Tuesday, September 26, 2006

என்னருமை மான் குட்டி

'இருசக்கர வாகனத்தை சர்வீஸுக்கு விடப் போகிறேன்' என்று வீட்டில் அறிக்கை விட்டுக் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஓடிவிட்டன. இன்று தான் அதற்கு நேரம் வாய்த்தது. வண்டியை விட்டுவிட்டு, அதன் தற்போதைய பிரச்சனைகளை பொறியாளரிடம் சொல்லிவிட்டு ஆட்டோ பிடிக்கையில் ஒரு லேசான தயக்கம். முதல் நாள் குழந்தையை பள்ளிக் கூடத்தில் விட்டுவிட்டு வரும் அம்மா மாதிரி வண்டியை ஏக்கத்தோடு நான் பார்க்கவும், அந்த மெக்கானிக் என்னைப் பார்த்து "கவலைப்படாம போய்ட்டு வாங்க மேடம்" என்பது போல் தலையசைத்ததைப் பார்த்து என்னிடம் ஒரு புன்னகை ஒட்டிக் கொண்டது.

நினைவு தெரிந்தது முதல், பொருளாதார சுதந்திரத்தைக் காட்டிலும் எனக்கு மிகவும் பிடித்தது இந்த என் போக்குவரத்துச் சுதந்திரம். கல்லூரிக் காலங்களில் என்னிடம் ஒரு டி.வி.எஸ் 50 இருந்தது. அம்மா ஆரம்ப காலத்தில் ஓட்டிப் பழக வாங்கிய வண்டி. அதற்கு எங்கள் வீட்டில் வைத்திருந்த பெயர் பூனை. [அம்மாவின் கைனடிக் ஹோண்டா அதன் பருமனான உடலுக்காக யானை என்றும் அப்பாவின் புல்லட் தன் சத்தத்திற்காகவும் அழகுக்காகவும்(?) காண்டா மிருகம் என்றும் அண்ணனின் சுசுகி மாக்ஸ்100R குதிரை என்றும் குறிக்கப் பட்டிருந்தன. வீட்டுக்கு 'உள்ளே' சக மிருகங்களான நாங்களும் இருந்தோம்;)]

என் பூனை மிக சாதுவானது. இரண்டு வருடங்கள் கல்லூரிக்கும், பின்னர் கடைசி ஆறு மாதம் தொழில் முறைப் பயிற்சிக்காக புற நகரிலிருந்து சென்னைக்கு நான் வந்து சென்று கொண்டிருந்த காலத்தில் கிட்டத்தட்ட 50 கி.மீட்டர் தினசரி ஓடி சாதனை படைக்கவும் செய்தது அந்த 1989 வருடத்தைய "நம்ம ஊரு வண்டி..". அந்த நாட்களிலேயே வண்டி ஓட்டுவதில் என் ஆர்வம் கட்டுக்கடங்காததாக இருந்தது என்பதை சமீபத்தைய சில நாட்களாகத் தான் உணர்கிறேன். வீட்டிலோ தோழியரிடையிலோ, ஏதும் சண்டை, சச்சரவு ஏற்படும் காலத்தில் வண்டியை எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் ஓட்டினாலே என் கோபம், தாபம் எல்லாம் போன இடம் தெரியாமல் ஓடிப் போய்விடுவது உறுதி. வண்டியை ஏதும் மணற்பாங்கான இடத்தில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தும்போது, "சமர்த்தா நிக்கணும் செல்லம், சீக்கிரம் வந்துடுவேன்" என்று சொல்லிச் செல்வதும், வண்டியில் இப்படி தூரங்கள் ஓட்டும் போது அதற்கும் எனக்கும் போரடிக்காமல் இருக்க கதை சொல்லுவதும் என்று வண்டியை என் உடன்பிறவா குடும்ப உறுப்பினராகவே நினைப்பது என் பழக்கம்.

