Monday, April 03, 2006

ஒரு கல்யாணம், ஒரு கச்சேரி...

நேற்று ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தேன். என் பாட்டியின் உறவினர் வீட்டுக் கல்யாணம். பாட்டியை அழைத்துச் செல்லும் வேலை எனக்குரியதாகி விட்டது. எப்படியோ.. ஒரு வேளை கல்யாணச் சாப்பாடு என்னும்போது, கசக்கிறதா என்ன...

ரிசப்ஷனுக்குத் தான் நாங்கள் போய் இருந்தோம். நாங்கள் ஆறு மணிக்கே சென்றபோது, வந்திருந்தவர்கள் எல்லாம் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். என் பாட்டி மாதிரியே கல்யாணங்களில் மட்டுமே சந்தித்து நலம் விசாரிக்க வருபவர்கள். விட்டுப் போன சொந்தங்களைத் தேடித் தங்கள் இன்றைய தங்குமிடம், பேரன், பேத்தி என்று பேசுவதற்காவே வந்திருப்பவர்கள்.

சுமார் ஏழரை மணிக்கு மேல் தான் மற்ற நண்பர், உறவினர் கூட்டம் வர ஆரம்பித்தது. அதுவரை ஒரு மெல்லிசைக் குழுவினர் கச்சேரி செய்து கொண்டிருக்க, கேட்க ஆரம்பித்தேன். அந்தக் குழுவினர், ஒரு அனாதை ஆசிரமத்திற்கு உதவுவதற்காகவே நிகழ்ச்சிகள் நடத்துபவர்களாம். சேரும் பணத்தில் செலவுகள் போக மீதம் அறுபது பேர் கொண்ட ஆசிரமத்திற்கே செல்கிறதாம். நல்ல காரியம் தான் என்று நினைத்துக் கொண்டேன்.

பாடகர்களில் ஒரு வயதான பெண்மணியும் இருந்தார். அறுபது வயதிருக்கும். அந்த வயதிற்கு மிகவும் இனிமையான குரல். அவர் பாடிய பாடல்கள் எல்லாம் பழைய பாடல்கள். "அமுதைப் பொழியும் நிலவே" என்று அவர் குரல் கேட்ட போது ஜமுனா நினைவு வந்தது. அன்றைய ஜமுனாவுக்கு நிச்சயம் பொருந்திப் போகும் இனிய, இளமையான குரல். நேரம் போவதே தெரியாமல் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஒரே ஒரு கஷ்டம் என்ன என்றால், அந்த மண்டபம் கொஞ்சம் சின்ன மண்டபம். பாடியவர்களோ பெரிய மைக், ஸ்பீக்கர் எல்லாம் வைத்துக் கொண்டு அநியாயத்திற்கு ட்ரம்ஸ் அடித்துப் பாடிக் கொண்டிருந்தனர். ட்ரம்ஸ் சத்தம் எல்லா பக்கமும் எதிரொலித்துக் கொண்டு வந்து காதில் முட்டியது. எனக்கே காதுகளைப் பொத்திக் கொள்ளலாம் என்று தோன்றியது என்றால், கல்யாணத்தில் வந்திருந்த வயதானோருக்கு எப்படி இருந்திருக்கும்?!!!

ஒரு கட்டத்தில், "தேவுடா தேவுடா" என்று சந்திரமுகி பாட்டை அவர்கள் ஆரம்பித்தபோது, என் பாட்டிக்கு அந்த அதிர்வால், உடல் தள்ளாடவே ஆரம்பித்து விட்டது. ஓரமாக உட்காரவைத்து, அடுத்த பாட்டு வரை நகரக் கூடாது என்று சொல்ல வேண்டியதாகி விட்டது. பாவம், ஒருவரோடொருவர் பேச வேண்டும் என்று வந்தவர்களால், எல்லாரையும் பார்க்கத்தான் முடிந்தது. பேசுவது காதில் விழுந்தால் தானே.

இந்த மாதிரி கல்யாணத்தில் வாசிப்பவர்கள், கொஞ்சம் மண்டபத்தின் நீளம் அகலம் தெரிந்து, அதற்கேற்றாற்போல் வாசித்தால் நல்லது. கல்யாணம் நடத்துபவர்களும் வயதானோரின் நிலை தெரிந்து அதற்கேற்றாற்போல் ஏதேனும் வசதி செய்து கொடுக்கலாம்.

24 comments:

சிங். செயகுமார். said...

