Thursday, September 14, 2006

சமையல் - ஒரு குறிப்பு

சமையல் செய்வது ஒரு கலை. எல்லாவற்றையும் போல, நான் இதிலும் அரைகுறை தான். சமையலையும் அதி வேகமாகச் செய்துவிட்டு அப்புறம் டைனிங் டேபிள் மீது வைத்து உப்பு பார்ப்பதில் எனக்கு நிகர் நான் தான்.

அம்மாவிடமும், சமைத்துப் பார் புத்தகங்களுடனும் முட்டி மோதியதை விட, கையில் கிடைத்த எல்லா காயையும், மசாலாக்களையும் போட்டு இஷ்டத்துக்குச் சமைத்துவிட்டுப் பின்னர் சாப்பிட்டுப் பார்த்து பெயர் வைப்பது என் வழக்கமான வழக்கம். இப்படிப்பட்ட என்னைத் தவிர, சமையலைப் பற்றிய சிறுகுறிப்பை, யாரால் நன்றாக எழுத முடியும்? பெண்கள் பொதுவாக சமையல் செய்வது பிறருக்காகத் தான் என்பது காலம் காலமாக நம் கலாச்சாரத்தில் கலந்துவிட்ட ஒரு வழக்கம். என் அம்மா முதல் என் அறைத் தோழிகள் வரை, தனியாக தனக்காக மட்டும் சமைக்க நேரும் நாட்களில், சமையல் செய்ததை விட இருக்கும் பொடி, ஊறுகாய் வகையறாக்களை வைத்து சமைத்ததாக பேர் பண்ணியது தான் அதிகம் பார்த்திருக்கிறேன்."ஏம்மா இந்தக் கீரையைக் கூட்டா செய்திருக்க? சாம்பார் வச்சா தானே உனக்குப் பிடிக்கும்" என்றால், "அப்பாவுக்கு இப்படித் தான் பிடிக்கும்டீ" என்பதிலிருந்து, அப்பாவுக்கு, பாட்டிக்கு, "எங்க பம்மிக்கு வெண்டைக்காய் பொறியல் ஆகவே ஆகாது" என்று சொல்லிச் சொல்லி பழக்குவதில், எப்போதும் சமையல் பொறுப்பில் இருக்கும் வீட்டுத் தலைவிக்கும், பிடிக்கக் கூடிய உணவு என்று ஒன்று இருக்கக்கூடும் என்பதும், எல்லாருக்கும் பார்த்துப் பார்த்துச் செய்யும் இல்லத்தலைவியின் உணவுப் பழக்கத்தையும் யாராவது கண்காணிக்க வேண்டும் என்னும் உணர்வோ இல்லாமலே போய்விடுகிறது.

எனக்குத் தெரிந்த ஒரு கூட்டுக் குடும்பத்தின் முதல் மருமகள், அந்த வீட்டின் அச்சாணி. 'சின்ன மச்சினனுக்கு இது பிடிக்கும்', 'பெரிய மச்சினனின் மகன் மால்டோவாவில் அதிக சக்கரை போட்டுக் கொள்வான்' என்பதில் இருந்து வீட்டின் நாய், பூனை வரை யாருக்கு என்ன வேண்டும் என்று அந்தந்த நேரத்துக்கு எடுத்துக் கொடுப்பவர் அவர். ஓரிரு நாள் தங்கிய எனக்கே காப்பி கொஞ்சம் அதிக கலருடன் இருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து செய்து கொடுத்தவர். ரொம்ப சின்ன வயதில் மூளையில் ஏதோ பிரச்சனையாகி, பெயர் தெரியாத ஒரு நோயில், நோயின் அறிகுறிகளே புலப்படாத நிலையில் திடீர் மரணத்தைத் தழுவினார்.

