Tuesday, September 12, 2006

ராமைய்யாவின் குடிசை - என் பார்வையில்

The Roots நிறுவனத்தினரின், பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய ஆவணப்படமான ராமைய்யாவின் குடிசையைப் பார்க்கும் வாய்ப்பு நேற்று கிடைத்தது.

1968இல் நிகழ்ந்த கீழ்வெண்மணி கிராமத்தின் வர்க்கப் போராட்டங்களைப் பற்றிய இந்த ஆவணப்படம் மிக நேர்த்தியாக எடுக்கப் பட்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களைத் தேடிப் பிடித்து அவர்களுடைய பார்வையில் சம்பவத்தை விவரிக்கும் நேர்த்தியும், கீழ்வெண்மணி சம்பவத்தில் இறந்து போனவர்களின் உறவினர்களைக் கண்டுபிடித்து அவர்களது நோக்கில் சொல்லப்பட்டிருப்பதும் மிகவும் நல்ல குறும்படமாக அமைகிறது.

30% நிலங்கள் 5% ஆட்களிடமே இருந்த நிலையில் வர்க்க ஏற்றத் தாழ்வுகளும் சாதிய அடக்குமுறைகளும் கைகோர்த்ததால் நிலவிய அடக்குமுறைகளைச் சொல்லியபடித் தொடங்குகிறது படம். பின்னர், விவசாயத் தொழிலாளர் இயக்கத்தைத் தொடங்கிவைத்த பி.சீனிவாச ராவின் வருகை, 1968 இல் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட "தஞ்சாவூர் பணியாளர் பாதுகாப்பு சட்டம்" மூலம் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை நேரங்களும், தினக்கூலி முறையும் அமலுக்கு வந்தது, ஒப்புக் கொண்ட கூலியைச் சரியாகக் கொடுக்காமல் நிலக்கிழார்கள் ஏமாற்றியது, விவசாயத் தொழிலாளர் இயக்கத்துக்கு எதிர்ப்பாக நிலக்கிழார்கள் உருவாக்கிய நெல் உற்பத்தியாளர் சங்கம், அரசாங்க சட்டத்தை மீறி உள்ளூர் ஆட்கள் இருக்கையிலேயே வெளியூர் ஆட்களை வேலைக்கமர்த்திய நிலக்கிழார்களை ஆதரித்து பாதுகாப்பு வேறு கொடுத்த போலீஸ் மற்றும் அரசின் பாரபட்சம், இந்த நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்து உள்ளூர் தொழிலாளிகளை அமர்த்திய இரண்டு நிலக்கிழார்கள் கொலையுண்டது, விவசாயத் தொழிலாளர் சிக்கல் பக்கிரிசாமி கொலை என்று கீழ்வெண்மணி சம்பவத்தை நோக்கிய அனைத்து நிகழ்வுகளையும் காரணங்களையும் வரிசையாக அடுக்குகிறது ஆவணப்படம்.

கீழ்வெண்மணிக்கு விடப்பட்ட வெளிப்படையான மிரட்டல், அதன் பின் ராமைய்யாவின் குடிசை எரிக்கப்பட்ட நிகழ்வு. இறந்து போனது எத்தனை என்று கணக்கிடும் முன்பே 29 பேர் என்று தோராயமாகச் சொல்லிவிட்டு கேசை மூட முயன்ற போலீஸின் மெத்தனம்; சம்பவத்தைப் பற்றிய வழக்குகள், அவற்றிலிருந்து நிலக்கிழார்கள் மட்டும் வசதியாக பொய்சாட்சிகளின் மூலம் தப்பித்தது; இதன் பின் பத்து வருடங்களுக்குப் பின் இந்த நிகழ்வுகளுக்குக் காரணமான, சட்டத்தின் ஓட்டைகளில் தப்பிப் பிழைத்த கோயிந்தசாமி நாயிடு கொலையுண்டது என்று கீழ்வெண்மணி சம்பவத்தைப் பற்றிய முழுமையான ஆவணமாகத் தான் படம் காட்சியளிக்கிறது.

சம்பவங்கள் சொல்லப்பட்ட விதமும் அதைப் பதிவு செய்த நேர்த்தியும் மிக நன்றாக இருந்தாலும் கொஞ்சம் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரப் படம் என்ற தோற்றத்தைக் குறைத்திருக்கலாம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் சேர்த்து பாதிப்புக்குள்ளாக்கிய நிலக்கிழார்களின் உறவினர்களையும் பேட்டி கண்டிருப்பது மிகவும் இயல்பாக இருக்கிறது. ஆவணப்படத்துக்கு மேலும் அழுத்தமும் அழகும் சேர்க்கிறது, பின்னணி இசை (இசை: இரா. ப்ரபாகர்)

படத்தில் எனக்குத் தெரிந்த சில குறைகள்:

1. தீக்கதிர் தவிர மற்ற பத்திரிக்கைகளைப் பற்றிச் சொல்லாமலேயே விட்டதால் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார படம் போன்ற ஒரு எண்ணம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது

2. நாயுடு இறந்ததைப் பற்றிய விவரங்களை அத்தனை தெளிவாகச் சொல்லாமல் விட்டதன் மூலமும் அதை நியாயப்படுத்துவதும் அதிகம் ஒட்டவில்லை.

