Thursday, October 12, 2006

பெங்களூராகிக் கொண்டிருக்கிறது சென்னை

பொதுவாக வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் இந்தியர்கள் செட்டில் ஆக விரும்பும் நகரமாக இருப்பது பெங்களூர். அதன் ஹைடெக் வசதிகளும், கிட்டத் தட்ட எல்லாவகையான மென்பொருள், வன்பொருள் கணினி நிறுவனங்களுக்கு இங்கே கிளைகள் இருப்பதும் இதற்கு முக்கிய காரணம். அமெரிக்காவில் படித்த தோழி ஒருத்தி, அவள் படிப்புக்குத் தகுந்த, அவள் செய்ய விரும்பும் வேலை பெங்களூரில் மட்டுமே இருக்கிறது என்றாள் ஒருமுறை.

விண்ணை முட்டும் கட்டிடங்கள், எப்போதும் ஏதாவது ஒரு பகுதியில் நடந்து கொண்டே இருக்கும் புதிய கட்டுமான வேலைகள், டெல்லி, மும்பையைத் தொடுமளவுக்குப் போய்விட்ட வாழ்க்கைச் செலவு(cost of living), விரிந்துகொண்டே இருக்கும் பெங்களூரின் நகர எல்லை என்று இருக்கும் இந்த ஊரின் கலாச்சாரமும் இந்தியாவின் மற்ற நகரங்களைப் பார்க்கையில் மிக மிக வேறாகத் தான் இருக்கிறது.

இந்தியாவின் இந்த ஐந்தாவது மெட்ரோ நகரத்தில் நான் இரண்டே இரண்டு மாதங்கள் வேலை செய்தேன். முதல் மாதம் புதிய கலாச்சாரத்தையும் மக்களின் போக்கையும் புரிந்து கொள்வதிலேயே கழிந்தது என்றால், இரண்டாவது மாதம் போதும் என்று தோன்றி மூட்டை முடிச்சுகளைக் கட்டிவிட்டேன். பெங்களூரில் வாழ்ந்த காலங்களில் அங்கு நடக்கும் நவீன முறையிலான குற்றங்கள் பற்றி நண்பர்களிடமிருந்து தினசரி ஒரு மடலாவது வரும்.  • இரவு பதினொரு மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவனை, பி.டி.ம் உடுப்பி கார்டன் அருகில் ஒரு பெண், "தனியாகச் செல்ல பயமாக இருக்கிறது, கொஞ்சம் வீடு வரை துணை வர முடியுமா?" என்று கேட்க, இந்த இளைஞனும், "சரி, சின்னப் பெண்ணாக இருக்கிறாளே" என்று உதவப் போக, அந்தப் பெண்ணே அமர்த்திய ஆட்டோக்காரனும் பெண்ணும் இன்னும் காத்திருந்த ஒருவனும் சேர்ந்து உதவிக்கு வந்த இளைஞனின் பணம், கார்டுகளைக் கவர்ந்து கொண்டு வெகுதூரத்தில் விட்டுவிட்டுப் போனார்களாம்.


  • பெங்களூர் ரயில் நிலையத்தில் நண்பன் ஒருவனை வழியனுப்ப வந்த இளைஞனிடம் டிக்கட் கேட்டாராம் ஒரு போலி டி.டி.ஆர். அவர் பிளாட்பாரம் டிக்கெட்டை எடுத்துக் கொடுத்த பின்னும் அதைத் தூக்கிப் போட்டுவிட்டு, அபராதம் கட்டியே தீரவேண்டும் என்று ரவுசு வேறு பண்ணி இருக்கிறார். இந்த நேரத்தில் யாரோ ஒரு இளைஞன், உதவுவது போல் வந்து பணத்தைக் கட்டிவிட்டு, அப்போதே ஏடிமில் இருந்து எடுத்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார். பணம் எடுத்துக் கொடுக்கப் போன போது என்ன நடந்தது என்று புரியவில்லை, அடுத்த நாள் வேறு ஒரு போலி வங்கி அட்டை மூலம் அந்த அக்கவுண்டையே காலி செய்துவிட்டார்களாம்.


  • கால் சென்டருக்கு அழைத்துப் போகும் ஓட்டுனரே பெண்ணைக் கடத்திப் போய் கொலை செய்த சம்பவம் ஒன்று மிகப் பெரிய அளவில் பேசப் பட்டது நினைவிருக்கலாம்.