இறந்த பின் பொறுமையாக வந்தன காரணங்கள்.. ஒரு வருடத்துக்கு முன்னேயே, பெங்களூரில் ஏதோ கல்யாணத்தில் கலந்து கொள்ளப் போயிருந்த காலத்தில் மயங்கி விழுந்ததாகவும், சமாளித்து எழுந்துவிட்டதால் வீட்டினரிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்னதாகவும் மாமியார் சொல்ல, தினசரி காலை உணவே சாப்பிடாமல், மதியம் இரண்டு மணிக்கு மேல் கணவனுடன் உட்கார்ந்து சாப்பிடுவது தான் முதல் க்ளாஸ் பச்சைத் தண்ணி என்று மகன் தன் புதுக் கண்டுபிடிப்பைச் சொல்ல, 'எல்லாவற்றுக்கும் காரணம் தானே' என்று அந்தக் குடும்பத்தின் மூத்த மகன் வருத்தமாகி கிட்டத் தட்ட தேவதாஸ் நிலைக்குப் போய்விட, இன்று கவனிக்க யாருமில்லாமல், தாயை இழந்த கிட்டத்தட்ட தந்தையையும் இழந்த நிலையில் அவர்கள் மகன்!
இதற்கு யார் காரணம் என்றால், எனக்குத் தெரிந்து அந்தப் பெண் தான். குடும்பத்தைக் கவனிக்கிறேன் என்றால், தன்னைக் கவனிக்காமல் விடுவது என்று சொல்லிக் கொடுத்தவர்களை முதலில் நிற்க வைத்து உதைக்க வேண்டும். பாசத்துக்கும் அன்புக்கும் ஆதாரமே தியாகம் தான் என்று சொல்லும் நம் புராணங்களையும் பழங்கதைகளையும் கூட இன்றைய இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணம் என்று சொல்லலாம்.

சாப்பிடுவதற்கு ஒரு ஆள் இல்லை என்றால், சமைக்கக் கூடாதா என்ன? மற்ற நேரங்களை விட, "இது தான் சாப்பிடுவேன், அது பிடிக்காது" என்று சொல்லும் நண்பர்கள்/ உறவினர்கள் இல்லாத நாட்களில் தனக்குப் பிடித்ததை, பிடித்த வகையில் சமைத்து நிம்மதியாகச் சாப்பிடலாமே! பிறருக்காக சமைக்கும் போதும், தனக்குப் பிடித்த, அவர்களுக்குப் பிடிக்காத உணவு வகைகளையும் செய்து, தான் மட்டும் சாப்பிடுவதால் என்ன பாசம் குறையப் போகிறது?

உணவு மட்டுமல்ல, பெண்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் இதைப் பொறுத்திப் பார்க்கலாம். குடும்பத்தைப் பேணுவது பெண்ணின் தலையாய கடமை என்றால், தன்னைப் பேணுவதும் அதில் அடக்கம் தான். முதலில் தன்னைப் பார்த்து தன்னை நல்ல படியாக வைத்திருக்கும் பெண் தான் பிறரையும் நல்லபடியாகப் பேணிப் பராமரிக்க முடியும்.

இன்றைய சூழ்நிலையில் வேலைக்குப் போகும் பெண்கள் தன்னையும் கவனித்துத் தயாராகிப் பிறரையும் கவனிக்கும் போது, இந்த தியாக மனப்பான்மையை ஒத்திவைத்து விட்டு ஓரளவுக்கு திருந்திவிட்ட போதும், உடன் பணி புரியும் ஒரு சில தோழிகளைப் பார்க்கும் போது இது விஷயத்தில் நாம் மாற வேண்டியது இன்னும் மிக மிக அதிகம் என்றே தோன்றுகிறது.

(கோப்புக்காக, நன்றி: தமிழோவியம்)

18 comments:

chinnathambi said...

நீங்க‌ எப்பிடி?

G.Ragavan said...

ஒரு நல்ல கட்டுரை என்பேன். பெண்கள் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.

