"எலே கருப்பா, நாளைக்கு காலைல உனக்கு விடுதலைடா" நமுட்டுச் சிரிப்போடு சொல்லி விட்டுப் போனது சொக்கன் தான்.. விடுதல! ஒருவழியா, இங்ஙன வந்து அஞ்சு மாசம் கழிச்சு இப்போவாச்சும் விடுதலைன்னு ஒரு வார்த்தையச் சொன்னானுவளே.. அதுவே பெரிய ஆறுதலா இருக்கு..
இந்த விடுதலைக்கு எதுவுமே இணையில்ல. இன்னொரு முறை இப்படி ஒரு எடத்துல யாரோடயாச்சும் நாலு சுவத்துக்கு நடுவுல அடைச்சுவச்சிடுவாங்களோன்னு பயம் இல்லை. திரும்பத் திரும்ப இன்னும் வெவ்வேற ஊருக்கு அலைய வேண்டியதில்லை. இப்படி ஒரு விடுதலை கிடைக்க கொடுத்துவச்சிருக்கணும்.. விடுதலைன்னு சொல்லி "வெளில போடா"ன்னுட்டாங்கன்னா, அது தான் கொடுமை இந்த வயசுல. இத்தனை வருசம் பாதுகாப்பா இருந்துட்டு இனி வெளில போய் எப்படி பிழைக்கிறது?
இதுவரை இங்கேர்ந்து யாரும் வெளியில போய் நான் பார்த்ததில்லை. எல்லாருக்குமே "பெரிய விடுதலை" தான். ம்ம், விடுதலைன்னவுடனே கொஞ்சம் மனசு விட்டுப் போச்சு போல, ஏதேதோ பேசுறேன்..
இதோ வந்து சொல்லிட்டு போறானே சொக்கன், இவன் ஒருத்தன் தான் இங்க வந்ததுல இருந்து எனக்கு ஒரே தொணை. எப்ப பார்த்தாலும் இங்க தான் இருப்பான். எனக்குப் பசியோ தாகமோ எல்லாத்தையும் இவன் கிட்ட தான் சொல்றது. வேளாவேளைக்கு சாப்பாடு போட்டு, தாகம் தீர்த்து நல்லபடியாத் தான் பார்த்துக்கிடறான்.. என்னை மட்டுமா இங்க உள்ள எல்லா பேத்தையும் இவன் தான் பாத்துக்கிடறான். எல்லாத்துக்கும் பேரு வச்சிருக்கான். எனக்கு வச்சது போலவே.
பொறந்தப்போ எனக்கு வச்ச பேரு ராமசாமி. என்னவோ போன பொறப்புல கேட்ட பேர் மாதிரி ஆகிடுச்சு. "டே ராமு"ன்னு ஆசையா கூப்பிட்டது பெரியகுளம் பண்ணையார் மவந்தான். அம்மா ஏனோ பேர் சொல்லிக் கூப்டாது. பால் குடிக்கும்போது ஆசையா தடவி குடுக்கும். அதெல்லாம் கொஞ்ச காலந்தான். பால்குடி மறக்கிறதுக்குள்ளயே பண்ணையார் வூட்ல கொண்டு விட்டுட்டாங்க. சின்னப் பண்ணை மாணிக்கம் அப்போ பொறக்கவே இல்ல. மாணிக்கத்துக்கு பத்து பன்னெண்டு வயசு வரை நான் தான் அவரோட கூட்டாளி. என்னொட ஆசையா வெளையாடுவாரு. முதுகுல சொமந்துகிட்டு ஊரெல்லாம் சுத்திக் காட்டி இருக்கேன் பல நாள்.
ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம். இந்தக் காலத்துப் புள்ளைக எது வளர்ந்ததுக்கப்புறம் அப்பனாத்தா மேல பாசமா இருக்கானுவ. தேனும் பாலுமா ஊட்டி வளர்த்த பண்ணையாரையே முதியோர் இல்லத்துல சேர்க்குறேன்னு சொன்னவுங்க தானே.. என்னையெல்லாம் எங்க கண்டுக்கிடறது?! நல்ல வேளை பண்ணையார் மாதிரி எனக்கு புள்ளகுட்டியெல்லாம் இல்லை. புள்ளகுட்டி தான் இல்லைனாலும், ஆடின ஆட்டம் சும்மா இல்லை.. பண்ணையார் போய்வந்த ஊரெல்லாம் எனக்கும் சொந்தபந்தம் இருந்துகிட்டே தான் இருந்துச்சு.. சின்னசேலம் சித்ரா, பனையூர் பரிமளம், கோட்டூர் கோமளான்னு எல்லாம் இப்போ இருக்காளுவளோ, இல்லை இந்த விடுதலை முன்னமே கெடைச்சிடுச்சோ!