  • பெங்களூரில் இருக்கும் எங்களின் ஒரு அலுவலக எல்லைக்கு அருகிலேயே ஆறு மாதத்துக்கு முன்னால், யாரையோ அடித்துப் போட்டுவிட்டு பணம் முதலியவற்றைப் பிடுங்கிக் கொண்டு போய்விட்டதாகவும் வேலை பார்க்கும் பிறரையும் எச்சரிக்கையாக இருக்கும்படி அலுவலகமே ஒரு எச்சரிக்கை மடல் அனுப்பியது.


கொஞ்சம் கொஞ்சமாக இது போன்ற நூதன குற்றங்கள் சென்னையிலும் பெருகத் தொடங்கி இருக்கிறது. நேற்று சென்னை ஐடி காரிடாரில், ஒரு பெண் ஆட்டோவில் ஏறி வேளச்சேரிக்குப் போக விரும்ப, ஆட்டோக்காரர்கள் நேரே பழைய மகாபலிபுரம் சாலையில் கடத்திச் சென்று அடித்து, துன்புறுத்தி வன்புணரவும் முயன்றிருக்கிறார்கள். நல்லவேளையாக அந்தப் பெண், சந்தேகம் ஏற்பட்ட உடனேயே செல்லில் பிற நண்பர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி, போலீஸ் வந்து, மீட்டெடுத்து விட்டார்கள். எப்படியும் ஆட்டோக்காரரும் அவரது நண்பரும் கொஞ்சம் பணம், நகை, வங்கி அட்டையுடன் தப்பிவிட்டாலும், பெண்ணுக்கு அதிக பாதிப்பும் இல்லை. பாதிக்கப் பட்ட பெண் தரப்பில் வழக்கு பதிவு செய்ய மறுக்கிறார்களாம். (செய்தி இங்கே)ஒராண்டுக்கு முன்னால், "வங்கி ஏடிம் அட்டைகளுடன் சென்னையில் நடமாடாதே" என்று நண்பர் ஒருவர் எச்சரித்தார். இரவில் வீடு திரும்புபவர்களைக் கத்தி முனையில் நிற்க வைத்து ஏடிம்மிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தே ஆகவேண்டும் என்று மிரட்டும் கும்பல் ஒன்று அப்போது கிளம்பி இருப்பதாகச் சொன்னார்கள்.தி நகரில், தீபாவளி பரபரப்பில் நிகழும் குற்றங்கள் இன்னுமொரு வகை.ஆக, ஐடி காரிடார், புதுப் புது மென்பொருள் நிறுவனங்களுடன், குற்றங்களின் தரத்திலும் எண்ணிக்கையிலும் கூட, சென்னை பெங்களூருக்குச் சமமாக வளரத் தொடங்கிவிட்டது.

ஆட்டோவில் தனியாக ஏறும் பெண்களே/ஆண்களே, உஷார்....

32 comments:

துளசி கோபால் said...

யம்மாடி. இப்படி பயம் வச்சா நான் எங்கே போவேன்?
சென்னைக்கு வரவா வேணாமா?

luckylook said...

இதை ஏன் சென்னைப் பட்டணத்துலே போடலே?

சென்னையின் பெருமைகள் மட்டும் தான் அங்கேயா?

விழிப்புணர்வு கட்டுரைகளும் போடப்படலாம்... தவறொன்றுமில்லை...

G.Ragavan said...

நாங்கூட சென்னையில திடீர்னு மென்பொருள் பெருகி....வித்தியாசமா பெங்களூர் மாதிரி வருதோன்னு நெனச்சு பதிவுக்கு வந்தேன். சென்னையாகும் பெங்களூர்னு ஒரு பதிவு போடுற எண்ணம் கூட இருந்துச்சு. படிச்சு முடிச்ச பிறகு ஒன்னும் தோணலை. உள்ளபடிக்குச் சொன்னா சென்னை-பெங்களூர் ஒப்பீடு செய்ய நான் சரியான ஆள்னு தோணுது. ஒப்பிடுறேன். கண்டிப்பா ஒப்பிடுறேன்.

செந்தில் குமரன் said...

பாம்பே பூனே நெடுஞ்சாலையிலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. பெண்கள்/ஆண்கள் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம். நீங்கள் சென்னைப் பட்டினம் பகுதியில் கால் டாக்ஸி பற்றி சொல்லி இருந்தீர்கள் அந்த வசதியை உபயோகித்து டாக்ஸி புக் செய்து அதில் செல்லலாம் அப்படி புக் செய்யும் சமயம் டாக்ஸி பற்றிய விவரங்களை குறுஞ்செய்தி மூலம் நண்பர்களுக்கு/பெற்றோர்களுக்கு தெரிவிக்கலாம்.

