கிழமை இரவு பஸ் ஏறும் போது வேறு பெண்கள் இருக்கை ஒன்றும் இல்லை என்று தெரிந்தது. அதற்காக நான் கவலைப்படவே இல்லை. அப்படி யார் நம்மை என்ன செய்து விடப் போகிறார்கள் என்று நேரே சென்று என் இருக்கையில் அமர்ந்தேன். அப்பா வேறு பெண்கள் இருக்கிறார்களா என்று பார்த்தார். ஒருவரும் இல்லாததால் ஓரமாக நின்று விட்டார்.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் போனபின், ஒரு தாயும் மகனும் வந்தார்கள். அந்தப் பையனுக்கும் என் வயது தான் இருக்கும். வீட்டிலேயே இருந்து படித்துவிட்டு கடந்த ஒரு வருடமாகத் தான் வேலைக்காக வேற்றூருக்குப் போகிறான் போலும். அதிலும் இந்த முறை தான் அவன் நண்பர்கள் இல்லாமல், தனியாகப் பயணிக்கிறான் போலும், அவன் அம்மா ஒரே அட்வைஸ் மழை.
"பர்ஸை பத்திரமா வச்சிக்கோ. ராத்திரி அசந்து தூங்கிடாதே.. பஸ் நிற்கும் போதெல்லாம் எழுந்து உன் பேக் இருக்கான்னு பாத்துக்கோ. தண்ணி பாட்டிலைக் காலி பண்ணிடாத.. கடைசி வரைக்கும் கொஞ்சமாவது வச்சிக்கோ. பக்கத்துல யாராவது உக்காந்து பிஸ்கெட் கொடுத்தா வாங்கிடாத.." அப்பப்பா.. என் அப்பா கூட நான் முதல் முறை தனியாகப் பயணம் செய்த போது இத்தனை நேரம் பேசியதில்லை. (இதெல்லாம், கீழே நின்று பார்த்துக் கொண்டிருந்த என் அப்பா சொன்னது)
இப்படி லோட் லோட்டாக அறிவுரை சொல்லி முடித்தபின் பையனும் ரொம்ப பயந்து பயந்து தான் வண்டியில் ஏறினான். மெதுவாக நடந்து வந்தவன், கடைசி இருக்கைக்கு முன் இருக்கை வரை வந்தான். என்னைப் பார்த்து, "27த் சீட் என்னுது" என்றான். பக்கத்து இருக்கையில் வைத்திருந்த என் பையை எடுத்து கையில் வைத்துக் கொண்டு உட்காரு என்பது போல் பார்த்தேன்.
அவனும் தன் பையை மேலே வைத்து விட்டு இது தான் தன் இருக்கை என்று அம்மாவிற்கு சைகை செய்தான். கீழே இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் அம்மா கொஞ்சம் பயந்து விட்டார். டிக்கெட்டுகளைச் சரி பார்த்துக் கொண்டிருந்த ட்ராவல்ஸ்காரரை அணுகி, "லேடீஸ்சுக்கு தனி சீட் கிடையாதா?" என்றார்.
"யாருக்குங்க?" என்றார் அவர். அந்த அம்மா என்னைச் சுட்டிக் காட்டினாள்.
"ஏம்மா, டிக்கெட் எடுக்கும் போதே லேடீஸ் சீட்டுன்னு கேட்டு வாங்கக் கூடாதா? " என்றார் அவர் அந்த அம்மாவிடமே.
"தெரியலயே... என் மகன் தான் அவங்க பக்கத்துல உக்காந்து போறான். அதான் கேட்டேன்" என்றார் அவர்.
"ஓ, அந்தப் பொண்ணு ஒண்ணும் அப்ஜெக்ட் பண்ணலை இல்ல? அப்போ சரி" என்று சொல்லி விட்டுத் தன் வேலையில் மூழ்கிவிட்டார்.
அந்த அம்மாளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. "வேற ஏதாவது பொண்ணுங்க சீட் இருந்தா மாத்தி குடுத்துர்றீங்களா?"
"பாக்கறேம்மா" என்றுவிட்டு அவர் போய் விட்டார். பையனைக் கீழே இறங்கி வரச் சொன்னார்.
"வேற சீட்டு பாத்து தரேன்னு சொல்றாங்க" என்றார்.