நல்லா ராஜா மாதிரி வச்சிருந்தாரு பண்ணையாரு என்னைய, மவராசன்! மாணிக்கத்தோட பொஞ்சாதி, அந்தப் புண்ணியவதி ஏதோ ஒரு நாள் தண்டச் சோறுன்னு சொல்லிட்டா.. அந்த ஒத்தச் சொல்லு பொறுக்காம அன்னிக்கு ராவு படுத்தவரு அப்புறம் எந்திரிக்கவே இல்லையே!
பண்ணையார் போய்ச் சேர்ந்த ஒரே வருசத்துல நானும் மாணிக்கத்துக்குப் பாரமாப் போய்ட்டேன்..ஆடின ஆட்டத்துக்கு நம்ம ஒடம்பெல்லாம் பண்ணையார் மாதிரி ரொம்ப நாள் தாங்குற ஒடம்பும் இல்ல.. அப்புறம் எங்கெங்கோ அலைஞ்சேன்.. கொஞ்ச நாள் சென்னைப் பட்டினத்துல கூட சுத்தி இருக்கேன்னா பார்த்துக்குங்க..
என் கடைசி எஜமான் வூட்ல இருந்தப்போ ஒரு நாள் ஒரு லாரி வந்துச்சு. நானும் இன்னும் அந்த வூட்ல இருந்த சிலபேரும் ஏறிகிட்டோம். அப்படியே இன்னோரு வூட்ல போய் அதே மாதிரி ஏத்திகிட்டாங்க.. மூச்சு முட்டுச்சு.. நிக்கவே எடமில்ல. வெயில் வேற.. ஒரே நச நசன்னு வருது. நல்லவேளையா இங்க கொண்டுவந்து எறக்கி விட்டாங்க. அப்போத்திலிருந்து இது தான் எங்களுக்கு வூடு, வாசல், கொட்டில் எல்லாம். நாலு மாசமாச்சு. ஏதோ போதும் போதாம, வேளாவேளைக்கு சாப்பாடு. கொஞ்சமா தண்ணி குடிச்சு வாழக் கத்துகிட்டோம். இதோ நாளைக்கு இந்தத் தொல்லைகள்லேர்ந்து விடுதலை. ம்ம்ம்.
அட, பேசிகிட்டே இருக்கும் போதே விடிஞ்சுடுச்சே. அதோ சொக்கன் வரான். சாகும் போது தான் ரொம்ப கஷ்டமா இருக்கும்னு மீனாட்சி சொல்லிச்சு. இப்போவெல்லாம் ஏதோ மருந்து கொடுக்கிறாங்களாமே.. வலிதெரியாம இருக்கிறதுக்கு.. பார்க்கலாம்..
சொக்கன் வந்து என்னவோ என்னைப் பார்க்குறானே. கயத்த அவுக்கப் போறானா இல்லையா.. "டேய் கருப்பா, உன் நேரம் நல்லா இருக்குடா. இங்கையும் உன்னையெல்லாம் கொல்லக் கூடாதுன்னு சட்டம் போட்டுட்டானுவளாம். இன்னும் ஒரு வாரம் உனக்கு வாழ்வு தான். தயாரா இரு. இன்னிக்கு மதியமே எல்லாரும் கேரளா போவப் போறோம்.. உனக்குந்தாண்டி மூக்காயி, தயாரா இரு என்ன" சொக்கன் சொல்லிட்டு போய்ட்டான்..
அப்போ அவ்வளவு தானா?! இன்னும் ஒரு வாரம் இந்தக் கொடுமைய சகிக்கணுமா! அதிலும் கேரளா போவணும்னா மறுக்கா அந்த லாரில மூச்சு மூட்டுர கூட்டத்துல ஒரு ராத்திரி பூரா நின்னுகிட்டே போகணும்!