உங்கள் மான் குட்டி போல வாகனம் வாங்கிக் கொள்வதும் கொஞ்சம் பாதுகாப்பு தரும், இதிலும் ஆபத்துகள் உள்ளன இருப்பினும் ஆட்டோவில் செல்வதை விட பாதுகாப்பு அதிகம். என் சென்னைத் தோழி ஒருவரை இரு சக்கர வாகனம் வாங்கச் சொல்லி வருகிறேன்.

நிறுவனங்கள் இது போன்ற சமயங்களில் வண்டி ஏற்பாடு செய்து தருவது அவசியம் என்பதை உணர வேண்டும். என்னுடைய முந்தைய அலுவலகத்தில் ஓய்வு அறை உண்டு. மிக நேரமாகி விட்டால் அதில் படுத்து உறங்கிச் செல்லவும் வசதி உண்டு(என் போன்றவர்கள் மிகவும் நேரமாகி விட்டால் ராத்திரி பொழுது முழுவதும் வலை மேய்ந்து கொண்டு அப்படியே கழித்து விடுவதும் நடப்பதுண்டு:-)))).

அரசு இரவு நேர ரோந்துகளை அதிகரிக்கச் செய்யலாம் பெங்களூரில் ஆட்டோக்கள் அனைத்திலும் ஓட்டுனரின் பெரிய சைஸ் போட்டோ மற்றும் விவரங்கள் ஆகியவற்றை ஒட்டுவதை கட்டாயமாக்கி இருக்கிறார்கள் அதனை சென்னையிலும் அமல் படுத்தலாம்.

பொன்ஸ்~~Poorna said...

துளசி அக்கா, நீங்க வாங்கக்கா.. நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம் இங்க :)

//இதை ஏன் சென்னைப் பட்டணத்துலே போடலே?
சென்னையின் பெருமைகள் மட்டும் தான் அங்கேயா?//
அப்படி எல்லாம் இல்லை லக்கி, அங்கேயும் இது போன்ற கட்டுரைகள் வருவதுண்டு, சிவகுமார் கூட ஒன்று எழுதி இருந்தார்... ஆனால், இந்தக் கட்டுரை பெங்களூரைப் பற்றி அதிகம் பேசுகிறது. அத்துடன், இதில் பல கேள்விப்பட்டவை தான். அதனால் தான் இங்கே போட்டுவிட்டேன்..

பொன்ஸ்~~Poorna said...

ராகவன், எழுதுங்க எழுதுங்க.. ரொம்ப நாள் முன்னால், இது போல் உங்களை எழுதச் சொல்ல வேண்டும் என்று நினைத்ததுண்டு.. "படிச்சு முடிச்ச பிறகு ஒன்னும் தோணலை"ன்னா எப்படிங்க? இந்தத் தலைப்பு மாதிரியே அதுவும் ஒரு வஞ்சப் புகழ்ச்சியோ?

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

கழுத்து நிறைய நகைகளுடன் நடு இரவில்எப்போது..." என்று எம்.கே.காந்தி சொல்லியதாக ஒரு செய்தியைச் சொல்லுவார்கள் நம்மவர்கள். அதோடு இனி கிரிடிட் கார்ட் வகையறாக்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்றே படுகிறது.

படித்து நல்ல வேலையில் அமர்ந்து கொள்ளும் பட்டதாரிகளை விட வேலைகிடைக்காமல் அல்லல் படும் பட்டதாரிகளின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகம்.

சமீபகாலங்களில் பல தரப்பட்ட 420 வழக்குகளில் கைது ஆகியிருப்பவர்களின் பட்டியலைப் பார்த்தால் வேலை கிடைக்காத.. அல்லது; வேலைக்குப் போக விரும்பாத பட்டதாரிகளாக பலர் இருப்பது கண்கூடு!
அவசியமான எச்சரிக்கை மணி!

பொன்ஸ்~~Poorna said...