சொன்னபடியே மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பெண்கள் இருக்கையில் வராமல் போன ஒரு பெண்ணின் இடத்தை எனக்கு வாங்கிக் கொடுத்து விட்டார். வண்டியும் கிளம்பியது. அந்த அம்மாவுக்கும் மகிழ்ச்சி. அவர் மகன் என் சீட்டில் அமர்ந்து பை பை சொன்னான். எனக்குத் தான் கடுப்பு.. என் ஜன்னல் சீட்டைப் பறித்து விட்டார்களே என்று..
ஆனால், அந்த மகிழ்ச்சியும் கடுப்பும் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. கிளம்பிய வண்டி மீண்டும் நின்று விட்டது. நான் அமர்ந்திருந்த இடத்திற்குரிய பெண் வந்து விட்டாள். என்னை மீண்டும் பின் சீட்டுக்குப் போகச் சொன்னார்கள். ஆக வண்டி கிளம்புமுன் மீண்டும் என்னைத் தன் மகன் அருகில் பார்த்த அந்தத் தாயார் முகம் சிறுத்துப் போயிற்று.
அந்த ஐந்து நிமிடத்தில் அவனைக் கீழே இறக்கி, மீண்டும் ஒரு ரவுண்டு உபதேசம் நடந்தது. "பேச்சு குடுக்காத.. முக்கியமா உன் பேர் எல்லாம் சொல்லாத.. முடிஞ்சா தூங்கற மாதிரி நடி அப்போ தான் அவளும் பேச மாட்டா" என்னவோ நான் அவர்களின் மகனைக் கடத்திக் கொண்டு போவதற்காகவே வந்தது போல்.
மெதுவாக வண்டி கிளம்பியது. நான் தூங்கலாமா என்று யோசித்துக் கொண்டே வேடிக்கை பார்த்தேன். "பெங்களூரில் வேலை செய்யறீங்களா?" என்றான் என் பக்கத்தில் இருந்த பையன்.
"ஆமாம்" என்றேன் அவன் அம்மா சொன்ன எச்சரிக்கைகளை நினைவுறுத்திக் கொண்டு..
"நானும் பெங்களூரில் வேலை செய்யறேன். அம்மா, அப்பா இங்க இருக்காங்க.."
அதான் தெரியுதே என்று சொல்ல நினைத்து, மெல்ல சிரித்து வைத்தேன்.
"அம்மா ரொம்ப ஆர்த்தடாக்ஸ் .. எப்போவும் இப்படித்தான் ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க.." என்றான்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள், அதன் பின், பன்னிரண்டு மணிவரை அவன் தூங்கவே இல்லை, என்னிடம் பேசிக் கொண்டே வந்தான், என்னையும் தூங்க விடாமல். இந்த அழகிற்கு, யாராவது பெண்களே உட்கார்ந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். அவன் அம்மா ஏன் அவ்வளவு பயந்தார்கள் என்று இப்போது தான் புரிந்தது.
அத்தனை அறிவுரை சொல்லி அழுத்தி வைத்ததினால் தான் இப்படி அம்மா கண் மறைந்த பின் பேச வேண்டும் என்று தோன்றுகிறதா என்று கூட எனக்குத் தோன்றியது. எது எப்படியோ, நல்ல அம்மா நல்ல மகன்..
28 comments:
சொல்லவந்தது முழுமையாகமல் இருப்பது போல தோன்றுகிறதே.. பொன்ஸ்...
"ஜன்னலில் வந்தமர்ந்தது
அந்த பறவை..
அது குறித்து எழுத முனைந்தேன்
சொல்லவந்ததற்கும்
சொல்லில் வந்ததற்குமிடையில்
பறந்து போனது அந்த பறவை"
என்ற கவிதைதான் நினைவுக்கு வருகிறது...
நிதானமாக மறு வாசிப்பு செய்யுங்கள்.
நல்லா இருக்கே கதை....நீங்களும் 12 மணி வரை பேசிட்டு எங்காளை கிண்டல் செய்றீங்க...என் கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன் :))))))))))))))
எங்க குறையுதுன்னு தெரியலயே பாலா. இதை இப்படித் தான் முடிக்க முடியும் போல் தோன்றுகிறது... :(
ஏம்மா பூன்ஸ்,
ச்சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்றதுதான் 'அடிச்சு ஆடு'ன்னு. அதுக்காக இப்படியா?
தூள் கிளப்பிட்டேயேம்மா. அட்டகாசமா இருக்கு கதை.
