Friday, April 07, 2006

கனவு மெய்ப்பட வேண்டாம் :)

சாலையில் ஏதோ சுவையான நினைவில்
நடுவினில் வந்தேன்; ஐயகோ உணர்ந்தேன்!
எதிரிலே எமனார் இயந்திர மாகி
எதிர்ப்பது கண்டு எனைநிறுத் திட்டேன்

"வீட்டினில் சொல்லிநீ வருவாய்" என்று
ஓட்டுனன் திட்ட ஓரமாய் வழிந்தேன்.

இக்கணம் அந்தச் சாலைசெய் வண்டி
என்னுடை மோட்டார் வாகனம் தன்னில்
தன்குணம் காட்டிச் சென்றிருந் தாலோ
என்நிலை என்ன? எழுந்தது கேள்வி!!

உடலெலாம் சிதைந்து உள்ளம் மட்டும்
உயர்ந்தோர் கூற்றினை ஒத்து வெளியில்
அலைந்திருப் பேனோ ஆவி என்று?

இலையென சொல்லியும், உளதென ஒத்தும்
உளைந்த-அக் கடவுள் குலம்காண் பேனோ?

கொள்கைக் காக உயிரினை விட்ட
பல்வகைத் தலைவரோ டுறைந்திடு வேனோ?

பலமுறை கேட்டும் புரிப டாத
நியூட்டனின் நல்ல சித்தாந்தம் தன்னை
அவரையே கேட்டு ஐயநீங் குணர்ந்து
அதனின்நன் மைகளை அறிந்திடு வேனோ?

இதுவரை செய்யாக் கணக்கென எந்தன்
பாவபுண் ணியங்கள் கணக்கிடு வேனோ?

நெஞ்சமும் நினைவுஞ் சிந்தனைக் குதிரையில
்வஞ்சனை யின்றி சவாரி புரிய
கொஞ்சம்நான் எந்தன் பழைய உலகில்
கால்களைப் பதித்தேன் கதறித் துடித்தேன்

முன்னால் முழுமை வேகத் துடனே
வந்தது பெரிய சரக்குப் பேருந்து
எந்தன்சிறு வண்டி கண்ணில் படாமல்
முந்திவந் தென்மேல் மோதிய தாமே!!!

அடடே என்னுடல் கீழே இருக்க
அந்தரத் தில்நான் பறப்ப தெங்கே?!!

ஆங்கோர் சாலையில் ஆலாய்ப் பறந்தவள
்கிங்கர மாரிடை கிளம்புவ தெங்கே?

இத்தரை மீது உன்னுடை வாழ்வு
இத்துடன் முடிந்தது வருவாய் வானிற்கு
என்றவன் கூறலும் என்னுயிர் கலங்கி
மயங்கியே நிற்றலு மெய்யா? பொய்யா??


இது சின்ன வயதில், வெண்பா, ஆசிரியப்பா எல்லாம் கற்றுக் கொண்ட காலத்தில், ஆசிரியப்பா என்று எண்ணி எழுதியது..

தளைக்குற்றம், சொற்குற்றம் ஏதாவது இருந்தா please சொல்லுங்க

24 comments:

ILA (a) இளா said...

சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்பரப்பு

kuttichuvaru said...

arputhamaana varigal!! melum thodarattum!!

- யெஸ்.பாலபாரதி said...

:(
மன்னிக்கனும் பொன்ஸ்... எனக்கு எல்கணம் தெரியாதுங்கோ... அம்மணி..

Unknown said...

நன்றாக உள்ளது

கைப்புள்ள said...

அப்படி போடுங்க அருவாளை! மேட்டர் ஒன்னு ஒன்னா வெளியே வருது. மொதல்ல கதை இப்ப மரபுக் கவிதை...அடுத்தது என்னங்க?

Muthu said...

அம்பேல்....

G.Ragavan said...

இது ஆசிரியப்பாவா.......அடேங்கப்பா...எவ்வளோ எழுதீருக்கீங்க. நல்ல சொல்லாடல்.

இலவசக்கொத்தனார் said...

பொன்ஸ்,
எதோ ஜீவ்ஸ் வெண்பா எழுத சோல்லிக்குடுத்தார் அதனால எழுதிப் பழகுறேன். ஆசிரியப்பா பத்தி எல்லாம் ஒண்ணும் தெரியாது. எழுதறவங்களைப் பாத்தா ஒரே ஆச்சரியமப்பா.

படிக்க நல்லாயிருக்கு. அவ்வளவுதான் சொல்ல முடியும். :)

துளசி கோபால் said...