செந்தில் குமரன்,

//டாக்ஸி பற்றிய விவரங்களை குறுஞ்செய்தி மூலம் நண்பர்களுக்கு/பெற்றோர்களுக்கு தெரிவிக்கலாம்.//
இது ஒரு வழி. உண்மை தான். சென்னைக்கு வந்த புதிதில் எனக்கு முன்னிரவு ஷிப்டில் வேலை. இரவு இரண்டு மூன்று மணிக்கு வீட்டுக்குப் போவது போல் இருக்கும். அந்த நேரத்துக்குப் போகாவிட்டால், மறுநாள் மாலை நான்கு மணிக்கு அலுவலகம் வரவும் முடியாது. இந்த ஒரே காரணத்துக்காக கால் டாக்ஸிக்களில் போய் வந்து கொண்டிருந்தேன்.

சென்னையில் நிறுவனங்கள் வண்டி ஏற்பாடு செய்வது எப்போதுமே இப்படி இரவில் போய் வரும் கால் சென்டர் வேலைகளுக்குத் தான். மூன்று மாதங்களில் ஒரு வாரம் இரவு வேலை செய்யும் எங்களுக்கு எல்லாம் இது போன்ற வசதிகள் கிடையாது.

சொந்த வாகனமெல்லாம் இந்த நேரங்களில் உதவாது. எதுவானாலும், எப்போதும் நாம் கவனமாக இருக்கவேண்டியது தான் அவசியம்.

என் பையில் எப்போதும் சின்ன பென்சில் கத்தி ஒன்று இருக்கும். அத்துடன் இரவில் கால் டாக்ஸியிலோ ஆட்டோவிலோ வர நேரிட்டால், கொஞ்ச நேரம் ஓட்டுனரிடம் பேச்சு கொடுத்துவிட்டு, அதன்பின் யாருக்காவது போன் செய்து பிளேடு போடவும் தொடங்கிவிடுவேன் - நடுநடுவே அப்போது இருக்கும் இடத்தின் பெயரயும் சொல்லுவேன். ஓட்டுனரைப் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்வதுடன், யாருக்கோ இந்த வழிகள் பற்றிய செய்தி போய்க் கொண்டிருக்கிறது என்பது தவறான எண்ணம் கொண்டிருப்பவர்களைக் கொஞ்சம் பலவீனப்படுத்தும்.

// ஓட்டுனரின் பெரிய சைஸ் போட்டோ மற்றும் விவரங்கள் ஆகியவற்றை ஒட்டுவதை கட்டாயமாக்கி இருக்கிறார்கள் அதனை சென்னையிலும் அமல் படுத்தலாம். //
இதெல்லாம் கொஞ்சம் கஷ்டம் என்று தோன்றுகிறது. ஆனால், இரவு ரோந்துகளை அதிகப்படுத்தலாம். இப்போது கூட இந்தப் பெண்ணைக் காப்பாற்றியது சென்னையின் இரவு ரோந்து போலீஸார் தானாம்.

செந்தில் குமரன் said...

///
// ஓட்டுனரின் பெரிய சைஸ் போட்டோ மற்றும் விவரங்கள் ஆகியவற்றை ஒட்டுவதை கட்டாயமாக்கி இருக்கிறார்கள் அதனை சென்னையிலும் அமல் படுத்தலாம். //
இதெல்லாம் கொஞ்சம் கஷ்டம் என்று தோன்றுகிறது.
///

இல்லீங்க பெங்களூரில் இது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. நீங்க ஒரு ஆட்டோ கூட ஓட்டுனர் பற்றிய விவரம் ஒட்டாமல் உங்களால் பார்க்க முடியாது.

///
என் பையில் எப்போதும் சின்ன பென்சில் கத்தி ஒன்று இருக்கும்.
///
பரவாயில்லைங்க வெளிநாட்டில் பெண்கள் பெப்பர் ஸ்பிரே போன்றவைகளை வைத்துக் கொண்டிருப்பதாக கேள்விப் பட்டதுண்டும். நல்ல விஷயம்தான். நம்ம ஊர் பெண்கள் கூட வாங்கு வைத்துக் கொள்ளலாம் என்ன தொடர்ச்சியாவா உபயோகிக்கப் போறாங்க ஒரு தடவை செலவு ஆனா மிகச் சிறந்த ஆயுதம்.

ILA(a)இளா said...

அப்படியே இந்த பக்கத்தையும் பார்த்துருங்க

Johan-Paris said...

வளருகிரோமா?,, சில விகாரங்கள் தலைக்காட்டத் தொடங்குவது இயல்பே!!! ஆனால் நல்ல பொலிஸ் குழுமத்தின் கண்காணிப்பைப் பலப்படுத்தி; இரகசியப் பொலிஸ் ரோந்தும் பலப் படுத்தப் படவேண்டும். இங்கே இதைத் தான் செய்கிறார்கள். நம் நாடுகலில் பொலிசையும் நம்ப முடியாதே!!
யோகன் பாரிஸ்

வைசா said...

