Saturday, October 28, 2006

அந்த பச்சை நிற மைல்

The Green Mile - By Stephen King

மரணதண்டனை பற்றிய பதிவுகளின் இடையில் நினைவுக்கு வந்த புத்தகம் இது. நண்பரின் வற்புறுத்தலுடன்கூடிய பரிந்துரை காரணமாக இந்த நாவலை நான் படிக்கத் தொடங்கிய போது, அதிக வர்ணனைகளுடனான இதை விட இன்னும் ஆவல் தூண்டும் "Best Seller" புத்தகங்கள் அறை முழுவதுமிருந்து கண் சிமிட்டிக் கூப்பிட்டன. அவற்றில் விழுந்துவிடாமல் ஸ்டீபன் கிங்கின் இந்த புத்தகத்தைப் படித்து முடிக்க ஏதுவாக இருந்தது இந்த நாவலை அடிப்படையாக வைத்து எடுத்த படம் தான்.

பொதுவாக புத்தகமாகப் படித்ததைத் திரைப்படமாகப் பார்க்கையில் வாசகரின் கற்பனையும் இயக்குனரின் கற்பனையும் ஒத்துவராமல் போய் திரைப்படங்கள் பெரும்பான்மையரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாதவையாக அமைவதே இயல்பு. எத்தனை அவசியமான வேலையாக இருந்தாலும் பத்து மணிக்கு மேல் கண்விழித்தறியாத என்னை, நள்ளிரவு வரை உட்கார்ந்து படம் பார்க்க வைத்தது கதையின் முக்கிய பாத்திரமான ஜான் காஃபியின் மலை போன்ற ராட்சச உருவமும் உருவத்துக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத குழந்தை முகமும் தான்.



படம் புத்தகத்துக்குள் நுழைய காரணமாக இருந்தாலும், இந்தப் பதிவு பேசப் போவது புத்தகத்தைப் பற்றி மட்டுமே. கதை நாயகன் பால் எட்ஜ்கோம்ப் (Paul Edgecombe) அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாண சிறைச்சாலை அதிகாரி. அதிலும், 1932வின் பொருளாதார வீழ்ச்சிக்காலத்தில் அப்போது வழக்கிலிருந்த மரண தண்டனை உத்தியான மின்னிருக்கைக்குக் குற்றவாளிகளைத் தம் கடைசி நடைக்குத் தயாராக்கும் பொறுப்பான பதவி வகிக்கும் அதிகாரி. தன் வாழ்நாளில் எழுபதுக்கும் அதிகமான மரண தண்டனைகளை நிறைவேற்றியிருக்கும் பால்(Paul), கடைசி முறையாக இந்தப் பொறுப்பை வகித்தமையும், இனிமேல் இதைச் செய்யக் கூடாது என்று முடிவெடுத்த விதத்தையும் சேர்த்தது தான் இந்தக் கதை. தலைப்பின் பச்சை மைல் குறிப்பது மின்னிருக்கை நோக்கி குற்றவாளிகள் பயணப்படும் கடைசி மைலை. இந்தத் தூரம் சிறையில் பச்சை மொசைக்கால் இடப் பட்டிருப்பதால், பச்சைமைல் ஆகிறது