பூனைக்கு முன்னால் என் ஆஸ்தான வாகனம், ஒரு எருமை மாடு - அதாவது, டயர்கள் பருத்த ஹீரோ சைக்கிள் ஒன்று. அந்த சைக்கிள் ஓட்டுவது கொஞ்சம் கஷ்டம். ஆரம்பத்தில் ஏறி மிதித்தால், அப்புறம் கொஞ்சம் வேகமாகப் போகும். எங்கள் கல்லூரிப் பேருந்துடன் போட்டி போட்டுக் கொண்டு இரண்டு கி.மீட்டர் தூரத்தை ஏழு நிமிடங்களில் ஓடிக் கடக்கும் அந்த சைக்கிள். வெளியூர்களில் வேலை பார்த்துத் திரும்பிய போது, பூனையும் எருமையும் இரண்டையுமே வெளியில் கொடுத்துவிட்டார் அப்பா. மத்திய சென்னையில் இருக்கும் புது வீட்டில் அத்தனை வண்டிகள் நிறுத்த இடமின்மையும் ஒரு காரணம்.

தங்கைக்கு வண்டி வாங்க வேண்டும் என்று முடிவெடுத்த போது முதன் முதலில் பெண்களுக்கான இரு சக்கர வாகனங்கள் பற்றிய பல உண்மைகள் தெரியவந்தது.

பொதுவாக பெண்களுக்கான இரு சக்கர வாகனங்களில் எதிர்பார்க்கப் படுபவை:
1. அதிகம் கனம் இல்லாமை.- சுலபமாக வண்டி தள்ள முடியவேண்டும்
2. கிக் ஸ்டார்ட் இல்லாத பட்டன் கொண்டு இயக்கும் திறன்
3. முன் பக்கம் கால் வைக்க, குழந்தைகள் நிற்க, காய்கறி வைக்க இடம்.
4. வசதியான இருக்கை.

அதிக தூரம் ஓட்டப் போவதில்லை என்றே முடிவு செய்து அதற்கேற்ற வண்டிகளாக யோசிக்கிறார்களோ?

ஆனால், எங்கள் தேவை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது - நல்ல வண்டி, புடவை கட்டினால் ஓட்டக் கூடிய வகையில் முன் பக்கம் பெட்ரோல் டாங்க் இல்லாத வண்டி. அவ்வளவே.

  • கைனடிக் ஹோண்டா, இப்போதைய ஸ்கூட்டி, போல் எல்லா பெண்கள் வண்டி என்று சொல்லப்படும் வண்டிகளிலும் சின்ன டயர்கள் இருப்பது ஏன்?

  • ஆட்டோ கியர் என்று சொல்லி எரிபொருளை தன் விருப்பத்துக்குச் செலவு செய்யும் வண்டிகளையே பெண்கள் வண்டிகள் என்று பிராண்ட் செய்து வைத்திருப்பது ஏன்?

  • பட்டனைத் தட்டினால் ஓடத் தொடங்கும் என்ற ஒரே காரணத்துக்காக அந்த விதத்திலும், சில வண்டிகள் பிரச்சனை ஏற்படுத்துகின்றன. எப்போதும் பட்டன் ஸ்டார்ட் என்றாலும் தினம் ஒரு முறை, வாரத்துக்கு ஒரு முறை கிக் ஸ்டார்ட்டும் பண்ணுங்க என்று அறிவுரை சொல்வதோடு, அப்படி வாரம் ஒரு முறை உதைக்கையில் வண்டி தொடங்காமலே காலை ஒரு வழியாக்கிவிடுவது ஏன்?

  • வெயிட் இல்லாத வண்டிகள் என்று சொல்லப்பட்டாலும் கைனடிக் ஹோண்டா, ஹோண்டா ஆக்டிவா போன்ற வண்டிகள், பின்புறம் மட்டும் அதிக கனத்துடன், எரிபொருள் இல்லாமல் மாட்டிக் கொண்டால், நிச்சயம் தனியாளால் தள்ளமுடியாமல் இருப்பது ஏன்?