பொன்ஸ்,

எனக்கு தமிழ் அவ்வளவாத் தெரியாது( இப்படிச் சொல்லிக்கறதுதானே ஃபேஷன்?)
ஆமாம், அப்புறம் அதான் அந்த ஆக்ஸிடெண்ட்டுக்கு அப்புறம் எதுவோ ஆயிருச்சா?:-))))

ராகவன், கைப்புள்ளெ அப்புறம் மத்த எல்லாரும் பாராட்டி இருக்காங்கன்னா இது நல்ல 'கவிதை'யாத்தான்
இருக்கணும்.

இலவசக்கொத்தனார் said...

சற்றே பார்த்தேன் ஆசிரி யப்பா
விதிகளை, எளிதாய் தோன்றுதே எனக்கு
ஈரசை சீர்களாய் நான்கினை இடவே
வருதே நிலைமண் டிலப்பா இசைந்தே

கடைசி வரிக்கு முன்வரும் வரியே
ஒருச்சீர் குறைந்தே மூன்றாய் வந்தால்
அதுவே நேரிசைப் பாவகை
எனவே நானும் அறிந்தேன் சரிதானே.

ஆசிரியப்பாவைப் பற்றிய ஒரு பதிவை இங்கே காணலாம்.

பொன்ஸ்~~Poorna said...

இளா, குட்டிச்சுவரு, பாலாக், முத்து, தமியன், ராகவன் - ஆதரவுக்கு நன்றி..

//அப்படி போடுங்க அருவாளை! மேட்டர் ஒன்னு ஒன்னா வெளியே வருது. மொதல்ல கதை இப்ப மரபுக் கவிதை...அடுத்தது என்னங்க? //

கைப்பு அண்ணே.. கொஞ்ச நாளைக்கு உங்க சங்கப் பணிகளைப் பாத்துக்கலாம்னு இருக்கேண்ணே.. : )

கொத்தனார்,
ஆசிரியப்பா ரொம்ப ரொம்ப ஈஸி.. எவ்வளவு வேணும்னாலும் எழுதலாம்.. தளை ப்ரச்சனை கிடையாது.. ஏனோ எனக்கு இது ரொம்ப சுலபமா தோணிச்சு.. நீங்களும் முயற்சி பண்ணிப் பாருங்க...

துளசி அக்கா,
உங்க வாழ்த்துக்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்.. சீக்கிரம் கத்துக்குங்க, நான் இன்னும் நிறைய இப்படி எழுதலாம்னு இருக்கேன். :)

இலவசக்கொத்தனார் said...

//நீங்களும் முயற்சி பண்ணிப் பாருங்க... //

என்ன பொன்ஸக்கா இப்படி சொல்லிட்டீங்க? நான் முயற்சி பண்ணி இருக்கேன்னு நினைச்சேன்....

பொன்ஸ்~~Poorna said...

சாரி கொத்ஸ், இப்போ தான் பார்த்தேன்.. சரியாகத் தான் ஆசிரியப்பா எழுதி இருக்கீங்க.. எனக்கு நேரிசை ஆசிரியப்பா பிடிக்காது, இந்த கடைசிக்கு முன் வரி மூணு சீர் எப்போவும் ஏமாற்றிடும்...

வெற்றி said...

பொன்ஸ்,
அருமை. நல்ல சொல்லாடல். இன்னும் பல படைப்புக்களைத் தாருங்கள்.
நன்றி.

தருமி said...

முத்து-தமிழினி சொன்னதுக்கு - டிட்டோ!
ஆள விடுங்க

Radha N said...

நீங்க தமிழ் லிட்ரேச்சர் படிச்சவரா? கலக்கற ଡ଼'அ3ங்க.

நல்லாயிருக்குங்க.

பொன்ஸ்~~Poorna said...

வெற்றி, முதல் முறை நம்ம பதிவுக்கு வந்திருக்கீங்க.. வாழ்த்துக்களுக்கு நன்றி. அடிக்கடி வாங்க..

தருமி, ஆசிரியப்பா ரொம்ப ஈஸிங்க.. இதுக்கே இப்படி சொல்றீங்க :)

நாகு, தமிழ்தான் படிப்பேன்னு எங்க வீட்ல ஒரு காலத்துல அடம்பிடிச்சேன். தமிழ் படிச்சி டீச்சர் ஆய்டுவேன்னு சொல்லிகிட்டிருந்தேன்.. ஆனா அதெல்லாம் நடக்கவே இல்லை :(.. ஏதோ இப்படி பதிவுல ஆசிரியப்பா, வெண்பான்னு மனசைத் தேத்திகிட்டிருக்கேன் :)

Radha N said...

