Tuesday, October 31, 2006

உலகத் தொலைபேசிகளிலேயே முதன் முறையாக...

"இன்னும் சுமார் அரை மணி நேரத்திற்குள் ஒரு பெரிய புயல் கரையைக் கடக்கப் போகிறது. பாதுகாப்பான இடத்துக்குப் போகவும்"

"உங்கள் வீடு இருக்கும் பகுதிகளில் 7.3 அளவிலான பூகம்பம் தாக்கிக் கொண்டிருக்கிறது. கட்டிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும்"

"தமிழ் நாட்டில் இன்னும் இருபத்திநான்கு மணி நேரத்திற்கு தொடர்மழை நீடிக்கும்"

திடீரென்று ஒரு நாள் இப்படிப்பட்ட குறுஞ்செய்திகள் உங்கள் செல்பேசியில் வந்தால் உங்கள் குறும்புக்கார நண்பனின் வழக்கமான விளையாட்டு என்று அலட்சியப்படுத்திவிட வேண்டாம். இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையிலிருந்து இப்படிப் பட்ட எச்சரிக்கை குறுஞ்செய்திகள் வருவதற்கு வெகு நாட்களாகப் போவதில்லை - அதுவும் உங்கள் மாநில மொழியிலேயே!

பெங்களூரைச் சேர்ந்த "ஜெனிவா சாப்ட்வேர் டெக்னாலஜிஸ்" நிறுவனமும் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமும் சேர்ந்து ஆபத்துகால தகவல் துறையுடன் இணைந்து இப்படிப்பட்டக் குறுஞ்செய்திகளை நாடு முழுவதும் அனுப்ப உள்ளன. ஜெனிவா நிறுவனத்தினர் ஆங்கிலத்தில் வரும் குறுஞ்செய்திகளை மொழிபெயர்ப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இப்போதைய நிலவரப்படி (14 இந்திய மொழிகள் உட்பட) 57 உலகமொழிகளில் இம்மாதிரியான செய்திகளை மொழிபெயர்க்கும் வேலை முடிந்துவிட்டது.

இன்றைக்குக் குக்கிராமங்களில் கூட செல்பேசிகளைப் பார்க்க முடிகிறது. விரிந்திருக்கும் தனியார் மற்றும் அரசு சார் தொலைபேசிச் சேவைகளின் மூலம், இந்தியா முழுவதும் செல்பேசிகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஆக, எந்த ஒரு ஆபத்தைப் பற்றிய எச்சரிக்கையும் செல்பேசிகளுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்போது அவை பல்வேறு தரப்பினரையும், அதிக அளவிலான மக்களையும் மிகச் சுலபமாகப் போய்ச் சேரும். அதிலும் அந்தந்த பகுதிகளுக்கேற்ற மொழிகளில் அனுப்பப்படும் போது அவற்றின் பலன்களும் சரியான நேரத்துக்குள் போய்ச் சேர ஏதுவாகும்.

ஜெனிவாவின் இந்த மென்பொருள் மூலம், தமிழில் குறுஞ்செய்தி அனுப்பினால், அதை உள்வாங்கும் செல்பேசியும் யூனிக்கோடு முறையில் இயங்குவதாக இருக்க வேண்டியதில்லை. மொழி பெயர்ப்பதோடல்லாது, இந்த மென்பொருள், குறுஞ்செய்தியை படமாகவும் மாற்றுவதால், மறுமுனை சின்ன படங்களை உள்வாங்குவதாக இருந்தாலே போதுமானது (picture messages not MMS)