இதில் என்னுடைய தாயை நான் பாராட்டியே ஆக வேண்டும். மற்றவர்கள் நேரமாக்குகிறார்களோ இல்லையோ...தான் சரியான வேளைக்குச் சாப்பிட்டு விடுவார். அதுதான் சரியும் கூட.

அவருக்கு ஆரஞ்சு வேஃபர்ஸ் மிகவும் பிடிக்கும். பெங்களூருக்கு அவர் வருகையில் வீட்டில் எப்பொழுதும் வாங்கி வைத்திருப்பேன். ஆனால் நீங்கள் சொல்வது போல எனக்குச் சமையலில் என்ன பிடிக்கும் என்று அவருக்குத் தெரியும். அவருக்கு என்னென்ன பிடிக்கும் என்று எனக்கு ஒழுங்காகத் தெரியாது. அடுத்து பெங்களூர் வருகையில் (இந்த மாதக் கடைசியில்) கண்டிப்பாகக் கேட்கிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

என்னைப் பார்த்து இப்படிக் கேட்டுட்டீங்களே சின்னத்தம்பி.. நேத்து கூட, எனக்கு மட்டும் கூட்டு, ரசம் சாம்பார்னு தனியாளுக்கு கணக்கா சமைச்சு சாப்பிட்டு வெளியே போய் வந்த எங்க அம்மாவை அசத்திட்டோம்ல :)

ராகவன், அம்மாவிடம் இப்பவே சரியாகக் கேட்டுத் தெரிஞ்சுக்குங்க.. :)

chinnathambi said...

என்ன‌ங்க‌ இது அநியாயம்? த‌னியாளு க‌ண‌க்கா நீங்க ச‌ம‌ச்சி சாப்பிட்டா அம்மா எப்படி அச‌ருவாங்க? ஒருவேளை நீங்க சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே வ‌ந்துட்டாங்களோ?

chinnathambi said...

:))))

எதுக்கும் ஸ்மைலீ போட்டுக்கறேன். இல்ல‌னா அக்கா த‌ப்பா எடுத்துப்பாங்க‌

எலிவால்ராஜா said...

பொன்ஸ்,

சரியான கட்டுரைதான்.

எனக்கு இதுமாதரியான கட்டுரைகள் மிகவும் பிடிக்கும், ஆனால், இப்போழுது எனது என்னமே மாறிவிட்டது. எனது எண்ணம் மாற காரணமே எனது பெண்.
என் பெண் இப்பொழுது முதல் வகுப்பு போகிறவள், அவளுக்கு என்ன என்ன பிடிக்கும் என தெரிந்த போனது.(அதுவும் அவள் வகுப்பு டீச்சர் எங்களிடம் கூறினாள்)
இப்பொழுதெல்லாம் கடைக்கு சென்று காய்கறிகள் வாங்கும் போதே என் பெண்னுக்கு பிடித்தாக தான் வாங்க தோன்றுகிறது. அவளுக்கு பிடித்தாதான் செய்ய தோன்றுகிறது. நான் சமைத்ததுண்டு, என் மனைவியைவிட நான் சுமாராக சமைப்பவன். என் சமையலில் எனது மகள், ஒரு கரண்டி அதிகம் கேட்டு சப்பு கொட்டி சாப்பிடும் போது அந்த சுகமே தனி, அதனால் ஏற்படும் போதையே தனி சுகம். இந்த போதையிலிருந்து விடுபட முடியும்மா என தெரியவில்லை. (விடுபட எந்த முயற்சியும் எடுக்கவில்லை).

நான் ஆண்மகனாக பிறந்து இது போன்ற சுகத்தை இழ்க்கிறேனோ என தேன்றுகிறது.

என்னை சமைக்க கற்றுகொள்ள கட்டாய படுத்திய என் தாயை, சகோதிரியை இப்பொழுது நினைத்து கொள்வது உண்டு.