ஜான் காஃபி (John Coffey) என்ற கறுப்பின ராட்சசன் (giant) குழந்தைகளான இரட்டைச் சிறுமிகளை வன்புணர்ந்து கொலை செய்த குற்றத்துக்காக கோல்ட் மவுண்டெய்ன்(Cold Mountain) சிறைச்சாலைக்கு வந்த போது, பால் சிறுநீரகப் பைக் கோளாறினாலும், அதிகார வர்க்கத்துப் பெரிய மனிதர்களின் நட்பால் அங்கு வேலைக்குச் சேர்ந்து உடன் பணியாற்றும் யாரையும் மதிக்காமல் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த பெர்ஸி வெட்மோராலும்(Percy Whetmore) பெரிதும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். காபியின் ஆறடி நெடிய பருத்த உருவத்துக்கு முன் சிறையதிகாரிகள் எல்லாருமே குழந்தைகள் போல தோன்றியதையும் அவன் செய்திருந்த குற்றத்தைப் பற்றியும் அறிந்திருந்த பாலுக்கு "இருட்டைப் பார்த்தால் எனக்குப் பயம், இரவில் இங்கே ஒரு விளக்கைப் போட்டு வைப்பீங்களா?" என்ற அவனது கோரிக்கை முதல் ஆச்சரியத்தை அளித்தது. நோய்களைக் குணமாக்கும் அற்புத சக்தி கொண்டவனான காஃபி அதைத் தவிர வேறு எதுவுமே தெரிந்தவனாகவோ நினைவாற்றல் மிக்கவனாகவோ இருக்கவில்லை. தோற்றத்துக்குத் தொடர்பேயில்லாமல் மிகவும் மெல்லிய குழந்தை மனம் அவனது. ஆனால், ஒரு சில சமயங்களில் எதிராளியின் மனதைப் படிக்கும் கலையும் காஃபிக்குக் கைவருகிறது.



ஜான் காஃபி சிறையில் சில அற்புதங்களை நிகழ்த்தினான், பால் எட்ஜ்கோம்பின் சிறுநீரகக் கோளாற்றைப் போக்கி மறையவைத்தான்; இன்னுமொரு குற்றவாளியான டிலாக்ருவாவின்(Delacroix) செல்லப் பிராணியான மிஸ்டர். ஜிங்கிள்ஸ் என்ற எலியை உயிர்நிலை மங்கியிருந்த கடைசி நிமிடத்தில் உயிர்ப்பித்தான். சிறை வார்டன் மூர்ஸின்(Moores) மனைவி மெலிண்டாவின்(Melinda) மருத்துவர்களால் கைவிடப்பட்ட புற்றுநோயைக் குணப்படுத்தி அவளை மகிழ்ச்சியான பெண்ணாக மாற்றினான். இத்துடன், அங்கிருந்தவர்களின் தலைவலியான பெர்சியையும் .. ஆஹா.. கதை முழுவதும் சொல்வது என் நோக்கமல்ல!.

கதை நடக்கும் நேரம் 1932 என்பதை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறார் ஆசிரியர். பாலின் கண்ணோட்டத்திலிருந்து சொல்லப்படும் கதையின் வர்ணனைகளும், பாலின் அவ்வப்போதைய மன உணர்வுகளும், சந்தோசம், சோகம், வருத்தம், ஜான் நிரபராதி என்று தெரிந்தும் அவனை விடுவிக்க இயலாத கையாலாகாத தன்மை என்று உணர்வுப் பூர்வமாகவே கதை நகருகிறது.

பால் உணர்ச்சிவசப்படும் ஒவ்வொரு சமயத்திலும் சமயோசிதமான பேச்சாலும் செயலாலும் உதவி செய்யும் சக சிறையதிகாரி ப்ரூட்டஸ்(Brutus), ஈரமான உள்ளம் கொண்ட ஹாரி(Harry), பிள்ளைக் குட்டிக்காரன் என்ற காரணத்தினால் இந்தக் குழுவினர் செய்யும் எந்த சட்டவிரோதமான (பெர்சி விரோதமான) நடவடிக்கையிலும் ஈடுபட முடியாமல், அதை ஒப்புக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும் டீன்(Dean), நம் தமிழ்ப் படங்களில் வழக்கமாக வரும் நேர்மையான போலீஸ் அதிகாரி போன்ற உயரதிகாரி வார்டன் மூர்ஸ்(Moores), கதையில் முழுக்க முழுக்க உடல் நிலை சரியில்லாமலே வந்தாலும், பால் மற்றும் அவனது மனைவியின் கண்கள் மூலம் மிக அற்புதமான மனுஷியாகக் காட்டப்படும் மெலிண்டா மூர்ஸ் (Melinda Moores), என்று கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் செதுக்கப்பட்ட விதம் அழகு.