திருமணம் சொர்க்கத்தில்
நிச்சயித்து
இருமணம் சேரும் நாள்
இருமணி நேரம்
ஒரு வார்த்தை
திருநாளுக்கு
தீ வைத்தால்
தாங்குமா தமிழ் நெஞ்சம்
தாலி கட்டும் வரை
வேலி உங்கள் வாயிக்கு
சவுண்ட் கொஞ்சம் அதிகம்தன்
சற்று நேரம் பொருத்திருங்கள்
சாப்படு ரெடி!

ILA(a)இளா said...

காதை கிழிப்பதற்க்காவே வருவோர் தான் அதிகம், அதைதான் பெரும்பாலானோர் விரும்புகின்றனர்

முத்து(தமிழினி) said...

பொன்ஸ்,

உருப்படியான பதிவு..எனக்கும் இந்த அனுபவம் பல இடத்தில் ஏற்பட்டிருக்கு..

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

பொதுவாகவே.. பெண்களுக்கு (உங்களுக்கு கொஞ்சம் அதிகம்) இயல்பாகவே நகைச்சுவை நன்கு வரும். க்ரைம் கதை போல ஒரூ நகைச்சுவைக் கதைக்கும் முயற்சி செய்யலாமேபா...?

கைப்புள்ள said...

நானும் இதை பல இடத்துல கவனிச்சிருக்கேன் பொன்ஸ்! சில பழைய இனிய பாடல்களைக் கச்சேரியில் கேக்க முடிஞ்சாலும்...பெரும்பாலான பாடல்கள் இறைச்சல் ரகமாகவும் அமர்ந்திருப்பவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசுவதை கேக்க முடியாத படிக்குத் தான் இருக்கிறது.

நிலவு நண்பன் said...

//எப்படியோ.. ஒரு வேளை கல்யாணச் சாப்பாடு என்னும்போது, கசக்கிறதா என்ன...//அப்போ..கல்யாணத்திற்கு வாழ்த்தப்போகலையா..சாப்பிடத்தானா..?

யாரும் அவங்கள கல்யாணத்திற்கு கூப்பிடாதிங்கப்பா..

Karthik Jayanth said...

// எப்படியோ.. ஒரு வேளை கல்யாணச் சாப்பாடு என்னும்போது, கசக்கிறதா என்ன

வந்த வேலை எப்படி நடந்தது.. அத சொல்லவே இல்ல ? :-).

பொன்ஸ்~~Poorna said...

சிங்,
// சொர்க்கத்தில்
நிச்சயித்து
இருமணம் சேரும் // நாளில்,
வாழ்த்துச் சொல்லவேனும் வாய் திறக்க வேண்டாமா?
வாழ்த்து சொல்லவும் ஆசி வழங்கவும் வாய்ப்பளிக்காத கச்சேரிகள் தான் என் வருத்தம்...

பொன்ஸ்~~Poorna said...

//காதை கிழிப்பதற்க்காவே வருவோர் தான் அதிகம், அதைதான் பெரும்பாலானோர் விரும்புகின்றனர்//
இளா, உண்மைதான்... அதற்காகவே வருபவர்கள் அதிகம் தான். ஆனால், வயதானவர்களையும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா.. அது இல்லை என்பது தான் என் வருத்தம்..

//.எனக்கும் இந்த அனுபவம் பல இடத்தில் ஏற்பட்டிருக்கு.. //

இப்போவெல்லாம் கல்யாணங்களில் இது ரொம்ப அதிகமாகிவிட்டது முத்து.. இதில் குழந்தைகளை வேறு ஆட விட்டு விடுவார்கள்.. ஏதோ வட நாட்டுக் கல்யாணம் மாதிரி.. :(

//நானும் இதை பல இடத்துல கவனிச்சிருக்கேன் பொன்ஸ்//
கைப்புள்ள, சென்னை வந்துட்டீங்க இல்ல.. இந்தக் கூத்தை இன்னும் நிறைய பாக்கலாம் இங்க..!!!

பொன்ஸ்~~Poorna said...

//அப்போ..கல்யாணத்திற்கு வாழ்த்தப்போகலையா..சாப்பிடத்தானா..?//

ஞானி சார், உங்க கல்யாணத்திற்கு வாழ்த்த வர்றேன்.. இங்க தான் சீனியர் சிட்டிசனை வாழ்த்து சொல்வதற்காகவே ஸ்பெஷலா அழைச்சிகிட்டு போய்ட்டோம் இல்ல.. நமக்கு எதுக்கு அந்தப் பொறுப்பெல்லாம்..