கல்யாணத்க்கு முன் எனது ரசனை, சுவை, தேவைகள் வேறாக யிருந்தது, என் பெண் பிறந்தபின் எனது ரசனை, சுவை தேவைகளை என் பெண் மாற்றிவிட்டாள்.

உங்களால் செய்யப்பட்டவற்றை உங்கள் உறவுகள் விரும்பும் போது அதன் சுகமே சரி.

என் மகள்(கள்) இல்லாத போது தனியே சமைத்து சாப்பிடும் போது முழுமையாக சமைக்கமுடிவதில்லை, சாப்பிடவும் முடியவில்லை.

இது ஒரு போதைங்க.... இதுலிருந்து விடுபட அவ்வளவு சீக்கிரம் முடியும்மா எனா தெரிவில்லை.

Saran D said...

"சாப்பிடுவதற்கு ஒரு ஆள் இல்லை என்றால், சமைக்கக் கூடாதா என்ன? மற்ற நேரங்களை விட, "இது தான் சாப்பிடுவேன், அது பிடிக்காது" என்று சொல்லும் நண்பர்கள்/ உறவினர்கள் இல்லாத நாட்களில் தனக்குப் பிடித்ததை, பிடித்த வகையில் சமைத்து நிம்மதியாகச் சாப்பிடலாமே!"

Saran D said...

இதில் எனக்கு தெரிந்தவரை தனக்கு பிடித்த உணவை சமைப்பதைவிட, தன்னால் முடிந்தாலும் இல்லையெனினும் மற்றவர்கள் நன்றாக சாப்பிட வேண்டும் என்பதான கடமையே இதற்கு காரணம். வீட்டில் யாரும் இல்லையெனும் பொழுது, சமைக்கும் கடமை இல்லையென்பதால் பொடி ஊறுகாய் வகையறாக்களை வைத்தே தனது உணவை முடித்துக் கொள்கின்றனர்.

மற்ற வேலைகள் இல்லாத ஒரு நாளில், வீட்டில் அம்மாவை உட்கார வைத்துவிட்டு மிகச் சுமாரான ஒரு உணவை நீங்கள் சமைத்து அம்மாவிற்க்கு பரிமாறிவிட்டு பாருங்களேன், அவரின் சந்தோசத்தை. அம்மா என்றில்லை, வீட்டில் இருக்கும் துணைவியார் என்றாலும், அவரிடமும் இதை நீங்கள் முயன்று பார்க்கலாம்.

சரண் D

மங்கை said...

பொன்ஸ்

நல்ல பதிவு..

இத படிச்சா அம்மா நியாபகம் தான் வருது..இன்னி தேதி வரைக்கும் அம்மா காலைல 9 அல்லது குறைந்த பட்சம் 10 மணிக்கு சாப்டதா சரித்திரமே இல்லை... எல்லாரும் சொல்லிப் பார்த்தாச்சு..ஹுஹூம்.. அதுவும் லீவ் நாளுன்னா சொல்லிக்கவேவேனாம்..பேதிகள பாத்துக்கறது,, நாய்குட்டி,, ஏன் வேலைக்காரிய கூட இவங்க தான் தாங்கனும்... இதுல அண்ணா US லே வந்துட்டா அவ்வளவுதான்.. சமையல் அறையே கதின்னு கிடப்பாங்க.. எங்களுக்கு எல்லாம் திட்டு விழும்..

என் உறவுக்காரப் பெண்ணோட குழந்தையிடம் பாட்டி எங்கடான்னா, அவன் சொல்லுவான்..பாட்டி கிட்சன் ஆபீஸ்ல இருக்காங்கன்னு..அந்த அளவுக்கு.. சமையலறையில ஏதாவது செஞ்சுட்டே இருப்பாங்க..

தனக்குன்னு ஏதும் நினச்சது இல்லை

மங்கை

செந்தில் குமரன் said...

zahir என்ற புத்தகத்தில் சில வரிகள் எனக்கு ஞாபகம் வந்தது. அதுவும் இது போன்ற ஒரு விசயத்தை ஒட்டியே வரும்.

