Monday, September 11, 2006

9/11

செப்டம்பர் 11, 2002


"மறக்கமுடியாததை நினைவுப்படுத்துவதற்கு ஆண்டுவிழாக்கள் தேவையில்லை. எனவே பயங்கரமான
நினைவுகள் நிரம்பிய இந்த செப்டம்பர் மாதத்தில், இன்று நான் அமெரிக்க மண்ணில்
நிற்பது ஒரு தற்செயல் நிகழ்வே! இத்தருணத்தில் எல்லாருடைய சிந்தனையிலும் , குறிப்பாக
அமெரிக்கர்களின் சிந்தனையில் மிகுந்திருப்பது ஒன்பது பதினொன்று என்று அறியப்படுகிற
அந்த நாளின் கொடூரம் தான். பயங்கரவாத தாக்குதலில் ஏறக்குறைய மூவாயிரம் குடிமக்கள்
உயிரிழந்த நாள் அது. அந்தத் துயரம் இன்னும் ஆழமாகப் பதிந்துள்ளது. அந்தக் கோபம்
இன்றும் கூர்மையாக உள்ளது. கண்ணீர்த் துளிகள் காயவில்லை. ஒரு விசித்திரமான,
விபரீதமான போர் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கிறது. ஆயினும் தான் நேசித்தவரை இழந்த
ஒவ்வொரு மனிதனுக்கும் அடிமனதில் ஆழமாக ஒன்று மட்டும் நிச்சயம் தெரியும். எந்தவொரு
போரும், எந்தவொரு பழிவாங்கும் செயலும், தரையோடு ஒட்டி எறியப்படும் கிரிக்கெட்
பந்துகளைப் போல் எத்தனை குண்டுகளை வேறொருவரின் நேசிப்புக்குரியவர்கள் மீதோ,
குழந்தைகள் மீதோ எறிந்தாலும், அவர்களின் இழப்பின் வலியை மட்டுப்படுத்தாது. அவர்கள்
நேசித்தவர்களின் உயிர்களை மீட்டுத் தராது. இறந்தவர்களுக்காக ஒரு போரினால் பழிவாங்க முடியாது. போர்
அவர்களைப் பற்றிய நினைவுகளின் புனிதத்தைக் கெடுக்கிறது.


செப்டம்பர்
11க்குப் பிறகுதான் அந்தத் தேதியின் அர்த்தம் என்ன என்பதை நாம் நினைத்துப்
பார்க்கிறோம். கடந்த வருடம் அதே தேதியில் நேசத்துக்குரியவர்களை இழந்த
அமெரிக்கர்களுக்கு மட்டுமின்றி, உலகின் மற்ற பகுதியில் வாழ்பவர்களுக்குக் கூட
செப்டம்பர் 11 நீண்டகாலமாகவே முக்கியமான தேதியாக இருந்து வந்துள்ளது.

இருபத்தொன்பது வருடங்களுக்கு முன் அதாவது 1973 செப்டம்பர் 11 அன்று சிலி
நாட்டில், ஜெனரல் பினோசே, சி.ஐ.ஏ.வின் ஆதரவுடனான ராணுவ சூழ்ச்சி மூலம் ஜனநாயக
முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சால்வடோர் அலெண்டே அரசாங்கத்தினைத் தூக்கி எறிந்தார்.
இராணுவ சதி முடிந்தபின் ஜனாதிபதி மாளிகைக்குள் சால்வடோர் அலெண்டேயின் சடலம்
கிடந்தது. அது தற்கொலையா கொலையா என்பது நமக்குத் தெரியாது. அதன்பின் வந்த பயங்கரவாத
ஆட்சியின் போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் "மறைந்து போயினர்".
துப்பாக்கிப் படையினர் பகிரங்கப் படுகொலைகளைச் செய்தனர். நள்ளிரவில் தட்டப்படும்
கதவுகள், "மறைந்துபோகும்" மனிதர்கள், திடீர்க்கைதுகள், சித்ரவதைகள் என்று பதினேழு
வருடங்கள் பீதியுடனே வாழ்ந்தனர் அந்நாட்டு மக்கள்.