இளையராஜா இசையில கொடிகட்டி பறக்காரு...ஆனா அவருக்குள்ளாற ஒரு இலக்கிய ஒலகம் இருக்குதுங்க....உங்கள மாதிரிதான்....ஒன்ந்தெரியாது சொல்றிங்களே... அதுமாதிரிதான்.

நான் அவரோட பல வெண்பாக்கள படிச்சி ருக்கேன். இலக்கியம் எழுத தனியா நேரங்காலத்த ஒதுக்குன்னா.. எத்தினேயோ படைப்புகள கொண்டுவரலாம்.

அது என்னமோ தெரியலீங்க.... ஒருசிலரோட ஆழ்ந்த புலமைகள் சிலநேரத்தில் தானா வெளி ப்பட்டுரும். ஒடனே கண்டுபிடிச்சி வெளியே எடுத்தா க்கா அதிலயே ஒரு ரவுண்டு வந்துபுடலாம்.

நவினகால சிந்தனயோட இலக்கியத்த கலக்கி அடியுங்களேன்...பாக்குறதுக்கு தான் ....மன்னிச்சிகோ ங்க..படிக்கறதுக்குதான் நாங்க கெடக்கோமே!

நன்மனம் said...

ஜீன்ஸ் போட்ட கவி நீங்க ஒருத்தர் தானா இல்ல இன்னும் இருக்காங்களா.

:-))

வாழ்த்துக்கள்.

Maraboor J Chandrasekaran said...

கவிதைல fiction ஆ! கவிதை களம் அருமை.நேராப் பார்த்து ஓட்டுங்க! இல்லைன்னா அப்புறம் ஆசிரியப்பா, வெண்பால்லாம் போய் அப்பப்பா ஆயிடும்! நீங்க வெச்ச தலைப்பே சரி! இந்த கனவு மெய்ப்பட வேண்டாம்! கனவுலகூட பார்த்து வண்டி ஓட்டுங்க :)

பொன்ஸ்~~Poorna said...

நாகு, இதுக்கு இவ்வளவு லேட்டா பதில் சொல்றதுக்கு மொதல்ல மன்னிப்பு கேட்டுக்கறேன்..

இளையராஜா வெண்பா எழுதுவாரா? எனக்குத் தெரியவே தெரியாது.. எதுனா லிங்க் இருந்தா குடுங்க.. பாக்கலாம்..

//படிக்கறதுக்குதான் நாங்க கெடக்கோமே! //

ரொம்ப நன்றிங்க.. படிக்கிறதுக்கு ஒரு ஆள் இருந்தா போதுமே.. எழுத வேண்டியது தான்..

பொன்ஸ்~~Poorna said...

//ஜீன்ஸ் போட்ட கவி நீங்க ஒருத்தர் தானா இல்ல இன்னும் இருக்காங்களா.//

இப்போதைக்கு நான் ஒருத்தி தாங்க.. இன்னும் யாராவது கிடைச்சா சொல்றேன் :)

பொன்ஸ்~~Poorna said...

// கவிதைல fiction ஆ! கவிதை களம் அருமை.//
:) நன்றி சந்திரன்..

//நேராப் பார்த்து ஓட்டுங்க! இல்லைன்னா அப்புறம் ஆசிரியப்பா, வெண்பால்லாம் போய் அப்பப்பா ஆயிடும்! நீங்க வெச்ச தலைப்பே சரி! இந்த கனவு மெய்ப்பட வேண்டாம்! கனவுலகூட பார்த்து வண்டி ஓட்டுங்க :) //

நான் படிச்சிகிட்டு இருந்த காலத்துல, வண்டி ஓட்டும் போது இப்படித் தான் ஏதாவது யோசிச்சிகிட்டே ஓட்டுவேன்.. இந்தக் கவிதை யோசிச்சது கூட அப்படி ரோட்ல வண்டி ஓட்டிகிட்டு போகும் போது தான்.. இப்போ எல்லாம் பயம் வந்துடுச்சு.. பார்த்து ஓட்ட ஆரம்பிச்சிட்டேன்.. கற்பனையும் குறைஞ்சு போச்சு..:(

Radha N said...

// இளையராஜா வெண்பா எழுதுவாரா? எனக்குத் தெரியவே தெரியாது.. எதுனா லிங்க் இருந்தா குடுங்க.. பாக்கலாம்..
//
சில வருடங்களுக்கு முன்னர் பழசா இருந்த 'புதுசு கண்ணா புதுசு'ல படிச்சிருக்கேன். அதுக்கு அவரே உரையும் எளிதியது, படித்துணர இளகுவாயிருந்தது.