அடக் கொடுமையே.. அடேய் எம தர்ம ராசா, எப்போதான் வரப் போறியோ.. எனக்கு என்னிக்குத் தான் விடுதலையோ.. என்னைப் போய் உன்னோட வாகனம்னு சொல்றாங்களே! நான் உன்னைத் தூக்குறது இருக்கட்டும், நீ என்னிக்கு என்னை இந்த சுயநலம் பிடிச்ச மனுஷப் பயகிட்டேர்ந்து விடுதலை பண்ணப் போறே!
22 comments:
நல்ல கதை !
மனசை பிசையுது !
கதையை படிச்சவுடனே 'தேனி கண்ணன்' சொன்ன ஒரு கவிதை ஞாபகம் வந்தது
அடிபட்டு இறந்துகிடந்தது
எருமைமாடு
எதன்மேல் வந்து இருப்பான்
எமன்!
நல்லா இருக்குது கதை
எருமன் எடுக்கிட்டு வருவான் கதை!
(கதை - எமன் கையில் இருக்கும் ஒரு ஆயுதம்)
நல்ல வேளை, எருமை!
கோமாதான்னா எதிர்ப்பு வந்திருக்கும்
படம், கதை - இரண்டில் எது காரணம்; எது காரியம்.
நல்லா இருக்கு..
romba different thinking. nalla irukunga vetri pera vazhthukkal.
கோவி, நன்றி, கொஞ்ச நாளா ஆளைக் காணோம்?
இளா, நீங்க சொன்ன கவிதையைப் படித்ததும், எனக்கு ஹைதராபாத்தில் மெட்ரொ ரயில் விட்ட புதிதில் ஒரு எருமை மாடு அந்த ரயிலுக்குக் குறுக்கே வந்து இறந்து போன சம்பவம் நினைவுக்கு வருது. அன்னிக்குத் தான் முதன் முறையா அந்த ரயிலில் போலாம்னு போய் நானும் தோழியும் அந்தக் கொடுமையைப் பார்த்துத் தொலைச்சோம். ! :(
//நல்லா இருக்குது கதை
எருமன் எடுக்கிட்டு வருவான் கதை!//
:))))) சுனாமியார்னு சரியாத் தான் சொல்றாங்க லக்கி :)
//நல்ல வேளை, எருமை!// சிவஞானம்ஜி, யானை, பூனைக்கப்புறம் எருமை என்னுடைய விருப்பமான மிருகம்.
தருமி,
//படம், கதை - இரண்டில் எது காரணம்; எது காரியம்//
சரியாப் பிடிச்சிட்டீங்க.. படம் தான் காரணம்.. அதைச் சொடுக்கிப் பார்த்தீங்கன்னா அது தொடர்பான செய்தியும் இருக்கு..
நன்றி அனுசுயா, உங்க பட்டாம்பூச்சி நல்லா இருக்கு.. இது போட்டிக்கில்லீங்க.. சும்மா, கதை எழுதி நாளாச்சேன்னு எழுதிப் பார்த்தேன் :)
நல்லாருக்குங்க பொன்ஸ்!
படத்தையும் கதையையும் நல்லா integrate பண்ணிருக்கீங்க.
//அடக் கொடுமையே.. அடேய் எம தர்ம ராசா, எப்போதான் வரப் போறியோ.. எனக்கு என்னிக்குத் தான் விடுதலையோ.. என்னைப் போய் உன்னோட வாகனம்னு சொல்றாங்களே! நான் உன்னைத் தூக்குறது இருக்கட்டும், நீ என்னிக்கு என்னை இந்த சுயநலம் பிடிச்ச மனுஷப் பயகிட்டேர்ந்து விடுதலை பண்ணப் போறே!//
வாழ்த்துகள்
கதை நல்லா எழுதியிருக்கீங்க... படப்பொருத்தம் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்
எப்படிங்க இப்படியெல்லாம் கலக்கீறீங்க. ரொம்ப நல்லா இருக்கு .வெற்றிக்கு வாழ்த்துக்கள்
கதை அருமை!!!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
பொன்ஸ்,
அருமையான படைப்பு.