தென் அமெரிக்கப்
பிரதேசத்தில் அமெரிக்காவின் தனி கவனிப்புக்கு உள்ளானது சிலி மட்டுமல்ல என்பது
வருத்தமான விஷயம். குவாட்டிமாலா, கோஸ்டா ரிகா, ஈக்வெடார், பிரேசில், பெரு,
டொமினிகன் குடியரசு, பொலிவியா, நிகராகுவா, ஹோண்டுராஸ், பனாமா, எல்.சால்வடோர்,
மெக்சிகோ, கொலம்பியா - இந்நாடுகள் அனைத்துமே சி.ஐ.ஏவின் ரகசிய - சில இடங்களில்
நேரடியான - நடவடிக்கைகளுக்கான விளையாட்டுத் திடலாக இருந்து வந்துள்ளன. அமெரிக்க
ராணுவத் தலையீட்டினால் பாதிக்கப்பட்ட வியட்னாம், கொரியா, இந்தோனேசியா, லாவோஸ்,
கம்போடியா போன்ற நாடுகளில் எத்தனை செப்டம்பர் மாதங்களில் எத்தனை பத்தாண்டுகளாய்ப்
பல லட்சக்கணக்கான ஆசியர்கள் குண்டுவீச்சுக்கு ஆளாகினர்? எரிக்கப்பட்டனர்? படுகொலை
செய்யப்பட்டனர்?

நூறாயிரக்கணக்கான சாதாரண ஜாப்பானியர்களைப் பலிகொண்ட
ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதல் நடந்த 1945 ஆகஸ்டுக்குப் பின் எத்தனை
செப்டம்பர்கள் கடந்து சென்றிருக்கின்றன! அந்த அணுகுண்டு தாக்குதல்களில் மடியாமல்
உயிர்பிழைத்த ஆயிரக்கணக்கான ஜப்பானியர்களும், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும்,
குழந்தைகளின் குழந்தைகளும் ஜப்பானிய மண்ணும், வானமும், காற்றும், நீரும்,
நிற்பவையும், நடப்பவையும், பறப்பவையும் எத்தனை செப்டம்பர்களாக நரகவாழ்க்கையை
வாழ்ந்து கொண்டிருக்கின்றன?

செப்டம்பர் 11, 1922 தான் பிரிட்டிஷ் அரசாங்கம்
அரேபியர்களின் ஆவேச ஆட்சேபணைகளை மீறி பாலஸ்தீனப் பகுதியில் யூதர்களின் நாட்டை
உருவாக்கும் ஆணையைப் பிறப்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக 1948இல் பாலஸ்தீனியம் என்ற
நாடே இல்லாமற் போனது. அகதிகளாக்கப் பட்ட நூறாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களின்
சிந்தனையிலும் உணர்விலும் மட்டுமே அது நாடாக இருந்தது. வரலாற்றில் வேறெந்த
இனத்தையும் விட அதிகம் கொடுமைக்குள்ளானவர்களான யூத மக்களுக்கு அவர்களால்
தூக்கியெறியப்பட்ட பாலஸ்தீனியர்களின் பரிதாப நிலையையும் ஏக்கங்களையும் புரிந்து
கொள்ள இயலாதா? எப்போதுமே மிதமிஞ்சிய துன்பங்கள் மனிதனுக்குள் கொடூரத் தன்மையைத்
தூண்டிவிடுகின்றனவா? அப்படியென்றால், மனித இனத்துக்கு மிஞ்சியிருக்கும் நம்பிக்கை
தான் என்ன? போரில் வெற்றி பெறும் பட்சத்தில் பாலஸ்தீனியர்களுக்கு என்ன ஆகும்?
நாடில்லாத தேசிய இனம் ஒரு நாட்டைப் பிரகடனம் செய்தால் அது எத்தகைய அரசாக இருக்கும்?
ஒரு கொடியின் கீழ் எத்தகைய கொடூரங்கள் அரங்கேறும்?