இந்தக் கருப் பொருளோடு முழுவதுமாக ஒட்டி வராது ஆனால் நாவலாசிரியர் எங்கோ தொடங்கி பெண்கள் பிறர் உணவு உண்பதைப் பற்றி ஏன் கவலை கொள்கிறார்கள் ஏன் அது அவர்களுக்கு அது அவ்வளவு முக்கியம் என்பதை தன் பார்வையில் விளக்கி இருப்பார்.

அந்தப் பகுதிகளை கீழே கொடுத்திருக்கிறேன்.

When I was fifteen, I was desperate to find out about sex. But it was a sin, it was
forbidden. I couldn’t understand why it was a sin, could you? Can you tell me why all
religions, all over the world, even the most primitive of religions and cultures, consider
that sex is something that should be forbidden?”
“How did we get onto this subject? All right, why is sex something to be forbidden?”
“Because of food.”
“Food?”
“Thousands of years ago, tribes were constantly on the move; men could make love with
as many women as they wanted and, of course, have children by them. However, the
larger the tribe, the greater chance there was of it disappearing. Tribes fought among
themselves for food, killing first the children and then the women, because they were the
weakest. Only the strongest survived, but they were all men. And without women, men
cannot continue to perpetuate the species.

“Then someone, seeing what was happening in a neighboring tribe, decided to avoid the
same thing happening in his. He invented a story according to which the gods forbade
men to make love indiscriminately with any of the women in a tribe. They could only
make love with one or, at most, two. Some men were impotent, some women were
sterile, some members of the tribe, for perfectly natural reasons, thus had no children at
all, but no one was allowed to change partners.
“They all believed the story because the person who told it to them was speaking in the
name of the gods. He must have been different in some way: he perhaps had a deformity,
an illness that caused convulsions, or some special gift, something, at any rate, that
marked him out from the others, because that is how the first leaders emerged. In a few
years, the tribe grew stronger, with just the right number of men needed to feed everyone,
with enough women capable of reproducing and enough children to replace the hunters
and reproducers. Do you know what gives a woman most pleasure within marriage?”
“Sex.”
“No, making food. Watching her man eat. That is a woman’s moment of glory, because
she spends all day thinking about supper. And the reason must lie in that story hidden in
the past—in hunger, the threat of extinction, and the path to survival.”

S. அருள் குமார் said...

பொன்ஸ், உங்கள் அடைப்பலகையில் 'இதெல்லாம் படிக்கலாம்' பகுதியில் பிதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் "(வலைதிரட்டி அல்லாத)உரல்திரட்டிப் பக்கம் " சுட்டி மிக பயனுள்ளதாய் இருக்கிறது. ஆனாலும், அந்த வலைப்பூ இதற்கு மட்டுமே பயன்படும் என்பதான உள்குத்து ரொம்ப ஓவர் :)
பேசாமா உங்களையே பா.க.ச தலைவியா ஆக்கிட வேண்டியதுதான்!

ஆவி அம்மணி said...

நானே சமைத்து உண்டபின்னர்தான் இப்படி ஆனேன்!

ஆவி அம்மணி said...

இன்னிக்கு எங்க (பாழடைஞ்ச) பங்களாவிலகோ.வி 65தான் டின்னர்.

பொன்ஸ்~~Poorna said...