//வந்த வேலை எப்படி நடந்தது.. அத சொல்லவே இல்ல ? :-). //

கார்த்திக், சாப்பாடு சூப்பர்.. அதைப் பத்தி இன்னோரு பதிவுல படம் போட்டு சொல்லலாம்னு நெனைச்சேன்.. அப்புறம் நீங்க தான் இட்லி தோசைக்கே அவ்ளோ feel பண்ணீங்களே.. அதான் போனாபோகுதுன்னு விட்டுட்டேன் :)

G.Ragavan said...

கல்யாண வீடுகள்ளன்னு மட்டுமில்ல பொது இடங்கள்ளயே எரச்சல் பண்ணக் கூடாது. அதுலயும் கல்யாண மண்டபம் சிறுசுன்னா ரொம்பக் கஷ்ட்டமா இருக்கும்.

அது சரி...கல்யாணத்துக்குப் போனீங்களா? ரிசப்ஷனுக்குப் போனீங்களா?

பொன்ஸ்~~Poorna said...

ராகவன், அது என்னங்க அவ்வளவு சந்தேகம், ரிசப்ஷனுக்குத் தான் போனோம்..

துளசி கோபால் said...

பொன்ஸ்,

அதையேன் கேக்கறீங்க. பக்கத்துலெ இருக்கற நண்பர்( ரொம்ப வருஷம் கழிச்சுப் பாக்கறோம்)கிட்டே
உச்ச ஸ்தாயிலே கத்திப் பேசவேண்டி இருக்கு. அப்பப்பார்த்து பாட்டு சட்னு நின்னுச்சுன்னு வையுங்க.
அவ்வளோதான். இதுங்க ஏன் இப்படிக் கத்திக்கிட்டு இருக்குதுங்கன்னு எல்லோரும் நம்மளைப்பார்ப்பாங்க.

" எப்படி இருக்கீங்க?"

" நேத்தெ வந்துட்டோம்"

" பொண்ணு என்ன செய்யறா?"

" நீங்கதான் மாறவே இல்லை"

" வேலை எல்லாம் எப்படி இருக்கு?"

" ப்ளவுஸ்தான் சரியான மேட்சிங் கலர்லே கிடைக்கலை"

இப்படிப் போகும் உரையாடல். அதான் யார் பேசரதும் காதுலே வுழாதுல்லெ. நாமா ஊகிச்சுக்கிட்டுப்
பதில் சொல்வோம். அவுங்களும் ஊகத்துலே ஓ... அப்படியான்னு அப்பப்ப சொல்லிக்கிட்டுப் பேசணும்:-)

சரி சரி, சாப்பாட்டு மெனுவை எடுத்து வுடுங்க. ரிஸப்ஷன்லேதான் சாப்பாடு நல்லா இருக்கும்.

பொன்ஸ்~~Poorna said...

பக்கத்துல இருந்து கேட்டா மாதிரி, சாரி, 'பார்த்தா' மாதிரி சொல்றீங்களே அக்கா..
மெனு இப்போ எல்லாம் பழகிடுச்சு.. அதே பூரி, கட்லட், ப்ரைட் ரைஸ், சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், ஐஸ்க்ரீம். ஒரு நல்ல விஷயம், இப்போ அறிமுகமாயிருக்கிற பஃபே ஸ்டைல்ல நிக்க வச்சி சாப்பாடு போடாம, உக்கார வச்சு பரிமாறினாங்க.. அது தான் ஹைலைட்...

Chandravathanaa said...

ஏனோ தெரியவில்லை இந்தக் கலாசாரம் இங்கு ஐரோப்பியாவிலும் தொடர்கிறது.
தமிழ் கலை நிகழ்ச்சிகளிலும் சரி தமிழர்களின் கொண்டாட்டங்களிலும் சரி
மிக அதீத சத்தத்துடன் ஒலி பெருக்கியை அலற வைக்கிறார்கள்.
பாடல்களின் இதமும், சுகமும் அந்த அலறலில் அடிபட்டுப் போய்
நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது தலைவலியோடு வீடு செல்கிறோம்.
சில நிகழ்ச்சிகளில் நேரேயே போய் சொல்லியும் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் புரிந்து கொள்பவர்களாக இல்லை.

பொன்ஸ்~~Poorna said...

//ஏனோ தெரியவில்லை இந்தக் கலாசாரம் இங்கு ஐரோப்பியாவிலும் தொடர்கிறது.
//

அங்கேயும் அப்படித்தானா?!!! வர வர சத்தமான காதைக் கிழிக்கும் இசை தான் மக்களுக்குப் பிடிக்கிறது.. முதன்முறை என் பதிவிற்கு வந்ததற்கு நன்றி சந்திரவதனா..