3. எல்லாருக்குமே சப் டைட்டில்கள் போட்டிருக்கலாம்.. ஒரு சிலருக்கு மட்டும் போட்டுவிட்டது அந்தத் தமிழ்வழக்கு புரியாததால், கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.

எங்கேயோ இருக்கும் போபாலிலும், எப்போதோ நிகழ்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைகளையும் தெரிந்த எனக்கு, என் சொந்த ஊரான தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணி என்று ஒரு கிராமம் இருப்பதும், அங்கே இப்படி ஒரு சம்பவம் நடந்ததும் தெரியாமல் போன அவலம் தான் படம் பார்த்ததும் முதலில் உறைத்த விஷயம். கொஞ்சம் பழைய ஜெய்சங்கர், சிவாஜி படங்களில் இப்படிப்பட்ட வர்க்கப் போராட்டங்களைப் பற்றியும், இந்தச் சம்பவங்களைப் பற்றிய புனைவுகளும் பார்த்திருந்தாலும், "சும்மா சோகத்தைப் பிழிவதற்காக இப்படியான காட்சிகளைச் சேர்த்திருக்கிறார்கள், இப்படி கூலித் தொழிலாளிகளை ஏமாற்றுவது எல்லாம் தமிழ்நாட்டில் நடப்பது இல்லை" என்று நினைத்து இம்மாதிரியான விஷயங்களைத் தாண்டிச் சென்றுவிடும் என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு இதைப் போன்ற ஆவணப் படங்கள் தான் வரலாற்றையும் யதார்த்தத்தையும் உணர்த்துவதாக உள்ளன.

[ஆவணப்படத்தைப் பார்க்கத் தூண்டிய தொடர்புடைய விளக்கமான பதிவு இங்கே]

9 comments:

மதுமிதா said...

///
3. எல்லாருக்குமே சப் டைட்டில்கள் போட்டிருக்கலாம்.. ஒரு சிலருக்கு மட்டும் போட்டுவிட்டது அந்தத் தமிழ்வழக்கு புரியாததால், கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.
///

பொன்ஸ் நல்லா பாருங்க.

பொய் சொல்றவங்க,
இல்லை இல்லை
உண்மையைப் பேசாதவங்களுக்கு மட்டுமே இந்த சப் டைட்டில் போடப் பட்டிருக்கும்.
நல்லா கவனிச்சுப் பாருங்க

நாமக்கல் சிபி said...

இது பற்றிய பதிவொன்றை நானும் இடலாம் என்று இருந்தேன். அச்சம்பவம் குறித்த தோழர். நல்லக்கண்ணு அவர்களின் கட்டுரையை எடுத்து வைத்திருந்தேன். மற்றபடி நீங்கள் சுட்டிக் காட்டிய பத்ரி அவர்களின் பதிவினைப் படித்தபின்னர்தான் அதுபற்றிய இணையத்தில் தேடிப்பிடித்தேன் அக்கடுரையை!

மதுமிதா said...

அடுத்த பாரதிகிருஷ்ணகுமார் இயக்கும் படத்தின் குறிப்புக்கு இங்கே பாருங்க


http://madhumithaa.blogspot.com/2006/07/blog-post_15.html

சந்திப்பு said...

வெண்மணி குறித்த குறும்படம் என்பதை விட, இதனை ஆவணப்படம் என்று கூறலாம். தமிழில் ஒரு வரலாற்றுச் சம்பவம், அதுவும் ஒரு வர்க்கப் போராட்டம் குறித்து ஆவணபடமாக தயாரித்திருப்பது பாராட்டத்தக்க முயற்சி.

நானும் இதனை பார்த்தேன். வெண்மணி சம்பவம் குறித்து தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும்படி எடுக்கப்பட்டிருக்கிறது என்பது என்னுடைய கருத்து. புதியவர்கள் பார்த்தால் சற்று குழப்பமே மேலிடும், ஏதோ நமக்கு தெரியாததை பேசாங்கப்பா... என்ற பாணியில் அமைந்துள்ளது.

எனவே, வெண்ணி சம்பவம் குறித்து அறிமுகம் ஒன்றை கொடுத்துவிட்டு, அதன் பின் ஆவணங்களாக வெளியிட்டிருக்கலாம்.

பொன்சு தங்களின் வருத்தம் நியாயமானது. அதாவது, உங்கள் ஊர் விஷயம் தெரியாமல் போச்சே... என்பது. கண்ட, கண்ட குப்பையைப் பற்றியெல்லாம் பேசும் மீடியாக்கள் வெண்மணி பற்றி வாயே திறப்பதில்லை. ஏன் வெண்ணி குறித்த கட்டுரைகளும், இலக்கிய படைப்புகளும் மிகக் குறைவானதே. 1. இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் (இது விமர்சனத்திற்கு உட்பட்ட நாவல்), 2. சோலை சுந்தரபெருமாளின் செந்நெல் (இதனை கட்டாயம் படிக்க வேண்டும்) இதனை படிக்கும் போது உங்கள் ஊருக்குள், உங்கள் கண்முன்னால் அனைத்தும் நடைபெறுவதை உணர்வீர்கள்.