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மூலம் பெறப்படும் இது போன்ற ஆபத்துகால செய்திகள் தனியார் மற்றும் அரசாங்க தொலைதொடர்பு நிறுவனங்களின் உதவியுடன் அந்தந்தப் பகுதிகளில் உள்ள செல்பேசிகளுக்கு மட்டும் அவரவர் தேர்ந்தெடுத்திருக்கும் மொழியில் குறுஞ்செய்திகளாக அனுப்பப்படும். சுனாமி மாதிரியான இயற்கைப் பேரழிவின் போது ஆபத்து காலத்திற்குப் பல மணி நேரத்துக்கு முன்னரே இது போன்ற குறுஞ்செய்தித் தகவல்களை மக்களுக்கு அளிப்பதன் மூலம் உயிர்ச்சேதங்களையும் பொருட்சேதங்களையும் பெரிய அளவில் தடுக்கலாம். சமீபத்தைய மும்பை குண்டு வெடிப்புச் சம்பவங்களின் போது கூட பத்து நிமிட இடைவெளியில் வெடித்த இந்தக் குண்டுகளைப் பற்றி சில நொடிகளுக்குள் தகவலனுப்பி இருக்கலாம். இன்னும், மும்பை மழைகள், சென்னை, ஆந்திர வெள்ளம் என்று பல்வேறு காலங்களில் இந்த மாதிரியான குறுஞ்செய்தித் தகவல்கள் மிக மிகப் பயனுள்ளதாக இருக்கும்.



"இப்படிப்பட்ட ஆபத்து கால பன்மொழிக் குறுஞ்செய்தித் தகவல் முறையை உலகிலேயே முதன் முறையாக செயல்படுத்தப் போகும் நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்கே உரியது. இந்தச் சேவையின் மூலம் பேரழிவு எச்சரிக்கைகள் முப்பது வினாடிகளுக்குள் பொதுமக்களுக்குப் போய்ச்சேர முடியும்" என்கிறார் அறிவியல், தொழிற்நுட்பத் துறை அமைச்சரான கபில் சிபல். குண்டுவெடிப்புகளின் போது செல்பேசித் தொடர்புகளில் குளறுபடியானாலும், குறுஞ்செய்திமுறையில் எல்லாருக்கும் செய்தி அனுப்புவது சாத்தியம் என்றும் அறிவியல் தொழிற்நுட்பத்துறை அமைச்சகம் நம்புகிறது.

குறுஞ்செய்திகள் தவிர தரைவழித் தொடர்புள்ள தொலைபேசிகளிலும், குரற்பதிவாக செய்தி அனுப்பவும், ஆங்காங்கு இதற்காகவே அமைக்கப்படும் கம்பியில்லா பொது அறிவிப்புக் கருவிகளின் மூலமும் தொலை தொடர்பைப் பரவலாக்கும் திட்டமும் இருக்கிறது. சுமார் 5.19 கோடி செலவில் செப்டம்பர் 2004 முதலே உருவாக்கப்பட்டு வரும் ஆபத்துகால பன்மொழிக் குறுஞ்செய்தித் திட்டம் பற்றி மீன்வளத்துறை, எல்லைப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அமைச்சகங்களுக்கு ஏற்கனவே செயல்முறை விளக்கம் கொடுத்தாகிவிட்டது. உள்நாட்டு அமைச்சகத்தின் இறுதி தலையசைப்புக்காக மட்டுமே தற்போது காத்திருக்கிறது இந்தத் திட்டம்.

சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கும் பணிகள் சீரான வேகத்தில் சென்றாலுமே செப்டெம்பர் 2007இல் தான் முழுச் செயல்பாட்டுக்கு வரும் என்னும் போது, இந்த மாதிரியான குறுஞ்செய்திச் சேவைகள் இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை நிரம்பிய நாட்டில் உடனடித் தேவையாகும். சீக்கிரமே இந்தச் சேவை செயல்பாட்டிற்கு வந்தால் ஆபத்துகளின் போது பெரிய அளவிலான உயிர்ச்சேதத்தைத் தவிர்த்துவிடமுடியும்.

மேலும் செய்திகளுக்கு

நிறைய தமிழ்ப் படுத்தி இருப்பதால் ஏதும் தவறாகி இருக்குமோவென்று:
இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை - Indian Meterological Department
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் - Ministry of Science and Technology
பன்மொழிக் குறுஞ்செய்தித் தகவல் - Multilingual Messaging Service
குரற்பதிவு - Voice Mail
கம்பியில்லா பொது அறிவிப்புக் கருவிகள் - Wireless Public Addressing System
ஆபத்துதவி மையம் - Disaster Management Cell

15 comments:

இலவசக்கொத்தனார் said...