ஜெய. சந்திரசேகரன் said...

கல்யாணம் கச்சேரி- கொண்டாட்டம் (???) அப்படீன்னு பாட்டு ஞாபகத்துக்கு வருது! உங்க பாட்டி ஆடுனதுக்கே சொல்றீங்களே, நான் போன வாரம் ஒரு கல்யாண மண்டபத்துக்குப் பக்கத்துல இருக்குற நண்பனைப் பார்க்க போயிருந்தேன். அந்த பாட்டுக்கு, இந்த பாட்டி, அவங்க பாட்டுக்கு ..ஆடுறாங்க! அவ்வளவு சத்தம்! இதுலயும் மேலே மண்டபம் கீழ சாப்பாடுன்னு கட்டுன மண்டபத்துல மேலேயும் கீழேயும் ஏறி இறங்கினா, ரெண்டு ரவுன்Dஉ சாப்பாடுஅடிக்க வேண்டி வரும் :0(

பட்டணத்து ராசா said...

கல்யாணமுன்னு ஒன்னு நடந்து :( அதுல கச்சேரியல்லாம் இருந்தா கண்டிப்பா இத கவனிச்சுடுவோம் பொன்ஸ் :)

manu said...

பொன்ஸ் நல்ல வேளை கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா,பாட்டு பாடாம இருந்தாஙகளே. நல்ல பாட்டு, நல்ல சாப்பாடு, வெப்பம்,சத்தம் இவை இன்றி அமையாது திருமண வரவேற்பு.மேடைக்கு போய் போஸ் கொடுத்து போட்டோ எடுக்காமல் திரும்பவும் மாட்டார்கள்.வட இந்திய வழக்கம் போல் காளையரும் கன்னியரும் வேறு ஆடுகிரார்கள்.சும்மா கோலாகலம்தான்.
மனு.

Udhayakumar said...

இந்த இரைச்சல் தேவைதான்... இல்லைன்னா கண்டதை பேசி சண்டையில்தான் முடியும்.

பொன்ஸ்~~Poorna said...

//இதுலயும் மேலே மண்டபம் கீழ சாப்பாடுன்னு கட்டுன மண்டபத்துல மேலேயும் கீழேயும் ஏறி இறங்கினா, ரெண்டு ரவுன்Dஉ சாப்பாடுஅடிக்க வேண்டி வரும் :0(
//
மேல மண்டபம், கீழே சாப்பாடுன்னா வசதி தானே சந்திரா.. சாப்பிட்டு விட்டு வந்துர வேண்டியது தானே.. எதுக்கு மேலே எல்லாம் போய்க்கிட்டு :) ஹி ஹி :)

பொன்ஸ்~~Poorna said...

//கல்யாணமுன்னு ஒன்னு நடந்து :( அதுல கச்சேரியல்லாம் இருந்தா கண்டிப்பா இத கவனிச்சுடுவோம் பொன்ஸ் :) //
பட்டணத்து ராசா, ரொம்ப சந்தேகமா சொல்றீங்களே.. கச்சேரி இல்லாம கல்யாணம் பண்ணப் போறீங்களா? அதாங்க, ரிஜிஸ்டர் ஆபீஸ் அது இதுன்னு சொல்றாங்களே!!

பொன்ஸ்~~Poorna said...

மனு, முதல் முறையா வந்துருக்கீங்க.. வருகைக்கு நன்றி...

//வட இந்திய வழக்கம் போல் காளையரும் கன்னியரும் வேறு ஆடுகிரார்கள்.//
காளையர், கன்னியர் இல்ல, பாட்டி, தாத்தா எல்லாம் கூட ஆடுகிறார்கள்.. நான் வேறு ஒரு கல்யாணத்துக்குப் போனபோது, அந்த மணமகன் குடுபத்தினர் வட நாட்டில் ஒரு வருடம் போல் இருந்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, மணமகனும், மணமகளும் ஆடவே ஆரம்பித்து விட்டார்கள்.. கூட அவர்கள் அம்மா அப்பா வேறு.. சென்னையில் தான் இருக்கிறோமா என்று ஐயமே வந்துவிட்டது..

பொன்ஸ்~~Poorna said...

//இல்லைன்னா கண்டதை பேசி சண்டையில்தான் முடியும். //
உதயகுமார், வித்தியாசமா சொல்லி இருக்கீங்க.. ஆனா, கல்யாணம் முடிச்சு ரிசப்ஷன்ல தானே இந்தக் கூத்தெல்லாம்!!