நல்லா இரும்மா( இது பேச்சுக்கு இல்லை. நிஜமாவே சொன்னது)
இது கதையா நிஜமா
இது நிகழ்வா கற்பனையா
இது புதிதா நடந்ததுவா.ஹோ......சினிமா பாட்டு மாதிரியே பாடீட்டேன்.
அடக்கி வெச்சது பொங்கும்...அதிகமா எதிர்க்கப் படுறது...எதிர்ப்பு சக்தி நிறைய பெறும்.
//ச்சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்றதுதான் 'அடிச்சு ஆடு'ன்னு. அதுக்காக இப்படியா?//
திரும்பி வந்து பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி அக்கா.. இப்பவே கொஞ்சம் நின்னு தான் ஆடிகிட்டிருக்கேன். இன்னும் பொறுமையா சிறப்பா செய்ய முயற்சிக்கிறேன். எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் :)
//என் கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன் //
என்ன முத்து பண்ண சொல்றீங்க.. இருந்தாலும் இப்படி பதிவு போடறதுக்கு உதவியா இருக்கில்ல...
//அதிகமா எதிர்க்கப் படுறது...எதிர்ப்பு சக்தி நிறைய பெறும். //
உண்மையை சொன்னா எதிர்க்கிறதுக்கும் கொஞ்சம் பேர் இருக்காங்க.. என்ன செய்ய.. இருப்பினும் என் பணி தொடரும். இன்னும் உண்மைகள் எழுதப் படும் :)உங்கள் மேலான எதிர்ப்பு எதிர்பார்க்கப் படுகிறது .
அந்த பையனுக்காக நான் வருத்தப்படுகிறேன். வாழ்க்கையில அவருடைய பொன்னான நேரத்தை வெட்டியா வீணடித்துவிட்டார்.
பெங்களூரில் (பெண் களூரில் வசித்து விட்டு பேருந்தில் இப்படி ஒரு இம்சையில் (அம்மா மற்றும் சக பிரயாணி) அவர் தத்தளித்திருக்க வேண்டியது இல்லை)
செல்வகுமார்
பொன்ஸ் :)
பேசிக் கழுத்தறுப்பவர்கள் பரவாயில்லை. பேசாமல் இருந்தே விஷமம் செய்யும் பார்ட்டிகள் பற்றித்தான் அதிக எச்சரிக்கை வேண்டும்.
இதே மெட்றாஸ் டூ பெங்களூர் அனுபவம் எனக்கும் வந்தது.
உட்கார இடம் கிடைக்காமல் நின்று கொண்டு வந்திருந்தேன். நான் நின்று கொண்டிருந்த இடத்தின் பக்கத்தில் ஒரு இளம் பெண் அமர்ந்துக் கொண்டு வந்தால்.. வெட வெட தேகத்துடன் ஒரு ஆண் கிட்ட தட்ட 35 வயதுக்கு மேலிருக்கும் பார்க்க வெகு சாதுவான முகம். நான் ஒதுங்கிக் கொண்டு இடம் கொடுத்தேன். போகப் போக அந்த ஆள் அடித்து ஆடத்துவங்கினான்.
தூங்குவது போல் கண்களை மூடிக்கொண்டு அந்தப் பெண்ணின் மேல் சாய்வது.. பஸ் குலுங்கும் போது விரல்களால் சீண்டுவது என்று.
17 -18 வயதுப் பெண் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டு அடிக்கை ஒதுங்கி உட்கார இவன் இன்னும் சேட்டைகள் அதிமாக்க ஆரம்பித்தான்.
கிட்டத்தட்ட 1 மணி நேரம்
நான் கக்குட்டையை தவறவிடுவது போல் போட்டு விட்டு குனிந்து அவளிடம் சொன்னேன். இன்னொரு முறைத் தொட்டது போல் தெரிந்தால் ஒரே ஒரு குரல்.. எல்லோருக்கும் கேக்கற மாதிரி திட்டு.. மத்தது நாங்க பாத்துக்கறோம்னு.
சரிண்ணே என்றவள் சற்று பஸ் குலுங்கியதும் குய்யோ முறையோ என்று கத்த...