பெங்களூர் அளவுக்கு சென்னை முன்னேறவில்லை. ஆனால் பெங்களூர் மாதிரி குற்றங்கள் மட்டும் வந்து விட்டதா?

வைசா

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்,

வணக்கம், என்ன சென்னையின் குற்ற முகம் குறித்து சிறப்பு பார்வையா, வசதிகலும் நாகரீகமும் பெருக பெருக குற்ரமும் பெருகும் , பணப்புழக்கம் அதிகம் ஆகும் போது கூடவே குற்ரமும் வளரும் தானே ,

பென்சில் கத்தியா அத சீவி ஷார்ப் பண்ண ஒரு ஷார்ப்னெரும் கைல வச்சுக்கோங்க!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பொன்ஸ்

வணக்கம்-ங்க! "தருமமிகு" சென்னையைப் பத்தி இப்படிச் சொல்லிட்டீங்களே! மனசுக்கு ஒரே கஷ்டமாப் போச்சு. பட்டப் பகலில் ரங்கநாதன் தெருவில் நடக்காததா? வேளச்சேரி சம்பவம் இரவில், அதுவும் தனிமையில் நடந்ததால் பயம் கூடி விட்டது.
நீங்க சொன்ன ATM கார்டு விஷயம் மட்டும் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பெரும்பாலும் அதிகம் மக்கள் புழங்கும் ATM சென்டர்களையே, அதுவும் பகலில் புழங்குவது நல்லது. Drive-in ATM வந்தாக் கூட பயம் தான்!
இனி ஆட்டோவில் ஏறினால் சும்மாங்காட்டியும் செல்பேசியில், ஏசி தெரியும், போலீஸ் கமிஷனரைத் தெரியும், அப்பிடீ இப்பிடின்னு விவேக் ஸ்டைலில் உதார் உடணும் போல இருக்கே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இன்னொரு விஷயம் Bill Pay. நிறைய மக்கள்ஸ் மருந்துக் கடை, மற்றும் பல வணிக வளாகங்களில் உள்ள drop box உபயோகிக்கிறார்கள். நன்கு அறிமுகமான கடை drop boxஐ பயன்படுத்தினால் பிரச்சனையில்லை.
ஹைதராபாத்தில் உள்ள என் நண்பன் சொன்னது இது:
அவன் செக்கை drop box-இல் போட, எவனோ/எவளோ drop box-யே லவட்டிக்கினு போய், செக்கில் உள்ள வங்கி எண், மற்றும் அக்கவுண்ட் எண்களை வைத்து ஆன்லைன் பாங்கிங்கை வெற்றிகரமாக முடித்தார்களாம். மறுநாள் தான் ஐயா கணிணியில் பாத்து அதிர்ச்சி ஆகி, போலீஸ் கம்ப்ளெயிண்ட் செய்ததாகச் சொன்னான்.

டெக்னாலஜி வளர சமூகம் வளர்கிறது. சமூகத்தில் உள்ள இது போன்ற "சிந்தனையாளர்களும்" வளரத் தானே செய்வார்கள் :-)))
நான் வளர்கிறேனே மம்மி :-))))

துளசி டீச்சர், இதெல்லாம் சும்மா; இதப் பாத்து நீங்க சென்னையில் கால் பதிக்காம இருந்துறாதீங்க!
இப்பாருக்குள்ளேயே மிக மிகப் புண்ணிய நகரமான 'தருமமிகு சென்னை';
நீங்க எதுக்கும் கோலிவுடானந்தா சுவாமிகள் கொடுந்தமிழில் எழுதிய சென்னைத் 'தல' புருடாணம் படிச்சிட்டு அப்பறம் சென்னை வாங்க!!

நாகை சிவா said...

வேற ஏதோ சொல்ல போறிங்கனு நினைத்து வந்தேன், நெகட்டிவா சொல்லி ஒரு எச்சரிக்கை மணி அடிச்சு இருக்கீங்க, நல்ல விசயம் தான்.

ஆனால் சென்னை பெங்களுர் அளவு தூங்கி வழிவது இல்லை. அதனால் அந்த அளவுக்கு பெரிய குற்றங்கள் சிட்டியில் நடக்கவில்லை. இப்பொழுது நடக்கும் சில விசயங்களுக்கும் உரிய முக்கியதுவம் கொடுத்து காவல் துறை சிறப்பு நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும்.