நல்ல முயற்சிதான். ஆனால் சில வருடங்களுக்கு முன் அமெரிக்க கிழக்கு கடற்கரை பகுதியில் மிகப் பெரிய மின்சாரத்தடை ஏற்பட்டது. முதலில் காரணம் தெரியாமல் பதட்ட சூழ்நிலை இருந்த பொழுது அனைவரும் ஒரு சேர செல்பேசி உபயோகிக்க முயல, அந்த சேவைகள் செயலிழந்து போயின. செல்பேசிகள் உயிரற்றவையாகின.

ஒரு நாள் முன்னம் தெரிவிக்கப்படும் செய்திகளுக்கு இது சரியாக வரும். எ.கா - "தமிழ் நாட்டில் இன்னும் இருபத்திநான்கு மணி நேரத்திற்கு தொடர்மழை நீடிக்கும்"

ஆனால் உங்கள் பூகம்பம் தொடர்பான செய்திகளுக்கோ அல்லது குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கோ இது எவ்வளவு தூரம் உபயோகமாக இருக்கும் என்பது சரிவரத் தெரியவில்லை.

Arunkumar said...

first time varen..
first commentaa ???... gr8

"unga pakkathu theatre-la captain padam release aaga pogudu" nu ellam echarikkai kudutha nalla irukkum :)

nalla informative post.

namma kadai pakkam neram kedacha vandu paathutu ponga (findarun.blogspot.com)

-Arun

Unknown said...

There was a news feature on this on NDTV 2 days ago..

Good to see this post in your page.

Nice title.

( englishkku excuse me )

பொன்ஸ்~~Poorna said...

நன்றி நிர்மல்,

கொத்ஸ், இந்த முயற்சியே பூகம்பம்/குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகளுக்குத் தான். மற்றவற்றிற்கு இப்போது ரேடியோ போன்ற பல ஊடகங்கள் இருக்கின்றனவே.. Anouncement- Global Broadcasting - மாதிரியானவை இவ்விதம் குறுஞ்செய்தியாவது சுலபம் தான் என்றே இவர்கள் நம்புகிறார்கள்.. பார்க்கலாம்..

அருண், உங்களுது முதல் பின்னூட்டம் இல்லயே!! :( பரவாயில்லை விடுங்க.. கேப்டன் படம் பத்தியும் ஏன், இன்னிக்கு பொன்ஸ் இன்னுமொரு மொக்கைப் பதிவு போட்டாலும் போடுவாங்கன்னு கூட எச்சரிக்கை மணி அடிக்கச் சொல்லிடுவோம் ;)

ஆமாம் தேவ், ரெண்டு நாட்களுக்கு முன்னால் தான் இதைப் பத்தி செய்தியறிக்கை வெளியிட்டிருக்காங்க..
//Nice title.// - நன்றி :))

மணியன் said...

நல்ல முயற்சி. நல்ல பதிவு.
நானும் கொத்தனாரைப் போன்றே இது ஆபத்துக்காலங்களில் பயன்படாது என்றே கருதுகிறேன். மும்பை குண்டுவெடிப்புச் சம்பவங்கள் போது செல்பெசிகள் தான் முதலில் செயலிழந்தன. கொடுக்கப்பட்ட அலைவரிசையில் ஒரு statistical average முறையில்தான் அதிகம் பேர் பேசமுடிகிறது. அனைவரும் ஒருசேர அந்த அலைவரிசையை வேண்டும்போது சேவை செயலிழக்கிறது.

தவிர குறுஞ்செய்திகளுக்கு முன்னுரிமை இல்லாததால் தீபாவளி வாழ்த்துக்களே பலமணிநெரம் தாமதமாக போய்ச் சேருகின்றன.

இருப்பினும் இந்த முயற்சி நல்ல தொடக்கமே.

தருமி said...

இது மாதிரி செய்திகளைப் பரிமாறிக்கொண்டால் எவ்வளவு நல்லா, உதவியா இருக்கும். இத விட்டுட்டு சில ஆளுக..முன்னால் வந்தால் ஏன் ஹலோ சொல்லலை, பின்னால போனா ஏன் ஹாய் சொல்லலைன்னு பதிவு போட்டு மக்கள படுத்தி எடுத்துத் தொலைக்கிறாங்க.. :(

G.Ragavan said...