நானே சற்று பயந்து தான் போனேன் அந்தக் கத்தலுக்கு ;) பின்னே நான் என்னமோ நல்லது சொல்ல குனிந்து எழும் போது கத்தினால் நான் தான் ஏதோ பண்ணினேன் என்று என்னை எல்லோரும் அடிக்க வந்தால்.. நல்லவேளையாக எதுவும் அப்படி நடக்கவில்லை. ஆனால் பஸ் நிறுத்தப் பட்டது. அந்தாளுக்கு நன்றாக பூசைக் கொடுத்து அங்கேயே இற்க்கி விட்டார்கள்.
உம்மனா மூஞ்சி போல நடிப்பவர்களிடம் கொஞ்சம் உஷாராகவே இருங்கள்
அன்புடன்
ஜீவா
//அந்த பையனுக்காக நான் வருத்தப்படுகிறேன். //
நான் கூட வருத்தப்படறேங்க.. அவன் மெயில் ஐடியாவது வாங்கி வச்சிருந்தா கூப்டு சொல்லி இருக்கலாம், அவன் சார்பா எத்தனை பேர் இருக்காங்கன்னு...
//பேசிக் கழுத்தறுப்பவர்கள் பரவாயில்லை. பேசாமல் இருந்தே விஷமம் செய்யும் பார்ட்டிகள் பற்றித்தான் அதிக எச்சரிக்கை வேண்டும்.//
ஆமாம் ஜீவா, அதுனால தான் பொதுவா நான் மொதல்ல பேசிடறது.. குறைந்த பட்சம் ஆள் எப்படின்னாவது தெரிஞ்சு உஷார இருந்துக்கலாம்னு தான்.
// அவன் அம்மா ஒரே அட்வைஸ் மழை.
"பர்ஸை பத்திரமா வச்சிக்கோ. ராத்திரி அசந்து தூங்கிடாதே.. பஸ் நிற்கும் போதெல்லாம் எழுந்து உன் பேக் இருக்கான்னு பாத்துக்கோ. தண்ணி பாட்டிலைக் காலி பண்ணிடாத.. கடைசி வரைக்கும் கொஞ்சமாவது வச்சிக்கோ. பக்கத்துல யாராவது உக்காந்து பிஸ்கெட் கொடுத்தா வாங்கிடாத.." அப்பப்பா.. என் அப்பா கூட நான் முதல் முறை தனியாகப் பயணம் செய்த போது இத்தனை நேரம் பேசியதில்லை //
ஐய்யோ பாவம் அந்த அம்மா. வரப்போகும் மருமகளிடம் என்ன பாடுபடப்போகிறார்களோ
// இப்படி லோட் லோட்டாக அறிவுரை சொல்லி முடித்தபின் பையனும் ரொம்ப பயந்து பயந்து தான் வண்டியில் ஏறினான். //
அவர் நடிப்பில் நன்கு தேறியவர்போலிருக்கிறது
// அவர் மகன் என் சீட்டில் அமர்ந்து பை பை சொன்னான். எனக்குத் தான் கடுப்பு.. என் ஜன்னல் சீட்டைப் பறித்து விட்டார்களே என்று.. //
அப்படியா இது என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு (டாங்சு கைப்பு)
:-)))
அன்புடன்,
லதா
//நான் கூட வருத்தப்படறேங்க.. அவன் மெயில் ஐடியாவது வாங்கி வச்சிருந்தா கூப்டு சொல்லி இருக்கலாம், அவன் சார்பா எத்தனை பேர் இருக்காங்கன்னு... //
தாங்கள் வருத்தப்பட்டது போல் இல்லயே தங்களது பதிவு. அவர் தங்களிடம் சகஜமாக பேசியதை வைத்து அவரை நிந்திப்பது நல்லது அல்ல. இன்னும் சொல்ல போனால், தாங்களும் அவரை பேசுவதிற்கு இடமளித்துள்ளீர்கள். தங்களது ஆட்சேபத்தை அவரிடம் தாங்கள் எடுத்துரைத்திருந்தால், அவர் தானாக தூங்கி இருப்பார். இப்படி mutual அரட்டையை வைத்து, அவரை பத்தியும் அவரது அணுகும் முறையையும் நிந்திப்பது எவ்வித நியாயம். தங்களது கருத்தில், அவரது தாயின் மேல் உள்ள தங்களது obseesion மட்டுமே மேலோங்கி தெரிகிறது.
அவர் தங்களிடம் வரம்பு மீறி நடக்க வில்லை. பிறகு அவரது பிரயாண வழக்கத்தை குறை கூறுவது சரியல்ல.