    இத்தோடு இல்லாமல், சில பெண்கள் வாகனங்களில், அவற்றின் வண்டி பாகங்கள் முதலானவை பிரித்து ரிப்பேர் பார்க்க மிகக் கொடுமையாக இருக்கின்றன. என்னுடைய டீ.வி.எஸ் 50 இல் என்றாவது ஸ்பார்க் பிளக் பிரச்சனை கொடுக்கும் போது நானே கழற்றி ஊதி, துடைத்துப் போட்டுவிடுவேன். அதே, கைனடிக் ஹோண்டாவின் ஸ்பார்க் பிளக்கைக் கண்டுபிடிப்பதே ஒரு பெரிய சாதனைதான்..

    இப்படிப் பல்வேறு காரணங்களை உத்தேசித்து அப்போதைக்கு நாங்கள் வாங்கிய வண்டியின் போட்டோவை இங்கே போட்டிருக்கிறேன்.. இந்த எங்கள் மான்குட்டியைத் தான் இன்று சர்வீஸுக்கு விட்டாச்சு.. எப்படி இருக்கோ என் செல்லம்..? மாலை போய் எடுத்து வரவேண்டும்..

17 comments:

இலவசக்கொத்தனார் said...

போட்டோ க்ளியரா இல்லைங்கோ. மத்தபடி மான் குட்டிக்கு தேவையான தடுப்பூசி எல்லாம் போட்டு உங்க கிட்ட நல்ல விதமா திருப்பிக் குடுப்பாங்க. கவலைப் படாதீங்க.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

சரி பூனை காண்டாமிருகம் மான்குட்டியை எல்லாம் கேட்டதா சொல்லுங்க

Anonymous said...

பாத்துமா அங்க பாரு வீலு சுத்துது.

வல்லிசிம்ஹன் said...

பொன்ஸ், என்ன வண்டிப்பா இது?

பைக் மாதிரியும் இருக்கு. ஸ்கூட்டர் மாதிரியும் இருக்கு.

உடம்பு சரியான மான்குட்டி படத்தை நல்ல விதமாக குட் போஸில் எடுத்துப் போடவும்.

:-))

ஆவி அம்மணி said...

வண்டிக்கு பவர் ஸ்டீரியங் தான?

மணியன் said...

பெண்களுக்கான வண்டியை பெண்களைக் கேட்காமல் வடிவமைத்து விட்டார்களோ ? பின் எப்படி விற்கிறார்கள் ?
இதுபோல வகைப்படுத்துவதில் என் போன்றவர்களுக்கு ஸ்கூட்டி ஓட்டும்போது சங்கடம் ஏற்படுகிறது :(

பொன்ஸ்~~Poorna said...

கொத்ஸ், வல்லி சொல்வது போல் வண்டி வந்ததும் புது போட்டோ எடுத்துப் போட்டுடலாம்..

ஞானியார், பூனை இப்போ என்கிட்ட இல்லீங்க :( காண்டாமிருகத்தையும் எங்களால கட்டித் தீனி போட முடியலை. இப்போ வெறும் யானையும் மானும் தான் மிச்சம் :((

வல்லி, Hero Honda Street Smart - இது தான் எங்க மான்குட்டியின் பேரு.. வண்டி இப்போ வருவதில்லை. கொஞ்சம் பழைய வண்டி, இப்போ நிறுத்திட்டாங்க :(

ஆவிம்மணி, பவர் ஸ்டீரிங் எல்லாம் இல்லை.. சாதா ஸ்டீரிங், எங்க கைப்பட்டா பவர் தான் தெரியும்ல :)

மணியன், வகைப்படுத்தாமல் விட்டுவிடலாம் தான்.. ஆனால், பெண்கள் உடை என்று தனியாக இருக்கிறதே! உடைக்கேற்ற வண்டிகள் அவசியமாகின்றன. மற்றபடி, எல்லா வண்டிகளையும் தான் பெண்கள் இப்போது ஓட்டுகிறார்கள். இதைச் சொல்லும்போது, இந்த வார "காபி வித் அனு"வில் கனிமொழி சொன்னது நினைவுக்கு வருகிறது.. 'பெரிய வண்டிகள் ஓட்ட ஆசை, லாரி இதுவரை ஓட்டியதில்லை' என்றார், அதை மட்டும் தான் நம்ம பெண்கள் விட்டு வைத்திருக்கிறார்கள்..

manasu said...