ஜான் காஃபி, பால் எட்ஜ்கோம்புக்குப் பின் மனதில் தைக்கும் மற்றொரு பாத்திரம் பாலின் மனைவி ஜேனிஸ் எட்ஜ்கோம்ப்(Janice EdgeCombe). சிறு வயதிலேயே திருமணமான ஜேனிஸ் - பால் தம்பதியனரின் அழுத்தமான காதலும், உண்மையான கருத்துப் பரிமாற்றங்களும், பாலுக்கு ஒரு சாயும் தூண் போல் இருக்கும் அவளின் திடமும் சேர்த்து இன்னுமொரு அற்புத பாத்திரம் ஜேனிஸ். ஒரு கட்டத்தில் காஃபி நிரபராதி என்று உணர்ந்த பின், கதைப்படி அவனைச் பார்த்திருக்கக் கூடவில்லாத ஜேனிஸ், அவனைச் சிறையிலிருந்து வெளிக் கொணர வேண்டி யோசனைகள் சொல்வதும், கருப்பினத்தவனான காஃபியின் வழக்கை மறு பரிசீலனைக்குக் கொண்டுவருவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை பால், ஹாரி, டீன், ப்ரூட்டஸ் எல்லாரும் எடுத்துச் சொல்லும் போது, "ஆக, ஒரு கருப்பன் என்ற காரணத்துக்காக ஒரு நிரபராதியை நீங்கள் அனைவரும் எரித்துக் கொல்லப் போகிறீர்கள்? அப்படித் தானே? எல்லாருமே கொலைகாரர்கள்!" என்று அனைவரின் மனதில் இருப்பதை வெளியில் சொல்லி கூச்சலிடுவதும், உண்மையில் பாலின் மனசாட்சி ஜேனிஸ் தான் என்று தோன்றவைக்கிறது.

ஜிங்கிள்ஸ் மற்றுமொரு ஆச்சரியம், படத்தில் எப்படி வந்தது என்று இப்போது நினைவில்லை. ஆனால், கதையில் எலியின் நண்பனான டிலாக்ருவா சிறைக்கு வருவதற்கு வெகு நாட்கள் முன்பிருந்தே ஜிங்கிள்ஸ் அவன் இருக்கும் அறையை அவ்வப்போது வந்து எட்டிப் பார்ப்பதும் காத்திருப்பதும் தொடர்ந்து கொண்டே இருந்ததை வர்ணிக்கும் போது பாலுடன் நானும் அதிசயத்துப் போய்விட்டேன். பாலின் நூற்று நாலாவது வயதில் அவர் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் விதமாகத் தொடங்கும் இந்தக் கதை ஜிங்கிள்ஸும் அதே மாதிரி கிட்டத் தட்ட ஐம்பது சொச்சம் ஆண்டுகள் வரை வாழ்ந்ததாகவும், பாலுக்கு ரொம்பவும் வயதான பின் ஜிங்கிள்ஸ் தானே பாலை மீண்டும் கண்டுபிடித்து அவருடன் தன் கடைசி காலங்களைக் கழித்ததாகவும் சொல்கிறார் கிங்.