மேற்காசியாவின் வேறு
பகுதியில் கூட செப்டம்பர் 11 சமீப கால நினைவுகளை எழுப்புகிறது. 1990 ஆம் ஆண்டு இதே
தேதியில் தான் அன்றைய அமெரிக்க அதிபரான சீனியர் ஜார்ஜ் புஷ் தன் அரசாங்கம்
ஈராக்கின் மீது போர் தொடுக்க முடிவு செய்திருப்பதாக அமெரிக்க பாராளுமன்றத்தின்
கூட்டுக் கூட்டத்தில் அறிவித்தார். ஈராக் அதிபர் சதாம் உசேன் கொடூரமான இராணுவ
சர்வாதிகாரி என்று அமெரிக்கா கூறுவதும் ஏறக்குறைய துல்லியமான விமர்சனம் தான்.
ஆனால், சதாம் உசேன் மோசமான அட்டூழியங்கள் செய்து வந்த காலத்தில் தான் அமெரிக்க,
பிரிட்டிஷ் அரசாங்கங்கள் அவருக்கு நெருங்கிய கூட்டாளிகளாக இருந்திருக்கின்றன.
வியட்னாம் யுத்தத்துக்குப் பின் உலகிலேயே நீண்ட காலமாக அமெரிக்க விமானத்
தாக்குதலைச் சந்தித்த நாடு ஈராக்தான். கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க, பிரிட்டீஷ்
படைகள் ஈராக்கின் நிலப்பரப்புகள், வயல்வெளிகள் மீது 300 டன் எடை கொண்ட உள்ளீடற்ற
யுரேனியத்தினாலான கதிரியக்கத் திறனுள்ள ஆயுதங்களை பொழிந்துள்ளன.

"இப்புவியிலேயே மிக அமைதியான நாடு" என்று ஜார்ஜ் புஷ் வர்ணித்த அமெரிக்கா
கடந்த ஐம்பது ஆண்டுகலாக ஏதாவது ஒரு நாட்டுடன் ஒவ்வொரு வருடமும் போர் புரிந்து
கொண்டே இருக்கிறது. "


--நன்றி : செப்டம்பர் நினைவுகள், அருந்ததி ராய்

பாரதி புத்தகாலயம் வெளியீடான இந்தப் புத்தகத்தைத் தற்செயலாக இந்த வருட செப்டம்பரில் படிக்க நேர்ந்தது. நான்கு வருடங்கள் கடந்த பின்னரும் இந்தச் சொற்பொழிவின் பல பகுதிகள் இன்றும் உண்மையாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் இதனை வாசித்திருந்தால் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காது. சமீபத்தில் அமெரிக்காவில் இருந்த காலகட்டத்தில் பிடில் காஸ்ட்ரோவின் உடல்நிலையைப் பற்றிய செய்தியறிக்கை என்ற பெயரில் அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி அடைவதாகவும், மெக்ஸிகோவே விழாக்கோலம் பூண்டிருப்பதாகவும் அறிவித்த அதீத வெறுப்பைக் காட்டும் செய்திகளை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்ததும் இஸ்ரேல்-லெபனான் போரைப் பற்றிய சி.என்.என் செய்திகளும் இந்தச் சொற்பொழிவின் பல பகுதிகள் உண்மை என்றே உறுதி செய்கின்றன.

6 comments:

Amar said...

பொன்ஸ், நீங்க Monroe Doctrineஐ பற்றி படித்தது உண்டா?

இன்றைய அமெரிக்க கொள்கைகள் Monreo Doctrineஇன் பரினாம்வளர்ச்சி என்று சொல்லலாம்.

வெற்றி said...

பொன்ஸ்,
அருந்ததியின் கட்டுரையைத் தமிழில் தந்தமைக்கு மிக்க நன்றி.

//நான்கு ஆண்டுகளுக்கு முன் இதனை வாசித்திருந்தால் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காது. சமீபத்தில் அமெரிக்காவில் இருந்த காலகட்டத்தில் பிடில் காஸ்ட்ரோவின் உடல்நிலையைப் பற்றிய செய்தியறிக்கை என்ற பெயரில் அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி அடைவதாகவும், மெக்ஸிகோவே விழாக்கோலம் பூண்டிருப்பதாகவும் அறிவித்த அதீத வெறுப்பைக் காட்டும் செய்திகளை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்ததும் இஸ்ரேல்-லெபனான் போரைப் பற்றிய சி.என்.என் செய்திகளும் இந்தச் சொற்பொழிவின் பல பகுதிகள் உண்மை என்றே உறுதி செய்கின்றன. //