எலிவால்ராஜா said...

//பெங்களூராகிக் கொண்டிருக்கிறது சென்னை//

இதுக்கு முன்னாடி சென்னையிலே குற்றமே நடக்கலையா என்ன? உங்கள் கட்டுரை சென்னை எதோ குற்றங்களே நடக்காத மாதிரியும் இப்போதுதான் பெங்களூரை பார்த்து குற்றங்கள் நடக்க ஆரப்பித்திருக்கின்றன என்பது போல உள்ளது..


பெங்களூரில் உள்ள கன்னடிகரிடம் இந்த மாதரி குற்றாங்களை சொல்லிபாருங்கள். அவர்களது பதில் இது மாதரியான குற்றங்களுக்கு தமிழ் மக்களே காரணம் என கூறுவர். என்ன ஒன்னு நீங்க தமிழ் என தெரிந்தால் வேறபதில் வரும்.

பொன்ஸ்~~Poorna said...

பாலா,
//அதோடு இனி கிரிடிட் கார்ட் வகையறாக்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்றே படுகிறது.//
உண்மைதான். கிரெடிட் கார்டு, ஏடிம் கார்டு எல்லாவற்றையும் இதில் சேர்த்துவிட வேண்டியது தான்.

இளா, உங்கள் பக்கத்தில் உள்ள செய்தி இன்னுமொரு எச்சரிக்கையாக உள்ளது. சுட்டிக்கு நன்றி.

யோகன்,
//நம் நாடுகலில் பொலிசையும் நம்ப முடியாதே!!//
அதுவும் உண்மைதான். நம் நாட்டின் மிகப் பெரிய பிரச்சனை இந்த விஷயம் தான். போலீஸ் துறையில் உள்ள களைகளைக் கண்டறிந்து சீக்கிரம் சரிப் படுத்தினாலே பாதி பிரச்சனை ஒழிந்துவிடும்.

மா சிவகுமார் said...

பொன்ஸ்,

:-(

இதற்குத் தீர்வு இவ்வளவுதானா?

அன்புடன்,

மா சிவகுமார்

பொன்ஸ்~~Poorna said...

வாங்க வவ்வால்,
//பென்சில் கத்தியா அத சீவி ஷார்ப் பண்ண ஒரு ஷார்ப்னெரும் கைல வச்சுக்கோங்க! //
ஹி ஹி.. ரப்பர் கூட வச்சிருக்கேனாக்கும் ;)

கண்ணபிரான்,
//அப்பிடீ இப்பிடின்னு விவேக் ஸ்டைலில் உதார் உடணும் போல இருக்கே!
//
பார்த்துங்க, ஓவரா உதார் விட்டு, இருக்கிற ஒரு நல்ல ஐடியாவையும் வேலைக்காவாத லெவலுக்குக் கொண்டுவிட்டுடப் போறீங்க :)

//இப்பொழுது நடக்கும் சில விசயங்களுக்கும் உரிய முக்கியதுவம் கொடுத்து காவல் துறை சிறப்பு நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும்.
//
அவ்வளவு தாங்க சிவா. அது மட்டும் தான் தேவை இப்போ.. அத்தோட கொஞ்சமா, நமக்கும் விழிப்புணர்வு..

பொன்ஸ்~~Poorna said...

எலிவால் ராஜா,
//உங்கள் கட்டுரை சென்னை எதோ குற்றங்களே நடக்காத மாதிரியும் இப்போதுதான் பெங்களூரை பார்த்து குற்றங்கள் நடக்க ஆரப்பித்திருக்கின்றன என்பது போல உள்ளது..//
இல்லை. அப்படிச் சொல்ல விரும்பவில்லை. சென்னையும் ஒரு விதத்தில் குற்றங்களின் நகரம் தான். பொதுவாக நாட்டில் இல்லாத புதுவித குற்றங்களை உருவாக்குவதிலும், செயல்படுத்துவதிலும் நம்மவர்கள் சமர்த்தர்கள் தான். எனினும், இந்த மாதிரியான "ஆட்டோ, ஏடிம்" இரண்டும் சேரும் குற்றங்களுக்கு பெங்களூர் அதிகம் பெயர் போனது. அதனால் தான் சென்னையும் அதே பாதையில் போகிறது என்று குறிக்க அப்படிப் போட வேண்டியதாகிவிட்டது.