மரண தண்டனைகளை நிறைவேற்றும் சிறையதிகாரியான பாலின் முக்கியமான தொழில் பேசுவது, தான் இறக்கும் தேதி தெரிந்த மனிதனுக்கு என்ன தேவைப்படும்? செல்வம்? உணவு? கலவியின்பம்?.. இறக்கப் போகும் மனிதனுக்குத் தேவை ஒரு நம்பிக்கையான நண்பன். தன் எல்லாக் கவலைகளையும், வருத்தங்களையும், செய்த பிழைகளையும் பகிர்ந்து கொள்ள ஒரு காது, சிரிக்கும் போது கூடச் சிரிக்க ஒரு வாய், சாகும் போது அழ இரண்டு அன்பான கண்கள், பழைய வாழ்க்கையை நினைத்து அழும்போது சாய்ந்து கொள்ள ஒரு தோள். இவை எல்லாமாக இல்லாவிடினும், இவற்றில் குற்றவாளிக்கு எதுவெல்லாம் தேவையோ, அதுவெல்லாம் தரவேண்டிய வேலை தான் பாலுடையது - பேசுவது, குற்றவாளியைப் பேசவைப்பது. ஒருவேளை பழைய குற்றங்கள் எவற்றையாவது அவன் ஒப்புக் கொண்டால், அதை எழுதிக் கொள்வது, கடைசி விருப்பங்களை நிறைவேற்றுவதாக உறுதியளிப்பது(எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட முடியுமா என்ன), கடைசி நேர பயணத்துக்கு உடன் நடந்து, குற்றவாளிக்கும் அந்தப் பயணத்தை பயமின்றி மேற்கொள்ள உதவுவது.

புத்தகத்தைப் படித்து முடிக்கும் போது ஒரு குற்றமும் செய்யாமல் மின் இருக்கையில் அமர்ந்த ஜான் காஃபியைப் போன்றே, ஒரு சிறுமியின் வன்புணர் இறப்புக்கும், ஒன்பது உயிர்கள் எரிந்து இறப்பதற்கும் காரணமான ஆனால், சின்னக் குழந்தை போல் எலிகளுடன் விளையாடிய டிலாக்ருவாவின் மரணமும் நம்மைத் தாக்குகிறது.

இப்படி மின்னிருக்கையில் இறப்பவர்களைப் பார்க்க, நேரில் பார்த்து அந்தத் தண்டனையை ரசிப்பதன் மூலம் தம் இழப்புகளுக்கு ஈடு கிடைத்துவிட்டதாக எண்ணி மகிழ, அந்தக் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்களில் விருப்பமுடையவர்கள் வரலாம் என்ற வழக்கமும் இருந்திருக்கிறது, நாகரிகத்தில் முன்னேறிய நாடான அமெரிக்காவின் வெள்ளைக் குடிமக்களுக்கிடையில்! ஒவ்வொரு மின்னிருக்கை இறப்புக்கும் அங்ஙனம் வந்திருந்த மக்களை வர்ணிப்பதிலிருந்து அவர்களின் வன்மம் நிரம்பிய "நல்லா வேணுண்டா உனக்கு" போன்ற வார்த்தைகளையும் மனதில் தைக்குமாறு சொல்ல வைக்கிறார் ஸ்டீபன் கிங்.

கிட்டத் தட்ட ஒரு மாதம் போல், தன் தவறுகளுக்கு வருந்தி, மனம் திருந்தும், தம் வாழ்வின் மிக இனிமையான/கொடுமையான, நாட்களை அசை போடும் மனிதர்களின் இறப்பைப் பார்ப்பது ஒவ்வொரு முறையுமே கொடுமையான விஷயம் தான். எனினும் அந்த இடத்தில் குற்றமற்றவன் இறப்பதைப் பார்க்க நேர்ந்த பால், டீன், ஹாரி, ப்ரூட்டஸ் யாருமே, இது போன்ற அடுத்தவொரு "நாகரிகக் கொலைக்குத்" தயாராக இருக்கவில்லை என்பதையும் சொல்லி முடிக்கிறார் கிங்.

இரண்டாம் முறையாக சமீபத்தில் இந்தக் கதையைப் படித்து முடித்த போது, நம் நாட்டில் மரண தண்டனை எப்படி நடக்கிறது என்ற கேள்வி எழுந்தது. மரண தண்டனை நியாயமே என்று சொல்லிக் கொண்டிருக்கும் நமது நண்பர்களும் வாய்ப்பு கிடைத்தால் இப்படி ஒரு தண்டனைக்கு சாட்சியாக இருக்கவும் விழைவார்களோ?