// ஒருவேளை நீங்க சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே வ‌ந்துட்டாங்களோ?
// ஹி ஹி... :))

//இது ஒரு போதைங்க.... இதுலிருந்து விடுபட அவ்வளவு சீக்கிரம் முடியும்மா எனா தெரிவில்லை. //
எலிவால் ராஜா, இது தாங்க பிரச்சனையே.. இது மாதிரி நினைக்கத் தொடங்கினால், ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொள்கிறோம்.. நான் சொல்ல வருவது என்னன்னா, உங்க மகளைக் கவனிங்க, ஆனா, உங்களையும் கவனிங்க.. 90% கவனம் உங்க மகளுக்கு ஒதுக்கினால், ஒரு 10%ஆவது தன்னையும் கவனிக்க ஒதுக்கணும். மகளுக்கு, கணவனுக்கு/மனைவிக்கு பிடித்தது என்று சமைக்கும் போது, நமக்குப் பிடித்ததும் ஒண்ணு செஞ்சு சாப்பிடணும் என்று சமைப்பவருக்கும் தோன்றணும். அதில் தப்பு ஒன்றும் இல்லை என்ற எண்ணம் வரவேண்டும் என்பது தான் நான் சொல்ல வருவது.. அத்துடன், நம் குடும்பத்தின் சமைக்கும் உறுப்பினருக்குப் பிடித்தது எது என்று தெரிந்து வைக்கவும், அவங்க சாப்பிட்டாங்களா என்று பார்க்கவும் பல பேர் தவறிவிடுகிறார்கள்.. அதையும் செய்யத் தொடங்க வேண்டும்

சரண், வெறும் கட்டுரைக்காக எழுதுவதில்லை.. வீட்டில் வாரம் ஒரு நாள் அல்லது, வேலைகள் இல்லாத நாட்களில் சமைப்பது வழக்கம் தான்.. அத்தோடு, என் அம்மாவைப் பொறுத்தவரை, அவருக்குப் பிடித்த விஷயங்களை, எனக்கும் பிடிக்கும் என்று சொல்லி செய்யச் சொல்வது என் வழக்கம்.. அப்போ தான் தனக்காக இல்லை என்றாலும் எனக்காகவாவது செய்வாங்களே!

பொன்ஸ்~~Poorna said...

நன்றி மங்கை, அம்மாவிடம் சொல்லுங்க, தன்னையும் கவனிக்க சொல்லி :)

செந்தில்குமரன், Zahir நான் படிச்சிருக்கேன்..ஆனால், அதில் சொல்லப் பட்ட இந்தக் கருத்தை இப்போ ஒப்புக் கொள்ள முடியலை.. எல்லா நாளும் முழு நீள சமையல் செய்த காலத்தில் கூட எனக்கு "அடுத்து மற்றவர்களுக்குப் பிடித்ததா என்ன சமைக்கலாம்" என்று தோன்றியதே இல்லை.. நம் அலுவலக வேலையில் சிறப்பாக, தனித்துவமாக என்ன செய்யலாம் என்று நினைப்பதுபோல் சமையலே முழு நேர வேலையா செய்பவர்களுக்கு இது போன்ற சிந்தனைகள் வரலாம்...

பொன்ஸ்~~Poorna said...

அருள்,
//ஆனாலும், அந்த வலைப்பூ இதற்கு மட்டுமே பயன்படும் என்பதான உள்குத்து ரொம்ப ஓவர் :)//
உள்குத்தா? அது நேர்குத்து.. ஒரு உள்ளர்த்தமும் இல்லை தல.. எல்லாம் நேரடியான பொருள் தான் :)

ஆவி,
//நானே சமைத்து உண்டபின்னர்தான் இப்படி ஆனேன்! //
அடப் பாவமே!!!
கோவி 65 எப்படி இருந்தது? ;)

manasu said...

ella ammakkalum ippadi than pons. athu than ammavo???

pavanga unga veetukkarara varaporavar. time kedaicha avarukkum ethavathu senju podunga sappitu pohattum

நெல்லை சிவா said...

பொன்ஸ்,

இங்கு பிஸியாகிட்டதால, இம்மாத கதைகள் படிக்கலியோ? இம்முறையும் எழுதியிருக்கிறேன். படிச்சு உங்க கருத்துச் சொன்னா, மகிழ்ச்சி.