பின்குறிப்பு: இது எனது கருக்தே.. தங்களை புணபடுத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல.
செல்வகுமார்
//அப்படியா இது என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு (டாங்சு கைப்பு)
//
லதா, எவ்வளவு தடவை பஸ்ல போனாலும் ஜன்னல் சீட்டுன்னாலே ஒரு சந்தோஷம் தாங்க..
செல்வகுமார், எனக்கு இப்படி எல்லாம் யோசிக்கத் தெரியலைங்க..எதுக்கு அம்மா இருக்கறவரை ஒரு மாதிரி, இல்லாத போது ஒரு மாதிரி நடந்துக்கணும்னு தான் தோணிச்சு..அதான் எழுதினேன்..
பயணங்களில் நிறைய கற்கலாம், அதற்கு இது ஒரு உதாரணம்
// செல்வகுமார், எனக்கு இப்படி எல்லாம் யோசிக்கத் தெரியலைங்க..எதுக்கு அம்மா இருக்கறவரை ஒரு மாதிரி, இல்லாத போது ஒரு மாதிரி நடந்துக்கணும்னு தான் தோணிச்சு..அதான் எழுதினேன்..//
இங்குதான் பிரச்சனையே வருகிறது. அவர் தனது தாயின் மேல் உள்ள பாசத்தினாலும், தாயின் அதீதமான பாசபிணைப்பைக் குறைகூற விருப்பப்படாமல் (சுடுசொல் கூறி அவரை மறுதலித்தல்) தன்னைக் கட்டுபடுத்தி இருக்கலாம். ஆனால், பெங்களுருக்கு போகவிருக்கும் அவருக்கு, அவரது அணுகுமுறையில் மாற்றம் தேவை என்பது நன்கு தெரிந்து இருக்கும் என்பதால் கூட தங்களிடம் அரட்டை அடித்து இருக்கலாம். இது ஒரு முறை. தனது தாய்க்கு பிடிக்காத (தாய் தவறான வழக்கத்தைக் கடைபிடித்தாலும் அவருக்காக பொறுத்துக்கொள்வது) காரியத்தை அவர் முன்னால் செய்யாமல் இருப்பது.
செல்வகுமார்
Nice post!! I've wondered a lot about it. Parents should be a friend to their children so that the child will confide in his/her parents and will not lie or hold anything from his/her parents. They should never be so strict. It will not result in an expected output.
A very comedy experience.
I can understand you have become a victim of his mother's insecured feeling.
Though he might not want to hurt his mother there is limit at which he had to stay 'stop'. Otherwise similar to you, throughout his life he have to hurt/disturb many others.
'வயசுப் பசங்கள' பஸ் ஏத்தி விடுறதுக்கு வர்ர பெத்தவங்கள பார்க்கும்போதெல்லாம் அந்த பெத்தவங்க, அவங்க பெத்ததுகள பாக்கும்போது எனக்கு எரிச்சல் வருவதுண்டு...சரியா என்னவென்று தெரியவில்லை
வெப்பில் பிலிம்
ஓவராய் காட்டுபவர்க்கும்
ஊர்வதை ஊதி பெரிதாக்கி
பறப்பதாய் சொல்பவர்க்கும்
சான்ஸ் தேடித்தேடி
சந்திலே சுயபுராண சிந்து பாடுபவர்க்கும்
இலக்கிய சுக்கை
இடித்து குடித்துவிட்டதாய்
இறுமாந்து இருப்பவர்க்கும்
இலக்கண பேய்பிடித்து
தலைகனம் ஏறியவர்க்கும்
ஆரிய திராவிட மாயையில்
அல்லலுற்று உழல்பவர்க்கும்
தலித்தை சுரண்டியபடி
தலித்தியம் பேசுபவர்க்கும்
பெண்டாட்டியை மதிக்காமல்
பெண்ணியம் பாடுபவர்க்கும்
ஜால்ரா அடித்தபடி
ஜோரா கைதட்டுபவர்க்கும்
தமிழ் வாந்தி
தமிழ் மலஜலம் கழிக்க சொல்வோர்க்கும்
முற்போக்கு பேசுகிற
பிற்போக்குவாதிக்கும்
இலவசமாய் எமது பிராண்ட்
'தமிழ் ஆப்பு' வைக்கப்படும்.