நிர்மல் said...

நல்லதொரு பதிவு.

dev said...

//படம் பார்த்ததும் முதலில் உறைத்த விஷயம். கொஞ்சம் பழைய ஜெய்சங்கர், சிவாஜி படங்களில் இப்படிப்பட்ட வர்க்கப் போராட்டங்களைப் பற்றியும், இந்தச் சம்பவங்களைப் பற்றிய புனைவுகளும் பார்த்திருந்தாலும், "சும்மா சோகத்தைப் பிழிவதற்காக இப்படியான காட்சிகளைச் சேர்த்திருக்கிறார்கள், இப்படி கூலித் தொழிலாளிகளை ஏமாற்றுவது எல்லாம் தமிழ்நாட்டில் நடப்பது இல்லை" என்று நினைத்து இம்மாதிரியான விஷயங்களைத் தாண்டிச் சென்றுவிடும் என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு இதைப் போன்ற ஆவணப் படங்கள் தான் வரலாற்றையும் யதார்த்தத்தையும் உணர்த்துவதாக உள்ளன.//

மன்னிக்க வேண்டும் பொன்ஸ் இந்த வரிகளின் கருத்து என்னால் ஏற்றுகொள்ள முடியாது.
உங்களுக்காக நீங்கள் பேசுங்கள் தவ்றில்லை. ஒட்டு மொத்த தலைமுறையினரின் குரலாய் ஒலிக்க நினைக்கும் போது வார்த்தைகளை நிதானித்து பிர்யோகிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். "தலைமுறையினில் பெரும்பாலோர்/சிலர்" இப்படிக் கூறியிருந்தால் ஒப்புக் கொள்ளும்படி இருந்து இருக்கலாம்.

இந்தத் தலைமுறையில் எவ்வளவுக்கு எவ்வளவு அலட்சிய மனப்போக்குக் கொண்ட இளைஞர்கள் உள்ளார்களோ அவ்வளவுக்கும் அதிகமாய் அக்கறைச் சிந்தனைக் கொண்ட இளைஞர்களும் உள்ளார்கள் எனபது உங்களுக்குத் தெரியாதச் செய்தி அல்ல...

மற்றபடி இது ஒரு நல்ல பதிவு. தகவல்கள் வரவெற்புக்குரியனவே.

பொன்ஸ்~~Poorna said...

//பொய் சொல்றவங்க,
இல்லை இல்லை
உண்மையைப் பேசாதவங்களுக்கு மட்டுமே இந்த சப் டைட்டில் போடப் பட்டிருக்கும்.//
உண்மைதான் மதுமிதா. இதை நானும் கவனித்தேன்.

நன்றி சிபி, உங்கள் பார்வையையும் இடுங்கள்.

பொன்ஸ்~~Poorna said...

சந்திப்பு ஐயா,
பின்னூட்டத்துக்கு நன்றி,
//வெண்மணி சம்பவம் குறித்து தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும்படி எடுக்கப்பட்டிருக்கிறது என்பது என்னுடைய கருத்து//
அந்தச் சம்பவம் பற்றி முன்னமே அறிந்து கொண்டு பார்க்கத் தொடங்கினால் தான் இந்த ஆவணப்படம் பயனுள்ளதாக இருக்கிறது என்பது உண்மைதான். இது விஷயத்தில் எப்படி மாற்றி எடுத்திருக்க முடியும் என்று புரியவில்லை.
நமது ஊடகங்கள் இவற்றை எல்லாம் வெளிக்கொணர்வதில்லை என்பது என்னவோ உண்மைதான். தாங்கள் குறிப்பிட்ட புத்தகங்களை நிச்சயம் படிக்கிறேன்.

நன்றி நிர்மல்

தேவ், உங்கள் பின்னூட்டத்திலிருந்து, உங்களுக்கு வெண்மணி சம்பவம் குறித்து முன்பே தெரிந்திருந்தது என்று எடுத்துக் கொள்வதா? அப்படியாயின்,

// இம்மாதிரியான விஷயங்களைத் தாண்டிச் சென்றுவிடும் என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு //
என்பது உங்களைக் குறிக்கவில்லை என்றே உணர்கிறேன்.

உங்கள் பின்னூட்டம் வார்ப்புரு கோளாறினால் வேறு இடத்தில் விழுந்துவிட்டது. இங்கே இட்டுவிட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Dharumi said...

இந்தக் குறும்படத்தைப் பற்றி ஏற்கெனவே ஏதோ சொன்னதாக நினைவு. ஆனால் இப்போது அது கிடைக்கவில்லை;போகட்டும்.

//ஆவணப்படத்துக்கு மேலும் அழுத்தமும் அழகும் சேர்க்கிறது, பின்னணி இசை (இசை: இரா. ப்ரபாகர்)// நண்பன் பிரபாகரிடம் தெரிவித்து விடுகிறேன்.