அஞ்சாத நிருபர் வீரபத்ரன் M 80 ன் மறுபதிப்பு தானே street.

பொன்ஸ் டிவிஎஸ் R & D department la வேலை இருக்க்காம். அப்ளை பண்ணுங்களேன்.

மா சிவகுமார் said...

நான் கல்லூரிக் காலத்தில் வைத்திருந்த பிலிப்ஸ் சைக்கிளும் இப்போது உள்ள பைக்கும் நீங்கள் சொல்வது போல உயிருள்ள விலங்குகளாக உறவாடுபவை.

அன்புடன்,

மா சிவகுமார்

கார்திக்வேலு said...

// வண்டியில் இப்படி தூரங்கள் ஓட்டும் போது அதற்கும் எனக்கும் போரடிக்காமல் இருக்க கதை சொல்லுவதும் என்று வண்டியை என் உடன்பிறவா குடும்ப உறுப்பினராகவே நினைப்பது என் பழக்கம்.//

தொடர்ந்து ஒரு பொருளை பாவித்து வருகையில் இது போன்ற ஒரு பிடிப்பு
வந்து விடுகிறது.சில வகை கணிணிகளை அவன்/அவள் என்று விழிக்கும் வழக்கம் எனக்கும் என் நண்பர்களுக்கும் உண்டு.

இன்னொரு நண்பர் தனது RX-100 இன்மேல் ஏதோ ஒரு பறவை எச்சமிட்டுவிட அவர் முகம் கொண்ட கொண்ட வருத்தம் இன்னும் ஞாபகமாய் இருக்கிறது

//சின்ன டயர்கள் இருப்பது ஏன//
சின்ன சக்கரங்கள் திருப்புவதற்கு [maneuverability] இலகுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்
(எ.கா ஆட்டோ)

Volvo has designed cars for the women by the women ..guess it will catch up in the two wheeler markets too.

+ பதிவு

ஆவி அம்மணி said...

//பொதுவாக பெண்களுக்கான இரு சக்கர வாகனங்களில் எதிர்பார்க்கப் படுபவை:
1. அதிகம் கனம் இல்லாமை.- சுலபமாக வண்டி தள்ள முடியவேண்டும்
2. கிக் ஸ்டார்ட் இல்லாத பட்டன் கொண்டு இயக்கும் திறன்
3. முன் பக்கம் கால் வைக்க, குழந்தைகள் நிற்க, காய்கறி வைக்க இடம்.
4. வசதியான இருக்கை.//

இதெல்லாம் எதிர்பார்ப்பீர்கள். ஆனால் பெண்கள் மென்மையானவர்கள் என்று சொன்னால் மட்டும் ஏற்றுக்கொள்ளாமல் சண்டைக்கு வருவீர்கள். அப்படித்தானே!

ஆண்களுக்கு நிகராக நீங்களும் புல்லட் ஓட்டலாமே!

(அப்பாடி! இன்னிக்கு மேட்டரை பத்த வெச்சாச்சு :-))))
)

பொன்ஸ்~~Poorna said...

மனசு,
M80 மாதிரி இல்லை இந்த வண்டி.. அது தொத்தல் குதிரை மாதிரி இல்லை இருக்கும்.. இது கொஞ்சம் அதிக கியூட். R&D இல் வேலைக்குச் சேர்ந்தால், இது போல் தெளிவாக யோசிப்பது குறைந்துவிடுமோ என்னவோ.. அதனால், நான் இப்படியே சிந்தனாவாதியா இருந்துட்டுப் போறேனே :)

சிவகுமார்,
கார்த்திக் சொல்வது போல் தினசரி பயன்பாட்டில் இருப்பவை மனதுக்கு மிக நெருக்கமாகி விடுகின்றன..

பொன்ஸ்~~Poorna said...