அருந்ததியின் இக்கட்டுரையை நான் பல வருடங்களுக்கு முன் ஆங்கிலத்தில் படித்திருந்தேன். அவர் இக் கட்டுரையில் சொல்லியுள்ள கருத்துக்கள் மறுக்கப்பட முடியாதவை. அமெரிக்காவில் 30% க்குக் குறைவானவர்களே கடவுச்சீட்டு[passport] வைத்திருக்கிறார்கள். அதாவது அவர்களுக்கு உண்மையில் வெளியுலகில் நடைபெறும் அனர்த்தங்கள் தெரியாது. அவர்கள் பார்ப்பதெல்லாம், CNN, NBC, ABC போன்ற தொலைக்காட்சிகள்தான். இத் தொலைக்காட்சி நிறுவனங்கள் எப்படி இயங்குகின்றன என் சொல்லத் தேவையில்லை. அண்மையில் நண்பர் சசி அமெரிக்க ஊடகங்கள் பற்றிய குறும்படம் ஒன்றை தனது தளத்தில் இணைத்திருந்தார். கட்டாயம் பாருங்கள். அப்போது உங்களூக்குப் புரியும் எப்படி மேலைத்தேச ஊடகங்கள் செயற்படுகின்றன என்று.

VSK said...

அதில் மகிழ்ச்சி அடைந்ததாகக் காட்டியவர்கள் காஸ்ட்ரொவின் கொடூரப்பிடியில் இருந்து தப்பி அமெரிக்காவில் தஞ்சமடைந்த க்யூபன் நாட்டு மக்கள் [ஆம்! அவர்கள் இப்போது அமெரிக்க பிரஜைகள் தான்!!] என்ற உண்மையையும் கூடவே தெரிவித்திருந்தால், இப்பதிவின் நடுநிலைமை வெளிப்பட்டிருக்கும் எனக் கருதுகிறேன்.

மற்றபடி, க்யூபா ஒரு தலைவலியே தவிர, அமெரிக்காவிற்கு ஒன்றும் பெரிய தொந்தரவளிக்கும் நாடல்ல என்பதை அமெரிக்க மக்கள் அனைவரும் புரிந்தே வைத்திருக்கின்றனர்.

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் இழப்பை நினைவு கூறும் இந்நாளில், இப்பதிவு ஒரு துரதிர்ஷ்டமே!

என்ன செய்வது?

தீவிரவாதத்தை எதிர்க்க, தன் நாட்டைக் காப்பாற்ற, வெளியில் சென்று எதிர்கொள்வது ஒரு அவசியமாகிப் போகிறது!
இதை அமெரிக்க மக்கள் உணர்ந்துதான் இருக்கின்றனர்.

நாளொரு குண்டும், பொழுதொரு தாக்குதலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நாடுகளைப் பார்க்கும் போது, 2001 -க்கு பிறகு, வேறு எந்தத் தாக்குதலும் நிகழா வண்ணம் தன் மக்களைக் காத்த புஷ் போற்றுதலுக்குரியவரே!

மணியன் said...

//இப்புவியிலேயே மிக அமைதியான நாடு" என்று ஜார்ஜ் புஷ் வர்ணித்த அமெரிக்கா //
-- அமெரிக்கர்களுக்கு, உலக மக்களுக்கு அல்ல !

பொன்ஸ்~~Poorna said...

சமுத்ரா, Monroe Doctrine - என்பதைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. படித்துப் பார்க்கிறேன்..

வெற்றி, வருகைக்கு நன்றி, சசியின் பதிவிலான அமெரிக்க ஊடகங்கள் பற்றிய குறும்படத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அதுவும் கூட என் எண்ணங்களுக்குக் காரணம் என்றே கொள்ளலாம்..

எஸ்.கே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நான் படித்த புத்தகத்தைப் பற்றிய என் பார்வையிலான பதிவு இது. நடுநிலைமைப்பதிவு என்று சொல்ல முடியாது.

//அமெரிக்கர்களுக்கு, உலக மக்களுக்கு அல்ல ! // உண்மை தான் மணியன்..

Amar said...

////அமெரிக்கர்களுக்கு, உலக மக்களுக்கு அல்ல ! // உண்மை தான் மணியன்.. //

அமெரிக்கா அமைதியாக இருக்க வேண்டும் என்பது தானே அவர்கள் வெளியுறவு துறையின் முக்கிய நோக்கமாக இருக்கும்.

அமெரிக்கர்களுக்கு அமைதி கிடைத்திருக்குமானால் அது அமெரிக்காவின் வெற்றி.ஜார்ஜ் புஷ்ஷின் வெற்றி.

தர்ம-நியாயங்களுக்கு சர்வதேச அரசியலில் எப்போதும் எங்கும் இடம் இருந்ததில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.