//A very comedy experience. //
தாங்க்ஸ் சாணக்கியன்.. இந்த மாதிரி மனநிலையோட தான் நான் எழுதினது.. செல்வகுமார், இது தான் சார் நான் சொல்ல வந்தது..
தருமி, எனக்கு ஒரேடியா எரிச்சல் வரலீங்க.. ஏதோ ஒரு இன்செக்யூரிடி அந்த அம்மாவிற்கு என்று தான் தோன்றியது...
மற்றபடி எல்லா பெற்றோரும் அப்படி இல்லீங்க.. இந்தப் பதிவிலேயே பாத்தீங்கன்னா, எங்க அப்பா சும்மாத் தான் கூட வந்தாரு..
அதெல்லாம் யார் பக்கத்துல உக்காந்து போனாலும், நான் சமாளிச்சிடுவேன்னு அவருக்கு நம்பிக்கை.. அந்த அம்மா சொன்னதுல ஒரு அறிவுரை கூட அவர் சொல்லலை.. முதன்முதல் என்னை வெளியூர்ல கொண்டு விடும் போதும் அதிகம் அறிவுரை சொன்னதில்லை.. அவரோட அனுபவங்களைத் தான் சொல்லி இருக்கிறார். அதுவும் மற்றவர்களின் அனுபவங்களும் சேர்த்து நாங்களே கத்துகிட்டது தான் அதிகம்..
Helloo Mr ஆப்பு,
சீக்கிரம் எதுனா உருப்படியா எழுதி ஆப்பு வைக்க ஆரம்பிங்க.. எல்லா பதிவுலயும் போய் இத எழுதாதீங்க.. அதுலயே நேரம் போயிடும்..
visitor சொன்னது:
தமிழ்ல டைப் செய்ய நல்ல வசதி செய்துள்ளீர்கள். சூப்பர். மிக்க நன்றி.
சந்தோஷ் சொன்னது:
//அப்படி யார் நம்மை என்ன செய்து விடப் போகிறார்கள் என்று நேரே சென்று என் இருக்கையில் அமர்ந்தேன். //
:)) அடுத்தவங்களுக்குத்தான் நம்ம கிட்ட இருந்து பாதுகாப்பு வேணும் :)) (முன்னாடியும் பின்னாடியும் அடி தடுக்கும் பாதுகாப்பு வளை)
நமக்கெல்லாம் பக்கத்தில யாரு வந்து உக்காந்தாலும் ஒரே பேச்சுதான், பேச்சு கூட இல்ல அதுக்கு பேரு 'சத்தம்'னு சொல்வாங்க!
சாம்பு குழு உறுப்பினர் சொன்னது:
நீங்கள் ஆணில்லை - பெண்தான் என்று மற்றவருக்கு வேடமிட இப்படி ஒரு பதிவா ?
பொன்ஸ் சொன்னது:
அன்புக்குரிய சாம்பு குழு உறுப்பினரே!!!
ஆமாய்யா.. இது நான் பதிவு எழுத ஆரம்பிச்ச புதுசு.. கொஞ்சம் ஆர்வக் கோளாறுல போட்டுட்டேன்...
சரி, தெரியாமத் தான் கேட்கிறேன்.. ஆணாய் இருந்தால் என்ன, பெண்ணாய் இருந்தால் என்ன? பதிவு எழுதும் போது என்ன வித்தியாசம் பார்க்கப் போறீங்க?
சாம்பு குழு உறுப்பினர் சொன்னது:
ஆண் / பெண் / திருநங்கை என்று வித்தியாசம் பார்ப்பவரில்லை எங்கள் தலைவர் சாம்பு..எங்களுக்கு தேவை கிசு கிசு..உண்மையை வெளிச்சம் போடும் மேட்டர்கள்..இப்போது நீங்கள் பெண் என்று நினைத்து வழிந்துகொண்டிருக்கும் பலர் வேறு வேலை பார்க்க போவார்கள் இல்லையா..அந்த சமூக சீர்திருத்தம்தான் எங்களுக்கு வேண்டும்..
பொன்ஸ் சொன்னது:
//இப்போது நீங்கள் பெண் என்று நினைத்து வழிந்துகொண்டிருக்கும் பலர் வேறு வேலை பார்க்க போவார்கள் இல்லையா//
சீக்கிரம் அப்பால கூட்டிப் போ. நமக்கும் அதெல்லாம் வேண்டாம்.. நண்பர்களை மட்டும் தான் ஊக்குவிக்கிறது.. :))
Post a Comment