(கதை வேண்டுமாயின் இங்கே பார்க்கலாம்.. படத்தின் கதையில் ஜேனிஸ் பாத்திரம் அத்தனை முழுமையாக இருக்கவில்லை என்று நினைவு, மற்றபடி அதே தான். படங்கள், கதைக்கு சீனுவுக்கு நன்றி)

15 comments:

வஜ்ரா said...

//
ப்படி மின்னிருக்கையில் இறப்பவர்களைப் பார்க்க, நேரில் பார்த்து அந்தத் தண்டனையை ரசிப்பதன் மூலம் தம் இழப்புகளுக்கு ஈடு கிடைத்துவிட்டதாக எண்ணி மகிழ, அந்தக் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்களில் விருப்பமுடையவர்கள் வரலாம் என்ற வழக்கமும் இருந்திருக்கிறது, நாகரிகத்தில் முன்னேறிய நாடான அமெரிக்காவின் வெள்ளைக் குடிமக்களுக்கிடையில்!
//

இன்றும் இந்த பழக்கம் இருக்கிறது...மின்னிருக்கைக்கு பதிலாக விஷ ஊசி போடுவதைப் பார்க்க கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் செல்லலாம்.

அது மகிழ்ச்சி அல்ல. கோபத்தின் வெளிப்பாடு. இது போல் உணர்ச்சிக்கு மதிப்பு கொடுக்கத் தெரியவேண்டும்....பொது மக்கள் என்பவர்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளன. ஏதோ அவர்களுக்கு உணர்ச்சிகளே இருக்கக் கூடாதவர்கள் போல்.. அதை "பொதுமக்கள்" உணர்ச்சி என்று சொல்லி தரம் தாழ்த்திப் பேசுவதும் தவறு.

வெள்ளைத்தோலும், காரும், வீட்டில் A/C யும் பணமும் இருந்தால் நாகரீகத்தில் முன்னேரியவர்கள் என்று யார் சொன்னது...

அத்தனை வசதிகளும் அரேபியாவிலும் கிடைக்கும்...அதை நாகரீகத்தில் முன்னேரிய நாடு என்று ஒத்துக் கொள்வீர்களா?
..


நல்ல விமர்சனம்...எனக்கும் மிகவும் திருப்தி அளித்த படங்களில் ஒன்று இது...

Stephen king கதைகள் பல மூன்றாம் தர இயக்குனர்களால் துவம்சம் செய்யப்பட்டிருந்தாலும் இது சிறப்பாக எடுக்கப் பட்டிருக்கும்....பல ஆஸ்கர் விருதுக்கும் தேர்ந்தெடுக்கப் பட்டது...

விருது கிடைத்ததா என்று தெரியவில்லை.

Muthu said...

வந்தோம்...படித்தோம்..சிறிதே குழம்பினோம்..சென்றோம்.

- யெஸ்.பாலபாரதி said...

//வந்தோம்...படித்தோம்..சிறிதே குழம்பினோம்..சென்றோம்.//
ரிபீட்டே...

மணியன் said...

இது போல ஒரு சிவாஜி படம் பார்த்த நினைவு வருகிறது; பெயர் மனதிலிலிருந்து வெளிவர மறுக்கிறது.

Chellamuthu Kuppusamy said...

//வந்தோம்...படித்தோம்..சிறிதே குழம்பினோம்..சென்றோம்//

'VaralaaRu' patam ippoo thaan paaththeen..
:-)

பங்காளி... said...

பெரிய யானை...
சின்ன நாய்குட்டி...

இதற்கும் விமர்சனத்திற்கும் தொடர்பிருக்கிறது....

துளசி கோபால் said...

ஹை.... முட்டையிலிருந்து யானை(குட்டி):-)))

இப்பத்தான் பார்த்தேன்.

பிடிச்சிருக்கு 'பிடி'ச்சிருக்கு

லொடுக்கு said...

ஆமா அது என்ன உங்கள் பக்கத்தில் எங்கு பார்த்தாலும் யானை மயம்??

தருமி said...