நல்ல திட்டமாகத்தான் தெரிகிறது. ஆனால் அதன் நடைமுறைச் சிக்கல்கள் பயன்பாட்டில்தான் தெரியவரும். அதற்கு முதலில் மக்களைக் இந்த மாதிரி குறுஞ்செய்திகளுக்குப் பழக்க வேண்டும். பிறகு உண்மையிலேயே ஆபத்துச் செய்தி வருகையில் விரைவாகப் புரிந்து கொள்ளப்படும். முயற்சி நல்ல முயற்சி. ஆகையால் திருவினையாக்க விரும்புவோம்.

மா.கலை அரசன் said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

சிறில் அலெக்ஸ் said...

நல்ல முயற்சி, நல்ல தகவல், நல்ல பதிவு (நல்ல பதிவர்)

:)

துளசி கோபால் said...

நல்ல நூசுக்கு நன்றி.

மனதின் ஓசை said...

படிக்கும் பொழுது மகிழ்ச்சியை கொடுத்த ஒரு பதிவு..

அரசு இது போன்றவைகளை யோசிக்கிறது.. செயல்படுத்த முயல்கிறது என்பது ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது. தொடரட்டும்.

இது ஆபத்து நேரத்தில் நிச்சயம் உதவும் என்றே நம்புகிறேன்.. சில சோதனை முயற்சிகள் மூலம் பரிசோதிக்கப்படும்பொழுது ஓரளவு தெரியும்.

கூடவே ராகவன் சொன்னது போல் //முதலில் மக்களைக் இந்த மாதிரி குறுஞ்செய்திகளுக்குப் பழக்க வேண்டும்//

ஆபத்து காலங்களில் குறுங்செய்திகளை மட்டும் அனுப்ப அனுமதிப்பது, இது போன்ற செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பது, மற்ற பேசும் வசதிகளை தேவைபட்டால் துண்டிப்பது போல தொலைபேசியை எப்படி பயன்படுத்துவது என்பதையும் ஆலோசித்து முடிவெடுத்து மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும்.

//ஆக, எந்த ஒரு ஆபத்தைப் பற்றிய எச்சரிக்கையும் செல்பேசிகளுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்போது அவை பல்வேறு தரப்பினரையும், அதிக அளவிலான மக்களையும் மிகச் சுலபமாகப் போய்ச் சேரும்//
//பல்வேறு காலங்களில் இந்த மாதிரியான குறுஞ்செய்தித் தகவல்கள் மிக மிகப் பயனுள்ளதாக இருக்கும்.//
நிச்சயமாக.

பெத்தராயுடு said...

நல்ல தகவல்கள் கொண்ட பதிவு.

சிலர் சொல்வது போல் நம்மூரில் பேரிடர் நிகழும்போது, செல்பேசிக் கட்டமைப்பு செயலிழக்க வாய்ப்பு உண்டு.
ஆனால், சுனாமி, புயல் போன்ற முன்னெச்சரிக்கை விடயங்களில் மிகவும் பயனளிக்கக்கூடும்.

Disaster Management Cell - பேரிடர் மேலாண்மை மையம் ?

பொன்ஸ்~~Poorna said...

//முன்னால் வந்தால் ஏன் ஹலோ சொல்லலை, பின்னால போனா ஏன் ஹாய் சொல்லலைன்னு பதிவு போட்டு மக்கள படுத்தி எடுத்துத் தொலைக்கிறாங்க.. //
அதானே தருமி, ஏன் இப்படி எல்லாம் பண்றாங்களோ ;)

மணியன், ராகவன், வைசா, கலையரசன், சிறில், துளசியக்கா, மனதின் ஓசை, பெத்தராயுடு,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஆமாம் ராகவன், மக்களையும் குறுஞ்செய்திகளுக்குப் பழக்கத்தான் வேண்டும்..

Disaster Management Cell - பேரிடர் மேலாண்மை மையம் - ம்ம்.. சரியாக இருக்கலாமோ.? !

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நல்ல வகையில் செயற்ப்பட்டால், நல்ல வழியே!!
தகவலுக்கு நன்றி
யோகன் பாரிஸ்

- யெஸ்.பாலபாரதி said...

நல்ல கட்டுரை!
இப்படியும் எழுதத் தெரியுமா?