சிவகுமார்
//இதற்குத் தீர்வு இவ்வளவுதானா? //
தனி மனிதர் என்ற முறையில் நம்மாலானதைச் செய்யவேண்டியது தானே! பாதிக்கப் பட்ட பெண்ணே புகார் கொடுக்கத் தயங்கும் நிலையில், நாம் என்ன செய்யமுடியும்? செய்தி உண்மை என்பதற்குச் சான்றுகள் இருந்தாலும் இந்த விஷயத்தில் நம்மால் செய்ய முடிந்தது நம்மளவில் பாதுகாப்பாக இருப்பதும், நாம் அறிந்த நண்பர்களுக்கு விஷயத்தைச் சொல்வதும் மட்டும் தான் என்று தோன்றுகிறது.

பொது மக்கள் குற்றங்களைக் காவல் துறைக்குக் கொண்டு செல்ல இன்னும் அதிக ஆர்வம் காட்டவேண்டும். அதற்கு, காவல் துறையைப் பற்றியும், புகார் கொடுக்க வருபவர்களை அவர்கள் நடத்தும் விதத்தைப் பற்றியும் மக்களுக்கு இருக்கும் பயம், ஐயம் இவற்றைப் போக்கவேண்டும்... இதெல்லாம் இப்போதைக்கு நடக்கும் காரியங்கள் அல்லவே!

இந்த ஒரு நிகழ்ச்சியை மட்டுமே அலாரமாக வைத்து நமது காவல் துறையினர் இப்போதே ஏதேனும் செய்தால் நல்லது.

நாமக்கல் சிபி said...

பொன்ஸக்கா,
ஒரு அருமையான திருட்டு பெங்களூர்ல நடந்துச்சு... அதை பற்றி அனேகமா நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம்...

BTMல இருக்கிற ஒரு வீட்டுக்குள்ள 5 - 6 பேர் புகுந்திருக்காங்க... எல்லார் கையிலயும் கத்தி... அந்த ரூம்ல 6 சாப்ட்வேர் இஞ்சினியர்ஸ்.

எதுவும் பேசாமல் எடுத்தவுடனே ஒருத்தன் கையில கத்தியால கிழிச்சியிருக்காங்க... அப்பறம் ரூம்ல இருக்கற எல்லார்கிட்டையும் செல் போன், Credit Card, ATM Card + Pin வாங்கிட்டு ரெண்டு பேர் மட்டும் வெளிய போயிருக்காங்க..

மீதி பேர் வீட்லே இருந்திருக்காங்க.. வெளிய போனவங்க, Credit cardla நல்லா தேச்சிட்டானுங்க... அப்பறம் ATM போய் இருக்குற பணம் எல்லாம் எடுத்துட்டு... இவனுங்களுக்கு போன் பண்ணியிருக்காங்க...

ரூம்ல இருக்கவனுங்க... ரூமை பூட்டி சாவிய வெளிய தூக்கி போட்டுட்டாங்க... செல் போனும் இல்லாம, வீடும் பூட்டியிருந்ததால அந்த பசங்களால ஒன்னுமே செய்ய முடியல...
:-(

இது நடந்து 1 வருஷத்துக்கு மேல இருக்கும்

manasu said...

//துளசி அக்கா, நீங்க வாங்கக்கா.. நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம் இங்க :) //


எதுக்கு கொள்ளை அடிக்காவா பொன்ஸ்????

குறும்பன் said...

சென்னை அமெரிக்க நகரங்கள் மாதிரி ஆகாம (முன்னேறாம) இருந்தா சரிதான். கத்தி எல்லாம் இல்லை துப்பாக்கி தான்.

மாலை & இரவு வேளையில் முடிந்த வரை பெண்கள் இரங்கநாதன் தெருவில் போகாமல் இருப்பது மிகவும் நல்லது. சென்னைக்காரங்களுக்கு ஏன் என்று தெரியும் என்று நினைக்கிறேன். என்னால் முடிஞ்ச அறிவுரை.

Kuppusamy Chellamuthu said...

//இந்தியாவின் இந்த ஐந்தாவது மெட்ரோ நகரத்தில் நான் இரண்டே இரண்டு மாதங்கள் வேலை செய்தேன்.// பெங்களூர்ல இருந்தேன்னு சொல்லுங்க நம்பறோம்.. வேலை...ஹ்ம்..ஏய்...பொய் தானே?

சுதர்சன்.கோபால் said...