The Black Beauty என்ற குதிரையின் கதை படித்திருக்கிறீர்களா? உங்களிடமிருந்து வருவது எல்லாம் பெரிய நாவல்களின் கதைக் களங்கள். கொஞ்சம் கனவு காணும் மனதுக்குப் பெரிய கதை விரிய வைக்கும் பாணி. அப்படியே ஏதாவது முடிச்சைப் பிடித்துக் கொண்டு நாவல்களில் இறங்குங்களேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
Black Beauty
பொன்ஸ்,
வழமைபோல் உங்களிடமிருந்து இன்னுமோர் அருமையான கதை. படித்து முடித்த போது கொஞ்சம் சோகமாகவும் இருந்தது. அய்யன் வள்ளுவன் மொழிதான் நினைவுக்கு வருகிறது.
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்கனம் ஆளும் அருள்.
அறவினை யாதுஎனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்.
பொன்ஸ், இந்தக் கதையை நேற்றே படித்து விட்டேன். அலுவலகம் விட்டுக் கிளம்ப நேரமானதால், பின்னூட்டமிடவில்லை.
இந்தக் கதையைப் படிக்கத் தொடங்கியதுமே "இப்படி ஒரு எடத்துல யாரோடயாச்சும் நாலு சுவத்துக்கு நடுவுல அடைச்சுவச்சிடுவாங்களோன்னு பயம் இல்லை. திரும்பத் திரும்ப இன்னும் வெவ்வேற ஊருக்கு அலைய வேண்டியதில்லை" படிச்சதுமே கதை சொல்லி ஒரு ஆடு என்று தோன்றியது.
சற்று முன்னேற முன்னேற ஆடில்லை மாடு என்று தோன்றியது. ஆனால் எருமை என்று தோன்றவில்லை. ஆனால் மாடு என்று முடிவே கட்டிவிட்டேன். கடைசியில் படத்தைப் பார்த்ததும் எருமை என்று தெரிந்தது.
நல்ல முயற்சி. எனது வாழ்த்துகள்.
:-(((
*******
மற்றபடி எழுத்து நடைக்கு ஓ போடலாம்.
Hi
Sorry for the spam, but I think you will be interested in www.pdstext.com, an online Unicode word processor for Tamil and English that we have developed.
You can also use the site search Google, Yahoo! and MSN in Tamil.
I look forward to your feedback. If you like the service, do spread the word among Tamil-speaking friends.
C Ramesh
நல்ல கதை.முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.
கைப்பு,
//படத்தையும் கதையையும் நல்லா integrate பண்ணிருக்கீங்க.//
படத்தைப் பார்த்துத் தாங்க கதையே எழுதினேன் :)
வைசா, தேவ், வினையூக்கி, சுதர்சன், தீப்ஸ், எல்லாருக்கும் நன்றி!
வெட்டிப்பயல், கதை எழுதியதுக்கு நீங்களும் ஒரு காரணம்..
ஹலோ.. என்ன யோசிக்கிறீங்க.. அதான், தேன்கூடு போட்டிக்கு நீங்க தானே எழுதச் சொல்லி சொன்னீங்க :)
சிவகுமார்.. நாவலா!! அது சரி.. பார்க்கலாம் :)
வெற்றி, ஊன் உண்பதற்காகக் கொல்வது ஒரு வகை. அதுவும் கெடுதல் தான். ஆனால், இது போன்ற வயதான மாடுகளைக் கொல்வது உணவுக்காக மட்டுமே இல்லை. இவற்றின் தோலை உரித்து நாம் பயன்படுத்தும் தோல் பொருட்களுக்கு மூலப் பொருளாகத் தருகிறார்கள். சில நாட்கள் வரையில் இந்தக் கொலைகளும் இன்னும் கொடூரமான வகையில் அந்த மிருகங்களுக்கு நிம்மதி இழக்கவைக்கும் சாவாக இருந்தது. இப்போது People For Animals போன்ற அமைப்புகளின் தலையீட்டால் இந்த விஷயத்தில் கொஞ்சம் மாறுதல்கள் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்..
ராகவன், ஒரு ஆடு , எருமையாகிறது? :)))
யெஸ்பா(நல்லாகீதுபா, பேர் வச்ச ராகவனுக்கு ஒரு ஓ),
//:-(((// - இது ராமசாமிக்கா கதைக்கா, கஷ்டப்பட்டுப் படிச்ச உமக்கேவா? ;)
அக்கா, நல்லா எழுதியிருக்கீங்க. இன்னும் போட்டிக்கு அனுப்பலியா? லிஸ்ட்ல வரலியே
நன்றி அனுஷா, இது போட்டிக்கில்லை :) சும்மா.. தலைப்புக்காக...
Post a Comment