//மரண தண்டனை நியாயமே என்று சொல்லிக் கொண்டிருக்கும் நமது நண்பர்களும் வாய்ப்பு கிடைத்தால் இப்படி ஒரு தண்டனைக்கு சாட்சியாக இருக்கவும் விழைவார்களோ?//

நான் மாட்டேன்.

நல்ல கேள்விதான்...

ramachandranusha(உஷா) said...

மேடம், இது புத்தக விமர்சனமா அல்லது திரைப்பட விமர்சனமா :-)

PRABHU RAJADURAI said...

மறக்க முடியாத திரைப்படம்...Dead Man Walkingம் நல்ல படம்.

பொன்ஸ்~~Poorna said...

//அதை "பொதுமக்கள்" உணர்ச்சி என்று சொல்லி தரம் தாழ்த்திப் பேசுவதும் தவறு.//
வஜ்ரா, இந்த மொத்தப் பதிவிலும் எங்குமே பொது மக்கள் என்ற சொல் பயன்படுத்தப் படவில்லை. குடிமக்கள் என்று தான் சொல்லி இருக்கிறேன். அதிலும் உணர்ச்சிக்கு மதிப்பு கொடுப்பதற்காக கொலையா! ஒப்புக் கொள்ள எனக்கு மனம் வரவில்லை.

//வந்தோம்...படித்தோம்..சிறிதே குழம்பினோம்..சென்றோம். //
ஹி ஹி...

//ரிபீட்டே// - ஹி ஹி ரிபீட்.. :)))

பொன்ஸ்~~Poorna said...

//இது போல ஒரு சிவாஜி படம் பார்த்த நினைவு வருகிறது; பெயர் மனதிலிலிருந்து வெளிவர மறுக்கிறது.
//
தெரியலியே மணியன்...

//'VaralaaRu' patam ippoo thaan paaththeen..
:-) // குப்புசாமி, அதுக்கும் பதிவுக்கும் தொடர்பிருக்கா? இல்லைன்னா குழப்பத்துக்குமா? ;)

//இதற்கும் விமர்சனத்திற்கும் தொடர்பிருக்கிறது....//
பங்காளி, இன்னா தொடர்புப்பா? ;)

பொன்ஸ்~~Poorna said...

//நான் படம் பாக்குற பார்ட்டி - பாத்திர வேண்டியதுதான். நன்றி நல்ல ஒரு அறிமுகம் கொடுத்ததற்கு.
// பாருங்க மதனி..
//ரசிச்ச பத்தியெல்லாம் அழகா படிச்சுக் காட்டும் // - கொடுத்து வச்சவரு உங்க மச்சான்.. அப்படிப் படிச்சி சொல்லி, அதை ஆசையாக் கேட்கவும் ஒரு ஆள் வேணுமில்ல!

//பிடிச்சிருக்கு 'பிடி'ச்சிருக்கு // - ரொம்ப நாளா இருக்குக்கா... இப்போவும் போட்டுட்டேன்.. :)

//ஆமா அது என்ன உங்கள் பக்கத்தில் எங்கு பார்த்தாலும் யானை மயம்?? // லொடுக்கு, எனக்குப் பிடிச்சது.. நிறைய பேரின் கணினியில் தெரியலைன்னாங்க.. இப்போ எல்லா யானைக்கும் ஓய்வு கொடுத்துட்டு கொஞ்சமா வச்சிருக்கேன்..:)

பொன்ஸ்~~Poorna said...

// நல்ல கேள்விதான்... //
- :) தருமிக்கிட்டயே நல்ல கேள்வின்னு பேர் வாங்கிட்டோமா! சபாஷ் பொன்ஸ் :)

//மேடம், இது புத்தக விமர்சனமா அல்லது திரைப்பட விமர்சனமா :-)
//
ஹி ஹி.. புத்தக விமர்சனம் தான், புத்தகத்துல படம் இல்லாததால, திரைப்படத்துலேர்ந்து படம் போட்டு, ஒரே குழப்பமாகிடிச்சு :) ஹி ஹி..

வருகைக்கு நன்றி பிரபு ராஜதுரை..