--- manasu said...
//துளசி அக்கா, நீங்க வாங்கக்கா.. நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம் இங்க :) //

எதுக்கு கொள்ளை அடிக்காவா பொன்ஸ்???? ----

ROFTL :-)

பெங்களூரில வீட்டு சொந்தக்காரர்,ஆட்டோ ஓட்டற அண்ணாத்தே அப்படின்னு பல பகல் கொள்ளைக்காரங்க இருக்காளோன்னோ??

இத விட்டுட்டியே கொழந்தே???

பொன்ஸ்~~Poorna said...

வெட்டி,
இது எனக்குத் தெரியாத புது திருட்டா இருக்கு.. எப்படியோ இந்தப் பதிவுக்குப் பெங்களூரின் நூதன திருட்டுக்கள்னே பேர் வச்சிருக்கலாம் போலிருக்கு! :)

//எதுக்கு கொள்ளை அடிக்காவா பொன்ஸ்????//
மனசு :))) அதானே பார்த்தேன், இந்தக் கேள்வியைக் கேட்க யாருமே காணோமேன்னு யோசிச்சிகிட்டிருந்தேன். துளசி அக்கா ஒரு காலத்துல வைர கிரீடம் எல்லாம் கோபால் சாரிடம் கேட்டு வாங்கி வச்சிருக்கிறதா சொன்னாங்க. அதான் ;)

//என்னால் முடிஞ்ச அறிவுரை. //
வாங்க குறும்பன்.. நீங்க சொல்வதும் சரிதான்..

பொன்ஸ்~~Poorna said...

//வேலை...ஹ்ம்..ஏய்...பொய் தானே?//

//ROFTL :-)//
ம்ஹ்ம்.. இதுக்குத் தான் நம்ம ஆபீஸ்காரங்க இருக்கிற இடத்துல பார்த்துப் பேசணும்கிறது :)))

சரி சரி.. சுதர்சன் சொன்னதையும் சேர்த்துக்குவோம்.. சுதர்சன், //பெங்களூரில வீட்டு சொந்தக்காரர்// இன்னும் கொஞ்சம் இதை விளக்க முடியுமா? :P

வெற்றி said...

பொன்ஸ்,
முதற்தடவையாக தமிழகத்திற்கு வரும் ஏப்பிரல் மாதத்தில் வருவதற்குத் திட்டமிட்டிருக்கிறேன். இப்ப உங்களின் பதிவைப் பார்த்ததும் கொஞ்சம் பயமாக இருக்கிறது. பதிவுக்கு நன்றி. முன்கூட்டியே நீங்கள் அங்கு நடந்தேறும் பிரச்சனைகளைச் சொல்லியுள்ளதால் அதுக்கேற்றவாறு தயார் செய்து கொள்ளலாம்.

/* நாங்கூட சென்னையில திடீர்னு மென்பொருள் பெருகி....வித்தியாசமா பெங்களூர் மாதிரி வருதோன்னு நெனச்சு பதிவுக்கு வந்தேன். சென்னையாகும் பெங்களூர்னு ஒரு பதிவு போடுற எண்ணம் கூட இருந்துச்சு. */

பொன்ஸ், நானும் இராகவன் நினைத்தது போலத்தான் எண்ணி வந்தேன். தமிழ்மண் முன்னேறுகிறதாக்கும் என்ற மகிழ்ச்சியில்.

ILA(a)இளா said...

இதோ இன்னும் ஒன்று

வழிப்போக்கன் said...

வளர்ச்சி ஏற்படும்போது சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும். அதை கொஞ்சம்கூட கண்டுகொள்ளாமல் நம் முதலாலித்துவ அறிவுசீவிகளின் அறிவுறையில் இந்தியா செல்லுமானால் நக்சலிசமும் க்ரைமும் அதிகரிக்குமே ஒழிய குறயாது.

ஏழைகளுக்கு இரண்டு ருபாய் அரிசி கொடுப்பதைக்கூட இகழ்ந்து பேசும் அறிவுசீவிகள் நம்மூரில் இருப்பதுதான் இதைப் படித்ததும் நினைவுக்கு வந்தது.

பதிவு நன்று.

srishiv said...

என்ன ஆச்சு? உங்களின் எழுத்துக்களை வெள்ளை எழுத்துருவில் போட்டிருக்கின்றீர்கள்? தெரிவு செய்தே படிக்கவேண்டியுள்ளதே? சற்றே கருமையான வண்ணத்தில் இட்டால் படிக்க எளிமையாக இருக்குமே? நன்றி, அருமையான பதிவு,...
வாழ்க வளமுடன்,
ஸ்ரீஷிவ்..@சிவா