கார்த்திக்,
//சில வகை கணிணிகளை அவன்/அவள் என்று விழிக்கும் வழக்கம் எனக்கும் என் நண்பர்களுக்கும் உண்டு//
கணினியை அழைத்தால் கூட பரவாயில்லை. என் தோழி ஒருத்தி எழுதும் புரோக்ராம், உருவாக்கும் புது பார்ம் என்று எல்லாவற்றையும் அவன் அவள் என்பாள்.. ஒரு நிரலியைச் சரி பார்த்துக் கொண்டிருக்கையில், ஏதும் variable, value தரவில்லை என்றால், "இங்க வரும்போது தான் இவன் null-ஆ வரான்" என்பாள்.. ["அட, நல்லாத் தானேபா இருக்கான். கெட்டவனாவா இருக்கான்?"னு திருப்பி கலாய்ப்போம் ;) ]

//சின்ன சக்கரங்கள் திருப்புவதற்கு [maneuverability] இலகுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்
(எ.கா ஆட்டோ)
//
ஆனால், சின்ன சக்கரங்கள் திருப்பங்களில் ஸ்லிப் ஆவதற்கான வாய்ப்பு அதிகம் தானே? ஆட்டோ மூன்று சக்கர வாகனம் என்பதால் அது வேறு வகை அல்லவா?

//ஆண்களுக்கு நிகராக நீங்களும் புல்லட் ஓட்டலாமே//
ஆவிம்மணி, எங்கப்பா புல்லட்டை ஏன் வித்தாருன்னு நினைக்கிறீங்க? ;)

துளசி கோபால் said...

அடடா.... எப்பேர்ப்பட்ட அனுபவத்தையெல்லாம் கோட்டை விட்டுருக்கறேன்(-:

ஓட்டத்தெரிஞ்ச ஒரே வண்டி நாலு கால்( சரி. டயர்)உள்ளதுதான்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

எனக்கென்னவோ இந்த அனுமாஷ்ய ஆவியும் பொன்ஸ் ரெண்டும் ஒரே ஆள் மாதிரிதான் தெரியுது.

பொன்ஸ்~~Poorna said...

ஆவி, மறந்துட்டேன் பாருங்க,
//இதெல்லாம் எதிர்பார்ப்பீர்கள். ஆனால் பெண்கள் மென்மையானவர்கள் என்று சொன்னால் மட்டும் ஏற்றுக்கொள்ளாமல் சண்டைக்கு வருவீர்கள். அப்படித்தானே!
//
எதிர்பார்க்கிறவங்களைக் கேளுங்க மேடம், :) எங்க எதிர்பார்ப்பு என்னன்னுதான் சொல்லிட்டோமே :)

துளசி அக்கா,
//அடடா.... எப்பேர்ப்பட்ட அனுபவத்தையெல்லாம் கோட்டை விட்டுருக்கறேன்(-://
அதனால என்னக்கா.. இப்போ எடுத்து ஓட்டுங்க :)

செந்தில்குமரன்,
//எனக்கென்னவோ இந்த அனுமாஷ்ய ஆவியும் பொன்ஸ் ரெண்டும் ஒரே ஆள் மாதிரிதான் தெரியுது.
//
அட நீங்க வேற.. சென்னை வலைபதிவர் சந்திப்புக்கு வந்தவங்களைக் கேட்டுப்பாருங்க.. எனக்கு ரெண்டு காலு இருக்கு.. ஆவி மாதிரி இல்லை :)

ஆவி யாரு என்பது பற்றி எனக்கு வேற ஒரு சந்தேகம் இருக்குங்க.. ஆவி போலவே இரண்டெழுத்து சோழராஜா மீது தான் முழு சந்தேகமும் :)

ஆவி அம்மணி said...

//ஆவி போலவே இரண்டெழுத்து சோழராஜா மீது தான் முழு சந்தேகமும்//

:-)

இப்பதான் எங்க ஊருல ஒரு அனானி அண்ணாச்சி வந்து நீங்க அணில்குட்டியான்னு கேட்டுட்டுப் போயிருக்காரு.

நீங்க அவரைச் சொல்றீங்க!

தமாசு..தமாசு..ஒரே தமாசுதான் போங்க!